Jeyamohan's Blog, page 1031

March 14, 2021

ஆமென்பது, விருந்து – கடிதங்கள்

ஆமென்பது… [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பலவகையான கதைகள். ஆனால் எனக்கு இந்த ஆமென்பது ஒரு பெரிய அனுபவமாக அமைந்த கதை. கற்பனையே இல்லை, உண்மையான வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது [யார் என்ன என்று விக்கிப்பீடியாவில் போய் அறிந்துகொண்டேன்]

ஒரு முழுவாழ்க்கையும் கூர்மையான விமர்சனம் கலந்து சொல்லப்படுகிறது. அந்த வாழ்க்கைக்கு மிக அணுக்கமாக இருந்து கவனித்துக்கொண்டே இருந்த ஒருவரால். [நிஜவாழ்க்கையில் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகவே வேறெந்த கவனமும் இல்லை. அண்ணாவைப்பற்றி நிறையவே சொல்லமுடியும்]

நோயுற்றவராக இங்கே வருகிறார் ஆசிரியர். ஆகவே நேர் எதிர்த்திசையில் திரும்பிக்கொள்கிறது அவருடைய ஆற்றல். அவருடைய வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்வினைதான். எதிர்வினையே வாழ்க்கையாக இருப்பது ஒரு நல்ல வாழ்க்கையாக ஆகுமா? கம்யூனிசம் இருத்தலியல் மீதெல்லாம் அவர்கொண்ட பற்று கூட எதிர்வினைதான். கடைசியில் ஆன்மிகமே கூட அந்தவகையான எதிர்வினைதான். அவரால் அதிலும் எதையும் அடையமுடியவில்லை.

அந்த எதிர்வினைகள் எல்லாம் அவருக்கு அடியிலிருந்த உண்மையான ஏக்கங்களை மறைப்பதற்காகத்தான். அவருடைய அந்தப்பாவனைகள்தான் இலக்கியமாக வெளிப்பட்டன.

ஆனால் இசகாக்கின் புராணம் அதைமீறி பாசிட்டிவானது. அதில் அவர் உண்மையாக வாழ்கிறார். அன்பில் திளைக்கிறார். அதுதான் அவர். மற்றதெல்லாம் அவருடைய துக்கம் மட்டும்தான்.

 

சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ

ஆமென்பது பலவகையான எண்ணங்களை உருவாக்கிய கதை. ‘தெய்வங்கள் போதும், புதிய தெய்வங்களை பிரதிஷ்டிக்காதீர்கள்’ என்ற வரிதான் மையம். ‘எழுத்தாளர்கள் அவர்களுக்கு என்ன என்றே தெரியாத தெய்வங்களை பிரதிஷ்டை செய்துவிடும் துரதிருஷ்டசாலிகள்’ என்ற வரி இன்னொரு திறப்பு. கே.வி.ஜயானனன் அதைத்தான் செய்தார். பெருந்துக்கம் என்ற தெய்வத்தை நிறுவி விட்டார். அது அவரையே பலிகேட்டது. அதை அவராலேயே கட்டுப்படுத்த முடியாது.

மிகவேகமாகச் சொல்லப்படுகிறது கதை. எதற்கென்றே தெரியாத முடிவில்லா காத்திருப்புகளாகிய மலைகள் நடுவே பிறந்து வளர்ந்தவர். வாழ்க்கையின் அலைகள் வழியாகச் செல்கிறார். ஒவ்வொரு தளத்திலும் வெறிகொண்டு எதிர்வினையாற்றுகிறார். தன்னை விதவிதமாகக் கற்பனைசெய்துகொள்கிறார். ஆனால் எஞ்சுவது அந்த ஏக்கமும் தனிமையும் மட்டும்தான்

 

ஆர்.

விருந்து [சிறுகதை]

அன்பிற்குரிய ஜெயமோகன்,

இசையில் உன்னதமானது கந்தர்வகாணம்  என்பார்கள். இலக்கியத்திலேயும் சிறந்தது கந்தர்வக்கதைகள் என வரும்தலைமுறை கூறுமளவிற்கு இலக்கிய கந்தர்வனாகவே மாறி அவர்களின் கதைகளை படைப்புகளாக்கிக்கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயம் எழுகிறது.இது எனது மிகக் கற்பனையாகக் கூட இருக்கலாம். அட இருந்து விட்டுத்தான் போகட்டுமே!

கந்தர்வன், யட்சன், படையல், விருந்து என வரிசையாக வந்து கொண்டிருக்கும் கதைகள் ஒருவகையில் சிறந்த கந்தர்வ இலக்கியமே தான்.

உலகிலே கொலைகள் இரண்டு வகை ஒன்று மற்றவர்களை மாய்க்கும் கொலை இன்னொன்று தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை. மாய்க்கும் கொலையிலேயும் இரண்டு உண்டு ஒன்று தன்னலத்தினாலே உணர்ச்சிவசப்பட்டு கொல்வது மற்றொன்று அறத்தைக் காக்க செய்யப்படும் தண்டனை கொலை. தற்கொலைகளும் இரண்டு வகை ஒன்று உணர்ச்சி மேலீட்டால் வாழ்க்கை தோல்விகளால் தன்னைத் தானே கொன்று கொள்வது மற்றொன்று அறத்தின் பொருட்டு தன்னையே அளிக்கும் தற்கொடை. இவைகளை சீர்தூக்கிப் பார்த்தால் அறத்தின் பொருட்டு செய்யப்படுகின்ற தண்டனை கொலைகளும் தற்கொலைகளும் என்றென்றும் வியந்து போற்றத்தக்கது.

சாமிநாத ஆசாரி செய்த தண்டனைக் கொலையை தாணப்பன் பிள்ளை வியந்து போற்றுவதாலேயே, மிகப்பெரிய அறச்செயலாக மதிப்பதாலேயே, சாமிநாதன் தூக்கிலிடப்பட்டதை ஒரு அறப் பிழை என வருந்துவதாலேயே, அவர் வாழும் வரை சாமிநாத ஆசாரியின் பெயரில் திருவட்டார் ஆதி கேசவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவன் இறந்த நாளிலே புஷ்பாஞ்சலி செய்து கொண்டிருந்தார்.

அம்மிணி தாயாலும் அவளை வற்புறுத்திக் கட்டாயமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான உறவுக்கு ஆட்படுத்தி வைத்திருந்த ஆனால் அதை வெளிப்படையாக முன்வைக்காத கரை நாயர் திவாகர குரூபாலும் ஒரு சந்தையிலே கைவிடப்பட்ட சிறுவன் போலவேதான் சாமிநாத ஆசாரி வளர்க்கப் பட்டிருக்கிறான்.அவனும் ஒரு பலி ஆடு தானே.

சாமிநாத ஆசாரியின் தந்தை அவனது பத்து வயதில் இறந்த பிறகு, அவனது இருபத்தாறு வயது வரை ஒரு ஆடு புல்லும் தழையும் போட்டு வளர்க்கப்படுவது போல சாமிநாத ஆசாரி கரைநாயரால் வளர்க்கப்பட்டான் என்பதையே பத்து வயது முதல் அவன் தொடர்ந்து போடும் வெற்றிலைக் குறியீடு காட்டுகிறது. அந்த வெற்றிலை போடுதல் மட்டுமே அவன் உள்ளக் கொதிப்புக்கு ஆறுதலாக மனதிற்கு விடுதலையை தருவதாக இருக்கிறது. வெற்றிலை போடுவதின் மூலம் அவனால் எல்லாவிதமான துயரங்களில் இருந்தும் விடுபட்டு ஒருவித தியானம் போன்ற அனுபவத்தில் திளைக்க முடிகிறது. மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆடு ரசித்து ருசித்து பச்சிலையை மெல்வது போல வெற்றிலை அவனை அவன் எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீட்கிறது. ஒருவகையில் தாணப்பன் பிள்ளைக்குக்கூட வெற்றிலை போடுவதே அவரை கடைசிவரை உணர்வு சிக்கல்களில் இருந்து மீட்கும் ஒரு செயல்பாடாக இருந்திருக்கிறது.

ஒரு ஜென் துறவி ஒவ்வொரு சிறிய செயலையும் எவ்விதம் தியானமாக யோகமாக செய்கிறாரோ அவ்விதம் சாமிநாத ஆசாரி வெற்றிலை போடுவது காட்டப்பட்டுள்ள விதம் வெகு அருமை.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சாமிநாத ஆசாரியிடம் அம்மிணி கரைநாயர் எவ்விதம் அவளை சீரழித்தார் என்பதை உணர்த்தி, அவனை வளர்க்க வேண்டிய தன்னுடைய கடமை முடிந்துவிட்டது காரணமாகவும் தற்கொலை செய்து தன் வாழ்வை முடித்துக் கொண்டு இருப்பார். அதனாலேயே சாமிநாத ஆசாரி அவளுடைய விதி முடிந்துவிட்டது என்று தாயின் மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

தன் தாய் ஆதரவற்ற நிலையில் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டது, அவளைப் போலவே கரைநாயரால் வேறு சிலரும் சீரழிக்கப்பட்டதை அறிய நேர்ந்தது போன்றவற்றிற்காக தண்டிக்கும்  விதமாகவே கரையிநாயர் சாமிநாத ஆசாரியால் கழுத்தறுத்து கொலை செய்யப்படுகிறார். அவன் உண்மையில் அவருடைய தலையை அவனுடைய தாய்க்கு குழிமாடத்தில் படையல் விருந்தாக அளிக்கவே விரும்பினான். அது இயலாமல் போனதால் தலையை ஆற்றில் வீசுகிறான். சாமிநாத ஆசாரி கரைநாயரின் தலையை வெட்டும்பொழுது நிச்சயமாக வாய்நிறைய வெற்றிலையை போட்டுக்கொண்டுதான் போயிருப்பான். அந்த வெற்றிலைதான் அவனுக்கு கந்தர்வ வல்லமை தந்து ஒரே வீச்சில் தலையை எடுக்க வைத்தது. அந்த வெற்றிலையின் போதை இறங்கியவுடன் கந்தர்வத் தன்மை நீங்கி அந்தத் தலையை அவனால் சுமக்க முடியாமல் ஆகிவிட்டது.

அன்றைய நீதி நிர்வாகத்தில் இருந்த அனைவருக்குமே இந்த உண்மை தெரிந்திருந்த போதும் ஜாதிப்பற்றின் காரணமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து சாமிநாத ஆசாரியை தூக்கிலிட்டுவிடுகிறார்கள். அதே ஜாதிப் பற்று அவனுடைய கருணை மனுவை நிராகரிக்க வைக்கிறது. இந்த மோசமான நீதி நிர்வாகத்தை குறித்த விமர்சனமாகவே ஆடு ஜெயிலுக்குள் அவன் அறைக்குள் வருவதை சாப்பாடு உள்ளே வரலாம் தப்பில்லை என்கிறான்.

அன்றைய சமூக அமைப்பின் படி பார்த்தால், இது போல இன்னும் எத்தனையோ பேருடைய வாழ்க்கையை கரை நாயர் சீரழித்திருக்கக்கூடும். அவை அனைத்தையும் அறிந்து அதற்கான தண்டனையாகவே அவன் ஒருவகையில் தன்னை வளர்த்தவராகவே இருந்தபோதிலும் பலரின் வாழ்வை சீரழித்த கரைநாயரின் தலையை எடுக்கிறான். அவர் கொல்லப்பட வேண்டியவர் அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் சொல்கிறான். ஒருவேளை இது அவனது தாய் அவனுக்குக்கிட்ட அற ஆணையாகக் கூட இருக்கலாம். அதனாலேயே  மரணத்தை எதிர்நோக்கி இருந்த போதும் சாமிநாத ஆச்சாரி தன்னுடைய அறக் கடமை முடிந்து விட்ட நிறைவில்  இறப்பை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராகிறான்.

ஆடு போல உருமாற்றம் கொண்ட மகாபாரத கந்தர்வன் ஸ்தூலகர்ணனை நினைவூட்டிய நல்ல கதை. முதல் வாசிப்பில் எனக்கு அம்மிணி சாமிநாதனின் தாயெனப்பட்டது. சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுவில் சிங்கை சுபஸ்ரீ, அம்மிணி சாமிநாதனின் மனைவி என தந்த குறிப்பை கண்டு, மறுவாசிப்பு செய்கையில், கதை மேலும் விரிந்து, சைலெந்திரியின் பொருட்டு கந்தர்வனால் நிகழ்த்தப்பட்ட  கீசகவதம் நினைவுக்கு வந்தது. அம்மிணியை சாமிநாதனின் தாய் எனக் கொண்டாலும் அல்லது மனைவி எனக் கொண்டாலும் அவன் செய்தது அறத்தின் பொருட்டான கொலையே.

எங்கள் ஊரிலே ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நோஞ்சானான ஒருவன், தன்னுடைய மனைவியிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக, அவர் காலைக்கடன் கழிக்க வயல்வெளிக்கு சென்ற பொழுது அவருக்குப் பின்னாலிருந்து கடப்பாரையால் மண்டையை உடைத்துக் கொன்றான். அறத்தின் தேவனான எமன்

எவனைக் கொல்ல எவன் மீது ஏறி வருவான் என்று எவருக்கும் தெரியாது. 15 ஆண்டுகளாக அந்த சப் இன்ஸ்பெக்டரின் மண்டையை உடைத்தவன் இன்றுவரை பிடிபடவில்லை என்பதும்கூட அறத்தின் விளையாட்டே, மானுடனுக்கு மறைக்கப்பட்ட நாடகமே.

தன்னுடைய கடைசி ஆசையாக ஒரு ஆட்டை வாங்கி வரச்செய்து தனக்கு வந்த உணவையெல்லாம் அதற்குக் கொடுத்து, வெற்றிலையை அதன் காதில் வைத்து ஒரு சடங்காக தன் பெயரையே அதற்குச் சூட்டி, அந்த வெற்றிலையை அதற்கு உண்ணவும் கொடுத்து தன் கண்ணெதிரிலேயே அது கொல்லப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். அதன் தலையை அறுத்து அதன் முகம் அதன் கண்கள் தன்னை பார்க்குமாறும் வைக்கச்சொல்கிறான். ஒருவகையில் அந்த ஆடு அவனேதான். அந்த ஆடு கைதிகள் சிறை காவலர்கள் என அனைவருக்கும் விருந்தாவது போல அவன் அன்றைய ஜாதியால் சீரழிந்த ஒட்டுமொத்த நீதி நிர்வாக அமைப்பினால் உண்ணப்படுகிறான். தன் மரணத்தின் மூலம் அந்த அறம்கெட்ட சமூகத்திற்கு தன்னையே துட்டிச் சோராக்கி சாவு விருந்திடுகிறான்.

