Jeyamohan's Blog, page 1740
August 22, 2016
ஓஷோவின் பைபிள் வரி
ஜெ
ஒரு புத்தகத்தை படிக்கும்போது அதில் உள்ள ஒரு விசயம் எதாவது ஒருவிதத்தில் (சந்தேகம் அல்லது ஆர்வம்) என்னை கவர்கிறது. உடனே புத்தகத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னை கவர்ந்த விசயம் தொடர்பான விபரங்களை தேடத்தொடங்கிவிடுகின்றேன். இதனால் முழுமையாக ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பதென்பது பெரும் போராட்டமாக உள்ளது. உதாரணமாக சமீபத்தில் I say unto you என்ற ஓசோவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன் அதில் ஏசுவின் கடைசி இது “Thy will be done, thy kingdom come” அழுதுகொண்டிருந்த ஏசு அந்த வார்த்தைக்குப்பிறகு கிருஷ்து ஆனார் என்று இருந்தது உடனே ஒரு ஆர்வத்தில் புத்தகத்தை வாசிப்பதை நிருத்திவிட்டு பைபிளை எடுத்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஏசுவின் கடைசி வார்த்தையை வாசித்தேன் ஒசோ சொன்னதுபோல் அப்படி எந்த வார்த்தையும் ஏசுவின் இறுதி நிமிடங்களில் இல்லை.
ஏசுவின் இறுதி நிமிடங்களில் இல்லாத ஒரு வார்த்தையை இருப்பதாக ஏன் ஓசோ சொன்னார்? ஒரு வேளை உண்மையிலேயே அப்படி ஏசு சொல்லியிருப்பாரோ? இப்படி அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிவிடுகின்றேன். கடந்த பத்து நாட்கள் ஏசுவின் இறுதி வார்த்தையிலேயே போய்க்கொண்டு இருக்கிறது.
இப்படி வாசித்த ஒவ்வொன்றையும் உண்மையில் அப்படித்தானா என்று உறுதிபடுத்திக்கொள்வதில் ஏதேனும் நன்மை உண்டா அல்லது இது ஒரு சரி செய்துகொள்ள வேண்டிய மன ரீதியான பிரச்சனையா? இதனால் பெரும் மனக்குழப்பமும், நேர விரயமும் ஏற்படுகிறது. உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
நன்றி
பூபதி
அன்புள்ள பூபதி,
அது ஏசுவின் கடைசிச் சொற்கள் அல்ல. அவரது கடைசிப்பிரார்த்தனையில் சொல்லப்பட வரி. மத்தேயூ 6-10 வசனம்.
இந்த வரி மார்க் எழுதிய சுவிசேஷத்தில் இல்லை. ஆகவே பிற்சேர்க்கை என சொல்லப்படுவதுண்டு. இந்த ஒரே வரி சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு பைபிள்களில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க http://biblehub.com/matthew/6-10.htm
ஆனால் புனித தோமையர் எழுதிய சுவிசேஷத்தில், இது மறைக்கப்பட்ட பைபிள் எனப்படுகிறது, ’உமது விண்ணுலகம் ஏற்கனவே வந்துவிட்டது என்றே சொல்லப்பட்டுள்ளது தோமையர் எழுதிய சுவிசேஷம்
அதேசமயம் பல விஷயங்களில் ஓஷோ மிகுந்த சுதந்திரம் எடுத்துக்கொண்டும் எழுதியிருக்கிறார். ஏனென்றால் இவையனைத்துமே ஒருவகை புனைவுகள் என்ற எண்ணமும் அவருக்குண்டு
ஆகவே ஓஷோவை வாசிக்கையில் ஆழ்ந்து வாசியுங்கள். ஐயமிருந்தால் பிற நூல்களில் தேடுங்கள். விவாதியுங்கள். கடக்கமுடிந்தால் கடந்துசெல்லுங்கள். ஆனால் நீங்கள் ஓஷோவின் ஆடிட்டர் அல்ல என்பதை மட்டும் நினைவில்கொள்ளுங்கள்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், உங்கள் கடிதத்திலேயே உங்களை ஒரு கூர்வாசகர் என நியமித்துக்கொள்ளும் மனநிலை உள்ளது. வாசிப்புக்கு மிக எதிரானது இது. எளிய ஆணவம் ஒன்றையே அது எஞ்சவைக்கும்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெய்யோன் – ஓர் அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
வெய்யோன் (க்ளாஸிக்) புத்தகத்தில் ஜெயமோகன் கையெழுத்திடவேண்டும். ஆனால், ஜெயமோகன் சிங்கப்பூரில் உள்ளதால், கையெழுத்தைப் பெறுவதில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வாசகர்களிடம் எங்கள் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயமோகன் கையெழுத்திட்டு புத்தகங்களை பைண்ட் செய்து அனுப்ப, செம்படம்பர் மாதம் 25ம் தேதி ஆகிவிடும். புத்தகம் அனைவருக்கும் வரும் செப்டம்பர் இறுதிக்குள் அனுப்பப்படும் என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எதிர்பாராத இந்த தாமதத்துக்கு மீண்டும் எங்கள் வருத்தங்கள்.
அன்புடன்
ஹரன் பிரசன்னா,
கிழக்கு பதிப்பகம் சார்பாக.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
ஏழாம் காடு : சாந்தீபனி
[ 1 ]
பிருஹதாரண்யகத்தில் இருந்து கிளம்பி சாந்தீபனிக் காட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தருமனும் தம்பியரும் இளைய யாதவரையே எண்ணிக்கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சொல்லேனும் அவரைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவரைப்பற்றி எண்ணும்போது எப்போதுமே எழுந்துவரும் உளஎழுச்சியும் உவகையும் அப்போது உருவாகவில்லை. முன்பு எப்போதும் உணர்ந்திராத தனிமையும் நிலைகொள்ளாமையுமே வந்து மூடிக்கொண்டது.
தருமன் அவரைப்பற்றி பேச எண்ணினார். துவாரகையில் என்ன நடந்தது, சால்வன் தோற்கடிக்கப்பட்டுவிட்டானா? ஆனால் அவ்வினாவுக்கு விடையென வழக்கம்போல உள்ளம் பொங்கியெழும் ஒரு வெற்றிக்கதை சொல்லப்படாவிட்டால் வாழ்க்கையில் நம்பிப் பற்றிக்கொள்ள வேறேதும் எஞ்சியிருக்காது. அத்தருணத்தில் அவர் பெயர் ஒன்றே நீண்ட இருட்குகைப்பாதையின் மறுஎல்லையின் ஒளிப்புள்ளியாகத் தெரிந்தது.
அவர் விழைந்ததுபோலவே செல்லும் வழியில் ஒரு இசைச்சூதனை கண்டுகொண்டார்கள். பிருஹதாரண்யகத்திலிருந்து கிளம்பி மரத்தடிகளிலும் காட்டிலமைந்த அறச்சாவடிகளிலும் இரவு தங்கி பதினெட்டுநாட்கள் நடந்து சாம்யகம் என்னும் காட்டில் அமைந்த அன்னநிலையத்தில் உணவுக்காகக் காத்திருந்தபோது அவன் அவர்களுக்கு முன்னால் நின்றிருந்தான். புழுதிபடிந்த உடலுடன் கந்தையென்றான மரவுரி அணிந்து சிக்குபிடித்த தலைமுடியும் தாடியுமாக நின்ற அவர்களை அங்கே உணவுக்கென நிரைவகுத்த எவரும் அடையாளம் காணவில்லை.
கருணன் என்னும் அச்சூதன் மட்டும் திரும்பி நோக்கி “அந்தப் பேருடலரும் உணவுக்காகவா வந்து நின்றிருக்கிறார்?” என்றான். பீமன் “ஆம், சூதரே. இங்கு அன்னம் அளந்து வழங்கப்படவில்லை அல்லவா?” என்றான். “அது உண்மை. ஆனால் அளவின்றி வழங்கப்பட்டால் நீங்கள் ஒருவர் உண்பதற்கான அன்னம் இக்காட்டில் இருக்காது” என்றான் அவன்.
“அஞ்சவேண்டாம். நான் அளவுக்குட்பட்டே அன்னத்தை உண்பதாக உள்ளேன். என் உணவு காட்டில் அளவிறந்து கிடைக்கிறது” என்றான் பீமன். “அது நன்று. காட்டில் நீர் மான்களை வேட்டையாடுகிறீரோ?” பீமன் “காட்டெருமைகளை” என்றான். கருணன் சற்று சொல்நின்று பின்பு “வாய்ப்புள்ளது. உமது உடல் அத்தகையது” என்றான். பின்னர் “எப்போதேனும் மான்களோ பன்றிகளோ சிக்குமென்றால் என்னையும் எண்ணிக்கொள்ளும்” என்றான்.
அவர்கள் பனையோலைத் தொன்னைகளில் பருப்பும் கீரையும் கிழங்குகளும் அரிசியுடனும் வஜ்ரதானியத்துடனும் கலந்து வேகவைக்கப்பட்ட அன்னம் வாங்கிக்கொண்டு சென்று ஆலமரத்தடியில் வேர்புடைப்புகளில் அமர்ந்தனர். “இரண்டுநாள் பசிக்கு சூடான அன்னம் அளிக்கும் இன்பம் நிகரற்றது” என்றான் சூதன். “ஆனால் சூடான ஊனுணவு என்றால் உயிரே எழுந்து நடனமிடத் தொடங்கிவிடும்.” பீமன் “ஆம், ஊன் ஊனை வளர்ப்பது” என்றான்.
“எனக்கு மானின் ஊன் பிடிக்கும். அவை உண்ணும் புல்லின் மணம் அவ்வூனில் இருக்கும்” என்றான் கருணன். “பன்றி ஊனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டால் கையில்கொண்டுசெல்லும் உணவு அது. தீயில் வாட்டி கொழுப்பு உருக அப்படியே உண்ணலாம். தென்னகத்துப் பாணர் யாழில்லாமல் பயணத்துக்கு இறங்கக்கூடும், இது இன்றி இறங்குவதில்லை.” “அதற்கு சில பன்றிகளை உடன் கூட்டிச்செல்லலாமே?” என்றான் பீமன்.
ஏறிட்டு அவனைப் பார்த்த கருணன் வெடித்துச் சிரித்து புரைக்கேறினான். மீண்டும் புரைக்கேறி தடுமாற பீமன் அவன் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டினான். மூச்சு சீரடைந்ததும் அவன் கலங்கிய கண்களுடன் “அதற்காக தலை சிதறுமளவுக்கா அடிப்பது?” என்றான். பெருமூச்சுடன் “நான் நீங்கள் எவர், எங்கு செல்கிறீர் என அறிந்துகொள்ளலாமா?” என்றான். “நாங்கள் சாந்தீபனிக் காட்டுக்கு செல்கிறோம்” என்றான் பீமன். “அது இன்னமும் எட்டுநாட்கள் பயணத்தில் அல்லவா உள்ளது?” என்றான் சூதன். “அப்படியா? நாங்கள் கேட்டுத்தெரிந்துதான் சென்றுகொண்டிருக்கிறோம்.”
சூதன் “நானும் உங்களுடன் வரலாமென நினைக்கிறேன். உணவு குறைவின்றி கிடைக்கும்…” என்றான். “நீர் எங்கே செல்கிறீர்?” என்றான் பீமன். “உண்மையை சொல்லப்போனால் நான் அதை இன்னும் அறியவில்லை. ஊர்கள்தோறும் சென்று சலித்தேன். சரி காடுகள்தோறும் செல்லலாமே என எழுந்தேன். துவைதக்காடு சென்றேன். அவர்கள் சொல்வதை நான் நாவில் ஏந்தியிருந்தால் பட்டினி கிடந்தே சாகவேண்டியதுதான் எனத் தோன்றியது. சிறந்த கதைகள் ஏதேனும் சிக்குமென்றால் ஒரு குறுங்காவியத்துடன் ஊர்களில் தோன்றுவேன்” என்றான் கருணன்.
அன்னத்தை வழித்து உண்டுவிட்டு தருமனை நோக்கி கருணன் “இவர் யார்? கல்விநிலையில் இருந்து துரத்தப்பட்ட முனிவர் போலிருக்கிறார்?” என்றான். பீமன் “இவர் அரியணையிலிருந்து துரத்தப்பட்ட முனிவர், யுதிஷ்டிரர் என்று பெயர்” என்றான். “ஆ!” என்று கருணன் வாயை பிளந்தான். “கதைகளிலிருந்து இறங்கி வந்துவிட்டீர்களே! அய்யோ, நான் முதல்முறையாக கதைகளில் பேசப்படும் ஒருவரை நேரில் பார்க்கிறேன்.” பீமன் “எப்படி இருக்கிறார்?” என்றான். “திரும்ப கதைக்குள் சென்றுகொண்டிருப்பவர் போலிருக்கிறார்” என்றான் கருணன். பீமன் நகைத்தான்.
“ஓநாய் போல சிரிக்கிறீர். அப்படியென்றால் நீர் விருஹோதரர். அந்தப் பெண் துருபதன் மகள். அவர் வில்விஜயர். அடாடா, ஏன் இது எனக்கு முன்னர் தோன்றவில்லை? நான் உடனே காவியம் எழுதியாகவேண்டுமே” என்றான் கருணன். பீமன் “கூச்சலிடாதீர். உமக்கு சிறந்த காவியங்கள் காத்திருக்கின்றன” என்றான். “நீங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றான் கருணன்.
“பிருஹதாரண்யகத்திலிருந்து. சாந்தீபனிக் காட்டுக்கு செல்கிறோம். உமக்கு வழி தெரியுமா?” என்றான் பீமன். கருணன் “சூதர்களுக்கு அனைத்து வழிகளும் தெரியும். அவர்கள் வழி தவறினால் அதுவே வழியென்றாகிவிடும்” என்றான்.
“நீர் அறிந்த வழி என்றால் எங்களுடன் வாரும்” என்றார் தருமன். கருணன் “அரசே, வணங்குகிறேன். தங்களை முனிவரென பார்க்கையில் ஜனகரை நினைவுகூர்கிறேன். அவரை அரசமுனிவர் என்கிறார்கள்” என்றான். தொன்னையைச் சுருட்டி கையில் எடுத்தபடி எழுந்து “ஏன்?” என்றான் பீமன். “அவர் அவ்வாறு அழைக்கப்பட விரும்பினார்” என கருணன் கைவிரல்களை நக்கியபடி சொன்னான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என அத்தனை அரசர்களும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் அவைச்சூதர்களால், அவர்களின் மஞ்சத்தறையின் சுவர்களுக்குள். அதைப்போன்ற ஓர் அழைப்பாகவே இதுவும் இருக்கும், அதை யாரோ கவிஞன் எழுதிவைத்துவிட்டான்.”
“சாந்தீபனி என்றால் அனைத்தையும் சுடரச்செய்வது என்று பொருள். நான் முதலில் அதை கேட்டபோது அங்கே காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும் என எண்ணினேன். பின்னர் சொன்னார்கள் அது மின்மினிகள் நிறைந்த காடு என. மின்மினி இருந்தால் நாகங்களும் இருக்கும் அல்லவா என்றேன். ஆம், அவையும் ஒளிவிடும் என்றார்கள். நஞ்சும் அதன் உணவும் ஒளிவிடுவதைப்பற்றி எண்ணியபோது மிகவும் வேதாந்தமாக அமைந்துவிட்டது. அதை ஏதேனும் முனிவருக்கு அளித்து நிகராக ஒரு கதையை பெற்றுக்கொள்ளலாம் என எண்ணுகிறேன்” என்றான் கருணன்.
