Jeyamohan's Blog, page 2299
September 7, 2011
தூக்கு-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய இடுகையைப் படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வரை நான் அந்த மூவரையும் தூக்கில் போடுவது சரி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். பின்னர் பேரறிவாளனின் தாயாரின் பேட்டியைப் படித்தேன். அவரது குற்றம் குண்டுக்கு பேட்டரி வாங்கியது என்று தெரிய வந்தது. பேட்டரிக்கு எந்தக் கடையில் பில் தருகிறார்கள் என்ற அவரது தாயாரின் கேள்வி நியாயமானதாகவே இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக ஒரு நிரபராதியை தண்டிப்பதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. பலரது எண்ணமும் அதுவாகவே இருக்கும்.
இந்த வகையில் திரு. ராம்ஜெத்மலானியின் ஒரு பேட்டியை நினைவுகூர்கிறேன் – இந்திரா கொலை வழக்கைப் பற்றி. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் வாதாடி இரண்டு பேர் குற்றமற்றவர்கள் என நிரூபித்து விடுதலையே வாங்கித் தந்தார். இதனால் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மத்தியில் அவருக்குக் கொலையாளிகளின் ஆதரவாளர் என்ற பெயரே இருந்தது/இருக்கிறது. ஆனால் அந்த பேட்டியில் அவர் அதைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த இருவரைக் காப்பாற்றியதைத் தன் வாழ்நாள் சாதனை என்றே கருதுவதாக அவர் கூறினார். பின்னர் அவர் கூறியது என்னை சிந்திக்க வைத்தது; அந்த மூன்றாவது நபரைக் காப்பாற்றமுடியவில்லை அவர் தூக்கிலிடப்பட்டார்,ஆனால் அவரும் குற்றமற்றவரே என்றார். பொதுவாக இத்தனை வருடங்களுக்குப் பின் ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்காகப் பேசுவதில்லை, அவர் இறந்தபின் அதற்கு அவசியமும் இல்லை. அவர் பேசியது எனது மனசாட்சியைச் சிறிது உறுத்தியது. அவர் கூறியது உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
இதே கண்ணாடி வழியாகப் பார்க்கையில் பேரறிவாளன் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் என்னை அவரது தூக்குக்கு எதிராக ஒரு நிலையை எடுக்க வைத்தது. உங்களது இடுகையைப் படித்தபின் மற்ற இருவர் குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும் மனிதாபிமானப்படி 20 வருட மன வலியின் பின் வாழ அனுமதிக்கப்படவேண்டியவர்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இது போக மக்களாட்சி மற்றும் நீதியின் ஆட்சி நிலைபெற்ற ஒரு நாட்டில் ஒரு குற்றத்துக்கு தண்டனை என்பது அந்தக் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்தே இருக்கமுடியும். கொலையில் இந்த மூவரின் பங்களிப்பு(சிபிஐ தரப்பின்படியே) சிறியது,ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் அளவு மிகப்பெரியது. இதே வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தின் முன் வந்தால் அவர்கள் தூக்கிலிருந்து தப்பிக்கக்கூடும் என்றே கருதுகிறேன். ஏனெனில் இன்று அது இந்திய சமூகத்தின் நினைவில் இருந்து பெரும்பாலும் அகன்றுவிட்ட ஒரு நிகழ்வு. உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை என்பது முதல் படி.
அதே சமயம் இந்த வழக்கோடு அஃப்ஜல் குரு வழக்கும் பின்னிப்பிணைந்து கொண்டிருக்கிறது. இம்மூவரும் மன்னிக்கப்பட்டால் அஃப்ஜல் குருவும் இதே காரணத்தைக் காட்டி தூக்கிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம் என்பதால் பலர் இதை எதிர்க்கின்றனர். என்னுடைய கேள்வி – இந்த காரணத்தால் அஃப்ஜல் குரு விடுதலை செய்யப்பட்டால்தான் என்ன என்பது தான். அஃப்ஜல் குரு தப்பிக்கக்கூடும் என்பதற்காக இந்த மூவரும் சாக வேண்டுமா?
மற்றபடி தூக்குதண்டனை என்பது மிகக் கொடிய கொலைக் குற்றங்களுக்கு எதிராக ஒரு 'deterrent' ஆக சட்டத்தில் இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். ஆனால் அதை செயல்படுத்துவது 'rarest of the rare case' களில், குற்றம் சாட்டப்பட்டவரின் பங்களிப்பைப் பொறுத்தே இருக்க வேண்டும்.
அன்புடன்,
சண்முகம்
அன்புள்ள சண்முகம்
தூக்கு தண்டனைக்கு எதிரான குரல்கள் எப்போதுமே மதம், அரசியல் சார்ந்த குழுப்பின்னணி கொண்ட குற்றவாளிகள் தூக்கிலிடும்போதே எழுந்து வருகின்றன. பிறர் மௌனமாக செத்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் இவ்வாறு மனிதாபிமானம் பேசுபவர்கள்மேல் நம்பிக்கை கொள்ளாமலிருக்க இதுவே காரணம். அரசியலற்ற அவர்களில் ஒருவர் தவறாக தண்டிக்கப்பட்டால், காவல்துறையால் கொடுமைக்குள்ளானால் , இந்த அரசியல்வாதிகள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என அவர்கள் அறிவார்கள்
ஜெ
September 6, 2011
நம் அறிவியல்- கடிதம்
அன்புள்ள ஜெ,
நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது.
வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத் தெரிய வந்தது. சூடுபட்டு விழித்துக் கொண்டோம். 2000 ம் ஆண்டில் வேம்பு வழக்கில் பழைய ஆயுர்வேத நூல்களின் பல சம்ஸ்கிருத சுலோகங்களை மேற்கோள் காட்டி இந்தியா வென்றது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் பாரம்பரிய அறிவியலைப் பாதுகாக்க அப்போதைய பா.ஜ.க அரசு நீண்ட காலத் தொலை நோக்குத் திட்டத்துடன் TKDL (Tranditional knowledge Digital library) என்னும் அற்புதமான தகவல் களஞ்சியத்தைப் பல்துறை அறிஞர்களின் உதவி கொண்டு உருவாக்கியது. வெறும் 10 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தத் தகவல் களஞ்சியம் அதன் பிறகு வந்த பல வழக்குகளில் சீன, மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மருத்துவ அறிவைத் திருடுவதைத் தடுத்தி நிறுத்திப் பாதுகாப்பளித்தது.
இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய டாக்டர் முரளி மனோகர் ஜோஷி கல்வியைக் காவிமயமாக்குவதாக நமது ஊடகங்களாலும், காங்கிரஸ், இடது கட்சிகளாலும் கடுமையாக வசைபாடப் பட்டார். பொட்டு வைத்த அவரது தோற்றத்தை ஜோசியர் என்று கேலி செய்தார்கள். டாக்டர் ஜோஷி நிறப்பிரிகை தொடர்பான இயற்பியல் ஆய்வுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதைக் கூட வசதியாக மறந்தும், மறைத்தும் விட்டார்கள்.
TKDL பற்றி அ.நீ எழுதிய கட்டுரை இங்கே - http://www.tamilpaper.net/?p=525
இதே போல யோகாசனங்களுக்குக் காப்புரிமை பெற முயன்ற பல மேற்கத்திய கம்பெனிகளின் சமீபத்திய முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டன. யோகாசனம் ஏதோ பூச்சாண்டி வேலை அல்ல, முறையாக ஆவணப்படுத்தப் பட்ட பாரம்பரிய இந்து அறிவியல் என்ற விஷயம் உலக அளவில் ஓரளவு இப்போது புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் யோகாசனங்கள் குறித்து ஏற்பட்டிருக்கும் பரந்துபட்ட விழிப்புணர்வும் இதற்கு ஒரு காரணம். யோகத்தை மக்கள் இயக்கமாக வெகுஜன அளவில் பிரலபப் படுத்திய பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ, ஜக்கி மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கும் இதற்காக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு,
யோகக்கலையை அப்படி சர்வதேச கவனத்துக்குக் கொண்டுசென்றவர் பி.கெ.எஸ்.ஐயங்கார். ராஜயோகத்தைப்பற்றிய முதல் விழிப்பை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர். அந்த முன்னோடிகளிடம் இருந்து அந்த அலை ஆரம்பிக்கிறது. மகேஷ் யோகிக்குப் பின் அதில் வணிகரீதியான பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகமாகியது. அதில் பல இழப்புகள். ஆனாலும் யோகா பிரபலமாக அதுவே காரணம்.
ஜெ
அன்புள்ள ஜெ,
இந்திய அறிவியல் எங்கே ? என்ற தங்கள் பதிவு கண்டேன்.
நல்ல விளக்கம். பழமை என்ற ஒற்றைச் சொல்லால் ஒட்டு மொத்த சிந்தனை மரபையும் ஒதுக்கிவிடும் போக்கு இன்று இருப்பது வேதனையளிக்கிறது.நீங்கள் குறிப்பிடும் இரண்டு நேர் எதிரான மனப்பாங்கும் எங்கள் மருத்துவத்துறையில் காணலாம்.ஒரு புறம் இந்திய மருத்துவம் என்றாலே அறிவியலுக்குப் புரம்பானது,ஆதாரமற்றது, காட்டு மிராண்டித்தனமானது என்று நினைத்து ஒதுக்கும் நவீன மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள்.இன்னொரு துருவமாக இந்திய மருத்துவத்தில் கான்சரில் இருந்து எயிட்ஸ் வரை எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது என்று கிளப்பிவிடுபவர்கள் இருக்கின்றனர். இடைநிலையில் இரண்டுக்குமான ஒரு உரையாடல் நடப்பது பகற்கனவாகவே இருக்கிறது.
தற்செயலாகக் கிடைத்த வீடியோ . பிள்ளையார் சதுர்த்தி அன்று அனுப்புவது பொருத்தமாக இருக்கிறது. நமது தொன்மையை எளிதில் புறந்தள்ளுவது அறிவான செயலாக இராது .
http://www.youtube.com/watch?v=U9zqRsdYyFA
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அன்புடன்
Dr.ராமானுஜம்
யோகமும் கிறித்தவமும்
அன்பின் ஜெ.எம்.,
யோகக் கலை பற்றிய தவறான கிறித்துவப் பார்வை ஒன்றை இன்று தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.
மனம் வருந்துகிறது.
அத்வைதத் தத்துவத்தை இதை விட அவலமாக்கி விட முடியாது…
அந்த ஆற்றாமையை உங்களுடன் பகிர விழைகிறேன்.
இனி..அந்தப் பதிவு..
யோகா – ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் -
எம்.ஏ.சுசீலா

அன்புள்ள சுசீலா,
அந்தக் கட்டுரை வாசித்தேன். கிறித்தவ நோக்கில் அது சரியான கட்டுரைதான்.
யோகம் என்பது ஒரு வெறும் பயிற்சி அல்ல. அதன் பின் ஒரு விரிவான தத்துவம் உள்ளது, அதை வேறு மதங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற அவசியம் உண்டா என்ன?
முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்பதெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீகப் பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்தத்துவமுள்ள ஒருவரே எனத் தெளிவாய்க் கூறுகிறது.
என அந்த ஆசிரியர் மிக சிறப்பாகவே அந்த வேறுபாட்டைச் சொல்கிறார்.