பல தளங்களிலான குறியீட்டு சொற்றொடர்களை உள்ளடக்கிய, விடுவிக்கப்பட வேண்டிய முடிச்சுக்களை உள்ளடக்கிய, துட்டி விருந்தாக வந்தபோதும் சுவையான பெருவிருந்தே இது. எப்படிப் பார்த்தாலும் சீரழிந்து கிடந்த அன்றைய சமூகத்திற்கு ஜாதி அமைப்புக்கு அளிக்கப்பட்ட சாவுச் சாப்பாடு ஆயிற்றே.

கரை நாயர்கள் அவன் உயிரை விருந்தாக உண்டனர். சிறைக்கு வந்த ஆட்டுக்கு களியும் இலையும் விருந்து. சிறைவாசிகள் மற்றும் அதிகாரிகள் அவனாகிவந்த ஆட்டை விருந்தாக உண்டனர். ஆனால் அவனுக்கோ வெற்றிலை மட்டுமே முழு விருந்து. வாசகர்களாகிய எங்களுக்கு விருந்து கதையே ஒரு நல்விருந்து.

மிக்க நன்றி ஜெயமோகன்

 

அன்புள்ள

ஆனந்த் சுவாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 11:34

தீற்றல், படையல் -கடிதங்கள்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொஞ்சம் வயதாகி நனவிடை தோய்தல் ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய மர்மம் மனதிலே வரும். நாம் அடைந்த அந்த அனுபவங்கள் எல்லாம் எங்கே போகின்றன? அவை நமக்கு எவ்வளவு பெரியவை. எவ்வளவு அழுகை, கண்ணீர், எவ்வளவு கோபதாபங்கள். அதெல்லாம் எங்கே? அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் மிகச்சாதாரணமாக இருக்கின்றன. ஆனால் அவை நமக்கு நடக்கும்போது நமக்கே உரியவையாக இருந்தன. இன்னொன்று அதைப்போல இல்லை என்று தோன்றியது.

அந்தந்த காலகட்டத்தில் நாம் அடைந்த உணர்ச்சிகளை எண்ணிப்பார்க்கையில்தான் நாம் எவ்வ்ளவு சின்னவர்கள் என்று தெரிகிறது. வெறுமொரு தீற்றல். ஒரு காலத்தீற்றல். அவ்வளவுதான். அது நாம் இல்லாவிட்டாலும் இருக்கும் என்று நினைத்துக்கொள்ளலாம்

கதையில் வருவதுபோல 19 வயதில் நான் அழுதியிருக்கிறேன். 64 வயதில் அதை நினைத்துச் சிரிக்கிறேன். இரண்டும் ஒன்றுதான்.

என்.ஆர்.ராமகிருஷ்ணன்

 

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

என் தாய் தந்தையர் ஒருவகையில் காதலும் கலந்து பெற்றோர் ஒப்புதலோடு உற்றாரும் போற்ற திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரே தெருவில் அருகருகே அமைந்த வீடு. எனது தாயார் அந்தக்கால சரோஜாதேவி. என் தாயாரின் கண்களும் பெரிதாக மிக அழகானவை. அவருடைய இளவயது போட்டோவில் மை தீட்டி(தீற்றி!) பார்ப்பதற்கு சரோஜாதேவிக்கு மேல் ஒருபடி அழகாகவே இருப்பார். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு என் தாய் தந்தையர் தான் நினைவுக்கு வந்தார்கள். நான் குழந்தையாக இருந்த பொழுது என் தாயார் தன் கண்களுக்கு மை தீட்டி நான் பார்த்ததே இல்லை அல்லது அப்படி ஒரு நினைவு எனக்கில்லை.அப்பாவை கை பிடித்த பிறகு அவசியமில்லை என விட்டு விட்டாரோ என்னவோ. ஆனால் என் தாயார் திருமணத்திற்கு முன்பாக அழகாக மை தீற்றி எடுத்துக் கொண்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் எங்கள் வீட்டில் இப்பொழுதும் இருக்கக்கூடும்.

எனது மாமாக்கள் என்னிடம் பலமுறை உங்கம்மா அந்தக்கால சரோஜாதேவியாக்கும் என்று பலமுறை கேலியாக சொல்வார்கள். அப்பாவை ஏதாவது நோண்டிக் கேட்டால் ஒரு மென் மின் புன்னகையோடு அந்தக் கணத்தை கடத்தி விடுவார்.

ன் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் மற்றும் பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை தேங்கி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே போன்ற பாடல்கள் ரேடியோவில் ஒலிக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒரு அற்புத திரைமறைவு நாடகம் எங்கள் இல்லத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதை எண்ணி சிரிக்கிறேன். என் பெற்றோரின் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் அந்த தீற்றல் இன்றைக்கும் ஒரு அழியாச் சித்திரமாகத்தானே பிரபஞ்ச கானம் இசைத்துக் கொண்டிருக்கும்.

பின்னாடி திரும்பிப் பார்த்தால் எத்தனையோ மின்னலடிக்கும் தீற்றல் கணங்கள் யார் வாழ்வில்தான் இல்லை. என் வீட்டுத் தோட்டத்தில் எத்தனையோ ரோஜாக்கள் எதைப் பரிப்பது என்பதிலே தான் எனது போராட்டம் என  கவிதை எழுதி, மைவிழி குவளைக் கண்களில் மையல் தேடி, காதல் பித்தெடுத்து அலைந்த இளமைப் பின்புலம் எவருக்கும் இருக்கும்.

மகளிர் தினத்தில் தீற்றல் என வந்த தீற்றல் கதை. மௌனியின் கதைகளைப் படித்து பித்துப் பிடித்த இளவயது நாட்கள் நினைவுக்கு வந்தன. நெஞ்சத்து ஆழத்து மின்னல் நினைவுகளை மயிலிறகாய் மீட்டிய கதை தந்தமைக்கு நன்றிகள் ஜெ.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

படையல் [சிறுகதை]

ஜெ

பிடரியில் பலமான அடி ஒன்றைத் தந்து, சீக்கிரமே தலையைத் தைவரல் செய்யவும் கூடிய உங்கள் சிறுகதைகளில் ஒன்று படையல். இந்த உணவு செரிக்குமா என்ற கேள்வி, எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கக்கூடிய கேள்வி, இதை இது உண்டு செரித்திடுமா?

இது எதையும் உண்டு செரிக்கும், ஏனெனில் இதன் உடலின் ஒரு அங்கம் தான் இது, இரண்டும் வேறல்ல என்று சொல்லி முடியும் கதை. தேடல்மிகுந்த, ஒவ்வருவருக்கும் ஒரு விடையையும் பின்னர் வினாக்களையும் தரக்கூடிய கதைகளுக்கு களம் அமைவது அரிதுதான். இரு நிகர்விசைகொண்ட ஆறுகள் கலப்பது போலத்தான் இந்தக் கதையின்  நிகழ்தளமும், அதன் மெய்மையும்  ஆக்ரோஷமாக கலக்கின்றன. இந்த அறிதல்களை எனக்கு எளிதாக்கித் தந்த வெண்முரசை இன்னும் இறுகப் பற்றிக்கொள்கிறேன்.  அது இன்னும் பல இரும்புக் கடலைகளை என்னை உண்ணச் செய்யக்கூடும்.

அன்பும் நன்றியும்,
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி

 

அன்புள்ள ஜெ

 

படையல் கதையைக் கடந்துசெல்வது கடினம். அது என்னென்னவோ செய்கிறது. அதிலுள்ள எல்லாமே உச்சமாக உள்ளன. கொடுமைகளும் உச்சம். அந்தப் பக்கிரிகளின் களியாட்டும் உச்சம். ஒரு அபத்தநாடகம் போல இருக்கிறது அது. ஒரு அற்புதமான நாடகமாக நடித்துவிடமுடியும் இதை. இந்தக்கதையை எவராவது நாடகவடிவமாக ஆக்கவேண்டும்

இன்றைய காலகட்டத்தின் கதை. இன்று அவநம்பிக்கைகளும் காழ்ப்புகளும் கசப்புகளும் பெருகிக்கிடக்கும் காலகட்டத்தில் நமக்கு இருந்த ஆழமான குளிர்ந்த நீர்ச்சுனையை சுட்டிக்காட்டும் கதை. அந்த சுனை இன்னும் வற்றாமலிருக்கிறது என்று நினைக்க ஆசைப்படுகிறேன்

பாலா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 11:33

குமிழிகள், கூர்- கடிதங்கள்

 

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூர் என்னும் கதை சட்டென்று இதுவரை வந்த கதைகளின் சுவையையே மாற்றிவிட்டது. முற்றிலும் வேறொருவகையான கதை. அந்தக்கதையின் சித்திரம் மிக எளிதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அதன் வீச்சு கூர்ந்து வாசித்தால்தான் தெரியவரும். அந்தப்பையன்கள் குழந்தைக்குற்றவாளிகள். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக சமூகம், அரசு, அமைப்பு எல்லாவற்றின்மேலும் கடுமையான கசப்பு இருக்கிறது.

அதேசமயம் அச்சமே இல்லை. போலீஸ் ஸ்டேஷனில்கூட அஞ்சவே இல்லை. எதைப்பற்றியும் அவர்கள் அஞ்சுவதற்கு ஏதுமில்லை. இப்போதிருப்பதைவிட மோசமாக ஒரு வாழ்க்கை அவர்களுக்கு அமையமுடியாது. அவர்களுக்கு வலி பயமில்லை. அவமானம் இல்லை. அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சமே இல்லை. பெரிய பார்ட்டி என்றால் கொலைக்கு இரண்டாயிரம் ரூபாய் கேட்டிருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத்தான் அவர்களின் மனமும் உலகப்புரிதலும் உள்ளது.

அவர்களின் அந்த கசப்பு முழுக்க அப்பா என்ற அடையாளம் மீது உள்ளது. உலகிலுள்ள அத்தனை ஆண்களும் தன் அம்மாவை புணர்ந்தவர்கள், காசுதராமல் சாகவிட்டவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அந்தப்பையன் கொல்வதற்கான தூண்டுதல் எங்கிருந்து வரும் என்று நானும் வாசித்துக்கொண்டே இருந்தேன். நான் நினைத்தேன், அந்தப்பையனுக்கு ஞானப்பனுடனான ஏதாவது ஒரு உறவு திருப்புமுனையாக வரும் என்று [ இங்கே கதைகள் அப்படித்தானே எழுதப்படுகின்றன?]

ஆனால் வந்த திருப்பம் திகைப்பை அளிப்பது. மிகநுட்பமான புள்ளி அது. பேரக்குழந்தையை கொஞ்சுவது, அன்பு கனிவு அதுதான் அவனை கொலைகாரனாக்குகிறது. அது அவனுக்கு மறுக்கப்பட்டது. அவனைத்தவிர அத்தனைபேரும் அனுபவிக்கும் சுகம் அது. அவன் ஏன் கொன்றான் என்று அவனுக்கே தெரியாது. ஆனால் அவனுக்குள் ஓர் ஆத்மா இருந்து தேம்பிக்கொண்டிருக்கிறது. அந்த ஆத்மாவின் கண்ணீர் இருக்கும் கதை இது

ராஜசேகர்

அன்புள்ள ஜெ

கூர். இக்கதையில் வரும் இளைஞர்கள் இயல்பிலேயே கலககாரர்கள். ஓர் சித்தாந்தமாகவோ அக நாடகமாகவோ இல்லை இயல்பிலேயே இவர்கள் Rebels. உலகின் பெரும்பான்மை நகரங்களில் இவர்களை பார்க்கலாம். பொது சமூகத்தின் இயல்பான வாழ்வும் சூழலும் வாய்க்க பெறாதவர்கள்.

என் இருப்பை கொண்டு உன்னை எரிச்சல் அடைய செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும் அடிக்க முடியுமா அடி ஆனால் என் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் வராது. இது தான் இவர்களின் மனநிலை.

இவர்கள் உள்ளூர எதிர்பார்ப்பது தாய்மையை, தங்களுக்காக பிறர் படும் இரக்கத்தை. அந்த எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவடையாது என்பதன் விளைவாக வெறுப்பு நிறைந்தவர்கள். அதைதான் எதிர்பாகிறோமா என்றுகூட அவர்களுக்கு தெரியாது. மரண தீர்ப்புக்கு பின் உடைக்கப்படும் நிப்பின் கூரும் இவர்களுக்கு தாய்மையாக இரக்கமாகவே பொருள்படும்.

உடல் முழுக்க, ஒழுங்கின் மீதும் வாழ்வின் மீதும் கசப்பு நிறைந்தவர்கள். மறுக்கபட்ட தாய் அன்பால், தனக்கென கவலைப்பட இங்கு யாருமில்லை என்பதால் கட்டட்றவர்களாக அச்சமற்றவர்களாக ஆக விளைபவர்கள். துப்பாக்கி குண்டு தன்னை சுட முடியாது என்ற அளவுக்கு தரக புத்தி அற்று உண்சியால் மட்டும் ஆனவர்கள். ஒருவனில் தர்க அறிவு கல்வியால் வாழ்க்கை அனுபவத்தால் வருவது, உணர்ச்சிகள் குழந்தையில் போடப்பட்ட விதைகள்.

ஆரீஸ் மென்மைகளை எல்லாம் குத்தி பொக்க வேண்டும் என்று நினைப்பவன். மாடுகளை போல் மென்மையானது அல்ல பன்றி, மூர்கத்தை தன் தற்காப்பாக கொண்டது. ஆரிஸும் அதும் ஒன்றே.

தாய் மூர்க்கமான குழந்தையிடம் கனிவாக இருக்கிறாள். கனிந்தவனிடம் மூர்க்கமாக இருக்கிறாள். அவள் எதையோ சமன் செய்ய முயல்கிறாள். குழந்தைகளுக்கான இலக்காக முன்மாதிரியாக தந்தை இருக்குறார். மனதில் அந்த சமனின்மை இலக்கின்மை கொண்டவர்களின் கதை இது.

