Jeyamohan's Blog, page 1743
August 14, 2016
குழந்தைகளுக்கான கதைகள் -கடிதங்கள்
 
அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் நான் படித்த ஒரு படக்கதை புத்தகம்தான் ரஸவாதி. பௌலோ கொய்லோவின் உலகப் பிரசித்திபெற்ற இந்தப் புத்தகத்தை ஹாப்பர் காலின்ஸ் பதிப்பகம் படக்கதை வடிவத்தில் மிக அற்புதமாகக் கொண்டு வந்துள்ளது. தற்போது காமிக்ஸ் உலகம் எப்படியிருக்கிறது என்று நான் அறியேன். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் அதை அறிய நேர்ந்தபோது வியந்து போனேன். தற்போதைய காலகட்டம் சிறுவர்களின் வாசிப்புக்கு எத்தகைய பெரும்பங்கை ஆற்றுகிறது என்பதை நினைக்கும்போது அதைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. சிறுவர்களின் முன்னே வாசிப்பிற்கு அற்புதமான உலகம் விரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதை எத்தனை தூரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
இப்புத்தகத்தை வாசிக்கையிலும், வாசித்து முடித்ததும் என் மனதில் கிளர்ந்த ஆசை தங்களின் பனிமனிதனை கிராபிக்ஸ் நாவலாக கொண்டுவர வேண்டும் என்பதுதான். அதை யாராவது சாத்தியமாக்கினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். நம் சிறுவர்கள் இன்னும் அயல்மொழிக் கதைகளையே படக்கதையாக வாசித்து வருவது வருத்தத்திற்குரியது.
http://kesavamanitp.blogspot.in/2016/08/the-alchemist-graphic-novel.html
அன்புடன்,
கேசவமணி
***
அன்புள்ள ஜெ.,
எல்லாவற்றிற்கும் உங்களிடம் விடை இருக்கிறது.. உதாரணமாகக் கண்ணப்ப நாயனார் கதையை எப்படி என் 4 வயது மகளுக்கு சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. சொல்லாமல் இருப்பதே நலம் என்று புரிந்துகொண்டேன்.. மிகைக் கற்பனைகளைக் குழந்தைகள் அழகாகப் புரிந்துகொள்கின்றன. நடைமுறை உண்மையோடு குழப்பிக்கொள்வதில்லை..
குழந்தைகளுக்குக் கதை சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் மனித மூளையை வியக்காமல் நான் இருந்ததில்லை..
ரத்தன்
பிகு: பேசும் கரடி, பேய், சிங்கராஜா என்பதையெல்லாம் கற்பனை என்று என் மகள் தெளிவாகப் புரிந்துகொள்கிறாள்.. ஆனால், பிள்ளையாரும் (பிற கடவுள்களும்) ஒரு கற்பனையாக இருக்கக்கூடும் என்பதை என் மகள் வன்மையாக மறுத்துவிட்டாள்.. அதிகப்பிரசங்கித்தனம் செய்கிறேனோ என்று எனக்கே பயம் வந்துவிட்டது.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
[ 7 ]
விதுரர் நோயுற்றிருப்பதாக காலன் வந்து சொன்னபோது தருமன் ஆற்றங்கரையிலிருந்த ஆலமரத்தடியில் நகுலனுடனும் சகதேவனுடனும் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் காலையின் வழிபாட்டுச்சடங்குகள் முடிந்தபின்னர் ஆற்றங்கரைக்கு உடல்முகம் கழுவும்பொருட்டு வந்தனர். எதிரே கிருதன் வருவதை தருமன் கண்டார். “நேற்று நாம் பேசிக்கொண்டிருந்த இளையோன். நாம் சொன்ன சொற்கள் அவனை இரவு கண்துயில விட்டிருக்காது” என்று தருமன் புன்னகைத்தார். ஆனால் அவர்களைக் கண்டதும் கிருதன் மறுபக்கம் வழியாக விலகிச்சென்றுவிட்டான்.
அது தருமனை திகைக்க வைத்தது. “அவன் நம்மை தவிர்க்கிறானா?” என்றார். “அவன் உள்ளம் வருந்தும்வண்ணம் எதையேனும் சொல்லிவிட்டோமா? இல்லை நம்முடன் பேசிக்கொண்டிருந்தமையால் அவனுக்கு இங்கே தீங்கேதும் நிகழ்ந்தனவா? இளையவனே, அவனை சந்தித்து அதை அறிந்துவா” என்றார். சகதேவன் “தேவையில்லை, மூத்தவரே. நேற்று இளையவர் சொன்னவை அவனை கொந்தளிக்கச் செய்துவிட்டன. அவன் உள்ளமும் எண்ணமும் அச்சொற்களைத் தாளாது தவிக்கின்றன. இப்போது பெருமழையில் இளஞ்செடி என தளர்ந்து சரிந்திருக்கிறான்” என்றான்.
“அந்த வலியே அவன் நம்மை தவிர்க்கச்செய்கிறது. நம்மைப்பற்றி எண்ணவே கூடாதென உறுதிகொள்வான். ஆனால் எண்ணிக்கொண்டேதான் இருப்பான். செல்லவேண்டிய தொலைவனைத்தையும் முழு உடலால் மண்புழு போல சென்று சேரவேண்டிய ஒன்றே தத்துவத்தின் பாதை, மூத்தவரே. பெருமழையை அவன் இலைகள் அஞ்சலாம். வேர்கள் மண்ணுக்குள் உவகைகொண்டு கிளர்ந்திருக்கும். அந்த முரண்பாட்டுக்குள் அலைக்கழிகிறான்” என்று சகதேவன் தொடர்ந்தான். “மானுடன் மிக எளிய உயிர். இத்தனை பெரியவற்றை இச்சிறுபறவை எதன்பொருட்டு கவ்விக்கொள்கிறது?” என்று தருமன் பெருமூச்சுவிட்டார்.
“கழுகு என சிறகுவிரிக்காத பறவைக்குஞ்சுகளே இல்லை. அவற்றில் சில கழுகுகளாகவும் ஆகின்றன. பறக்கத் துடிக்கும்போதே மயிர்கொண்ட கைகள் சிறகுகள் என்றாகின்றன” என்று சகதேவன் சொன்னான். “சப்ததந்திர நீதியின் வரிகள் இவை.” தருமன் எண்ணங்கள் வேறெங்கோ செல்ல தலையை அசைத்தார். பின்பு “எல்லாம் வீண் என்று தோன்றும் கணங்களே தத்துவமாணவனின் நரகுலகு” என்றார். கைகளை விரித்து “எல்லாம் எண்ணும் வேளையில் பசிதீர உண்ணுவதும் உறங்குவதுமாய் முடியும். என்புத்தசையென எழுந்த உடலின் இன்பத்திலன்றி எதிலும் நிறைவென்பதே இல்லை. அடைந்த கணமே கடத்தல் என ஆனது தத்துவம். எனவே அதை மயிர்சுட்டுக் கரியெடுத்தல் என்றனர் முன்னோர்” என்றார்.
பேசியபடியே அவர்கள் ஆலமரத்தடிக்கு வந்ததும் அங்கே அமர்ந்துகொண்டனர். “இந்த ஆலமரத்தின் பெயர் நிதாந்தம்” என்று நகுலன் சொன்னான். “ஆலமரங்களின் பெயர்களைக்கொண்டே ஒரு குருநிலையின் எண்ணங்களை உய்த்துக்கொள்ளலாம் போலும்.” தருமன் “அனைத்து வேதநிலைகளையும் தவிர்த்துவிட்டுச் சென்று எங்காவது எளிய ஆற்றங்கரையில் ஒரு குடிலமைத்து தங்கவேண்டுமெனத் தோன்றுகிறது, இளையோனே. எவரும் நாமிருப்பதை அறியலாகாது, எவரையும் நாமும் அறியலாகாது” என்றார். “அவ்வாறு அமைந்தவைதான் இவையனைத்தும். மானுடர் அவற்றைத் தேடிக்கண்டடைந்து கொடைப்பொருட்களுடன் வந்து குழுமுகிறார்கள்.”
காலன் வருவதை அவர்கள் பார்த்தனர். “அவன் உடலில் விரைவு உள்ளது” என்றான் நகுலன். அருகே வந்த காலன் வணங்கி சுருக்கமாக “அமைச்சர் விதுரர் நோயுற்றிருக்கிறார். நேற்று பகல் முதலே உணவுண்ணவில்லை. இரவு கடும் வெப்பநோயால் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றார்கள். இன்றுகாலை முதல் தன்னினைவே இல்லை. தங்கள் பெயரை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றான். தருமன் எழுந்து “வருக!” என்று தன் தம்பியரிடம் சொல்லிவிட்டு விரைந்து நடந்தார். “அவர் உண்ணாநோன்பிருந்தாரா?” என நகுலன் காலனிடம் கேட்டான். “இல்லை, முன்நாள் சற்று உணவுண்டிருக்கிறார்” என்று அவன் சொன்னான்.
அவர்கள் விதுரரின் குடிலை அடைந்தபோது உள்ளே மருத்துவர்கள் இருந்தனர். கைகளைக் கட்டியபடி தருமன் அவர்கள் வெளியே வருவதற்காக காத்து நின்றிருந்தார். காலன் மெல்லிய குரலில் “காலையிலேயே முதன்மையாசிரியருக்கு தெரிவித்துவிட்டார்கள். தங்களைத்தேடி குடில்களுக்குச் சென்றபின்னரே என்னிடம் சொன்னார்கள்” என்றான். உள்ளே மருத்துவர்கள் மெல்லிய குரலில் பேசுவதும் செம்புக்கலங்கள் முட்டிக்கொள்ளும் ஒலியும் கேட்டது. நடுவே மிகப்பெரிய இருமல்தொடர் எழுந்தமைந்தது. அது விதுரர் என தருமனால் எண்ண முடியவில்லை. மெலிந்தவர் என்றாலும் அவர் எப்போதுமே உறுதியான உடல்கொண்டவராகவே தென்பட்டிருக்கிறார்.
மருத்துவர்கள் எழுந்து வெளிவருவதை கேட்டார்கள். முதலில் வெளிவந்த முதுமருத்துவர் சக்ரர் “வணங்குகிறேன், அரசே. காய்ச்சல் சற்று மிகையாகவே உள்ளது. நெஞ்சு மட்டுமல்லாது வயிறும் பழுத்துவிட்டிருக்கிறது. மூக்குவழியாகவும் வாய் வழியாகவும் மருந்து அளிக்கவேண்டியிருக்கிறது” என்றார். தருமன் “உயிருக்கு இடர்…?” என்றார். “உள்ளது, உடல் மிக நொய்ந்துள்ளது. உள்ளம் அதைவிட நொய்ந்துள்ளது. இக்கூட்டில் தங்கிவாழ ஆத்மன் விரும்பவில்லை. ஆகவே…”
தருமன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டபோது குரலே எழவில்லை. “அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருள் வாழ்வது விழையவேண்டும், ஆற்றுவதற்கு எஞ்சியுள்ளது என்று” என்றபின் சக்ரர் திரும்பி தன் துணைவர்களைப் பார்த்துவிட்டு நடந்தார். தயங்கிய காலடிகளுடன் தருமன் படிகளில் ஏறி குடிலுக்குள் சென்றார். அவர்கள் உள்ளே சென்றபோது அச்சிறு அறை நிறைந்தது. மழையில்தளிர்த்த காட்டுத்தழைப்பு இளவெயிலில் வாடிய மணத்துடன் காற்று உள்ளே வந்தது. அதிலிருந்த நீராவி பிறிதொரு மழையை சொன்னது.
விதுரரை அந்த வெக்கை மூச்சுத்திணறச் செய்வது போலிருந்தது. மெலிந்து எலும்புநிரை எழுந்த மார்பு மேலெழுந்து நின்றது. குரல்வளை புடைத்து அசைந்தது. மூச்சொலியுடன் உரசல் போல இழுபடல் போல முனகல் போல பலவித ஒலிகள் கலந்து வந்தன. அவ்வப்போது எழுந்த இருமலில் அவர் உடலே அதிர்ந்து எழுந்து துடித்து மீண்டும் மஞ்சத்தில் விழுந்தது. அருகே அமர்ந்திருந்த மருத்துவ உதவியாளன் அவர் இருமியமைந்ததும் வாயை துடைத்தான்.
தருமன் சென்று அவர் அருகே போடப்பட்ட காட்டுக்கொடிபின்னியமைந்த சிறுபீடத்தில் அமர்ந்தார். அவர் அருகே நகுலனும் சகதேவனும் நின்றனர். அவரை அழைக்க மருத்துவ உதவியாளன் கைநீட்ட வேண்டியதில்லை என தருமன் தலையசைத்து மறுத்தார். கைகளை மார்பில் கட்டியபடி அவரையே நோக்கிக்கொண்டிருந்தார். இருமி அதிர்ந்து தளரும் மெல்லிய கரிய உடல். அவர் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசரின் வடிவில் வந்தவர் என்பார்கள். பிதாமகர் தென்னகக் காட்டுக்குள் எங்கோ உயிருடன் இருக்கிறார் என்று சூதர் சொல்வழியாக அறிந்திருந்தார். அப்படியென்றால் அவர் இவரைப்போல் இருப்பாரா? ஆனால் அவர் கவியோகி. இவர் உலகியலில் ஆடி உயிர் கரைந்துகொண்டிருப்பவர்.
அவருடைய அருகமைவை விதுரர் உணர்ந்துகொண்டு விழிகளை திறந்தார். தேர்ச்சகடம் ஏறி உடைந்த நாகத்தின் தலை எழுவதுபோல அவர் கைமட்டும் நீண்டு வந்தது. தருமன் கை நீட்டி அதை பற்றிக்கொண்டார். “உண்பதும் உறங்குவதும் காமமும் இறப்பும்” என அவர் மெல்லிய குரலில் சொன்னார். “பிறிதொன்றுமில்லை.” அச்சொற்களை அவர் சொன்னாரா, தன் உள்ளம் உரத்ததா என தருமன் திகைத்தார். அவருள் ஓடிக்கொண்டிருந்தது அவ்வெண்ணம். “ஆம், வேறொன்றுமில்லை. அனைத்தும் வீண்.” அவர் குரல் அவ்வுடலில் அமைந்த பிறிதொன்றின் ஒலியென கேட்டது. மிகமிக ஆழத்திலுள்ள ஏதோ உலகில் வாழும் ஒன்று.
“அரசியை நான் பார்க்கவேண்டும்” என்றார் விதுரர். “அழைக்கிறேன்” என்று தருமன் சொன்னார். “இப்போதே. ஒருவேளை நான்…” என்றபின் “நான் சொல்லிக்கொள்ளவேண்டியது அவளிடம் மட்டுமே. அது மட்டுமே எஞ்சியிருக்கிறது” என்றார் விதுரர். இருமல் எழுந்து அவரை தூக்கிப்போட்டது. சரள்கல்பாதையில் துள்ளிச்செல்லும் தேர்த்தட்டின்மேல் படுத்திருப்பவர்போல அவர் அதிர்ந்து உலுக்கிக்கொண்டு பின் மெல்ல தளர்ந்தார். கை பக்கவாட்டில் விழுந்து விரல்கள் ஒவ்வொன்றாக விரிந்தன. இமைச்சுருக்கம் அதிர்ந்து பின்பு மெல்ல விரிந்து முகம் துயில்கொண்டது. வாய் விழுந்து பற்கள் தெரிய உலைவாய்நீராவி என மூச்சு வெடித்து வெடித்து வெளிவரத்தொடங்கியது.
தருமன் எழுந்து வெளியே வந்தபோது காலன் அருகே வந்தான். “அரசியை உடனே வரும்படி சொல். இது என் ஆணை!” என்றார். அவன் கிளம்பியதும் “இளையோனே, நீயும் உடன்செல்” என்று சகதேவனிடம் சொன்னார். அவர்கள் இருவரும் செல்வதைப்பார்த்தபடி முற்றத்தில் நின்றிருந்த மகிழமரத்தின் அடியில் காத்திருந்தனர். அதன் மெல்லிய சருகுகள் காற்றில் மிதந்து இறங்கிக்கொண்டிருந்தன. சிலந்திவலையின் கண்காணா நுண்சரடில் சிக்கி ஒரு இலை வெளியில் நடனமிட்டுக்கொண்டிருந்தது.
“இத்தனை காற்றடிக்கிறது. இவ்வலைகள் அறுந்துவிடுவதே இல்லை” என்று அவர் விழியோட்டல் கண்டு நகுலன் சொன்னான். தருமன் “அறுந்துவிடுகின்றன. ஆனால் மறுநாளே முன்பிருந்ததுபோல அவை உருவாகிவிடுகின்றன” என்றார். அந்தச் சிறிய வெண்ணிறச் சிலந்தியை அப்போதுதான் கண்டார். “திசைக்கையன் என்று இதை சொல்கிறார்கள். தன்னுள் இருந்து எடுத்து தன்னைச்சுற்றி வலைபின்னி அதன் நடுவே திசைகளையே கைகளென்றாக்கி அமர்ந்திருக்கிறது, தான் எதன் ஒப்புமை என அறியாமல்.” நகுலன் அந்தப் பேச்சு தத்துவமாக மாறுவதை அப்போது விரும்பவில்லை. திரௌபதி வரும்வரை வெறும் சொல்லோட்டம் நிகழ்ந்தால் போதுமென நினைத்தான். “சலிக்காமல் பின்னுகிறது. அதற்கு என்ன நிகழ்கிறதென்றே தெரிவதில்லை. அதன் உயிர்க்கடமை அது, அவ்வளவுதான்.”
வியப்பூட்டும்படி அந்தப் பேச்சு அப்படியே அறுந்து நின்றது. அவர்கள் வெயில்பொழிவை நோக்கியபடி நின்றிருந்தனர். உள்ளே விதுரர் உரக்க இருமும் ஒலி கேட்டது. நகுலன் “உண்மையில் இருமுவது ஒரு நற்குறி. உடலில் ஆற்றல் எஞ்சியிருக்கிறது, நெஞ்சச்சளியை அது வெளியேற்ற முயல்கிறது என்பதை காட்டுகிறது” என்றான். தருமன் அதை மேலும் பேசிச்செல்ல விரும்பவில்லை. மீண்டும் ஆழ்ந்த அமைதி உருவானது. வெண்சிலந்தி அவர்களுக்கு முன்னால் வந்தது. ஒளியில் நீந்திச்சென்று ஒரு கணத்தில் அது மறைந்தது. முழு ஒளியையும் தன் உடல்வழியாக கடக்கச்செய்து தன்னை அது பெருவெளியில் புதைத்துக்கொண்டது.
சகதேவனும் காலனும் வர தொடர்ந்து திரௌபதி வருவதை அவர்கள் கண்டனர். தருமன் மெல்லிய பதற்றம் கொண்டு ஓர் அடி முன்னால் எடுத்துவைத்து பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். திரௌபதி எப்போதும்போல சீரான காலடிகளுடன் நிகர்கொண்ட தோள்களுடன் பெரும் அணிவகுப்பில் முதன்மைகொண்டு செல்பவள்போல வந்தாள். அவர்கள் அருகே வந்ததும் நகுலன் சென்று “வருக, அரசி!” என்றான். “நோயுற்றிருக்கிறார். எதிர்பார்க்கவேண்டியதில்லை என்றார் மருத்துவர். உன்னிடம் சில சொற்கள் பேசவிழைகிறார்.”
அவள் அனைத்தையும் சகதேவனிடம் கேட்டிருந்தாள். எனவே மெல்ல படியேறி மேலே சென்றாள். பிறர் நின்றுகொள்ள தருமன் அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றார். மருத்துவ உதவியாளன் எழுந்து “இருமுறை விழித்துக்கொண்டு வந்துவிட்டார்களா என்று கேட்டார், அரசி” என்றான். அவள் அவர் அருகே சென்று நின்றாள். தருமன் கைகாட்ட மருத்துவ உதவியாளன் அவர் தோளை மெல்லத் தொட்டு “அமைச்சரே” என்றான். அவர் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு வாய் மெல்ல திறக்க நாக்கு அதன் பொந்துக்குள் தவிக்க பழுத்த விழிகளால் அவளை பார்த்தார்.
