Suneel Krishnan's Blog, page 4
May 6, 2024
ஆயுர்வேதம் உள்ளவரை அவரும் இருப்பார்- டாக்டர். இல. மகாதேவனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு
மே காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை. நான் இட்டிருந்த தலைப்பு 'மகாதேவன் எனும் எரிநட்சத்திரம்'.
"ஆயுர்வேத மருந்துகளுக்கும் பின்விளைவு உண்டு, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும், கல்லீரல் பாதிப்பு நேர வாய்ப்பு உண்டு என ஏழு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவன் எனும் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். ஆயுர்வேதம் புனிதமானது, பின்விளைவற்றது, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள். எல்லாமே இறைத்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொழுது நவீன மருத்துவத்தில் இறைத் தன்மை இல்லையா? போலியோ குணமாக்கப்பட்டதே? சின்னம்மை குணமாக்கப்பட்டதே? அப்பொழுது ரிஷிகளும் சித்தர்களும் எங்கு இருந்தார்கள்? என்ன செய்தது ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும்? ஆதலால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், மனிதனை மதித்தல், நோயாளி குணமாக வேண்டும் என்பதற்கு முன்னுரிமைக் கொடுத்தல், நான் என்ற அகங்காரத்தைத் தள்ளி வைத்தல், இறப்பின் உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்தல்- இவையே இந்த சிக்கலை கடக்க நம்முன் உள்ள தீர்மானமான வழியாகும். மனிதன் மாற வேண்டும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தை நாம் மாற்ற இயலாது. ஆனால் நாம் மாறலாம், நம் பார்வையை மாற்றிக் கொள்ளலாம். நெளிவுசுளிவுடன் நடக்க பழகலாம்." - டாக்டர். இல. மகாதேவன், 'முதற்கால்' நூலிலிருந்து
பாரதியை பற்றி எண்ணும்போதெல்லாம் அவனொரு எரி நட்சத்திரம் என தோன்றும். கூடவே பாரதியை எளிதாக ‘அவன்’ என உரிமைகொண்டாட முடிவதற்கு என்ன காரணம் எனும் கேள்வியும் எழும். புதுமைப்பித்தனையும் இப்படி அழைக்க முடியும். ஆனால் மௌனியையோ சுந்தரராமசாமியையோ நகுலனையோ அப்படி ஏக வசனத்தில் அழைக்க முடிவதில்லை. முதன்மை காரணம் பாரதியும் புதுமைப்பித்தனும் இளமையான உருவத்துடனே நம் மனதில் பதிந்துவிட்டார்கள். சுராவையோ நகுலனையோ மௌனியையோ எண்ணுமாபோது அவர்களுடைய முதிர்ந்த தோற்றமே மனதில் உதிக்கும். எரிநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தின் அரிய நிகழ்வு. சில நொடிகளே தென்படும். ஆனால் கண்டவருக்கு அது வாழ்நாள் அனுபவம். தனது முழு ஆற்றலையும் எரிபொருளாக்கி எரிந்து அழியும். இதற்கு நேரெதிரானது அகல்விளக்கு. நின்று நிதானமாக எரியும். நெருங்கி வருபவற்றுக்கு ஒளிவழங்கும். மானுட அறிவு செயல்பாடு இவ்விரு சரடுகளால் ஆனது. இரண்டுக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ளது. எரிநட்சத்திரம் கனவுகளின், இலட்சியங்களின் பிரதிநிதி. அகல்விளக்கு தற்கணத்திகற்கானது. பயன்மதிப்பு கொண்டது. அகல்விளக்கின் தன்மையும் பொருந்தும் என்றாலும் எனது ஆசிரியர் ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனை எரிநட்சத்திரம் என்றே வகைப்படுத்துவேன். ஆயுர்வேதத்திற்காக தனது ஊனையும் உயிரையும் அளித்தவர். கலைஞர்களுக்குரிய தத்தளிப்பும் கொந்தளிப்பும் கொண்ட ஆளுமை அவர். இலக்கியவாதியாக இருந்திருந்தால் பித்தும் படைப்பூக்கமும் கொண்ட பாரதி புதுமைப்பித்தன் பிரமிள் வரிசையில் இயல்பாக பொருந்தி போயிருப்பார் என தோன்றியதுண்டு. அறிஞர்களுக்குரிய அறிவு பரப்பும் கலைஞர்களுக்குரிய படைப்பூக்கமும் ஒருசேர அமைந்த அரிய ெஆளுமை.
டாக்டர் இல. மகாதேவன், லக்ஷ்மண சர்மாவிற்கும் சந்த்ராவிற்கும் ஜனவரி 19, 1969 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவி சாரதா. ஒரே மகள் சந்த்ரா இப்போது இளநிலை ஆயுர்வேதம் பயின்று வருகிறார். இவருடைய தாத்தா ஒய். மகாதேவ ஐயர் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற மருத்துவர். நாகர்கோவில் அருகேயுள்ள தெரிசனம்கோப்பு எனும் ஊரில் உள்ள டாக்டர். ஒய். மகாதேவ ஐயரின் ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் முதன்மை மருத்துவராக இருந்தார். சென்னை வெங்கட்ரமணா கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத பட்டப்படிப்பை 1992 ஆம் ஆண்டு முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரியில் காய சிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார். கேரளாவில் உள்ள பங்கஜ கஸ்தூரி கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறந்த அறிவியல் எழுத்துக்கான தேசிய விருதை ஆயுஷ் துறை மத்திய அமைச்சர் ஸ்ரீ பாத் யஷோ நாயக்கிடமிருந்து பெற்றுள்ளார். தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார். அவருடைய ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ தமிழக அரசின் சிறந்த புத்தக பரிசை வென்றுள்ளது. காலச்சுவடு வெளியீடாக வந்த 'உணவே மருந்து' நூலுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்தாண்டு ஆயுர்வேத மருத்துவர்களுக்கான உச்ச விருதான ‘தன்வந்தரி’ விருது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. சாரதா ஆயுர்வேத மருத்துவமனை இளம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான பயிற்சி களமாகவும் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ மாணவர்களும் இளம் மருத்துவர்களும் மகாதேவனிடம் பயின்றுள்ளனர். தமிழகம் கேரளம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட அவரிடம் பயின்றுள்ளனர். ஆறுமாதம் வரை தெரிசனங்கோப்பில் இலவசமாக தங்கி பயிலலாம். அதற்கு பிறகு தொடர விரும்புபவர்களுக்கு மாதச்சம்பளம் உண்டு. இணையத்திலும் பல்வேறு தேசிய சர்வதேசிய கருத்தரங்குகளிலும் பங்கேற்று செறிவான உரைகள் ஆற்றியுள்ளார். சர்வதேச அளவில் ஆயுர்வேதத்தின் முகங்களில் ஒருவர் என சொல்லலாம். ஏப்ரல் எட்டாம் தேதி இரவு இருதய நோய் காரணமாக மரணமடைந்தார். ஃபிப்ரவரி மாத இறுதியில் அடுத்தடுத்து அவரது தந்தையையும் தாயையும் இழந்திருந்தார். மகாதேவனின் மரணம் அவரை அறிந்த அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது. தனிப்பட்ட முறையில் என்னால் அவரது மரணத்தை செரித்துக்கொள்ள இயலவில்லை. அந்த வாரத்தில் அவரை சந்திப்பதாக இருந்தேன். சரக சம்ஹிதையின் மெய்யியல் பகுதி சார்ந்த நூல் ஒன்றும் சித்த மருத்துவர் கு. சிவராமனுக்கும் மகாதேவனுக்குமிடையிலான உரையாடல் நூலொன்றும் என அவருடன் சேர்ந்து இரு நூல்களை எழுதும் திட்டமிருந்தது. அவரது தாத்தா ஒய். மகாதேவ ஐயரின் மரணத்தை பற்றி சொல்லும்போது "உடலைப் பொருட்படுத்தாமல், வெறி பிடித்த மாதிரி உழைத்ததினால் வந்த நிலை என்று சொல்லலாம்" என குறிப்பிடுகிறார். மேற்சொன்ன காரணம் மகாதேவனின் மரணத்திற்கும் பொருந்தும். அவரை நேர்காணல் செய்வதற்காக நாகர்கோயிலில் இறங்கி 5 மணிக்கு தெரிசனம்கோப்பு சென்று சேர்ந்த போது வாசல் பகுதியில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் எட்டு மணி வரை வாசிப்பது அவரது வழக்கம். தனது வாசிப்பு முறையைப் பற்றி கூறும்போது “இப்போது ஒரு புது நோயாளி வருகிறார், புது பரிசோதனை முறை வருகிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்கிறேன். எல்லா பெரிய கருத்தரங்குகளிலும் உரையாற்ற அழைக்கிறார்கள், அதை புதியமுறையில் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தொடர் வாசிப்பு தேவை. ஆயுர்வேத பட்ட மேற்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியுள்ளதால் அதற்காகவும் வாசிக்கிறேன். இதற்கு பிறகு இந்த நோய்க்கு சித்தமருத்துவத்தில் என்ன மருந்து? பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்படாத சில நாட்டு மருத்துவ முறைகள் உள்ளன. அதில் என்ன சிகிச்சை கூறப்பட்டுள்ளது? இப்படி நான் பலவற்றுடன் ஒப்பிட்டுப் படிக்கும் போது தான் அறிதல் முழுமையடைகிறது. இதில் பட்ட மேற்படிப்புக்கு மட்டும் தான் பாடம் வருகிறது. 70 % நடைமுறைக்கு பயனளிக்க கூடியதைத் தான் படிக்கிறோம். இது மருத்துவம் சார்ந்த படிப்பு. இப்போது 50 % சித்த மருத்துவம் தான் வாசிக்கிறேன். 15 % நாட்டு மருந்து சார்ந்த புத்தகங்கள், குமரி மாவட்ட மருத்துவப் புத்தகங்கள், 10% ஆயுர்வேதம், 20% ஆங்கில மருத்துவப் புத்தகங்கள், தொடக்கக் காலங்களில் நிறைய ஆயுர்வேதப் புத்தகங்கள் படித்ததினால் அதை குறைத்து கொண்டேன்.” என கூறுகிறார். ஆயுர்வேதம், சித்த மருத்துவம், குமரி மாவட்ட நாட்டு மருத்துவ முறைகள், நவீன மருத்துவம், இலக்கியம் என பலதரப்பட்ட வாசிப்பு அவருக்கு உண்டு. கருத்தரங்குகள், வகுப்புகள் என தொடர் பயணங்கள். மருத்துவ ஆலோசனைக்கு அமர்ந்தாரெனில் எப்படியும் நாளைக்கு நூறு புற நோயாளிகளை காண்பார். உள்நோயாளிகளை நாளுக்கொருமுறையோ இருமுறையோ பார்ப்பார். இத்தனைக்குமிடையே சுமார் 16000 பக்கங்கள் ஆயுர்வேதம் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
நான் மகாதேவனின் முதன்மை மாணவர்கள் போன்று அவருடன் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ உடனிருந்து பயின்றவனில்லை. ஆனால் எப்போதும் அவரையே எனது ஆயுர்வேத ஆசிரியராக கருதிவந்துள்ளேன். அவ்வளவாக பரிச்சயமில்லாத ஏதேனும் ஒரு புதிய நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் மகாதேவனின் நூல்களே முதன்மை புகலிடம். சமாளிக்க சிரமப்பட்டால் அவரிடம் அனுப்பி வைப்பேன். என் முடியும் முடியாது முயன்று பார்க்கலாம் என தெளிவாக சொல்லிவிடக்கூடிய மருத்துவர் அவர். தனது எல்லைகளை அறிந்தவரே அறிஞராக இருக்க முடியும். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள் அவரை தங்களது ஆசிரியராக கருதுதிறார்கள். எனது தனிப்பட்ட துயரத்திற்கு பெரிய பொருளேதும் இல்லை. மகாதேவனின் எத்தகைய ஆளுமை, அவரது பங்களிப்பு என்ன? ஆகிய கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியே இந்த கட்டுரை.
ஆயுர்வேத உலகில் அவர் அறிமுகமான புதிதில் ஒரு கலகக்காரராகவே அறிமுகமானார். சமஸ்கிருத பாடமுறையை அடிப்படையாக கொண்டது ஆயுர்வேதம். மகாதேவன் நடைமுறை பயன்பாடை கருத்தில் கொள்ளாத பண்டித மரபை கடுமையாக விமர்சித்தார். “ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருத நாட்டம் அவசியமானதுதான். ஆனால் சமஸ்கிருதத்திற்குள் ஆழ்ந்து மூழ்கி தம்மை இழந்துவிட்டால் சிகிச்சையில் நாட்டம் குறைந்து பின்தங்கி விடுவார்கள். அவர்களுக்கு புத்தக அறிவு அளிக்கும் ருசியே போதையாகிவிடும். மருந்து செய்பவர்களின் வலி, மருந்து கிடைக்காததன் வலி, நோய் குணமாகவில்லை என்பதால் வரும் ஏக்கம் என இவை எதையும் அவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் அவர்களின் பாண்டித்தியத்திற்கு கல்லூரியில் நல்ல வேலை கிடைத்து விடுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவார்கள். சமஸ்கிருத அறிவு ஆயுர்வேதத்திற்கு நடைமுறை பயன்பொருட்டே முக்கியமானது என்பதை மறந்துவிடுவார்கள். பதார்த்த விஞ்ஞானம் போன்ற அடிப்படை பாடங்களை நூலறிவை கொண்டு எளிதாக நடத்தியே காலம்கடத்திவிடுவார்கள். மருத்துவத்தை தொழிலாக கொண்ட நாம் அப்படி இருக்க முடியாதே. இரவு இரண்டு மணிக்கு, நன்கு உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில், எழுப்பி, இரத்தம் கசிகிறது, என்ன செய்வது என கேட்பார்கள்.” மிக தெளிவாக ஆயுர்வேத கோட்பாட்டுவாதிகளுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் இடையேயான வேறுபாடை முன்வைக்கிறார். இவ்வகையான விமர்சனங்கள் தொடக்க காலத்தில் ஆயுர்வேத தூய்மைவாத தரப்பினால் அவர் தீவிரமாக எதிர்க்கப்பட காரணமானது. மேடையுரைகளில் அவர்களை கிண்டல் செய்தார். தீவிரமாக விமர்சித்தார். நேர்காணலிலிருந்து ஒரு உதாரணத்தை சுட்டுவதாக இருந்தால், இந்த பதிலை எடுத்துக்கொள்ளலாம் “சில வேதப் பாரம்பரிய பிராமணர்கள் வினோதமான சில கருத்துக்களை சொல்வார்கள். எனக்கு அவற்றில் நம்பிக்கை கிடையாது. அமெரிக்கா போய் கர்மா செய்தால், அந்த கர்மாவிற்கு பலன் கிடையாது. பஞ்சகச்சம் கட்டவில்லையென்றால் அந்த ஆற்றல் பூமிக்குப் போய்விடும். இப்படி பல கதைகள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் போய்க் கடுக்காய் கொடுத்தால் எந்த நாட்டு நோயாளிக்கும் பேதி போகும். நேர்வாளம் கொடுத்தால் பேதி போகத் தான் செய்யும். மதனபலம் (மலங்காரைக்காய்) கொடுத்தால் வாந்தி வரத் தான் செய்யும்.” மகாதேவன் என பெயர் குறிப்பிடாமல் எங்கள் வகுப்புக்களில் அவருக்கான மறுப்புகள் சில வேளைகளில் கிசுகிசுப்பாகவும் சில வேளைகளில் வெளிப்படையான எரிச்சலுடனும் சொல்லப்பட்டன. சாத்திரத்தின் மீதான நம்பிக்கையின்மையே அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்றார்கள். நவீன மருத்துவ நோக்கை ஆயுர்வேதத்திற்குள் பொருத்தி பார்ப்பது பெரும் பிழை, தேவையில்லாத குழப்பத்தையே விளைவிக்கும் என்றார்கள். மாணவர்கள் அவரை நெருங்கினால் வழிமாறி சென்றுவிடுவார்கள் என அஞ்சினார்கள். ஆனால் இவை எங்களுக்குள் மகாதேவன் மீதான ஈர்ப்பை பெருக்கியதே அன்றி குறைக்கவில்லை. நவீன மருத்துவம் குறித்து அவர் கொண்டுள்ள பார்வை பிற ஆயுர்வேத பட்டதாரிகளிடமிருந்து வேறானது. “ஆயுர்வேதத்தை முழுமையாக, நன்றாகப் படித்த, குண சித்தாந்தங்களை புரிந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்ட பிறகு தான் நான் நவீன மருத்துவத்தை ஊன்றி அறியத்தொடங்கினேன். நான் நேரடியாக நவீன மருத்துவத்தை கற்க தொடங்கி இருந்தால் குழம்பிப் போய் இருப்பேன். சமூகத்திற்குப் பெரிய தீங்கு விளைவிப்பவனாக மாறி இருப்பேன். இப்பொழுது ஸ்டேட்டின் (Statin) சாப்பிட்டால் கல்லீரலில் சுரக்கும் நொதிகள் கூடி கெண்டைக்கால் வலி ஏற்படுகிறது. கால்சியம் சேனல் தடுப்பான்களை (calcium channel blockers) சாப்பிட்டால் கால் வீக்கம் வருகிறது. அம்லோடிஃபினோ (amlodipine), நிஃபிடிஃபினோ (Nifedipine) (உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்) சாப்பிட்டு காலில் வீக்கத்துடன் ஒருவர் வருகிறார் என்றால் ஆயுர்வேத மருத்துவருக்கு இது பற்றி தெரிவதில்லை. சோபம் (வீக்கத்தை முதன்மை குறியாக கொண்ட நோய்) என்று நினைத்து புனர்னவாதி கஷாயத்தில் சந்திரபிரபா சேர்த்து கொடுத்து, இரவு இரண்டு ஸ்பூன் தசமூல ஹரிதகி சாப்பிடுங்கள் என்கிறார். அவர் எழுதியது சரி; தவறல்ல; ஆனால் நோய் காரணம் ஆங்கில மருந்தில் வருவது என்று அவருக்குத் தெரியவில்லை. மருந்தை மாற்றி விட்டு வேறு ஒரு நவீன மருந்தை பரிசீலனை செய்து இருந்தால் நோயாளி குணமாகி இருப்பார். இந்த மாதிரி தவறுகள் நவீன மருத்துவமும் படித்தவர்களுக்கு வராது” என்கிறார். ஆயுர்வேதத்தை தர்க்கப்பூர்வமான மருத்துவமுறையாக மட்டும் காணும் குறைத்தல்வாத நோக்கையும் அவர் ஏற்கவில்லை என்பதே அவரை மேலும் முக்கியமானவராக ஆக்குகிறது. “ஆயுர்வேதம் என்பது நம்முடைய மெய்யறிவு சார்ந்த ஒரு சாத்திரம். அபர வித்யையில் இருந்து பர வித்யைக்கு (பர வித்யை என்பது பிரம்மத்தை அறிவதற்கான கல்வி. அபர வித்யை என்பது உலகியல் தளத்தில் உள்ள பிற அறிவுத்துறைகள்) கொண்டு போகக் கூடிய சாத்திரம் அதாவது உலக அறிவில் இருந்து மெய்யறிவுக்கு தயாராக்கும் வகையில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சீராக்குகிறது” என தெளிவாக ஆயுர்வேதத்தை வீடுபேறுக்கான மார்க்கத்தின் ஒரு பகுதியாக சுட்டுகிறார். முழுமையான ஆயுர்வேத வைத்தியனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு “சிவ வாக்கியர், தாயுமானவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் குயில்பாட்டு, வசன கவிதைகள், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றை ஏற்கனவே ஆழ்ந்நு படித்துள்ளேன். முன்பு வாசித்ததை தான் இப்பொழுது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புராணங்களைம், ஸ்மிருதிகளைம் வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் இப்போதும் பட்டினத்து பிள்ளையார் திரட்டு, மெய்ஞான திரட்டு போன்றவை எல்லாம் வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு சரகம், சுஸுருதம், வாக்பட்டமும் மட்டும் தான் ஆயுர்வேதம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. முழுமையை எய்த முடியாது” என கூறுகிறார்.
தர்க்கப்பூர்வ மருத்துவமுறை - வீடுபேறு அடைவதற்கான சாதனை மார்க்கத்தின் ஒரு பகுதி, ஆகிய இவ்விரு துருவங்களுக்கு இடைப்பட்ட பாதையை தேர்கிறார்.
கவிஞர் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த அஞ்சலி குறிப்பில் மகாதேவனை இராமானுஜருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அந்த ஒப்பீடு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதப்பட்டதாக தொனிக்கலாம். ஆனால் அதில் நியாயமில்லாமல் இல்லை. சர்வநிச்சயமாக மகாதேவனை ஆயுர்வேதத்தின் வீச்சை அதிகரித்து எல்லைகளை விஸ்தரித்த சீர்திருத்தவாதியாக காண இடமுண்டு. குருகுல கல்வியில் நவீன ஜனநாயக தன்மை இருக்காது. சாதி, மதம் பாலினம் என பல்வேறு தடைகள் உண்டு. இன்று ஆயுர்வேத கல்லூரிகளில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் பயில்கிறார்கள். குருகுல கல்வியில் இது சாத்தியமாயிருக்காது. ஆனால் ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவு துறைகள் நவீன கல்விமுறையால் முழுமையாக கடத்தமுடியாது. இந்த இடைவெளியை மகாதேவன் நிரப்பினார். தெரிசனங்கோப்பு சாரதா மருத்துவமனை குருகுலத்தன்மையுடையது தான் ஆனால் அங்கு சாதி, மத, இன, தேசிய, பாலின பாகுபாடு என எதுவும் கிடையாது. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே ஒரே வரையறை. குருகுலங்களின் மரபு மருத்துவமுறைகளில் உள்ள இன்னோரு முக்கியமான சிக்கல் அதில் பேணப்படும் இரகசியம். ஒருவித மூடுண்டத்தன்மை உண்டு. மருந்துகளுக்கு குழுவுக்குறி பெயர்கள், செய்முறைகளுக்கு தெளிவில்லாத விளக்கங்கள் என பல தடைகள். மகாதேவனிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அனுபவம் வழி அவரடைந்த அத்தனை புரிதல்களையும் நேரிலும் புத்தகங்களிலும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அவரது கருத்தரங்கு உரைகளும் வகுப்புகளும் மிகுந்த தனித்தன்மையுடையது “காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தால் எப்படி சொக்கிப் போய்விடுவார்களோ, அப்படி மதியம் 2.30 மணிக்கு வகுப்பு என்றால் கூட அப்படியே நன்கு விழித்துக்கொண்டு மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வெறும் பேச்சல்ல, அவர்களுக்குப் புரியும் போது தான் அதனுடைய ஆழமும், நுட்பமும் தெரியும். ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று திருமூலர் சொன்னது போல படித்ததைப் பகிரும் போது அனுபவம் மேலும் பெருகத் தானே செய்யும்” என குறிப்பிடுகிறார். அவரது வகுப்புக்களில் இந்த லயிப்பை உளமார உணர்ந்திருக்கிறேன்.