ஞானப்பனின் முதல்  மூன்று தொலைபேசி உரையாடல்களிலும் ஆரீஸ் அவரில் தன்னையே காண்கிறான். ஞானப்பன் தன்னை போன்ற ஒருவர் என்கிற, தனக்கு முன்னோடி என்கிற உணர்வு அவனுக்கு வருகிறதே ஒழிய கோபமில்லை. நாலாவது நாள் ஃபோனில் அவர் யாருடனோ அன்பாக பேசுகிறார், கொஞ்சுகிறார். தனக்கு மறுக்கப்பட்ட ஒன்று அவரிடம் தான் எதிர்பார்க்கும் ஒன்று யாருக்கோ போகிறது. அப்பொழுது மூழ்கிறது வெறி.

இக்கதை கிருஸ்துவ பின்னணியில் இருப்பதற்கு முக்கியமான அர்தம் உண்டு. ஒன்று கதைசூழலின் சமூக பொருளியல் பின்னணி. இரண்டு, பிற மதங்களில் சில கிளைகளாக மட்டும் அன்பின் வழி இருந்தாலும், கிருஸ்துவம் அன்பையும் இரக்கத்தையும் அடிப்படை சாராமாக கொண்டது. மதர் தெரசாவும் தாஸ்தேவஸ்கியும் அங்கிருந்து வந்தவர்கள்.

உண்மையில் ‘நான்’ என்னும் கதைசொல்லி கேஸ்சை வலுவாக ஆக்கும் இடைவெளிக்காக, வயது முதிர்ந்தவனை குற்றவாளியாக்க இவ்வளவு விசாரிக்கவில்லை. ஆரீஸை காக்கவே அவர் அதை செய்கிறார். ஒருவகையில் எபனேசரை குற்றவாளியாக்கி அவர் அளிப்பதும் எபனேசருக்கு மீட்பையே. எபனேசரும் மூன்னால் ஆரீசாகவே இருந்திருக்க முடியும்.

தனிமையில் தன் இருக்கதை தளர்திக்கொண்டு ஆரீஸுடன் பேசும், அப்பான்னு கூட வச்சுகோ என்று சொல்லும் கதைசொல்லி தன்னுடைய அன்பை பொதுவில் அப்படி வெளிகாட்டவதில்லை. அது அவருடைய தற்காப்பு.

ஆரீஸ் எத்தனை அழகான பெயர். அதற்கு எத்தனை அழகான பொருள்.

கூர். கானும் அனைத்திலும் தாய் யை தேடுபவனின் கதை. கூடவே மறுபுறமிருந்து அவனிடம் உள்ள குழந்தையை கண்டவர்களின் கதை.

நன்றி

பிரதீப் கென்னடி

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் சார்,

குமிழிகள் கதை பல வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதிய கூந்தல் கதையை நினைவுறுத்தியது. மிஸ்ஸிஸ் நீலாவுக்கு இருந்த அளவுக்கு மன அழுத்தம் லிலாவுக்கு இருப்பதாக தெரியவில்லை, அது பெண்களின் குறிப்பாக படித்த பெண்களின் வாழ்க்கையில் தனெக்கென முடிவெடுக்கும் சுதந்திரம் கூடுதலாக வந்துள்ளதின் நல்ல அறிகுறியாகவே நான் காண்கிறேன்.

சாம் லிலாவின் இந்த தேர்வுக்கு  ஒரு ஒப்பீனியன் வைத்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது.கணவனின் சிகையலங்காரத்தில் மனைவிக்கு ஒரு கருத்து இருப்பதை போல. ஆனால் முடிவு முற்றிலுமாக லீலாவுடையதே. இன்று அமெரிக்காவில் கரு கலைப்பு சட்டத்திற்காக போராடும் பெண்களின் வாதம் கூட, எனது கருப்பை, என் உடல் மீது ஆடவருக்கோ, சமூகத்திற்கோ, மதத்திற்கோ வேலி போட அதிகாரம் இல்லையென்பதே. ஆகவே யாருக்கு உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே கருதுகிறேன்.

ஆர்வமூட்டும் ஒரு சிந்தனை, லிலா இந்த மாற்றங்கள் மூலம் மேலும் மேலும் தனது வேர்களினின்றும் விலகிச் செல்கிறாள். அதுவே வளர்ச்சிக்கு வழி என்றும் நினைக்கிறாள். அது வெறும் தாழ்வுணர்ச்சியா அல்லது பல்லின பண்பாட்டில் உலகியல் வெற்றி பெற அதுவே இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் வழியா என்று சிந்திக்க வைக்கிறது. இந்த கதை.

அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதை ஒரு விவாதத்தை உருவாக்கியது. அதில் ஒரு எதிர்காலப்பிரச்சினை உள்ளது என்பது ஒரு கோணம். ஆனால் அதைவிட முக்கியமானது அதில் என்றைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஒரு சிக்கல் உள்ளது என்பது. ஆணுக்கு பெண்ணின் உடல்மேல் என்ன உரிமை என்ற கேள்வி அந்தக்கதையில் உள்ளது. பெண்ணின் வாழ்க்கைமேல் உரிமை இல்லை, பெண்ணின் குழந்தைமேல் உரிமை இல்லை என்று வந்து வந்து பெண்ணின் உடல்மேலும் உரிமை இல்லை என்று நாகரீகம் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் ஆணின் இருத்தலே பெண்ணின் உடல்வழியாகத்தான். அவனுடைய காமம் அங்கேதான். அது எந்த எல்லைவரை? பெண்ணுக்கு ஆணிடமிருந்து சுதந்திரம் அளவற்றதா, எல்லையுள்ளதா? அதுதான் அந்தக்கதையிலுள்ள கேள்வி. ஆதமின் விலா எலும்பே பெண் என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல. பெண்ணில்லாமல் ஆண் இல்லை. பெண் அதை மறுக்கமுடியாட் ஆணிம

கெவின்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 11:33

ஏழாம் கடல், விருந்து- கடிதங்கள்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விருந்து கதையை ஒரு ஃபேபிள் என்று சொல்லலாம். ஃபேபிள் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையின் ஒரு பாஸிபிலிட்டி மட்டும்தான். நாம் வாழும் வாழ்க்கையை வேறுவேறு வகைகளில் இப்படிச் சொல்லிச் சொல்லிச் செல்கிறோம். இது நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது. நாம் நிறைய வாழ்வதுபோல தோன்றுகிறது. இந்த வாழ்க்கையில் நமக்கு எஞ்சியிருப்பதை எல்லாம் அங்கே வாழ்ந்துவிடுகிறோம். இங்கே உள்ள கேள்விகளுக்கு வேறுவகையிலே பொருள் அளித்துக்கொள்கிறோம். நட் ஹாம்சன் சொன்னதுபோல வாழ்க்கை என்றால் முடிச்சுக்கள் போடுவது.ஃபேபிள் என்றால் நேர் எதிர்த்திசையில் போய் அவற்றை அவிழ்ப்பது

சாவை தன் பலி வழியாக கடந்துசெல்கிறான். நீ என்னை கொல்லவில்லை, நானே என்னை உங்களுக்கு பலியாக தருகிறேன் என்று சொல்கிறான்

எம்.சரவணன்

அன்புள்ள ஜெ

விருந்து. சாமிநாத ஆசாரி ஆட்டு கிடாய் விருந்தின் மூலம் சொல்வது என்ன, இது தான் வாழ்வு இதுதான் மரணம் என்கிறானா.

தாத்தா வெற்று வார்த்தைகளால் வேதாந்தத்தை சொல்ல முயல்கிறார். ஆனால் சாமிநாத ஆசாரி அதை அந்த விருந்தின் மூலம் நிகழ்வாக நிகழ்த்தி காட்டுகிறான். தாத்தா உடைந்துவிடுவார் என்பதற்காக அதை செய்து காட்டுகிறானா. அல்லது தனக்கு தானே சொல்லிகொள்கிறானா.

வெற்றிலை பாக்கு நிறைவின் குறியீடு. காண்பதிலெல்லாம் விருந்துண்டு தாத்தாவும் சாமிநாத ஆசாரியும் நிறைவுக்காக கதைமுழுக்க வெற்றிலை மட்டும் போட்டுக் கொள்கிறார்கள்.

மரணம் முன் தன்னை தானே விருந்தாக படைத்து அதற்கும் தானே வெற்றிலை போட்டுக் கொள்கிறான் சாமிநாத ஆசாரி.

அவன் அந்த ஆட்டுக்கு வைத்த பெயர் தன்னுடையதேதான். அவன் விருந்தாக படைத்தது தன்னைத்தான். அவன் தச்சன்.

நன்றி

பிரதீப் கென்னடி

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஏழாம்கடல் கடலோர மீனவர்களின் ஒரு கற்பனை. அது என்ன என்றால் கடல்வழியாகச் சென்றடைய முடியாத ஒரு கடல். அந்தக்கடலில்தான் தெய்வங்கள் இருக்கின்றன. கடலை தாங்கியிருப்பது ஏழாம் கடல்தான். இந்து கிறிஸ்தவ மித்துக்கள் இரண்டிலுமே அந்த கற்பனை இருக்கிறது. ஏழாம் கடல் பற்றி செம்மீன் நாவலில் வருகிறது. ஏழாம் கடலினக்கரே என்று ஒரு மலையாள சினிமாகூட உண்டு

அந்த ஏழாம்கடலை வைத்து புரிந்துகொள்ளவேண்டியது. ஏழாம் கடலில்தான் நஞ்சும் முத்தும் உள்ளது. நமக்கு அதை அறியவோ கையாளவோ எந்த அறிவும் இல்லை. கடவுளிடம் அளித்துவிடவேண்டியதுதான்

ஆர். ராஜ்குமார்

“எனக்குத் தெரியும்…அருமுத்து…அப்படி ஒரு முத்து ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு…நான் சிப்பி கொண்டுபோயி குடுக்குறது அதனாலேதான்…பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுப்படும்…கையிலே எடுத்துப் பாப்பாரு…முத்துன்னு தெரிஞ்சிரும்…“

எத்தனை களங்கமற்ற, விகல்பமில்லாத மனசு வியாகப்பனுக்கு? நான்காம் வகுப்புவரைதான் படித்தவர். அவரோ மெட்ரிகுலேஷன் முடித்தவர். கல்வியா மனி தனை உருவாக்குகிறது? அதுவா ஒருவனை செப்பனிடுகிறது? அதுவா இந்த உலகத்தைக் காட்டுகிறது?  அது களங்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இல்லையென்றால் வியாகப்பனே அறியாத, ஏழாம் கடலின் ஆழமான நட்புக்கொண்ட அவருக்கு ஏன் அந்த உண்மை தெரியாமல் போனது?  அது ஏன் மறைக்கப்பட்டது?

எப்படிப்பட்ட மனிதனையும், எந்த நேர்மையாளனையும் புரட்டிப்போட்டு விடும் அந்தச் சூழல். இருந்து பார்த்தவருக்குத்தான் தெரியும். மனிதன் நேர்மை, நாணயம் என்று வாய் கிழியப் பேசித் திரிவதில் அர்த்தமில்லை. அப்படியான சூழலில் இம்மியும் பிசகாமல் இருந்து காட்டணும்! பிள்ளைவாள் பொதுப்பணித்துறைக்கு போய்ச் சேர்ந்ததும் இதற்கு ஒரு காரணமாய் இருக்குமோ?  இல்லையெனில் அந்த முத்து ஏன் மறைக்கப்பட வேண்டும்? பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியும்…..! கறி திங்கிறப்ப வாயிலே ஏற்கனவே தட்டுப்பட்டு விட்ட அந்த முத்து…அது வியாகப்பன் அறியாது பிள்ளைவாளுக்கு அளித்த  முத்து. அவருக்குச் சொல்லப்படாத அருமுத்து. ஒரு நாள் பிள்ளைவாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த வியாகப்பனின் ஆத்மார்த்த விருப்ப அடையாள முத்து. அவரறியாமல் பிள்ளேவாளிடம் வந்து சேர்ந்த முத்து.

பாவம் மாதாவுக்கும் தெரியாது….சிக்கினது ஒரு துளி வெசமாக்கும்….மேலே சொர்க்கம்னு இருக்கும்லா? அங்க இருந்து பிள்ளைவாள் நினைப்பாரு… வியாகப்பன் நல்லவனாக்கும்னு…அவரு என்னைய வெறுக்க மாட்டாரு…பிள்ளே அப்படி வெறுத்துப்போட்டா…பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?

என்ன ஒரு வரிகள்? இதற்கு மேல் ஒரு மனிதனின் அன்பை, நட்பின் ஆழத்தை, உறவுப் பாலத்தை எப்படி நினைக்க வைத்து உணரச் செய்ய முடியும்? மாதாவுக்கே தெரியாது அது என்று நினைக்கும் மனது வியாகப்பனுடையது. அவரின் பக்தி, அந்த நம்பிக்கை, அதில் பொதிந்திருக்கும் உண்மை, நேர்மை, சத்தியம் அத்தனையும் அந்த ஒரு வரியில் வெளிப்பட்டு விடுகிறதே…! அந்த இக்கட்டிலும் இறையருளை சந்தேகிக்கத் தயாரில்லை அவர். அது அவருக்கு, அந்த வெள்ளை மனதுக்குத் தெரியாத ஒன்று.

வியாகப்பன் சத்தியவந்தன்…அவரது நேர்மையை, அன்பை, அப்பாவின் மீது உள்ள பாசத்தை சந்தேகிப்பதற்கில்லை…-பர்னபாஸின் அந்த மனசு. ஒருவருக்கு மிஞ்சி ஒருவர் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கை…அதன் ஆழம்…..நேர்மை உள்ளம்….

என் அப்பா இப்ப நீங்களாக்கும்..என் அப்பா வேற…நீங்க வேற இல்லை…என்னை அனுக்கிரஉறிக்கணும்….-பர்னபாஸின் இந்த வரிகள் அந்த இருவரின் ஆழமான நட்பை,  அவர்கள் இளம் பிராயம் முதல் கொண்டிருந்த பாசமிக்க உறவை எத்தனை உயரமாய்த் தூக்கி நிறுத்துகிறது?

நல்லா இருக்கணும்…நிறைஞ்சு வாழணும்…..-கண்களைக் கலங்கடித்த வரிகள். நிறைஞ்சு வாழணும்….வியாகப்பனின் ஆசி…விண்ணுலகுக்குப் போய்விட்ட பிள்ளைவாளையும் உடன் நிறுத்தி வழங்கப்பட்ட உளமார்ந்த, பரிபூர்ண வாழ்த்துகள்.