“வந்துவிட்டார்கள், அமைச்சரே” என்று மருத்துவ உதவியாளன் சொன்னான். அவர் ஆம் என தலையசைத்தார். அவர் முகம் மிக மெலிந்திருந்தமையால் மூக்கு புடைத்து எழுந்திருப்பதாகத் தோன்றியது. அதன் மேல்வளைவு மெழுகுபோல உயிரற்ற ஒளி கொண்டிருந்தது. விழிகளுக்குக் கீழே வீங்கியிருந்த இமைத்தசைகள் இழுபட்டு துடித்தன. மூச்சொலி எழுந்தடங்கியது. தருமன் அவள் ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தார். மண்டியிட்டு அமர்ந்து அவர் கைகளை தொடலாம், கனிந்த குரலில் என்ன செய்கிறது என்று கேட்கலாம். அவள் அப்படி செய்யக்கூடியவளே அல்ல. ஆனால்…
விதுரரின் கைகள் மஞ்சத்தின் மேல் தவித்தன. ஒரு கையை மெல்ல தூக்கி தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டார். அவர் வயிறு சற்று வீங்கியிருப்பதுபோல் தோன்றியது. மறு கை தவித்தது. மார்பின்மேல் கிடந்த ஆடையைப் பற்றியது. சிலந்திபோல தொற்றி மேலேறி மார்புக்கு வந்தது. இருகைகளும் ஒன்றை ஒன்று தொட்டன. விரல்கள் கோத்துக்கொண்டன. அவர் வணங்குகிறார் என்று அப்போதுதான் புரிந்தது. “எளியவன்… பொறுத்தருளவேண்டும்” என்று அவர் சொன்னார். கண்கள் சரிந்து இமைப்பீலிகளைக் கடந்து நீர் ஊறி கன்னங்களில் வழிந்தது. “பொறுத்தருளவேண்டும்… மூடன். சிறுமைகொண்டவன் நான்…”
அவள் அசையாமல் நின்றிருந்தாள். தருமன் தன் நெஞ்சின் ஒலியை கேட்டார். அவள் ஏதேனும் சொல்லவேண்டும். ஒரு சொல்லேனும். உள்ளத்தால் அந்தப் பொழுதை தள்ளி முன்னே செலுத்தினார். ஆனால் இரும்புச்சுவர் என நின்றிருந்தது அந்தத் தருணம். இறுகி அமைதிகொண்டு. “நான்… பொறுத்தருளவேண்டும், தேவி” என்றார் விதுரர். கண்களை மூடிக்கொண்டு வலிகொண்டவர் போல தலையை அசைத்தார். பற்கள் வெளிவந்து உலர்ந்த இதழ்களைக் கவ்வி தடம்பதித்தன. கைகளில் ஒன்று தவித்து சறுக்கி விலாவருகே மஞ்சத்தில் விழுந்தது. தொண்டைமுழை ஏறியிறங்கித் தவித்தது.
முன்னால் பாய்ந்து அவள் தோள்களைப் பற்றி உலுக்கவேண்டுமெனத் தோன்றியது. நெஞ்சுடைய வீரிடவேண்டுமென உடல் தவிப்புகொண்டது. அவள் அசையா உடலுடன் நிலைவிழிகளுடன் நின்றிருந்தாள். “ம்” என்று விதுரர் சொன்னார். இருமல் வந்து உலுக்கிய உடல் மெல்ல அமைந்ததும் “ம்ம்” என மீண்டும் முனகினார். அவளை நோக்க தருமனால் முடியவில்லை. கால்கள் தளர்வதுபோலிருந்தது. பலமுறை திரும்பி வெளியே செல்லும் உடலசைவுகள் எழுந்தபோதும் கால்கள் அசைவுகொள்ளவில்லை.
விதுரர் மெல்ல துயிலத் தொடங்கினார். அடித்தொண்டை ஒலி எழுந்தது. இன்னொரு கையும் நழுவி மஞ்சத்தில் விழ இரு கால்களும் விடுபட்டு விரிந்தன. அவள் அப்போதும் விதுரரையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் திரும்பி அவளைப் பார்த்தார். கருங்கல்முகம். உணர்வுகள் நிகழவே முடியாதது.
அறியாமலேயே அவர் கால்கள் திரும்பின. வெளியே வந்தபோது முற்றத்தின் வெளிச்சம் விழிகளை குருடாக்கி இமைகளுக்குள் குருதிக்குமிழிகளை சிதறடித்தது. கண்களை மூடிக்கொண்டு சிலகணங்கள் நின்றார். தலைசுற்றி விழுந்துவிடுவோம் என ஐயுற்றார். கைநீட்டி வாயில்தூணை பற்றிக்கொண்டார். குளிர்காற்று வந்து பட்டபோதுதான் உடல் வியர்வைகொண்டிருப்பது தெரிந்தது. காது அடைக்கும் ஒரு ரீங்காரம். வெண்கல மூடி தட்டப்பட்டதுபோல.
தருமன் முற்றத்தில் இறங்கி மகிழமரத்தடி நோக்கி சென்றார். நகுலன் “பேசிவிட்டாரா?” என்றான். அவருக்குப் பின்னாலேயே திரௌபதியும் வந்து படியிறங்கி நின்றாள். நகுலன் “நான் சென்று அவளை குடிலில் விட்டுவிட்டு வருகிறேன், மூத்தவரே” என்றான். அவன் அருகே சென்று “செல்வோம்” என்றபோது திரௌபதி மறுமொழி சொல்லாமல் தலையசைத்தாள். அவர்கள் சென்று மறைவதை தருமன் நோக்கி நின்றார். மழைகழுவிய காற்றை நிறைத்திருந்த பகல் ஒளி கண்களை கலங்கி வழியச்செய்தது.
[ 8 ]
அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் அவன் புதியதாக அமைத்த வில்லை வளைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். “இன்று நான் அடைந்த உளச்சோர்வு எதனால் என்று பின்னரே எனக்குப் புரிந்தது, இளையோனே” என்று தருமன் சொன்னார். “அவள் நம்மை மன்னிக்கவில்லை. பன்னிரு படைக்களத்திலிருந்து வெளிவந்த அக்கணத்தின் உளநிலையிலேயே இப்போதும் இருக்கிறாள்.”
“அவள் மூத்தவரை முழுமையாகவே மன்னித்துவிட்டாள்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவருடன் கானாடுகையில் அவள் முகம் கொள்ளும் மலர்வு அதையே காட்டுகிறது. இளையோரிடம்கூட அவளுக்கு பெருஞ்சினமென ஏதுமில்லை.” தருமன் “ஆம், அவள் பெருஞ்சினம் கொண்டிருப்பது என்னிடம் மட்டுமே” என்றார். “அது முற்றிலும் சரியானது.” அர்ஜுனன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.
அவன் ஏதாவது சொல்வான் என தருமன் எதிர்பார்த்தார். அவன் மீண்டும் தன் வில்லில் மூழ்கிவிட்டமை கண்டு தன் கையிலிருந்த சருகை வீசிவிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவர் குழற்சுருள்கள் முகத்தின் மேல் நிழலாட விழுந்து கிடந்தன. அருகே கிடந்த குச்சி ஒன்றை எடுத்து மண்ணை தோண்டிக் கொண்டிருந்தார். அப்பால் நகுலன் வருவதைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தார்.
“உடல் எளிதாக இருக்கிறது. நற்செய்தி என எண்ணுகிறேன்” என்றான் அர்ஜுனன். நகுலன் அருகே வந்து தலைவணங்கி “அமைச்சர் தேறிவருகிறார் என்கிறார்கள் மருத்துவர்கள். காய்ச்சல் மிகவும் குறைந்திருக்கிறது. இன்று பால்கஞ்சியும் பழச்சாறும் அருந்தியிருக்கிறார். ஓரிருநாளில் முற்றிலும் நலமடைந்துவிடுவார் என்கிறார்கள்” என்றான். தருமன் பெருமூச்சுடன் “நன்று” என்றார்.
“இன்று காலையில் நினைவு மீண்டிருக்கிறது. தன் அணுக்கன் ஒருவனுக்கு ஓர் ஓலை அனுப்பும்படி சொல்லியிருக்கிறார். இப்பகுதிக்குரிய அவரது ஒற்றன் என எண்ணுகிறேன்” என்றான் நகுலன் அருகே அமர்ந்தபடி. “நாம் சென்று பார்ப்பதை விரும்புவாரா?” என்று தருமன் கேட்டார். “ஆம் என்றே எண்ணுகிறேன். அவர் மீண்டும் முந்தைய உளநிலைக்கே மீண்டுவிட்டார் எனப் படுகிறது” என்று நகுலன் சொன்னான்.
ஆனால் அவர் உடல்நிலை மீண்டது தனக்கு ஏன் பேருவகையென எதையும் அளிக்கவில்லை என தருமன் எண்ணிக்கொண்டார். அது ஆறுதலை அளித்தது, கூடவே ஓர் ஏமாற்றத்தையும். விதுரர் இறந்துபோவதற்குரிய மிகச்சரியான தருணம் இதுவன்றி வேறேது? அறத்தின்பொருட்டு மூத்தோனையும் நகரையும் துறந்து அறியாக்காடொன்றின் கல்விநிலையில் அவர் நோன்பிருந்து இறந்தார் என்றால் அது சூதர்களால் பாடப்படும். காவியங்கள் எழுதப்படும். தலைமுறைகள் அதைக் கேட்டு கண்ணீர் மல்குவார்கள்.
எதுவாக அவர் அறியப்பட்டாரோ அதை நிறுவிவிட்டு இறப்பதென்பது பெரும்பேறு. அந்த வாய்ப்பு வந்தது, அதை அவர் கடந்து செல்கிறார். அவர் பிழைதான் அது. இன்னும் அவர் ஆத்மா விடைபெற விரும்பவில்லை. அந்த மெலிந்த கரிய கூட்டை கவ்விக்கொண்டு இன்னமும் இங்கு எஞ்ச விரும்புகிறது.
இனி அவர் என்ன செய்யப்போகிறார்? இங்கே நோன்பிருந்தால் எத்தனை காலம்? காலம் செல்லச்செல்ல அனைத்துப் பெருமைகளும் அன்றாட வாழ்வாகிவிடுகின்றன. பெரும் இழப்புகளும் பலிகளும் மறக்கப்படுகின்றன. இங்கிருந்தால் ஒரு முதியவயது மாணவனாக அவர் மாறக்கூடும். அவரது பெயர்கூட காலப்போக்கில் மறக்கப்படும். மாணவர்கள் சூட்டிய பெயரே எஞ்சும். பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு முழுவாழ்க்கை. அதன்பின் அவர் முன்பு ஓர் அமைச்சராக இருந்தார் என்பது அவருக்கே பழையநினைவு.
விடைபெற்று மீண்டும் அஸ்தினபுரிக்குச் செல்லலாம். அங்கே அவரை திருதராஷ்டிரர் ஆரத்தழுவி வரவேற்பார். இவர் கிளம்பியதுமே அவர் நோயுற்று படுத்துவிட்டார் என்றார்கள். தமையனின் அவையில் இளையோன் என இருக்கலாம். ஆனால் துரியோதனனின் அரசவையில் இனி அவர் அமைச்சர் அல்ல. உரிய இடத்தில் உரிய முறையில் இறக்காதவர்களுக்கு பெருமை இல்லை.
அவ்வெண்ணங்களில் இருந்த இரக்கமின்மையைக் கண்டு அவரே அஞ்சினார். எழுந்து காட்டுக்குள் புகுந்து பின்னியும்பிரிந்தும் சென்ற ஒற்றையடிப்பாதைகள் வழியாக நடந்தார். வழிதவறி மீண்டார். வழிகளைக் கண்டடைந்ததும் உவகை கொண்டார். அவரை மேலிருந்து ஒரு குட்டிக்குரங்கு உற்றுப் பார்த்தது. ஆர்வம் மிகுந்து கிளைவழியாக அவருடனேயே வந்தது. அவருக்கு இளமையில் இடும்பவனத்தில் உடன் வந்த குட்டிக்குரங்கு நினைவுக்கு வந்தது. அது மூத்து முதற்குரங்காகி முதுமைகொண்டு மறைந்திருக்கும். அதன் மைந்தரும் பெயர்மைந்தரும் காடுகளுக்குள் நிறைந்திருப்பார்கள்.
அவர் அந்தக் குட்டிக்குரங்கை நோக்கி புன்னகைத்தார். அவர் கையை தூக்கியதும் அது அஞ்சி ஓசையிட்டபடி மேலே சென்றது. மீண்டும் தயங்கி இறங்கிவந்தது. மெல்லமெல்ல அவரை அணுகியது. அவர் அதை நோக்காதபோது அவர் ஆடையைத் தொட்டு இழுத்துவிட்டு கிளைகளில் ஏறிச்சென்றது. அவர் அதையும் பொருட்படுத்தவில்லை என்று கண்டுகொண்டதும் அவருக்கு இணையாகவே நடக்கத் தொடங்கியது.
அவருக்கு அது தன் திறனையும் தன் காட்டின் சிறப்பையும் காட்டத் தொடங்கியது. பாய்ந்து கிளைகளில் ஏறி காற்றில் வால் விடைக்கத் தாவியது. ஒரு மரத்தில் ஏறி சில்லைக்கிளை வழியாக பிறிதொன்றுக்குச் சென்றது. தலைகீழாக வாலால் சுருட்டிப்பிடித்து கிளைகளில் தொங்கி ஊசலாடியது. எதிரே வந்த மான் ஒன்றின் தலைக்குமேல் சென்று அதன் கொம்பைப்பிடித்து ஆட்டிவிட்டு மேலேறிக்கொண்டது.
அவர் சிரிக்கத் தொடங்கியதும் அதன் துள்ளல் கூடியது. கிளைகளை உலுக்கி சிறிய பழங்களை உதிரச்செய்தது. நாவல் பழங்களை அவர் குனிந்து பொறுக்கிக்கொண்டார். அதுவும் வந்து பழங்களை பொறுக்கிக்கொண்டது. பின்னர் ஒரே தாவலில் அவர் தோள்மேல் ஏறி அமர்ந்து பழங்களை நீட்டியது. அதன் நகங்களின் தொடுகை அவரை கூசிச்சிரிக்க வைத்தது.
காட்டின் எல்லைவரை உடன்வந்த குரங்கு அங்கே அதிர்ச்சியுடன் நின்றது. “எதற்காகப் போகிறாய்?” என்று பார்த்தது. கிளைகளிலும் தரையிலுமாகத் தாவி “போகத்தான் வேண்டுமா?” என்று கேட்டது. சினம்கொண்டு இரு கைகளையும் ஊன்றி சிவந்த குதத்தைக் காட்டி கூச்சலிட்டபடி உடலை ஊசலாட்டியது. அவர் அதை நோக்கிச் சிரித்து கையசைத்தபின் குடில்களை நோக்கி சென்றார்.
அவர் செல்வதைப் பார்த்தபடி அது அங்கேயே நின்றது. குடில்முற்றத்தை அடைந்தபின் அவர் திரும்பிப் பார்த்தார். அது அங்கேயே ஒரு கிளையில் அமர்ந்து அவரை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டார். தன் குடிலை அணுகும்போது நகுலன் அவருக்காகக் காத்திருப்பதைக் கண்டார். அவர் முகம் மலர்ந்திருப்பதைக் கண்டு அவன் குழம்புவது தெரிந்தது. “மூத்தவரே, அமைச்சர் உங்களைப் பார்க்க விழைந்தார் என்று செய்தி வந்தது” என்றான். “ஆம்” என்று அதே மலர்வுடன் அவர் மறுமொழி சொன்னார். “அவரது உடல்நிலை மிகவும் சீரடைந்துவிட்டிருக்கிறது… ஒருநாளுக்குள் அத்தனை மாறுதலென்பது விந்தை என்று சொன்னார் மருத்துவர்.”
“இப்போது மருத்துவர்கள் அவருக்கு நஸ்யம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். காத்திருப்போம். அவர்கள் செய்தியனுப்பியதும் சென்று சந்திப்போம்” என்றான் நகுலன். தருமன் வாயிற்படியில் அமர்ந்தார். “தெளிந்திருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். “ஆம், காடு அளிக்கும் தெளிவுகளுக்கு முடிவேயில்லை. சத்யகாம ஜாபாலர் அடைந்த மெய்மை காட்டிலிருந்தே என இப்போது புரிகிறது” என்றார் தருமன். அப்பால் நிழலாடியது. அவர் திரும்பிப்பார்க்க அந்த குட்டிக்குரங்கு முற்றத்தின் எல்லையில் நின்றிருந்த அசோகமரத்தின் அடியில் அமர்ந்திருந்தது.
நகுலன் அதை நோக்கியதும் அது உளிதீட்டும் ஒலியை எழுப்பியபடி மரத்தில் ஏறிக்கொண்டது. “என்னுடன் காட்டில் உலா வந்தது. என்னைப் பிரிய உளமில்லாமல் தொடர்கிறது” என்றார் தருமன். “அன்பிலிருந்து விலங்குகளுக்கு விடுதலையே இல்லை என்பார்கள். அன்பை அறுக்கத் தெரிந்த ஒரே உயிர் மானுடனே” என்றான் நகுலன். குட்டிக்குரங்கு மெல்ல நடந்து தருமனின் அருகே வந்து நின்றது. அதன் வால் நெளிந்தது, கண்கள் சிமிட்டி சிமிட்டி மூடின. அவர் கைநீட்ட பாய்ந்து அருகே வந்து அவர் மடிமேல் ஏறி அமர்ந்து தன் கைகளை விரித்தது. அதில் அது நாகப்பழங்களை கொண்டுவந்திருந்தது.
“இத்தனை தொலைவுக்கு நசுங்காமல் கொண்டுவந்திருக்கிறது” என்றான் நகுலன். தருமன் அதன் பிடரியையும் முதுகையும் வருடிக்கொண்டிருந்தார். அது மல்லாந்து அடிவயிற்றைக் காட்டியது. வெளிர்சாம்பல் நிற மயிர்மென்மையை அவர் வருடியதும் அப்படியே துயிலத்தொடங்கியது.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
அஞ்சலி- நா.முத்துக்குமார்
இன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்நிலையத்தில் சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு சிறுகதைப்பயிலரங்கம் நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு அரங்கசாமியிடம் பேசியபோது நா.முத்துக்குமாரின் இறப்புச்செய்தி தெரிந்தது. இத்தகைய தருணங்கள் ஒருவகையான வெலவெலப்பை அளிக்க ஆரம்பித்துவிட்டன. இளைய நண்பர் ஒருவரின் இறப்பு மூத்தவர்களுக்குரிய நரகம். அது தொடங்கிவிட்டது என்னும் உணர்வு
நா.முத்துக்குமார் எனக்கு இருபதாண்டுக்காலத்துக்கும் மேலாக அணுக்கமானவர். திருவண்னாமலையில் நானும் அவரும் ஒரு நிலத்தை இணைந்து உரிமைகொண்டிருக்கிறோம், அவ்வகையில் பங்காளிகள். என் மீது அவருக்கிருந்த உறவு சற்று சிக்கலானது. என் எழுத்துக்கள் மேல் ஈடுபாடும் தனிப்பட்ட முறையில் பெரும் பிரியமும் கொண்டவர் .குடித்தால் அருகிருப்பவரிடம் என்னைப்பற்றி வசை மழை பொழிவார். அப்படி நிகழ்ந்தால் மறுநாள் காலையில் அவரே ஃபோன்செய்து என்னிடம் பேசுவார்.
அவரது பார்வை வேறு. வாழ்க்கைப்போக்கு வேறு. அதை நான் ஏற்பதில்லை என அவருக்கு தெரிந்திருந்தது. என்னைப்பார்த்ததுமே குடியை விடுவதற்கு முடிவுசெய்திருப்பதைப்பற்றி பேசுவார். கடைசியாகச் சந்தித்தபோது கடுமையாக அந்தப்பேச்சை எடுக்காதே என்று சொன்னேன். அவர் நான் காணக்காண கரைந்து அழிந்துகொண்டிருந்தார்.
நா. முத்துக்குமார் ஒருவேளை அவரது சினிமாப்பாடல்களுக்காகவே நினைக்கப்படுவார். இலக்கியத்தில் அவர் எண்ணிய எதையும் எழுத நேரவில்லை. அதற்கான மொழியை அமைத்துக்கொள்ள அவருக்குக் கூடவில்லை. ஆனால் ஓர் இலக்கியவாதியாக ஆகியிருக்கக்கூடிய அனைத்துத் தகுதிகளும் கொண்டவர். நுணுக்கமான ரசனையும் தொடர்ச்சியான வாசிப்பும் கொண்டவர் .வாசித்தவற்றைப்பற்றிப் பேசவும் திறமைகொண்டவர்
அவரது குடும்பம் குறித்து அவருக்கிருந்த பற்று அபூர்வமானது. கொந்தளிப்பான பேரன்பு அது. தன் மகன் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். மகள் பிறந்ததை நாலைந்துமுறை கூப்பிட்டுச் சொன்னார். ஆகஸ்ட் 23 அன்று மகளைப்பார்க்க அவர் வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தேன். முடியவில்லை. 24 அன்று அவருக்கு வசதிப்படவில்லை ,ஃபோன் எடுக்கவே இல்லை. நோயில் இருப்பதைப்பற்றி தெரிந்திருக்கவே இல்லை.
இளையவன் என்னும் உணர்வு எஞ்சியிருக்கிறது. திரையுலகில் ஏறத்தாழ அத்தனைபேருக்கும் அவர் தம்பிதான். ஒருவகையான இயல்பான பணிவு அவரிடமிருந்தது. பவாசெல்லத்துரை அவருடைய ஆதர்ச புருஷன் போல. அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஓர் இயல்பு, அத்தனை மனிதர்களையும் விரும்பும் தன்மை, அவருடைய ஆளுமை என்று சொல்லலாம். அவர் தந்தை ஒரு பொதுவுடைமைச் செயல்பாட்டாளர். தந்தை மேல் முத்துக்குமாருக்கு இருந்தது பெரும் பக்தி. பவா செல்லத்துரை அவருக்கு தன் தந்தையின் இன்னொரு வடிவம். திருவண்ணாமலைக்குச் செல்வதை சொந்தக்கிராமத்துக்கு செல்லும் மனநிலையுடன் கொண்டாடினார். அதன்பொருட்டே அங்கு நிலமும் வாங்கினார்
நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
August 13, 2016
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
 
புனத்தில் குஞ்ஞப்துல்லா
‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்?
கேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல ] எம்.முகுந்தன் [மய்யழிப்புழயுடே தீரங்களில்] சேது [பாண்டவ புரம்] ஆகியோரில் ஒருவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. நவீனத்துவத்தின் பிரச்சாரகராகவே விளங்கியவர். ‘எங்களுடையது ஒரே சம்ஸ்காரம்தான் – சவ சம்ஸ்காரம்’ [நினைவுகூர்க அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா. சம்ஸ்காரம் பண்பாடு, சவ அடக்கம் என்ற இருபொருள்வரும் சொல்] என்ற பிரபலமான சொற்றொடர் மூலம் பலரை அதிரச்செய்தவர்.
கேரள நவீனத்துவம் அதற்கு முன்னரே உருவாகி வலுப்பெற்றிருந்த யதார்த்தவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யதார்த்தவாததிற்கு இருமுகங்கள். தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், வைக்கம் முகமது பஷீர், உறூப், பொற்றேக்காட், பாறப்புறத்து போன்றவர்கள் கறாரான புறவயத்தன்மை கொண்ட சமூக யதார்த்தத்தை முன்வைப்பதில் அக்கறைகாட்டிய இலட்சியவாதிகள். அடுத்த மரபு உணர்ச்சிகரமான , அந்தரங்கமான யதார்த்தவாதம். கற்பனாவாதத்தின் விளிம்பில் நின்ற அவ்விலக்கிய மரபு டி.பத்மநாபன், எம்.டிவாசுதேவன் நாயர் முதலியவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்விரு மரபுக¨ளையும் நிராகரித்து உருவானது கேரள நவீனத்துவம்.
நவீனத்துவத்திற்கு முன் ஓங்கியிருந்த எம்.டி.வாசுதேவன்நாயர் பாணி உணர்ச்சிகர யதார்த்தவாதம் ஒரு காலகட்டத்தின் அழிவை உணர்ச்சிமல்கிய நெஞ்சுடன் சொன்னது. எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’ ‘நாலுகெட்டு’ ‘அசுரவித்து’ போன்ற நாவல்கள் அழிந்துவந்த நாயர் குடும்பங்களின் துயரை சொன்னவை. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாட்டின் இன்றியமையாத அழிவைப்பற்றிய இந்நாவல்களில் கூடவே கடந்தகால ஏக்கமும் முக்கியப் பங்குவகித்தது. பழமைவாய்ந்த நாயர் தறவாட்டு வீடுகள், நெற்புரைகள், இடிந்த கோயில்கள், சரிந்த குளங்கள் ஆகியவை அக்கால எழுத்தின் படிமங்கள். எம்.டி.வாசுதெவன் நாயரின் அதே காலகட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஏ.அஸீஸ்[ துறமுகம்] , என்.பி.முகம்மத்[எண்ணப்பாடம்] , யு.ஏ.காதர் [சங்ஙல] போன்றவர்களால் அதே சித்தரிப்பு இஸ்லாமிய வாழ்க்கைசார்ந்தும் அளிக்கப்பட்டது. தமிழில் தோப்பில் முகமது மீரான் இந்த மரபையே தன் முன்னுதாரணமாகக் கொண்டார்.
இந்த யதார்த்தவாத மரபை நோக்கியே புனத்தில் குஞ்ஞப்துல்லா பேசுகிறார். ஆம், இதுவும் இன்னொரு வீழ்ச்சியின் கதைதான். பழைமையான பள்ளிவாசல் சென்றகால மனிதர்கள் எல்லாரும் இதிலும் உள்ளனர். ஆனால் தான் சொல்லப்போவது ஒரு புதிய கதையை என்ற எண்ணமும் ஆசிரியரிடம் உள்ளது. முதல் அத்தியாயமே நாவலின் அடிப்படை இயல்பைச் சொல்லிவிடுகிறது. பழைமையான பள்ளிவாசலின் முக்ரியான எரமுள்ளான் நெஞ்சுவெடிக்க வாங்குவிளிக்கும் அந்தக்காலத்தைச் சேர்ந்தவர். பாலப்புறம் மம்முது ஹாஜி இறந்த தகவல் வருகிறது. பையிலிருந்து மூன்று ரூபாய் பணம் எடுத்த மருமகனை வீட்டைவிட்டு துரத்திய, தன் ஐம்பத்தியாறு வயதில் பத்¢னாறுவயது பீயாத்துவை மணம்செய்து ஒருமாதம்கூட ஆகாத ஹாஜியார்.
பிணத்தின் வாயைப் பார்க்கும் எரமுள்ளான் திடுக்கிடுகிறார். வாய் திறந்திருக்கிறது, ஆசை அடங்காத வாய். கதிமோட்சம் இல்லாத ஆத்மா! பிணத்தைக் குளிப்பாட்டி மய்யத்து எடுத்து கபரடக்கம் முடிந்தபின் எரமுள்ளான் குளிப்பாட்டிய கூலிக்காக காத்து நிற்கிறார். மகன் ஒன்றும் சொல்லக்காணோம். எரமுள்ளான் மரபை மீறி கேட்டே விடுகிறார். ‘நாளைக்கு’ என்ற ஒற்றைச்சொல்லில் வெறுப்புடன் மறுத்து மகன் சென்றுவிடுகிறான். இதுதான் நாவலின் மையம். ஆசை அடங்காமல் திறந்த வாயுடன் செத்த நிலப்பிரபுத்துவம், அதை வெறுப்புடன் பார்த்து நிராகரித்து செல்லும் அடுத்த தலைமுறை. மம்முது ஹாஜியின் அந்த திறந்தவாய்தான் இந்நாவலின் மையப்படிமம் என்றால் அது மிகையல்ல.
 
குளச்சல் மு யூசுப்
கான்பகதூர் பூக்கோயா தங்ஙளின் கதை என்று இந்நாவலைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அவரது தோற்றம் அவரது வழக்கங்கள் ஆகியவற்றை விரிவாகச் சொல்லி மிக அழுத்தமாக அக்கதாபாத்திரத்தை நிலைநாட்டுகிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”ஜப்பான் சில்க் முழுக்கை குப்பாயம் அணிந்து அதன்மேல் அணில்கோடுகள் உள்ள சிங்கப்பூர் கைலி அணிந்து அதற்குமேல் கோட்டும் அணிந்து விரித்துவிடப்பட்ட மீசையுடன் சிவந்து துடுத்த முகமும் முகத்தைவிட துடுத்த ஷூவும் அணிந்து நடந்த தங்ஙளை ஊரிலுள்ளவர்கள் அபிமானத்துடன் பார்த்து நின்றார்கள்”. அவர் தங்ஙள் குலத்தவர் [ அரேபியாவிலிருந்து நேரடியாக வந்த முஸ்லீம்களின் குடும்பவழி தங்ஙள் எனப்படுகிறது. இவர்களுக்கே ஸுன்னிகள் நடுவே மதமேலாண்மை உள்ளது. இப்போதும் பாணக்காட்டு தங்ஙள் குடும்பமே கேரள முஸ்லீம் லிக் கட்சியின் மாறாத தலைமை கொண்டது. மதம் மாறியவர்கள் ஒட்டுமொத்தமாக மாப்பிள்ளைகள் எனப்படுகிரார்கள். இவர்கள் இரண்டாம் தரத்தவர். இவர்களுக்கு தனி கல்லறைத்தோட்டம்]
தங்ஙளின் மூதாதையர் கபரடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல் பழைமையானது. அதற்கும் தங்ஙளின் அரண்மனைக்கும் இடையே ஒரு புராதனமான சுவர் மட்டுமே. மய்யத்தான தங்ஙள்மாருடைய கபரிடங்களில் சந்தனத்திரி கொளுத்தி வணங்க மக்கள் வருகிறார்கள். தங்ஙள் ஊரார் மத்தியில் வாழும் புனிதராகவே கருதப்படுகிறார். ஆனாலும் இவர் சிங்கப்பூர் வணிகம் செய்தவர். சிங்கப்பூரிலிருந்து புத்தமத ஆசாரியைக் கூட்டிவந்து கட்டிய பெரும் பங்களாவில் மன்னரைப்போல வசிக்கிறார். சிங்கப்பூரிலிருந்து குதி¨ரைக்காரனைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார். அத்ராமான் பௌத்தன் என்று அழைக்கப்படுகிறான்.
பூக்கோயா தங்ஙளின் மனைவி ஆற்றபீவி கர்ப்பமாக இருக்கிராள். நீண்டநாட்களுக்குபின்னர் அடைந்த கர்ப்பம். தங்ஙள் மனைவியை விலைமதிப்புமிக்க முத்துச்சிப்பி போல பாதுகாத்துவருகிறார். சொத்து பராமரிப்பும் ஊருக்குள் நீதிநிர்வாகமும் தங்ஙளின் அன்றாடப்பணிகள். தங்களின் குணச்சித்திரத்தை மேலும்மேலும்விரிவாகச் சொன்னபடியே செல்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா . தங்ஙள் அபாரமான தன்னம்பிக்கையாலேயே உருவான ஆளுமை. தான் செய்வதெல்லாம் எப்போதும் சரி என்ற உறுதியான எண்ணமும் நினைப்பதைச் செய்யும் பணவலிமையும் சேர்ந்து உருவாக்கிய தன்னம்பிக்கை அது. அவருக்கென ஒரு நீதிபோதம் உள்ளது. அதை எளிதில் பிறர் வகுத்துவிட முடியாதென்றாலும் அவரைப்பொறுத்தவரை அவர் அதை முழுதாக நிறைவேற்றுவார். பிறரை தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது தங்ஙளைப் பொறுத்தவரை இயல்பான ஒன்றே.
ஆகவேதான் கற்பிழந்து கருவுற்று நதியில் ஒழுகிவரும் நீலியை காப்பாற்றவும் அடைக்கலம் அளிக்கவும் அவர் தயங்கவில்லை. யாருமற்றவர்களுக்கு அடைக்கலமளிப்பது தன் பணி என்றே அவர் எண்ணினார். ஆற்றபீவிக்கும் நீலிக்கும் ஒரேநாளில் குழந்தை பிறக்கிறது. ஒன்று புனிதமும் செல்வமும் நிறைந்த வீட்டின் இளவரசி. இன்னொன்று அனாதைக் கா·பிரின் சோரக்குழந்தை. ஆனால் தங்ஙளின் பார்வையில் இரண்டுமே படைத்தவனின் கொடைதான். நீலி இறக்க அக்குழந்தையை கொண்டுவந்து தன் பீபியிடம் கொடுத்து முலைகொடுக்கச்சொல்கிறார் தங்ஙள். திருவாய்க்கு எதிர்வாய் இல்லை. பீபிக்கு அக்குழந்தை தன் முலையை தொடும்போது அவள் உடலே எரிகிறது. ஆனால் வேறுவழியில்லை. நீலியின் மகனுக்கு குஞ்ஞாலி என்று பெயரிடுகிறார் தங்ஙள். அவன் அரண்மனையிலேயே வளர்கிறான்.
குஞ்ஞாலிக்கும் தங்ஙளின் மகளான பூக்குஞ்ஞிக்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசியபடி நாவல் விரிகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்தே வளர்ந்தவர்கள். ஆனால் குஞ்ஞாலி அனாதை. ஹராமாகப் பிறந்தவன். அந்த எண்ணம் அவனிடம் நீங்காமலிருக்க அந்த அரண்மனையில் உள்ள அனைவருமே முயல்கிறார்கள். ஆனால் தங்ஙளுக்கு அவன் தன் மகனேதான். மதக்கல்விக்குப் பதிலாக இரு குழந்தைகளையும் ஆங்கிலம் படிக்கக் கொண்டுசென்று சேர்க்கிறார் அவர். முதலில் பூக்குஞ்ஞியை எழுத்தறிவிக்க ஆசான் அழைக்கும்போது ”ம்ம் ஆம்பிளை முதலில” என்று தங்ஙள் திடமாகச் சொல்கிறார். குஞ்ஞாலிக்கு சுன்னத்து கல்யாணம் நடக்கும்போது அவன் அஞ்சி ‘தங்ஙளுப்பா1”என்றுதான் அழுகிறான். அவனருகே வரும் தங்ஙள் கட்டியணைத்து ” மக்கள் கரையாண்டாம் .உனக்கு தங்ஙள் மாருக்க அனுகிரகம் உண்டு”
விசித்திரமான ஒரு கலவையாக தங்ஙளின் முகம் நம்மில் விரிந்து வருவதே இந்நாவலின் வெற்றியாகும். அனேக பத்தினி விரதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் தங்ஙள். தினமும் குதிரை மீதேறி ‘உலா’ போய் கடற்கரை மீனவக்குடிகளுக்குள் புகுந்து ‘பொழுதுபோக்கு’ நடத்தி மீள்பவர். மனைவிக்கு பிரசவம் பார்க்க வரும் அலமேலுவையை அப்படியே மாடிக்குக் கொண்டுபோகிறவர். நாவல்முழுக்க தங்ஙளின் லீலைகள் நிறைந்திருக்கின்றன.ஆகவே வாசகமனத்தில் குஞ்ஞாலி அவரது சோரமகனாக இருக்கலாமென்ற எண்ணம் ஏற்படுகிறது. அவர் காட்டும் அன்பும் சமத்துவ உணர்வும் அந்த ரகசியத்தின் வெளிப்பாடுகளே என்று தோன்றுகிறது.
ஆனால் தன் மகளுக்கு குஞ்ஞாலியை மணமகனாக அவர் முன்வைக்கும்போது அந்த ஐயம் முற்றிலுமாக அடிபடுகிறது. அப்படியானால் தங்ஙளின் அன்பும் சமத்துவ உணர்வும் அவரது அடிப்படை இயல்பே என்றாகிறது. இநத இடத்தில் தெளிந்துவரும் தங்ஙளின் குணச்சித்திரமே இந்நாவலின் மையமாகும். தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் தூண். புனிதமான ஆதிக்கம் கொண்டவர். ஆட்கொள்ளும், அடிமைப்படுத்தும், சுரண்டும், பாதுகாக்கும், தண்டிக்கும் கருணை நிறைந்தவர். அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதன் நிழலில் வாழும் மனநிலை உடையவர்களுக்கு அவர் நிழல்மரம். மீறிச்செல்லும்போதுதான் அவரது வன்முறையை உணர முடியும். நாவலில் மீறிச்செல்ல முனைபவன் குஞ்ஞாலி மட்டுமே.
நாவலில் தங்ஙள் எப்போதும் ஊரின் பொதுவான அற உணர்வுக்கும் கால உணர்வுக்கும் ஒரு அடி முன்னல் செல்பவராகவே காட்டப்படுகிறார். ஊர் நம்பிக்கையை மீறி ஊருக்குள் இஸ்லாமிய சீர்திருத்த நாடகம்போடுமிடத்திலும் சரி, காலரா கண்டு ஊரே அழியும்போது நிமிர்ந்த நெஞ்சுடன் முன்னால்நின்று சேவைசெய்யும்போதும் சரி தங்ஙளின் ஆண்மையும் தன்முனைப்பும் கொண்ட ஆளுமை விரிந்தபடியே செல்கிறது
மாளிகையில் ‘ ஹராமி ‘ பட்டத்துடன் வாழ்ந்து அவமானங்களையே உண்டு வாழ்கிறான் குஞ்ஞாலி. அந்த மொத்த அமைப்பின் உள்ளுறைந்துள்ள குரூரத்தை அறிபவன் அவனே. அங்கே பிறப்பே அனைத்து தகுதிகளையும் உருவாக்குகிறது. அந்த எல்லையை எப்போதும் எவருமே மீற முடியாது. பூக்குஞ்ஞியின் இனிய நட்பு மட்டுமே அவனை அங்கே கட்டிவைத்திருக்கிறது. உள்ளே கசப்பு ஊறி நிறைந்து கெட்டிப்பட அவன் அந்த அமைப்புக்குள்ளே அதற்கு எதிரானவனாக உருவாகிறான். நாவலின் முக்கியமான இரண்டாம் சரடு இது. தங்களால் அவருக்கு எதிராகவே உருவாக்கப்பட்ட ஒரு சக்தி. இவ்விரு சக்திகளின் முரணியக்கமாக நாவல் இயங்கும் காலகட்டத்தை ஆசிரியர் காட்டுகிறார் எனலாம்.
மீனவப்பெண்கள் தன் காமத்துக்கு இரையாவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார் தங்ஙள். ஆகவேதான் கடற்கரையில் கண்ட இளம் புதுமணப்பெண்ணை அவர் அள்ளிப்பிடிக்கிறார். ‘உன் அரையன் ஒன்றும் சொல்லவில்லையா?’ என்றுதான் கேட்கிறார். அச்சம் மீதூர நடுங்கும் அப்பெண்ணால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அழுவதைத்தவிர. அவள் கணவன் பெரச்சன் வந்து அவரை குத்திச் சரிக்கிறான். புனிதமே அதிகாரமாக ஆன பூக்கோயா தங்ஙளின் கதை அவ்வாறு முடிகிறது.
புதிய கதை தொடங்குகிறது. தங்ஙள் இறந்தகனமே அவரது ஆதிக்கம் மீதான கசப்பு மகக்ள் நெஞ்சில் மேலெழுகிறது. எந்தப்பெயர் குஞ்ஞாலிக்கு கௌரவச்சின்னமாக இருந்ததோ அதுவே அவனுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. அவனுடைய சான்றிதழில் தங்களின் பெயரைக்கண்ட ஆண்டி வாத்தியார் ”ஓ அவரது மகனா நீ?” என்கிறார், குஞ்ஞாலி தலைகுனிகையில் ‘நீ தலை குனியத்தான் வேண்டும். திமிருக்கும் ஒரு அளவுவேணும்’ என்கிறார்
அதன் பின் ஒரு சரிவு. அந்த அமைப்பு அப்படியே தன்னை சிதைத்துக்கொண்டு நோயுற்றுச் சரியும் கொம்பன் யானைபோல மண்நோக்கி வரும் காட்சி. பட்டாளம் இபுறாகி அந்த வீட்டை மெல்லமெல்ல கைப்பற்றுகிறான். ஆற்றபீபிக்கு இரண்டாம் கணவனாக அவர் ஆகும்போது குஞ்ஞாலி அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறான். இதுவும் இந்நாவலின் ஒருநுண்ணிய அம்சம். தங்ஙளின் பீபியாக செல்வத்திலும் அதிகாரத்திலும் மூழ்கி வாழ்ந்த பீபிக்குள் பாடகனாகிய பட்டாளம் இபுறாகியிடம் உள்ள ரகசியக் காமம்.
செல்வமும் சிறப்பும் இழந்து அரண்மனை குன்றுகிறது. அதிகமாக விவரிக்காமல் அந்த சரிவை காட்டி நாவலை முடிக்கிறார் ஆசிரியர். தங்ஙளின் இறுதி விருப்பத்தை மீறி பீபியை ஒரு நோயாளிக்கு கட்டிவைக்கிறான் இபுறாகி. அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள். குஞ்ஞாலி ஊரைவிட்டே செல்கிறான். அந்த அமைப்பால் உமிழப்பட்டவனாக.
*
நாவல்முழுக்க நுண்ணிய கதாபாத்திரச்சித்தரிப்புகள் மூலம் உறவுகள் உருவாகி விரிவதன் வலையை விரித்துசெல்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இந்நாவலின் முக்கியமான கவர்ச்சியே அதுதான். தலைமை சமையற்காரி குறைஷி பாத்துமா குதிரைக்கார அதுராமானின் லாயத்துக்குள் இரவு சென்று மீளும் போது தங்ஙள் கையோடு பிடிக்கிறார். உயிர்பயத்துடன் நடுங்கி நிற்கும் அவர்களிடம் ‘நாளைக்கு உனக்கு அவளுக்கும் நிக்காஹ். எனக்கு விபச்சாரம் பிடிக்காது’ என்று சொல்லி மறுநாளே மணம் செய்விக்கிறார் – நாள்முழுக்க விபச்சாரம் செய்பவரும் அவரே.
குதிரைக்காரன் பாத்துமாவுடன் இருக்கும் இரவில் பக்கத்து மசூதியில் எறமுள்ளான் இரவுமுழுக்க ஏற்றமிறைக்கிறார். அவர்தான் அவளைமுதலில் மணம்செய்தவர். அன்று அவர் ஒரு மீன் வியாபாரி. முதலிரவில் ‘மீன் நாறுகிறது’ என்று முகம் சுளித்த அவள் அவரை நெருங்கவே விடவில்லை. மறுநாள் பொன்னானிக்குப்போய் ஓதிமுடித்து மசூதியில் மோதினாராக வந்துசேர்ந்தவர்தான் அவர். அந்திராமானுக்கு குதிரை அருகே படுத்தால்தான் தூக்கம் வரும். அவன் பின்னிரவில் எழுந்து லாயத்தில் சென்று படுத்துக் கொள்கிறான். இரவெல்லாம் வெறிகொண்டு ஏற்றம் இறைத்து எரமுள்ளானின் கைகளில் தோலுரிந்து ரத்தம் வழிந்தது. சித்திரங்களை இயல்பாக, அதிக தகவல்கள் இல்லாமல். இணைத்து ஆழமான கவித்துவத்தன்மையை உருவாக்குகிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா.
