Suneel Krishnan's Blog, page 2

March 19, 2025

அத்தைக்கு மரணமில்லை - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு




அத்தைக்கு மரணமில்லை ஒரு இந்தியத்தன்மை கொண்ட வங்காள குறு நாவல். மறுபிறப்பை இயல்பாக சொல்லிச்செல்கிறது என்பதையே இந்தியத்தன்மை என்று குறிப்பிட காரணம். மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வை பேசும் குறுநாவல். ராமன் வனவாசம் போன வழி படித்ததும் சீர்ஷேந்து மனதிற்கு அணுக்கமான எழுத்தாளராக தோன்றினார். அவருடைய சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். அலட்டலோ அலங்காரமோ போலித்தனமோ இல்லாத மொழி. 


ரஷோமாயி 12 வயதில் விதவையாகி போனவர். குடும்பத்தில் எல்லோருக்கும்   அத்தையம்மா. சீரழிந்து கொண்டிருக்கும் ஜமீனை கட்டி ஆள்பவள். எல்லோரிடமும் சிடுசிடுப்பவள். வீட்டின் இரண்டாம் தளத்தை விட்டு வெளியே வராதவள். இளம் மருமகளாக அங்கு வந்து சேரும் ஏழை குடும்ப பெண் லதா. மூழ்கும் கப்பலை மீட்கும் மாலுமி. லதாவிற்கு உறுதுணையாக அவளது மாமியார் இருக்கிறார். தொடக்கத்தில் எதிரியாக பாவிக்கும் ஓரகத்தியும் கூட அவளை இயல்பாக ஏற்றுக் கொள்கிறாள்.  குடும்பத்தின் ஒரே வாரிசு, லதாவின் மகள் வசந்தா. ஒரு அறையில் ஒடுங்கிக்கொண்டு வாழ்வை இழந்த அத்தையம்மா, விடுதலையை ஓரளவாவது நுகரும் இன்னொரு தலைமுறையின் வசந்தாவாக மறுபிறப்பு எடுக்கிறாள். அத்தையம்மாவிற்கு எல்லாமுமாக இருந்த நகைப்பெட்டியை பேயாக ஆன பிறகும் பாதுகாக்கிறாள். வசந்தாவிற்கு அந்த நகைகள் ஒரு பொருட்டே அல்ல எனும்போது குறுநாவல் முழுமை அடைகிறது. இந்திய பெண்களின் பொருளியல் தன்னிறைவை நோக்கிய பயணம் சமூக சுதந்திரத்துடன் எப்படி பிணைந்திருக்கிறது என்பதை எளிமையாக உணர்த்துகிறது இந்த குறுநாவல். 


எனக்கு இந்த நாவலின் நாயகி என்றால் அது லதா தான். ஒடுக்கப்பட்ட அத்தையம்மாவின் தலைமுறைக்கும் தன் வாழ்வின் செல்திசையை தீர்மானிக்கும் வசந்தாவிற்கும் இடையே இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியது லதா. லதாவும் லதாவின் தலைமுறை பெண்களும். நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். தான் மட்டும் வளமாக வாழ்ந்துவிட முடியாது எனும் புரிதல் உள்ளவள். சூழ இருப்பவர்கள் துயரில் தவிக்கும்போது தன்னால் மட்டும் மார்கிஸ்ச்சியுடன் வாழ முடியாது என்று நம்புபவள்.    பொறுப்புணர்வுக்கும் சுதந்திரத்திற்கும் இடையேயான உறவை காட்டுபவள். ஆவியாகி அத்தையம்மா அவளை சுதந்திரத்தின் கனியை ருசிக்க சொல்லி தூண்டுகிறாள். ஊசலாட்டங்களை மனதிடத்துடன் கடக்கிறாள். வீட்டிலிருந்து வெளியே காலடி வைத்து குடும்பத்தை நிமிர்த்துபவள். வீட்டைவிட்டு வெளியே வேலைக்கு வந்த நடுத்தர வர்க்கத்து முதல் தலைமுறை பெண்களை இந்த சமூகம் ஒழுக்கத்தை காட்டி சிறுமை செய்தது. ஒழுக்கமல்ல அங்கே சிக்கல். மாறாக மாறிவரும் அதிகார சமநிலைக்கு எதிரான முரண்டுதான் அது.  லதாவினுடைய உழைப்பின் கனியைத்தான் வசந்தா இயல்பாக ருசிக்கிறாள். 


அத்தையம்மாவிற்கு வாழ்வு வெறும் கசப்பு. அவள் இருக்கும்போதும் இறந்த பிறகும் எல்லோரையும் கரித்து கொட்டிக்கொண்டே இருக்கிறாள். சாவு, சாவு, சாவு என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள். வாழ்வின் மீது அவளுக்கு தீராத கோபம்.  வாழ்பவர்கள் மீதும், வாழ்க்கையை துய்ப்பர்வகள் மீதும் அவளுக்கு ஓயாத எரிச்சல். சமைத்து சாப்பிடுகிறார்க என்றால் அதை எப்படியாவது குலைத்துவிடுவாள். வசந்தாவாக மறுபிறப்பெடுக்கும் அத்தையம்மா அறிமுகம் ஆவதே கல்லூரி சுற்றுலாவில் பெரிய நிலவை காணும் தருணத்தில்தான். அத்தையம்மாவை முடக்கி வைத்த இரண்டாம் மாடி அறைகள் அவளுக்கு விசாலமாக இருக்கிறது. வசந்தாவிற்கென ஒரு காதல் காத்திருக்கிறது.  


சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. ஸ்ரீனிவாசனுக்கு இடமுண்டு. மொழியாக்கமும் சரி, மொழியாக்க தேர்வுகளும் சரி தொடர்ந்து சிறப்பாக உள்ளன.        





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2025 05:54

February 26, 2025

ராமன் வனவாசம் போன வழி - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு

 


வோல்டேரின் மைக்ரோமெகாஸ் கதையில் மைக்ரோமேகாசும் அவனது நண்பனும் வேற்று கிரக வாசிகள். மைக்ரோமெகாசின் கணுக்காலை நனைக்கும் ஆழம் தான்  பசிபிக் பெருங்கடல். திமிங்கிலங்கள் ஏதோ சிறு புழுக்கள் போல நீரில் நெளியும். மனிதர்கள் அவனோடு உரையாடுவார்கள். உலகின் அற்பத்தனங்களை, மனிதர்களின் மலினங்களை சித்தரிக்க அவனை காட்டிலும் பன்மடங்கு ஆற்றல்மிக்க கற்பனையும் லட்சியமும் உரைகல்லாக கொண்டு வந்து ஒப்பிடுகிறோம். கால- வெளி தொலைவு எல்லாவற்றையும் அற்பமாக காட்டுகிறது. 