அவர்கள் காட்டுப்பாதையில் செல்லத் தொடங்கினர். பீமன் மரங்களிலிருந்து கனிகளையும் காய்களையும் கொண்டுவந்தபடியே இருந்தான். “இத்தனைக்கும் பின்னரா நீங்கள் அங்கே உணவுக்கு வந்து நிரையில் நின்றீர்கள்?” என்றான் கருணன். “நான் இத்தனை கனிகளை உண்டால் காதல்பாடல்களை அன்றி வேறெதையும் பாடாமலாகிவிடுவேன்.” தருமன் “இங்கிருக்கும் காடு ஏன் சாந்தீபனி என அழைக்கப்படுகிறது?” என்றார். “நான் கற்றறிந்ததை சொல்கிறேன். உண்மை என்பது பரவலாக அனைவராலும் ஏற்கப்படுவதனால் நாச்சொல் என நீடிப்பது. மக்கள் தங்கள் விழைவை சொல்லிச்சொல்லி நிலைநாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு உதவுவதே சூதர்களின் கடன்” என்றான் கருணன்.
அரசே, சௌனக குருநிலையில் இருந்து பிரிந்து சென்ற பதினெட்டு பிரிவுகளில் ஒன்று சாந்தோக்யமரபு. அதிலிருந்து பிரிந்து வளர்ந்த ஏழு பிரிவுகளில் ஒன்று என சாந்தீபனி மரபு சொல்லப்படுகிறது. முன்பு சாந்தோக்யக் காட்டின் வேதச்சொல்லவையில் சகஸ்ரர் என்னும் இளைஞர் எழுந்து ‘பிறிதிலாதது ஏன் தன்னை பிறிதெனக் காட்டுகிறது? அதற்குரிய விடையன்றி எதுவும் பொருளற்றதே’ என்றார். ஆசிரியராக அமர்ந்திருந்த பன்னிரண்டாவது ஸ்வேதகேது ‘மைந்தா, நோக்க எவருமே இல்லாதபோதும் கன்னியர் அணிசெய்துகொள்கிறார்கள். மைந்தர்கள் விளையாடுகிறார்கள்’ என்றார்.
அதன் பெயர் லீலை என்று ஸ்வேதகேது சொன்னபோது சகஸ்ரர் ‘அது ஒரு சொல் மட்டுமே’ என்றார். ‘அனைத்தும் சொற்களே’ என்று ஸ்வேதகேது அதற்கு மறுமொழி சொன்னார். அறிதலுக்கு நிகராக மானுடர் வைக்கத்தக்கது ஒரு சொல்லே. அச்சொல்லை எடுத்துக்கொண்டு அங்கு பிறிதொரு அறிதலை வைத்துச்செல்வதே பிறர் செய்யத்தக்கது’. அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவராக சினந்து சகஸ்ரர் சாந்தோக்ய குருநிலையிலிருந்து கிளம்பிச்சென்றார். பிறிதொரு குருநிலையை நாட உளம்கொள்ளாதவராக அவர் காட்டுப்பாதைகளில் கால்கள் கொண்டுசென்றதுபோல சென்றுகொண்டிருந்தார். பலநாட்கள் அலைந்து அவர் சென்றடைந்த காடுதான் இன்று சாந்தீபனி என அழைக்கப்படுகிறது.
அரசே, சகஸ்ரர் அதைக் கண்டது ஆடிமாதக் கருநிலவு நாளில். அவர் ஒரு காட்டின் விளிம்பை சென்றடைந்ததும் அங்கே இருந்த குரங்குகள் அனைத்தும் ஒரு திசைநோக்கி செல்வதைக் கண்டார். அங்கு நீரோ இன்னுணவோ இருக்கக்கூடுமென எண்ணினார். பின்னர் காட்டுப்பசுக்களும் மான்களும் அதே திசைநோக்கி சென்றன. விலங்குகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக மலையேறிச்செல்லக் கண்ட அவர் தானும் உடன்சென்றார். வளைந்து சுழன்றேறிய அப்பாதை அவரை ஒரு மலையுச்சியில் கொண்டுசென்று சேர்த்தது.
அங்கே விலங்குகள் அனைத்தும் ஒன்றை ஒன்று நெருக்கியபடி மரங்களிலும் புதர்களிலுமாக காத்திருப்பதை கண்டார். அவை காத்திருப்பது எதுவென்றறியாமல் அவரும் அத்திசை நோக்கி விழி நாட்டி நின்றார். இருள் பரவத்தொடங்கியதும் அவர் தொலைவில் தரையும் வானும் சந்திக்கும் வளைகோட்டில் மெல்லிய நீலவெளிச்சத்தை கண்டார். அங்கொரு பெரிய ஏரி தேங்கியிருப்பதாக முதலில் எண்ணினார். ஆனால் வான் ஒளி அணைய அணைய அந்த வெளிச்சம் கூடியபடியே வந்தது. சற்றுநேரத்தில் அங்கே காட்டுத்தீ எரிந்தணைந்த கனல்வெளி பரந்திருப்பதுபோல் தெரிந்தது. அவ்வொளி பச்சைநீரொளியா என விழியை மயக்கியது
குரங்குகள் ஊளையிடத்தொடங்கின. ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டு அவை எழுப்பிய ஊளை அறுபடாது வானில் எழுந்து வளைந்தது. அங்கிருந்த அத்தனை விலங்குகளும் ஒலியெழுப்பத் தொடங்கின. அவ்வொலிகள் அனைத்தும் கலந்து அந்த மலையின் கூக்குரல் என ஒலித்தது. அவர் கீழிறங்கி செல்லத்தொடங்கினார். வரையாடுகள் மட்டுமே செல்லத்தக்க மலைச்சரிவு அது. உள்ளத்தின் விசையால் இயக்கப்படும் அச்சமற்ற இளையோர் மட்டுமே அவ்வழி செல்லமுடியும்.
ஏழுநாட்கள் பயணம் செய்து அவர் அந்த காட்டை சென்றடைந்தார். அது ஒளிவிடுவது ஒரு விழியமயக்கோ என்னும் ஐயம் அவருக்கிருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் அணுகிச் செல்லும்தோறும் அந்த ஒளி மிகுந்தபடியேதான் வந்தது. அது இளநீல ஒளியெனத் தோன்றியது. செந்நிறமோ பச்சையோ என மாறிமாறி மாயம் காட்டியது. பேருருவம் கொண்ட மின்மினி அது என எண்ணம் குழம்பியது. கந்தர்வர்கள் மானுடரை ஈர்த்து அழிக்க வைத்த பொறியோ என்று அஞ்சியது.
அந்தக் காட்டை அவர் காலையில் சென்றடைந்தார். அது ஒரு மாபெரும் நொதிச்சேற்றுக்குழி. அதன்மேல் விழுந்து மட்கிக்கொண்டிருந்த பெரிய மரங்களின் மீதன்றி எங்கே கால்களை வைத்தாலும் புதைந்து உள்ளிழுத்தது. நொதித்துக் குமிழிவெடிக்கும் சேற்றின் நீராவிவாடை பன்றி வாய்திறந்ததுபோல எழுந்தது. அங்குள்ள மரங்களெல்லாமே பெரும்கோபுரங்கள் போல எழுந்த அடிமரங்களுடன் கிளைவிரித்து பச்சைக்கூரையை தாங்கி நின்றன. அவற்றின் வேர்கள் நீராடும் பாம்புக்கூட்டங்கள் போல சதுப்புக்குள் மூழ்கி அப்பால் எழுந்து வளைந்து மீண்டும் மூழ்கிப்பரவியிருந்தன.
அச்சதுப்பு முழுக்க மூழ்கிய யானையின் துதிக்கைக்குமிழ் போலவும், தளிர்விட்டெழும் வாழைக்கன்றின் கூம்புமுனைபோலவும், ஆட்டுக்குட்டியின் இளங்கொம்புகள் போலவும், பசுவின் வால்மயிர் போலவும் மூச்சுவிட எழுந்த வேர்கள் பரவியிருந்தன. அத்தனை மரங்களிலும் இளநீலநிறமான பாசிப்பரப்பு படர்ந்து மேலேறியிருந்தது. பெருமரங்கள் இடைவெளிவிட்டு உருவான ஒளிகொண்ட வட்டங்களில் கிளைகளிலிருந்து கிளைகளாகப் பிரிந்த கள்ளிச்செடிகள் பசுந்தழல்போல செறிந்து மேலெழுந்திருந்தன.
அங்கு பெரிய விலங்குகள் ஏதுமில்லை. கீரிகள், முயல்கள் போன்ற சிறு விலங்குகள் தரையில் விழுந்த மரங்களின் மீதும் சருகுக்குவைகளின் மீதும் மட்டுமே பாய்ந்து ஓடின. கிளைகளில் சிறிய கரும்பட்டு உடலும் வெண்நுரைபடர் முகமும், நீண்ட வாலும் கொண்ட குரங்குகள் சுண்டப்பட்டவை போல தெறித்துச் சென்று சிறுநுனிகளில் அமர்ந்து ஊசலாடி எக்காள ஒலியெழுப்பின. அணில்கள் கிளைகளில் நீர்த்துளிகளென தொற்றி நீண்டோடி வால் தெறிக்க உளிசெதுக்கும் ஓசையெழுப்பின. பறவைகளின் ஓசை தழைப்பசுங்கூரைக்குமேல் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தது. புதர்களுக்குள்ளும் சருகுக்குவைகளுக்குள்ளும் செம்போத்துக்கள் கொல்லன் துருத்தியென ஓசை எழுப்பி ஊடுருவி ஓடின.
அங்கு ஒளிவிடுவது எது என அவரால் உணரமுடியவில்லை. பெரிய மரமொன்றின்மேல் தொற்றி ஏறி அதன் உச்சிக்கவை ஒன்றில் கால்நீட்டி அமர்ந்தார். செல்லும்வழியில் பறித்துக் கொண்டுசென்ற கனிகளை அங்கு அமர்ந்து உண்டார். அந்த மரக்கிளையிலிருந்த பாசிப்படலம் அவர் உடலில் சாம்பலென பூசிக்கொண்டது. அது இருந்தால் கொசுக்கள் கடிக்காதென்று எண்ணி அவ்வண்ணமே விட்டுவிட்டார். அங்கு ஒளியுடன் கந்தர்வர்கள் வந்திறங்கக்கூடுமென எண்ணினார். அவர்கள் வரும்பொழுது தான் விழித்திருப்போமா என ஐயுற்றார். அவர்களின் மாயையால் துயின்றுவிடக்கூடும். துயிலாதிருக்கவே தன் முழுச் சித்தத்தையும் குவித்தபடி அமர்ந்திருந்தார்.
இருள் பரவத்தொடங்கியதும் அவர் மெல்ல தன் உடல் ஒளிகொள்வதை கண்டார். திகைப்புடன் எழுந்து தன் கைகளை பார்த்தார். இளநீலப் பட்டுப்பரப்பாக அவர் உடல் மாறிவிட்டிருந்தது. வயிறும் கால்களும் மின்னத் தொடங்கின. தன்னைச் சூழ்ந்திருந்த மரங்கள் அனைத்தும் இளநீலமாக ஒளிகொள்ளத் தொடங்கியபோதுதான் அது என்ன என்று அவருக்குப் புரிந்தது. அந்த மரங்களின் மேல் படர்ந்திருந்த பாசியின் ஒளி அது. கூர்ந்து நோக்கியபோது அதன் ஒவ்வொரு துளிப்பருவும் மிகமென்மையான ஒளியை வெளிவிட்டது. ஆனால் அவை இணைந்து அக்காட்டையே ஒளிகொள்ளச் செய்தன.
அந்த ஒளியில் இலைப்பரப்புகளும் பளபளத்தன. சற்றுநேரத்தில் கீழே சதுப்புவெளியிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மின்மினிகள் எரிகனல்மேல் காற்றுபட்டதுபோல கிளம்பத்தொடங்கின. அவை எழுந்து இலைகள்மேல் அமர்ந்தன. காற்றில் சுழன்று நிறைந்தன. காட்டின் ஒளி செந்நிறமாகியது. விழிகொள்ளாத விம்மலுடன் அவர் அதை நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் அந்தக் கள்ளிச்செடிகள் ஒளிகொள்ளலாயின. அவற்றுக்குள் பச்சைநிற ஒளியே சாறென ஓடுவதுபோல. அவற்றின் தண்டுகளுக்குள் அது ஓடுவதன் அலைகளை பார்க்கமுடிந்தது.”
இரவெல்லாம் அவர் அந்த ஒளியில் விழிகளில் ஆத்மா நிறைந்திருக்க அமர்ந்திருந்தார். புலரியில்தான் துயின்றார். துயிலில் அவரது மூடிய இமைகளுக்குமேல் வெயில்காசுகள் விழுந்தபோது அவர் ஒரு கனவுகண்டார். அக்கனவில் அவர் அறிந்ததன் அதிர்வில் உடல் நிலைதடுமாற கீழே விழுந்தார். அவரது ஒரு கால் மரக்கிளையில் சிக்கிக்கொண்டதனால் கீழே மரத்தடிமேல் விழாது தப்பினார். உடலெங்கும் சிராய்ப்புகளில் குருதி வழியும்போதும் அவர் மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்.
அரசே, அவர் உருவாக்கிய கொள்கையை மகாலீலாசித்தாந்தம் என்கிறார்கள். இவ்விசும்பும் புடவியும் பிரம்மத்தின் விளையாட்டுக்கள். செயலுக்குத்தான் தேவையும் இலக்கும் உண்டு. ஆடல் ஆடலின் இன்பத்திற்கென்று மட்டுமே நிகழ்த்தப்படுவது. அது ஆடியும் கன்னியுமாகி தன்னை பார்த்துக்கொள்கிறது. சிம்மமும் மானுமாகி தன்னை கிழித்து உண்கிறது. புழுவும் புழுவுமாகிப் புணர்ந்து புழுவாகப் பிறக்கிறது. அலைகளினூடாக தன்னை நிகழ்த்திக்கொள்கிறது கடல் என்று அக்கொள்கையை சகஸ்ரர் முன்வைத்தார் என்று அவர்களின் நூல் சொல்கிறது.
”அனைத்தும் ஒளிவிடும் காட்டுக்கு பாரதவர்ஷமெங்கிலும் இருந்து இன்று மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அத்தனை வேதமெய்மைகளையும் சாந்தீபனியின் மெய்மையாக மாற்றிக்கொள்ளமுடியும் என்கிறார்கள். அனைத்து மெய்மையாகவும் அது உருமாறவும் கூடும். ஏனென்றால் அது ஒளி. தான் தொடுவதையெல்லாம் தானென்று காட்டும் பெருமாயத்தையே நாம் ஒளி என்கிறோம்” என்றான் கருணன். “சாந்தீபனி கல்விநிலையின் நூற்றெட்டு கிளைகள் பாரதம் முழுக்க இருக்கின்றன. தெற்கே உஜ்ஜயினியில் இருக்கும் சாந்தீபனிக் கல்விநிலையில்தான் இளைய யாதவர் தன் மூத்தவருடன் சேர்ந்து கல்விபயின்றார்.”
