Jeyamohan's Blog, page 1745
August 9, 2016
இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்
ஜெ,
உங்களுக்கு விருது அளிக்கப்பட்ட கோவை சந்திப்பில் இசை, ‘என்னுடைய அடுத்த கவிதை தொகுப்பை நீங்கள்தான் வெளியிடப் போகிறீர்கள் மணி’ என்று சொன்னார். முதலில் விளையாட்டாக சொல்கிறார் என்று எண்ணி இருந்தேன். சில நாட்களுக்கு முன் அழைத்து மீண்டும் அதையே சொன்ன போது குழப்பமாக இருந்தது. ஆள்மாறாட்டக் கதையில் நுழைந்தது போலவே அரங்கில் உட்கார்ந்திருந்தேன். கூட்டத்தை பார்த்தால் பேச வராது, கவிதைக்கும் எனக்கும் எந்த பந்தமுமில்லை என்றெல்லாம் சொல்லியும் செவிமெடுக்க மறுத்து விட்டார். ஆகவே இதை எழுதி வைத்து பேசினேன். இப்பொழுதும் கூட கூச்சமாகவே இருக்கிறது. இதை உங்களுக்கு அனுப்பி வைப்பது கூட சற்று அதிகப்பிரசங்கித்தனம்தான்.
இசையுடனும், கே. என், செந்திலுடனும் சற்று நெருங்கி உரையாட கிடைத்த பொழுது நன்றாக இருந்தது. இசை தன்னுடைய கவி மொழியை எப்படி வந்து சேர்ந்தார் என்றும் அதிலுள்ள தடுமாற்றங்கள் மற்றும் தயக்கங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். முக்கியமான கவிஞர் என்ற கனமே இல்லாமல் அவ்வளவு இலகுவாக இருந்தார். அவரிடமும் கே.என். செந்திலிடமும் இன்னமும் கேட்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்று இருந்தது. ஓரிரு நாட்கள் அவர்களுடன் செலவிட கிடைத்தால் நன்றாக இருக்கும்.
முதல் நாள் விஜய ராகவன், கிருஷ்ணன் மற்றும் ஈஸ்வர மூர்த்தியுடன் இசையின் கவிதைகள் குறித்து பேசிய மாலை நடை இசையின் கவிதையை இன்னும் அணுக்கமாக புரிந்து கொள்ள உதவியது. இரண்டு நாட்கள் நீங்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பேச வந்திருக்காது.
7 X 24 கவிஞனின் கவிதைகள்
நண்பர்களுக்கு வணக்கம்.
தமிழின் முதன்மையான இளங்கவிஞர் ஒருவரின் நூல், தமிழின் முக்கியமான பதிப்பகமான காலச்சுவடின் அரங்கில் வெளியிடப்படும் பொழுது, கவிதை குறித்து பேச என்னை அழைத்த காரணம் இப்பொழுதும் விளங்கவில்லை. இசையின் தனிப்பட்ட அன்பின் காரணமாக அழைத்ததாகவே புரிந்து கொள்கிறேன். இது எனக்கு பெரிய கௌரவம். அதற்கு இசைக்கு எனது நன்றிகள்.
நீங்கள் பேசவும் வேண்டும் என்ற பொழுது இன்னும் குழப்பமானது. சரி, நான் பேசி எல்லாம் தமிழ்க் கவிதைக்கு ஏதும் நிகழ்ந்து விடும் அளவுக்கு தமிழின் கவிதை பலவீனமான நிலையில் இல்லை என்பதால் இங்கே இரண்டு விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன். ஓன்று கவிதை வாசகனாக இசையின் கவிதை குறித்த எனது பார்வை. இரண்டாவதாக ஒரு கலை ரசிகனாக, இசையின் கவிதை கால் ஊன்றி நிற்கும் தரிசனமும் அதன் வரலாற்று பின்புலமும் குறித்த என் பார்வை.
*
இது என்னுடைய முதல் உரை. இங்கே ஜெயமோகனை எண்ணிக் கொள்கிறேன். இந்த அரங்கில் அவர் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். அவர் நடத்திய ஏற்காடு கவிதை முகாமில்தான் இசையின் கவிதையை, நண்பர் சாம்ராஜ் வழியாக அறிய நேரிட்டது. முதல் வாசிப்பில் அது கவிதையைப் போலவே தெரியவில்லை. கவிதை குறித்து நமக்கு சில அடையாளங்கள் இருக்கின்றன. அது எதுவுமற்ற ஓன்று குறுக்கிடும்பொழுது நாம் அதன் தலைக்கு மேலே எட்டி எட்டி பார்த்து அதற்கும் பின்னால் எங்கோ அதை தேடிக் கொண்டிருக்கின்றோம். பின்பு சட்டென்று அடையாளம் கண்டு கொண்ட பின்பு, சரிதானே, வேறு எப்படி இருந்திருக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் எண்ணிக் கொள்கிறோம். ஒரு குட்டையான கவிதை வருமிடத்தில் உயரமான ஒன்றையோ, கட்டையான குரலில் பேசும் கவிதையிடம் கீச்சு குரலில் பேசும் கவிதையையோ எதிர்பார்க்கும் முன்முடிவு கவிதை வாசகனுக்கு எப்படி வந்தது?
நவீன தமிழ் கவிதை அது வரை சென்று சேர்ந்த இடத்தை வைத்து நாம் சில முடிவுகளை அடைகிறோம். கவிதை தீவிரமானது, தனிமையானது, அகவயமானது, ஆன்மீகமானது என. மேலாக இவை அனைத்தையும் அது எந்த மொழியில் வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றி கூட நமக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது வரை சொல்லப்பட்டு வந்த மொழியிலிருந்து விலக்கி புதிய, வழங்கு மொழியின் பாவனையை கையாளும்பொழுது சமவெளிகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்த, இருண்ட அறைகளின் தனித்த நிழல்களுக்கு நடுவே நடுங்கிக் கொண்டிருந்த நவீனக் கவிதையை, கீழே இழுத்து வந்து, இருகூரின் ரயில் நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து, மாநகர பேருந்து நெரிசலில் பயணிக்க வைத்து, டீக்கடையில் நிறுத்தி வைத்து பேச வைக்கிற பொழுது, சற்று திடுக்கிடுகிறது நமக்கு. சகஜமான பின்பு உக்கடத்தில் வைத்து நம்மிடம் கைகுலுக்கும் கவிதை போல நெருக்கமானது எதுவும் இல்லை.
இசைக்கு முன்னான தமிழின் நவீன கவிதை ஒரு தனித்த மொழியையும், கவிதைக்கென்றேயான சில பேசு பொருட்களையும் கொண்டிருந்தது. முக்கியமான தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும் ஓரளவுக்கு இப்படி வகுத்து விடலாம். ஆத்மாநாமில் அலைக்கழிப்பு, பசுவய்யாவில் துடிப்பு, தேவதேவனின் ஆழ்நிலை, பிரமிளின் உக்கிரம், ஞானக்கூத்தனின் அங்கதம், விக்ரமாதித்யனின் பெருமூச்சு, சுகுமாரனின் கண்ணீர் என்று. இந்த தரிசனங்கள் அனைத்துமே நம்முடைய வாழ்வில் குறுக்கிடும் சில தருணங்கள் உண்டு. இந்த அனுபவத்தைக் கொண்டே நாம் அந்தக் கவிதைகளை புரிந்து கொள்கிறோம். இந்த அனுபவத்தையே கவிதைக்கான அடையாளமாக மாற்றி வைத்துக் கொள்கிறோம். அந்த அடையாளத்தைக் கொண்டே புதிய கவிதைகளை கண்டு கொள்ள முயற்சிக்கிறோம். அதே நேரம், இந்த தரிசனங்களின் விளிம்புக்கு அப்பால், வாழ்வில் இருக்கும் மற்ற அனுபவங்கள் குறித்து நாம் எதையேனும் தேடினால் அங்கே விடைகள் ஏதுமில்லை.
ரிமோட் கண்ட்ரோல்களுக்கு முந்தைய கால கட்டத்தில், தேவதேவனுக்கு மனைவியோடு சண்டை வந்தால் கோபத்தை எதில் காட்டுவார்? பசுவய்யாவுக்கு BSA சைக்கிளில் சென்று லேடிபார்ட் சைக்கிளை துரத்துவது பற்றி ஏதும் கனவுகள் இருந்ததா? மயிலாப்பூரின் குளத்தில் உறு மீனுக்காக காத்திருக்கும் கொக்கிடம் சொல்ல ஞானக்கூத்தனுக்கு ஏதாவது இருந்ததா? பிரமிளுக்கு லூஸ் ஹேர் பிடிக்குமா? என்று நமக்கு தெரியவில்லை. அவர்களுடைய கவிதைகள் அவர்களே நமக்கு முன் வைக்கும் தேர்வுகள் மட்டுமே. ஒரு நாளின் சில மணி நேரங்களை, ஒரு வாழ்வின் ஆன்மீகமான சில பகுதிகளை மட்டுமே அவர்கள் நமக்கு முன்வைக்கின்றனர். அந்தவகையில் இசை தமிழின் முதன்மையான 24×7 கவிஞர். பொத்தான்களை கழற்றி விட்டு, உள்ளே நுழைத்த சட்டையை வெளியே எடுத்து விட்டு, இழுத்து வைத்திருந்த தொப்பையை தொங்க விட்டு, பிறகு பேசத் துவங்குவதை போல கவிதையிலிருந்து இருந்து “கவிதையை” கழற்றி வைத்து விட்டு பேச துவங்குபவை. அதனால் தான் நான் முதல் முறை பார்த்த பொழுது கவிதையை அதன் தலைக்கு மேலே தேடிக் கொண்டிருந்திருக்கின்றேன்.
எமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது. ஆனால் ஓட்டு மொத்தமாக இலக்கியத்திற்கே ஓரிரு மணி நேரம் மட்டுமே வாய்த்த வாழ்க்கையில், அந்த சில மணி நேரங்களை நம்பியே நம்முடைய துடிப்பும், அலைக்கழிப்பும், ஆழ்நிலைகளும், உக்கிரங்களும் இன்ன பிறவும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அழுது ஆற்ற முடியாத அந்த கோலத்தைக் கண்டு சிரித்து சிரித்து கழிகின்றது இசையின் எஞ்சிய நேரம். நூறு நூறு வருடங்கள் ஆகியும் தமிழ் கவிஞனுக்கு உப்பு புளி சண்டை முடியவில்லை. கவி மனமோ, உள்ளொளி உள்ளொளி என்று குதிக்காமல் இருப்பதில்லை. மரபிலோ, உறுமீன்களை பற்றிய உபதேசங்களுக்கு ஒன்றும் குறைச்சலுமில்லை. இந்த மூன்று புள்ளிகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளியின் அபத்தமே இசையின் களம். அகமும் புறமும் அழிந்த, பின் நவீனத்துவ தமிழ் கவிதையின், முதன்மையான இளங்கவிஞராக இசையை நான் எண்ணுவது இந்த அம்சத்தினால்தான்.
இரண்டாயிரம் வருடமாக சேமித்து வைத்ததன் இன்றைய மதிப்பை எடை போட்டு சிரிக்கின்றன அவை. இசையின் கவிதைகள், தமிழ் மரபின் அற உணர்ச்சிகளையும், தரிசனங்களையும் பின் தொடர்வதை விட்டு விட்டு, அவற்றின் காதை திருகி மேலே ஏறி டங்காமாரி ஊதாரியாக ஆடக் காரணம் இதுதான். அத்தனை தரிசனங்களை உடைத்து தீர்த்தாலும் ஆகாது அதற்கு. மேலே ஏறி ஆடித் தீர்க்க வேண்டும். கவிஞன் சற்றே களைத்திருக்கும் நேரம், அற உணர்ச்சியும், குற்ற உணர்ச்சியும் கவிஞனின் மீதேறி ஆடுகின்றன. எப்படி இருப்பினும் இரண்டாயிரம் வருடத்து சகவாசம் இல்லையா? அவைகளும்தான் வேறு எங்கும் போகும் கவிஞனை விட்டு விட்டு? இருவருக்கும் மாறி மாறி தழுவி அழவும் வேறு எதுதான் இருக்கிறது? அதனால்தான் அவரின் குறையொன்றுமில்லை அடிக்குரலில் தேம்புகிறது, அதே நேரம் ஆட்டத்திற்கு நடுவே சுந்தர மூர்த்தியின் சந்தோஷத்திற்கு காரணம் கேட்டால் அவரெங்கு போவார் எம்மானே என்று தலையை சொறிகிறது.
எந்தக் கலையும் அதன் உச்சத்தை அடைந்த பிறகு வரும் காலம் என்பது அது வரையிலான அதன் ஓட்டத்தை நிறுத்தி, தான் ஓடி வந்த தூரத்தை திரும்பி பார்க்கும் காலம். இழந்ததை, அடைந்ததை கணக்கிட்டு தன்னைத் தானே வருத்திக் கொள்ளவும், சிரித்துக் கொள்ளவுமான காலம். அந்த வகையில் இசையின் சிரிப்பு நவீன தமிழ்ச்சூழலின், தமிழ்க் கவிதையின் மீதான சிரிப்பு. இசையின் முன்னோடியான ஞானக்கூத்தனிடம் இருக்கும் கூரிய அங்கதம் சற்று அவநம்பிக்கை கொண்டது, விரக்தி கொண்டது. ஓட்டம் அதன் உச்சத்தில் இருக்கும் பொழுதே அதன் போக்கை வெளியிலிருந்து பார்க்கும் ஒற்றை செங்கலின் சிரிப்பு. இசையின் காலம், அதற்கு பிறகு தமிழ்ச்சமூகம் இன்னும் தூரம் கடந்து ஓட்டம் நின்று மூச்சிளைக்க திரும்பி பார்க்கும் காலம். இங்கே ஒற்றைக்கல் சூளைக்கல் அனைத்தும் ஒன்றுதானா என்று இன்னமும் தீர்மானிக்க முடியாத காலம். எனவே இசையின் இந்த சிரிப்பு தன்னையும் உள்ளடக்கிக் கொண்டது, எனவே கசப்பில் வருவது இல்லை, நெகிழ்வில் வருவது. சமரசம் செய்து கொள்ள வேண்டி கொக்கிடம் கெஞ்சுவது. கடவுள் என்று முன்னாடியும் கிடவுள் என்று பின்னாடியும் அல்லாடுவது.
1970 களில் லியோடார்ட், தனது “பின் நவீனத்துவ சூழல்” என்ற நூலில், பெருங்கதையாடல்கள் அனைத்தும் தரிசனங்களை முன் வைப்பதன் வழியாக, வாழ்க்கையை முழு முற்றாக வகுத்து விட முயல்கின்றன, மேலும் பெரிய தரிசனங்களை நிறுவும் பொருட்டு அவை கேட்கும் பெரும் பலிகளை தர இனியும் மானுடத்தால் ஆகாது என்ற அடிப்படையில் பெருங்கதையாடல்களை மறுத்தார். நம்முடைய அறிதலுக்குட்பட்ட எல்லையில் நின்று நம் அவதானிப்புகளை முன் வைக்க சரியான வடிவமாக குறுஞ்சித்தரிப்புகளையே சிறந்த வடிவமாக முன் வைக்கிறார். லியோடார்ட் முன் வைத்த இந்த குறுஞ்சித்தரிப்புகள் அனைத்தும் ஒரு கண நேரத்தில் ஒன்றை ஓன்று வெட்டிக்கொள்ளும் தருணங்களும், அதன் நிகழ்ச்சிகளும், நம்முடைய இருப்பும் நமக்கு எவ்வளவை பார்க்க தருகின்றனவோ அவ்வளவை மட்டும் முன் வைப்பவை. ஒரு முடிச்சை விரித்தெடுத்து விரித்தெடுத்து பிரபஞ்ச அளவில் ஒரு வலையை பின்னுவதற்கு நேர் எதிர் செயல்பாடு. என் கண்ணுக்கு தென்படும் இந்த முடிச்சு பெரிய வலையின் பகுதியா என்று அத்தனை உறுதியாக என்னால் எப்படி சொல்ல முடியும்? எனக்கு தெரிந்த தொலைவை மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்பதன் வெளிப்பாடு.
சரி, இத்தனை ஆயிரம் வருடங்களாக இந்த பெரிய பிரபஞ்ச வலையை பின்னியவர்கள் எல்லோரும் அப்படி முழுமையாக பார்த்து, உறுதியாக தெரிந்தவற்றை மட்டுமே வைத்து அதை பிண்ணினார்களா என்றால், இல்லை. நம்முடைய எல்லா வெளிப்பாடுகளும் எப்பொழுதும் எதோ ஒரு புள்ளியில் நின்று விடுபவை. அதற்கு மேலே வெகு தொலைவில்தான் நம்முடைய அனைத்து அனுபவங்களும் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கடைசி படியில் நின்று தாவாமல், ஒரு முடிச்சை கொண்டு பெரிய ஒன்றை பின்னிக் கொள்ளாமல் எந்த அறிதலும் சாத்தியமில்லை. அறிய முடியாத ஒன்றின் கீழ் நாம் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்? ஆகவேதான் நம் அறிதலுக்கெட்டிய தொலைவில் நின்று கற்பனையின் வழியாக பெரிய ஒன்றை அளக்கவும், அறியவும் முயலுவதே கலையாக இருந்து வந்திருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால்தான் கலை மனிதனுக்கு ஆதூரமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. கவிதை மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும் என்று ரிச்ர்ட்ஸ் சொன்னது அதனால்தான். அந்த வகையில், இசையின் இந்த கவிதைகள் நேர் எதிராக, பதற்றத்தையே உருவாக்குகின்றன.
இந்த சிரிப்பு மிதக்கும் கவிதைகளில் எங்கிருந்து அந்த பதற்றம் வருகிறது? அதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். அவசரத்திற்கு நாம் நாடும் நண்பன், சட்டைப் பையின் உள்புறத்தை வெளியே எடுத்துக் காட்டி சிரிக்கும் சிரிப்பு, இந்தக் கவிதைகளில் காணக் கிடைப்பது. அவன் இல்லை என்று கூட சொல்லவில்லை. அதுதான் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் நம்மை தவிக்க வைக்கின்றன.
ஒரே ஆறுதல் கவிஞனின் சிரிப்புதான். அதுவும் கூட, இதுவரை நிறுவப்பட்டிருக்கும் அனைத்தும் இனி நகைப்புக்கு உள்ளாவது மட்டுமே நம்முடைய விதியா என்று தவிக்க வைக்கின்றன. எதிர் கேள்வி கேட்டு, எதிர் வினை மட்டுமே புரிந்து எப்படி இந்த வாழ்க்கையை வாழ்வது என்று திகைக்க வைக்கின்றன. வேறு வழியில்லை, நாம் வாழ்வது இலட்சியவாத மரங்கள் சரிந்த பின்பு, வெளியேறிய குருவிகள் இன்னும் தவித்தலையும் காலம். இலட்சியவாதம் இல்லாத காலம் மனித வரலாற்றில் இருந்ததே இல்லை, இது ஒரு சிறிய இடைவெளிதான் என்கிறார் ஜெயமோகன். அது வரை இந்த குருவிகள் கிளை தேடி அலையத்தான் வேண்டும் போல.