ஏழாம் கடலின் ஆழம் இறைவனே அறியாதது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும், மாதாவுக்கும்கூடத் தெரியாது…தெரிஞ்சுக்கிடவே முடியாது…நான் அறிஞ்சு கொண்டு வரலை…விசம்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சாலும், இல்லேன்னாலும் அது நான் கொடுத்த விசம்….நான் கடலு கண்டவனாக்கும் பிள்ளே….

அடுத்த நாளே வியாகப்பன் மறைகிறார்….ஏன்…அது அப்படி நடக்கிறது? சொர்க்கம் போய் பிள்ளேவாளிடம் அந்த சத்தியத்தைச் சொல்லியாக வேண்டும். அந்த அவசரம்தான் வியாகப்பனுக்கு. அவர்களின் அத்தனை வருடப் பாசத்தின், நேசத்தின் அடையாளம் அது. மனசாட்சி வியாகப்பனைக் கொண்டு சென்று விடுகிறது. அந்த நேர்மையான, இறைத்தன்மை வாய்ந்த மனசாட்சி பிள்ளேவாளுக்கு ஏன் வாய்க்கவில்லை? வாய்த்திருந்தால் அந்த முத்து ஏன் மறைக்கப்பட வேண்டும்? அது ஏன் வியாகப்பனுக்குத் தெரிவிக்கப்படாமல் போக வேண்டும்?

ஏழாம் கடலின் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்…. என்று விளையாடிப் பார்த்திருக்கிறார் ஜெ. நெஞ்சை உருக்கிய அற்புதமான படைப்பை இன்று படித்த நிறைவு.  நன்றி

உஷாதீபன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 11:33

கந்தர்வன் யட்சன் – கடிதங்கள்

யட்சன் [சிறுகதை]

அன்புள்ள  ஜெ..

எப்படி  யானை டாக்டர் கதை ஒருதொன்மமாக நிலை கொண்டு விட்டதோ அது போல யட்சனும் நிலை கொள்ளும் என நினைக்கிறேன்

அப்படி ஒரு சாதனைக்கதையை  கந்தர்வன் என்ற பேரொளி மிக்க கதைக்கு அருகில் வைத்து , அதை மீறி இது ஜொலிக்குமா என ஒரு சின்ன விளையாட்டு ஆடியிருக்கிறீர்கள்.  அற்ப மனிதர்களின் மத்தியில் உயர்ந்து நிற்பவனை கந்தர்வன் காட்டுகிறது

அற்ப மனிதர்களில் ஒருவனாக இருந்து  ஒரு ஜென் கணத்தில் தன்னைக் கண்டறியும் ஒருவனை யட்சன் காட்டுகிறது. பணம் என்பது திருடப்படுவதோ ,  இரவலாக கடனாக பிச்சையாக ஈட்டப்படுவதல்ல.  பணம் என்பது பணம் செய்யும் விற்பன்னர்களால் உருவாக்கப்படுவது.

தன்னை பிறரைப்போல பணத்தை தந்திரத்தால் ஈட்டுபவன் என கருதிய முருகப்பன் பணத்தை எதிர்காலத்துக்கு சேமித்து வைத்து நிகழ்காலத்தில் தரித்திரனாக வாழ்கிறான் அவனது சேமிப்பு அனைத்தும் பிடுங்கப்பட்டு ,  நடுத்தெருவில் நிற்கும்போது தான் ஒரு மன்னன் , பணம் தன் ஆணைக்கு கீழ்ப்படியும் அடிமை என்பதை உணர்கிறான்.அதுதான் கதையின் உச்சம்

அதன்பின் அவன் பணத்தை சுவரில் புதைத்து வைக்கும் தரித்திரன் அல்லன்.   ஒவ்வொரு கணமும் தேவகன்னியருடன் வாழும் இந்திரன்

அஞ்சு பத்துக்கு பிச்சை எடுக்கும் சாமான்யன் பார்வையில் அவன்,ஒரு நோயாளி ,  கீழ்மையில் உழன்று இறந்தவன் என தோன்றக்கூடும் . ஆனால் அவன் சாகும்வரை இன்பத்தில் திளைத்து செத்தபின்னும் பெருஞ்செல்வத்தை விட்டுச் சென்ற குபேரன்

அவனை தோல்வியுற்றவனாக பார்க்கும் வாய்ப்பு காமன்மேன்களுக்கு இருந்தாலும்கூட அவர்கள் அவனை அப்படி பார்க்கவில்லை என்பது சுவாரஸ்யம்.

பெண்களால் கண்மூடித்தனமாக ஆ ராதிக்கப்பட்டவன் அடைந்த உயரத்தை பெண்களை கண்மூடாத்தனமாக ஆராதித்தவனும் அடைந்தான் என்பது இயற்கைசக்தி தன்னை சமன் செய்து கொள்வதை காட்டுகிறது.

truth is  pathless land என ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்னதுபோல  ஞானத்தின் வாசல்களை எண்ணவே முடியாதுபோல

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள ஜெ

கந்தர்வன், யட்சன் இரு கதைகளுமே ஒருவகையான பித்துநிலைக்குக் கொண்டுசென்றன. நான் அந்தக்கதைகளைப் பற்றி எவரிடமாவது பேசியாகவேனும் என்ற நிலையை அடைந்தேன். அதைப்பற்றி சில நண்பர்களிடம் பேசினேன். ஆச்சரியமென்னவென்றால் அவர்கள் என்ன அரசியலை பேசிக்கொண்டிருந்தார்களோ அதையே இதிலும் கண்டுபிடித்தார்கள். அதையே பேசிப்பேசி நுரைதள்ளினார்கள். இயற்கை மனிதனை எவ்வளவு பெரிய மடையனாக படைத்திருக்கிறது என்ற பிரமிப்பை அடைந்தேன். ஒரு சின்ன விஷயம்கூட போய்ச்சேர முடியாதபடி மனசு எப்படி மூடிவிடுகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஒருபக்கம் இந்தக்கதையை எவர் புரிந்துகொள்ளமுடியும் என்ற அங்கலாய்ப்பு வந்தது. மறுபக்கம் கதைகளின்மேல் வாசிப்புகள் அற்புதமாக வந்துகொண்டே இருப்பதையும் காண்கிறேன். இந்த வட்டத்துக்கு வெளியே அப்படி எங்காவது ஏதாவது பேசப்படுகிறதா என்றால் சூனியம்தான். பேசுபவர்களும் கேட்பவர்களும் சேர்ந்து ஒரு சிறுவட்டமாக ஆகிவிட்டிருக்கிறார்கள் இங்கே.

யட்சனின் பாதை அழுக்கின் பாதை. கந்தர்வனின் பாதை தூய்மையின் பாதை. இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க நடுவே உடனமைந்த நங்கை எந்த பாவத்துக்கும் புண்ணியத்துக்கும் சம்பந்தமில்லாமல் அவளுடைய உலகத்திலே அமர்ந்திருக்கிறாள்.  அவளுடையது தியாகத்தின் பாதை.

ஆனால் ஆச்சரியமான விஷயம் ஒன்று தோன்றியது. தூய்மை அழுத்து ரெண்டுபாதையுமே அப்சர்டிட்டியில்தான் நிலைகொள்கின்றன.

அருண்குமார்

கந்தர்வன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

யட்சன், கந்தர்வன் இரண்டு கதைகளுமே ஒருவகையான பூரணத்தில் நிலைகொள்கின்றன. மனதில் இவை கதையாக இல்லாமல் ஒருவகையான நாட்டுப்புறநம்பிக்கைகளாகவே தோன்றின. நான் திருக்கணங்குடி அல்லது பக்கங்களில் இதேபோன்ற கதை ஏதாவது உண்டா, நீங்கள் அதை விரிவாக்கியிருக்கிறீர்களா என்று விசாரித்துப்பார்த்தேன். இந்தக்கதைக்குச் சமானமான சிலகதைகள் இருந்தன. வரிவிதிப்பதற்கு எதிரகா தற்கொலைசெய்துகொள்வது சோழர்காலம் முதலே இருந்து வருகிறது. ஊருக்காகச் செத்தவர்களும் உடன்கட்டை ஏறியவர்களும் தெய்வமாவதும் இருக்கிறது. பதினேழாம்நூற்றாண்டுமுதல்தான் நாட்டுப்புறத்தெய்வங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

ஆனால் இந்தக்கதை அந்த நாட்டுப்புறக்கதையுலகிலிருந்து பிரிந்து ஒருவகையான ஸ்பிரிச்சுவல் அப்சர்டிடி நோக்கிச் செல்கிறது. எல்லாமே அர்த்தமில்லாமலாகின்றன. ஊருக்காகச் செத்தவன் ஒரு வெறும் நடுகல்தான். நம்முடைய கட்சிக்காகச் செத்தவர்களெல்லாம் நடுகற்களகா நிற்கிறார்கள். யார் அவர்களைப் பொருட்படுத்துகிறார்கள்? அதில் எந்த வேறுபாடும் இல்லை. தெய்வங்கள் மனிதர்கள் உருவாக்கும் அபத்தங்களுக்குமேல் சிலையாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

எஸ்.சிவக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 11:31

பிரயாகை

பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையின் ஐந்தாவது நாவல். பிரயாகை முக்கோண வடிவிலான நாவல். முதல் கோணம்: மகாபாரதத்தின் மையப் பாத்திரங்களின் பிரச்சனைகள், மன ஒருக்கங்கள் புலப்பட தொடங்கியிருப்பது. இரண்டாவது கோணம்: போர் என்பது கெளரவர்கள் – பாண்டவர்களின் அரசுரிமை பற்றியது மட்டுமல்ல, அது புதிதாக குலங்கள் மேல் எழுந்து அதிகாரத்தை நோக்கி செல்வதன் சமூக-அரசியலின் கூட்டு நிகழ்வு. மூன்றாவது கோணம்: திரெளபதி-இன் வருகை மற்றும் அவளின் சுயம்வரம்.

நாவலின் தொடக்க அத்தியாயங்கள் துருவனைப் பற்றியது. துருவன் எவ்வாறு துருவநட்சத்திரமாக மாறி நிலைபெற்றான் என்பதைக் கூறுவது. வடதிசையில் அசையாது நிலையாக இருக்கும் நட்சத்திரம் துருவ நட்சத்திரம். நிலைபெற்றக் காரணத்தினாலேயே கடலோடிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த நட்சத்திரம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற சீசர் பாத்திரம் தான் நிலையானவன் என்பதைக் குறிப்பதற்காக, வடதிசை துருவ நட்சத்திரத்துடன் தன்னை ஒப்பிடும் காட்சி ஜூலியஸ் சீசர் நாடகத்தில் உள்ளது. மனிதர்களால் அடையமுடியாதத் தன்மையான நிலைபெறுதலை துருவன் அடைந்த அத்தியாங்களே இந்நாவலின் தொடக்கம். உலகில் காலத்தால், இடத்தால் மாறாமல் அது நிலைபெறுகிறதோ அதுவே அறம். அதுவே “பெருநிலை”. நாவல் பிற அத்யாயங்கள் அனைத்திலும் துருவன்-இன் பாத்திரம் மீள மீள வந்து கொண்டே இருக்கிறது.

மகாபாரதத்தில் மிகுகற்பனைக் கதைகள் என சொல்லப்படும் புராணக் கதைகள் இல்லாமல் வாசித்தால், அது அரசர்களுக்குள் நடக்கும் வெறும் உரிமைப் போர் என்ற அளவில் ஒரு யதார்தவாதப் படைப்பாகவே எஞ்சும். புராணக்கதைகளே இதை ஒரு செவ்வியல் படைப்பாக மாற்றுகிறது. புராணக் கதைகளில் இருந்து பெற்றுக் கொண்ட ஒன்றை, மகாபாரதத்தின் பிற கதாபாத்திரங்கள் மீது ஏற்றி வைத்து பார்த்தால் – அவர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம். தருமன் – துருவன் மிகச் சிறந்த உதாரணம். வாழ்நாள் எல்லாம் துருவனாக நிலைபெறத் துடிப்பவன் தர்மன்.

பாரதம் முழுவதும் சமநிலையில் இல்லைமால், எந்நேரமும் எது சரி, எது தவறு என்பதை யோசித்து கொண்டே இருப்பவர் தர்மர். தர்மன்-இன் குழப்பங்கள் அதனால் அவன் எழுப்பும் வினாக்கள் என நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் வேகம் கொள்கிறது. துரோணருக்காக துருபதன்-உடன் கெளரவர்களும் பாண்டவர்களும் போர் புரியும் அந்த உச்ச நேரமே தர்மனின் வினாக்களுக்கு பதிலாகவும், அவனுள் புதிய வினாக்களுக்கான விதையாகவும் அமைகிறது. தர்மனுக்கும் துருவனுக்கும் இடையே உள்ள தொடர்பும், போர்களத்திலேயே தெளிவு பெறுகிறது. ‘மழைப்பாடல்’ நாவலில் பீமனைப் பற்றி கூறும் போது “நிலைபெற்ற பாறை பீமன்” என்றே சொல்லப்படுகிறது. தன்னிலை விளிக்கத்தை களத்தில் நின்று தர்மனுக்கு சொல்லும் போதே மகாபாரதம் முழுவதும், அலைக்கழிப்பில்லாமல் நிலைபெற்ற ஒருவனாக பீமன் இருக்கப் போகிறார் என்றே தோன்றுகிறது.

இந்திரன் மைந்தனான அர்ஜுனன் வாழ்நாள் முழுவதும் பெண்களை வெறுப்பவன் என்பதை அடுத்தடுத்த அத்யாயங்கள் நிறுவுகின்றன. பல பெண்களை தேடிச் சென்றாலும் அவனுள் எஞ்சுவது யாவரும் அறியாத சலிப்பே. திரெளவது சுயம்வர நிகழ்விலும் அது புலப்படும். அவமதிக்கப்பட்ட துருபதன் – நெருப்பில் இருந்து பெற்ற மகள் திரெளபதி. அவள் பேரரசியாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளே துருபதனின் வாழ்க்கை முழுவதும் அவனை கொண்டு செல்கிறது. அதில் இருந்து மாறாமல் தன்னை தக்கவைத்துக் கொள்வதே அவனின் ஒரே அறைகூவல்.

யுதிஷ்டிரன் – இளவரசரனாக அறிவிக்கப்பட்ட பின் அஸ்தினாபுரியில் இருந்து விலகும் சகுனி, வயதான நடக்க முடியாத பெரும்பசி கொண்ட ஓநாயுடன் உரையாடுகிறார். அந்த உரையாடலுக்குப் பின் தான், நாம் பாரதம் வழியாக அறிந்த சூழ்ச்சி நிறைந்த சகுனி பிறக்கிறார். அவரே பாண்டவர்களுக்கு எரிமாளிகை கட்ட விழைகிறார். அவமதிக்கப்பட்ட துரியோதனன் அதற்கு தன் மௌன சம்மதத்தை கொடுத்துவிடுகிறார்.