அவர்கள் பிறிதொரு அன்னநிலையத்தின் அருகே கட்டப்பட்டிருந்த கொட்டகையில் ஈச்சையோலைப் பாய்களில் அமர்ந்திருந்தனர். ஆமணக்கெண்ணை ஊற்றப்பட்ட கல்விளக்குகள் எரிந்த கொட்டகைக்குள் பலர் துயின்றுகொண்டும் சிறுகுழுக்களாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். பெரும்பாலானவர்கள் எளிய யாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் தோன்றினர். நாடோடிகளான சூதர்களும் அவர்களுள் இருந்தனர். அவர்களின் முழவுகளும் யாழ்களும் தலைமாட்டில் ஒலிமறந்து அமைந்திருந்தன.
அவர்களை தருமன் நோக்குவதைக் கண்ட கருணன் “சாந்தீபனிக்காடுதான் வேதக்கல்விநிலைகளில் அனைத்துக் குடிகளும் தேடிவருவதாக உள்ளது. அது வேதக்கல்விக்கு குலம் நோக்குவதில்லை. வேதமெய்மை அனைவருக்கும் உரியதென்று எண்ணுகிறது. வேதம் நாடிவரும் புதுக்குலங்களால்தான் அது இன்று பேணப்படுகிறது” என்றான். “ஆம், யாதவர்கள் மட்டுமல்ல நிஷாதர்களும் கூட தங்கள் மைந்தர்களை சாந்தீபனிக் கல்விநிலைகளில்தான் சேர்க்கிறார்கள்” என்றான்.
[ 2 ]
“இப்புடவியின் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன” என்றார் சாந்தீபனி முனிவர். “இங்குள்ள ஒரு சிறுபுழு அழியும் என்றால் அதை உண்ணும் ஒரு பறவை அழியும். அப்பறவையை நம்பியிருக்கும் ஒரு விலங்கு அழியும்… கோடானுகோடி உயிர்கள் ஒன்றுடன் ஒன்று முழுமையாக தொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உப்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. உப்புகளுடன் உயிர்கள் பின்னப்பட்டுள்ளன. அரசே, ஒன்றை ஒன்று சார்ந்தே இங்குள்ள அனைத்தும் செயல்படுகின்றன. தனித்திருக்கும் பெரும்பாறைகூட மழையிலும் வெயிலிலும் கரைந்து தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறது.”
அவ்வாறென்றால் மெய்மை மட்டும் எப்படி தனித்தமைய முடியும்? இங்குள்ள எந்த மெய்யறிதலும் பொய் அல்ல. பயனற்றதும் அல்ல. அது எதனுடன் இணையவேண்டியது என்பது மட்டுமே நாம் அறியவேண்டிய வினா. ஒவ்வொரு உண்மையும் தனக்கு இணையும் எதிரும் ஆன பிற பல்லாயிரம் உண்மைகளுடன் இணைந்தே பொருள்கொள்கிறது. உயிர்களைப்போல உப்புகளைப்போல உண்மைகளும் பெருநடனமொன்றின் சிறுதுளியசைவுகள் மட்டுமே. அதையே லீலை என்கிறார் எங்கள் முதலாசிரியர்.
பிருஹதாரண்யக மரபை நோக்குங்கள். நேதி நேதி என மறுத்துமறுத்துச் சென்று எஞ்சுவதே இறுதியுண்மை என்று அது எண்ணுகிறது. அது மறுத்துச் சென்ற அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கைகோத்து ஒற்றைப் பேருருவாக அவர்களை சூழ்கின்றன. பின்னர் அவர்கள் நிகழ்த்துவது அந்த இறுதியுண்மையை படைக்கலமாகக் கொண்டு முடிவிலியுடன் ஒரு போர். பொருளில்லாத பெருநடனமே அதுவும். அரசே, இங்குள்ள அனைத்தும் பொருளின்மையின் பேரழகு கொண்டவை. கோடானுகோடி இணைவுகளும் பிரிவுகளும் விரிவுகளும் ஒடுங்கல்களுமாக நிகழும் இந்த விளையாட்டை உணர்ந்துகொண்டவன் விடுதலை கொள்கிறான்.
அரைநாழிகைநேரம் ஒரு சிறுநாய்க்குட்டியின் விளையாட்டை கூர்ந்து நோக்கி பொருள்கொள்ள முயல்க! சித்தம் சிதறிப்போகும். அதன் பொருளின்மை பேரலையாக எழுந்து வந்து எண்ணப்பெருவெளியுடன் மோதும். நம்மால் பொருளின்மையை தாளவே முடிவதில்லை. நாம் இங்கு ஒவ்வொன்றையும் எண்ணி அடுக்கியிருக்கிறோம். பெயரிட்டு இலக்கமைத்து பொருத்திப் பொருள் அளித்து வைத்திருக்கிறோம். நம் சிற்றுலகுக்கு அப்பால் உள்ளது இந்த நிகழ்பெருக்கு. பொருளின்மையின் கொந்தளிப்பு அது.
அதை நோக்குபவன் முதலில் தன் சின்னஞ்சிறு உலகின் எளிய நெறிகளைக்கொண்டு அதற்கொரு பொருள் சமைத்து அளிக்கிறான். அதுவே அதன் மெய் என்று தன்னைச் சூழ்ந்தவர்களிடம் சொல்லிச்சொல்லி நிலைநாட்டுகிறான். அரசே, மெய்கண்டவன் ஏன் மெய்யிலமராமல் அதை தோளிலேற்றி ஊர்க்கோலம் செல்கிறான்? ஏனென்றால் அவன் தன்னைச்சூழ அம்மெய்மை திகழும் ஓர் உலகை அமைத்துக்கொள்ள விழைகிறான். அது அவன் கோட்டை. அதுவே அவன் சுற்றம். அவன் மொழி அது. அவன் மூச்சிழுக்க விழையும் காற்றுவெளி.
பிறிதொருவன் தன்னை காத்துக்கொள்ள முயல்வதில்லை. காற்றில்வைத்த மணப்பொருள் என அவன் கரைந்து மறைகிறான். அவனைக் கரைக்கும் முடிவிலியை அறியமுடியாமையின் வெறிப்பு ஒளிரும் விழிகளால் நோக்கிக்கொண்டிருக்கிறான். யோகி அறியும் இருள் என்கின்றன அதை நம் நூல்கள். அவனை பரமஹம்சன் என்கின்றன. செத்தவன்போல் வாழ்பவன். அறிந்து கடந்து இல்லாமல் இருப்பவன் அவன்.
அரசே கேள், அப்பொருளின்மையின் மையத்தில் பெரும்கொண்டாட்டமொன்று உள்ளது என்று கண்டுகொண்டவனே விடுதலை பெற்றவன். கொண்டாட்டங்கள் அனைத்தும் பொருளற்றவையே. பொருளற்றவை மட்டுமே கொண்டாட்டமாக ஆகவும் முடியும். இது லீலை. நிகழ்வுகளின் பெருவிளையாட்டு. நிகழ்வுகளை நோக்கும் பார்வைகளின் பெருவிளையாட்டு” என்றார் சாந்தீபனி முனிவர். “ஆகவே எந்தக் கொள்கையையும் எங்கள் மரபு விலக்குவதில்லை. எதனுடனும் மோதுவதும் மறுப்பதும் இல்லை. அனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு ஒற்றைப் பெரும்படலமெனப் பின்னி விரிந்துசெல்லவே முயல்கிறது.
”எங்கள் கொள்கையை சமன்வயம் என்கிறோம். ஒன்றுக்கு முற்றிலும் நிகரென பிறிதொன்றைக் கண்டு ஒன்றின் போதாமையை பிறிதொன்று நிரப்ப தன் இயக்கநெறிகளின்படி தானே வளர்ந்துசெல்லும் முறை இது” என்று சாந்தீபனி முனிவர் சொன்னார். “உலகியலும் மெய்யியலும், தத்துவமும் காவியமும், வேட்டலும் துறத்தலும் என முன்னோர் முரண்பட்டவை என வகுத்த அனைத்தையும் ஒன்றென இணைத்து நோக்குகிறோம். எவ்வுண்மையையும் நிலைநாட்டுவதற்காக அல்ல, உண்மைகளென இங்கு வந்தவை அனைத்தும் உண்மையின் பகுதிகளே என அறிவதற்கே இங்கு மெய்யவை கூடுகிறது.”
அவர்கள் சாந்தீபனிக் காட்டின் நடுவே அமைந்திருந்த கல்விநிலையின் மையக்குடிலில் அமர்ந்திருந்தனர். நூறு நெய்யகல்களின் பொன்னிற இதழ்கள் மெல்ல அசைந்துகொண்டிருந்த அந்த நீள்வட்டக் கூடத்தில் நூறு மாணவர்கள் மடியில் மலர்க்கை வைத்து உடல் நிமிர்ந்து விழிசரித்து அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர். பெரிய குடையெனக் கவிந்திருந்தது வளைக்கப்பட்ட மூங்கில்களைக்கொண்டு எழுப்பப்பட்ட கூரை. சுற்றிலும் நூறு தூண்கள் விளக்குகளை ஏந்தி நின்றிருந்தன.
“எவருமில்லா காடு தனக்குத்தானே என கொண்டாடிக்கொண்டதை எங்கள் முதலாசிரியர் கண்டார். தான் அடைந்த மெய்மையையே அவர் பெயர் எனக் கொண்டார். அனைத்தையும் ஒளிவிடச் செய்வதாக இருந்தது அந்த அறிதல். இன்று நாங்கள் இங்கு அளிக்கும் கல்வி என்பது எங்கு எதைக் கற்றாலும் அதை ஒளிவிடச்செய்யும் அறிவுதான்” என்றார் சாந்தீபனி முனிவர். “விலக்குவது எங்கள் வழக்கமல்ல என்பதனால்தான் அனைவரையும் இங்கு அமைத்துக்கொள்கிறோம். ஆகவேதான் மானுடர் அனைவருக்கும் உரியதென இது திகழ்கிறது.”
“நால்வேத மெய்மையும், தொல்வேதங்கள் அறிந்தவையும், வேதம் கிளரா புறமானுடருக்குத் தெளிந்தவையும் அனைத்தும் சென்று முயங்கிச் சுழிக்கும் ஒரு மையம். அது நாங்கள் விரியவிரியத்தான் உருவாகும் என்பதனால் எங்கள் கல்விநிலையை இங்கிருந்து தென்னகம் வரை விரித்துச்சென்றோம். யவனரும் சோனகரும் பீதரும் காப்பிரிகளும் கொண்டுள்ள மெய்மைகளையும் அள்ளி அணைத்துக்கொண்டோம். ஒரு மனிதனுக்குரிய மெய்மை உலகுக்குரியதாகும் என்றும் உலகுக்குரியதே ஒவ்வொருவருக்குரியதுமாகும் என்றும் எங்கள் ஆசிரியர்கள் சொன்னார்கள்.”
“இங்கு நிகழ்வது ஒரு பந்தாடல், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். “பந்தைக் காணாமல் ஆட்டத்தைக் காண்பவரின் திகைப்பை இதற்குள் நீங்கள் அடைந்துவிட்டிருப்பீர்கள். இந்த ஆடல் எதன்பொருட்டென்று அறியும்கணம் இவையனைத்தும் இனிய களியாட்டாக மாறித் தெரியத் தொடங்கும். அத்தருணம் உங்களுக்கு அமைவதாக!” தருமன் எழுந்து தலைவணங்கினார்.
அவர்கள் மெய்யவை முடிந்து பந்த ஒளியும் நிழல்களும் முயங்கி ஆடிய அரையிருளில் தங்கள் குடில்களுக்கு திரும்பினர். தருமன் “இங்கிருந்து இளைய யாதவர் கிளம்பியிருக்கிறார், இங்கு மீண்டும் வந்துசேர்ந்திருக்கிறார்” என்றார். “எதற்காக இக்குருநிலையில் இருந்து அவர் கிளம்பினார்? எதைக் கண்டுகொண்டபின் திரும்பிவந்தார்?” அவர் சொற்களுக்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை.
இரு பந்தங்களைக் கடந்து சென்றபின் தருமன் “இன்று அவர் சொல்வது சாந்தீபனி குருநிலையின் சொற்களைத்தானா?” என்றார். அர்ஜுனன் இருட்டுக்குள் “இல்லை” என்றான். அவனைக் கூர்ந்து நோக்கினார் தருமன். ஆனால் மேலும் சொல்லாமல் அவன் நடந்து மேலும் இருளுக்குள் சென்றான். தலையசைத்தபடி தருமன் தொடர்ந்தார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57
August 21, 2016
‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
மறைந்த தஞ்சை பிரகாஷ் சொன்ன சம்பவம் இது. கொல்லூரில் இருந்து ஹாசன் நோக்கி குடும்பத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் இயல்பாக பேச்சு வளர்ந்தது. பிரகாஷ் அனேகமாக எல்லா இந்திய மொழிகளையும் பேசக் கூடியவர். அம்மனிதர் தன்னை ஓர் இலக்கியவாதி என்று அறிமுகம் செய்து கொண்டார். பெயர் ரங்காச்சாரி. பிரகாஷ் தன்னை ஒரு தமிழ் இலக்கியவாசகர் என்று சொன்னார்.
தமிழ் இலக்கியம் பற்றித் தனக்கு அதிகமாக தெரியாது என்றும், தெரிந்தது மேற்கொண்டு தெரிந்து கொள்ள ஊக்கம் தருவதாக இருக்கவில்லை என்றும் ரங்காச்சாரி தெரிவித்தார்.
“என்னென்ன நூல்களுடன் அறிமுகம்?’’ என்றார் பிரகாஷ். அப்போது பிறமொழிகளில் தமிழ்ப் படைப்பாளிகளாக அறிமுகமாகியிருந்தவர்கள் இருவர்தான். ஒருவர் அகிலன், ஞானபீடப் பரிசு மூலம். இன்னொருவர் ஜெயகாந்தன், முற்போக்கு முகாம் மூலம். ரங்காச்சாரி கூடுதலாகவே படித்திருந்தார். கல்கி, நா. பார்த்தசாரதி, அண்ணாத்துரை ஆகியோரின் பல படைப்புகளையும்.
“இவர்களுடைய படைப்புகளில் உங்கள் அதிருப்திக்குக் காரணமானது என்ன?’’ என்றார் பிரகாஷ்.
“இவர்கள் படைப்புகளில் சுய அனுபவத்தின் மூலம் வலுச் சேர்க்கப்பட்ட அந்தரங்க உண்மை ஏதும் இல்லை. சமூக, அரசியல் தளங்களில் பொதுவாக வைத்துப் பேசப்படும் விஷயங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை அறிய நான் இலக்கியத்தைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பொதுஉண்மைகள், உண்மையில் சமூக அரசியல் செயல்பாடுகள் மூலமாக, நீண்ட சமரச இயக்கம் மூலமாக, கடைந்து எடுக்கப்பட்டவையே’’ என்றார் ரங்காச்சாரி.
“அவை இலக்கியத்தில் ஏன் இருக்கக் கூடாது?’’ என்றார் பிரகாஷ்.