நாம் இன்று கடைப்பிடிக்கும் சேஸ்வர யோகம் கூறும் ஞானம் என்னவென்றால் இந்தப் பிரபஞ்சமும் பரம்பொருளும் வேறு வேறல்ல என்பதே. பரம்பொருள் என்பது நம் ஞானத்துக்கு அப்பாற்பட்ட ஓர் அறியமுடியாமை மட்டுமே. அதை அதன் வடிவமாக நம்மைச்சூழ்ந்துள்ள முடிவிலா பெருவெளியும் முடிவிலா விண்ணகங்களும் நிறைந்த பிரபஞ்சமாகவே காணமுடியும், அறியமுடியும். பிரபஞ்சம் பரம்பொருளின் படைப்பு அல்ல. ஏனென்றால் பரம்பொருள் அன்றி எதுவுமே இல்லை. ஆகவே பிரபஞ்சமும் அதன் சிறுதுளியாகிய நாமும் பரம்பொருளே. நம்மை நாம் முழுதுணர்வது பரம்பொருளை அறிவதே. அதுவே மனிதனுக்குச் சாத்தியமான மெய்ஞ்ஞானம்.
ஆனால் நாம் நம்மை நாமென உணரும்போது பிரபஞ்சத்தைப் பிறிதென உணர்கிறோம். ஆகவே பரம்பொருளில் இருந்து வேறுபடுகிறோம். அந்த பேதபுத்தியே அறியாமை என்பது யோகஞானம். அந்த அறியாமையே துயரம். துயரத்தை வெல்வதே முக்தி. அதற்கு அறியாமையை வெல்லவேண்டும். அறியாமையின் மூலகாரணமாகிய பேதபுத்தியில் இருந்து மீண்டு ஒன்றாதலே யோகம். யோகம் என்றாலே இணைவு என்றே பொருள். அதற்கான வழிமுறைகளைப் பதஞ்சலி முதல் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
கிறித்தவ மரபின்படி இறைவன் படைப்பாளி, இந்த உலகம் படைப்பு [கிறித்தவக் கொள்கைப்படி பிரபஞ்சம் என்ற கருத்தாக்கம் கிடையாது] படைப்பை நிர்வகிப்பவன் இறைவன். கடவுளுக்கு ஆளுமையும், வடிவமும், தனித்த இருப்பும் உண்டு. மனிதன் கடவுளின் அதே வடிவில் படைக்கப்பட்டவன். ஆகவே படைப்புகளில் முதன்மையானவன் அவன். பிற படைப்புகள் அனைத்துமே மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதனுக்குக் கடவுள் தந்தை போன்றவர். அவர் மனிதர்கள் இறந்தபின் சென்று சேரும் பரலோகம் என்னும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு பூமியை நிர்வாகம்செய்கிறார்.
கிறித்தவக் கொள்கையின்படி மனிதன் கடவுளின் ஆதி இச்சையை விட்டு மீறி சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்தான். ஆகவே பாவத்தில் வீழ்ந்தான். அந்தப் பாவத்தை எல்லா மனிதர்களும் கருவிலேயே கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாவத்தை ஒவ்வொருவரும் கழுவிக்கொள்ளவேண்டும். அதற்கான ஒரே வழி கடவுளாகிய பரமபிதாவிடம் முழுமையாகச் சரண் அடைவதும், பாவங்களை அறிக்கையிட்டு மேலும் பாவம்செய்யாமல் வாழ்வதும் மட்டுமே.
கிறித்தவ மரபின்படி பாவத்தின் விளைவாக வரும் துன்பங்களைத் தீர்ப்பதற்காகவும், உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளுக்காகவும் பரமபிதாவிடம் வேண்டிக்கொள்ளுவது மட்டுமே ஒரு கிறித்தவன் செய்யக்கூடிய ஒரே வழிபாட்டுமுறையாகும். தியானம், ஜெபம் போன்ற சொற்களைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவதெல்லாம் 'வேண்டிக்கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் மட்டுமே
ஆகவே அந்தக் கிறித்தவ அறிஞர் அவரது கோணத்தில் சரியாகவே சொல்கிறார். அவர் கொண்டுள்ள மத நம்பிக்கை அது.அவருக்கு சரியான பாதை அதுவே, அவர் அதை நம்பும் வரை.
ஓர் இந்து பிறமதங்களை விமர்சனம்செய்யக்கூடாது, மறுக்கவும்கூடாது. நதிகள் பல கடல் ஒன்றே என்பதே உபநிடத ஞானம்.
ஜெ
September 5, 2011
தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
யூஜின் அயனெஸ்கோ எழுதிய காண்டாமிருகம் என்ற பிரெஞ்சு நாடகம் புகழ்பெற்றது [ Rhinoceros - Eugène Ionesco]. எண்பதுகளில் அந்நாடகத்தின் மலையாளத் தழுவலை நான் திருவனந்தபுரத்தில் மேடையில் முதல் முறையாகப் பார்த்தேன்.பிற்காலத்தில் திரைப்படத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன்குட்டிநாயர் அதில் சிறப்பாக நடித்திருந்தார்.
அதில் ஒரு காட்சி வரும். மேடையில் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். குடையை இடுக்கி, வேட்டியை மடித்துக்கட்டி, வெற்றிலைபாக்குக்கடை முன்னால் நின்று சாவகாசமாகக் குதப்பியபடி பீடி பிடித்தபடி கேரள கூட்டணி அரசியலை அலசிக்கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய காண்டாமிருகம் அவர்கள்நடுவே புகுந்து திம்திம் என அந்தப்பக்கமாக செல்லும் .அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் அதை கவனிக்கவே மாட்டார்கள்.

ஆல்காட்
அதனுடன் ஒப்பிடக்கூடிய அபத்தங்களை நாம் நம் வரலாற்றெழுத்திலே காணலாம். எதையெதையோ பேசிக்கொண்டிருப்பார்கள். நடுவே பிரம்மாண்டமாக ஒன்று கடந்து சென்றிருக்கும், யார் கண்ணிலுமே படாது. அந்த விஷயத்துக்கு மட்டுமாக ஒரு தனி குருட்டுத்தன்மை இருக்கும். அதற்குச் சிறந்த உதாரணம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த தலித் எழுச்சியை தமிழ் வரலாற்றுப்பார்வை அப்படியே கண்மூடித் தாண்டிவந்தது.
சொல்லப்போனால் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் வெகுஜன அரசியல் இயக்கம் என்றே தலித் எழுச்சியைச் சொல்லிவிடமுடியும். சென்னையைச் சுற்றி வாழ்ந்த தலித் மக்களிடையே ஆயிரத்து எண்ணூறுகளின் கடைசியில் உருவானது இந்த விழிப்புணர்ச்சி. அதன் நாயகர்கள் பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள். அந்த எழுச்சி உருவாவதற்கான சமூகக்காரணங்கள், வரலாற்று வாய்ப்புகள் பற்றி எல்லாம் நமக்கு இன்று எதுவுமே தெரியாது. காரணம் கிட்டத்தட்ட நூறு வருடம் இந்த வரலாற்றுநிகழ்வு முழுக்கவே நம் பார்வையில் படாமல் இருந்தது, நமக்கு மறைக்கப்பட்டிருந்தது.
இன்றைக்குக் கூட இந்தமூவரைப்பற்றி விரிவான, முழுமையான ஒரு வாழ்க்கைவரலாறு இல்லை. இந்த அரசியல் அலையைப்பற்றி அறிவதற்கான நல்ல வரலாற்றாய்வு நூல் இல்லை. இப்போதுதான் எழுத்து போன்ற தலித் அமைப்புகளின் முன்முயற்சியால் சிறிய அளவில் அந்நூல்கள் நூறாண்டுக்கால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் அச்சேற ஆரம்பித்துள்ளன. இனி மேலும் நூல்கள் வெளிவரக்கூடும். இந்தத் தளத்தில் சலிக்காமல் சோர்வில்லாமல் பணியாற்றிவரும் அயோத்திதாசர் நடுவம் நண்பர்களான அலெக்ஸ், பாரிசெழியன் ஆகியோரை மனமாரப் பாராட்டுகிறேன்
இவையெல்லாம் ஆதாரநூல்கள். இந்நூல்கள் காட்டும் தகவல்கள் வழியாக ஒரு விவாதம் நிகழ்ந்து அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக நம் வரலாற்றுணர்வு பெருமளவு திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்நூல்கள் பொது அறிவுத்தளத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்ற எண்ணம் நண்பர்களுக்கு இருக்கிறது. இந்தவகையான கருத்தரங்குகள் அந்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை. அது நிகழுமென எதிர்பார்ப்போம்.
இந்தியவரலாற்றில் சில ஆச்சரியமான அம்சங்கள் உண்டு. பழையவரலாறு நம் மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்,சமகாலத்துக்கு கொஞ்சம் நெருக்கமான வரலாறைக் கேட்டால் ஒன்றுமே தெரிந்திருக்காது. கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழன் கப்பல் ஓட்டிக்கொண்டு சென்று மெக்ஸிகோவிலே மாயா நாகரீகத்தை உருவாக்கினான் என்று பக்கத்தில் நின்று பார்த்தவர்கள் போல கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் நீ வாழும் நகரத்தை ஆண்டது யார் என்று கேட்டால் தெரியாது
இது நம் பண்பாடாகவே ஆகிவிட்டிருக்கிறது. 'நாங்கள்லாம் காவேரிப்பூம்பட்டினத்திலே இருந்துவந்தவங்க, எங்க குலத்திலே செம்புடையார்னு ஒரு பெரியவர் அந்தக்காலத்திலே குலோத்துங்க சோழன் போருக்கு போறப்ப இவருதான் அவன் வாளை உருவி அவன் கையிலே குடுப்பார்' என்று குலவரலாறு சொல்வார்கள். 'சரி, உங்கள் தாத்தாவுக்கு அப்பா என்ன தொழில் செய்தார்?' என்று கேட்டால் சொல்லத்தெரியாது.
நமக்கு வரலாற்றுணர்வு கிடையாது என்பதை எல்லாருமே சொல்லியிருக்கிறார்கள். அதை நமக்கு நவீனவரலாற்றுணர்வு கிடையாது என்று நான் திருத்திச் சொல்லுவேன். நமக்கு வரலாறு என்பது குலவரலாறு மட்டும்தான். குலப்பெருமையை சொல்வதற்கான வரலாற்றுப்பிரக்ஞை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. நாம் பண்டைய வரலாற்றுக்குச் செல்வதே அதற்காகத்தான், அங்கே நாம் பெருமையடித்துக்கொள்ள ஒரு தொன்மத்தை நாம் கண்டடைய முடியும்.
இன்றைக்கு நிகழும் வரலாற்றாய்வுகளை நான் கூர்ந்து பார்க்கிறேன். பெரும்பாலான வரலாற்றாய்வுகள் நிரூபணம் சாத்தியமே இல்லாத தளங்களில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. சீனமொழி தமிழில் இருந்து வந்தது, அரேபிய நாகரீகமே தமிழ் நாகரீகம்தான் -இந்தவகையில். அது சீனன் காதிலும் அரேபியன் காதிலும் விழப்போவதில்லை என்ற நம்பிக்கை.
தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் எழுதப்படவேண்டிய ஆய்வுக்களங்களில் செல்லும் ஆய்வாளர்கள் நம்மிடம் மிகமிகக் குறைவு. ஆகவே நாம் சங்ககாலத்துக்கு முன்னால் பார்க்க முயல்கிறோம், பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுவதே இல்லை.
ஓர் உதாரணம் சொல்கிறேன், கட்டபொம்மன் பற்றிய எல்லா மூலஆவணங்களும் நம் ஆவணக்காப்பகங்களில் உள்ளன. அவற்றை சென்று எடுத்து வாசித்துப்பார்த்து ஒரு உண்மையான வரலாறு இன்னும்கூட எழுதப்படவில்லை. கட்டபொம்மன் சினிமாவுக்கு சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வசனத்தையே வரலாறாகக் கொண்டிருக்கிறோம் நாம்.
ஆகவேதான் ஒருநாள் எனக்கு அலெக்ஸ் இந்நூல்களை அளித்தபோது ஒருவகையான பரவசம் ஏற்பட்டது. இந்நூல்களில் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களும் திருமதி என்.ஏ.கோர்ட்ரைட் அவர்களும் சேர்ந்து எழுதிய 'தலித் மக்களும் கல்வியும்' என்ற சிறிய நூல் ஒரு நேரடி ஆவணம். அது கருத்துக்களை முன்வைக்கக்கூடிய நூல் என்பதைப்பார்க்கிலும் கருத்துக்களுக்கு வந்து சேர்வதற்கான மூல ஆவணம் என்ற வகையில் மிக முக்கியமானது.
நூறாண்டுகளுக்கு முன்னால் சென்னையை ஒட்டி ஒரு வெகுஜன மக்களியக்கம் இயல்பாக உருவாவதற்கான சூழல் அமைந்தது. அதை நான் இப்படி உருவகித்துக்கொள்கிறேன். ஆங்கிலேயர் செறிந்த சென்னையில் அவர்களுக்கு மாட்டிறைச்சி சமைக்கவும் பரிமாறவும்கூடிய சமையற்காரர்கள் தேவைப்பட்டார்கள் இந்தியசாதிகளில் அதை தலித்துக்கள் மட்டுமே செய்யமுடியும் என்பதனால் எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இருளில் கிடந்த தலித்துக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அது அவர்களுக்கு சிறிய பொருளியல்விடுதலையை அளித்தது.
பொருளியல் விடுதலை உடனே கல்வியாக மாறும். தலித்துக்களில் ஒருசாராருக்கு ஏற்கனவே மரபுவழிப்பட்ட கல்விமுறைகள் அவர்கள் சாதிக்குள்ளேயே இருந்தன. கல்வி அவர்களுக்குப் புதியதல்ல. ஆகவே அவர்கள் மிக எளிதாக, ஒரேதலைமுறையில் உயர்கல்வி வரை வந்து சேர்ந்தார்கள். அந்த படித்த தலித் சாதியினர் அன்றைய சமூகச்சூழலில் இருந்த ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஆங்கிலக்கல்வி மூலம் பெற்றுக்கொண்ட நவீன ஜனநாயக விழுமியங்கள் அவர்களுக்கு வழிகாட்டின.
இப்படித்தான் இங்கே நான் முதலில் சுட்டிக்காட்டிய முதல் அரசியல் விழிப்பியக்கம் உருவானது. உண்மையில் இங்கே உருவான பிற அரசியலியக்கங்களுக்கு அதுவே முன்னோடியானது.இங்கே நிகழ்ந்த வெகுஜன அரசியலுக்கு அதுவே தூண்டுகோலானது என்று சொல்லலாம். ஆனால் பிறகு எப்போதோ பிற்பாடு உருவான காங்கிரஸ் இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றால்தான் தமிழகத்தில் தலித் விடுதலைக்கான தொடக்கம் உருவாக்கப்பட்டது என்ற சித்திரம் வரையப்பட்டுவிட்டது.
அதிலும் இன்று, 1925க்குப்பின் உருவம் கொள்ள ஆரம்பித்த திராவிட இயக்கங்களை தலித் விழிப்புணர்ச்சிக்கான முக்கியமான காரணிகளாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினர் விரும்பி ஏற்கும் வரலாற்றுப்பாடமாக அது உள்ளது. அதற்குஎதிரான பாடங்களை புதைத்து அழிக்க நூறாண்டுக்காலமாக அவர்கள் முயன்றுள்ளனர். முன்னோடி தலித் சிந்தனையாளர்கள் வரலாற்றில் மறைந்தது இவ்வாறுதான். தி.பொ.கமலநாதன் அவரது தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் என்ற நூலில் விரிவாக அந்த மோசடியை விளக்கிப்பேசுகிறார்.
மேலே சொன்ன முதல் தமிழ் வெகுஜன இயக்கமான தலித் இயக்கம் நிகழ்வதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக சென்னை அடையாறில் உருவான பிரம்மஞான சங்கமும் அதன் நிறுவனத்தலைவரான கர்னல் ஆல்காட்டும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு சிறிய ஆவணநூல் என்று 'தலித் மக்களும் கல்வியும்' என்ற நூலைச் சொல்லலாம்.

ஆல்காட் ஆரம்பித்த முதல் பஞ்சமர் பள்ளி
உண்மையில் இந்த நூல் ஓர் அறிக்கையும் இரு துண்டுப் பிரசுரங்களும் இணைந்த தொகுப்பு மட்டுமே. ஆல்காட் எழுதிய The Poor paraiyah என்ற சிறு நூலும் கோர்ட்ரைட் எழுதிய How to teach Paraiyah' என்ற சிறு நூலும் அடங்கியது இது. ஆல்காட் ஆரம்பித்த பஞ்சமர் இலவசப்பள்ளி என்ற அமைப்பைப்பற்றிய ஒரு அறிக்கை என இதைச் சொல்லலாம்
இன்றைக்கு ஆல்காட் பள்ளி என்ற பேரில் அடையாறில் இயங்கி வரும் தொன்மையான இந்தப்பள்ளியானது பஞ்சமர் என அழைக்கப்பட்ட தலித் மக்களுக்கு இலவசமாக நல்ல கல்வி அளிக்கும்பொருட்டு ஆல்காட் அவர்களால் 1894ல் ஆரம்பிக்கப்பட்டது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. நம் சமகால வரலாற்றில் புதைந்து போன ஒரு விஷயமாக இது உள்ளது. இந்தப்பள்ளி தமிழகத்தின் தலித் எழுச்சியில் ஆற்றிய பங்கு மிகமிக முக்கியமானது.
ஆல்காட்டின் திட்டம் பிரம்மாண்டமானது. ராஜ்சேகர் பாசு எழுதிய 'நந்தனாரின் குழந்தைகள் ' [ Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 - 1956. Raj Sekhar Basu ] என்ற நூலில் ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தலித் மாணவர்களுக்கு நவீனக் கல்வி அளித்து உயர்நிலைப்பள்ளிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஆல்காட்டுக்கு இருந்தது என்று நாம் காண்கிறோம். 1895ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பஞ்சமர் இலவசப்பள்ளி 55 மாணவர்களுடன் ஆரம்பித்தது. இரண்டு வருடங்களில் 125 மாணவர்களாக வளர்ந்தது.
பல எதிர்மறைச்சூழல்களில் செயல்பட்டது என்பதை நாம் காண்கிறோம். குறிப்பாக பஞ்சங்கள். அவை குழந்தைகள் வேலைசெய்தாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கின. மேலும் மக்கள்தொகை செறிந்த நகரம் சுகாதாரப்பிரச்சினைகளால் நோய்க்களமாகியது. தொற்றுநோய்களில் குழந்தைகள் இறந்துகொண்டிருந்தன. ஆகவே ஒருகட்டத்தில் பிரம்மஞானசபை ஆசிரியர்கள் குடிசைகள்தோறும் சென்று மாணவர்களைத் திரட்டிப் பள்ளிக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரம்மஞானசபையின் தலித் சேவைகளை விரிவாகப்பேசும் ராஜ்சேகர் பாசுவின் இந்த நூலைத் தமிழாக்கம்செய்வது அவசியம்.
இந்தப் பணிகளுக்குப் பின்புலமாக அமைந்தவர் இப்பள்ளிகளின் பொறுப்பில் இருந்த கல்வியாளரான திருமதி என்.ஏ.கோர்ட்ரைட். இலங்கையில் கல்விச்சேவைசெய்த இந்த அம்மையாரை ஆல்காட் தமிழகத்துக்குக் கொண்டுவந்தார். கிண்டர்கார்ட்டன் வகைக் கல்வியை அவர் அந்த பள்ளிகளில் அறிமுகம்செய்தார். இந்த அம்சத்தை நாம் கொஞ்சம் கவனமாக ஆராயவேண்டும். அக்கால பிரிட்டிஷ் பள்ளிகள் தொன்மையான மதபாடசாலைகளான ஜிம்னேஷியங்களின் அமைப்பு கொண்டவை. ஆரம்பக்கல்வியில் நம் திண்ணைப்பள்ளிக்கூட முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையில் கடுமையான கண்காணிப்புடன் பள்ளியை நடத்தும் மூத்த ஆசிரியரே பொறுப்பாளர்.
பஞ்சம மாணவர்களுக்கு உடனடியாகக் கல்வியை அளிக்கும் ஒரு அமைப்பை முன்னெடுத்த பிரம்மஞானசங்கம் அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு எங்கே செல்லும்? பஞ்சமர் பள்ளிகளில் பணியாற்ற பஞ்சமர்களையே ஆசிரியர்களாக கண்டுபிடிக்கவேண்டும் இல்லையா? அத்தனை ஆசிரியர்களுக்கு முதல்தலைமுறை நவீனக்கல்வி பெறும் பஞ்சமர்களுக்குள் எங்கே போய் தேடுவார்கள்? ஆகவே என்.ஏ.கோர்ட்ரைட்டின் கிண்டர்கார்ட்டன் கல்விக்கூட முறை பேருதவியாக அமைந்தது. இந்த முறையில் சிலமாதங்கள் மட்டும் அடிப்படைப் பயிற்சி மட்டும் பெற்ற ஒருவர் குழந்தைகளுக்கு விளையாட்டுமூலம் கல்விகற்பிக்கமுடியும். மூத்தமாணவர்கள் குழந்தை மாணவர்களுக்குக் கல்வியளிக்க முடியும்.
என்.ஏ.கோர்ட்ரைட் பஞ்சம மாணவர்களுக்குக் கல்வியளிக்க செய்த சேவைகள் இன்று மறக்கப்பட்டுவிட்டன. மிகமிகக் குறைவாகவே அவரைப்பற்றிய தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. தலித் வரலாறு துளித்துளியாக எழுதப்படும் இந்தக் காலகட்டத்தில் என்றாவது அம்மையாரின் ஒரு நல்ல வரலாறும் எழுதப்படும் என நான் நம்புகிறேன். ஆகவேதான் தலித் மாணவர்களை எப்படிப் பயிற்றுவிக்கவேண்டும் என்ற இந்த கையேட்டை அவர் எழுதியிருக்கிறார். கிண்டர்கார்ட்டன் ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சிக்கையேடு இது . அன்றைய தலித் மாணவர்களைக் கற்பிப்பதில் இருந்த பிரச்சினைகளை விவரிக்கும் நூல்.
ஆல்காட்டின் பஞ்சமர் இலவசப்பள்ளிகள் சென்னையின் கல்வி வரைபடத்தை மாற்றியமைத்த சித்திரத்தை நாம் இந்தச் சிறுநூலில் காண்கிறோம். ஒவ்வொரு வருடமும் பள்ளிகளும் மாணவர்களும் ஏறிக்கொண்டெ செல்கிறார்கள். நடுவே வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. அந்தக் காலகட்டத்துச் சூழலைக் கருத்தில்கொண்டு பார்க்கவேண்டியது இது. மாணவர் வருகை குறைந்தமையால் ஆல்காட் பள்ளிகள் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அறிமுகம் செய்தன- மதிய உணவுத்திட்டம். ஆம், இந்தியப்பள்ளிகளிலேயே முதல் இலவச மதிய உணவுத்திட்டம் ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளிகளில் 1902 ல் அறிமுகம்செய்யப்பட்டதுதான் என்ற வரலாற்று உண்மையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அக்கால அரசாங்க ஆவணங்களில் இருந்து ஆல்காட் பள்ளிகளில் கற்ற மாணவர்கள் பிற கல்விக்கூடங்களில் கற்ற மாணவர்களை விட எளிதாக அதிக மதிப்பெண் பெற்று சிறந்த இடத்தில் இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் ராஜ்சேகர் பாசு. ஒருகட்டத்தில் பள்ளிகளுக்கு நிதிச்சுமை அதிகரித்தது. அந்நிலையில் பிரம்மஞான சபையின் அமெரிக்க தொடர்பாளரான அலெக்ஸாண்டர் ஃபுல்லர்ட்டன் நிதிசேகரிக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். தமிழக தலித்துக்களின் நிலைமைகளைப்பற்றி விரிவான கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதி அவர்கள்மேல் பரவலாக உலகக் கவனத்தைக் கொண்டுவந்தவர் அவர். சென்னையில் தலித்துக்கள் நடுவே களப்பணி ஆற்றியவர். தமிழக தலித் வரலாற்றில் அவர் பெயரும் என்றேனும் இடம்பெறுமென நினைக்கிறேன்.
தன்னுடைய நாட்குறிப்புகளில் ஆல்காட் சென்னையை அடுத்த உரூர் என்ற கிராமத்தில் கோர்ட்ரைட் அம்மையாரின் பள்ளிக்கு அமெரிக்க வருகையாளர்களுடன் சென்றதைப்பற்றி எழுதுகிறார். 114 மாணவர்கள் படித்த அந்த பள்ளியின் மாணவர்களின் தரம் அன்றைய சென்னை ராஜதானி பள்ளிகளின் பொதுவான தரத்தைவிடப் பலமடங்கு அதிகம் என்று அவர் சொல்கிறார்.
இந்த முக்கியமான சேவைக்குத் தொடக்கமிட்ட ஆல்காட்டைப்பற்றி இன்று அனேகமாக எந்த விவாதங்களிலும் எவரும் குறிப்பிடுவதில்லை. தலித் மக்களிலேயே பெரும்பாலும் எவருக்கும் ஆல்காட் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என நம்பலாம். நானேகூட ஒரு இறையியலாளராக அவரை அறிந்திருந்தாலும் அவர் தலித்துக்களுக்கு ஆற்றிய சேவையை அலெக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறிய நூல் வழியாகவே முதலில் அறிந்துகொண்டேன். அதில் எனக்கு வெட்கமில்லை, ஏனென்றால் எனக்கு இவ்வரலாறுகள் இதுவரை சொல்லப்படவேயில்லை.
1832 ல் பிறந்து 1907 ல் மறைந்த கர்னல் ஆல்காட் பிறப்பால் அமெரிக்காவைச் சேர்ந்தவர். நியூஜெர்ஸி ஆரஞ்ச் பகுதியில் ஒருவணிகருக்கு மகனாகப் பிறந்தார்.ஆரம்பத்தில் கிறித்தவ சேவை அமைப்புகளில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை வறுமையுற்றமையால் படிப்பை முடிக்காமல் ஆல்காட் நியூயார்க் டிரிபியூன் பத்திரிகையின் விவசாயச் செய்தியாளராக பணியாற்றினார். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்க உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்களுக்கு எதிராகப் போராடினார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு நிறவெறி, இனவெறிக்கு எதிரான எண்ணங்கள் உறுதிப்பட்டன. ஆபிரகாம்லிங்கனுக்கு நெருக்கமானவராக இருந்த ஆல்காட் அவர் கொல்லப்பட்டபோது விசாரித்தகுழுவிலும் பணியாற்றினார். கர்னல் பட்டத்துடன் ஓய்வுபெற்றபின் அவர் கொஞ்சநாள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1874ல் அவர் எட்டி சகோதரர்கள் என்ற பிரபலமான ஆவி உபாசகர்களை ஆராய்வதற்காகச் சென்றார். அது அவருக்கு மறைஞானம் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதனூடாக அவர் கீழை ஞானத்தைக் கற்க ஆரம்பித்தார். இத்தருணத்தில் அவர் கீழை மறைஞானத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்துகொண்டிருந்த ஹெலெனா பிளவாட்ஸ்கியைச் சந்தித்தார். அச்சந்திப்பு வாழ்நாள் நீண்ட ஓர் நட்பாக அமைந்தது. அவர்கள் இணைந்து 1975ல் பிரம்மஞான சங்கத்தை அமைத்தார்கள்.
ஆல்காட் 1879ல் மும்பை வழியாகச் சென்னைக்கு வந்தார். அவர் இந்தியாவை புத்தர் பிறந்த மண்ணாகவும் தன் சொந்த நாடாகவும் உணர்ந்தார். சென்னையில் அடையாறில் பிரம்மஞானசங்கத்தின் தலைமைச்செயலகம் அமைந்தது.
ஆல்காட் அமெரிக்காவில் இருக்கும்போதே தன்னை புத்தமதத்துக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் 1880ல் கொழும்புவில் சடங்குகள் மூலம் முழுமையாகவே பௌத்தரானார். ஆல்காட்டின் சிந்தனைத்தளத்து முக்கியமான பங்களிப்பு என்பது அவர் கட்டியமைத்த புதிய ஏற்பாடு புத்தமதம்தான்.
இந்தியா , திபேத் ,தாய்லாந்து , இலங்கை, பர்மா என பலநாடுகளில் இருந்த பலவகையான பௌத்த மரபுகள் தங்களுக்குள் தொடர்பே இல்லாமல் இருந்தன. அந்த பௌத்தஞானமரபுகளை சீராகத் தொகுத்து அவற்றின் சாராம்சமான தத்துவத்தை மீட்டவர்களில் ஆல்காட் முக்கியமானவர். 1881ல் வெளிவந்த அவரது பௌத்த ஞானம் [The Buddhist Catechism] என்ற நூல் இவ்வகையில் ஒரு முன்னோடி ஆக்கம். பின்ன்னாளில் அம்பேத்கார் பௌத்தம் பற்றி ஆய்வுசெய்து எழுதியபோது அவரது சிந்தனையை ஆல்காட் பெருமளவு பாதித்திருப்பதைக் காணமுடிந்தது.
ஆல்காட் 1907ல் இறப்பது வரை சென்னை அடையாறு பிரம்மஞானசபையின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அவருக்குப்பின்னர் அவரது இடத்துக்கு அன்னிபெசண்ட் வந்தார். ஆல்காட் சென்னையில் இருந்த காலகட்டத்தில் சென்னையின் அறிஞர்களுடன் நேரடித் தொடர்புடையவராக இருந்தார். அவருடன் தொடர்புகொண்டசிந்தனையாளர்களே சென்னையில் ஒரு பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை அமைத்தார்கள். அவர்களில் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர்முக்கியமானவர்கள்.
சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் எழுச்சிக்கு இருவகையில் ஆல்காட் காரணமாக இருந்தார். ஒன்று அயோத்திதாசர் போன்றவர்களுடன் அவருக்கிருந்த நேரடி உறவுமூலம் நவீன அரசியலெண்ணங்களை அவர்களுக்கு அளித்தார். தலித் மாணவர்களுக்கு நவீனக்கல்வியை அளித்ததன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகக் காரணமாக அமைந்தார்.
ஆல்காட்டின் இந்த தத்துவத்தளத்துப் பங்களிப்பு பெரும்பாலும் ஆய்வாளர்கள் அறிந்தது. அவர் இங்கே அயோத்திதாசர் போன்றவர்களுக்கு அளித்த ஆதரவு காரணமாக ஒரு தலித் மறுமலர்ச்சி உருவாகக் காரணமாக அமைந்தார். அதிகமும் அறியப்படாமல் போனது அவரது கல்விப்பணி. இந்தச்சிறுநூல் அதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆல்காட் மறைந்து போன பின் இந்நூல் வழியாகத் தமிழ் அறிவுலகப்பரப்பில் மீண்டும் தோன்றியிருக்கிறார். அதற்காக அலெக்ஸுக்கும் பாரிக்கும் நன்றிகள். ஒரு இலட்சியவாதி மறக்கப்படுவதென்பது இலட்சியம் என்ற கருத்தாக்கமே தோற்கடிக்கப்படுவதுபோல. ஒருபோதும் அது நிகழக்கூடாது. மகத்தான கனவுகள் ஒருபோதும் நிறைவேறாமல் போவதில்லை.
அமெரிக்கா உலகுக்கு அளித்தவை இருவகை சிந்தனைப்போக்குகள். ஒன்று, எமர்சன், தோரோ போன்றவர்களால் உருவாக்கப்பட்ட ஆழ்நிலைவாதம். [Transcendentalism] இன்னொன்று, சார்ல்ஸ் பியர்ஸ் [Charles Sanders Peirce ] வில்லியம் ஜேம்ஸ் [William James] போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட செயல்முறைவாதம். [Pragmatism] இரு வேறுபட்ட சிந்தனைப்போக்குகள் இவை. இரு எல்லைகள் என்றே சொல்லலாம்.
ஆழ்நிலைவாதம் மனிதனின் உள்ளுணர்வுக்கு மைய இடத்தைக் கொடுக்கும் சிந்தனை எனலாம். புறவயமான தர்க்கம் மூலமோ நடைமுறைச்செயல்பாடுகள்மூலமோ வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள முடியாது. மனிதன் தன்னுள் ஆழ்ந்து தன் உள்ளுணர்வைத் தீட்டிக்கொள்வதன் மூலமே அதை அறிய முடியும். அந்த அறிதல் பெரும்பாலும் அவனுக்கு மட்டுமே உரியதாக இருக்கும். அதைப் புறவயமாக நிரூபிக்கமுடியாது, தர்க்கபூர்வமாக விளக்கிவிடவும் முடியாது.
ஆழ்நிலைவாதம் எல்லா மதங்களிலும் உள்ள சாராம்சமான உண்மைகளைத் தொகுத்துக்கொள்ள முயன்றது. முழுமுதல் உண்மையை நோக்கிய அகவயமான பயணத்தை முன்வைக்கும் கீழைமதங்களுக்கு அது அதிக முக்கியத்துவம் அளித்தது. ஆகவே அது இந்துமதம், பௌத்தமதம் ஆகிய இருமதங்களையும் அதிகமாகக் கூர்ந்து கவனித்தது. அக்காலகட்டத்தில் ஜெர்மனியமொழியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்ட இந்து, பௌத்த மூலநூல்கள் அவர்களுக்குப் பெரும் ஈர்ப்பை அளித்தன. அவர்களின் சிந்தனைகளை வடிவமைத்தன.
ஆழ்நிலைவாதிகளைப்பொறுத்தவரை கடவுள் ஓர் ஆளுமையோ, பிரபஞ்சத்தின் நிர்வாகியோ அல்ல. கடவுளை மனிதன் முழுமையாக அறியமுடியாது. ஆனால் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் இருப்பை அவன் காணமுடியும். ஆகவே இயற்கையே இறைவன். இயற்கையை அறிந்து அதில் கலந்திருப்பதே இறையனுபவம்.
மனிதன் பல்வேறு அறியாமைகளால் மூடப்பட்டிருப்பதனால்தான் அவனைச்சூழ்ந்திருக்கும் இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனின் ரகசியத்தை அவனால் உணர முடிவதில்லை. சமூக வழக்கங்களின் விளைவான அறியாமை, தன்னுடைய காமகுரோதங்களால் உருவாகும் அறியாமை. அந்த அறியாமையை வெல்வதே அவன் இயற்கையில் இருந்து இறைச்செய்தியை பெறுவதற்கான வழி. ஆகவே எந்த ஆன்மீகச்செயல்பாடும் அறிவுபரப்பும் செயல்பாடாகவே இருக்கமுடியும்.
செயல்முறைவாத தத்துவம் என்பது அதன்செயல்முறையில் இருந்து வேறுபட்டு இருக்கமுடியாது என வாதிடும் ஒரு தத்துவத்தரப்பு. செயல்முறையில் இருந்தே தத்துவக்கொள்கைகள் உருவாகவேண்டும். தத்துவங்களெல்லாமே செயல்முறைக்குக் கொண்டுவந்து சரிபார்க்கப்படவேண்டும் என அது வாதிட்டது. ஆகவே நவீன அறிவியலை அது மிகவும் ஏற்றுக்கொண்டு பாராட்டியது.
அமெரிக்கச் சிந்தனை இவ்விரு தத்துவப் போக்குகளும் விவாதித்து உருவானது என்று சொல்லலாம். அமெரிக்காவின் இலட்சியவாதத்தை உருவாக்குவதில் ஆழ்நிலைவாதம் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறது. நதானியல் ஹாதர்ன், ஹெர்மன் மெல்வில், வால்ட் விட்மான், எமிலி டிக்கன்ஸன், ராபர்ட் ஃப்ரோஸ்ட் போன்ற பெரும்பாலான அமெரிக்க இலட்சியவாதிகளில் ஆழ்நிலைவாதத்தின் பெரும் செல்வாக்குண்டு. ஆழ்நிலைவாதத்தின் உச்சகாலகட்டம் என 1850 முதல் 1900 வரையிலான ஐம்பதாண்டுகளைச் சொல்லலாம். அதுதான் அமெரிக்கா சுதந்திரம் சமத்துவம் மனிதநேயம் என்னும் உயர் இலட்சியங்களின் தேசமாக அறியப்பட்ட பொற்காலம்
நூறுவருட வரலாற்றைப்பார்த்தால் அமெரிக்கா மெல்லமெல்ல அதன் ஆழ்நிலைவாதத்தை மறந்துவிட்டிருப்பதைக் காணலாம். செயல்முறைவாதம் அங்கே நவீன அறிவியலின் செல்லப்பிள்ளையாக மாறி வளர்ந்தது. அயன்ராண்ட் போன்றவர்களின் நடைமுறைவாதம் அங்கே மேலும் செல்வாக்கு பெற்றது. லாபம் அதன் மந்திரவார்த்தையாக ஆகியது.
அமெரிக்காவின் இலட்சியவாத யுகத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒரு தூதர் என நாம் ஆல்காட்டைச் சொல்லலாம். ஆல்காட்டை உருவாக்கிய சிந்தனை மரபு என்பது ஆழ்நிலைவாதமே. மனிதன் தன் அகத்தில் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டடையமுடியும் என்ற அவர்களின் அறைகூவலே அவரைக் கீழைநாட்டுச்சிந்தனைகளை நோக்கிக் கொண்டுவந்து பௌத்தத்தில் நிலைக்கச் செய்தது. ஆல்காட்டின் எழுத்துக்களில் நாம் எமர்சனின் வரிகளை அவ்வப்போது காணமுடியும்.
ஆழ்நிலைவாதத்தின் மையக்கருத்து அறிவே விடுதலைக்கான வழி என்பது. ஆல்காட் அதையே பௌத்தத்தின் மையச்செய்தியாகக் கண்டார். அந்த நம்பிக்கையே அவரை சென்னையில் தலித் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் பெரும் திட்டத்தை உருவாக்கும்படி தூண்டியது. அந்தசெயலின் பின்னாலுள்ள அடிப்படை தரிசனத்தை இன்று கிட்டத்தட்ட நூற்றியிருபதாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நினைவுகூர இந்த சின்ன நூல் இப்போது காரணமாக அமைவதாக – ஆம், அறிவும் விடுதலையும் ஒன்றே
[3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் ஆற்றிய உரை]
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 7
யாப்பு மென்பொருள்
கடைசியில் யாப்பை ஒரு மின்னணு வாய்ப்பாடாக ஆக்கிவிட்டார்கள் ! யாப்புவகையைப் பிரித்துப்பார்ப்பதற்கான மென்பொருள்
http://www.virtualvinodh.com/avalokitam
இப்படியே தமிழ்ப் புதுக்கவிதைக்கும் ஒன்று செய்தால் நல்லது
ஜெ
September 4, 2011
மண்ணாப்பேடி
பேரன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் வாசகன் சண்முகநாதன் எழுதிக்கொள்வது….
நான் கடந்த வாரம் நாகர்கோயில் வந்திருந்தேன்.நண்பர்களோடு மூன்று நாள் விடுமுறைக்காக …. நாகர்கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தோம்.. உங்கள் கதைகளில் வரும் அனைத்து ஊர்களையும் மற்றும் நீங்கள் வாழ்ந்து வளர்ந்த ஊர்களையும் பார்க்க மிகவும் இனிமையாக உணர்ந்தேன்.. குறிப்பாக "படுகை" யில் வரும் பேச்சிப்பாறை (படுகையில் வரும் "கான்வென்ட் குழந்தை காட்டில் வழி தெரியாமல் நிற்பதுபோல் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்டிருந்தது" என்ற உவமை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று) மற்றும் நீங்கள் வேலை பார்த்ததாக சொன்ன தக்கலை. ஏனோ உங்கள் பகுதியான ராஜலக்ஷ்மி நகர், பார்வதிபுரம் வரை வந்து திரும்பி வந்து விட்டேன்… எனக்கு என்னமோ திரும்பி விடவேண்டும் என்றே தோன்றியது. ஊட்டி முகாமில் (2010) உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன்.. ஏனோ வீட்டிற்க்கு வருவதற்கு ஒரு கூச்சம்.
நிறைய காரணங்களுக்காக எழுத விழைந்து இப்போதுதான் எழுத முடிந்தது. உங்களின் எல்லா நாவல்களையும் ஏறத்தாழ படித்திருக்கிறேன் சில பெரிய நாவல்களை தவிர.. நான் எப்போதும் உங்களின் நாவல்களின் ரசிகன்.. அதில் வரும் தத்துவங்களும், உணர்ச்சிகளும் எனக்கு மிகுந்த எழுச்சியைத் தந்திருக்கிறது.. உங்களைப் பற்றி நான் எனது நண்பர்களிடம் பேசாத நாட்களை இல்லை எனலாம்.. குறிப்பாகத் தன்னறம் பற்றிய கட்டுரை. அப்புறம் உங்களின் அறம் வரிசைக் கதைகள்.. உங்களின் அந்தத் தொகுப்பு வருவதற்காகக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். நானும் ஒரு வரலாற்றுப் பிரியன்.
இப்போது எழுதுவது, நாங்கள் பத்மநாபபுரம் சென்றிருந்த போது அங்குள்ள கல்வெட்டுகளைப் பார்க்க நேர்ந்தது… அதில் "மன்னாப்பேடி " என்ற முறையை ஒழிப்பது பற்றியான ஒரு உறுதி மொழி செதுக்கப்பட்டிருந்தது … அப்படி என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்க முடியுமா.?
அப்புறம் யானை டாக்டர் 50 புத்தகம் நேற்று எனக்குக் கிடைத்தது. அதற்கு உங்களுக்கும், அரங்கன் அண்ணாவுக்கும் மிகவும் நன்றி.. எல்லோரிடமும் விநியோகித்து வருகிறேன்… உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் என் வீட்டின் பெயர் கூட "அறம்" தான். எழுத்தில் எதுவும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி,
சண்முகநாதன்,
தேவகோட்டை.

உமையம்மை ராணி -மரவெட்டு ஓவியம்
அன்புள்ள சண்முகநாதன்
வீட்டுக்கு வந்திருக்கலாம், நிறையவே பேசியிருக்கலாம்
மண்ணாப்பேடி-புலைப்பேடி முறை பற்றி ரப்பர் நாவலிலேயே ஓர் அத்தியாயம் வரும்.
அது இப்பகுதியில் இருந்த ஓர் ஆசாரம். வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் [அதிகமும் ஆடி மாதம்] மண்ணாப்பேடி-புலைப்பேடி நாட்களாக கோயிலில் கிராமசபை கூடி அறிவித்துப் பறையறிவித்து விடுவார்கள். அந்த நாட்களில் தாழ்ந்தநிலைச் சாதியைச்சேர்ந்த ஒருவர் [வண்ணர், புலையர்] ஒரு நாயர்,நம்பூதிரி, வேளாளர் சாதிப்பெண் மீது ஒரு சிறிய கல்லையோ குச்சியையோ எறிந்து தொட்டுவிட்டு 'தொட்டேன் பூஹோய்' என மும்முறை கூவி அழைக்கவேண்டும். அந்த நாளில் அதைச்செய்வது குற்றம் அல்ல.

நம்பூதிரிகள்
அந்தப்பெண் அதன்பின் தன் சாதியில் சேர்ந்துகொள்ளமுடியாது. அந்தப்பெண்ணை அந்தக் கல்லெறிந்தவனுடன் அனுப்பிவிடுவார்கள். அவள் அச்சாதியில் சேர்ந்து அவனுடைய மனைவியாக வாழ்வாள். அவளுக்கு அவள் குடும்பத்தினர் 'படியடைத்து பிண்டம் வைப்பார்கள்' [ இறுதிச்சடங்குகள் செய்து வீட்டுமுன் கதவை மூடிக்கொண்டு விடுவார்கள்] அத்துடன் அவளை மறந்து விடுவார்கள்– இது சாஸ்திரம். பேடி என்றால் அச்சம் என்று பொருள்.
இது உயர்சாதிப் பெண்களை அச்சுறுத்திக் கட்டுக்குள் கொண்டுவர உயர்சாதி ஆண்கள் செய்த சதி என ஒரு தரப்பு நெடுநாட்களாக இருந்தது. எல்லாவற்றையும் ஒடுக்குமுறை நோக்கிலேயே அணுகும் மார்க்ஸிய ஆய்வுமுறையின் அடிப்படைச் சிக்கல் இது.
ஆனால் ஆவணங்களையும் ஆசாரங்களையும் விரிவாக ஆராய்ந்த அறிஞர்கள் அப்படி அல்ல என இன்று நினைக்கிறார்கள். அது ஒரு புராதன பழங்குடிச் சடங்கு. சாதிமுறைக்குள் வந்துசேர்ந்து நீடித்தது. இவ்வாறு பிறசாதியிடம் சென்று சேரும் பெண்கள் அனேகமாக விரும்பித்தான் சென்றிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த அறிவிக்கப்பட்ட நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமலிருந்தால் இந்தச்சடங்கே நடக்காது. அன்றெல்லாம் பெண்கள் வீட்டுப் பின்கட்டைவிட்டு வெளியே வருவது மிகமிக அபூர்வமும் கூட. உயர்சாதிவீட்டருகே பிற ஆண்கள் நெருங்கவும் முடியாது. இது சாதிமுறையைக் கறாராகக் கடைப்பிடிக்கும்பொருட்டு அச்சாதிமுறைக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரு நெகிழ்வு, அவ்வளவுதான்.
மறுமணம் தடைசெய்யப்பட்ட நம்பூதிரி சாதிகளிலேயே இது அதிகம். நம்பூதிரிகளில் மூத்த நம்பூதிரிக்கு மட்டுமே நம்பூதிரி சாதியில் மணம்புரிய அனுமதி உண்டு. பிற நம்பூதிரிகள் நாயர் சாதியில் சம்பந்த உறவுதான் கொள்ளவேண்டும். ஆகவே நம்பூதிரிப்பெண்களில் பத்தில் இருவருக்கே மணமாக வாய்ப்பு. பிறர் வாழ்நாள் முழுக்கக் கன்னிகளாக இருந்தாகவேண்டும். அந்தப்பெண்களுக்கு இது அவள் மாட்டிக்கொண்டிருக்கும் ஆயுள்தண்டனையில் இருந்து தப்புவதற்கு சமூகமே அளிக்கும் வாய்ப்பு.
நாயர் சாதியிலும் இது சாதாரணமாக நிகழ்ந்துள்ளது. தாழ்ந்தநிலைச் சாதியினர் போருக்குப் போவதில்லை, ஆகவே ஆண்கள் அதிகம். போர்ச்சாதியான நாயர்களில் ஆண்கள் மிகமிகக் குறைவு. ஆகவே ஆண் துணை கிடைக்காத பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு. ஒரு பெண் கன்னியாக இருந்து இறந்தால் அவள் யட்சியாக ஆகி ஆண்களின் குருதியைக் குடிப்பாள் என்ற நம்பிக்கை இருந்தமையால் பல காரணங்களால் ஆண் கிடைக்காத பெண்களை குடும்பத்தினரே அப்படி அனுப்பியிருக்கிறார்கள். அதிகமும் அழகற்ற, ஊனமுற்ற பெண்கள் மற்றும் ஜாதகக் குறை கொண்ட பெண்களை.
கணிசமான தருணங்களில் இப்படி மண்ணாப்பேடி புலைப்பேடி வழியாக தாழ்ந்தநிலைச் சாதிக்குச் சென்ற பெண்ணுக்கு அவள் குடும்பம் நிலங்களும் காடுகளும் அளித்திருக்கிறது. பல தாழ்ந்தநிலைச் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள் இப்படி உருவானவர்களே. அவர்களிடையே நீடித்த உறவும் இருந்திருக்கிறது. இதெல்லாம் இன்று ஆவணங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
பின்னர் இந்த முறை மிகவும் பழங்குடித்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது. நாயர் நம்பூதிரிச்சாதிகளில் கடுமையாக எதிர்ப்புகள் உருவாகி வந்தன. ஆகவே இது உமையம்மை ராணி காலகட்டத்தில் 1680 ல் அரசால் தடைசெய்யப்பட்டது
என் ஆசானும் அண்டைவீட்டினருமாக இருந்த மறைந்த திரிவிக்ரமன் தம்பி அவர்கள் மண்ணாப்பேடி -பறைப்பேடி என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். முழுமையான தொல்சான்றுகள் கொண்ட நூல் அது.
ஜெ
கடிதங்கள்
காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன். யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி "முடிவின்மையிலிருந்து ஒரு பறவை" என்ற அந்தக் கட்டுரை மிக நெருக்கமான வாசிப்பு அனுபவத்தை தந்தது.
அன்புடன்
தேவராஜ் விட்டலன்
http://devarajvittalan.blogspot.com
நன்றி தேவராஜ். அந்தக் கட்டுரையை எழுதி நெடுநாளாகிறது. நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது மூன்றாமிதழில் வெளிவந்தது. இன்று யோசிக்கும் போது அப்படி ஒரு இலக்கிய சிற்றிதழில் அந்தக்கட்டுரை வெளிவந்தது ஒரு புரட்சி என்று படுகிறது. தமிழ்நாட்டில் யோகியைப்போல முக்கியமான மனிதர்கள் வாழ்ந்தும்கூட நம் அறிவுச்சூழல் அவர்களை எதிர்கொள்ளாமலேயே கடந்து சென்றுகொண்டிருந்தது.
அதற்கு முன்னரே வெளிவந்த நித்ய சைதன்ய யதியின் பேட்டி ஓரு தொடக்கம். அக்காலகட்டத்தில் அந்த பேட்டியைக் கண்டு உருவான அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. இனிமே இதழ்கூட விபூதி குடுப்பீங்களா என்றார்கள் சிலர். ஆக்ரோஷமான கட்டுரைகள்கூட சில எழுதப்பட்டன.
இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. இன்று ஆன்மீகம் என்ற சொல் கெட்டவார்த்தையாக இல்லை. அதற்கு அப்பேட்டிகள் வழிவகுத்தன
ஜெ
வணக்கம்,
தங்களுடைய இன்றைய காந்தி நூலை சமீபத்தில் வாசித்தேன். மிக மிக அருமையான நூல். நண்பர் ஒருவருடன் இந்நூலை பற்றி விவாதம் செய்த போது, தங்களுடைய இணையத்தில் கூடுதல் ஆன கருத்துக்கள், தகவல்கள் உள்ளதாக கூறினார். இணையத்தில் உங்களுடைய காந்தி பற்றிய கட்டுரைகளை வாசித்து கொண்டிருக்கிறேன். கீழ்க்கண்ட வரிகளை, காந்தியும் சாதியும் பதிவில் வாசித்தேன், "செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி". எவ்வளவு தீர்க்கதரிசனமான சிந்தனை. தங்களுடைய பதிவுகள் பலரையும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.
முரளி
பெங்களூர்
அன்புள்ள முரளி,
காந்தியை இன்றைய சூழலில் மறுகண்டடைவு செய்ய என் நூல் உதவியிருக்கிறதென்பதில் மகிழ்ச்சி. சென்ற ஈரோடு கண்காட்சியில் மிக அதிகமாக விற்ற நூல் அது என்றார்கள். அது உருவாக்கும் செல்வாக்கையும் கண்டுகொண்டிருக்கிறேன். அந்நூலின் இலக்கு நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.
ஜெ
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
தங்கள் அவதாரம் சிறுகதை படித்தேன். வழக்கம் போல அருமை. அவதாரம் என்றவுடன் ராமாவதாரம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. பிறகு தங்கள் எழுத்துக்களில் ராம பிரானைக் குறித்துத் தேடித் பார்த்தேன். ஸ்ரீராமன் குறித்தும் ராமாயணம் குறித்தும் தங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். கண்ணனைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். பகவத் கீதை உரையும் படித்தேன் . இந்திய கலாசாரத்தில் ராமாயணம் முக்கியமானது என்று நினைக்கிறேன். இது குறித்துத் தங்கள் எண்ணங்களை நேரம் கிடைக்கும் போது எழுதவும்.
அன்புடன்
ஸ்ரீகாந்த்.
http://www.sangatham.com/
அன்புள்ள ஸ்ரீகாந்த்
கிருஷ்ணனின் ஆளுமையில் உள்ள கலவை எனக்குப் பிடித்திருக்கிறது. தத்துவ ஞானி , குழந்தை, மன்னன், காதலன். நான் கீதை வழியாகவே கிருஷ்ணனை அணுகுகிறேன். அதன் விரிவாக்கமே மகாபாரதம். ராமன் மேல் அந்த ஈர்ப்பு உருவாகவில்லை
ஜெ
ஜெ,
தங்களின் காந்தியின் பிள்ளைகள் கட்டுரை படித்தேன். அப்பாவுடன் ஒரு நெருக்கம் அல்லது நேரடித் தொடர்பு (அம்மா மூலம் அணுகாமல் நேரடியாக அணுகுவது ) இல்லாத அநேகருக்கு இந்த சிக்கல் உண்டு.நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை என் அப்பாவிடம் நேரடியாக எதையும் கேட்க மாட்டேன்.ஒரே வீட்டில் இருந்தும் பெரிய இடைவெளி இருந்தது. ஒரு விபத்தில் காலில் அடிபட்டு மூன்று மாதம் என் தந்தை மருத்துவமனையில் இருந்தார்.அப்பொழுதான் ஒரு நாள் இரவு நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினோம் அதன் பிறகு அவர் ஒரு நல்ல நண்பர் ஆகிவிட்டார்.அனேக விசயங்களில் வேறு பட்டாலும் அந்தப் பழைய வெறுப்போ,கோபம் இல்லை. "tom hanks " நடித்த 'Road to Perdition ' படத்தில் – இரு குழந்தைகளுக்கு அப்பாவாக வரும் கதாபாத்திரம் michael sulliven .தன்னிடம் கடுமையாகவும் தம்பியிடம் அன்பாகவும் நடந்து கொள்ளுவதாக மூத்த பையன் சொல்லும் குற்றச் சாட்டிற்கு அவர் சொல்லும் டயலாக் "Because you are more like me ". உங்கள் கட்டுரை படித்ததும் இந்த வசனமும் ஞாபகம் வந்தது.
ஜெகன்னாதன் மனோகரன்
அன்புள்ள ஜெகன்னாதன்,
தந்தையைப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். அதற்குக் காரணம் தூரமல்ல அண்மை.
நான் எழுதிய ஒரு கதை [விரித்தகரங்களில்] அதில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லும் வரி 'தந்தைக்கும் மகனுக்குமான உறவென்பது வானத்துக்கும் பூமிக்குமான உறவுபோல, அவ்வளவு சேய்மை, அவ்வளவு அண்மை'
ஜெ
September 3, 2011
தூக்கு -கடிதங்கள்
ஜெ ,
மூன்று நபர்களின் தூக்கை நியாயப்படுத்தும் மனிதர்கள் ஏன் நம் நாட்டில் நடக்கும் ' விவசாயிகளின் உயிர்பலியை ' கண்டுகொள்ளவில்லை . ஒரு வருடம் நடந்தால் 'உயிர்பலிக்கு' சம்பந்தப் பட்டவர்களை மன்னிக்கலாம் ஆனால் வருடா வருடம் நமது நாட்டின் விவசாயிகள் வேறு வழி இல்லாமல் எலிக்கறியை சாப்பிட்டு , தற்கொலை செய்துகொள்கிறார்கள் . இதற்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் கொள்ளை லாபம் அள்ளித்தரும் 'விளையாட்டில் ' அதிக கவனம் செலுத்துகிறார் ….வருடா வருடம் நடக்கும் விவசாயிகளின் தற்கொலையில் சம்பந்தப்பட்ட வேடிக்கை பார்த்த அனைவரும் கொலையாளிகள் தானே !!
இந்த மூன்று பெயர் என்றால் ஒரு நியாயம் , பண வல்லமை படைத்தவர்கள் என்றால் இன்னொரு நியாயமா !!! அண்ணா ஹாசரே போராட்டம் மூலம் இந்த மாதிரியான 'கொடுமையான உயிர்பலிகள் ' குறைந்தால் எனக்கு நிம்மதி தரும் .
உதயசூரியன்
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் இந்த விசயத்தை முடித்துக் கொண்ட பிறகும் இதை எழுதுகிறேன்.மூவரின் தூக்கு தொடர்பாக நீங்கள் எழுதிய பதிவிற்கு உங்களைக் குறை கூறி வந்த மடல்கள் என் மனதை மிகவும் புண்ணாக்கியதால் இதை எழுதுகிறேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் ஒரு பதிவைக் கூட விடாமல் படித்துவருகிறேன்.உங்களுக்கு இந்தப் பதிவு தொடர்பாக வந்த பெரும்பாலான மடல்கள் உங்களை ஒரு நீதிபதியாக நினைத்து எழுதப்பட்டது என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் நான் என்றும் உங்களை ஒரு எழுத்தாளனாகவே பார்க்கிறேன்.எனவே நீங்கள் அடிக்கடி கூறுவதைப்போன்று ஒரு எழுத்தாளன் சொந்த வாழ்க்கை அனுபவம் சார்ந்தே பேச முனையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.தூக்குக் கயிறையும் அதன் வலியையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.நீங்கள் எழுதிய அந்தப் பதிவு என்னை இந்தப் பிரச்சனையைத் தாண்டி உங்கள் சொந்த வாழ்க்கையை நோக்கி மீண்டும் ஒருமுறை பார்க்கவைத்தது."தோன்றாத்துணை" பதிவைப் படித்துவிட்டு மனம் ஒடிந்து போய்க் கிடந்த தருணத்தை இப்பொழுது நினைவு கூர்கிறேன். ஒரு சாதாரண மனிதனாக அந்த மூவரின் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்றே சொல்வேன்.
கோ ஜெயன்
நாகர்கோயில்
அன்பு ஜெயமோஹன்,
வணக்கம். தூக்கு தண்டனை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது இது அரசியல் ரீதியாகவே அணுகப் பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சான்றோர் அமைப்பு என்ற இயக்கத்தில் அமரரான சுந்தரராமசாமியும் தூக்கு தண்டனையை எதிர்த்து வந்தார். சமூகமே சேர்ந்து ஒருவரைக் கொல்வது என்பது கண்டிப்பாக ஏற்க முடியாததே. பெரியவர் ஜெயகாந்தனும் இதே சிந்தனை கொண்டவரே.
ஆனால் நமது சிந்தனையாளர் தமது அரசியல் பின்னணியைத் தாண்டி தண்டனை சட்டத்தின் எல்லா அம்சங்களையும் விவாதித்து எவை எவை எந்த எந்த காரணத்தினால் ஏற்புடையவை ஆகா என்று அடையாளம் காண வேண்டும். பாலியல் ரீதியான குற்றங்கள், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள், திட்டமிட்ட வன்முறைக் குற்றங்கள் இவற்றிலிருந்து சமூகம் காக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சிறைச் சாலைகள் ஒருவர் மேம்பட்ட ஆரோக்கியமான மனநிலையுடன் வெளிவருவதற்கான எந்த ஏற்பாடும் இன்றி இருப்பது மட்டுமல்ல பல கைதிகள் இன்னும் மோசமான மன வக்கிரங்களுடன் வெளிவருவது கண்கூடு. தேர்ந்தெடுத்து தமது மனித நேய நிலைப்பாட்டை வெளிப்படுத்த மட்டுமே தூக்கு தண்டனை பற்றிய அரசியல் நடவடிக்கைகள் பயன்படுகின்றன.
பலவேறு காரணங்களினால் குறிப்பாக சமூகத்தின் குரூரத்தினாலும் நிராகரிப்பாலும் தற்கொலைக்குத் தள்ளப் படுவோர் பற்றியோ அல்லது குறைந்த பட்ச சுகாதார மற்றும் கௌரவ சாத்தியமற்ற நிலையில் வாழும் நலிந்தோர் – தலித்துகள் நிலையும், குழந்தைத் தொழிலாளிகளை உறிஞ்சி நாம் வாழ்வதும் தூக்கு தண்டனைக்கு நிகரான கொடூரங்களே. கருத்துச் சுதந்திரமே கேள்வியாயிருக்கும் நம் சூழலில் வெளிவரும் கருத்துக்களில் சுதந்திரமான- சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய- சிந்தனை இல்லை. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டே அரசியல் முகவரியைத் தக்க வைத்துக் கொள்வோர் தமிழ்ச் சூழலின் மையமாகி வருவது சோகம்.
அன்பு
சத்யானந்தன்.
சித்பவானந்தர்-ஒருகடிதம்
சுவாமி சித்பவானந்தர் சுமார் 20 இளைஞர்களைத் தன் திருப்பராய்த்துறை தபோவனத்தில் பேளூர் மடத்தின் அனுமதி பெறாமல் வைத்துத் தன் முறையில் பயிற்சி அளித்து வாந்தார். அவர்களுக்கு ஒரு ராமகிருஷ்ண ஜெயந்தி அன்று சன்யாசம் அளிக்க வேண்டும் தலைமைப்பீடத்திற்கு எழுதினார்.தலைமைப்பீடம் ஒரு அகில உலக நிறுவனமானதால் அவர்களுக்குசில வழி முறைகள் உண்டு. அதன்படி அவருடைய மாணவர்களைத் தங்கள் வசம் வைத்திருந்து அங்குள்ள பயிற்சிகளையும் அளித்துப் பின்னர் சன்யாசம் அளிப்பதாகத் தலைமை கூறியது.சுவாமி சித்பவனந்தர் தானே அவர்களுக்கு சன்யாசத்தை அளித்துவிட்டார். இது தலைமைப் பீடத்ததினை மீறிச் செயல் பட்டதாகக் கொள்ளப்பட்டது.ஒவ்வொரு சன்யாசியும் அவ்வாறு சன்யாசம் அளிக்க ஆரம்பித்துவிட்டால் இயக்கம் என்ற அமைப்பு வலுவிழக்கும் என்று தலைமை கருதியது.அதனைத் தலைமை சித்பவானந்தருக்குக் கூறியபோது அவர் கோபித்துக்கொண்டு வெளியேறினார். சுவாமி சித்பவானந்தருக்கும், அன்று இயக்கத்தின் தலைவராக இருந்த சுவாமி வீரேஸ்வரானந்தருக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து சுவாமி சித்பவானந்தரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இன்றும் தபோவனத்தில் கேட்டால் கிடைக்கலாம்.
(சித்பவானந்தரால் உருவாக்கப்பட்ட சன்யாசிகள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறிப்போய்த் தனிப்பட்ட சன்யாசிகள் ஆகிவிட்டார்கள்.தபோவனத்திற்கும் கரூர்ஆசிரமத்திற்கும் பெரிய வழக்கு நடந்தது.இப்படி ஆகக் கூடாது என்பதுவே தலைமையின் கட்டுப்பாடுகளுக்குக் காரணம்)
இதில் சித்பவானந்தரை வெளியேற்ற பிராமணர்கள் செய்தது என்ன என்று திரு ஜெயமோஹன் சற்று சிந்தித்து விளக்க வேண்டும்.'
Dear sir, I have copy pasted my poster to your knowledgeable self about the detailed reply in your site today.This letter was exchanged between me and my friend .Both of us read your site daily and exchange views. if you have any writings of Swami Chithbavananda telling Brahmin domination was the cause for his quitting/ousting from RK Mutt, please provide the reference to me.
As for as I know the following statement of mine was the cause of his parting company wih the RK Mutt.
With regards,
K.Mhuramakrishnan.
அன்புள்ள ராமகிருஷ்ணன்,
உங்கள் கடிதம்
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எண்பதுகளில் சிலநாட்கள் நான் சித்பவானந்தா ஆசிரமத்தில் இருந்திருக்கிறேன். அவரது சில சத்சங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். சித்பவனாந்தரைப்போன்ற ஒருவர் சாதி சார்ந்த விஷயங்களைப் பதிவுசெய்வார் என்று நான் நினைக்கவில்லை. அமைப்பின் உட்பூசல்களை அவர் பெரிதாக எண்ணுவார் என்றும் நினைக்கவில்லை. தன் அமைப்பில் சாதிக்காழ்ப்பு உள்ளே நுழையாதபடியே அவர் கடைசிவரைவைத்திருந்தார். எவ்வகை சாதிக்காழ்ப்பும்- மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ.
சித்பவானந்தர் ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடர்.சுவாமி சிவானந்தரால் தீட்சை கொடுக்கப்பட்டவர். 1930-40 வரை ஊட்டி ராமகிருஷ்ணமடம் தலைவராக இருந்தார். சிவானந்தர் இருந்தபோதே சித்பவானந்தருக்கு நெருக்கடிகள் இருந்தன. சிவானந்தர் 1934இல் சமாதியானதும் நெருக்கடிகள் முற்றின. இரு வருடங்கள்கூட சித்பவானந்தர் மடத்தில் நீடிக்கமுடியவில்லை. 1936 இறுதியில் மடத்தைவிட்டு நடைமுறையில் விலகினார்.
தன் மடத்துக்குச் சொந்தமான கடைசிப்பணத்தையும் எண்ணிக் கணக்கிட்டுக் கடிதமெழுதி ஒப்படைத்ததாகவும் 'ரயில்செலவுக்கு மட்டும் பணம் எடுத்துக்கொள்கிறேன், நான் திருட்டுரயிலில் பயணம்செய்தால் அது மடத்துக்கு இழுக்கு' என்று அக்கடிதத்தில் சொல்லியிருந்ததாகவும் அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கைலாசத்துக்குப் பயணமானபோதே அவர் மடத்திலிருந்து விலகிவிட்டார். ஊட்டி மடம் சித்பவானந்தரின் குடும்பச்சொத்தால் அமைக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது
அவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டமைக்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகள் பலவும்பல நூல்களில் சிதறிக்கிடக்கின்றன. எவரேனும் உண்மையான ஆய்வை மேற்கொண்டு எழுதினால்தான் உண்டு. ஒன்று, அவர் ஊட்டி மடத்தின் தலைவராக இருந்தபோது தி.சு.அவினாசிலிங்கம் ஏற்பாட்டில் காந்தி அங்கே வருகைபுரிந்தார். அப்போது அவர் ஆலயப்பிரவேச இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். காந்தியின் வருகையால் சென்னைவாழ் பிராமணப்புரவலர்கள் அதிருப்திகொண்டு சித்பவானந்தர்மேல் கல்கத்தாவுக்கு நிறையப் புகார்கள் அளித்தனர். மடத்தின் கல்விப்பணிகள் பல நின்றுவிடும் என அச்சுறுத்தினர்.
அதைவிட 1926ல் நாராயணகுரு ஊட்டி ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றதும் அங்கே அவருக்குப் பிறதுறவிகள் பாதபூஜைசெய்ததும் சென்னை பிராமணப் புரலவலர்களிடையே கசப்பை உருவாக்கியது. அவர்களும் சித்பவானந்தர்மேல் புகார்களைத் தொடர்ந்து தெரிவித்துவந்தனர். இச்செய்திகளை நித்ய சைதன்ய யதி சொல்லியிருக்கிறார்.
1936ல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டுவிழாவை ஒட்டி சித்பவானந்தர் சீடர்களுக்கு தீட்சை அளிக்கப் பரிந்துரைத்ததுதான் பிரச்சினையாக்கப்பட்டு அவர்மேல் புகார்கள் அளிக்கப்பட்டன. அதுவே கடைசி நெருக்கடி. இது நான் அறிந்தது
ஊட்டி மடத்திலிருந்து முற்றிலும் விலகியபின் சித்பவானந்தர் தன் சொந்த ஊரிலும் கோவையிலுமாகத் தங்கியிருந்திருக்கிறார். 1940ல் ஒரு திருவிழாவுக்காக திருப்பராய்த்துறைக்குச் சென்றபோது அங்கே உள்ள பிரமுகர்கள் சிலருடன் உறவு ஏற்பட்டது. தாயுமானவர்கோயிலில் திருவாசக உரை நிகழ்த்தியும் கீதை உரைகள் நிகழ்த்தியும் திருச்சியில் இருந்தார். திரு ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் திரு.அருணாச்சலம் செட்டியார் ஆகியோரின் உதவியால் 1942இல் தனியாக, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் அமைத்தார். இதுதான் நான் அறிந்த வரலாறு.
நானறிந்தவரை, ராமகிருஷ்ண மடத்தில் அந்த மடத்தின் தலைவரே தீட்சை அளிப்பது வழக்கம். இப்போதும் அப்படியே. அதற்கான அனுமதியை மட்டுமே மேலிடத்தில் கோருவார்கள். அந்த அனுமதி அளிக்கப்படுவதும் சாதாரணமான நிகழ்வே. அதையே சித்பவானந்தர் செய்திருக்கிறார். அது பிரச்சினையாக்கப்பட்டது, அவருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற பேச்சு கிளம்பியது. அவர் உடனே அதற்காக 'கோபித்துக் கொண்டு' கிளம்பவில்லை. அவர் அத்தகைய ஒரு சில்லறை மனிதரும் அல்ல. அவர் வெளியேறியாக வேண்டிய சூழல் பலகாலமாகவே இருந்தது.
மேலும் ராமகிருஷ்ண மடத்தின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பேர் பிரிந்து சென்றிருக்கிறார்கள். பலநூறு பிளவுகள் நிகழ்ந்துள்ளன. தமிழக ராமகிருஷ்ண மடம் மயிலையில் தேங்கி நின்றது. அதன் தேக்கநிலை அங்கிருந்த பிராமண ஆதிக்கம் மீண்டும் உடைக்கப்பட்டபின்னரே ஓரளவேனும் நீங்கியது. இதுவே வரலாறு. ஆனால் சித்பவானந்தரின் ராமகிருஷ்ண தபோவனம் என்ற இயக்கம் இவர் சொல்வதுபோலச் சிதறிச்செல்லவில்லை. தொடர்ச்சியாக வளர்ச்சியும் விரிவும் பெற்றுத் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பாற்றியது. சென்னை தவிர்த்த தமிழகத்தைப்பொறுத்தவரை இன்றும் ராமகிருஷ்ண-விவேகானந்த இயக்கம் என்பது சித்பவானந்தரின் நிறுவனம் மட்டுமே.
மயிலை ராமகிருஷ்ண மடம் அந்நாட்களில் சென்னை பிராமணசமூகத்தைப் புரவலர் வட்டமாகக் கொண்டிருந்தது. அதை நித்ய சைதன்ய யதியும் அவரது சுயசரிதையில் பதிவுசெய்கிறார். டாக்டர் ராதாகிருஷ்ணனை எதிர்த்து, கீதை ஒரு மதநூல் அல்ல தத்துவநூலே என எழுதியமைக்காக, அந்த பிராமணப்புரவலர்வட்டத்தால் அவர் வெளியேற்றப்பட்டதை விவரிக்கிறார். நான் அவரை எடுத்த பேட்டியிலேயே அதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இயல்பாக ஒரு சித்திரம் முழுமையடைந்து வருகிறது.
இந்த அமைப்புகளுடன் ஓரளவு தொடர்புள்ளவர்கள் அனைவருமே சாதாரணமாக அறிந்த விஷயங்கள்தான் இவை. ஆனால் புறவயமாக நிரூபிக்கவேண்டுமென்றால் மேலதிக தகவல்களை அவற்றுக்குள் உள்ளவர்களிடம் சென்று , கடிதங்களைக் கண்டு, ஆராய்ச்சி செய்து எழுதினால்தான் உண்டு. நான் சொல்லியிருக்கும் தகவல்கள் சம்பந்தப்பட்ட பலர் நேரில் சொன்னவை, நான் இந்து இயக்கங்களில் பணியாற்றிய காலகட்டங்களில் கேட்டு அறிந்தவை.
ஜெ
September 2, 2011
அறிவியலுக்கென்ன குறை?
இந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த கடிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள்.
இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை?
கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன்
ஜெ
நண்பர்களே,
விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் கொள்கிறேன். அவரே முன்வந்து என்போன்ற சிறுவனை முறையாகத் தொடர்புகொண்டது அவரின் எளிமைக்கும் பரந்த மனதுக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
ஜெயமோகன் அமெரிக்க விஜயத்தின்போது திண்ணை இதழில் வெளியான அறிவிப்பிலிருந்து என் மின்னஞ்சல் முகவரி கிடைத்த விபரத்தையும் அண்மையில் மின்னஞ்சல்வழி அவரே கூறியுள்ளது அவர் ஜெயமோகனின் வாசகர் என்பதற்குச் சான்றாகும்.அவர் போன்ற ஒரு அறிஞரை நம் குழுமத்தில் இணைய அழைப்பதில் மகிழ்கிறேன்.அறிவியல் சம்பந்தமான தங்களின் ஐயங்களை அன்னாரிடம் நண்பர்கள் தயங்காது கேட்கலாம்.
அவரின் வலைப்பூ, காணொளிகள், முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் என் உரையாடல் கீழே.
வேணு
ஆசிரியருக்கு வணக்கம்,
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதைக் கண்டு பிடித்து இருக்கிறேன்.பாறைத் தட்டுகள் உயர்ந்ததற்கு ஆதாரம் கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கு.என் கண்டு பிடிப்பு குறித்து புகைப் பட ஆதாரங்களுடன் தங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுப் பின் வரும் இணைப்புகளை சமர்ப்பிக்கின்றேன்.
காணொளிகளின் தொகுப்பு: http://www.youtube.com/user/ponmudi1
பகுதி 1
www.youtube.com/watch?v=Qi9JE86efdU
பகுதி 2
www.youtube.com/watch?v=K3DIHsjzlpk
படவிளக்கம்.1
உலக அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது கொலராடோ நதியால் அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது.ஆறால் அரிக்கப் பட்டிருந்தால் பள்ளத்தாக்கானது ஒரே போக்கில் அமைந்து இருக்க வேண்டும். ஆனால் படத்தில் கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது பல்வேறு திசை நோக்கிப் பிளவு பட்டு இருக்கிறது. இவ்வாறு பூமி பல்வேறு திசையில் பிளவு பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரந்ததே காரணம்.
படம் http://www.uptake.com/blog/wp-content/uploads/2009/08/img_0055.jpg
படம் http://skywalker.cochise.edu/wellerr/students/soil-ph/project_files/image005.jpg
பட விளக்கம்.2
கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கில் பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் அமைந்து இருக்கிறது.
பாறைத் தட்டுகள் கீழிருந்து மேல் நோக்கி உயர்ந்து இருந்தால்தான் இவ்வாறு பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் இருக்க முடியும்.
படம் http://www.sedonagrandcanyontourcompany.com/images/grand_canyon_cover.jpg
பட விளக்கம்.3
பொதுவாக இரண்டு நிலப் பகுதிகள் மோதுவதால் நடுவில் நிலம் உயர்ந்து மலைகள் உருவாகின்றன என்று கருதப் படுகிறது.ஆனால் இந்தப் படத்தில் நிலம் பிளவு பட்டு இருக்கும் இடத்தில பாறைத் தட்டுகளால் ஆன ஒரு மலை உருவாகி இருக்கிறது.எனவே பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயருவதால்தான் மலைகள் உருவாகின்றன என்பது புகைப் படம் மூலம் நிரூபணமாகிறது.
படம் http://www.planetside.co.uk/terragen/tgd/images/deep_canyon_v04.jpg
அன்புடன்,
விஞ்ஞானி.க.பொன்முடி
1 , அப்பு தெரு ,நுங்கம் பக்கம்,
சென்னை.600 034,
பேச : 98400 32928
மதிப்பிற்குரிய விஞ்ஞானி பொன்முடி அவர்களுக்கு,
தங்கள் கண்டுபிடிப்பை எண்ணி வியக்கிறேன். தாங்களின் தற்போதைய பெயர், ஊர் எது என்றறிய ஆவல். இது போன்ற பல அரிய கண்டுபிடிப்புகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னைப்போன்ற சாமான்ய மனிதர்களின் அவா.
வாழ்த்துக்களுடன்,
வேணு
மதிப்பிற்குரிய திரு வேணு தயாநிதி அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம்.
தங்களின் பதில் கடிதத்திற்கு நன்றி,
பாராட்டுக்கும் நன்றி,
என் கண்டு பிடிப்பு மிகவும் தற்செயலான எதிர்பாராத ஒன்று.எங்கோ எப்பொழுதோ படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது."ஒரு உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று கூறாதே…என் வழியில் ஒரு உண்மை வந்தது என்று கூறு".( மன்னிக்கவும் கூறிய அறிஞர் யார் தெரியவில்லை).
நான் தற்பொழுது சென்னையில் வசிக்கின்றேன். தற்பொழுது சுனாமி நில அதிர்ச்சி எரிமலை குறித்து ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
மற்றபடி கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதற்கு சூரியனின் முன் நோக்கிய பயணமே காரணம் என்பதுடன் சூரியன் போன்ற நட்சத்திரங்கள்தான் எரிந்து முடிந்த பிறகு வாயுப் பொருட்களை இழந்த பிறகு சுருங்கி கிரகங்களாக உருவாகின்றன என்பதும் என் கண்டு பிடிப்பு.
இது குறித்து பல விண்ணியல் ஆதாரங்களுடன் நான் எழுதிய புத்தகத்தை விகடன் பிரசுரத்தார் வெளியிட்டு இருகின்றனர்.பெயர் "பூமிப் பந்தின் புதிர்கள்"அத்துடன் கடல் மட்டம் உயர்வதற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளே காரணம் என்பதும் என் கண்டு பிடிப்பு இது குறித்து நான் எழுதிய "பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது" என்ற புத்தகத்தை நியூ செஞ்சுரி ஹவுஸ் வெளியிட்டு இருகின்றனர்.
தங்களின் கடிதம் உண்மையில் உற்சாகத்தை ஊட்டுகிறது.
கூகுளில் என் பெயரை உள்ளிட்டால் என் கட்டுரைகளை படிக்கலாம்.
என்றும் அன்புடன் விஞ்ஞானி.க.பொன்முடி
pls visit : The origin of continents and planet-Contents
ஐயன்மீர்,
தங்கள் பதில் மடல் கண்டு இறும்பூது எய்தினேன். அறிவியலை முறையாகப் பாடமாகப் பயின்று ராப்பகலாக உழைத்து முயன்றுவரும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபஞ்சத்தின் சகல காரண காரியங்களையும் மதி நுட்பத்தினால் கண்டறிந்து தெளிந்து உண்மைகளை இவ்வுலகுக்கு வெளிப்படுத்தும் தங்களைப்போன்ற விஞ்ஞானிகளை என்னென்பது. நிற்க. தங்களிடம் நான் கேட்க விரும்புவது ஒரே ஒரு உதவி மட்டுமே. இந்த மின்னஞ்சல் முகவரி பற்றித் தங்களுக்கு எவ்விதம் தெரியவந்தது? அல்லது நண்பர்கள் யாராவது தெரியப்படுத்தினார்களா…
அந்த நல்லவரின் முகவரி/ அஞ்சலை மட்டும் தயவு செய்து தர இயலுமா?
மிக்க நன்றி!
அன்பன்,
வேணு
வணக்கம் அய்யா,
சுனாமி குறித்த உண்மையை உலகிற்குத் தெரியப் படுத்த உலகெங்கும் உள்ள சான்றோர்கள் அறிஞர்கள் பெருமக்கள் ஆகியோரின் மினஞ்சல்களை இணையத்தில் தேடிய பொழுது தங்களின் மினஞ்சல் முகவரி கிடைத்தது.
இணைய தள முகவரி http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80908064&format=print&edition_id=20090806
முக்கியமாக அந்தக் காலத்தைப் போல் அல்லாமல் தற்பொழுது இணைய தளத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் பல ஆராய்சிக் கட்டுரைகள் மற்றும் தகவல்கள் என் ஆய்விற்கு மிகப் பெரிய அளவில் உதவின என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் விஞ்ஞானி க.பொன்முடி.
முற்றிற்று
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

