Jeyamohan's Blog, page 858

December 28, 2021

எழுதும் முறை எது?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீண்ட காலமாக உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும் என்ற ஆசை.

நீங்கள் மிகவும் வேலைப்பளு உள்ளவர். நிறைய படிக்கிறீர்கள். உங்களுக்கு வரும் கடிதங்களை படித்துப் பார்த்து பதில் எழுதும் போது நீங்கள் கைப்பட எழுதுவீர்களா ? இல்லை. மென்பொருள் ஏதும் கொண்டு (app) ஆடியோ மூலம் சொல்வதை மொழிமாற்றம் செய்து கொள்வீர்களா?

 

நன்றி,

சத்ய நாராயணன்

ஆஸ்டின் டெக்சாஸ்

 

அன்புள்ள சத்யா,

நான் கையால் எழுதுவதில்லை. தட்டச்சு செய்கிறேன். என்எச்எம் மென்ம்பொருள் பயன்படுத்தி, ஆங்கில எழுத்துக்கள் வழியாக தமிழை எழுதுகிறேன்.

சொல்லி எழுதவைப்பதில்லை. அந்த மென்பொருளுக்கு நானும் எனக்கு அதுவும் பழகவில்லை. அது மிக உதவியானது என நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்குச் சரிவரவில்லை.

எல்லா கடிதங்களும் தட்டச்சு செய்யப்படுபவையே

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 10:34

விஷ்ணுபுரம் விழா 2021- கதிர் முருகன்

விஷ்ணுபுரம் வட்டம் இணையதளம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

அன்புள்ள ஜெ வணக்கம்…

என்றென்றும் நினைவில் நிற்க்கப்போகும் மற்றுமொரு இரண்டு நாட்கள். விஷ்ணுபுரத்தின் மூலம் இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே எல்லாவகையிலும் பிரம்மாண்டமான உணர்வுப்பூர்வமான மகத்தான இலக்கியவிழா இதுவே என உணர்கிறேன்.

இரண்டு நாட்களில் பன்னிரண்டு அமர்வுகள்   ஆவணப்படம் திரையிடல் மற்றும் விருது விழா. மூன்று நூல்கள் வெளியிட்டு அறிமுக விழா. ஒவ்வொரு அமர்விலும் நானூறு பேருக்கு அருகில் வாசகர்கள். சில அமர்வுகளில் அமர இடம் இல்லை. இந்த நிகழ்வை ஒட்டி சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் என ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வாசிக்க வேண்டி இருந்தது.

உங்களாலும் நண்பர்களாலும் பங்கேற்ற படைப்பாளிகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் பக்கங்களே 500க்கும் மேல் இருக்கும். சுபாவின் மொழிபெயர்ப்புகள் லோகமாதேவி அக்கா மற்றும் ரம்யாவின் கட்டுரைகள் விஷால் ராஜாவின் செந்தில் ஜெகநாதன் சிறுகதைகள்  குறித்த கட்டுரை எல்லாம் தரத்திலும் அளவிலும் விரிவானவை.

கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களின் நீண்ட படைப்பு வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளில் அவர் படைப்புகள் குறித்து எழுதப்பட்டதை விட இந்த விருதை ஒட்டி எழுதப்பட்து அதிகம். விருதின் பரிசுத் தொகையும் ஒன்றிலிருந்து மூன்று லட்சங்கள் என எல்லாவற்றிலுமே ஒரு புதிய உச்சம்.

24 ம் தேதி வெள்ளி காலை ரயில்வே ஸ்டேஷனில் உங்களை பார்த்த உடனேயே விழா மனநிலை பற்றிக் கொண்டது. நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து குவிய குவிய வெள்ளி மாலை ராஜஸ்தானி மண்டப வாயிலை பார்த்த பொழுது  விழா நாள் அமர்வுகளின் தேநீர் இடைவேளையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் உணர்வுதான் எழுந்தது.

விருது வழங்கத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் மாலை ஓற்றை விழா என துவங்கி அடுத்தடுத்து நண்பர் சந்திப்புகள் அதிகரித்து ஒரு நாள் இரண்டு நாளாக வளர்ந்து வரையறுக்கப்பட்ட திட்டமிட்ட அமர்வுகளாக விரிந்து இவ்வாறாக மலர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மூன்று நாள் நான்கு நாள் ஒரு வார கலைத்திருவிழாவாக கூட மாறும் என்ற எண்ணம் தோன்றியது.

முதல் அமர்வே கச்சிதமான தொடக்கம். தமிழினி மின் இதழ் ஆசிரியரும் உலக திரைப்பட விமர்சகருமான கோகுல் பிரசாத் அவர்களுடையது.நரேன் நெறிப்படுத்தினார்.

கோகுலின் பதில்கள் மேடையில் உரையாற்றும் மொழி நடையில் இல்லை. நான்கு பேருக்குள் பேசிக்கொள்ளும் சாதாரண பேச்சு வழக்கும் இல்லை.இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நடையில் மென்மையான குரலில் பேசியது அழகாக இருந்தது.தமிழினி 36 இதழ்கள் தன் ஆசிரியத்துவத்தில் கொண்டு வந்துள்ளார். அவர் பார்வையில் உலகின் தலைசிறந்த 100 திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை எழுதியுள்ளார் (நூலாக வர இருக்கிறது). குறிப்பிடும்படியானன வாசிப்பும் கொண்டுள்ளதால். நிமிர்வுடன் அரங்கை எதிர் கொண்டார்.

கலை என்றால் என்ன. கிளாசிக் என்பதின் வரையறை என்ன. விமரிசகனின் எல்லை என்ன என்பதிலெல்லாம் உறுதியான  நிலைப்பாடுகளை முன்வைத்தார்.தமிழினி மின்னிதழை முன்னோடி முதன்மையான இதழ் என்று குறிப்பிட்ட பொழுது அவருடைய இளமைக் காலத்திலேயே பதாகை சொல்வனம் எல்லாம் வந்து விட்டதாக கூறினார்

மேலும் அமிர்தம் சூர்யா அ.முத்துலிங்கம் கதைகள் மீதான அவருடைய காட்டமான விமர்சனத்தை குறித்து எழுப்பிய கேள்விக்கு  இளம் வயதில் அவ்வாறு எழுதி விட்டேன் இப்போது எனில் அவ்வாறு கூறியிருக்க மாட்டேன் என்று பதில் கூறினார்.

விஷால்ராஜா

இந்த நிகழ்வை வெறும் ஒலி வடிவில் யாராவது கேட்டால் இவருக்கு ஒரு ஐம்பது அறுபது வயது இருக்கும் என்று எண்ணி விடுவார்கள்:)தற்போதைய தீவிரம் குறையாது இருக்கும் பட்சத்தில் கலை இலக்கியத் துறைகளில் மிக முக்கியமான இடத்தை வந்தடைவார் என்று தோன்றியது.கோகுல் பிரசாத் அவர்களின் அரசியல் சமூகவியல் பண்பாட்டு பார்வைகளில் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் முழு அமர்வையும் மிகவும் ரசித்தேன்.