“காரணம், அவை இலக்கியத்தில் மிகப் பழைய விஷயங்கள் என்பதே. இலக்கியம் ஒரு அக உண்மையை தன்னிச்சையாகக் கண்டடைந்து வெளிப்படுத்துகிறது. அது சமூக அரசியல் தளங்களில் புழக்கத்துக்கு வரும்போது அங்குள்ள மாறுபட்ட இயக்க விசைகளினால் இழுப்புண்டு சமரசம் அடைந்து பொது உண்மையாகிறது. அப்போது இலக்கியத்தில் அது மிகப்பழையவிஷயமாக ஆகிவிட்டிருக்கும். இலக்கியம் சமூக அரசியல் சிந்தனைகளின் முன்னோடியாகவே இருக்க முடியும், பின்னால் செல்ல முடியாது’’ ரங்காச்சாரி சென்னார்.
அவர்கள் உரையாடியபடியே சென்றனர். ரங்காச்சாரிக்கு ஜெயகாந்தன் மீது மட்டும் ஒரு குறைந்த பட்ச மரியாதை இருந்தது. மற்றவர்களை விட மாறாக அவரிடம் சொற்களில் ஒரு நேர்மையான தீவிரம் இருப்பதாக அவர் சொன்னார்.
ஏறத்தாழ ஹாசனை நெருங்கிய போதுதான் பிரகாஷ் பேச ஆரம்பித்தார். அது அவரது இயல்பு. ஒன்று, வெகு நேரம் எதிர்தரப்பின் பேச்சை கேட்ட பிறகே அவருக்கு சூடு ஏறும். பேச ஆரம்பித்தால் நான்குபேர் பிடித்தால்தான் நிறுத்தமுடியும். இன்னொன்று பிரகாஷ் தனக்குத் தெரிந்த விஷயங்களை சீராகச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். பேச்சு வாக்கில் உதிரும் விஷயங்களில் இருந்துதான் அவரது அறிவின் விரிவு நமக்குப் புரியும். அது நம்மை மேலும் வியப்பிலாழ்த்தும். இரண்டாவது சந்திப்பில் அவர் தற்செயலாகச் சொன்ன ஒரு குறிப்பில் இருந்துதான் அவருக்கு மலையாள இலக்கியம் அகமும் புறமும் துப்புரவாக பரிச்சயம் என நான் அறிய நேர்ந்தது.
பிரகாஷ் ரங்காச்சாரியிடம் அவர் எழுதிய `முதலில்லாததும் முடிவில்லாததும்’ என்ற நாவலை படித்திருப்பதாகச் சொன்னார். ரங்காச்சாரி அயர்ந்து போய்விட்டார். அவர் கன்னடத்திலேயேகூட பிரபலமானவரல்ல, அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டவருமல்ல. அந்நாவலைப் பற்றிய தன் அவதானிப்புகளை பிரகாஷ் சொல்லியபடியே சென்றார். இரண்டு மனித மனங்கள், அவை எத்தனை நெருக்கமானவையாக இருப்பினும், ஏதோ ஒரு சிறு புள்ளியில் மட்டும்தான் பரஸ்பரம் கண்டடைய முடியும், உறவாட முடியும். மற்ற தருணங்களிலெல்லாம் ஒரு மனம் மற்ற மனதை வெறுமே சுற்றி வருகிறது, உரசிச் செல்கிறது; அத்தோடு சரி. ஒரு ஆண் மனமும் பெண் மனமும் தங்கள் சந்திப்புப் புள்ளியைக் கண்டடைவது வரை தொடர்ந்து உழல்வதையும் சந்திப்பதையும் கூறும் நாவல் அது. மொத்த நாவலையும் இச்சிறிய இடத்திற்குள் வைத்து நிகழ்த்தி முடித்துவிடும். கதாசிரியரின் துணிவும் ஆற்றலும் வியப்புக்குரியவை. ஆனால் ஓர் அழகிய எல்லையில் நாவல் தன்னை நிறுத்தி விடுகிறது. அதுவே அதன் குறை.
”என்ன?’’ என்றார் ரங்காச்சாரி.
”ஒரு கூழாங்கல் இன்னொன்றுடன் உரசும் சம்பவத்தைச் சொன்னாலும் கூட பிரபஞ்ச இயக்கம் தரும் பெருவியப்பை அதில் காட்டிவிட கவிஞனால் முடியவேண்டும். உங்கள் நாவல் மானுடஉறவின் கதை மட்டுமே. `உறவு’ என்ற ஆன்மிக பிரச்சினையின் கதை அல்ல’’.
ஹாசன் வந்து விட்டது. பிரமித்து அமர்ந்திருந்த ரங்காச்சாரி பெட்டிபடுக்கையுடன் இறங்கும் பிரகாஷிடம் அவருக்கு முக்கியமாகப்படும் தமிழ் படைப்பாளிகள் யார் என்றார்.
”மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, கு. அழகிரிசாமி, வண்ணநிலவன்…’’ என்றார் பிரகாஷ். அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.
”இவர்கள் மிக முக்கியமான படைப்பாளிகளாக இருக்க வேண்டும். கன்னடத்தில் அவர்கள் விரைவில் வந்து சேர்ந்தால் நல்லது’’ ரங்காச்சாரி சொன்னார்.
*
`ஸ்ரீரங்க’ வின் இயற்பெயர் ஆத்ய ரங்காச்சார்ய . அவர் அடிப்படையில் ஒரு நாடகாசிரியர். 1930 முதல் எழுதிவரும் ஸ்ரீரங்க 35 முழு நீள நாடகங்களும் 50 ஓரங்க நாடகங்களும் இயற்றியிருக்கிறார். 1963ல் மத்திய சங்கித நாடக அகாதமி விருது பெற்றவர். இதைத்தவிர 12 நாவல்களையும் எழுதியிருக்கிறார். அனைத்துமே சிறிய மனதத்துவ நாவல்கள். அவரது `முதலில்லாததும் முடிவில்லாததும்’ [ கன்னட மூலம் அனாதி அனந்த] ஹேமா ஆனந்த தீர்த்தனின் மொழிபெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடாக தமிழில் 1991ல் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட நாவல் உலகின் முதல் நனவோடை உத்திகொண்ட நாவல்.1959ல் வெளிவந்தது இது.
இரண்டு பாகங்கள் கொண்ட சிறிய நாவல் இது. முதல் பகுதி முதலில்லாதது, இரண்டாம் பகுதி முடிவில்லாதது. முதலில்லாததும் முடிவில்லாததுமான மனித மன இயக்கத்தையே கதை நகர்வாகக் கொண்ட படைப்பு. இதன் அமைப்பு ஒரு வகையில் ஒரு அவரம் விதைபோல ஒன்றையன்று நிரப்பும் இரு பகுதிகள். முதல் பகுதி ராமண்ணாவை மையமாக்கி அவனது மன ஓட்டம் மூலம் வெளியாகிறது. இறந்து போன அவன் மனைவி சரளாவும் அவள் தங்கை குமுதாவும் பிற பாத்திரங்கள். குமுதா ராமண்னா வீட்டில்தான் இருக்கிறாள், குழந்தையை தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ள. ராமண்ணாவுக்கும் குமுதாவுக்கும் இடையே மெதுவாக உருவாகி வரும் நெருக்கத்தில் உள்ள ஒழுக்கவியல் தர்மசங்கடங்கள், போலிப் பாவனைகள், சுய ஏமாற்றுகள், ஏமாற்றவோ ஒத்திப் போடவோ முடியாத பாலியல் வேட்கை, அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட தன்னகங்காரம் ஆகியவை மறைமுகமாக விரியும் நினைவோட்டச் சரடுகளாக வெளிப்படுகின்றன.
இரண்டாம் பாகமான முடிவில்லாததில் குமுதாவிற்கு ராமண்ணாவின் குழந்தை பிறந்து விடுகிறது; மோகன். அவனை முன்னிலைப்படுத்தி மீண்டும் அவர்களுடைய உறவு பரிசீலனைக்குட்படுகிறது. ஒரு மன அவசத்தின் பொருட்டு அல்லது தேவையின் பொருட்டு உருவான உறவு அது. அதில் காதல் இல்லை. காதலில்லா உறவின் அலுப்பும் சலிப்பும் அதைவெல்ல மனம் போடும் உணர்ச்சிபாவனைகளும் இப்பகுதியில் வெளிப்படுகின்றன. முதல்பகுதியில் அவர்களை இணைக்கும் சரடாக இருப்பது சரளாவின் நினைவு. இரண்டாம் பகுதியில் மோகன் என்னும் குழந்தை.
நினைவோட்டமாக நகரும் இந்நாவலின் கதையை சொல்வது அதை மிகவும் சுருங்க வைத்துவிடும். உண்மையில் சில நிகழ்ச்சிகள் மட்டுமே கொண்டது இந்நாவல். இரு பகுதிகளும் மூன்றுவருட இடைவெளியில் நடக்கின்றன. இரண்டுமணி நேரமே நாவலின் கால அளவு .இதன் முக்கிய இவ்விரு பகுதிகளையும் நாம் மாறி மாறி நமது கற்பனைமூலம் பொருத்திப்பார்த்து இந்நாவலின் சாத்தியங்களை வளர்த்தபடியே இருக்கலாம் என்பதே. உதாரணமாக முதல் பகுதியில் குமுதாவும் ராமண்ணாவும் தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளைப் படிப்படியாகத் தாண்டி இணையும் புள்ளியை நோக்கி நகர்கையில் இரண்டாம் பகுதியில் தங்கள் இணைவுப் புள்ளியில் இருந்து வெளிநோக்கி நகர்கிறார்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான தவிர்க்கமுடியாத ஈர்ப்பை முதல்பகுதியும், தவிர்க்கமுடியாத தூரத்தை இரண்டாம் பகுதியும் முன்னிலைப்படுத்துகின்றன. இவ்வாறு தீர்க்கவே முடியாத ஒரு முரண் புதிர் இந்நாவலில் இவ்விரு பகுதிகளின் மோதல் மூலமாக உருவாகி வருகிறது.
ராமண்ணாவுக்கும் குமுதாவுக்குமான உறவு உருவாகும் விதம் தூய பாலுணர்வின் வெளிப்பாடாக ஆசிரியரால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமண்ணா இல்லை என நினைத்து அவன் அறைக்குச்செல்லும் குமுதா அவன் நூலகத்தில் புத்தகம் தேடுகிறாள். அவன் அங்கே வருகிறான். தனிமையின் எழுச்சியினால் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டுவிடுகிறான். அவ்வளவுதான், அது உறவாக மாறுகிறது. இப்படி ஒரு உறவு தொடங்கும் விதத்தை வியப்புடனும் பிரமிப்புடனும் பிறகு குமுதா மீண்டும் மீண்டும் எண்ணிக் கொள்கிறாள். வேறு எப்படி ஆண்-பெண் உறவு பிறக்கும் என்ற எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது ஏற்படுகிறது.
ஸ்ரீரங்கவின் மொழி நுட்பமானது. அதை கவனித்து வாசிக்கும் வாசகன் மட்டுமே அறிய முடியும். குமுதாவிடம் மானசீகமான உறவு உருவானபிறகு சரளாவை அணுகும் ராமண்னாவின் மனநிலை பற்றிய இடம். ”பாழும் ஜென்மம் ! என்ன வாழ்க்கை1 தனக்கும் சுகம் இல்லை மற்றவர்களுக்கும் சுகம் இல்லை!” என்று கண்ணீரை தடுக்கும் பொருட்டு திரும்பிக்கொண்டு படுத்தாள் சரளா.
ராமண்னா ஒரு நிமிடம் தியானத்தில் இருப்பதைப்போல உட்கார்ந்திருந்தான். ஜன்மஜன்மாந்தரங்களின் பயிற்சியாலோ என்னவோ என்று சொல்லும்படியாக அவனுடைய கை அன்பின் குளிர் காற்றைப்போல அவள் முதுகின்மீது படிந்தது’
அன்பினால் அல்ல. ஆனால் அந்த உறவு வேரூன்றியது. யுகங்கள் பழையது, ஆதலால் அன்பே போன்ற ஒன்றை அந்த தொடுகை அளிக்கிறது!
`ஆத்ய ரங்காச்சாரியர்’ இங்கிலாந்தில் கல்வி பயின்றதனால் அவரது கன்னட நடை ஒருவித ஆங்கிலத்தன்மை உடையது என்று அங்கு குறை கூறப்படுகிறது. அவரது உளப்பகுப்பாய்வு மோகமும் இன்று கண்டிக்கப்படுகிறது. அவரது நாடகங்களோ_எவையுமே தமிழுக்கு வந்ததில்லை .அவை_ முக்கியமானவை என்று எச்.எஸ். சிவப்பிரகாஷ் (கன்னட நாடக ஆசிரியர், விமரிசகர், கவிஞர்) என்னிடம் கூறினார். ஆனால், இப்படைப்பு பலவகையிலும் தமிழுக்கு முக்கியமானது என்றுதான் கூறுவேன்.
ஹேமா ஆனந்ததீர்த்தனின் [புனைபெயர்] மொழியாக்கம் சரளமாகவும் நுட்பமாகவும் இருக்கிறது. தமிழில் ஒருகாலத்தில் கிளுகிளு எழுத்துக்காக பெயர் பெற்றிருந்த இவர் இன்று அவரது கன்னட மொழியாக்கங்களுக்காகவே நினைக்கப்படுகிறார். உண்மையில் அவருக்குப் பின்னர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு இத்தனை சிறப்பாக மொழியாக்கம் செய்யும் எவருமே அமையவில்லை.
[முதலில்லாததும் முடிவில்லாததும் – ஸ்ரீரங்க; தமிழில் : ஹேமா ஆனந்ததீர்த்தன்; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு]
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2007
தொடர்புடைய பதிவுகள்
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’
வி.எஸ்.காண்டேகரின் யயாதி.
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
சித்திரவனம்
விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
சாக்கியார் முதல் சக்கரியா வரை
காடு வாசிப்பனுபவம்
கைவிடுபசுங்கழை -கடிதம்
உங்களுக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன. வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்ல்வும். உடல்நலனில் இன்னும் கவனமான அக்கறையோடு இருங்கள்.
உங்கள் உரையை எவ்வளவு கவனமாகக் கேட்டாலும் அதை வாசிக்கும்போதுதான் அதன் கனம் புரிகிறது. உங்கள் பேச்சை, எழுத்திலேதான் எங்களால் உள்வாங்கிக்கொள்ள முடிகிறதோ என்றும் தோன்றுகிறது. உங்களைப் பேசக்கூப்பிடுபவ்ர்கள் உண்மையிலேயே உங்கள் உரையை ஆராதிக்கின்றனரா அல்லது உங்கள் பிம்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனரா எனும் அபத்த சந்தேகம் எப்போதும் எனக்குண்டு. எது எப்படியோ, சமீபமாய் நான் வியந்து வாசித்த கைவிடு பசுங்கழை உரைக்கு வருகிறேன்.
