சிலுவைராஜ் சரித்திரம் Quotes

Rate this book
Clear rating
சிலுவைராஜ் சரித்திரம் சிலுவைராஜ் சரித்திரம் by ராஜ் கௌதமன்
17 ratings, 4.53 average rating, 6 reviews
சிலுவைராஜ் சரித்திரம் Quotes Showing 1-30 of 74
“தப்புச் செய்தால் அதற்குரிய தண்டனையை ஒருவன் அடைந்தே ஆகணும் என்பது தகப்பனின் பிடிவாதமான கொள்கை. அந்த ஒருவன் என்பது பெரும்பாலும் சிலுவைதான். அவர் ஒருநாளும் அந்த ஒருவனுக்குள் வரமாட்டார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ஒருதடவை கிறிஸ்மஸ் சீசனில் செயற்கையாய் அலங்கரிக்கப்பட்ட மாட்டுத் தொழுவில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை ஏசுவை ஆராதித்துப் பாடும்போது ஸ்டீபன் செய்த கூத்து கோவிலையே ஒரு கணம் அதிரவைத்துவிட்டது. சோலோ-கோரஸ் என்று தொடர்ந்து போகும் அந்த ஆராதனையில் ஸ்டீபன் சோலோ பாட மற்றவர்கள் 'வந்தாராதியுங்கள்' என்று கூட்டாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

'ஏவை மரி கனியை'

'வந்தாராதியுங்கள்'

'மாட்டுக் கொட்டில் பாலனை'

'வந்தாராதியுங்கள்'

'வானோ போற்றும் பாலனை'

'வந்தாராதியுங்கள்'

'வயித்தால போன பாலனை'

'வந்...'

ஒரே சிரிப்பு. கோயில் அதிர்ந்தது. குழந்தை ஏசு மட்டும் சிரிக்காமல் படுத்துக்கிடந்தார். வெளியே வந்த பிறகு 'ஏண்டா இப்பிடிப் பாடுன' என்று அவங்கிட்ட சிரிப்பு தாங்காமல் கேட்டபோது, 'ஏன் அவருக்கு மட்டும் வயித்தால போயிருக்காதா? அவரும் மனுசந்தானே? மனித சுபாவத்தில் சிலுவையில் அறையப்பட்டுச் செத்துப் போனவர், வயித்தால போகாமலா இருந்திருப்பார்?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ரவி தண்ணி போட்டாம்னா தாஸ்தாவ்ஸ்கி பற்றித்தான் பேசுவான்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“தூரத்தில் நாயுங் கையுமா ஜீவரத்தினத்தப் பாத்ததுமே, 'தி மேன் வித் எ டாக்'ன்னு குருசாமி டெய்லர் தமது எஸ்எஸ்எல்சி இங்கிலீஷ் ஞானத்தை எடுத்துவிடுவார். அந்த நாயைப் பாத்தா சிலுவைக்கி, ஆண்டன் செக்காவ் எழுதிய 'பச்சோந்தி' கதைதான் ஞாபகத்துக்கு வரும்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“எல்லோருமே சாதிய உள்நாக்குல வச்சிக்கிட்டுத்தான் பேசுறாங்க.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“பெரிசா ஜெயகாந்தனப் பிடிக்கும், அவனப் பிடிக்கும் இவனப் பிடிக்கும்னு பேச்சுத்தான் கிழியிது. ஆனா உள்ள இருக்கிறது பூராவும் சாதி நஞ்சுதான்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“இப்ப அவனுக்குப் பேய் பத்திய பயமெல்லாம் இல்ல. ராத்திரி பஸ்ட் ஷோ பாத்திட்டு வர்றவங்களும் சரி, செகண்ட் ஷோ பாக்கப் போயிட்டு நடுச்சாமந்தாண்டி வர்றவங்களும் சரி, தனியா வரமாட்டாங்க. பேயி பயந்தான். ரெண்டு மூணு பேராச் சேந்துதாம் போவாங்க வருவாங்க. சிலுவைக்கு ஒண்ணு டெய்லர், இல்லாட்டா ஒத்தையில போறதுதான் பிடிக்கும். ராத்திரி ரொம்ப நேரமாகவும், பகல் கொஞ்ச நேரமாகவும் இருந்தா நல்லதுன்னு நெனப்பான். கம்மாக்கரை வரப்பு வழியா நட்சத்திரங்கள் சிந்திக்கிடந்த வானத்தின் கீழ் தனியாக நடந்துபோவது அவனுக்கு சுகமான அனுபவம். யாராச்சும் வாராங்களா அவங்ககூட பயமில்லாமப் போகலாம்னு காத்து நிற்கும் மனுசனப் பாத்தாலே சிலுவைக்கு ஆகாது. யாருக்கு யார் பாதுகாப்பு? அப்பத்தான் கொல்லைக்கு வந்தவம் மாதிரி சிலுவை கரையோரமாப் போயி குத்தவச்சுக்கிருவான். அந்த மனுசம் போற வரைக்கும் எந்திரிக்க மாட்டான். அவனும் பொறுத்துப் பொறுத்துப் பாத்திட்டு, 'அண்ணாச்சி வத்ராப்புக்குதான போறீக'ன்னு ரொம்பப் பழகுன ஆள் மாதிரி விசாரிப்பான்.