வாங்குவிளித்தே தொண்டையை இழந்து அன்னியமாகி இறக்கும் எரமுள்ளான், குதிரையை தேடித்தேடி பித்தெடுத்து மறையும் அந்துராமான் கெஸ் பாட்டு பாடும் பட்டாளம் இபுராகி என நாவலின் கதாபாத்திரங்கள் ஏராளமானவை. ஒவ்வொன்றும் வாழ்வின் சாரமாக ஒன்றைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அதை இழக்கும்போது அழிகின்றன. வாழ்க்கைக்குப் பொருள்கொடுப்பதற்காக மனிதர்கள் கொள்ளும் ஓயாத போராட்டத்தை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நாவல் வழியாக காட்டுகிறார்.
மெல்லிய நகைச்சுவை நிறைந்த நுண் விவரிப்புகள் இந்நாவலை நவீனப்பிரதியாக்குகின்றன. குதிரைக்கு வயிற்றுப்போக்கு வரும்போது கோமப்பன் வைத்தியர் சொல்லும் ‘எளிமையான’ கைவைத்தியம் : ‘கடுக்கா தானிக்கா நெல்லிக்கா வெதைநீக்கி இஞ்சி பொடலங்கா வகைக்கு அரையரைக் களஞ்சி வீதம், கற்பூரம் ரஸ்னாதி செந்தெங்கின்வேரு மட்டை பாரிஜாதப்பூவு அரசங்கொட்டை , எலநீக்கிய தெற்றிப்பூவு வகைக்கு ஒரு களஞ்சி ,ஆடாதோடை குறுந்தோட்டி வகைக்கு ஒரு களஞ்சி எல்லாம் சேர்த்து அரைச்சி ஒண்ணாக்கி பின்னும் சேர்த்தரச்சு, மொதக்குட்டி போட்ட கழுதப்பாலில கலந்து, மூணு தடவை முறையா பின்னும் அரைச்சு நல்லபடியாகலந்துகொள்ளணும். பின்ன இந்த சேருவைய சுத்தம் செய்யப்பட்டதான ஊமத்தங்காய்க்குள்ள நெறைச்சி பனையோலையில சேத்து கட்டி கோமூத்திரத்தில நெறைச்சி மூணுமணிநேரம் வேகவைகக்ணும் . வெந்தபிறகு எறக்கி ஒவ்வொண்ணா அரைச்சு வயநாடன் செறுதேனில கலக்கி ரெண்டுவேளையா குடுக்கணும்….”
கிராமவாழ்க்கையின் அசட்டுத்தனத்தியும் முரட்டுத்தனத்தையும் போகிறபோக்கில் சொல்லிச்செல்லும்போது உருவாகிவரும் குரூரமான நகைச்சுவை இந்நாவலை நவீனத்துவத்திற்குரிய இருண்டபுன்னகை கொண்டதாக ஆக்குகிறது. அபத்தம் நோக்கி கொண்டும் செல்கிறது. ‘தொப்புள் கொடியை யாரு அறுத்தா?’ அலமேலு டாக்டர் கேட்டாள். ”நாந்தான் ” பொக்கி சொன்னாள். ”எதவச்சு அறுத்தது?” ”அருவா வச்சு” ” அருவாளு வச்சா?” கோபமும் ஆத்திரமும் மேலிட அலமேலு நடுங்கினாள். மன்னிப்பு கேட்பதைப்போல பொக்கி சொன்னாள் ”வயலுக்கு கொண்டுபோற அரிவாள் இல்லை. மீனறுக்குத அரிவாள்தான்” பொக்கி அனாதையாக தன்னிடம் வந்த நீலியை சொந்தக்குழந்தைக்கும் மேலாகப் பாதுகாத்தவள். அரிவாளால் தொப்புளை அறுத்து டெட்டனஸ் வரவழைத்து அவளைக் கொல்வதும் அவளே.
மிக எளிதாக கிராம மக்கள் நவீன வாழ்க்கைக்குள் செல்கிறார்கள். ஐந்தாம் வகுப்பும் ஓத்தும் படித்து ஆசிரியர் ஆன முசலியார் சார் ” பூமி உருண்டதா பரந்ததா? ”என்ற வினாவை எழுப்ப மாணவன் ” பரந்ததுதான் சார்” என்கிறான். ”அது நம்ம தீன் பிரகாரம். சயன்ஸ் பிரகாரம் பூமி உருண்டை” என்று உலகில் உருவாகிவிட்ட இருவகை உண்மைகளை இயல்பாக விளக்குகிறார் மௌலவி. அதைப்புரிந்துகொள்ள மறுக்கும் மாணவனின் மொட்டைத்தலையில் சாக்பீஸால் முட்டை போட்டு மகிழ்கிறார்.
உரையாடல்களிலும் நுட்பமாக நகைச்சுவை ஊடாடிச்செல்கிறது. வைக்கம் முகமது பஷீருடன் ஒப்பிடத்தக்க பிரியம் கொண்ட கிண்டல். மொட்டைத்தலையுடன் கிழிந்த துணித்துண்டு உடுத்து வகுப்பில் நிற்கும் நாலாம்கிளாஸ் மாணவனிடம் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் கேட்கிறார் ”உன் பேரென்னடா?”. பையன் மூக்கை உறிஞ்சி பதில் சொல்கிறான்.”கம்பிவேலிக்குள் அசன்” [ வீட்டுபெயரை முன்னால் சேர்ப்பது கேரள வழக்கம். கம்பிவேலிக்கல்வீடு ] அடுத்த தடவை வருவதற்குள் கம்பிவேலியில்ருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்குள் பையனின் இடுப்பில் கிழிந்த லுங்கி ஈரமாகிவிட்டது
நாவலெங்கும் அற்புதங்கள் நடந்தபடியே இருக்கின்றன. தங்ஙள் சாகேப் ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று மந்திரம் ஜபிக்கும்போது அவர் ஏறுவதற்காக நடுத்தண்டவாளத்தில் ரயில் நிற்கிறது. அவர் ஏறியபின் மீண்டும் மந்திரம் போட்டதும் ரயில் செல்கிறது. கன்னாரனும் வண்டியோட்டியும் மிளகு விற்ற பணத்துடன் வரும்போது ஜின்னுகள் நடத்தும் டீக்கடையில் இரவு உறங்குகிறார்கள்.டீக்கடைக்காரரிடம் மிளகு விற்ற பணத்தையும் கொடுத்து வைக்கிறார்கள். காலையில் அங்கே கட்டிடமே இல்லை. நடுக்காடு. ”அது ஜின்னின் வேலை, அடுத்தவருசம் இதே நாள் போய் கேள், நேற்று கொடுத்த பணம் எங்கே என்று. கிடைத்துவிடும் ” என்கிறார் தங்ஙள் .”டே மடையா, ஜின்னுகளுக்க ஒரு நாள் நமக்கு ஒருவருஷம்”
ரிபாய் ரத்தீ·ப் கொண்டாட்டத்தின்போது கத்தியால் வயிற்றைக்கிழித்து உடனடியாக அதை குணப்படுத்திக் கொள்கிறார்கள். கண்ணைத்தோண்டி தட்டத்தில் போட்டபின் மீண்டுமெடுத்து பொருத்திக் கொள்கிறார்கள். அற்புதங்களுக்கு ஒரு யதார்த்த விளக்கம் அளிப்பது யதார்த்தபாணி நாவல்களின் இயல்பு. புனத்தில் குஞ்ஞப்துல்லா அதற்கு முயல்வதில்லை. எல்லாமே கதைதான் இதிலேது தர்க்கம் என்ற பாவனையில் சொல்லிச்செல்கிறார்.
*
நிலப்பிரபுத்துவத்தின் சரிவைச் சொல்லும் நவீனத்துவ நாவல் இது. நவீனத்துவத்திற்குரிய கசப்பு நிறைந்த நகைச்சுவை, இருண்ட வாழ்க்கை நோக்கு, கனகச்சிதமான வடிவம் கொண்டது. ஒரு இருண்ட யுகத்தின் மறைவையும் இன்னொரு ஒளிமிக்க யுகத்தின் பிறப்பையும் சொல்லும் ஆக்கம் அல்ல இது. ஒரு அலை போய் இன்னொரு அலை வரக்கூடிய கடல் ஒன்றை காட்டுவது. அதன் மாறாத இயல்பு, அதன் புரிந்துகொள்ள முடியாத பிரம்மாண்டம். அந்த ஆழத்தைக் காட்டுவதனாலேயே இந்நாவல் முக்கியத்துவம் கொண்டதாகிறது. இந்திய மொழிகளில் மிக இளம்வயதிலேயே ஆசிரியருக்கு சாகித்ய அக்காதமி விருதை பெற்றுத்தந்தது இந்நாவல். இன்றும் மலையாளத்தின் நவீனத்துவப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
குளச்சல் மு யூசுப்பின் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. தோப்பில் முகமது மீரான் எழுதிய கடலோர மீனவர்களின் வாய்மொழித்தமிழை இந்தக்கதாபாத்திரங்களுக்கு அளிப்பதன் மூலம் வித்தியாசமான ஒரு அசல்தன்மையை மொத்த நாவலுக்கும் அளித்துள்ளார் அவர்.
[மீசான் கற்கள். புனத்தில் குஞ்ஞப்துல்லா .தமிழாக்கம் குளச்சல் மு.யூசுப். காலச்சுவடு பதிப்பகம்]
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Feb 3, 2007
 
தொடர்புடைய பதிவுகள்
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’
வி.எஸ்.காண்டேகரின் யயாதி.
‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
சித்திரவனம்
விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’
வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்.
லட்சுமி நந்தன் போரா’வின் ‘ கங்கைப் பருந்தின் சிறகுகள் ‘
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
சாக்கியார் முதல் சக்கரியா வரை
காடு வாசிப்பனுபவம்
காடு என்னும் மீட்பு
அன்புள்ள ஜெ,
நலமா?
தங்களின் ‘காடு’ நாவலை முதலாவதாக 2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து வழிதவறினேன். ஆதலால் நீலத்திற்கு முன்பு ஒர் இடைவேளையில் காடு-இனை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று பின்வருமாறு எழுதியுள்ளேன். மிக நீளமான மடல். மன்னிக்கவும்
காடு நாவலை நான் கிரிதரனின் பார்வையிலும், ஐயரின் பார்வையிலுமே அதிகம் அறிந்துக்கொண்டேன். மறுவாசிப்பில் இன்னும் பல திறப்புக்களை கண்டுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். மற்றவர் பார்வையில் இன்னும் அதிகம் பார்க்கவில்லை. அடுத்த வாசிப்பில் கண்டுகொள்வேன். காட்டில் பல தளங்களை காண்கிறேன்.
கிரியின் வாழ்வில் வரும் காதல் வெவ்வேறு காலங்களில் எப்படி இருக்கிறது. அவன் முதல் முதலாக காட்டிற்குள் வரும் பொழுது காட்டின் மேல் கொள்ளும் காதலும், நீலியின் மேல் கொள்ளும் காதலும் அற்புதமான நேரங்கள். மொத்ததில் காட்டின் தீஞ்சுவை எனக்கு மீட்சியரிதாதல்
காதல் / காமம்
கிரி முதலாவதாக காட்டை காணும் பொழுது அப்பச்சை மரத்தடியில் அவன் கொள்ளும் எழுச்சியை போல அவனுள் இயற்கையான காதல் மலர துவங்குகிறது. பின்பு அது தீயின் துளி போல பெருகிறது. பின்பு காதலின் உச்சத்தில் பாறையின் மீது தகிக்கிறது. வழியில் காடு எப்படி பிரித்தறிய முடியாமல் மரங்களும் கொடிகளும் செடிகளும் உருவான பச்சைப்பரப்பு. ஒர் இலைகளினாலான் ஏரி. அதில் கிரி முக்குளியிட்டு செல்கிறான். காதல் அதுபோலே பிரித்தறிய முடியாதது. ஆனால் இக்காடும் / காதலும்/ காமமும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு இடமும் பார்த்தது போலவே இருந்தாலும் புதிய இடங்கள். திசையற்ற இடம் காடு. ஆனால் மனிதன் அங்கே திசை தேடி அபத்தம் ஆகிறான். ஆனால் காட்டை கண்டவன் காட்டை விட முடியாது. அது போல காதலும் . கிரி காட்டிற்குள் மீண்டும் நுழையும்பொழுது மிக சீக்கிரம் ஓடைப்பாறை அடைகிறான். மேலே செல்ல நினைக்கிறான். அப்படி செல்கையில் காடு தன் எல்லையை விரித்து விரித்து உள்ளே இட்டுச் செல்கிறது. அங்கே கிரி காட்டின் மீது இருந்த பயம் கிளர்ச்சி அடங்குகிறது. காதலும் காமும் இது போலவே என்று எனக்கு படுகிறது. துவக்கத்தில் காதல் பரவசம் இருந்தாலும் அதில் மனிதன் திளைத்தாலும் அவன் மேலே போவது என்பது அவனுடைய எண்ணத்தை பொறுத்தது. அப்படி எண்ணினால் காதல் கூட்டிச்செல்லும். ஆனால் காடு விரும்பினதால் கூட்டிச்சென்றது.
அங்கே காட்டில் கிரியும்/ மனிதனும் அறியாத விஷயம் மீது மோகம் கொள்கிறான், காதலிக்கிறான். அப்போது வானத்தை பார்க்கிறான். வானம்போல அவன் மனம் விரியமுடிகிறது. மனிதன் இயற்கையாக இருக்கும்பொழுது அவன் மனம் எப்படி இருக்கிறது. ஆனால் செயற்கையான நகரங்களில் மனைவியிடமும் காதலியிடமும் நம் மனம் நேரம் ஒதுக்கி பேசுகையில் எங்கே நமக்கு விரிவடைய முடியும்? .. அத்தகைய கணங்களில் மிக மெல்ல இரவெனும் தாபம் அவனுள் நிகழ்ந்தும் கொண்டு இருக்கிறது.
அதன் பின் மனுஷனுக்கு உள்ள தீ காமகுரோத மோகங்கள்.. அது காடு போல. இலைகள் தளிர்கள் வானை நோக்கி எழும் உயிர் உள்ளவரை. பின்பு மட்கியும் எரியும். காடு ஈவு இரக்கம் அல்லாதது. அங்கே பூக்கள் வசந்த காலத்தில் பூத்து அழிகிறது தடமே இல்லாமல். நம் மனமும் காதலும் எப்படி பட்டது.
நீலியை கண்ட பின்பு ஓர் இடத்தில் அவர்களை தவிர காலமே இல்லாதது போல் தோன்றுகிறது. நினைவும் அறுபடவில்லை. அசையவுமில்லை. அதுபோல சிறிது காலம் நானும் இருந்து உள்ளேன் என்று என்னை அங்கு காண்கையில் ஒரு புன்னகை. ஆனால் இன்று யோசிக்கையில் அதை பற்றிய ஒரு சுவடு கூட என் நினைவில் பெரியதாய் இல்லை. பின்பு கூறுகிறீர்கள் எப்படி அக்கணங்கள் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆனால் அனுபவம் முடிந்த மறுகணம் அதனை பகுத்துப்பிரித்து பார்க்கிறோம். எவ்வளவு உண்மை என்றே நினைத்துக்கொண்டேன். ஓர் இடத்தில் கிரி திட்டம் தீட்டுகிறான் பின்பு புதிய திட்டம் ஆனால் குட்டப்பனை கண்ட பின்பு அது ஒரு நினைப்பாகி விடுகிறது. நான் சில ஆண்டுகள் முன்பு ஒரு பெண்ணிடம் என் காதலை கூற முற்படுகையில் அவ்வாறு நடந்து உள்ளது. என்னுடன் பேருந்தில் பயணிப்பாள். யாராவது வந்து விடுவார்கள். அல்லது மழை பெய்து விடும். சொல்ல வந்ததையே மறந்து விடுவேன். ஆனால் அப்போது அவளுடன் மழையில் சிறிது நேரம் உணவு உண்டாலும் – நீங்கள் குறிப்பிட்டு இருந்தது போல அது ஒரு பெரிய வெகுமதி. பின்பு இதனை ”தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்” என்று குறிப்பிட இடமும் நன்று.
 
அவன் காதல் முதிர்ச்சி அடையும் பொழுது அவள் வெறும் பெண். முடிந்துபோகும் என்று எண்ணி தன் எண்ணங்களை சாந்தப்படுத்திக்கொள்கிறான். நிதானமாக நடக்கிறான். ஆனால் அந்நிலைக்கு வர ஒருவனுக்கு ஒரு சிறிய காலம் தேவை படுகிறது. அங்கே ஓர் இடத்தில் கூறுகிறீர்கள் நிழல்கள் இடம் மாறியிருந்தன. அது போல காதலும் எப்படி நிறம் மாறுகிறது.
ஐயர் ஓர் இடத்தில் சொல்கிறார் எல்லா பெண்ணிலும் அழகு இருக்கு. காட்டை ரசிகனும்னு நினைச்சா நிம்மதியா இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாமல் சொன்னது அதை (காட்டையும், பெண்ணையும்) அடைய நினைக்கும் பொழுது தான் ஆபத்து. கடைசியில் உனக்கு அகங்காரம் – தன்னை எல்லாரும் பேண வேண்டும் என்னும் எண்ணம். அது போல ”காமம் காமம் என்ப காமம்” பாடல் மூலம் ஒரு ஒப்பீடு . காமம் கடைசி வரைக்கும் தீராத ஒரு விருந்து. காதல் என்னும் பழம் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது மனிதன் உருவான காலத்தில் இருந்தே காதலும் காமமும் மிக மிக இயற்கையான ஒன்று. அதனை செயற்கைபடுத்த கூடாது. அதுபோல ஏங்கி உண்டால் பழத்தின் ருசியினை அறிய முடியாமல் ஆகிவிடும். உண்ணும் தோறும் ருசியும் வெறியும் ஏறும் என்னும் வரிகள!! பொதுவாகவே நீங்கள் குறுந்தொகை பாடல்களை குறிப்பிட்டு அகம் சார்ந்து நோக்கும் பார்வையில் நான் இது வரையில் அணுகியது கிடையாது. இந்நாவல் எனக்கு இன்னொரு திறப்பை கொடுத்தது என்றே சொல்லலாம்.
இருப்பினும் கிரி போல நானும் ஐயரால் எரிச்சல் அடைந்தேன். அவன் அவ்வளவு கற்பனையில் இருக்கும் பொழுது ஐயர் எளிதில் அதில் இருந்து விலகி மற்றொன்றுக்கு சென்று விடுகிறார். அவளின் அழகிற்கு விடுத்த அநீதி, தன் உணர்வுகளை சிறுமைபடுத்தியது போல. ஆனால் ஐயர் முதிர்ந்தவர் இதை போல பல நூறு பெண்களை பார்த்து இருப்பார் என்று நினைக்கும் பொழுது அது அவரது இயல்பு என்று படுகிறது.
அது போல ஓர் இடத்தில் சொல்லுக்குள் வாழ்வதை அனுபவித்து பார்த்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும் என்பதனையும் ரசித்தேன். அது போல ”மனம் அழகை உணரும் விதங்களின் மர்மங்களில் அலைக்கழிந்தேன்” என்னும் வரிகளில் பயணிக்கிறேன் இப்போது. நமக்கு ஏன் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்தது இல்லை. இப்ப எப்படி இதெல்லாம் நடக்குது. அதுவும் நம்மளா இப்படினு நினைக்கும் பொழுது உண்மையாகவே மர்மமாக இருக்கிறது.
நீலியின் பின்னால் அளவிட முடியாத பொன் காற்றில் குலுங்கி எழுந்தமர்ந்து (பொன்னைவிட ஒளி கொண்ட) பூக்கள் உதிர்கிறது. எவ்வளவு அழகான கற்பனை. அது போலவே அவள் பின்னால் காதல் உள்ளது என்றே எனக்கு படுகிறது. காதலே அங்கே பூக்களாக பொழிகிறது. ஆதலால் அவளே முக்கியமற்று இருக்கிறாள். …. ஆனால் ”என்னால் அறிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு மகத்தான அபாயகரமான விஷயங்களின் விளிம்பில் உலவிக் கொண்டிருக்கிறேன் என்று நெஞ்சுக்குள் ஒரு சிறு அச்சம் சோன்றியது. கையில் அந்த மூக்குத்தி இருந்தது ஒரு சிறு கூழாங்கல்போல. உண்ணமுடியாத தானிய மணி போல. அதை ஆற்றை நோக்கி வீசினேன்” .. கிரி எப்படிபட்ட ஒரு அபாய கட்ட இடத்தில் இருக்கிறான். ஒரு படி தவறினாலும் விளைவு மிக மோசம். அங்கே அவன் கையில் எவ்வளவு அழகான ஒரு காதல் அழகிய மூக்குத்தி போல கூழாங்கல் (கூழாங்கல் உறுவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்) போல தானியம் (அது எத்தனை விதைகளை உள்ளே கொண்டது) போல இருக்கிறது… ஆனால் அவன் அக்கனவை ஆற்றில் வீசுகிறான். எப்படி அதை நீங்கள் எழுதினீர்கள். பலர் அத்தகைய நேரங்களை வாழ்வில் தவறவிடுகின்றனர்.