சீர்ஷேந்து முகோபாத்யாய் ராமன் வனவாசம் சென்ற தடத்தை பின்தொடர்ந்து பயணிக்க முடிவெடுக்கிறார். புராண காலத்து ராமனை அளவுகோலாக கொண்டு நிகழ்கால இந்தியாவை மதிப்பிடுகிறார். நவீன அறிவுஜீவிக்கு புண்ணிய தலங்கள் ஒரே சமயத்தில் மதிப்பிற்குரியதாகவும் ஒவ்வாமை அளிப்பதாகவும் இருக்கிறது. காந்தி வாரணாசிக்கு சென்ற போது அதன் சீர்கேட்டால் சீண்டப்பட்டார். சீர்ஷேந்து 1981 ல் அயோத்தியும் பிரயாக்கும் வேண்டும். நான் 2010 ல் காசிக்கு சென்றிருக்கிறேன். நம் புனித தலங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்றொரு கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. நூலில் அயோத்தியை விக்கிரமாதித்தன் கண்டடைந்த கதையை சுருக்கமாக சொல்கிறார். கருப்பு குதிரையில் ஆற்றில் இறங்கும் ஒருவன் மறுகரையில் ஏறும்போது வெள்ளை குதிரையாக ஆவதை அரசன் நோக்குகிறான். அவன் பிரயாக்ராஜன். பிரயாகையின் கடவுள். பாவங்களை கழுவ வரும் மக்களின் பாவங்களை ஏற்று அவன் உடல் கறுத்துவிடும். அவற்றை நீக்க சரயுவில் முங்கி எழுவதாக சொல்கிறான். காசியையும் கங்கையையும் காண தூய்மை அழுக்கு என்பதையெல்லாம் கடந்த வேறொரு கண் நமக்கு வேண்டும். ’அது அப்படித்தான் இருக்கும். நமக்கு தெரிந்த  ஒரே பதில். ஒரே சமாதானம். ராமன் வனவாசம் போன பாதையில் போகப்போக நான் ராமனின் மாபெரும் தோல்வி‌யையும் ராட்சதர்களின் வெற்றியையும்தான் கண்டேன்’என்கிறார். கணேஷ் தேவியின் மகாபாரத நூலில் சாந்தமே அதன் முக்கிய ரசம் என  பொருத்திக்கொள்கிறேன். நாம் எல்லாவற்றையும் ஏற்கவும் அனுசரிக்கவும் பழகியுள்ளோம். சித்திரகூடத்தில் குரங்குகளும் பிச்சைகாரர்களும் தொல்லை செய்கிறார்கள். ஆனால்  குரங்குகள் சேட்டை செய்வதால் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் விஷயம் அப்படியில்லை,  ‘முதலாவது அவர்கள் மனிதர்கள். இரண்டாவது அவர்கள் நடத்தையில் பார்த்த மகிழ எதுவுமில்லை’ என்கிறார். ராமனிடம் உன் தேசம் என்னவாக மாறியிருக்கிறது பார் என முறையிடுகிறார். ‘சாவிலும் துக்கத்திலும் வேதனையிலும் கஷ்டத்திலும் பஞ்சத்திலும் பெருவெள்ளத்திலும் இவர்கள் பக்கம் இருப்பதெல்லாம் ராமரோ அல்லது திருப்பதி வேங்கடாசலபதியோ அல்லது காளியோ அல்லது துர்க்கையோதான். பகுத்தறிவு இவர்களுக்கு கட்டுப்படியாகாது. அது இவர்களுக்கு பொறுப்பற்ற ஆடம்பரம்’ என்பது அவரது சொற்கள். 

   

பாபரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பான அயோத்தியையும், எண்பதுகளின் பிரயாகையும், சித்திரகூடத்தையும் சித்தரிக்கிறார். வால்மீகி     தனது கவிதையில் சிருஷ்டித்த மரங்கள் அடர்த்த செறிவான காடில்லை, வெறும் மொட்டை பாறைகள் சூழ இருக்கும் அரை பாலை தான்  இன்று எஞ்சியுள்ளது.  துளசிதாசரின் ராமாயணம், இந்தியின் நடைமுறை பயன் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வால்மீகி சம்பல் கொள்ளைக்காரன் என்பதால் அவனுக்கு பாதை வழி எல்லாம் நன்றாக தெரியும் என்கிறார். பெரும்பாலான கடவுள் மக்களிடமிருந்து தோன்றியவர்கள். ஆனால்  ராமன் புத்தர் இருவரும் இளவரசர்கள். ஆகவே அவர்கள் மக்களை அறிய வேண்டும் என்பதற்காக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது என்பது முக்கியமான அவதானிப்பு. ‘உண்மையில் நாம் எல்லோருமே அன்னியர்கள்தான். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த ஞான திருஷ்டிக் கைவரப் பெற்றதால்தான் அறவுணர்வு இப்போது தலை தூக்குவதே இல்லை’ என்று எழுதுகிறார். திரளில் இருந்து தன்னை அந்நியமாக உணர்கிறார். இந்த அந்நியத்தன்மை கரையாமல், திரளோடு திரளாக ஆகாமல் இந்தியாவின் ஆன்மாவை உணர முடியாது.  தன்னிலும் தாழ்வான நிலையில் இருக்கும் ரிக்ஷாக்காரரிடமும் குடிசையில்  வழங்குபவரிடமும் அற சீற்றத்துடன் நடந்துகொள்கிறார். காசு  கூட கேட்கும் ரிக்ஷா காரரிடம் மனித ரத்தம் பருகுபவர்கள் என்று சொல்லி அவரை அழவைக்கிறார். சீர்ஷேந்து அவரை தேற்ற வேண்டியிருக்கிறது. நமது அற சீற்றம் கூட மிகுந்த கவனத்துடன் வெளிப்படுகிறது. ராமராஜ்ஜியம் எனும் கனவுக்கும் நவீன இந்தியா எனும்  நிதர்சனத்திற்கும் இடையே அல்லலுறும் ஒரு ஆன்மாதான் சீர்ஷேந்து. ‘உத்தரபிரதேசத்து மக்கள் சாகவில்லை அவ்வளவுதான்’ என அவர்களின் நிலை கண்டு கொந்தளிக்கிறார். ‘மனித குலத்தின் எனது நேசம் அதிகரிக்கும் தோறும் தனித்த மனிதன் மீதான என் நேசம் குறைந்தபடி இருக்கிறது’ எனும் தாஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றை நினைத்து கொண்டேன். கூடவே “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது” எனும் காந்தியின் சொற்களும். 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2025 05:07

February 21, 2025

இத்தா - கீரனூர் ஜாகிர்ராஜா- வாசிப்பு குறிப்பு

 









நடைமுறை தேவை கருதி உருவாக்கப்பட்ட விதிமுறை சடங்காக ஆகும்போது காலத்தை கடந்து விடுகிறது. அது காலப்பொருத்தமின்மையால் தனிமனித வாழ்வில் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. சடங்குகள் மனித வாழ்வுக்கு பொருளளிப்பவை. ஆனால் காலந்தோறும் அவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும். பொது நன்மைக்கு ஊறுவிளைவிக்காத தனியுரிமைகளை மனிதகுலம் படிப்படியாக அங்கீகரித்து ஏற்றுவருவதே இயல்பு. 


