Jeyamohan's Blog, page 861
December 24, 2021
விஷ்ணுபுரம் விவாதமேடை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய குறிப்புகளை வாசித்தேன். நான் இந்தப் பரிந்துரைகள் இல்லையென்றால் இந்தப் படைப்புகளை உடனடியாக வாசித்திருக்க வாய்ப்பில்லை. இவர்களைப்பற்றிய விரிவான விவாதங்களும் சுட்டிகளும் மிகவும் உதவின. படைப்பாளிகள் பற்றிய இந்த அறிமுகம் மிகமிக முக்கியமான ஒன்று. முன்பு சங்கீதத்திற்கு திருவையாறு தியாகராஜ உத்சவம் இப்படி ஒரு நல்ல அரங்கேற்ற மேடையாக இருந்தது. சென்னையில் அரங்கேற்றம் செய்யலாம்தான். ஆனால் அங்கே சொந்தக்காரர்கள்தான் வருவார்கள். நாலைந்துபேர் தேறினாலே அதிசயம். அதுக்கு நல்ல சாப்பாடுவேறு போடவேண்டும். அதெபோலத்தான் புத்தகம் வெளியிடும் மேடை. சொந்தச்செலவில் ஏற்பாடு செய்யலாம். ஆனால் பார்வையாளர்கள் வரமாட்டார்கள். திருவையாறில் நல்ல இசையறிந்த ஆயிரம்பேர் அரங்கிலே இருப்பார்கள். அவர்கள் முன் பாடி அப்ளாஸ் வாங்குவது என்பது ஒரு நல்ல தொடக்கம். பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, காயத்ரி எல்லாருமே முதலில் தெரியவந்தது திருவையாறு வழியாகத்தான். அதேபோல விஷ்ணுபுரம் மேடை இருக்கிறது. இளம் படைப்பாளிக்கு இருநூறுபேர் கொண்ட ஒரு மேடை என்பது மிகச்சிறந்த அனுபவம்.
ஆனால் இதை ஓர் அறிமுகமாக எடுத்துக்கொள்ளலாமே ஒழிய பாராட்டுவிழாவாக எடுத்துக்கொண்டால் அந்த எழுத்தாளரின் பயணம் குறைந்துவிடும். அந்த அபாயம் உண்டு. இப்படிச் சொல்லுவதனால் நான் எவரையும் புண்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் இப்போதெல்லாம் எல்லா மூத்த எழுத்தாளர்களும் பாராட்டு மட்டுமே சொல்கிறார்கள். சின்ன விமர்சனத்துக்கே கடுமையாக இளம் எழுத்தாளர்கள் புண்படுகிறார்கள். ஆனால் தமிழ் சிறுகதையின் மரபு மிகப்பெரியது. அதை ஞாபகப்பத்த்திக்கொண்டே இருந்தாகவேண்டும். இவர்கள் தங்கள் சிறந்த சிறுகதைகளில் மிகப்பெரிய சாத்தியங்கள் இருப்பதை காட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து வாசித்தும் எழுதியும் அந்தை அடையவேண்டும்
எம்..மகாதேவன்
அன்புள்ள ஜெ
இளம் எழுத்தாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மிக முக்கியமானது. அவர்களுக்கு இந்த மேடை அவர்களின் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி வாசிக்கிறார்கள் என்பதை காட்டுவதாக அமையவேண்டுமென நினைக்கிறேன். எந்த எழுத்தாளரும் வாசகருக்காக எழுதக்கூடாது. ஆனால் எழுத்து எனபது நுட்பமான வாசகர்களுடன் நிகழ்த்தப்படும் ஓர் உரையாடல்தான். ஆகவே அவர்களுக்கு நல்ல வாசகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையவேண்டும். நல்ல வாசகன் தாகம் கொண்டவன்.நிறைய எதிர்பார்ப்பவன். அப்படி எதிர்பார்ப்பவன் மட்டும்தான் தேடித்தேடி வாசிப்பான். இன்றைய இணையச்சூழலில் கதைகள் வந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன.நடுவே ஒரு நல்ல கதைக்கும் ஆசிரியருக்கும் வாசகர்களிடம் கவனம் கிடைப்பது மிகச்சிறந்த விஷயம்.
சண்முகசுந்தரம்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விக்கிரமாதித்யனுக்கு விருது – கடிதம்
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யனுக்கு விருது வழங்கும் செய்தி வந்தது முதல் இன்றுவரை உங்கள் தளத்தில் அவரைப்பற்றி எவ்வளவு எழுதப்பட்டுள்ளது என்று பார்த்தேன். மலைப்பாக இருக்கிறது. இந்த சில மாதங்களில் எழுதப்பட்டவை அவரைப்பற்றி இதுவரை பேசப்பட்ட ஒட்டுமொத்த பக்கங்களைவிடவும் மும்மடங்கு இருக்கும். ஒரு விருது என்பது எழுத்தாளனை கொண்டாடுவது. அவனை முன்னிறுத்துவது. அதை உங்கள் தளம் மூலம் ஆணித்தரமாக நிறுவிவிட்டீர்கள்.
இன்றைக்கு ஒரு அபத்தமான சூழல் உருவாகியிருக்கிறது. முன்பு இலக்கியத்துக்குச் சிற்றிதழ்கள் இருந்தன. சினிமா, குடும்பம் எல்லாம் பேசும் இதழ்கள் இருந்தன. அரசியல் வம்புக்கு வேறு இதழ்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை. இன்றைக்கு சமூகவலைத்தளச் சூழலில் எல்லாம் ஒன்றுகலந்துவிட்டது. எல்லாம் ஒரே இடத்தில் பேசப்படுகின்றன. நக்கீரன் தவிர எதையும் வாசிக்க தகுதியற்ற ஒருவன் சுந்தர ராமசாமி என்ன கொக்கா என்று கேட்கிறான். சுஜாதாவா புதுமைப்பித்தனா சிறந்த எழுத்தாளன் என்று விவாதம் நடக்கிறது. ஒரு துறைபற்றி தெரிந்தவர்களும் அதைப்பற்றி அறிவே இல்லாதவர்களும் ஒரே இடத்தில் விவாதிக்கமுடியும் என்ற சூழல் மனிதகுல வரலாற்றிலேயே முன்பு இருந்ததில்லை என நினைக்கிறேன்.
இதை நீங்கள் முன்பே எழுதியிருந்தது ஞாபகம். நாம் பழைய தமிழ் நெட், திண்ணை இணையதளங்களில் 2000 வாக்கில் நிறைய விவாதித்திருக்கிறோம். அன்றைக்கு நானெல்லாம் புதுவெள்ளம் வந்து எல்லாம் மேம்படப்போகிறது என்ற பரவசத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் தொழில்நுட்பக் காரன். எல்லா மதிப்பீடுகளும் மாறவேண்டும் என்று எழுதினேன். ஆனால் நீங்கள் நவீன இலக்கியம், சிற்றிதழ் இலக்கியம் வேறு வணிக எழுத்து வேறு என்ற பிரிவினையை முன்வைத்துக்கொண்டே இருந்தீர்கள். அன்றாடக் கட்சியரசியலையும் சிந்தனையையும் வேறுபடுத்தியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் சிந்திக்கவே முடியாதபடி கூச்சல்களால் மூடப்படுவோம் என எழுதினீர்கள்.
இன்றைக்கு நீங்கள் அஞ்சியதே நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு எந்தச் சிந்தனையையும் பேசமுடியாது. முச்சந்தி அரசியல்கூச்சல்களை மட்டுமே அறிந்தவர்கள் உள்ளே வந்து காழ்ப்புகளை கக்க ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு இலக்கியத்தின் அடிப்படைகளையே பேசமுடியாது. கமர்ஷியல் சினிமா, கமர்ஷியல் எழுத்து, கட்சி எழுத்து எல்லாவற்றையும் கலந்துகட்டி குழப்பிவிடுவார்கள். இந்த குழப்பத்திற்கு வெளியே ஒரு தனி வட்டமாக நீங்கள் தொடர்ச்சியாக இலக்கியமதிப்பீடுகளை மட்டுமே முன்வைக்கும் ஒரு அரங்கை உருவாக்கி பத்துப்பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்தி அதை நிலைபெறச் செய்திருக்கிறீர்கள். இது தமிழுக்கு உங்கள் மிகப்பெரிய கொடை. உங்கள் நண்பர்களுக்கு தமிழ் அறிவுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
விக்ரமாதித்யனுக்கு விருது அளிக்கப்படும்போது அவரைப்பற்றி இந்த சமூகவலைத்தளச் சூழலில் என்ன பதிவு இருக்கிறது என்று பார்த்தேன். வாழ்த்துக்கள் கூட கிடையாது. எவருக்கு எந்த விருது கிடைத்தாலும் அப்படித்தான். எந்த எழுத்தாளரையும் கூர்ந்து வாசிப்பதோ, விவாதிப்பதோ நடப்பதில்லை. ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எழுத்தாளரை வசைபாடுவதற்கு அத்தனை பாமரக்கூட்டமும் விழுந்தடித்துக்கொண்டு வருகிறது. இச்சூழலில் இந்த இணையதளத்தின் பக்கங்களில் தமிழின் ஒரு கவிஞர் நிறைந்து நிற்பதைக் காண பெரும் நிறைவு உருவாகிறது.
இதுதான் சாத்தியமானது. நம் சமூகத்துக்கு வம்புதான் தேவை. அந்த இடத்தில் கவிஞனோ கவிதையோ பேசப்படமுடியாது. கவிதையையோ இலக்கியத்தையோ கூட சல்லித்தனமான வம்புகளாக மாற்றித்தான் இவர்கள் பேசுவார்கள். அந்த சூழலை முழுக்க உதறிவிட்டு தனி வட்டங்களை உருவாக்கிக்கொண்டுதான் இலக்கியம் பற்றி நாம் பேசமுடியும். அழுத்தமான விவாதங்கள் நடக்கும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறீர்கள். புதிய இளைஞர்படை ஒன்று உருவாகி வந்திருக்கிறது. அது நம்பிக்கையூட்டும் செயல். இருட்டைக்கண்டு வருந்தாதே, முடிந்தால் விளக்கை ஏற்றி வை என்று சொல்லப்படுவதுண்டு. அதைச் செய்திருக்கிறீர்கள். நன்றிகள்.
ஸ்ரீராம்
விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா
விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்
விக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்
விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்
எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்
நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி
ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்
மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்
இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.
நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா
கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ
கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன் – ரவிசுப்பிரமணியன்.
செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு
பாலைச் சிறுபொழுது- கடலூர் சீனு
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் கடிதங்கள்-15
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3
December 23, 2021
விக்கிப்பீடியாவுக்கு மாற்று
அன்புள்ள ஜெ,
விக்கிப்பீடியா பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். விக்கிப்பிடியாவின் கான்செப்ட்டின் பிரச்சினை அது.அதில் எவர் வேண்டுமென்றாலும் எடிட் செய்யலாம். பதிவுசெய்துகொண்டால் போதும். ஆகவே அங்கே ஒரு சமூகத்தின் சராசரி அறிவுத்தளம்தான் வெளிப்படும்.
தமிழின் சராசரி அறிவுத்தளம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. சினிமா, அரசியல், கப்பித்தனமான மொழிபெயர்ப்பு அறிவியல், காலாவதியாகிப்போன கலைச்சொல்லாக்கம், தமிழ்வெறி எல்லாம்தான். அதில் நவீன இலக்கியத்துக்கு இடமில்லை. அதை எந்தவகையிலும் நடைமுறையில் பயன்படுத்தவும் முடியாது.
ஆங்கில விக்கிப்பீடியா என்பது அப்படி அல்ல.அது ஆங்கிலம் வாசிக்கும் மக்களின் சராசரியை வெளிப்படுத்துகிறது. அதற்கு ஓர் ஐரோப்பியப் பல்கலை ஆய்வுத்தரம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அதன் தரம் மிகமிக உயர்வானது.