ஒரு சங்ககாலப் பாடலின் சிறுவாக்கியம்(கைவிடு பசுங்கழை) ஒன்று உங்களுக்குள் விளைத்திருந்த பரவசத்திலிருந்து உரையைத் துவக்கி இருந்தீர்கள்; மிக அழகான துவக்கம். ஒரு காட்சியை நுட்பமாக அவதானிக்கும் நுண்ணுணர்வு சங்கக்கவிதைகளில் மிகுந்திருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் தம்மளவில் தனித்துவமானவையாக இருந்தபோதும், அவற்றின் மையமாய் பல்லுயிர் வாழ்க்கைச் சூழல் இருந்ததை நாம் கவனித்தாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனிதனால் செயற்கையாய் கட்டப்பட்ட சமூக வாழ்வின் உணர்வுகளை இயற்கையின் நிகழ்வுகளைக் கொண்டு சொல்ல முனைந்திருக்கின்றனர் சங்கப்புலவர்கள். இங்குதான் கவிதை என்பது உரைநடையிலிருந்து மாறுபட்டதாகத் தொனிக்கிறது. உரைநடையில் கோக்கும் புறவயமான தகவல்களை வரலாறு எனச்சொல்ல முடியும் நம்மால், கவிதையில் சொல்லப்படும் புறவயச்சித்தரிப்புகளை அங்கனம் கறாராய்ச் சொல்லிவிட முடிவதில்லை. காரணம், உரைநடையில் ஒருபோதும் உணர்வுச்சித்தரிப்பைக் கொண்டுவந்துவிடவே முடியாது. அதுதான் கவிதையின் ஆகச்சிறந்த தனித்துவமும் கூட.
சங்ககால வாழ்க்கை முறையினை அறிந்துகொள்ள மட்டுமே சங்க இலக்க்கியங்கள் பயன்படுகின்றன எனும் பொதுப்புத்திக்கு அதிர்ச்சியளிக்கும் சொல்லாடலாக அகநிலக்காட்சி நிச்சயம் இருக்கும். செவ்வியல் எனும் சொல்லாட்சியே உருவாகாத காலமான சங்கத்தில் செவ்வியல்தன்மை அழகுறச் செறிந்திருப்பதை நாம் வியக்காமல் இருக்க முடியாது. நுண்ணுணர்வில் துவங்கிய தமிழ்க்கவிதைகள் இன்று நுண்ணறிவில் வந்து நின்றிருப்பதாகப் படுகிறது. அன்று கவிதைகள் தானாக உருவாகின; இன்று கவிதைகள் நெய்யப்படுகின்றனவோ எனும் அச்சம் எழுகிறது. எப்படி இருப்பினும், கவிதைகளின் வழியே உள்ளுக்குள் நிகழும் பரவசத்திற்காகவே அவற்றைக் கொண்டாடலாம்.
சங்ககாலம் துவங்கி நவீனகாலம் வரையிலான கவிதை இயங்கியலை மிக அழகாக முன்வைத்திருந்தீர்கள். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளின் வடிவத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பத்திலிருந்து தமிழ்க்கவிதை இயங்கி வந்த வரலாற்றை நாம் ஓரளவேனும் தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழ்க்கவிஞர்கள் பலருமே கவிதை இயங்கியலை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. நீங்கள் கொடுத்திருக்கும் பரிணாமக்கோட்டைக் கூட மிகத்துல்லியமான யூகம் என்ற அளவிலேயே நான் ஏற்கிறேன்.
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
கோபிசெட்டிபாளையம்.
அன்புள்ள முருகவேலன்,
நீங்கள் வாசிப்பு சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர். ஆகவே கேட்பதைவிட வாசிப்பதே உங்களுக்கு உகந்ததாக உள்ளது. சிலர் செவிநுண்ணுணர்வு மிக்கவர்கள். பொதுவாக அவர்கள் குரல்நினைவுகள் மிக்கவர்களாகவும் இசையார்வம் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். அவர்களுக்கு கேட்பதே உள்ளே நிற்கிறது. வாசிப்பு இரண்டாம்பட்சமே
அத்தகைய பல வாசகர்களுக்கு உரைகள் மிகுந்த பயன் அளிப்பதைக் கண்டிருக்கிறேன்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அம்மோக்கியோ சந்திப்பு
அம்மோக்கியோ நூலக அறை எனக்குப் புதியதல்ல. முன்னர் இரண்டுமுறை அங்கே விரிவான உரையும் உரையாடலும் நிகழ்ந்துள்ளன. இன்று மாலையில் நிகழ்ச்சி இருப்பதை காலை பத்துமணிவரை நினைவுகூரவே இல்லை. வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். நேற்று நண்பர் மகாலிங்கம் பரணி ஆகியோருடன் சிங்கப்பூர் அருங்காட்சியகம் சென்றிருந்தேன். திரும்பி வர இரவு ஒன்பது. அதற்குமேல் வெண்முரசின் ஒர் அத்தியாயத்தை முடித்தபின் இரவு மூன்றரைக்கே தூங்கினேன். காலையில் அந்தச்சோர்வு இருந்தது. ஆயினும் நாவலின் ஈர்ப்பு என்னை எழுதச்செய்தது
[image error]
மூன்றுமணிக்கு படுத்து கொஞ்சம் தூங்கினேன். சரவணன் வந்தார். அவருடன் கிளம்பி அம்மோக்கியோ நூலகம் சென்றேன். அங்கே எனக்காக வாசகர்கள் வந்து காத்திருந்தனர்.பலரும் நன்கு முகம் தெரிந்த நண்பர்கள். சிங்கப்பூர் கணக்குக்கு நல்ல கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும்.நான் பேரிலக்கியம் குறித்துப் பேசுவேன் என சித்ரா அறிவித்தார்
[image error]
செவ்விலக்கியம் பேரிலக்கியம் என்னும் சொற்களைப்பற்றிச் சொன்னேன். ஒரு பண்பாட்டில் செவ்விலக்கியம் எப்படி உருவாகிறது, அதன் அழகியல் இயல்புகள் என்ன, அதன் தேவை என்ன என்று பேசி நவீனக் காலகட்டத்தில் செவ்விலக்கியம் சாத்தியமா, அதன் இடம் என்னவாக இருக்கமுடியும் என்பதுபற்றி விளக்கினேன். அதன்பின்னர் கேள்விபதில்.
நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது.
நன்றி வெங்கடாச்சலம் ஏகாம்பரம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
[ 11 ]
இருளில் வெளியே இறங்கி குடில்முற்றத்தில் நின்று அப்பால் தெரிந்த திரௌபதியின் குடிலை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தொலைவில் எங்கோ ஒரு காட்டுநாயின் ஊளை கேட்டது. இருளிலும் காகங்கள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதை கண்டார். அவற்றின் கருமை வானத்தின் கருமையை குறைத்துக்காட்டியது. இருட்டுக்குள் அங்கு அவர் நிற்பதை அவரன்றி வேறெவரும் அறியவில்லை. அவ்வெண்ணமே பெரும் கோட்டையென சூழ்ந்து பாதுகாப்பளித்தது. ஆனால் அதுவே அதை பொருளற்ற செயலாகவும் ஆக்கியது.
என்ன எண்ணுகிறேன் இப்போது? இவ்விருளில் இப்படி நின்றபடி அவளையே எண்ணிக்கொண்டிருப்பதை அவள் அறியவேண்டும் என்று விழைகிறேனா? அவள் குடில்விட்டு வெளியே வருகிறாள். ஏதோ நினைப்பில் விழி சுழற்ற அவரை காண்கிறாள். அவர் அத்தனிமையில் அவளுக்காக நின்றிருப்பதை அறிந்ததும் அவள் முகம் மாறுகிறது. விழிகள் கனிகின்றன. மெல்ல அருகே வருகிறாள். எத்தனை எளிய உளநாடகம். மானுடர் தங்கள் பகற்கனவுகளுக்குள் ஆணவம்மிஞ்சிய மூடர்களாக மட்டுமே இருக்கமுடியும்போலும்.
அங்கே ஆயிரம் ஆண்டுகாலம் நின்றிருக்கலாம். தெய்வங்களும் மூதாதையரும் அன்றி எவரும் அறியப்போவதில்லை. விண்மீன்கள் என விழிதிறந்து மண்நோக்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு அது ஒருபொருட்டும் அல்ல. அங்கேயே ஒரு கற்பாறையாக மாறி அவர் காலத்தில் நிலைத்தாலும் தலைக்குமேல் விண்மீன்கள் மாறாது சிமிட்டிக்கொண்டிருக்கும். பெருமூச்சுடன் அந்த வீண் எண்ணங்களை விரட்டினார். உள உச்சங்களில் எண்ணங்கள் ஏன் கட்டவிழ்ந்து சிதறுகின்றன? முனைகூர்ந்தால் கொள்வதற்குப் பொருளில்லை என்பதனாலா? அல்லது கொள்ளும் அப்பொருளின் எடையை அஞ்சியா? மீண்டும் பொருளற்ற எண்ணங்கள்…
அங்கே நின்றிருக்கமுடியாமல் அவர் தன் அறைக்குள் சென்றார். நெய்யகல் மெல்லிய ஒற்றை இதழசைவாக நின்றிருந்தது. தூண்நிழல் அருகே அதன் காவல்பூதமென நின்றாடியது. பீடத்தில் அமர்ந்து அருகே வைக்கப்பட்டிருந்த சுவடியில் ஒன்றை எடுத்துப்புரட்டினார். மைத்ரேயியின் வினாக்களுக்கு யாக்ஞவல்கியர் அளித்த விடைகள் அடங்கிய சிறுநூல் அது. கைபோன போக்கில் ஏடுகளை புரட்டினார். “கணவர்கள் அவர்கள் கணவர்கள் என்பதனால் விரும்பப்படுவதில்லை, மைத்ரேயி. மாறாக அவன் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறான். மனைவி மனைவி என்பதனால் விரும்பப்படுவதில்லை. அவள் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறாள்.” கண்களை மூடி அச்சொற்களை அவர் தனக்குள் ஓடவிட்டார். உள்ளம் அச்சொற்களுக்கு அப்பால் தனியாக ஒரு சொல்நிரையென சென்றுகொண்டிருந்தது.
“அனைத்தும் அவற்றின் பொருட்டு விரும்பப்படுவதில்லை. அனைத்தும் ஆத்மா என்பதனாலேயே விரும்பப்படுகின்றன.” அவர் அவ்வெழுத்துக்களையே நோக்கிக்கொண்டிருந்தார். பூர்ஜமரப்பட்டையில் கடுக்காய் கலந்த மையால் இறகுமுனைகொண்டு எழுதப்பட்ட வரிகள். அவை எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகளாகியிருக்கும்? முப்பதாண்டுகளுக்கு குறையாது. அவற்றை எழுதிய இளமாணவன் முதிர்ந்திருப்பான். அவன் அறிந்துவிட்டானா அவன் எழுதியதன் பொருளென்ன என்று?
அவர் சுவடியை வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றார். மீண்டும் முற்றத்தில் நின்றிருந்த கொன்றையின் அடியில் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு நின்று அவள் குடிலை நோக்கிக்கொண்டிருந்தார். அவள் துயின்றிருப்பாளா? அவள் காட்டுக்குள் வந்த அன்று நன்கு துயின்றாள். மறுநாளும் துயின்றாள். எப்போது துயில்மறக்கலானாள்? துயின்றுகொண்டிருக்கவும்கூடும். இனி அவளுக்கு ஊசலாட்டம் இல்லை. இறுகி இரும்புக்குண்டு என ஆகிவிட்டது அவள் உள்ளம். அது குளிர்ந்த உலோகம் அல்ல. நஞ்சு குளிர்ந்தது. தொட்டால் கை எரிவது. அவளால் துயில முடியாது.
அவள் குடில்கதவைத் தட்டி அவள் பெயர் சொல்லி அழைத்தால் என்ன? அவள் எழுந்து வந்தால் அவளிடம் மென்குரலில் ‘அன்னையிடம் மைந்தன் என வந்துள்ளேன்’ என்று சொல்லவேண்டும். அப்போது குரல் உடையலாம். கண்களில் நீர் நிறையலாம். அவரே இருளுக்குள் புன்னகைத்துக்கொண்டார். அவள் முகம் அப்படியேதான் இருக்கும் என்பதில் ஐயமே எழவில்லை. இருளுக்குள் இருண்ட தேவிசிலை போல. கல்விழிகள், கல்லுதடுகள். கண்களைக்கொட்டினாலும் இருளில் எழுந்த அந்தப் பாவை விழிகளுக்குள் நின்றது. நிமிர்ந்து வானில் அலைந்த காகங்களை பார்த்தார்.
அப்படி அவள் முன் சென்று நிற்கும் உரிமையை அளிப்பது எது? அவளுடன் காமத்திலாடிய பொழுதுகளின் நினைவுதான். ஆணுக்கு மட்டும்தான் அது அத்தனை முதன்மையானதா? பெண்ணை ஆட்கொண்டுவிட்டதாக, அவளுக்குள் புகுந்து முற்றிலும் அறிந்துவிட்டதாக எண்ணுகிறானோ? அந்தத் தனிமையின் தருணங்களை அவளால் கடக்கவேமுடியாதென்று எண்ணிக்கொள்கிறானோ? ஆனால் ஆணுக்கு தன் உடல் எதுவோ அது அல்ல பெண்ணுக்கு என்று தோன்றியது. ஆண் உடல் அவனுக்கு மட்டும் உரியது. அவள் உடலோ முதன்மையாக அவள் குழந்தைகளுக்குரியது. குழந்தைகளுக்குப்பின் அது அவளுக்கு முற்றிலும் வேறுபொருள் கொண்டுவிடுகிறதோ? அவள் கொள்ளும் தனிமையின் தருணங்கள் காமத்தில் மட்டுமல்ல…
எண்ணங்கள் அழுத்த அவர் இருளில் நடந்தார். நின்றபோது சுமைகொண்ட எண்ணங்கள் நடந்தபோது உடன்பறப்பதன் விந்தையை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டார். முற்றிலும் அகன்று சென்றுவிட்டாளா? மீளவே மாட்டாளா? ஆம், அவ்வாறுதான், ஐயமே இல்லை. அதுவே முறை. அதுவன்றி பிறிது எதுவும் அத்தருணத்தை, அங்கெழுந்த சொற்களை பொருளற்றவையாக்கிவிடும். ஆனால் அவ்வாறு அது முற்றிலும் முடியாது என்றே அரற்றிக்கொண்டிருக்கிறது உள்ளம். அது வெறும் விழைவு. ஏக்கம். ஆனால் அதை தொடும் அருகமைவில் பார்க்கமுடிகிறது.
இருளில் தன் காலடிகள் ஒலிக்க நடந்தார். மரக்கிளைகளில் கூடணைந்திருந்த பறவைகள் எழுந்து சிறகடித்துப் பறந்தன. புதர்களுக்குள் ஒரு சிற்றுயிர் சருகின் சலசலப்புடன் ஓடி மறைந்தது. தொடர்பில்லாமல் வாரணவதம் நினைவுக்கு வந்தது. அந்த எரிமாளிகையை குகைமுடிவில் எழுந்து இருளில் நின்று நோக்கியபோது அது ஒரு சிதை எனத் தோன்றியது. அதில் தானும் உற்றோரும் எரிந்துகொண்டிருப்பதுபோல. அதிலெரிந்தவர்கள் அறுவர். அறியாத ஆறுமுகங்கள். அவர்களாகி அங்கே எரிந்தமைந்தது அவரும் ஐவரும்.