கீரனூர் ஜாகிர் ராஜா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். சமீபத்தில் அவரது ‘இத்தா’ நாவலை  வாசித்து முடித்தேன். ‘இத்தா’ என்பது கணவர் இறந்துவிட்டாலோ பிரிந்துவிட்டாலோ அதற்கு பின் முஸ்லீம் பெண்கள் ஈடுபாடும் சடங்கு . தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும். மறுமணம் புரிந்துகொள்வதற்கு முன் கர்ப்பம் தரித்திருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கான ஒரு ஏற்பாடு. ஜாகிரின் நாவல் கோவை கலவரத்திற்கு பிந்தைய காலகட்டத்தை பேசுகிறது. திருமண நாளன்று ஆதரவற்ற பெண்ணான மரியத்தின் கணவன் நியாஸ் காவலர்களால் கைது செய்யப்படுகிறான். முஸ்லீம் என்பதாலேயே விசாரணையின்றி பலகாலம் அடைத்து வைக்கப்பட்டதை பற்றி சொல்லும் அதேவேளையில் உள்ளுக்குள்ளே புழங்கிய தீவிர போக்கையும் லேசாக கோடிட்டு காட்டுகிறது. நியாஸ் நிலை என்ன என்பது தெரியவில்லை. மரியம் நியாசின் பெற்றோர்களோடு சேர்ந்து நியாசின் வருகைக்காக காத்திருக்கிறாள். ஒரு அரசியல் சுழலுக்குள் சிக்கிய தனி மனுஷியின் கதை தான் இத்தா. ஜாகிரின் பெண் பாத்திரங்கள் பொதுவாக எப்போதுமே  மிகவும் வலுவானவை. மரியமும் அப்படியானவள். சொந்த மகனிடமிருந்து மாமனார் தலாக் பெற்று தருகிறார். ஆனாலும் ஜமாஅத் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மார்க்க நூல்களை துணைக்கு கொண்டு சமூக சேவகராக பஷீரையும் மாமனாரையும் எதிர்கொள்கிறாள். “எழுத்தாளரா  இருந்தாலும் சமூக சேவகராகவே  இருந்தாலும் ஆம்பளைங்க தந்திரசாலிங்க, சந்தர்ப்பவாதிங்க” என்று தான் மரியாதை வைத்திருக்கும் மாஷேவை விமர்சிக்கிறாள்.சிறுமியாக மரியம் ரஸுலுல்லாவை கனவில் சந்திக்கும் பகுதி முக்கியமானது. அவளுக்கு அவரிடம் சொல்வதற்கு ஏகப்பட்ட புகார்கள் இருந்தன. பெரியவளான பின் அவளால் கனவில்  கூட நெருங்க முடியவில்லை.  மரியம்மின் மாமியாரான ஆமினா பீவி மருமகளை விட முடியாமல் தவிக்கிறாள். மகன் மீண்டு விடுவான் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். மரியம்மின் நிலைக்காக மனமிரங்கவும் செய்கிறாள். இரண்டு மன்சூர்கள், இரண்டு நியாஸ்கள், இரண்டு காதர்கள் உண்டு. திரைக்கதையாக எழுதப்பட்டு நாவலாக மாற்றமடைந்து படைப்பு என்று ஜாகிர் குறிப்பிடுகிறார். அதற்கே உரிய சில எல்லைகளும் குழப்பங்களும் உண்டு. 1998 க்கு பிறகு நான்கு வருடங்களில் மரியம் இத்தா இருக்கிறாளா எட்டு  வருடங்களுக்கு பிறகு இருக்கிறாளா என்றொரு குழப்பம் ஏற்படுகிறது. 


ஜாகிர் எப்போதும் தனது கதைகளின் ஊடாக அமைப்புகளின் அதிகாரத்தை தனி மனிதரின் கோணத்திலிருந்து கேள்விக்குட்படுத்துபவர். ‘இத்தாவும்’ இதையே செய்கிறது. தமிழ் இஸ்லாம் எனும் அடையாளத்தை அவரது கதைகள் எப்போதும் முன்வைக்கும். இந்நாவலில் அத்தகைய உரையாடல்கள் உண்டு. மரியம்மின் தெங்குவிளை பகுதி பால்ய காலத்தை உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2025 06:26

February 3, 2025

எல்லாம் செயல் கூடும்

Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran  சிபியின் நடைபயண நாட்குறிப்புகளை வாசித்தபோது இதுவரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை சந்திக்காதது  பெரும் பிழை எனும் உணர்வு வலுபட்டது. இன்ன காரணம் என்றில்லை. சுணக்கம், அல்லது முனைப்பின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிடல் ஏதுமின்றி பிப்ரவரி 2 ஆம் தேதி அவரை நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டேன். குக்கூ சிவராஜிடம் கிருஷ்ணம்மாள் அங்கு இருப்பார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஞாயிறு மதியம் புறப்பட்டோம். மனைவி மக்களுடன் சென்றேன். உடன் எழுத்தாளர்கள் சித்ரனும் பிரபாகரனும் வந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த நூறு வயது பாட்டியை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை கண்ட விழிகளை அவர்களும் காண வேண்டும். காந்தியை கண்ட விழிகள் இந்த தளிர்களையும் காண வேண்டும். எத்தனை பெரிய காலமாற்றத்தில் சாட்சியாக அவர் நம்முன் வாழ்கிறார். இங்க தான் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் இரண்டு வாரம் தங்கினார் என்றொரு அறையை கைகாட்டினார். காமராஜர் இங்கயே தான் இருப்பார். எங்க வீட்டுக்காரர் இருந்தா வெளிலயே இருக்கிறதை எல்லாம் ஊதி முடிச்சுட்டு உள்ளே வருவார் என்று சொன்னார். வயதுக்குரிய உடல் மாற்றங்கள். மதியம் குட்டி தூக்கத்திற்கு பின் எங்களை காண வந்தார். 




காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள ஊழியரகத்தில் தான் அவரை சந்தித்த்தோம். க்ரிஷ்ணாம்மாளின் சகோதரி மகனான இளங்கோ எங்களுக்கு உதவினார். பிள்ளைகள் வெளியே படிப்பதாகவும். அவர் பத்தாண்டுகளாக இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். கென்யா நாட்டை சேர்ந்த இருவர் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். சர்வோதய தினத்திற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நடன வகுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. சபர்மதி அவர்களுடன் சென்று விட்டாள். மலைகள் சூழ அழகிய இடம். உண்டு முடித்து ஓய்வெடுக்கும் நேரம். சற்று நேரம் கூடத்தில் அமர்ந்திருந்தோம். மெல்ல எங்களை நோக்கி நடந்து வந்தார். வயதிற்குரிய நினைவு தடுமாற்றம், குரல் தடுமாற்றத்தை கழித்துவிட்டால் திடமாக உள்ளார். கத்தி பேச வேண்டியிருக்கவில்லை. தொலைவில் நடந்து செல்லும் பெண்களை சரியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பார்வை நன்றாகவே இருந்தது. கூடத்தில் ஜெகந்நாதனின் படம் ஒரு பக்கமும் டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் படம் இன்னொரு பக்கமும் மாட்டப்பட்டு இருந்தது. இன்னும் நிறைய படங்கள் மாட்டப்படுவதற்காக அங்கு இருந்தன. “இந்த இடம் ஊழியரகம்… வேலை செய்யிறவங்க வந்து தங்குறதுக்குன்னு உள்ள இடம். போலீஸ் தேடிக்கிட்டு இருந்த இங்க வந்துருவாங்க” என்று சிரித்தார்.    கிளம்புவதற்கு முன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்  வாழ்க்கை  வரலாறு நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலை வாசித்திருந்தேன். பிரிட்டிஷ் காவலர்கள், சுதந்திர இந்தியாவின் காவலர்கள் என எல்லோரும் அவரை விரட்டி இருக்கிறார்கள். பலமுறை பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அடிப்படை மனிதநேயம் இன்றி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கொள்கைக்காக சிறை என்பதை பெருமையாக எண்ணிய தலைமுறையின் இறுதி கன்னி. பண்ணையார்கள், கம்யூனிஸ்டுகள், காவலர்கள் என எல்லோருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டுள்ளார்கள். எதிர்ப்பு என்றால் வெறும் கருத்து பூசல் இல்லை. உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம். வினோபா தமிழகம் வருவதற்கு முன் பூதான பயணம் குறித்து ஏற்பாடுகளை செய்வதற்கு பயணிக்கும் போது ஒரு கிராமத்தில் அந்த ஊர் நிலக்கிழார் நன்கு உபசரித்து கைக்குழந்தையுடன் வரும் கிருஷ்ணம்மாளை தங்க வைக்கிறார். அன்றைய தினக்கூலி கேட்டு வரும் வேலையாட்களுக்கு விளக்கு வைத்துவிட்டதால் பணம் கொடுத்தால் லட்சுமி போய்விடும் எனும் காரணத்தை கூறி பண்ணையார் கூலி வழங்க மறுக்கிறார். விருந்தாளியாக சென்ற இடத்தில நமக்கேன் பொல்லாப்பு என ஒதுங்கி நிற்காமல் பண்ணையாரை கண்டிக்கிறார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்களை கண்டிப்பீர்களா என்று சொல்லி பெட்டி படுக்கைகளை தூக்கி தெருவில் வீசுகிறார்கள். இரவெல்லாம் கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் படுத்துறங்கினார். நீதிக்காக பிரச்சாரம் செய்வது சுலபம். நீதிமான்களாக காட்டிக்கொள்வது அதைவிட சுலபம். களத்தில் கண்முன் தெரியும் அநீதிக்கு ஆற அமர எதிர்வினை ஆற்றாமல் உடனடியாக ஆற்றுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். மடத்தின் விருந்தாளியாக தங்கியிருந்தபோது சீனாவை போல் மக்களாக வன்முறையில் இறங்கி பிடுங்கிக்கொள்வதற்கு முன் மடத்தின் நிலத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்போக மடத்தினர் கிருஷ்ணம்மாளை வெளியேற சொல்கிறார்கள். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்ததை பற்றி எங்களிடம் சொன்னார். வீட்டிற்கே சென்று நிலமற்ற ஏழை பெண்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். திருவாரூரில் அம்மனுக்கு அவல் பாயாசத்திற்கு என 250 ஏக்கர் எழுதி வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுக்க வேண்டும். அம்மன் அடுப்பில் பாயாசம் வைக்க மாட்டாள். அடுப்பெரிய வேலை பார்க்கும் பெண்களுக்கு அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். “அரசு எல்லாம் கொடுத்துருச்சு.. நான் இப்ப திருவாரூருக்கு போகணும், கொஞ்சம் வெய்யில் குறையட்டும்னு பாக்குறேன். ஒரு ரெண்டு நாளுல போயி எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருவேன்” என்றார். பழைய நினைவுகளை இப்போது சொல்கிறாரா, அல்லது உண்மையிலேயே செல்ல வேண்டும் என சொல்கிறாரா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. 

ஜெகந்நாதன் உழுபவர்களுக்கே நிலம் எனும்  நம்பியவர். அதுவே இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கும் என்று ஆழமாக நம்பினார். வினோபாவுடன் பூதானத்தில் நெருங்கி வேலை செய்தாலும் அவருடைய வழிமுறைகள் மீது விமர்சனம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் செய்யும்போது காங்கிரஸ் காரர்களே ஜெகந்நாதனை எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சரி, சொந்த அரசுக்கு எதிராகவே சத்தியாகிரகம் செய்வதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் தவறென்று இருந்தால் சத்தியாகிரகத்தை கைக்கொள்வேன் என்கிறார். வெவ்வேறு அமைப்புகளுடன் இயைந்து செயல்படுகிறார்கள், அமைப்புகளை தோற்றுவிக்கிறார்கள். அமைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவற்றுக்கு சில வரையறைகள் உள்ளன.  தாங்கள் அறம் என்று நம்புவதற்கு இடையூறாக தாங்கள் உருவாக்கிய/ பங்கெடுத்த அமைப்புகள் வந்தால் அவற்றை உதறி முன்னகரும் திண்மை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பில் சுருங்கிக்கொள்ள தோன்றும். அமைப்புகளை பாதுகாப்பதை கடமையென கொள்வார்கள். அமைப்புகளின் நோக்கமே முக்கியம். காந்தியின் வழிமுறையும் அதுதான். ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலில் குமரப்பா வினோபாவுடன் பிணக்கு கொள்ளும் இடம் அபாரமான சிறுகதைக்குரிய பகுதி. காந்தியும் அய்யன்காளியும் உரையாடும் மெல்லிய நூல் போன்ற ஒரு பகுதி. குமரப்பா வினோபாவின் உன்னத இலட்சியத்தை புரிந்து கொண்டார். ஆனால் வினோபா நடைமுறைவாதியாக இல்லை எனும் வருத்தம் அவருக்கு உண்டு. பூதானத்தில் தானமாக அளிக்கப்பட பெரும்பகுதி நிலம் தரிசு தான். வினோபாவை பொறுத்தவரை இந்த அளவிற்காவது இந்த மாற்றம் நடக்கிறதே, இப்போது தரிசை கொடுத்தாலும் நாளை நல்ல நிலத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறார். குமரப்பாவோ கையெழுத்து இட்டு சேகரியுங்கள், உடனடியாக  பகிர்ந்து கொடுங்கள், பாசன வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்கிறார். வினோபா அவை இப்போதைய தமது பணியல்ல என நம்புகிறார். விவசாய நிலத்தில் அறுவடைக்கு பிறகு தீ வைக்கப்படுவதை காட்டி குமரப்பாவிடம் சொல்கிறார்.  “அவர்கள் பழைய நிலத்திற்கு தீ வைக்கிறார்கள். நான் பழைய சமூகத்திற்கு தீ வைக்கிறேன். பழைய சமுதாயத்தின் நடைமுறைக்கு தீ வைக்கிறேன். அடுத்த தலைமுறை வரும் உழத்தொடங்கும். புதிய விதைகளை விதைக்கும். என் பணி தீ வைப்பது தான்.” குமரப்பாவிற்கு இந்த பதில் நிறைவளிக்கவில்லை.  நடைமுறையை கணக்கில் கொள்ளாத பதில் என்கிறார். விருந்துக்கு வாருங்கள் என அழைத்து இலையில் உப்பை மட்டும் பரிமாறுவது போல உள்ளது . இன்று முதலில் உப்பை சாப்பிடுங்கள், நாளைக்கு சாப்பாடு போடுவேன், அடுத்தநாள் சாம்பார் ஊற்றுவேன் என்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு என விமர்சிக்கிறார். தினமும் காலை (காலை என்று சொல்லலாமா என தெரியவில்லை) 2.30 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என்றார் கிருஷ்ணம்மாள். ஆதி சங்கரரின் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது அவர் வழக்கம். பஜ கோவிந்தம் என சொல்லும்போது அரிக்கேன் விளக்கை தூக்கிக்கொண்டு கிருஷ்ணம்மாள் முன்னே நடக்க தொடங்குவார். விடிவெள்ளியை பார்த்து நிற்கும் வினோபா சொல்கிறார். விடிவெள்ளி வந்துவிட்டது சூரியன் விரைவில் உதித்துவிடும் தானே. குமரப்பா கிளம்பும் செய்தி அறிந்து குடிலுக்கு செல்கிறார். அங்கே எல்லா பொருட்களும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. வினோபா அவற்றை ஒழுங்காக பெட்டியில் அடுக்கி தருகிறார். ஒரேயொரு விவசாயி கலப்பையுடன் சென்று கொண்டிருக்கிறான். வினோபாவும் குழுவும் நடக்கும்போது எதிர்திசையில் நடக்கும் விவசாயியின் திசையில் குமரப்பா நடக்கிறார். காந்தியம் என்பது வெறும் ஆன்மிகம் அல்ல. வறட்டு லட்சியவாதம் அல்ல. நடைமுறை பயனை எப்போதும் கணக்கில் கொள்வது. உடனடி விஷயங்களை காலாதீதமான விழுமியங்களை கொண்டு எதிர்கொள்ள முற்படுவது. வினோபா காந்தியை காட்டிலும் மேலான ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் அவரால் காந்தியாக ஆக முடியாது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருவகையில் காந்தியை சாராம்சமாக உள்வாங்கியவர்கள். காந்தி எதை செய்திருப்பாரோ அதையே இவர்களும் பல சமயங்களில்  செய்தார்கள்.   