“இளம் மருத்துவர்களுக்கு நான் கூறும் மிக முக்கியமான ஆலோசனை ஒன்றுண்டு. ஆர்வம் மேலிட சாஸ்திரத்தை நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது” என கூறுகிறார். அப்படி நிறுவ முற்படுவது ஒருவகையில் அபத்தம். பண்டித மரபு நூல்களில் உள்ளவற்றை மாறா சொல் என கருதுகிறது. நிரூபனத்துக்கு அப்பாலானது என்று முன்வைக்கிறது. ஒருவர் ஏன் மருத்துவம் புரிய வேண்டும்? சாஸ்திரத்தை உண்மை என்று நிறுவுவதற்கா இல்லை நோயாளியின் நோயை தீர்ப்பதற்கா? நவீன மருத்துவத்தில் இந்த கேள்வியே எழாது. ஏனெனில் அவை சான்றை உருவாக்கிய பின்னரே நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் மரபு மருத்துவமுறைகள் களப் பயன்பாட்டிலிருந்து சான்றுகளை தொகுத்து கொள்பவை. ஆகவே மீண்டும் மீண்டும் இந்த முரண்பாடு எழும். மகாதேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான தொடக்கக்கால பாடமென்பது “நான் ஆயுர்வேதத்தை காப்பதற்காக ஆயுர்வேதத்தை பின்பற்றவில்லை. நோயாளியை காப்பதற்காகவே ஆயுர்வேதத்தை பின்பற்றுகிறேன்.” நோயாளி மைய நோக்கை மகாதேவன் எப்படி அடைந்தார் என்பதை அவரே நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். “இது நடந்ததும் வைத்யநாதன் சாருடன் இருந்தபோது தான். ஒரு 22 வயது இளைஞன், கடும் அசதி, உடல் எடை சரசரவென குறைகிறது என சொல்லிக்கொண்டு வந்தான். வைத்யநாதன் சார், அவனுடைய நோயை க்ஷயம் (தேகம் வற்றி போதல்) என்று கண்டறிந்து, அக்னி தீபனம் (பசியைத் தூண்டுதல்), ஸ்ரோதோ சோதனம் (நாள சுத்தி), ப்ரும்ஹணம் (உடலை தேற்றுதல்), லேசான விரேசனம் (பேதிக்கு) என சிகிச்சை அளித்தார் சியவன பிராசம், கூஷ்மாண்டம் (வெண்பூசனி) என ரசாயனமாக (ஆயுராவேதத்தில் ரசாயனம் என்பது ஆங்கிலத்தில் கெமிக்கல் எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. காயகல்பம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஆயுர்வேத ரீதியாக அப்பழுக்கற்ற சிகிச்சை அது. ஒவ்வொன்றையும் சரியாக செய்தார். ஆனால் ஒருநாள் மயங்கி விழுந்தான். நவீன மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சர்க்கரையின் அளவு 680 சர்க்கரை நோயின் முற்றிய நிலை (diabetic ketoacidosis- இன்சுலின் இல்லாத நிலையில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கீட்டோன்களை உடல் அதிகம் உற்பத்தி செய்து ரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கும் ஆபத்தான நிலை) இருந்தது இவர் கொடுத்த லேகியம் அனைத்தும் வீணாகப் போயிற்று. எவ்வளவு பெரிய மனிதர்? அவர் சிகிச்சையிலேயே தவறு நிகழ்ந்து விட்டதே. அது அவர் தவறில்லை அவருக்கு இது கற்றுக் கொடுக்கப்பட வில்லை.ஆகவே அவர் கணக்கில் கொள்ளவில்லை தவறிபோனது. இப்படிப்பட்ட சூழல்களில் நவீன மருத்துவம் கற்றால் தான் இந்த தவறுகள் குறையும். நான் அப்போதே டேவிட்சன் பாட புத்தகத்தை வாங்கிவிட்டேன்.” வைத்தியநாதன் அவரது ஆசிரியர். தனது குரு என செல்லுமிடத்திலெல்லாம் அவரை முன்னிறுத்துவார். குருவின் முறைமைகளின் எல்லையை கண்ணுற்று அங்கிருந்து தனக்கான தனிப்பாதையை வகுத்துக்கொள்வதற்கு அபார மனத்திண்மை வேண்டும். அப்படியான தனிப்பாதை பயணத்தை ஆசிரியரின் மீதான அவமரியாதையாகவோ வெற்றியாகவோ கருதிக்கொள்பவரும் இல்லை.
நேர்காணலில் நோயாளி மையப் பார்வை முழுமையாக துலங்கி வரும் பகுதி என இதைச் சொல்வேன். “சரக சம்ஹிதை சூத்ர ஸ்தானம் ‘மகாசதுஸ்பாதம்’ அத்தியாயத்திலேயே இந்த கேள்வி வருகிறது. இதில் மைத்ரேயர் என்பவர் ஆத்ரேயரைப் பார்த்து “பதினாறு குணங்களும் நிரம்பிய பிஷக்,(மருத்துவன்) திரவ்யம், (மருந்து) உபஸ்தா,(செவிலி) ரோகி (நோயாளி) இருந்தும், ஒழுங்காக கற்று சரியாக மருந்து கொடுக்கிறேன் ஆனால் பலனில்லை. ஒரு போலி அளிக்கும் மருந்து பலனளித்து எழுந்து நடந்துவிட்டானே? முறைப்படி நான் கற்றதற்கும் சிகிச்சை செய்ததற்கும் என்ன மதிப்பு?" என்று கேட்கிறார். இது 20-வது அத்தியாயத்தில் வருகிறது, “மித்யாஹாதி மைத்ரேய” (குழம்பிய புரிதல் கொண்ட மைத்ரேயா) என்று பதில் சொல்லத் தொடங்குகிறார் ஆத்ரேயர். மிக பிரமாதமான பதில் அது. “ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான். அவனைத் தாண்டி செல்கிறாய். கையை கொடுக்கிறாய். அவன் எழுந்திருக்க வேண்டும் என்று தலைவிதி இருந்தால் எழுந்திருப்பான். இல்லையென்றால் அப்படியே கிடப்பான். நீ கை கொடுக்க வேண்டியது உன் கடமை. கை கொடுக்காமல் சென்றால் அது உன் தவறு. கை கொடுப்பதுதான் சுதர்மம். 'யாவத் கண்டகதா ப்ராணா தாவத்காரியம் சிகிட்சிதம்.' பிராணன் கண்டத்தில் சென்று கொண்டிருக்கும் வரையில் சிகிச்சையை செய்ய வேண்டும் என்கிறார். வேறெந்த மருத்துவத்தில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது? சரகரைத் தவிர வேறு யார் இதைப் பற்றி பேசுகிறார்கள்? நீ முயற்சி செய்துக் கொண்டே இரு. இறக்கும் வரை மருந்து கொடுத்துக் கொண்டே இரு. நோய் குணமாகுகிறதோ, இல்லை குணமாகவில்லையோ அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ மருந்தை கொடு. அது தானே உன்னுடைய சுதர்மம். ஒரு மருந்தை கொடு அது கேட்கவில்லையா? அடுத்ததைக் கொடு, அதுவும் கேட்கவில்லையா? அதற்கு அடுத்ததைக் கொடு. இந்த வழிகாட்டலை முழுமையாக கடைப்பிடிக்கிறேனா, என்று சொல்ல முடியாது. 70% வரை கடைப்பிடிக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் முழுவதுமாக கடைபிடிப்பது சவாலானது. ஆனால் அடைய வேண்டிய நிலை அவர்கள் கோடிட்டு காட்டும் அந்த லட்சியம் தான். ஒரு நாள் அந்த லட்சியத்தை உறுதியாக அடைவோம். புற தேவைகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு அந்த லட்சியத்தை மட்டுமே இலக்காக கொள்ளும்போது நிச்சயம் சாத்தியமாகும்.” மகாதேவனிடம் கற்றவர்கள் இணையவழியில் அவருக்கு நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். கேரளத்தில் ஆயுர்வேந பேராசிரியராக உள்ள ஒருவர் அவரது கல்லூரி பருவத்து நினைவை பகிர்ந்துகொண்டார். மகாதேவன் அன்று மருத்துவமனைக்கு வரவில்லை. உள்ளூர் வாசியான ஒரு குடும்பம் அவரை பார்த்தே ஆக வேண்டும் என காய்ச்சலில் துவண்டு கிடக்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இல்லத்திற்கு வரச்சொல்கிறார். மலம் வெளியேறவில்லை காய்ச்சல் அடிக்கிறது. நாடி நோக்கிவிட்டு உடனடியாக வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவரை காண பரிந்துரைக்கிறார். அருகிலிருந்த பேராசிரியருக்கு குழப்பம். வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுத்து பார்க்கும் சுதர்சன மாத்திரை அம்ருதாரிஷ்டம் என கொடுத்து பார்த்திருக்கலாமே என கேட்கிறார். அநேகமாக குடலில் பொத்தல் (Intestinal perforation) விழுந்துள்ளது. உடனடியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என பதில் சொல்கிறார். அவரது அனுமானம் சரி. நெடுநாளாக குடலில் டி.பி பாதிப்பு இருந்து குடல் பொத்தல் ஏற்பட்டுள்ளது. இரவு புற நோயாளிகளை பார்த்துவிட்டு நவீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த குழந்தையை பார்த்து அவர்களது பெற்றோருக்கு நிலையை விளக்கிச்சொல்கிறார். மகாதேவன் எனும் மிகச்சிறந்த மனிதர் வெளிப்பட்ட தருணங்களில் ஒன்று. நோய் கண்டறிதலில் அல்லது சிகிச்சையில் ஏதும் பிழை ஏற்பட்டால் அவரால் அன்று உறங்க முடியாது. தனிப்பட்ட துயராக, தோல்வியாக வரிந்துகொள்வார். பல சமயங்களில் இதுவே மன அழுத்தத்தின் எல்லைவரை அவரை கொண்டு செல்லும். உள்ளுணர்வு என்பது மனச்சாய்வாக இல்லாமலிருக்க பெரும் அறிதலும் பயிற்சியும் வேண்டும். நோய் கண்டறிதலில், அதிலும் குறிப்பாக அரிய நோய்களை கண்டறிவதில் மகாதேவனுக்கு இணையான இன்னோரு ஆயுர்வேத மருத்துவரை நான் கண்டதில்லை.
சில உள்ளூர் நண்பர்கள் மகாதேவனை விட சாரதா வைத்தியசாலையில் உள்ள மற்றொரு முத்த மருத்துவரான சிதம்பரம் அவர்களை காண்பதையே விரும்புவதாக என்னிடம் சொன்னதுண்டு. தொடக்கத்தில் எனக்கிது ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களது பார்வையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மகாதேவன் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து கைவிடப்பட்ட அரிய நோயாளிகளையே பார்த்து அவற்றில் நிபுனத்துவம் பெற்றுவிட்டதால் அவரால் எளிய சளி இருமலைக்கூட அதன் உச்ச சாத்தியத்திலிருந்தே சிந்திக்க முடியும்.
நோயாளி மைய நோக்கைப் போன்றே ஆயுர்வேதம் பயிலவரும் சாமானிய மாணவர்கள் குறித்து அதிகம் சிந்தித்ததும் அவரே. குறிப்பாக தமிழக மாணவர்கள் குறித்து நிறைய கவலைப்பட்டார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் வருகைக்கு முன் பின் என தமிழக ஆயுர்வேத கல்வியை இரண்டாக பிரிக்கலாம். தமிழ்வழியில் பயின்றவர்கள் அரசு கல்லூரியின் வருகைக்கு பிறகு அதிகம் ஆயுர்வேதம் பயின்றனர். “நான் படித்த காலத்தில் இரண்டு பேர் தமிழ் மாணவர்கள். மற்றவர்கள் எல்லோரும் மலையாள மாணவர்கள். தமிழ் மாணவர்கள் எப்போதும் வருடா வருடம் தேர்வில் தோற்றுப் போய்விடுவார்கள். காரணம் சமஸ்கிருத அறிவு குறைவு என்பதே. அவர்களுக்கு நான் பாடம் எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் நான் தான் குறிப்புகள் எழுதி சொல்லிக் கொடுத்தேன்; அவர்களை தேர்ச்சியடைய வைத்தேன். தமிழ் மொழியில் தான் நான் படித்தேன், எனக்கு வடமொழி ஆற்றல் குறைவு என முன்னரே சொன்ல்லியிருந்தேன். தமிழில் படித்து தான் நான் தேர்ச்சியடைந்தேன். தமிழ் மேல் எனக்கு தீராத பற்று உண்டு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆரோக்ய ரக்ஷா கல்பத்ருமம், ஸஹஸ்ரயோகம் போன்ற புத்தகங்கள் பரிச்சயம் இல்லை. மலையாளம் தெரியாதவர்கள் படிக்கட்டுமே என்று எழுதினேன். பழைய கையெழுத்து பிரதிகளை வெளியில் கொண்டு வந்தேன். எனது தமிழ் படைப்புகளில் முக்கியமானது திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம். ஆயுர்வேதத்தின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது. தமிழில் புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை என்றாலும் ஆங்கில புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்க தயங்குகிறார்கள். அதுவும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்க நினைக்கிறார்கள். மூன்றுக்கு ஒன்று இலவசமாக வேறு கேட்கிறார்கள். இதுதான் நிலை.” ஆயுர்வேத அடிப்படைகள் குறித்து தமிழில் அவர் எழுதிய நூல்கள் அத்தனையும் முக்கியமானவை. ஆயுர்வேத நூல்களில் முப்பெரு நூல்கள் என சரகர், சுசுருதர், வாக்பட்டர் இயற்றிய நூல்களை குறிப்பிடுவது வழக்கம். இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை. உண்மையில் மகாதேவனின் ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ சமகாலத்து சம்ஹிதை நூல் என துணிந்து சொல்ல முடியும். சித்த மருத்துவத்தின் மருந்துகளை முக்குற்றங்களின் பார்வையில் அணுகி பார்க்கும் நூலும் மிக முக்கியமானது. தமிழ் மருத்துவ சூழலுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியது.
மகாதேவனால் நவீன மருத்துவர்களுடனும் ஆக்கப்பூர்வமாக உரையாட முடிந்தது. எந்த அறிகுறிக்கு என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்தவர். அலோபதி மருத்துவர்களின் நன்மதிப்பை பெற்றதுடன் நல்லுறவையும் பேணினார். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என இடப்பட்ட அரசாணை குறித்து அவருக்கிருந்த பார்வை இது :- “குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என கிளம்பினால், அது ஆங்கில மருத்துவர்கள் மனதைப் புண்படுத்தும், நட்பை கெடுக்கும். இது சரி என்றால், ஆங்கில மருத்துவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அவர்களும் பச்சிலை மருந்தை கொடுக்கட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஒப்புக்கொள்வோமா?” மனதை புண்படுத்தும் நட்பை கெடுக்கும் என்பதையே முதன்மையான காரணமாக குறிப்பிடுகிறார். தமிழக சூழலில் சித்த மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்குமிடையே ஒருவிதமான இறுக்கம் எப்போதும் உண்டு. மகாதேவன் சித்த மருத்துவத்தை ஆழ்ந்து கற்றார். உள்ளார்ந்த மதிப்புடன் அணுகினார். இவ்விரு முறைகளுக்கிடையே முக்கியமான பாலமாக திகழ்ந்தார். இரண்டையும் இரு கண்கள் என பிரகடனம் செய்தார். சித்த மருந்துகள் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் அவருடைய மிக முக்கியமான
March 4, 2024
நாவல்: சில விவாதங்கள்
(24.2.2024 & 25.2.2024 ஆகிய தேதிகளில் எழுத்தாளர் பா. வெங்கடேசன் ஏலகிரியில் ஏற்பாடு செய்த ‘புரவி’ கூடுகையில் நாவல் அமர்வுக்காக எழுதிய கட்டுரை. இந்த கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியானது. மொழிபெயர்ப்பாளர் சுபத்ரா மெய்ப்பு நோக்கி அளித்தார். நன்றி. 'புரவி' கூடுகை சார்ந்து சில அவதானிப்புகளை எழுத வேண்டும். ஏலகிரியின் அரவமற்ற சுற்றத்தில் நல்லுணவுடன் நட்பார்ந்த சூழலில் இரண்டு நாட்கள் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. விஷ்ணுபுரம் காவிய முகாம்களில் கிடைக்கும் அதே விதமான தீவிர அனுபவம். உணவு இடைவேளைகளில், தேநீர் குடிக்க, காலை கடைகளில் என அலுக்காமல் உரையாடினோம். மயிலன், ஷஹிதா, தூயனுடன் ஊர் திரும்பும் பயணத்தின் போதும் பேச்சு தொடர்ந்தது. சனிக்கிழமை இரவு உறங்கமுடியாமல் மண்டை முழுக்க சிந்தனைகள் முண்டிக்கொண்டிருந்தன. மூளை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அமைதிப்படுத்தி வசத்திற்குள் கொண்டுவருவதற்குள் பெரும்பாடு ஆனது. பா.வெவுடன் நிறைய உரையாடும் வாய்ப்பு கிடைத்தது நல்ல கற்றல் அனுபவம். புனைவு குறித்தும் இலக்கியம் குறித்தும் அவர் கொண்டுள்ள பார்வைகளில் இருந்து என்னுடையவை வேறென்றாலும் எனக்குள் விவாதித்துக்கொள்ள, எனது புரிதல்களை பரிசீலினை செய்துகொள்ள, கூர்தீட்டி கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. அமர்வுகளில் 15 எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள் என்றால் பார்வையாளர்களில் அதே எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் பங்கு பெற்றார்கள். இலக்கியத்தின் மீதான நம்பிக்கையே ஒன்றிணைக்கும் ஆற்றல். வெகு மக்களுக்கான இலக்கிய விழாக்களின் நோக்கம் வேறு. அவற்றில் அரிதாகவே புதியவற்றை நாம் கண்டடைய முடியும். இத்தகைய கூடுகைகளே அடிக்கடி நிகழ வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் 'யாவரும்' ஜீவ கரிகாலன் இரண்டு 'ஐந்திணை' கூடுகைகளை ஒருங்கிணைத்தார். சமகால எழுத்தாளர்கள் கூடி சமகால தொகுப்புக்கள் குறித்து உரையாடினோம். இவை தொடர வேண்டும். )
நாவல் எனும் இலக்கிய வடிவத்தை எப்படிப் புரிந்துகொண்டுள்ளேன், நாவலின் தனித்தன்மை என எவற்றைச் சுட்ட முடியும், நாவல் எழுதுவதில் உள்ள சிக்கல்கள் அல்லது சவால்கள் எவை, எனது நாவலின் வடிவத்தை நான் எப்படி வந்தடைந்தேன்? இக்கேள்விகளை எதிர்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாவல் எனும் அடையாளம் மிகவும் பொதுப்படையானது. நாவல்கள் என நான் பள்ளிக் காலத்தில் வாசித்தவை தேவன், கல்கி மற்றும் சாவியின் படைப்புகள்தான். பி.வி. தம்பி எழுதிய ‘கிருஷ்ணப் பருந்து’ நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ ஆகியவற்றை வாசித்தேன். இதழ்களில் தொடர்களாக வந்தவை. ஓவியங்களும் இடம்பெறும். அவற்றை மொத்தமாக பைண்டு செய்து வைத்திருந்தார்கள். இந்திரா சௌந்தரராஜனை பாக்கெட் நாவலில் வாசித்திருக்கிறேன். தொடர்களாக இல்லாமல் மிகச் சுமாரான தாள்களில் மலிவான விலையில் ஒரு பயணத்தில் வாசிக்க ஏதுவான வடிவில் வெளிவந்த கதைகளை பாக்கெட் நாவல் என்றார்கள். இவற்றை வாசித்து வந்தவன் தற்செயலாக சுந்தர ராமசாமியின் ‘ஜெ. ஜெ. சில குறிப்புகளை’ வாசிக்க நேர்ந்த போது மிகுந்த குழப்பம் உண்டானது. ஏனெனில் அதையும் நாவல் என்றே குறிப்பிட்டார்கள். பதின்ம வயதில் முதல்முறை வாசித்த போது அந்நாவல் சுத்தமாகப் பிடிபடவில்லை. ஆனால் வாசிக்காமல் வீசிவிட முடியாத வசீகரமும் கொண்டதாக இருந்தது.
அதற்கு முன் வாசித்தவற்றுக்கும் ஜெ ஜெ சில குறிப்புகளுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என்பது ஜெ ஜெ பக்க எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எளிதாக வாசிக்க முடியாததாக இருந்தது. அடுத்து என்ன என ஏங்க வைக்கும் சுவாரசியமில்லை. இவையெல்லாவற்றையும் விட உலோகப் பரப்பை இரம்பம் அறுக்கும்போது ஏற்படும் கூச்சம்போல ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. அதன் பகடி என்னைச் சீண்டியது.
ஜெ. ஜெ. சில குறிப்புகள் வாசிப்பதற்கு முன் வாசித்தவற்றை நாவல்கள் எனச் சொல்ல முடியாது என்பதை இப்போது உணர்கிறேன். அவற்றைத் தொடர்கதைகள் எனச் சுட்ட இவை தொடர்களாக அக்கால இதழ்களில் வெளிவந்தன என்பது மட்டும் காரணம் அல்ல. தொடர்கதைகள் முதன்மையாக வாசகரை ‘அடுத்து என்ன’ எனும் ஊகத்தில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டவை. இன்றைய இணையத் தொடர்களின் முன்மாதிரி எனச் சொல்லலாம். சுவாரசியமே அதன் முக்கிய இயல்பும் நோக்கமும். நல்ல நேரக் கொல்லிகள் அல்லது சுய உய்வுக்கான புனைவு நூல்கள்- இவைதான் இளமைக் கால வாசிப்பை நிரப்பியவை.
நான் வாசித்த தொடக்ககால நாவல்கள் அனைத்துமே என்னுள் ஆழ்ந்த அமைதியின்மையை, நிலைகுலைவை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் வாசித்த ஒவ்வொரு பிரதியும் முதல் காதலின் கள்ளமின்மையுடனும் அதே படபடப்புடனும், வாசிக்க முடிந்தது. இது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டிய இயல்பு என்றே நம்புகிறேன். எனினும் ‘நிலைகுலைவு’ என்பது என்னுள் நேர்ந்த எதிர்வினை. முற்றிலும் அகவயமானது. அதை அளவுகோலாகவோ தகுதியாகவோ கொள்ள முடியாது. வேறு ஒருவருக்கு இந்த நிலைகுலைவு எளிய கதைகளின் வழியே சினிமாவின் உணர்ச்சிப்பூர்வமான ஏதோ ஒரு காட்சி வழியாகக் கூட ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு. மேலும், அதே நிலைகுலைவை இப்போது மீண்டும் அடைவேனா எனச் சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லலாம்: இந்த நிலைகுலைவு ஏதும் அதிர்ச்சி மதிப்பீட்டினால் ஏற்பட்டதல்ல, மாறாக அறிதலால் நேர்ந்தது. நாம் நன்கறிந்த ஆனால் எதிர்கொள்ளத் தயங்கும் ஏதோ ஒரு பகுதியை நம்முள் அடையாளம் காண்பதால் நேர்வதாக இருந்தது என்பதே அதற்கு முந்தைய வெகுமக்கள் ரசனை வாசிப்பிலிருந்து முக்கியமான வேறுபாடாக இருந்தது.