இங்கே தமிழுக்கு எடிட்டர்கள் வந்தால் எப்படி இருப்பார்கள்? அசோகமித்திரன் இறந்தபோது எனக்குத் தெரிந்த ஒரு விக்கி எடிட்டர் ‘அசோகமித்திரனா, அவர் யார்?’ என்று கேட்டார். எவரென்றே தெரியாதவருக்கெல்லாம் ஏன் செய்தி வெளியிடுகிறார்கள் என்று வியந்தார். அவர் விக்கிப் பக்கத்தில் அசோகமித்திரன் பற்றிய கட்டுரையை அதிலுள்ள அடிப்படைச் செய்திகளைக் கூட மிகையானது என்று சொல்லி வெட்டிவிடுவார் இல்லையா?
விக்கிப்பீடியா பற்றி பொதுச்சூழலிலும் மிகப்பெரிய அறியாமை உள்ளது. தமிழ் விக்கியை பார்ப்பவர்கள் மிகக்குறைவு. பலருக்கு விக்கி என்றால் என்னவென்றே தெரியாது. விக்கி நன்கொடையில் இயங்கும் ஓர் அமைப்பு. காரணம் அது விளம்பரங்களை அனுமதிப்பதில்லை. அது தொடர்ச்சியாக நிதியுதவி கோருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நன்கொடை அளிப்பவர்கள் மிகக்குறைவு.
சென்ற சில ஆண்டுகளில் விக்கி நிதிச்சிக்கலில் இருந்தபோது ரூ 150 குறைந்தபட்ச நிதியுதவி செய்யலாம் என்றும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் நிதியுதவி செய்யலாமென்றும் அறிவித்தனர். மின்னஞ்சல்கள் அனுப்பினர். என் அமெரிக்க நண்பர்களில் மிகப்பெரிய தொகை அளித்தவர்கள் பலர் உண்டு. நான் என் தமிழ் நண்பர்களிடம் கேட்டால் குறைந்தபட்ச தொகையான 150 அளித்தவர்கள்கூட மிகக்குறைவு.
ஏனென்றால் சமூகவலைத்தளத்தில் அதைப்பற்றிச் செய்திகளை எவருமே பகிரவில்லை. ஆகவே எவருக்குமே எதுவுமே தெரியாது. இவர்களின் உலகமே சமூகவலைத்தள வம்புகள்தானே?
தமிழ் விக்கி இன்றைய அளவில் நம்பகமற்றது. அரைகுறையானது. பெரும்பாலும் பயன்படுத்தப்படாதது. அதை முழுக்கவே புறக்கணிப்பதுதான் உகந்த வழி.
இன்று தமிழ்விக்கிக்கு வெளியே ஓர் இணையதளம் ஆரம்பித்து இலக்கியச் செய்திகளை திரட்டுவது மிகப்பெரிய பணி. உடனடியாகச் செய்யவேண்டியது. அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படவேண்டியது. விக்கி போலவே அதற்கும் நன்கொடைகள் பெறலாம். விக்கிபோல குறைந்தபட்சம் 150 என்றே வைக்கலாம்.
தமிழ் விக்கியிலுள்ள பெரும்பாலான நவீன இலக்கியம் பற்றிய செய்திகள் இரண்டு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மு.வரதராசனார் எழுதிய தமிழிலக்கிய வரலாறு. இன்னொன்று, நீங்கள் எழுதி வெளியிட்ட நவீனத்தமிழிலக்கிய அறிமுகம். அதிலுள்ள தரவுகள் பற்றி ஒருமுறை உங்களுக்கு எழுதிக்கேட்டிருந்தேன். பெரும்பாலும் அந்தந்த எழுத்தாளர்களிடம் நேரில் தொடர்புகொண்டு கேட்டவை என எழுதியிருந்தீர்கள். அவற்றையே எடுத்து விக்கிப்பக்கமாக ஆக்கினார்கள்.
தனியொருவராக நீங்கள் செய்தவற்றை ஒரு திறன்வாய்ந்த குழுவின் உதவியுடன் மேலும் விரிவாக செய்துவிடமுடியும். ஆனால் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அனைவரையும் பங்களிப்பாற்ற விடுவது என்ற விக்கி நடைமுறை தமிழுக்கு சரிவராது. குப்பைகளாக வந்து குவியும். அவற்றை எடிட் செய்யலாம் என்றால்கூட மிகப்பெரும் பணி அது. அனைவரையும் எடிட் செய்ய விட்டால் நாளும் வந்து திருத்திக்கொண்டே இருப்பார்கள். காழ்ப்புகளையும் வசைகளையும் கொட்டுவார்கள். அதை கண்காணிப்பது மிகக் கடினம்.
ஆகவே நல்ல ஒரு எடிட்டர் குழுவை அமைத்து பதிவுகளை போடுவதே உசிதமானது. பதிவுகளைப் போட விரும்புபவர்கள் நேரடியாக அந்த ஆசிரியர்குழுவுக்கே அனுப்பலாம். படிப்படியாகச் செய்துகொண்டிருந்தால் காலப்போக்கில் மிகப்பெரிய ஒரு தரவுத்தொகுதியாக ஆகும்.
அந்த கலைக்களஞ்சியத்துக்கு எந்த வகையான மொழிக்கொள்கையும் கருத்தியலும் இருக்கக்கூடாது. அப்படியென்றால்தான் அனைவரையும் உள்ளே கொண்டுவர முடியும். தனித்தமிழ்க்கொள்கை என்று சொல்லிக்கொண்டு பெயர்களை திருத்தியமைப்பது, பிராண்ட் பெயர்களை மொழிபெயர்ப்பது போன்ற கூத்துகளுக்கு இடமிருக்கக் கூடாது.
ஆசிரியர் குழுவை ஆண்டுதோறும் விரிவாக்கிக் கொண்டே இருக்கவேண்டும். ஆங்கிலம் தமிழ் இரண்டுக்கும்.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணசாமி
அன்புள்ள ரமேஷ்,
விஷ்ணுபுரம் விழாவின்போது நண்பர்களுடன் சந்தித்து இதைப்பற்றி முடிவெடுக்கலாமென நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல ஒரு விரிவான ஆசிரியர் குழுவை அமைக்கவேண்டும். எழுதித்தருபவர்களுக்கு பணம்கொடுத்து பணியமர்த்தவும் செய்யலாம்.
நிதி தேவை. ஆனால் குறைந்தபட்சம் 150 ரூபாய் என்றெல்லாம் வகுத்தால் தமிழ் உள்ளம் அதிகபட்சம் 150 என்றுதான் புரிந்துகொள்ளும். இந்த விக்கிப்பீடியா குற்றவாளிக்கும்பலை எதிர்கொண்டே ஆகவேண்டும்
ஜெ
அன்பு ஜெ,
எனக்கு மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. சில மணி நேரங்கள் செலவழித்து காளிப்ரஸாத் என்ற பெயரில் ஆங்கில தமிழ் விக்கி பதிவுகள் எழுதினேன் – 26 ஆதாரங்களுடன்.
காலையில் எழுந்து பார்த்தால் ஆங்கில விக்கி பக்கத்தை டிலீட் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஏனென்றால் ஆதாரமாக தந்த ஆனந்த விகடன், இந்து தமிழ் திசை, வல்லினம், எஸ் ரா தளங்கள் எதுவும் Notable அல்லவாம்
தமிழ் விக்கியில் காளிப்ரஸாத் பற்றி அகரமுதல்வன் பேசும் யுடியுப் விடியோ லிங்க்கை டிலீட் செய்கிறார்கள். ஏனென்றால் யுடியுப் unreliable source என்கிறார்கள்.
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இப்படி டிலீட்,எடிட் செய்திருப்பது ஒரே அட்மின் அக்கவுண்ட் தான். அந்த நந்தகுமார் போல வெளிப்படையாக ப்ரொபைல் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் 2016லும் இதே அக்கவுண்ட் தான் என் ப்ரொபைலை ‘நீ பல அக்கவுண்ட் வைத்து மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்கிறாய்’ என்று தடை செய்வதாக பயமுறுத்தியது. இவர் நிச்சயம் தமிழ் தெரிந்த, இலக்கிய உலகம் தெரிந்தவராகத்தான் இருக்கவேண்டும்.
விக்கிபீடியா நல்ல தரமுள்ள கலைக்களஞ்சியமாக வருவதற்கு இப்படிப்பட்ட முட்டிமோதல் செய்யவேண்டும் என்றால் இது தான் விதி. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு அட்மினிடம் first principlesலிருந்து துவங்குவது அயர்ச்சி தருகிறது
விக்கிப்பீடியா பற்றி சிட்னி கார்த்திக் நல்லவிதமாக எழுதியிருந்தார். நீங்களும் பதிலளித்திருந்தீர்கள். நான் இந்த அயர்ச்சியாலேயே அந்த உரையாடலில் பங்கெடுக்கவில்லை.
மதுசூதன் சம்பத்
அன்புள்ள மது,
கார்த்திக் போன்றவர்கள் செய்திகளை வாசித்து, தேவையானவற்றை நம்பும் நல்லெண்ணம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு துறையில் செயல்பட ஆரம்பித்தால்தான் எதிர்மறைச் சக்திகளின் விசை தெரியும்.
விக்கியை விடுங்கள். அதனுடன் போராடி நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. நாம் வேறொன்றை தொடங்குவோம்
ஜெ
இன்னொரு பெருமுயற்சி
கணினிநிரல் எழுத்து, சில புதிய வாசல்கள்…விக்ரமாதித்யன் -நாடோடியின் கால்த்தடம்
விஷ்ணுபுரம் விருதுபெறும் படைப்பாளி குறித்து ஒரு நூல் வெளியிடவேண்டும் என்பது தொடக்கம் முதல் இருந்த எண்ணம். 2010ல் ஆ.மாதவன் விருது பெற்றபோது அவரைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடலாமென நினைத்தோம். ஆனால் அதை ஆ.மாதவன் விரும்பவில்லை. ஆகவே அம்முயற்சியை கைவிட்டு அதை ஆ.மாதவன் பற்றிய விமர்சன நூலாக ஆக்கிக்கொண்டோம். அந்நூலை நான் எழுதினேன்.
ஆ.மாதவன், பூமணி, தேவதேவன் ஆகியோர் பற்றி நானே நூல்களை எழுதினேன். 2014ல் நான் வெண்முரசு எழுத ஆரம்பித்து அந்த பெருஞ்சுமையில் இருந்தமையால் நூல் எழுத முடியவில்லை. ஆகவே கே.பி.வினோத் ஞானக்கூத்தன் பற்றி எடுத்த ஆவணப்படம் அதற்குப் பதிலாக விழாவில் திரையிடப்பட்டது
தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி இருவருக்கும் அவர்களின் ஒரு நூலை இங்கே வெளியிடுவதை நூல்வெளியீடாக வைத்துக் கொண்டோம். தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல், சீ.முத்துசாமியின் ஆகியவை வெளியிடப்பட்டன.
தன்னைப் பற்றி ஒரு நூல் வெளியிட்டிருக்கலாம் என ஞானக்கூத்தன் பின்னர் சொன்னார். ”நாம ஒரு சூழலை நோக்கி பேசிட்டே இருக்கோம். சூழல் திரும்ப நம்ம கிட்ட சொல்ற வார்த்தைகள்னுதான் புத்தகத்த எடுத்துக்கணும்” என்றார். எழுத்தாளர்களுக்கு நூல் எத்தனை முக்கியமானது என்னும் எண்ணம் உருவானது
அடுத்த ஆண்டு முதல் ஆவணப்படமும் நூலும் வெளியிடப்படும் வழக்கம் உருவாகியது. தேவதச்சன், வண்ணதாசன், ராஜ் கௌதமன், சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் பற்றிய நூல்கள் வெளியாயின.