நூலிலும் நேர்பேச்சிலும் வினோபாவை பற்றிய பல சுவாரசியமான சித்திரங்கள் வருகின்றன. வினோபா நாளுக்கு பதினெட்டு முறை தயிர்சாதமும் தேனும் உண்பார். ஒவ்வொரு முறையும் பகவத் கீதையின் முழு அத்தியாயத்தையும் பாராயணம் செய்துவிட்டு ஒரு கவளத்தை உண்பார். வினோபாவிற்கு உடலநிலை சரியில்லாமல் பீகாரில் இருந்தபோது இந்தியா முழுக்க தலையில் சோற்றையும் பருப்பையும் சுமந்தபடி சர்வோதய ஊழியர்கள் அவரை காண வருகிறார்கள். பிள்ளையை விட்டுவிட்டு வா என்றாலும் பூமி கையை இறுக பற்றிக்கொண்டதால் முதல் சில ஆண்டுகள் இவர்களுடனேயே திரிகிறார். மாணிக்கவாசகரின் அச்சோ பத்திலிருந்து முத்தி நெறி பாடலை வினோபா பாடுவாராம். அப்போது அவருக்கு ஓய்வெடுக்க வேண்டும் என பொருள் என்றார். பேசும்போதெல்லாம் குரலில் தெரிந்த நடுக்கம் பாடும்போது இல்லை. வள்ளலாரின் ‘எல்லாம் செயல் கூடும்’ பாடலை கொஞ்சமும் பிசிறின்றி பாடினார்.


 துறவியாக செல்ல இருந்தவரை பிடித்து கிருஷ்ணம்மாளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கதர் துண்டை தலையில் அணிவிப்பது தான் திருமணம். ஜெகந்நாதனும் கிறிஸ்து குல ஆசிரமத்தில் சிலர் தங்களது உடல் தேவைகளை முறையற்ற வழியில் தீர்த்துக் கொள்வதை பார்த்து சமூக வாழ்விற்கு நல்ல இல்வாழ்வு தேவை எனும் முடிவுக்கு வருகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை பற்றி சொல்லும்போதெல்லாம், அவர் என்றோ எங்க வீட்டுக்காரர் என்றோ தான் சொல்கிறார். திருமணமான தொடக்கத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு அவர் அலைந்தது பற்றிய  குறை இப்போதும் கூட இருப்பதாக பட்டது. கீழே சிமெண்டு தரையை காண்பித்து இது அவரே தன் கையால போட்டது இன்ன வரை இருக்குது என்றார். ஜெகந்நாதன் போன்ற கணக்கற்ற தொண்டர்கள் தன்னலமற்று உழைத்த நிலத்தில் தான் நாம் எல்லோரும் இன்று  நிற்கிறோம். ஜெகந்நாதன் மண் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். போட்டதை போட்டபடி விட்டுவிட்டு அடுத்தடுத்து பயணிக்க அதுவே எதுவாக இருக்கும். இந்தியா முழுக்க கால்நடையாக அலைந்து  திரிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் நடந்தே சென்றிருக்கிறார்கள்.



ராலே கெய்தான் பற்றி சொல்லி கொண்டிருந்தார். கெய்தான் அமெரிக்க மிஷனரி. இந்திய விடுதலை பற்றி பேசியதால் மிஷனரியில் இருந்து நீக்க பெறுகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நெருங்கிய சகாக்களில் ஒருவர். கெய்தான் எல்லாருக்கும் வேலைகளை பிரித்து கொடுப்பாராம். மதியம் வரிசையாக எல்லோர் கைகளையும் சோதிப்பாராம். உடல் உழைப்பிற்கான தடயம் தென்பட்டால் தான் சோறு. மீண்டும் மாலையும் இதே சோதனை நடக்கும். அப்போது உழைத்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு கொடுப்பார் என்றார்.   

‘சுதந்திரத்தின் நிறம்’ இறால் பண்ணைக்கு எதிரான போராட்டம் நிறைவு பெறாத காலத்தில் எழுதிய வாழ்க்கை சரிதை.  சரியாக சொல்வதானால் நீண்ட நேர்காணல்,  கூடவே லாரா கோப்பாவின் இந்தியா குறித்த அவதானிப்புகள் நிறைந்த நூல். கிருஷ்ணம்மாள் அவர்களின் மகன் டாக்டர் பூமியிடம் ஒரு முழுமையான வரலாறை  எழுத வேண்டியதன் அவசியத்தை கூறினேன். வாக்கரசியலுக்கு வெளியே இயங்கும் மகத்தான மனிதர்களை நாம் கண்டுகொள்வதில்லை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதியை உருவாக்க ஊர் ஊராக செல்கிறார்கள். கீழ்வெண்மணி கொடுமையின் போது முதல் மனிதர்களாக சென்று சேர்கிறார்கள். காந்தி, வினோபா, ஜெ.பி என மகத்தான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள்.  சமகால அரசியல் விவாதங்களில் அவர்கள் இடம்பெறாமல் போகலாம். வாக்கரசியலே உரையாடலை தீர்மானிக்கும் ஆற்றலாக உள்ளது. ஏதோ ஒரு கட்சியின் ஓட்டு வங்கிக்கு உதவாத ஆளுமைகளை இங்கே நினைவில் நிறுத்துவது கடினம்.  மக்கள் நினைவுகளில் இவர்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள். எத்தனை மகத்தான பெருவாழ்வு! சொற்களில் உழன்று கொண்டிருப்பவனாக மட்டும் இருப்பதற்காக  வெட்கினேன். தன் கையால் குழந்தைகளுக்கு ரொட்டி கொடுத்தார். பூமி அவர்களுடனும், சத்யா அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். 


கிளம்பும் முன் அவர்களிடம் ‘தமிழகம் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கு’ என்று சொல்லி  வணங்கினேன். ‘கடன் என்ன..கடமையை செய்யிறோம். அவ்வளவுதான்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். ஆதர்ச எழுத்தாளரான யுவன் சந்திரசேகருடன் அவருடைய நாவல்கள் பற்றி உரையாடும்போது துறவு அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது கதைகளில் தொடர்ந்து தொழிற்படுவதை பற்றி கேட்டேன். “வெளியேறி எங்க போறான்? குடும்பம்ங்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி போறவன் உலகமே தனது குடும்பங்கிற பெரிய வட்டத்திற்குள்ள போறான்னு பாக்கலாம் இல்லையா” என்றார். ஜெகந்நாதன் துறவியாக வேண்டும் என்று விழைந்து இல்லறத்தில் ஈடுபட்டவர். அவரை துறவி என்பதா இல்லறத்தார் என்பதா. எல்லா துறவிகளும் இல்லறத்தார் தான். புவி முழுமையும் அவர்களது குடும்பம். தன்னலமற்று நோற்கப்படும் யாவையும் நோன்பே. நான் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உள்ளூர அனத்தல் பெருகியது. இந்த அனத்தல் நல்லதற்கே. உள்ளூர ஒலிக்கும் சன்னமான ஆனால் திடமான குரல் செவியில் விழக்கூடும்.






 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2025 20:49

February 2, 2025

ஒரு காந்திய பயணம்

 

ஈரோடு- திருப்பூர்  அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை  ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள்.  யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது. 

                        


சிபி, அனுஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், லைலா பானு, அர்ச்சனா ஆகியோர் தான் மொத்த பயணத்தை நிறைவு செய்த அறுவர். கொடைக்கானல் சபரீஷ் இவர்களுடன் ஏறத்தாழ ஒரு வாரம் நடந்திருப்பார். சரண்யாவும் நான்கைந்து நாட்கள் நடந்தார் என்று எண்ணுகிறேன். சந்தானிகா, ஸ்ரீவித்யா, மோகன் ராஜ் ஆகிய மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்திருப்பார்கள். கண்டனூர் நாராயணனும் அவரது பனிரெண்டு  வயது மகன் ராம் சிதம்பரமும் இரண்டு நாட்கள் நடந்தார்கள். இந்த பயண நோக்கத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் 18 நாட்கள் நீண்ட நடை பயணம் என்பதே  நடந்தவர்களுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். உணவிற்கோ தங்குமிடத்திற்கோ பெரிய திட்டமிடல் இல்லாமல் மக்களை நம்பி நடந்தார்கள்.  சிறு இடர்களுக்கு  அப்பால் நான்கு பெண்கள் கொண்ட குழுவிற்கு எந்த தொந்தரவும் இல்லை.   


புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும்போது குடும்பத்துடன் சென்று சந்தித்து வந்தோம். நடந்து நடந்து கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தது. அனைவரும் பிளாஸ்திரிகள் ஒட்டியிருந்தார்கள். வாடை காற்றிலும் மழையிலும் நடந்ததால் லேசான உடல்நலமின்மை சிலருக்கு.  பிறகு வேதாரண்யத்தில் நிகழ்ந்த நிறைவு நாள் விழாவிலும் பங்கு கொண்டேன். மணப்பாறை- புதுக்கோட்டை வழியில் சித்தூர் எனும் கிராமத்தில் இருந்த கருப்பர் கோவில் வாசலில் மதிய ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது சென்று சேர்ந்தோம். அன்று மனைவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவு எடுத்து வருவதாக திட்டம். ஆனால் நாராயணன் கொண்டு வந்த காலையுணவை மதியம்தான் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முந்தைய நாள் தங்கிய இடத்தில அந்த அளவு கவனிப்பு. நடந்து நடந்து இளைப்பீர்கள் என்று பார்த்தால் ஒரு சுற்று பெருத்ததாக தெரிகிறதே என கேலி செய்து கொண்டிருந்தோம். அதுவரையிலான பயணத்தில் அவர்கள் ஆகப்பெரிய சவாலாக உணர்ந்த விஷயத்தை பற்றி பேசினோம். மலைகளுக்கு இடையே இருளில் நடக்கும்போது தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக திட்டமிட்ட ஊரை அடைவதற்கு முன்பே வேறொரு ஊரில் தங்குமிடம்  தேடும் நெருக்கடி ஏற்பட்டதை பற்றி அனுஸ்ரீ கூறினார். தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக சொன்னார். சாலைகளில் துரத்தி வந்த குடிகாரர்கள், அனுமதி அளிக்காத தந்தை, உடல் ஒத்துழைக்குமா எனும் ஐயம் என வேறு வேறு விஷயங்களை சொன்னார்கள். தெரு நாய்களை எப்படி சமாளித்தீர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் திடமாக நடந்து வந்தால் விட்டுவிடும் என்றார்கள். பயணத்தின் ஊடாக சில நுட்பங்களை கண்டடைந்துள்ளார்கள். ஆண்கள் இருக்கும் வீட்டில் கழிவறை உபயோகிக்க கோரினால் அனுமதிப்பார்கள் என்பது அப்படியான ஒரு கண்டுபிடிப்பு. மாவட்டங்கள் தோறும் தங்களது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பு சார்ந்தும் சில விஷயங்களை சொன்னார்கள். பொதுவாக மனிதர்களின் நல்லதன்மை மீது நன்னம்பிக்கை ஏற்பட்டதாகவே சொன்னார்கள். பிளாஸ்டிக் பேட் பால் கொண்டு சுதீருடன் சிபியும் கௌதமும் விளையாடினார்கள். நாராயணன் ஏற்பாட்டில் இட்டிலி, இடியாப்பம், கவுனி பாயாசம் ஆகியவற்றை மதிய உணவாக உண்டோம். எங்களுடன் வந்த சிங்கப்பூர் கணேஷ் பை நிறைய நார்த்தம் பழத்தை கொண்டு வந்தார். உண்டு முடிக்கும் சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து உமையாள் தேனப்பன் தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்களின் உடைகளை துவைத்து காயப்போட்டு கொண்டு வந்திருந்தார்கள். முதல்முறையாக அவர்களை சந்தித்தேன். தேனப்பன் கட்டுமான பொறியாளராக உள்ளார். உமையாள் ‘வேதாத்திரி மகரிஷி’ வாழ்க வளமுடன் யோக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடக்க தொடங்கிய போது சுதீரும் அவர்களுடன் நடந்து வருவதாக பிடிவாதம் பிடித்தான். கொஞ்ச தூரம் நடந்தபிறகு நிறைவுநாளில் அவர்களுடன் நடக்கலாம் என்று உறுதியளித்து அழைத்து கொண்டேன். 


நிறைவு நாள் அன்று மதியம் அம்மாவும் என்னுடன் வந்தார். சுதீர், நாராயணன், அவரது மகன் ராம் சிதம்பரம், சிங்கப்பூர் கணேஷ் என எல்லோரும் புறப்பட்டோம். ரோட்டரி சங்கம் ஆங்காங்கு மாணவர்களுக்கு வரவேற்பு அளித்து வந்தது. இறுதி நான்கு கிலோமீட்டர் இருக்கும் போது வந்து சேர்ந்தோம். சுதீர், ராம், நாராயணன், கணேஷ் என எல்லோரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அறப்போர் ஜெயராமன், கிருஷ்ணன், குக்கூ நண்பர்கள் என ஒரு திரள் நடந்து வந்தது. நானும் அம்மாவும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்தோம். அரசு சித்த மருத்துவர் ரமேஷ் குமார் வேதாரண்யத்தில் தான் பணிபுரிகிறார். எனது கல்லூரி இளவல். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சத்தியாகிரக நினைவிடத்தில் கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க கூட்டம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. நிறைய உரைகள். மாணவர்கள் தங்களது அனுபவங்களை செறிவாக பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அறப்போர் ஜெயராமன், பேராசிரியர் பழனித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாரிசுகளான இருவரை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அறக்கல்வி ஆசிரியர்களான அனீஸ் நாயரும், லோகமாதேவி அவர்களும் நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கையெழுத்திட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணன் மாணவர்கள் மீது விழுந்திருக்கும் பொறுப்பு சுமையை பற்றி பேசினார். காந்தியிடம் இந்த சிக்கல் உண்டு. காந்திக்கு எல்லாவற்றிலும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனும் சிக்கல் உண்டு. காலப்போக்கில் அது தான் மட்டும் என்பதாக இல்லாமல், மனைவி பிள்ளைகள், சீடர்கள் என தன்னை சார்ந்த எல்லோருமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது ஒரு நெருக்கடி. ஹரிலால் இந்த நெருக்கடியில் தாக்குபிடிக்காமல் உதிர்ந்தவன். உள்ளத்திண்மையை சோதிக்கும் சோதனைகள் இனிதான் வரக்கூடும். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 


கரியப்பட்டணம் எனும் ஊரில் விஜயலக்ஷ்மி எனும் வாசகர் வீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடை பயணம் முடித்த மாணவர்கள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. கௌதம் ஒரு மூலையில் தனியே அமர்ந்திருந்தான். சௌமியா ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள். சுமார் இருபது நாட்கள் ஒன்றாக செய்த பயணம். திரும்ப முடியாத காலத்துளிகளால் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்நினைவுகள் வாழ்நாள் சேகரம். பெரும் யாத்திரைகள் எந்த அளவிற்கு புறத்தில் நிகழ்கிறதோ அதே அளவிற்கு அகத்திற்குள்ளும் நிகழும். 