இந்த மேடையை கேள்விகளை மிக நேர்மையோடு எதிர் கொண்டார் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது எனக்கு. நரேன் எப்போதும் போல மிகச் சிறப்பாக அமர்வை நடத்தினார்.

இரண்டாம் அமர்வு எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் சௌந்தர் ஜி ஒருங்கிணைப்பில் இனிமையாக நிகழ்ந்தது.

நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் மொழிபெயர்ப்புகள் இதழாசிரியர் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் ஆழங்கால் பட்டவர். தான் பிறந்த ஊர்  தன் குடும்பம் சார்ந்த நெசவுத் தொழில் பற்றிய பின்னணிகள். ஒவ்வொரு பத்தாண்டிலும் தொழில்களில் சமூகச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆண் பெண் உறவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய அவரின் விளக்கங்களை எல்லாம் கேட்பதற்கு ஒரு மணி நேர அமர்வு எவ்வகையிலும் போதுமானதல்ல.

ஆத்மார்த்தி

அவருடைய வாழ்க்கை அனுபவம் வாசிப்பு மற்றும் படைப்பு மனம் எல்லாம் சேர்ந்து கைதேர்ந்த உரையாடல்காரராக இனிய கதைசொல்லியாக உயர்ந்து நிற்கிறார்.புனைவும் நிஜமும் சந்திக்கும் புள்ளி அதன் மூலம் அவர் அலுவலகத்தில் எதிர்கொண்ட சிக்கல்கள். இத்தனை ஆண்டுகளில் தன் பணிச் சூழல் குறித்து ஏண் எதுவுமே எழுதியதில்லை  என்பதையெல்லாம் விவரித்தது அபாரம்.

ஹிந்தியில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் மொழிபெயர்ப்பதில் இருக்கும் வேறுபாடுகள் குறித்த அவரின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புலகிற்குள் ஆழ்ந்து செல்ல இந்த அமர்வு பல்வேறு வகைகளில் மிகவும் உதவியாக இருந்தது.தெளிவு முதிர்ச்சி நிதானம் இந்த மூன்றும் மொத்த அமர்விலும் முயங்கி நின்றது.

மூன்றாவது அமர்வு எழுத்தாளர் நண்பர் காளிப்ரசாத் லோகமாதேவி அக்கா ஒருங்கிணைப்பில்.

தன் சிறுகதைத் தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காளி 35 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.நம்மில் ஒருவராக சாதாரணமாக பழகிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென ஒரு ஆளூமையாக  உருவெடுத்து வந்ததன் ஆச்சரியம் எனக்கு அந்த அமர்வு முழுவதுமே இருந்தது.

சாம்ராஜ்

பொதுவாகவே காளி பிரசாத் எதையுமே நேரடியாக சுருக்கமாக கணம் கூடிய தொனியில் பேசுபவர் அல்ல. எந்த ஒன்றை சொல்வதற்கும் இன்னொன்றை உதாரணமாக சொல்லி தான் அவரால் கூற முடியும். அந்த உதாரணங்கள் பெரும்பாலும் பகடியாக இருக்கும். அவரின் இந்த இயல்பு அமர்வில் வெளிப்பட்டது. ஆயினும் கூடுதலாக ஆழமும் துல்லியமும் கூடியிருந்தது அவரின் பதில்களில்.

நான்காவது அமர்வு.எழுத்தாளர் நண்பர் சுஷீல்குமார் சுரேஷ் பாபுவின் மட்டுறுத்தலில்

சுஷீல் எழுதத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை கொண்டு வந்துவிட்டார்.  கதைகளும் பரவலாக படிக்கப்பட்டு வாசகர்களை ஈர்த்துள்ளதை அமர்வில் உணர முடிந்தது.கேள்விகளை அவர் எதிர்கொண்ட விதத்தில் பதில்களின் தரத்தில் இருந்த முதிர்ச்சியும் நிதானமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நாஞ்சில்நாட்டு முன்னோடி எழுத்தாளர்களின் மொழிநடையின் வட்டார வழக்கின் பாதிப்பு எனக்கு இருக்கலாம் ஆனால் என்னுடைய தரிசனம் வேறாகத்தான் இருக்கும் என்று போது அவரிடம் வெளிப்பட்ட உறுதி ஆச்சரியத்தை தந்தது.

ஐந்தாம் அமர்வு எழுத்தாளர் செந்தில் ஜெகநாதன் ஈரோடுசந்திரசேகர் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது.

அவருடைய கதைகள் எனக்கு பிடித்து இருந்தது அவர் குறித்து விஷால் ராஜா எழுதிய கட்டுரையும் முக்கியமானது என்பேன்.

கிருஷ்ணன் சங்கரன்

(மிகுந்த யோசனைக்குப் பின்னரே கீழே உள்ளதை எழுதுகிறேன்) இலக்கியம் மற்றும் திரைத்துறை குறித்த அவருடைய பார்வைகள் மற்றும் அரங்கில் இருந்து வந்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் எல்லாமே அதீதமான கச்சிததன்மை கொண்டுள்ளதாக எனக்குத் தோன்றியது. ஒரு சொல் அவரிடம் இருந்து வெளிப்பட வேண்டும் என்றாலும் அவருக்குள் இருக்கும் எடிட்டரின் அனுமதி பெற்றே வர முடியும் என்பது போன்ற.மாறாத திட்டவட்டமான கருதுகோள்களோடு இருக்கிறார்.

ஆனந்தகுமார் மற்றும் சுஷீல் குமார் நூல்கள் வெளியீடுடன் மதிய அமர்வுகள் நிறைவடைந்தது.

ஆறாவது அமர்வு எழுத்தாளர் ஜெ.தீபா அவர்களுடன்.ரம்யா மட்டுறுத்தினார்.

ஆவணப்பட மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். சு.வேணுகோபால் லக்ஷ்மி மணிவண்ணன் போகன் சங்கர் போன்ற சமகாலத்தின் முக்கியமான படைப்பாளுமைகளின் கேள்விகள் இந்த அமர்வின் முக்கியமான பகுதி என்பேன்.

திரு ஜெ.தீபா அவர்களின் கதைகளை படித்துள்ளேன்.முகநூலில் சமகால நிகழ்வுகளுக்கான அவரின் எதிர்வினைகளையும் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் அவர் எழுத்துக்களுக்கான உந்து சக்தியை எதிர்ப்புணர்வின் மூலம் அடைகிறாரோ என்று தோன்றுகிறது.

ஆணாதிக்கத்தையோ மரபின் சிக்கல்களையோ  எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இருந்து எழுந்தாலும் படைப்புச் செயல்பாடு என்பது ஆயிரம் விமர்சனங்களை விட எல்லா வகையிலும் மேலானது தான் எனினும் சு.வேணுகோபால் அவர்கள் கேட்டதை போல  ஆண்களின் உலகையும் ஆண்கள் படும் துயரங்களையும் அவர் எழுதுவார் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏழாவது அமர்வு ஈரோடு கிருஷ்ணன் மட்டுறுத்தலில் எழுத்தாளர் திருச்செந்தாழை அவர்களுடையது.