எரிமாளிகை நிகழ்வில் தப்பித்த பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் சென்று, பீமன் இடும்பியை மணந்து, கடோத்கஜன் பிறக்கும் அத்யாயங்கள் நாவலில் அழுத்தம் குறைந்த இனிமையான பகுதிகள். குரங்குகளுடான உரையாடல் மெல்லிய நகைச்சுவை கொண்டவை.

நாவலில் புகை மூட்டமாக அங்கேயும் இங்கேயும் கொஞ்சமாக வருபவர் இளைய யாதவரான கிருஷ்ணன். நீலம் – நாவல் முழுவதும் வியாபித்திருந்தாலும், பிரயாகை அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

என்னை மிகவும் கவர்ந்தது அத்தியாயங்களின் பெயர்கள். அனைத்தும் கவித்துவமானது. பெருநிலை, சொற்கனல், இருகூர்வாழ், மீள்பிறப்பு, இனியன், குருதிகொள் கொற்றவை, வேட்டை வழிகள் போன்ற தலைப்புகள் எனக்கு பிடித்தவை

நன்றி

பலராம கிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 11:30

March 13, 2021

கேளி [சிறுகதை]

செண்டைமேளம் கேட்டு பாய்ந்து எழுந்து அமர்ந்தான். பிந்திவிட்டோம் என்ற பரபரப்பு அவன் உடலில் அதிர்ந்தது. ஆனால் செண்டைமேளம் அவனுக்குள்ளேதான் கேட்டுக்கொண்டிருந்தது.

ஊரே செவியை குத்தும் அமைதியில் மூழ்கியிருந்தது. ஒரு சத்தமில்லை. காலையிலும் மாலையிலும் கேட்கும் பறவையோசைகள்கூட இல்லை. ஊரில் அத்தனைபேரும் தூங்கிக்கொண்டிருக்கவேண்டும். கோழிகள், மாடுகள், நாய்கள் எல்லாமே தூங்கிக்கொண்டிருக்கும் போல.

அந்த அமைதி ஒருவகையான காலமின்மையை உணரச்செய்தது. ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகிச்செல்கிறது, ஓசையில்லை என்றால் அது எங்கோ தரைதட்டி நின்றுவிட்டது. அவன் படுத்திருந்தபடியே பார்த்தான். தென்னை மரங்களின் மண்டைகளில் ஓலைநுனிகள் அசைவில்லாமல் நின்றன. பின்னணியாக முகிலற்ற நீலவானம் தேங்கி நின்றிருந்தது.

அவன் படுத்திருந்தது பெரிய கல்திண்ணை. நெடுங்காலமாக புழக்கத்திலிருந்தமையால் தேய்ந்து கரிய நீர்ப்பரப்புபோல பளபளவென்றிருந்தது. அவன் உடலை மிகவும் குளிரச்செய்திருந்தது. ஆலமரக்கிளைகள்போல தாழ்ந்து வந்து திண்ணையை மூடியிருந்த ஓட்டுக்கூரைக்கும் திண்ணைவிளிம்புக்கும் நடுவே ஒரு ஆள் நின்றால் தலைமுட்டும் உயரம்தான். முற்றத்தில் வெயில் மஞ்சள்நிறமாக காய்ந்துகொண்டிருந்தது. திண்ணையில் அரையிருள் மெல்லிய குளிருடன் தேங்கியிருந்தது.

இடுப்பில் நழுவிய சாயவேட்டியை இழுத்து நன்றாக சுற்றிக்கொண்டு அவன் திண்ணையிலிருந்து இறங்கி முற்றத்தில் நின்றான். ஒளி கண்களைக் கூசவைத்து கண்ணீர் வழிந்தது. கைகளால் கண்களை மூடி, கண்ணீரைத்துடைத்தபடி தரையை பார்த்தான். கூழாங்கற்களின் அருகிலெல்லாம் கரிய மையை கையால் தீற்றியதுபோல அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன. தென்னைமரங்களின் நிழல்கள் தென்கிழக்குநோக்கி சாய்ந்திருந்தன.

அவன் கைகளை நீட்டி சோம்பல்முறித்தான். சோம்பல்முறிக்கையில்தான் உடலில் அத்தனை இனிமை இருப்பதை உணரமுடிகிறது. உடலினுள் ஆழங்களில் ஆங்காங்கே சிறுசிறு இனிப்புகள் ஒளித்துவைக்கப்பட்டிருப்பதுபோல தோன்றுகிறது. அவை ஒவ்வொன்றும் கைபட்டு விழுந்துருண்டு சிந்திக் கரைந்து ரத்தத்தில் பரவுவதுபோல. மாறி மாறி சோம்பல் முறித்துவிட்டு அவன் திண்ணையில் கழற்றிவீசப்பட்டிருந்த தன் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு தெருவில் நடந்தான்.

ஊரில் எவரையுமே காணமுடியவில்லை. ஒரே ஒருநாய் மட்டும் சுருண்ட வாலுடன் ஒரு வீட்டின் சந்திலிருந்து வந்து நாவால் மோவாயை நக்கியபின் குறுக்காகக் கடந்துசென்றது. எங்கோ எவரோ பேசும் மழுங்கல் ஒலி. பாத்திரங்களின் ஒலி. மதியவெயிலில் காற்று விரிந்து விட்டது. மென்மையானதாக ஆகிவிட்டது. அந்த இளவெம்மைகொண்ட காற்று எல்லா ஓசைகளையும் கனமாக அழுத்தி மூடி முணுமுணுப்பாக ஒலிக்கச் செய்தது.

ஆனால் அவனுக்குள் இருந்து ஓசை எழுந்து அந்த வெளியமைதியை ஆவேசமாக முட்டிக்கொண்டிருந்தது. செண்டையும் இலைத்தாளமும் கொம்பும் கலந்த கேளிகொட்டு. ‘இதோ கதகளி தொடங்கவிருக்கிறது… இதோ ரங்கதீபம் கொளுத்தப்பட்டுவிட்டது. ரங்க மங்கலங்கள் ஒருங்கிவிட்டன. இதோ பொற்பட்டுத் திரைச்சீலை எழுந்துவிட்டது. ரங்ககேளி விலாசம் விபோ! தகிடத் தகிடத் தகிட தத! தத் தரிகிட தரிகிட தரிகிடதா!’

விழாநாட்களில் ஒவ்வொரு மதியமும் இப்படித்தான் இருக்கும். எல்லா திண்ணைகளிலும் தூங்குவதற்கு ஆளிருக்கும். பெரும்பாலானவர்கள் காலையில் ஆட்டம் முடிந்ததுமே வந்து ஆற்றில் குளித்து விடுவார்கள். கண்கள் சிவக்க ஈர ஆடையுடன் சென்று கோயிலில் கும்பிட்டுவிட்டு ஊட்டுபுரைக்குப் போய் சாப்பிடுவார்கள். காலையிலேயே ஊட்டுபுரையில் கட்டிச்சோறும் தேங்காய் சம்மந்தியும் சர்க்கரைப் பொங்கலும் வாழைப்பழமும் கிடைக்கும். அப்படியே நேராக வந்து படுத்தால் அதன்பின் மதியம் தாண்டித்தான் விழித்துக்கொள்வது.

அவன் எப்போதும் சற்று முன்னரே விழித்துக்கொள்வான். ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஒலிக்கும் செண்டையின் ஓசை கேட்டே எழுவான். அவன் கனவுக்குள் கதகளி தொடங்கிவிட்டிருக்கும். திரைநோட்டம் நடந்துகொண்டிருக்கும். திரைக்கு அப்பால் கதகளி நடிகர் ஆடிக்கொண்டிருப்பார். நட்டாலம் திரிலோசனன் நாயர். தோடயம் தொடங்குகிறது.நாட்டை ராகம், செம்படை தாளம்.

ஹரிஹரவிதினுத அமரபூஜித ஹே வாமனரூப

ஏகந்தந்த சதுராத்ஃபுதபல லம்போதர ரே!

அவன் எழுந்தமர்ந்து சற்றுநேரம் கழித்தே சூழ்ந்திருக்கும் அமைதி வந்து அவன்மேல் அறையும். அக்கணத்தில் எத்தனைதான் உள்ளம் விழிப்பு கொண்டிருந்தாலும் திருவிழா முடிந்துவிட்டதோ, அது வெறும் மாயை மட்டும்தானோ என்ற பதற்றம் வந்து நெஞ்சை அடைக்கும். உடனே கணக்கிட்டு அது எத்தனையாவது நாள் திருவிழா என்று உணர்ந்ததும் உள்ளம் இனிப்படையத் தொடங்கும்.

ஆனால் இன்று மெய்யாகவே திருவிழா முடிந்துவிட்டிருக்கிறது. நேற்றோடு பத்தாம்நாள் திருவிழா நிறைவு. நண்பர்கள் பலர் இரவே கிளம்பிவிட்டார்கள். அவனால் இரவில் நடந்த கிராதவிருத்தம் கதகளியை விட்டுப்போக முடியவில்லை. அது அலங்காரமான கதகளி அல்ல. அன்று கதகளி தவிர வேறு கலைநிகழ்ச்சிகளும் இல்லை. ஆனாலும் அவனால் கிளம்ப முடியவில்லை. கிளம்பியபின் அங்கே மேலும் தித்திப்பாக ஏதோ நடக்கக்கூடும். முக்கியமான எதையாவது அவன் தவறவிட்டுவிடக்கூடும். அதல்ல, உண்மையில் அவன் திருவிழாவை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. அவனுக்கு திருவிழா திகட்டவில்லை.

கோயிலின் தெற்குவாசலில் இருந்து நீண்டு நேராக ஆற்றுப்படித்துறை வரை செல்லும் தெரு அது. இருபக்கமும் சுதையாலான சுவர்கொண்ட பழைமையான வீடுகள். அந்தக்கால வீடுகள் பங்களா, தாய்வீடு, அறப்புரை என்னும் மூன்று தனிக்கட்டிடங்களால் ஆனவை. பங்களாக்களை மங்களாவு என்கிறார்கள். அவை தெருவுக்குச் சமானமாக வெண்ணிறமான சுதைச்சுவராக எழுந்து நின்றிருப்பவை. வரிசையாக ஜன்னல்கள் மட்டும் இருக்கும். தேர்த்திருவிழாவின்போது பெண்கள் உள்ளே இருந்துகொண்டு தேர்பார்க்கமுடியும்.

நீளமான மங்களாக்கட்டின் இரண்டு எல்லையிலும் இரண்டு வாசல்கள். ஒருவாசல் பெரியது. மேலே சுதையாலான அலங்காரத் தோரணவளையும் நடுவே கஜலட்சுமியோ தானியலட்சுமியோ பொறிக்கப்பட்டது. பெரிய மரக்கதவுகள் அனைத்திலும் நீலவண்ணம் பூசப்பட்டிருந்தது. அவைதான் மையவாசல்கள். மறுபக்க வாசல்கள் சிறியவை. வேலைக்காரர்கள் நுழைவதற்கானவை.

மையவாசலில் இருந்து செல்லும் பாதை உள்ளே செடிகளும் மரங்களும் அடர்ந்த தோட்டங்களுக்கு நடுவே நின்றிருக்கும் ஓங்கிய கூரைகொண்ட தாய்வீட்டை சென்றடையும். இன்னொரு பாதை தாய்வீட்டை சுற்றிக்கொண்டு அதற்குப் பின்னாலிருக்கும் அறப்புரை எனப்படும் இணைப்புக்கட்டிடத்தை சென்றடையும். அங்குதான் வேலைக்காரர்களின் உலகம். பெண்கள் புழங்குமிடம்.

அவன் படுத்திருந்தது கோயிலுக்குச் சொந்தமான களிப்புரை. நூறாண்டுகளுக்கு முன்பு மூலம் திருநாள் மகாராஜா காலத்தில் கட்டப்பட்டது. ஓடுபோட்ட சரிந்த கூரை, கருங்கல்லில் செதுக்கப்பட்ட தூண்கள், கருங்கல்லால் ஆன படிகள், கருங்கல் தரை. உள்ளே அங்கணமுற்றத்தைச் சுற்றி பெரிய வராந்தா உண்டு. அதில்தான் கதகளி நடிகர்கள் பத்துநாட்கள் தங்கி, ஆடி, தூங்கி, சாப்பிட்டு திரும்பிச்செல்வார்கள். அடுத்த திருவிழா வரை அது மூடியே கிடக்கும்.

ஆனால் கல்யாண மகாதேவருக்கு ஆண்டில் நான்கு திருவிழாக்கள் உண்டு. சரியாக மூன்று மாதத்திற்கு ஒன்று. வசந்தம், சரத்காலம், ஹேமந்தம், சிசிரம் என்னும் நான்கு ருதுக்களுக்கு நான்குவிழாக்கள். வர்ஷருதுவுக்கும் கிரீஷ்மத்திற்கும் திருவிழாக்கள் இல்லை. மழைக்காலத்தில் இந்த ஊரே வேறொரு தோற்றம் கொள்ளும். கூரைகள் சொட்டிக்கொண்டே இருக்கும். ஊரே நனைந்து கருமைகொண்டு ஊறிப்போய் மண்ணோடு அமிழ்ந்திருக்கும். தரையில் இருக்கும் ஈரத்திலிருந்து பளபளத்து எழும் ஒளி தெருக்களில் நிறைந்திருக்கும்.

சிறிய ஊருக்கு பெரிய கோயில். ஒரு காலத்தில் கோயிலை ஒட்டி  ஒரு பெரிய வாழ்க்கை இருந்தது. கோயிலுக்கு ஏராளமான நிலங்கள். எல்லாமே குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தன. குத்தகைகளை நிர்வாகம் செய்த காராய்மைக்கார வேளாளர்களும் நாயர்களும் வாழும் தெருக்கள் இவை. வடக்குத் தெருவில் சில செட்டியார் இல்லங்கள்.