பிருஹதாரண்யகத்தின் கதை சொல்லிக்கொண்டுவந்த வைரோசனனிடம் திரௌபதி கேட்டாள் “அவர்கள் ஏன் இங்கிருந்து கிளம்பிச்சென்றார்கள்? அவர்களுக்குரியதல்லவா இந்தக் கல்விநிலை?” வைரோசனன் “இல்லை, அரசி. இதன் நிலமும் பொருளும் மட்டுமே அவர்களுக்குரியவை. இங்குள்ள கல்வி யாக்ஞவல்கியரால் வகுக்கப்பட்டது. சுலஃபை மைத்ரேயி இதை தலைமை தாங்கி நடத்தியபோதுதான் பெண்கள் இங்கு சேர்க்கப்பட்டார்கள். பெண்களுக்கு வேதம் கற்கவும் வேள்விகளில் அமரவும் இணையுரிமை அளிக்கப்பட்டது” என்றான்.
“யாக்ஞவல்கியரின் காலத்திலேயே இங்கு வேதாங்கங்களும் உபவேதங்களும் முழுமையாக கற்பிக்கப்பட்டன. மைத்ரேயிதேவி இங்கு இயற்கலைகள் அனைத்தும் கற்பிக்கப்பட ஆணையிட்டார். வேள்வியை பெரும் களியாட்டமாக ஆக்கியதும் அவர்தான். ஆனால் ஒருநாள் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்கள் இங்கிருந்து கார்கியின் கல்விநிலையை சென்றடைந்தனர். இங்குள்ள ஒருதுளிப் பொன்னோ ஒரு பசுவோ அங்கு செல்லவில்லை.”
“கார்கியின் கல்விநிலையில் மெல்லமெல்ல ஆண்கள் அனைவருமே விலகிச்செல்ல பெண்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருந்தனர். தலைமை மாணாக்கி வதவா பிரதித்தேயியின்கீழ் அவர்கள் அமைந்தனர். அவர்கள் அங்கு ஏழாண்டுகாலம் ஊழ்கம் பயின்றனர். பின்னர்தான் ஜனகரின் அவையில் யாக்ஞவல்கியரை கார்கி கண்டுகொண்ட மெய்யவை நிகழ்ந்தது. அதன்பின் மூன்றாண்டு கடந்து கார்கி முழுமையடைந்தார். வதவா பிரதித்தேயியும் உடன் அமர்ந்து முழுமைகொண்டார். பின்னர் பதினெட்டு ஆண்டுகள் கார்கியின் வேதநிலை மைத்ரேயியால் நடத்தப்பட்டது. அக்காட்டுக்கு இன்று கார்கவனம் என்று பெயர்.”
அவள் “அங்கு வேதம் கற்பிக்கப்பட்டதா என்ன?” என்றாள். “ஆம், அங்கு கற்பிக்கப்படும் வேதம் பிறிதெங்கும் இல்லாதது. அதை சாக்தவேதம் என்கிறார்கள். அதில் ரிக் யஜுர் சாமம் மூன்றும் பிற எங்கும்போலவே. அதர்வத்தில் தொல்லன்னையரைத் தொழும் பாடல்கள் ஆயிரம் மிகையாக உள்ளன” என்றான் வைரோசனன். “இங்குள்ள வேதநிலைகள் எதனுடனும் அதற்கு தொடர்பில்லை. அவர்களின் சடங்குகள் முற்றிலும் மந்தணமானவை. அவர்கள் பாடும் சந்தமும் வேறுபட்டுள்ளது.”
“இன்றுள்ள மைத்ரேயியை நான் ஒருமுறை அதர்வவேதப் பெருவேள்வி ஒன்றில் கண்டிருக்கிறேன். அவர் விழிகளை நோக்க அஞ்சி விலக்கிக்கொண்டேன். கார்கக் காட்டை பிற வைதிகமுறைமைகள் முழுமையாகவே விலக்குகின்றன. ஆயினும் ஒவ்வொருநாளும் ஒரு பெண் பாரதவர்ஷத்தில் எங்கோ இருந்து தன் இல்லத்தைத் துறந்து நிலைகொண்ட விழிகளுடன் ஊர்களையும் அடர்காடுகளையும் கடந்து அங்கே சென்றுகொண்டிருக்கிறாள். பிற வேதநிலைகளில் இருந்து மாணாக்கர் வெளியேறுவது உண்டு. கார்கக் காட்டிலிருந்து எவரும் வெளியேறியதே இல்லை.”
“அவர்கள் மைத்ரேயிக்கும் கார்கிக்கும் யாக்ஞவல்கியரால் சொல்லப்பட்ட மெய்ச்சொற்களை நூல்களாக்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றாள் திரௌபதி. “இல்லை அரசி, முதுமை வருவதை அறிந்து தன் பொருள்களை மனைவியருக்கு பங்கிட்டளித்துவிட்டு கானேக முடிவுசெய்த யாக்ஞவல்கியரிடம் மைத்ரேயி ஏழு வினாக்களை கேட்கிறார். அவை இங்குள்ள நூல்களில் சொல்லப்பட்டிருப்பவையே. அவற்றுக்கு மறுமொழி அறியாது திகைத்த யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி அளிக்கும் மறுமொழிகளாக அமைந்துள்ளன அவர்களின் நூல்கள்” என்றான் வைரோசனன். “கார்கியுடனான உரையாடலிலும் கார்கியே மெய்மையுரைப்பதாக அந்நூல்கள் சொல்கின்றன.”
அவர்கள் குடில்முற்றத்தை அடைந்துவிட்டிருந்தனர். தருமன் அவள் முகத்தை நோக்க முயன்றான். நெய்விளக்கின் செவ்வொளியில் அது உணர்வற்றிருந்தது. அவள் ஒன்றும் சொல்லாமல் தன் குடிலுக்குள் புகுந்து மறைந்தாள். வைரோசனன் “அரசே, ஓய்வெடுங்கள். நாளை காலை இங்கே சொற்பேரவை நிகழ்கிறது. பிருஹதாரண்ய மரபின் துணைமரபுகளான முண்டகவனம், மாண்டூக்யவனம், பிக்ஷுகவனம், முக்திகவனம் போன்ற பதினெட்டு தரப்புகளும் வந்து ஒரே களத்தில் சொல்லாடலுக்கு நிற்கிறார்கள்” என்றான்.
இருண்ட காட்டுக்குள் சென்றுவிட்டதை அறிந்து தருமன் நின்றார். வழிதவறிவிட்டால் புலரிவரை சுற்றிவரவேண்டியதுதான். கால்களில் வந்த வழியின் நினைவு இருக்கக்கூடும் என்று தோன்றியது. அப்படியே திரும்பி நடந்தால் குடில்களுக்கு சென்றுவிடமுடியும். ஆனால் ஒரு அடி தவறான திசையில் வைத்தாரென்றால் அது முற்றிலும் பிழையான எல்லைக்கு கொண்டுசெல்லக்கூடும். இன்னும்கூட கந்தகம் கொந்தளிக்கும் குழிகள் கொண்டது இக்காடு. மானுடர் வாழ்ந்து வாழ்ந்து இதன் ஒரு சிறுபகுதியைத்தான் பழக்கி எடுத்திருக்கிறார்கள்.
திரும்பி நடந்தபோது அவர் தைத்ரியக்காட்டின் அந்தக் குட்டிக்குரங்கை நினைத்துக்கொண்டார். அங்கிருந்த நாளெல்லாம் அவர் மடியில் உறங்கியது அது. அதன் அன்னை பலமுறை அதைத் தொடர்ந்து வந்து அவரை நோக்கி அமர்ந்திருந்துவிட்டு சென்றது. சிலநாட்களில் அவர் குடிலிலேயே அது தங்கத் தொடங்கியது. அவரது மரவுரிகளைக் கொண்டுசென்று கூரைமேல் போட்டது. காட்டுக்கனிகளைக் கொண்டுவந்து குடிலெங்கும் உருளவிட்டது. சுவடிகளை ஒருமுறை அது தொட்டபோது அவர் சினம்கொண்டு கை ஓங்கினார். பற்களைக் காட்டிச் சீறியபடி தூணில் ஏறிக்கொண்டது. இருகைகளாலும் கால்களாலும் குறுக்குச்சட்ட மூங்கிலைப்பற்றிக்கொண்டு அமர்ந்து ஊசலாடுவதுபோல ஆடி ‘ஹஹ் ஹஹ்’ என்று ஓசையிட்டது.
அவர் மீண்டும் அதை அதட்ட மேலே சென்று சிறுதுளி சிறுநீரை அவர் அருகே பீய்ச்சியது. அதன் நாற்றத்தால் அறை நிறைந்தது. அன்று முழுக்க மேலேயே அமர்ந்திருந்தது. அவர் இரவு படுத்தபோது மெல்ல அருகே வந்து அமர்ந்து ‘ர்ர்ர்’ என்றது. அவர் அதன் தலையின் புன்மயிரை மெல்ல தடவினார். அவர் அருகே உடலை ஒட்டிக்கொண்டு குழந்தைபோல சுருண்டு படுத்துக்கொண்டு உடனே துயிலில் ஆழ்ந்தது. ஆனால் அதன் பின் அது சுவடிகளை தொடவே இல்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது அது மரக்கிளைகளில் தாவியபடி கூடவே வந்தது. அதன் பின்னால் ஓசையிட்டபடி அதன் அன்னை வந்தது. அவர்கள் தைத்ரியத்தின் எல்லையெனத் திகழ்ந்த ஓடையை கடந்தபோது அது இருகால்களில் எழுந்து தலைமேல் கைவைத்து நின்று எம்பி எம்பி ஓசையிட்டு அழுதது. கண்களில் நீர் வழிய தலைகுனிந்து தருமன் நடந்தார். பற்களை இறுகக்கடித்து கைகளை முறுக்கிப் பற்றியிருந்தார். எல்லைக்கு அப்பால் அவர் மறைந்ததும் தொலைவில் அதன் கூரிய அழுகை ஒலி கேட்டது. நெஞ்சுலைய அவர் விம்மிவிட்டார்.
இருளில் நின்று அவர் விழிநீர் உகுத்தார். முதல் துளி விழிநீரின் வெம்மையை கன்னங்களில் அறிந்ததும் அனைத்துத் தடைகளும் அவிழ்ந்தன. அவர் விம்மியும் தேம்பியும் அழுதார். நின்று மீண்டும் கிளர்ந்து அழுதுகொண்டே இருந்தார். கால் தளர்ந்து ஒரு சாலமரத்தின் அடியில் அமர்ந்தார். அழுகை முற்றிலும் ஓய்ந்ததும் அவர் உள்ளம் இனிய துயிலுக்குப்பின் விழித்ததுபோல தெளிவடைந்திருந்தது. வழியை சித்தம் நன்றாக அறிந்தது. தன் குடிலுக்குத் திரும்பி மரவுரிச்சேக்கையிட்ட மஞ்சத்தில் படுத்துக்கொண்டார். மரவுரிச்சுருள் ஒன்றை அருகே போட்டுக்கொண்டபோது அந்தக் குரங்கு அருகே படுத்திருப்பதைப்போல உணர்ந்தார். அதற்கு சூக்தன் என்று பெயரிட்டார். அதை வருடியபடி துயிலில் ஆழ்ந்தார்.
[ 12 ]
காலையில் நீராடி மீண்டபோது குடில்முற்றத்தில் காலன் காத்து நின்றிருந்தான். அவர் அவனை நோக்கி வணக்கங்களை ஏற்றபின் தன் குடிலுக்குள் சென்று ஈர ஆடைகளை மாற்றிக்கொண்டார். வெளியே வந்தபோதும் அவன் அங்கேயே மரத்தடியில் நின்றிருந்தான். “சுருக்கமாகச் சொல், நான் எரிசெயலுக்கு சென்றாகவேண்டும்” என்றார் தருமன். காலன் விதுரரை அறியாமல் அவருடன் அஸ்தினபுரிக்கு சென்றிருந்தான். அவர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்குச் சற்று முன்பென அவன் சென்றான்.
“அமைச்சர் நலமாக சென்று சேர்ந்தார்” என்றான் காலன். “அவர் தன் வருகையை முன்னரே ஓலையினூடாக அறிவித்திருந்தார். எனவே காட்டெல்லை கடந்ததுமே அவருக்கு அரசவரவேற்பு முறைமைகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன.” தருமன் அதில் இடக்கு இருக்கிறதா என அகத்தால் தேடினார். “ஆனால் பேரரசிக்கு அவருக்கு ஏதாவது ஆகக்கூடுமென்ற ஐயம் இருந்தது.” தருமன் புருவம் சுருக்கி “எவரிடமிருந்து?” என்றார். “அஸ்தினபுரியின் அரசரிடமிருந்தும் தம்பியரிடமிருந்தும்தான். விதுரர் பாண்டவர் பக்கம் உளம்சாய்ந்தவர் என அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.”
“அதனால் அவரை அவர்கள் கொல்வார்களா? துரியோதனனை என்னவென்று எண்ணினார் அன்னை? அவன் புவியாளப் பிறந்த சக்ரவர்த்தி” என்றார் தருமன். “ஆம், ஆனால் அவருக்குப் பிடிக்கும் என ஏதாவது அமைச்சனோ ஒற்றனோ எல்லை மீறலாம் அல்லவா? வழிகள் முழுக்க காக்கப்படவேண்டுமென்பது அன்னையின் ஆணை. ஆகவே நான் முழுமையான விழிகளும் கண்களுமாக கடந்துசென்றேன்” என்றான் காலன். தருமன் பெருமூச்சுடன் “சொல்க!” என்றார்.
“அரசே, விதுரர் கிளம்பிய நாள் முதல் பேரரசர் உடல்நலம் குன்றி படுத்துவிட்டார். உணவு உண்பது குறைந்து அவர் உடல் மெலிந்து என்பும்தோலுமென ஆகியது. இசையோ மைந்தர்களோ அவரை மகிழ்விக்க முடியவில்லை. உயிர்துறக்க முடிவுசெய்தவர் போலிருந்தார். யுயுத்ஸுவும் சஞ்சயனும் மட்டுமே அவருடன் இரவுபகலென எப்போதும் இருந்தனர். அவர்களால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். ஒருநாள்கூட பேரரசரின் மைந்தர்கள் வந்து அவரைப் பார்க்கவில்லை. அரசர் அவர் இறந்த செய்தி உண்டென்றால் எனக்குச் சொல். பிறிதேதும் எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.”
“யுயுத்ஸூ மதிநுட்பம் மிகுந்தவர். விதுரர் குறித்த செய்தி மட்டுமே பேரரசரை மீளச்செய்யும் என்றுணர்ந்து ஒற்றர்களை வரவழைத்து விதுரர் குறித்த தகவல் வந்துவிட்டது என்று சொல்லி அவருக்கு நம்பிக்கையூட்டி உணவுண்ணச் செய்வார். நாளுக்கு முப்பதுமுறை அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். வருகிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்நிலை சிலநாட்கள் நீடிக்கும். மீண்டும் பேரரசர் உணவை மறுக்கத் தொடங்குவார். சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒரு பொய்ச் செய்தி அவருக்கு கிடைக்கச்செய்யப்படும். அவரை அவ்வாறு உயிர்தக்கச் செய்தனர் அவ்விளையோர்.”