நெடுங்காலமாக எழுதிக் கொண்டிருந்தாலும் திருச்செந்தாழை அவர்களின் சமீபத்திய சிறுகதைகள்.  மொழி கூறும் முறை மற்றும் கதை களம் என பல்வேறு காரணங்களால் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

நாள் ஒன்றிற்கு சராசரியாக ஐநூறு மனிதர்களை சந்திக்கும் வியாபார பின்னணி கொண்டிருப்பதாகவும் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு நாவல்கள் என குறிப்பிட்டார்.

சுஷீல்குமாரின் ‘சப்தாவர்ணம்’ நூல்வெளியீடு

தன் தொழிலில் வெல்வதற்கு ஒரு கால்குலேட்டரை போல செயல்பட வேண்டும் எனவும் ஆதாயம் இல்லாத ஒருவனிடம் மூன்று வரிகளுக்கு மேல் பேசக்கூடாது ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒருவனிடம் பேசினால் நிச்சயமாக அவ்வுரையாடல் மூலம் லாபம் வர வேண்டும் என்பதுதான் அவருடைய தினசரி வாழ்வு எனக் குறிப்பிட்டார். இதன் உச்சமாக வாழ்க்கை என்பதே ஒரு வியாபாரம் வியாபாரம் என்பது போரே என்றார்.

ஈரோடு கிருஷ்ணன் தன் இரும்புப் பிடிக்குள் மொத்த அமர்வையும் வைத்திருந்தார். இடைவெளி இன்றி அனைவரையும் கிருஷ்ணனால் சிரிக்க வைக்க முடிந்ததை மிகவும் ரசித்தேன்.தேவதச்சன் அவர்களுடனான சந்திப்பு அனுபவங்களை திருச்செந்தாழை கூறியதை மறக்கவே முடியாது.

ஆனந்த்குமார் டிப் டிப் டிப் கவிதைநூல் வெளியீடு

என் உரைநடை கவிதையைப் போல் இருக்கிறது என்பது எனது வெற்றி அல்ல கவிதையின் தோல்வி என்று கூறினார். கடைசி டினோசர் கவிதைத் தொகுப்பை தாண்டும் அல்லது இணையான கவிதைகள் கடந்த 20 ஆண்டுகளில் வெளி வரவே இல்லை என்றும் கூறினார்.இந்த மன நிலையை அவர் வந்தடைந்ததன் காரணங்களை விளக்கி ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

எட்டாவது அமர்வு எழுத்தாளர் சோ.தர்மன் ஜிஎஸ்எஸ்வி நவீன் ஒருங்கிணைப்பில்.

அமர்வு தொடங்கும் போது மணி இரவு எட்டு காலை முதல் இடைவிடாத உரையாடல்கள் பெரும்பாலோனோர் முந்தைய நாள் இரவில் பயணம் செய்து உறக்கம் கெட்டு வந்திருந்தனர். அத்தனை சோர்வையும் பறந்தோடச் செய்தது சோ.தர்மன் அவர்களின் உற்சாகமும் ஆழமும் நிரம்பிய உரை. கிட்டத்தட்ட நவீனுக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த வேலையும் இல்லை வெடித்து சிரிப்பதை தவிர.

நூல் வெளியீடு: கல்பனா ஜெயகாந்த் எழுதிய கவிதைநூல் “இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல் – கல்பனா ஜெயகாந்தின் கவிதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம்

கோவில்பட்டி எழுத்தாளர்களின் பின்னணி தேவதச்சன் அவர்களுடனான இவரின் உறவு அவர் செய்து வரும் விவசாயம் அதன் மூலம் அவர் பெற்ற இயற்கை அறிதல்கள் என பல தளங்களை தொட்டார்.14 முறை ஜெயில் சென்று வந்த அனுபவம்.  வனவாசிகள் உடனான அவரின் ரகசிய சந்திப்புகள் நரிக்குறவர்கள் உடன் முயல் வேட்டைக்கு சென்ற போது கிடைத்த அனுபவங்கள் என  ஒவ்வொன்றும் ஒரு நாவலுக்கான களங்கள்.

தன்னுடைய புத்தகங்கள் எதிலும் கைப்பேசி எண் முகவரி குறிப்பிடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதன் காரணம் வந்து குவியும் கவிதை தொகுப்புகளை தவிர்ப்பதற்காகத்தான் என்றார் :))

பிரியம்வதா [மொழிபெயர்ப்பாளர்]பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பறவைகள்  மற்றும் தூக்கணாங் குருவிக் கூட்டை வைத்து பருவமழையை கணிப்பது எப்படி என அரிய தகவல்களின் களஞ்சியம் ஐயா அவர்கள்.

சுதந்திரம் பெற்ற போது தமிழகத்தில் இருந்த  39,600 கண்மாய்களில் பெரும் பகுதி அழிந்து விட்டதை கவனப்படுத்தினார். அரசும் மக்களும் நீர்நிலைகளுக்கு செய்துவரும் அநீதியை இன்றும் வேளாண்மை செய்து வரும் ஒரு விவசாயியாக  எழுத்தாளராக நம் காலத்தின் அறத்தின் குரலாக ஓங்கி ஒலித்தார்…

இரண்டாம் நாள் ஞாயிறு காலை ஒன்பதாம் அமர்வு. கவிஞர் வடரேவு சின்ன வீரபத்ருடு அவர்கள் அமர்வு பல வகைகளில் மிக முக்கியமானது.

மகத்தான ஆசிரியர்  ஒருவரால் தெலுங்கு கவிதையைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான உரை இது.

ஐம்பெருங்காப்பியங்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாரதியார் வேதங்கள் உபநிடதங்கள் சங்க இலக்கியம் மேற்கத்திய தத்துவம்  என விரிந்த தளங்களை தொட்டு அழகிய உதாரணங்களோடு பேசினார்.

இலக்கியத்தின் நோக்கமும் பயன்பாடும் பலவாக இருந்தாலும் ஆதார நோக்கம் தன்னை அறிதலே ஞானத் தேடலே. வேதங்களில் கவி என்பவன் ரிஷி கடவுளை அறிந்தவன்.ஒரு கவிதை பிறக்கும் தருணத்தை தேவையை தைத்திரீய உபநிஷத்தின் பஞ்சகோச தத்துவத்தை முன்வைத்து அபாரமான உதாரணங்களோடு விளக்கினார்.

ஒரு சூழல் அல்லது நிகழ்வு தனக்குள் நிகத்தும் மாற்றங்களை உற்று கவனிப்பதன் மூலம் தன்னை அறிந்து அதன் மூலம் உலகை அறிந்து உண்மையை அறிவதே கவிதை எனும் செயல்பாடு என்றார்.