'இல்ல'ங்கிறதுக்கு மேல ஒரு வார்த்த சிலுவை பேசமாட்டன். அந்த ஆளு நிண்ணு பாத்திட்டு வீட்டுக்குத் திரும்பிருவான். அவம் போனப் பெறகு சிலுவை வத்ராப்புப் பாக்கத் தனியா நடந்து போவான். மனுசங்கள நடுங்க வைக்கிற பேய்க வந்தாக்கூட அதுகளுக்கு கம்பெனி குடுக்க சிலுவை தயார். மனுசங்களுக்குக் குடுக்கத் தயாரில்லை. சிலுவை போறதப் பாத்திட்டுப் பேய்ககூட ஒரு வேள பயந்தாலும் பயப்படும்!”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“ஒரேயொரு சிகரெட்டை அணச்சு அணச்சு ரெண்டு மூணு தடவை பிடிப்பது வழக்கம்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“தினசரி காலை பத்துமணிக்கு எரிக்கும் வெயிலில் வரப்பு வழியாகச் சிலுவை வத்ராப்புக்குப் போகிறபோது வத்ராப்ல டைப்ரைட்டிங் முடிச்சிட்டு எதிரே வரும் பொண்ணுக இவன பாத்ததும் வரப்பவிட்டு இறங்கி, விலகி, ஒரு அரை வட்டம் வளைஞ்சு நடந்து, கடந்து போயி, மீண்டும் வரப்பில் ஏறிச் செல்வதைத் தற்செயலாகச் சிலுவை பாத்திருக்கிறான். அவ்வளவு தூரம் அவனைக் கண்டு விலகிப் போற அளவுக்கு அவன் தப்பான பயல் இல்லை என்பது அதுகளுக்குத் தெரிய நியாயமில்லைதான். எஸ்எஸ்எல்சி படிச்சிட்டுப் படிப்பு வராம டைப் அடிக்கிற இந்தக் கூமுட்டைகள் எங்கே? அவன் எங்கே? இதப்பத்தியெல்லாம் மலைப் பிரசங்கமா பண்ண முடியும்?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“சிலுவைன்னு ஒருத்தன் பொறந்தான், காணாம போனான் என்பதைத் தவிர வேற ஞாபங்கள் யாருக்கும் இருக்கப் போவதில்லை. நீர்க்குமிழி உடைந்து போவதை மெனக்கெட்டு யாராவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பார்களா?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“மேலே வீசியடித்துக்கொண்டிருந்த கீழைக்காத்து இப்போது ரொம்பத் தாழ்வாக இறங்கி வந்து தரையோட தரையாக கோபாவேசத்தோடு வீசியது. கொஞ்சந் தள்ளி மேட்ல நிண்ண அந்தப் புரதானமாக அரசமரம் பைத்தியம் பிடிச்சவம்போல ஆடிக்கொண்டிருந்தது. அதத் தவிர அந்தப் பிரதேசத்துல வேறு மரமே கெடையாது. அந்த மரம் இப்பிடி வெக்கமின்றி தலையை விரிச்சு ஆடியதைச் சிலுவை இதுக்கு முன்னால பார்த்ததில்லை. யாரும் பாக்கலைன்னா ஒவ்வொண்ணும் விச்சித்திரமாக ஏதாவது பண்ணும் போல.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“தன்னை ஆசையாப் பெத்துப் பாலூட்டி தாலாட்டி வளத்து மருந்து மாயம் பாத்த அந்தச் சிறுக்கிமவாதான் இப்ப இப்பிடிப் பேசுறா! பேசு பேசு இது ஒந்நேரம். தல மூத்த மகனப் பாத்துப் பேசு. தாயும் தகப்பனும் சேந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகச் சிலுவை சந்தேகப்பட்டான். ஆள் ஒழிஞ்சா சரின்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பாங்களோ? இவங்களுக்கு முன்னால தல நிமுந்து சகல சௌபாக்கியங்களோடும் வாழணும்ங்கிற வெறி சிலுவைய ஆட்டிவச்சது.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“எப்பிடியும் பொழைக்கலாம்னு குருட்டுத்தனமாக தைரியம் வந்தது. இனிமெ தற்கொலை பத்தியெல்லாம் நெனைக்கக் கூடாது. சாவு வரும்போது வரட்டும்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“அடைக்கலமாக வந்தவனுக்கும், அடைக்கலங் குடுத்தவருக்கும் இடையில் நெருங்கி சீரான தாக்குப் பிடிக்கக்கூடிய நட்பு ஒன்று ஏற்படச் சாத்தியமுண்டா? ரெண்டு பேருக்குமே வாய்த்த அந்தச் சந்தர்ப்ப விசேசம் ரொம்ப நூதனமாக இருந்ததால் உறவைத் தடுமாற்றமில்லாமக் கொண்டு போகச் சாத்தியப்படலையோ? சுயேச்சையாக இருக்கிற ரெண்டு பேருக்கிடையிலதான் நட்பு பலப்படும். இல்லாட்டி கஸ்டந்தான்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“பெங்களூர் சீதோஷ்ணத்துக்கு விட்டா நடுரோட்லகூட மரம் முளைக்கும் போல. அந்த பிரம்மாண்டமான மரங்களை அப்பிடியே கட்டித் தழுவணும் போலயிருந்தது.