விஜயலஷ்மியின் இல்லம் அழகாகவும் விசாலமாகவும் இருந்தது. இரவு நெடுநேரம் பாட்டு, பேச்சு, கொண்டாட்டம் என சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. நிரம்பி ததும்பும் நீர் நிலைகள். வயல் வெளிகள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிராதப ராமபுரம் எனும் ஊரில் ஊராட்சி தலைவராக உள்ளவரை சந்தித்தோம். முழு மூச்சுடன் முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர முனைகிறார். அவரது முயற்சிகள், இலட்சியங்கள் குறித்து பேச முடிந்தது. தன்னலமற்ற செயல் ஒத்த மனமுடையவர்களை ஒன்றிணைக்கும். 

காலை எழுந்து உணவு உண்டுவிட்டு கோடியக்கரை சென்றோம். தை அம்மாவாசையை என்பதால் கடற்கரையில் கூட்டம். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வனக்காவலர்கள் அறிவுறுத்தினார்கள். கடலில் குளிக்க வேண்டும் எனும் திட்டத்தை நீரை பார்த்ததும் மாற்றி கொண்டேன். நான்கைந்து வண்டிகளில் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சென்றோம்.  வெளி மான், காட்டு பன்றி, கீரி, கலைமான் ஆகியவற்றை பார்த்தோம். நாராயணனும் ராம் சிதம்பரமும் எங்களுக்கு விதவிதமான பறவைகளை சுட்டி  காட்டினார்கள். உபயம் பறவை பார்த்தல் வகுப்பு, வெள்ளிமலை. ராஜராஜன் எழுப்பியதாக நம்பப்படும் பொன்னியின் செல்வன் புகழ் கலங்கரை விளக்கத்தை கண்டுவிட்டு திரும்பினோம். திரும்பும் வழியில் இரண்டு நரிகளை கண்டோம். (நாங்கள் மட்டுமே கண்டோம் என்பதில் சற்று கூடுதல் பெருமை).     


400 கிலோமீட்டர் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் எனும் செய்தியை தாங்கி ஆறு மாணவர்கள் நடந்து வருகிறார்கள். இது இந்த ஊர்களில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? இன்றைய அரசியல் சூழலில் இவர்களின் சன்னமான ஆனால் திடமான குரல் எடுபடுமா? எல்லா அறமின்மைகளும் இயல்பாக்கம் அடையும் காலகட்டம் இது. தேர்தலுக்கு நாளிருக்கிறது. இவர்களிடம் வாங்க மாட்டேன் என உறுதி அளித்தவர்கள் அந்த சொல்லை காப்பாற்றுவார்களா? எந்த கேள்விக்கும் துலக்கமான விடை என ஏதுமில்லை. உடலை மெய் என்று குறிக்கிறது தமிழ் மொழி. உடலை வருத்துதல் என்பது மெய் வருத்தம். உடலே நமக்கு முன் இருக்கும் தூலமான மெய். உடலை காப்பதே நம் அடிப்படை விசை. அதன் எல்லைகளை நகர்த்தி, அதையே பணைய பொருளாக வைக்கும் போது நாம் நம்பும் விஷயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறோம். அதற்கொரு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். சிறிய அளவிலாவது மாற்றங்கள் நிகழும். விதிமுறைகள் நாமே வகுத்து கொண்டவை. நமக்குள்ளாக ஏற்படுத்தி கொண்ட பொது ஒப்பந்தம். வாக்களிப்பது நம் கடமை. வாக்குகள் சந்தை சரக்குகளாக மாறும் போது நம் நலத்திற்காக நாம் ஏற்படுத்திய அமைப்புகளையும், விதிகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். பொது அமைப்புகள், பொது விதிகள் சுயநல தேவைகளுக்காக அலட்சியப்படுத்தப்படும் தோறும் பலவீனமடையும். காந்தியம் தனிமனிதனை மாற்றத்தின் அலகாக கொள்கிறது. இந்த பயணத்தின் ஊடே வெகு சில தனியர்கள் மாறினாலும் கூட சரிதான். முனை மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.   


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2025 22:55

January 29, 2025

என்ன ஆனந்தம்! - ஜென் கவிதைகள் க. நா. சு மொழியாக்கம்.

 

க. நா.சு மொழியாக்கம் செய்த 41 ஜென் கவிதைகள், ஜென் பற்றி அவர் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம், அவதூதர் நாவலின் தொடக்கத்தில் ஜென் குரு ஹகுயின் பற்றி வரும் ‘அப்படியா’ எனும் பிரபல ஜென்கதை ஆகியவை கொண்ட சிறிய நூலை அழிசி ஸ்ரீனிவாசன் பதிப்பித்துள்ளார். க. நா. சு எழுதிய ஜப்பானிய ஹைக்கூ எனும் சிறிய முன்னுரையும் இடம்பெற்றுள்ளது. கவிதைகளுக்கு நடுவே  அழகிய ஓவியங்கள் என அழகிய பதிப்பு. 




சிறிய முன்னுரையில் திருக்குறளுடன் ஜென் கவிதைகள் வேறுபடும் புள்ளியை விவரிக்கிறார். திருக்குறள் கடுகை துளைத்து ஏழ்கடலை புகட்டுகிறது. ஜென்னுக்கு ஏழ்கடல் முக்கியமல்ல, கடுகு தான் முக்கியம் என்கிறார். பாரி மொழியாக்கம் செய்துள்ள கட்டுரையில் ஜென் குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். சிந்தனை நீக்கம், சிந்திப்பதை நிறுத்துவது, மறு சிந்தனை ஆகியவை ஜென்னின் மூன்று படிநிலைகள் என கிறிஸ்மஸ் ஹம்பரீஸை மேற்கோள் காட்டுகிறார். “புத்தமனம் என்பதோ மகிழ்ச்சியிலும் முடிவிலா திளைப்பிலும் ஆழ்ந்திருப்பது . இருமைகள் அற்ற அந்நிலையில் மகிழ்ச்சிக்கு எதிரீடாக வலியோ துன்பமோ இருப்பதில்லை. உள்ளுணர்வின் வழியாக இங்குள்ள அனைத்துடனும் ஒருமையை உணர்வதன் மூலம் உங்களுக்கு மரணம் இல்லாமல் ஆகிறது” என்று எழுதுகிறார்.