கிரி காதலின் உச்சியில் எல்லாம் தெரிந்த பறவை இருக்கு என்கிறீர்கள். எனக்கு ஒருமாதிரி தான் புரிந்தது. இரண்டாவது தடவை பறவை தனை குறியீடாக வருகிறது. மீள் வாசிப்பில் அறிவேன் என்று நினைக்கிறேன்.
”காட்டையே ஒற்றைப் பெரும் பூவாக மற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியும் கொன்றை எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்திற்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள்? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றிய வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது.” – இவ்விடத்தில் இவனுடைய காதல் என்பது எவ்வளவு சாதாரணமான ஒன்று என்று ஆகிறது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் காதலை போலவே. அதற்கு நீங்கள் மற்ற சில இடங்களில் காவியைத்தை பற்றியும் தூய காதல் பற்றியும் பேசுகிறீர்கள்.
பல இடங்களில் மாமியை நினைக்கும் பொழுதெல்லாம்,தனிமையிலும், அவன் மனம் ஒன்றையே நாடுகிறது மாறாத சடங்காய். குற்ற உணர்வு, இழிவுணர்வு, சுய இரக்கம். அச்செயல் முடிந்த உடன் ஒரு வெறுமை. ஆனால் தவிர்க்க நினைத்தால் இரண்டு நாட்களைத் தாண்டாதது. பிறகு. கண்களை மூடி நினைவுகளை மனதிலிருந்து விரட்டுகிறான். அதுவே பல சமயம் நடக்கிறது. எப்படி அவனுக்கு காமம் ஒரு கேளிக்கையாக மாறிவிடுகிறது.
நான் சில இடங்களில் கிளியை பற்றிய குறிப்புகளை கவனித்தேன். கொஞ்சம் தவறான புரிதலா என்று தெரியவில்லை. பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும். “கிளி பறந்து போனதும் கிளை சற்று விடுபட்டது. காற்றில் ஆடிச் சரிந்தது. அதன் இலைகள்மீது வெயிலின் ஒரே ஒரு கதிர். இலைகள் கைவிரித்து அதை அள்ள முயன்றன ‘கிளி விளி பயிற்றும் வெயில் ஆடு பெருஞ்சினை... பின்பு ஓர் இடத்தில் நீங்கள் மாமி கட்டிலில் அமர்கிறாள் என்றும் கிளிக்கு ஒப்புவாக கிரியை கிளையாக சொல்கிறீர்கள். மாமி சென்ற உடன் அவன் மனம் எப்படி விடுபடுகிறது.
நகரம்
நகரத்தை பற்றியும் காற்றை பற்றியும் நீங்கள் சொன்ன பல குறிப்புகள் மிக மிக சரியாகவே எனக்கு பட்டது. எனக்கு பிடித்த வற்றையும் நான் வாழ்வில் சந்தித்த வற்றையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன்.
காட்டில் மனிதன் எவ்வளவு நிதானமாக இயங்கிக் கொண்டு இருக்கிறான். காட்டை ரசித்துக்கொண்டு, காதல் கொண்டு காமம் கொண்டு. ஆனால் அங்கே இருக்கும் பொழுது தெரியவில்லை வெளியே வரும் பொழுது தான், நகரத்துடன் ஒப்பிடுகையில் தெரிகிறது நாம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம் ஒன்றுமே ரசிக்காமல்.
காடும் மனிதனின் இச்சைப்போல சீரற்றது. ஆனால் மனிதன் காட்டை சமன் செய்து கொண்டு இருக்கிறான். துல்லிய வடிவங்களால் நிரப்புகிறான்.
நகரங்களில் காதலிப்பது தவிர வேறு பிரச்சினைகளே இல்லையா என்றும் கேட்கும் இடத்தில் நம் சமூகத்தில் இன்று நடக்கும் சம்பவங்களை (பல பெண்களை கொலை செய்தல், சினிமாக்களில் காதல் இல்லாமல் டூயல் பாடல்கள் இல்லாமல் இல்லை) பார்க்கையில் இது மாறுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.
குடிசைகள் எவ்வளவு ஆபாசமான ஒன்று. மழை என்னும் அமுதை ஓவ்வொரு அணுவும் திளைக்காமல் மனிதன் எலி போன்று இருட்டில் பதுங்குகிறான். அவனுடைய பயம், பலவீனம், சுயநலத்தின் அடையாளமே குடிசை. நம்முடைய வாழ்வில் சொந்தமான வீடே ஒரு பெரும் லட்சியமாக இருக்கிறது என்று நினைக்கையில் சற்று ஆபாசமாக உள்ளது.
நீலியை வரவழைத்து பார்க்க நினைக்கிறான். ஆனால் அதில் நியாயமில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. “காடு என்பது மனிதன் அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று நினைக்கும் நகர் மனநிலையின் தொடர்ச்சி அது” ..என்னும் இடம்!!! பின்பு காற்றை வணிக பொருள்களின் (பலகை) உற்பத்தியாகும் இடம் என்று நினைக்கும் மனம். ஒரு தடவை நாஞ்சில் நாடனின் “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்“ பற்றிய கட்டுரையை நினைத்துக்கொண்டேன்.
”நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.. அலங்காரக் கூரை.. வீட்டிற்க்குள்ளே சென்று விடுக்கிறான். மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் தப்புவதற்க்காக இல்லை. அப்படி என்றால் ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் தான் தான் என்று சதா நினைத்தபடி ஓடுகிறான். வாழ்வின் துவக்க நாட்களில் தான் நிமிர்ந்து பார்க்க முடிகிறது… இதை பற்றி சில வருடங்களாக நினைத்ததுண்டு. நான் பள்ளிச்சிறுவனாக இருந்த பொழுது அரசு குடியிருப்புகளில் மொட்ட மாடியில் உணவு உண்டு உறங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்றோ அது நடந்து குறைந்தது 10 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் அப்படி இப்பொழுது எல்லாம் செய்ய முடியவில்லை. பல நேரம் சினிமா, கடற்க்கரை, நண்பர்களுடன் உணவகத்தில் என்று வீடு திரும்பவே 10 மணிக்கு மேல் ஆகிறது. இதன் பிறகு எங்கே மொட்ட மாடி. தினசரிகளில் சாலையில் பயணமே 1-2 மணி நேரம், பின்பு எங்கே வானம். கடைசியாக நான் மேல் நோக்கி வியந்து வானம் பார்த்தது என் மனைவியாக போகிறவளுடன் தொலைப்பேசியில் உறையாடிக்கொண்டு இருக்கும் பொழுது. அப்பொழுதும் இதையே நினைத்துக்கொண்டேன்.
7.”வாழ்க்கையை கடந்து சென்றபோது எத்தனையோ அனுபவங்கள் சிறு தடயம்கூட இல்லாமல் ஆகின்றன. அது மலையேற்றம் போல … ஏறும் பொது ஒவ்வொன்றும் சிறியதாகி, அற்பமாகி பார்வையை விட்டு மறையும். உச்சியில் மலையே அற்பமாகி விடுகிறது. வானம் மட்டும் எஞ்சுகிறது”..என்று நீங்கள் கூறும் இடம் அற்புதம். நான் பதின் பருவங்களில் இருக்கையில் என்னுடைய சபரிமலை குரு இதனை யொட்டி கூறியுள்ளார். மலை ஏற ஏற நாம் தேங்காய்களை உடைத்துகொண்டு செல்கிறோம். நம் பாரங்கள்/ பாவங்கள் குறையும் என்று. அவரை நினைத்துக்கொண்டேன். நீங்கள் பொதுவாக மலையெற்றத்திற்கு கொடுத்த விளக்கம் மிக ஏற்புடையாத இருந்தது.
நகர வாழ்க்கையில் காதல் எவ்வளவு செயற்கையாகி கொண்டே இருக்கிறது. சிறுவர்களிடம் இருக்கும் பணம் போல என்னும் இடம்!!
ஆனால் அழகு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுசீந்திரம்கிற சாக்கடைச் சந்திப்பு முனையில்கூட வானம் அழகு என்னும் இடம்!!
தெய்வங்கள் ஊரில் இருந்தாலும் காடுக்கு உரியவர்கள் காட்டில் முளைத்து ஊருக்குள் நிறுவப் பட்டவர்கள். நான் கேட்ட பல புராண கதைகள் காட்டில் நடந்தவை என்று நினைத்துப்பார்கையில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை ஏன் என்றால் உங்கள் தளத்தில் இந்து மதம் எப்படி பட்டது என்று நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன்.
காடு என்பதை மனிதன் எப்படி உரிமை கொண்டாடுகிறான். ஒரு சாலை மௌனமாக ஒரு திட்டத்துடன் பாம்புபோல நீள்கிறது. .. அதேபோல முயல் காட்டில் எவ்வளவு இயல்பாக உள்ளது. ஆனல் சாலையில் வந்த உடன் மருண்டுவிடுகிறது என்னும் இடம். [ஆண்டுதோறும் 1993 முதல் சபரிமலை சென்று வருவதால் நீங்கள் காட்டை காட்சிப்படுத்தும் பொழுது என்னால் முழுமையாக உள்வாங்கி கற்பனை செய்ய முடிந்தது. உதாரணமாக திசையில்லா காடு, பல பச்சைகள், பல நிழல்கள், பார்த்தது போல் தோன்றும் புதிய இடங்கள். ஆனால் இன்றோ எங்கு பார்த்தாலும் பீடி நாற்றம், ரப்பர் தோட்டங்களின் பரவலான ஆக்ரமிப்புகள், சாலைகள் சென்றுள்ள தொலைவு/வளர்ச்சி. அந்த அழகிய காட்டின் மீது மனிதன் செய்த கொடுமைகளை பார்த்துள்ளேன். 1995களில் வெறும் கஞ்சி மட்டுமே கிடைக்கும். அதுவும் 5ரூபாயுக்குள்ளே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்கே தோசை முதல் சன்னா பரோட்டா வரை கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனின் மலம் அங்கே சரியான முறையில் அப்புறபடுத்தாதனால் அங்கு காட்டிற்கு ஏற்படும் சுகாதார கேட்டினை ஒரு சுற்றுசூழல் தன் ஆர்வலுருமான நண்பரின் மூலம் அறிந்து கொண்ட பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்றெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று சொல்லும்பொழுது பழைய நினைவுகளின் மீது ஏக்கம்/Nostalgia வரவில்லை. மனிதனின் மீது கோபமே வருகிறது. நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். காடு மனிதன் அனுபவிக்க படைக்க பட்டாதக எண்ணிக்கொள்கிறான். அற்பமான மனிதன்!! ]
நாகரீகம் என்பது நகர் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி என்று பள்ளிகள் முதலே கற்பிப்பபடுவது. காட்டை வென்றடக்கும் ஊர்களின் கதையே மனித நாகரீகம் போலும். ஆனால் நகரம் என்பது எவ்வளவு செயற்கையானது. காடு எவ்வளவு இயற்கையானது என்று யோசிக்க தவறுகிறோம்.
பொது
மேலே காதல், நகரம் என்று மட்டும் அல்லாமல் நான் பொதுவாக ரசித்த இடங்கள்.
அவன் அம்மாவிடம் ஏற்படும் இழப்பினை காதலிக்கும் கணத்தில் அன்னையை கண்டுக்கொள்கிறான் என்னும் இடத்திலும்… பின்பு அடிக்கடி தின்பதற்கு ஏதாவது தந்து முன்போலவே இருந்தாலும் கூட..வெகுதூரத்தில் என்னை உணர்ந்தேன் இடத்திலும்.. ஒரு நிமிடம் நின்று மீள் வாசிப்பு செய்தேன்!
பெயர்களில் உள்ள அபத்தத்தை பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவை ஒருபோதும் மந்திரங்களாக முடியாது. எவரும் அதைப் பிடித்து ஏறி முக்தியைத் தொடமுடியாது – என்னும் இடம் அற்புதம். நான் பதின் வயதில் இருக்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். எனது அப்பாவின் பெயர் ஆறுமுகம். இதனை கேட்ட ஒருவர் உங்கள் பெற்றோர்கள் கலப்பு திருமணமா என்று கேட்டார். ஆம் என்றேன். எப்படி பேரை மட்டும் வைத்து அவர் கேட்டார் என்று எனக்கு ஆச்சர்யம். எனது பாட்டியை கேட்டேன். பாட்டி சொன்னாங்க நம்முள்ள அப்படி பெயர் வைக்கமா என்று கேட்டதற்கு பெயர் கடவுளின் சமஸ்கிருத பெயராக இருந்தால் உன்னை கூப்பிடுபவர்களுக்கு முக்தி அடைய வாய்ப்பு உண்டு என்று. அதற்கு ஒரு உதாரணம் கொடுத்தார்கள். துரியோதனனுக்கு புஷ்ப விமானம் வந்துச்சாம். வந்துச்சு ஏன்னா கிருஷ்ணா கிருஷ்ணா என்று கிருஷ்ணனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தானாம். அன்றே எனக்கு அபத்தமாக தோன்றியது ஏன்றால் இன்னொரு பக்கம் கர்ணன் அவ்வளவு கொடைகளை அளித்ததனால் முக்தி அடைகிறான் என்று படம் பார்த்து உள்ளோம்.
ஒரு மனிதனின் பழக்கங்கள் அவனுடைய மனம்தான். தன் மனதின் மேலேயே பிடி இல்லாத எளிய மனிதர்கள் பிறரது மனம் மீது கட்டளைகளை விதிக்கிறார்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். வருத்தமும் ஆதங்கமும் கொள்கிறார்கள். என்னும் இடம்.
”கருமையளவுக்கு அது இளமையை வெளிப்படுத்துவதில்லை. கரிய நிறம் கண்களை நிறைத்து விடுகிறது” போன்ற சிறு சிறு இடங்களையும் ரசித்தேன்.
மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்
தருக்கம்னா அது அதருக்கத்தை போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு….. ஏன்னா, ஒவ்வொரு தர்க்கத்துக்கும் கண்டிப்பா எதிர் தர்க்கம், சமானமான வலிமையோட இருக்கும்
”என்ன ஒரு அசைவு! செயற்கையான பவ்யம், தளுக்கு, வெக்கம் ஒண்ணும் கிடையாது. ஆனா மலர்ச்செடி அசையறா மாதிரி ஒரு மென்மை, நளினம்… பார்வதிதேவி மலைமகளா இப்படித்தான் இருந்திருப்பா சிவனுக்கு பித்துப் பிடிக்க வைக்கிற சிவகாமசுந்தரி.” … ஒரு பெயரை நான் இப்படி நோக்கியது இல்லை. அவ்வளவு அழகு.
“ஒரு சங்கீத கச்சேரியில் இருப்பவர்களைப்போல ஒரு மிகையான நெகிழ்வு. ஆனால் நெகிழ்வையே கணக்கு வழக்கின் மொழியில் சொல்வார்கள்” – கச்சேரிகளில் சில நேரங்களில் எரிச்சல் அடையும் அளவுக்கு செய்வார்கள். அவர்கள் கணக்கு போடுவது அவர்களின் உரிமை. ஆனால் பக்கதில் உள்ளவரிடம் கலந்துரையாடும் பொழுது அது என்னை எரிச்சலடைய செய்கிறது.
கடைசியாக/கிளைமாக்ஸ்
அவன் அவளுடைய அருகாமையை அவன் புலன்கள் கொண்டாடும் இடம் தன் அகம் போன்றது என்னும் இடங்கள் அதுவும் காடு போன்றது. பின்பு இருவரும் மலர்களை எறிந்து விளையாடும் இடத்தில் அங்கே உரசுவது மனங்கள். அது சிறுவிளையாட்டு என்னும் இடம். அருகாமையில் இருக்கையில் காற்று வெளியிடையையும் காலத்தையும் நிரப்ப முனைவது. காதல் எவ்வளவு அகம் சார்ந்த ஒரு விஷயம் என்று கூறுகிறீர்கள். … ஆனால் இவை அனைத்திலும் ஒன்றையும் நிகழ்த்தாமல் காலம் சென்றுக்கொண்டு இருக்கிறது.
அதேப்போல இறுதியில் அவன் நீலியின் அருகாமையை உணர்கிறான். ஆனால் மாமியுடன் ஏற்படும் உறவினால் அவன் காதல் என்னும் கனவினை இழக்கிறான். அங்கே அக்கனவாக நீலி அழும் காட்சி அற்புதம். அவன் கனவை கொன்று/ தொலைத்து நிகழ் காலத்திற்கு வருகிறான். பின்பு வாழ்வில் செல்லும் பொழுது அவன் மனைவியுடன் மகிழ்ச்சியிள்ளாத வாழ்க்கை, மாமியின் நினைவுகள் அவனை ஒரு வழி செய்கிறது. காதலும்/ காமமும் கேளிக்கை ஆகுகிறது. ஒரு கட்டத்தில் மூத்திரம் போகவே கஷ்டப்படுகிறான். அவன் வாழ்வில் தோல்வி அடைகிறான்.
காடு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனில் ஒரு 2-3 நாட்கள் அலைந்து கொண்டு இருந்தேன். என்னுடைய வாசிப்பினை யாரிடமாவது கலந்துரையாடிக் காட்டினை இன்னும் அறிந்துக்கொள்ள நினைத்து கடலூர் சீனுவிற்கு அழைத்தேன். அவர் நான் காணாத இடங்களையும் தளங்களையும் காண்பித்தார். அப்போழுது தான் நான் ஆழமாக வாசிக்காத இடங்களை தெரிந்துக்கொண்டேன். அவரும் என்னை தொகுத்துக்கொள்ள ஊக்குவித்தார். ஆதலால் முதல் முறையாக தொகுத்துக்கொள்ள முனைந்தேன்.
காடு போன்ற படைப்பிற்கு மிக்க நன்றி!
அன்புடன்,
ராஜேஷ்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இன்று நண்பர்கள் சந்திப்பு
இன்று என் குடியிருப்புக்கு தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பும் நண்பர்களை வரச்சொல்லியிருந்தேன். பத்துபேரை எதிர்பார்த்தேன். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.இங்கெயே சற்று விசாலமான கூடமாக பார்த்திருக்கலாம். ஆனால் ஏற்பாடுகள் செய்வதெல்லாம் எனக்குச் சரிவராது. தமிழ்நாட்டிலேயே அதிகமான நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுவது என் பெயரால். ஆனால் நான் எதையுமே இன்றுவரை செய்ததில்லை
நண்பர் பரணி மதிய உணவு கொண்டுவந்திருந்தார். சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே நண்பர்கள் வந்தனர். அனைவரையும் அமரவைக்க நாற்காலி இல்லை. சோபாக்கள் இரண்டு, நாற்காலிகள் நான்கு. அவ்வளவுதான் எஞ்சியவர்களை தரையில் அமரச்செய்தோம். சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வந்திருந்தார். நண்பர் ஆமருவி தேவநாதன் அவர் எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்னும் நூலை கொண்டுவந்தார்
மாலை ஏழரை மணிவரை, கிட்டத்தட்ட ஐந்துமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அரசியல், இலக்கியம், புராணமரபு, தத்துவம்.கூடவே சிரிப்பு, கிண்டல். உற்சாகமான ஒரு நாளாக இருந்தது.பாதிப்பேர் கிளம்பிச்சென்றபின்புதான் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றே தோன்றியது. இனிய நாள் இன்று
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26
[ 5 ]
கோபாயனர் சினம்கொண்டிருப்பதை உள்ளே நுழைந்ததுமே தருமன் அறிந்துகொண்டார். அவர் அருகே நின்றிருந்த மாணவன் பணிந்து அவரை அமரும்படி கைகாட்டினான். அவர் அமர்ந்துகொண்டதும் வெளியேறி கதவை மெல்ல மூடினான். அவர்களிருவரும் மட்டும் அறைக்குள் எஞ்சியபோது கோபாயனர் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டார். சினமின்றி இயல்பாகப் பேசவேண்டுமென அவர் எண்ணுவதை காணமுடிந்தது. எதுவானாலும் முதற்சொல் அவரிடமிருந்தே எழட்டும் என தருமன் காத்திருந்தார்.
“இன்றுகாலை கிருதன் என்னும் இளையோன் இங்கு வந்து என்னிடம் உரையாடிச் சென்றான்” என்று உணர்ச்சியற்ற இறுகிய குரலில் கோபாயனர் சொன்னார். அக்கணமே நிகழ்ந்தவை அனைத்தையும் தருமன் புரிந்துகொண்டார். ஒன்றும் சொல்லாமல் நோக்கியபடி அமர்ந்திருந்தார். “நேற்றிரவு ஆகாவல்கொட்டகையில் நீங்கள் பேசியதை அவன் என்னிடம் சொன்னான். அச்சொற்களை நீங்கள் அச்சொல்லாடலில் ஒரு அதிர்ச்சிக்காக சொல்லியிருக்கலாம். அவன் அதை அப்படியே எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறான்” கோபாயனர் சொன்னார்.