மொழியின் வழியாக சமூகத்தின் நாடியை பிடித்து, விட்டத்தை பார்த்து எதையோ கணித்துக் கொண்டிருப்பவன் கவிஞன். நாம் சற்று தள்ளி நின்று அவன் முகத்தின் வழியாக நாடியைக் கணிக்க முயல்கிறோம். ஒன்றும் புரியாத பொழுது அவனிடம், என்ன ஆச்சு டாக்டர், எல்லாம் சரி ஆகிடுமா டாக்டர் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். டாக்டர் கண்ணாடியைக் கழட்டி விட்டு மேலே பார்த்து என்ன சொல்வார் என்று நமக்கு தெரியும். நமக்கு தெரிய வேண்டியது அந்த இருபத்து நாலு மணி நேரத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று மட்டுமே. அதை ஒரு நாளின் இரண்டு மணி நேர கவிஞனிடம் கேட்டு ஏதும் ஆகப்போவதில்லை. 24×7 கவிஞனிடம்தான் கேட்க வேண்டும். இங்கே இசையிடம் நான் கேட்க விரும்பும் கேள்வியும் அதுவே.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குஜராத் தலித் எழுச்சி- கடிதம்
அன்பின் ஜெ..
”நானறிந்தவரை பாரதிய ஜனதாவிலேயே இந்தக் குறுங்குழுக்களின் வெறுப்பரசியலை நிராகரிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் இவர்களை ‘அடித்தளம்’ என அவர்களில் பலர் எண்ணுகிறார்கள். தேர்தலரசியலில் இவர்களை நம்பியே செயல்படவேண்டுமென நம்புகிறார்கள்”
நீங்கள் பலர் என நினைக்கிறீர்கள். எனக்கு அது அனைவரும் எனத் தோன்றுகிறது
ஆனால், பாஜாபா சமீப காலத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்ததாகத் தோன்றுகிறது. முதலாவதாக, தாதரில் செயல்ப்பட்டு வந்த அம்பேத்கர் பவனை இடித்தது. அதன் பின், மும்பையில் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின் எதிர்க்குரல், பெரும்பாலான ஊடகங்களில் வரவில்லை எனினும், அரசுக்கு அதன் செய்தி சென்றடைந்தது. முதல்வர் சட்டசபையில், செய்தது தவறு என மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
இரண்டாவது குஜராத்தில் நடந்த சம்பவம். அதன் பின்னரான அம்மக்களின் எதிர்ப்புக் கூட்டங்கள்.
இவையிரண்டுமே, அளவில் மிகப் பெரிய கூட்டங்களல்ல. ஆனால், சமீபத்தில் பாஜாபாவுக்கான வாக்கு வங்கியாகச் செயல்படத் துவங்கிய மக்களின் எதிர்ப்பு. இன்று செயல்படாவிட்டால், அது குஜ்ராத் தேர்தலிலேயே பிரதிபலிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் இன்று கண்டிக்கப்பட்டிருக்கிறது என்பது எனது கணிப்பு.
தேர்தலில், வாக்குவங்கி அரசியல் என்னும் வகையில், பிரதமரின் எதிர்வினை வந்திருக்கிறது. அது பிரச்சினையில்லை. ஆனால், எனக்கு, அவரின் இன்னொரு வாக்கியம் தான் பிரச்சினையாகத் தோன்றுகிறது. பசுவைக் காக்கவேண்டுமெனில், அவற்றைப் ப்ளாஸ்டிக் உண்ணாமல் காக்க வேண்டும். அதுதான் உண்மையான பசுபக்தி என்கிறார்.
எனக்கு இந்த பசுபக்தியின் அடிப்படைதான் கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல் இடிக்கிறது.
உங்கள் பழைய கட்டுரையில், இந்தப் பசு மாமிச அரசியலைப் பேசியிருந்தீர்கள். அடிப்படையில், பசு ஒரு பொருளாதார சக்தியாக இருந்த காலத்தில் துவங்கிய இந்தப் பக்தி, இன்றைய நிதர்சனத்துக்கு எதிராக இருக்கிறது. பசு வதை, இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெரும் அள்வுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் கூட, வேளாண்மைக்கு மிக முக்கியமான தேவையாக இருந்தன காளைகளும் பசுவும். அரசியல் சட்டமும், பால் தரும், ஏர் இழுக்கும் மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், அதற்கு முந்தய வரியில், அரசு, வேளாண்மையையும், கால்நடைப் பராமரிப்பையும் அறிவியல் பூர்வமான வழியில் நவீனப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையைச் சொல்கிறது.
ஆனால், வெண்மைப் புரட்சியின் அடிப்படையை நோக்கினால், பசுவை விட எருமைகள் தான் இந்தப் பால்புரட்சிக்கு அதிகம் பங்களித்திருக்கின்றன. ஒரு நகைமுரணாக, இன்று பசுபக்தி பொங்கி வழியும் மராத்தியம் துவங்கி, வட இந்திய மாநிலங்களில்தாம் எருமைகளின் பங்களிப்பு அதிகம். பசும்பாலை விட எருமைப்பால் ஆரோக்கியமானது என இந்திய பால் அறிவியல் மையங்கள் சொல்கின்றன. எனில், பசுபக்தி லாஜிக்கில், எருமைகள்தாம் காப்பாற்றப்பட வேண்டும்.
வேளாண்மையின் இன்றைய சூழலில், மாடுகள் பாலுக்காக மட்டுமே வைத்துக் கொள்ளப்படுகின்றன. பாலுக்காக, மேம்படுத்தப்படும் இனங்களின் காளைகளுக்குத் திமில் கிடையாது. இருந்தாலும், அவற்றை வைத்துப் பராமரிப்பதை விட, வருடம் 3-4 முறை ட்ராக்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வது பொருளாதார ரீதியாக சரியான வழி.
எனில், இந்தப் பசுமாடுகளுக்குப் பிறக்கும் காளைக்கன்றுகளை என்ன செய்வது? வயதாகி இறக்கும் பசுக்களை என்ன செய்வது? 120 கோடி மக்கள் தொகையில், இன்று இறந்த உடலை எரிக்கவே இடமும் நேரமும் இல்லை. மாடுகளை என்ன செய்வது.
கோமியமும், சாணியும் இந்து பக்திமான்களுக்கு எப்படி முக்கியமோ, அதை விட முக்கியம், இந்தப் பசுக்களை வளர்ப்பது, பராமரிப்பது மற்றும் வயதான காலத்தில், அதை எப்படி ஒரு பொருளாதார ரீதியான லாபமாக மாற்றுவது என்னும் பிரச்சினை. அதைப் பொருளாதார ரீதியாக லாபமாகப் பார்க்கும் வழியே sustainable ஆன வழி. ஆனால், அவற்றைக் கொல்ல விட மாட்டோம் என, ஒரு அறிவியலுக்கு / நிதர்சன வாழ்க்கைக்கு எதிரான ஒரு போக்கை இன்றைய அரசியல் தலைமை ஊக்குவிக்கிறது.
வருடம் ஒரு முறை பசுவையும் எருமையையும் கடவுளாக வணங்கும் உழவன் தான், அதே பசுவை, கொல்லவும் அனுப்புகிறான்.பசுவும் எருமையும், மாமிசமாகவும், எலும்பு மஜ்ஜையாகவும் (காப்ஸ்யூல் மாத்திரையின் காப்ஸ்யூல்கள் எலும்பு மஜ்ஜையினால் செய்யப்பட்டவை), தோலாகவும் மாறி ஒரு சூழியல் ரீதியாக மிகக் குறைந்த பாதிப்பில் பங்கெடுக்கின்றன.
இதையும் தாண்டி, மாடுகளைக் கொலையில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில், செய்யக்கூடிய வழி ஒன்றுள்ளது. மாடுகளை வேளாண்மைக்காக வளர்ப்பதைத் தடை செய்து விடலாம். இன்று கோவிலில் யானை வைத்திருப்பது போன்ற ஒரு அறிவியக்கமாக அதை மாற்றிவிடலாம். அங்கும் ஒரு சிறு பிரச்சினை உள்ளது – அந்த விலங்கு வயதாகி மரித்தால் என்ன செய்வது.. அதற்கும் மின்மயானங்களை ஏற்படுத்த வேண்டியதுதான்.
பிரச்சினை, இந்த உதிரிக்குழுக்களில்லை. நவீனப்படுத்தப் படாத, பழமை வாத சிந்தனையும் அரசியல் தலைமையும் தான். உங்கள் பாஷையில் ஸ்ருதி Vs ஸ்மிருதி.
பாலா
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
[ 10 ]
புலர்காலைக்கு முன்னரே காலனுடன் நகுலன் வந்து தருமனை எழுப்பினான். மரவுரித்தூளியில் துயின்றுகொண்டிருந்த தருமன் எழுந்து இருளுக்குள் கையில் சிறு நெய்யகல்சுடருடன் நின்றிருந்த இருவரையும் நோக்கியதுமே நெஞ்சு பெருமுரசென அறையப்பட்டார். “என்ன ஆயிற்று?” என்றார். “விதுரர் இருக்குமிடம் தெரிந்துவிட்டது” என்று நகுலன் சொன்னதும் உள்ளம் அலை பின்வாங்கி குளிர்ந்து உறைந்தது. ஒரு கணத்திற்குள் தன்னுள் உறைந்துகிடந்த அத்தனை அச்சங்களையும் பேருருக்கொண்டு பார்த்துவிட்டார்.
“எங்கிருக்கிறார்?” என்றார் சீரான குரலில். எழுந்து உடையை சீரமைத்தபடி “உண்ணாநோன்பிருக்கிறாரா?” என்று நகுலனை நோக்காமல் கேட்டார். தன் உள்ளத்தை இருளிலும் அவன் அறிந்துவிடக்கூடும். முதலிருவரும் தங்களுக்கென உலகு கொண்டவர்கள். மாத்ரேயர்கள் அவர் நிழல்கள். அவர் விழிகளைப்போல அவர்கள் அறிந்த பிறிதொன்றில்லை. “தைத்ரியக் காட்டில் இருக்கிறார். உண்ணாநோன்பு கொள்ளவில்லை. ஆனால் எவரிடமும் சொல்லாடாமல் தனிமையில் இருக்கிறார்” என்றான் நகுலன்.
ஒருகணத்தில் உள்ளம் தன் தெரிவுகளை வரிசைப்படுத்தியதை தருமன் நினைத்துக்கொண்டார். முதன்மையென எழுந்த அச்சம் மைந்தனைப் பற்றியதுதான். அப்படியென்றால் இப்புவியில் அவனே தனக்கு முதன்மையானவனா? வெறும் தந்தை அன்றி பிறிதில்லையா தான்? தந்தையென்று ஆனபின் தந்தைமட்டுமே என்றன்றி பிறிதொன்றாக ஆனவர் எவரேனும் இப்புவியில் இருந்துள்ளனரா? அப்போது மிக அணுக்கமாக திருதராஷ்டிரரை உணரமுடியுமென தோன்றியது. ஆயிரம் மைந்தரின் தந்தை. கணுதோறும் காய்த்த மரம்.
“நாம் உடனே கிளம்பியாகவேண்டும்” என்று காலன் சொன்னான். “தைத்ரியக்காடு சற்று அப்பால் உள்ளது. செல்லும் வழி எனக்குத் தெரியும்.” தருமன் “ஆம், கிளம்புவோம். இளையோனே, மந்தனுக்கு செய்தி சொல்லவேண்டும். அவன் காட்டுக்குள் குரங்குகளுடன் இருப்பான் இந்நேரம்” என்றார். “குறுமுழவொன்றை மயில்நடைத்தாளத்தில் வாசிக்கச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் மூத்தவர். அவரை எளிதில் அழைத்துவிடலாம்” என்றான் நகுலன். “பிறர் ஒருநாழிகைக்குள் சித்தமாகட்டும். நான் சென்று திவாகரரை வணங்கி விடைபெற்று வருகிறேன். கருக்கிருட்டு மயங்குவதற்குள் கிளம்பிவிடுவோம்” என்றார் தருமன்.
நீராடி உடைமாற்றி அவர் மையக்குடிலுக்குச் சென்றபோது திவாகரர் தன் அணுக்க மாணவர்கள் ஐவருக்கு ஆரண்யகத்தை கற்பித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரையிருளில் முகம் மட்டும் அகலொளியில் மின்ன அமர்ந்திருந்தனர். அவர் புலித்தோலிட்ட மணைமேல் கண்களை மூடி அமர்ந்து அவர்கள் ஐவருக்கும் மட்டுமே கேட்கும்படி உரையிட்டுக்கொண்டிருந்தார். அரைநாழிகையில் அந்தக் கற்பு முடிவதுவரை தருமன் வெளியே காத்து நின்றிருந்தார். உள்ளே மெல்லிய மணியோசை எழுந்ததும் ஒரு மாணவன் தருமனின் வருகையை சென்று அறிவித்தான். திவாகரர் அவரை உள்ளே அழைத்ததும் சென்று கைகூப்பியபடி அமர்ந்தார்.
“ஆசிரியரே, இந்த குருகுலத்தில் ஒருமாதகாலம் தங்கி ஐதரேய விழுப்பொருளை அறிந்து தெளிய இயன்றது என் நல்லூழ்” என்றார் தருமன். “மேலும் இருமாதம் இங்கு தங்கவேண்டுமென எண்ணியிருந்தோம். உடனே செல்லவேண்டிய அரசப்பணி வந்துள்ளது. சொல்கொண்டு கிளம்பலாம் என்று வந்தேன்.” திவாகரர் கை தூக்கி அவர் நெற்றியைத் தொட்டு வாழ்த்தினார். “அறிவுறுக! அறிவே வெற்றியென்றும் ஆகுக! நிறைவுறுக!” தருமன் அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினார்.
“நேற்றிரவு இங்கே சொல்லெடுத்த இருவரும் இன்று கிளம்புகின்றனர்” என்றார் திவாகரர். “பாவகனும் பவமானனும் என் சொல்லமர்வு தொடங்குவதற்கு முன்னரே வந்து வாழ்த்துபெற்றுச் சென்றனர். அவர்களுடன் நீங்களும் செல்வது ஒரு நற்குறி என்றுபடுகிறது. ஏனென்றால் விரிவது எதுவும் வளர்ச்சியே.” தருமன் “அவர்களுடன் நேற்று இரவு நெடுநேரம் சொல்லாடிக்கொண்டிருந்தேன். அவர்களின் ஐயங்கள் இங்கே கற்றவற்றால் தீட்டப்பட்டு கூர்கொண்டிருக்கின்றன. அவை இலக்கை அடையட்டுமென வாழ்த்தினேன்” என்றார்.
“ஆம், நான் சொன்னதும் அதுவே” என்றார் திவாகரர். “என் ஆசிரியர் மகாபிங்கலர் இங்கு அமர்ந்திருந்த காலத்தில் ஒரு மாணவர் விடைபெற்றுச் செல்வதென்பது ஆண்டுகளுக்கொரு முறை நிகழ்வதாக இருந்தது. இன்றோ அது கொத்துக்கொத்தாக வாரந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இலையுதிர்காலத்துப் புயல்காற்று என்று இதை இங்கு ஓர் ஆசிரியர் சொன்னார். புயல்தான். காடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. அத்தனை குருகுலங்களிலும் நாள்தோறும் மாணவர் வந்துசேர்கிறார்கள், விலகிச்செல்கிறார்கள்.” தருமன் “அது நன்று. அவர்களின் தேடல் கூர்கொள்கிறது” என்றார். “ஆம், அவர்கள் எதையாவது கண்டடைந்தால் நன்று” என்றார் திவாகரர்.
“சொல் ஒன்றே. அது அந்தணனாக அனல் ஓம்பியது. ஷத்ரியனாக வாள் ஏந்தியது. வைசியனாக துலா பற்றியது. சூத்திரனாக மேழி பிடித்தது. நான்கு திசைகளிலும் வேலியென்றாகி இவ்விளைநிலத்தைக் காத்தவை அவை. இன்று விளைநிலங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. வேலி விரிய முடியவில்லை” என்றார் திவாகரர். “ஆனால் அதற்கு இக்கல்விநிலைகள் என்ன செய்யமுடியும்? இவை தேன்கூடுகள். தேனீ பல்லாயிரமாண்டுகாலம் பயின்றவகையிலேயே காட்டுத்தேனை தன் தட்டுகளில் நிரப்பமுடியும். எடுத்துச்செல்பவர்கள் ஏதேனும் செய்யலாம்.”
“பிறிதொரு கோணத்தில் இது காட்டுக்குள் அமைந்த சுனையென்றிருந்தது. இதன் நான்கு ஊற்றுக்கள் இதை நிறைத்தன. வானத்தை அள்ளி தன்னில் விரித்து குளிர்விழி எனத் திகழ்ந்தது. இன்று பெருமழை பெய்து புதியகாட்டாறுகள் எழுந்துள்ளன. மலரும் குப்பையும் மண்ணும் சேறுமென புதுவெள்ளம் வந்து இதை நிறைக்கிறது. கொந்தளித்து நிறைந்து கவிகிறது. இதன் ஒருகணம் பிறிதொன்றுபோல் இல்லை. அரசே, வேதமெய்யறிவு இன்று பல்லாயிரம் குலங்களின் தொல்லறிவுகளால் அலைக்கழிக்கப்படுகிறது. உலகமெங்குமிருந்து சிறகடித்து வந்து நம் துறைசேரும் கலங்களில் வந்திறங்குபவை பொன் மட்டுமல்ல, புதிய எண்ணங்களும்தான்.”
“என்ன நிகழுமென என்னால் கணிக்கக் கூடவில்லை. வரவிருக்கும் நிலநடுக்கத்தை குழியெலி அறிவதுபோல இங்கு இருண்ட காட்டுக்குள் அமர்ந்து நான் இதை உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார் திவாகரர். “வேதச்சொல்லில் இருந்து இங்கு அறமும் நெறியும் பிறந்தது. இன்று அதை மறுக்கும் குரல்கள் எழுந்து சூழ்கின்றன. அவியிடுவதனால் என்ன பயன் என்கிறார்கள். அனலோம்புவதனால் அறம் வளருமா என்கிறார்கள். அழியாத சொல் என்றால் அது அனைத்துயிருக்கும் பொதுவே என்கிறார்கள். ஒரு வினாவுக்கு விடைதேடுவதற்குள் பறவைக்கூட்டங்களென ஓசையிட்டபடி எழுந்து சூழ்கின்றன பலநூறு நாவுகள்.”
