காஷ்மீரும் பி.ஏ.கிருஷ்ணனும்

index

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு ,

வணக்கம்.



தற்போது காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை நிகழ்வுகள் தங்கள் அறிந்ததே.50 நாட்களுக்கு மேலாக ‘ஊரடங்கு சட்டமும்’,70 பேருக்கு மேலாக உயிரிழப்பும் நடந்துள்ளது.மத்தியில் உள்ள மோதி அரசும்,மாநிலத்தில் உள்ள மெஹ்பூபா  கூட்டணி அரசும் எவ்வளவு முயற்சித்தும் ‘கல்லெறி’ சம்பவங்களை தடுக்க முடியவில்லை. பிரிவினைவாதி குழுக்கள் கலவரத்தை மேலும் தூண்டுவதும்,பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையும் முறிந்து அந்தரத்தில் நிற்கிறது.இந்நிலையில் நேருவும்,காங்கிரஸும்தான் இந்த அவல நிலைக்கு காரணம் என்ற கூக்குரல் வழக்கம் போல் எழுந்துள்ளது.இந்நிலையில் இந்த மாத ‘காலச்சுவடு‘ இதழில் தங்களின் மதிப்பிற்குரிய திரு.பி .ஏ.கிருஷ்ணன் காஷ்மீர் 1947-48 சில உண்மைகள்



என்ற கட்டுரையில் நேருவின் காஷ்மீர் பற்றிய நிலைப்பாடுகளை தெளிவாக எழுதியுள்ளார்.இது பற்றி தங்களுக்கு வேறேதும் மாற்று கருத்துக்கள் உள்ளதா?



அன்புடன்,



அ .சேஷகிரி.


 


அன்புள்ள சேஷகிரி,


 


வலதுசாரி இடதுசாரி  ‘மப்பு’கள் ஏதுமில்லாமல் தெளிந்த மண்டையுடன் எழுதப்பட்ட தகவல்பூர்வமான கட்டுரை.


 


மேலதிகமாக இரண்டு விஷயங்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள விரும்புவேன். ஒன்று,  சிகந்தர் புட்சிகான் ஆட்சிக்காலத்தில்  காஷ்மீரின் இந்துப்பண்பாடு மற்றும் பௌத்தப்பண்பாடு மீது தொடுக்கப்பட்ட நிகரில்லாத வன்முறை. உலக அற்புதங்களில் ஒன்றான மார்த்தாண்டர் ஆலயம் உட்பட காஷ்மீரின் அத்தனை பேராலயங்களும் அழிக்கப்பட்டன.  பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றழிக்கப்பட்டனர். கட்டாயமதமாற்றம் செய்யப்பட்டனர். காஷ்மீரின் ஷா மீரி வம்சத்தின் இரண்டாவது சுல்தான்[ 1389–1413] இவர் ‘சிலையுடைப்பு சிக்கர்ந்தர்’ என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறார். [ (“Sikandar the Iconoclast”] மதகுருவான மீர் முகமது ஹமதானி என்பவரின் ஆணைப்படி அவர் இதைச்செய்தார்.இது அவர்களாலேயே முறையாகப்பதிவுசெய்யப்பட்ட வரலாறு.


 


இன்றும் அங்குள்ள சுன்னிகள் ஹமதானியை மாபெரும் ஆன்மிக ஞானியாகக் கொண்டாடுகிறார்கள். சிக்கந்தரை நவீன காஷ்மீரின் பிதா என்கிறார்கள். அருந்ததி ராய் போன்ற முற்போக்காளர்கள் ஹமதானியின் சமாதிக்குச் சென்று வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.இந்த ஒருசெயலே காஷ்மீரின் சுன்னி இஸ்லாமியப் பெரும்பான்மையின் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒரு நவீன தேசியமாக அங்கீகரிப்பதற்கான அடிப்படைத்தகுதியை இல்லாமலாக்கிவிடுகிறது. அது ஐ.எஸ்.எஸ் போன்ற ஒரு மானுடவிரோத மதவெறிக்கும்பல் அன்றிவேறல்ல.அன்று இந்துக்களுக்கு நடந்தது, இன்று ஷியாக்கள் அதே அழித்தொழிப்பின் விளிம்பில் வாழ்கிறார்கள் அங்கு.


 


இரண்டாவதாக காஷ்மீரின் நிலம் மூன்றுபகுதிகளால் ஆனது. இந்துக்கள் ஜம்முவிலும் பௌத்தர்கள் லடாக்கிலும் பெரும்பான்மை. சீக்கியர் கணிசமான அளவு அங்குள்ளனர். சுயநிர்ணயம் என்னும்பேரால் காஷ்மீர் சமவெளியில் மட்டும் பெருமளவில் உள்ள சுன்னிகளிடம் ஒட்டுமொத்த காஷ்மீரையும் அளிக்கமுடியுமா என்ன?


 


காஷ்மீரி சுன்னிகள் தங்கள் பெரும்பான்மையை பயன்படுத்தி அந்நிலத்தை தங்கள் தேசமாக அடைந்தால் அங்குள்ள சிறுபான்மையினர் கதி என்ன என்னும் கேள்விக்கு விடை இல்லாமல் இந்த விஷயத்தைப்பற்றி எவர் பேசினாலும் அது கயமை என்பது மட்டுமே என் எண்ணம்.


 


காஷ்மீரில் மத அடிப்படையிலான ஒரு தேசியத்தை ஒப்புக்கொள்வதென்பது சுன்னிகள், முஸ்லீம்கள் தனித்தேசியம் என்பதை ஏற்பதற்குச் சமம். அந்தக்கோரிக்கை இந்தியா முழுக்க எழும். சென்ற முப்பதாண்டுக்காலத்தில் தெற்கு அஸாமில் வங்கத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறி காங்கிரஸின் மோசடியால் குடியுரிமைபெற்ற வங்கமுஸ்லீம்கள் கூட அங்கே பிரிவினைக்கோரிக்கையை போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பதை நான் பார்த்தேன். அப்பகுதி வங்கதேசத்துடன் சேரவேண்டுமென அவர்கள் கோருகிறார்கள். இந்தியாவின் ஒடுக்குமுறை ஒழிக என கூவுகிறார்கள்.


 


மத அடிப்படையிலான தேசப்பிரிவினை என்னும் எண்ணமே  இந்தியா என்னும் இந்த அமைப்பையே சிதறடித்துக் குருதிப்பெருக்கை உருவாக்குவது. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை முழுமையாக அழிப்பது. அதைப்பேசுபவர்கள் ஒன்று இந்ததேசம் உடைந்து சிதறி உருவாகும் அகதிப்பெருக்கில் தங்கள் அதிகாரத்தைக் கண்டடையமுடியுமென நினைக்கும் சுயநலக்கூட்டம். இன்னொன்று அவர்களை நம்பும் மூடர்கூட்டம்.


 


மதவெறியை தேசியமென அங்கீகரிக்கும் நாடு எதுவாக இருந்தாலும், அது தற்கொலைசெய்துகொள்கிறது. நாம் ரஷ்யாவையும் சீனாவையும்  பார்த்து மதவெறியை எதிர்கொள்வது எப்படி என கற்றுக்கொள்ளவேண்டும்


 


ஜெ


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2016 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.