“எளிய உள்ளம் கொண்ட இளையோன். அத்தனை தத்துவச்சொல்லாட்சிகளையும் வாழ்க்கையுடன் நேரடியாக இணைத்துப் பார்ப்பவன். அத்தனை உவமைகளையும் வாழ்க்கையிலிருந்து நேரடியாகவே எடுத்துக்கொள்பவன். அத்தகையோர் இங்கு வந்தபடியே இருப்பார்கள். அவர்களை எளிதில் நிறைவடையச் செய்யமுடியாது. ஏனென்றால் நாம் வாழ்க்கையைப்பற்றி பேசினால் அதற்கு தத்துவ ஒருமையை கோருவார்கள். தத்துவ ஒருமைகொண்ட கூற்றுகளுக்கு வாழ்க்கையில் ஆதாரம் கேட்பார்கள். அவர்கள் தாங்களே அறிந்து அடங்கவேண்டும் அல்லது அனைத்திலிருந்தும் அகன்று செல்லவேண்டும். அதுவரை அவர்களை வைத்திருப்பது கடினம், அகற்றுவது மேலும் கடினம். ஏனென்றால் நம் கல்விநிலையின் மிகக்கூரிய மாணவர்கள் அவர்களே” என்றார் கோபாயனர்.
“ஆம், அவ்விளையோன் அத்தகையவன்” என்றார் தருமன். “அவன் என்னிடம் சொன்னான், நீங்கள் இளைய யாதவரை தொல்வேதத்தின் தெய்வங்களை வென்ற இந்திரனை வென்றவர் என்றீர்கள் என. வேதம் புதிதுசெய்த சுனக்ஷேப முனிவர் போன்றவர்கள் அனைவருக்கும் அவர் ஒருவரே நிகர் என்றீர்கள் என.” தருமன் மெல்ல தன்னை இறுக்கிக் கொண்டு “ஆம்” என்றார். “அதை நீங்கள் உண்மையிலேயே நம்பித்தான் சொல்லியிருக்கிறீர்களா?” என்றார் கோபாயனர். “நம்பாத எதையும் நான் சொல்வதில்லை, முனிவரே” என்றார் தருமன்.
சிலகணங்கள் கோபாயனர் அசைவற்று கீழே சாய்ந்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். பின்பு தொண்டையை கனைத்துக்கொண்டு பேசத்தொடங்கினார். “அரசே, நீங்கள் உஷஸ்தி சக்ராயனரின் கதையை கேட்டிருப்பீர்கள்” என்றார். தருமன் பேசாமலிருக்க அவரே தொடர்ந்தார். “முழுமையான கதையை எங்கள் பிராமணங்கள் சொல்கின்றன. முன்பு உத்தரகுரு நாட்டில் இஃப்யா என்னும் சிற்றூரில் வாழ்ந்துவந்த வேதமெய்யாளர் அவர். வேதம் உரைத்த வாழ்க்கையை வாழ்ந்தார். ஒவ்வொருநாளும் அருகிருக்கும் வயல்களிலும் காட்டிலும் திரிந்து பறவைகள் உதிர்த்த கதிர்களையும் தானாக கனிந்த கனிகளையும் சேர்த்துக் கொண்டுவந்து தன் துணைவியிடம் அளித்து சமைத்துண்டார். ஐவேளை எரி ஓம்பினார். மூவேளை பொழுதிணைவு வணக்கத்தை செய்தார்.”
“அப்போது பெரும்பஞ்சம் வந்தது. எங்கும் பசுமை என்பதே இல்லாமலாயிற்று. மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர். கொடையளிக்க எவருமில்லாமல் கிராமங்கள் ஒழிந்தன. உணவில்லாமல் காட்டுவிலங்குகளும் தொலைவு தேடின. நாட்கணக்கில் உணவு ஏதுமில்லாமல் உஷஸ்தி சக்ராயனர் மெலிந்து உலர்ந்து ஒடுங்கினார். ஆயினும் அங்கு அவர் செய்துவந்த தவத்தை நிறுத்தலாகாதென்பதனால் அங்கேயே வாழ்ந்தார். அறமீறல் நிகழ்ந்தாலொழிய அந்தணன் வாழ்நிலத்தை கைவிடலாகாது. அவன்பொருட்டே மீண்டும் அங்கு மழை எழவேண்டும்.”
“அந்நாளில் ஒருமுறை குருநாட்டின் அரசன் கிருதவர்மன் வேட்டைக்கென அங்கு வந்து காட்டில் இளைப்பாறிக்கொண்டிருந்தான். கையிலிருந்த உணவை முழுக்க அவர்கள் உண்டுமுடித்துவிட்டிருந்தமையால் துணைவர்கள் எஞ்சிய உணவுத்துகள்களைத் திரட்டி அரசனுக்கு மட்டும் அளித்துவிட்டு விலகி நின்றிருந்தனர். உணவின் மணம் அறிந்து அங்கு வந்த உஷஸ்தி சக்ராயனர் அரசனை அணுகி உணவுக்கொடை இரந்தார். திகைத்த அரசன் ‘முனிவரே, வைதிகர்களுக்கு தூயநல்லுணவையே அளிக்கவேண்டும் என்பது என் முன்னோர் வகுத்த நெறி. இது மிச்சில். கெட்டுப்போனதும்கூட’ என்றான். ‘உயிர்காக்கும் உணவு அமுதே. இன்று இது என்னுள் அமைந்த நால்வேதங்களையும் காக்கும் வல்லமைகொண்டது’ என்றார் உஷஸ்தி சக்ராயனர்.”
“அரசன் தயங்கியபடி அந்த உணவை அளிக்க உஷஸ்தி சக்ராயனர் அதை பெற்றுக்கொண்டார். ‘என் குடிலில் மனைவி இருக்கிறாள். முதலில் அவளுக்கு இதை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார். ‘விடாய்க்கு இன்நீர் உள்ளது முனிவரே, அது தூயதும்கூட’ என்றான் அரசன். ‘பசிக்கு இரக்கையில் தெய்வங்கள் உடன்நிற்கின்றன. சுவைக்கு இரந்தால் அவை நெறிகளை நோக்கத் தொடங்கிவிடும். நீர் என் கால்வாயிலேயே ஓடுகிறது’ என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிச்சென்றார். அந்த உணவை தன் துணைவியுடன் பகிர்ந்து உண்டார்.”
’மழைபொழிவதற்காக அரசன் பெருவேள்வி ஒன்றை செய்தான். வேள்வி முடிந்தபின்னரும் மழை எழவில்லை. வேள்வி நிறைவுறவில்லை என்று கண்டு நிமித்திகரை அழைத்து நற்குறி கேட்டான். ‘இவ்வேள்வியை குறையற்ற அந்தணர் இயற்றவில்லை என்றே தெரிகிறது’ என்றார் நிமித்திகர். அப்போது தன்னிடம் இரந்துசென்ற உஷஸ்தி சக்ராயனரை அரசன் நினைவுகூர்ந்தான். அவரை அழைத்துவர தன் அமைச்சர்களை அனுப்பினான்.”
“அரசனின் ஆணைக்கேற்ப உஷஸ்தி சக்ராயனர் தலைநகருக்கு வந்தார். அங்கு வேள்வி செய்துகொண்டிருந்த அந்தணர்கள் பட்டும் பொன்னணியுமாக பொலிந்தனர். நல்லுணவு உண்டு உடல் ஒளிகொண்டிருந்தது. வேதமுழுமையையும் கற்றறிந்தவர் என அவர்களின் உள்ளம் தருக்கியிருந்தது. அவர்கள் எளிய மரவுரி அணிந்து பிச்சைக்காரனைப்போல வந்த உஷஸ்தி சக்ராயனரைக் கண்டு எள்ளல் நகைகொண்டனர். ஒருவர் அவரிடம் ‘வேள்வி முடிந்தபின்னரே உணவளிக்கப்படும் அந்தணரே, அவ்வழி சென்று காத்திருங்கள்’ என்றார்.”
“அவர்களிடம் பணிவுமாறாமல் உஷஸ்தி சக்ராயனர் சொன்னார் ‘வைதிகர்களே, நான் உங்களிடம் மூன்று வினாக்களை கேட்கிறேன். விடை சொன்னீர்கள் என்றால் விலகிச்செல்கிறேன்.’ அவர்கள் செருக்குடன் ‘கேளுங்கள்’ என்றனர். ‘இந்த வேள்விப்பந்தலை ஆளும் தெய்வம் எது? அந்த எரிகுளத்தின் தலைவன் யார்? இங்குள்ள அவிக்குவைகள் எவருடையவை?’ அவர்களுக்கு விடைதெரியவில்லை. வெவ்வேறு பெயர்களை எண்ணிப்பார்த்த பின்னரும் எதுவும் பொருந்தவில்லை. ‘என் பெயர் உஷஸ்தி சக்ராயனர். நான் வசிஷ்ட குருமரபைச் சேர்ந்தவன். என் சொற்களை நீங்கள் ஏற்கலாம்’ என்றார்.”
“உஷஸ்தி சக்ராயனர் அவர்களிடம் சொன்னார். ‘வைதிகர்களே, வேள்விச்சாலையின் அரசன் பிராணன். வேள்விச்சாலையை ஒரு புருஷன் என்கின்றன நூல்கள். அப்புருஷனுக்கு மூச்சென ஓடுவது பிராணன் எனும் தெய்வம். வாயுவின் மைந்தன் அவன். அவனுக்கு நான்கு தம்பியர். அபானன் உதானன் சமானன் வியானன் என்னும் துணைவருடன் அவன் இங்கு வந்துள்ளானா?’ அவர்கள் திகைத்தனர். ‘வைதிகர்களே, இந்த வேள்விச்சாலை மூச்சுத்திணறுகிறது. ஏழுமுறை இதன் அனல் அவிந்தது. இச்சாலையை ஐந்து பிராணன்கள் நிறைக்கட்டும்.’ அவர்கள் தலைவணங்கினர்.”
“உஷஸ்தி சக்ராயனர் அவர்களிடம் சொன்னார் ‘வைதிகர்களே, அனைத்து அனல்களும் ஆதித்யர்களே. எரிகுளத்தின் இறைவன் நம் ஆதித்யனாகிய சூரியன். எரிகுளத்து நெருப்பு சூரியனை நோக்கவேண்டும். அவை தொட்டுக்கொள்ளவேண்டும். எரிகுளத்திற்குமேல் கூரை அமையலாகாது.’ அவர்கள் வணங்கி ‘அவ்வண்ணமே’ என்றனர். ‘வைதிகர்களே, இங்குள்ள அவிக்குவைகள் அனைத்தும் அன்னம். அன்னமே பிரம்மம். பிரம்மம் பிரம்மமாக மாறுவதையே நாம் வேள்வி என்கிறோம்.’ அவர்கள் அவருடைய தாள்பணிந்து அவ்வேள்விக்கு தலைமை ஏற்கும்படி சொன்னார்கள்.”
“வேள்வி நிகழ்ந்தது. குருநாட்டில் பெருமழை பெய்து நீர்நிலைகள் நிறைந்தன. பைங்கூழ் பழனங்கள் செழித்தன. வேதம் நிலத்தைக் காத்தது, நிலம் வேதத்தைப் புரந்தது” என்றார் கோபாயனர். “அரசே, இக்கதையின் உட்பொருள் புரிந்திருக்கும். வேதவேள்விக்குத் தலைவன் என வந்தமர்ந்தவன் முடிசூடி கோல்கொண்டவன் அல்ல. பட்டும்பொன்னும் அணிந்தவன் அல்ல. உஷஸ்தி சக்ராயனர் இரந்துண்டு கந்தை அணிந்து மண்ணில் கலந்து வாழும் எளியவர். வேதம் என்றும் அத்தகையோராலேயே புரக்கப்படுகிறது. இந்த பாரதவர்ஷம் அவர்களால் கோத்திணைக்கப்பட்டது. வாள்முனையால் அல்ல. அரசு சூழ்தலால் அல்ல.”
“வானளித்ததை உண்டு மண்ணுக்கு அறிவை மட்டுமே அளித்துச்சென்ற சான்றோர் தறிமேடையில் அமர்ந்து நெய்தெடுத்த பட்டு இந்த மண். பெறுவதற்கு எவரிடமும் எதுவும் இல்லை என்பதனால் முழுவிடுதலைகொண்டோரால் சொல்நிறுத்திக் காக்கப்படுவது” என்று கோபாயனர் சொன்னார். “அவர்கள் அமைத்த வேதத்தை மாற்றியமைக்கவேண்டும் என்றாலும் அவர்களே வரவேண்டும். அரசர்கள் இங்கு பிறந்து வென்று தோற்று ஆண்டு அடைந்து இறந்து மறைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு எந்நெறியையும் மாற்றும் உரிமை இல்லை. அவ்வுரிமை அளிக்கப்பட்டிருந்தால் இதற்குள் ஒவ்வொருவரும் வேதநெறியை தங்களுக்கு உகந்தவகையில் மாற்றியமைத்திருப்பார்கள். அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகும் அறம் என இங்கு வேதம் அவர்களுக்கு மேல் எழுந்து நின்றிருக்கிறது. அக்காவல் அழிந்து மக்கள் கொடுங்கோலுக்குமுன் கையறுநிலை கொண்டிருப்பார்கள்.”
“உங்கள் யாதவர் யார்? கன்றோட்டும் குலத்தோர். வென்று ஒருநாட்டை அடைந்தமையால் அரசர். வெல்லப்படாத காலம் வரை அவர் அப்படியே அழைக்கப்படுவார். அரசர் என அமர்ந்து அவர் ஆற்றிய வேள்விகள் என்ன? அஸ்வமேதமோ ராஜசூயமோ வேண்டாம், எளிய வேள்வியைக்கூட துவாரகையில் அவர் ஆற்றியதில்லை. ஆம், அவர் வேதம் கற்றிருக்கிறார். இங்குள்ள அத்தனை கல்விநிலைகளிலும் புகுந்து வெளிப்பட்டிருக்கிறார். ஆனால் மாமன்னர் யயாதியோ அரசமுனிவர் ஜனகரோ துணியாததைச் செய்ய அவருக்கு என்ன தகுதி?” என்றார் கோபாயனர்.
அவர் குரல் எழுந்தது. “அவரை இந்நிலம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவரது ஆற்றல் என்பது துவாரகையால் அவரிடம் சேர்ந்த செல்வம், அவரைச் சூழ்ந்துள்ள யாதவகுலம். அதைவைத்து இந்நாட்டை முழுமையாக வென்று தன் சொல்லை இங்கு நிலைநாட்ட முயல்வார் என்றால் அவருக்கு ஹிரண்யகசிபுவின் கதையை சொல்லுங்கள். நால்வேதத்தை தடைசெய்து தன் அசுரவேதத்தையே பாரதவர்ஷமெங்கும் நிலைநிறுத்தவேண்டும் என அவர் எண்ணினார். அவர் மைந்தனின் நாவிலேயே எழுந்தது வேதம். அவர் அரண்மனைத் தூண்பிளந்து எழுந்தது சிம்மம்.”
அவரது சிவந்த முகத்தை நோக்கியபடி சற்றுநேரம் தருமன் அமர்ந்திருந்தார். பின்பு கைகூப்பி தலைவணங்கி “தைத்ரிய மரபின் முதலாசிரியரை தாள்தலைதொட வணங்குகிறேன். இங்கு எனக்குரைக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் மெய்யே என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றார். சினத்துடன் கோபாயனர் “அவ்வண்ணமென்றால் இன்றே அதை அவரிடம் சென்று சொல்லுங்கள். இன்று இளைய யாதவன் எதை நம்பி வேள்விகளை மறுக்கிறான்? சாந்தீபனி மரபு கௌஷீதகத்தின் ஒரு சிறுகிளை. அதற்கென்றொரு வேதச்சொல்வைப்பு இல்லை. பொருள்கோடலும் இல்லை. புதியன சொல்லுதல் எவருக்கும் எளிது. அதைச் சொல்லி நிறுத்துதல் அதைவிட அரிது. தகுதியற்றவரிடம் பிறக்கும் சிந்தனை அதனாலேயே தகுதியற்றதாகிவிடுகிறது” என்றார்.
“ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் எழுந்து வருகிறார் என்பதே இம்மரபின் வல்லமை என நான் எண்ணுகிறேன், ஆசிரியரே” என்றார் தருமன். “இன்று எழுந்து வந்திருப்பவர் அவர். ஆம், சடைமுடி சூடி கானகத்தில் அமர்ந்தவர் அல்ல. இரந்துண்டு வாழ்பவரும் அல்ல. ஆனால் அது மட்டுமே வேதத்தின் நெறி என எவர் சொல்வது?” மேலும் பணிந்து தருமன் தொடர்ந்தார். “இவையனைத்தையும் முற்றுணர்ந்தவன் அல்ல நான். இதை என்றேனும் உணர்வேனா என்றே இன்று ஐயுறுகிறேன். ஆயினும் எந்த அவையிலும் எவர் முன்னிலையிலும் நான் சொல்வதற்கு ஒன்றுண்டு. பாண்டவர்கள் இளைய யாதவருக்கு உரியவர்கள். இப்பிறவியில் பிறிதொரு எண்ணமொன்றில்லை.”
மீண்டும் தலைவணங்கி தருமன் எழுந்துகொண்டார். சினத்துடன் கைநீட்டி கோபாயனர் சொன்னார் “யுதிஷ்டிரனே, தொல்வேதங்களில் பேசப்பட்ட ரிஜிஸ்வானின் கதை ஒன்றுண்டு, அறிந்துகொள்! அவன் இரக்கமற்ற தந்தையால் அடித்து குருடாக்கப்பட்டான். குருடானதனால் வேத அவைகளில் விலக்கப்பட்டான். காட்டுக்குள் தனித்துப்புகுந்த அவன் அங்கே குகை ஒன்றுக்குள் சென்று ஒதுங்கினான். அங்கு காலொடிந்த அன்னை ஒநாய் ஒன்று மகவீன்று கிடந்தது. பசித்துக் கிடந்தபோதும் எழுந்துவந்து அவனைக்கொல்ல முடியாமல் அது உறுமியது.”
“அதன் நிலையுணர்ந்த அவன் சந்தைக்குச் சென்று தன் கையில் இருந்த பணத்தால் ஒர் ஆட்டை வாங்கிக்கொண்டு வந்து ஓநாய்க்கு அளித்தான். அவ்வாறு அவன் நூற்றியொரு ஆடுகளை அந்த அன்னைஓநாய்க்கு குருதிக்கொடை என அளித்தான். உடல்மீண்டு வல்லமைகொண்ட ஓநாய் ஓநாய்களின் வயிற்றில்வாழும் ஜடரை என்னும் அனலிடம் வேண்டிக்கொண்டது. ஜடரையின் குரல்கேட்டு அஸ்வினிதேவர்கள் இறங்கி வந்தனர். அவர்கள் அவனை விழிகொண்டவனாக ஆக்கினர்.”
தருமன் அவரை நோக்கியபடி நின்றார். “நான் இதற்குமேல் சொல்வதற்கொன்றுமில்லை. நன்று சூழ்க!” என்றார் கோபாயனர். மறுமொழி சொல்லாமல் தருமன் தலைவணங்கி வெளியே சென்றார்.
[ 6 ]
“ஆம், அவர் எளிய யாதவர்தான்” என்று வெடிப்புறுகுரலில் அர்ஜுனன் சொன்னான். அவன் அருகே தருமன் அமர்ந்திருக்க எதிரே கிருதனும் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றிருந்தனர். “சென்று சொல் உன் ஆசிரியரிடம், இளைய பாண்டவன் இக்கதையை சொன்னான் என!” அவன் முகம் சிவந்திருந்தது. கண்கள் சினத்தால் நீர்மைகொண்டிருந்தன. தருமன் “இளையோனே, இதை பிறிதொரு தருணத்தில் பேசிக்கொள்ளலாமே” என்றார். “இல்லை அரசே, இவ்விடையைக் கேளாமல் என்னால் இங்கிருந்து நகரமுடியாது” என்றான் கிருதன். “குடியிலும் பிறக்காமல் ஆசிரியர் காலடியிலும் அமராமல் எப்படி கற்றார் வேதங்களை என்று என் மூத்த மாணவர்கள் கேட்டனர். அதற்கு என்னிடம் மறுமொழி இல்லை.”
“சத்யகாம ஜாபாலரின் கதையை உங்கள் குருநிலைகளில் சொல்லியிருப்பார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஜாபாலி என்னும் வேட்டுவப்பெண்ணுக்கு மைந்தராகப் பிறந்தார். இளமையில் அன்னையுடன் காட்டுக்குச் சென்று கனிகளும் கிழங்கும் ஊனும் தேனும் சேர்த்து மீள்வார். ஊர்ச்சந்தையில் அவற்றை விற்று உப்பும் உடையும் வாங்கி மீள்வார். அவர் வாழ்ந்தது பெரும்பாலும் காட்டிலேயே. அன்னை தன் வேட்டுவமொழியை அன்றி எதையும் அவருக்கு கற்பிக்கவுமில்லை. ஆனால் அன்னைஓநாய் மைந்தருக்கு என காட்டை கற்பித்தாள். பறவைமொழிகளை, விலங்குத்தடங்களை, வான்குறியை, மண்ணின் மாற்றங்களை என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி கற்பித்தாள்.”