“அரசே, இவையனைத்தும் தொடங்கியது எங்கிருந்து என நான் அறிவேன்” என்று திவாகரர் சொன்னார். “அன்று நான் இளையோன். என் ஆசிரியருக்கு முதன்மை மாணவன். உடலெங்கும் புழுதியுடன் கையில் ஒரு இசைமூங்கில் மட்டும் கொண்டு இங்கு வந்தவன் யாதவகுலத்தவன். குழலில் மயிற்பீலி சூடியிருந்தான். அது தன் குடியடையாளம் என்றான். கரியவன், பெயரும் கிருஷ்ணனே. இன்று உங்களுக்கு அணுக்கமானவன். நாளை பாரதவர்ஷத்திலொரு பெரும்போர் சூழுமென்றால் அதன் நடுவே நின்று ஆட்டிவைக்கப்போகிறவன் அவன். அக்குருதிப்பழி முழுக்க அவனையே சேருமென்பதில் எனக்கு ஐயமில்லை.”
“இளைய யாதவர் நட்பும் வழித்துணையும் இறைவடிவுமென எங்களுக்கு அருள்பவர்” என்றார் தருமன். திவாகரர் “ஆம், அதை அறிவேன்” என்றார். “இங்கு வந்தடைந்த அவனுக்கு விடாய்நீர் அளித்து வரவேற்பு சொன்னவன் நான். அவன் நீராட சுனைமுகம் கொண்டுசென்றேன். உண்பதற்கு அமுதை நானே கொண்டுசென்றளித்தேன். அவன் எரிந்துகொண்டிருந்தான் என்று தோன்றியது. அனலருகே நின்றிருப்பவன் என உள்ளத்தால் உணர்ந்தேன். அன்று மாலை சொல்லவை கூடியபோது என் ஆசிரியர் மகாபிங்கலர் அவனை நோக்கியே பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அங்கிருந்தவர் அனைவரும் அவன் ஒருவனையே உடலே விழியாக நோக்கிக்கொண்டிருந்தனர்.”
ஆறுமாதகாலம் அவன் எங்களுடன் இருந்தான். இங்குளோர் ஓராண்டில் கற்பதை அவன் ஒருவாரத்தில் கற்றான். பிறிதெவரிடமும் ஒரு சொல்லும் அவன் பரிமாறிக்கொண்டதில்லை. வேதமெய் பேசிய அவைகளில் அன்றி அவனை எங்கும் பார்த்ததுமில்லை. அவன் இங்கே ஆபுரப்போனாக தன்னை அமைத்துக்கொண்டான். பசுக்களும் கன்றுகளும் அவனைக் கண்டதுமே அறிந்துகொண்டன. சொல்லாமலேயே அவன் விழைந்ததை செய்தன. பகலெல்லாம் அவற்றை காட்டில் மேயவிட்டு மரத்தடியில் அமர்ந்து விழிசொக்கி குழலிசைத்துக்கொண்டிருந்தான். குழல்கேட்கும் தொலைவில் செவிகூர்ந்தபடி அவை மேய்ந்தன. குழல்நின்றதும் வந்து அவனருகே கூடின. அவன் நடந்து மீள்கையில் அந்திக்கருக்கலில் விழிகள் மின்ன உடன் வந்தன.
ஐதரேயமெய்மை அனைத்தையும் அவன் கற்றுத் தேர்ந்தான். பன்னிரண்டாவது ஆரண்யகம் நிறைவுற்று ஆசிரியர் ஆற்றிய உரைக்குப்பின் அவன் எழுந்து உரத்த குரலில் கேட்டான் “ஆசிரியரே, அரசனுக்கு மண்ணில் இறைவனுக்குரிய இடத்தை அளிப்பது எது?” அவன் அதை கேட்பான் என்று நான் முன்னரே உணர்ந்திருந்தேன். மதுராவில் கம்சனின் குழவிக்கொலையையும் தாய்மாமன் நெஞ்சுபிளந்து குருதி அணிந்த மருகனின் மறத்தையும் அறியாதவர் எவரும் அங்கிருக்கவில்லை. “இளையோனே, ஒலிகளில் முதன்மையானது அ என்பதுபோல் உலகியலில் அமைந்த மானுடரில் அரசன். விண்ணுக்கு இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே அரசுக்கு அவன். அதை வகுத்தளிப்பது வேதம். வேதகாவலனை வேதமே காக்கும்” என்றார்.
“அவ்வண்ணமென்றால் என் நகரில் சொல்திருந்தும் முன்னரே வாள்போழ்ந்து வீசப்பட்ட குழவியருக்கு வேதம் பொறுப்பேற்கிறதா? அங்கே விழுந்த அன்னையரின் விழிநீருக்கு வேதமே அடிப்படையா?” என்றான். அவன் உடல் அவைநடுவே நின்று பதறுவதைக் கண்டேன். ஆசிரியர் வாயெடுப்பதற்குள் அவன் கைநீட்டி கூவினான் “ஆம், அதுவே உண்மை. மண்புரக்கும் நெறிகளை அமைத்தது வேதம். மானுடரில் இந்திரர்களை உருவாக்கியது. இன்று பாரதமெங்கும் குருதிப்பழி சுமந்து நின்றிருக்கிறது.”
“மைந்தரைக் கொன்றவனின் அவைநின்று வேதமோத அந்தணருக்கு தயக்கமிருக்கவில்லை. முனிவரே, அவர்களின் கையிலிருந்த கங்கைநீரே அங்கு தந்தையரின் வாள்களை கட்டுண்டு நிற்கச்செய்தது. அன்னையரின் தீச்சொல் எழுந்து அந்நகர் எரிபடாமல் காத்தது. அனைத்து மறத்துக்கும் வேதமே துணை என்றால் அவ்வேதத்தை மிதித்து மேலேறிச்சென்று அறத்தை அடையவேண்டிய காலம் வந்தணைந்துள்ளது” என்று அவன் சொன்னான். அக்குரலை இப்போது கேட்பதுபோல் அறிகிறேன். பலநூறுமுறை அது எனக்குள் நிகழ்ந்துவிட்டது. சில தருணங்களில் சொற்கள் முற்றிலும் பொருளிலிருந்து விடுபட்டு தூய உணர்வுமட்டுமே என்றாகிவிடுகின்றன.
“யாதவனே, ஐம்பருக்களின் கூட்டு இப்புடவி. ஐந்துபுலன்களும் உடன் சேர்ந்து அமைகையில் உடல். ஆன்மா குடிகொள்கையில் மனிதன். இவை இங்ஙனம் கூடியமைவதென்பது இங்கெங்கும் நாம் அறியும் அறியவொண்ணா பெருவிளையாட்டின் ஒரு கணம். எண்ணத் தீராத பெருவிந்தையே மனிதன். ஒருவன் தன் உடலை ஒருகணம் நோக்கினான் என்றால் இவையிணைந்து இப்படி நின்றிருப்பதைக் கண்டு பரம்பொருளே என்று வீரிட்டு கண்ணீர் வடிக்காமலிருக்கமாட்டான்” என்றார் மகாபிங்கலர். “ஆனால் ஒரு பிடி நெருப்பு போதும் மனிதனை கூட்டவிழ்க்க. ஆன்மா விண்புகும். ஐம்புலன்களும் அவற்றுக்குரிய தேவர்களை சென்றடையும். ஐம்பருக்களும் நிலைமீளும். எஞ்சுவது ஏதுமில்லை.”
“வேதத்தின் ஒவ்வொரு ஒலியும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காற்றில் உருத்திரண்டன என்கின்றன பிராமணங்கள். ஒலிகள் கூடிச் சொல்லானது மேலும் ஆயிரமாயிரம் வருடங்களில். அச்சொற்களில் பொருள்சென்றுகூடியது மேலும் பல்லாயிரம் ஆண்டுகளில். இளையோனே, ஒரு சந்தம் உருவாகி வர மானுடம் எத்தனை தவம் செய்திருக்கவேண்டும் என்று அறிவாயா? ஒரு சடங்கு வகுக்கப்பட எத்தனை போர்கள் நிகழ்ந்திருக்குமென உணர்ந்திருக்கிறாயா? ஒரு நெறியை நாம் அனைவரும் ஏற்க எத்தனை விழிநீர் சிந்தப்பட்டிருக்கவேண்டும் என எண்ணிப்பார்! மெல்ல நெகிழ்ந்து வழிவிட்டது மண்ணைப் போர்த்தியிருந்த ஆசுரம். வேதமுளை ஈரிலை விட்டெழுந்தது.”
“இது செங்குருதியும் கண்ணீரும் நீரென விடப்பட்டது. அருந்தவம் வேலியாகி காக்கப்பட்டது. இன்று அமைந்துள்ள இவ்வாழ்க்கை வேதக்கொடை. ஆம், அது பிழைபட்டிருக்கும் தருணங்களுண்டு. வகுக்கப்பட்டு உறுதியாக நிலைநாட்டப்பட்டிருப்பதனாலேயே அது எளிதில் மீறப்பட முடியாததாகிறது. தெளிவாக விளக்கப்பட்டதென்பதனாலேயே அது எண்ணத்தை கட்டுப்படுத்துவதாகிறது. ஆனால் வேதச்சொல் கட்டவிழ்ந்தால் மீள்வது ஆசுரம். விடியலில் விலகிய இருள் எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு இலைக்கு அடியிலும் ஒவ்வொரு கூழாங்கல்லுடனும் அது காத்திருக்கிறது. அதை மறக்காதே” என்றார் மகாபிங்கலர்.
“ஆசிரியரே, ஒங்கி உயர்ந்த கோபுரத்தை அடியில் இருந்து இடிப்பவன் தானுமழிவான் என நானும் அறிவேன். ஆனால் அதை இடிப்பவன் அதை நன்கறிந்த சிற்பி என்றால் அது அவன் கையில் களிப்பாவை. இடிப்பது அதன் கற்களைக் கொண்டு பிறிதொன்றைக் கட்டி எழுப்ப. இங்கு எழுக புதியவேதம்! மேலும் மானுடர் அறிவது. மேலும் அழகியது. மேலும் தெய்வங்கள் குடிகொள்வது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றான். பின்பு அந்த அவையிலிருந்தே இறங்கி வெளியே சென்று இருளுக்குள் மறைந்தான். அவன் ஆசிரியரின் நற்சொல் பெறவில்லை. விடைகொள்ளவுமில்லை.
அவன் சென்றபின் அனைவரும் ஆறுதலுடன் நிலைமீண்டோம். ஆனால் ஒவ்வொருவரும் அக்கணமே மாறிவிட்டிருந்தோம். பிறகொருபோதும் நான் அவனை நினைக்காமல் ஒருநாளை கடத்தியதில்லை. அவன் சொற்கள் ஊடுகலக்காமல் வேதச்சொல் ஆய்ந்ததுமில்லை. என் ஆசிரியரும் அவ்வாறே ஆனார் என நான் அறிந்தேன். அவர் அதன்பின் சொன்னவை அனைத்தும் அங்கு அவன் விட்டுச்சென்ற சொற்களுக்கான மறுமொழியாகவே அமைந்தன. எதிர்நிலைகொண்டு அவர் விலகிவிலகிச் சென்றார்.
ஆனால் அவர் வைகாசிமாதம் வளர்நிலவு நான்காம்நாள் உடல்நீத்து சொல்முழுமை கொள்கையில் அருகே நான் அமர்ந்திருந்தேன். என் கைகளை தன் மெலிந்து நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டார். “இளையோனே, அன்று என் முன் வந்தவன் எவன் என நான் அறியேன். அவன் முகமும் நான் அறிந்திராததே. ஆனால் அவன் குரலை எங்கோ கேட்டிருக்கிறேன் என என் அகம் சொல்லிக்கொண்டே இருந்தது. இப்போதும் அதை வலுவாகவே உணர்கிறேன். அவன் யாரென்றோ அவன் சொற்களின் பொருள் என்னவென்றோ நாம் அறியமுடியாதென்றும் தோன்றுகிறது.”
“மண் அகழ்ந்து மணி எடுப்பது போல வேதத்திலிருந்து அவன் புதியவேதத்தை எடுக்கக்கூடும். முன்னரே வேறு வேதங்களிலிருந்து எழுந்துள்ளதே இவ்வேதம் என நாம் அறிவோம். இங்கு நமக்கிடப்பட்ட பணி இதை சொல்லும் பொருளுமென ஓம்புவது மட்டுமே. அதை நாம் செய்வோம். அருமணிகளுக்குக் காவலென நச்சுநாவுடன் நாகங்கள் அமைவதுபோல இருப்பினும் அதுவே நம் அறம். நான் நிறைவுகொண்டுள்ளேன். பிறிதொருமுறை அவனைப் பார்க்கையில் அவனிடம் இந்நிறைவை நானே உரைப்பேன் என நினைக்கிறேன்” என்றார். அவரால் மூச்சுகொள்ள முடியவில்லை. ஆனால் பேசவிழைந்தார்.
கைகளைக் கூப்பி கண்களை மூடி முதலாசிரியர் மகிதாசர் இயற்றிய இந்திர வாழ்த்தை சொல் சொல்லாக நினைவுகூர்ந்தார். “இளையோனே, பிரம்மம் இந்திரன் எனப் பெயர் கொள்கிறது என்கிறது பாடல். ஏனென்றால் அவன் காணப்படுபவன். இங்கே இதோ இவ்வாறென்று வந்து நிற்பவன். தேவர்கள் மறைந்திருப்பவர்கள். அவன் ஒருவனே அவர்களின் சார்பில் கண்முன் எழுபவன். அரசனும் அவ்வாறே. தெய்வங்கள் மறைந்திருக்கின்றன என்பதனால் கோலுடன் அவன் அரியணை அமர்கிறான்.”
“அரசனை பிரம்மவடிவன் என்கின்றன பிராமணங்கள். அவன் மணிமுடி விஷ்ணு. நெற்றிப்பொட்டு சிவன். அவன் கைகள் பிரம்மன். அவன் தோள்கள் கொற்றவை. அவன் நெஞ்சு லட்சுமி. அவன் நா கலைமகள். அவன் விழிகள் ஆதித்யர்கள். அவன் காது வாயு. அவன் கழுத்து சோமன். அவன் வயிறு வருணன். மைந்தா, அவன் கால்களே யமன் என்கின்றன மூதாதையர் சொற்கள்” என்றார். பின்பு “ஆம், நமக்குச் சொல்லப்பட்டது அது” என்றபின் நீள்மூச்சுவிட்டார். அதன்பின் அவர் பேசவில்லை.
“எரி சென்ற காடு போல அவன் சென்ற தடம் தெரிந்தது. வேதம் கானகங்களில் பொருள்பெருகத் தொடங்கி பல தலைமுறைகள் ஆகின்றன. இதுவரை இப்படி ஒரு கொந்தளிப்பு நிகழ்ந்ததில்லை. அறிவுத்தளத்தில் எது நடந்தாலும் அது உகந்ததே. ஏனெனில் உண்மையே வெல்லும். அவ்வண்ணமே ஆகுக!” என்று திவாகரர் சொன்னார். “நான் விழைவதும் அதுவே” என்று சொல்லி வணங்கி தருமன் எழுந்துகொண்டார்.
[ 11 ]
வழியிலேயே அவர்களுடன் பவமானன் இணைந்துகொண்டான். அவர்கள் ஐதரேயக்காட்டைக் கடந்து அப்பால் விரிந்த புல்வெளியை அடைந்தபோது தொலைவில் ஒரு மரத்தடியில் அவன் அமர்ந்திருப்பதை கண்டனர். காலன் அவனை நோக்கி கைவீசக்கண்டு அவன் எழுந்து நின்றான். அருகணைந்ததும் அவன் அணுகி தலைதாழ்த்தி வணங்கினான். “நீரும் எங்களுடன் வரலாம், உத்தமரே” என்றார் தருமன். “ஆம், ஆனால் என் வழி ஏது என நான் இன்னும் அறியவில்லை. தைத்ரியக்காட்டிலிருந்துதான் நான் இங்கு வந்தேன். எனவே அது என் இலக்கல்ல” என்றான் பவமானன். “நன்று, வழிதெரியும்வரை உடன்வருக!” என்றார் தருமன்.
“நீங்கள் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நான் குருகுலம்விட்டு நீங்கும்போது இருளுக்குள் அவர் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.” அவன் நகைத்து “அது என் உள இருளுக்குள்ளா என நான் ஐயம்கொண்டேன்” என்றான். தருமன் புன்னகை செய்தார். “அவரைப் பிரிவது கடினம் என்றே எண்ணியிருந்தேன். தாயுமானவராக இருந்த நல்லாசிரியர் அவர். ஆனால் துறவுகொள்ள எண்ணம் வந்தபின் அன்னை சலிப்பூட்டத்தொடங்கும் விந்தையை நான் எண்ணி எண்ணிப்பார்த்திருக்கிறேன். பேரன்புகொண்ட அன்னை வெறுப்பையே உருவாக்குகிறாள். புழுக்கத்தில் கம்பளிமெய்ப்பையை அணிந்திருப்பதுபோல. கழற்றிவீசிவிட்டு விடுதலை நோக்கி பாயவேண்டுமென துடிக்கிறோம்.”
அவன் பெருமூச்சுடன் “வணங்கியதும் அவர் சற்று விழிகலங்கினார். அக்கணம் மட்டும் என்னுள் இருந்த கசப்பு சற்றே மட்டுப்பட்டது” என்றான். “ஆனால் கிளம்பி காட்டுப்பாதையில் வரத்தொடங்கியதும் என்னையறியாமலேயே அது மீண்டும் ஊறித்தேங்கியது.” தருமன் “அது இயல்பே” என்றார். “ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவென்பது தந்தை மைந்தன் உறவுபோலவே தெய்வங்களிட்ட ஆயிரம் முடிச்சுகளும் அதை அவிழ்க்க முயலும் மானுடரிட்ட பல்லாயிரம் முடிச்சுகளும் செறிந்தது.” அப்பால் விழி சுருக்கி அதை கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டதும் அவருக்குள் ஒரு புன்னகை விரிந்தது. “இளையோன் அதை நன்கறிவான்” என்றார்.
ஆனால் அர்ஜுனன் எரிச்சல்கொள்ளவில்லை. அவருள் எழுந்த புன்னகையை அவனும் கண்டுகொண்டிருந்தான் எனத் தோன்றியது. பவமானன் “துரோணருக்கும் தங்களுக்குமான உறவைப்பற்றி சூதர் பாடிய கதைகளை கேட்டுக்கொண்டே வளர்ந்தவன் நான், இளையபாண்டவரே” என்றான். “ஆம், நானும் அவற்றைக் கேட்டு வளர்கிறேன்” என்று அர்ஜுனன் இதழ்கோடிய புன்னகையுடன் சொன்னான். தாடியை நீவிக்கொண்டே காட்டின் இலையுச்சிகளை நோக்கியபடி “செல்வோம்” என்றான்.
