Jeyamohan's Blog, page 1034
March 10, 2021
இனிய போர்வீரன்
எனக்கான போரை நான் செய்யவே போவதில்லையோ என அர்ஜுனன் வினவுகிறான். பீமனுக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ள புன்னகையின் பின்னுள்ளது ஒன்றுதான். பீமனுக்கு ‘குற்ற உணர்ச்சி’ மரத்து விட்டது. கிருஷ்ணனின் ஆன்மாவில் அத்தகு தீமையின் முத்தத்தின் சுவடு ஏதும் இல்லை.
இனிய போர்வீரன்March 9, 2021
விருந்து [சிறுகதை]
திருவிதாங்கூர் கொச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே தனி சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில், 1946-ல் கடைசியாக தூக்கிலிடப்பட்டவன் பெயர் சாமிநாத ஆசாரி. அப்போது அவனுக்கு வயது இருபத்தாறுதான். என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளைதான் அவனுடைய தனி ஜெயில் வார்டன். தாத்தாவின் வாழ்க்கையில் சாமிநாத ஆசாரி ஒரு முக்கியமான இடத்தில் இருந்தான். தாத்தா 1974-ல் மறைவதுவரை சாமிநாத ஆசாரி பெயருக்கு ஆண்டுதோறும் அவன் தூக்கிலிடப்பட்ட மே 12 ஆம் தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் ஒரு புஷ்பாபிஷேகம் வழிபாடு நடத்திவந்தார்.
அதிகமாக சாமிநாத ஆசாரியைப்பற்றி தாத்தா பேசுவதில்லை. பொதுவாகவே அவர் பேசக்கூடியவர் அல்ல. பல காரணங்களில் ஒன்று வாயில் எப்போதுமே வெற்றிலை போட்டிருப்பார் என்பது. ஒருமுறை போட்ட வெற்றிலையை துப்பி வாயை கழுவினாரென்றால் உடனே அடுத்த வெற்றிலை. அவர் அமர்ந்திருக்கும் திண்ணையின் ஓரமாக ஒரு தென்னைமரம். அதன்கீழ் அவர் மென்றுதுப்பிய வெற்றிலைச் சக்கையே கரிய குவியலாக இருக்கும்.
அவர் காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்பணியில் இருப்பவர்கள் வெற்றிலை போட்டுக்கொள்ளக்கூடாது. வேலைபோவது மட்டுமல்ல, சமயங்களில் தலையே போய்விடும். வெற்றிலைபோட்டுக்கொண்ட நாயர்படைவீரர்கள் அதை துப்புவதற்காக அடிக்கடி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போனார்கள். வெற்றிலை வாயுடன் மேலதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு குழறலாக பதில் சொன்னார்கள். சீருடையில் காவிச்சாறு வழியவிட்டார்கள். திருவிதாங்கூர் காவல்துறை தலைவர் காப்டன் பிட் ஒருமுறை இன்ஸ்பெக்ஷன் வந்தபோது ஒருவன் அவர் ஆடைமேலேயே எச்சில் தெறிக்க பேசினான். அவனுக்கு சவுக்கடி கிடைத்தது. படையில் வெற்றிலை போட்டுக்கொள்வது இருமடங்கு சவுக்கடிக்குரிய குற்றமாகவும் ஆகியது.
தாத்தா ஓய்வுபெற்று கையெழுத்துபோட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சல்யூட் அடித்து வெளியே வந்ததுமே முதலில் முழங்கால்வரை சுற்றிக்கட்டியிருந்த கம்பளிப்பட்டையை அவிழ்த்து தலைசுற்றி வீசி எறிந்தார். வெற்றிலை போட்டு துப்பினார். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை உயிருடன் இருப்பதை நிரூபிக்க திருவனந்தபுரம் போகும்போது மட்டும்தான் சட்டையும் கால்சட்டையும் போடுவார். மற்ற நேரமெல்லாம் எப்போதும் பாதி அவிழ்ந்த வேட்டியும் சரிந்து கிடக்கும் மேல்துண்டும்தான்.
தாத்தா சவுத் திருவிதாங்கூர் தேர்ட் நாயர் பிரிகேடில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாக ஆனார். அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் வேலை. அப்போதுதான் சாமிநாத ஆசாரி தூக்கு விதிக்கப்பட்டு சிறைக்கு வந்தான். மகாராஜாவிடம் அவனுடைய கருணைமனு சென்றிருந்தது. அவர் முடிவெடுக்கும் வரை கண்டெம்ட் வார்டில் அவன் தனியறையில் சிறையிருந்தான். அவனுக்கு தாத்தா தனிக்காவல்.
ஜெயிலில் வெற்றிலை அனுமதி இல்லை. ஆனால் தாத்தா ரகசியமாக ஒரு பொட்டலம் வெற்றிலைபாக்கு கொண்டுசென்று சாமிநாத ஆசாரிக்கு கொடுப்பார். ஆசாரி பத்துவயதில் வெற்றிலை போட ஆரம்பித்தவன். தூங்கும்போதுகூட ஒரு கொட்டைப்பாக்கை கடைவாயில் அதக்கிக்கொண்டுதான் படுப்பான். எந்நேரமும் வாயில் வெற்றிலை நிறைந்திருக்கவேண்டும். வெற்றிலை ஊறி ’ரசம்பிடித்து’ நிறைந்திருந்தால்தான் அவனுக்கு கையில் கலை வரும்.
ஜெயிலில் ஆசாரி ஆசைப்பட்டதெல்லாம் வெற்றிலைதான். தாத்தா வெற்றிலையை கொடுத்ததும் அவன் உள்ளே சென்று அதை முகர்ந்து பார்ப்பான். பின்னர் நிதானமாக, ஒவ்வொன்றாகப் பிரிப்பான். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என எடுத்து வைத்தபின் சீராக வெற்றிலைபோட்டுக் கொள்வான். அவன் வெற்றிலை போடுவது ஏதோ தாந்த்ரிக பூஜைகர்மம் செய்வதுபோலிருக்கும். அவ்வளவு கவனம். அவ்வளவு நளினமான அசைவுகள்.
வெற்றிலைபோட்டதும் அவன் முகம் இன்னொன்றாக ஆகிவிடும். அதுவரை சந்தையில் கைவிடப்பட்ட சிறுவனின் முகம் அவனுக்கு இருக்கும். பதற்றப்பட்டுக்கொண்டே இருப்பான். மீசைமயிரை இழுத்து வாயில் வைத்து கடிப்பான். தாடியை நீவி நீவி இழுப்பான். அமரமுடியாமல் சுற்றிச்சுற்றி வருவான். வாய் அசைந்துகொண்டே இருக்கும். விழிகளும் நிலையற்றிருக்கும். வெற்றிலை போட்டுக்கொண்டதும் முகம் மலரும். தெய்வச்சிலைகளில் காணும் அமைதியும் புன்னகையும் தோன்றும். அதன்பின் எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருப்பான்.
அந்த சாமிநாத ஆசாரியை தாத்தா விரும்பினார். அவனிடம் பேசிக்கொண்டிருக்க முடியும். அவனுக்கு அவர் ராத்திரிகாவல்தான். பகலுக்கு பிரபாகரன் நாயர் என்பவர் காவல். அவன் இரவில் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதனால்தான் தாத்தாவை காவல்போட்டிருந்தார்கள். வெற்றிலை போட்டுக்கொண்டால் அவன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று தாத்தா கண்டுபிடித்தார். ஆகவே தினமும் பத்து வெற்றிலை நான்கு பாக்குடன் வந்தார். ஆனால் அவர் கடமையை மீறி அவர் வெற்றிலை போட்டுக்கொள்ளவில்லை.
வெற்றிலை நிறைந்த வாயுடன் அமர்ந்திருக்கும் ஆசாரி பேச்சில் கெட்டிக்காரன். வெறும் முகபாவனைகளைக் கொண்டே வெவ்வேறு மனிதர்களை தன் மேல் தோன்றச்செய்வான். கதகளி நடிகரைப்போல விரல்களால் சைகைகள் செய்து விளையாடுவான். சொற்களை விதவிதமாக வளைத்து பகடி பேசுவான். குட்டிக்கதைகள் சொல்வான். அனுபவக்கதைகளை வளைத்தும் திரித்தும் சொல்வான். தேவை என்றால் எழுந்து நின்று நடித்தும் காட்டுவான்.
கைதி- காவலன் என்ற நிலைமுறைகள் மறந்து தாத்தா வெடித்துச் சிரிப்பார். வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையில் உருள்வார். கண்ணீரை துடைத்தபடி “டே போதும்டே ஆசாரியே. சிரிப்பாணி காட்டி கொன்னிராதே ஆளை” என்று மன்றாடுவார். கொஞ்சநேரம் சிரித்தபின் “டே பாடுடே” என்பார். ஆசாரியின் குரல் சன்னமானது. அவனால் உரக்க குரலெழுப்பிப் பாடமுடியாது. ஆனால் நல்ல சுகபாவம் கொண்ட ஆலாபனை.
பெரும்பாலும் கதகளிப்பதங்கள்தான் பாடுவான். “சாம்யமகந்நொரு உத்யானமே” அவன் பாடிக்கேட்டபின் எந்த கதகளிப் பாடகன் வந்து பாடினாலும் மெருகில்லாமல்தான் இருந்தது என்றார் தாத்தா. உண்ணாயி வாரியார் கேட்டால் மகனே என்று ஆசாரியை அள்ளி அணைத்துவிடுவார். அப்படி ஒரு கனவு பாவனை கொண்ட பாட்டு. “அவன் பாடி முடிச்சபின்னாடி மெல்ல கொஞ்சநேரம் மெல்லமாட்டு முனகுவான்லே. செத்திரலாம்போல இருக்கும்” என்றார் தாத்தா.
விடியற்காலையில்தான் தூக்கம். ஆசாரி கண்டெம்ப்ட் பிரிசனர் ஆதலால் வேலை ஏதும் செய்யவேண்டியதில்லை. டிரில்லும் இல்லை. காலையில் ஒருமுறை அட்டெண்டன்ஸ் கொடுக்கவேண்டும். பகலில் இரண்டுவேளை சாப்பாட்டுக்குப் பிறகும் நல்ல ஆழ்ந்த தூக்கம்தான். அவனை பகலில் காவல்காக்க வரும் பிரபாகரன் நாயர் “என்னமா உறங்குதான்… என்னமோ கடமைய முடிச்சுட்டு சப்பரமஞ்சத்திலே கிடக்குத மாதிரி” என்று அடிக்கடிச் சொல்வார்.
சாயங்காலம் எழுந்து சிறையின் சுவர்களில் அவன் படம் வரைவான். கருங்கல்லை கூர்முனையாக்கி அதைக்கொண்டு உரசி உரசி வரையப்படும் படங்களில் ஆண்களே இல்லை. பெண்கள், மயில்கள், மான்கள், கிளிகள், அன்னங்கள், பூக்கள், மலர்மரங்கள். எல்லாம் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து ஒரே படலம் போலிருக்கும்.
“இதென்னடே ஆசாரி தண்ணியிலே பாசம் படிஞ்சதுமாதிரி எல்லா படமும் சேந்து ஒரே படமா இருக்கு?” என்று ஒருமுறை தாத்தா கேட்டார்
“வெளியே பாருங்க வார்டர் சாரே. எல்லாம் கலந்து ஒற்றை படமாட்டுல்லா இருக்கு. தனித்தனி படமா என்ன இருக்கு பூமியிலே?” என்று ஆசாரி கேட்டான்.
“அதுவும் சரிதான்” என்று தாத்தா சொன்னார்.
அவனுடன் தாத்தா அணுக்கமாக ஆனபின் ஒருமுறை மெல்ல கேட்டார். “ஏண்டே, கெந்தர்வன் மாதிரி இருக்கே. எதுக்குடே அந்த நாயரை கொன்னே?”
அவன் புன்னகைத்து “கெந்தர்வர்கள் கொலை பண்ணுவாங்க வார்டர் சாரே. மகாபாரதம் கதை கேட்டதில்லையோ?” என்றான்.
“செரி, ஏன் கொன்னே?” என்றார்.
“கேஸு முடிஞ்சுபோச்சுல்லா?”
“ஏம்டே கொன்னே?”
“கொல்லவேண்டிய ஆளு. கொன்னாச்சு…”
”நிஜம்மாவே நீதான் கொன்னியா?”
“ஆமா”
“பொய் சொல்லக்கூடாது”
“உங்க கிட்ட எதுக்கு பொய் சொல்லணும்?”
“உன்னாலே கொல்லவும் முடியுமாடே ஆசாரி?”
“நான் கெந்தர்வன்லா?”
ஆசாரி உருளக்கட்டிவிளை கரைநாயர் திவாகர குறுப்பை ஒரு அரிவாளால் வெட்டி கொன்றான். அவர் தன் இல்லத்து முகப்பில் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தபோது ஆசாரி அவரைப் பார்க்கவேண்டும் என்று வந்து நின்றிருக்கிறான். ‘என்னடா?’ என்று அவர் கேட்டபோது இரண்டு படி மேலே ஏறியவன் மேலாடைக்குள் வைத்திருந்த அரிவாளால் ஒரே வெட்டில் தலையை துண்டாக்கினான். வெட்டி எடுத்த தலையை குடுமியில் பிடித்து தூக்கிக் கொண்டு கோயிலடி தெருவில் நடந்து சென்றான். ஆட்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். ஆற்றங்கரை வரை சென்றவன் அங்கே தலையை வீசிவிட்டு போலீஸ் வரும்வரை அரிவாளுடன் மதகில் அமர்ந்திருந்தான்.
“ஏம்டே தெருவிலே தலையோட போனே?”
“எனக்க வீடுவரை போகணும்னு நினைச்சேன்… அம்மிணிக்க குழிமாடம் இருக்குத எடம் வரை. ஆனா மனுசத்தலை இந்த கனம் கனக்கும்னு நான் கண்டேனா? கல்லு மாதிரி இருக்கு. தோளு இத்துப்போச்சு.”
“அம்மிணி எப்டிடே செத்தா?”
“அவளுக்க ஆயுசு முடிஞ்சுபோச்சு.”