ஒருநாள் அன்னையிடம் சத்யகாமன் கேட்டான் “இந்தக் குயில் எத்தனை காலமாக இப்படி கூவிக்கொண்டிருக்கிறது?” அன்னை “மைந்தா, குஞ்சென வந்த கணம் முதல்” என்றாள். “அதன் அன்னை எப்போதிருந்து அப்படி கூவுகிறது?” என்றான். அன்னை “அதன் முதல்கணம் முதல். புவியில் குயில் தோன்றிய கணம் முதல் அதன் பாடல் ஒன்றே” என்றாள். “மானுடர் மொழி மட்டும் ஏன் மாறிக்கொண்டிருக்கிறது?” என்று அவன் கேட்டான். “ஏனென்றால் மானுடரைச் சூழ்ந்துள்ள பொருளுலகம் மாறிக்கொண்டிருக்கிறது” என்று அன்னை சொன்னாள். “மாறாதவை என்று சில உண்டா மானுடருக்கு?” என்றான். “ஆம், மாறாதவை விண்ணில் இருந்து மானுடர் பெற்ற ஆணைகள்” என்று அன்னை சொன்னாள். “அவற்றைச் சொல்லும் மொழியும் அழியாததாகவே இருக்கமுடியும்” என்று மைந்தன் சொல்லிக்கொண்டான்.
ஒருநாள் சந்தையிலிருந்து அவன் மீளும்போது குறுங்காட்டின் அருகே ஒரு சிற்றாறின் கரையில் அந்தணர் ஒருவர் வேதம் ஓதி அந்திவணக்கம் செய்வதை கண்டான். அருகே சென்று “முதியவரே, நீங்கள் குயில்போன்றவரா?” என்றான். அவர் அவன் சொல்வதை புரிந்துகொண்டார். “ஆம், நான் என்னை ஆளும் விசைகளின் ஒலி மட்டுமே” என்றார். “அது என்ன சொல்? அதை நான் கற்கும் வழி என்ன?” என்றான் சத்யகாமன். “இது வேதம். இதைக் கற்க உன் குலமும் குடிமரபும் தந்தை பெயரும் வேண்டும்” என்றார் வைதிகர்.
அன்னையிடம் திரும்பிவந்த சத்யகாமன் “அன்னையே, என் குலமும், கோத்திரமும் எவை?” என்று கேட்டான். “அவ்வினா எழுமென்று காத்திருந்தேன், மைந்தா. நாம் மலைவேடர். இங்கு அன்னை மட்டுமே குருதியுறவு. தந்தையென நகர்மாந்தர் சொல்லும் உறவுக்கு இக்காட்டுக்குள் பொருள் இல்லை. எனவே நீ ஜாபாலியின் குலத்தில் பிறந்தவன். ஜாபாலகுடியைச் சேர்ந்தவன். மேலான உண்மையை விழைந்தமையால் இனி உன் பெயர் சத்யகாமன். எவர் கேட்டாலும் சத்யகாம ஜாபாலன் என உன் பெயரைச் சொல்” என்றாள். “நான் வேதச்சொல் பயில காடுவிட்டுச் செல்லவிழைகிறேன், அன்னையே” என்று அவள் கால்தொட்டு வணங்கி அருட்சொல் பெற்று கிளம்பினான்.
சத்யகாமன் கௌதம குருநிலையின் முதன்மையாசிரியரான ஹரித்ருமதரை அணுகி கால்தொட்டு வணங்கி வேதம் பயில வந்திருப்பதாக சொன்னான். “உன் குல, குடி, தந்தை பெயர் சொல்லி அமைக!” என்றார் ஆசிரியர். “மெய்விரும்பி வந்தவன். ஜாபாலியின் மைந்தன்” என்றான் சத்யகாமன். “வேதம் கற்க அதற்குமேல் தகுதி வேண்டுமென்றால் சொல்க, மீள்கிறேன்!” ஆசிரியர் புன்னகைத்து “முதல் தகுதியே போதும். பின்னது உன் அன்னைக்கு உன் கொடை என்று இம்மண்ணில் சொல்லப்படட்டும்” என வாழ்த்தினார்.
குருநிலையில் மாணவனாகச் சேர்ந்த வேடன் ஒவ்வொருநாளும் அங்கிருந்தவர்களால் அயலவனாகவே பார்க்கப்பட்டான். “அவன் பிறப்பு இழிந்தது. அவனால் வேதம்பயில முடியாது” என்றனர் மாணவர் சிலர். “தூய்மையற்ற கலத்தில் அமுதை வைக்கலாகுமா?” என்றனர் வேறுசிலர். “மாணவர்களே, வேதமெய்மையை அடைய வேதமும் தேவையில்லை என்று அறிக! சிறகுள்ளவனுக்கு ஏணி எதற்கு?” என்றார் ஹரித்ருமதர். மறுநாளே சத்யகாமனை அழைத்து “மைந்தா, இந்தத் தொழுவத்தின் மெலிந்து நோயுற்ற நூறுபசுக்களை உனக்களிக்கிறேன். அவற்றை ஆயிரமாக ஆக்கி திரும்பி வருக!” என்றார்.
நூறுபசுக்களுடன் அன்றே சத்யகாமன் காட்டுக்குச் சென்றான். அவனை ஆசிரியர் திருப்பியனுப்பிவிட்டார் என்று மகிழ்ந்தனர் மூத்தமாணவர்கள். “தனக்குரிய தொழிலை அவன் செய்யலாம்” என்றனர். புன்னகைத்து ஹரித்ருமதர் சொன்னார் “ஐவேளை எரியோம்புதலுக்கு இணையானது ஆபுரத்தல் என்கின்றது தொல்வேதம். நீங்கள் உளமொருக்காது ஓதும் வேதம் வீண். அவன் நிறைந்து செய்யும் கன்றுமேய்த்தல் கனியும்.”
ஏழாண்டுகாலம் காட்டிலிருந்தான் சத்யகாமன் என்கின்றன தொல்கதைகள். அங்கு அவன் மானுடரை ஒருமுறையும் காணவில்லை. அவன் உதடுகள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. மெல்ல அவன் உள்ளத்தில் ஓடிய சொற்களும் அணையத்தொடங்கின. ஓராண்டுக்குள் அவன் மானுட மொழியிலிருந்து முழுமையாகவே விலகிச்சென்றான். கன்றுகளிடம் பேச மட்டுமே அவன் வாய் அசைந்தது. பின்னர் அவற்றுடன் அவற்றின் மொழியில் தான் பேசத்தொடங்கியிருப்பதை ஒருநாள் உணர்ந்தான். உச்சிப்பொழுது கடப்பதைக் கண்ட அன்னைப்பசு ஒன்று அவனிடம் “மைந்தா, பசித்திருக்காதே, உண்டுவா. இப்பகுதியை என் மைந்தன் பார்த்துக்கொள்வான்” என்றது. அருகே நின்றிருந்த இளங்காளை “ஆம், நான் பொறுப்பு” என்றது.
பின்னர் சத்யகாமன் அங்குள்ள அனைத்து உயிர்களிடமும் பேசலானான். “ஆசிரியர்களே, சொல்க! என்றும் அழியாதது எது?” என்று அவன் கேட்டான். அக்காட்டில் வசித்த முதிய எருதொன்றை தன் முதலாசிரியனாகக் கொண்டான். அது சொன்னது “மைந்தா, அறிக! ஆற்றலே அழியாதது. எனவே வாயுவே இறைவடிவம்.” பின்னர் அவன் செங்கழுகுடன் அமர்ந்தான். “இளையோனே, தூய்மையே அழியாதது. எனவே அனலே இறைவன்” என்றது. அன்னப்பறவை ஒன்று அவனுக்குச் சொன்னது “ஆதித்யர்களால் ஆனதே ஒளி. ஒளியே அழியாதது.” மீன்கொத்தி சொன்னது “ஒவ்வொரு கணமும் துடிப்பது எதுவோ அதுவே நீ. பிராணனே அழியாதது என்றறிக!”
“இவை ஐந்தாலும் ஆனதே நான். இவையனைத்தும் அழியாதவை. அழிவின்மையே பிரம்மம். நானும் அதுவே” என்று அவன் உணர்ந்தான். ஆயிரம் பசுக்களுடன் அவன் திரும்பிவரக் கண்டபோது ஹரித்ருமதரின் குருநிலையில் இருந்தவர்கள் எழுந்து தொழுதுநின்றனர். பொன்னாலான கொம்புகளும் வைரங்கள் என ஒளிவிட்ட விழிகளும் கொண்ட நான்கு பசுக்களாக வேதங்கள் அவனை தொடர்ந்துவந்தன. வெண்பசுவாக ரிக். செம்பசுவாக யஜுர், பழுப்புநிறப் பசுவாக சாமம். கரும்பசுவாக அதர்வம். “வருக மைந்தா, நீ கற்றவற்றை எளியவர்களாகிய எங்களுக்குச் சொல்” என்று உரைத்தார் ஹரித்ருமதர்.
“இன்றுமிருக்கிறது ஜாபால வேதமரபு. ஆயிரம் கல்விநிலைகளாக பாரதம் முழுக்க பரவியிருக்கிறது அது. சென்று சொல்க, உங்கள் ஆசிரியரிடம்! கன்றுமேய்த்தவன் பெற்ற அந்த வேதத்தை அனலோம்புபவன் எளிதில் பெறமுடியாது என. என்றும் அழியாதது தன்னை வெளிப்படுத்தத் தேர்வுசெய்யும் கருவிகளை இன்றிருந்து நாளை மடியும் எளிய மானுடர் வகுக்கமுடியாது என.” அர்ஜுனன் எழுந்துகொண்டு “வினாக்கள் எழுந்த உன் உள்ளம் வாழ்க, மைந்தா! நீ சென்று சேருமிடம் ஏதென்று நான் அறிவேன். அவ்வாறே ஆகுக!” என வாழ்த்திவிட்டு நடந்தான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45
பிரயாகை- ஒருமை
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 38
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 37
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35
போகன்!
போகன் பற்றி நண்பர் சரவணன் விவேகானந்தன் அவரது செல்பேசியில் காட்டினார். மிகமிக உற்சாகமாக இருந்தது. இப்படிப்பட்ட செயல்கள்தான் இன்றைய பெண்குலத்திற்கு அவசியமானவை. பெண்கள் இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். ஓலா வண்டிகளில் கூட ஓட்டுநர்கள் கத்திமாதிரி கைகாட்டும் காலம். இந்தச்சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பாக போகன் களமிறங்கியிருப்பது மிகுந்த நம்பிக்கை ஊட்டுகிறது. இவ்வகையான செயல்களைச் சில பெண்ணியர்கள் எதிர்க்கக்கூடும். ஆனால் போகன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல என்பது தெரிகிறது.
”எண்ணிய எண்ணாங்கெய்துப எண்ணியார் பெண்ணியராகப் பெறின்’ என்பது வள்ளுவர் வாக்கு. பெண்ண்யம் பூத்த புரட்சிப்பெண் லெதர் ஜாக்கெட்டுடன் எதிரிகளைப் பந்தாட இறங்கியிருக்கும்போது இருபக்கமும் ஜெயம் ரவியும் அரவிந்தசாமியும் மேலும் லெதர்ஜாக்கெட் குல்லா, மனவாடு கூலிங் கிளாஸ் அணிந்து இருபக்கமும் மோட்டார் பைக்கில் ர்ர் ர்ர் என நின்றிருக்கும் அந்த ஸ்டில்லை எம்.டி.எம்மார் உரை இல்லாமல் தெள்ளிதின் குறியீட்டு ஆய்வு செய்து பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
போகன் மிகத்திறமையானவர் என்றார்கள். இருக்கலாம். ஏனென்றால் நவபாஷாணச்சிலையை அவர்தான் செய்ததாகச் சொல்வார்கள். அச்சிலையின் பின்பக்கத்தைச் சுரண்டி சிலர் உண்டு ஆண்மையை விருத்தி செய்ததை தீப்பொறி ஆறுமுகம் சொல்லியிருக்கிறார். போகன் படத்தின் காட்சிகளிலேயே ஆண்மை மிளிர்கிறது. குறிப்பாக தினவெடுத்து திண்தோள் தட்டிக் களமிறங்கும் தோழிக்கு இருபக்கமும் காவலென வந்து நின்ற காளையர் அதைத்தானே காட்டுகிறார்கள்.
போகனை வரவேற்போம். போகன் வெற்றிபெற வாழ்த்துக்கள்
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
August 12, 2016
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
பாரதி ராஜாவின் கிராமத்துப்படங்கள் மூலம் நம் மனதில் பதிந்துவிட்ட ஒரு சித்திரம் உண்டு. மிகவும் பிற்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு ஆசிரியனாக அல்லது டாக்டராக ஒருவன் வருகிறான். அவனுடைய கண் வழியாக அங்குள்ள தனித்தன்மைகளும் சிறப்புகளும் இழிவுகளும் நுட்பமாக படம்பிடித்துக்காட்டப்படுகின்றன. அந்த அன்னியன் அச்சிறு உலகுக்கு புறவுலகினை அறிமுகம் செய்கிறான். அவன் மூலம் அங்கே தேங்கி கிடந்த வாழ்க்கையில் அலைகள் எழுகின்றன. சிக்கல்கள் முளைக்கின்றன. பலசமயம் அவன் திரும்பிச்செல்லும்போது கதை முடிவுக்கு வருகிறது. இந்த முன்மாதிரியை பாரதிராஜா புட்டண்ண கனகலின் படங்களிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கக் கூடும். புட்டண்ண கனகல் பிரபலமான சில கன்னட நாவல்களிலிருந்து. ஏற்கனவே மலையாளப் படங்களிலும் நாவல்களிலும் இது ஒரு பழகிப்போன கதைவடிவமாக இருந்தது.
ஆனால் இக்கதையை சராசரித் தமிழ் மனம் உடனடியாக ஏற்றுக்கொண்டு நம் வணிகக்கலையில் ஒரு நிரந்தரவடிவமாக ஆக்கியதற்குக் காரணங்கள் சில உண்டு. நம் கிராமங்கள் ‘அன்னியர்’ வருகையால் துயிலெழுந்தமை சென்ற ஐம்பதுவருடங்களில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றமாகும். சுதந்திரம் கிடைத்த பின் ஐந்தாண்டுத்திட்டங்கள் மூலம் நாடுமுழுக்க பரவலான பொதுக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டமை இதற்கு முக்கியமான காரணம். பொது சுகாதார மேம்பாடு, பசுமைப்புரட்சி போன்ற வேறு மாற்றங்களும் காரணமாயின. இப்போது அறுபதைத் தொடும் ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களிடம் கேட்டால் கணிசமானவர்களுக்கு ‘தண்ணியில்லா காட்டுக்கு’ வேலை கிடைத்து சென்று சேர்ந்த விசித்திர அனுபவங்கள் சில இருப்பதைக் கேட்க முடியும்.
நம் கிராமங்கள் ஒருவகையில் தன்னிறைவு கொண்டவை. அவர்களுக்கு தொழில் , நீதி நிர்வாகம் இரண்டுமே அவர்கள் வாழும் கிராமங்களுக்குள்ளேயே முழுமையாக அடங்கிவிடுமாறு வாழ்க்கை அமைந்துள்ளது. பற்பல நூற்றாண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. ஆகவே அவர்கள் வெளியே செல்லவோ நோக்கவோ வேண்டியதில்லை. நீண்டநெடுங்காலமாக பொதுப்போக்குவரத்து இங்கே வளர்ச்சிபெறவும் இல்லை.’ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன ?’என்ற நோக்கே அவர்களின் பிரக்ஞையை ஆட்சி செய்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நூற்றாண்டுப் பழைமைகொண்ட அசையாத தன்மையை அசைத்தது நமது ‘நலம் நாடும்’ அரசு. ஆசிரியர்களும் தபால்காரர்களும் அதன் முக்கியமான தூதர்கள். கிராமங்களில் ஆசிரியர் மூலமே மானுட சமத்துவம், பொது நீதி, அரசியலில் சாமான்யனுக்கும் பங்கு போன்ற கருத்துக்கள் சென்று சேர்ந்தன.
‘பன்கர் வாடி’ அப்படி கிராமத்துக்குச் செல்லும் ஒரு எளிய ஆசிரியனின் கதை. ராஜாராம் விட்டல் சௌந்தனீகருக்கு இன்னும் இருபது வயது ஆகவில்லை. மெலிந்த குள்ளமான உருவம். பள்ளிப்படிப்பை முடித்ததுமே அவனுக்கு வேலை கிடைத்து விடுகிறது. பொட்டல் நடுவே இருக்கும் சின்னஞ்சிறு மலைக்கிராமமான பன்கர் வாடிக்கு. அங்கே எப்படி இருக்கும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. சப்பாத்தியையும் பூண்டுச்சட்டினியையும் பொட்டலமாக எடுத்துக்கொண்டு கையில் சிறுபையுடன் காய்ந்து தூசி பறந்த பொட்டல் நடுவே சென்ற வண்டிப்பாதையில் காலைமுதலே கால் ஓய நடந்து அவன் பன்கர் வாடிக்கு வருகிறான். இருபக்கமும் கிடந்த பசுமையற்ற மேய்ச்சல் நிலத்தைக் கண்டு இங்கே எப்படி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று அவனுக்கு வியப்பு.
பன்கர் வாடி ஒழுங்கில்லாத வைக்கோல் மூட்டைகள் போன்ற ஏறத்தாழ முப்பது குடிசைகளின் தொகுப்பு. தெரு என்று ஏதுமில்லை. குடிசைகள் நடுவேயுள்ள இடம் நடமாட விடப்பட்டிருகிறது. எல்லாருமே ஆடுமேய்ப்பவர்கள். ஆட்டுப்பட்டியும் வீடுகளும் எல்லாம் கலந்தே இருகின்றன. சௌந்தனீகர் வரும்போது ஊரில் யாருமில்லை. ஆடுமேய்க்கச்சென்றுவிட்டார்கள். முடியாத சில கிழவர்கள், குழந்தைகள் அவ்வளவுதான். அவன் சாவடியில் நின்ற வேப்பமரத்தடியில் அமர்ந்து கால்களில் புழுதியை தட்டிக்கொண்டபோது கிராமத்தின் முதல் மனிதன் அவனிடம் பேசுகிறான். ”ஏண்டா முட்டைக்காரனா நீ?”. தன்னை ஆசிரியன் என்று சௌந்தனீகர் அறிமுகம் செய்துகொண்டபோதும்கூட அவனிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. அலட்சியமாக, “ம்ஹம். ஆசிரியனுக்கு இங்கே என்ன வேலை? பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது?கிராமத்தில் பிள்ளைகள் ஏது? சர்க்காருக்கு இதெல்லாம் தெரியாதா? வெட்டிவேலை!”
பொதுவாக கிராமத்தில் மரியாதையான பேச்சோ உபச்சாரமொழிகளோ இல்லை. யாரையும் யாரும் பன்மையில் அழைப்பதில்லை. பள்ளிக்கூடம் என்று ஏதும் கண்ணுக்குத்தெரியவில்லை. எல்லா வீடுகளும் புல்வேய்ந்த மண்தொடும் குடிசைகள். என்ன செய்வது எப்படி தொடங்குவது என்று ஒன்றும் தெரியவில்லை.பின்னர் கிராமத்தின் இன்னொரு முகம் அறிமிகமாகிறது. மிகவயதான நாட்டாண்மை அவனிடம் விசாரிக்கிறார். அவனுடைய அப்பா, குலம், ஊர். ‘நீ நம்மாள்தான்’ என்ற முடிவுக்கு வந்தபின் அவர் அவனுக்கு உதவுகிறார். குடிக்கத் தண்ணீர். அது கிராமத்தில் அபூர்வமான விஷயம். ஒரே ஒரு ஓடைதான் மனிதர்கள் மிருகங்கள் எல்லாருக்கும் எல்லா உபயோகங்களுக்கும். சாப்பிட்டதும் சௌந்தனீகர் ஒரு தெம்பை உணர்கிறான். தொடங்கிவிடலாம் என
அங்கே முன்னர் இருந்த ஆசிரியரை ஊர்மக்கள் அடித்து துரத்திவிட்டார்கள். ஊர்பெண்கள் சிலரிடம் அவன் தவறாக நடந்துகொண்டானாம். அதற்குப்பின் பலகாலமாக அங்கே பள்ளி இல்லை. பிள்ளைகள் படிப்பையெல்லாம் மறந்து ஆடுமேய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அங்கிருந்த புல்வேய்ந்த சாவடியின் ஒருபகுதிதான் பள்ளி என்கிறான் கிழவன். அது பாழடைந்து ஒட்டடை பிடித்துக்கிடக்கிறது. தன் கம்பிளியையே பயன்படுத்தி ஒட்டடை அடித்து தூசி தட்டி அறையை சரிசெய்கிறான் கிழவன். அங்கேயே சௌந்தனீகர் அமர்ந்துகொள்கிறான். மாலையில் இடையர்கள் திரும்பவருகிறார்கள். ஆடுகளை பட்டிகளில் அடைக்கிறார்கள். தங்கள் கம்பிளிகளுடன் சாவடிக்கே வந்துவிடுகிறார்கள்.கனத்த கம்பிளிகளை அப்படியே தரையில்போட்டு அதன் மீது அமர்ந்துகொண்டு இருளிலேயே அமர்ந்து பேசிக்கொள்கிறார்கள். ஒரு அகல் விளக்கு வந்த போதுதான் அங்கே எத்தனைபேர் இருந்தார்கள் என்ற வியப்பை சௌந்தனீகர் அடைகிறான். ஆனால் அவர்களுக்கு இருட்டு பொருட்டேயல்ல.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அவர்களுக்கு பிரியமில்லை. அவர்கள் மாடுமேய்த்தால்தான் தொழிலுக்கு நல்லது. ”இங்கே எங்கே பிள்ளைகள் இருக்கிறார்கள்?”என்று கேட்கிறார்கள். நாட்டாண்மை ஒரு அதட்டல் போட்டதும் தொழிலுக்கு உதவாத பையன்களை மட்டும் பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொள்கிறார்கள். ஒருவழியாக பன்னிரண்டு மாணவர்கள் தேறிவிட்டார்கள். மறுநாள் பள்ளி தொடங்கவேண்டியதுதான். யாருமே வீட்டுக்குப் போகவில்லை. அந்தக்கம்பிளிகளைபோர்த்தியபடி அங்கேயே படுத்து அப்படியே தூங்கிவிடுகிறார்கள். சௌந்தனீகர்ரின் முதல் நாள் இது.