சுவாரசியமான நாவல்களை அல்ல, ‘ஈடுபடுத்தும்’ நாவல்களை வாசிக்க விரும்புகிறேன். சுவாரசியமான நாவலுக்கும் ஈடுபடுத்தும் நாவலுக்கும் இடையே வேறுபாடுள்ளதாக எண்ணுகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவருவதையொட்டி அந்நாவல் குறித்துப் பேச முடியுமா என்றொரு நண்பர் கேட்டதன் பேரில் மறுவாசிப்பு செய்ய முயன்று தோற்றேன். பொன்னியின் செல்வன் எனும் சுவாரசியமான நாவல் எவ்விதத்திலும் என்னுள் ஈடுபாட்டை உருவாக்கவில்லை. தி.ஜாவின் ‘மோக முள்ளை’ சமீபத்தில் வாசிக்கும் போது பெரிதாகப் பேசப்பட்ட பாபு யமுனா உறவுச் சிடுக்குகள் மங்கி, கலைக்கும் கலைஞனுக்குமான உறவு குறித்து நாவல் எழுப்பும் விவாதங்கள் முக்கியமானதாகத் தென்பட்டது. மோகமுள் தொடராக வெளிவந்ததுதான், ஆனால் அது தொடர்கதையல்ல. ‘சுவாரசியமான’ நாவல்கள் திருப்பங்களை நம்பிச் செயல்படுபவை. வியப்புணர்வே அதன் மூலதனம். திருப்பங்களும் வியப்புணர்வும் முதல் வாசிப்பில் நமக்குப் புதிதாக இருக்கும். இவற்றை அறிந்தபிறகும் நாடிச்செல்வோமா? இவற்றைத் தாண்டி ஏதாவது கிடைக்குமா? சமீபத்திய உதாரணத்தைச் சொல்வதென்றால், எப்போதும் புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்கும் நூல்களில் ஒன்று கல்கியின் பொன்னியின் செல்வன். அத்தகைய ‘கல்ட்’ ஸ்டேட்டஸ் அதற்கு உண்டு. முதல் பாகம் வெளியாவதற்கு முன்னரும் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்னரும் மிக அதிகமாக அச்சாகி விற்பனையானது. சுருக்கப் பதிப்புகள் வெளியாகின. இந்தாண்டு சுத்தமாக விற்பனையாகவில்லை எனும் செய்தி வருகிறது. ஏனெனில் அது புதிதாக இல்லை. ‘மோக முள்’ எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் திரைப்படமாக வந்துவிட்டது, ஆனால் அதன் முன்னும் பின்னும் விற்பனையைப் பாதிக்கவில்லை. அதற்கான வாசகர்களால் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகிறது. எப்போதும் ‘புதிதாகவே’ இருக்கிறது. இலக்கியம் காலாதீத கேள்விகளை சமகாலச் சட்டகத்திற்குள் பேச வேண்டும் என்பதே என் வரையறை. நடராஜரின் வடிவமான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைக்கொண்டு இதை நான் விளக்கிக்கொள்வேன். ஒரு கால் அகாலத்தில் விண்ணைத் துளைத்திருக்க இன்னோரு கால் நிலையாகத் தரையில் படர்ந்திருக்க ஆடும் நடனத்தில் ஈசனின் உடலே காலங்களை இணைக்கும் ஊடகம். இரண்டு கால்களும் தரையில் பாவ ஆடுவது எவரும் செய்யக்கூடியதே, இரண்டு கால்களும் அந்தரத்தில் என்பது அறிவீனம். மேலும் ஒரு படைப்பு ‘தற்கால’த்திற்கு எதிர்வினை ஆற்றுகிறதா ‘நிகழ்கால’ப் பொருத்தப்பாடு கொண்டதா என்பதை கவனிக்க வேண்டும். Contemporary மற்றும் Present ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு முக்கியம். தற்காலச் சிக்கலை எழுதுவதாலேயே ஒரு நாவல் நிகழ்காலப் பொருத்தபாடு கொண்டதாக ஆக முடியாது. தற்காலச் சிக்கலிலிருந்து வாழ்க்கையின் அடிப்படை வினாக்களை நோக்கி நாவல் செல்கிறதா? தன்னுடைய சொந்த பதிலைத் தேட முடிகிறதா? தற்காலச் சிக்கல்கள் என்பது காலாதீத கேள்விகளை அணுகுவதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. கில்காமேஷும், சிலப்பதிகாரமும், மகாபாரதமும் தற்காலச் சிக்கல்களை நேரடியாகப் பேசுபவையல்ல, மரணம் குறித்தும் நீதி குறித்தும் அறம் குறித்தும் ஆதாரமான கேள்விகளைத் தொடுபவை என்பதாலேயே எப்போதும் நிகழ்காலப் பொருத்தபாடு கொண்டவையாகத் திகழ்கின்றன.
யுவன் சந்திரசேகருடைய உருவகத்தைக் கடன் வாங்குவதாக இருந்தால், சுவாரசியமான நாவல் தொந்தரவற்ற பயணத்துணைவர் போல. இருட்டில் அவர் பாட்டுக்கும் தன் வழியில் செல்வார். அவரோடு நமக்கு எந்த உரையாடலும் இருக்காது. வேறொரு சமகால உதாரணம் சொல்லலாம் என்றால் திருப்பங்கள் நிறைந்த இணையத் தொடர்கள் போல. தொடர்ந்து பார்க்க இயலும். முடிந்ததும் மனதில் சிறு சலனம் கூட ஏற்படுத்தாமல் புகையுருபோல மறைந்துவிடும். ஆனால் ‘ஈடுபடுத்தும்’ படைப்பு வாசிப்பவரின் உள்ளத்தைக் கோருவது. ஒரு புதிய சிந்தனையைக் கிளர்த்துவதாக இருக்கலாம், உணர்வுத் தளத்தில் நம்மைப் பிணைப்பதாக இருக்கலாம், வாழ்வைப் பற்றி/ மனிதர்களைப் பற்றி ஏதோ ஒரு ஞானத்தை/ அறிதலை அளிப்பதாக இருக்கலாம். அக அடுக்குமானத்தில் சிறு குலைவையாவது ஏற்படுத்தும். திருப்பங்களும் திகில்களும் திரைக்கதைத்தன்மைகளும் கொண்ட விறுவிறுப்பான கதைகள் சில வரையறைகளுக்குள் இயங்குபவை. எதை அழுத்தினால் எது வரும் என்பதில் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையே தெளிவான ஒப்பந்தம் உண்டு. ஜார்ஜ் ஆர்வெல் தனது 1984 நாவலில் பல்ப் நாவல்களை உருவாக்கும் இயந்திரத்தைப் பற்றி எழுதியிருப்பார். இன்றைய சூழலிலிருந்து சொல்வதானால், ஒரு ஏ.ஐ செயலியால் எளிதில் உருவாக்கத்தக்க கதைகள். இன்றைய எழுத்தாளருக்கு முன் இருக்கும் சவால்கள் என்பவை ஏ.ஜயால் எழுதத்தக்க கதையை எழதாமல் இருப்பது, உடனடியாக சினிமாவாக மாற்றமுடியாத வகையில் எழுதுவது, மேடையில் சுருக்கமாகச் சொல்ல இயலாத வகையில் எழுதுவது ஆகியவையே என எனக்கு தோன்றுகிறது.
‘ஈடுபடுத்துதல்’ நிகழ வேண்டுமென்றால் நாவலுக்கும் வாசகராக நமக்கும் பொதுவான சில கரிசனங்கள் இருக்க வேண்டும் அல்லது புதியதான ஏதோ ஒன்றை நமக்களிக்கப்போகிறது எனும் நம்பிக்கை வேண்டும். தொடக்கத்தில் ஏற்பும் எதிர்ப்புமாக இந்தக் கரிசனங்கள் சார்ந்து நம் பார்வைகளிருக்கும். ஆனால் காலப்போக்கில் இணக்கமும் ஏற்புமுடைய இலக்கிய ஆக்கங்களையே மனம் நாடும். கருத்துலகு உருவாவதற்கு முன்பான வாசிப்பிற்கும் பின்பான வாசிப்பிற்கும் இடையேயான வேறுபாடு என இதைச் சொல்லலாம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் பலவற்றையும் சென்று முட்டி மோதிப் பார்ப்போம். காலப்போக்கில் நுட்பங்களையும் ஆழங்களையும் தேடத் தொடங்குவோம். அத்தகைய பயணத்தில் புனைவு அலுக்கத்தொடங்கும். மேலும் மேலுமென செல்லுந்தோறும் நம்மை ஈடுபடுத்தி வாசிக்க வைக்கும் ஆக்கங்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஒரு கட்டத்தில் புனைவின் மீதான ஆர்வத்தை இழப்போம். நம்மைத் தூண்டும், கிளர்த்தும் சிந்தனைகளை புனைவுக்கு வெளியே புனைவற்ற நூல்களில் தேடத் தொடங்குவோம். நம்மை அசைக்கும் வாழ்வுகளை வாழ்க்கை சரிதைகளில் கண்டெடுப்போம். ‘சத்திய சோதனை’ எந்த ஒரு நவீன நாவலுக்கும் குறைந்தது அல்ல. அபாரமான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. வாசிப்புக்கான நேரம் குறையக் குறைய மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வாசிக்க தொடங்குவோம். முழு கவசவுடையுடன் இலக்கியப் பிரதிக்கு முன் சென்று நிற்றல் என்பது இதுதான். இது சரியா தவறா என்பது அல்ல, ஆனால் பெரும்பாலான படைப்பாளிகள்/ வாசகர்கள் இந்தச் சலிப்பை ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்கொள்வார்கள். அத்தகைய சூழலில் நமக்குச் சவாலாக இருக்கும் ஆக்கங்களை வாசிக்கவே விரும்புவோம். அல்லது ஒரு சுற்று சுற்றிவிட்டு வெள்ளந்தி வாசிப்பிற்குத் திரும்ப முயற்சிப்போம். ஆனால் அது அத்தனை சுலபமல்ல. கற்பதை விட கற்றதைக் கைவிடுவது மிகக் கடினம். சவாலான ஆக்கங்களைப் பற்றிச் சொல்லும் போது, என்னளவில் இந்தச் சவால் என்பது புழக்கத்திலிருக்கும் ஒன்றைச் சிக்கலான சுழல் மொழியில் எழுதுவது அல்ல. பேசுபொருளுக்கும் வடிவத்திற்கும் இணக்கமிருப்பதாக நம்புகிறேன். எளிமையான பேசுபொருளை சிடுக்கான மொழியில் சொல்லும்போது கடும் ஏமாற்றத்தை உணர்கிறேன். எது எளிமை எது சிக்கலானது என்பது அகவயமானதுதான். சுருக்கி ஒற்றைத் தரப்பாகச் சொல்வது எளிமையானது, பல்வேறு குரல்களின் வழி வெவ்வேறு அடுக்குகளை உருவாக்குவதுதான் உண்மையில் சவாலானது. எஸ்.ரா நாவல் குறித்து எழுதிய ஒரு நூலுக்கு ‘நாவலெனும் சிம்பொனி’ எனப் பெயரிட்டிருந்தார். மிகப் பொருத்தமான சொல். சிம்பொனியில் பிரக்ஞைப்பூர்வமாக ‘ஒத்திசைவின்மையை’ உருவாக்கவும் செய்யலாம். அப்படி உருவாக்கும் போது அது வேறொரு ஒத்திசைவாக இருக்க முடியும். ஒத்திசைவின்மையாகத் தோன்றும் இசையை மீளுருவாக்கம் செய்ய முடிந்தால் அது நாமறியாத வேறொரு ஒத்திசைவுதான். பெருநாவல்களை மீள மீள வாசிக்கும்போது அவை நமக்கு ஒவ்வொரு முறையும் புதிய ஒன்றை எப்படி அளிக்கின்றன? இசைக்கோர்வையில் வெவ்வேறு தனிச்சரடுகளை மட்டும் கூர்ந்து கேட்பது போலத்தான். நாவலின் வடிவத்தைப் பற்றிப் பேசும்போது பிற உரைநடை புனைவு வடிவங்களுடன் ஒப்பிடாமல் பேச இயலாது. குறுங்கதையைப் பற்றிய வரையறையை வாசித்த போது ஒரு ஜியார்ஜியோ மேக்னனல்லி ‘நாவலென்பது நாற்பது வரிகளும் சில கியூபிக் மீட்டர் காற்றும். காற்று நீக்கப்பட்ட நாவலே குறுங்கதை’ என்றொரு சுவாரசியமான விளக்கத்தை அளித்தார். க.நா.சு சிறுகதை எனும் வடிவம் பற்றி எழுதும் போது கதை என்பதை ஒரு அடிப்படை அலகு என விளக்குகிறார். செங்கலைப் போல. கதையைக் கொண்டு செய்யுள் வனையலாம், கவிதை எழுதலாம், குறுங்கதை எழுதலாம், சிறுகதையாக்கலாம், நாவலாக வளர்க்கலாம். எந்தக் கதை சிறுகதையாகிறது, எது நாவலாகிறது? என்பது எனக்கொரு சுவாரசியமான கேள்வி. எந்தக் கதையும் நாவலாக முடியும் என்பதே மேலளிக்கப்பட்ட மேற்கோள்கள் வழி நான் புரிந்து கொள்வது. உதாரணமாக லிடியா டேவிஸின் ‘குழந்தை’ எனும் குறுங்கதையை எடுத்துக்கொள்ளலாம்.
அவள் குழந்தையின் மீது குனிந்து படிந்திருந்தாள். அவளால் அவளை விட்டுச்செல்ல முடியாது. ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி கிடத்திவைக்கப்பட்டிருந்தது. அவள் குழந்தையை இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள், கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும். உயிருடனிருக்கும்போது, புகைப்படத்திற்கு அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும் இயலாது. அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் "நான் கேமராவை எடுத்து வருகிறேன்" குழந்தையிடம் "அசையாதே" என சொல்வது போல.
குறுங்கதை தருணங்களை கைப்பற்ற முடிபவை. கதைமாந்தர்களோ அவர்களின் தனித்தன்மைகளோ முக்கியமல்ல. மேற்சொன்ன கதையில் அம்மா மரணமடைந்த குழந்தையை மேசையில் கிடத்துகிறாள் எனும் தருணம் மட்டுமே பதிவாகிறது. அந்த அம்மா யார், அவர் எப்படி பட்டவர், அந்தக் குழந்தை எப்படி இறந்தது இவை எதுவும் நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இவற்றைப் பேசும் போது சிறுகதையாக உருமாற்றமடைகிறது. சிறுகதைகளில் தருணங்களுக்கு இன்ன இயல்புடைய கதைமாந்தரின் எதிர்வினையும் பேசப்படுகிறது. நாவல்கள் தருணங்களின் காரண காரியத்தையும் கதைமாந்தரின் எதிர்வினையின் காரண காரியத்தையும் விரித்தெடுக்கத்தொடங்குகின்றன.
ஒற்றைக் கதைமாந்தரை மையப்படுத்தி ஒரு காலகட்டத்தில் நிகழும் கதையை சிறுகதை எனப் பொதுவாகச் சொன்னால் பெரிய காலகட்டத்தில் பல்வேறு கதைமாந்தர்களின் ஊடாட்டத்துடன் நிகழ்வதை நாவல் எனச் சொல்லலாம். குறுங்கதைக்கு கவிதைக்குரிய கச்சிதம் முக்கியம். ஒரு சொல் மிகையாகக்கூடாது. சிறுகதையில் தேவையில்லாத வரிக்கு இடமில்லை. நாவலைப் பொருத்தவரை பெயருடன் ஒரு கதைமாந்தர் அறிமுகப்படுத்தப்பட்டால் அவர் வெறுமே வந்து செல்பவராக இருக்கக்கூடாது. ஆலய கும்பாபிஷேகங்களில் பிராண பிரதிஷ்டை எனும் சடங்கு உண்டு. வழிபாட்டுக்குரிய விக்கிரகங்களுக்கு உயிர்கொடுத்தல் எனச் சொல்லலாம். நாவலில் ஒருவருக்குப் பெயரிட்டுவிட்டோம் என்றால் அவருக்கு உயிர்கொடுத்துவிட்டோம் என்றே பொருள். இவையெல்லாம் பொதுப் புரிதல்கள் மட்டுமே. நாவலுக்குரிய விரிதலும் அடுக்குகளும் கொண்ட சிறுகதைகள் புதுமைப்பித்தன் தொடங்கி சுரேஷ் பிரதீப் வரை பலரால் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ ‘கரைந்த நிழல்கள்’ போன்ற நாவல்களில் ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய கச்சிதம் கொண்டவை. மரபுகளும் விதிகளும் மீறப்படுவதற்குதான். என்னளவில் நாவல் என்பது பிரம்மாண்ட வாழ்வின் நுண்மைகளை இலக்கியவாதி கைப்பிடி ஆற்று மணலைக்கொண்டு பிரதியெடுத்துக் கட்ட முயலும் சிற்றில். குறுங்கதை கோட்டுச்சித்திரமெனில் சிறுகதை தாளில் வரையப்படும் இருபரிமாண வர்ண சித்திரம் என்றால் நாவல் முப்பரிமாணம் கொண்டது. சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட குறுநாவல் என்றொரு வடிவம் உள்ளது. குறுநாவல் என்பது நாவல்தான், ஆனால் அளவில் சிறியது. நாவலுக்கான ஒப்பீட்டு அளவுகோல் என்பது வாழ்க்கைதான். இலக்கியத்தின் உண்மைத்தன்மைக்கும், நம்பகத்ன்மைக்குமான சான்று. இயற்கையின் சீர்மையைப் பிரதியெடுக்கலாம் அல்லது சீர்மையின்மையை பிரதியெடுக்க முயலலாம்.
குறுங்கதைகள் மின்னல் வெட்டில் ஒளி பாய்ச்சும் தன்மை கொண்டவை. அல்லது இருளில் சுடரும் மின்மினி. சிறுகதைகள் நீருக்கடியில் நீந்திக் கடக்கும் வண்ண மீன் எனில் நாவல் நிதானமாக அசைபோட்டபடி பால் கொடுக்கும் பசு எனச் சொல்லலாம். எத்தனைக்கு எத்தனை நாவலாசிரியர் வாழ்வனுபவங்களை மேய்ந்து அவற்றை அசைபோடுகிறாரோ அத்தனைக்கு அத்தனை அது பாலின் தரத்தில் வெளிப்படும். வாழ்வனுபவங்களை தத்துவமாக சாரப்படுத்தி கலையின் சட்டகத்திற்குள் அளிப்பதே நாவல் எனும் கலைவடிவம். ஜெயமோகன் நாவலை தத்துவத்தின் கலைவடிவம் எனக் குறிப்பிடுகிறார். எழுத்தாளருக்கு மெய்யியல் மரபுகளின் பரிச்சயம் கூடுதல் பலம்தான். அவற்றைக் கற்று நாவலில் எழுதிப் பரிசீலித்துப் பார்ப்பது என்பதொருவகை. ‘மெய்யியலிலிருந்து கலைக்கு’ என இதை சொல்லலாம். இதற்கு நேரெதிராக வாழ்வனுபவங்களின் ஊடாக, கற்பனையின் ஊடாக முறையான மெய்யியல் பயிற்சியின்றியே கூட எழுத்தாளர் தனக்குள் இயங்கும் மெய்யியல் தளத்தைக் கண்டுகொள்ள முடியும். உலகின் ஆக புராதனமான காவியமாகக் கருதப்படும் ‘கில்காமேஷை’ இன்று வாசித்தால் அங்கிருந்து கடந்தாண்டு தமிழில் வெளியான ‘பவதுக்கம்’ வரை ஒரு கோடு போட முடியும் என தோன்றுகிறது. இருத்தலியல் பிரதியாக கில்காமேஷை வாசிக்க இடமுண்டு. கில்காமேஷை எழுதியவருக்கு இருத்தலியல் என்றால் என்ன எனத் தெரிய வேண்டியதில்லை. மெய்யியல் பரிச்சயம் விமர்சகருக்கும் வாசகருக்கும் சில கூடுதல் சாளரங்களை திறந்து வைக்கக்கூடும். கில்காமேஷ் தனது ஆடிப்பிம்பம் போலிருந்த உற்ற நண்பனை இழக்கிறான். அங்கிருந்து வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் மரணமற்ற பெருவாழ்வு குறித்தும் பதைப்புடன் சிந்திக்கிறான். அதுவே அந்தக் காப்பியத்தின் அடிநாதம். ‘ஏன்’ எனும் கேள்வியை எதிர்கொள்வதே மெய்யியலின் வேலை. மெய்யியல் மரபுகள் ‘ஏன்களை’ முறைப்படுத்துகின்றன. அவற்றுக்கான விடைகளை தர்க்கப்பூர்வமாக முன்வைக்கின்றன. மெய்யியல் பரிச்சயம் ஏதுமற்ற நிலையில் கூட நாம் ‘ஏன்களை’ எதிர்கொள்கிறோம். அவற்றுக்கு நம்மால் முடிந்த வகையில் விடைகாண முயற்சிக்கிறோம். வாழ்வு குறித்தான மெய்யியல் நோக்கு (Philosophical outlook) இல்லாத மனிதரே இருக்க முடியாது என நம்புகிறேன். ‘வாழ்க்கைன்னா.‘ ‘வாழ்க்கைங்கிறது..’ என அனுபவங்களின் ஊடாக வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு நோக்குகள் புலப்படும். எழுத்தாளரால் அவற்றைத் தொகுத்து வெளிப்படுத்த முடியும். அதற்கான மொழியும் கற்பனையும் அவருக்கு இருக்கிறது. எழுத்தாளருக்கு முதன்மையாக இருக்க வேண்டியது வாழ்வனுபவ சேகரமா கற்பனைத் திறனா எனக்கேட்டால், கற்பனைத் திறனே எனச் சொல்வேன். அனுபவங்கள் பலருக்கும் சாத்தியமாகக்கூடியது. கற்பனைத் திறனே கலைஞர்களின் தனித்தன்மையை உருவாக்குகிறது. அனுபவங்களையும் கற்பனைகளின் வழி உருவாக்க முடியும். ‘பிறராதல்’ என்பதே இலக்கியத்தின் அடிப்படை.