“தூக்குபோட்டுல்லா செத்தா?”
அவன் அதற்கு “செரி ,உமக்கு நான் பொரகாட்டு குறத்திக்க கதையைச் சொல்லுதேன். அவ கீழ்வாயாலே பேசுவா தெரியுமா?”
அதன்பின் சிரிப்பு. ஆசாரி சொல்லும் பெரும்பாலான கதைகள் ஆண்களுக்கு மட்டும் உரியவை.
கரைநாயர் ஒருவரின் கொலை. அதுவும் அவருடைய குடிகிடப்பு ஊழியனால். கொன்றது மட்டுமல்ல, தலையை கொண்டுசென்று ஆற்றில் வீசிவிட்டான். போலீஸ் தலையை தேடி எடுக்கவே ஒருநாள் ஆகியது. எல்லா கரைநாயர்களும் வெறியுடன் இருந்தனர். எல்லா நீதிபதிகளும் கரைநாயர்கள்தான். ஆகவே தூக்கு. கருணைமனு மகாராஜா மேஜையில் இருந்தது. ஆனால் என்ன முடிவு வரும் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அங்கே முடிவெடுப்பவர் திவான் பேஷ்கார். அவர் ஒரு கரைநாயர்.
அப்படியே முடிவு அறிவிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு தேதி முடிவுசெய்யப்பட்டு, ஒரே கடிதத்தில் ஜெயிலருக்கு அனுப்பப் பட்டது. ஜெயிலர் கட்டமம் வர்கீஸ் தாமஸ் மாப்பிள்ளை தாத்தாவை நேரில் அழைத்தார். அலுவலகத்தில் அவர் மட்டும் தனிமையில் இருந்தார். ஒன்றும் சொல்லாமல் கடிதத்தை நீட்டினார். தாத்தா படித்துவிட்டு மேஜையில் கடிதத்தை வைத்தபோது காகித ஓசை மட்டும் கேட்டது.
“நம்ம தலையிலே பாவம் விடியப்போகுது பிள்ளைவாள்.”
“அதுக்கு நாம என்ன செய்ய? நாமளா செய்யுதோம்?”
“தீர்ப்பு எளுதின நீதிபதிக்கு பொறுப்பில்லை. உத்தரவு போடுத ராஜாவுக்கும் பொறுப்பில்லை. பின்ன ஆருக்குடே பொறுப்பு?”
“நாம நினைச்சா அவனை விட்டிர முடியாதுல்லா? அப்ப நாம பொறுப்பில்லை. அவ்ளவுதான்” என்றார் தாத்தா.
”எல்லாத்துக்கும் ஒரு வளி கண்டுபோடுவே. சரி, நீ அவனுக்கு நெருக்கம். நீ வெத்திலைபாக்கு கொண்டுபோய் குடுக்கிறதெல்லாம் எனக்கு தெரியும்… நீயே அவன்கிட்டே சொல்லிடு.”
“நானா?”
“அஃபிசியலா நான் சொல்லணும். என்னாலே முடியாதுடே. நீ சொல்லு.”
“இந்த லெட்டரையே கொண்டுபோயி காட்டினா என்ன? ஆசாரிக்கு மலையாளம் வாசிக்க தெரியும்.”
“அதுவேண்டாம்… லெட்டரை ஆவேசத்திலே கிளிச்சுட்டான்னா? இது டாக்குமெண்டாக்கும்.”
தாத்தா கடைசியில் அவரே சொல்வதாக ஒப்புக்கொண்டார். அதை எப்படிச் சொல்வது என்று விதவிதமாகச் சொற்களை அமைத்துப் பார்த்தார். “பிறப்பவன் சாவான், சாகிறவன் பிறப்பான்” என்று வேதாந்தமாக சொல்லிப்பார்த்தார். “மனுசனானா என்னிக்குமே சாவு உண்டு” என்று லௌகீகமாக சொல்லிப்பார்த்தார். எப்படிச் சொன்னாலும் அபத்தமாகவும் குரூரமாகவும் இருந்தது.
கடைசியில் அவர் நேரடியாகவே சொல்லும்படியாகியது. அவரை பார்த்ததுமே ஆசாரி எச்சரிக்கை அடைந்தான். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் வெற்றிலை கட்டை அவன் முன் வைத்தார். வழக்கத்தைவிட இரு மடங்கு இருந்தது.
“என்னவாக்கும் சங்கதி?” என்றான்.
“ஒண்ணுமில்லை.”
“சொல்லுங்க வார்டர் சார்.”
“ஒண்ணுமில்லடே, ஒரு ஒற்றைத்தலைவலி.”
“லெட்டர் வந்தாச்சா?”
“என்ன? என்னடே சொல்லுதே?”
”தூக்கு எத்தனாம ்தேதி?”
அவர் அவனை கூர்ந்து பார்த்தார். இனிமேல் ஒளிக்க ஒன்றுமில்லை. ”மேட மாசம் இருபத்தொன்பதாம் தேதி…அதாவது மே 12.”
”செரி” என்று அவன் சாதாரணமாகச் சொன்னான்.
“மகாராஜா உத்தரவுடே.”
“இனிமே எத்தனை நாள் இருக்கு?”
“ஒம்பது நாள்.”
“ஒம்போது” என்று அவன் தனக்குதானே சொல்லிக்கொண்டான்.
“ஞாயித்துக்கிழமை.”
“அன்னைக்கு என்ன நாள்?என்ன நச்சத்திரம்?”
அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு “அத்தம் நட்சத்திரம், துவாதசி” என்றார்.
“நல்ல நாளா பிள்ளைவாள்?”
அவர் ஒன்றும் சொல்லவில்லை.
“சாவுறதுக்கு எல்லா நாளும் நல்ல நாளுதான்” என்று அவன் சிரித்தான்.
“ஏண்டே மக்கா” என்று கேட்டபோது அவர் அழுதுவிட்டார்.
“சேச்சே, என்ன இது? நானே அழல்லை. நீங்க என்னத்துக்கு? விடுங்க… நான் ஒரு கதை சொல்லுதேன்”
“வேண்டாம்…”
“அப்ப பாடுதேன்.”
அவன் அன்றிரவு முழுக்க பாடிக்கொண்டிருந்தான். அவர் கல்படிகளில் அமர்ந்து அவனுடைய பாட்டை கேட்டுக்கொண்டிருந்தார். துக்கமான பாட்டுக்கள் அல்ல. எல்லாமே திருவாதிரக்களி, ஓணக்களி பாட்டுக்கள். நாற்றுநடவுப்பாட்டு, தோணிப்பாட்டு. அவன் மகிழ்ச்சியாகத்தான் பாடினான். அவர் அவ்வப்போது கண்ணீர் சிந்தினார். அப்படியே தூங்கி அதில் அவனை கனவு கண்டார். அவன் சுதந்திரமனிதனாக ஒரு சந்தையில் கவிழ்த்துப்போட்ட தோணிமேல் அமர்ந்து தோணியில் தட்டியபடி பாடினான். விழித்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.
மறுநாள் காலையில் அவர் கிளம்பும்போது சாமிநாத ஆசாரி “வார்டர் சாரே, தூக்குக்காரனுக்கு கடைசி ஆசை உண்டுல்லா?” என்றான்.
“ஆமா.”
“அதை எப்டியும் நிறைவேத்துவாங்கள்லா?”
“ஆமா.”
“எனக்கு ஒரு கடைசி ஆசை. ஒரு நல்ல முட்டன் ஆட்டுக்கிடா வாங்கணும். அதை இங்கயே பொலிபோட்டு கறிவைச்சு இந்த ஜெயிலிலே உள்ள எல்லாருக்கும் குடுக்கணும். வார்டர்மாரு, கான்விக்ட்மாரு எல்லாருக்கும்.”
“அது செய்துபோடலாம். நான் சொல்லுதேன்” என்றார் தாத்தா.
அவர் சொன்னதுமே ஜெயிலர் “செய்யலாம்… கடாதானே? நல்ல காரியம்தான்” என்றார்.
செண்ட்ரிமேன் கருணாகரன் நாயர் எண்பது ரூபாய்க்கு நல்ல முட்டன் ஆட்டை வாங்கிக்கொண்டு வந்தான். கருப்பும் வெள்ளையுமாக பளபளத்த முடியும், நீண்ட தாடியும், சிப்பி போன்ற கண்களும் கொண்ட ஆட்டுக்கடா. கல் குழவிபோல விதைகள் தொங்கின. பரபரவென்று இருந்தது. அங்குமிங்கும் மோப்பம் பிடித்து தும்மலோசை எழுப்பியது. காரைச்சுவரை நக்கிப்பார்த்துவிட்டு பச்சையாக நாலைந்து சொட்டு சிறுநீர் கழித்தது.
“நல்லா விளைஞ்ச ஆடாக்கும். நெஞ்சிலே கொளுப்பு தொங்குது” என்றார் ஜெயிலர்.
“கிடா வாங்கியாச்சா வார்டர் சார்?” என்றான் சாமிநாத ஆசாரி.
”வாங்கியாச்சுடே… “
“அதை இங்க கொண்டு வந்து கட்ட முடியுமா? நான் அதை பாக்கணும். அதுக்கு நல்ல தழையும் இலையும் ஒடிச்சு என் கையாலே கொடுக்கணும்.”
தாத்தா கொஞ்சம் தயங்கினார். ஆனார் ஜெயிலர் “செரி, அது ஆசைன்னா அப்டி ஆவட்டு. இப்ப என்ன? அவன் செல்லுக்கு முன்னாலே ஒரு வராந்தா இருக்குல்ல?” என்றார்.
அந்த வராந்தாவில் ஜெயிலறையின் கம்பியிலேயே கடாவை கொண்டுசென்று கட்டினார் தாத்தா. அவனுக்கு கொண்டுவந்து கொடுத்த கம்புச்சோறு, களிக்கட்டிகள் எல்லாவற்றையும் அதற்கு அவன் ஊட்டினான். அது ஆவலாக நாக்கை நீட்டி தின்றது. அருகே நின்றிருந்த அரசமரத்திலிருந்து இலைகளை ஒடித்து கொண்டுவந்து அவனுக்கு கொடுத்தார். அதை அவனே அதற்கு ஊட்டினான்.
“ஆடு எப்பமுமே அவசர அவசரமாத்தான் திங்குது. என்னமோ ஜோலி கிடக்குதுங்கிற மாதிரி” என்றான்.
”அதோட வாய் அமைப்பு அப்பிடி” என்றார் தாத்தா.
“ஒருவேளை சாவுறதுக்குள்ள இந்த அளவுக்கு தின்னுடணும்னு அதுக்கு ஏதாவது கணக்கு இருக்கோ என்னமோ.”
அவன் சிரித்தபோது அவரால் சிரிக்க முடியவில்லை.
மூன்றுநாள் கடா அங்கேதான் நின்றது. தூக்குக்கு இரண்டுநாள் முன்னதாக அவன் அவரிடம் “ஒரு அரை மணிநேரம் ஆட்டை என் ரூமுக்குள்ள விடமுடியுமா?” என்றான்.
“எதுக்குடே?”
“அதுக்கு நான் ஒரு சடங்கு செய்யணும்”
“அதுக்கு ரூல் இல்லை பாத்துக்க.”
“தயவு செய்யுங்க வார்டர் சார், ஒரு சாவப்போறவன் கேட்கிறதுல்லா?””
“நீ என்ன செய்யப்போறே? உன் உடம்பிலே அது எங்கியாம் குத்திட்டுதுன்னா பிரச்சினையாயிடும்.”
“காயம் ஆறுறது வரை கொல்லமுடியாது இல்லியா? நான் அப்டி செய்ய மாட்டேன்.”
”எதுக்குடே வம்பு?”
“நீங்க நின்னுக்கிடுங்க… நான் வெளியே வந்துகூட ஆட்டுக்கிட்ட அந்த சடங்கை செய்வேன். ஆனா வெளிய விட்டா அது சட்டவிரோதம்.”
“ஆடு உள்ள வந்தாலும் சட்டவிரோதம்தான்.”
“ஆனா உள்ள வரக்கூடாதுன்னு சட்டம் இல்லியே.”
“அன்னியர் உள்ள வரக்கூடாது.”
“ஆடு அன்னியரா? அது மனுசன் இல்லைல்ல. அது சாப்பாடு. சாப்பாடு உள்ள வரலாமே?” என்றான்.
“வெளையாடாதே.”
“வார்டர் சார், உள்ள வார சாப்பாடு வெளியே போய்த்தான் ஆகணும்.”
தாத்தா சிரித்துவிட்டார். “செரிடே, உள்ள விடுதேன். ஒரு அரைமணி நேரம்…”
கம்பிக்கதவை திறந்து ஆட்டை உள்ளே விட்டார் தாத்தா. கம்பிக்கதவை மூடியபின் அவர் வெளியே நின்றுகொண்டார்.
ஆடு உள்ளே போனதுமே நிலையழிந்து அங்குமிங்கும் முட்டி மோதியது. அவன் தயாராக வைத்திருந்த கம்பங்களி உருண்டைகளை கொடுத்ததும் அவசரமாக சாப்பிட ஆரம்பித்தது.
அவன் ஒரு வெற்றிலையை எடுத்து அதன் வலது காதின்மேல் வைத்தான். அந்த வெற்றிலைமேல் வாயை வைத்து ஏதோ முணுமுணுத்தான். ஆடு திரும்பி அந்த வெற்றிலையை மென்றது.
“அவ்ளவுதான்… ஆட்டை வெளியே கொண்டுபோங்க” என்றான்
“அவ்ளவுதானா? என்ன செய்தே?”
“அது ரகசியம்” என்று புன்னகைத்தான்.