“ஆனால் உண்மையிலேயே விதுரர் வருகிறார் என்னும் செய்தி வந்தபோது அதை பேரரசரிடம் சொல்லி நம்பவைக்க முடியவில்லை. அவர் பலநாட்களாக உடல் நலிந்து மஞ்சத்திலேயே படுத்திருந்தார். நினைவு எப்போதாவது திரும்பி அலைபாய்ந்து மீண்டும் சுஷுப்தியில் மூழ்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் இரவு உச்சகுரலில் அலறியபடி எழுந்தமர்ந்து இளையோனே இளையோனே என்று கூவியிருக்கிறார். கைகளால் அரண்மனைத்தூண்களை அறைந்தபடி அங்குமிங்கும் முட்டிமோதியிருக்கிறார். அருகணைந்து அவரை அமரச் செய்தபோது அவர் விதுரர் இறந்துவிட்டதாக கனவுகண்டது தெரியவந்தது. அரசே, இங்கு விதுரர் நோயுற்று இறப்பை அணுகிய அந்த இரவுதான் அது.”
“இங்கு நோய்மீண்டு விதுரர் எழுந்தநாளில் அவரது கனவில் அவர் வந்து புன்னகை புரிந்திருக்கிறார். அவர் மீண்டுவருகிறார் என்று களிகொண்டு கூவி ஆர்ப்பரித்திருக்கிறார். ஆனால் உடனே நம்பிக்கையிழந்து அது விண்ணிலிருக்கும் இளையோனின் குரல் என எண்ணத் தொடங்கிவிட்டார். அவர் உண்மையில் வரும் செய்தியை சொன்னபோது யுயுத்ஸுவை அறைந்து விலகிச்செல் மூடா, உன் சொற்களை நம்ப நான் சிறுமைந்தன் அல்ல என்று கூவினார். மீண்டும் மீண்டும் நினைவு தவறிக்கொண்டிருந்தது. அரைத்துயிலில் இளையோனே என்ற சொல்லன்றி எதுவும் அவர் நாவில் எழவில்லை.”
“விதுரர் கோட்டைமுகப்பை அடைவதுவரை அவரிடம் அரசர் நோயுற்ற செய்தி சொல்லப்படவே இல்லை” என்று காலன் தொடர்ந்தான். “சொல்லப்பட்டதும் அவர் தேரிலமர்ந்து கண்ணீர்விட்டு அழுதார். விரைவு விரைவு என கூவிக்கொண்டே இருந்தார். பேரரசர் நோயிலிருப்பது நகரில் பரவியிருந்தமையால் விதுரரின் வரவை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரைக் கண்டதும் வசைபாடத் தொடங்கினர். குலமகளிர் மாளிகை முகப்பில் நின்று அவரை கைசுட்டி பழிச்சொல் கூறினர். அவர் எதையும் கேட்கவில்லை. அரண்மனை முகப்பில் இறங்கி இடைநாழியில் ஏறி ஓடினார். இருமுறை கால்தவறி விழுந்தவரை கூடவே ஓடிய ஏவலர் பற்றிக்கொண்டனர்.”
“பேரரசரின் மஞ்சத்தறைக்குள் புகுந்து அவர் அருகே அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டார் விதுரர். அவர் பாதங்களில் தன் தலையை வைத்து ஓசையின்றி குலுங்கி அழுதார். பேரரசரும் அவர் குரலைக் கேட்டதுமே விழித்துக்கொண்டார். அவர் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. தொண்டைக்குள் சிக்கிய ஒலி அங்கே நின்று பதைத்தது. அவர் கைகளை நீட்டி விதுரரின் தலையை தொட்டார். குழலைப்பற்றி இழுத்து தூக்கி ‘உணவு உண்டாயா? நெடுந்தொலைவு வந்திருப்பாய்’ என்றார். ‘இல்லை’ என்றார் விதுரர். ‘உணவருந்து… யுயுத்ஸு, இளையோனை உணவருந்தச் செய்’ என்றார் பேரரசர்.”
“யுயுத்ஸு ‘தந்தையே, நீங்கள் உணவருந்தவேண்டும்’ என்றான். ‘ஆம், கொண்டுவா’ என்றார். அதன்பின் கண்ணீர்விட்டு விசும்பி அழலானார். அவர்கள் அவர் அருகே நின்று அவர் அழுது ஓய்வதுவரை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் மீண்டதும் ‘உணவு கொண்டுவா… ஊனுணவு…’ என்றார்.” காலன் சிரித்து “அவ்வளவுதான், நீர் நீரை கண்டு இணைந்துகொண்டது. ஒரு சொல் பேசப்படவில்லை. மறுநாள் காலை பேரரசர் பீடத்தில் இசைகேட்க அமர்ந்திருக்க அருகே விதுரர் அமர்ந்து ஓலைச்சுருக்கங்களைச் சொல்வதை நோக்கினால் அங்கே ஏதும் நிகழ்ந்தமைக்கான எந்தச் சான்றும் இருக்கவில்லை” என்றான்.
“விதுரர் மீண்டும் அமைச்சர் ஆனாரா?” என்றார் தருமன். “ஆம், அதைத்தான் அஸ்தினபுரியில் விந்தையாக பேசிக்கொண்டார்கள். விதுரர் அகன்றதுமே அமைச்சுப்பொறுப்பு முழுமையாகவே அங்கரின் கைகளுக்குச் சென்றது. அவரும் பால்ஹிகரும் அதை நடத்தினர். அவர் மீண்டுவந்ததும் அவரையே அமைச்சராக மீண்டும் அமைத்து அரசர் ஆணையிட்டார். அவரே கிளம்பிவந்து அமைச்சரைக் கண்டு பணிந்து இயல்பாக முகமன் சொல்லி அவ்வாணையை அளித்தார். விதுரரும் ஒன்றும் நிகழாததுபோல அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் உங்களை சந்தித்ததை சொல்லவில்லை, உங்களைப்பற்றி அரசர் ஏதும் கேட்கவுமில்லை.”
“அவனுக்குத் தெரிந்திருக்கும்” என்றார் தருமன். “ஆம், இங்கு எப்போதும் அவரது ஒற்றர்கள் சூழ்ந்துள்ளனர்” என்றான் காலன். “அவரை மீண்டும் அமைச்சராக ஆக்க பூரிசிரவஸுக்கு விருப்பமில்லை என்று அறிந்தேன். அதை அவர் சொன்னதாகவும் ‘அவர் என் தந்தை. அவ்வண்ணமே இங்கிருப்பார்’ என்று அரசர் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. நான் அதை உறுதி செய்துகொள்ளவில்லை.” தருமன் “அவன் அவ்வாறு சொல்லக்கூடியவனே. சிறியன அவன் இயல்பல்ல” என்றார்.
காலன் தலைவணங்கி அகல தருமன் வேள்விச்சாலைக்கு சென்றார். நகுலனும் சகதேவனும் முன்னரே அங்கிருந்தனர். அவர் அவர்களுக்கு அருகே அவருக்கென இடப்பட்ட தர்ப்பைப்புல் இருக்கையில் அமர்ந்தார். பிருஹதாரண்யகத்தில் வழக்கமான மாபெரும் வேள்விச்செயல் நடந்துகொண்டிருந்தது. அவி உண்ட நெருப்பு ஒளியிழந்து சுருண்டது. மெல்ல எழுந்து கொழுந்து விட்டு தாவி காற்றில் ஏறி நின்று துடித்தது. பீதர்நாட்டுப் பட்டை விரித்து உதறும் ஒலிபோலிருந்தது அதன் ஓசை. வேதச்சந்தத்தில் அது மட்டும் தனியாக ஒலித்தது. கட்டப்பட்டு திமிறி தாவும் சிம்மம். மண்ணில் கட்டப்பட்டுள்ளது எரி. மாதரிஸ்வானுக்கு அன்னையிலிருந்து விடுதலையே இல்லை.
வேள்விமீதம் உண்டபின் அவர்கள் எழுந்து வெளியே வந்தனர். தருமன் சுருக்கமாக காலனின் செய்தியை சொன்னார். “ஆம், நான் அதையே எதிர்பார்த்தேன்” என்றான் நகுலன். வைரோசனன் அவர்களருகே வந்து “வரும் முழுநிலவுநாளில் இங்கே பெரும் பூதவேள்வி ஒன்று நிகழவிருக்கிறது, அரசே” என்றான். “அதை நிகழ்த்துபவர் அஸ்தினபுரியின் அரசர். பேரரசர் உடல்நலம் குன்றியிருந்தபோது நாளும் அவருக்காக அவியிட்டு வேண்டிக்கொள்ள ஆணையிட்டிருக்கிறார். இப்போது அவர் உடல்நிலை செம்மையாகிவிட்டமையால் அதை பெருங்கொடை வேள்வியாக ஆக்கும்படி ஆணை.”
நகுலன் “அஸ்தினபுரியில் நாளும் வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்” என்றான். “அஸ்தினபுரியின் செல்வம் அத்தனை வேதநிலைகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. வைதிகர் அனைவருமே இன்று அஸ்தினபுரிக்கான வேள்விகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” வைரோசனன் “உண்மையில் இன்று பாரதவர்ஷம் முழுக்கவே வேள்விகள் பெருகிவிட்டிருக்கின்றன. அத்தனை ஷத்ரிய மன்னர்களும் தொடர்வேள்விகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல வேள்வி பெருகிய காலம் பிறிதில்லை என்கிறார்கள். வேள்விப்புகை நீர் சுமக்காத கார்மேகம்போல நகர்கள் மேல் பரவி நின்றிருக்கிறது என ஒரு சூதன் பாடினான்” என்றான். நகுலன் புன்னகை செய்து “சூதர்கள் நஞ்சு கலந்தால்தான் சொல் மணக்கும் என்று அறிந்தவர்கள்” என்றான்.
“ஒவ்வொருவரும் வேள்விப்புரவலர் என்னும் பெயர் பெறுவதற்காக போட்டியிடுகிறார்கள். பெருவேள்வி புரிபவன் முதன்மை ஷத்ரியன் என்று எண்ணுகிறார்கள்” என்றான் வைரோசனன். சிரித்துக்கொண்டு “முன்பெல்லாம் அயோத்தி, கோசலம் போன்ற தொன்மையான அரசகுடியினர் வேள்விகளை பெரிதாகச் செய்ததில்லை. அதனால் அவர்கள் அடைவதற்கொன்றுமிருக்கவில்லை. உருவாகி வரும் புதிய அரசர்களும் குலத்தூய்மை அற்றவர்களுமே தங்களை உயர்ந்தோர் என நிலைநாட்டும்பொருட்டு வேள்விகளை செய்வார்கள். வேள்விகளைச் செய்வதே குலத்தகுதிக் குறைவு என்பதற்கான சான்றாக ஷத்ரியர்களின் அவைகளில் இளிவரலுக்கு ஆளாகும்” என்றான்.
“நாம் கிளம்புவோம்” என்றார் தருமன். “எங்கு, மூத்தவரே?” என்றான் நகுலன். “கார்க குருநிலைக்குச் செல்வோம். அங்கிருக்கும் இன்றைய மைத்ரேயியை பார்ப்போம்” என்றார் தருமன். நகுலன் தயங்க வைரோசனன் “அவர்கள் ஆண்களை அங்கு விரும்புவதில்லை” என்றான். “சென்று பார்ப்போம். உள்நுழைய ஒப்புதல் இல்லை என்றால் நாம் நின்றுவிடுவோம். திரௌபதி மட்டும் செல்லட்டும்” என்றார் தருமன். “அவர்களின் வேதநிலையை பிற வேதநிலைகள் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான் நகுலன். “நாம் அவ்வாறு பிரித்துப் பார்க்கவில்லை. நாமும் எவருடனும் இல்லாதவர்களே” என்றார் தருமன். அவர்கள் தலையசைத்தனர்.
ஆனால் மாலையில் காட்டில் இருந்து திரும்பிவந்த அர்ஜுனன் அதை உறுதியாக மறுத்துவிட்டான். “மூத்தவரே, நாம் சாந்தீபனி குருநிலைக்குச் செல்வோம்” என்றான். “ஆம், அங்கும் செல்லவேண்டும். ஆனால்…” எனத் தொடங்கிய தருமனிடம் “நாம் அங்குதான் சென்றாகவேண்டும், மூத்தவரே. சிலநாட்களில் அங்கே இளைய யாதவர் வருவார். நாம் அவருக்காக காத்திருப்போம்” என்றான் அர்ஜுனன். “ஆம், நன்று” என்றார் தருமன். “திரௌபதியும் அதையே விரும்புவாள்.” அர்ஜுனன் அதற்கு மறுமொழி என ஏதும் சொல்லவில்லை. அவன் சொல்வான் என எதிர்பார்த்து பின்பு தருமன் “அவள் அவரிடம் மட்டுமே பேசவிழைவதாக என்னிடம் சொன்னாள்” என்றார். அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
August 20, 2016
டி தருமராஜ் சந்திப்பு
“நான் ஏன் தலித்தும் அல்ல” நூலாசிரியர் டி. தர்மராஜூடன் இன்று ( ஞாயிறு ) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். காலை 10:30 முதல் மதிய உணவு வரை. நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: ஸ்ரீ முருகன் ஹோட்டல், ரயில் நிலையம் எதிரே, கோவை.
– அரங்கசாமி, ராதாகிருஷ்ணன், செல்வேந்திரன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இன்று சிங்கப்பூர் சந்திப்பு
சிங்கப்பூர் வாசகவட்ட அமைப்பின் சார்பில் இன்று மாலை 5 மணிக்கு சிங்கப்பூர் அம்மோக்கியோ நூலக அறையில் நான் வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் வரலாம்
chitra.kjramesh@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்
இந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக மேற்கு, நமக்குத் தரும் ஈர்ப்பை இந்தியா நமக்குத் தருவதில்லை. ஆனால், ஒரு பயணி தன் வாழ்நாள் முழுக்க தீராத வியப்புடன் பயணம் செய்வதற்குரிய பகுதிகள் இந்தியாவில் உள்ளன. இப்பயணம் பௌதீகமான எளிய பயணமாக இல்லாமலிருக்க வேண்டுமெனில் அப்பகுதியின் இலக்கியங்களுடன் ஓர் அறிமுகம் ஏற்பட்டபிறகு அங்கு நேரில் செல்ல வேண்டும்.
இந்தியப் பகுதியில் மிக விரிவாக பயணம் செய்தவனாயினும் நான் வடமேற்கு மாநிலங்களில் அதிகம் சென்றதில்லை __ அதாவது கௌஹாத்தியைத் தாண்டியதில்லை. நில அமைப்பினால் கேரளத்தையும் குமரி மாவட்டத்தையும் ஒத்த இப்பகுதி எனக்குள் ஆழமான கனவுகளைக் கிளறக்கூடியது. அக்கனவுகள் படிந்தமையினால்தான். `லட்சுமிநந்தன் போரா’ எழுதிய `கங்கைப் பருந்தின் சிறகுகள்’ என்ற அஸ்ஸாமிய நாவல் என் மனதைப் பெரிதும் கவர்வதாக உள்ளது. (கங்கா சில் நீர் பாகீ) 1963ல் இது வெளியாயிற்று. 1975ல் இது திருமதி துளசி ஜெயராமன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.