இந்நூல்களின் அமைப்பு என்பது ஞானக்கூத்தனின் எண்ணத்தை ஒட்டியது. தமிழ் வாசிப்புலகம் அப்படைப்பாளிக்கு அளிக்கும் வாசிப்பு அது. பலதரப்பட்ட இலக்கிய வாசகர்கள், விமர்சகர்களின் எதிர்வினைகளின் தொகுப்பு.
பொதுவாக ‘அலசி ஆராயும்’ விமர்சனங்களின் மேல் எழுத்தாளனாக எனக்கு பெரும் ஒவ்வாமை உண்டு. அவை அந்த விமர்சகனின் அவசியமற்ற சிந்தனைகள், அவன் அரைகுறையாகக் கற்ற கோட்பாடுகளின் குவியலாகவே அமையும். படைப்புக்களை அணுகுவதற்கு அவற்றைப்போல பெரும் தடை வேறில்லை.
கல்வித்துறையில் அந்தவகையான ஆய்வுகளுக்குs சில பயன்பாடுகள் உண்டு. பெரும்பாலும் வேறொரு துறைசார்ந்து இலக்கியப்படைப்பை அணுகும் முயற்சிகள் அவை. சமூகவியல் சார்ந்து ஒருவர் பூமணி கதைகளை ஆராய்ந்தால் அது சமூகவியல் ஆய்வே ஒழிய இலக்கிய ஆய்வல்ல, அங்கே இலக்கியம் எளிய தரவுத்தொகுதியே ஒழிய படைப்பு அல்ல. இலக்கியத்தின் உணர்வும் எழிலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. உலகமெங்கும் அப்படித்தான்.
என் விமர்சனங்கள் படைப்பை அணுகிப் புரிந்துகொள்வதற்குரிய முயற்சிகளாகவே நிலைகொள்ள வேண்டும் என எண்ணுவேன். அவை அந்த ஆசிரியரின் வாழ்க்கைப்புலம், அந்நூலின் பண்பாட்டுப்புலம் ஆகியவற்றை முதன்மையாக கவனிப்பவை. அப்படைப்புகளின் அடிப்படையான படிமங்கள், பண்பாட்டுக் குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்துக் கொள்பவை. அப்படைப்பு அளிக்கும் அந்தரங்கமான உணர்வுநிலைகளை புனைவுக்குரிய மொழியில், அகவயமாகவே ,வெளிப்படுத்த முயல்பவை.
ஆகவே மூர்க்கமான ஓர் ஒற்றைப்படை வாசிப்பை அலசல் என்னும் பாவனையில் முன்வைக்கும் அறிவுப்பாவனை விமர்சனங்களை நான் இந்நூல்களில் கருத்தில் கொள்வதில்லை. அவற்றை எழுதுபவர்களை ஒருவகை பிரியத்துக்குரிய அசடுகள் என்றே கருதுகிறேன். உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளும் அவ்வண்ணமே எண்ணுகிறார்கள். அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள், அல்லும் பகலும் இலக்கியத்திலேயே கிடப்பார்கள், ஆனால் கடைசிவரை இலக்கியம் பிடிபடுவதில்லை.
இத்தொகுதிகளில் வாசக எதிர்வினைகளையே முக்கியமாகக் கருதி சேர்த்திருக்கிறேன். படைப்பாளிகள் உண்மையில் விரும்புவது அதைத்தான். தன் படைப்பின் முன் வாசகன் ஆய்வாளனாக அல்ல, உணர்வுரீதியாக தன்னை அளிப்பவனாகவே நின்றிருக்கவேண்டுமென அவன் எதிர்பார்க்கிறான்.
ஆகவே இந்த நூல்கள் அனைத்தும் மிக முக்கியமான இலக்கிய ஆவணங்கள் என்று நான் நினைக்கிறேன். இவற்றிலுள்ள பல்வேறுபட்ட வாசகப்பார்வைகள் ஒரு காலகட்டம் ஒரு படைப்பாளியை எதிர்கொண்டமைக்குச் சான்றுகள் இவை.
விக்ரமாதித்யன் பற்றிய இந்நூலில் விக்ரமாதித்யனுடன் வாழ்ந்தவரும், அவருக்கிணையான கவிஞருமான லக்ஷ்மி மணிவண்ணன் முதல் சென்ற இரண்டு ஆண்டுகளுக்குள் கவிதை வாசிக்க தொடங்கிய இளம் வாசகியான இரம்யா வரை பல்வேறுபட்ட பார்வைகள் விக்ரமாதித்யனை எதிர்கொண்டிருக்கின்றன. விக்ரமாதித்யன் மீதான அன்பும், மதிப்பும் கொண்டவர்களின் பார்வைகள். அவரை ஒரு கவிதைவாசகருக்குரிய ஆழ்ந்த உணர்வுநிலையில் அறியமுயல்பவை
விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா
ஜா.தீபா – கடிதங்கள்-4
https://www.vishnupurampublications.com/
இனிய ஜெயம்
விஷ்ணுபுரம் நாவலுக்கு 25 வயது. கிட்டத்தட்ட அதில் பாதி வயது விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு. நினைக்க நினைக்க தித்திப்பது விஷ்ணுபுரம் நாவலில் துவங்கி அகத்திலும் இந்திய நிலத்திலுமாக நான் சென்ற தொலைவு. எண்ண எண்ணப் பரவசம் அளிப்பது விழா வழியே நான் சந்திக்க நேர்ந்த எழுத்தாளர் சிவப்ரகாஷ் முதல் இக்கா வரையிலான ஆளுமைகள் உடன் கழித்த நேரம். இதோ விக்கி அண்ணாச்சிக்கு அடுத்த விழா. உண்மையில் தமிழ் நிலத்தின் மொத்தக் கவிகளும் கூடிக் கொண்டாட வேண்டிய விழா. அண்ணாச்சி விமர்சன மதிப்புரை அளிக்காத முக்கிய நவீன தமிழ் இலக்கிய கவிஞர் நூல் என ஒரு சிலவே எஞ்சும். அண்ணாச்சியை முதன் முறையாக பார்க்கப் போகிறேன். இரண்டு வருடம் கழித்த நண்பர்கள் சந்திப்பு. இம்முறை விழாவில் நான் (வழக்கம் போல கேள்விகள் கேட்டு கதற வைப்பது) ‘பங்கேற்க’ போவதில்லை. ‘பார்வையாளன்’ மட்டுமே.ஒரு ஓரமாக அமர்ந்து விழா கொண்டாட்டம் மொத்தமும் வேடிக்கை பார்க்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டு நாட்கள் ஒரு இலக்கியத் திருவிழாவை வேடிக்கை பார்க்க வேண்டும். அப்படி ஒரு தருணம் இதுவரை எனக்கு அமைந்ததே இல்லை. எனவே அந்த வேடிக்கை பார்க்கும் குதூகல அனுபவம் அதற்காகவே இம்முறை வருகிறேன்.
விழா விருந்தினர் எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக அவர்கள் எழுத்துக்களை மீண்டும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வரிசையில் ஜா. தீபா அவர்களை முதன் முறையாக வாசிக்கிறேன். முதல் கதையாக ஒற்றைச் சம்பவம் சிறுகதையை, முதல் எஸ் மற்றும் இரண்டாவது சக்திவேல் இருவரது பார்வைக் கோணம் வெளியான கடிதங்களை வாசித்த பிறகு மறுமுறை வாசித்தேன்.
முதல் கடிதத்தில் கதையிலிருந்து ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு அதன் வழியே வாழ்க்கைக்குள் சென்று பார்க்கும் நோக்கு தொழில்படுகிறது என்றால், இரண்டாம் கதையில் தனது சொந்த வாழ்விலிருந்து கதைக்குள் சென்று, அக்கதை பேசும் சிக்கலை அணுகுகிறது.
முதல் கடிதத்தில் இக் கதையின் தொழில்நுட்பம் சார்ந்து சொல்லப்பட்ட கருத்துக்களில் அப்படி ஒரு ‘வாய்ப்பாடு’ வழியாக இலக்கியக் கதைகளை அணுகுவதில் உள்ள ‘எல்லைகள்’ துலங்குகிறது.
நாஞ்சில் நாடனின் யாம் உண்பேம், அழகிரிசாமியின் ராஜா வந்திருந்தார், பஷீரின் ஜென்ம தினம் இவை எல்லாம் தொழில் நுட்பங்கள் மீது அக்கறை கொண்ட கதைகளா என்ன? அது எதை பேசுகிறதோ அதை தொட்டு மீட்டி உச்சத்தில் நிறுத்த வில்லையா? கடிதம் குறிப்பிடும் கதையின் ‘வெளிப்பாடு’ அது பிரச்சார தொனி எனும் விமர்சனம் இத்தகு வாய்ப்படுகள் வழியே கதையை அணுகுவதால் நிகழும் எல்லைகளில் மற்றும் ஒன்று. ஒரு வக்கீல் உங்களை விசாரித்தால் ‘உங்கள் தரப்பு’ நியாயத்தை மட்டுமே சொல்லுவீர்கள். ஒரு போலீஸ் உங்களை விசாரித்தால் ‘உங்கள் தரப்பு’ உண்மையை மட்டுமே சொல்லுவீர்கள். அதுவே இக்கதையிலும் உள்ளது. இதில் உள்ளது மணிமாலா தரப்பு. அந்த மணிமாலா தரப்பு எதுவோ அதைப் பற்றிய, அதை மட்டுமே மையம் கொண்ட கதை. கதையில் இந்த தரப்பு, இந்த மையம் பேசப்பட்ட வெளிப்பட்ட விதம் அதை மதிப்பீடு செய்ய, அதன் வாதமாக அதற்கு எதிரான மற்றொரு மையம் கதைக்குள் பேசப்படவில்லை என்பது திறனாய்வு வாதம் ஆகாது.
இரண்டாவது கடிதத்தில் உள்ளது ஒரு தன்மைய நோக்கு. இந்த நோக்கு அக் கதையின் ‘சரியான’ இலக்கிய இடம் எதுவோ அதை காண்பதில் எல்லையை வகுத்து விடும்.
இவ்விரு பார்வைகளுக்கும் இடையே வைத்து ஒற்றைச் சம்பவம் கதையை மதிப்பிட்டால் நான் இவ்வாறு சொல்லுவேன். ஒற்றைப் படைத் தன்மை கொண்ட கதைகளை எழுதக்கூடாது என்ற இலக்கியத் தொழில்நுட்ப விதிகள் ஏதும் இல்லை.கதை அது கையாளும் கருப்பொருளை பரிசீலித்து அது பண்பாட்டின் எந்த உயரத்தை சென்று தொடுகிறது, அல்லது மானுடம் என்பதின் அடி வண்டலை எந்த ஆழம் வரை சென்று தோண்டுகிறது என்பதை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். அதற்கு இயைந்த தொழில் நுட்பம் எதுவோ அதுவே அக் கதைக்கான தேவை.
இந்தக் கதையில் அது கையாளும் சிக்கல் முக்கியமானது. முக்கியமானது தானே தவிர தனித்துவம் கொண்ட ஒன்று அல்ல. இதே கருப்பொருள் முன்னர் பல முறை கையாளப் பட்டிருக்கிறது. இப்போது நினைவில் எழுவது ஜெயகாந்தன் எழுதிய ‘கருணையினால் அல்ல’ நெடுங்கதை.
இக் கதை பேசும் சிக்கல் வாசகரை கேளிக்கை செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. அது அக்கதையின் ஆசிரியரை அலைக்கழிக்கும் உண்மையான சிக்கல். அந்த சிக்கலை வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த களமே இக் கதை சூழல்.