ராஜகோபாலன், கதிர்முருகன், சௌந்தர்ராஜன்

முற்போக்கு வலது இடது செல்ஃப் கான்சியஸ் சோசியல்  கான்சியஸ் என்ற பிரிவுகள் கவிதைக்குள் இல்லை கவிதை நிகழ்வது ஒன் கான்சியஸ்  கவிதை என்பது கவிஞனுக்குள் நிகழும் ரசவாதம் என்றார். ரஸ்ஸல் அவர்களின் தத்துவம் பற்றி கட்டுரையை  குறிப்பிட்டு அறிவியலும் தத்துவமும் சந்திக்கும் வேறுபடும் புள்ளிகளை கவிதையோடு இணைத்தது பெரும் திறப்பு.

அரங்கில் இருந்த இளைஞர்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார் ஆந்திராவில் பொதுவாக இலக்கியம் என்பது பென்ஷனர்ஸ் ஆக்டிவிட்டி இவ்வளவு இளைஞர்கள் அதிலும் பெண்கள் இந்த நிகழ்வுக்கு வந்தது குறித்து பெருமகிழ்ச்சி அவருக்கு.

சந்தத்திற்கு முக்கியத்துவம் தரும் ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் ஒரு கவிதையையும் உள்ளடக்கம் தான் முக்கியம் என்று கூறும் இஸ்மாயில் அவர்களின் ஒரு கவிதையையும் வாசித்து காண்பித்தார். இத்தனை ஆண்டு காலத்தில் இரண்டுமே முக்கியம் என்ற இடத்திற்கு தான் வந்து சேர்ந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

மொழிபெயர்ப்பில் எது இழந்து போகிறதோ அதுவே கவிதை மொழிபெயர்த்தாலும்  இழக்காமல்  எஞ்சியிருக்கும் தன்மையை கொண்டதே கவிதை என்ற மேற்கோளுடன் நிறைவு செய்தார்.வடரேவு சின்ன வீரபத்திருடு அவர்களுக்கு நன்றி…

பத்தாவது அமர்வு இயக்குனர் வசந்த் சாய் அவர்களுடயது.

எவ்வித அறிமுகமும் தேவையில்லாதவர். மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர்.தன்னுடைய அனைத்து பின்னணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இலக்கியம் மேல் பெரும் பற்றும் மரியாதையும் கொண்ட ஒரு வாசகராக அமர்வில் வெளிப்பட்டார்.

18 வயதில் பாரிசுக்கு போ படித்ததை ஜெயகாந்தன் மீதான அவரின் பிரம்மிப்பை பகிர்ந்தவர். தன் ஒட்டுமொத்த வாழ்நாளின் உச்சம் என்பது தன் இருபதாவது பிறந்தநாளில் அசோகமித்திரன் அவர்களை சந்தித்தது தான் என்று குறிப்பிட்டார் .

பத்திரிக்கைத் துறையில் இலக்கியத்தில் திரைத்துறையில் அவருடைய நெடுங்கால  அனுபவங்களை மிகுந்த உயிர்ப்போடு பகிர்ந்து கொண்டார்.

பதினொன்றாம் அமர்வு கவிஞர் விக்ரமாதித்தன் அண்ணாச்சியுடையது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.

ஏற்கனவே அவரை நான் சந்தித்திருந்த தருணங்களிலும் சரி விழாவுக்கு அழைத்து வந்தபோதான தருணங்களிலும் சரி நான் கவனித்தவரையில் அவருள் இருந்து அவரை இயக்குவது ஒரு துடிப்பான குழந்தை.

சமீபத்தில் அவரைப்போல் மொத்த உடலும் குலுங்கும் படி அடிவயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கும் ஒருவரை நான் பார்க்கவில்லை.அமர்விலும் அது வெளிப்பட்டது.

அவருடனான உரையாடல் என்பதைவிடவும் தமிழ் மொழியின் பெருங்கவிகளின் மரபிலிருந்து ஒருவர் தன் சொற்களால் வந்திருந்தவர்களை ஆசீர்வதித்தாகத்தான் நான் உணர்ந்தேன்.

பன்னிரண்டாம் அமர்வு திரு. ஜெயராம் ரமேஷ் அவர்களுடன் ராம்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

நெடுங்காலம் பாரத தேசத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் உயர் பதவிகளில் இருந்தவர்  என்பதையெல்லாம் கடந்து துறந்து எள்முனையளவும் அவையெல்லாம் வெளிப்படாத ஒரு தூய அறிஞராக எழுத்தாளராக அரங்கினை கட்டி ஆண்டார்.

குறைந்த காலத்தில் இத்தனை நூல்கள் எப்படி எழுத முடிந்தது என்ற ராம்குமாரின்  கேள்விக்கு.பல ஆண்டுகள் அதிகார பீடங்களில் இருந்துவிட்டு இனி அது இல்லை என்பதை செரித்துக்கொள்ள அதிலிருந்து வெளிவர இரண்டு மாதங்கள் பிடித்ததாக கூறி னார். அதன் பின்பு தன்னுடைய நேரம் முழுவதையும் வாசிப்பிலும் ஆய்வுகளிலும் எழுதுவதிலும் செலவிட்டதாக கூறினார். அந்த வகையில் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தன்னுடைய நன்றியை குறிப்பிட்டார். ஒருவேளை வென்றிருந்தால் அமைச்சராக தொடர்ந்து இருப்பார் புத்தகங்கள் வந்திருக்காது என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

கீரனூர் ஜாகீர்ராஜா

ஆசிய ஜோதி நூலைப் பற்றி அவர் விவரிக்கையில் எத்தனை ஆர்வத்துடனும் பக்தியுடனும் அப்பணியை  மேற்கொண்டார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய  பதினைந்தாவது வயதிலேயே ஆசிய ஜோதி நூலை படித்து இருக்கிறார். அதன்பின்பு அவர் வாழ்நாள் எல்லாம் அந்நூல் அவரை தொடர்ந்து இருக்கிறது.

நேருவை அம்பேத்கரை மகாத்மா காந்தியை நாராயண குருவை விவேகானந்தரை ராமகிருஷ்ண பரமஹம்சரை அயோத்திதாசரை இலட்சுமி நரசுவை எல்லாம் அந்நூல் ஈர்த்ததை விவரித்தார்.

15 ஐரோப்பிய மொழிகளிலும் 12 ஆசிய மொழிகளிலும் 12 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எட்வின் அர்னால்ட் அவர்களின் லைட் ஆஃப் ஆசியா நூல். மொழிபெயர்க்கப்பட்ட நாடுகளிலெல்லாம் சமூக ரீதியான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் புத்தர் சிறிதளவேனும் இருந்துகொண்டிருக்கிறார் என்றார்.மியான்மர் இலங்கை போன்ற புத்தமத நாடுகளின் வன்முறையைப் பற்றி காளி எழுப்பிய கேள்விக்கு எல்லா இசங்களைப் போலவே புத்திசமும் பிரச்சனை தான் என்றார்.

தொழில் வளர்ச்சி பொருளாதாரம் நகரமயமாக்கம் போன்றவற்றின் பக்க விளைவுகளான இயற்கை சூழியல் பேரழிவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆம் இது மிக முக்கியமான பிரச்சனை இதை தீர்ப்பதற்கான ரகசிய மந்திரங்களோ  டெக்ஸ்ட் புக் ஆன்சர்களோ இல்லை  என்று கூறினார்.ஆயினும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எவ்வகையிலேனும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையேல் ஆஸ்துமா முதல் கொரோனா வரை பல்வேறுவிதமான சிக்கல்களுக்கு அது காரணமாகி விடும் என்றவர்.

பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களும் மின்சார மயமாக்கப்பட்ட வேண்டும் அந்த மின்சாரமும் மரபுசாரா எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றார். அதோடு ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் சூழியல்

சார்ந்த விழிப்போடு செயல்பட வேண்டும் என்றார். கட்டிடங்கள் கட்டுவது முதல் சாலை அமைப்பது வரை எல்லா செயல்பாடுகளிலும் இயற்க்கை சார்ந்த கவனம் இல்லாவிடில் பெரும் விளைவுகளை நாம் சந்திப்போம் என்றார். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பொழுது அவர் எடுத்த பல முக்கியமான முடிவுகளுக்கு பின்னாலுள்ள கரிசனத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

உலகளாவிய சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளுக்கு இந்திராகாந்தி அவர்கள் எப்படி முன்னோடியாக இருந்தார் என்பதை குறிப்பிட்டு இயற்கை சார்ந்த நேசமும் விழிப்பும் கொண்ட முதலும் கடைசியுமான ஒரே பிரதமர் இந்திராகாந்தி என்றார்.

கோவை நகர் உடனான அவரின் தொடர்புகள் ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் சரணாலயம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் அவரின் பங்கு அவர் மனைவி ஒரு தமிழர் மாமனார் ஒரு எழுத்தாளர் என குறிப்பிட்டார்.

கை தேர்ந்த உரையாடல்காரர் பல்துறை அறிஞர் அன்பான மனிதர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனந்த்குமாருக்கு மதுசூதன் சம்பத் வாழ்த்து

ஆவணப்படம்

கடந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்த விருது விழா புகைப்பட தொகுப்பு சில நிமிடங்களில் பார்த்த பிறகுகவிஞர் ஆனந்த் குமார் அவர்கள் எடுத்த வீடும் வீதிகளும் என்ற ஆவணப்படம்

திரையிடப்பட்டது. இயக்குனர் வசந்த் சாய் அவர்கள் தான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஆவணப்படம் இது என்றார்.

விழா

கடந்த ஆண்டுகளை விட ஒரு பேச்சாளர் கூடுதல் எனினும் பேசிய ஒவ்வொருவரும் குறித்த நேரத்திற்குள் தங்கள் உரையை அழகாக கவிஞரையும் விஷ்ணுபுரம் அமைப்பையும் வாழ்த்தி நிறைவு செய்தனர்.

திரு ஜெயராம் ரமேஷ் அவர்கள் பேசும்பொழுது இவ் விழாவிற்கு  செல்ல வேண்டாம் என்று அவருக்குத் தரப்பட்ட அழுத்தங்களை குறிப்பிட்டு  அரசு மற்றும் கார்ப்பரேட் நிதி உதவி இல்லாமல் இந்தியாவிலேயே நிகழும் முக்கியமான பெரிய இலக்கிய விழா இது என்றார்.

உங்களுரை வழக்கம்போல…

சங்க கால கவி தொடங்கி இன்று வரை நீளும் தொடர்ச்சியின் மாலையின் ஒரு  மலர் அண்ணாச்சி என்றீர்கள்.உப்புக்கும் பாடி புளிக்கும் பாடுமொரு கவி மரபில் வந்தாலும் தருவைப்புல் போல தன்னைத்தானே கொளுத்தி உலகின் வெளிச்சமாகும்  புரட்சியும் தியாகமும் நிறைந்த தற்பலியாளர் நிரை என்று நீங்கள் கூறிய இடத்தில்  ஒரு கணம் உறைந்தேன்.

ஜா ஜா க்விஸ் செந்தில் விஜய் சூரியன் பங்களிப்பு பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை.எப்போதும் போலவே இந்த ஆண்டும்.

இவ்வாண்டு விழாவில் சுபாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது . மொழிபெயர்ப்புகள் செய்தது அனைத்து படைப்புகளையும் படித்து வந்து முக்கியமான கேள்விகளை அமர்வுகளில் எழுப்பியது. விழா ஏற்பாடுகளில் பயண முன் பதிவுகளில் விருந்தினர்களை அழைத்து வந்து கவனித்ததில். ஒரு அமர்வை வெற்றிகரமாக மட்டுறுத்தியதில் ஆவணப்படத்தில் மிகச்சிறப்பாக பேசியதில் என  மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்களித்திருக்கிறார்.

சாம்ராஜ் அமிர்தம் சூர்யா குமரி ஆதவன் விக்னேஷ் ஹரிஹரன் ரம்யா லோகமாதேவி   அமர்வுகளில் சிறந்த கேள்விகளை எழுப்பினார்கள்.

சனியன்று இரவு இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட உங்கள் அறையில் ஒரு அங்குல இடைவெளியின்றி 70 பேருக்கு மேல் இரவு பன்னிரண்டு வரை நீங்கள் பேச கேட்டுக்கொண்டிருந்தோம்.

காலையும் மதியமும் இரவும் நாற்பது பேர் ஐம்பது பேராக சென்று தேநீர் அருந்துவதும். ஞாயிறு இரவு விழா நிறைந்த பின் ராஜஸ்தானி சங்க படிகளில் அமர்ந்து பேசி சிரித்ததும் அமர்வுகள் அளவுக்கே முக்கியமானவை.குக்கூ- தன்னறம் நண்பர்கள் வழக்கம் போல அழகிய துணிப்பையும் நாட்காட்டியும் அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்கள்.

எவ்விதக் கட்டணமும் இல்லாமல் 200 பேருக்கு மேல் தங்க வைத்து 400 பேருக்கு ஆறு வேளை உணவும் தேநீரும் அளிப்பதற்கு காரணமாய் அமைந்த உலகெங்கிலும் இருக்கும் உங்களது வாசக நன்கொடையாளர்களுக்கு எனது வணக்கங்கள்…

பலமுறை கூறியதுதான் எனினும் இதை சொல்லாது மனம் நிறையாது.இலக்கியம் எனும் செயல்பாட்டின் மீது உங்களுக்கு இருக்கும் பெருமதிப்பும்  அர்ப்பணிப்போடு கூடிய தீவிரமும்தான்  இவ்வளவு மகத்தான வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட போகிற அறிவுவேள்விக்கு மூல காரணம் அதற்கு என்பணிவான வணக்கங்களும் நன்றிகளும்… கவிஞர் வீரபத்ருடூ  கூறியதை போல more than  true human being.