அதன் பின் அவன் அந்தக்கிராமத்தில் வேரூன்றுகிறான். பள்ளியை நினைத்ததுபோல தொடங்க முடிவதில்லை. தொடங்கியபின் நடத்த முடிவதில்லை. அப்பாக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டுவந்து விட்டால் அம்மாக்கள் கூப்பிடுக்கொண்டு போய்விடுவார்கள். அம்மா கொண்டுவிட்டால் அப்பா கூப்பிட்டுக்கொண்டுபோவார். கிராமத்தில் பகல்வேளைகளில் ஆள்நடமாட்டமே இருப்பதில்லை. அதைவிட மோசம் சோம்பேறிகளும் நோயாளிகளும் வெட்டியாக பொழுதைக்கழிக்க பள்ளிக்கூடத்தில் மாணவர் மத்தியில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்.
ஆனால் மெல்லமெல்ல சௌந்தனீகர் பள்ளியை நடத்தவே செய்கிறான். கிராமத்தில் அனைவருக்கும் அவனுடைய உதவி தேவையாகிறது. காரணம் அவன் தன் ஊருக்கு ஞாயிறு தோறும் போய்வருகிறான். யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமென்ற பட்டியலும் பணமும் தபாலில்சேர்க்கவேண்டிய கடிதங்களுமாக அவன் சனிக்கிழமை கிளம்பி நடந்து மாலையில் ஊரை அடைந்து தூங்கி ஞாயிறு காலை கிளம்பி மாலை மீண்டும் பன்கர்வாடிக்கு வந்து சேர்வான்.
கிராமத்தில் ஆசிரியனுக்கு இன்னவேலை என்றில்லை. நீதி நிர்வாகம் முக்கியமாக. குடும்பச்சண்டைகளைக்கூட அவன் தான் தீர்த்துவைக்க வேண்டும். ஆசிரியன் படித்தவன். உலகம் தெரிந்தவன் என்ற நம்பிக்கை. ஷேகூ ஆசிரியனிடம் வந்து எனக்கு ஒரு மாடு வேண்டும் உழுவதற்கு என்கிறான்.”ஆசிரியனிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்களே, எனக்கு மட்டும் ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள் ?’என அதட்டுகிறான்.
ஆர்வமூட்டும் கிராமத்துக் கதபாத்திரங்கள் வழியாக நகர்கிறது இந்நாவல். அடிப்படையில் வாழ்க்கை பற்றிய ஒரு நிதானமான புரிதலும், நியாய உணர்வும் கொண்டவரான நாட்டாண்மை ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதேசமயம் வெகுளித்தனமும் அவருக்கு இருக்கிறது. ஆசிரியர் தன் மகளுடன் உறவிலிருக்கிறார் என்று ஒரு அவதூறை காதால் கேட்டதுமே கோபித்துக்கொண்டு பேசாமல் இருக்கிறார். அவனை கண்காணித்து அது உண்மையல்ல என்று தெரிந்ததுமே வந்து ‘சரியப்பா, ரோஷமெல்லாம் என்னைமாதிரி வயதானவர்கள் காட்டவேண்டியது. உனக்கு என்ன?” என்று சமாதானமாகிறார். அக்கிராமத்தில் சௌந்தனீகர் உத்தேசிக்கும் எல்லா மாற்றங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு அளிக்கிறார்.
செல்லாத நாணயங்களாக சேர்த்து வைத்துக்கொண்டு விழிக்கும் ராமா இன்னொரு நல்ல கதாபாத்திரம். அவனிடம் பணம் இருக்கிறது, அதன் மதிப்பு அவனுக்குத்தெரியாது. கிராமத்தானுக்கே உரிய எச்சரிக்கையுடன் ஒரே ஒரு செல்லா நாணயத்தைக் கொண்டுவந்து ஆசிரியனிடம் கொடுத்து மாற்றச்சொல்கிறான். அந்தச்செல்லா நாணயங்கள் உலோகமதிப்பில் அவற்றின் அசல் மதிப்பைவிட அதிகமானவை என்று தெரியும்போது இன்னும் கொஞ்சம் கொண்டுவருகிறான். கடைசியில் ஒரு பெட்டி நிறைய. அத்தனை நாள் அந்த செல்வத்தின் மீது அமர்ந்துகொண்டுதான் அவன் பட்டினி கிடந்தான்!
சாப்பாட்டுக்கு மட்டும் திருட்டு செய்யும் ஆனந்தா ராமோஷி. ‘கேட்டால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை. காக்கா குருவியெல்லாம் வயிற்றுக்கு எடுத்துக் கொள்கிறதே நான் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?’ என்பது ஆனந்தாவின் கோட்பாடு. மனசாட்சிக்கு அதிகமாக எடுத்துக்கொண்டானென்றால் இரண்டுநாள் கழித்து உரிமையாளனைக் கண்டு விஷயத்தைச் சொல்லி தண்டனையை கேட்டு பெற்றுக் கொள்வான். உணவு அன்றி பிற தேவைகளே இல்லாத ஆயபூ. கிட்டத்தட்ட மிருக வாழ்க்கை. ஆனால் கூர்ந்த மதிநுட்பமும் நேர்மையான உணர்ச்சிகளும் கொண்ட மனிதன். பிறந்தது முதல் தொண்ணூறு வயதுவரை மேய்ச்சல் அன்றி வேறு எதுவுமே தெரியாமல் வாழும் காகூபாக் கிழவர். அவர் ஓநாய்கள் போல ஒரு துல்லியமான மிருகம். ஓநாய் வேட்டையாடும் மிருகமென்றால் இவர் மேய்ச்சல் செய்யும் மிருகம்.
சுருக்கமான இக்கதையின் உள்ளே ஒருசில சொற்களில் சொல்லிச்செல்லபப்டும் முழுமையான வாழ்க்கைக்கதைகள் உள்ளன. நோஞ்சான் ஷேகூவுக்காக அவன் காளைக்கு இணையாக நுகத்தில் தன்னை கட்டிக்கொண்டு உழும் அவன் மனைவி அவனால் பின்பு புறக்கணிக்கப்பட்டு தனிமையை வரித்துக்கொள்கிறாள். தந்தை இறந்தபின் ஷேகூவிடம் அடைக்கலமாகும் கிராமத்து அழகி அஞ்சி – கன்னங்கரிய உடலும் பெரிய பற்களும் கொண்டவள் – நோஞ்சான் ஷேகூவை மயக்கி அவனை மணந்துகொள்கிறாள். இன்னொரு இளைஞன் வந்ததும் இயல்பாகவே இவனை உதறி அவனை ஏற்கிறாள். இவ்வாறு வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து அச்சிறு உலகுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நாவலுக்குள் ஒரு தனிக்கதையாக இயங்குவது ஜகன்யா ராமோஷியின் கதை. கட்டுமஸ்தான இளைஞனான அவன் ஊருக்குச்சென்று மராட்டிய இனத்தைச் சேர்ந்த ஒரு கைம்பெண்ணை காதலித்து அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறான். துரத்திவரும் அவர்கள் ராமோஷிகளை ஒட்டுமொத்தமாக அடித்து துவைக்கிறார்கள். விஷயம் அறிந்த ஆனந்தா ராமோஷி ஜகன்யாவை தானே பிடித்துக் கொடுப்பதாக வாக்களிகிறான். ”ஜகன்யா உன் இனம். அந்தப்பெண்ணை அவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளவும் போவதில்லை. அவர்கள் எங்காவது போய் வாழட்டுமே” என்ற நியாயங்கள் ராமோஷிகளுக்குப் புரிவதில்லை. அவர்கள் கண்ணில் அது மன்னிக்கமுடியாத ஒரு பாவம். அவன் தலைமையில் ராமோஷிகளே ஜகன்யாவை தேடி அலைகிறார்கள்.
தப்பி ஓடும் அவர்களை பிடிக்கிறார்கள். கைம்பெண்ணையும் ஜகன்யாவையும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஜகன்யாவை அடித்து துவைக்கும் அவர்கள் அந்த அழகிய விதவையை மூக்கை அறுத்து விரட்டிவிடுகிறார்கள். அவள் அழுதபடி திரும்பி ஜகன்யாவிடமே வருகிறாள். அவன் அடிபட்டு படுக்கையில்கிடக்கிறான். ராமோஷிகள் அவளை விரட்டிவிடுகிறார்கள். அவள் எங்கோ போய்விடுகிறாள். ஜகன்யா மனமுடைந்து குடிகாரனாகி பஞ்சத்தில் ஊரைவிட்டே போய் ஒரு வயலில் களைபறிக்கும் வேலைக்குச் சேர்கிறான். குடியானவர்கள் பஞ்சம் பிழைக்கவரும் இடையர்களுக்கு நாலைந்து நாள் வேலை முடிந்தபிறகே கூலி தருவார்கள். கடும் பசியுடன் நாலுநாள் வேலைசெய்து வயலிலேயே சுருண்டு விழுந்து சாகிறான் ஜகன்யா. உருக்கமான இக்காதல்கதை எளிய தகவல்களாக நாவலில் சொல்லப்படுகிரது.
குணச்சித்திரங்களை அளிப்பதில் அலாதியான ஒரு நுட்பத்தை ஆசிரியர் காட்டுகிறார். அஞ்சியின் இயல்பு என்ன என்பது உழைத்துச்சேர்த்த பணத்தை முழுக்கக் கொடுத்து ஆசிரியர் வழியாக ஒரு ஜாக்கெட் தைத்துக்கொள்ளும் அவளுடைய ஆவலிலேயே வெளிப்படுகிறது. ஒரு மரத்தை பொது நன்மைக்காக தரமறுத்து ஊர் விலக்குக்கு ஆளாகி பிடிவாதமாக அதை எதிர்த்து நிற்கும் பாலாவால் சாமிகும்பிடுவதில் பங்களிப்பதற்கு ஊர் தடைபோடுவதை தாங்க முடிவதில்லை. மனம் உடைந்து அழுகிறான்.
ஒரு நிகழ்ச்சி முக்கியமானது. நாட்டாண்மை கிழவர் அவர் இறந்துபோவதாக ஒரு கனவுகாண்கிறார். மறுநாளே அவர் ஊராரைக்கூட்டி அதைச்சொல்லி தன் மகள் அஞ்சிக்கு புகல் சொல்லி காகூபாவிடம் ஒப்படைத்துவிட்டு எல்லாரிடமும் விடைபெற்று நோய்கண்டு அன்றே மடிகிறார். இந்த நுண்ணிய தகவலை நாவல் சாதாரணமாகச் சொன்னாலும் எளிய மனிதர்களிடம் உள்ள அசாதாரணமாக நுண்ணுணர்வின் சாட்சியமாக உள்ளது இது.
சௌந்தனீகர் ஊரில் ஒரு பொதுக்கட்டிடம் கட்டச்செய்கிறான். ஊருக்குள் பொது நன்மைக்காக சேர்ந்து உழைக்கும் மனநிலையை உருவாக்குகிறான், ஆனால் சட்டென்று வரும் வரட்சியால் எல்லாம் சிதைகிறது. ஆடுகள் மந்தை மந்தையகா சாகின்றன. பசியும்பட்டினியும் தாங்க முடியாத மக்கள் ஊரைவிட்டே செல்கிறார்கள். பன்கர் வாடி மெல்லமெல்ல காலியாகிறது. சரசரவென கூரிய தகவல்கள் மூலம் இந்த முடிவு நாவலுக்குள் நிகழ்கிறது. பள்ளியை அரசு மூடிவிடுகிறது. ஆசிரியன் திரும்ப அழைக்கப்படுகிறான். பிரியாத துணையாக கூடவே இருந்த ஆயபூவிடம் விடைபெற்று கிளம்பும்போது நாவல் முடிகிறது.
ஒரு மந்திரவாதி கோலை அசைத்து காட்டும் மாயக்காட்சி போல பன்கர் வாடியை உருவாக்கி அதை அப்படியே சுருக்கி மீண்டும் தன் கோலுக்குள் இழுத்துக்கொள்கிறார் மாட்கூல்கர். அவருடைய சித்தரிப்புத்திறனுக்கு சிறந்த சான்று இதன் கிராம வர்ணனை. கிராமத்தில் மந்தை வந்தணையும் காட்சியின் நுணுக்கமான விவரிப்பை தல்ஸ்தோயுடன் ஒப்பிடமுடியும். வீடுதிரும்பும் ஆடுகளை தேடி கட்டப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டிகள் தாவிச்சென்று பால்குடிக்க முற்படுதல் ஓர் உதாரணம். ‘தாய் ஆடு குட்டியை தேடுவதும் சிறிய குட்டிகள் தாய் ஆட்டை அழைப்பதுமாக மே மே பே பே என்று கத்தல் காதைத்துளைப்பதாக இருக்கும். பசித்திருக்கும் குட்டீகள் ஏதேனும் ஆட்டின் மடியில் புகுந்து பாலூட்டுவதற்காக முட்ட ஆரம்பித்திருக்கும். தாய் ஆடு அந்த புதிய ஸ்பரிசத்தை புரிந்துகொண்டு துள்ளி வேறுபக்கமாக போக முயற்சி செய்யும். அந்தப் படபடப்பில் சிறிய குட்டிகளைத் தேடும் வெறியில் இருக்கும் தாய் ஆடுகள் கீழே விழுந்த குட்டிகளின் கண்களிலும் முகத்திலும் மிதித்து முன்னேறும். கிராமம் முழுக்க இந்த குழப்பம் நிலவியிருக்கும். ஆயிரம் ஆயிரத்து இருநூறு ஆடுகள் இவ்வாறு ஒலியெழுப்பும். மேய்ப்பவர்களும் அவர்கள் மனைவிகளும்கூட தங்கள் பேச்சை கூச்சலிட்டுத்தான் பேசும்படி இருக்கும்…’
இடையர்களின் வாழ்க்கை முறையையும் இயல்புகளையும் துல்லியமாகச் சொல்லிச்செல்கிறது இந்நாவல். அவர்களுடைய தொழில் என்பது சலிப்பையே அன்றாட நடைமுறையாகக் கொண்டது. நீண்டநேரம் வெறுமே ஆடுகள் பின்னால் சுற்றும் வாழ்க்கை. மற்றும் தனிமை. அதை வெல்ல அவர்கள் கண்டுகொள்ளூம் விளையாட்டுகள். ஒன்று சேர்ந்ததும் அவர்கள் பேசும் ஓயாத பேச்சு. படுக்கவும் போர்த்தவும் மண்ணைக்கூட்டவும் ஒரே கம்பிளியை பயன்படுத்தும் பழக்கம். நான் தர்மபுரி பக்கம் இருந்த நாட்களில் அறிமுகமான இடையர்களுக்கும் இதே பண்புகள் இருப்பதை கண்டிருக்கிறேன்.
எளிய நேரடியான நடையில் சரளமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நாவல். உமா சந்திரன் அறியப்பட்ட ஒரு நாவலாசிரியர் என்பது இதற்குக் காரணம். மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ இவரது நாவலின் திரைவடிவமே. அதிலும் கிராமத்துக்குவரும் எஞ்சீனியர் என்ற கதாபாத்திரம் மையமாக இருப்பதைக் காணலாம். ஆனால் மராட்டிய இடையர்களை கோனார் என்ற தமிழ்நாட்டு சாதிச்சொல்லால் சொல்லியிருப்பது முறையல்ல. அங்குள்ள சாதிச்சொல் என்பது நாவலின் முக்கியமான ஒரு தகவலாகும்.
1954ல் மராட்டியில் வெளிவந்த இந்நாவல் உடனடியாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 1958ல் The village has no walls’ என்ற பேரில் இது வெளியாகியது. ‘A treasury of Asian Short stories’ ‘Twentieth Century Asia’ போன்ற சர்வதேசதொகுதிகளில் சேர்க்கப்பட்டது. [சிறுகதையாக இது கருதப்பட்டிருப்பதை கவனிக்கவும்] பல ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யபட்டுள்ளது.
யதார்த்தத்தின் வலிமை கொண்ட அழுத்தமான படைப்பு இது. களங்கமின்மையை இலக்கியத்தில் சித்தரிப்பதென்பது எளிய விஷயமில்லை. காரணம் இலக்கியம் என்பது எப்படிப்பார்த்தாலும் அறிவார்ந்தது, நுண்ணியது. இலக்கிய ஆசிரியன் ‘களங்கமில்லா’ மனதினனும் அல்ல. ஆகவே களங்கமின்மை மீதான அவதானிப்பாக, விமரிசனமாக இலக்கிய ஆக்கம் மாறிப்போகும். எழுத்தாளனின் இளம் நெஞ்சின் களங்கமில்லா ஒருபகுதி தன்னிச்சையாக வாழ்க்கைமீது படிவதன் மூலமே இது நிகழ முடியும். அந்தச் சவாலை மிகச்சிறப்பாக சந்தித்த இந்திய நாவல் இது.
[பன்கர் வாடி. வெங்கடேஷ் மாட்கூல்கர். தமிழாக்கம் உமா சந்திரன். நேஷனல் புக் டிரஸ்ட் ]
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2006 
தொடர்புடைய பதிவுகள்
வி.எஸ்.காண்டேகரின் யயாதி.
லட்சுமி நந்தன் போரா’வின் ‘ கங்கைப் பருந்தின் சிறகுகள் ‘
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
சித்திரவனம்
ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’
பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’
‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்.
நானக் சிங்கின் வெண் குருதி
ஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’
ராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி
யார் யாருக்காகப் பேசுகிறார்கள்?
அரவிந்தன் எழுதிய ஒரு பழைய கட்டுரை கண்ணில்பட்டது. யார் யாரைப்புறக்கணிக்கிறார்கள். இலக்கியவாதிகள் திராவிட இயக்க எழுத்தாளர்களை புறக்கணிக்கிறார்கள் என்னும் வைரமுத்துவின் குற்றச்சாட்டுக்கான பதில் அது.
பலமுறை நான் எழுதிய வாதங்கள்தான். சிற்றிதழ் வாசகர்களுக்கு தெரிந்த சான்றுகள். ஆனால் பொதுவாசகர்களுக்கு அவை அவர்கள் அறியாத தகவல்கள். ஆணித்தரமான விளக்கம்.
சென்ற அரைநூற்றாண்டாக திராவிட இயக்கம் நவீன இலக்கியத்தைப்பற்றி மட்டும் அல்லாது நவீன ஆய்வுலகையே அறியாமல் இருந்திருக்கிறது. திராவிட சார்புள்ள ஆய்வாளர்களைக்கூட அது பொருட்படுத்தியதில்லை. அவர்களே அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கிறார்கள். ஆகவே புறக்கணிப்பு அவர்களுடையது.
நவீன எழுத்தாளர்கள் திராவிட இயக்கத்தைப் புறக்கணிக்கவில்லை, விமர்சித்து நிராகரித்தார்கள். அது அவர்களின் இலக்கியக்கொள்கை சார்ந்தது. அவ்விமர்சனம் விரிவாகவே எழுதப்பட்டும் உள்ளது.
நான் ஆர்வமாகப் படித்தது அதிலுள்ள பின்னூட்டம். அதில் ஒரு பின்னூட்டம்கூட மேலே இருந்த கட்டுரையை மிகமிக எளிய அளவிலேனும் புரிந்துகொண்டது அல்ல. சம்பந்தமே இல்லாத கருத்துக்கள். எதையாவது சொல்லிவைப்போமே என்பதுபோலச் சொல்லப்பட்டவை
ஆனால் அதைச் சொல்பவர்களின் தன்னம்பிக்கை அபாரம். ‘எழுத்தாளர்கள் இனியாவது கருத்தில்கொள்ளவேண்டும், செய்வார்களா?’ என எந்த மூக்கரையனும் சொல்லும் சூழல் இங்கெ உள்ளது. துன்பம்தான்.
சிலசமயங்களிலேனும் இங்கே கருத்துச்செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதே வீணோ என எண்ணவைப்பவை தி ஹிண்டு, தினமலர் போன்றவை வெளியிடும் பின்னூட்டங்கள். ஆனால் இவ்வாறு எழுதுபவர்கள் தங்களை எங்காவது ஏற்கனவே பொருத்திக்கொண்டிருக்கும் மொண்ணைகள். புதியவாசகன் எங்கோ மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொள்ளும்போது ஒரு நம்பிக்கை வருகிறது.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   
   
   
   
   
   
   
  