கிழக்கு வாயிலை ஒட்டி மட்டும் வலப்பக்கம் பழைய அரண்மனையும், மார்த்தாண்டமடத்தின் கட்டிடமும். இடப்பக்கம் கோயிலில் பூஜைசெய்யும் நம்பூதிரியின் இல்லம். அதை நம்பி இல்லம் என்பார்கள். அதையொட்டி பிற பிராமணர்களின் இல்லங்கள். பிராமண இல்லங்களை இங்கே மடங்கள் என்பார்கள். காவிப்பட்டை அடித்திருக்கும். வள்ளியாறு கோயிலை வளைத்துச்செல்கிறது. ஆகவே கிழக்கு வடக்கு தெற்கு  மூன்று வாசல்களிலிருந்தும் செல்லும் தெருக்கள் ஆற்றங்கரையை சென்றடையும். மேற்குவாசலுக்குப் பின்புறம் மட்டும் தெருமுடியும் இடத்திலிருந்து தென்னந்தோப்புக்கள் தொடங்குகின்றன.

இப்போது கோயில் நிலங்கள் போய்விட்டன. இந்தப் பெரிய வீடுகளில் வசித்தவர்கள் பெரும்பாலும் திருவனந்தபுரம், நாகர்கோயில் என்று குடிபெயர்ந்துவிட்டார்கள். பாதிவீடுகள் பெரும்பாலான நாட்களில் காலியாகவே கிடக்கின்றன. திருவிழாக்களுக்கு மட்டும் சிலர் வருகிறர்கள். சிலவீடுகளில் வயதானவர்கள் மட்டும் குடியிருக்கிறார்கள். சிலவீடுகளில் உறவினர்கள் தங்கியிருக்கிறார்கள்.

அவன் தெருவினூடாக சோம்பலாக நடந்தான். திருவிழா முடிந்துவிட்டது என்பது அந்த ஊர்க்காரர்களுக்கு ஒருவேளை ஆறுதலை அளிக்கலாம். அவர்கள் நேற்று ஆறாட்டு முடிந்ததுமே சலிப்பும் நிறைவும் அடைந்திருக்கலாம். திருவிழா என்றால் அவர்களுக்கு பதினெட்டு நாட்களுக்கு முன்னர் கொடியும் ஆபரணமும் கொண்டு வருவதுடன் தொடங்கிவிடுகிறது. அதன்பின் ஒவ்வொருநாளும் பரபரப்பாக ஏதோ நடக்கிறது. விருந்தினர்கள் வருவதாக கடிதங்கள் வருகின்றன. விருந்தினர் வருகிறார்கள். விருந்தினர் வரவில்லை என தந்தி அடிக்கிறார்கள்.

அத்தனைபேரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை எழுந்தாகவேண்டும் என்றில்லை. திருவிழா நாட்களில் மாலை நான்கு மணிக்கெல்லாம் ஓசைகள் வெடித்தெழ ஆரம்பிக்கும். ஐந்துமணிக்கு ஊரே கொடித்துணிபோல பதறிக்கொண்டிருக்கும். தெருவில் சங்கிலி ஓசையிட யானை குளித்துவிட்டுச் செல்லும். நெய்க்குடங்களை கொண்டுசெல்பவர்கள் ‘மாறிக்கோ !மாறிக்கோ!’ என்று கூச்சலிடுவார்கள். ஸ்பீக்கரில் ஜேசுதாசின் குரல் முழங்க ஆரம்பித்துவிடும். மணியோசைகள், சங்கோசைகள், முழவொசைகள்…

இன்றைக்கு அந்தி இருள்வதுவரை இப்படித்தான் இருக்கும். அந்தி மங்கியபின்புதான் வாட்ச்மேன் கணேசன் தம்பி வந்து கோயில் நடைதிறப்பார். கிழக்குநடை மட்டும்தான் திறப்பார்கள். போற்றி மேலும் பிந்தித்தான் கோயிலுக்குள் இருக்கும் குளத்தில் குளிக்க வருவார். தீபாராதனை முடிந்ததும் அரைமணிநேரத்தில் நைவேத்யம். உடனே அர்த்த சாம பூஜை முடிந்து நடைசாற்றி விடுவார்கள். அத்தனைபேருக்கும் களைப்பு இருக்கும். அனைவருமே அரைத்தூக்கத்தில் நடப்பதுபோலத்தான் தெரிவார்கள். கண்களுக்குக் கீழே வளையங்கள். சோர்ந்த உரையாடல்கள்.

அவன் ஆற்றங்கரையில் படிக்கட்டின்மேல் அமர்ந்தான். கல்லால் ஆன கரைச்சுவர் மழையிலும் வெயிலிலும் மீண்டும் பாறையாக மாறிவிட்டிருந்தது. படிக்கட்டுகள் மதியவெயிலில் காய்ந்து கிடந்தன. அவற்றில் துணி துவைப்பவர்கள் ஒட்டவைத்த சிவப்பும் வெளுப்புமான சோப்பு மிச்சங்கள் காய்ந்திருந்தன. ஆறு நிறைந்தோடியது. தூய்மையான நீலநீர்ப்பரப்பின்மேல் மீன்கள் எழுப்பிய அலைவட்டங்கள் மெல்ல விரிந்துகொண்டிருந்தன. அக்கரையில் வரிசையாக நின்றிருந்த புன்னைமரங்கள் தழைந்து நீர் அருந்தும் விலங்குகள் போல நீர்ப்பரப்பின்மேலேயே கிளைபரப்பியிருந்தன.

ஆற்றில் அந்நேரம் குளிக்க எவருமில்லை. ஆற்றை ஒட்டிய சாலையில் ஒருவன் மிகமெல்ல சைக்கிளில் உந்தி உந்தி மிதித்தபடி சென்றான். ஒழுகும் ஆற்றை பார்த்துக்கொண்டிருப்பது இதமாக இருந்தது. ஊர் அசைவற்று நிற்க ஆறுமட்டும் ஒழுகிக்கொண்டிருப்பது. அது நிற்பதே இல்லை. ஆண்டுக்கொருமுறை பெருகி எழுந்து ஊரை நிறைக்கிறது. பத்துப்பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலுக்குள்ளேயே வெள்ளம் புகுந்துவிடும். கோயிலில் சேறுநிறையும். நீர் ஒழுகிய தடம் கற்சுவர்களில் கோடாக பதியும்.

கோடையில் நீர் குறைந்தாலும் ஒழுக்கு நிற்பதில்லை. மணல் பரப்பில் ஏழெட்டு நீலச்சுழிப்புள்ள ஓட்டங்களாக நீர் இருக்கும். வெள்ளம் பெருக்கெடுக்கையில் இந்த மீன்கள் எங்கே செல்கின்றன? நீர் குறையும்போது எப்படி தாக்குப்பிடிக்கின்றன?

அவன் தன்னுள் செண்டை ஒலித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தான். உள்ளிருந்து எழுந்த ஓசையால் செண்டையின் தோல்பரப்பு போல அவன் உடலெங்கும் சருமம் அதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்நுனிகளில் அந்தத் தினவு இருந்தது. கண்களை மூடியபோது காதுமடல்களிலும் மூக்கிலும்கூட அந்த செண்டை மேளத்தின் கூச்சத்தை உணரமுடிந்தது. நாக்கு நுனியில் இரும்பைத் தொட்டது போல அதன் இனிமை எஞ்சியிருந்தது.

அவன் எழுந்து சாலையோரமாக நடந்தான். அது ஆற்றுப்பாலத்தை சென்றடையும். ஆற்றுப்பாலத்துக்கு அப்பால் நமச்சிவாயம் பிள்ளையின் டீக்கடை. எதிரில் கன்னங்கரிய உடலில் விபூதிப்பட்டைகளுடன் வயதான நாடார் ஒருவர் வந்தார். அவர் குளித்து முடித்து கோயிலுக்குச் செல்கிறார் என்று தெரிந்தது. கண்களைச் சுருக்கி அவனை பார்த்தார்.

அவருக்கு எந்த மாறுதலும் தெரிந்திருக்காது. நேற்றுபோலவே இன்றும், அதே நேரம் அதே செயல்கள். நேற்று அத்தனை மக்கள் கொந்தளிப்பின் நடுவே எவர் உடலிலும் முட்டிக்கொள்ளாமல் கோயிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குச் சென்று வழக்கமான நேரத்தில் படுத்திருப்பார். இன்றும் அதே நேரத்தில் கிளம்பிவிட்டார். நடைபூட்டியிருந்தால் அமைதியாக காத்திருப்பார். இன்று இல்லாமலான கூட்டமும் அவர்மேல் முட்டிக்கொள்வதில்லை.

நமச்சிவாயம் டீக்கடையில் இருவர் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அவன் ஒரு டீ சொன்னான். அவர் டீ போட்டுக்கொண்டிருந்தபோது அங்கே கிடந்த கசங்கி கைந்துணி போல ஆகிவிட்டிருந்த தினத்தந்தியை எடுத்து புரட்டினான். செய்திகள் எதையும் வாசிக்கத் தோன்றவில்லை. எழுத்துக்கள் அவன் மனதில் சொற்களாக ஆகவில்லை.

டீ நன்றாக இருந்தது. தூக்கத்தில் இருந்து விழித்தெழும்போதுதான் டீ அத்தனை மணமும் சுவையும் அடைகிறது. சாயங்காலத்துப் புதுப்பாலின் மணம் அதற்கு இருந்தது. டீயை குடித்துவிட்டு பணத்தைக் கொடுத்து நடந்தபோது தன் உடலுக்குள் மெல்லிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தோன்றியது. டீயின் மணம் அவனுள் நினைவுகளாக இருந்த பலவற்றை எழுப்பிவிட்டது. தொலைவில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த இளையராஜா பாடலை அப்போதுதான் அவன் கேட்க ஆரம்பித்தான்.

ஆற்றுப்படிக்கட்டில் இருவர் குளிக்க வந்துவிட்டிருந்தார்கள். வழுக்கைத்தலையர் ஒருவர் தலையில் தேய்த்த எண்ணையை கையால் மீண்டும் மீண்டும் தேய்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தோள்களைக் குறுக்கியபடி இடைவரை நீரில் இறங்கி நின்று நீரை அள்ளி வாய் கொப்பளித்தார்.

அவன் படிக்கட்டின் மேல் சென்று நின்றபோது நீரில் நின்றவர் பளேரென்று நீர்ப்பரப்பில் பாய்ந்து கைகளைச் சுழற்றி நீந்தி உள்ளே சென்று ஒழுக்கில் மிதந்து அகன்றார். எண்ணை தேய்த்தவர் கண்களைச் சுருக்கியபடி நீரில் இறங்கி இடைவரை ஆழத்தில் நின்று மூழ்கினார். அவன் அவர்களை பார்த்துக்கொண்டு நின்றான்.

பின்பக்கம் இன்னொருவர் வந்தார்.  “பிள்ளை ஏதாக்கும்?” என்று அவனிடம் கேட்டார்.

“நான் மஞ்சாலுமூடு… விழாபாக்க வந்தேன்”

“மஞ்சாலுமூட்டிலே ஆருக்க மகன்?”

“வாத்தியார் சங்கரப்பிள்ளை இருக்காருல்லா?”

“அவருக்க மகனா? மூத்தவரை கண்டிட்டுண்டு”

அவன் தன் இடுப்புவேட்டியை அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு சட்டையை அதன்மேல் வைத்தான். உள்ளே சிவப்புநிறமான கால்சட்டை போட்டிருந்தான். கையை நீட்டி நீரில் கெண்டைச்சாட்டமாக குதித்தான். மூழ்கி கொப்புளங்கள் நடுவே துழாவி மூச்சு இறுகியபோது எழுந்து நீரைப்பிளந்து வெளியே வந்தான். “உப்புக்கலந்தா கஞ்சி இனிக்கும் உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும். அட என்னாட்டம் ராஜாத்தி எவ இருக்கா சொல்லு?”என்று தொலைவில் பாட்டு கேட்டது.

அவன் நீந்தி கரைக்கு வந்தான். இன்னொருவரும் கரையில் வந்து வேட்டியை அவிழ்த்துக்கொண்டிருந்தார். வயதானவர். மிகமெல்ல அதை அவர் செய்தார். வயதானவராக இருந்தார். அவருடைய கால்கள் நீருக்குள் அலையலையாக தெரிந்தன.

அவன் மீண்டும் நீரில் பாய்ந்து ஒழுக்கு நடுவே சென்று விசைக்கு எதிராக நீந்தினான். கைகளைச் சுழற்றி வீசி வீசி நீந்திக்கொண்டிருந்தான். மூச்சு இறுகி நுரையீரல் வெடிக்குமளவுக்கு நீந்திவிட்டுப்பார்த்தபோது நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டிருந்தான். அங்கிருந்த படித்துறை நோக்கிச் சென்று ஏறிக்கொண்டான். அங்கே சிலர் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

ஈரம் சொட்ட எழுந்து சாலைவழியாக தன் படித்துறை நோக்கி நடந்தான். “அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே” நின்று தன்னுள் அந்த வரி ஓடுவதை உணர்ந்தான். ஒரு கணம் கழித்து ஆழமான ஏமாற்றத்தை அடைந்தான். அவனுள் ஒலித்துக்கொண்டிருந்த செண்டையின் தாளம் முடிந்துவிட்டிருந்தது. அவன் அதை நினைவுகூர முயன்றான். வியப்பூட்டும்படி ஒரு வாய்த்தாரி கூட, ஒரு சிறு ஓசைகூட நினைவுக்கு வரவில்லை. மிகமிக அப்பால் எங்கோ இருந்தது அது.

அவன் தன் படித்துறைக்கு வந்து நீரில் இறங்கி மூழ்கி எழுந்தான். ஈரமான கால்சட்டையுடன் வேட்டியை எடுத்து தலைதுவட்டிக்கொண்டான்.

கீழே நின்றிருந்த எண்ணைதேய்த்த நபர்  ‘துவர்த்து இல்லியோ?’ என்றார்.

“கொண்டுவரல்லை” என்றான்.

ஈர கால்சட்டைக்குமேலேயே வேட்டியை கட்டிக்கொண்டான். சட்டையை எடுத்து பையிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு உதறி போட்டுக்கொண்டான். இரண்டாவது கையை நுழைக்கும்போது மிகமெல்லிய ஓசை ஒன்று கேட்டது. யாரோ முனகலாக பாடுகிறார்கள். முள்ளால் கீறுவதுபோல அவன் மனதை தீற்றிச்சென்றது. அது என்ன என்று உணர்வதற்குள்ளாகவே அவன் உள்ளம் இனிமைகொண்டது. உடல் குளிர்போல சற்று நடுங்கியது.

அவன் அந்த ஓசை என்ன என்று சுற்றும் பார்த்தான். யார் பாடுவது? நீரில் கைகளால் அளைந்தபடி அந்தக் கிழவர் அவரையறியாமல் முனகிக்கொண்டிருந்தார்.