*
பெண்கள் நகைகளை அணிந்துகொள்ளுதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் உண்டு. அவை முற்காலத்தில் இலைகளாலும் கொடிகளாலும் அவளுக்கு அணிவிக்கபட்ட குல அடையாளங்கள். எந்தக் குலத்துக்கு அவள் கட்டுப்பட்டவள் என்பதைச் சொல்லுபவை. கன்றுகளின் கழுத்துமணிகள் மற்றும் கட்டுக்கயிறுகள் போல. காலப்போக்கில் அந்தத் தளைகள் பொன்னால் ஆனவையாக மாறின. கௌரவச்சின்னங்களாக, அழகுப்பொருட்களாக ஆயின. அவை இல்லாமல் வாழ்வதே முடியாது என பெண்கள் எண்ணுமளவுக்கு. கலாச்சாரத்தளைகள் என்றால் அப்படி நமக்கு நெடுங்காலமாக பழகி, நம் ஆழ்மனதால் குறியீடாக மாற்றப்பட்டு நம்மாலேயே விரும்பி அணியப்படுவனவாக இருக்கும். ஆகவே ஆழமான அகவிடுதலை இல்லாமல் நம்மால் உதறமுடியாதனவாக இருக்கும். அத்தகைய ஒரு கலாச்சாரத்தளையின் கதை இந்நாவல்.
மிக எளிய கதை இது. கற்பனாவாத சாயல் கொண்டது. சோனாய் என்ற அழகிய சிறு ஆற்றங்கரையில் உள்ள சோனாய் பரியா என்ற கிராமம். ஆற்றங் கரையில் வசிக்கும் சிறுகுடும்பம். அதன் இளம் கதாநாயகியான வாசந்தி. அவளது தமையன் போக்ராம். காதலன் தனஞ்சயன். இந்நாவல் வாசந்தியின் காதலின் துயரக்கதை; ஒருவேளை வங்க நாவல்களில் பரிச்சயமுள்ளவர்கள் இத்தகைய கதைகளை பலமுறை படித்திருக்கக்கூடும். அந்த நதியும், வாசந்தி போன்ற கபடற்ற கிறாமிய அழகியும் கூட அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவையாக இருக்கலாம். `கங்கைப் பருந்தின் சிறகுகள்’ ஒரு வகையில் வங்க நாவல்களின் பாணியில் அமைந்துள்ளது. இந்த அஸ்ஸாமியப் படைப்பு. அஸ்ஸாமிய கலாச்சாரம் மீது வங்கத்தின் ஆழமான பாதிப்பின் தடயமாகவும் இந்நாவலை கொள்ளலாம்.
வாசந்தி தன் தமையனுடன் வீட்டுக்குவரும் தனஜ்சயனை நினைத்துக் கொள்வதில் தொடங்குகிறது நாவல். அவளுக்கு அவன் மீது மெல்ல ஏற்படும் ஈர்ப்¨ப்பம் அதன் குதூகலத்தையும் குற்ற உணர்வையும் அழகியமுறையில் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர். தனஞ்சயனுக்கும் அவளுக்குமான முதல் சந்திப்பும் இனிமையாக அமைந்துள்ளது. தன் பெயர் அர்ஜுன் என்கிறான். ”…இல்லாவிட்டால் அர்ஜுனனின் பிறபெயர்கள். உனக்கு பிடித்ததை வைத்துக்கொள்”. ”எனக்கு ஏன் பிடிக்கவேண்டும்?” என அவள் செல்லக்கோபம் கொள்கிறாள். அவன் சிரிக்கிறான். அவள் அவன் பெயரை அறிய குறுகுறுப்பு கொள்கிறாள். தனஞ்சயன் என்று அறியும்போது பரவசம். அப்பெயர் அவள் நாவிலும் மனதிலும் இனிக்கிறது. மறைமுகமாக அவன் அவள் அழகைப்பற்றி சொல்லும்போது பெண்ணாக அவள் உணர்வதன் பரவசம்.
ஹோமியோ வைத்தியனான தனஞ்சயன் கிழக்கு அஸ்ஸாமைச் சேர்ந்தவன். அப்பா அம்மாவை இழந்தவன். கொடுமைக்கார பெரியப்பாவிடமிருந்து தங்கையைக் காப்பாற்ற வீட்டைவிட்டு கிளம்புகிறான். ஆனால் அவன் திரும்பிவருவதற்குள் பிரம்மபுத்ரா வீட்டையும் நிலத்தையும் உள்ளடக்கிவிட்டது. தங்கை ஒரு கிழவனுக்கு மனைவியாக விற்கப்படுகிறாள். அவன் மனமுடைந்து இந்தப்பகுதிக்கு வந்துசேவை செய்கிறான். மக்களால் மிக விரும்ப்பபடுகிறவனாக ஆகிறான். அவன் தன் கதையைச் சொல்லும்போது வாசந்தி அழுதபடி அவன் நெஞ்சில் சாய்கிறாள். அவர்களின் காதல் உறுதியாகிறது
வாசந்தியின் தாய் தனஞ்சயனை நம்ப முடியாது, முற்றிலும் நல்லவனானாலும் அவன் உறுதியற்றவன் என்கிறாள்.அவள் அண்ணி அவளுக்கு உதவி செய்கிறாள். சோனாய்பரியா கிறாமத்தில் சிறுவணிகனாக இருக்கும் பொக்ராமின் வணிகம் புதிதாககப் போடப்படும் சாலைகளால் இல்லாமலாகிறது. பெரிய வணிக சக்திகள் வந்து அவனை விழுங்குகின்றன. தேசத்தின் முதல் தேர்தல் வருகிறது. போட்டியிடும் இரு நபர்களில் பணபலமுள்ள சுபோத் சைக்கியா தந்திரம் மிக்கவர். அவருக்கு ஊரைத்தெரிந்த ஆள் தேவை. பொக்ராம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவன். வியாபாரியாக ஊரை அறிந்தவன்.அவர் அவனை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார். அரசு கடன்கள் வாங்கிக் கொடுக்கிறார். சட்டென்று பொக்ராமின் கையில் பணம் புழங்க ஆரம்பிக்கிறது. அதார்மீகமான பணம்.
சுரண்டிக்கொழுத்த முதலாளியான சுபோத் சைக்கியா வெல்லக்கூடாது என மக்களைத்திரட்டி போராடும் தனஞ்சயன் பொக்ராமுக்கு விரோதி ஆகிறான். தேர்தலில் வெல்லும் சைக்கியாவுடன் சேர்ந்து பொக்ராம் அரசு காண்டிராக்ட் எடுத்து செல்வந்தனாகிறான். தனஞ்சயன் வாசந்தி காதல் அவனுக்குத்தெரியும்போது அவன் கொந்தளிக்கிறான். வாசந்தி வலுக்கட்டாயமாக ஊரின் செல்வந்தன் மகனான மதுராவுக்கு நிச்சயம் செய்யப்படுகிறாள். கடும் துயரில் அவள் தனிமையில் இருக்கிறாள்.
தனஞ்சயன் அவளை இரவோடிரவாக கூட்டிச்சென்றுவிடுவதாகச் சொல்லி கடிதம் அனுப்புகிறான். அவளுக்கு அது விடுதலையாகவே படுகிறது. இரவில் அவன் படகுடன் வருகிறான். ஆற்றில் காத்துநிற்கிறான். வீட்டைவிட்டு வெளியே செல்லும் வாசந்தி அவனை காண்கிறாள். ஆனால் அவனுடன் போக அவளால் முடியவில்லை. அவள் கையை தொட்டு அவளுடைய எதிர்கால மாமியார் போட்ட நிச்சய மோதிரத்தை கழற்ற அவளால் முடியவில்லை. பெண்ணுக்கு நகை ஒரு விலங்கு, ஒரு வாக்குறுதி அது. எப்படி அதை மீற முடியும். அவள் திரும்பிவந்துவிடுகிறாள். அந்தமோதிரம் போடப்பட்டமையாலேயே அவள் இனி மதுராவின் மனைவிதான்.
வாசந்தி மெல்ல தனஞ்சயனை தன் நினைவிலிருந்து விலக்கி விடுகிறாள். மதுராவுக்கு மனைவியாகிறாள். அவனுடன் இனிய குடும்பவாழ்க்கையைத் தொடங்குகிறாள். அவன் குடும்பத்தை மகிழ்விக்கிறாள். ஆனால் மதுரா சீக்கிரமே ஊர்வம்புகள் வழியாக தனஞ்சயனுக்கும் தன் மனைவிக்கும் இடையே இருந்த உறவைப்பற்றி அறிகிறான். அவளை கூட்டிப்போகவந்த படகோட்டியின் மனைவியின் சொல் வன்மை அது. அவன் மனமுடைகிறான். வாசந்தியுடன் பேச மறுக்கிறான். விஷயமறிந்த வாசந்தி அழுதபடி நடந்ததைச் சொல்லி அவள் தவறாக ஏதும் செய்துவிடவில்லை என்று சொல்கிறாள்.
ஆனால் மதுரா அவளை உண்மையில் உள்ளுர வெறியுடன் காதலிப்பவன். அவனால் வாசந்தியின் மனதில் இன்னொரு காதலன் இருந்தான் என்பதையே ஏற்க இயலவில்லை. அவன் பைத்தியம்போல சைக்கிளில் போகும்போது லாரியில் அடிபட்டு இறக்கிறான். வாசந்தி குற்ற உணர்விலும் சோகத்திலும் நடைபிணமாகிறாள். அவளுக்கு குழந்தை பிறக்கிறது
அந்நிலையில் அவளைப்பார்க்கவரும் தனஞ்சயன் அவளிடம் தனக்கு மாறாமல் உள்ள காதலை அவள் அறியச்செய்கிறான்- பேசாமலேயே. ஆனால் அவளால் அதை ஏற்க முடியவில்லை. என் கழுத்தில் மதுராவின் தாலி இருக்கிறது. என் உடலில் அவனுடைய வெள்ளைப் புடவை இருக்கிறது என்று மறுத்துவிடுகிறாள். ‘நான் ஒரு இந்து கைம்பெண். என் எல்லைகளை என்னால் மீற முடியாது”
காலம் செல்கிறது. துயரங்களில் இருந்து விடுபடும் வாசந்தியில் மெல்ல வாழ்க்கை பற்றிய நினைவுகள் மீள்கின்றன. அதற்குக் காரணம் புதிய வேலைக்காரி மன்படி. கிராமத்துக் காதல்கதைகளை அவள் சொல்கிறாள். துணிந்து முடிவெடுத்தவர்கள் வாழ்க்கையை அடைவதை. ஒரு காதல் வெல்ல, காதலர்கள் ஓடிப்போக , வாசந்தியே பணம் கொடுத்து உதவுகிறாள். அது அவள் மனத்தை மாற்றுகிறது. அவள் தனஞ்சயனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அவனுடன் வரத்தயாராக இருப்பதாக. ”…. நாம் இன்னும் கிழவர்களாக ஆகவில்லை. எஞ்சிய காலத்தை இப்படியே கழித்துவிடுவதா? இதுபற்றி ஒருவிதமான ஏற்பாடும் செய்ய முடியாதா? எத்தனையோ தார்மீக நூல்களை படித்தேன். ஆயினும் பரலோகத்து புண்ணியத்தைப் பற்றி எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. எந்தக்கடவுள் என்னை இத்தனை சோதனைகளுக்கு ஆளாக்கினாரோ அவர் என்னை மறுவாழ்க்கையில் சுகமாக வைப்பார் என எப்படி நம்ப முடியும். நான் உங்களுக்குரியவள். இதைக்கேட்டு ஊரார் பிரமித்துவிடுவார்கள். ஆனாலும்……”
தளைகளை உடைக்க அவள் தயாராகிவிட்டாள். காரணம் உயிரின் ஆதிவேட்கை. வாழும் இச்சை. ஆனால் அது தனஞ்சயனை பீதிகொள்ளச் செய்கிறது. அவன் அப்படி வாசந்தியைப் பார்த்ததேயில்லை. வேட்கை காதலாக மாறுவேடமிட்டால்தான் ஆணால் ஏற்க இயலும். அவன் ஊரைவிட்டே சென்று விடுகிறான்
லட்சுமி நந்தன் போரா வாழ்க்கையின் அடிப்படை இச்சைகளைத்தான் கங்கைப்பருந்தின் சிறகுகள் என்கிரார். இச்சையின் ஏழுவண்ணம் கொண்ட சிறகுகள். வானில் வட்டமிடும் வல்லமை கொண்டவை. ஆனால் சிறகுவிரிக்க உரிமையில்லாத வாழ்க்கை.
*
இந்த நாவலை இதன் எளிமையை மீறி முக்கியமாக ஆக்குவது இரண்டு விஷயங்கள் மிகையான அலங்காரங்கள் இல்லாமல் அனுபவம் சார்ந்து உருவாகும் நுட்பமான தகவல்களுடன் இதில் விரிந்து எழுந்துவரும் இயற்கையின் மனம் கவரும் தோற்றம். இயற்கையை சொல்வடிவமாக ஆக்குவதில் வங்க நாவலாசிரியர்களான `விபூதி பூஷன் பந்தோ பாத்யாய’, `அதீன் பந்தோபாத்தியாய’ ஆகியோரினால் ஊக்கம் கொண்டவராக `போரா’வையும் குறிப்பிடலாம். நுட்பமான கிராமியத்தகவல்கள் நிரம்பிய நாவல் இது. ஜோகா என்ற அரிசியின் மணம் கமழ்வதனாலேயே ஜகான்மால் என்று அழைக்கப்படும் காட்டுப்பூனை, ஜல்மயீ [ நீர் நிறைந்தவள்] பாப் சிலா [பாவக் கல்] போன்ற பெயர்கள் கொண்ட ஊர்கள். தண்ணீரில் ஒரு முறை துடுப்பு வலித்தால் செல்லும் தூரம் பேஊ என அளவிடும் நாட்டுப்புற முறைகள். மீண்டும் மீண்டும் வாசந்தியின் நெஞ்ச அலைகளுடன் இணைக்கப்படும் சோனாய் நதியின் சித்திரங்கள் எல்லாம் சேர்ந்து ஓர் அஸாமிய மலைக்கிராமத்தைக் கண்ட அனுபவத்தை உருவாக்குகின்றன
இரண்டாவதாக குறிப்பிடவேண்டிய விஷயம் எளிய கள்ளமற்ற மலைக்கிராமம் ஒன்று நவீன காலகட்டத்தை நோக்கி அரசியல் வழியாகவும் வணிகம் வழியாகவும் கல்வி வழியாகவும் நகர்வதன் சித்திரம் இதில் உள்ளது என்பதே. அறுபது எழுபதுகளில் எழுதப்பட்ட வெற்றிகரமான பல இந்திய நாவல்களில் உள்ள சித்திரம்தான் இது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. எனினும் இதிலுள்ள ஓர் இழப்பு, குழந்தை வளர வளர அதன் களங்கமின்மை உதிர்வதுபோல, மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது.
மனிதர்களால் எளிதில் மீறமுடியாத மனத்தளைகள் குறித்த எளிய சித்திரம் இந்நாவல். காலம் மாறுகிறது. புற வாழ்க்கை எளிதில் மாறுகிறது. அகத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளை அகத்தால் கூட காண முடிவதில்லை. அவற்றை வெல்வதும் எளிதாக இல்லை.
[ கங்கைப் பருந்தின் சிறகுகள் லட்சுமி நந்தன் போரா தமிழில்: துளசி ஜெயராமன்; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.]
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jan 29, 2006
தொடர்புடைய பதிவுகள்
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
ஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
சித்திரவனம்
ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’
பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’
வி.எஸ்.காண்டேகரின் யயாதி.
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்.
நானக் சிங்கின் வெண் குருதி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers