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“சார்லஸ் சொன்ன மாதிரி ஈவினிங் காலேஜ்ல ஒரு வேல கெடைச்சு சின்னதா ஒரு புதிய வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு வாழலாம். தானுண்டு தன் படிப்புண்டு என்று அடங்கிவிடலாம். ஒரு தீவுல வாழ்ற மாதிரி, அந்த ராபின்சன் குருஸோ மாதிரி வாழ்ந்திட்டுப் போகலாம். சிலுவைன்னு ஒருத்தன் இந்த உலகத்தில பிறந்தான் செத்தான்ங்கிற விசயம் மூணாம் மனுசர்களுக்குத் தெரியாமலே போகட்டும். இந்த மாதிரி நெனச்சுப் பாக்கிறது சிலுவைக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல அவனுக்கொரு சுகம்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“மானமா ஒதுங்குவதற்கு வேலையில்லாத ஒரு பட்டதாரி இளைஞனுக்கு அவம் பிறந்தவீட்டத் தவிர வேற போக்கிடம் கெடையாது. அந்த இடத்திலிருந்து அவன் போனாப் போதும்னு தகப்பனும் தாயும் ஒரே முடிவோட இருந்தா அவங் கதி என்னாகும்? அதவிட அவனக் கொன்னு போட்டிருக்கலாம்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“அடிக்கிறது தகப்பன் உரிமை, வாங்கிக்கிறது மகன் கடமைன்னு நெனச்சுக்கிட்டிருந்த அவருக்குச் சிலுவை முட்டியது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அந்த அதிர்ச்சியால் வந்த ஆத்திரத்தில் என்ன செய்கிறோம்னு அவருக்குத் தெரியல. இல்லாட்டி அப்பிடியே குனிஞ்சு சிலுவையோட கொட்டைய பிடிச்சு நசுக்கத் துணிவாரா? இதெல்லாம் மிலிட்டரி டெக்னிக்கா இருக்கும். சிலுவை விருட்டென்று பின்வாங்கி அவர் அடிவயித்துல ஓங்கி ஒரு எத்துவிடும்போது தேவராஸ் மாமா ஓடிவந்து விலக்கிவிட்டார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“திரும்பத் திரும்ப அதே யாபகந்தான். அந்தச் சம்பவத்தை விரட்டியடிச்சாலும் வளத்த நாய் மாதிரி வந்துகிட்டேயிருந்தது.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“அவா கிட்ட எந்த நியாயத்தப் பேசி என்ன புரியவைக்க? பேச்சுக் குடுத்தா அது வீண் சண்டையிலதாம் போயி முடியும். சிலுவையின் மனத்திலுள்ள சங்கடங்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ளக் கூடிய நுட்பங்கள் ஏதுமற்ற அவளிடம் என்ன பேச? அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம் 'இம்புட்டெல்லாம் பேசுற ஒன்னால நாலு காசு சம்பாத்தியம் பண்ண முடியுமாடா?' என்ற ஒரே லா பாயிண்டுதான். அவாகூடப் பேசி என்ன ஆகப்போகுது? பேச்சைக் குறைத்துக் கொள்ளச் சொல்லி அன்னை இந்திரா நாட்டு மக்களுக்கு வானொலி வழியாக அறிவுறுத்தியதைச் சிலுவை வீட்டுக்குள் கடைப்பிடித்து ஒழுகினான்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“காரைக்காலிலிருந்து வீடு வந்து சேர்ந்த சிலுவைக்கு அவனுடைய அம்மையின் வசவுகளும், தகப்பனின் எச்சரிக்கைகளும் பரிசுகளாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. தனிமைப்பட்டுப்போய் வீட்டுக்குள்ளேயே கொஞ்ச நாள்களாக முடங்கிக்கிடந்தாள். அவனிடம் இருந்த என்சிபிஹெச் சோவியத் நூல்களும், எம்.