இக் கதை (ஒற்றைச் சம்பவம்) பேசிய இதே சிக்கல்கள்களை பேசிய முந்தைய கதைகளில் இருந்து இக்கதை வேறுபட்டு, இதே சிக்கலின் புதிய கோணங்களை திறக்க இயலாமல் போனதன் முதல் காரணம் இக் கதையின் ‘சுருக்கம்’. குறைந்த பட்சம் குறுநாவலாக எழுத்தப்பட்டிருக்க வேண்டிய கதை. கதைக் கரு கோரும் விரிவு அதைக் கையாண்டால் மட்டுமே அக் கதைக்குள் ‘ஆர்க்’ என்று சொல்வோமே ‘பரிணாம மாற்றம்’ அது நிகழும். அந்த மாற்றம் நிகழாததே இக் கதையின் மைய பலவீனம்.
இரண்டாவது காரணம். பாயிண்ட் ஆப் வியூ. இக் கதை ‘நான்’ என்று துவங்கி கதையின் நாயகியின் சொல்லாகவே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்டிருந்தால் அவள் ‘உள்ளே’ என்னவாக இருக்கிறாள் அதே சமயம் ‘வெளியே’ என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்பதை சித்தரிப்பதன் வழியே இக் கதை கையாளும் சிக்கலின் ஆழத்துக்கு ஆசிரியர் எளிதாக இறங்கிச் சென்றிருக்க முடியும்.
என்னளவில் இவ்விரு பலவீனங்கள் கடந்து கதையில் இயங்கும் கருப்பொருளின் உண்மைத் தன்மை, அதன் மீதான ஆசிரியரின் தீவிரம் இவ்விரண்டு மட்டுமே போதும் இக் கதையை தீவிர இலக்கிய வட்டத்துக்குள் நிறுத்த.
ஜா. தீபா அவர்களின் பிற கதைகளை இனிதான் வாசிக்க வேண்டும். மீண்டும் ஒரு கொண்டாட்ட விழா வருகிறது. அங்கே சந்திப்போம்
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
ஜா.தீபாவின் கதைகளை வாசித்தேன். அவருடைய தொகுதியையும் வாங்கி வாசித்தேன். நான் வாசித்த அவருடைய முதல் கதை வாஞ்சிநாதனைப் பற்றியது. மறைமுகம். அதை வாசித்ததும் அடடா என்று இருந்தது. இன்றைக்கு கதை எழுதுபவர்களில் இருக்கின்ற மிகப்பெரிய சிக்கல் என்பது விகடன் வகை கதைகளின் பாதிப்புதான், நடையில் அது தெரியும். இவர்கள் மொழி உருவாகும் காலகட்டத்தில் வாசிப்பது இந்தக்கதைகளைத்தான். அவற்றின் மொழிநடை உள்ளே போய் உட்காந்துவிடுகிறது. அதை வெளியேற்றுவதுதான் இன்றைக்குக் கதை எழுதுவதிலுள்ள மிகப்பெரிய சவால். அதற்கு ஆழமாக இலக்கியப்படைப்புக்களை வாசிக்கவேண்டும். சொந்த நடையை திட்டமிட்டு மாற்றவேண்டும். அதிலுள்ள க்ளீஷேக்களைக் களையவேண்டும். இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அற்புதமான இலக்கியக் கதை. கதையிலே கருத்து சொல்லவில்லை. சொல்லப்பட்ட கதை கதைக்குள் கதையாக இருக்கிறது. உணர்வுகள் மென்மையாகவும் பூடகமாகவும் இருக்கின்றன. அழுத்தலான நடை.
ஆனால் அதன்பின் நான் வாசித்த அவருடைய கதைகள் எல்லாமே கொஞ்சம் ஏமாற்றம்தான். அவற்றில் எல்லாம் விகடன் நடையின் நெடி உள்ளது. பெரும்பாலான கதைகள் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை கதாபாத்திரம் வழியாக வலியுறுத்தும் கதைகள். இந்தக்கதைகள் பற்றிய என் எண்ணம் இவற்றில் வாசகனை குறைத்து மதிப்பிடும் பார்வை உண்டு என்பதுதான். இந்தக் கருத்து வாசகனுக்கு தெரியாது, நாம் சொல்கிறோம் என்று ஆசிரியர் நினைக்கிறார். அந்த நினைப்பே தவறானது. வாசகனும் ஆசிரியன் அளவுக்கே தெரிந்தவன். அவனும் உலக இலக்கியம் வாசித்தவன். நான் ரேமண்ட் கார்வரின் வாசகன். எனக்கு கதையில் இருந்து உணர்ச்சிகளின் நூதனத்தன்மைதான் வேண்டுமே ஒழிய ஆசிரியரின் அபிப்பிராயங்கள் அல்ல. மறைமுகம் ஜா தீபா வந்தடைந்த சிறந்த புள்ளியாக இருக்கலாம். அவர் அதிலிருந்துதான் மேலே செல்லவேண்டும்.
ஆர்.ஸ்ரீனிவாஸ்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
தூர்வை எனும் நாவல்
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே
”மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்”அதாவது இன்று மினுத்தானும் மாடத்தியும், சற்று அதிகமாக மாடத்தி. நன்கு உழைப்பவர்கள், உணவளிப்பவர்கள் (ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்), அனைவர்மீதும் அன்புடையவர்கள். தமக்குழைத்த தாம்பெறாத பிள்ளை குருசாமிக்கு தன் பிள்ளைக்கு இணையாக திருமணம் செய்வித்து சொத்தினை பகிர்ந்தவர்கள்.
”நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்”
மினுத்தானையும் மாடத்தியையும் சொல்ல வேண்டியதில்லை, சீனியம்மாள், குருசாமி, பெரியசோலை, பொன்னுத்தாய், முத்தையா (என்ன கொலை செய்துவிட்டான். சரி போகட்டும்), கிருஷ்ணப் பருந்தைப் பார்க்காமல் சாப்பிடக் கூடாது என்றிருந்த சாத்தன், துணிவெளுக்கும் வேலை இல்லாதபோது முயல் வேட்டைக்குப் போகும் சிவனான் (ராத்திரி வெள்ளெலி வேட்டை), பஞ்சாயத்து பேசச்செல்லும் மேக்காட்டு சண்டியர் கருமலையான், சண்டைச் சேவல் வளர்க்கும் உளியன். கொலை செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நல்லவரான பொன்னுத்தேவர், சிலம்பாட்ட வாத்தியார் ராமுக்கிழவன், பேய்கதைகள் சொல்லும் கிழவன் முத்துவீரன், உருளக்குடி சமுசாரிகள் என நீளும் பட்டியல்.
வனவாசியின். கோபல்ல கிராமத்தின், மண்ணும் மனிதரும் நாவலின், தூர்வையின் என நியாபகத்தில் நிற்கும் பாத்திரங்கள் அனைவரும் நேசிக்கப்படுவர்.
பனையுள் இருந்த பருந்தது போல
– இங்கு திருமூலரின் அனுமதியுடன் பருந்தை ஆந்தையாக மாற்றிக்கொள்ள முடியுமோ என்று எண்ணுகிறேன். அது எதை நினைத்து திடீரென்னு அலறுமோ. ஒருவேளை நல்ல கதைசொல்லிகள் கூறக்கேட்ட கதைகளை நினைத்து அலறும் போலும். நான் பனைமரத்து ஆந்தையின் அலறலைக் கேட்டதேயில்லை. அதைக் கேட்கும் ஆசை நிறைவேற கூகைச்சாமி அருள்புரிய வேண்டும்.
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே
– அதுபோல நல்ல நாவல் வாசிப்பின்பம் வாசிக்க வேண்டும் என்று நினையாதவர்க்கு இல்லை.
இப்போது சற்று திமிராகவே பலரிடமும் சொல்லுவேன் எங்களிடம் கிரா இருக்கிறார், விபூதி பூஷன், சிவராமகராந்த், பூமணி, சோ. தர்மன், நாஞ்சில் நாடன், ஜெமோ அப்படியே அப்படியே நீளும் பட்டியல் எனப்பல நல்ல கதைசொல்லிகள் இருக்கிறார்கள்.
சோ. தர்மன் அவர்களின் தூர்வை வனவாசி, மண்ணும் மனிதரும் நிரையில் எனக்கு இவ்வாறான நிறைவளித்த ஒன்று. மண்ணும் மனிதரும் என்ற தலைப்பு கோபல்ல கிராமத்திற்கும் தூர்வைக்கும் பொருந்துவதல்லவா.
உய்த்துணரப்பெற்று உயிர்ப்புடன் வாழப்பெறும் உலகியல் மெய்மையின் கதவுகளைத் திறக்கிறது. மெய்மையின் கோணத்தில் உலகியலும் மெய்மையே எனினும் வாழப்பெறாத உலகியல் மெய்மை ஆவதில்லை. வாழ்கை வாழப்பெற நல்ல கதைசொல்லிகளின் அருள் தேவைப்படுகிறது.
உலகியலின் வாழ்தல் எனில் நுகர்தல். நுகர்தல் எனில் கதைகேட்டல். கதையின் துணைகொண்டு நுகர்வு பயில்தல். நுகர்வு கலாச்சாரம் என்கிறார்கள் இல்லையே எதையும் உண்மையில் நுகர்வதே இல்லையே பண்டக்குவிப்பு கலாச்சாரம் திணிப்பு கலாச்சாரம் என்றல்லவா இருக்க வேண்டும்?. கம்மங்கஞ்சியை சுவைக்கும் தூர்வையின் உழைக்கும் சம்சாரிகளும் பெண்களும் – அது நுகர்வு. சுவைக்க வேண்டியதில்லை பலவகை உணவுகளைத் வெறுமே தின்றுகொண்டிருக்கலாம். நடக்கவேண்டியதில்லை ஏராளமான காலணிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம் எதையும் வாசிக்க வேண்டியதில்லை. வலியினை அறியவேண்டியதில்லை சந்தேகத்தின் பேரில் மாத்திரைகள் விழுங்கி வைக்கலாம். எந்த ஒன்றையும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் உதிரிக் கருத்துக்களில் உருண்டு புரளலாம் என்பதல்லவே நுகர்வு. உண்மையில் நுகர்வு கலாச்சாரம் நல்லது வந்தால் வரவேற்கப்பட வேண்டியது. முன்பு கொஞ்சம் அது நன்றாக இருந்தது எனத்தோன்றுகிறது. மிகுதி வந்தன பொருட்கள் போயினது நுகர்வு.
உலகியல் நுகர்வின் வழி உலகு தன் கருணையால் கனிந்து வழங்கும் மெய்மை – அவ்வாறு வழங்குவது உலகின் கடமையாகவும் உள்ளதல்லவா. முழுமை பெறும் உலகியல் ஆன்மிகமாக – இங்கு மீண்டும் கதைசொல்லிகளின் கருணை தேவை என்கிறேன். இல்லாவிட்டால் புலன்கள் எவ்வாறு தெரிவு கொள்ளும்? அவற்றின் எல்லை உணர்த்தி எது மனதை தகுந்தவை கொண்டு நிரப்பும்? நிலத்தை எவ்வாறு அறிந்துகொள்வோம், மலைகளை, நீரை எவ்வாறு அறிவோம். மரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், வெயில், காற்று என உலகை எவ்வாறு உள்ளம் கொள்ளும்? உலகை உணர்வு கொள்ளாதவன் எவ்வாறு உலகின் பரிசாம் மெய்மை கொள்ளமுடியும்? கதைசொல்லிகள் இல்லாமல் மனிதஉலகு எவ்வாறு ஆளப்பட (உள்ளும் புறமும்) முடியும்?
இன்று சாக்கு தயாரிக்கும் தொழிலுக்கும் தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிலுக்கும் விளைநிலத்தைக் கொடுத்துவிட்டு மனிதர்கள் மாற்றம் கொள்ளும் சூழலைச் சொன்னது தூர்வை. புறம் அவதானிக்கப்பட்டு அகம் என்றானது எனக்கு. உணவு தவிர்த்து உடல்நீத்த மாடத்தி என் தெய்வங்களுள் ஒருவரானார். வெண்முரசும் வனவாசியும் போல தூர்வை என் ஆன்மிக அனுபவம்.