மெய்யியல் அடித்தளம் நாவலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒரு உதாரணம் கொண்டு சொல்ல முடிகிறதா எனப் பார்க்கிறேன். என் நோக்கில் நான் வாசித்த மிகச் சிறந்த இந்திய மொழி நாவல்களில் ஒன்றென பைரப்பாவின் ‘குடும்பம் சிதைகிறது’ நாவலைச் சொல்வேன். தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ துறை சார்ந்த நாவல் எனும் வகையில் எனக்கு முன்னோடி ஆக்கமும் கூட. இத்தகைய இந்திய நாவல்களை வாசிக்கையில் முதன்மையாகத் தோன்றியது அவற்றின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திய மெய்யியல். க. நா.சு வின் ‘பொய் தேவு’ தொடங்கி மீறல் எழுத்து எனக் கொண்டாடப்படும் கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம் , மகத்தான காதல் கதையாகக் கொண்டாடப்படும் தி.ஜாவின் ‘மோகமுள்’ ‘நளபாகம்’, நபகோவின் லோலிடாவின் சாயலில் முறையற்ற காமத்தைப் பேசத் தொடங்கி அதை உன்னதமாக்க முயலும் லாசராவின் ‘அபிதா’, எதிலும் பொருத்திக்கொள்ள முடியாத கணேசனின் வாழ்வைச் சொல்லும் காஷ்யபனின் ‘அசடு’ என முன்னோடிகள் பெரும்பாலானோரின் நாவல்களில் இந்திய மெய்யியல், அதிலும் குறிப்பாக அத்வைத வேதாந்தம் மிக முக்கியச் சரடாக உள்ளதை உணர முடிந்தது. உலகத்தில் உள்ள எதையும் அத்வைத வேதாந்தத்தில் விளக்கிவிடலாம் என்கிற அபாயமும் உண்டுதான். நவீனத்துவ அழகியலுக்கு மாற்றாக அத்வைத வேதாந்தத்திலிருந்துதான் நாம் முழுமை நோக்கு எனும் அழகியலை ஏற்றுக்கொள்கிறோம். காஃப்காவை விட தால்ஸ்தாயின் அழகியலே இந்திய மொழிகளிலில் செல்வாக்கு செலுத்தியது எனச் சொல்லலாம். ப. சிங்காரத்தின் நாவல்கள் ஏன் எழுதப்பட்ட காலத்தில் கவனிக்கப்படவில்லை என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அது அன்றைய காலகட்டத்தில் பிரதான போக்காக இருந்த அத்வைத வேதாந்த அழகியல் முன்வைத்த கலையமைதி, முழுமை நோக்கு ஆகியவற்றுக்கு மாறான வேறொரு அழகியல் கொண்டது. க. நா. சு புதுமைப்பித்தனை எப்படி எதிர்கொண்டார் என்பதைக் கவனித்தால் இது விளங்கும். ‘கபாடபுரம்’ போன்ற ஒரு கதை குறித்து அவருக்குப் பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை ‘அன்று இரவு’ கதையை காமா சோமாவென எழுதப்பட்டது என்கிறார். அத்வைத வேதாந்த அழகியல் உருவாக்கிய கோணமே தமிழ் நவீன இலக்கியத்தின் மைய அழகியலாக இருந்தது. வாழ்வின் பொருள், வாழ்வில் முழுமை மற்றும் ஒருமை சார்ந்த தேடல்கள் வழி அத்வைத வேதாந்தத்தை நோக்கிச் சென்றனர் எனச் சொல்ல முடியும். எண்பதுகளில் இந்தக் கோணம் சவாலுக்கு உள்ளாகிறது. ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற அதே கதைக்களத்தை எழுதிய எம். எஸ். கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ நாவலை வாசித்தால் சிங்காரத்தின் நாவலைவிட ஒருமை கூடியது புலப்படும். புயலிலே ஒரு தோணியில் பாண்டியனின் சாகச அதி நாயகத்தனம் இன்று வாசிக்கும் போது பொருத்தமற்ற கற்பனையாகப் படுகிறது. அத்தகைய தொந்திரவு ஏதும் ‘இருபது வருடங்கள்’ வாசிக்கும்போது நமக்கு ஏற்படுவதில்லை. எண்பதுகளில் வேதாந்த அழகியலுக்கு வெளியே வேறுவிதமான தேடல் நிகழத் தொடங்குகிறது. முழுமையும் கலையமைதியும் பின்னுக்குச் செல்கிறது. ஒழுங்குக்கு மாறாக பித்தும் சந்நதமும் இலக்கிய வெளிப்பாட்டின் அளவுகோலாக மாறுகிறது. தமிழ்க் கவிதைகளில் பிரமிளின் வருகையிலிருந்து ஏற்பட்ட மாற்றம் இது என யூகிக்கலாம். தமிழ் உரைநடை இலக்கியம் எப்போதும் கவிதையின் வால் பிடித்தே முன்நகர்கிறது என எனக்கு தோன்றுவதுண்டு. ஜெ ஜெ சில குறிப்புகள் அத்திசையில் நிகழ்ந்த மிக முக்கியமான முயற்சி. சிங்காரத்தின் நாவல்கள் அத்வைத வேதாந்த அழகியலுக்கு மாற்றாக தமிழ் சித்தர் மரபிலிருந்து வேரெடுப்பதாகச் சொல்ல முடியும். புயலிலே ஒரு தோணியில் வரும் மதுக்கூட உரையாடலும் இருண்ட பகடிப் பகுதிகளுமே அதை முன்னோடிப் படைப்பாக ஆக்குகின்றன. புதிய அலையின் முகமாக அவரை ஆக்கின. நாட்டார் மரபைத் தமிழிலக்கியம் தனது அடித்தளமாகக் கொள்ளத் தொடங்கியதற்கான பாதையை முதலில் உருவாக்கியவர் கி.ரா. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பின் நவீனத்துவக் கோட்பாட்டு விவாதங்களும் தமிழிற்கு அறிமுகமாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்துகிறது. 90 களில் தொடங்கிய புதிய தமிழ் நாவல் மரபு ஒரு வகையில் சிங்காரத்திற்கும் கிராவிற்கும் கடன்பட்டுள்ளது எனச் சொல்லத் தோன்றுகிறது. இவர்கள் இருவரின் பாணிகளின் இடையீட்டில்தான் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டது எனச் சொல்லத் தோன்றுகிறது. எழுத்தாளர் சீரற்ற வாழ்விலிருந்து ஒருவித ஒழுங்கை கண்டடைந்து சொல்பவராக மட்டும் இருந்த ஒரு காலம் சென்று, எழுத்தாளர் என்பவர் தன் பிரக்ஞையை இழந்து தெய்வ நிலைக்குச் சென்று வாக்குகளை அருளி மீளும் ‘சாமி கொண்டாடியாகவும்’ இருக்க முடியும் என்பதை நவீன இலக்கியம் கண்டுகொண்டது. கவிதையில் பாரதி ஒரு சேர இவ்விரு தளங்களிலும் இயங்கியவன். ஆகவேதான் அவன் முன்னோடி. மெய்யியல் அடித்தளத்திற்கும் நாவலுக்கும் இடையேயான உறவை இப்படியாகப் புரிந்து கொள்கிறேன். இலக்கியப் போக்குகள் காலாவதியாகும், இதுதான் இப்போது புதுப்போக்கு என்றெல்லாம் சொல்லப்படுவதில் எனக்குப் பெரிய ஏற்பும் நம்பிக்கையும் இல்லை. இலக்கியம் என்பது எந்த அளவிற்குத் தனது காலத்தின் போக்குகளைப் பிரதிபலிக்க முயல்கிறதோ அதேயளவு தனிமனிதனின் தேடலுக்கான கலை வடிவமாகவும் திகழ்கிறது. இந்தப் போக்குகள் குறித்த உரையாடல்கள் ஒருவித தொகுக்கும் முறை மட்டுமே. எழுதுவதற்கான ஆணையோ வழிகாட்டியோ அல்ல. எழுத்தாளராக நான் ஒரு கதையை எழுத விரும்புகிறேன். எழுதும்போதே நான் நவீனத்துவ கதையை அல்லது பின்நவீனத்துவ கதையை எழுதபோகிறேன் எனச் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. எந்தத் தொகுப்பு முறையும் முழுமையானதல்ல. விதிவிலக்குகளும் விடுபடல்களும் கொண்டதே.
சோமு முதலியெனும் ஒருவனின் வாழ்வை முழுமையாகச் சொல்லும் ‘பொய் தேவு’ போலவும் இருக்கலாம் தலைமுறைகளின் கதையைச் சொல்லும் பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக்கொன்றை’ போலவும் இருக்கலாம் அல்லது ஒரு இனக்குழுவின் நூற்றாண்டு கால வரலாறை சொல்லும் கி.ராவின் ‘கோபல்ல கிராமமாகவும்’ இருக்கலாம். நாவல்களின் முதன்மைப் பாத்திரம் எவராகவும் இருக்கலாம். காப்பியங்களின் நாயகன் அறமெனில் நவீன நாவலின் நாயகன் காலம்தான் என எனக்குத் தோன்றுவதுண்டு. காலப்பேருருவைச் சென்று முட்டி நிற்பதே நாவலின் நோக்கம். குறுங்கதைகளிலும் சிறுகதைகளிலும் காலம் குறுகியதாக வெளிப்படுகிறது. நாவலில் விளக்கிலிருந்து வெளிப்பட்ட பூதம் போல பிரம்மாண்டமாகத் தனது ஆகிருதியை வெளிப்படுத்துகிறது காலம். பெரு நாவல்கள் மட்டும் அல்ல, அளவில் சிறிய நாவல்களின் வழியேவும் இந்த தரிசனத்தை அடைய முடியும். உதாரணமாக அலெக்ஸாண்டர் பாரிக்கோஸின் ‘பட்டு’. அறுபது எழுபது பக்கங்கள் நீளும் நாவல். பெரிதாக நிகழ்வுகள் என ஏதுமற்ற, ஒரே மாதிரியான சொற்களே மீண்டும் மீண்டும் வரும்வகையிலான படைப்பு. எனக்கது நாவல்தான். இன்னொரு உதாரணம் சொல்லலாம் என்றால் க. அரவிந்தனின் “சீர்மை” 50 பக்கங்கள் கொண்ட ஆக்கம்தான். ஆனால் அதையும் நான் நாவல் என்றே கருதுகிறேன்.
தகவல்களை அறிந்துகொள்ள நான் நாவல்களை வாசிப்பதில்லை. ஆவணப்படுத்துவது நாவல்களின் முதன்மை நோக்கமல்ல என்பதே என் நம்பிக்கை. அடிப்படையில் நாவலென்பது கதைதான். கதைகளுக்கு என்ன நோக்கமிருக்க முடியும்? படிப்பினைகள் என தான் நம்புபவற்றை சுவாரசியமாகப் பொதிந்து கொடுப்பதற்கு ஏதுவான வடிவம். நிகழ்காலத்திலிருந்தும் வாழும் உலகத்திலிருந்தும் தப்பித்து இளைப்பாற நிகருலக வாசம் வேண்டியே அநேகமாக கதைகள் வாசிக்கிறோம். மாற்றங்களைக் கனவு காணும் உரிமை மட்டுமே நாவலுக்கு உண்டு. இலக்கிய வடிவங்களில் நாவல் பரவலாக வாசிக்கப்பட அதன் ஆழ்த்தும் தன்மையே முதன்மைக் காரணம். உரைநடை வடிவங்களில் சிறுகதை/ குறுங்கதைக்கும் நாவலுக்கும் வேறுவேறு இயல்புகள் தேவையாக உள்ளது. சிறுகதை/ குறுங்கதையில் தகிப்பை இறக்கிவைத்து அதைக் கடத்தும் முனைப்பே முதன்மையானது. நாவலில் உச்சத்தை ஒத்திப்போடுவதே முதன்மை உத்தி. நாவலில் தகவல்களும் புற விவரணைகளும் இரண்டு விதமாகப் பயன்படலாம். ‘மோகமுள்ளில்’ பாயும் காவிரி நதி மட்டுமல்ல, பாபுவுக்குளோடும் காமமாக, பிரவாகிக்கும் சங்கீதமாக உருமாற்றம் அடைந்தபடியே உள்ளது. கதைக்குள் வரும் விவரணை எனக்கு மேலதிகமாக எதையோ அளிக்கிறது. அகத்தைச் சுட்டுவதற்கு புறத்தை விவரிப்பதற்கு நமக்கு ஈராயிர ஆண்டு மரபுள்ளது. இயல்புவாத எழுத்துக்களில் இன்னோரு வகையும் உண்டு. பூமணியின் ‘வெக்கை’ நாவலை வாசித்த போது அவர் சித்தரிக்கும் நிலப்பரப்பில் வாழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது.
‘ஈடுபடுத்தும்’ நாவல்களின் மற்றுமொரு முக்கியமான இயல்பு அதில் நமக்குக் கிடைக்கும் ‘ஆழ்த்தும்’ அனுபவம். ‘‘ஆழ்த்தும் அனுபவம்’ அளவில் ப
February 5, 2024
என்னை நானறிய என்பதே எழுத்து
(சந்தியா பதிப்பக வெளியீடாக நண்பர் கே.பி. நாகராஜன் தொகுத்துள்ள 'ஏன் எழுதுகிறேன்' நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 'எதற்காக எழுதுகிறேன்' எனும் சிறிய நூலை சந்தியா முன்னரே கொண்டு வந்திருந்தது. தி.ஜா, ஜெயகாந்தன், சிசு. செல்லப்பா போன்றோர் அதில் எழுதியிருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் இயங்கும் படைப்பாளிகளின் மாறுபட்ட பார்வைகளை அறிந்துகொள்ள உதவுவது.)
ஏன் எழுதுகிறேன் எனும் கேள்வி எப்படி எழுத வந்தேன் என்பதுடன் நுட்பமாக தொடர்புடையது என நம்புகிறேன். 2012 ஆம் ஆண்டு எனது முதல் கதை 'வாசுதேவன்; வெளியானது. ஆயுர்வேத பயிற்சி மருத்துவராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. விபத்துக்கு பின் பிரக்ஞையற்ற நிலையில் வருடக்கணக்காக கிடந்த இளைஞனுக்கு எங்களுடைய பேராசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் சிகிச்சையளிக்க சென்றோம். தினமும் எண்ணெய் தேய்ப்பது, ஆசனவாயில் மருந்து செலுத்துவது, மூக்கில் உள்ள குழாய் வழியாக கஷாயம் கொடுப்பது, ஒத்தடமளிப்பது என சாத்தியமான எல்லா சிகிச்சைகளையும் அளித்தோம். வீட்டில் உள்ளவர்கள் அற்புதத்திற்காக காத்திருக்கையில் ஏதும் பெரிதாக நடந்துவிடாது என்பதை நான்கு நன்கு உணர்ந்திருந்தோம். ஒருமாதத்திற்கு பின் சிகிச்சை நிறுத்தப்பட்டது. பொருளாதாரம் உட்பட பலகாரணிகள். அதன் பின்னர் சில நாட்களிலேயே அவன் இறந்து போனான். அவனது மரணம் என்னை கடுமையாக பாதித்தது. பல ஆண்டுகளுக்கு அவனது மண்டையோடு பகுதி நீக்கப்பட்ட தலையும், குச்சி போன்ற கைகால்களும், அந்தர வெறிப்பும் என்னை நிம்மதியிழக்க செய்துள்ளன. அவனது மரணம் என்னை பாதித்தது என்பதைவிட, அவன் வாழ்வான் எனும் போலி நம்பிக்கையை அவர்கள் வீட்டிற்கு நாங்கள் கொடுத்தோம் எனும் குற்ற உணர்வே என்னை ஆட்டுவித்தது. ஒருவகையான நம்பிக்கை துரோகம். அப்படி நடக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அவன் பிரக்ஞையின்றி என்றாலும் உயிரோடு இருந்திருப்பானோ?
காஃப்காவின் உருமாற்றத்தை வாசித்தபோது எனது வாசுதேவனை நான் புரிந்துகொண்டேன். அதுவரை நேசிக்கப்பட்டவன் , ஒருவிடிகாலையில் சட்டென பூச்சியாக மாறிவிடுகிறான். நேசம் பரிவாகவும், அது பரிதாபமாகவும் வெறுப்பாகவும் மெல்லமெல்லத் திரிந்து போன ஒரு நாளில் அவன் உயிரை விடுகிறான். இது கிரேகர் சம்சாவின் கதை வாசுதேவனின் கதையும் கூட.
பீடிக்கப்பட்டவனைப் போல அந்த கதையை ஒரேயமர்வில் எழுதிமுடித்தேன். அன்றைய இரவுக்கு பிறகு இன்றுவரை அவன் என் கனவுகளில் வருவதில்லை. அவனது வாழ்விற்கும் மரணத்திற்கும் என்னாலான நியாயத்தை செய்துவிட்டேன் எனும் உணர்வா, அல்லது அந்த மரணத்திற்கு நான் பொறுப்பில்லை எனும் கண்டடைந்தலா எது என்னை அவனிடமிருந்து விடுவித்தது என என்னால் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலவில்லை. அப்போது முதல் வாசிப்பையும் எழுத்தையும் இறுகப் பற்றிக்கொண்டேன். எளிதில் விடை காண முடியாத ஒரு கேள்வியை வாசுதேவன் எனக்களித்தான். தனக்கான சரியான கேள்வியை கண்டுகொள்வதே தீராத படைப்பூக்கத்திற்கான அடிப்படை. அதுவே நம் படைப்பை தீர்மானிக்கும். நாம் ஒரு உயிரை எப்படி மதிப்பிடுகிறோம்? பயனுள்ளவரிலிருந்து பயனற்றவறாக ஒருவர் உருமாறும் புள்ளி எது? பயன் பயனின்மை என்பதற்கு அப்பால் நம்மிடம் வேறு அளவுகோல்களே இல்லையா? பயனற்றவர்களும் தோல்வியுற்றவர்களும் தானே இலக்கியத்தின் செல்லப்பிள்ளைகள். ஏன் இந்த வியர்த்த வேலையை இலக்கியம் செய்கிறது?
ஏன் எழுதுகிறேன் எனும் கேள்வியை எனக்கு நானே வெவ்வேறு காலகட்டத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன், வெவ்வேறு பதில்களை கண்டடைந்திருக்கிறேன். பொருளீட்டவா? எழுத்தில் பொருள் ஈட்ட முடிந்தால் மகிழ்ச்சிதான், ஆனால் அது முதன்மை இயங்குவிசையா? எனது மருத்துவ தொழிலில் ஈட்டுவதை விட வெகு சொற்பமாகவே இதில் ஈட்டுகிறேன், அதற்கென அளிக்கும் நேரத்தை விட கூடுதல் நேரத்தை இலக்கியத்திற்கென அளிக்கிறேன். இது ஒரு லாபகரமான தொழிலில்லை.
மனித வரலாற்றை வடிவமைத்த அடிப்படை விசைகளில் ஒன்று என அங்கீகார விழைவை சொல்கிறார் ஃபிரான்ஸிஸ் ஃபுக்குயாமா. தைமோஸை நிறைவடையச்செய்வது சாமான்யமல்ல. அங்கீகாரம் புகழ் போன்றவை கிடைத்தால் சரிதான். ஆனால் எழுத்தாளராக நான் விரும்புவது இம்மையின் அங்கீகாரங்களை அல்ல. ரோபர்ட்டோ போலொன்யோவின் சேவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் இரண்டு இளம் எழுத்தாளர்கள் முன்னோடியான மூத்த பெண் எழுத்தாளரை தேடி கண்டுபிடிக்க செல்வார்கள். தன்னை மறைத்துக்கொண்டு எங்கோ ஒடுங்கி எழுதிக்கொண்டே இருப்பார். ப. சிங்காரம் 60-70 களில் எழுதிய நாவலை அவர் காலத்தில் எவருமே வாசித்து அங்கீகரிக்கவில்லை. தனியராக வயதேறி எழுத்தை கைவிட்டு மரணமடைந்தார். ஆனால் இன்று அது தமிழில் ஒரு கிளாசிக். நவீன இலக்கியத்திற்குள் அறிமுகமாகும் எவரும் படித்தேயாக வேண்டிய நூல்கள். எவரோ ஒருவர் நாளை, நம் காலத்திற்கு பின் நம்மை கண்டடைவார் எனும் குருட்டு நம்பிக்கை மட்டுமே விசை. ஆனால் அந்த நம்பிக்கை பெரும்பாலான சமயங்களில் பொய்த்து போவதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நிச்சயம் இந்த ஆக்கம் காலம்கடந்து நிற்கும் என சமகாலத்தில் கொண்டாடப்பட்ட ஆக்கங்கள் பத்தாண்டுகளில் மறைந்துவிடுவதை காண்கிறோம். எது காலத்தை கடக்கும் எது தேங்கும் என எவராலும் உய்த்துணர முடியாது. காலத்துடனான சூதாட்டத்தில் எப்போதும் நாம் தான் தோற்போம். அமரத்துவத்தின் மீதான விழைவு இல்லாத படைப்பூக்கமே இருக்காது என எண்ணுகிறேன். அது எனக்கும் உண்டு. அந்த விழைவை எழுத்தாளர் இழந்துவிடக்கூடாது என்றே எண்ணுகிறேன். அதுவே தரமான படைப்புகளை மட்டுமே நாம் அளிக்க வேண்டும் என்பதற்கான உந்துவிசையாக இருக்க முடியும்.
எழுத்து என்னை விடுவித்தது என்பதே நான் வாசுதேவனை எழுதியபோது கண்டடைந்த பதில். பின்னர் நான் காந்தியை வாசிக்கவும் மொழியாக்கவும் செய்யத் தொடங்கினேன். காந்தி எனக்கு அரசியல்வாதி மட்டுமல்ல, உரையாடவும் மறுக்கவும் இடமளிக்கும் மெய்யியலாளர். தீராத அறக்கேள்விகளை நம்முள் எழுப்பிக்கொண்டே இருப்பவர் காந்தி. அக்கேள்விகள் வாழ்வுடன் பொருதும் போது புனைவுகளாக பரிணாமம் அடைந்தன.
எழுதுவதற்கான உந்துதலை மூன்று கேள்விகளிலிருந்தே நாம் பெரும்பாலும் பெறுகிறோம் என ஒரு உரையாடலில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டார். நான் யார், ஏன் இருக்கிறேன்? மனிதர்கள் ஏனிப்படி இருக்கிறார்கள்? இந்த உலகம் ஏனிப்படி இருக்கிறது? இவற்றை தனித்த கேள்விகளாக காண முடியாது. ஒன்றுடன் ஒன்று தொடர்பும் தொடர்ச்சியும் கொள்கின்றன என்றே எண்ணுகிறேன்.
இரண்டாவது முறை இக்கேள்வியை எழுப்பிக்கொண்டபோது நான் கண்டடைந்த பதில், என்னை நானறிய என்பதே. எழுத்து எனது கபடங்களை, போலித்தனங்களை எனக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது . அதன் வழியாக சமூகத்தின் தீராத பிளவுகளை கண்டுகொண்டபடி இருக்கிறேன். இந்த முரண்களும் மதிப்பீடுகளும் ஒன்றையொன்று உரசுகின்றன.