ஏ. படிச்சபோது வாங்கி வச்ச புஸ்தகங்களும், வத்ராப் நூலகத்தில் டோக்கனில் வாங்கிய ரெண்டு புஸ்தகங்களும் இருந்ததால் பைத்தியம் பிடிக்காமலிருந்தது. கார்ல்மார்க்சின் மூலதனம், அவரும் பிரடெரிக் ஏங்கல்சும் சேர்ந்து எழுதிய நூல்கள், கார்க்கியின் சுயசரிதைகள், சிறுகதைகள், செகாவ் கதைகள், கோகோல், துர்க்கனேவ், தாஸ்தாவ்ஸ்கி நாவல்கள் சில வாங்கியிருந்தான். நாலு மாசம் காரைக்காலில் வேலை பார்த்த பணத்தில்தான் வாங்கினான். புஸ்தகங்களைத் தவிர பேச்சுத்துணைக்கு யாருமில்லை. அவனும் அம்மையும் அந்த ஒரே வீட்டுக்குள் நடமாடினாலும் அந்நியர்களாத்தான் இருந்தார்கள். சிலுவை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களோட சேந்துகிட்டு வத்ராப்ல திரிகிறதாகவும், அம்மையத் திட்டுகிறதாகவும் அவனப் பற்றி அந்தத் தெருவிலிருந்த முகம் தெரியாத உளவாளிகள் தகப்பனுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியதால், இந்தியக் குடியரசைக் காப்பாற்றுவதாக நம்பிய அவர் சிலுவைக்கு மாசாமாசம் அனுப்பி வந்த முப்பது ரூபாயை நிறுத்தியதோடு, சீக்கிரம் வேலை தேடிப் போகாவிட்டால், தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று எச்சரித்துக் கடிதம் போட்டார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“அவர் குடிச்சுக் குடிச்சு அழிய அழிய, அந்த அழிவைக்கண்டு சிலருக்கு இனந்தெரியாத சந்தோசம் ஏற்பட்டதாம். நல்லாயிருந்தவன் நாசமாப் போவதை உலகம் எப்பவும் குரூரமாக ரசிக்கத்தான் செய்யும். சம்பந்தமில்லாதவன் கூட அதைப் பார்த்துச் சந்தோஷப்படுவான்!”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“இத்தனைக்கும் ஒங்கிட்ட வேல கேட்டனா? இல்ல வேற ஏதாச்சும் ஒதவி கேட்டனா? எம்புட்டு மரியாதையாப் பேசினேன்? அந்த மரியாத ஒனக்கு எளக்காரமாப் போச்சு இல்ல? மனுசனுக்கு மனுசன் காட்டுற மரியாத ஒனக்கு ஒஞ் சாதித் திமிரக் காட்டச் சொல்லிச்சா? ஒனக்கும் எனக்கும் எப்பிடிடா ஆகாமப் போச்சு? ஒந்தங்கச்சிய பொண்ணு கேட்டனா? இல்ல ஒம் வாசப்படியவாச்சும் மிதிச்சனா? இதுக்கு மின்னாடி ஒன்னிய நாம் பாத்ததே இல்லியே. பெறகெதுக்குடா என்னிய சாதிப் பேர் கேட்டு இன்ஸல்ட் பண்ணனும்? நீ வெறும் எஸ்எஸ்எல்சி இல்லாட்டி பி.ஏ. படிச்சிருப்ப. ஆனா ஒன்னால ஒரு எம்.ஏ. கிராஜுவேட்ட ரொம்ப ஈஸியா இன்ஸல்ட் பண்ண முடியுது? ஒனக்கு இந்த அதிகாரத்தையும் ஆணவத்தையும் குடுத்தது எவன்டா? சொல்றா தேவ்டியா மகன சொல்றா?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“சிலுவையின் மனசில் மீண்டும் மீண்டும் அந்தச் சம்பவம் வந்து ஆத்திரமூட்டிக்கொண்டிருந்தது. அவன் அப்பிடித் தன்னை மறந்து கத்தியபோது அவனுக்குள் சமாதியாகியிருந்த அவனுடைய நூற்றாண்டுக்கால மூதாதையர்களின் ஆவிகள் கதறிக்கொண்டே அவன் வாய்வழியாக வெளியேறியிருப்பார்களா? அந்த ஆவிகள் அந்த குமாஸ்தாவை அவனுடைய கனவில் வந்து நடுங்க வைதிருப்பார்களா?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“படிவத்தைக் கவனமாக வாசித்துக்கொண்டிருந்த அலுவலரைப் பார்த்தான். ஆள் நல்ல கறுப்பு. இன்னும் கலியாணமாகாத ஆள் மாதிரி தெரிந்தது. கை நிறையச் சம்பாதிக்கிற இளைஞனுக்கேயுரிய களை அவர் முகத்தில் தெரிந்தது. சாதி என்ற இடத்துக்கு வந்ததும், ஆள் ரொம்ப சீரியஸாகிவிட்டார். நின்றுகொண்டிருந்த சிலுவையை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார். அவனுடைய எம்.ஏ. செர்டிபிகேட், மார்க் லிஸ்ட் எல்லாம் பார்த்தார். ஒண்ணும் பேசல. நிதானமாகக் காலை ஆட்டிக்கொண்டே, 'சாதிங்கிற எடத்துல என்ன சாதீன்னு எழுதலையே' என்று கேட்டார். மொதல்ல அவர் அப்பிடி யார்கிட்டக் கேட்கிறார்னு சிலுவைக்கித் தெரியல.