பிறகு பல சம்பவங்கள் நிகழக்கூடும் குறிப்புணர்த்தி தூர்வையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.
நல்லதொரு நாவல். வாசிப்பின்பம் என்பேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று விழைகிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை
தூர்வை வாங்கசெந்தில் ஜெகன்நாதன்: உணர்வுகளின் புனைவுலகம்- இரம்யா
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் புனைவுலகம் உணர்வுகளால் நிரம்பித் ததும்புபவை. நுண்மையாக உணர்வுகளை ஊடுருவிப் பார்க்கும் திறத்தினால் அவை என் மனதிற்கு அணுக்கமானவையாக அமைந்தது.
ஒவ்வொரு ஆணுக்கும் தந்தை எனும் சித்திரம் எத்துனை முக்கியமான கதாப்பாத்திரமாகத் திகழ்கிறார் என்றே இந்தக் கதைகளின் வழி பார்த்து நிற்கிறேன். அப்பா பிரதானமாக இல்லாத கதைகளிலும் கூட அவரின் ஏதோ சுவடுகளும் எச்சங்களுமென திகழ்ந்து கொண்டே இருப்பதான பிரமையை ஏற்படுத்துகிறது.
”எவ்வம்” சிறுகதையில் பச்சை என்ற சிறுவனின் வழி திரவியம் என்ற தந்தையைப் பற்றிய சித்திரம் கதை முழுவதுமாக வருகிறது. குழந்தைப் பருவத்தில் நாம் மிகவும் அணுகி அறியக்கூடிய மனித உறவுகள் தாய் தந்தையர் மட்டுமே. எத்தனை கொடூரர்களாக அமைந்துவிட்டாலும் ஒரு குழந்தையால் எளிதில் அவர்களை வெறுத்துவிட முடியாது. இவர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து தனித்திருப்பதே நிம்மதியை அளிக்கக் கூடியது என்று ஒரு குழந்தை மனம் முடிவெடுக்கும் தருணம் உச்சமானது. அது நோக்கி அது கடந்து வந்த வலி மிகுந்த பாதையை “எவ்வம்” சிறுகதை கூறுகிறது. பச்சை பேருந்தில் ஏறி பார்த்திருக்கும் அந்தத் தருணம் என் பதின்மூன்று வயதை மீட்டிக் காணித்தது. மிக தீர்க்கமாக விடுதியில் தங்கிக் கொள்ள முடிவெடுத்த ஒரு தருணம். பின் எப்போதும் வீட்டில் நான் இருக்கவே இல்லை. அந்த முடிவை நோக்கி நான் கடந்து வந்த பாதையின் வலி கொடியது. குழந்தைகளுக்கென ஒரு குழந்தைமை மனம் இருக்கிறது. அதை மிக விரைவிலேயே போக்கி பெரிய மனிதத்தனமையை இந்த சமூகம் அளிப்பது ஊழ் என்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையால் இட்டு நிரப்ப முடியும்? பச்சையின் அந்த ஊழை ஆசிரியர் மிக வலிமையாகக் கடத்தியிருக்கிறார்.
இத்தனைக்குப் பிறகும் நான் ஒரு போதும் என் பெற்றோரை நான் வெறுத்ததில்லை. அன்பை மட்டுமாவது தருவார்கள் என்று முதிர்வடையும் வரை காத்து நின்றிருந்திருக்கிறேன். அதையும் எதிர்பாராத முதிர்ச்சி வந்த பிறகு அதையும் கடந்துவிட்டேன். பச்சை தன் தந்தையைப் பற்றிக் கூறும்போது அவர் கடந்து வந்த வாழ்க்கை, வலிகளையும் சேர்த்தே நினைவுகூர்கிறான். குடித்து விட்டு அடிக்கும் அப்பா, தன் வலிகளையும் வேதனைகளையும் கனவுகளையும் புரிந்து கொள்ளாத அப்பா, தன் வாழ்க்கைக்குத் துணை நிற்காத அப்பா, நல்ல கணவனாக இல்லாத அப்பா, நேர்மையாக இல்லாத அப்பா, கவுரவமான தொழில் நடத்தாத அப்பா என அத்தனை எதிர்மறை பிம்பங்களுக்கும் மத்தியில் அன்பை அடியாழத்தில் பச்சை எதிர்பாராமல் இல்லை. ஒரு தருணமாவது தான் எதிர்பார்க்கும் அந்தத் தந்தையைக் காண ஆவலுடன் தேடியலையும் குழந்தை மனம் நம்மை ஏக்கமுறச் செய்கிறது.
ஜெ-வின் இந்த வரிகளைக் கொண்டு இந்தக் கதையை நிறைவு செய்து கொண்டேன். //தந்தைமையும் தாய்மையும் எழுந்த தருணங்களை நினைவில் கொள்வதற்கு இலாது, தன் பெற்றோரை மானுடர்களாக மட்டுமே உணரக்கூடிய தீயூழ் கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அத்தெய்வங்களால் கைவிடப்பட்ட மனிதர்கள். அத்தெய்வங்களின் இடத்தில் அவர்கள் பிரிதொன்றை வைத்தாக வேண்டும். அதற்கென புதிய தெய்வங்களைக் கண்டு கொள்கிறார்கள். அவற்றுள் சில அருளும் தெய்வங்கள், சில மருட்டி ஆட்படுத்தும் கொடிய தெய்வங்கள்// பச்சை அப்படியான தெய்வங்களை நோக்கிய பயணத்தில் என் புனைவுகளில் என்னைப் போலவே அலைந்து கொண்டிருப்பான்.
”அன்பின் நிழல்” சொல்வதும் கூட ஒரு குடிகாரத்தந்தையைப் பற்றி தான். ஆனாலும் ஏன் அந்தத் தந்தை அப்படி இருக்கிறார் என்பதை கரிசணத்தோடு உணரக்கூடிய ஒரு சிறுவனாக, இளைஞனாக கதை சொல்லி இருக்கிறான். //`அவர் இப்படி இருந்து எல்லோரையும் கஷ்டப்படுத்துவதற்கு, செத்தேபோகலாம்’ என்று கூடத் தோன்றும்.// என்று நினைக்கும் ஓர் மகன் தன் தந்தையில் இருக்கும் ஒரு குழந்தைமையை கண்டறியும் ஒரு தருணத்தை நோக்கி கதை நகருகிறது. பிள்ளைகள் பெற்றோரின் தொடுதலை ஸ்பரிசத்தை எதிர்பார்த்திருப்பவை என பல தந்தைகள் உணர்வதேயில்லை. என் நினைவறிந்து என் தந்தையை நான் தொட்டதே இல்லை. ஒரு முறை கூட இறுக்கமாக அணைத்துக் கொண்டதில்லை. திருமணச் சடங்குகள் முடிந்து வீட்டிலிருந்து பிரியும் ஒரு தருவாயில் அவர் கைகளைத் தொட்டேன். அது குளிர்ந்திருந்தது. அவ்வளவு தான் நினைவுகள். முதல் முறையாக ஆசிரியர் ஜெயமோகன் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்ட போது கலங்கியதாக, மிகவும் ஆழமான உணர்வு நிலைக்குச் சென்றதாக செந்தில் கூறினார். ஒரு ஆணுக்கு இப்படியென்றால் பெண்கள் இன்னும் தொடப்படாதவர்கள் என்று தோன்றும் எனக்கு. முதல் முறை சந்திப்பின் போது ஜெ தோள் சேர்த்து அணைத்துக் கொண்டபோது நானும் கலங்கிப் போனேன். அணைத்துக் கொள்ளப்படாத குழந்தைகளுக்கு சிறு தொடுதலின் உணர்வு அளிக்கக் கூடியதன் ஆழம் சொல்லி விளங்க வைக்க முடியாது. //பயமாக இருந்தாலும் தயங்கியபடியே அப்பாவின் நெற்றியில் முத்தமிட்டேன். இந்த இருபத்தெட்டு வயதில் நினைவுக்குத் தெரிந்து அப்பாவுக்கு நான் கொடுத்த ஒரே முத்தம் இதுதான்.// என்ற வரிகள் கலங்கச் செய்தது. அந்த உணர்வுத் தருணத்தை நோக்கி கதை அழைத்திச் செல்லும் பாதை இனிமையானது.
நாய் பற்றிய எந்த சிறுகதையும் எனக்கு ஜெயகாந்தனின் ”நிக்கி” சிறுகதையை நினைவுபடுத்தக் கூடியது. எந்த நாயையும் நிக்கியின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியே புரிந்து கொள்ள முற்படுவேன். இப்போழுதெல்லாம் “பின் தொடரும் பிரம்மம்” என்ற வரியும் கருப்பனின் நினைவும் சேர்ந்து தொற்றிக் கொள்கிறது. ”நேசன்” சிறுகதையில் ஒரு நாயின் மீது வெறுப்பு கொண்டவன் அது உடையும் புள்ளியை நோக்கி பயணப்படுவதாக நீள்கிறது.
//முதன்முறையாக ஒரு நாயைத் தொட்டுத் தூக்கினேன். எடையற்று முறுக்கிப் போட்ட வெல்வெட் துணியைப் போல இருந்தது.. அதன் மெல்லிய சூடான தேகம் பட்டவுடன் என் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து நின்றன. சுமை இறக்கி வைத்த கரங்களில் தோன்றும் எடையற்ற தன்மையால் கன்னத்தில் நீர்த்துளி வழுக்கியது.. ஒன்றரை அடியில் ஒரு நாலுகால் ஜீவன் “ஐயோ தெய்வமே. இதுகிட்டயா நான் இவ்வளவு நாள் பகையோட இருந்தேன்?” முகம் விரிந்து எனக்குள் சிரிப்பாக வந்தது.// என்ற தருணத்தை நோக்கி கதைசொல்லி பயணித்து அதை உரியவர்களிடம் சேர்க்கும் எண்ணத்தை கை கொள்ளும் உணர்வுத் தருணத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.
நிஜமாகவே முத்தங்களோ அணைப்புகளோ அத்துனை சுலபமானது இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய முத்தத் தருணங்களை கதை சொல்லி சொல்லும்போது என்னையுங்கூட அங்கு பொருத்திப் பார்த்துக் கொண்டேன். அதுவும் காமத்துடன் கூடிய முத்தத் தருணம் பருவ வயதுகளில் பல வகையான கற்பனைகளைக் கொண்டது. மிக எளிதாகக் கிடைத்துவிடக் கூடியதாக அவற்றைப் பேசுபவர்களைப் பார்த்தால் எப்போதுமே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அவை புனைவுக் கதைகள் போல சுவாரசியமாக கல்லூரிகளில் பேசிக் கொள்வோம். என்றோ முதிர்ந்த ஒரு தருணத்தில் எனக்குக் கிடைத்த அந்த முதல் முத்த தருணத்தை “முத்தத்துக்கு” சிறுகதை அசை போட வைத்தது. உண்மையில் உடலெல்லாம் கிட்டித்துப் போய் வெல வெலத்து அதன் பின் தூக்கமில்லாது அலைந்து திரிந்து அந்த முதல் முத்தததை பல மாதங்களாக சுமந்து திரிந்தேன்.
தனக்குக் கிடைத்த முத்தங்களின் விவரணைகளை கதை சொல்லி பல வகைகளில் சொன்ன விதம் மிகப் பிடித்திருந்தது. சிறுவயதில் சாக்லேட் சுவையில் இருக்கும் முத்தம், மாம்பழ சுவையோடு கூடிய அத்தாச்சி குடுத்த முத்தம் என்பதிலிருந்து காதலிக்குக் கொடுக்கப் போகும் அவளுக்குப் பிடித்த பூரி மசால் சுவையுடைய முத்தம் வரை அவன் கனவுகளில் நீள்கிறது. அந்த முதல் முத்தத் தருணம் நிகழ்ந்த பின்னான அவனின் நினைவுகள் மிகப் பிடித்திருந்தது.
