கடிதங்கள்

காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.  யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி "முடிவின்மையிலிருந்து ஒரு பறவை" என்ற அந்தக் கட்டுரை மிக நெருக்கமான வாசிப்பு அனுபவத்தை தந்தது.

அன்புடன்

தேவராஜ் விட்டலன்

http://devarajvittalan.blogspot.com


நன்றி தேவராஜ். அந்தக் கட்டுரையை எழுதி நெடுநாளாகிறது. நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது மூன்றாமிதழில் வெளிவந்தது. இன்று யோசிக்கும் போது அப்படி ஒரு இலக்கிய சிற்றிதழில் அந்தக்கட்டுரை வெளிவந்தது ஒரு புரட்சி என்று படுகிறது. தமிழ்நாட்டில் யோகியைப்போல முக்கியமான மனிதர்கள் வாழ்ந்தும்கூட நம் அறிவுச்சூழல் அவர்களை எதிர்கொள்ளாமலேயே கடந்து சென்றுகொண்டிருந்தது.


அதற்கு முன்னரே வெளிவந்த நித்ய சைதன்ய யதியின்  பேட்டி ஓரு தொடக்கம். அக்காலகட்டத்தில் அந்த பேட்டியைக் கண்டு உருவான அதிர்ச்சி நினைவுக்கு வருகிறது. இனிமே இதழ்கூட விபூதி குடுப்பீங்களா என்றார்கள் சிலர்.  ஆக்ரோஷமான கட்டுரைகள்கூட சில எழுதப்பட்டன.


இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. இன்று ஆன்மீகம் என்ற சொல் கெட்டவார்த்தையாக இல்லை. அதற்கு அப்பேட்டிகள் வழிவகுத்தன

ஜெ



வணக்கம்,


தங்களுடைய இன்றைய காந்தி நூலை சமீபத்தில் வாசித்தேன். மிக மிக அருமையான நூல். நண்பர் ஒருவருடன் இந்நூலை பற்றி விவாதம் செய்த போது, தங்களுடைய இணையத்தில் கூடுதல் ஆன கருத்துக்கள், தகவல்கள் உள்ளதாக கூறினார். இணையத்தில் உங்களுடைய காந்தி பற்றிய கட்டுரைகளை வாசித்து கொண்டிருக்கிறேன். கீழ்க்கண்ட வரிகளை, காந்தியும் சாதியும் பதிவில் வாசித்தேன், "செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி  மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி". எவ்வளவு தீர்க்கதரிசனமான சிந்தனை. தங்களுடைய பதிவுகள் பலரையும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

முரளி

பெங்களூர்


அன்புள்ள முரளி,

காந்தியை இன்றைய சூழலில் மறுகண்டடைவு செய்ய என் நூல் உதவியிருக்கிறதென்பதில் மகிழ்ச்சி. சென்ற ஈரோடு கண்காட்சியில் மிக அதிகமாக விற்ற நூல் அது என்றார்கள். அது உருவாக்கும் செல்வாக்கையும் கண்டுகொண்டிருக்கிறேன். அந்நூலின் இலக்கு நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.

ஜெ



மதிப்பிற்குரிய ஜெயமோகன்,


தங்கள் அவதாரம் சிறுகதை படித்தேன். வழக்கம் போல அருமை. அவதாரம் என்றவுடன் ராமாவதாரம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. பிறகு தங்கள் எழுத்துக்களில் ராம பிரானைக் குறித்துத் தேடித் பார்த்தேன். ஸ்ரீராமன் குறித்தும் ராமாயணம் குறித்தும் தங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். கண்ணனைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். பகவத் கீதை உரையும் படித்தேன் . இந்திய கலாசாரத்தில் ராமாயணம் முக்கியமானது என்று நினைக்கிறேன். இது குறித்துத் தங்கள் எண்ணங்களை நேரம் கிடைக்கும் போது எழுதவும்.

அன்புடன்

ஸ்ரீகாந்த்.

http://www.sangatham.com/


அன்புள்ள ஸ்ரீகாந்த்

கிருஷ்ணனின் ஆளுமையில் உள்ள  கலவை எனக்குப் பிடித்திருக்கிறது. தத்துவ ஞானி , குழந்தை, மன்னன், காதலன். நான் கீதை வழியாகவே கிருஷ்ணனை அணுகுகிறேன். அதன் விரிவாக்கமே மகாபாரதம். ராமன் மேல் அந்த ஈர்ப்பு உருவாகவில்லை

ஜெ



ஜெ,

தங்களின் காந்தியின் பிள்ளைகள் கட்டுரை படித்தேன். அப்பாவுடன் ஒரு நெருக்கம் அல்லது நேரடித் தொடர்பு (அம்மா மூலம் அணுகாமல் நேரடியாக அணுகுவது ) இல்லாத அநேகருக்கு இந்த சிக்கல் உண்டு.நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை என் அப்பாவிடம் நேரடியாக எதையும் கேட்க மாட்டேன்.ஒரே வீட்டில் இருந்தும் பெரிய இடைவெளி இருந்தது. ஒரு விபத்தில் காலில் அடிபட்டு மூன்று மாதம் என் தந்தை மருத்துவமனையில் இருந்தார்.அப்பொழுதான் ஒரு நாள் இரவு நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினோம் அதன் பிறகு அவர் ஒரு நல்ல நண்பர் ஆகிவிட்டார்.அனேக விசயங்களில் வேறு பட்டாலும் அந்தப் பழைய வெறுப்போ,கோபம் இல்லை. "tom  hanks " நடித்த 'Road to Perdition ' படத்தில் – இரு  குழந்தைகளுக்கு  அப்பாவாக  வரும்  கதாபாத்திரம் michael  sulliven .தன்னிடம் கடுமையாகவும் தம்பியிடம் அன்பாகவும் நடந்து கொள்ளுவதாக மூத்த பையன் சொல்லும் குற்றச் சாட்டிற்கு அவர் சொல்லும் டயலாக் "Because you are more like me ". உங்கள் கட்டுரை படித்ததும் இந்த வசனமும் ஞாபகம் வந்தது.

 

ஜெகன்னாதன் மனோகரன்

 

அன்புள்ள ஜெகன்னாதன்,

தந்தையைப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். அதற்குக் காரணம் தூரமல்ல அண்மை.

 

நான் எழுதிய ஒரு கதை [விரித்தகரங்களில்] அதில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லும் வரி 'தந்தைக்கும் மகனுக்குமான உறவென்பது வானத்துக்கும் பூமிக்குமான உறவுபோல, அவ்வளவு சேய்மை, அவ்வளவு அண்மை'

 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.