அவர்கள் நடந்தபோது சகதேவன் “ஆசிரியர் மாணவரிடம் கொள்ளும் அன்பா மாணவர் ஆசிரியரிடம் கொள்ளும் அன்பா எது பெரிது என்னும் வினா எப்போதுமே எழுவதுண்டு. ஆசிரியர் இறந்தகாலத்தில் மேலும்மேலும் பின்னோக்கிச் சென்றுகொண்டே இருப்பவர். அவருக்கு வாழும் நிகழ்காலமும் அறியா எதிர்காலமும் மாணவனே. ஆகவே மேலும்மேலும் உருகி எழுந்து அவனைச் சூழ்கிறார். அவனை விட்டுவிடாமலிருக்கும் பொருட்டு அதற்குரிய சொற்களை உருவாக்கிக்கொள்கிறார். மாணவனுக்கு அவர் எதை அளித்திருந்தாலும் அவன் தேடும் எதிர்காலத்தில் அவர் இல்லை. அவன் அவரைவிட்டு விலகிச்சென்றே ஆகவேண்டும். ஆகவே அவன் அவர்மேல் கசப்புகளைப் பயிரிட்டு விலக்கத்தை உருவாக்கிக்கொள்கிறான்” என்றான்.
“அறியேன்” என்றான் பவமானன். “நான் அவர் மேல் கசப்புகொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன். அவர் அளித்தவை எனக்குப் போதவில்லை. அவர் முன்வைத்தவற்றைப் பிளந்து வெளிச்செல்கிறேன். அக்கல்வி அவரேதான் என்பதனால் அது அவரைப் பிளப்பதே.” தருமன் சிரித்து “ஆம், ஆனால் இது நாம் எண்ணிக்கொள்வதுபோல தூய அறிவுத்தேடல் மட்டும் அல்ல. இதிலுள்ளது நம் ஆணவத்தின் ஆடலும்கூட. அதை நேருக்குநேர் உணர்ந்துகொண்டோம் என்றால் நன்று” என்றார்.
பவமானன் “ஆம், அதையும் நான் உணர்கிறேன். என்னுடையது நிலைத்தமர முடியாத இளமையின் துடிப்பு மட்டும்தானா என்றும் எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். பெயர்ந்துசெல்லமுடியாத முதுமையில் அடைந்ததில் அமர்ந்துகொள்வேனா? அப்படித்தான் தேடுபவர்கள் சென்று அமைகிறார்களா?” என்றபின் தலையைக்குலுக்கி “அறியேன்… எண்ண எண்ண நம்மைச் சூழ்ந்து ரீங்கரிக்கின்றன சொற்கள். அனைத்தும் இறுதியில் வெறும் சொற்கள் மட்டுமே” என்றான்.
புல்வெளிமேல் வானத்தின் ஒளிக்கசிவு மெல்லிய புகைப்படலம்போல வந்து படியத் தொடங்கியது. ஓரிரு பறவைகள் மரக்கூட்டங்களின்மேல் சிறகடித்தெழுந்து சுழித்து மீண்டும் இறங்கின. அவற்றின் ஒலியில் காடு விழித்தெழத் தொடங்கியது. காட்டை நோக்கியபடி திரண்ட கைகளை சற்றே விரித்து பீமன் நெடுந்தொலைவு முன்னால் நடக்க அவனருகே காலன் நடந்தான். புற்பரப்பில் இரவுப்பனியின் ஈரம் நிறைந்திருந்தது. குளிர்காற்று முதலில் இனிதாக இருந்து பின் நடுக்குறச்செய்து அப்போது மண்ணிலிருந்து எழுந்த மென்வெம்மை காதுகளில் பட மீண்டும் இனியதாக ஆகத் தொடங்கியிருந்தது
“விலகி வந்தவர்கள் முந்தைய ஆசிரியரை பழிப்பதை கண்டிருக்கிறேன்” என்று பவமானன் தொடர்ந்தான். “அவர்கள் அவரது கொள்கைகளை பழிக்கத் தொடங்குவார்கள். ஆனால் அது அவரே என்பதனால் மெல்ல அவரது ஆளுமையைப் பழிப்பதில் சென்றுசேர்வார்கள்.” அவன் நகைத்து “அவ்வாறு பழிப்பவர்கள் வந்தணைந்த புதிய ஆசிரியரிடம் எண்மெய்யும் மண்பட வணங்குவர். உருகி விழிநீர் கசிவர். அது நடிப்பல்ல. அவர்கள் அவ்வுணர்ச்சிகளினூடாக தங்களை இங்காவது முற்றமைத்துக்கொள்ள முடியுமா என்று தேடுகிறார்கள்” என்றான்.
அர்ஜுனன் “அவர்களின் பிழை ஒன்றே, ஆசிரியர் ஓநாயன்னையைப் போல உண்டு செரித்து கக்கி வாயில் ஊட்டுவார் என எண்ணுகிறார்கள். மெய்யறிவை எந்த ஆசிரியரும் அளிக்கமுடியாது. ஆசிரியரின் அறிவு மாணவனுக்குரியதே அல்ல. ஏனென்றால் இரு மானுடர் ஒற்றை உள்ளம் கொள்வதே இல்லை. ஆசிரியர் அளிப்பது அவர் கடந்துவந்த பாதையை மட்டுமே. மாணவன் கற்றுக்கொள்வது தான் செல்லவேண்டிய பாதையைத்தான். அவன் அடைவது தன் மெய்மையை. அது அவ்வாசிரியர்நிரை அளித்ததும் கூடத்தான் என்று உணர்பவன் ஆழ்ந்தமைகிறான். ஆகவேதான் சென்று எய்தியவர்கள் ஆசிரியர்களை முழுதும் பணியத் தயங்குவதில்லை” என்றான்.
“இப்பயணத்தை உணர்ந்தவன் ஆசிரியர்களை வழிச்சாவடிகளை என வணங்கி எளிதில் கடந்துசெல்வான். ஆசிரியர்களில் சிறியவர் பெரியவர் என்றில்லை. ஆசிரியர் என்பது ஓர் அழியாநிலை. அதில் முகங்கள் மட்டும்தான் மாறிக்கொண்டிருக்கின்றன” என்று அர்ஜுனன் சொன்னான். “முற்றிலும் பணியாமல் கல்வி இல்லை. ஆணவத்தால் ஊற்று சுரக்கும் கண்களை மூடிவைத்துவிட்டு குருகுலங்களில் அமர்ந்திருப்பதில் எப்பயனும் இல்லை. அப்பணிவுடனேயே நீங்கமுடிபவனால் மட்டுமே கல்விகொள்ளும் கலம் என தன் உள்ளத்தை ஆக்கிக்கொள்ளமுடியும்.”
புன்னகையுடன் பவமானனின் தோளைத் தொட்டு அர்ஜுனன் சொன்னான் “இளையோனே, எவரும் மாணவர்களோ ஆசிரியர்களோ மட்டும் அல்ல, ஆசிரியர்களும் மாணவர்களுமாக ஒரே தருணத்தில் திகழ்கிறார்கள். நான் துரோணரின் கால்களை எண்ணி வணங்காமல் ஒருநாளும் விழித்ததில்லை. என் மாணவர்களுக்கு நான் அளிப்பது அவருடைய சொற்களைத்தான். அழியாது செல்பவை சொற்கள். மானுடர் அவற்றை காலத்தில் கடத்தும் சரடுகள் மட்டுமே.”
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
மனதிற்கான வைத்தியசாலை
வணக்கம்.
இத்துடன் ஒரு விண்ணப்பத்தை இணைத்திருக்கிறேன்.
இதனை உங்கள் இலங்கை வாசகர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்களும் உதவலாம்.
பேருதவியாக அமையும்.
மனமார்ந்த நன்றி.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
www.rishanshareef.blogspot.qa
வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை
வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.
இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
முதல் முயற்சியாக, நீர்கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஷாலிகா மற்றும் மருத்துவத் தாதிகளுடன் இணைந்து, அங்குள்ள டெங்கு நோயாளர் பிரிவில், ஒரு சிறு வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ தாதிகளை அணுகுவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.
இதற்கு நீங்களும் உதவுவதை வரவேற்கிறேன். உதவ விரும்பும் அனைவரும் தங்களிடம் மேலதிகமாக இருக்கும் அல்லது அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் புத்தகங்களை அனுப்பி வைத்து உதவலாம். ஒரு புத்தகமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. சிறுவர் நூல்கள், சிறுகதை, கவிதை, நாவல்கள், தன்னம்பிக்கை தொகுப்புகள் என எந்த நல்ல தொகுப்பாக இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும், அனுப்பலாம்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தாம் வெளியிட்டுள்ள தொகுப்புக்களில் ஒன்றை அனுப்பி வைத்தால் கூட பேருதவியாக இருக்கும். புதியதே வேண்டுமென்றில்லை. இன்னும் வாசிக்கக் கூடிய நிலைமையில் இருக்கும் எந்தத் தொகுப்பாக இருந்தாலும் சரி.
புத்தகங்களை அனுப்ப விரும்புபவர்கள் கீழுள்ள முகவரிக்கு, பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வையுங்கள்.
To:
  Nurse In charge,
DHDU,
District General hospital,
Negombo,
Srilanka
நன்றி !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
August 8, 2016
வா.மணிகண்டனின் நிசப்தம் அறக்கட்டளை
வா.மணிகண்டன் அவரது இணையதளத்தில் எழுதியிருந்த கட்டுரை இது. களப்பணியாளர்களுக்கே உரிய தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்சியுடனும் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக தலைவணங்குகிறேன்
மணிகண்டன் இக்கட்டுரையில் அவரிடம் உதவிபெற்றவர்கள் நடந்துகொள்ளும் முறையை அவருக்கே உரிய யதார்த்தக்குரலில் சொல்கிறார். பெரிய மனக்குறை ஏதுமில்லை, இப்படித்தான் இது இருக்கும் என்னும் நிதானம் தெரிகிறது. அதுவும் களப்பணியாளர்களின் இயல்பே.
நானறிந்த அத்தனை களப்பணியாளர்களும் இதை ஏதோ ஒருவகையில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம் உதவிபெற்றவர்கள் அவ்வுதவியைப் பெறும் வரை நன்றியுடன் கண்ணீர்விட்டுக் கசிவார்கள். பெற்றதுமே முழுமையாக விலகிவிடுவார்கள். அது ஒரு வகை ‘சம்பாத்தியம்’ என்னும் உணர்வுதான் அவர்களிடம் மேலோங்கும்
அவர்களுக்குள் உதவிபெற்றமை குறித்த ஏதோ ஒரு தாழ்வுணர்வு இருக்கும். அதைவெல்ல பலவகையான பாவனைகளை மேற்கொள்வார்கள். “சும்மா குடுப்பானா? எங்கியாம் காசு வரவு இருக்கும்’ என்பார்கள். ”நம்ம பேரைச்சொல்லி பாதிய சாப்பிடுவான்” என்பார்கள். அந்தவசைகளின் வழியாக அந்த இழிவுணர்வைக் கடந்துசெல்வார்கள்
ஆகவேதான் இங்கே எந்தச் சமூகசேவையாளரைப்பற்றிக் கேட்டாலும் எதிர்மறை விமர்சனம்தான் அதிகமாக வரும். கூர்ந்துபார்த்தால் அவரால் உதவிபெற்றவர் பலர் அதில் இருப்பார்கள். அதை நம்பவிழையும் பலர் உடனிருப்பார்கள்.நான் வணங்கும் பல சேவையாளர்களைப்பற்றி இப்படி என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.
உதவிபெறாத பொதுமக்களும்கூட அதே மனநிலையில்தான் இருக்கிறார்க்ள். அவர்களுக்கு தங்களில் ஒருவர் தங்களைவிட மேலானவர்களாக இருக்கக்கூடாது. அது தங்கள் மீதான ஒரு தீர்ப்பு போல. அந்தச் சேவையாளர்கள் மேல் மிகச்சிறிய குற்றச்சாட்டு வந்தால்கூட, மக்கள் உடனே பொங்கி எழுந்து வசைமழை பொழிய ஆரம்பிப்பார்கள். ஊழலில் வன்முறையில் திளைப்பவர்களைக் கொண்டாடுபவர்களே சேவையாளர்களிடம் இண்டுஇடுக்குகள் தோறும் தேடி குறைகளை அடுக்குவார்கள். திகைப்பாக இருக்கும்
ஆனால் மணிகண்டன் போன்றவர்கள் சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. என்னைப்போன்றவர்களால் அதை ஒருபோதும் செய்யமுடியாது. மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே ‘எல்லாருக்கும் பெய்யும் மழை’
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தடம்-பெயர்கள்
 
மதிப்பிற்குரிய ஜெயமோகனுக்கு,
தடம் இதழில் வெளியான தங்களுடைய பேட்டியைப்படித்தேன். விகடன் தடம்’ முதல் இதழில் சிறுகதைவெளி குறித்த கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் பல சிறுகதை எழுத்தாளர்களின் பெயர் விடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. பிரபஞ்சன், ஜி.முருகன், யூமா வாசுகி போன்றவர்களின் பெயர்கள். அதேபோல் குறிப்பாக ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா என இடதுசாரி முகாம்களில் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தனவே?’’ என்ற கேள்விக்கு ”இலக்கியத்துக்கு இந்த கறார்த்தன்மை வேண்டும்.” என்று பதில் அளித்திருந்தீர்கள்.
ஆனால் தடம் முதல் இதழில் வெளியாகியிருந்த சிறுகதைவெளி குறித்த கட்டுரையில் “அராத்து” அவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.(நீங்கள் எந்த விதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதைப்பற்றி நான் சொல்லவில்லை, குறிப்பிட்டுள்ளதை மட்டுமே கூறுகிறேன்.) அராத்தை விடவா ஆதவன் தீட்சண்யா மற்றும் ரமேஷ்-பிரேம் மேலும் கேள்வியில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள் இல்லை என்று கருதுகிறீர்கள்? அராத்து அவர்கள் எத்தனை குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதியுள்ளார் – ஒன்றாவது? அவை எந்த இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன?
ஆதவன் தீட்சண்யாவை பற்றி அதே கேள்விக்கு பதிலளிக்கையில் ”அப்புறம் ஆதவன் தீட்சண்யா பெயரைச் சொன்னீர்கள். பத்திரிகைகளில் பிரசுரிக்கும் தகுதியுடைய கதைகளைக்கூட அவர் இன்னும் எழுதவில்லை.” என்று குறிப்பிட்டுளீர்கள். ஆனால், தடம் முதல் இதழிலேயே அவருடைய கதை வந்துள்ளது. அப்படியென்றால் விகடன் தடம் தகுதியில்லாத படைப்புகளை வெளியிடுகிறதென்று அவர்களிடம் குறிப்பிடுகிறீர்களா?
தாங்கள் ரமேஷுக்கு அவருடைய பேரிடர் காலத்தில் துணை நின்றதை/நிற்பதை அறிந்தவள் தான் நான் இருந்தாலும் இந்தக்கேள்வி என் மனதை அறித்துக்கொண்டே இருக்கிறது.
என் அஞ்சல் முகவரியில் writer என்று இருப்பதால் குறிப்பிடுகிறேன், நான் சமீபத்தில் தான் எழுதத்துவங்கியுள்ளேன்.
அன்புடன்.
லைலா எக்ஸ்.
***
அன்புள்ள லைலா,
அப்பேட்டியிலேயே சொல்லியிருந்தேன், அது பட்டியல் அல்ல. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூல் பட்டியல். அதில் அனைத்துப்பெயர்களையும் நீங்கள் காணலாம். அது, சாதனையாளர்களை மட்டுமே சொல்கிறது. அத்துடன் ஒரு குறிப்பிட்ட எழுதுமுறையை முன்னெடுத்தவர்கள், அதை வளர்த்தவர்கள் ஆகியோரையும் சொல்கிறது.
அராத்து சாதனையாளர் என நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு புதியவகையை முயற்சிசெய்கிறார் என்றே சொல்கிறேன். அந்த சலுகையை பத்தாண்டுக்காலம் எழுதி சிலநூல்களை வெளியிட்ட ஒருவருக்கு அளிக்கமுடியாது. அவர் என்ன செய்தார் என்பதே முக்கியமானது.
ரமேஷ் பிரேம் முக்கியமான ஓரிரு சிறுகதைகளை எழுதியவர்கள், முக்கியமான கவிஞர்கள், மிகமுக்கியமான கோட்பாட்டாளர்கள். அவ்வகையில் அவர்களை நான் மதிப்பிடுகிறேன். அவர்களின் சிறந்த சிறுகதை, கட்டுரைகளை நான் என் இதழில் கேட்டுவாங்கி பிரசுரித்தேன்.
முற்போக்கு முகாமில் எனக்குக் கந்தர்வன் முக்கியமானவர். அவர் நான் பாராட்டும் கதைகளை அவரது இறுதிக்காலத்தில் குமுதம் போன்ற இதழ்களில் எழுதியபோது அவரது முற்போக்குத்தோழர்கள் எவருமே பொருட்படுத்தவில்லை. ஒவ்வொரு கதைக்கும் நான் அவருக்கு வாசகர்கடிதம் எழுதினேன். பல கடிதங்கள் பிரசுரமாகின. அவர் அத்தளத்தில் ஒரு திருப்புமுனை. அதைப்பின்பற்றி எழுதியவர்கள் பலர் ஊக்கத்துடன் தொடரவில்லை.
என் விமர்சன நோக்கில் என் தரப்பைச் சொல்கிறேன். அது தீர்ப்பு அல்ல, ஒரு அழகியல்நோக்கு, அவ்வளவே. அது விவாதங்களை உருவாக்குவதே அவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. அதுவே அதன் பயன்பாடு
ஜெ
பிகு:மின்னஞ்சல் பெயரை பொருளுள்ளதாக ஆக்க வாழ்த்துக்கள்
பிகு: ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்று ஒரு குறளி ஒலிக்கிறது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21
[ 8 ]
“அரசே, புழு பறப்பதைப் பார். நெளியும் சிறுவெண்புழுவுக்குள் சிறகு எவ்வடிவில் உள்ளது? அதன் கனவாக. அக்கனவு அதற்குள் பசியென்று ஆகிறது. பசி அதை கணம் ஓயாது நெளியச்செய்கிறது. நெளிந்து நெளிந்து அது இறகுகளை கருக்கொண்டபின் கூட்டுக்குள் சுருண்டு தவமியற்றுகிறது. உடைத்தெழுந்து வண்ணச்சிறகுகளுடன் வெளிவந்து காற்றிலேறிக்கொள்கிறது. மண்ணுடன் மண்ணென்றாகிய புழுவில் விண்ணகம் குடிகொள்ளும் விந்தை இது என்று அறிக!” ஐதரேயக்காட்டின் முதன்மை ஆசிரியர் திவாகரர் சொன்னார்.
“சிறகென்பது பறக்கத் துடிக்கும் விழைவு ஒரு பருப்பொருளானது என்று அறிந்தவன் இப்பருவுடலே அது கொண்ட விழைவுகளால் ஆனதென்று அறிவான். கைகள் எவ்விழைவுகள்? அரசே, கால்களின் உள்ளடக்கம் என்ன? விழிகள் விழைவதென்ன? செவிகள் தேடுவதென்ன? சுவையாக மணமாக உடல் அறிவது எந்த விருப்பை? மானுடர்களாக இங்கு வந்து நிகழ்ந்து மீள்வதுதான் என்ன? ஒவ்வொரு மனிதனும் ஒரு விழைவென்றால் அவ்விழைவுகள் பின்னி விரிந்து இங்கு உருவாவது என்ன? அது ஒருபெரும் விழைவென்றால் அவ்விழைவு எய்துவது எதை?”
“துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும் காணாமல், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை அல்லவா? இங்கு நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்று அறிந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபடமுடியும். துணியை நாம் காண இயலாது. அதை ஊழ் என்கின்றார்கள். தைப்பவனை நாம் அறியமுடியாது. அதை அது என்று மட்டுமே சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் ஊசியைக்கொண்டு துணியையும் தைப்பவனையும் உய்த்துணர்பவன் விடுபடுகிறான். அதுவே ஐதரேய மெய்யறிதல்.”
“ஊழ் என்பது நம்மனைவரையும் பின்னிப்பிணைத்திருக்கும் பெருவலை மட்டுமே. இவ்வலையில் பிறந்திறந்து சென்றுகொண்டிருக்கிறோம். ஏனென்றால் இப்பிறவிக்கு முன்பு ஏதுமில்லை என்றால் இங்கு நான் கொண்டுவருபவை எங்கிருந்து வருகின்றன? இப்பிறவிக்கு அப்பால் ஏதுமில்லை என்றால் நான் இங்கு ஈட்டியவை எங்கு செல்கின்றன? புழுவென ஒரு பிறப்பு. விழைவை உடலாக்கி கூண்டுக்குள் செய்யும் தவம் என்பது பிறிதொரு இறப்பும் மறுபிறப்பும். சிறகுகள் ஓய விழுந்து இறுதியென ஒரு இறப்பு. தந்தை இட்ட பெயருடன் மடிபவன் ஒருபிறப்பாளன். தான் ஈட்டியபெயர் சூடியவன் மறுபிறப்பாளன்.”
“வேதத்தில் எழுந்த முனிவராகிய வாமதேவரை வணங்குக! கோதம குருமரபினராகிய அவரது நாவிலெழுந்த வேதத்தை வாழ்த்துக!” என்று திவாகரர் சொன்னார். “கருவிலிருந்த கனவில் அவர் தேவர்களின் பிறப்புண்மைகளை முற்றறிந்துகொண்டார். மண்ணுக்கு வந்து அவர் கற்றது மொழியை மட்டுமே. நூறு இரும்புக்கோட்டைகளென கருவறைச்சுவர்களால் காக்கப்பட்டார். பருந்தென அவற்றைக் கிழித்து மண்ணுக்கு எழுந்தார். பின்பு அக்கருவறையை நோக்கி அவர் சொன்னார், இதோ நீ அளித்த சிறகுகளுடன் நீ தேக்கிய விழைவுகளின் வடிவாக எழுந்துள்ளேன். அரசே கேள், அக்கோட்டைகளை கட்டியது அப்புழுவே. அச்சிறையை உடைப்பதும் அதுவே.”
“இப்பருவெளிப்பெருக்கு ஒரு நெசவு. ஊடுசரடென செல்வது அறிபொருள். பாவுசரடென ஓடுவது பிரக்ஞை. பிரக்ஞை உறையாத ஒரு பருமணலைக்கூட இங்கு நீங்கள் தொட்டெடுக்க முடியாதென்றறிக!” அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே ஒரு மாணவன் கைதூக்கியபடி எழுந்து நின்றான். அலைபாய்ந்த குழல்கற்றைகளும் தெளிந்த விழிகளும் கொண்டிருந்தான். “ஆசிரியரே, அறிபடுபொருளும் அறிவுமாகி நின்றிருப்பது முதற்பெரும்பொருள் என்கிறது ஐதரேயம். வானம் குடத்தில் என மானுடனில் அடைபடுவதே பிரக்ஞை என்கிறது. நான் அதைப்பற்றி ஒரு வினாவை எழுப்ப விழைகிறேன்.”
“இது சொல்லாடுவதற்குரிய இடமல்ல, இளையோனே. இங்கு நான் அரசருக்கு ஐதரேயப் பெருமரபை உரைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார் திவாகரர். “சொல்லாடல்களன்களில் பலமுறை இதை பேசியிருக்கிறோம்.” அவன் “ஆம்” என்றான். “ஆனால் அது நெறிகளுக்குட்பட்டு சொல்முறைகள்கொண்டு களமாடுதல். எனக்கு அது உவப்பல்ல. நான் பயிற்சியை வேண்டவில்லை. நான் கோருவது போரை.” திவாகரர் “அதற்கான இடமல்ல இது” என்றார். “அதை நான் முடிவுசெய்துகொள்கிறேன். நான் பிழைபுரிந்தேன் என்றால் என்னை தீச்சொல்லிட்டு அழியுங்கள்” என்றான் அவன்.
திவாகரர் பொறுமையை காத்தபடி “சொல்!” என்றார். “எங்கு எவ்வாறு முழுமுதல்பிரக்ஞை தனிப்பிரக்ஞை என ஆயிற்று என்றறியாமல் இவ்வறிதல்களால் என்ன பயன்?” என்றான் அவன். “நதி தேங்கி குளமாகிறது. ஏன் என்றால் அங்கு ஒரு பள்ளமிருந்தது என்பதொன்றே மறுமொழி. அவ்வாறு ஆவது நதியின் இயல்பென்பதற்கு அப்பால் விளக்கமில்லை” என்றார் திவாகரர். “அகாலத்தின் ஒரு தருணத்தில் முழுமுதன்மையின் சித்தப்பெருக்கு காலக்குவையில் தேங்கியது. படைப்புவிசையென்றாகியது. அதை பிரம்மன் என்கிறார்கள். பிரம்மனின் வாயிலிருந்து சொல் எழுந்தது. அலகிலா சித்தம் பொருளுக்குக் கட்டுப்பட்ட சொல்லென்ற கணம் படைப்பு நிகழ்ந்தது.”
“சொல்லில் எழுந்தது நெருப்பு. பிரம்மனின் மூக்கில் தோன்றியது உயிர். உயிர்ப்பே காற்று. விழிகளிலிருந்து நோக்கு. நோக்கிலிருந்து ஒளி. ஒளியிலிருந்து சூரியர்கள். செவிகள் தன்னுணர்வை படைத்தன. தன்னிருப்பைக்கொண்டு நான்கு திசைகள் வகுக்கப்பட்டன. தன்னுள் கனிந்தபோது உள்ளம் பிறந்தது. உள்ளத்திலிருந்து சித்தம் உருவாகியது. சித்தம் சந்திரன் எனக் குளிர்ந்து வானிலெழுந்தது. மைந்தா, பிரம்மனின் தோல் முளைத்து பருப்பொருள் வெளி பிறந்தது. பிரம்மனைப் படைத்து ஊட்டிய தொப்புள் கொடி அப்போது அறுந்து விலகியது. புண்ணெனத் திறந்த தொப்புளில் இருந்து ஒவ்வொன்றுக்கும் எதிர்விசையாக அமையும் இருள் எழுந்தது. உயிர்கள் அதை இறப்பு என்றன. ஆதலழிதலின் பின்னலென இங்கே அனைத்தும் அமைந்தன” என்றார் திவாகரர்.
“தூயது இந்தக் குடம் என்று அறிக!” என்றார் திவாகரர். “அனல் சொல்லென வாயில் அமைந்தவன். காற்று மூச்சென மூக்கில் ஆடுபவன். கதிரோன் ஒளியென விழியானவன். திசைத்தேவர்கள் செவிகளென குடிகொள்பவன். மண்ணின் உயிர் தோலென ஆனவன். சந்திரன் உள்ளமென்றும் விண்ணகமே சித்தமென்றும் அமைந்தவன். இறப்பு இருளென குடிகொண்ட உடல் கொண்டவன். நீரை விந்துவென்றும் குருதியென்றும் ஏந்தியவன். மானுடன் பெருவெளியின் துளி. அங்கு அவ்வாறு அமைந்தது இங்கு இவ்வாறு அமைகிறது. குடத்தில் அடங்கக்கூடியதே விண் என்பதனால் மட்டுமே அறிவு பயனுள்ளதாகிறது.”
“ஒவ்வொருமுறையும் இதுவே நிகழ்கிறது” என்று அவன் பொறுமையிழந்து கூவினான். “ஆயிரம் சொற்களைக் கடந்து வினா சென்று நிற்குமிடம் ஒன்றே. அருவென அமைந்தது உருவென ஆனது எப்படி? அலகிலி எல்லைகொண்டது ஏன்? பிரக்ஞையென அமைவது பொருளென ஆனது எப்போது? அத்தனைச் சொற்களும் அங்கு சென்றதுமே தயங்கி நின்றுவிடுகின்றன. பின்பு ஒரு சொல்மயக்கம். ஒரு கனவு. ஒரு கூடுபாய்தல். நான் தேடுவது மறுமொழியை, மயக்கத்தை அல்ல.”
“மறுமொழி என்று ஒன்றில்லை. நான் சொல்வது ஒரு எண்ணத்தை. அது உன் சித்தத்தில் எதிரொலிக்கிறது. நீ கேட்பது உன் எதிரொலியை மட்டுமே. அது உன் உள்ளக்குகைகளால் பெருக்கப்படுகிறது” என்றார் திவாகரர். “பிரக்ஞை என நம்முள் நிறைந்திருப்பதன் புறவடிவமே மொழி. மொழியின் முதல் ஒலி அ. அது மூச்சுக்குத் திறந்த வாய். திகைத்து அமைந்த நா. பொருளை அள்ள துணிந்த உயிர். மொழியின் அனைத்து ஒலிகளுடனும் அது இணைந்துள்ளது.”
“மைந்தா, அ என்பது அது என்னும் சுட்டு. அல்ல என்னும் மறுப்பும்கூட. அலகிலி என்னும் விரிவு. அகம் என்னும் கூர்மை. மொழியை பின்னோக்கி இழுத்தால் அது சென்றடையும் புள்ளி அ என்பதே. அதுவே முழுமுதன்மையின் வரிவடிவம்” திவாகரர் சொன்னார். “திறந்த வாய் மூடக்குவிவது உ. மூடியமைவது ம். அகர உகர மகாரமாகி நின்றது அதுவே. அதையே ஓம் என்கிறோம். அச்சொல்லிணைவை ஊழ்கத்தில் அமைந்து உள்ளுணர்பவன் அந்த மாயக்கணத்தை அறியக்கூடும். பொருள் பிரக்ஞையென்றாவதும் பிரக்ஞை பொருளென்றாவதுமான நடனத்தை. இம்மிலிருந்து அவுக்கும் அவிலிருந்து இம்முக்குமான தொலைவையே அலகிலாப்பெருவெளி என அறிகின்றனர் யோகியர்.”
“இவை சொற்கள்” என்றான் அவன். “வெறும் சொற்கள்… சொற்களில் சொல்லப்படத்தக்கதல்ல அதன் மையம் என்றால் அதை ஏன் சொல்லப்புகுந்தீர்கள்? சொல்லப்பட்டவை சொல்லால் மட்டுமே அளக்கப்படவேண்டும்.” திரும்பி மாணவர்களை நோக்கி “கேளுங்கள், எத்தனை காலமாக இந்தக் கழையாட்டத்தை பாத்துக்கொண்டிருக்கிறோம்? இங்கே தன் வினா அடங்கி வாழ்பவன் எவன்? இத்தனைக்கும் அப்பால் என ஒன்றை நோக்கி தாவாத நெஞ்சுடன் இங்கு முழுதமைந்தவன் யார்?” என்றான். அவர்கள் விழிகள் மட்டுமென அமர்ந்திருந்தனர்.
சினந்த விழிகளுடன் கரிய உருக்கொண்ட ஒருவன் எழுந்தான். “ஆம், இங்கு நாம் கற்பது வினாக்களை மட்டுமே. விடைகளென அளிக்கப்படுவது சமித்தும் நெய்க்கரண்டியும் பொருளறியாத் தொல்சொற்களும்தான்” என்றான். அவன் சொற்கள் முன்னரே மாணவர்களால் கேட்கப்பட்டவை என விழிகள் காட்டின.
அவன் திவாகரரிடம் “உள்ளத்துள் உறைகிறது பிரக்ஞை என்றால் விலங்குகளுக்குள் உறைவது என்ன? அதுவும் பிரக்ஞையே என்றால் அதைவிட பெரியதா இதோ என்னுள் இருந்து எரியும் பிரக்ஞை? ஈயும் கொசுவும் கொண்டுள்ள பிரக்ஞை மேலும் சிறியதா?” என்றான். திவாகரர் “ஆம், மானுடனில் எரியும் பிரக்ஞை அவன் பிறவிகள் தோறும் திரட்டி எடுத்து இங்கு கொண்டுவந்து சேர்த்தது. இங்கிருந்து பிறிதொரு இடத்திற்குச் செல்வது” என்றார். அவன் கைகளைத் தூக்கி “அவ்வண்ணமென்றால் மானுடரின் பிரக்ஞையிலும் வேறுபாடுண்டு அல்லவா?” என்றான்.
“ஆம், என்ன ஐயம்? உனது பிரக்ஞை அல்ல அங்கே கன்றோட்டுபவனுடையது. அப்பால் ஊர்ப்பாதையில் சுமைதூக்கிச் செல்பவனுடையது மேலும் குறைந்ததே. பிறவிகள் அமைக்கின்றன படிநிலைகளை” என்றார் திவாகரர். “ஆசிரியரே, உங்கள் மெய்யறிதல் இறுதியில் மானுடரைப் பகுத்து மேல்கீழென அடுக்குவதற்கே உதவுகிறது. இங்கு அரசர்கள் அளிக்கும் நெய்யும் உணவும் உடையும் ஏன் வந்து குவிகின்றன என்பதற்குப் பொருள் இதுவே. இது நான் கொண்ட பிரக்ஞை. இது மேலானது என்பதற்கு நானன்றி சான்று ஏதுமில்லை. ஆனால் இதை அடைந்தமையால் பிறவிஏணியில் முதலில் நிற்பவன் என நான் என்னை கருதிக்கொள்கிறேன் என்றால் மூடன் நான்.”
“நீ பேசுவது தத்துவம் அல்ல” என்றார் திவாகரர் சலிப்புடன். “இருக்கலாம். இது எளிய அறம் என்றே நானும் எண்ணுகிறேன். ஆசிரியரே, என்ன செய்துகொண்டிருக்கிறது நமது வேதமெய்யறிவு? இதோ சொல்கொண்டு பொருள்தேடி எழுந்துவந்துகொண்டிருக்கின்றன பாரதப்பெருநிலத்தின் தொல்குலங்கள். வேதமறிந்தமையால் அவர்களைவிட அந்தணர் மேலோர் என்று அவர்களிடம் சொல்கிறோம். அந்தணர் வாழ்த்துவதனால் அரசர்கள் ஆளத்தக்கவர்கள் என்கிறோம். ஆசிரியரே, வேதத்தால் அவர்களை வெல்கிறோம். வேதம் இன்று ஒரு படைக்கருவி அன்றி வேறில்லை” என்றான் கரியவன்.
“நான் இங்கிருந்து எங்கு செல்வது? இதோ தீட்டப்பட்ட பிரக்ஞை கொண்டிருக்கிறேன் என்று கூவியபடி என்னை அரசவைகளில் விற்பனைக்கு வைக்கவேண்டும் அல்லவா? தொல்குடிகள் வாழும் காடுகளுக்குச் சென்று அரும்பொருள் என்னைப் பார் என்று சொல்லி பொருள்கொடை பெறவேண்டும் அல்லவா? கூரிய அம்பு என என்னை கூவி முன்வைக்கவேண்டும். கூரிய அம்பெனில் குறியை எய்தியிருக்குமே என ஒருவன் கேட்டால் கூசி விழிதாழ்த்தவேண்டும். சொல்லெண்ணி வேதம் கற்று, பொருள்தேர்ந்து நுண்மைபெறுவதெல்லாம் அந்த இழிவுக்காகத்தானா?” அவன் மூச்சு ஏறியிறங்கியது. “நான் என் அன்னையையும் தந்தையையும் உதறி காட்டுக்கு வந்தது இதற்காகத்தானா? இங்கு அறிவை பிச்சையிடுங்கள் என்று கையேந்தி நின்று செய்த தவத்தின் பொருள் இதுதானா?”
முதலில் எழுந்தவன் சொன்னான் “ஆசிரியரே, இங்குள்ள அத்தனை கல்விநிலைகளிலும் வினாக்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. குருமரபுகள் முரண்பட்டுப் பிரியும் செய்திகளே நாளும் வந்து செவிசேர்கின்றன. கானகங்கள் கொந்தளிக்கின்றன. இனி, சமித்துக்களாலும் நெய்யாலும் மட்டும் வேள்விக்குளம் எரியாது. வேதப்பொருள் பெய்யப்பட்டாகவேண்டும். இங்கு பொழியப்படும் நெய் சென்றுசேருமிடம் எது? ஆத்மன் என நின்றிருக்கும் நான் எதற்காக என் பிரக்ஞையின் முழுமையென நின்றிருக்கும் பரமாத்மனுக்கு அவியளிக்கவேண்டும்? தானே தனக்கு அவியளிக்கச் செய்து அமர்ந்திருப்பதா அது?”
“நம் முதலாசிரியரின் சொற்கள் இவை. உச்சிப்புள்ளியின் வாசலைப் பிளந்து உள்ளே நுழைந்தது அது. அதற்கு உறைவிடங்கள் மூன்று, கனவுகள் மூன்று. அது ஆனந்தமயமானது. அது ஆர்ப்பரிக்கிறது, இது என் உறைவிடம், இது என் உறைவிடம், இது என் உறைவிடம். அது இங்கு வந்து உறைந்தபின்னர் வேதமாவது ஏது? வேள்விதான் ஏது?” என்றான் கரியவன். “நான் கேட்பவை நூலிலிருந்து எழும் சொற்கள் அல்ல. விடாய்கொண்டவன் எதிரே வருபவனிடம் கேட்பதுபோன்றவை இச்சொற்கள். நீர் இருக்கும் வழியன்றி பிறிது எதுவும் பயனற்ற மொழியே.”
“மைந்தா, இது நசிகேதன் கேட்ட வினா” என்றார் திவாகரர். “இங்குள்ளது அறிவு. அறிவின் எல்லையைச் சென்று முட்டிக்கொண்டவன் தேடவேண்டியது ஊழ்கத்தின் பாதை. அங்கு செல்க!” திரும்பி கரியவனிடம் “உன் பாதை பயனுறுமெய்யை உசாவுவது. அதை நீ தேர்க!” என்றார். அவன் “அப்படியென்றல் இங்கு நான் கற்றவை பொருளற்றவையா?” என்றான். “இல்லை. அவை நீ ஏறிச்சென்ற படிகளாக அமையலாம். இங்கிருந்து நீ பெற்ற ஒற்றைச் சொல்லில் இருந்து நீ எழலாம்” என்றார் திவாகரர்.