//இது தான் என் முதல் முத்தத்தின் வாசனை எனத் தோன்றியது! அப்பிக் கொண்டால் சில மணிகளில் அழியக்கூடிய பவுடர்தான் ஒரு முத்தத்தால் இனி எப்போதும் அழியாமல் நினைவில் படிந்திருக்கப் போகிறது.// என்ற வரிகளில் தீற்றல் சிறுகதையை நினைத்துக் கொண்டேன். இனிமையான நினைவுகளை பத்திரப்படுத்தும் எந்த ஒன்றும் தீற்றல் கதையின் கவிதைத்தருணத்தையே எனக்கு நினைவு படுத்துகிறது. இந்த “முத்தத்துக்கு” சிறுகதை வந்து சேர்ந்திருப்பதும் அப்படியான கவிதைத் தருணத்தைத் தான். இது ஒரு சாமனியனின் கதையல்ல என்று தோன்றியது. நுண்மையானவனின் கதை. வாழ்வை போராட்டங்களினூடே எதிர்கொண்டு ஒரு காமத்துடன் கூடிய முத்தத்திற்காக நாற்பது வயது வரை காத்திருந்து சுவைத்து அதன் நினைவுகளை தீற்றலாக்கி ரசித்திருப்பவனின் கதை. அவனைப் பிடித்திருந்தது.
”ஆடிஷன்” சிறுகதையில் பிரிந்து போன காதலி கொணர்ந்து அந்தக் காதலன் முன் நிறுத்துவது அவள் அவனில் ரசித்திருந்த பிம்பத்தையே என்று தோன்றியது. பிரிந்து போய்விட்ட காதல்கள் தான் சேர்ந்திருப்பதை விட மிக ஆழமாக நினைவுகளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி பிரிந்து போன அவர்கள் இருவருக்குமிடையில் அங்கு மெளனமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் காதலின் சாட்சியாக குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது. “அந்த அறையில் அதைவிடவும் தத்ரூபமான நடிப்பை நடித்துக்கொண்டிருந்தார்கள் நந்தனும் அனிதாவும்!” என்ற வரிகளில் அவர் வந்து சேர்ந்த கவிதையின் புள்ளி மிகப் பிடித்திருந்தது.
“நித்தியமானவன்” வாழ்வை நோக்கி நித்தியமாக வாழ்த்துடிக்கும் ஒவ்வொரு கலைஞனும் தான் என்று உணரக் கூடிய கதை. ”பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு காலம் ஒன்றும் நட்புடன் இல்லை என்னிடம்” என்ற சித்திரத்துடனான ஒரு கலைஞனின் வாழ்விலிருந்து அவன் தன்னை நித்தியமானவனாக உணரக்கூடிய புள்ளியை நோக்கி கதை நகர்கிறது.
”எல்லோர் நினைவிலும் வாழ்கிறவனுக்கு இறப்பு ஏது?உண்மையில் இறப்பு என்பது ஒரு வாழ்க்கை கொண்டவனுக்கு தானே. உயிரை தன் கலைக்குள் வைத்திருப்பவனுக்கு மரணம் இல்லை தானே?” என்ற வரிகள் தான் கலைஞனை தான் இதுகாறும் பயணப்பட்டு வரும் துன்பமான பாதையை நோக்கி மேலும் உந்தித் தள்ளுபவை. தன் கலையின் வழி தான் நித்தியத்துக்கும் வாழ முடியும் என்று ஒரு கலைஞன் உணரும் போது அவன் திரும்புதலில்லாத கலைப் பாதையில் பயணப்பட முடிவெடுக்கிறான். அந்த முனையை அடைந்து விட்ட பிறகு அவனுக்கு பணமோ, புகழோ ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. அதைத் தேடிக் கொண்டு உழல்பவர்கள் அந்த முனையை கண்டடையவில்லை அல்லது தன்னை நித்தியமானவனாக இன்னும் உணரவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
”ஜெயிக்கனும்ங்கிற வெறிய அவமானத்தையும் பசியையும் விட வேற ஏதும் கொடுக்க முடியாது” என்ற வரிகள் கதையின் ஆரம்பத்தில் வருகிறது. அது நிதர்சனமான உண்மை தான். ஆனால் கலைஞன் தன்னை நித்தியமானவனாக உணர்வதற்கு முன்பு வரையில் இந்த உந்து சக்திகள் அவனை உந்தித் தள்ளலாம். ஆனால் அவன் தன்னை உணர்ந்தபின் ஒருபோதும் கலைப்பாதையிலிருந்து அவனுக்கு மீட்பில்லை. அந்தப் புள்ளியை வந்து தொட்டவிதம் மிகப் பிடித்திருந்தது. எல்லோர் நினைவிலும் அப்படி நித்தியமாக வாழும் கலைஞர்களை இந்தக் கதையில் நினைத்துக் கொண்டேன்.
”காகளம்” ஒரு துரோகம் பொதிந்த கதை. துரோகம் செய்பவன் மேல் ஒட்டுமொத்த எதிர்மறை பிம்பமும் ஏறி நின்றிருக்க வேண்டுமென அவசியமில்லை. ”காம்போடு இருக்கும் ஒவ்வொரு பூ மீது அடி வைக்கும்போதும் உள்ளங்காலில் கோழிக்குஞ்சு மிதிபடும் பதற்றத்தை நெஞ்சம் உருவாக்கியதால் கவனத்தோடு கூட்டத்திற்குள் எட்டு வைத்தேன்.” என்ற மென்மையின் பிம்பத்தையும் அவன் கொண்டிருக்கலாம். துரோகம் இழைத்தவனின் பார்வையிலிருந்து சொல்லப்படக் கூடிய ஒரு கதை சொல்லல். முதலாளியைப் பற்றி, முதலாளிக்கும் தனக்குமான உறவைப் பற்றிய சித்திரமாக “காகளம்” சிறுகதை நீள்கிறது. ”தாயை ஓடித் தொடுவதற்காகவே தாயைப் பார்த்து முதலடி நடைபழகும் குழந்தையைப் போல முதலாளியைப் பார்த்தே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.” என்று நெகிழ்ச்சி பொங்க கதைசொல்லி முதலாளி எனும் சித்திரத்தை நம்முள் பதிக்கிறார். அதன் பின் மனித மனத்தின் நொய்மை, பாவங்கள், நம்பிக்கை துரோகம் என தன்னையே கூராக்கி பிளந்து காட்டும் ஒரு சித்திரத்தை கதைசொல்லி அளிக்கிறான்.
”தூரம் போகப் போக ஒலி குறையும்தானே? ஆனால் முன்னே நடக்க நடக்கக் கிளாரினெட் இன்னும் வளர்த்தியான ஒலியாகக் காதருகே கேட்டது.” என்ற கதையின் இறுதி வரியைப் போலவே கதை முழுவதுமாக காகளம் போல எக்காளமிட்டு நினைவுகள் முழங்கிக் கொண்டிருக்கிறது. துரோகமாக, உணர்வுகளாக, நினைவுகளாக அவனில் அது தூரம் போகப் போக ஒலி அதிகரித்துக் கொண்டே வதைக்கிறது.
”மழைக்கண்” என் மனதிற்கு அணுக்கமான கதை. ஒரு சிறுவனின் கண்கள் வழியே தான் கதை அம்மா என்ற பிம்பத்தினை நமக்கு அறிமுகம் செய்கிறது. அந்தப் பாத்திரம் கனம் நிறைந்ததாக நம்மை நிறைக்கிறது. பருத்தி விதைப்பு என் பாட்டியை ஞாபகப் படுத்தியது. சிறு வயதில் பருத்திக் கொட்டை ஆட்டுவது, அந்த மணம் நிறைந்த எங்கள் வீடு, பருத்தி வெடிப்புக்கு சிண்டு கட்டிக் கொண்டு சிறுவயதில் ஓடி ஆடித்திரிந்தது என பல நினைவுகள் பருத்தியோடு எனக்கு உணடு. என் பாட்டி இந்தக் கதையில் வரும் அம்மாவைப் போலானவள். விவசாயக் குடும்பத்தினை கடந்து வந்த பலரும் அதன் பெண்களை தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடிய கதை. அத்தனை உடல் வலியையும் மன வலியையும் உடைத்து அவள் வெறி கொண்டு அழும் ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகக் கடத்தியிருந்தார் எழுத்தாளர். கதையின் போக்கில் மயங்கி நிற்கும் ஒரு தருணத்தில் அதன் இறுதி கலங்கடிக்கிறது.
//“சுத்தமான பருத்திப் பொடவ பாப்பா” என்று அவரிடம் பதில் சொன்னார். பிறந்த குழந்தையின் தலைமுடியைப் போல மிகுந்த மென்மையுடன் இருந்த புடவைகளைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, எதையோ நினைத்து புடவையில் முகம் புதைத்து கதறி அழத்தொடங்கினாள்.”// கதையில் முடிவு என்பதில்லை. அது உணர்வாக நீட்டி முழக்கி மனதை நிறைகிறது.
இந்த எட்டு கதைகளையும் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் அவர்கள் உணர்வுகளையே மையமாக்கி எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. அந்தச் சிறுவனின்/இளைஞனின் புனைவுலகத்தின் வழி செல்லக்கூடிய நிலம், மனிதர்கள், உறவுகள் உணர்வுகளால் நிரம்பித் ததும்புகிறது. தான் மட்டுமே சொல்ல முடிந்த சில அனுபவங்களையும், அறிதல்களையும், வாழ்க்கையையும் எழுத்தின் வழி காணித்திருக்கிறார். மழைக்கண் சிறுகதையில் வரும் பருத்தி விதைப்பு பற்றிய தகவல்கள், நித்தியமானவன் சிறுகதையில் பிணமாக நடித்த பின் கேமராவைப் பார்த்து மூன்று முறை சிரிக்கும் சடங்கு, காகளம் சிறுகதையில் வியாபாரத்தைப் பற்றிய தகவல்கள் என யாவுமே தன் அனுபவத்தால் அறிதல்களால் அவர் மட்டுமே கடத்தக் கூடிய உலகம் என்பதை விளங்கச் செய்கிறது. மனித உணர்வுகளையே மையமாகக் கொண்டு தன் உணர்வுகளாலேயெ கதை சொல்லும் செந்திலின் புனைவுலகம் மனதிற்கு அணுக்கமாகியிருக்கிறது.
-இரம்யா
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
தம்மம் தந்தவன் -லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
தாவர வகைப்பாட்டியல் பாடங்களை துவங்கும் முன்பு தாவரங்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஏறக்குறைய ஒரு மாத காலம் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டி இருக்கும். மலர்கள், இலைகள் கனிகள் , அவற்றின் பற்பல வடிவங்களை, வகைகளை சொல்ல வேண்டும். இலைகளின் பரப்பு, காம்பு, வடிவம், விளிம்புகள் இவற்றோடு இலைநுனிகளையும் விளக்க வேண்டி இருக்கும். இலைநுனிகளில் கூர் நுனிகொண்டவை மற்றும் அகன்ற இலை பரப்பிற்கு சிறிதும் தொடர்பில்லாமல் மிக்கூராக கீழிறங்குபவை என்று இரு வகைகளுண்டு. அக்யூட் அக்யூமினேட்(Acute & Acuminate) என்போம் இவற்றை. மிகக்கூராக கீழிறங்கி முடியும் நுனியுள்ள இலைக்கு, அரச இலையை உதாரணமாக காட்டுவேன்.