எனது முதல் நாவலான 'நீலகண்டத்தையும்' 'விஷக்கிணறு' கதையையும் எழுதிய பின்னர் இதே கேள்வியை எழுப்பிக்கொண்டேன். இப்போது எனக்கு வேறோரு பதில் புலப்படுகிறது. கார்ல் யுங் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நிழலைப்பற்றி குறிப்பிடுகிறார். ஒளியின் அடர்வு கூடக்கூட நிழலின் கருமை கூடியபடியேதான் இருக்கும். அரவிந்தர் இதை வேறு சொற்களில் சொல்கிறார். நீங்கள் ஒளியை நோக்கி மேலேற மேலேற இருளுக்குள்ளும் அதே ஆழத்திற்குள் இறங்கியபடியே இருப்பீர்கள். கதை எனது இருளை, எனது நிழலை எனக்கு அறியத்தருகிறது. ஒரு மத்திய காலத்து ஐரோப்பிய பயணியைப்போல் புதிய கண்டடைதல் பெரும் போதையும் சாகசமும் அளிப்பதாக உள்ளது. எழுதுவதென்பது தெரிந்ததை பகிர்வதற்கல்ல, புதியதை கண்டுபிடிப்பதற்காக என பரிணாமம் அடைகிறது. ஒரு சமூகமாக நாம் நம் இருளை கண்டுகொள்ளவும் வெளியேற்றவும் பாதுகாப்பான வழியாகவே கலை இலக்கியத்தை வளர்த்தெடுத்துள்ளோம் என்று கூட எனக்கு இப்போது தோன்றுகிறது. வலுவான இலக்கியப் பண்பாடு நம்முள் இருக்கும் இருளை நமக்கு உணர்த்தும், அது இச்சமூகத்தையும் தேசத்தையும் காக்கவும் கூட செய்யும்.
எழுத்து என் உயிர் எழுதாமல் உயிர்வாழ முடியாது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஆனால் எழுத்தும் வாசிப்பும் அற்ற வாழ்வு ருசியற்றதாக மந்தமானதாகவே இருக்கும். ஒரு சிறிய பொறி அல்லது காட்சி அல்லது கனவு வருடக்கணக்காக ஆழத்தில் துயில் கொள்ளும், ஏதோ ஒன்று விழித்து மேலெழும்பி என்னை வெளிக்கொணர் என கோருகிறது. அதை மட்டுமே வழித்துணையாக கொண்டு, தீர்மானமான இலக்கற்ற வெளியில் துழாவிச் சென்று எங்கோ ஒரு புள்ளியில் இருள் நீங்கும் ஒளியை கண்டு கொள்கிறேன். எழுதி முடித்த பின்னரே நான் கதையாக்குகிறேன். நினைவில் அமிழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி எழுதத் துவங்கி அவர் மீது வேறு பல மனிதர்களின் சாயை கவிந்து முற்றிலும் வேறொருவராக உருமாறுவதை ஆச்சரியத்துடன் காண்கிறேன். ஒரு மனிதனுக்குரிய தோற்றமும், வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளும் எப்படி ஒரு பாத்திரத்தில் உருக்கொள்கிறது என்பது பெரும் புதிர். தொடர்பற்றவையும் தொடர்புள்ளவையும் என எதையெதையோ மனித அகம் தொடுத்து விளையாடுகிறது. இந்த சுவாரசியம், இந்த விளையாட்டு, இந்தப் புதுமை என்னை எழுத வைக்கிறது. கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் வாழ்வை சுவாரசியமாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள எனக்கு கதைகளை விட மேலான வேறு காரணங்கள் ஏதும் அகப்படவும் இல்லை.
பஞ்சதந்திர கதைகளில், பூ பாதங்கள் கொண்ட பிரம்மராக்ஷசன் ஒருவன் தோளில் ஏறியமர்ந்த கதை ஒன்றுண்டு. எழுத்தை அப்படி என்னை பீடித்த பிரம்மராக்ஷசனாக கற்பனை செய்வது நன்றாக உள்ளது. தன்னை ஆக்கிரமித்தவனின் மீதே மையல் கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமா என்னவோ தெரியவில்லை. திருவாளர். பிரம்மராக்ஷசரே, உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள். எம்மை கைவிடாமல் எம்முடனேயே எப்போதும் இரும் என்பது மட்டுமே எனது கோரிக்கை.
புவியெனும் கொலைக்களம் – கர்ட் வோன்னுகாட் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலை முன்வைத்து
'யாவரும்' சித்திர நாவல் சிறப்பிதழில் வெளிவந்தது.
சிறுவயது முதல் படக்கதைகள் காமிக்ஸ்கள் வாசித்து வந்திருந்தாலும் சித்திர நாவல் உலகிற்கு நான் புதியவன். அவற்றை வாசிக்க முதல் தடை அவற்றின் விலை, மேலும் அவை சிறுவர்களுக்குரியது எனும் மனப்பதிவு. எழுத்தாளராகச் சொற்களின் இடத்தை காட்சிகள் எடுத்துக்கொள்வது என்பது சொற்களின் போதாமையைச் சுட்டுவது எனும் எண்ணம் கூட எனக்கு உண்டு. எனக்கு காணக் கிடைத்த பெரும்பாலான கிராஃபிக் நாவல்கள் வெகுமக்கள் ரசனைக்குரிய மிகு புனைவாகவே இருந்தது. ஆகவே எப்போதாவது யதார்த்தம் அலுக்கும்போது சாய்ந்துகொள்ளும் சாய்மானம் எனும் எண்ணமே எனக்கிருந்தது. சிங்கப்பூர் வாசத்தின்போதுதான் நான் சித்திர நாவல்களை வாசிக்க தொடங்கினேன். வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வம், அவை நூலகங்களில் இலவசமாக வாசிக்கக் கிடைத்தது என்பவைதான் காரணங்கள். சித்திர நாவல்கள் வாசிப்பதில் உள்ள பெரும் சவால் நல்ல நாவலை / நமக்கான நாவலைக் கண்டடைவதுதான். ஏனெனில் சந்தையில் பதின்ம வயதினருக்கான சித்திர நாவல்கள் காமிக்ஸ்கள் அநேகம் காணக் கிடைக்கின்றன. சித்திர நாவல்கள் மெல்ல என்னை ஈர்த்துக் கொண்டன. ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அங்கேயே ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சித்திர நாவல்கள் வாசிக்கவே நூலகம் செல்வது எனும் நிலையை நோக்கி வெகு விரைவிலேயே நகர்ந்தேன்.
இலக்கியம் போலவே சித்திர நாவல்களிலும் பொழுதுபோக்கு படைப்புகள் தீவிர இலக்கிய படைப்புகள் எனும் பகுப்பு உண்டு. ஓவியம் வழி கதை சொல்லுதல் என்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல. சித்தன்னவாசல் ஓவியத்தில் மலர் கொய்யும் துறவியை பெரிய கதையின் பகுதியாக நம்மால் காண முடியும். சித்திர நாவலை திரைக்கதையுடன் ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. திரைப்படம் அசையும் காட்சிகளால் ஆனது எனில் சித்திர நாவல் உறைந்த சட்டகங்கள் கொண்ட ஓவியங்களால் ஆனது. ஓவியம் காட்சியை மட்டும் காட்டுகிறது பொருள்கொள்ளுதலை முழுக்க நம் கற்பனையில் நிகழ்த்த சொல்கிறது. நாவல் பொருள்கொள்ளுதலை எளிதாக்குகிறது ஆனால் காட்சியை கற்பனைக்கு உரியதாகச் சொல்கிறது. சித்திர நாவல் நாம் இதை காண வேண்டும் என நம் கற்பனைக்கு திண்ணமான வழிகாட்டுதலை அளிக்கிறது, திரைப்படம் நாம் இதைக் காண வேண்டும், அதை இன்ன வேகத்தில் தான் காண வேண்டும் என்றும் சொல்கிறது. சித்திர நாவலை திரைப்படத்திற்கும் நாவலுக்கும் இடையேயான ஒரு வடிவமாக வரையறை செய்ய முடியும்.
ஓவியங்களை அதிகமாகப் பயன்படுத்தி சொற்களைத் துணைக்கழைத்து கதை சொல்லும் முறை எனச் சொல்லலாம். ஓவியத்திற்கு எது தேர்ந்தெடுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கான சட்டகத்தைப் பயன்படுத்துகிறது? சில ஓவியங்கள் முழு பக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த ஓவியத்திற்கான முக்கியத்துவம் என்ன? இப்படியாகச் சித்திர நாவல் காமிக்ஸிலிருந்து வேறுபடுவதை கவனிக்கலாம். முக பாவனைகள், உடல்மொழிகள் எளிதாக கடத்தப்படுகின்றன. இப்படி தனக்கென சில பாதைகளை வகுத்துக்கொண்டு, தனக்கென சில இலக்கணங்களை உருவாக்கிக்கொண்டு சித்திர நாவல்கள் முன் நகர்கிறது.
ராணுவவீரனின் உடை
ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலாக உருமாற்றம் அடைந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வோன்னுகாட்டின் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலாக வடிவம் பெற்றுள்ளது. ரியான் நார்த் எழுத்தாக்கத்தில், ஆல்பர்ட் மான்டிஸ் சித்திரங்களுடன் 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலில் என்னவாக உருமாற முடியும் என்பதற்கு இந்நாவல் மிகச்சிறந்த உதாரணம். ரியான் நார்த்தால் அசல் நாவலாசிரியரின் பகடியையும் பார்வையையும் அபாரமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது. தனக்கேயுரிய சுதந்திரத்துடனும் துடுக்குத்தனத்துடனும் நாவலுக்கு சித்திர வடிவத்தை அளித்துள்ளார். உதாரணமாக நாவல் தொடங்கும் இடத்திலேயே இரண்டு வடிவங்களுக்கு இடையேயான ஒற்றுமையைச் சொல்கிறார், இரண்டும் ஒரே இடத்தில் தொடங்குகிறது, ஒரே இடத்தில் முடிகிறது என்கிறார். பின்னர் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். துணைப் பாத்திரங்களின் இயல்புகளைச் சொல்கிறார். ஒவ்வொரு துணைப் பாத்திரங்களையும் மூன்று சட்டகங்களில் அறிமுகப்படுத்தும் உத்தியைக் கையாள்கிறார்.
வன்முறை சார்ந்த கற்பனையின் அதீத நாட்டம் தேசப்பற்றாகவும் வீரமாகவும் மடைமாற்றம் செய்யப்படுகிறது.
நாவலின் மையம் பில்லி பில்க்ரிமின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்கிறது. பில்லியின் காலக்கோடு என ஒரு சட்டகத்தை வரைந்துள்ளார். அவன் எப்போது பிறந்தான், எப்போது அவனிடம் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலை வந்தடைந்தது, எப்போது ராணுவத்தில் சேர்ந்தான், எப்போது போர்க்கைதியாக ஆனான், எப்போது மனநோயாளியாக ஆனான், பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், வெற்றிகரமான கண் கண்ணாடி நிபுணராக திகழ்கிறான், அயல்கிரகவாசிகளால் கடத்திச் செல்லப்படுகிறான், பின்னர் தான் காலம் குறித்து அறிந்துகொண்டதை விளக்குகிறான். லயன்ஸ் சங்கத் தலைவராக இருக்கிறான், மரணமடைகிறான். பூமிவாசிகள் காலத்தை நேர்கோடாகக் காண்கையில் அந்நிய கிரகவாசிகளான ட்ராஃபல்டோர்காரர்கள் காலத்தை நான்கு நிலைகளில் காண்பவர்கள். அவர்களுடைய கோணத்திலிருந்து பில்லி ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் உயிருடன் கண்ணாடி நிபுணனாக இருக்கும்போது இன்னொரு இடத்தில் மரணமடைந்த சடலமாக இருக்கிறான். அவர்கள் கோணத்தில் மனிதர்களுக்கு மரணமே இல்லை. மரணம் என்பது எத்தனையோ செயல்பாடுகள் போல அதுவும் ஒன்று. அந்நிய கிரகவாசிகள் காலத்தை மலைத்தொடரைக் காண்பது போல காண்கிறார்கள்.
பில்லி எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். அவனுக்கு அதற்கான தகுதியோ விருப்பமோ இல்லை என்பதை அவனது நண்பர்கள் அவனுக்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெர்மானியர்களின் போர்க்கைதியாக அவனும் அவனது நண்பன் ரோலாண்ட் வியரியும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சரியான காலணி கூட அணியாத பில்லி பரிதாபகரமான நிலையில் உடன்வருகிறான். தலைக்கு தொப்பியோ கவசமோ கூட இல்லை. ரியான் நார்த் ரொலாண்டை அவனது முழு ராணுவ உடையில் ஒரு பக்கம் முழுக்கச் சித்தரித்து இருப்பார், எதிரியைப் பற்றி கையேடு, கிளர்ச்சியூட்டும் நிர்வாணப் படம், பருத்தி உள்ளாடை, அதற்கு மேலாக கம்பளி உள்ளாடை, அதற்கு மேலாகக் கம்பளி மேலாடை, அதன்மேல் ஸ்வெட்டர், ஜாக்கெட், கோட் தொடங்கி முக்கோணக் கத்தி வரை அவனது சகலத்தையும் அட்டவணைப்படுத்தியிருப்பார் நார்த். குரூரங்களின் மீதும் நாயக வாழ்வின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவன் வியரி. பில்லியைப் பலமுறை காப்பாற்றியதாகச் சொல்லிக்கொள்வான். வியரியின் இந்த வினோதக் கோலத்தை கண்ட ஜெர்மானியர்கள் அவனிடமிருந்து காலணிகளைப் பிடுங்கி பில்லிக்கு கொடுப்பார்கள். அவனது காலணி பறிக்கப்பட்ட ஒன்பதாவது நாளில் காலில் புண் வந்து மரித்துப் போவான். அவனது மரணத்திற்கு காரணம் பில்லிதான் எனச் சாகும் தறுவாயில் சொல்லிவிட்டு செல்வான். அப்போது உடனிருந்த பால் லாசரோ அவனுக்காக பில்லியைக் கொன்று பழி தீர்ப்பதாக உறுதி எடுத்துக்கொள்வான். அதை இறுதியில் நிறைவேற்றவும் செய்வான்.
பில்லி வேற்றுகிரக வாசியை சந்தித்து உரையாடி ஞானம் பெறுகிறான். மனிதனுக்கு மரணமே இல்லை கண்டடைகிறான். இந்த நாவலுக்கு ‘குழந்தைகளின் போராட்டம்’ அல்லது ‘மரணத்துடனான கடமையின் நடனம்’ எனப் பெயரிட்டுள்ளார். ஸ்லாட்டர் ஹவுஸ் போரை நிராகரிக்கும் நாவல். போரில் நியாயம் என்பது என்ன? உண்மையில் நாம் நினைக்கும் அளவிற்கு எதிரெதிர் தரப்புகள் வெவ்வேறானவையா? ட்ரெஸ்டன் நகரத்தின் மீதான அமெரிக்க தாக்குதலின் பின்புலத்திலிருந்து இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். நாவலின் மையமான பேசுபொருள் மனிதனுக்கு சுயத்தேர்வு என்று ஏதேனும் உண்டா? அப்படி ஏதுமில்லை என அன்னியகிரகவாசிகளின் வழியாக அறிந்துகொள்கிறான் பில்லி. அப்படியானால் நாம் விதியின் அல்லது காலத்தின் கைப்பாவைகள் தானா? தனக்கென எதையும் வகுத்துக்கொள்ள முடியாத, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்திருக்கும் குழந்தைகளின் நிலையிலிருந்து நாம் போரிட்டோம், அவை தவிர்க்க முடியாதது ஆகவே நிகழ்கிறது. ட்ராபல்டோர்வாசிகள் பிரபஞ்சம் எப்படி அழியும் என்பதை விளக்குகிறார்கள், அவர்களில் ஒருவர் ஒரு சுவிட்சை தவறாக இயக்க எல்லாம் அழிகிறது, பில்லி ‘அப்படியானால் அதை நீங்கள் தடுக்கலாமே?” என கேட்பான். இல்லை நாங்கள் அதை அனுமதிப்போம், பிரபஞ்சம் முந்தியும் அழிந்தது, பிறகும் அழியும் அதை எதற்கு தடுக்க வேண்டும்!’ என்பார்கள். விமான விபத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவனாக பில்லி மருத்துவமனையில் இருக்கும்போது அவனருகே அமெரிக்க ஜெனெரல் அதே மருத்துவமனையில் படுத்திருப்பார். வெளியுலகிற்கு ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு பற்றிய தகவலை மூடி மறைக்க முயலும்போது, நான் அங்கிருந்தேன் என பில்லி அவரிடம் கூறுவான், பேரழிவின் சாட்சியாக குழந்தைகளும் பெண்களும் மொத்தமாக வான்வழி தாக்குதலில் மரணித்ததை அவன் கண்களால் பார்த்திருப்பான். ஜெனெரல் அவனிடம் ‘அது தவிர்க்க முடியாதது’ என்பார். பில்லியம் ஆமோதிப்பான். கர்ட் வோனேனுகாட் மனிதர்களின் இந்தப் பொறுப்பற்ற தன்மையை இடித்துரைக்கிறார். உண்மையில் மனிதன் தனது சுயத்தேர்வு எனும் வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட்டு காலத்தின் மீதும் விதியின் மீதும் பழிபோடுகிறான் என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டு.
கல்லறை வாசகம் நாவல் முழுவதும் ‘இப்படியாக இது நடந்தது’ (So it Goes) எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் நமது தேர்வுகளின் விளைவுகளுக்கு விதியின்மீது பழி சுமத்துகிறோம் என்பதே நாவலாசிரியர் மனிதர்கள் மீது வைக்கும் குற்றசாட்டு. கில்கோர் எனும் வெளியுலகம் அறியாத அறிவியல் புனைவு எழுத்தாளர் கதைகளால் பில்லி மிகவும் ஈர்க்கப்படுகிறான். ட்ராஃபல்டோர்வாசிகள் மற்றும் அவர்களது காலக்கோட்பாடு கில்கோரின் காலக்கோட்பாடுகளுடன் நெருக்கமாக இருப்பதைக் காண முடியும். தனது மரணம் என்பது உண்மையில் மரணமல்ல, தன்னுடையது மட்டுமல்ல, எவருடைய மரணமும் மரணம் அல்ல, அவை புகைப்பட ‘போஸ்’ போல ஒரு நிலை மட்டுமே எனும் அறிதல் அவனுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்க வேண்டும். எஞ்சியிருப்பதன் துயரத்தையும் குற்ற உணர்வையும் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். உண்மையில் இவை யாவும் பில்லி உலகில் தரித்திருக்க அவனது மனம் உருவாக்கிக்கொண்ட மாயைகள், சல்ஜாப்புகள் என உளவியல் கோணத்திலிருந்து வாசிக்க ஒரு இடமுண்டு.
பில்லியன் வாழ்க்கை ஒரு காலக்கோடு. ஆனால் இது ஒரு நேர்கோடு அல்ல. ஒரே சமயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ரியான் இந்தச் சித்திர நாவலை கர்ட் வோன்னுகாட்டின் மேற்கோள் ஒன்றுடன் தொடங்குகிறார். “ட்ரெஸ்டன் குண்டுவீச்சினால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை, என்னைத் தவிர, இந்த நாவலை எழுதிய வகையில் அங்கே செத்த ஒவ்வொருவரும் எனக்கு இரண்டு டாலரோ மூன்று டாலரோ ஈட்டித் தந்திருக்கிறார்கள்”. சுயமாக முடிவெடுக்கத் தெரியாத, எல்லோராலும் கைவிடப்பட்ட உயிரினமாகவே மனிதன் சித்தரிக்கப்படுகிறான். வாழ்க்கைக்கு எந்த அர்த்தமோ இலக்கோ இல்லை. இனிய நினைவுகள் கொண்ட காலத்திற்கு துன்பம் வரும்போது திரும்பிச் செல்வதைத் தவிர வேறேதும் செய்வதற்கு இல்லை. வேற்று கிரகவாசிகள் பூவுலகிலிருந்து ‘மோண்டானா’ எனும் நீலப்பட நடிகையை கவர்ந்து வருகிறார்கள். அவளுக்கும் பில்லிக்குமான உடலுறவை ஆராய்கிறார்கள். அங்கு அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. பில்லி ‘காலத்தடையை’ கடந்தவனாக வாழ்கிறான். பில்லி எவ்வித லட்சியவாதமும் இல்லாதவன். பிறரை வென்று முன்செல்லும் திண்மையும் கூட இல்லாதவன். அமெரிக்க நாஜியாக ஆகும் பாப் போல பச்சோந்தியும் அல்ல, அவனை எதிர்த்து குரல்கொடுத்து தேநீர் கோப்பையை எடுத்ததற்காகச் சுட்டுக்கொல்லப்படும் எட்கர் டெர்பி போல நாயகனும் அல்ல. பில்லி தன்னை ‘எவருமில்லாதவன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறான். லட்சியமற்று, எவருமில்லாதவனாக வாழ இங்கு இடமிருக்கிறதா என்பதே கேள்வி. ஷோபா சக்தியின் நாவல்களுடன் இந்தக் கேள்வியை ஒப்பிட்டு நோக்கலாம் என்றே தோன்றுகிறது.
வன்முறையின் மீதான நமது அதீத நாட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். நாயகத்தன்மையின் பேராலும் நீதியின் பேராலும் அவை நிகழ்த்தப்படுகின்றன. ரொலாண்ட் வியரி மனிதர்களைக் கொல்வதற்கு தானே சிந்தித்து உருவாக்கிய ஆகக் குரூரமான முறையை விளக்குகிறான். ஏறத்தாழ முக்கால் பக்கத்திற்கு இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. பாலைவனத்து எறும்பு புற்றுக்களுக்கு அருகே ஒருவனின் கைகால்களைப் பிணைந்து தேனை ஆண்குறி மற்றும் விதைப்பந்துகள் மீது ஊற்றிச் சாகடிப்பதே வியரி கண்டுபிடித்த முறை. பால் லாசரோ எல்லாவற்றையும் விட பழி தீர்ப்பதையே தனது வாழ்க்கைக்கான குறிக்கோளாகக் கொள்கிறான். தொந்தரவு செய்த நாய்க்கு விஷ உணவு கொடுத்துக் கொன்ற அனுபவத்தைப் பெருமையாகச் சொல்கிறான். யூதர்களின் உடல் கொழுப்பிலிருந்து உருவான மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் சிறை முகாம் ஒளிவிடுகிறது என்பது நம்மைக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. நாவல் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பேசுகிறது.