அவர்கள் உடலை அசைத்தபடி நின்றனர். திவாகரர் கைகூப்பி “நன்று, உனக்கு என் அருள் உடனிருக்கும். நீ விழைவது எதுவோ அது நீ என ஆகுக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றபடி எழுந்தார். அவரது மாணவர்கள் ஆசிரிய வணக்கத்தைப் பாடினர்.
[ 9 ]
அர்ஜுனன் முன்னரே சென்றுவிட்டான். நகுலனும் சகதேவனும் பெருங்குடிலில் பிற மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். தருமன் எழுந்து வெளியே வந்தபோது கரிய இளைஞனை பார்த்தார். அவனிடம் பேசாமல் பிற மாணவர்கள் விலகிச் சென்றுகொண்டிருந்தனர். தருமன் அவனை நோக்கி புன்னகைத்து “உத்தமரே, தங்கள் பெயரை அறிய விழைகிறேன்” என்றார். “என்னை பாவகன் என்கிறார்கள்” என்று அவன் சொன்னான். “அது இக்குருகுலத்திற்காக நான் சூடிக்கொண்ட பெயர். எரிவடிவோனாக எழவேண்டும் என அன்று நான் கனவு கண்டேன்.” தருமன் புன்னகைத்து “அக்கனவு இன்னமும் நீடிக்கிறது என நினைக்கிறேன்” என்றார்.
உள்ளிருந்து முதலில் எழுந்த மாணவன் வெளிவந்தான். தருமன் “அவரும் தாங்களும் சொல்லாடுவதுண்டு என்று எண்ணுகிறேன்” என்றார். “ஆம், அவர் பெயர் பவமானன். எங்கள் பெயர்களே முதலில் எங்களை அணுக்கமாக்கியது” என்றான் பாவகன். பவமானன் அணுகிவந்து வணங்கினான். “நீங்கள் சொல்வது உண்மை பவமானரே, பாரதவர்ஷத்தின் அனைத்துக் காடுகளும் எரிந்துகொண்டிருக்கின்றன” என்றார் தருமன்.
“ஏனென்றால் இது வளரும் மரம். உலக்கைக்கு பூண்கட்டலாம், மரத்திற்கு கட்டப்படும் பூண் உடைந்து தெறிக்கும்” என்று அவன் சொன்னான். அவர்கள் பெருமுற்றத்தில் இறங்கி குடில்களை நோக்கி சென்றனர். இரவு குளிருடன் சூழ்ந்திருந்தது. இலைத்தழைப்பின் இடைவெளிகளில் ஓரிரு விண்மீன்கள் தெரிந்தன. “உங்களிடம் பேச விழைகிறேன், உத்தமர்களே. நானும் உங்களைப்போல் ஐயம் கொண்டு அலைக்கழியும் மாணவனே” என்றார் தருமன்.
அவர்கள் மேற்காக நடந்தனர். குடில்களிலிருந்த வெளிச்சம் கண்களைவிட்டு மறைந்தபோது சூழல் தெளிவாகத் தொடங்கியது. மரங்களுக்கு அடியிலிருந்த பாறைகள் உள்ளொளி கொண்டு துலங்குபவை போல் தெரிந்தன. ஒரு பாறைமேல் தருமன் அமர்ந்ததும் அவர்கள் அருகே அமர்ந்தனர். “நசிகேதனின் கதையை நான் அறிந்திருக்கிறேன். இன்று ஆசிரியர் அதை எப்பொருளில் உரைத்தார் என்று விளங்கவில்லை” என்றார் தருமன். பவமானன் “அந்தத் தொன்மையான கதை ஒவ்வொரு வேதமரபிலும் ஒவ்வொருவகையாக விளக்கமளிக்கப்படுகிறது, அரசே” என்றான். “எங்கள் குருமரபில் அது வேதச்சடங்குகளின் உண்மைநாடும் கதையென்றே கொள்ளப்படுகிறது.”
முன்பு வாஜசிரவஸ் என்னும் ஒரு முனிவர் இருந்தார். அவர் கடம் என அழைக்கப்பட்ட யஜூர்வேதமரபின் முதன்மை ஆசிரியர். கடமென வழங்கப்பட்ட நிலப்பகுதியின் அரசரும்கூட. அவர் நூறு பெருவேள்விகளை இயற்றியவர் என்கின்றன நூல்கள். நூறாவது வேள்வியில் ஆயிரம் பசுக்களை அவர் அந்தணர்களுக்கு அளித்தார். மரக்குடுவையிலிருந்த நீரை ஊற்றி அவர் பசுக்களை கையளிப்பதைக் கண்டு அவர் மைந்தனும் மாணவனுமாகிய நசிகேதன் அருகே வந்தான். தந்தையே, நாம் கொடுப்பது எதற்காக என்றான்.
“கொடுப்பதன் மூலம் பசியாற்றமுடியும் என்றால் பசியென அமைந்த நெறியுடன் போரிடுகிறோமா? துயரைக் களைய முடியும் என்றால் அதை யாத்த படைப்புத்தெய்வத்தை அறைகூவுகிறோமா?” என்று நசிகேதன் கேட்டான். “இல்லை மைந்தா, கொடுப்பதன்மூலம் இப்புடவிநெசவில் எதுவும் மாறுவதில்லை. இடக்கையிலிருந்து வலக்கைக்கு செல்கிறது பொருள். ஆனால் அச்செயல்வழியாக நாம் விடுதலை கொள்கிறோம்” என்று தந்தை சொன்னார். “ஏற்க எழுந்த கைகளும் எரிந்து எழுந்த தழலும் ஒன்றே. ஒன்று இப்புவியின் தழல். இன்னொன்று அவ்விண்ணின் கை. அளிப்பதும் அவியிடுவதும் வேள்விதான்.”
“கொடுப்பதனூடாகவும் படைப்பதனூடாகவும் நாம் பெறுவதுதான் என்ன?” என்றான் நசிகேதன். “இங்கு நாம் அடைந்த ஒவ்வொரு பொருளும் நம்முள் ஓர் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. அப்பொருளை அளிக்கையில் அவ்விடத்தில் அதுவாக ஆன பிரக்ஞை மட்டுமே எஞ்சுகிறது. கொடுத்து ஒழிந்தவன் பிரக்ஞையால் நிறைகிறான்” என்று தந்தை சொன்னார். “இன்று நான் செய்யும் வேள்வி மகாபூதம் எனப்படுகிறது. என் பொருட்கள் அனைத்தையும் இரவலர்க்கு அளிப்பேன். என் எண்ணங்கள் அனைத்தையும் எரிதழலில் இடுவேன். எனக்குரிய அனைத்தையும் அளித்தபின் எஞ்சுவதிலிருந்து என்னை அறிவேன்.”
“தந்தையே, உங்களுக்குள் மைந்தன் என பேருருக்கொண்டு அமர்ந்திருக்கும் என்னை அளிக்காமல் எப்படி விடுதலை பெறுவீர்கள்?” என்று நசிகேதன் கேட்டான். “நானென்று அங்கே இருப்பது அகலாது உங்களுள் தூயபிரக்ஞை எப்படி பெருகிநிறைய முடியும்?” தந்தை “உன்னை கொடையளிக்க இயலாது, மைந்தா. எங்கிருந்தாலும் நீ என் மைந்தனென்றே இருப்பாய்” என்றார். “இல்லை தந்தையே. இறப்புக்குப்பின் எவரும் மைந்தரென்றும் தந்தை என்றும் எஞ்சுவதில்லை. அவை இம்மண்ணிலிருந்து ஊறி ஆத்மாமேல் படியும் அடையாளங்கள் மட்டுமே. என்னை யமனுக்குக் கொடையளித்தால் நீங்கள் என்னை முழுமையாக அளித்தவராவீர்கள்.”
தந்தை திகைத்து விழிநீருடன் மைந்தனை பார்த்தார். “ஒற்றை ஒருகணம் என்னை அளிப்பதாக எண்ணிவிட்டீர்கள், தந்தையே” என்றான் நசிகேதன். “கையில் கொடைநீருடன் நின்று என்னை இறப்புக்கு அளிப்பதாக எண்ணியமையால் அக்கொடை நிகழ்ந்தது என்றே ஆயிற்று. நான் என் இறப்பை தேடிச்செல்கிறேன்.” கண்ணீருடன் மைந்தனை நோக்கி கைநீட்டி “மைந்தா” என்று அழைத்தார் தந்தை. “துயர் களைக, தந்தையே! என்னை அளித்துவிட்டீர்கள். உங்கள் உள்ளம் விடுதலைகொள்ளட்டும்” என்றபின் அவன் தன் இடையாடையை களைந்தான். “அணையாதவன் என எனக்கு நீங்கள் இட்டபெயரை பொருளாக்குகிறேன், தந்தையே” என்றபின் நசிகேதன் தன் அடையாளங்கள் அனைத்தையும் துறந்து அரண்மனைவிட்டு இறங்கிச்சென்றான்.
“அங்கு முடியவில்லை அக்கதை” என்றான் பாவகன். “தளர்ந்து வேள்விப்பந்தலில் விழுந்த தந்தை எரிந்தெழுந்தாடிய தழலையே நோக்கிக்கொண்டிருந்தார். கொடுப்பது எத்தனை அரியதென்று அப்போது அறிந்தார். கொடுப்பவற்றில் இருந்து முற்றிலும் விலகாதவனால் அதற்கு நிகரானதைப் பெறமுடியாதென்று பின்னர் உணர்ந்துகொண்டார். அவருக்கு இழந்த மைந்தனிலிருந்து ஒரு கணமும் விடுதலை கிடைக்கவில்லை. அவன் அவருள் வளர்ந்தான். தளிரென ஊடுருவிப் பிளந்த பாறையை கிளையில் ஏந்தி நின்றிருக்கும் மரம் என் அவன் தந்தையை ஏந்தியிருந்தான்.
பவமானன் புன்னகையுடன் “நசிகேதன் யமனிடம் சென்று மெய்யறிவை கேட்டுணர்ந்ததாக சொல்கிறார்கள். அவன் ஏன் யமனிடம் சென்றான் என்பதற்கான விளக்கங்கள் பல. எங்கள் முதலாசிரியர், உயிர்கள் அனைத்தும் யமனுக்கு உயிர்க்கொடையளிப்பவையே என்பதனால் அவனிடம் சென்றான் என்பார். உயிரை யமனுக்கு அளித்து அவை பெற்றுக்கொள்பவைதான் என்ன என்று அவன் அவரிடம் கேட்டான். அழிவின்மையை என்று அதற்கு யமன் மறுமொழி சொன்னான்” என்றான் பவமானன்.
“யமன் நசிகேதனிடம் கேட்ட மூன்று வினாக்கள் விடைகள் ஊழ்கத்தில் எண்ணி ஒளிர வைக்கவேண்டியவை. வேள்விக்குரிய தூயஎரி எது? எப்போதும் அணையாத சுடர் எது? அனைத்தையும் சமைக்கும் தீ எது? மூன்றுக்கும் விடை ஒன்றே, ஆத்மா எனும் தழல். அதிலிருந்து உசாவியும் சொல்லாடியும் முன்செல்லும் பாதைகள் பல உள்ளன. எங்கு அனைத்தும் இணைந்து ஒற்றைவினாவாக ஆகின்றனவோ அங்கு சொல் திகைத்து நின்றுவிடுகிறது” என்றபின் பவமானன் பெருமூச்சுடன் அமைதியானான்.
இருளின் ஓசையைக் கேட்டபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். நெடுநேரத்திற்குப்பின் பாவகன் “நான் நாளை கருக்கிருட்டில் கிளம்புகிறேன். சார்வாகர்களின் துவைதக்காட்டுக்குச் செல்வதாக இருக்கிறேன். இவர்களின் வீண்வேதச் சடங்குகளும் விளக்கென எரியாத சொற்களும் என்னை சலிப்பிலாழ்த்தத் தொடங்கி நெடுநாட்களாகின்றன” என்றான். பவமானன் “எனக்கும் அதே சலிப்புதான். நானும் நாளை காலை கிளம்புகிறேன். ஆனால் எங்கு செல்வேன் என்று தெரியவில்லை” என்றான்.
ஆடை திருத்தி எழுந்துகொண்ட தருமன் “பாவகரே, நீர் செல்லும் வழியை நான் நன்கறிவேன். அதை உமக்கு விளக்குகிறேன்” என்றார். நிமிர்ந்த பாவகனிடம் “ஏனென்றால் அங்கிருந்துதான் நான் இங்கு வந்தேன்” என்று சொல்லி புன்னகைத்தார். ஒருகணம் திகைத்தபின் பாவகன் வெடித்துச் சிரித்தான். பவமானன் “நான் இங்கிருந்து சாந்தீபனி குருநிலைக்குச் செல்லலாம் என எண்ணுகிறேன், அரசே” என்றான். “அங்கு அவர்கள் வேதமோதுதலை முழுமையாக தவிர்க்கிறார்கள். சொல் என்பது அறிவென்பதால் முற்றறியாத சொல் பயனற்றது என்கிறார்கள். அறிதலின் வழி ஒன்று அங்கே திறக்கமுடியும்” என்றான்.
பாவகன் “அவர் இக்குருநிலையின் விக்ருதிப்பிளவினூடாக வெளியேறுகிறார். நான் இதன் அபானவழியினூடாக வெளியே செல்கிறேன்” என்றான். பவமானன் நகைத்தபடி “நான் செல்லும் வழி சாந்தீபனி குருநிலையின் அபானமாக இல்லாதவரை நன்று” என்றான். சிரிப்பினூடாக அவர்கள் அந்தக் கடந்துசெல்லலை எளிதாக்கிக் கொள்கிறார்கள் என தருமன் உணர்ந்தார். அவர் உணர்ந்ததை அறிந்த பாவகன் “உதறுவது போல் துயர்மிக்கது பிறிதில்லை, அரசே. இந்த மரங்கள் ஒவ்வொன்றிலும் இந்தப் பாறைகள் அனைத்திலும் என் அகம் படிந்துள்ளது. நான் விட்டுச்செல்வது அதையும்தான்” என்றான். தருமன் “நன்று சூழ்க!” என வாழ்த்தினார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
இலங்கை -கடிதங்கள்
ஜெ
கிரிதரன் நவரத்தினம் எழுதிய இந்தப் பதிவுதான் என் பார்வை
ஆர்.சிவக்குமார்
எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை!
ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.
*****************************************
விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’
ஜெயமோகன்: “முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.
*******************************************
இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.
ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.
ஜெயமோகன் தன் அறிவுக்குட்பட்டு, இனப்படுகொலை பற்றிய தனது புரிதலுக்கேற்பப் பதிலை அளித்திருக்கின்றார். ஆனால் இது பற்றிய ஜெயமோகனின் பதிலை இணையத்தில் குறிப்பிட்டுக் கொதித்தவர்களெல்லாரும் , ஜெயமோகனின் முழுப்பதிலையும் குறிப்பிடாமல் , தங்களுக்குச்சார்பான ஒரு பகுதியை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு குமுறுகின்றார்கள். ஜெயமோகன் இலங்கையில் நடந்ததை மட்டுமல்ல, காங்கோ, பொலிவியா, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கையில் நடைபெற்ற தமிழ், ஜேவிபி போராட்டங்கள் பற்றியெல்லாம் இனப்படுகொலைகள அல்ல என்று ஜெயமோகன் கூறியிருக்கின்றார்.
அவற்றைப்பற்றி எதுவுமே குறிப்பிடாமல், இலங்கைத்தமிழர்களுக்கெதிரான அரச படுகொலைகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டுப் பலர் குமுறி வெடித்திருக்கின்றார்கள்.
உண்மையிலென்ன செய்திருக்க வேண்டும்?
ஜெயமோகன் கூறிய முழுப்பதிலையும் குறிப்பிட்டு, அந்தப்பதிலின் ஒவ்வொரு வரியும் ஏன் தவறு என்று தம் கருத்தை நிரூபித்து வாதிட்டிருக்க வேண்டும்? அவ்விதம் செய்வதற்குப் பதில், ‘ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்று கூறிவிட்டார்.’ என்று கொதித்தெழுகின்றார்கள்.
இவ்விதம் கொதித்தெழுவதற்குப் பதில் இனப்படுகொலை பற்றிய அறிவினைச் சிறிது அதிகரித்துக்கொண்டு வாதிட்டிருக்கலாம். அவ்விதம் செய்யாமல், அல்லது செய்வதற்குப் போதிய ஆர்வமற்று ‘ஜெயமோகன் ஒழிக’ என்று குரலெழுப்புவது மிகவும் எளிதானது. எனவேதான் அவ்விதம் எதிர்வினையாற்றுகின்றார்கள்.
முதலில் ஜெயமோகன் கூறியவை பற்றிப்பார்ப்பதற்கு முன்னர் இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபை 1948இல் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தைச்சிறிது பார்ப்போம். அது பின்வருமாறு கூறுகின்றது:
“1948: The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (CPPCG) was adopted by the UN General Assembly on 9 December 1948 and came into effect on 12 January 1951 (Resolution 260 (III)). Article 2:
Any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life, calculated to bring about its physical destruction in whole or in part; imposing measures intended to prevent births within the group; [and] forcibly transferring children of the group to another group. (Article 2 CPPCG)”
இதன் சாரத்தினைப் பின்வருமாறு கூறலாம்:
இத்தீர்மானத்தின்படி தேசிய, இன, மதக் குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் கொலை செய்வது மட்டும் இனப்படுகொலை அல்ல. அக்குழுக்களை , அல்லது அக்குழுக்களின் அங்கத்தவர்களை உடல் ரீதியாக, உள ரீதியாகத் துன்புறுத்துவதும் இனப்படுகொலைதான். அது மட்டுமல்ல அக்குழுக்களை முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் எண்ணத்துடன், திட்டமிட்டு அந்தக்குழுக்கள் மத்தியில் பிறப்பு வீதத்தைத்தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதும், குழந்தைகளைப் பலவந்தமாக ஒரு குழுவிலிருந்து இன்னுமொரு குழுவுக்கு மாற்றுவதும், இதற்கான வாழ்வியற் சூழலினை திட்டமிட்டு உருவாக்குவதும். இனப்படுகொலைக்குரிய குற்றங்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 1946இல் ஏற்றுக்கொண்ட இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம் வருமாறு:
“United Nations General Assembly Resolution 96 (I) (11 December) Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind, …and is contrary to moral law and to the spirit and aims of the United Nations. … The General Assembly, therefore, affirms that genocide is a crime under international law…whether the crime is committed on religious, racial, political or any other grounds…[10]
இதன் சாரத்தைப்பின்வருமாறு கூறலாம்: “:இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்தமாக மனிதக் குழுக்களின் வாழும் உரிமையை மறுப்பதாகும். ுகொலை என்பது தனிப்பட்ட மனிதரொருவரின் வாழும் உரிமையை மறுப்பதாகும்.”