மறுநாள் காலையில் ஆட்டை சமைக்க கைதிகள் தயாரானார்கள். ஆயுள்தண்டனைக் கைதியாகிய அப்துல் நாசரும், கரீம் குட்டியும் கசாப்புக்கும் சமையலுக்கும் பொறுபேற்றார்கள். அன்றெல்லாம் சிறையில் அசைவமே இல்லை. அரிசிச்சோறே அபூர்வத்திலும் அபூர்வம். பெரும்பாலும் உப்புடன் உருட்டிய வெறும் களியுருண்டைகள்தான். ஒருவனின் சாவுச்சோறாக இருந்தாலும் கைதிகள் கொஞ்சநேரத்திலேயே அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். சிறையெங்கும் கைதிகளின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. மகாராஜா பிறந்தநாள் அன்று கைதிகளுக்கு இனிப்பு வழங்குவார்கள். அன்று வேலையும் கிடையாது. அன்று மட்டும்தான் அத்தனை உற்சாகம் இருக்கும்.
“ஆனா நல்ல பய… நாளைக்கு அவனுக்கு தூக்கு” என்று மூத்த கைதி அப்துல்லா குட்டி சொன்னான்.
“அது அவனுக்க தலையெழுத்து…. அவனைச்சொல்லி ஒருவாய் நல்ல சோறு திங்கிறது நம்ம தலையெழுத்து… நாம மட்டும் எத்தனைநாள் இருக்கோம்னு என்ன தெரியும்?” என்றார் காட்டுமாடம் கருணன் ஆசான்.
சாமிநாத ஆசாரி தாத்தாவிடம் “அந்த கிடாயை அறுக்கிறதை நான் பாக்கணும்” என்றான்.
“அதென்னதுடே?” என்றார் தாத்தா.
“இங்க வச்சு வெட்டச் சொல்லுங்க… இந்த அரசமரத்திலே தொங்கட்டும்”
“உனக்கு என்னடே கிறுக்கா? நாலுநாளு நம்ம கூடவே நின்னிருக்கு. நம்ம கையாலே வாங்கித்தின்னிருக்கு.”
“நான் பாக்கணும்.”
”என்னாலே அதை பாக்க முடியாது”
“நான் பாக்கணும்” என்று அவன் பிடிவாதமாகச் சொன்னான். சிறுகுழந்தைபோல தலையை அசைத்தான்.
”செரிடே செரிடே”.
அவன் கேட்டபடி கிடாயை அவன் சிறைக்கு முன்னாலேயே கொன்று அறுத்தார்கள். அதன் கால்களை கட்டி பக்கவாட்டில் வீழ்த்தி தாடை எலும்பைப் பற்றி தலையை தூக்கி கழுத்தை நீட்டி வைத்து கூரிய வளைந்த கத்தியால் அதன் கழுத்து நரம்பை அறுப்பதை அவன் கம்பிகளைப் பிடித்தபடி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதன் உடல் உலுக்கி உலுக்கி இழுபட்டது. கால்கள் மணலில் துடித்தன. ஓடுவதுபோல உடல் கிடந்து எம்பியது. பின்னர் அது அடங்கியதும் தலையை வெட்டி அருகே ஒரு செங்கல்மேல் வைத்தனர்.
“அதை இப்டி திருப்பி வையுங்க காக்கா” என்று அவன் சொன்னான்
”எதுக்கு?” என்று கரீம்குட்டி கேட்டார்.
“நான் அதைப் பாக்கணும்”
அவர் திருப்பி வைத்தபோது அதன் சிப்பிக்கண்கள் சிறையிலிருந்த சாமிநாத ஆசாரியை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆட்டை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அதன் வயிற்றை கிழித்து குடல் இரைப்பை ஈரல்களை கொத்தாக பிடுங்கி எடுத்தனர். அவற்றை ஒரு பனம்பாயில் வைத்தனர். பின் சிறியகத்தியால் அதன் தோலை வெட்டி அந்தச் சிவந்த வடுவில் கைவிட்டு பிரித்து, வெடுக் வெடுக்கென்று இழுத்து தோலை உரித்தனர். வெள்ளைப்பற்றுக்களை கத்தியால் அறுத்தனர்.
கம்பிளிச்சட்டை போல தோலை கழற்றி அப்பால் வைத்தனர். அது செத்த குழிமுயல்போல அங்கே இருந்தது. சிவந்த மாமிசத்தில் வாதாமரத்து இலைபோல நரம்புப்பின்னல் படர்ந்திருந்தது.
கரீம் குட்டி “போதுமா பாத்தாச்சா? சமையலறைக்கு கொண்டுபோகலாமா?” என்று கேட்டார்.
அவன் புன்னகையுடன் தலையசைத்தான்.
“காலு போட்டு சூப்பு வைச்சு குடுக்கவா மகனே?” என்றார் கரீம் குட்டி.
“வேண்டாம் இக்கா” என்றான் சாமிநாத ஆசாரி.
கறிவேகும் மணம் சிறைமுழுக்க பரவியது. கைதிகள் எல்லாம் ரத்தமணம் கொண்ட நரிகள் போல அமைதியிழந்தனர். கூச்சல்கள் பூசல்கள் சிரிப்போசைகள். சிலர் வேண்டுமென்றே ஊளையிட்டனர்.
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் பிரியாணியும் கறியும் தயாராகிவிட்டன. பெரிய எனாமல் தட்டுகளில் ஜெயிலருக்கும் வார்டருக்கும் பிரியாணியையும் கறியையும் கொண்டுவந்து வைத்தார்கள்.
“எப்டிடே சாப்பிடுகது?” என்றார் ஜெயிலர்.
தாத்தாவாலும் சாப்பிட முடியவில்லை. ஆனால் பிரபாகரன் நாயர் “அப்பிடிப்பாத்தா நாம சாவு வீட்டிலே விருந்து சாப்பிடுதோம். துட்டிச்சோறு சாப்பிடாமலா இருக்கோம்?” என்றார் “நாம நல்லா சாப்பிட்டு வாழ்த்தினா அவனுக்கு சொர்க்கமாக்கும்.”
அவர் சாப்பிட ஆரம்பித்தார்.
“சாப்பிட்டு வைப்போம்” என்று ஜெயிலரும் பிரியாணியை எடுத்துக்கொண்டார்.
தாத்தா பேசாமல் இருந்தார்.
“நல்லா பண்ணியிருக்கான்… சாப்பிடும் ஓய்” என்றார் ஜெயிலர்.
தாத்தாவால் தட்டமுடியவில்லை. சாப்பிடாமல் இருந்தால் ஜெயிலர் தப்பாக நினைக்கக்கூடும்.
அன்று சாயங்காலம் வரை ஜெயிலில் சாப்பாடு கொண்டாட்டம் நடைபெற்றது. பிரியாணி வைத்த அண்டாக்களை சுரண்டி தின்ன கைதிகள் நடுவே போட்டியும் அடிதடியும் நடைபெற்றது.
மாலையில் தாத்தா அவன் அறைக்கு போனார். “என்ன செய்யுதான்?” என்று காவல் மாறும்போது பிரபாகரன் நாயரிடம் கேட்டார்.
“சும்மாதான் இருக்கான்.”
”உறங்குதானா?”
”இல்ல, சும்மாவே இருக்கான்.”
அவர் உள்ளே பார்த்தார். அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான். அருகே அந்த பிரியாணியும் கறியும் அப்படியே இருந்தன.
“சாப்பிடலியாடே?”
“வேண்டாம்” என்றான்.
ஆனால் அவன் அவர்கள் கொண்டுவைத்த வெற்றிலைய முழுக்க மென்று கலம் நிறைய துப்பி வைத்திருந்தான். மீண்டும் வெற்றிலையும் பாக்கும் கொண்டுவந்து வைத்துவிட்டு தாத்தா ஒன்றும் சொல்லாமல் வெளியே திண்ணையில் அமர்ந்துகொண்டார்.
நள்ளிரவு வரை அவன் அப்படியே அமர்ந்திருந்தான். வெற்றிலை மெல்லும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்பின் எப்போதோ பாட ஆரம்பித்தான். ஆனால் பாட்டு அல்ல. சொற்களே இல்லை. வெறும் ஆலாபனம். ஒரு வலிமுனகல் போல ஆரம்பித்தது. அழுகைபோல ஆகியது. எங்கோ பறந்துபோவதுபோல மாறியது. சுழன்றுகொண்டே இருந்தது.
அதைக் கேட்டுக்கொண்டு தாத்தா அமர்ந்திருந்தார். யாரோ கந்தர்வர் தேவர்களெல்லாம் வந்து அவனுக்காக இசைமீட்டுவது போலிருந்தது. மனித உடலை ஒரு வீணையோ நாதஸ்வரமோ ஆக மாற்றி அந்த இசையை வாசிக்கிறார்கள்.
பின்னிரவில் அவன் தூங்கிவிட்டான். விடியற்காலையில் தூக்கு. மூன்றுமணிக்கு ஆராச்சாரும் உதவியாளனும் தூக்குமேடைக்கு வந்துவிட்டார்கள் என்று பிரபாகரன் நாயர் வந்து தாத்தாவிடம் சொன்னார்.
“அவனை எழுப்புங்க… அவன் பல்லுதேய்ச்சு குளிக்கணுமானா செய்யட்டும்… இப்ப ஜெயிலர் வந்திருவாரு.”
”சாவுறதுக்கு எதுக்குடே குளியலும் பல்லுதேய்ப்பும்?” என்றார் தாத்தா.
“தெய்வத்துக்கிட்டே போறதில்ல?”
அவர் கழியால் கம்பியை தட்டி சாமிநாத ஆசாரியை எழுப்பினார். “ஆசாரி, டேய், ஆசாரி”
அவன் எழுந்து அமர்ந்து தலையைச் சொறிந்தான். அவன் மனம் விழித்தெழவில்லை என்று தெரிந்தது.
“டேய் ஆசாரி, எந்திரி. இப்ப ஜெயிலர் வந்திருவார். உனக்கு பல்லு தேய்ச்சு குளிக்கணுமானா கூட்டிட்டு போறேன்”
அவனுக்கு அப்போதுதான் எல்லாம் உறைத்தது. “ஆமா…. ஆமா… பல்லு தேய்க்கணும்” என்று சொன்னான். எழுந்துகொண்டான்.
“செரி வா”
அவனை தாத்தாவும் பிரபாகரன் நாயருமாக அழைத்துச் சென்றார்கள். அவன் காலைக்கடன் கழிக்கும்போது அருகே நின்றார்கள். பல்தேய்த்தபின் தொட்டித்தண்ணீரில் பக்கெட்டை முக்கி அள்ளி மூன்றுமுறை விட்டுக்கொண்டான்.
தலைதுவட்டிவிட்டு அங்கே தேடினான். ஒரு சின்ன பிறையில் விபூதி இருந்தது. அதை தொட்டு ஈரநெற்றியில் போட்டுக்கொண்டான்.
“என்னமாம் சாப்பிடணுமாடே?” என்று பிரபாகரன் நாயர் கேட்டார்
“வேண்டாம்”
“ஜெயிலருக்கு காப்பி கொண்டு வந்திருப்பான். பிளாஸ்கிலே இருக்கும். ஒருவாய் குடிக்குதியா?”என்றார் தாத்தா.
“வேண்டாம்” என்றான்.
அவன் திரும்பச் சென்று அறையில் சப்பணம் இட்டு அமர்ந்து கண்களை மூடி எதையோ ஜெபித்துக்கொண்டிருந்தான்.
விடியற்காலை நான்கு மணிக்கு ஜெயிலரும் டாக்டரும் வந்தார்கள். ஜெயிலரின் ஃபைல்களை பியூன் வேதமாணிக்கம் கொண்டுவந்தான். ஆங்கிலோ இந்திய டாக்டர் ஜான்சன் டேவிட் தொளதொளவென்ற சட்டை அணிந்து டைகட்டி பிளாண்டர் தொப்பி அணிந்திருந்தார். அவர் நடந்தபோது நீளமான ஷூக்கள் விசித்திரமாக முனகின.
பிரபாகரன் நாயர் கம்பியை கழியால் மெல்ல தட்டி ஜெயிலர் வந்திருப்பதை அறிவித்தார். ஆனால் சாமிநாத ஆசாரி எழுந்திருக்கவில்லை. அதேபோல கண்களை மூடி ஜெபித்துக்கொண்டிருந்தான்.
தாத்தா ஜெயிலை திறந்தார். டாக்டரும் பிரபாகரன் நாயரும் உள்ளே சென்றனர். டாக்டர் அவன் கையைப்பிடித்து சும்மா நாடி பார்த்தார். அவன் நெஞ்சில் ஸ்டெதெஸ்கோப் வைத்துப் பார்த்தார். தலையை அசைத்தார். ஜெயிலர் காகிதத்தில் ஏதோ எழுதினார்.
டாக்டர் வெளியே வந்ததும் ஜெயிலர் “குற்றவாளி நம்பர் டி.கே எஸ் பார் த்ரீ பார் ஃபார்ட்டினைன் பார் ஒன் டேட்டட் ட்வெல்வ் மே நைண்டீன் ஃபார்ட்டி சிக்ஸ்” என்றார். அவன் கண்களை திறக்கவில்லை.
ஜெயிலர் அவனுடைய மரணவாரண்டை படித்தார். விடுவிடுவென பல வார்த்தைகளை விட்டு விட்டு படித்து முடித்தார். மரணவாரண்டை தூக்கில்போடும் இடத்தில்தான் படிக்கவேண்டும் என்று தாத்தா கேட்டிருந்தார். ஆனால் அந்த ஜெயிலில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு நீண்டநாட்கள் ஆகியிருந்தன.
ஜெயிலர் முன்னால் நடக்க சாமிநாத ஆசாரியை பிரபாகரன் நாயரும் தாத்தாவும் அழைத்துச் சென்றனர். அதற்குள் ஜெயிலில் பலர் தூங்கி எழுந்துவிட்டிருந்தனர். அங்கிருந்து பலர் சேர்ந்து பேசும் முழக்கம் இருட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.
தூக்குமண்டபம் கதவு மாற்றப்பட்டு பழுது பார்க்கப்பட்டிருந்தது. கதவின் முன் சாமிநாத ஆசாரியும் தாத்தாவும் நின்றனர். ஜெயிலரும் டாக்டரும் பிரபாகரன் நாயரும் உள்ளே போனார்கள்
ஆசாரி தாத்தாவைப் பார்த்து புன்னகைச் செய்தான். தாத்தாவால் அந்த தருணத்தை என்ன செய்வதென்று முடிவுசெய்ய முடியவில்லை. அவரும் புன்னகைத்தார். அது அபத்தமாக இருப்பதாக உடனே தோன்றியது
“சாமி கும்பிட்டுக்கோ” என்று சொன்னார். அது இன்னும் அபத்தமாக இருந்தது.