பில்லிக்கு மிகவும் பிடித்த அறிவியல் புனைவு எழுத்தாளர் கில்கோர் கால இயந்திரத்தின் மூலம் கிறிஸ்துவைக் காணச் செல்லும் நாயகனைப் பற்றி நாவல் எழுதுகிறார். இயேசுவே பாலகனாக இருக்கும்போது தனக்கான சிலுவையை வடிவமைக்கிறார். உண்மையில் சிலுவையில் அறையப்பட்டுதான் இயேசு மரித்தாரா என அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான். அவன் கொண்டுவந்த ஸ்டெதஸ்கோப் கொண்டு சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் நெஞ்சைப் பரிசோதித்து உறுதிசெய்து கொள்கிறான். மனித குலத்தின் பாவங்களுக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட கிறிஸ்துவின் வாழ்க்கைச் செய்தி கைவிடப்படுவதன் துயரத்தை எழுதுகிறார். ட்ராஃபல்டோர்வாசிகள் இரண்டாம் பைபிளை உருவாக்கி மனிதர்களுக்கு அளிக்கிறார்கள். அப்போதும் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார், அப்போதும் மனிதர்களுக்கு சில உபதேசங்களைச் சொல்கிறார். கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்துக்குமான இடைவெளியை நாவல் சுட்டிக் காட்டுகிறது. நமது வன்முறையின் வெளிப்பாடாகவே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் காண்கிறார். ட்ரெஸ்டனின் கசாப்பு விடுதிக்குள் பதுங்கி உயிர்பிழைப்பார்கள் பில்லியும் அவனது சகாக்களும், நாவலின் தரிசனம் என்பது இந்த உலகத்தையே ‘ஸ்லாட்டர் ஹவுஸாக’ காண்பதுதான். போர் புனிதப்படுத்தபப்டுகிறது. மரணம் ‘உயிர்த்தியாகம்’ எனப் போற்றப்படுகிறது. இன்றைய சூழலில் அவற்றின் அபத்தத்தை நமக்கு உணர்த்தும் முக்கியமான படைப்பாகவே ஸ்லாட்டர் ஹவுஸ் சித்திர நாவலைக் கருத முடியும்.
January 11, 2024
சர்ப்பங்கள், வேதாளங்கள், டைனோசர்கள்- வேணு தயாநிதி கவிதை தொகுப்புக்கான முன்னுரை
(வேதாளத்துடன் செல்வதற்கான இரண்டு விதிகள் எனும் வேணு தயாநிதியின் கவிதை தொகுப்பிற்காக எழுதிய முன்னுரை. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவர உள்ளது.)
புனைவெழுத்தாளனாக அல்ல, ஒரு கவிதை வாசகனாக என்னை நிறுத்திக்கொண்டு நண்பர் வேணு தயாநிதியின் முதல் கவிதை நூலுக்கு என் வாசிப்பை அளிப்பதே நியாயமாக இருக்கும். கவிதை குறித்து எழுதுவது அதன் பேசுபொருள் குறித்து எழுதுவது அல்ல. கம்பன் சொல்லை அம்புக்கு இணைவைத்தபடி இருக்கிறான். இராமனின் அம்பு தன்னை துளைத்துவிட்டது என எதிராளி உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவன் உயிரை அரிந்துவிடும். நல்ல கவிதையும் அப்படித்தான். அது அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு முன்னரே நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிடுகிறது. இது நல்ல கவிதை, இது நல்ல கவிதை, இது என்னை என்னமோ செய்கிறது. இப்படி எனக்கு ஏற்படும் பதைப்பை வாசகருக்கு கடத்த முயல்வதே கவிதை குறித்தான எழுத்துக்களின் நோக்கமாக இருக்க முடியும்.
வேணு உயிரியல் / மரபணுவியல் சார்ந்து உயராய்வு செய்து வரும் விஞ்ஞானி. அமேரிக்காவில் வசிக்கிறார். அவரது ‘பீத்தோவனின் ஆவி’ சிறுகதை வெளியாகி கவனம் பெற்ற அதே சமயத்தில் தான் எனது முதல் கதையான ‘வாசுதேவன்’ வெளிவந்தது. ‘சுடோகுயி’ போன்ற அறிவியல் புனைவு கதைகளும் எழுதியுள்ளார். ‘காஸ்மிக் தூசி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இந்த முதல் தொகுப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் தான். ஆனால் அதற்கான அவரது மெனக்கிடல்களை கவிதை தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
வேணுவின் கவிதைகளில் முதன்மையாக என்னை வசீகரித்தது அமேரிக்க பனிக்கால சித்தரிப்புகள். “எண்ண முடியாத இலைகளின் வெறுமை”
என சுட்டப்படும் இலைகள் உதிர்ந்த பிர்ச் மரங்களும், வெண்பனியின் வெறுமையும், தனித்த பறவைகளும், மேப்பிள் மரங்களின் தனிமையும் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. குளிர்கால அமெரிக்க நிலக்காட்சிக்கும் ஜனசந்தடி மிக்க மதுரை வீதிகளுக்குமாய் கவிதைகள் அலைபாய்கின்றன. காலமும் வெளியும் மயங்கி மேப்பிள் மர நிழலில் இருந்தபடி ஒரு நொடி மதுரைக்கு சென்று திரும்புகிறார். சுனைநீரில் பால்யகாலத்து கிணற்று குளியலை தேடுகிறார். தூரதேசத்து மலையடி சுனையின் ஒரு துளி இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கிறது. புல் வெட்டும் இயந்திரத்தை காணும்போது ஊரிலிருந்த காராம் பசு நினைவுக்கு வருகிறது. “தூய வெண்மையின்/
பொருளின்மையில்,/ எப்படியாவது/
ஒரு துளி அர்த்தத்தை/சேர்த்துவிட/
முயல்வது போல்” என்கிறார். இயற்கை காட்சிகளின் சித்தரிப்பிலிருந்து மீபொருண்மை தளத்திற்கு தாவிட முடிகிறது. இஸ்கான் கீதை பதிப்பில் விஸ்வரூப தரிசன படம் ஒன்றுண்டு. பிரம்மாண்ட விஷ்ணுவைச்சுற்றி கணக்கற்ற குமிழ்கள் மிதக்கும். அவை ஒவ்வொன்றிலும் விஷ்ணு சயனித்திருப்பார்.
பிரபஞ்ச விளையாட்டு
கரைந்து குழைந்து
காற்றைக் குடிக்கும்
சோப்புக்குமிழி
வீங்கிப்பெருத்து
மிதந்தலையும்.
மூப்படைந்து
துளைகள் தோன்ற
வெடித்துச் சிதறும்.
உடையாத குமிழியொன்று
உயர்ந்தெழுந்து
நிறமடர்ந்து
வானவில்லாய்
விரிவடையும்.
மதிய வெய்யில்
மரத்தடியில் அம்முக்குட்டி
ஊதுகிறாள்
விளையாட்டாய்.
அவள் குழல் முன்
தோன்றி வளர்ந்து
விரிந்து மறையும்
எண்ணற்ற
பிரபஞ்சம்.
வேணுவின் கவிதை பிள்ளை விளையாட்டை பிரபஞ்ச விளையாட்டாக உருமாற்றுகிறது. மற்றொரு கவிதையான ‘திருப்பள்ளியெழுச்சி - மினியாப்பொலிஸில்’ உறங்கும் மகளை எழுப்புகிறது.
“நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்
உதிப்பதற்கென்று
தயாராகி விட்டது சூரியன்
எழுந்துவிடு
சீக்கிரம்.” எனும் இவ்வரி சட்டென ஒரு மனவெழுச்சியை அளித்தது.
“இந்த அறைக்கு/ எப்படி வந்தேன்?/ இந்தப் படுக்கையில்/ ஏன் கிடக்கிறேன்?/
நான் யார்?” என முழுக்க மீபொருண்மை தளத்தில் நிகழும் கவிதையும் உண்டு. “சாலையைக் கடந்து/ மறுபுறம் அடைந்தால்/நானும்/ அவன் தானா?” (சிவப்பு விளக்கு) எனும் கவிதையில் காலம் ஒரு சாலையாக ஆகிறது. லிடியா டேவிஸின் ‘ரயிலின் மாயாஜாலம்’ எனும் குறுங்கதை நினைவுக்கு வந்தது. “நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள் நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள் தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்”
இவை எதுவும் இல்லாமல் சித்தர் பாடல் போல தொனிக்கும் ஒரு கவிதை சட்டென எங்கிருந்தோ சந்தத்துடன் வந்து சேர்கிறது.
“இரவி அணைந்து
இரவு வரக்கண்டு
விடாய் கொண்டு
விழி அயர்ந்து
கடாவு எழ
அனுட்டானம் எனப்
பிரக்ஞை கொண்டு
கண் மலர எழுந்தனன்
யானே இன்று.
எழாவிடின்
உறட்டை சவம்
நிவகம்
எவர்க்கும்
சூதகம்.”
(நிகழ்தகவின் மானுடத்துவம்).
இயற்கை காட்சிகளின் மீபொருண்மை தளம் ஒரு வகை என்றால் வழிபடுதலுக்குரியவை நிகழ் தளத்திற்கு இறங்கி வருவது மற்றொரு வகை. சடாரி, காலபைரவரின் கடைசி பயணம், நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம், புத்த வீர சாமி ஆகிய கவிதைகளை இந்த வகையில் சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் ‘நந்தி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பிரதோஷ பூஜை கவிதைக்குள் என்னவாக எல்லாம் உருமாறுகிறது என்பதை கவனிக்கலாம்.
நந்தி
ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்
காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு, காவல்.
தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.
கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும் விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.
உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.
அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ உடனுறைகிறார்
சிவபெருமான்.
காலத்தில் உறைந்த கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி
கொம்பசைத்து
வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எழுந்துவிடக்கூடும், எந்நேரமும்.
என்றாலும்,
நந்திகள் ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?
பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்
தன் ஏழுதாண்டவங்களுள்
ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.
நடனம் முடியும்வரை
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
மூச்சைப்பிடித்தபடி
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.
நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்.
வேணு இலகுவான விளையாட்டு நிறைந்த கவிதைகளும் எழுதியுள்ளார். “படிமங்கள் செறிந்த/ வரிகளுக்குள்/ ஆழமாகவே/ நுழைந்து சென்றிருந்தது/
தோட்டா./ சிரமம் ஏதுமின்றி. (ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது
கவிதையைக் கொலை செய்வது எப்படி?). ‘அந்த சம்பவத்திற்கு பிறகு’ என்றொரு கவிதையில் ஒரு சின்ன விளையாட்டு நிகழ்கிறது. வடையை தொலைத்த காகம் பாட்டு பயிற்சியை நிறுத்திவிட்டு காதலில் விழுகிறது. வடையை வென்று பின்னர் திராட்சையை சாப்பிடமுடியாத நரியோ ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறது. பாட்டி கதைக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான கோட்டை அழிக்கிறாள். இந்த கவிதையின் ஒருவித கால- வெளி விளையாட்டு தொழில்படுகிறது. ‘தக்காளி காதல்’ உணவாகிப்போன தக்காளிக்கான அஞ்சலி குறிப்பு. தனது நல்லியல்புகளை ஈந்து பிறரை மேன்மையாக்கி தன்னை கரைத்துக்கொண்ட தக்காளி நீடுழி வாழட்டும். சிரிக்கும் புத்தரும் குழந்தையின் மென்பாதமும் அதை விவரிக்க பயன்படுத்தப்படும் உவமை.
வேணுவின் கவிதைகளில் சர்ப்பங்கள், பூனைக்குட்டிகள், டைனோசர்கள், நிழல்கள், வேதாளங்கள் என வெவ்வேறு படிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்குட்டியும் டைனோசர்களும் உறவு சிடுக்குகளை சொல்ல உதவுகின்றன. “வெறும்/சாதாரண/ ஒரு பூனைக்குட்டி./அது இல்லாமல்/
வாழவே முடியாது/என்று நினைத்ததுதான்-/எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்?”. ‘அல்லல் உழப்பது’ என்றொரு கவிதை குடிகாரனுக்கு நண்பனாக இருப்பதைப் பற்றி சொல்கிறது. “இன்றின்/வரஇயலாமையை/ ஏதாவதொரு/ பொய்சொல்லி/ எப்படியாவது/ நிறுவி விடலாம்தான்./
ஆனால்/ இன்றிரவு/அவன் உடலை/ அவன் வீட்டில்/ வேறு யார் /
கையளிப்பார்?” என விசனப்படுகிறது. ‘மயானத்திலிருந்து திரும்பிய பிறகு’ எனும் இறந்து போன முன்னாள் காதலிக்காக வெளிப்படையாக துக்கம் கொண்டாட முடியாத இக்கட்டான துயர நிலையை சுட்டுகிறது.
வேதாளங்கள் நம்மை அசைவுகரியப்படுத்துபவை. நாமாக சென்று தேர்பவை அல்ல. அவை நம்மை வந்து சேர்கின்றன ஆனால் மெல்ல மெல்ல அவற்றை நேசிக்க தொடங்குகிறோம். வேதாளத்திற்கு ஏதோ ஒரு தோள் போதும். நமக்கு தான் வேதாளம் வேண்டியதாய் இருக்கிறது. டைனோசர்கள் பீடிக்க காத்திருக்கின்றன. ‘நிழல்களின் புகலிடம்’ கவிதை வாசிக்கும் போது அவையும் அப்படி காத்திருப்பதை காண முடிகிறது. “என் இருப்பிலிருந்து/
பிரித்துவிட முடியாதபடிக்கு/ ஒன்றி பதுங்கியிருக்கின்றன/ எனக்குத்தெரியாமல்/ எப்படியோ/
எனக்குள் குடியேறிவிட்ட/ நிழல்கள்.” சர்ப்பங்களும் இப்படி நம்முடனேயே வாழ்கின்றன. “இப்போதுங்கூட ஒன்று/
இந்த அறையில் தான்/
எங்கோ ஒளிந்திருக்கிறது/ அப்படியே இருக்கட்டும்./ கைதொடு தூரத்தில் இருந்தாலும்/ அவற்றை கண்டு கொள்ளாதீர்./ நீங்கள் / கண்டுகொள்ளாதவரை/
அவைகளும்/ உங்களை / கண்டுகொள்வதில்லை.” முகமூடிகள் முகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. எது முகம் எது முகமூடி என்பது புரியாமலாகிறது. கார்ல் யுங் ‘நிழல்’ நமக்குள் சேகரமாவது என்கிறார். பலவீனமான தருணத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்கிறார். நிழலை கண்டுகொள்வதும் அதன் இருப்பை அங்கீகரிப்பதும் இன்றியமைதாததென உணர்வதும் என பல்வேறு நிலைகளில் வேணுவின் கவிதை பயணிக்கிறது. இந்த நிழல் தான் வேதாளமாகவும் டைனோசராகவும் பூதகணங்களாகவும் கவிதைக்குள் வருகின்றன. இந்த இருமை ஒரு கற்பிதம்தானோ எனும் பார்வையை ‘பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்’ கவிதை வழி அடைகிறோம்.
“இமைகளுக்குள்
கருவிழிகள்
உருளும் ஆழ்துயிலில்
தேவதைகள்
தோன்றும்
கனவில்.
தேவதையின் முகம் கண்டு
குழந்தையைப்போல
முறுவல் பூக்கும்
பூத முகம்.
இறுக்கம் அவிழ்ந்து
புன்னகை இடம் மாறி
குடிகொள்கையில்
பூதமும்
தேவதையும்
ஒன்று.”
தற்கால தமிழ் கவிதைகளின் பரப்பில் வேணு தயாநிதியின் கவிதைகளை எங்கு பொருத்திப்பார்ப்பது எனும் கேள்விக்கு என்னிடம் துலக்கமான பதில் ஏதும் இல்லை. நுண் சித்தரிப்புகள், பகடி, இயற்கை சித்தரிப்பு என பல்வேறு கவிஞர்களின், கவிதை போக்குகளின் தாக்கம் உள்ளதை கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ பத்துவருட காலம் எழுதிய கவிதைகள் என்பதால் இப்படி வெவ்வேறு தாக்கங்கள் புலப்படுவது இயல்பே. எனினும் ஒரு கவிதை வாசகனாக மிகுந்த நிறைவளித்த தொகுப்பிது என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். நண்பர் வேணுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சுனில் கிருஷ்ணன்
22.12.2023
January 6, 2024
சிறுகதை வாசிப்பின் 41 விதிகள்
(சிங்கப்பூரில் சிறுகதை வாசிப்பது பற்றி புங்கோல் வட்டார நூலகத்தில் எடுத்த வகுப்பிற்காக தயார் செய்த குறிப்பு. மயிலனின் ' ஆகுதி' மற்றும் லதாவின் 'பச்சை நிற கண்களுடைய கறுப்பு பூனை' ஆகிய கதைகளை விவாதிக்க எடுத்துக்கொண்டோம்.)
சிறுகதை என்பது சிறிய கதை அல்ல. பக்க அளவோ வார்த்தை எண்ணிக்கையோ அறுதியான வரையறை அல்ல. சிறுகதை என்பது ஒரு கதை கட்டுமானம். முடிவின் வழியாக திறந்து கொள்ளும் கதையமைப்பு.
சிறுகதையை அணுகும்போது நாம் கருத்தில் கொள்ளவேண்டியவை
கதை சொல்லி கரு தலைப்பு சொல்முறை படிமம் உரையாடல் விவரணை தரிசனம் – கண்டடைதல் அசல் தன்மை நுண்மை
சிறுகதை வாசிப்பு- சில அடிப்படைகள்
41. சிறுகதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விதி - The golden rule is that there is no golden rule! நாம் பின்பற்றியே ஆகவேண்டிய பொன் விதி என ஏதுமில்லை. விதிவிலக்குகள் தான் கலையையும் கலைஞர்களையும் உருவாக்குகின்றன. ஆகவே திறந்த மனதுடன் உங்கள் முழு நம்பிக்கையை படைப்பிற்கு அளித்து வாசிக்க தொடங்கவும். வாசித்ததை விவாதிக்கும் தோறும் புரிதல் பெருகும். நமக்கு புரியாததால் மோசமான படைப்பாக இருக்க வேண்டியதில்லை. நமக்கு புரிகிறதாலேயே உன்னதமான படைப்பாக இருக்க வேண்டியதும் இல்லை.
January 4, 2024
ஈக்களின் பிரபு - மார்கோ டெனெவி- மொழியாக்க குறுங்கதை
அர்ஜென்டினா எழுத்தாளர் Marco Denevi PC- Wikipedia
ஈக்கள் தங்களது கடவுளை கற்பனை செய்தன. அதுவும் ஒரு ஈ தான். ஈக்களின் பிரபு ஒரு ஈ. ஒருகணம் பச்சையாக, ஒருகணம் கருப்பாகவும் பொன்னிறமாகவும், மறுகணம் இளஞ்சிவப்பாகவும், மறுகணம் வெள்ளையாகவும், மறுகணம் கத்திரிப்பூ நிறத்திலும் இருக்கிறது. கற்பனைக்கு எட்டாத ஈ, அழகிய ஈ, மாபெரும் ஈ, அச்சுறுத்தும் ஈ, கருணை மிக்க ஈ, பழிதீர்க்கும் ஈ, நீதியுணர்வு கொண்ட ஈ, இளமையான ஈ, ஆனால் எப்போதுமே அது ஈ தான். சில அதன் அளவை காளையுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு பெருக்கின, பிற காணவே முடியாத அளவிற்கு சிறியதாக கற்பனை செய்தன. சில மதங்களில் அதற்கு ரெக்கைகள் கிடையாது (அது பறக்கும் ஆனால் அதற்கு ரெக்கைகள் தேவையில்லை என வாதிட்டன ), அதேசமயம் வேறு மதங்களில் அதற்கு எண்ணிலடங்கா ரெக்கைகள் இருந்தன. அதன் உணர் காம்புகள் கொம்புகளை போல இருந்ததாக இங்கு சொல்லப்பட்டது, அங்கு தலை முழுவதும் கண்களால் சூழப்பட்டதாக சொல்லப்பட்டது. சிலருக்கு அது எப்போதும் ரீங்கரித்துக்கொண்டே இருந்தது , வேறு சிலருக்கு எப்போதும் மவுனமாக இருந்தது. ஆனால் அப்போதும் அதனால் அதேபோல தொடர்புறுத்திக்கொள்ள முடியும். எனினும் எல்லாவையும் நம்பியது- ஈக்கள் இறந்ததும் அது அவற்றை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் என்பதை. சொர்க்கம் என்பது கெட்டு நாறும். அழுகிய மாமிசத் துண்டு. அதை உண்டு அழிக்காமல் செத்த ஈக்களின் ஆன்மாக்கள் நித்திய காலத்திற்கு மொய்த்து திரியலாம். ஆம், இந்த திவ்யமான கழிசல் துண்டு ஈக்களின் குழாமினால் மீண்டும் உற்பத்தி செய்யவும் மீண்டும் பிறப்பிக்கவும் படும். இவை நல்ல ஈக்களுக்குத்தான். கெட்ட ஈக்களும் இருப்பதினால், அவற்றுக்கு நரகம் என ஒன்றும் இருந்தது. சபிக்கப்பட்ட ஈக்களுக்கான நரகம் என்பது மலமற்ற, குப்பைகளற்ற, அழுக்குகளற்ற, துர்நாற்றமற்ற, எதிலும் எதுவுமே இல்லாத, தூய்மையான, பளீரென மின்னும், வெள்ளை விளக்கால் வெளிச்சமடைந்த இடம்தான்; வேறு சொற்களில் சொல்வதானால், கடவுளின் அருகாமையை உணர்த்தாத இடம்.
January 3, 2024
லிடியா டேவிஸ் குறுங்கதைகள்
லிடியா டேவிஸ் (Lydia Davis) அமெரிக்க எழுத்தாளர். ஃபிரெஞ்சிலிருந்து மொழியாக்கங்களும் செய்திருக்கிறார். குறுங்கதைகள் சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது ‘Cant and Wont’ தொகுப்பிலிருந்து எனக்கு பிடித்த சில குறுங்கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். என் நோக்கில் சமகாலத்தில் குறுங்கதைகளை எழுத எண்ணும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளராக லிடியா டேவிஸை கருதுகிறேன். சிறிய சிறுகதைகள், சடுதி கதைகள் (sudden fiction) நுண்கதைகள் (microfiction) மின்னல்வெட்டு கதைகள் (flash fiction) இப்படி பல்வேறு பிரிவுகளாக வடிவம் மற்றும் சொற்களின் எண்ணிக்கை சார்ந்து வகைப்படுத்தப்படுகிறது. தமிழில் ‘குறுங்கதைகள்’ என மொத்தமாக அடையாளப்படுத்துகிறோம். நுண்ணிய அவதானிப்பு, சொற்சிக்கனம், மொழிவளம், அறிவார்ந்த தெறிப்பு, உணர்வுச்சம் என பல இயல்புகள் லிடியாவின் கதைகள் வழி நமக்கு கிடைக்கின்றன. சிங்கப்பூரில் குறுங்கதைகள் அமர்வுக்காக மொழியாக்கம் செய்தவை. அகழ் மின்னிதழில் வெளியானவை.