“மஞ்சுதர குஞ்சதல கேளீ சதனே

இஹ விலஸ ரதிரஃபஸ ஹஸித வதனே

ப்ரவிஸ ராதே மாதவ சமீபம்!”

அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அவர் நீரில் இறங்கி மூழ்கினார். நீர்ப்பரப்பில் அலையலையாக அந்தப் பாடலை கண்ணால் பார்க்கமுடியும் என்று தோன்றியது. மோகனராகம், செம்பட தாளம்.

அவன் திரும்பி தெருவில் நடந்தபோது உடலுடன் ஒட்டிய கால்சட்டையின் ஈரத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். மனதில் ”நவஃபவத ஸோகதள சயன சாரே, இஹவிலச குசகலச தரள ஹாரே” என்ற வரி ஓடியது.

எதிரில் பெண்களின் குழு ஒன்று வந்தது. தலையை ஆட்டி, கைகளை வெவ்வேறுவகையாக முத்திரை காட்டி அவர்கள் பேசிக்கொண்டு சென்றார்கள். குச கலச தரள ஹாரம். பொற்கலம்போன்ற முலைகளின்மேல் ததும்பும் முத்தாரம். செம்பட தாளம் விரியும் விழியசைவுகள். விரிந்து மலர்ந்து குவிந்து சுழிக்கும் விரல்கள்.

அவன் விழிகள் வியந்து விரிந்திருக்க பார்த்துக்கொண்டே சென்றான். எதிரே மக்கள் வந்துகொண்டிருந்தனர். தோளில் வாழைக்குலையுடன் ஒருவர். கன்றுப்பசுவை இழுத்துக்கொண்டு இன்னொருவர். கையில் குழந்தையுடன் ஒரு பெண். ஒரு சிறுவன் அவளுக்குப்பின்னால் ஓடினான். இருவர் மெல்ல பேசியபடி வந்தனர். ஒருவர் துண்டை உதறிக்கொண்டு வந்தார். அனைவரிலும் அந்தத் தாளம் திகழ்ந்தது.

பின்னர் சுவர்ப்பரப்புகள் எல்லாமே செண்டைத்தோல் ஆக மாறின. கேளிகொட்டு முழங்கத்தொடங்கியது.

14. விசை [சிறுகதை] 13. இழை [சிறுகதை] 12. ஆமென்பது[ சிறுகதை] 11.விருந்து [சிறுகதை] 10.ஏழாம்கடல் [சிறுகதை] 9. தீற்றல் [சிறுகதை] 8. படையல் [சிறுகதை] 7.கூர் [சிறுகதை] 6. யட்சன் [சிறுகதை] 5. கந்தர்வன் [சிறுகதை] 4.குமிழிகள் [சிறுகதை] 3.வலம் இடம் [சிறுகதை] 2.கொதி[ சிறுகதை] 1.எண்ணும்பொழுது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2021 10:35

ஆமென்பது, ஏழாம்கடல், கடிதங்கள்

ஆமென்பது… [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆமென்பது கதையைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த கொரோனாக்காலக் கதைகளை வாசிக்கும்போது அதை நினைத்துக்கொண்டிருந்தேன். அவை எல்லாமே ஆழமான கதைகள். ஆனால் வாழ்க்கைமேல் நம்பிக்கையையும் நேசத்தையும் உருவாக்குபவை. பொய்யான நெகிழ்ச்சிகள் இல்லை. ஆனால் உண்மையான தருணங்கள் இருந்தன. லீலை போன்ற கதையை எல்லாம் அப்படி மனம் விட்டு ரசித்துச் சிரித்துக்கொண்டுதான் வாசித்தேன்.

அப்போது யோசித்தேன், ஒரு தொற்றுநோய்க் காலகட்டத்தில், ஒரு பேரிடர்க்காலகட்டத்தில் ஏன் நம்மால் நவீன இலக்கியத்தை படிக்கமுடியவில்லை? நவீன சினிமாக்களைக்கூட பார்க்கமுடியவில்லை. ஹாலிவுட் படங்களில் பெரும்பகுதி கொலை கொள்ளை. இன்றைக்கு ஒரு அயல்கிரகவாசி வந்து ஹாலிவுட் படங்களைப்பார்த்தால் என்ன நினைப்பார்? மனிதர்கள் மாறி மாறி வெடிவைத்தும் சுட்டும் அழித்துக்கொள்வதைத்தானே? பிரம்மாண்டம் என்றாலே அழிவுக்காட்சிதான்

நவீன இலக்கியம் என்று நாம் சொல்வது இரண்டு உலகப்போர்களின்போது உருவானது. அதில் அடிப்படையிலேயே அழிவும் சோர்வும் உள்ளடங்கியிருக்கிறது. அதை வெள்ளைக்காரன் எழுதினான் என்றால் அவனுக்கு அதுதான் சொல்வதற்கிருந்தது. நம்மாட்கள் ஏன் எழுதுகிறார்கள் என்றால் அதைப்படித்து இங்கே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

எந்தக்கதையை எடுத்துப் பார்த்தாலும் வீழ்ச்சியின் கதையைச் சொல்கிறார், மனித மனத்தின் இருள்களுக்குள் ஊடுருவுகிறார்—இதேதான். மனிதனில் அன்பு என்ற ஒன்று இருக்கிறதே. அது இல்லாவிட்டால் இங்கே உலகமே இல்லை. அத்தனைபேரும் சொந்தப்பிள்ளைகளுக்காக முழு வாழ்க்கையையே வாழ்கிறார்களே. அது ஏன், அதன் ஊற்று என்ன என்று எவராவது எழுதியிருக்கிறார்களா?

இந்தவகையான சோர்வு உலகப்போருக்குப்பின்னால் வந்தது உண்மை. அதை இலக்கியம் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. இலக்கியம் அதையே சொல்லிக்கொண்டிருந்தது. அதை காலம் கேட்டு அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டது. அதுதான் இப்படி ஆகிவிட்டது வாழ்க்கை. இந்த எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள்மேலும் மனித வாழ்க்கைமேலும் மிகப்பெரிய சாபத்தை இறக்கி வைத்துவிட்டார்கள்

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ,

பேரறிவாளன் ஒருவனின் அறிவுக்கு அடியில் இருந்த பேதமையைச் சுட்டும் அற்புதமான கதை ஆமென்பது. ஆம் என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருப்பது விதிதான்.

இந்தக்கதை இலக்கியம் பற்றி அறிய நினைப்பவர்களுக்கு இலக்கியத்திலுள்ள மிகமுக்கியமான ஒரு பிரச்சினையைப்பற்றி ஒரு தெளிவை உருவாக்குகிறது. இலக்கியவாதிகளில் 90 சதவீதம்பேர் இளமைக்காலத்தில் நோயாலும் தனிமையாலும் அவதிப்பட்டவர்கள். நார்மலானவர்கள் அல்ல. அப்பாவுடன் பிரச்சினை உடையவர்கள். இந்த அப்நார்மலான மனிதர்கள் அவர்கள் கண்ட வாழ்க்கையை முழுவாழ்க்கைக்கும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு இலக்கியம் எழுதுகிறார்கள். அதை நார்மலான வாசகர்கள் வாசித்து ததாஸ்து சொல்லிவிடுகிறார்கள்.

அதாவது ஃப்ராய்டு பற்றிச் சொல்லப்படுவதுதான். அவர் நோயாளிகளை ஆராய்ந்து அதை வைத்து மனிதனைப்பற்றி ஒரு சித்திரம் உருவாக்கினார். மனிதர்கள் எல்லாருமே நோயாளிகள் என்று சொல்லிவிட்டார். ஃப்ராய்டை வாசித்த அத்தனைபேருமே தலையை ஆட்டி ததாஸ்து என்றார்கள். அத்தனைபேருமே நோயாளிகளாக ஆகிவிட்டார்கள்.

ஓ.வி.விஜயன் என நினைக்கிறேன். அவருடைய ஏக்கமென்பது அடைக்கலம்கோரிய குழந்தை. கடைசியில் அவர் போத்தன்கோடு கருணாகர சாமிகளின் காலடியில் சென்று சேர்ந்தார். அதை ஓ.வி.உஷா சொல்வதுபோல கதை எழுதப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். இந்த அடிப்படை ஏக்கம் அப்படியே வெளிப்பட்டிருந்தால் அது உண்மை. ஆனால் அது எதிர்ப்பு கசப்பு ஆக இந்த உலகத்தை பார்த்திருந்தால் அதற்கு உண்மையின் மதிப்பு உண்டா?

அவரைமீறி வந்த உண்மைகள் உண்டு என்பது அதற்குப் பதிலாக இருக்கலாம். ஆனால் மனிதனுக்கு துன்பத்தில் திளைக்க வேண்டிய ஆன்மீகமான தேவை உண்டு என்பதனால் இலக்கியத்தை எழுதிக்கொள்கிறான் என்று தோன்றியது

எஸ்.ராஜசேகர்

 

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வழக்கம்போல ஏழாம் கடலும் விதவிதமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கோணத்தில் விவாதிப்பார்கள். அவரவர் அனுபவம், பக்குவமே அளவுகோல்.

இதில் என் நண்பர்களுடன் நான் விவாதித்தவகையில் ஒன்றைக் கண்டேன். ‘ஐடியல்’ என்ற வகையான ஒரு நட்பு பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. அப்படி ஒன்று இருக்கமுடியும் என்றே அவர்களால் நம்பமுடியவில்லை

ஏனென்றால் சென்ற நூறாண்டுகளாக நவீன இலக்கியம் என்பது ஐடியல் ஆன நட்பு இருக்கமுடியாது என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறது. நவீன இலக்கியத்தில் ஒரு சிறுகதை எல்லா ஐடியல்களையும் கடைசியில் தூக்கிப்போட்டு உடைப்பதாகவே முடியும். ஐடியல் என ஒன்றைச் சொல்லி அதிலுள்ள ஒரு திரிபையோ கசப்பையோ சொல்லி முத்தாய்ப்பு வைக்கும். கரவு, கள்ளம், நஞ்சு என்று கதைக்கு ஒரு தலைப்பும் இருக்கும்.

அதை நெடுங்காலமாக வாசித்துப் பழகியவர்கள் நம்மவர். ஆகவே ஏழாம் கடல் கதையையும் அப்படியே வாசிக்கிறார்கள். கடைசியில் பிள்ளைவாள், வியாகப்பன் இருவரில் ஒருவர் கெட்டவர் என்று ‘புரிந்து’ கொள்கிறார்கள். யார் தப்புசெய்தது என்றுதான் பார்க்கிறார்கள். அந்த நஞ்சு எவருடையது, ஏன் என்று கதையில் தேடுகிறார்கள்.

இது தேடுபவரைத்தான் காட்டுகிறது. அவருடைய நஞ்சைத்தான் காட்டுகிறது.உண்மையில் கதை ஒரு போலி லட்சிய உறவை காட்டவில்லை. உண்மையான லட்சிய உறவை காட்டுகிறது. இருபக்கமும் மாசுமருவற்ற அன்பைத்தான் சொல்கிறது. அப்பேற்பட்ட அன்பிலும்கூட ஒரு துளி நஞ்சு. அது ஏழாம் கடலில், கடவுள் மட்டுமே அறிந்த நஞ்சு. அப்படித்தான் கதை பேசுகிறது.

அது ஒரு சாதாரண உறவிலுள்ள நஞ்சு அல்ல. தெய்வீகமான உறவிலுள்ள தெய்வீகமான நஞ்சு. அந்த தளத்தில் வைத்து அதைப்புரிந்துகொண்டால் மட்டுமே கதை கைக்குச் சிக்கும். மற்றவர்களுக்கு இது ஒரு லௌகீகமான வம்பு, கிரைம் மட்டும்தான். கிரைமைக் கண்டுபிடிக்கத்தான் முயல்வார்கள்.

ஏன் அந்த நஞ்சு என்றால் அங்கே முத்து இருப்பதனால்தான். அமுதமும் நஞ்சும் சேர்ந்தெ இருக்கும் என்பதனால்தான். இந்தக்கதையில் அந்த நஞ்சை எந்த அளவுக்கு வாசகன் அப்ஸ்டிராக்ட் ஆக்கிக்கொள்கிறானோ அந்த அளவுக்கு நல்ல வாசிப்பு

ஸ்ரீனிவாஸ்

அன்புநிறை ஜெ,

கடல் என்பதைக் கண்டறிந்தவர் வியாகப்பன். அதன் அறியமுடியாமையை உணர்ந்தவர். வழிதவறச் செய்யும் ஏழாம் கடலின் மாயையை உணர்ந்தவர்.

அவரது வாக்குமூலம் போன்ற சொற்கள் கடல்குறித்து சொல்வதனைத்தும் மனித அகத்தையே. அதன் ஆழத்துக்கும் தொலைவுக்கும் முடிவே இல்லை. அந்தக் கடலாழத்தில் விஷமும் அருமுத்தும் உண்டென்று உணர்ந்தவர்.

வியாகப்பன் ஒரு விதத்தில் அந்தக் கடலேதான் என்றும் தோன்றுகிறது. கடற்புறத்துக் கிழவன் என்ற துவக்கமே ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் சான்டியகோவை நினைவுபடுத்துகிறது. அவர் நாற்பத்தொன்பது வருடமாக மீன் கொணர்ந்து தந்தவர். கடல் போல அளித்துக் கொண்டே இருந்தவர்.

கிழவனின் மீன் பிடிப்பு நின்ற போதும் ஏதேனும் கொண்டு வந்து தருவதில் முனைப்பாகவே இருக்கிறார். பிள்ளை அதன் சுவை அறிந்தவர், கடலின் கட்டற்ற அலைவை அதன் ஓயா அலை போன்ற உரத்த சிரிப்பை, வேறு யாரிடமும் பேசிடாத வாய்நாறும் பேச்சை என அனைத்தையும், கடலின் நாற்றத்தையும  சுவையையும் உட்பட விரும்புபவர். அவருக்கு நல்முத்தும், துளிவிஷமும் கடல் தரும் கொடையே. ஒன்று கடல் விரும்பித் தந்தது, ஒன்று கடல் அறியாமல் தந்தது.

ஏதும் வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அறுபது வருட நட்பில் ஏதேனும் நடந்திருக்கலாம், நாள்பட்டு நஞ்சாகியிருக்கலாம் என்கிறார் இன்ஸ்பெக்டர். முத்தென்பதும் சிப்பி எனும் மெல்லுடலியில் உட்புகும் நுண்துகள் ஒன்று ஏற்படுத்தும் உறுத்தலைக் குறைப்பதற்கு சிப்பி சுரக்கும் திரவம்தானே.