வெள்ளி காலை 7 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்து உங்களை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானி சங்கம் வந்தேன் ஒவ்வொரு நண்பர்களாக வந்து கூடினார்கள் திங்கள் மாலை ஏழு மணிக்கு ரயில் நிலையத்தில் நீங்கள் விடை பெற்றுச் சென்றீர்கள்  அதன்பின்பு விக்ரமாதித்தன் அண்ணாச்சியை பத்து மணிக்கு பேருந்து ஏற்றி விட்டோம் ஒவ்வொரு நண்பர்களாக விடைபெற்றுச் சென்றனர்.

வீடு திரும்புகையில் ராஜஸ்தானி சங்கம் வரை சென்று சில நிமிடங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்…நான்கு நாட்கள் நான்கு நொடிகள் என கரைந்துவட்டது என்றென்றும் இருக்கப்போகும் நினைவுத்தடங்களை பதித்துவிட்டு….

மு.கதிர் முருகன்

கோவை

அனைத்துப் புகைப்படங்கள்: இணைப்பு1

அனைத்துப் புகைப்படங்களும் இணைப்பு 2

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 10:34

விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

இந்தியாவின் மிக முக்கியமான இலக்கிய திருவிழாவான விஷ்ணுபுரம் விருது விழா (2021) மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

சனி, ஞாயிறு இருதினமும் எழுத்தாளர் களை சந்தித்து அவர்களின்   படைப்புகளை குறித்த விவாத அமர்வுகன் தொடர்ந்து நடைபெற்றது. எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களை சந்தித்த தருணம். உதாரணம் இளம் வாசகன்  விக்னேஷ் ஹரிஹரன் கேட்ட கேள்விகள்.

இறுதியாக ஆவண பட திரையிடக்குப் பின் ,விருதும், கேடயமும் ,வழங்கி வாழ்துரையும் ஏற்புரையும் முடிந்து குழு புகைப்படம் எடுத்த பின் மேடையிலிருந்து கீழிறங்கி வந்ததும் விழாக்குழுவின் தூண்களில் ஒன்றான நண்பர் மேகலாயா கலெக்டர் ராம்குமார் புன்னகையுடன் கட்டிதழுவினார் . விழாவை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துவிட்டோம் எனும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு அது.பின்னர் அதுபோலவே குவிஸ் செந்தில் அண்ணாவும், ஜாஜாவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

அமெரிக்கா விலிருந்து சங்கர் பிராதப், சிஜோ,மணிகண்டன், பாலாஜி  அபுதாபி யிலிருந்து ஜெயகாந்த்ராஜு, கல்பனா குடும்பம்,  சவுதியிலிருந்து ஒலி சிவக்குமார் என உலகம் முழுவதும் இருந்து இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.

இரு தினமும் அனைவருக்கும் 6 வேளை உணவும், தங்குமிடம் வழங்கினோம். இறுதி நிகழ்வான விருது வழங்கும் நிகழ்வில் 500 பேர் வரை கலந்துகொண்டிருக்கலாம்.

அமெரிக்காவின் ராலே நகரிலிருந்து புறப்படும் முன் ஆவண பட இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் என்னை அழைத்து சொன்னார்   “ஷாகுல் விழாவுக்கு வருகிறேன் சந்திப்போம் ” என.உடல் நலமின்றி அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வெகு சிறப்பாக இந்த விழா நடக்க  நிதி முக்கிய காரணம் . 500 ரூ முதல் லட்ச ருபாய்  வரை உங்கள் வாசகர்களே  இதை வழங்கினர். முழுக்க முழுக்க வாசகர்களின் பங்களிப்பால் நடந்த பெரு விழா இது.

உலகம் முழுவதும் இருந்து  பொருளுதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பாகவும் , எங்கள் வழிகாட்டி ஜெயமோகன் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

மிக்க நன்றியுடன்

ஷாகுல் ஹமீது,

நாகர் கோவில்.

அன்புள்ள ஜெ

இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். இலக்கியவிழா என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே உதாரணமாக அமைந்த பெருவிழா. ஒவ்வொரு ஏற்பாடும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. இன்று இத்தகைய விழாக்களை ஒரு கார்ப்பரேட் அமைப்புதான் செய்யமுடியும். நான் அவ்வாறு நிகழ்வுகளை அமைத்திருக்கிறேன். ஆனால் முழுக்க முழுக்க நண்பர்களின் உழைப்புக்கொடையால் நிகழ்ந்த விழா என்பது உண்மையிலேயே திகைப்பூட்டுவது.

எல்லா அரங்குகளும் மிகச்சிறப்பாக இருந்தன. வசந்திடம் ஒரு பெரியவர் திரைப்படங்களில் வன்முறை பற்றி ஒரு வழக்கமான கேள்வியைக் கேட்டார். சின்ன வீரபத்ருடுவிடம் ஒருவர் அதேபோல ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்டார். ஆங்கிலக் கவிதைகளில் தேன்மெழுகுதான் இருக்கிறது, நம் கவிதைகளில் தேன் இருக்கிறது என்பதுபோல. அந்த இரண்டு கேள்விகளைத் தவிர்த்தால் 12 மணிநேரம் நடந்த எல்லா விவாதங்களுமே ஆழமானவை. எல்லா கேள்விகளுமே சீரிய பதில்களை உருவாக்கியவை.ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைச் சொல்ல என்னால் முடியும். ஆனால் நான் வெறும் பார்வையாளராகவே இருந்தேன்.

இந்த அற்புதமான நிகழ்வை ஒருங்கிணைத்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவியுங்கள்.

சரவணக்குமார்

புகைப்படங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 10:31

அதுலம், இணையவழி தமிழ்க்கல்வி

அன்பும் மதிப்பும் மிக்க ஆசிரியருக்கு,

பல முறை தங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எண்ணம் மனதில் எழும். நான் மிகவும் மதிக்கின்ற ஆளுமை தாங்கள் என்பதால் ஒரு பொழுதும் தங்களின் மதிப்புமிக்க நேரத்தை  வீணடிக்கக் கூடியதாக இருக்க கூடாது என்பதற்காக பலமுறை சிந்தித்த பிறகே எழுதுகிறேன்.ஈரோட்டில் நடைபெற்ற சில இலக்கிய கூட்டங்களில் தங்களை அருகாமையிலிருந்தும், தொலைவிலிருந்தும் பார்த்திருக்கிறேன். தங்களை நெருங்குவதற்கு அவ்வளவு தயக்கம் என்னுள் இருந்தது. “விஷ்ணுபுர இலக்கிய” விழாவில் இரண்டு முறை கலந்து கொண்ட பொழுதும் கூட தங்களின் பேச்சையும்,நிகழ்வையும் அரங்கின்  கடைக்கோடியிலிருந்து கேட்டுக் கொண்டும், நிகழ்வை கவணித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன்.எப்பொழுதும் அந்த பேரறிவுப் பிரமாண்டத்தின் முன் நான்  சிறு துரும்பு என்றே கருதுகிறவன்.