நாய் முடி
நாய் போய்விட்டது. நாங்கள் அவன் இன்மையை உணர்கிறோம். வாயில்மணி ஒலிக்கும்போது யாருமே குரைப்பதில்லை. நாங்கள் வீட்டிற்கு தாமதமாக வரும்போது எங்களுக்காக எவரும் காத்திருக்கவில்லை. நாங்கள் அவனது வெள்ளை முடிகளை எங்கள் வீட்டிலும் எங்கள் ஆடைகளிலும் அங்குமிங்குமாக காண்கிறோம். நாங்கள் அவற்றை எடுக்கிறோம். நாங்கள் அவற்றை தூர வீசியெறிய வேண்டும். ஆனால் எங்களுக்கு அவை மட்டுமே அவனுடைய மிச்சமாக இருக்கிறது. நாங்கள் தூர வீசியெறிவதில்லை. எங்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை- எங்களால் மட்டும் போதுமான அளவு அவற்றை சேகரிக்க முடிந்தால், எங்களால் மீண்டும் நாயை உருவாக்கிவிட முடியும்.
ooo
ரயிலின் மாயாஜாலம்
நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள் நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள் தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்.
ooo
மோசமான நாவல்
எனது பயணத்தில் நான் கொண்டு வந்த இந்த சுவாரசியமற்ற, கடினமான நாவலை வாசிக்க முயன்றபடி இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் பயந்தபடி, நான் பலமுறை அதனிடம் திரும்ப சென்றிருக்கிறேன், ஒவ்வொருமுறையும் கடந்தமுறையை விட எவ்வகையிலும் மேம்படவில்லை என்பதை கண்டடைந்திருக்கிறேன், அது இதற்குள்ளாக எனக்கு ஒரு பழைய நண்பனை போல ஆகிவிட்டது. மோசமான நாவல் எனும் எனது பழைய நண்பன்.
ooo
குழந்தை
அவள் குழந்தையின் மீது குனிந்து படிந்திருந்தாள். அவளால் அவளை விட்டுச்செல்ல முடியாது. ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி கிடத்திவைக்கப்பட்டிருந்தது. அவள் குழந்தையை இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள், கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும். உயிருடனிருக்கும்போது, புகைப்படத்திற்கு அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும் இயலாது. அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் “நான் கேமராவை எடுத்து வருகிறேன்” குழந்தையிடம் “அசையாதே” என சொல்வது போல.
ooo
உறைந்த பட்டாணி உற்பத்தியாளருக்கு ஒரு கடிதம்
அன்புள்ள உறைந்த பட்டாணி உற்பத்தியாளருக்கு,
உங்களது உறைந்த பட்டாணி பொதியில் சித்தரிக்கப்பட்ட பட்டாணிகள் மிகவும் ஈர்ப்பற்ற நிறமுடையவை என நாங்கள் எண்ணுவதால் உங்களுக்கு நாங்கள் எழுதுகிறோம். மூன்று அல்லது நான்கு பட்டாணி தோலிகளில், ஒன்று மட்டும் வெடித்து அதிலிருந்து பட்டாணிகள் அருகே உருளும் சித்தரிப்பு கொண்ட 16 அவுன்ஸ் பிளாஸ்டிக் பொதியை பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறோம். பட்டாணிகள் மங்கலான மஞ்சள்- பச்சை நிறமுடையவையாக உள்ளன, புதிய பட்டாணிகளின் நிறம் என்பதைவிட பட்டாணி சூப்பின் நிறம், அதுவும் அவை உங்கள் பட்டாணிகளின் பளீரிடும் அடர் பச்சை நிறத்திற்கு எவ்வகையிலும் தொடர்பற்றவை, மேலும், சித்தரிக்கப்பட்ட பட்டாணிகள் பொதிக்குள் இருக்கும் பட்டாணிகளைவிட அளவில் மும்மடங்கு பெரியவை, அதனுடைய மங்கல் நிறத்துடன் இணையும் போது இன்னும் ஈர்ப்பற்றதாக ஆக்குகிறது- அவை முதிர்ந்த நிலையை கடந்ததாக தென்படுகின்றன. மேலும், சித்தரிக்கப்பட்ட பட்டாணிகளின் நிறம் உங்கள் பொதியின் கண்ணைப் பறிக்கும் நியான் பச்சை நிற எழுத்துக்களின் நிறம் மற்றும் பிற அலங்காரங்களின் நிறத்துடன் ஒத்துவராமல் துருத்தி தெரிகிறது. நாங்கள் உங்களது பட்டாணிகளின் சித்தரிப்பை பிற உறைந்த பட்டாணி பொதிகளின் சித்தரிப்புடன் ஒப்பிட்டு பார்த்தோம், இதுவரையில் உங்களுடையவையே மிகவும் ஈர்ப்பற்றதாக உள்ளது. பெரும்பாலான உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள் பொதிக்குள் இருக்கும் உணவை விட அதிக ஈர்ப்புடையதாக பொதியில் உணவை சித்தரிப்பார்கள், ஆகவே அது ஒரு ஏமாற்று தான். நீங்கள் நேர்மாறாக செய்கிறீர்கள்: நீங்கள் பிழையாக உங்கள் பட்டாணிகளை உள்ளே இருப்பதுடன் ஒப்பிட ஈர்ப்பற்றதாக சித்தரிக்கிறீர்கள். எங்களுக்கு உங்கள் பட்டாணிகள் பிடித்திருக்கின்றன, உங்கள் தொழில் முடங்க நாங்கள் விரும்பவில்லை. ஆகவே தயவு செய்து உங்கள் சித்தரிப்பை மறுபரிசீலனை செய்யவும்.
தங்களுக்கு உண்மையுடன்.
January 1, 2024
பார்ன்ஸ்- எட்மண்டோ பாஸ் சோல்டன் (Edmundo Paz Soldan)
(பொலிவிய எழுத்தாளர்- ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் Kirk Nessat)
https://press.uchicago.edu/ucp/books/...
இவை எல்லாமே ஏதோ ஒரு பிழை, தனது சிறையில் அடைபட்டிருந்த பார்ன்ஸ் புரிந்துகொண்டார், அவர் உண்மையை சொல்வதே சரியானதாக இருக்கும். எனினும், பின்னர் மங்கலான அறையில், வெளிச்சத்தால் கண்களில் பார்வையற்று போன சமயத்தில், அதிபரை கொன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியபோது,, தனது வாழ்வின் சாதாரணத்தன்மை குறித்தும், தனது வாழ்க்கையின் மாபெரும் முக்கியத்துவமின்மை குறித்தும் அவர் சிந்தித்ததன் விளைவாக, முதன்முறையாக எவ்வித பயனும் அற்ற முக்கியத்துவத்தின் எடையை உணர்ந்தவராக, ஆமாம், அதிபரை அவரே கொன்றதாக சொன்னார். அதன்பின்னர் தரபாகா படையில் இருந்த இருநூற்றி எண்பத்தியேழு படைவீரர்களை கொன்ற வெடிகுண்டை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். வெறுப்புடன் சிரித்தபடி, பழியை தழுவிக்கொள்வதை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. பின்னர் இடைவெளியே இல்லாமல், பொலிவியாவின் பொருளாதாரம் வீழ காரணமாயிருந்த எரிவாயு குழாயை சிதைத்ததையம்,, கோச்சா பாம்பா வனப்பகுதியின் தொண்ணூற்றி இரண்டு சதவிகிதத்தை கபளீகரம் செய்த நெருப்பை பற்றவைத்ததையும், பாதிவழியில் பறந்துகொண்டிருந்த நான்கு LAB ஜெட் விமானங்களை வெடிக்க வைத்ததையும், லா பாஸின் வட அமெரிக்க தூதுவரின் மகளை வன்புணர்வு செய்ததையும் ஒப்புக்கொண்டார். மறுநாள் சூரியோதயத்தின்போது அவரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வார்கள் என அறிவித்தார்கள். ஆம், அவரைப்போன்ற வாழ உரிமையற்ற ஒரு மனிதரை அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என அவரும் ஒப்புக்கொண்டார்.
December 29, 2023
சமூகத்தை மாற்றப்போகிறேன் எனும் போலித்தனமான நம்பிக்கைகள் ஏதும் எனக்கில்லை - ராமச்சந்திர குகாவுடனான உரையாடல்
ராமச்சந்திர குகா - புகைப்படம் நன்றி - கபிலன், ஷ்ருதி டிவி (இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராமச்சந்திர குகா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் எனது ஆதர்சங்களில் ஒருவர். அவருடைய அரங்கை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் குகா விரிவாக பதிலுரைத்தார். அவருடைய பதில்களை மேடையில் சுருக்கமாக மொழியாக்கம் செய்தேன். எனினும் அது மேடைக்கென செய்தது, விடுபடல்கள் இருந்தன என்பதால் மொத்த உரையாடலையும் மொழியாக்கம் செய்தேன். ஸ்ருதி டிவியில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சப் டைட்டிலாக கொடுக்கலாம் என்பதே எனக்கிருந்த யோசனை. ஆனால் சப் டைட்டில் சேர்ப்பது எளிதான காரியம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். உரையாடலை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்கலாம்.)
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குகாவை கௌரவித்தபோது, புகைப்பட உதவி - கபிலன், ஷ்ருதி டிவி
வரலாற்றை கதையாக காணும் எழுத்தாளருக்கான விருது விழாவில் வரலாற்றிலிருந்து சுவாரசியமான கதைகளை கண்டெடுக்கும் வரலாற்று ஆசிரியர் விருந்தினராக வந்திருப்பது சற்றே சுவாரசியமான முரண். ராமச்சந்திர குகா பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை, அவர் வரலாற்று ஆசிரியர், சூழலியல் எழுத்தாளர், வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், கிரிக்கெட் குறித்து சமூக வரலாற்று கோணத்திலிருந்து எழுதியவர். அவர் எழுதிய காந்தியின் வாழ்க்கை சரித்திரம் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டது. எங்கள் மத்தியில் நீங்கள் உரையாட வந்திருப்பது எங்களுக்கு பெருமை. நன்றி.
கே- காந்தி ஏன் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கிறார்?
ப- காந்தி வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் இருக்கிறார் அதே சமயம் அவரைப் பற்றி எழுதுவது நோகடிக்கின்ற, எரிச்சல் ஊட்டுகின்ற விஷயமும் கூட. ஏனெனில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அவரைப் பற்றி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. உங்களுக்கு தெரிந்திருக்கலாம் சுனில், எனினும் நான் இதை சொல்ல வேண்டும், நான் எழுதிய முதல் வாழ்க்கை வரலாற்று நூல் காந்தியை பற்றியது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன், அலைந்து திரியும் நாடோடியான ஆங்கிலேயர் ஒருவரை பற்றி நான் எழுதியிருக்கிறேன். அவர் பெயர் வெரியர் எல்வின். அவர் ஒரு ஆக்ஸ்போர்ட் பட்டதாரி. இந்தியாவுக்கு வந்தார், காந்தியுடன் சேர்ந்து கொண்டார், திருச்சபையை விட்டு வெளியேறி மத்திய இந்தியாவின் பழங்குடியினருடன் சேர்ந்து வாழச் சென்றார். மேலும் அவர் பழங்குடி வாழ்க்கை தொடர்பாக பல உணர்வுப்பூர்வமான பதிவுகளை எழுதினார். அவர் அடிப்படையில் ஒரு கவிஞர், அங்கிருந்து மானுடவியலாளராக ஆனவர். அவரது உரைநடை மிளிர்ந்தது. கல்வித்துறை சார்ந்தவர்களுடைய உரைநடையை போலின்றி இலகுவாகவும் இருந்தது. அவருடைய வாழ்க்கை அற்புதமானது. இந்தியராக ஆன ஒரு ஆங்கிலேயர், திருச்சபையை விட்டு வெளியேறிய பாதிரியார், பழங்குடியினருடன் சேர்ந்து வாழ்ந்த உயர் குடி மனிதர், விடுதலைக்குப் பிறகு அவர் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களுக்கான இந்திய அரசின் ஆலோசகராக திகழ்ந்தார். கவிஞர், புனைகதை ஆசிரியர், ஓரளவு என்னை போன்றே சர்ச்சைக்குரிய ஆளுமை. அவர் எழுதிய கட்டுரைகளால் சர்ச்சைகளுக்குள் உள்ளானார், மக்கள் அவருடன் தொடர்ந்து விவாதித்தபடியே இருந்தனர். அவரைப் பற்றி நான் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதினேன். அந்நூலை நான் மிகவும் ரசித்து எழுதினேன். ஆனால் அதற்கு முன்பு வரை எவருமே எல்வினை பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியதில்லை. இனியும் அவரது வாழ்க்கை வரலாறை எவரும் எழுதப்போவதும் இல்லை.
இதற்கு அடுத்து நான் எழுதிய வாழ்க்கை வரலாறு என்பது, ஒரு தலித் கிரிக்கெட் வீரரை பற்றியது. அவரது பெயர் பல்வாங்கர் பாலு. A corner in the foreign field என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். நூற்றாண்டின் இறுதியில், பம்பாயில் வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மகத்தான தலித் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நூல் அது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கொஞ்ச காலம் முன்னர், ரஞ்சி கிரிக்கெட்டிற்கும் முன்னர், ஐபிஎல்லுக்கு 100 ஆண்டுகளுக்கு முன், 1911 ஆம் ஆண்டு அனைத்திந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தினுடைய நட்சத்திரம் பல்வாங்கர் பாலு எனும் தலித் கிரிக்கெட் வீரர் தான். பம்பாயில் அவர் மிகப்பெரிய அளவில் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டார். கிரிக்கெட் போட்டியின் நடுவில் தேநீர் இடைவெளி உண்டு என்பது உங்களுக்கு தெரியும். இவரால் அவரது சக வீரர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த முடியவில்லை. தேநீர் அருந்த அவரது அணியினர் எல்லோரும் பவிலியனுக்கு செல்லும் போது, இவருக்கு மட்டும் ‘ஒருமுறை பயன்படுத்தப்படும்’ கோப்பையில், வெளியே தேநீர் வழங்கப்படும். ஆகவே அவரது வாழ்க்கையும் போராட்டமாக தான் இருந்தது. அவர்தான் அம்பேத்கரின் முதல் நாயகன். இன்னும் சொல்வதானால், 1911 ஆம் ஆண்டு வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் நட்சத்திர வீரராக திகழ்ந்த பாலு, நாடு திரும்பிய பொழுது, அம்பேத்கர் ஒரு புத்திசாலி இளம் மாணவனாக பிரசிடென்சி கல்லூரியில் பயின்று வந்தார். அம்பேத்கர் முதன்முறையாக ஆற்றிய பொது மேடை உரை என்பது பாலுவை கௌரவிக்கும் நிகழ்வில் தான். பாலு எனும் அற்புதமான தலித் கிரிக்கெட் வீரர் என்ன விதமான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதை பற்றி நான் ஒரு வாழ்க்கை வரலாறு நூலை எழுதினேன். ஒரு வரலாற்று ஆசிரியர் பாலுவின் மீது கவனம் செலுத்தியது இதுதான் முதல் முறை. இங்கு அமர்ந்திருக்க கூடிய சில இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் ஐபிஎல்லில் இருந்து தொடங்கியது என்று எண்ணக்கூடும். வேறு சிலர் 1983 உலக கோப்பை வெற்றியில் இருந்து தொடங்கியதாக நம்பக் கூடும். ஆனால் அது 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது, அதன் முதல் மகத்தான கிரிக்கெட் வீரர் ஒரு தலித் என்பதை கண்டடைந்து சொன்னதில் நான் ஒரு முன்னோடி.
ஆனால் காந்திக்கு வந்த பொழுது, முழு நூலகமே நிறையும் அளவிற்கு நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆகவே புதிதாக நான் என்ன சொல்லி விட முடியும்? நான் காந்தியை பற்றி எழுதுவது என்பதில் தீர்மானமாக இருந்தேன். என்னிடம் சில சுவாரசியமான புதிய தகவல்கள் இருந்தன. எனது பங்களிப்பாக காந்திய இலக்கியத்தில் அவற்றை சேர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். காந்தியை பற்றி எழுதுவது சவாலானது, கடினமானது. ஆனால் அதே நேரத்தில் நவீன இந்தியாவின் வரலாற்று ஆசிரியன் எனும் முறையில் அது முக்கியமானதும் தேவையானதும் கூட. ஏனெனில் காந்தி நவீன இந்தியாவின் மிக முக்கியமான, மிகுந்த செல்வாக்குடைய, மிகுந்த சர்ச்சைக்குரிய ஆளுமை என்பதில் எனக்கு ஐயமே இல்லை. என்னைப் போன்ற ஒரு வரலாற்று ஆசிரியன் அவருடனான கணக்கை தீர்த்துக் கொள்ள வேண்டும். காந்தியைப் பற்றி எழுதாமல் இந்த உலகை விட்டு நீங்கி விடக்கூடாது. ஆகவே ஐந்தாயிரம் புத்தகங்கள் ஏற்கனவே காந்தியை பற்றி எழுதப்பட்டிருந்தாலும் நான் ஐந்தாயிரத்தி ஒன்றாவது புத்தகத்தை எழுதுவேன்.
கே- நீங்கள் அமித் வர்மாவுடன் நிகழ்த்திய உரையாடலை நான் கேட்டுக் கேட்டேன், அதில் நீங்கள் அவ்வளவாக புனைவு வாசிப்பதில்லை என கூறினீர்கள். ‘இந்தியா- காந்திக்கு பிறகு’ போன்ற நூலை வாசிக்கும் போது ஒரு வலுவான கதை சொல்லியின் இருப்பை உணர்கிறேன். நவீன இந்திய வரலாறு சார்ந்து நிறைய தகவல்கள் இருந்த போதிலும், அதிலிருந்து ஒரு சுவாரசியமான கதையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். சுனில் அவரது அறிமுகத்திலும் இதையே குறிப்பிட்டார் என எண்ணுகிறேன். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
இரண்டாவதாக, புனைவு வாசிப்பதில்லை என்பது ஒரு பிரக்ஞைப்பூர்வமான முடிவா?
ப- அந்த பதில் முழுக்க நேர்மையான பதில் அல்ல. நான் அவ்வப்பொழுது புனைவிலக்கியம் வாசிக்கிறேன். இளம் வயதினனாக இருக்கும் பொழுது நிறைய வாசித்திருக்கிறேன். எனது உரைநடையின் ஒரு பகுதி நான் இளமையில் வாசித்தபோது நன்றாக எழுதிய ஆங்கில எழுத்தாளர்கள் வழி எனக்கு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். எனக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதல்ல. சரளமாக ஆங்கிலம் பேச முடியும். இந்தியும் போதுமான அளவு தெரியும். வேறு எந்த மொழிகளும் முழுமையாக தெரியாது. தமிழ் எனக்கு தெரியாது என்பதில் வருத்தம் தான். தமிழ் மட்டுமல்ல வேறு இந்திய மொழிகளும் தெரியாது. இளமையில் நிறைய புனைவு வாசித்தேன். நான் வாசித்த எழுத்தாளர்களை பற்றி எண்ணிப் பார்க்கிறேன். உதாரணமாக எர்னெஸ்ட் ஹெமிங்வே, சோமர்செட் மோம் போன்றவர்கள், இன்னும் சிலர் அதிகம் அறியப்படாதவர்கள், துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்- ரெக்ஸ் ஸ்டவுட் (Rex Stout), ரேமண்ட் சேண்ட்லர் (Raymond Chandler) போன்றவர்கள். இவர்களுடைய உரைநடைகள் கச்சிதமாகவும் துல்லியமாகவும் இருந்தன. உங்கள் கேள்வியின் இரண்டாம் பகுதிக்கான எனது பதில் என்பது, நான் எப்போதுமே இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் கிளையாகவே வரலாறை பார்க்கிறேன். வெறும் சமூக அறிவியல் மட்டுமல்ல. வெறும் இலக்கியம் மட்டுமல்ல. வரலாற்று ஆவணங்களை கொண்டு ஆய்வு செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு ஒரு கதையை மட்டும் சொல்கிறார்கள். கல்விப்புல வரலாற்று ஆய்வாளர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து, நிறைய தகவல்களுடன், சுவாரசியமற்ற கடினமான துறை சொற்கள் மலிந்த மொழியில், வாசிக்கவே முடியாத புத்தகங்களை எழுதுவார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு ஆய்வுச் சட்டகம் வேண்டும். ஓரளவு சமூகவியல், அரசியல், பொருளியல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் முடிய வேண்டும். ஆகவே வரலாறையும் நான் இலக்கியத்தின் பகுதி என்றே நம்புகிறேன். புனைவுடன் ஒப்பிடும் பொழுது அது சற்றே தாழ்ந்த கிளையாக இருக்கலாம். புனைவைத் தவிர இரண்டாவது சிறந்த பிரிவு என வரலாற்றை சொல்லலாம். உங்களது பாராட்டுதலுக்கு நன்றி.
என்னால் டால்ஸ்டாய் அளவிற்கு எழுத முடியாது தான், ஆனால் வேறு பல புனைவு எழுத்தாளர்களை விட நன்றாகவே எழுத முடியும். நான் புனைவுகளை வாசிக்கிறேன். இந்தியா குறித்தான புனைவுகளை தவிர்க்கிறேன். ஏனெனில் எனது மொத்த வாழ்வும் இந்தியா குறித்ததே, சில விதிவிலக்குகள் உண்டுதான். நோய் தொற்றுக் காலத்தில் நான் டால்ஸ்டாயை வாசித்தேன்- போரும் வாழ்வும் மற்றும் அன்னா கரீனினா. மிடில் மார்ச் (ஜார்ஜ் எலியாட்) நாவலையும் வாசித்தேன். எப்போதைக்குமான மிகச் சிறந்த மூன்று நாவல்கள் இவை. அவற்றை வாசித்ததற்காக நான் மகிழ்கிறேன். இந்திய புனைவை நான் வாசிப்பதாக இருந்தால் நேரடி ஆங்கிலத்தில் அல்ல, மொழியாக்க நூலையே வாசிக்கிறேன். நான் அண்மையில் வாசித்த மிக அற்புதமான புனைவு ஒன்றை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இவரை இதுவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அழைக்கவில்லை என்றால் இனிமேல் அழைக்க வேண்டும் என கோருகிறேன். இவர் ஒரு ஹிந்தி எழுத்தாளர். ஞான் சதுர்வேதி என்ற பெயர். அவரது அலிபுரம் எனும் நாவல் சலீம் யூசுபியால் மிக அற்புதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வட இந்திய சிறுநகரத்தில் சாதியம், ஊழல் மற்றும் மதவாதம் குறித்து மிகுந்த நுண் உணர்வுடன் சமரசம் இன்றி எழுதப்பட்ட புனைவாகும். ஏனெனில் என்னால் புக முடியாத உலகம் அது. இந்திய ஆங்கில எழுத்தாளரின் உலகம் என்பது என்னுடைய உலகம் தான். இப்பொழுது நான் பிறமொழி இந்திய இலக்கியங்களை வாசிக்க தொடங்கி இருக்கிறேன். இது ஒரு இலக்கிய அவை என்பதால் இது சார்ந்து கடைசியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இளைஞனாக இருந்த பொழுது என் மீது தாக்கம் செலுத்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வல். அவர் புனைவும் புனைவல்லாதவையும் எழுதினார். எவரோ குறிப்பிட்டது போல, அவரது உரைநடை கண்ணாடி சாளரம் போல் தெளிவாக இருக்கும். எனது இலக்கிய வாசிப்பின் வளர்ச்சிப் போக்கில் உள்ள மிக முக்கியமான குறைபாடு , கவிதையின் மீதான ருசியை நான் வளர்த்துக் கொள்ளவே இல்லை என்பதுதான். இது எனக்கு இழப்புதான். என்னால் ஏன் கவிதை மீதான ருசியை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால், நான் இளைஞனாக இருந்த பொழுது கிரிக்கெட் விளையாட்டில் மிக அதிக நேரத்தை செலவிட்டேன். நீங்கள் கிரிக்கெட் பயிற்சி முடித்துவிட்டு திரும்பும் போது மிகவும் சோர்வாக இருப்பீர்கள். உங்களால் நாவலை வாசிக்க முடியும், சிறுகதையை வாசிக்க முடியும். ஆனால் கவிதை வாசிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு முழுமையான , தெளிவான , புத்துணர்ச்சியுடைய, ஆற்றல் மிகுந்த மனம் வேண்டும். எனது மனைவியை பாருங்கள், கவிதைகளை வரி வரியாக சொல்வார். புனைவு அதிகம் வாசிக்கவில்லை என்பதல்ல, ஆனால் இது ஒரு இழப்புதான். முன்னரே இதற்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.