'எக்ஸ்கியூஸ்மி ஸார். என்ன கேட்டீங்க?' என்று சிலுவை கேட்டான். மிகவும் அடக்கமாகவே கேட்டான். அலுவலகத்தில் இப்பிடித்தான் பேச வேண்டும் என்று ஏற்கனவே ஒத்திகை பாத்தவன் போலப் பேசினான்.

'ம்... என்ன சாதின்னு கேட்டேன்' என்று அவர் தேவைக்கும் அதிகமான சப்தத்தோடு புருவங்களைச் சுருக்கியபடி கேட்டார். சிலுவைக்கி, இதுகூடவா இவருக்குத் தெரியவில்லைன்னு சிரிப்பா இருந்தது.

'அதுதான் பக்கத்துல எஸ்.ஸின்னு எழுதியிருக்கேனே ஸார். பாருங்க' என்று விரலைக்கூட நீட்டிக் காண்பித்தான். அவருக்குச் சட்டென்று எரிச்சல் வந்துவிட்டது.

'அது எனக்குத் தெரியாதா? எஸ்.ஸின்னு மொட்டையாப் போட்டாப் போதுமா? என்ன சாதீன்னு குறிப்பிட்டு எழுதணும். என்ன சாதி?' என்று நிஷ்டூரமாகச் சத்தம் போட்டுக் கேட்டார். சிலுவைக்குச் சர்வாங்கமும் ரௌத்திரம் பொங்கியது. அந்த அலுவலர் தன்னிடம் இவ்வளவு ஆங்காரத்தோடு என்ன விபரத்தைக் கேட்கிறார் என்பது சட்டென்று புரிந்தது.