இவ்விரண்டு தீர்மானங்களின்படி மிக எளிதாக ஜெயமோகனின் இனப்படுகொலை பற்றிய தடுமாற்றத்தினைபோக்கியிருக்கலாம். ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித் தடுமாறியதற்குக் காரணம் அரசுகள் எல்லாம் கிளர்ச்சி செய்பவர்களைத் தம்முடன் போர் செய்பவர்களாகக் கருதிக்கொல்கின்றார்கள். அவையெல்லாம் இனப்படுகொலைகளா என்று குழம்பியதுதான்.
ஐக்கியநாடுகளின் இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம், குற்றங்கள் பற்றிய தீர்மானங்களின்படி அவையெல்லாம் கூட இனப்படுக்கொலைகள்தாம். எனவே இலங்கையில் நடைபெற்றதும் இனப்படுகொலைதான். ஜெயமோகனின் தர்க்கத்தின்படி அவையெல்லாம் அரசுகளின் கிளர்ச்சிகளுக்கெதிரான போர் நடவடிக்கைகள். அந்த அடிப்படையில்தான் அவர் இலங்கைத்தமிழர்கள் மீதான அரச படுகொலைகளையும் அணுகுகின்றார்.
ஜெயமோகனின் அவையெல்லாம் இனப்படுகொலைகளா? என்னும் வினாவுக்குரிய விடையாக இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை பற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் அவையும் இனப்படுகொலைகளே.
இவ்விதம் தர்க்கபூர்வமாக ஜெயமோகன் கூறியதற்கெதிராக வாதிடுவதற்குப்பதில், அவர் கூறியதில் இலங்கைத்தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை மட்டும் பிரித்தெடுத்தும் கொண்டு, ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உணர்ச்சியில் குமுறியிருப்பதைப்பார்த்தால் ஒன்றினைக் கூறத்தோன்றுகிறது. தர்க்கம் செய்யும்போது ஆத்திரப்படாதீர்கள். கூறியவற்றை உங்களுக்குச் சார்ப்பாகத்திரிபு படுத்திக்கருத்துகளை வெளியிடாதீர்கள். முறையாக வரிக்கு வரி உங்கள் பக்க நியாயங்களை எடுத்துரையுங்கள். தர்க்கத்தில் உங்கள் பக்க நியாயங்களை வெளிப்படுத்துங்கள்.
இனப்படுகொலை பற்றிய பலரின் வரைவிலக்கணங்களைப் பின்வரும் இணையத்தளத்தில் வாசியுங்கள். அது பற்றிய புரிந்துணர்வினை அதிகரிக்க அது உதவும்.
https://en.wikipedia.org/wiki/Genocide_definitions
================================
அன்புள்ள ஜெ,
வணக்கம். ஈழம், இன்ப்படுகொலையா, போர் குற்றமா என்ற
விவாதத்தில் ஒரு முக்கிய விசியம் பேசப்படவில்லை. விடுதலை
புலிகளின் treasury உலகெங்கும் (முக்கியமாக அய்ரோப்பியா,
கனடா, ஆஸ்த்ரேலியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்)
பல நூறு பிணாமிகள். முகவர்கள் வசம் இன்றும் சிக்கியுள்ளன.
போர் நடக்கும் போது, தினமும் பல லச்சம் / கோடி ரூபாய் செலவு
ஆகியிருக்கும். ஆயுதம், மருந்து, டீசல், தளவாடங்கள் வாங்க, கடத்த
உலகெங்கும் மிக பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைய புலிகள்
நிர்மாணித்து, shell companies, off shore accounts, front companies மூலம்
நடத்தி வந்ததை அறிவீர்கள். போர் முடிந்த இந்த 7 ஆண்டுகளில்
குமரன் பத்தமாநபனை மட்டுமே பிடிப்பட்டார். அவர் வசம் இருந்த
நிதி ஒரு பகுதி தான். இன்னும் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான
நிதிகள் உலகெங்கும் சிதறி கிடக்கின்றன. இதை வைத்து கொண்டு,
வாழ்க்கையை அனுபவிக்கும் பினாமிகள் இன்று வரை கள்ள மவுனம்
காக்கின்றனர். ஈழத்தில் இன்று வறுமையில், வேலையின்மையில் வாடும்
மக்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதி இது. நியாயமாக அவர்களின்
வாழ்வாதாரத்திற்க்காக, மறுவாழ்விற்க்காக அய்.நா அல்லது செஞ்சிலுவை
சங்கம் மூலம் செலவு செய்யப்பட வேண்டிய நிதி அது. புலிகளின்
பினாமிகளை நோக்கி கேட்க்கப்ட வேண்டிய கேள்விகள் இவை.
ஆனால் ஈழ ஆதரவு உணர்ச்சி போராளிகள் யாரும் இந்த மிக முக்கிய,
தேவையான விசியத்தை பேசுவதே இல்லை. பல வருடங்களாக
நான் இணையத்தில் பல ‘போராளிகளிடம்’ கேட்டு சலித்துவிட்டேன்.
பழசை மட்டும் தான் பேசுகிறார்கள். ராஜபக்சேவை தண்டிபதில்
காட்டும் ஆவேசத்தை இதில் காட்டுவதில்லை. இதை பற்றியும் எழுதுங்கள்.
அன்புடன்
K.R.அதியமான்
சென்னை – 96
==========================================
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களது பதில் கட்டுரைக்கு நன்றி. உங்களது பதிலில் எனக்குள்ள சில கேள்விகளையும், விளக்கங்களையும் முன்வைக்கவிரும்புகிறேன்.
இனஅழித்தொழிப்பு 80களுக்கு முன்பும், 2009க்கு பிறகும் இலங்கையில் நடந்தது இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். 1956ல் பண்டாரநாயகே பதவிக்கு வந்த உடன், சிங்களா ஒன்லி என்கிற சட்டம் மூலம் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக அறிவிக்கப்படுகிறது. அதற்க்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து, அதற்கு பிறகு நடந்த கல்ஓயா கலவரத்தில் 150 தமிழர்கள் வெட்டிக்கொல்லபடுகின்றனர். பிறகு தொடர்ந்து 1958ல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைதான் இரு சமூகங்களுக்கும் இடையேயான நிரந்தர பிளவை ஏற்படுத்துகிறது. 1958 மே 25ம்தேதி பொலன்னறுவை பண்ணையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட எழுபது தமிழர்கள் கரும்புதோட்டத்தில் வெட்டுகொல்லப்பட்டனர். 1958ம் ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பலியானார்கள். பிற்பாடும் தொடர்ந்து 74, 77, 78 என பல படுகொலைகள் இனரீதியாக நடந்தே வந்திருக்கிறது.
 
இனஅழித்தொழிப்பு என்று ஏற்றுகொள்ளபடவேண்டும் என்றால் அது தொடர்ந்து நடைப்பெற்றிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். ரூவாண்டாவில் 1994ல் டுட்சி இனத்துக்கு எதிராக மிகப்பெரிய இனஅழித்தொழிப்பு நடைப்பெற்றது. உது இனத்தை சேர்ந்த மிதவாத தலைவர்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு அங்கு அதே மாதிரியான படுகொலைகள் நடக்கவில்லை. எனினும் 94ல் நடைபெற்றது இனபடுகொலை என்று சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
 
மலையக தமிழர்கள், அடிப்படையில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். ஈழத்தமிழர்கள், இலங்கையின் பூர்வீக குடியினர். ஒரே மொழி பேசினாலும் இவையிரண்டும் அடிப்படையில் இருவேறு தேசிய இனங்கள். எனவே மலையக தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் நடைபெறவில்லை என்பதால் அது இனபடுகொலையல்ல என்று எப்படி கூற முடியும்?  மேலும், 2013ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்து, 1970களில் அகதிகளாக வடக்குபகுதிகளில் குடியேறிய மலையக தமிழர்களும் இந்த போரில் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என்பதே. 2009ல் கொல்லப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மலையக தமிழர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. 
 
ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ்முஸ்லிம்கள் என இந்த மூன்று பிரிவினரிடையே 1915 முதலே பல கருத்துவேறுபாடுகளும் உள்குத்துக்களும் நடந்தேறியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சில காட்டிகொடுப்புகளும், பலிகளும், பின்பு புலிகள் 1990 அக்டோபரில் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றியதும் நடந்தது. பிறகு, 2002ல் புலிகள் அமைப்பு, முஸ்லிம்களிடம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டனர், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கிமிடம், பிரபாகரன், வட-கிழக்கு பகுதி தமிழ் இஸ்லாமியர்களுக்கும் உரியதே என்று வாக்குறுதி கொடுத்ததும் நடந்தது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் மலையக தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் புலிகளிடம் நெருங்கி வந்ததும், தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று பிரபாகரன் சொன்னதும் நடந்தது.
 
பொதுமக்களை, போர்முனைக்கு கொண்டு சென்றது புலிகளின் தவறு. ஆனால், ஒரு பகுதியை, யுத்தத்திலிருந்து பாதுகாக்கபட்ட பகுதி என்று அரசுதான் அறிவிக்கிறது. அதில் மக்களை குழும செய்கிறது. பிறகு அந்த பாதுகாப்பு வளையத்தில், குண்டு மழைபொழிந்து மக்களை கொல்கிறது. 2009ம் வருடம் ஜனவரி மாதம் 21ம் தேதி, சுதந்திரபுரம் என்ற இடத்தில் இதே போல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கிறது அரசு. அதை நம்பி ஐ.நாவின் ஊழியர்கள் (11வது கான்வாய்) உணவு பொருட்களை எடுத்து செல்கிறார்கள். ராணுவத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சென்ற சில மணித்துளிகளிலேயே குண்டு வீசபடுகிறது. குறுந்தகவல்கள் மூலம் குண்டு வீசுவதை நிறுத்த சொல்லி ஐ.நா ஊழியர்கள் கதறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கொல்லபடுகிறார்கள். அந்த ஊழியர்கள் குண்டுவீச்சை நிறுத்தும்படி கோரிய குறுந்தகவல்கள் உட்பட இவையெல்லாம் மிக விரிவாகவே சார்லஸ் பேட்ரி (ஐ.நா உள்ளக ஆய்வு குழு) அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்லஸ் பேட்ரி அறிக்கையை வெளியிடுவதற்க்கே, ஐ.நா மிகவும் தயங்கியது. பிறகு முக்கியமான சில இடங்களை கறுப்பு மை கொண்டு அழித்துவிட்டு, வெளியிட்டது. இணையத்திலும் கிடைக்கிறது.  NFZ1, NFZ2 NFZ3 என அனைத்து பாதுகாப்பு வளையங்களிலும் இதே ரீதியான படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.  இறுதி போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்முறை என பல ஆதாரங்கள் இது புலிகளுக்கு மட்டும் எதிரான போர் அல்ல என்பதை நிருபிக்கிறது.
 
இலங்கையில் நடந்தது போர்குற்றம் என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்றும் ஐ.நா அமைத்த நிபுணர் குழு ஏற்கனவே அறிக்கை சமர்பித்து விட்டது. எனினும் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. போரின்போதே ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சொல்லி பலமுறை கோரிக்கை விடுத்தும் பான் கீ மூன் செவிசாய்க்கவில்லை. உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு இல்லை என்று மறுத்து விட்டார். 2009 ஜூனில், ஐ.நாவின் சட்டகுழு ஆர்டிக்கிள் 99படி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று பரிந்துரை செய்தது. அதையும் பான் கீ மூன் ஏற்கவில்லை. 
இந்த சூழலில், இனபடுகொலை என்று குரல் கொடுப்பதால்தான், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது எப்படி சரியாக இருக்கமுடியும்? போர்குற்றம் என்றால் வெறும் அம்புகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, எய்தவர்கள் தப்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று கருதியே இது வெறும் போர்குற்றம் மட்டுமல்ல, இதன்பின்னே உள்ளவர்கள், இதற்கு உதவியவர்கள் என அனைவரும் தண்டிக்கபடவேண்டும் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இனபடுகொலை என்கிற வாதம், முன்வைக்கபடுகிறது. இனபடுகொலை என்று சொல்பவர்களின் நோக்கத்தை ஆராய்வதை விட தரவுகளின் அடிப்படையில் இது இனபடுகொலையா என்று ஆராய்வதுதானே சரியாக இருக்க முடியும்?
கண்ணுக்கு முன்னே குழந்தைகள் வெடித்து சிதறியதையும், வாழ்க்கைதுணைகள் செத்து மடிந்ததையும், தாய்தந்தையர் கொல்லப்பட்டதையும் பார்த்து அலறி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்குபடி கோரும் அந்த தமிழர்களின் குரல் வரலாற்றில் இப்படி மறக்கடிக்கப்படவேண்டியதுதானா? நடந்த கொடுமைகளுக்கு நீதி வழங்காமல், எப்படி அவர்கள் தமது கடந்தகால இழப்புகளை மறந்து ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ முடியும்?
இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓரளவு வசதியுடன் வாழ்கிறார்கள். மிகமோசமாக நாம்தான் அவர்களை கைவிட்டுள்ளோம் என்கிற உங்களது வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். எங்களாலான உதவிகளை, இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர் குழந்தைகளின் கல்விக்காக செய்துவருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறேன். 
அன்புடன்
செந்தில்குமார்
Click here to 
 
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
August 7, 2016
சார்வாகமும் நீட்சேவும்
 
நீட்சே
அன்புள்ள ஜெ,
சொல்வளர்காட்டின் தத்துவம் குறித்த உரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன. கடைசியாக தத்துவம் நம்பமறுப்பவனுக்கானதாக அல்லாமல் நம்ப ஆயத்தமானவனுக்கான உருவை அடைந்துள்ளதாக எண்ணுகிறேன். இது இலக்கியத்தில்தான் சாத்தியம் என்பது ஒருபுறம் இருக்க, உங்கள் படைப்புகளிலேயே இது அறிதான ஒன்றாகத்தான் உள்ளது. அதற்கு காரணம் ‘விஷ்ணுபுரத்தில்’ வருவது போல இது ஒரு தர்க்க சபையில் நடக்கவில்லை என்பதே. இங்கிருப்பது தருமன் என்னும் மாணவன். அவன் பல தரப்புகள் உள்ளன என்னும் அறிவாலேயே விவாதிக்க வரவில்லை கண்டடைய வந்திருக்கிறான். தத்துவம் பயில்பவனுக்கு தெரியும், விவாதிக்காமல் உள்வாங்குவது எவ்வளவு கடினம் என்று. அதே நேரத்தில் இந்திய தத்துவம் இயங்கும் முறை இவ்வாறே இருந்திருக்கமுடியும். ஒரு தத்துவ முறையின் அனைத்து தர்க்க சங்கிலி தொடரையும் முழுமையாக அறிந்த பின் ஆதன் வலிமை குறைந்த கண்ணியை உடைத்து எறிவது அல்ல, ஆதை மேலும் பலப்படுத்தி தனக்கானதாக கண்டடைவதே இந்திய முறையின் சாரமாக உள்ளது. தர்க்க சபை விவாதங்கள் எல்லாம் பிறகு தான். இந்த மரபு இவ்வத்தியாயங்களில் இயல்பாக வெளிப்படுகிறது.
சமீபத்தில் வந்த அத்தியாயங்களில் சார்வாகம் குறித்த உரை ஒரு வெளிப்பாடு. ஆச்சர்யப்படுமளவிற்கு சார்வாகம் நீட்ஷேவின் தத்துவக் கொள்கையை ஒத்துள்ளது, மன்னிக்கவும் மாறாக சொல்வதே நியாயம். அரை அத்தியாயத்திற்கே வரும் அந்த உரை கிட்டதட்ட நீட்ஷேவின் ஓட்டுமொத்த தத்துவ கொள்கையையும் அடக்கியதோடல்லாமல் அவர் தத்துவம் விரிவாக பேசத்தவறிய இருத்தல்(Ontology) மற்றும் புறப்புறம்(Nuemenon) குறித்த அணுகுமுறையையும் சுட்டிகாட்டுகிறது.
‘Ubermensch’
“எவர் தெய்வமும் மண்ணையும் விண்ணையும் முழுதாளவில்லை. ஆற்றல் வெல்கிறது என்பதுதான் பருப்பொருளின் மாறா நெறி. பெரியபாறை சிறியபாறையை உடைக்கும். யானை முயலை மிதித்துக் கடந்துசெல்லும். எனவே ஆற்றல்கொண்டவராகுக. வெற்றிகொள்க. அதையே மானுடருக்கு நாங்கள் சொல்கிறோம்”
‘Gott ist Tod’
“எரியூட்டுதலை, மூவேளை நீர்வணக்கத்தை அது மறுத்தது. தெய்வங்களை செறுத்தது. பூசகர்களை, அவர்களின் சடங்குகளை இகழ்ந்தது. இங்குள்ளது பருவெளி. மானுடன் அதிலொரு துளி. அதை ஆக்கி, உண்டு, அதில் இன்புற்று மறைவதே அவனுக்குரிய கடன். இதற்கப்பாலுள்ள எதன் ஆணையையும் நிறைவேற்றும் பொறுப்பு அவனுக்கில்லை”
Aesthetic Affirmation
”அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு விழுப்பொருட்கள் மானுடருக்குண்டு என்று வகுத்துள்ளனர் வைதிகர். இன்பத்திற்கு உதவாத அறம் பயனற்றது. பொருள் பொருளற்றது. வீடு என்பது நிலைபேறான இன்பமே. எனவே இன்பமன்றி விழுப்பொருள் பிறிதில்லை. புல்லுக்கும் புழுவுக்கும் மாக்களுக்கும் மானுடருக்கும் அதுவே மெய்யான இலக்கு”
Perspectivism
“எப்போதைக்குமான உண்மை என ஏதும் இப்புவிமீது இருக்கமுடியாது. காலத்தில் இடத்தில் தருணத்தில் அறிபவனால் அறியத்தக்க ஒன்றே அறிவெனப்படுகிறது. அது அவனுக்கு நலன்பயக்குமெனில் உண்மை, அல்லதெனில் அரையுண்மை. பொய்யென்று ஏதும் இப்புவியில் இல்லை.”
நீட்ஷேவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது அவர் ஒரு முழு தத்துவ முறைமையை (System Philosophy) உருவாக்கவில்லை என்பதே. இதற்கு காரணம் அவர் காண்ட் (Critique of pure reason) போலவோ ஷோபன்ஹாவர் (The world as will and idea) போலவோ canon எதையும் உருவாக்கவில்லை. அவரது தத்துவம் முறைப்படுத்தப்படாத உதிரி புத்தகங்களாக அவரது பலவிதமான சர்ச்சைகளுடன் (polemics) சிதறி கிடக்கிறது.