அவன் புன்னகைத்தான்.
அவர் அந்த நிமிடங்களை இயல்பாக ஆக்கும்பொருட்டு “எல்லாரும் உனக்காக பிரார்த்தனை செய்யுதாங்கடே” என்றார்.
“ஆமா, நேத்து நல்ல பிரியாணில்லா?” என்று மெல்லிய புன்னகையுடன் ஆசாரி சொன்னான்.
“நல்ல ஆடு” என்றார் தாத்தா. உடனே நினைவு வந்தவராக “நீ அதுக்கு என்ன சடங்குடே செய்தே?” என்றார்.
“பேரு போடுத சடங்கு”என்றான் ஆசாரி.
“பேரு போட்டியா? ஆட்டுக்கடாவுக்கா?”
“ஆமா”
“எதுக்கு?”
“சும்மா” என்று அவன் சிரித்தான்.
தாத்தா அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் நாயரும் ஆராச்சாரின் உதவியாளனும் வெளியே வந்து அவனிடம் வரும்படி கைகாட்டினார்கள். அவன் தாத்தாவிடம் இன்னொருமுறை புன்னகை செய்துவிட்டு அவர்களுடன் சென்றான். கதவு ஓசையுடன் மூடிக்கொண்டது.
உள்ளே கொண்டி விலகும் ஓசை கேட்டதா என்று தாத்தா எண்ணுவதற்குள் மடேர் என்று காலடிக்கதவு விழும் ஓசை கேட்டது. அந்த ஓசை சிறை முழுக்க ஒலித்தது. சிறையிலிருந்து குரலாக திரளாத ஒரு முழக்கம் எழுந்தது.
தாத்தாவின் உள்ளே ஒரு நடுக்கம் ஓடியது. அந்தக் குளிர்நடுக்கத்தை அவர் வாழ்க்கை முழுக்க கடந்து செல்ல முடியவில்லை. எப்போது நினைத்தாலும் அந்நடுக்கம் அவருக்கு வரும். நள்ளிரவில் அந்நடுக்கம் வந்து எழுந்து அமர்ந்து நடுங்கும் கைகளைக் கூப்பிக்கொண்டு “நாராயணா! ஆதிகேசவா!” என்பார்.
அவனுடைய உடலை வாங்க யாரும் வரவில்லை. ஆகவே அது கரமனை ஆசாரிமார் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. அவனைப்பற்றி கொஞ்சநாள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் வேறு சம்பவங்கள். தாத்தா ஓய்வுபெற்றுவிட்டார்.
”அவன் அதுக்கு என்ன பேரு தாத்தா போட்டான்?” என்று நான் கேட்டேன்
“அதை நான் கேக்கல்லடே” என்றார் தாத்தா.
“ஏன்?”
“என்னமோ கேக்கல்ல.”
நான் தாத்தாவிடம் மீண்டும் வெவ்வேறு தருணங்களில் அதை கேட்டிருக்கிறேன். அவர் உண்மையாகவே அதை கேட்டுத்தெரிந்துகொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அவர் கடைசிவரை அதைச் சொல்லவே இல்லை.
நூல்களை முன்வைத்தல்
அன்புள்ள ஜெ,
டிவிட்டரில் நீங்கள் முன்பு குறிப்பிட்ட பூங்குன்றன் என்னும் வாசகர் இப்படி எழுதியிருந்தார்
Chennai book fair has begun and there is not even the slightest mention of Jeyamohan’s Venmurasu anywhere, arguably the greatest work in Indian literature pulled off in the most audacious way possible.
மிகச்சரியாக நான் உணர்ந்தது அது. இந்த ஆண்டு முக்கியமானது. தமிழ்மொழியின் நவீன இலக்கியத்தில் முதன்மையான படைப்பு என்று எந்த நல்ல வாசகனும் சொல்லும் வெண்முரசு நிறைவடைந்திருக்கிறது. அதைப்பற்றிய பேச்சு எங்குமே இல்லை. ஓரே ஒரு கடையில் ஒருமூலையில் வெண்முரசின் சில பிரதிகள் இருந்தன. முழுமையாக இல்லை. ஒரு போஸ்டர்கூட இல்லை. மிக வருத்தமாக ஆகிவிட்டது
சாந்தி தேவராஜ்
அன்புள்ள சாந்தி,
புத்தகக் கண்காட்சியில் பேனர்கள் ,வெளியீட்டுவிழாக்கள் போன்று முன்வைக்கப்படும் நூல்கள் அந்த ஆசிரியரால் செய்யப்படுபவை. அதில் பிழையேதுமில்லை. தமிழில் அதுவே சூழல். ஆசிரியர் தன் நூலை தானே முன்வைத்து பரப்புவது அப்பிரசுரகர்த்தருக்கு அவர் செய்யும் உதவி. செய்துதான் ஆகவேண்டும். பதிப்பாளர்கள் தனியாக படைப்புகளுக்கு பேனர் வைப்பதில்லை, பிரச்சினைகளை உருவாக்கும்.
என் நூல்களை முன்வைப்பதை ஆரம்பம் முதலே செய்ததில்லை. முன்பு என் பதிப்பாளராக இருந்த வசந்தகுமார் எனக்காக வெளியீட்டு விழாக்கள் ஏற்பாடு செய்தார். அதன்பின் இன்றுவரை சென்னையில் எந்த நூலுக்கும் வெளியீட்டுவிழாக்கள் இல்லை. அறம் வெளிவந்தபோது ஈரோட்டு நண்பர்கள் ஒரு விமர்சன அரங்கு கூட்டினர். அவ்வளவுதான். அதன்பின் என் நூல்களுக்காகவோ எனக்காகவோ எந்த விழாக்களும் நடைபெற்றதில்லை. நான் என் நூல்களுக்காக எந்த நிகழ்ச்சியும் ஒருங்கிணைத்ததில்லை.
இணையதளத்தில்கூட புத்தகக் கண்காட்சியை ஒட்டி என் நூல்களை நான் முன்வைப்பதுமில்லை. தேடிவாசிப்பவர்கள் வாசிக்கட்டுமே என்றுதான் நினைப்பேன். நான் எழுதுவது போன்ற எழுத்துக்களை வாசிப்பவர்கள் வேறுவகை எழுத்துக்களை வாசித்து, அவற்றினூடாகப் பயிற்சிபெற்று, மேலேறி வருபவர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இலக்கியச் சூழலும், நூல்களும் தெரிந்திருக்கும்.
நேரடியாக என் படைப்புகளுக்குள் நுழைபவர்கள் அறம் தொகுதி, தன்னறம் தொகுதி போன்றவற்றினூடாக நுழைபவர்கள். அவை இலவசப்பிரதிகள், நன்கொடைப்பிரதிகள் வழியாக பல்லாயிரக்கணக்கில் பரவியிருப்பவை. ஆகவே மேற்கொண்டு பெரிய விளம்பரம் தேவையில்லை. வெறும் விளம்பரத்தால் என் நூல்களை கொண்டுசேர்க்கமுடியாது, விளம்பரத்தை நம்பி வாங்கிவிட்டார்கள் என்றால் அடிக்கவருவார்கள்.தமிழினி வசந்தகுமார் என் நூல்களை வாங்க வருபவர்களிடம் ‘இதுக்கு முன்னாடி என்ன படிச்சிருக்கீங்க?’ என்று கேட்டபின்னரே நூல்களை கொடுப்பார்.
எனக்கு வரும் கடிதங்களைப் பார்த்தால் ஏராளமானவர்கள் வாசித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவருகிறது. தமிழின் அறியப்பட்ட இலக்கிய, வலைத்தளச் சூழல்களில் தென்படாதவர்கள் என் விழாக்களுக்கு வந்து குழுமுகிறார்கள். வாசகர்கடிதம் எழுதுகிறார்கள். தேவையானபோது நிதி அள்ளி தருகிறார்கள். எனக்கு வரும் கடிதங்களில் ஐந்திலொருபங்கே என் தளத்தில் வெளியாகின்றது.
வெண்முரசே கூட தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதைப்பற்றி படித்துப் பேசுவதற்காக மட்டுமே பல குழுமங்கள் உள்ளன. அத்தொடர் முடிந்தபின் வாசிப்பவர்களுக்காக புதிய குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதெல்லாம் எந்த நூலுக்கும் தமிழில் நிகழ்ந்ததில்லை.
புத்தகக் கண்காட்சியின்போது வேறு ஆசிரியர்களின் நூல்களை முன்வைப்பது என் வழக்கம். நான் பழைய ஆசிரியர்களின் நூல்கள், இளம் படைப்பாளிகளின் நூல்களை முன்வைக்கிறேன். இந்த தளத்தில் தொடர்ச்சியாக அவை பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் வெறும்பரிந்துரையாக அல்ல. ஒரு விவாதப்பரப்பின் புள்ளிகளாக.
ஜெ
படையல் கடிதங்கள்
அன்புள்ள ஜெ
முதுநாவல் உங்கள் கதைகளில் ஓர் அற்புதமான உச்சம். அந்த நூறுகதைகளில் அதுவே மகத்தான கதை. நான் முதலில் படித்தபிறகு இப்போது பத்துதடவையாவது படித்திருப்பேன்.” பின்னர் அறிந்துகொண்டேன் அவரை தொடரவோ அறியவோ முடியாது என்று. சில பறவைகள் அப்படித்தான்” என்ற வரியில் அடைந்த அந்த உச்சம் அப்படியேதான் இருக்கிறது.
அதன்பின் இந்தக் கதை. படையல். ரத்தப்படையல். வரலாற்றின் ரத்தம். பழிபாவங்களின் ரத்தம். ஆனால் அதற்கு அப்பால் அமர்ந்திருக்கிறார்கள். சலனமே இல்லாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் உலகம் கொண்டாட்டமும் களியாட்டமும் நிறைந்தது. அவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவருக்கும் தடையில்லாமல் சோறுபோடவும் முடிகிறது.
கொலைகாரனுக்கும் அதே கருணையுடன் சோறுபோடுகிறார்கள். ஆகவேதான் அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.எரிந்தழிந்த கைவிடப்பட்ட வாழ்க்கையைக் கொண்டு குளிர்காய்கிறார்கள் என்று தொடங்குமிடத்திலேயே கதையின் ஆன்மிகமான சாரம் வெளிப்பட்டுவிடுகிறது
எஸ்.பிரபு
அன்புள்ள ஜெ
படையல் கதை குமிழிகள் போலவோ கந்தர்வன் போலவோ வேறுவேறு கோணங்களில் விவாதமாகாது என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பொதுவாசகன் விவாதித்து அறிய அதில் ஏதுமில்லை. ஆன்மிகமான தேடல் கொண்டவர்களுக்கான கதை அது. அவர்கள் மட்டும் அறியும் நுட்பமான புள்ளிகளாலானது
தியானம் ஒரு விடுதலையை அளிக்கிறது. ஆனால் அது நம் கட்டுகளிலிருந்து தப்புவதுதான். தப்பியபிறகு தியானமில்லை. அது ஒரு கொண்டாட்டமும் களியாட்டமும் மட்டும்தான். அதைத்தான் பண்டாரங்களிடம் பார்க்கிறோம். அந்தக் கொண்டாட்டத்தை இந்தக்கதை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது. அருகே இருந்து பார்ப்பதுபோல் இருக்கிறது.
பிச்சைக்காரன் சோறும் பேய் திங்குத பொணமும்- என்று ஆனைப்பிள்ளைச் சாமி சொல்கிறார். கலிங்கத்துப் பரணி போன்றவற்றில் போர் முடிந்தபிறகு பேய்கள் போர்க்களத்தில் பிணங்களைச் சமைத்துச் சாப்பிட்டு களியாட்டமிடுகின்றன. இந்தக்கதை ரத்தச்சோறு என்னும்போது நேரடியாக அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அதற்கு ப்ரிலூடாக அந்த வரி வருகிறது. அந்த வரியிலிருந்து அக்கதையை விரிவாக வாசிக்கமுடிகிறது
ஸ்ரீனிவாஸ் முகுந்த்
அன்புள்ள ஜெ
படையல் கதை நடக்கும் பதினேழாம் நூற்றாண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் மிகக்கொடுமையான காலகட்டம். வெறும் கொள்ளையும் சூறையாடலுமே அரசாங்கமாக இருந்த காலகட்டம். மதுரை நாயக்கர்களும், தஞ்சை மராட்டியர்களும், ஆர்க்காடு நவாப்களும் அழிந்தார்கள். பிரிட்டிஷார் முழுமையாக ஆதிக்கம் ஏற்கவில்லை. பெரிய படைகள் குட்டிக்குட்டி தளபதிகளால் பிரிக்கப்பட்டு கொள்ளைக்கூட்டமாக ஆகி மக்களைச் சூறையாடின
இந்தச் சித்திரத்தை ஆனந்தரங்கம்பிள்ளை டைரி மிக விரிவாகப் பேசுகிறது. அன்று நாம் இன்றைக்குப் பார்க்கும் அரசியலே இல்லை. முஸ்லீம்களையும் இந்துக்களையும் முஸ்லீம்படைகளும் இந்துப்படைகளும் சூறையாடுகின்றன. படைகள்- சாமானியர் அவ்வளவுதான் வேறுபாடு. பள்ளிவாசலில் இஸ்லாமியப் படைகள் கொள்ளையடிக்கின்றன. கோயிலில் இந்துப்படைகள் கொலைவெறியாடுகின்றன.