தங்களின் “தன்மீட்சி” நூல் வாசிப்பு அனுபவம் குறித்து ஒரு கட்டுரை எழுதி மதுரையில் சித்திரை முதல் நாளன்று நடைபெற்ற “கல்லெழும் விதை” நிகழ்வில் தங்களிடம் பரிசும் ஆசியும் பெற்ற அந்த கணம் அவ்வளவு நெஞ்சினிக்க கூடியதாக நினைவில் பதிந்திருக்கின்றது. சில வார்த்தைகள் பேசிவிட்டு தங்களின் தொலைபேசி எண் வழங்கினீர்கள். ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு கணம் என்றாலும் ஒரு மாணவனாக தங்கள் முன், தங்களின் எழுத்தின் முன் முழுமையாக ஒப்புக்கொடுத்த நாள் அது. முன்பே வாசித்திருந்த “வெள்ளையானையும்”, “இரவும்” மீண்டும் வாசிக்கையில் பிறிதொரு பரிமாணத்தைக் காட்டின.

ஒரு தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் நான் மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை உருவாக்கவும், வளர்க்கவும் தங்களின் “அறம்” சிறுகதைகளை வகுப்பில் சொல்வதுண்டு, உண்மையில் கணிப்பொறியியல் ஆசிரியனான நான் அன்றைக்கான பாடங்கள் முடிந்தபிறகு பெருவிருப்பத்தோடு அதை செய்திருக்கிறேன். பிறகொரு சமயம் சில காரணங்களை முன்னிட்டு வேறு பணிகளுக்கு  மாறலாம் என முடிவுசெய்த பொழுதும்  கூட எனக்கான ”சொதர்மமாக”  நான் கண்டறிந்த ஆசிரியப்பணியை விட்டு விலக மனம் ஒப்பவில்லை.. அதன் நீட்சியாகவே தமிழ் மொழியை பிழையற பேசவும், எழுதவும்  குழந்தைகளுக்கு கற்றுத்தரும் எண்ணம் உதித்தது. என்றும் அன்பிற்குறிய வழிகாட்டிஅண்ணன் சிவராஜ் அவர்களின் மேலான வழிகாட்டுதலோடும், முதுகலை தமிழ் இலக்கியமும், இளங்கலை கல்வியியலும் படித்திருக்கின்ற என் மனைவி உமாமகேஸ்வரி அவர்களின் ஒத்துழைப்புடனும்  ஒரு குருபூர்ணிமா தினத்தில் உங்களிடத்திலான என் மானசீக ஆசி வேண்டுதலோடு ஒரு பேரெண், ஒப்பற்ற, முடிவிலி என்கின்ற பொருள்படும்”அதுலம்” என்ற  பெயரில் இணைய வழி தமிழ் கற்றல் மையம்  அண்ணன் பழனியப்பன் ராமநாதன் அவர்களின் இரண்டு மகன்கள் ஆதிநாராயணன், மணிகண்டன் ஆகியோரை மாணாக்கர்களாகக் கொண்டு துவங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என மாணவர்கள் பல இடங்களில் இருந்து வகுப்புக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

வகுப்புகளுக்கு மாணவர்கள் வரத்துவங்கிய பிறகு நான் இன்னும் மொழியை தீவிரமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள சில இளைஞர்கள் வருகிறார்கள். சிறுகதை எழுதுவது குறித்து சிலர் பயிற்சியளிக்க கேட்டபொழுது தங்களின்”சிறுகதை ஒரு சமயற்குறிப்பு” படித்து விட்டு பயிற்சியளித்தேன். வகுப்பிற்கு வருகின்ற மாணவர்கள் பலரின் பெற்றோர் பலர் உங்களது வாசகர்களாக இருப்பதும் என்னோடு தொலைபேசியில் பேசும் பொழுது தங்கள் படைப்புகள் குறித்து உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

யதார்த்தத்தில் தான் வாழும் வாழ்க்கைக்கும், தான் பேசும் மொழிக்கும் இடையேயான தூரம் என்பது குழந்தையின் மனநிலையில் குழப்பத்தைத் தரக்கூடியது. ஆகவே, தகுந்த திறன்பெற்ற ஓர் ஆசிரியர் வாயிலாகத் தாய்மொழியின் அடிப்படைகளை லயித்துக் கற்கும்பொழுது, ஓர் மொழியில் ஒளியடையும் ஆத்மவிளைவு அக்குழந்தைக்குப் புலப்படும். அதன்பின் அக்குழந்தை எல்லா மொழியையும் நேசிக்கத்துவங்கிவிடும். அதுலம்’ தமிழ் கற்றல் மையம், தமிழை ஆழமுறக் கற்பிப்பதற்கான பெருமுயற்சிப்பாதையில் தன்னை செலுத்திக்கொள்கிறது. இந்த முன்னெடுப்பிற்கான முயற்சியில் தங்கள் பங்களிப்பை வழங்கிய குக்கூ நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கும் இந்த கணம் இந்த முன்னெடுப்பு தொடரவும் அதுலம் மேலும் வளரவும் தங்கள் ஆசியை கோருகிறேன்.

 

ம.கோவர்த்தனன்

சு.உமாமகேஸ்வரி கோவர்த்தனன்

அதுலம் இணையவழி தமிழ் கற்றல் மையம்,ஈரோடு

8012361168, 9944484988

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 10:30

அருண்மொழிநங்கை நூல் வெளியீட்டு விழா

அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ தன் வரலாற்று நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஸீரோ டிகிரி பதிப்பகம் – நற்றுணை இலக்கியக் குழுமம் சார்பில் ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் :

நிவேதனம் ஹால், யெல்லோபேஜஸ் அருகில், மயிலாப்பூர்,சென்னை

நாள்

2-1-2022 [ஞாயிறு]

மாலை 530

பங்கேற்பாளர்கள்

சாரு நிவேதிதா

யுவன் சந்திரசேகர்

எம்.கோபாலகிருஷ்ணன்

ஜெயமோகன்

காயத்ரி

அருண்மொழி நங்கை

 

அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்

அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை

அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்

அருண்மொழியின் சொற்கள்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 07:52

December 27, 2021

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. 26-12-2021 அன்று கோவையில் நிகழ்ந்த விழாவில் விருது வழங்கி ஆற்றப்பட்ட சிறப்புரைகள்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2021 10:36

ஊமைச்செந்நாய், சினிமாத் தலைப்பு

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்,

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத் தலைப்புக்கு ஜெயகாந்தன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கும் செய்தியை பார்த்திருப்பீர்கள்.