'பறையன்' என்று அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாகக் கத்தினான். அவன் போட்ட அந்தச் சத்தத்தில் ஒரு நிமிசம் ஆபீஸ் கட்டடமே அதிர்ந்து சுவரில் விரிசல்கூட விழுந்திருக்கலாம். அந்த அலுவலர் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அப்பிடியே ஒரு நிமிசம் ஒக்காந்துவிட்டார். அதுக்குப் பெறகு பேச்சில்லை. அவரே அந்தப் பெயரை ஆங்கிலீசில் எழுதி அவனுடைய செர்டிபிகேட்டுகளுக்குப் பின்னால் ஸ்டாம்பு குத்தி, பதிந்ததற்கான அட்டையை மேசைமேல் போட்டார்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“அப்போது சிலுவைக்கு நாத்திகம், சோவியத்யூனியன் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய உறுதியான கருத்தியல் சார்ப்புகள் தோன்றிவிட்டன. என்.சி.பி.ஹெச் ஸ்டாலில் சில சோவியத் புஸ்தகங்களை வாங்கிப் படிக்கிற அளவுக்கு அதில் ஈடுபாடுகொண்டிருந்தான். மதவாதிகளுக்கு, கடவுள்மீது உள்ள நம்பிக்கையைப் போல சிலுவைக்கும் பொதுவுடைமை, நாத்திகம் மீது நம்பிக்கை வந்துவிட்டது. கடவுள் உண்டு என்று அடித்துப் பேசுவதற்கு நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கை, கம்யூனிசம், நாத்திகம் உண்மை என்று பேசுவதற்கு அவசியம். ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் அறிவைவிட நம்பிக்கைதான் ஆதாரம் என்பது அப்போது சிலுவையின் ஓர்மையில் படவில்லை. அவற்றையெல்லாம் கடந்துவந்த பிறகு பிற்காலத்தில்தன் தெரிந்தது. காலங் கடந்துதான் விசயம் புரிகிறது!”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“தாமிரபரணி ஆத்துல ஓடும்போது தண்ணிக்குள்ள லூர்துசாமி விழுந்துட்டானாம். நீச்சலடிக்கத் தெரியாததால செத்துப் போய்ட்டானாம்.போலீஸ் சொன்ன இந்தக் கதையை யாரும் நம்பல. புதை சேத்துல தடுக்கி விழுந்த அந்தப் பையனப் போட்டு நாலு போலீஸ்காரங்க பூட்ஸ் காலால மிதிச்சு மிதிச்சே கொன்னு போட்டதாக நேர்ல பாத்த பசங்க அழுதுகிட்டே சொன்னாங்க. அரசின் மிருக பலத்தின் ஒரு துளியை மாணவர்கள் அன்று ருசித்தார்கள். கலைஞரின் போலீஸ் அராஜக ஆட்சிக்குக் கேடு காலம் வந்துவிட்டதாக எல்லாரும் சொன்னாங்க. கருணாநிதியின் வீழ்ச்சியும், எம்.ஜி.ஆரின் எழுச்சியும் அன்று அந்த தாமிரபரணி ஆற்றில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. தமிழை அலங்காரமாக மேடைகளில் முழங்கி வந்த ஓர் அரசு இவ்வளவு மட்டமான கொடுங்கோலரசாக இருக்க முடியும் என்பது தெளிவாகியது. சிலுவைக்கு அன்றோடு திமுக பேரிலிருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் அடியோடு கலைந்தது. அவனைப்போல ஏராளமான இளைஞர்கள் வெளியேறினார்கள்.”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“எம்ஜிஆர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். கருணாநிதியோடு மோதி தனிக்கட்சி ஆரம்பிக்கும் சமயம் வந்துவிட்டதாக அவருக்கு நிச்சயமானதும், கருணைகொண்ட கலைஞரிடம் நிதி நிலைமை பற்றிக் கணக்குக் கேட்டார். கருணாநிதிக்கு அப்போ தன்ன யாராலும் அசைக்க முடியாதுன்னு அசாத்தியமான நம்பிக்கை. அசெம்பிளியில் உள்ள அவர் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லோரும் ஏகமனதாக அவரைத்தான் ஆதரிச்சாங்க. எம்ஜிஆர்தான் கட்சிய ஒடச்சாருங்கிற பட்ட பெயர் வரணும்னு கருணாநிதி காத்துக்கிட்டிருந்தார். அப்பிடியே நடந்தது. ரெண்டு திராவிடக் கட்சித் தலைவர்களும் பத்திரிகைகள்ல ஒருத்தரை ஒருத்தர் தாக்கி அறிக்கைவிட்டாங்க.