அத்தனை ஆண்டு அந்நியோன்னியத்தில் நண்பர்களின் மனதில் எத்தனையோ சிறு கீறல்கள் ஏற்பட்டிருக்கலாம். அரசு ஊழியமோ, பிற நண்பர்கள் நடத்தும் விதமோ, புகழோ, வகையாய் உணவிடும் மனைவியோ எத்தனை எத்தனையோ நுண்துகள் நுழையக்கூடிய வாய்ப்புகள்தான். தொடர்ந்து அவர் அளித்துக் கொண்டே இருப்பதன் வாயிலாக பிள்ளை அவருக்களிக்கும் வேறொன்றை நிகர் செய்கிறார். அந்த கண்ணறியாத் தட்டின் எடை குறைந்தாலும் கூடினாலும் ஒரு சிறு நுண்துகள் நுழைந்து விடலாம். ஆனால் அந்த ஆழமான நட்பு அதனால் ஏற்படும் உறுத்தலைக் குறைக்க அன்பும் அருளுமாய் கலந்தளித்து அரிய நட்பாய் விளைந்திருக்கிறது.  கடல் தந்த முத்தை இருவரும் அகம் உணர்ந்தவர்களே என்பதால்தான் அந்த நட்பு அறுபதாண்டுகளாய் கனிந்து ஒன்றாகவே கரையேறியும் விடுகிறார்கள்.

அதே சமயம் உள்ளே நுழைவது நுண்கிருமியெனில் விஷமாகவும் வாய்ப்பிருக்கிறது, பல்லாயிரங்களில் ஒன்று.

முத்து கிடைத்ததை பிள்ளை வியாகப்பனிடம் சொல்லாத போது அகத்தில் ஒரு துளி விஷம் சுரந்திருக்கும். அது கடலில் கலந்திருக்கும். கடல் உள்ளே எடுத்துக் கொள்ளும் அனைத்தையும் மீண்டும் கரைக்கு திரும்பித் தரவும் கூடும். அது பிள்ளைக்கே மீண்டும் வருகிறது.

மிக்க அன்புடன்,

சுபா

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2021 10:33

வலம் இடம்,கொதி- கடிதங்கள்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

உங்கள் சிறுகதைகளில் படிமங்களால் மட்டுமே எழுதப்படும் சிறுகதைகள் சில உள்ளன. உச்சவழு, பாடலிபுத்திரம் போன்றவை. மிக நேரடியான கூறுமுறைகள் போல தோன்றினாலும், இக்கதைகளின் மையப்படிமத்தையும், அவை உங்கள் படைப்புலகில் எடுத்தாளப்பட்டுள்ள விதங்களையும் அறிந்தவர்களுக்கே அக்கதைகள் திறக்கும். அத்தகைய கதைகளின் ஒன்று தான் ‘வலம் இடம்’. ஒரு எருமையின் இறப்பும், அதை நிரப்பும் மற்றொரு எருமையின் வருகையுமாக அமைந்த ஒரு கதை. இதன் மையப்படிமம் எருமை தான். அதை நிரப்பும் துணைப் படிமங்கள் என ‘இடம்’, ‘மூக்கணாங்கயிறு’ இரண்டையும் சொல்லலாம்.

உங்கள் படைப்புலகில் எருமை என்பது வளத்தின் அடையாளம். காலத்தின் குறியீடும் கூட. பஞ்சத்தில் செத்தவர்களுக்கு இரங்கி பாதாளத்தில் இருந்து தோன்றிய காமதேனு. கதையிலும் அது ஐஸ்வரியமே என்று தான் குறிப்பிடப்படுகிறது. முருகேசனும் சரி, அவன் மனைவியும் சரி அந்த எருமையைச் சுற்றியே தங்கள் வாழ்வை அமைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முருகேசன். அவன் அந்த எருமையின் நினைவிலேயே திளைத்து, நிறைந்து இருக்கிறான். அந்த எருமையைக் குளிப்பாட்டுகையில் கரையில் போகும் வைத்தியர் ஒருவர் சொல்வது முக்கியமான குறிப்பு – ‘என்னடே கூட்டுகாரியோட கும்மாளமா?’. அவனுக்கு மனைவி கூட இரண்டாம் இடம் தான். அந்த எருமைக்காக மனிதர் அஞ்சும் பாம்பு உலவும் இடத்தில் சென்று கூட புல் கொண்டு வருகிறான். அந்த எருமையே அவன் நிரந்தரம் என வாழ்ந்துவருகிறான். கண்ணாடி போல வழுக்கிச் செல்லும், புண் ஏற்படுத்தாத, அடிக்கடி மாற்றியாக வேண்டிய மூக்கணாங்கயிறால் அந்த உயிரை என்றென்றும் இழுத்து வைத்திருக்கிறான். எனவே தான் அதன் மரணம் அவனை அப்படி புரட்டிப் போடுகிறது. அந்த மரணத்தை அவன் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உணர்த்துவதைத்தான் அந்த இடப்பக்கத்து எருமை என்னும் படிமம் கதையில் வருகிறது. அந்த எருமைக்கு ஒரு மூக்கணாங்கயிறு இடவில்லையே என தன்னைத்தானே நொந்து கொள்கிறான்.

சரி வாழ்வையும், மரணத்தையும் தான் அவன் உணர்கிறான் என ஒற்றை வரியில் இதை முடித்துவிடலாமா? இக்கதையின் உடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு புராணக்கதை ஒன்று உண்டு. கிராதம் நாவலில் வரும் காலபீதி என்னும் முனிவரின் கதை. “ஏன் பிறக்க வேண்டும்? பிறந்து பின் இறக்க வேண்டும்?” என்ற ஒரு வினாவால் அன்னையின் கருவாயிலை அடைத்துக் கொண்ட ஒரு குழந்தையிடம், பார்த்திவப்பரமாணுவாகி, கருவாகி, உருவாகி, உடலாகி, ஊனாகி, கூடாகி, நீறாகி பின் மீண்டும் பார்த்திவமாகி ஆடும் அந்த சிவநடனத்தினை சிவனென்றே ஆகி ஆட நீ பிறந்தாக வேண்டும் என்ற அறிதலை அக்குழந்தைக்கு அளிக்கும் ஒரு தந்தையின் கதை. இங்கு முருகேசனுக்கு கிடைப்பதும் அத்தகைய ஒரு அறிதலே. ஒவ்வொரு எருமையும் இடத்தில் மற்றொரு இணை எருமையுடன் தான் இருக்கிறது என அவன் அறிவது, அந்த இடப்பாகத்து எருமை, வலப்பாகத்து எருமையுடன் இணைந்தே பிறக்கிறது என்பதையும், அது வளர வளர இதுவும் உடன் வளர்கிறது என்பதையும், வலதின் ஐயங்களாகவும், விழைவுகளாகவும் இருந்து இறுதியில் அதனுடன் இணைகிறது என்பதையும் முழுமையாக உணர்கிறான். அந்த அறிதல் அவனுக்கு சித்திக்கையில் தான் அளப்பங்கோட்டு அப்பச்சி அவனுக்கான எருமையை மீண்டும் அவனுக்கு அளிக்கிறார்.. அவனும் தன் தந்தையை முழுமையாக மூச்சுலகில் விட்டுவிட்டு தனக்கென ஒரு மைந்தன் என்னும் நீட்சியையும் உருவாக்குகிறான். ஒருவகையில் அந்த புராண கதையின் யதார்த்த தள நீட்சி என்று கூட இக்கதையைச் சொல்ல இயலும். முக்கியமான கதை.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்.

 

அன்புள்ள ஜெ

கதைகளைப்பற்றி வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள்தான் உண்மையில் இந்தக் கதைத்திருவிழாவை ஒரு கொண்டாட்டமாக ஆக்குகின்றன. இனி எல்லா கோடையிலும் கதைகளை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஃபிலிம் ஃபெஸ்டிவல்போல இந்த சீசனில் இதற்காக ஏங்க ஆரம்பித்துவிடுவோம்

எருமை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம். சங்க இலக்கியத்தில் எருமை, காரான் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. பசுவைவிட எருமைதான் சங்க இலக்கியத்தில் அதிகமாக வருகிறது. ஆனால் நவீன இலக்கியத்தில் எருமையைப்பற்றிய நல்ல சித்திரங்கள் மிகமிகக் குறைவு. ஆச்சரியமாக இருக்கிறது

உங்கள் கதைகளில் எருமை வந்துகொண்டே இருக்கிறது. எருமையைப்பற்றி தமிழில் எழுதப்பட்ட அற்புதமான கதை என்றால் மதுரம் தான். அதன்பின் இந்தக்கதை

இரா.கார்த்திகேயன்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொதி கதையை வாசிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. ஏன் இந்துத் துறவிகளில் மிகச்சிலர் தவிர பிறர் சேவையை வழியாகக் கொள்ளவில்லை. ஒருவன் இந்து என்றால் அவன் மதத்தால் கைவிடப்பட்டவன். கிறிஸ்தவன் என்றால் அவனுக்கு அவ்வளவுபெரிய அமைப்பு இருக்கிறது. நான் இந்துத்துறவிகளில் பெரும் மானுடசேவை ஆற்றியவர்களைக் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் மிகக்குறைவுதான்.

இந்துசமூகம் ஏழைகளுக்குச் சேவைசெய்வதை முக்கியமாக கருதவில்லை. ஒரு கோயில்கட்ட குவியும் பணத்தில் நூறிலொருபங்குகூட சேவைக்கு வராது. இந்த அடிப்படைப்பிழை இந்து மதத்திலேயே உள்ளது.

அதோடு நமக்கு துறவு என்றால் விரக்தி. எல்லாவற்றையும் துறப்பது. அதாவது பசியற்றவர்களாக ஆவது. பற்றில்லாமலிருப்பது. இங்கே ஞானையாவின் வழி என்பது பற்றுதான். சோற்றின்மேல் கொண்ட பற்று அப்படியே மக்கள்மேல் கொண்ட பற்றாக மாறி ஏசுவின்மே கொண்ட பற்றாக ஆகிவிடுகிறது

கே.என்.ராஜாராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2021 10:31

விருந்து,கூர்- கடிதங்கள்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விருந்து ஓர் அழகிய சிறுகதை. நேற்றிரவே படித்துவிட்டேன். இன்றுகாலை கதையை மீண்டும் வாசித்துவிட்டு அம்மாவுக்கு கதையை முழுமையாகச் சொன்னேன். அம்மாவுக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. இந்தக்கதைகள் எல்லாவற்றையும் அப்படி கதைகளாக அழகாகச் சொல்லிவிடமுடிகிறது.

அந்த ஆட்டை அவன் ஊட்டுவதும், பெயர் போடுவதும், அதன் குடல் உருவப்படுவதை அவனே பார்த்துக்கொண்டிருப்பதும் பெரிய மனப்பாரத்தை உருவாக்கின. அவன் தன் சாவை தானே பார்த்துக்கொண்டிருக்கிறான். தன்னைத்தானே சிலுவையில் ஏற்றிக்கொள்கிறான்

அந்த அனுபவம் நமக்கே ஏற்பட்டிருக்கும். நாமே சிலசமயம் அப்படி நம்மை உரித்து தொங்கவிட்டிருப்போம் என்று நினைக்கிறேன். நிர்வாணம் என்கிறோம். ஆடையில்லாத நிர்வாணம் அல்ல. தோலே இல்லாத நிர்வாணம். அவன் அடைந்தது அதுதான்

கணேஷ்

அன்புள்ள ஜெ

விருந்து கதையை வாசித்தேன். அதன் டீடெயில்களை சும்மா சோதனை செய்துபார்த்தேன். அவன் தூக்கிலே போடப்பட்ட தேதி என்ன கிழமை என்று பார்த்தேன். திதி, நட்சத்திரம்கூட சரியாகப்போட்டிருக்கிறீர்கள். உண்மையில் அப்படி ஒரு ஆசாரி தூக்கிலே போடப்பட்டாரா என்ன?

தியாகராஜன் பொன்னம்பலம்

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கூர் கதையை உடனே கடந்துவிடவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. உங்களுடைய பிறகதைகளில் வாழ்க்கைமேல் ஒரு நம்பிக்கையும் இந்த வாழ்க்கையைக் கொண்டாடும் தன்மையும் உண்டு. தீற்றல் போன்ற கதைகளிலுள்ள கொண்டாட்டமே கூட அத்தகையதுதான். ஆனால் கூர் அப்படி அல்ல. அது ஒரு கசப்பான கதை. நாம் காண மறுக்கும் கசப்பான உலகத்தைச் சுட்டிக்காட்டுவது.

மனிதர்களை கசக்கிக் குப்பைக்கூடையில் வீசும் ஓர் அமைப்பை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்த அமைப்பை நம்பி வாழ்கிறோம். மிக மிக வலிதரும் ஒரு கதை. நான் அமெரிக்கா செல்லும்போது அந்த மாபெரும் செல்வச்செழிப்புள்ள நாட்டிலேயே தெருக்களில் வாழ்பவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களில் சிறுவர்களும் உண்டு.

இருநூறாண்டுகளுக்கு முன்பு ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் டிக்கன்ஸ் ஓர் உலகத்தை காட்டினார். குற்றவாளிச் சிறுவர்களின் உலகம். அந்த கொடுமையான உலகம் அப்படியே நீடிப்பதையே கூர் காட்டுகிறது

 

அர்விந்த்

 

அன்புள்ள ஜெ,

கூர் கதையில் ஒரு சின்ன ஜாலம் உள்ளது. வழக்கமான நவீனச் சிறுகதை வாசிப்பவர்கள் ஒரு டிவிஸ்டை விரும்புவார்கள். உனக்கு ட்விஸ்ட்தானே வேண்டும் இந்தா என்று இன்னொரு அடியாளை முதல்குற்றவாளியாக ஆக்குவதைச் சொல்லியிருக்கிறீர்கள். சாதாரண நவீனக்கதை வாசகர்கள் அதுதான் கதை என்று நினைத்துவிடுவார்கள். நான் அந்தக்கதையை வாசித்ததும் அதுவாக இருக்கமுடியாதே கதை, அப்படி எழுதமாட்டாரே என்றுதான் நினைத்தேன். இன்னொருமுறை கதையை வாசித்ததும்தான் கதையின் மையம் எது என்று தெரிந்துகொண்டேன்

 

பாஸ்கர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.