நாம் மராட்டியப்படைகளைப் பற்றி ஒரு வரலாற்றை சுதந்திரப்போர் காலகட்டத்திலே உருவாக்கிக்கொண்டோம். ஆனால் ஆனந்தரங்கம் பிள்ளை மராட்டியப்படைகளை இஸ்லாமியர்களும் கலந்த படையாகவும், செல்லுமிடமெல்லாம் கொள்ளையிட்டுச் செல்லும் கூட்டங்களாகவும்தான் காட்டுகிறார்
இந்தக்கதையில் வரும் திருவண்ணாமலை கோயில் கொலைச் சம்பவம் பல வரலாற்றுநூல்களில் பதிவாகியிருக்கிறது. கின்னேதார் கிருஷ்ணராவ் ஆர்க்காடு நவாப் ராஜாசாகிபின் படைகளை திருவண்ணாமலை கோயிலில் வைத்து கொலைசெய்த நிகழ்ச்சியை அன்றைக்கு இருந்த சரித்திரத்தின் சான்றாகவே எடுத்துக்கொள்ளலாம்
அந்த யானைகள் போர்செய்கின்றன. அதுக்குமேலே அன்றில்கள் பறந்து விளையாடுகின்றன. யானைகள் அழிந்துபோகும். அன்றில்கள் விதைகளைப் பரப்பி காட்டை மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கும்
அருண்குமார்
படையல்- கடிதங்கள்
தீற்றல்,வலம் இடம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கதைகளின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது. குமிழிகள், கந்தர்வன், படையல் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகுக்குள் ஊடுருவுகின்றன. சம்பந்தமே இல்லாமல் ஒரு மென் ரொமாண்டிக் கதை தீற்றல்
நெஞ்சில் ஒரு தீற்றல்போல விழுகிற கதை என்று சொல்வேன். கண் மிகமிக மென்மையான உறுப்பு. அதில் மையிடுவது என்பது தொட்டும் தொடாமலும் செய்யவேண்டியது. அதேபோல ஒரு தீற்றல் ஆணின் மனசில்.
அவன் அந்த கோயிலில் நின்று அழுகிற இடம் என்னை நெகிழச்செய்தது. ஏனென்றால் அதேபோல நானும் நின்று கண்ணீர்விட்டிருக்கிறேன். அது ஒரு பெண்ணுக்காக அல்ல. வேறு ஏதோ ஒன்று. அந்தப்பெண் முக்கியமே இல்லை. அந்தப்பிராயத்தில் பெண் என்று வருவது என்ன? அழகு, எதிர்காலம் எல்லாமேதான்.
அந்த மென்மையான தீற்றலை அழகாகச் சொன்ன கதை. ஒரு கவிதைபோல.
ஜெயராமன்
அன்புள்ள ஜெ
இப்பல்லாம் பொண்ணுக பரீட்சைகள் எழுதுதுங்க. அப்பல்லாம் கண்ணு எழுதுறதோட சரி- அந்த வரியில் தீற்றல் கதையின் இன்னொரு முகம் உள்ளது. அது ரொமாண்டிக்கான உணர்வுகளின் கதையா இல்லை பெண்கள் சிறையுண்டிருந்த ஒரு காலகட்டத்தைப் பற்றிய கதையா? சிறைக்கைதி போல இருக்கிறார்கள். அவர்களின் நாக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாகத்தான் கண். கண்ணால் ஒரு நொடி பேசமுடியும் நிலைமை. அந்த தீற்றலின் வேகமும் அழகும் எல்லாம் அதற்காகத்தானே?
எஸ்.
வலம் இடம் [சிறுகதை]ஜெயமோகனின் ‘வலம் இடம்’ கதை படித்தேன். ஜெயமோகன் மட்டுமே எழுத முடிகிற கதை. அவருடைய கொரோனா கால நூற்றுக் கதைகளின் மற்றும் ஒன்று.
ஒவ்வொரு கதையும் எப்போதும் அதை வாசிக்கிறவர்களுக்கு, அவரவர் வாழ்வில் இருந்து யாராவது ஒரு அவரவர் மனிதரை மீட்டுக் கொடுத்து விடுகிறது.
தொழுவும் பசுவுமாகவே வாழ்ந்த எங்கள் அம்மாத்தாத்தா, இதோ இந்த வீட்டுத் தரையில் – வலமும் இடமுமாக இரண்டு அம்மாத்தாத்தாக்களாகப் – படுக்க இந்த இரவில் வருவார்.
ஒருவேளை ஏற்கனவே வந்து படுத்துவிட்டாரோ என்னவோ. சத சத என்று ஈரமான அங்குவிலாஸ் ‘போயிலைத் தடை’ வாசனை மூக்கைத் துளைக்கிறது.
வண்ணதாசன் [முகநூலில்]
அன்புள்ள ஜெ
இந்த தேர்தல் காலத்தில் உங்கள் கதைகள் அளிக்கும் விடுதலை அபாரமானது. தேர்தல்களே சத்தம் நிறைந்தவை. ஏதோ இந்த ஒரு மாதத்தில் மனிதர்களை மாற்றிவிடலாமென நம்புபவர்களின் கூச்சல். அதைவிட இந்த முறை வெறுப்பும் காழ்ப்பும்தான் கிளைத்துக்கொண்டிருக்கிறது. நாள் தோறும் அதில் ஊடாடுவது மனதை கசப்பால் நிறைத்துவிடுகிறது. ஆகவே நான் நாளிதழ்களை நிறுத்திவிட்டேன். தினமும் காலையில் உங்கள் தளத்தை வாசிக்கிறேன். ஒருகதை. அன்று முழுக்க அதைப்பற்றிய சிந்தனை அப்படியே நீடிக்கும். ஆபீஸில்கூட.
வலம் இடம் ஒர் அழகிய கதை. ஏன் நாம் இன்னொன்றை உருவாக்கிக் கொள்கிறோம்? வாழ்வுக்கு பக்கத்திலே சாவு. இன்னொன்றுதான் நமக்கு முழுநிறைவை அளிக்கிறதா? திரும்பவரும்போது அவன் என்ன கேட்டான்? திரும்பவும் இருப்பதைக் கேட்டானா, கற்பனையைக் கேட்டானா?
ராம்சுந்தர்
கொதி,வலம் இடம்- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் வலம் இடம்,கொதி- கடிதங்கள் கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3குமிழிகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையில் வாசகர்கள் அடையும் பொருள்மயக்கம் இருக்கும் இடம் கடைசியில் சாம் லிலியின் அந்த ஆபரேசனை இயல்பாக எடுத்துக்கொண்டானா இல்லையா என்ற கேள்வியில்தான் உள்ளது. அவன் கடைசியில் வேறுவழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டான் என்று வாசிக்க இடமிருக்கிறது. லிலி எந்தவகையாக மாறலாம் என்று அவனுடைய கருத்தைச் சொல்வதற்காகவே அவன் அந்த கேடலாக்கைப் பார்க்கிறான் என்று எடுத்துக்கொள்ளலாம்தான். ஏனென்றால் அவன் ஏற்கனவே அவளுடைய மூக்கு ஆபரேஷனை இயல்பாக ஆக்கிக்கொண்டான். அவளை புதிய பெண்ணாக அடையவும் பழகிக்கொண்டான். அவனுக்கு அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த ஆபரேசனையும் இயல்பாக எடுத்துக்கொள்வான்
ஆனால் இன்னொரு வாசிப்பில் அவன் இழந்தவற்றை எண்ணி ஏங்குவதற்காகவே அந்த கேடலாக்கை பார்க்கிறான். எது நிஜத்தில் கைவிட்டுச் செல்கிறதோ அதெல்லாம் கற்பனையாக மாறிவிடுகின்றன. அதெல்லாமே ஒருவகையான ஏக்கமாக ஆகிவிடுகின்றன. அப்படி ஏக்கமாக ஆகிக்கொண்டிருப்பதெல்லாம் காலப்போக்கில் கலையாக மாறிவிடுகின்றன. அதைத்தான் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று அக்கதையை வாசிக்கலாம். எனக்கு இந்த இரண்டாவது வாசிப்புதான் இன்னும் பொருத்தமானது என்ற எண்ணம் ஏற்பட்டது
எதெல்லாம் நாகரீகத்தின் பெயரால் ஒழுக்கத்தின் பெயரால் மனிதனிடமிருந்து பறிக்கப்படுகின்றனவோ அவைதான் கலையாக மாறுகின்றன. இல்லையா?
எட்வின் ராஜன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
குமிழிகள் கதையை படித்தவுடன் , disembodiment என்ற சொல்தான் மனதிற்குள் சுழன்றுகொண்டிருகிறது. அதை எப்படி அர்த்தபடுத்தி கொள்வது என்றுதான் தெரியவில்லை.
குமிழ்கள் கதை கூறுவது எப்போதுமுள்ள பிரச்சினைதான். இந்த நூற்றாண்டில் அதன் விளைவு நேரடியாக அன்றாட பிரச்சினையாக மாறிகொண்டிருக்கிறது. சமுகவலைதளம் அதற்கான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. சமூகவெளியில் ஒருவர் தான் விரும்பி தன்னை வைக்கும் புணைவே கட்டமைக்கபடுகிறது. அதற்கும் உண்மையானவருக்கும் என்ன சம்பந்தம்.
இந்த கதை அதன் அடுத்த கட்ட நகர்வை சொல்கிறது, தன் உடலை ஒரு புணைவாக கட்டமைகிறாள் லிலி. அந்த கட்டமைபில் அவள் கணவணும் ஒரு வெளியாள் மட்டுமே. அதனாலேயே அந்த விவாத்தில் எந்த தர்க்க கட்டுப்பாடும் இல்லை, இருவரும் வேறுவேறு உலகம். அங்கே மோதிகொள்கிறார்கள். இனி வரப்போகும் பத்து இருபது ஆண்டுகளில், கட்டமைப்பின் தீவிரம் இன்னும் உச்சமைடையும். அதற்கான சுவடும் அக்கதையில் உள்ளது.
வரும்காலத்தில் நம்முடைய பௌதிக இருப்பும் நம்மால் கட்டமைக்கபட்ட மற்றொரு உடல் (பௌதிக உடலே) மற்றொரு இடத்திலோ அல்லது மற்ற புதிய உலகத்திலோ (exo‑plant) இருக்கலாம் (interstellar பயணத்திற்கு அத்தகைய அழியா உடல் தேவைபடலாம்). கட்டமைக்கபட்ட உடலுடன் ஏற்படும் உறவிற்கும், சொந்த உடலுக்கும், மற்றும் மனதிற்கும் என்ன விளைவு, அது பரிமாற்றமற்ற உறவா?. இக்கதை இங்கிருந்து புதிய உலகின் ஒரு கேள்வியை அப்படியே விட்டுவிடுகிறது.
நன்றி
ஆனந்தன்
புனா
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையில் கடைசியில் அவன் அந்த படங்கள் அடங்கிய நூலை வாசிக்க ஆரம்பிக்கிறான்.ஒயின் கிளாஸ், கௌல்களின் வரலாறு , அபிதகுசலாம்பாள் என ஒரே வீச்சில் சரித்திரம் விரிந்து வருகிறது. கதையின் முத்தாய்ப்பு அங்கேதான் உள்ளது என நினைக்கிறேன். இப்படி பலநூறாண்டுகளாக மனிதர்கள் மனித உடல்பற்றி அடைந்த கனவுகளும், கற்பனைகளும்தான் கலையாகவும் சரித்திரமாகவும் மாறி அந்த நூலிலே உள்ளன. அவன் அந்தச் சரித்திரத்தைத்தான் பார்க்க ஆரம்பிக்கிறான். இந்த மாற்றமும் அந்தப்பெரிய சரித்திரத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடும், அவ்வளவுதான் என்று நினைத்துக்கொள்கிறான். அதற்கு அப்பால் ஒன்றுமில்லை
ஜி.ராகவன்
அன்புள்ள ஜெ,
குமிழிகள் கதையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் வீச்சு ஆச்சரியமூட்டுகிறது. அதிலுள்ள கதை ஒருபக்கம், ஆனால் திறம்பட அது ஒரு விவாதம் மட்டுமே என்ற பாவனை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விவாதமல்ல கதை. அந்த இமேஜ்தான் கதை.
முலைகள் இயற்கையால் உருவானவை. பாலியல் உறுப்புகளும்கூட. அதை மனிதன் இதுவரை புனைந்து புனைந்து பெரிதாக்கியிருக்கிறான். இப்போது அந்தப்புனைவை பெண் முன்னெடுக்கிறாள். நேற்றுவரை ஆண் உருவாக்கிய புனைவு அது. அதுதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. இனி அவளே அந்தப்புனைவை பெரிசாக்கிக்கொள்வாள்
ஜி.பி.சாரதி குமிழிகள் -கடிதம்-4 குமிழிகள்- கடிதங்கள்-3 குமிழிகள்,கடிதங்கள்-2 குமிழிகள்- கடிதங்கள்-1
சர்வம் கண்ணன் மயம்
சிறிய வயதிலே பூணூல் போட்டால், “சந்தி” தினசரி செய்வேன் என்று என் தந்தை நினைத்து இருந்தார். முதலில் நானும் தினசரி மூன்று வேளை அதை செய்ய பழக்க பட்டு இருந்தேன். பின்னர் அது தினமும் ஒன்று, வாரம் ஒன்று, மாதம் ஒன்று என்று மாறி கொண்டே இருந்தது. இப்பொழுது எல்லாம் அவர் “ஆவணி அவிட்டதிற்கு” இரண்டு நாள் முன்னர் போன் செய்து, அன்றைக்காவது நான் சந்தி செய்ய மன்றாடுகிறார். மரபு தன்னுடன் அறு பட்டு போகும் கவலை என் தந்தைக்கு எப்பொழுதும் உண்டு
சர்வம் கண்ணன் மயம்March 8, 2021
கோவை, என் ஓஷோ உரைகள்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடத்தப்படும் ‘எப்போ வருவாரோ?’ உரைவரிசைகள் புகழ்பெற்றவை. அவ்வுரைகள் முடிந்தபின் தனியாகவும் சில உரைகள் நிகழ்கின்றன. அதிலொன்றாக ஓஷோ பற்றிய ஒரு உரைவரிசையை ஆற்றமுடியுமா என 2019 முதலே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த வேளை வந்திருக்கிறது.
வரும் மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்.