மற்றொரு அதிர்ச்சியாக “ஊமைச்செந்நாய்” என்ற தலைப்பில் ஒரு படம் போன வாரம் வெளியாகி உள்ளது. அந்த தலைப்பை தற்போது கூகிள்ளில் தேடி பார்த்தால் முதலில் அந்த படமே காட்டுகிறது தங்களது பொன்னான படைப்பை பின்னுக்கு தள்ளி. இத்தனைக்கும் அந்த படத்திற்கு ஒரு விக்கி பேஜ் கூட கிடையாது. எங்கோ ஒரு சினிமா சைட்டில் இருந்து விபரம் எடுத்து அதை முதலில் போட்டுறிக்கிறா ர்கள். சினிமாவுக்கு சர்ச் வெப்சைட்கல் தரும் முன்னுரிமை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஊமைச் செந்நாய் என்பது சாதாரண புழக்கத்தில் இருக்கும் வார்த்தை கிடையாது. தங்களிடம் அனுமதி பெற்றுள்ளார்களா? சட்டப்படி அவ்வாறு திரைபடத்திற்கு பெயர் வைக்கலாம் என்று இருந்தாலும், தங்கள் படைப்பை பின்னுக்கு தள்ளியது குறித்து வருத்தமே !

ஜெயகாந்தன்  குடும்பத்தினரின் கவலை இப்போது எனக்கு புரிகிறது. அவரது படைப்பை பின்னுக்கு தள்ளி விடுகிறது படம்.

அன்புடன்

சக்தி மதுரை

 

அன்புள்ள சக்தி,

சினிமா தயாரிப்பு நெறிகளின்படி அது குற்றம் அல்ல. பழைய சினிமாப் பெயர்களையே குறிப்பிட்ட காலம் கடந்தபின் வைக்கலாம். ஆயிரத்தில் ஒருவன் என்றால் பலருக்கு செல்வராகவன் படமே நினைவுக்கு வரும்.

ஏற்கனவே பல பெயர்கள் அப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன. வெகுஜன எழுத்தில் ஒரு கல்ட் கிளாஸிக் என்று சொல்லத்தக்க பொன்னியின் செல்வன் தலைப்பே வேறொரு படத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

என்னுடைய அறம், வெள்ளை யானை உட்பட பல நூல்பெயர்கள் ஏற்கனவே சினிமாவுக்கு வைக்கப்பட்டுள்ளன. ஊமைச்செந்நாய் என பெயர் வைத்தவர்கள் என் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கவில்லை என நண்பர்கள் சொல்லி அறிந்தேன். இதழாளர்கள் கேட்டபோது  ‘2.0 எழுத்தாளரா, அவர் கதை எல்லாம் எழுதியிருக்கிறாரா?’ என இயக்குநர் வியந்ததாகச் சொன்னார்கள். எவரோ இணையத்தில் எங்கிருந்தோ தேடிச் சொல்ல, நன்றாக இருக்கிறதே சரி இருக்கட்டும் என்று வைத்திருப்பார்கள். படமும் அதற்கேற்ப அசட்டுத்தனமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இதைப் பொருட்படுத்துவதில்லை. இலக்கியம் நீண்டகாலம் நிலைநிற்பது. சினிமா சிலகாலமே நிலைநிற்கும்- அது ஒரு மாபெரும் வெற்றிப்படம், கிளாஸிக் என்றாலும்கூட. ஒரு தலைமுறையைக் கடக்காது. ஏனென்றால் அது ஒரு காலகட்டத்தின் ரசனைக்கேற்ப, அக்காலத்து மக்களைக் கவரும்பொருட்டு எடுக்கப்படுகிறது. இலக்கியம் என்றுமுள்ள சில உணர்வுகளை தொடுகிறது, சில வினாக்களை எழுப்புகிறது, சில படிமங்களை உருவாக்குகிறது

[அரிதான விதிவிலக்கு தில்லானா மோகனாம்பாள். சினிமா அந்த நாவலை கடந்து நிலைகொண்டுவிட்டது]

சினிமாவின் தற்காலிக கவனக்கலைப்பைக் கடந்து என்  கதைகள் நிலைகொள்ளும் என்றே நம்புகிறேன். அவ்வண்ணம் நிலைகொள்ளும் படைப்பு மட்டும் என்னுடையதென எஞ்சினால் போதும். காலத்தின் ரசாயனச் சோதனையை படைப்புகள் தாண்டவேண்டும். காலம் உருவாக்கும் சோதனைகளில் ஒன்றுதான் இதுவும்.

யோசித்துப் பாருங்கள், பொன்னியின் செல்வன் என்று ஒரு சினிமா வந்ததை நீங்கள் நினைவுறுகிறீர்களா என்ன?

ஜெ

ஊமைச்செந்நாய்- கடிதம்

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்

ஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்

“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

ஊமைச்செந்நாய் (சிறுகதைத்தொகுப்பு)

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2021 10:34

இருளர்களுக்கு நிலம்

நம் நண்பர்கள் வெவ்வேறு அறக்கட்டளைகள், சேவை அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள். அவை பெரிய நிறுவனமாக ஆகாமல், தனிநபர் சார்ந்த பணிகளாகவே நிகழவேண்டும் என்பது என் எண்ணம். ஒரு குறிப்பிட்ட தேவைக்கென மட்டுமே நிதி பெற்று அதை அதற்கு மட்டுமே செலவழிப்பதே அறக்கட்டளைகள் சீராகச் செயல்பட சிறந்த வழி.

நண்பர் ஷாகுல் ஹமீது அவர் செயல்படும் அறக்கட்டளையின் பொருட்டு இருளர்களைப் பற்றி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இருளர்களுக்காக… இத்தகைய செயல்பாடுகளுக்கு அரசுஅமைப்புகள், பெருநிறுவனங்களின் உதவி அமையாது என்பது என்னைப்போன்றவர்களின் பொதுவான நம்பிக்கை. ஆனால் அந்தப் பதிவு வெளியானதுமே அரசின் தலைமையில் இருந்து தொடர்பு கொண்டனர். ஆவன செய்வதாகச் சொன்னார்கள். அதன் அடிப்படையில் உதவ முன்வந்தவர்களிடம் பின்னர் வேறு கோரிக்கைகளுக்காக தொடர்பு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு கூறியபடி உடனடியாக இருளர்களுக்காக கோரப்பட்ட 12 நிலப்பட்டாக்களும் நேரடி அரசு உதவியாகவே வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் நிகழ்கின்றன. இது அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல, ஒரு பொதுக்கோரிக்கைதான். அதையே கருத்தில்கொண்டு இத்தனை விரைவில் ஆவன செய்தது நிறைவூட்டுகிறது.

இந்த அரசின் செயல்திறனுக்கான சான்றென இதைக் கொள்கிறேன். முன்பில்லாத ஓர் அக்கறை ஆட்சியாளர்களிடம் இருப்பதைக் காண்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2021 10:33

December 26, 2021

விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விக்ரமாதித்யன் அவர்களைப்பற்றி ஆனந்த்குமார் எடுத்த ஆவணப்படம். ஒளிப்பதிவு, இயக்கம்- ஆனந்த்குமார். இசை -ராஜன் சோமசுந்தரம்.  2021 ஆம் ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 12:33

விஷ்ணுபுரம் நிகழ்வு, முதற்பதிவு

விஷ்ணுபுரம் விருது 2021 .கோவையில் 26-12-2021 அன்று கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. செய்தி அறிவிக்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 12:25

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.