சாக்கிய அரசின் இளவலாக, வாழ்வின் கசப்புகள் அண்டாது வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் அந்த அகன்ற வெளியிலிருந்து படிப்படியாக கீழிறங்கி மெய்ஞானமென்னும் மிகக்கூரான நிலைக்கு இறங்கி வந்ததை சொல்லும் அரசிலை இளம்பச்சையும் அடர்பச்சையுமாக கூர்நுனியுடன் தம்மம் தந்தவன் நூலின் முன்னட்டையில் இடம்பெற்றிருப்பது நூலின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பொருத்தமாகி விட்டிருந்தது
புத்தரை குறித்து என் அறிதல் என்பது மிக மிக குறைவுதான். சித்தார்த்தன் இளவரசன், மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு துறவியானான் போதிமரமான அரசினடியில் அமர்ந்து ஞானம் பெற்றான் இறப்புக்கு விஷ உணவே காரணம். இவ்வளவுதான் பள்ளிக்காலத்தில் அறிந்திருந்தேன்.திஷயரக்ஷ்தா என்னும் பெயரில் ஒரு தனித்த விருப்பம் இருந்து அதை புனைப்பெயராக கொண்டு ஒரே ஒரு கதை எழுதினேன்
கல்லூரி முதல் ஆண்டில், ஒரு விழாவில் விதிவிலக்கின்றி அத்தனை மாணவர்களும் கவிதை எழுதியே ஆக வேண்டும் என்னும் ஒரு கட்டாயம் வந்தது. தமிழ்த்துறை ஆசிரியர் ஒருவரின் பிடிவாதமது. அதுவும் துறைசார்ந்த ஒரு சொல்லேனும் கவிதையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன்.
கவிதையை எனக்கும், கவிதைக்கு என்னையும் முற்றிலும் பரிச்சயமில்லாத காலமது, ஆனாலும் வளாகத்திலிருந்து தப்பித்து செல்ல வழியில்லாததால்
’’வெட்டிவிடுங்கள் போதி மரங்களை
வீதியில் எங்கேனும் காண நேர்ந்தால்
கட்டிய மனைவியையும்
தொட்டிலில் பிள்ளையையும்
துன்பத்திலாழ்த்தி விட்டு
ஆசையே துன்பத்துக்கு காரணம்
என அடுத்தவருக்கு புத்தி சொல்ல
இனியொரு சித்தார்த்தன் வருவதற்குள்’’
என்று வாக்கியங்களை மடித்து மடித்து அமைத்து கவிதைபோலொன்றை சமர்ப்பித்தேன். அதில் கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை எல்லாம் எம் ஜி ஆர் பாடலிலிருந்து எடுத்தாண்டது. கவிதைக்கு பரிசு கூட கொடுத்தார்கள்.
பின்னர் புத்தர் மீண்டும் என் வாழ்வில் இடைபட்டது முதன் முதலாக இலங்கை சென்றபோது. அன்று புத்த பூர்ணிமா என்று பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தில் தான் அறிந்துகொண்டேன் விமான நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அரைமணிநேர பிரயாணத்தில் வீடு சேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைகளில் இருந்தோம்.
50 அடிக்கு ஒரு முறை காரை நிறுத்தி இனிப்புக்களை வழங்கிக் கொண்டே இருந்தார்கள் பொதுமக்கள். .துணிகளுக்குள் அமைக்கபட்டிருந்த வண்ண வண்ண விளக்குகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
புத்த பூர்ணிமா இப்படி கொண்டாடப்படுமென்றே அன்றுதான் தெரிந்துகொண்டேன். கொழும்பு வீட்டினருகே ஏரளமான புத்தர் கோயில்கள் இருந்தன. இலங்கை நண்பர் அசங்க ராஜபக்ஷ ஒருமுறை மலை உச்சியில் இருந்த மிக புராதனமான புத்தர் குகை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அனந்த சயன புத்தர். அந்த அரையிருட்டில், சாய்வும் புன்னகை மிளிரும் முகமுமாக புத்தரை கண்டது கனவு போலிருந்தது
அங்கிருப்பவர்களை போலவே வெண்ணிற உடையுடன் வெண் தாமரைகளை எடுத்துக்கொண்டு புத்தர் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் தம்மம் தந்தவன் அளித்த திறப்பை கோவில்கள் எனக்கு அளிக்கவில்லை.
புத்தகத்தை முதலில் நான் கையில் எடுத்தேன் பின்னர் புத்தகமும் காளியின் நிதானமான மொழியாக்கமும் முழுக்க முழுக்க என்னை கையில் எடுத்துக்கொண்டது
வாசித்து முடித்ததும் ’அடடா இன்னும் அதிகம் பேருக்கு இது போய் சேர வேண்டுமே’’ என்பதே முதன்மையாக தோன்றியது..
விலாஸ் சாரங்கின் ஆங்கில வடிவத்தைதான் காளி தமிழில் தந்திருக்கிறாரென்பது முன்னுரை எல்லாம் வாசித்தல் தான் தெரியும் அத்தனைக்கு அழகான அசலான, மொழியாக்கம். வெகு நிதானமாக சொல்லிச் செல்லும் பாணி இந்த நூலின் உள்ளடக்கத்திற்கு மிக பொருத்தமானதாக இருக்கிறது.
மிக புதியதொரு வழியில் புத்தரை, அவர் வாழ்வை, அவருக்களிக்கப் பட்டவற்றை அவரடைந்தவற்றை எல்லாம் அறிந்துகொண்டேன்.
புத்தரின் வாழ்வை சொல்லும் பிறவற்றிலிருந்து தம்மம் தந்தவன் வேறுபடுவது நவீன பாணியில் அவர் வாழ்வை சொல்லி இருப்பதில்தான். புத்தரின் வாழ்வு நிகழ்ந்த காலத்திலும் இப்போதைய காலத்திலுமாக சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கிறது.
புத்தரையும் பிம்பிசாரரையும் வாசிக்கையில் ஷேக்ஷ்பியரும் வருவது, அவ்வப்போது இடைபடும் ,மாரனும் அவன் மைந்தர்களும், சின்ன சின்ன வேடிக்கை கதைகள், பசு துறவி, நாய் துறவி போன்ற கதாபாத்திரங்கள், குழந்தையை பார்த்து அவன் எதிர்காலத்தை கணிக்கும் அஸிதர் சொல்லும் விந்தையான விஷயங்கள், சால மரத்தடியில் நின்றபடியே பிள்ளை பெற்றுக்கொள்ளும் மாயா என்று சுவையான, விந்தையான, புதியதான தகவல்களுடன் நூல் மிக அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது
சால் மரத்தடியில் பிறந்து, அரசமரத்தடியில் ஞானமடைந்து மீண்டும் சாலமரத்தடியில் நிறைந்த புத்தரின் வாழ்வு புத்தம் புதிதாக என்முன்னே நூலில் திறந்து கிடந்தது.
ஆங்காங்கே அடைப்புகுறிக்குள் மேலதிக தகவல்களும் விளக்கங்களும் பிறமொழிப் பொருளும் கூறப்பட்டிருப்பது நூலை புரிந்து கொள்ள இன்னும் உதவுகிறது
தம்மம் தந்தவன் முதன்மையாக புத்தர் என்று நான் அதுவரை கொண்டிருந்த ஒரு பிம்பத்தை உடைத்திருக்கிறது. புலால் உண்னும், சோலைகளை விரும்பும், 12 ஆண்டுகள், இல்லற கடமையை ஆற்றிய, பரிசுகளை, விருந்துகளை மறுக்காத, தான் எந்த அற்புதங்களையும் செய்துவிடவில்லை என்று சொல்லும் புத்தரை நான் இதில்தான் அறிந்துகொண்டேன்
புத்தர் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் சோதனைகள், மயான வாசம், விலங்கு கழிவுகளை உண்பது, அவர் சந்திக்கும் குருமார்கள், பிம்பிசாரன் வாழ்வு , குகையில் புத்தருடன் சந்திப்பு முடிவதற்குள், முடிந்த அரசுப் பதவி என .பிரமிப்பூட்டும் தகவல்கள்.
// உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒன்று, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு பாராட்டுமொன்று என்னுமிடத்தில் அனைத்து மதங்களும் கடவுள் என்னும் கற்பனையை வைக்கின்றன .ஆனால் அதே இடத்தில் நாம் நிதர்சனமாக உணரும் துக்கம் மற்றும் மனக்கிலேசம் ஆகியவற்றை பெளத்தம் வைக்கிறது// இந்த பத்தி இந்நூலின் சாரம்.
புத்தரின் மனவுறுதியை, கம்பீரத்தை, மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருந்ததை, சஞ்சலங்களிலிருந்து முற்றாக விலகி இருப்பதை, இயல்பாகவே அவருக்கு இருந்த அறிவுக்கட்டமைப்பை என தம்மம் தந்தவன் காண்பிக்கும் புத்தர் எனக்கு மிக மிக புதியவர்
200 பக்கங்கள் என்ன்னும் வசதியான பக்க அளவு, மிகப்பெரிய விஷயங்களை எளிமையாக விளக்கும் அழகிய மொழி என கச்சிதமான , சிறப்பான நூல் தம்மம் தந்தவன்
தங்க இடம் கொடுப்பவர் அனைத்தும் தருகிறார்;
ஆனால் தம்மத்தை –
புத்தரின் அருமையான போதனைகளைக் கற்பிப்பவர் –
அப்படிப்பட்டவர் தருவது அமிர்தத்தை.
என்கிறது சுத்த பிடகம்
புத்தர் தன்னை விடுவித்துக்கொண்டு சென்றவைகளையும், அவர் கடந்துசெல்பவைகளையும் அவர் இறுதியாக அடைந்தவற்றையும் சொல்லும் தம்மம் தந்தவன் என்னும் அமிர்தம் தந்த காளிக்கும் அழகிய பதிப்பிற்காக நற்றிணைக்கும் நன்றி
அன்புடன்
லோகமாதேவி
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் [விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
December 22, 2021
விக்கிபீடியாவிற்கு வெளியே
விக்கிபீடியா, ஓர் அயோக்கியத்தனம்
விக்கிப்பீடியா போன்ற ஒரு பெரிய தளம் நவீனத் தமிழிலக்கியத்திற்கான தரவுத்தொகுதியாக அமைய முடியும். ஆனால் அங்கே ஒரு பெரும் புல்லுருவிக்கூட்டம் அமர்ந்திருக்கிறது. எதையுமே வாசிப்பவர்கள் அல்ல. எதைப்பற்றியும் அடிப்படை அறிவுகொண்டவர்களும் அல்ல. ஆனால் நவீன இலக்கியம் மீது பெரும் காழ்ப்புடன் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு வரிகூட எழுதமாட்டார்கள். ஆனால் வெறிகொண்டவர்கள் போல தரவுகளை அழிக்கிறார்கள். திரிக்கிறார்கள். தமிழுக்கு நவீனத் தொழில்நுட்பம் அளிக்கும் வாய்ப்புகளை தடுக்கிறார்கள். நேற்று தரவுகளை அழித்த ஆள் ஒரு டாக்டர். தமிழில் எழுதும் எந்த எழுத்தாளரையும் அவருக்கு தெரியவில்லை. என் பெயர் மட்டுமல்ல,வேறெந்த எழுத்தாளரின் பெயரும்.
இதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. விக்கிபீடியாவின் செயல்முறை இது. அதில் எவரும் பங்களிப்பாற்றலாம். ஆகவே எதையுமே அறியாத மண்ணாந்தைகள்தான் பெருவாரியாக உள்ளே செல்கின்றன. மொழி தெரியாது. கலாச்சாரம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தத குப்பைகளை நிரப்புகிறார்கள். அவர்களுக்கு புரியாதவற்றை அழிக்கிறார்கள். அவர்கள் நம்பும் அறிவுகெட்ட கொள்கைகளைக் கொண்டு அத்தனை அறிவுச்செயல்பாடுகளையும் மாற்றியமைக்கிறார்கள்.
ஏற்கனவே ம.நவீன் இவர்களின் செயல்பாடுகளை கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னர் நான் பலமுறை எழுதியிருக்கிறேன். [ ஒருநாள் இந்த அயோக்கியர்களின் பெயர்களையும் தகவல்களையும் சேகரித்து வெளியிடவேண்டும் என்று இருக்கிறேன். வருந்தலைமுறை இவர்கள் செய்வதென்ன என்று அறியட்டும்.]