இடம்- கிக்கானி மேல்நிலைப்பள்ளி
நாள்- மார்ச் 12,13,14
பொழுது -மாலை 6.30
மார்ச் 12 காலை கோவை வந்து 15 மாலை நாகர்கோயில் திரும்புவேன். நண்பர்கள் பல ஊர்களிலிருந்தும் வருவதனால் இம்முறை தங்க பெரிய இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். கோவை என்றுமே உள்ளத்திற்கு இனிய இடம்.
ஜெ
ஏழாம்கடல் [சிறுகதை]
இன்ஸ்பெக்டர் பென் ஜோசப் போனில் அழைத்தார். “எஸ்.சரவணன்?”
”எஸ்” என்றேன்.
“மத்த கடப்பொறத்து கெழவனை கூட்டிட்டு வந்திருக்கேன். விசாரிச்சாச்சு. ஃபைனல் ரிப்போர்ட்டு எளுதுகதுக்கு முன்னாடி நீங்க பாக்கணுமானா பாக்கலாம்.”
“நான் பாத்து என்ன சொல்ல?”
“இல்ல, நீங்க எதாவது கேக்கணுமானா கேக்கலாம்.”
நான் யோசித்தபின் “வாறேன்” என்றேன்.
சட்டைபோட்டு பர்ஸை எடுத்துக்கொண்டிருந்தபோது அம்மா வந்து வாசலில் நின்றாள்.
“போலீஸ் ஸ்டேஷனுக்காடா?”
“ஆமா.”
“வியாகப்பனையா பிடிச்சு வச்சிருக்காங்க?”
“ஆமா.”
“அவரு என்ன செய்வாரு? அவரை நான் இங்க வந்த நாள்முதல் பாத்திட்டிருக்கேன்…”
“அதை போலீஸு சொல்லட்டும்” என்றேன் எரிச்சலுடன்.
“போலீஸுக்காரனுகளுக்கு கேஸை முடிக்கணும்… உடம்புக்கு முடியாத காலத்திலே கிளவனை இளுத்து கேஸிலே போட்டுரப்போறானுங்க….”
“அதுக்கு நாம என்ன செய்ய?”
“மகாபாபமாக்கும்”
“இப்ப சொல்லு. நீதானே இத்தனை வருசம் வியாகப்பனை கரிச்சு கொட்டினே? ஒருநாள் நாக்கு எடுத்து ஒரு நல்லது சொன்னதுண்டா?”
“அது எந்த பெஞ்சாதிக்கும் மனசாக்கும்… இன்னொருத்தர் அப்டி நெருக்கமா இருந்தா எரியத்தான் செய்யும்… டேய், நான் அவரு வந்தா ஒரு நாளைக்காவது நல்ல சோறு போடாம விட்டதுண்டா?”
“அது உன் வீட்டுக்காரனுக்கு பயந்து செஞ்சது.”
“செரி, நான் ஒண்ணும் சொல்லல்ல. உன் மனசாட்சிக்கு தெரிஞ்சதை செய்யி.”
நான் பைக்கை எடுத்து கடுப்புடன் உதைத்து கிளப்பி சாலையில் ஏறி விரைந்தேன். சீரான வேகம் என்னுடைய எரிச்சலையும் பதற்றத்தையும் குறைத்தது.
அம்மா சொன்னது சரிதான். வியாகப்பனுக்காகவே ஒவ்வொரு முறையும் விரிவாகச் சமைப்பாள். அவர் வருவதே சைவச்சாப்பாடுக்காகத்தான். “மீனும் கருவாடும் தின்னு சலிச்சுப்போச்சுல்லா?” என்று பெரிய வலுவான பற்களைக் காட்டிச் சிரிப்பார்.
அம்மா அவியல், துவரன், வறுத்தரைச்ச தீயல், பூசணிக்காய் கூட்டுகறி என விதவிதமாக சமைப்பாள். அவருக்கு பிடித்தது உருளைக்கிழங்கு மசாலாக்கறி. பெருஞ்சீரகம் போட்டு தேங்காய்ப்பால் ஊற்றி குறுக்கிச் செய்வது. “நல்ல உசிருள்ள கறியாக்கும்” என்று சொல்வார்.
சனிக்கிழமை சாயங்காலம் அப்பா வியாகப்பனுக்காக காத்திருப்பது நாற்பத்தெட்டு ஆண்டுக்கால வழக்கம். அப்பா வேலைக்காக மதுரைபோய் அங்கிருந்து மாற்றலாகி மீண்டும் ஊருக்கு வந்ததுமுதல் தொடங்கியது. அன்றெல்லாம் அப்பா தனியாக அவரே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதன்பின் கல்யாணமாகி அம்மா வந்துசேர்ந்தாள்.
அப்பாவுக்கும் வியாகப்பனுக்குமான உறவு அம்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆச்சரியம்தான். அப்பாவும் வியாகப்பனும் மார்த்தாண்டம் மிஷன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகச் சேர்ந்து படித்தவர்கள். வியாகப்பன் நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அவருடைய அப்பாவுடன் மீன்பிடிக்கப் போனார். அப்பா மெட்ரிகுலேஷன் முடித்து பொதுப்பணித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.
ஆனால் அவர்களிடையே நட்பு அறுபடவே இல்லை. அப்பா அடிக்கடி கடற்கரைக்குச் சென்று வியாகப்பனை சந்தித்து வருவார். வியாகப்பன் மார்த்தாண்டம் வந்தால் அப்பாவை சந்திக்காமல் போகமாட்டார். வியாகப்பன் சகாயமேரியை திருமணம் செய்தபோது அப்பாதான் பெண்பார்க்கவே கூடப்போனார். ஒரு இந்து, சர்க்கார் அதிகாரி அவருக்காக பெண்பார்க்க வந்தது பெண்வீட்டுக்காரர்களுக்கு பெரிய அதிசயம். பெண்ணின் தாய்மாமா குடைந்து குடைந்து கேள்வி கேட்டதாக அப்பா சொல்வார்.
அதன்பின் அந்தச் சடங்கு எப்படியோ நிலைபெற்றுவிட்டது. சனிக்கிழமை சாயங்காலம் வியாகப்பன் சைக்கிளில் பின்பக்கம் கேரியரில் ஒரு பெரிய மீனை கட்டி எடுத்துக்கொண்டு வருவார். மீனை பனையோலைக் கடவத்திலோ கமுகுப்பாளையிலோ கட்டிவைத்திருப்பார். சிலசமயம் சாளை, அயிலை போன்ற சிறிய மீன்கள். சிலசமயம் சிவந்த இறால்.
அப்பா திண்ணையில் அமர்ந்து வெற்றிலைபோட்டு துப்பிக்கொண்டிருப்பார். சைக்கிள் மணி ஓசையே அவருக்கு வியாகப்பன் வருவதை காட்டிவிடும். “உக்காந்திட்டிருக்கதை பாரு… என்னமோ ஆசைக்கூத்தியா வாறதை பாத்து உக்காந்திருக்கது மாதிரி” என்று அம்மா அடுக்களையும் முணுமுணுப்பாள். “மனுசப்பற்று இருந்தா மத்தவங்ககிட்டையும் அந்த அன்பும் பாசமும் இருக்கும். இது அது கெடையாது. மீனு வெறி… வேறெ என்ன?”
“மீனு இங்கே கிடைக்காதா?” என்று நான் கேட்டேன்.
“இங்க இந்தமாதிரி புது மீனா கிடைக்குது?”
“பைசா குடுத்தா கிடைக்கும்.”
“நீ போயி உன் சோலியப்பாருடா” என்று அம்மா திடீரென்று சீறினாள்.
சைக்கிளை வீட்டு முன்பக்கம் கொண்டுவந்து ஸ்டேண்ட் போட்டு நிறுத்தும்போது வியாகப்பன் முகம் தீவிரமாக இருக்கும். மீனை அவிழ்த்து இருகைகளிலும் ஏந்திக்கொண்டு வந்து அப்பாமுன் நிற்கையில் தலையைச் சுழற்றியபடி கடகடவென்று சிரித்துக்கொண்டிருப்பார்.
அப்பாவும் சிரிப்பார். “என்ன மீனுடே?” என்பார்.
“கண்டு பிடிடே மயிரே… நாப்பது வருசமாட்டு நக்குதேல்ல?”
“பாத்தா உனக்க அப்பன் செவுளானை மாதிரில்லாடே இருக்கு.”
“வச்சு சாம்பிப்போடுவேன் பாத்துக்க… தாயளி, அப்பனைச் சொன்னா ஆரானாலும் விடமாட்டேன்.”
“ஏன் உனக்க அம்மை சொன்னாளா, அப்பன்பேரு ஆரும் சொல்லா ரகசியம்ன்னுட்டு? ஓலையிலே எளுதி கடப்பொறம் மணலிலே புதைச்சு வைச்சுக்கோ…”
அப்படியே அரைமணிநேரம் போகும். அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதகாவே அப்பால் நின்று கேட்டால் தோன்றும். ஆனால் முகங்களில் சிரிப்பும் பரவசமும் இருக்கும்.
“போரும் போரும், வந்து சாயை குடியுங்க… சாயை குடிச்சபிறவு சரசமாடலாம்” என்று அம்மா டீ கொண்டு வைப்பாள்.
“அம்மிணி ஆளு சடைஞ்சுபோச்சே” என்று வியாகப்பன் சொல்வார். அவர் அம்மாவையும் என்னையும்கூட மரியாதையுடன்தான் பேசுவார்.
“நல்லா சடைஞ்சா… டேய் நீ அவளை போன வாரம்தானே பாத்தே?” என்று அப்பா சொல்வார். “ஒருவாரத்திலே ஆனை எப்டிடே சடையும்? என்னது கற்பூரமா?”
எந்த மீனானாலும் வியாகப்பனே அமர்ந்து சுத்தம் செய்வார். அப்பா அவர் அருகே நின்று அவர் செய்வதை கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். வியாகப்பனின் கைகள் மிகமிகத் தேர்ச்சியுடன் மீனை வெட்டும். செதிலைச் சீவி எடுக்கும். அல்வா போல மீனின் தசையை நறுக்கி அடுக்கும். மீன் சற்றுநேரத்திலேயே சீரான துண்டுகளாகிவிடும். ஒவ்வொரு துண்டும் ஒரே அளவாக இருக்கும்.
அதை சிறிய பொதிகளாக ஆக்கி வைப்பார்கள். அதற்குள் அப்பாவின் நண்பர்கள் வந்துவிடுவார்கள். ஆளுக்கொரு பொட்டலம் போகும். ஆனால் அவர்கள் பேச்சுக்கு அமர்வதில்லை. அவர்களுக்கும் வியாகப்பனுக்கும் ஒத்துப்போகாது. அப்பா ஊர்ப்பெரியமனிதர், அரசு அதிகாரி, படித்தவர். அவர்கள் அவரை அப்படித்தான் வைத்திருந்தார்கள். வியாகப்பன் படிப்பை நான்காம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டார். நான்காம் வகுப்பு உறவுதான் நீடித்தது. அவர்கள் பச்சைக் கெட்டவார்த்தைகளில் பேசிக்கொள்வார்கள். வியாகப்பன் சமயங்களில் அப்பாவை தோளில் வெடிப்போசையுடன் அடிப்பார். உரக்கச் சிரிப்பார். அப்பா அப்படி கெட்டவார்த்தை பேசுவதை வேறெங்கும் கேட்கமுடியாது. அப்படிச் சிரிப்பதுமில்லை.
அப்பா மீனை கெடாமல் வைப்பதற்காக ஐஸ் பெட்டி ஒன்றை வைத்திருந்தார். அதில் ஐஸ்கட்டிகளை மாலையிலேயே கொண்டு வைத்திருப்பார்கள். மீனை உள்ளே வைத்துவிட்டு அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டபடி பேசிக்கொண்டிருப்பார்கள். “அந்தாலே போகாதே… சொறியும் செரங்குமாட்டு பேசிப்பேசி எளக்குதாங்க ரெண்டுபேரும்” என்று அம்மா சொல்வாள்.
ஒன்பது மணிக்கு சாப்பிட அமர்வார்கள். பத்துமணிவரை விரிவான சாப்பாடு. அதன்பின்னர் மீண்டும் திண்ணையில் அமர்ந்து பேச்சு. பேச்சு தணிந்து தணிந்து ரகசியக் கிளுகிளுப்பாக ஆகும். சிரிப்பொலிகளும் அடங்கியே கேட்கும். இரவு பன்னிரண்டு ஒருமணிக்கு எல்லாம்கூட பேச்சு கேட்டுக்கொண்டிருக்கும். விடியும்போதுகூட சிலநாட்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படியே திண்ணையில் ஆளுக்கொரு மூலையிலாக படுத்து தூங்கிவிடுவார்கள்.
வியாகப்பன் காலையிலேயே எழுந்து ஆற்றுக்குப்போய் பல்விளக்கி வருவார். அம்மா கொடுக்கும் காப்பியை நின்றவாறே குடித்துவிட்டு கிளம்பிவிடுவார். “சர்ச்சுக்கு போகணும்…” என்பார். அதை அவர் தவறவிடுவதில்லை. அப்பா தூங்கிக்கொண்டிருப்பார். அவரை எழுப்புவதிலை. விடைபெறுவதுமில்லை.
நான் சின்னப்பையனாக இருக்கும்போதே வியாகப்பனை கண்டு வருகிறேன். அப்போதெல்லாம் கருப்பாக கட்டைகுட்டையாக உறுதியாக இருப்பார். கைகளிலும் மார்பிலும் சுருள்சுருளாக அடர்முடி. தலைமுடி நுரைபோல இருக்கும். மூக்கு கொஞ்சம் பரந்தது. எப்போது என்னை பார்த்தாலும் “பிள்ளே இப்ப என்ன கிளாஸு படிக்குது?” என்று கேட்பார். வாராவாரம் அதுமட்டும்தான் கேள்வி. நான் முனகலாக பதில்சொல்வேன்.
அவர் முதிர்ந்துகொண்டிருப்பது என் கவனத்துக்கே வரவில்லை. அவருடைய இரு மகன்களுக்கும் திருமணம் ஆகியது. அப்பாவும் அம்மாவும் திருமணங்களுக்குகுப் போயிருந்தார்கள். மகன்கள் இரண்டு பேருமே ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்ததற்கும் போயிருந்தார்கள். நான் கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருமுறை லீவுக்கு வந்திருந்தபோது வாசலில் ஆட்டோ வந்து நின்றது. தலை நரைத்த ஒரு கிழவர் கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் இறங்கினார்.