நீட்ஷேவின் தத்துவம் உண்மையான கண்டடைதல்கள் கொண்டதல்ல மாறாக அது அதுவரை பேசப்பட்ட மேற்கின் தத்துவ மரபுடன் குறிப்பாக ஷோபன்ஹாவருடனான தனது எதிர்வினைகளின் தொகுப்பே என விமசிக்கப்படுவதுண்டு. நீட்ஷேவை குறித்த எனது அபிப்பிராயமும் இவ்வாறாகவே இருந்து வந்தது. ஆனால் சார்வாகம் குறித்த இந்த அத்தியாயம் அதை மாற்றியமைத்தது. நீட்ஷேவின் தத்துவ தெறிப்புகளுக்கு ஒரு சாரம் கிடைத்தது போல உணர்கிறேன். இத்தருணத்தில் நீட்ஷேவின் முதுமையான தோற்றம் கொண்ட ஒரு புகைப்படத்தை நினைவுகூர்கிறேன். Ubermensch குறித்து பேசிய இந்த மனிதனை பெரும்பாலும் இளமையில் சித்தரிப்பதையே விரும்புவர். ஆனால் இளம் வயதிலேயே கொடும் நோயால் தாக்கப்பட்ட பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளுடன் போராடிய நீட்ஷே மானுடன் குறித்த மாபெரும் நம்பிக்கைவாத தத்துவ சொற்களை உதிர்த்தது ஒரு கண்டடைதல் என்றே இப்போது எண்ணுகிறேன். பின்னால் அவரது தனி மனிதன் கொள்கை, அமைப்புகள் மேலான அவரது விமர்சனம் காரணமாக இருத்தலியல்வாதிகள் அவரை கையில் எடுத்து கொண்டதால் ஏற்பட்ட இருள் பிம்பம் அவரை முற்றிலும் வேறொரு நபராக நம் நினைவில் நிறுத்தி விட்டது.
நீட்ஷே கிழக்கின் தத்துவங்களை ஒரு வித நிராகரிப்புடனே பார்த்திருப்பார் காரணம் ஷோபன்ஹாவரை குறித்த அவரது பார்வை தன்னை கிழக்கின் ஒருத்தலிலிருந்து (world renunciation) மானுடத்தை மீட்க வந்தவராக கற்பனை செய்துகொள்ள வைத்தது (நீட்ஷே மானுட சிந்தனை போக்கே தனக்கு முன் தனக்கு பின் என பிரிக்கபடும் என்று ஒரு இடத்தில் கூறுகிறார்). எனவே அவருக்கு பௌத்த தத்துவம் ஓரளவு அறிமுகம் இருந்தாலும் சார்வாகம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் அவரது சாரம் இன்னும் பலம் கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. “o What do those wise men of india not know?” என ஷோபன்ஹாவர் ஒரு இடத்தில் நெகிழ்கிறார்.
தங்களது மதிப்பீட்டின்படி நீட்ஷேவின் இடம் என்ன? உங்கள் குரு நித்ய ஸைதன்ய யதி நீட்ஷேவை குறித்து என்ன அபிப்பிராயம் கொண்டிருந்த்தார்?
அரங்கநாதன்
ஷோப்பனோவர்
அன்புள்ள அரங்கநாதன்,
சொல்வளர்காடு நாவல். ஆகவே அதில் நேரடியான தத்துவம் இடம்பெறுவதற்கான சில எல்லைகள் உள்ளன. தத்துவத்திற்கான வரையறைமொழி புனைவுக்குள் இடம்பெற முடியாது. மேலும் ஒவ்வொரு கொள்கைக்கும் அதில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் அதிகபட்சம் இரண்டாயிரம் சொற்கள்.
ஆகவே அவை மிகமிகச்சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. இலக்கியத்திற்குரிய உருவக மொழியைக் கையாள்கின்றன. படிமங்களை முன்வைக்கின்றன. அவை தத்துவமே அல்ல, தத்துவம் போல.
இச்சிந்தனைகளில் என் பங்களிப்பென்பது சில இடைவெளிகளைப் பொருத்திக் காட்டுவதும் புனைவுமொழியை அளிப்பதும் மட்டுமே. பிரகஸ்பதியை முதற்புள்ளியாகக் கொண்ட சார்வாக மரபு, அல்லது பிரகஸ்பதிய மரபு இந்திய சிந்தனைமுறையின் முக்கியமான ஒரு தரப்பு.
இயல்பாகவே அதற்கு உலகமெங்கும் உள்ள பொருண்மைவாத, நாத்திகவாத சிந்தனைகளுடன் நெருக்கம் இருக்கும். சார்வாகர்கள் வெறும் மறுப்பாளர்களோ அவநம்பிக்கைவாதிகளோ அல்ல. அவர்களுக்கு என ஒரு முழுமையான பிரபஞ்சநோக்கு இருந்தது.
 
மாக்ஸ்முல்லர்
நான் நீட்சேவின் சிந்தனைகளை விரிவாக அறிந்ததில்லை. நித்ய சைதன்ய யதியும் அவரைப்பற்றி அதிகமும் பேசியதில்லை. நித்யா வாழ்ந்த அக்காலகட்டத்தில் ஃபாஸிசத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்தவர் என்னும் முத்திரை நீட்சே மேல் இருந்தது. பின்னர் பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள், குறிப்பாக ஃபூக்கோ போன்றவர்கள், வந்தபின்னரே அந்த முத்திரை அகன்றது. நித்யாவுக்கும் அந்தக்கசப்பு இருந்தது என்றே நினைவுகூரும்போது தெரிகிறது
நித்யா நீட்சேவின் அதிமானுடன் என்னும் உருவகம் பற்றிப் பேசியிருக்கிறார். அதை நிராகரித்து விராடபுருஷன் என்னும் கருத்தை முன்வைத்து. விழைவின் உச்சமான அதிமானுடன் அழிவுச்சக்தியாகவே இருக்கமுடியும், ஏனென்றால் அவன் ஒரு பெரிய விசை. எந்த ஒற்றைவிசைக்கும் எதிர்விசை இருக்கும் என்றார்.
நீட்சேவின் காலகட்டத்தில்தான் இந்திய சிந்தனைகள் ஜெர்மனிய மொழியில் அறிமுகமாயின. மாக்ஸ்முல்லரும் நீட்சேவும் சமகாலத்தவர். ஆனால் நீட்சே இந்திய சிந்தனைமுறைகளில் பௌத்தம் பற்றித்தான் ஓரளவு அறிந்திருந்தார் எனத் தெரிகிறது. இரு உரைகளில் பௌத்தம் குறித்த நீட்சேவின் புரிதலும் பிழையானது என நித்யா சொல்கிறார்
அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஒரு தத்துவமரபை அறிய நூல்கள் மட்டும் உதவாது. அந்நூல்களைச்சார்ந்து பலகோணங்களிலான உரையாடல்கள் நிகழவேண்டும்.அத்துடன் இன்னொன்று உண்டு. தத்துவம் என்பதே வெவ்வேறு வகையான அறிதல்முறைகள் கொண்டதாக இருக்கமுடியும். பேரா. குந்தர் இந்தியதத்துவத்தை தத்துவம் என மேலைநாட்டில் சொல்லப்படும் பொருளில் சொல்லமுடியாது என வாதிடுகிறார். அதைச்சார்ந்து அகேகானந்தபாரதியின் தந்த்ரா குறித்த நூலில் ஒரு விவாதத்தை வாசித்த நினைவு.
இந்தியதத்துவம் ஆன்மிகமான நுண்ணறிவு மற்றும் யோக-தியான சாதனைகள் ஆகியவற்றுடன் இணைந்ததாகவும், கவியுருவகங்கள் மற்றும் படிமங்கள் கொண்டதாகவும்தான் உள்ளது. அதை இறையியலும் தத்துவமும் மெய்யியலும் கலந்த ஒற்றை அறிவுத்தளம் எனவேண்டுமென்றால் சொல்லிப்பார்க்கலாம். வெறும் தத்துவமாக தர்க்கபூர்வமாக அறியமுயல்கையில் இடர்கள் பல உருவாகின்றன.
தோராயமாக இப்படிச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. மேலைத்தத்துவம் எப்படியோ அறவியலுடன் [ethics] சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர்கள் எத்தனை விலகிச்சென்றாலும் ஆழத்தில் அறத்தேடலே தத்துவத்தின் பெறுபயன் என நினைக்கிறார்கள். ஆனால் இந்திய தத்துவம் மேலோட்டமாக அறவுரை எனத் திகழ்ந்தாலும் சாராம்சத்தில் முழுமையறிவு என்னும் கருத்தைநோக்கிச் செல்கிறது.
மேலைநாட்டுச் சிந்தனையாளர் பலருக்கும் இந்திய சிந்தனைமுறைமேல் விலக்கமோ இதைக் கற்பதில் இடர்பாடோ உருவாக இதுவே காரணம். அவர்கள் பலசமயம் பாராட்டும் இடங்கள்கூட அறவியல்சார்ந்தவையாகவே உள்ளன. என் நினைவில் ஆல்பிரட் சுவைட்ஸர் நேரடியாகவே சொல்லியிருக்கிறார், இந்தியமெய்யியல் அறநோக்கு அற்றது என.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கபாலியின் யதார்த்தம்
கபாலி படத்தை சிங்கப்பூரில் ஒரு வணிகவளாகத்தின் திரையரங்கில் பார்த்தேன். படம் பார்க்கும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் நண்பர் சுகா ‘கபாலி ரஜினிக்கு முக்கியமான படம், பாத்திடுங்க மோகன்’ என ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அவர் கமல்ஹாசனின் நெருக்கமான நண்பர். நுண்ணிய திரைரசனை கொண்டவர். ஆகவே பார்க்கமுடிவுசெய்தேன்.
கபாலி அலை அப்போது ஓரளவு ஓய்ந்துவிட்டது. அரங்கில் முக்கால்வாசித்தான் கூட்டம். சிங்கையில் நான்கு அரங்குகளில் ஓடுகிறது, கட்டணம் குறைக்கப்படவில்லை என்றார்கள். குறைத்தபின் மீண்டும் ஒருவேகம் எடுக்கலாம்.சிங்கையைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிப்படம்தான்.
கபாலியைப்பற்றிச் சுருக்கமாக. ஒரு ரஜினிபடம் ஒருவகை கூட்டுக்களியாட்டத்திற்குரியது. ஆகவே ஒருநாள் கிரிக்கெட்டின் கடைசி ஒரு மணி நேரம் போல அது இருக்கவேண்டும். அவரது ரசிகர்களில் பலர் சிறுவர்கள். அவர்களுக்குப் புரியவேண்டும். குடும்பமாக பார்க்க வருபவர்களுக்குத் தேவையான நகைச்சுவை வேண்டும். இவை ஏதும் இல்லை. ஆகவே வழக்கமான ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைவது இயல்பு. ஆனால் பெண்களைக்கவரும் மெல்லுணர்வுகள் உண்டு. அதுதான் இப்போது படத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்கிறது.
இன்னொன்று, இதன் கதைக்களம். வணிகப்படத்தில் வில்லன், மையக்கருத்து இரண்டுமே பெருவாரியான மக்கள் எளிதாக தங்கள் வாழ்க்கையில் அடையாளம் கண்டுகொள்வதாக இருக்கவேண்டும். கபாலியில் அது இல்லை. மலேசியாவின் பிரச்சினை தமிழ்மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
கடைசியாக, திரைக்கதை ஒரு வணிக சினிமாவுக்குரிய ஒழுங்குடன் இல்லை. பல பின்னோக்கிச் செல்லும் கதைகள் தனித்தனியாக ஒரே உரையாடலில் வருகின்றன. மலேசியாவின் கூலிகளின் வாழ்க்கைப்பிரச்சினை மிக எளிதாக ஒரு பின்னோக்குக்காட்சியில் வந்துசெல்கிறது.இரண்டாம் பகுதியில் கையைவெட்டிக் கொண்டுவைத்தபின் அது எப்படி நடந்தது என்று காட்டுவது போல பல கதைகள் பின்னால் சென்று காட்டப்படுகின்றன. அது படத்தின் ஓட்டத்திற்கு ஊறுவிளைவிக்கிறது.
அத்துடன் உச்சகட்டம் வழக்கமான அடிதடி. உணர்வுரீதியான ஓர் உச்சம் யோசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு பெரும் கதாநாயகப்படத்திற்குரிய கட்டாயங்கள் பல உண்டு என்றும் புரிகிறது.
ஆனால் எனக்குப்படம் பிடித்திருந்தது. ஒன்று, ரஜினி மிக இயல்பாக, மிக அடக்கமாக, மிகநுட்பமாக நடித்திருக்கிறார். பலகாட்சிகளில் அவரிடமிருந்த அந்த உள்வாங்கிய தோரணையும் அதற்குள் அவர் அளிக்கும் உணர்ச்சிகளும் வியக்கச் செய்தன. உள்ளே ஏதேதோ துயரங்களும் இழப்புகளும் ஓட வெளியே அவர் சிரிப்பும் நக்கலுமாக பேசும் காட்சிகளில் ‘நடிகன்!’ என மனம் வியந்தது.
இரண்டு, படத்தின் காட்சிமொழி மிக முதிர்ச்சியானது. பல காட்சிகளில் வெறும் காட்சிவழியாகவே மலேசியாவின் மாறிவரும் காலங்களும் பண்பாடும் பதிவாகியிருக்கின்றன. ஒவ்வொரு நுட்பமாக தொட்டுச் சொல்லமுடியும். உச்சகட்டக் காட்சிகளில் கொலாலம்பூரின் ஒளிவெள்ளம் மிக்க வான்காட்சிகளும் அந்தப்பூசல்கள் அந்நகரின் ‘தலைக்குமேல்’ தேவர்களின் போர்போல நிகழ்வதாகப் பிரமை எழுப்பின.
கபாலி கலைப்படம் அல்ல. அரசியல்படமும் அல்ல. அது அறிவித்துக்கொண்டபடியே ஒரு வணிகக்கேளிக்கைப் படம். அதற்குள் அது ஒரு வாழ்க்கையை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. நாம் மறந்துவிட்ட ஓர் அறக்கேள்வியை முன்வைக்கிறது. அவ்வகையில் முக்கியமான படம் என்றே நினைக்கிறேன்
எனக்கு இப்படம் பிடித்தமைக்கு தனியாக ஒரு காரணம் உண்டு. 2006ல் நான் மலேசியா சென்றபோது நண்பர் டாக்டர் சண்முகசிவா என்னை ஒரு பள்ளியைத் திறந்துவைக்க அழைத்த்ச்சென்றார். அச்சு அசல் கபாலியில் வருவதுபோலவே ஒரு பள்ளி. நான் அதைத் திறந்துவைத்தேன்
அது சிறையிலிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான இரவுப்பள்ளி. அங்கிருக்கும் குடியிருப்புகளில் கணிசமானவற்றில் இருபெற்றோரும் இல்லாத குழந்தைகள் உள்ளன. பல பெற்றோர் சிறையில். பெரும்பாலானவர்கள் மலேசியாவின் நிழல் உலகுடன் தொடர்புடையவர்கள். குப்பைபொறுக்குவதுபோன்ற தொழில்செய்பவர்கள். வறுமை காரணமாக இளைஞர்கள் எளிதாகக் குற்றம்நோக்கிச் செல்கிறார்கள்
அந்தப்பள்ளியை தொடங்கி சொந்தச்செலவில் நடத்துபவர் ஒரு மனம்திருந்திய குற்றவாளி. ஆப்ரிக்கர் போலிருந்தார். மொட்டைத்தலை, கண்ணாடி, குறுந்தாடி. தனியார் பாதுகாவலராக வேலைபார்க்கிறார். உழைத்துச்சேர்த்த பணம் முழுக்க அவரால் அப்பள்ளிக்குச் செலவிடப்படுகிறது. அவர் ஒரு அதிதீவிர ரஜினி ரசிகர்
நாம் காணும் கொலாலம்பூர் அல்ல மலேசியா. நான் நாஞ்சில்நாடனுடன் மலேசியாவின் கிராமப்புறங்களில், தோட்டங்களில் பயணம்செய்யும்போது வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பங்கள் பலவற்றைக் கண்டேன். தகரக்கொட்டகைகள். மெலிந்து கறுத்த பெண்கள். உலர்ந்த குழந்தைகள்.
இத்தனைக்கும் மலேசியா பெட்ரோலிய வளம் மிக்க நாடு. சுண்ணாம்புக்கனி மிக்கது. அதன் உள்கட்டமைப்பும் வைப்புச்செல்வமும் மிக அதிகம். ஆனால் சட்டபூர்வமாகவே மலேசியாவில் தமிழர்கள் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக இண்ட்ராஃப் வழியாக உருவான சிறிய எதிர்ப்பு கூட அழிக்கப்பட்டது.
எந்தவகையான அரசியலியக்கமும் இல்லாத வெற்றிடத்திலேயே குற்றக்குழுக்கள் உருவாகின்றன. கபாலியின் அரசியல் இதுதான். சிலநாட்களுக்கு முன்னர்கூட கபாலியைப்போலவே ஒரு ‘நலம்நாடும் குற்றவாளி’ சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்தது. அதன் காட்சிப்பதிவும் இணையத்தில் வெளிவந்தது – அப்படியே கபாலி!
  
கபாலியின் அந்தப் பள்ளிக்கூடச்சூழலின் யதார்த்தம் உண்மையில் என்னைக் கண்கலங்கச் செய்தது. ரித்திகா மிக இயல்பாக நடித்திருந்தார். மலேசியப்பெண் என்றே நினைத்தேன். அந்த நிழல் உலக விருந்தும் அதேபோல உண்மையான நுட்பங்களுடன் இருந்தது.
கபாலியை கலைப்படங்களை மட்டுமே படமென நினைக்கும் ஒருவர் நிராகரிப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் சாதாரண ஹாலிவுட் வணிகப்படங்களை எல்லாம் ரசிக்கும் கூட்டம் அதை மொக்கை என்றும் குப்பை என்றும் போகிறபோக்கில் எழுதியது வருத்தம் அளிக்கிறது
இத்தகைய படங்களை சாமானிய சினிமா ரசிகன் உள்வாங்கமுடியாது குழம்புவது இயல்புதான். ஆனால் சற்றுமேம்பட்ட ரசனைகொண்ட படித்த இளைஞர்கள் அவர்களுக்கு செய்திகள் வழியாக, விவாதங்கள் வழியாக உதவலாம். இணையம் அதற்கு வசதியான ஊடகம். மலையாளத்திலும் கன்னடத்திலும் எங்கும் நிகழ்வது அதுவே
தமிழில் படித்த இளைஞர்கள் பாமரர்களை விட மோசமான ரசனையை வெளிப்படுத்தினார்கள். தன் எல்லைக்குள் நின்றபடி நிகழ்த்தப்பட்ட  ஆத்மார்த்தமான ஒரு முயற்சியை ஒற்றைவரியில் நிராகரித்து, அசட்டு நக்கலும் கிண்டலும் செய்து, அதை தோல்வியடையச்செய்ய முயன்றனர். அவர்களும் பாமரரகளைப்போலவே எதையோ எதிர்பார்த்துச்சென்று ஏமாந்தவர்கள். அந்த எளிய உணர்வுநிலைகளை அவர்களாலும் கடக்கமுடியவில்லை என்பது பெரியஏமாற்றம்..
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   
   
   
   
   
   
   
  