நான் விக்கியை இலவசமாக பயன்படுத்துபவன் அல்ல, பல ஆயிரம் ரூபாய் ஆண்டுதோறும் நன்கொடை அளிப்பவன். என் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் தனித்தனியாக நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் இந்த நச்சுக்கும்பல் அழிப்பதற்கே அதில் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் இந்தக் கூட்டத்திடம் நாம் போரிட முடியாது. அசடுகள் ஒருபக்கம் இருக்க, மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மொழியறியாத மொழியடிப்படைவாதக் கும்பல் ஒன்றும் விக்கிப்பீடியாவை கைப்பற்றி வைத்திருக்கிறது. ஆகவே இதற்கு மாற்றுவழிகளைத்தான் கண்டடையவேண்டும்
பங்க்ளாப்பீடியா என்னும் இணையதளம் ஒன்று உள்ளது. வங்க இலக்கியம், பண்பாடு பற்றிய பிழையற்ற அதிகாரபூர்வமான தரவுகள் அதில் உள்ளன. குறைந்தபட்சம் நவீனத் தமிழிலக்கியத்திற்கு மட்டுமாவது அவ்வாறு ஒன்றை உருவாக்கவேண்டும். இதைப்போல காழ்ப்புக்கும்பல் செய்யும் ஒவ்வொரு அழிவுவேலையில் இருந்தும் புதிய பெருஞ்செயல் நோக்கி எழும் அறைகூவலையே நான் பெற்றிருக்கிறேன். இம்முறையும் அவ்வாறே எண்ணுகிறேன்.
விக்கிபீடியாவின் அதே டெம்ப்ளேட்டில் நவீனத் தமிழிலக்கியம் சார்ந்த நூல்கள், ஆசிரியர்கள், அமைப்புகள், செய்திகளை தொகுக்கும் ஒரு தளம் அமைவது அவசியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும். தொடர்ச்சியாக எழுதும் இருபது நண்பர்கள் இருந்தால், ஐந்தாண்டுகளில் முழுமையான ஒரு தரவுத்தளத்தை உருவாக்கிவிட முடியும். அது இன்றைய காலகட்டத்தின் தேவை. இல்லையேல் இந்த வைரஸ்கள் நம் இருப்பையே அழித்துவிடுவார்கள்.
விழா- ஒரு கோரிக்கை
விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?
விஷ்ணுபுரம் விழாவின் பங்கேற்பாளர்கள் இவ்வாண்டு மேலும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் அளவும் பங்கேற்பும் இரண்டு மடங்கு ஆகிக்கொண்டே செல்கிறது.கூடவே செலவும். இம்முறை மிகப்பெரிதாகிவிட்டது. ஆகவே கூடவே வரும் கவலைகளும் பெருகுகின்றன. மிகுந்த உழைப்பும் கைப்பொருள் செலவுமாக நண்பர்கள் ஒருங்கிணைக்கும் விழா இது. ஆகவே இதை முழுமையான பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது எழுத்தாளர், வாசகர்களின் கடமை.
டிசம்பர் 25 ஆம் தேதி காலையில் வந்து எழுத்தாளர் சந்திப்புகளில் பங்குகொண்டபின் இரவு தங்கி மறுநாள் விருதுவிழாவில் பங்கெடுக்க விழையும் அயலூர் நண்பர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் இத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த படிவத்தை நிரப்பியிருக்கவேண்டும். ஏனென்றால் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கையளவுக்கே அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசுத்துறைகளுக்கும் நாங்கள் தகவல்களை அளிக்க வேண்டியிருக்கிறது.
இவ்விழாவின் முதன்மைச் செலவென்பது தங்குமிடமே. ஆகவே வருகையாளர்கள் அதை உகந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே பதிவுசெய்யாத எவரையும் கூட்டிவர வேண்டாம். இந்த தங்குமிடம் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே. எனவே பதிவுசெய்துகொண்டு வருபவர்கள் கருத்தரங்கிலும், விழாவிலும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். அதை கருத்தில்கொள்ள நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
முன்பு வேறு அமைப்பினரின் நிகழ்ச்சிகளில் இத்தகைய வசதிகள் செய்யப்படும்போது அதை வெறுமே சுற்றுலாவுக்கும் குடிக்கேளிக்கைக்கும் பயன்படுத்திக் கொண்ட ஒருசிலர் அந்த அமைப்புக்களை காலப்போக்கில் அழித்தனர். எவ்வகையிலும் அவர்களை இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாகத் தவிர்த்தே இதை நிகழ்த்துகிறோம். இம்முறையும் அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களை உடனடியாக வெளியேற்றவே எண்ணம் கொண்டிருக்கிறோம்.
இது கடுமையான நிலைபாடு. ஆனால் பதினொரு ஆண்டாக விஷ்ணுபுரம் விழா தொடர்ச்சியாக, வெற்றிகரமாக நிகழ காரணம் தகுதியானவர்களுக்கு மட்டும் இடமளிப்பதும், வெறுமே இலக்கியச்சூழலின் வசதிகளை பயன்படுத்திக் கொள்பவர்களை தவிர்ப்பதும்தான். உண்மையில் அவர்கள் இலக்கியமெனும் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, வெறும் ஒட்டுண்ணிகள். அவர்களை அகற்றுவதன் வழியாகவே இத்தனை ஆர்வமுள்ள புதியவர்களை உள்ளே கொண்டுவர முடிந்திருக்கிறது. எங்கள் இலக்கு இலக்கிய ஆர்வம் கொண்ட இளம்படைப்பாளிகள், வாசகர்கள் பங்குபெறும் ஒரு கொண்டாட்டம்தான்.
எந்த ஒரு அறிவார்ந்த சந்திப்பும் பேராசான் சொன்னபடி ’உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலாகவே’ இருக்க முடியும். அது கற்றலில், நட்பில் எழும் இன்பம். ஆகவே கடுமையான மோதல்கள், தனிப்பட்ட முரண்பாடுகள், பூசல்கள் ஆகியவை நிகழலாகாது என்று கூற விரும்புகிறேன். எந்தக் கருத்துக்கும் இலக்கியமெனும் விரிந்த பரப்பில் ஏதோ ஓர் இடம் உண்டு என்னும் புரிதல் இருக்குமெனில் அந்த சமநிலை கைகூடும். நட்புடன் இருக்கையில் மட்டுமே கற்கிறோம். பூசல்களில் உண்மையில் மறுப்பு மட்டுமே வலுவடைகிறது. நம்மை இறுகவைத்து எதையும் அறியமுடியாதவர்களாக ஆக்குகிறது. ஆகவே இனிய நட்புரையாடலாகவே அத்தனை பேச்சுக்களும் அமையவேண்டும். கடும் விமர்சனங்களை தவிர்க்கவேண்டும்.
இன்று விஷ்ணுபுரம் விழா மட்டுமே இன்று மிக இளம்வாசகர்கள் ஆர்வமும் தயக்கமுமாக வந்து கலந்துகொள்ளும் நிகழ்வாக உள்ளது. அவர்களுக்கு முன்னால் இங்கே ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களை முன்வைக்கிறார்கள். அதனூடாக ஓர் அறிவியக்கத்தை முன்னெடுக்கிறார்கள். அந்த தன்னுணர்வு அவர்களுக்கு இருந்தாகவேண்டும். பேசத்தயங்குபவர்களிடமும் பேசுங்கள் என அனைத்து மூத்த எழுத்தாளர்களிடமும் கோருகிறேன். அவர்களில் பலர் உங்கள் மிகச்சிறந்த வாசகர்கள் என்பதைக் காண்பீர்கள்.
இந்த விழாவில் அதிகாரபூர்வ விருந்தினராகக் கலந்துகொள்பவர்களை தவிர்த்துகூட ஏராளமான படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் உகந்தவர்கள் அனைவருடனும் இளம் படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்துரையாட வேண்டும். இளம்வாசகர்களுக்கு இருக்கும் தயக்கங்களை நான் அறிவேன். அத்தயக்கங்களை வென்று அவர்கள் அறிமுகத்துக்கும் உரையாடலுக்கும் முயலவேண்டும்.
இதையொட்டி ஒன்று சொல்வதற்கிருக்கிறது. பல இளம் படைப்பாளிகள் “நான் இப்ப என்னை எப்டி அறிமுகம் செஞ்சுக்கறது? நான் இப்ப சொல்லும்படியான ஒரு ஆள் இல்லை. அதனாலே யார்கிட்டையும் அறிமுகம் பண்ணிக்கலை. நானும் ஒரு ஆள்னு ஆன பின்னாடி பேசுறேன்” என்று சொல்வதுண்டு. உண்மையில் இது தன்னடக்கம்போல தோன்றினாலும் வெறும் ஆணவமே. அதை நாமே நம்மைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
எண்ணிப்பாருங்கள், நாம் ஓர் இலக்கியப்படைப்பாளியிடம் ஏன் வெறும் வாசகனாக, இலக்கிய ஆர்வலராக அறிமுகம் செய்துகொள்ளக் கூடாது? ஏன் நாமும் ஒரு ‘ஆள்’ ஆக இருந்தாகவேண்டும் என நினைக்கிறோம்? வாசகனாக, சாமானியனாக நின்றிருக்க நம்மை தடுப்பது எது? என் இளமையில் மேதா பட்கருடனோ சுந்தர்லால் பகுகுணாவிடமோ ஜெகன்னாதனிடமோ லாரி பேக்கரிடமோ அண்ணா ஹசாரேயிடமோ நான் சென்று அறிமுகம் செய்துகொள்ளும்போது வெறும் வாசகனே. அதீன் பந்த்யோபாத்யாயவை, சிவராம காரந்தை பஷீரை வெறும் வாசகனாகவே சந்தித்தேன். க.நா.சுவை நான் சந்திக்கும்போது அவருக்கு என் எழுத்தைப் பற்றி தெரியாது, நான் சொல்லிக்கொள்ளவுமில்லை. அவை என் நினைவுப்புதையல்கள் இன்று. என்னை உருவாக்கிய களங்கள் அச்சந்திப்புகள்.
இலக்கிய உரையாடல்கள் எல்லாமே கல்விதான். அதன் பெறுபயன் நமக்கே. நம் வெற்று ஆணவத்தின் விளைவான தயக்கத்தால் அதைத் தவிர்த்தால் இழப்பும் நமக்கே. கூடுமானவரை செவிகொடுக்கவும் உரையாடவும் முயல்வோம். நாம் சாதிக்கையில் நமக்கான மேடைகள் அமையும் என்பதை உணர்வோம். இன்று விஷ்ணுபுரம் மேடையில் எழுத்தாளர் என அமர்ந்திருப்பவர்கள் பலர் வாசகர்களாக சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தவர்களே.
எங்கள் விழாக்களில் முதன்மையிடம் வாசகர்கள், அரங்கத்தில் இருப்பவர்களுக்கே. நிகழ்வு அவர்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும். ஆகவே எக்காரணத்தாலும் வகுத்தநேரம் மீறி எவரையும் பேச விடுவதில்லை. வாசகர் சந்திப்புகளின் நோக்கம் அந்த எழுத்தாளரின் கருத்தை அறிவதுதான். ஆகவே மிகச்சுருக்கமான வினாக்கள், பொருத்தமான விவாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வருகையாளர்கள், அந்நேரத்தை தாங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பெரும்செலவு பிடிக்கும் விழா இது. அச்செலவை வாசகர்களிடமிருந்தே பெற்றிருக்கிறோம். சொந்தப்பணத்தையும் செலவிடுகிறோம். ஆகவே முடிந்தவரை பயனுள்ளதாக விழா அமையவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்கு இதுவரை வாசகர்களும் எழுத்தாளர்களும் பெரும் ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள். இனிமேலும் அது தொடரவேண்டும்
இதை ஒவ்வொரு நண்பருக்கும் என் தனிப்பட்ட கோரிக்கையாகவும் முன்வைக்கிறேன்.
ஜெயமோகன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