எனக்கு ஆளைத்தெரியவில்லை. அப்பா எழுந்துபோய் அவரிடம் சிரித்துப்பேசுவதைக் கண்டதும்தான் மெல்ல புரிந்தது. வியாகப்பனேதான். வயதாகி தளர்ந்திருந்தார். “இப்ப ஆட்டோலதான் வாறாரா?” என்று அம்மாவிடம் கேட்டேன்.
“ஆமா, இப்ப சைக்கிள் ஓட்ட முடியல்லை. மீன்பிடிக்கவும் போறதில்லை. ஆனாலும் ஆட்டோ பிடிச்சாவது வந்திடுறது. இங்க வந்து வாய நாறவைக்கணுமே…”
“மீன் கொண்டுவாறாரா?”
“கொஞ்சமா கொண்டுவருவார். கரையோரமா உக்காந்து அவரே தூண்டில்போட்டு புடிக்கிறது. ஒண்ணுமே கிடைக்கலைன்னா காசுகுடுத்து வாங்கிட்டு வருவார். சிலசமயம் சிப்பி மாதிரி… என்ன கொண்டு வந்தாலும் உங்க அப்பாவுக்கு அது அமிர்தமில்லா? நாம வச்சு வெளம்பினாத்தான் ஆயிரம் குத்தம். என்ன சொந்தமோ என்னமோ…”
”சரிதான்” என்றேன். அப்பாவும் வயதாகிவிட்டிருப்பதை அப்போதுதான் கண்டேன்.
“அப்பாவுக்கும் நரைச்சிருக்கு.”
“ஆமா… இப்பதான் பாக்கிறியாக்கும். ரெண்டுபேருக்கும் நரைச்சுப்போட்டு. மேலே போறப்ப தனியா போவாங்களோ இல்லை, அப்பமும் சேந்துதானோ” என்றாள் அம்மா.
நான் ஸ்டேஷனை அணுகினேன். பாராக்காரரை நோக்கி புன்னகை செய்தபின் பைக்கை நிறுத்தினேன். “இருக்காரா?” என்றேன்.
“உள்ள இருக்காரு” என்றான்.
உள்ளே இன்ஸ்பெக்டர் பென் இருந்தார். ”வாங்க” என்றார்.
நான் நாற்காலியில் அமர்ந்தேன். பென் என்னிடம் விழிகளால் உள்ளே காட்டி “உள்ள மகசர் எழுதுறோம்” என்றார்.
“என்ன சொல்லுதாரு?” என்றேன்.
”நாப்பத்தொன்பது வருசமா எல்லா சனிக்கிழமையும் வந்து பாத்து மீனு குடுக்குற வழக்கம் இருக்குன்னு சொல்லுதாரு… சேந்து சாப்புட்டு ஒருநாள் தங்கி ஞாயித்துக்கிளமை காலை கெளம்புவாராம்.”
“அதெல்லாம் உண்மைதான்.”
“அன்னைக்கு அவரே பாறையிலே சிப்பி பிடிச்சிருக்காரு. அதை கொண்டுபோயி குடுத்திருக்காரு. வழக்கமா கழுவி பதம் வச்சு குடுப்பாராம். சிப்பி ஆனதினாலே அப்டியே குடுத்தாராம். அது சீவனோட இருக்கும்லா?”
நான் தலையசைத்தேன்.
“இங்க ஏட்டு ஒருத்தர் கடப்பொறம் ஆளு. அவருகிட்டே கேட்டேன். சிப்பியிலே ஆயிரத்திலே லெச்சத்திலே ஒண்ணுலே அப்டி ஒரு வெசம் இருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லுதாரு.”
“பாத்தா தெரியாதா?”
“பாத்தா தெரியாது… சிலசமயம் ஒரு நீலரேகை இருக்கும். ஆனா அது இல்லாமலும் இருக்க வாய்ப்பிருக்கு” என்றார் பென். “வேணுமானா ஒரு எக்ஸ்பர்ட் அட்வைஸ் கேட்டுக்கிடலாம்.”
“இது என்னவகை சிப்பி?”
“இது முத்துச் சிப்பிதான்… ஆனா முத்து இருக்கிறதில்லை. அந்த அளவுக்கு வெளையாது. அதுக்குள்ள புடிச்சிருவாங்க..”
“சாதாரணமா கடலோர சிப்பிதானே பிடிப்பாங்க.”
“ஆமா, அது வேற. அதை கல்லும்மேல்காயின்னு வடக்கே சொல்லுவாங்க. அது கொஞ்சம் சின்ன சிப்பி.”
“சாப்பிட்ட மிச்சம் சாம்பிள் ஒண்ணும் இல்லையில்லா?” என்றேன்.
“உங்க வீட்டிலே அதை உங்க அப்பா மட்டும்தான் சாப்பிட்டிருக்காரு. கொஞ்சம்தான் கொண்டுவந்திருக்காரு வியாகப்பன். உங்கம்மாவுக்கு சிப்பி பிடிக்காது. மிச்சம் கொஞ்சம் இருந்ததை குப்பையிலே கொட்டிட்டாங்க உங்கம்மா. உங்கப்பாவும் ஒண்ணும் வித்தியாசமா சொல்லலை. ருசியோ மணமோ வேற மாதிரி இருக்கல்லை. ஆனா ராத்திரி வாந்தி எடுக்க ஆரம்பிச்சிருக்காரு. உங்கம்மா இஞ்சித்தண்ணி போட்டு குடுத்திருக்காங்க. வாந்தியோட மூச்சுமுட்டலும் வந்தப்ப ஜங்ஷனுக்கு போன்பண்ணி டாக்சி வரச்சொல்லி ஜேம்ஸ் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. போறதுக்குள்ள உசிரு போய்ட்டுது. ஜேம்ஸுக்கு ஃபுட்பாய்சன்னு சந்தேகம் வந்திருக்கு. அதனாலே வயித்திலே இருந்து சாம்பிள் எடுத்து பாத்திருக்கார். அவருக்க ரிப்போர்ட் இருக்கு”
நான் பெருமூச்சுவிட்டேன்.
“இவரு அங்க சிப்பிமீன் கறி சாப்பிடாம வந்திட்டாரு, அதான் டாக்டருக்கு சந்தேகம். வேற யாருமே சாப்பிடலை”
“இவரு எப்பவுமே கொண்டுவாறதைச் சாப்புடுறதில்லை.”
”வேணும்னே செஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதுக்குண்டான சூழலும் இல்லை. வயசும் இல்லை. ஆனா மனுஷ மனசு… அறுபதுவருச சேர்க்கை. அதிலே என்னென்னமோ இருந்திருக்கலாம். நம்ம கண்ணுக்கு வராம என்னமோ நடந்திருக்கலாம்… ஒரு பேச்சுக்கு மறுபேச்சு தப்பா போயி மனசிலே நஞ்சு சேர்ந்திருக்கலாம். என்ன இருந்தாலும் வேற வேற சாதி. வேற வேற மதம்… நான் தப்பாச் சொல்லல்ல. நாம சாத்தானை குறைச்சு நினைச்சுக்கிடமுடியாது அதைச் சொன்னேன்.”
”அம்மா ஒண்ணுமே சொல்லல்ல. அந்த சனிக்கிளமையும் வழக்கம்போல நடுராத்திரிவரை சிரிச்சு பேசி சந்தோசமாத்தான் இருந்திருக்காங்க.”
“முன்னாடி ஏதாவது உரசல் உண்டா?”
“ஒண்ணுமே இல்லேன்னு அம்மா சொல்லுதா… உறுதியாச் சொல்லுதா. அம்மாவுக்க நினைப்பிலே வியாகப்பன்மேலே தப்பே இருக்காது. அவருக்கு அவ விசம் வைச்சாலும் நம்பலாம், வியாகப்பன் அவருக்க மறுசீவனாக்கும்னு சொல்லுதா.”
”ம்ம். நான் அவருக்க ரெண்டு பிள்ளைங்க கிட்டேயும் கேட்டேன். அப்பன் பாதி பிள்ளைவாள் பாதின்னாக்கும் கணக்கு. ஒரு வார்த்தை குறைச்சோ வெறுத்தோ சொன்னதில்லைன்னு சொல்லுதாங்க.”
“அப்டித்தான் இருக்கும்” என்று நான் சொன்னேன்.
“என்ன பண்ணலாம்? இதைக் கேஸாக்கினா பிரச்சினை. டாக்டர்கிட்ட பேசினேன். ஃபுட்பாய்சன்னுகூட காட்டவேண்டாம், அலர்ஜின்னு முடிச்சுகிடலாம்னு சொல்லுதாரு. நீங்க முடிவெடுத்தா போரும்.”
“அப்டியே முடிச்சுகிடலாம்னு நினைக்கேன்”
“செரி. அப்டியே செய்வோம். ஆளு உள்ள இருக்காரு. பாக்குதீங்களா?”
எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் ஆர்வமும் எழுந்தது. “செரி” என்றேன்.
“வாங்க” என்று பென் எழுந்து என்னை கூட்டிச்சென்றார். மறு அறையில் ஒரு பெஞ்சில் வியாகப்பன் அமர்ந்திருந்தார். மிகவும் வயதானவராக தெரிந்தார். தொளதொளவென சட்டைக்குள் தேம்பிய தோள்கள். மயிர் முழுமையாகவே உதிர்ந்திருந்தது. முகம் சுருக்கங்கள் அடர்ந்து சற்று வெளுத்திருந்தது. ஒருவாரத்தாடி நுரைபோல முகத்தில் படர்ந்திருந்தது.
வியாகப்பனுடன் அவருடைய இளைய மகன் பர்னபாஸ் நின்றிருந்தார். என்னைப்பார்த்து சங்கடமாக புன்னகை செய்தார்.
நான் புன்னகைத்து பர்னபாசிடம் “ஒண்ணுமில்லை. கேஸெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றேன்.
அவர் ஆறுதல் அடைவது தெரிந்தது.”சரி” என்றார்
“அப்பாவை பாத்துக்கிடுங்க” என்றேன் “வயசான காலத்திலே…”
“ஆமா” என்றார் “ரொம்ப முடியாம இருக்காரு… மனசு நல்ல நிலையிலே இருக்கிற மாதிரி தெரியல்ல. இந்த செய்தியை கேள்விப்பட்டப்ப பதறிட்டார். ஆனா அதுக்குப் பிறகு கொஞ்சம் கலங்கிப்போயி என்னென்னமோ பேசுதார்.”
“நான் பேசிப்பாக்குதேன்” என்றேன்.
”அப்பா, இஞ்ச பாக்கணும், அப்பா” என்று பர்னபாஸ் அழைத்தார். “இது சரவணன். பிள்ளைவாளுக்க மகன். சரவணன்… பிள்ளைவாளுக்க மகனாக்கும்.”
வியாகப்பன் என்னை நிமிர்ந்து பார்த்து என்ன ஏது என்று தெரியாமல் புன்னகை செய்தார். வாயில் இரண்டு பற்கள் நீட்டியிருந்தன. புருவங்கள் நரைத்து பழுத்த கண்களுக்குமேல் வெண்முடிகள் விழுந்திருந்தன. “நல்லா இருக்கியளா?” என்றார். அவருக்கு என்னை தெரிகிறதா என்று சந்தேகமாக இருந்தது.
“நல்லா இருக்கேன்” என்றேன்
“அப்பா எப்டி இருக்காரு?. மத்த கேஸுக்கு போகணும்லா, புதுக்கோட்டைக்கு?”
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு ஆள் தெரிகிறது, நிலைமை தெரியவில்லை.
“வாற சனிக்கிழமை வாறேன்… மீனு கொண்டு வாறேன்.”
நான் பர்னபாஸை பார்த்தேன். ஆனால் அதற்குள் வியாகப்பனே புரிந்து கொண்டுவிட்டார். பாய்ந்து என் கைகளை தன் கைகளால் பற்றிக்கொண்டார். அவர் கைகள் நடுங்கின. என் கைகளை பிடித்து ஆட்டுவதுபோல அசைந்தன.
“பிள்ளைவாளுக்கு நான் விசம் வைச்சேன்… நான் குடுத்த விசமாக்கும்.”
“ஒண்ணுமில்லை… நீங்க பேசாம இருங்க..”
“இல்ல, அந்தச் சிப்பி நான் கொண்டுபோயி குடுத்தது… அதிலே ஒண்ணு விசம்.”
”விசத்தாலே அப்பா சாகல்லை…டாக்டர் சொல்லியாச்சு“ என்றேன்.
“நான் அறிஞ்சு கொண்டு வரல்லை… விசம்னு எனக்கு தெரியாது. ஆனா தெரிஞ்சாலும் இல்லேன்னாலும் அது நான் குடுத்த விசம்… நான் கடலு கண்டவனாக்கும் பிள்ளே. கடலு, ஆழி, பாராவாரம்… அதுக்க ஆழத்துக்கும் தொலைவுக்கும் முடிவே இல்லை. மண்ணிலயும் விண்ணிலயும் இருக்கப்பட்ட அத்தனையையும் அறிஞ்ச பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் அதிலே என்னென்ன எங்கெங்க இருக்குன்னு தெரியும். மத்தவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மனுசப்பயக்களுக்கு தெரியாது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும் மாதாவுக்கும்கூட தெரியாது… தெரிஞ்சுகிடவே முடியாது.”
அவர் இருமினார். இருமி இருமி கண்களில் நீருடன் மேல்துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டார்.
“போரும் பேசவேண்டாம்” என்றேன்
“அந்த கடலாழத்திலே இருந்திருக்கு விசம்… ஒரு துளி விசம்… கோடிச் சிப்பியிலே ஒரு சிப்பியிலே இருக்குத விசம். அது அங்க இருந்திருக்கு. அது என்னதுன்னு எனக்கு தெரியல்லியே. அது என் கடலிலே இருக்குன்னு எனக்கு தெரியல்லியே. ஏழாம் கடலுக்க ரகசியம் தெரியல்லியே. மாதாவே எனக்க மாதாவே.”