மறைந்த அண்ணா அவர்கள் எம்ஜிஆரைத் தமது 'இதயக்கனி'ன்னு சொன்னதா எம்ஜிஆர் அறிக்கைவிட, அந்தக் கனியில் வண்டு தொளைச்சதால் அண்ணா தூக்கிப் போட்டுட்டாருன்னு கலைஞர் வக்கணையா பதில்கூற, வண்டு துளைத்த கனிதான் ரொம்பத் தித்திப்பாயிருக்கும்னு வாத்தியார் பதில் அறிக்கைவிட்டார். ஒரே தமாஷா போச்சு. எம்ஜிஆருக்கு அந்தக் காலத்தில் தாம் குடுத்த 'புரட்சி நடிகர்'ங்கிற பட்டத்தை அவர் இன்னும் வச்சுக்கிரலாமான்னு கலைஞர் சொல்லிக் காட்ட, அது தேவையில்லை, 'மக்கள் திலகம்' என்ற பட்டமே போதும்னு எம்ஜிஆர் அறிக்கைவிட்டார். எம்ஜிஆர் புரட்சி நடிகர் இல்லை, 'புரட்டு நடிகர்'னு கலைஞர் சொல் விளையாட்டு விளையாட, ஆமா புரட்டு நடிகர்தான். அநியாயத்தை அக்கிரமத்தைப் புரட்டும் நடிகர்னு இவர் அதே விளையாட்டு விளையாடினார். சினாமாவுல எம்ஜிஆர் - நம்பியார் மாதிரி, அரசியல்ல, ரெண்டு பேரும் வார்த்தைச் சண்டை போட்டாங்க. பத்திரிகைகளுக்கு நல்ல விற்பனை!”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“வாழ்விருத்தலுக்கான போராட்டத்தில், தகுதி வாய்ந்தவை தாக்கு பிடிக்கும், அதுதான் இயற்கையின் தேர்வு என்று டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியின் விதிகளைச் சிலுவை நினைத்துக் கொண்டான். ஒரு செல் பிராணியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதப் பிராணிவரை இது நிஜம். இந்த விதிகளின் வீச்சத்தை மூடிமறைப்பதற்குத்தான் அறம், நீதி, ஒழுக்கம், முதலான செண்டுகளை அடித்துக்கொள்கிறார்களோ?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
“சிலுவை தமிழ் டியூட்டராகச் சேருவதற்கு முந்திய வருசம் தமிழ் லெக்சரராகச் சேர்ந்திருந்த சார்லஸ், அவன் எம்.ஏ. சேர்ந்தபோது அங்கே இல்லை. அவர் ஒரு கம்யூனிஸ்ட்காரர்னு சேவியர்ஸ் மேனேஜ்மெண்ட் அபிப்பிராயப்பட்டதால் சார்லஸ் வேலை இழந்தார். அந்த பிரின்சிபால் பாதர் சிரிச்சுக்கிட்டே அவரை வெளியே அனுப்பிவிட்டாராம். சார்லஸ்கூடவே பிரண்டாகயிருந்த இன்னொரு தமிழ் ஸார், தம்முடைய வேலையை நிரந்தரப்படுத்துவதற்காக, இப்பிடி சார்லஸ் ஒரு கம்யூனிஸ்டுன்னு மேலிடத்தில் வத்தி வச்சதாகப் பின்னால் சார்லஸ் சொன்னார். வாழ்விருத்தலுக்கான போராட்டத்தில, தகுதி வாய்ந்தவை தாக்கு பிடிக்கும், அதுதான் இயற்கையின் தேர்வு என்று டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியின் விதிகளைச் சிலுவை நினைத்துக் கொண்டான். ஒரு செல் பிராணியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதப் பிராணிவரை இது நிஜம். இந்த விதிகளின் வீச்சத்தை மூடிமறைப்பதற்குத்தான் அறம், நீதி, ஒழுக்கம், முதலான செண்டுகளை அடித்துக்கொள்கிறார்களோ?”
ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்

« previous 1 3