கே- வணக்கம் சார் உங்களுடைய பெரும் வாசகன் நான். கல்விப்புல வரலாற்று ஆய்வாளர் போல இல்லாமல் நீங்கள் பல மகத்தான வாழ்க்கைகளை பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் வெரியர் எல்வின், பல்வாங்கர் பாலு, காந்தி போன்றவர்களுடைய வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது ‘Rebels against the Raj’ வெளிவந்துள்ளது. ஆனால் இது அப்பொழுது வழக்கத்தில் இல்லை. அப்பொழுது இல்லை என ஏன் சொல்கிறேன் என்றால் இப்பொழுது இது மாதிரியான வரலாறுகள் இந்திய வெளியில் எழுதப்படுகின்றன. எனினும் கூட நீங்கள் சஞ்சய் சுப்பிரமணியம் போல வரலாற்று அமைப்புகளை கோட்பாட்டு ரீதியாக விளக்கி எழுதுபவர் அல்ல. வரலாற்றை இப்படி அணுகுவது பற்றிய உங்கள் பார்வை என்ன என்பது ஒரு கேள்வி. இரண்டாவதாக நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவர்கள் சார்ந்த எல்லையை உணர்கிறீர்களா? வெரியர் எல்வின் போன்ற ஒரு ஆளுமையை பற்றி நீங்கள் எழுதும் பொழுது, அந்த காலகட்டத்தை முழுமையாக சித்தரிப்பதில் அவரது ஆளுமை உங்களுக்கு ஒரு எல்லையை வகுப்பதாக உணர்கிறீர்களா?
ப- எனது படைப்பு பற்றிய உங்கள் பார்வையை நான் சற்று மறுக்கிறேன். எனது வாழ்க்கை வரலாறு எழுத்து குறித்து சொல்வதானால், காந்தி மகத்தான மனிதர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் வேறு எவருமே எவ்வினை பற்றி நான் எழுதியதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை. பல்வாங்கர் பாலு குறித்து நான் எழுதுவதற்கு முன் எவரும் கேள்விப்பட்டதில்லை. Rebels against the Raj நூலில் கூட அன்னிபெசன்ட் என்னும் விதிவிலக்கை தவிர்த்து பிற அனைவருமே அவ்வளவாக வெளியே தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் இடைநிலை ஆளுமைகள் என சொல்லலாம். எனது வரலாற்று எழுத்துக்களில் காந்தி மட்டுமே ஒரே விதிவிலக்கு. உங்களுடைய கேள்வியின் இன்னொரு பகுதியை இன்னும் ஒரு நிமிடத்தில் எதிர்கொள்கிறேன். அதற்கு முன் வாழ்க்கை வரலாறு எழுதுவதில் மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பதை சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவரைப் பற்றி அவர் எழுதிய கோணத்தில் இருந்து மட்டுமே சொல்லிச் செல்லக்கூடாது. காந்தியைப் பற்றிய இதற்கு முந்தைய எல்லா வாழ்க்கை வரலாறுகளும் 97 தொகுதிகள் கொண்ட அவரது தொகை நூல் தொகுப்பில் இருந்து உருவாகி வந்தவைதான். நான் வேறு வேறு ஆதாரங்களை தேடிச் சென்றேன். காந்திக்கு வந்த கடிதங்கள், காந்தியை பற்றிய கடிதங்கள், உளவுத்துறை குறிப்புகள், நாளிதழ் கட்டுரைகள் என பல தரப்புகள் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாடகம் அல்லது ஒரு திரைப்படம் போல பெரும் எண்ணிக்கையிலான கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கான வெளியை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என நம்புகிறேன். இரண்டாவதாக நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவருடைய தோல்வியை சமரசம் இன்றி அணுக வேண்டும். ஒட்டுமொத்தமாக அவர் மீது உங்களுக்கு பரிவு இருக்கலாம், காந்தியை பொதுவாக எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ஏன் பத்து வருடங்களை அவருக்காக செலவழிக்க வேண்டும்? ஆனால் அவரை குருட்டுத்தனமாக அணுகுவதில்லை. மூன்றாவதாக வாழ்க்கை வரலாறு என்பது வாழ்க்கையை காலத்துடன் பொருத்திப் பார்ப்பதாகும். ஆகவே காலம் என்னும் பெரிய திரையில் வாழ்க்கையை வரைந்து காட்டுவதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு இளைஞர், ஆகவே எனது அண்மையகால நூல்களைப் பற்றியே அதிகம் அறிந்திருப்பீர்கள் என்பது உங்கள் குற்றம் அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்று நான் கேட்கலாமா?
24
24. சரி. எனது முதல் புத்தகம் நீங்கள் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்டது. சரியா? அது இமாலயத்தின் வேளாண் இயக்கங்கள் பற்றி பேசியது. அதன் பின்னர் சூழலியல் தொடர்பாக எழுதினேன். அதன் பின்னர் அடித்தளத்தில் இருந்து சமூக வரலாறை எழுதி இருக்கிறேன். நான் மீண்டும் அங்கு திரும்பி செல்லக்கூடும். ஒரு வரலாற்று ஆசிரியனாக நான் கிரிக்கெட் குறித்து, சூழலியல் குறித்து மற்றும் வேறு சின்ன சின்ன விஷயங்கள் குறித்தும் எழுதியிருக்கிறேன். எனினும் தனி மனிதர்களின் சித்தரிப்பை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளேன் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மாபெரும் ஆளுமைகளாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அவ்வளவாக அறியப்படாத ஆளுமைகளாகவும் இருக்கலாம். நீங்கள் என்னுடைய பத்திகளை வாசித்து இருந்தால் தெரிந்திருக்கும், உதாரணமாக அண்மையில் இறந்து போன இரண்டு தொண்ணூற்றி ஐந்து வயதினரை பற்றி நான் எழுதினேன். அவர்கள் இருவருமே பொறியாளர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இருவருமே கற்பதற்காக இங்கிலாந்துக்கு சென்று திரும்பியவர்கள். இருவருமே தனியார் பெரு நிறுவனங்களில் பணிக்கு சேரவில்லை. அரசு வேலையில் சேர்ந்தார்கள். ஒருவர் ரயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்து பரோடா பாம்பே இருப்புப் பாதையை மின்மயம் ஆக்கினார். இன்னொருவர் ஹச் ஏ எல் நிறுவனத்தில் சேர்ந்து சொந்த நாட்டில் விமானங்களை உருவாக்க உதவினார். பொது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் உடைய இரு பொறியாளர்கள். இந்தியாவில் பணி செய்தார்கள். யாருக்குமே அவர்களை தெரியாது. ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் வழியாக ஒரு பெரிய கதையை சொல்ல முடியும். மேலும் 2014க்கு முன்பு இந்தியாவில் நிறைய மகத்தான மனிதர்கள், மகத்தான செயல்களை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவுறுத்த வேண்டும். காந்தியைத் தவிர நான் எழுதிய பிறர் அவ்வளவாக அறியப்படாதவர்கள். காந்தி மட்டுமே ஒரே விதிவிலக்கு. நீங்கள் சஞ்சய் சுப்பிரமணியத்தை பற்றி குறிப்பிட்டீர்கள், அவரது சிறந்த புத்தகம் என்பது வாஸ்கோடகாமா பற்றிய வாழ்க்கை வரலாறு தான். நல்ல வரலாற்று ஆசிரியர்கள், சஞ்சய் சுப்பிரமணியத்தை போல, அவர்கள் ஒரே வகையாக வகைப்படுத்தப்படுவதை விரும்புவதில்லை. ஒரே ராகத்தை மீள மீள பாட விரும்புவதில்லை.
கே- நான் என் பங்கிற்கு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவ்வளவாக அறியப்படாத ஆளுமைகள் குறித்து எழுதுவதாக சொன்னீர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறை நான் வாசிக்கும் பொழுது, எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்திய ஒரு ஆளுமை, ஷேக் மேத்தாப். காந்தி எழுதிய சுய சரிதையில் அவருக்கு புலால் உணவை அறிமுகப்படுத்திய அதே நபர்தான் பின்னர் அவரோடு தென் ஆப்பிரிக்காவில் சேர்ந்து வாழ்ந்து மீண்டும் தீய நடத்தையால் வெளியேற்றப்படுகிறார் என அறிந்து கொண்டேன். அத்துடன் முடியவில்லை. பின்னர் அவர் இந்தியன் ஒப்பினியினில் போராட்டம் குறித்து தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறார். இது ஒரு அற்புதமான கதை. அதே போல் சோனியா ஷெல்சின் ஒரு மகத்தான ஆளுமையாக வெளிப்படுகிறார். அவரைப்பற்றி நமக்கு இதற்கு முன் எதுவும் தெரியாது.
ப- நான் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கொண்டால், பொதுவாக காந்தியின் வாழ்க்கை வரலாறை அவரது பார்வையில் இருந்து, கஸ்தூர்பாவின் பார்வையில் இருந்து, ஹரிலாலினுடைய பார்வையில் இருந்து, அல்லது நேரு அல்லது பட்டேல் அல்லது சரோஜினி நாயுடுவின் பார்வையில் இருந்து எழுதுவது வழக்கம். அவ்வளவுதான். நியூயார்க்கில் வசிக்கும் எனது எடிட்டர் சன்னி மேத்தா உங்கள் நூலில் குறைந்தபட்சம் 150 சுவாரஸ்யமான கதை மாந்தர்கள் உள்ளார்கள் என்றார். அதை ஒரு மகத்தான பாராட்டாக நான் கருதுகிறேன். அவர்கள் சிறிய கதை மாந்தர்கள் என்பதல்ல, நாம் பிற கதை மாந்தர்களுடன் கொண்டுள்ள உறவின் படி வகுக்கப்படுகிறோம். நண்பர்கள் குடும்பத்தினர், எதிர் தரப்பினர், காதலர்கள், சகாக்கள் இப்படி பலர் மீது தாக்கம் செலுத்திய படி வாழ்கிறோம். சோனியா ஷெல்சின் அவரது செயலர். காந்தியை எதிர்த்து விவாதம் புரியக்கூடிய அளவுக்கு குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்ட யூத பெண்மணி. அவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஹென்றி மற்றும் மில்லி போலக்கும் அப்படித்தான். காந்தியை மட்டும் மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாறை எழுத நான் முயற்சிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டது போல், ஒரு நாடகம் அல்லது திரைப்படத்தை போல காந்தி தான் மையக்கதாபாத்திரம், ஆனாலும் வெவ்வேறு சுவாரசியமான அசாதாரணமான மனிதர்கள் அதில் இருக்கிறார்கள்.
கே- வணக்கம் சார் நான் உங்கள் ‘கார்னர் இன் த ஃபாரின் பீல்ட்’ புத்தகம் வாசித்திருக்கிறேன். அதில் நீங்கள் மும்முனை நான்கு முனை 5 முனை கிரிக்கெட் போட்டிகளை பற்றி விவரிக்கிறீர்கள். ஒருவகையில் ஐபிஎல்லுக்கான முன்மாதிரி எனக் கொள்ளலாம். உங்களுடைய ஒரு பத்தியில், காந்தி எப்படி இந்த ஐந்து முனை போட்டியை வெறுத்தார் என எழுதி இருக்கிறீர்கள். ஏனெனில் அது மத ரீதியான பிளவுத்தன்மை ஏற்படுத்தி, ஆங்கிலேயர்கள் பிரித்தாளுவதற்கு ஏது செய்கிறது எனக்கருதினார். என் கேள்வி என்னவென்றால், இப்பொழுது காந்தி உயிருடன் இருந்தார் எனில், ஐபிஎல் குறித்து காந்தி என்ன நினைத்திருப்பார்? ஐபிஎல் என்பது இந்திய முதலாளித்துவ கிரிக்கெட் அமைப்பின் லாபம் குவிக்கும் போட்டி என்று கருதி இருப்பாரா? அல்லது இந்திய கிரிக்கெட்டை ஜனநாயகப் படுத்தியிருக்கிறது என கருதுவாரா? உதாரணமாக டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் நடைபெறுவது. பொருளாதார ரீதியாக வளமுள்ளவர்களே தங்களுடைய வாழ்நாளில் ஐந்து நாட்களை கொடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். ஆனால் 20 20 கிரிக்கெட் அதனுடைய முதலாளித்துவ கோர முகத்தை மீறி கிரிக்கெட்டை ஜனநாயகப் படுத்தி உள்ளது. வேறு வேலை செய்பவர்கள் கூட ஒரு நான்கு மணி நேரம் செலவழித்து கிரிக்கெட் விளையாடலாம் என்பதால் காந்தி இதை பாராட்டி இருக்க கூடுமா?
ப- மிக நல்ல கேள்வி. காந்தியின் சார்பாக என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் என் தரப்பாக ஒரு பதிலை சொல்ல முடியும். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட பொழுது நான் ஒரு பத்தி எழுதினேன், அதில் இப்படி குறிப்பிட்டு இருந்தேன் டெஸ்ட் போட்டி என்பது சிங்கிள் மால்ட் விஸ்கியை போன்றது, நீங்கள் ஒவ்வொரு மிடறையும் ரசித்திருப்பீர்கள், எல்லாவற்றையும் நினைவில் கொண்டிருப்பீர்கள். நல்ல கேட்ச் நல்ல விக்கெட் நல்ல பேட்டிங் என எல்லாவற்றையும். 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் போல. உங்களுக்கு ஓரளவு நினைவிருக்கும். ஏதோ ஒரு பேட்டிங் , ஒரு கேட்ச் இப்படி. 20 20 என்பது சாராயம் போல. குடி அடிமை ஒருவனுக்கு சிங்கிள் மால்ட் அல்லது இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் ஆகியவை கிடைக்காத பொழுது, வேறு வழியின்றி சாராயத்திற்கு செல்வது போல் ஐபிஎல்லுக்கு செல்வான். கிரிக்கெட்டை நேசிப்பவனாக அதனுடைய அழகியல் கோணத்திலிருந்து நான் இதை கூறுகிறேன். வேறொரு உவமையை பயன்படுத்துவதாக இருந்தால், நான் இந்துஸ்தானி சங்கீதத்தை விரும்பி கேட்பவன், கர்நாடக சங்கீதம் அவ்வளவாக கேட்பதில்லை எனினும் உங்களுக்கு இது புரியும், கர்நாடக சங்கீதம் பற்றிய எனது புரிதல் தவறு என்றால் என்னை திருத்தவும், ஒரு டெஸ்ட் போட்டி என்பது ராகம் தானம் பல்லவி போல, ஒரு முழு ராகத்தின் விஸ்தீரனம். ஹிந்துஸ்தானி இசையில் கயால் என சொல்வோமே அது போல். ஒரு நாள் போட்டி என்பது தும்ப்ரி அல்லது ஜாவேரி போல. 20 20 என்பது சினிமா பாட்டு போல. அது அதற்கு உரிய இடம் உண்டு. இதையெல்லாம் சொன்ன பிறகும், ஒன்று சொல்ல வேண்டும், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் முகுல் கேசவன் எனும் முக்கியமான எழுத்தாளர், அரசியல் மற்றும் கிரிக்கெட் பற்றி எழுதி வருபவர், உங்களில் சிலர் அவரை படித்திருக்க கூடும், அவர் தெற்காசிய அளவில் கிரிக்கேட் லீக் போட்டி இருக்க வேண்டும் என எழுதினார். லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனாக வீரேந்திர சேவாக், ஜாப்னா டைகர்ஸ் கேப்டனாக வசிம் அக்ரம், தாக்கா அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர், இப்படி ஒன்று நடந்திருந்தால் அது பல்வேறு பிராந்தியங்களை ஒன்றிணைத்திருக்க கூடும். காந்தி இதை ஏற்றுக் கொண்டிருக்க கூடும். தெற்காசிய அளவில் நடந்தால் இந்திய அணியினர் பாகிஸ்தான் அணியில் விளையாடக் கூடும். பாகிஸ்தான் அணியினர் வங்காளதேச அணியில் விளையாடக்கூடும். ஆனால் ஐபிஎல் என்பது இந்தியாவிற்குள் மட்டும் தான். பிசிசிஐயினுடைய அதிகாரத்தை குவிக்க ஏதுவாக இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடலாம் ஆனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு போட்டிகளில் விளையாட கூடாது. இது மிகவும் தவறானது. ஐபிஎல்லின் இந்த வடிவை காந்தி நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். முகுல் கேசவன் எதை முன் வைத்தாரோ அதை அவர் ஏற்றிருக்கக் கூடும். மொத்த தெற்காசிய அளவிலான ஒரு போட்டி, அதில் பல்வேறு தேசத்தவர்கள் இணைந்து விளையாடி இருந்தால் அங்கீகரித்திருப்பார்.
கே- எனக்கு இன்னொரு கேள்வி தோன்றியது இந்த கிரிக்கெட் நூலை வாசித்த பொழுது ஆங்கிலேயர்கள் கிரிக்கெட்டை தொடர்ந்து ஆண்மை மிக்க விளையாட்டு என விவரிப்பதை பார்க்க முடிந்தது. இந்த விவரனை எனக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கால்பந்து ரக்பி போன்றவற்றைத்தானே நாம் அப்படி தொடர்புபடுத்திக் கொள்வோம்.
ப- நீங்கள் சொல்வது புரிகிறது. ஒழுங்கு நேர்மை போன்ற இயல்புகள் வழியாக ஆண்மை தன்மை என்று இது சுட்டப்படுகிறது.
கே- எனது பெயர் மோகன். எனது கேள்வி, ‘இந்தியா- காந்திக்கு பிறகு’ நூலை பற்றியது. அதன் இரண்டாவது பகுதியில்,, நேருவின் மரணம், அவசர நிலை, என ஏதாவது ஒரு எதிர்பாராத விஷயம் நிகழ்ந்தால், வெளிநாட்டு ஊடகங்கள் ஜனநாயகம் மரணித்து விடும், இந்தியா துண்டாகிவிடும் என கணிக்கிறது. ஆனால் இந்த கணிப்பு ஒவ்வொரு முறையும் பொய்த்து தானே போயிருக்கிறது. ஏன் இந்தியாவின் உண்மை நிலையை இத்தனை துல்லியமற்ற முறையில் கணிக்கிறார்கள்?
ப- நான் வெளிநாட்டு ஊடகங்களின் கணிப்பை பரிவோடு புரிந்து கொள்கிறேன். காந்திக்கு பிறகான இந்தியா நூலில் நான் முன்வைத்தது போல், நமது தேசம் என்பது அரசியல் வரலாற்றிலேயே மிகவும் கவனக் குறைவுடன் செய்யப்பட்ட ஒரு பரிசோதனை முயற்சியாகும். இத்தனை வேறுபாடுகள் உடைய இத்தனை பரந்த நிலப்பரப்பு இதற்கு முன் ஒரு தேசமாக உருவானதே இல்லை. பெரும் அளவிலான கல்வியறிவற்றவர்கள் வாழும் தேசம் ஜனநாயகமாக அதற்கு முன் திகழ்ந்தது இல்லை. சோவியத் யூனியன் உடைந்தது. ஆஸ்திரிய ஹங்கேரிய பேரரசுகள் உடைந்தன. நிறைய தேசிய இனங்கள் உள்ள பெரிய நாடுகள் உடைய கூடும். ஆகவே நேரு தான் அதை இறுக பிடித்து இருக்கிறார் என எண்ணினார்கள். ஆகவே அடித்தளம் குறித்து இந்த சந்தேகங்கள் இருக்கவே செய்தன. இதன் அடித்தளம் எத்தனை வலுவானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பாலான தேசங்கள் ஒற்றை மொழி அல்லது ஒற்றை மதத்தின் அடிப்படையில் உருவானவை என்பதால் அப்படி கருதினார்கள். சில இந்தியர்கள் இப்பொழுது இந்தியா ஒற்றை மொழியில் , ஒற்றை மதத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுடைய ஐயம் எங்கிருந்து வந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
கே- திரு குகா அவர்களுக்கு, நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவில் ஜனநாயகத்தில் ஆளுமை வழிபாடு குறித்து உரையாற்றியதை கேட்டேன். ஒரு ஜனநாயகத்தில் தனி மனிதனைச் சுற்றி எப்படி ஆளுமை வழிபாடு நிகழ்கிறது என்பதைக் குறித்து நீங்கள் பேசினீர்கள், தனி மனிதனின் இயல்புகள் எப்படி அவரைச் சுற்றி ஒரு வழிபாட்டை உருவாக்குகிறது என்றும் கூறினீர்கள். இதன் தாக்கம் எப்படி பத்திரிக்கை துறை, நீதித்துறை, ஆட்சிப் பணி உட்பட வெவ்வேறு அமைப்புகளில் உணரப்படுகிறது என்பதையும் சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிடாமல் விட்ட ஒரு பிரிவு என்பது அறிவு ஜீவிகள். ஆளுமை வழிபாட்டை முன்னிறுத்துவதில் அறிவு ஜீவிகளுக்கு ஒரு பங்கு உள்ளது என்று நான் உணர்கிறேன். நாம் இப்பொழுது அறிவு ஜீவிகளின் இடத்தை காணும் கோணமே மாறி இருக்கிறது. ஆளுமை வழிபாடு என்பதே அறிவு ஜீவிகளில் ஒரு பிரிவினரால்தான் முன்னெடுக்கப்படுகிறது. மறுபக்கம் ஆளுமை வழிபாடு என்பது அறிவு ஜீவிகளின் மீது கவிந்து அதன் உரையாடல் முறையை மாற்றி அமைக்கிறது. ஆகவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு அறிவு ஜீவியின் பங்களிப்பு என்பது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
ப- இது மிக நல்ல கேள்வி. முதலில் உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு பதில் அளிக்கிறேன். அ
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 4 followers