“சும்மா ஓரோண்ணு நினைச்சுக்கிட வேண்டாம்… பேசாம ஆண்டவன் மேலே பாரத்தைப் போட்டு நிம்மதியாட்டு இருங்க” என்றேன்.
“நான் சடைஞ்சுபோட்டேன்… போறவளி தெரிஞ்சாச்சு.. ஒப்பம்சேந்து போலாம்னு பிள்ளைவாள் சொல்லுவாரு.”
அவர் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். முகச்சுருக்கங்களில் கண்ணீர் வழிந்து தாடையிலிருந்து மடியில் உதிர்ந்தது.
நான் அவர் கைகளைப் பற்றி அழுத்தினேன் “விடுங்க… அப்பாவுக்கு உங்களை தெரியும். எனக்கும் தெரியும். நம்ம எல்லாரையும் தெய்வத்துக்கு தெரியும். அப்றமென்ன? வியாகூலமாதாவுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்திருவோம்… ஒரு பரலோகராஜ்ய ஜெபம் செஞ்சிருவோம்” என்றேன்.
அவருக்கு நான் சொல்வது சென்று சேரவில்லை. மீண்டும் மேல்துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்தார்.
“ஆனா ஒண்ணு உண்டு. எனக்க கடலிலே பிள்ளைவாளுக்காக ஒரு முத்து உண்டு… ஒரு அருமுத்து, ஆணிப்பொன் மணிமுத்து. அதை நான் எடுக்கல்லை. ஆனா எனக்கு தெரியும். அப்டி ஒரு முத்து அங்க ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு. நான் சிப்பி கொண்டுபோயி குடுக்கிறப்ப அதை திறக்காம குடுக்குறது அதனாலேதான். பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுபடும்… கையிலே எடுத்து பாப்பாரு. முத்துன்னு தெரிஞ்சிரும். லே, தாயோளி இது உனக்க முத்தில்லாடேன்னு சொல்லுவாரு. என்னென்னமோ மனசிலே நினைச்சுக்கிட்டேன். என்னென்னமோ சொப்பனம் கண்டேன். மாதாகிட்ட அப்டி நடக்கணும்னு நேந்துகிட்டேன்… பாவம் மாதாவுக்கும் தெரியாது… சிக்கினது ஒருதுளி வெசமாக்கும்.”
அவர் பெருமூச்சு விட்டார். “செரி, அது விதி. மேலே சொர்க்கம்னு இருக்கும்லா? அங்க இருந்து பிள்ளைவாள் நினைப்பாரு… பாவம் வியாகப்பன் நல்லவனாக்கும்னு… அவரு என்னைய வெறுக்க மாட்டாரு… பிள்ளே, அப்டி வெறுத்துப்போட்டா பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?”
நான் கண்ணீருடன் அவர் கைகளில் தலையை வைத்தேன். “என் அப்பா இப்ப நீங்களாக்கும். என் அப்பா வேற நீங்க வேற இல்லை… என்னை அனுக்ரகிக்கணும்” என்றேன்.
அவர் என் தலைமேல் கையை வைத்தார் “நல்லா இருக்கணும். நிறைஞ்சு வாழணும்” என்றார்.
பர்னபாஸ் கண்களால் விடைபெற்றுக்கொண்டார். மெல்ல கைத்தாங்கலாக அவரை பர்னபாஸ் ஆட்டோவில் ஏற்றி கொண்டுசெல்வதை கண்டேன். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று ஆட்டோ கடைசி திருப்பத்தில் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அடுத்தநாளே வியாகப்பன் மறைந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கி கட்டிலில் போய் படுத்தவர் ஒருமணிநேரம் கழித்து தண்ணீர் கேட்டிருக்கிறார். மருமகள் கொண்டு வருவதற்குள் அசைவற்றிருந்தார்.
அவருடைய இறுதிச்சடங்குக்கும் அதன்பிறகு நடந்த மோட்சஜெபத்திற்கும் நானும் அம்மாவும் சென்றிருந்தோம். அதன்பின் அவர்களின் குடும்பத்துடன் தொடர்பு குறைந்துவிட்டது. அவர்களும் அந்த விலக்கத்தை விரும்பினர். நாங்களும் அந்த நிகழ்ச்சிகளைக் கடந்துவிட விரும்பினோம். அது நாமறிய முடியாத ஒரு சென்ற காலகட்டத்திற்கு உரிய நினைவு என ஆகியது.
மேலும் ஓராண்டுக்குப்பின் எனக்கு திருமணம் ஆகியது. அம்மாவையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டேன். வீட்டை காலி செய்யும்போது அப்பாவின் உடைமைகளை பிரித்து அடுக்கினோம். அப்போதுதான் கண்டடைந்தேன், ஒரு சிறிய வெள்ளிச் சிமிழில் அப்பா ஒரு முத்தை வைத்திருந்தார். ஒரு சிறிய மக்காச்சோள மணி போல இருந்தது. அதை சென்னையில் கொடுத்து சோதனை செய்து பார்த்தேன். அசல் முத்து.
9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]கற்கோயிலும் சொற்கோயிலும்
நம் சூழலில் மிகப்பெரிய அறிவுப்பணிகள் கண்டுகொள்ளப்படாமல் போவது எப்போதும் நிகழ்கிறது. மிகச்சிறிய பணிகள் முரசோசையுடன் முன்வந்து நிற்பதும் சாதாரணம். சிறியபணிகளைச் செய்தவர்கள் அப்பணிகளை முன்வைப்பதிலேயே எஞ்சிய பெரும் உழைப்பைச் செலவழிப்பார்கள். பெரும்பணிகளைச் செய்தவர்கள் அடுத்த பெரும்பணிக்குச் சென்றுவிடுவார்கள்.
அத்துடன் பெரும்பணிகள் சாமானியர்களுக்கு ஒரு திகைப்பையும் பதற்றத்தையும் அளிக்கின்றன. அவை சாமானியரை மேலும் சாமானியர்களாக காட்டுகின்றன. அவை இல்லை என நினைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை சொன்னார். ”ஒரு சாமானியர் ஒருவரை பாராட்டுகிறார் என்றால் அது அருஞ்செயல் செய்தமைக்காக இருக்காது, தானும் செய்யத்தக்க செயலொன்றைச் செய்தால் மட்டுமே அவர் பாராட்டுவார். அவர் ஈட்டியதை தானும் அடையமுடியும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருக்கவேண்டும்”
ஆகவே பெரும்பணிகளை நாம் சமகாலத்தில் தவறவிட்டுவிடுகிறோம். அப்பெரும்பணி செய்தவர் காலத்தின் பகுதியாக ஆனபின், அவர் நம் அருகே நின்று நம்மை சிறியவராக ஆக்குவதில்லை என்று ஆனபின், கொண்டாடுகிறோம். சமகாலத்தில் கொண்டாடப்படாதவர் என்று அவரைச் சொல்லிச் சொல்லி மாய்கிறோம்.
தமிழில் சென்ற கால்நூற்றாண்டில் செய்யப்பட்ட மாபெரும் அறிவுப்பணி என்பது குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய இராஜராஜேஸ்ச்சரம் என்னும் ஆய்வுநூல். 2010ல் வெளிவந்த இப்பெருநூலின் நான்காம் பதிப்பு 2020ல் வெளிவந்துள்ளது. இந்நூலைப்பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்போது புதியபதிப்பைக் கண்டதும் மீண்டும் எழுதத் தோன்றியது
தஞ்சைப்பேராலயத்தை மூன்று கோணங்களில் ஆராயும் நூல் இது. சோழமன்னன் ராஜராஜனின் வரலாற்றின் சின்னமாகவும், தமிழ்வரலாற்றின் மாபெரும் ஆவணத்தொகுதியாகவும் இந்நூல் அவ்வாலயத்தை ஆராய்கிறது. தமிழ்ப்பண்பாட்டின், சைவப்பண்பாட்டின் ஒரு மையமாக தஞ்சைப்பேராலயத்தை ஆராய்கிறது. தமிழ் ஆலய- சிற்பக்கலையின் வெற்றிச்சின்னமாக, முன்னுதாரணமாக ஆராய்கிறது
இம்மூன்று தளங்களிலும் மிக விரிவான தரவுகளுடன் ஏராளமான அரிய புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்.தஞ்சை நகரையும் ராஜராஜனையும் விரிவாக அறிமுகம் செய்தபடி தொடங்கும் இந்நூல் ராஜராஜன் கட்டிய கற்றளியின் அமைப்பையும் அதன் கட்டுமானக்கலையையும் விவரிக்கிறது. ஆலயத்தின் பிரபஞ்ச தத்துவம், ஸ்ரீவிமானமே சதசிவலிங்கமாக திகழும் அதன் நுட்பம், அத பஞ்சபூத அமைப்பு அதன் விண்தொடு விமானத்தின் சிறப்பு என விரிவாக விளக்கிச் செல்கிறது
ஆலயத்தின் சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், சித்திரகூடங்களின் ஓவியங்கள், அங்கே நிகழ்ந்த கலைப்பெருக்கம், ஆலயம் பற்றிய கல்வெட்டுச்சான்றுகள், அந்த ஆலயத்துடன் இணைந்த வரலாற்றுச் செய்திகள், ஆலயத்திருவிழாக்களின் செய்திகள் என முழுமையான ஒரு தொகுப்புநூலாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் தனித்தனியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ள இந்நூல் ‘வாசிப்பதற்கானது’ அல்ல. அகராதிகளைப் போல நூலகங்களில் இருக்கவேண்டியது. தோன்றும்போதெல்லாம் எடுத்து பார்க்கப்படவேண்டியது. இத்தகைய நூல்களை வேறெங்காவது சிறு குறிப்பு தட்டுபட்டால்கூட உடனே எடுத்துப் பார்ப்பது ஒரு நல்ல அறிவுப்பயிற்சி.
குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தேவார மாண்பும் ஓதுவார் மரபும் 2021ல் வெளிவந்துள்ள இன்னொரு பெருநூல். இராஜராஜேச்சரம் போலவே இதுவும் ஒரு மாபெரும் ஆய்வுத்தொகை. தேவாரம் சைவ மரபுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்த நூல். அது ஒர் அறிவுநூல் என்பதைக் கடந்து இசைநூலும் மந்திரநூலுமாக சைவத்தால் கருதப்படுகிறது. செவியிலும் கருத்திலும் தேவாரத்தை நிலைநிறுத்தும்பொருட்டு ஓதுவார் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு ஆயிரமாண்டுகளாக நீடிக்கிறது
குடவாயில் பாலசுப்ரமணியத்தின் இந்நூல் தேவாரம் ஆக்கிய மூவரின் வரலாறு, அவர்களின் பதிகங்களின் இயல்பை அறிமுகம் செய்துகொண்டு தொடங்குகிறது. தேவாரம் என்னும் பெயர் உருவாகி வந்தமை, தேவாரம் பற்றி சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் உள்ள செய்திகள், வரலாற்றில் ஓதுவார்களைப் பற்றி இருக்கும் குறிப்புகள், என விரிகிறது
கல்வெட்டுகள் காட்டும் தேவார மூவர் வழிபாடு, தேவார மூவர் பெயரில் அமைந்த திருமடங்கள், தேவரா மூவர் திருவிழாக்கள், திருமுறைகண்ட புராணம் பற்றிய ஆய்வு, கலைப்படைப்புக்களில் தேவாரம் இடம்பெற்றுள்ள வகை என ஆய்வு விரிந்துசெல்கிறது.
பொதுவாக ஒரு நூலின் தகவல்செம்மையையோ கருத்துநிலையையோ அறிய அதன் ‘நரம்பு’ ஒன்றை தொட்டுப்பார்க்கும் வழக்கம் எனக்குண்டு. அவ்வகையில் நான் ஆர்வம்கொண்டுள்ள கொடுங்கோளூர், திருவஞ்சைக்குளம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன்.
கொடுங்கோளூர் [இன்றைய கொடுங்கல்லூர்] திருவஞ்சைக்குளம் என்னும் சைவப்பேராலயமே அன்றைய வஞ்சி நகரின் மையம். அங்கே வந்த ஆரூரார் முடிப்பது கங்கையும் திங்களும் என்னும் பதிகம் இணையம் உட்பட எல்லாத் தொகுதிகளிலும் பொது என்னும் பகுப்பில் இடம்பெறுவது வழக்கம். அது திருவஞ்சைக்குளத்தில் பாடப்பட்டது.
அதேபோல வஞ்சியில் [கொடுங்கோளூரில்] சேரமான் மாக்கோதையின் அரண்மனையில் இருக்கையில் ஆரூரார் பாடிய ‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை’ என்னும் பதிகம் ஆரூரான் சொல்லப்பட்டிருப்பதனால் ஆரூரில் பாடப்பட்டவை என்று தவறாகக் குறிப்பிடப்படுவதுண்டு.அவையிரண்டுமே இந்நூலில் சரியான ஆய்வுத்தரவுகளுடன் அளிக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் இப்பாடல்கள் வஞ்சியில் பாடப்பட்டவை என்பதை ஒரு பெருமிதமாகச் சொல்வதுண்டு. ஆனால் தமிழ் நூல்களில் அவ்வாறு காணப்படுவதில்லை. ஆகவே அதை மட்டும் பார்த்தபோது நிறைவடைந்தேன்.
ராஜராஜன் கட்டியது கற்கோயில். சைவக்குரவர் அமைத்தது சொற்கோயில் .இரண்டு கோயில்களையும் பற்றிய இந்நூல்களும் தனிநபர்ப்பணி என்று பார்க்கையில் அவற்றுடன் ஒப்பிடத்தக்க சிறப்புடையவை. சைவர்களுக்கு அவர்களின் மெய்யறிவின் கருவி எனவும் தமிழ்ப்பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆய்வுக்குரிய பெருந்தொகை என்றும் கருதத்தக்கவை இந்நூல்கள். நம் காலத்தில் நிகழ்ந்துள்ள பெருஞ்செயல்கள் இவை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