“சிந்தனைகள் அனைத்தும் ஞான விடுதலையின் பாதையில் தடைகளே . சிந்தனைக்கு மாற்றாக உள்ளுணர்வை கொள்ள வேண்டும்” எனும் ஹம்பரீஸின் கூற்றை அறிவுறுத்துகிறார். நல்ல தயாரிப்புடன் மெனக்கெடலுடன் வெளியிட்டிருக்கும் அழிசி ஸ்ரீனிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நாம் நம் முன்னோடிகளை அவர்களின் ஓரிரு  பங்களிப்பை கொண்டு ஒற்றை பரிமாணம் கொண்டவர்களாக சாராம்சப்படுத்திக் கொள்கிறோம். நெருங்கி அறியும் தோறும் அவர்கள் ஆகிருதி விரிந்தபடி இருக்கிறது. சமயங்களில் நமக்கு அப்போது முக்கியமாக தெரிந்ததை விட இப்போது வேறு தளங்கள் திறந்து கொள்ளும். அவை முக்கியமாக ஆகும். முன்முடிவுகள் அற்று  நெருங்கி முழுமையாக அறிய வேண்டும். ஸ்ரீனி க.நா.சுவின் வெவ்வேறு முகங்களை பங்களிப்புகளை நமக்கு அறிமுகப்படுத்திய படி இருக்கிறார். 



தொகுப்பில் எனக்கு பிடித்த சில ஜென் கவிதைகள்


என் வீடு பற்றி எரிந்து போய்விட்டது 

வானத்துச் சந்திரனை என்னிடமிருந்து மறைக்க 

இப்போது எதுவும் இல்லை 


மஸாஹிடே


கோடை சந்திரன் மிக அழகாக இருக்கிறது 

நல்ல வேளையாக மேகங்கள் வந்து 

என் கழுத்துக்கு சற்று ஓய்வு தருகின்றன 


ஸர்யூ



கிழட்டுத்தனம்

வருகிறது என்று

தெரியும்போது

வீட்டுக் கதவைச்

சாத்திவிட்டு

வேலைக்காரனை கொண்டு

“யஜமான் வீட்டிலில்லை”

என்று சொல்லித்

திருப்பியடிக்க

இயலுமானால்

எவ்வளவு

நன்றாக இருக்கும்?


கோகின்ஷு கவிதைத் திரட்டு 


பண்டைக் காலத்திலிருந்தே

இவ்வுலகம் இவ்வளவு

சோகம் நிறைந்தா உளது

…அல்லது எனக்காக மட்டுமே

இத்துயர வேஷம்

தரித்துள்ளதா?


கோகின்ஷு கவிதைத் திரட்டு


என்ன ஆனந்தம்!


நூறு நாட்கள் 

வியர்த்தமாக 

வார்ததைகளை 

முறுக்கி எடுத்து

கொட்டி அளந்து

ஓயந்துபோன சமயத்தில்

ஒரு கவிதை 

அமைந்துவிட்டது


டச்சிபானா அகேமி


மாரி காலத்துக் கடல் நாரைகள்

-வாழ அவற்றிற்கு வீடில்லை

‌ -சாக அவற்றிற்கு கல்லறை இல்லை


காடோ ஷூஸோன்



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2025 21:02

January 27, 2025

இரட்டை இயேசு - விஜய ராவணன் - வாசிப்பு

 பொள்ளாச்சி எதிர் பதிப்பக கடையில் 26.1.25 அன்று நிகழ்ந்த நூல் அறிமுக கூட்டத்தில் ஆற்றிய உரையின் குறிப்புகளை கொண்டு தொகுத்து எழுதிய கட்டுரை 




(அறிமுக கட்டுரை அல்ல. கதைகள் கொஞ்சம் விரிவாக பேசப்பட்டுள்ளன.)

விஜய ராவணனின் இரண்டாம் சிறுகதை தொகுப்பான ‘இரட்டை இயேசு’ மொத்தம் ஆறு நீள் கதைகள் கொண்டது. ‘எதிர்’ வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் தமிழில் எழுதப்பட்ட உலக கதைகள் என குறிப்பிடுகிறார் எம். கோபாலகிருஷ்ணன். உள்ளூர் உலகமாளவிய எனும் இருமை மெல்ல பொருளிழந்து வருகிறது என தோன்றியது. உலகளாவிய நிகழ்வுகள் ஏதோ ஒருவகையில் உள்ளூர் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது. 


விஜய ராவணனின் இந்த தொகுப்பை வாசித்தபோது முதலில் தோன்றியது, அவரது புனைவுகளின் வழி எழுப்பும் கேள்விகள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்பதே. தொகுப்பின் முதல் கதை ‘ஆரஞர் உற்றன கண்’   பிரியத்திற்குரியவர்களின் பிரிவு துயரால் மூடாத விழிகள் என்று பொருள். திருக்குறளில் இருந்து எடுத்தாளப்பட்ட சொல்லாட்சி. இப்படியான பழந்தமிழ் தலைப்புகள் கதைகளுக்கு ஒரு வசீகரத்தை அளிக்கின்றன. ‘ஹன்னா’ எனும் ஜெர்மனியை சேர்ந்த முதுகலை கலை கல்லூரி மாணவியின் தன்னிலை கூற்றில் கதை சொல்லப்படுகிறது. இன்னொரு பிரதான பாத்திரமான அப்துல் அரீஃப் குர்தீஷ் மொழி பேசும் ஈராக் நாட்டை சேர்ந்தவன். கதை ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நிகழ்கிறது. ‘அகாலம்’ ஆப்பிரிக்க அமெரிக்கனை முதன்மை பாத்திரமாக கொண்டது. ‘இரட்டை இயேசுவில்’ ஃபிரெஞ்சு நாட்டவருடன் தமிழ் இளைஞனும்  வருகிறார். கதை இந்தோனேசியாவில் நிகழ்கிறது. ‘என்றூழ்’ கதையில் ஆபிரகாமை யூதராக புரிந்துகொள்ள இடமுண்டு.  ‘தங்க  மீன்கள்’ கதை மாந்தர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள். போர்முனையில் கதை நிகழ்கிறது. ‘அகாலம்’ ‘என்றூழ்’ ஆகியவை நிலமற்ற வெளியில் நிகழ்கிறது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கதை சொல்லிகள் (நாடு, இனம், பாலினம்) என எழுதும்போது நம்பகத்தன்மை சார்ந்து சில சவால்கள் எழும். பொதுவாசிப்பு எழுத்தில் இத்தகைய போக்குகளை காண முடியும். தீவிர  வெவ்வேறான களங்கள் இருந்தாலும் எழுத்தாளர் தனது ஆதார கேள்வியை தொடர்கிறாரா என்பதை முக்கியமான அளவுகோலாக கொள்வேன். அவ்வகையில் விஜய ராவணன் தனது கதைகளின் ஊடாக வரலாறு, கடந்த காலம் குறித்து விசாரணை செய்கிறார். 

  


புத்தாண்டுக்கு முந்தைய இரவில் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல்  ‘அவன் மட்டும் ஒரு விடுபட்ட சொல்லை போல் தனித்திருந்த படி ’ புத்தகத்தை வாசிப்பவனாக அகமது அரீஃப் அறிமுகம் ஹன்னாவிற்கு அறிமுகம் ஆகிறான். நினைவுகளில் புதைந்து போன பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை சமகால வண்ண ஓவியமாக்குவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறாள் ஹன்னா. அரீஃபுக்கு எல்லாமே கருப்பு வெள்ளைதான். இந்த இருமை வழியாக அவர்களின் ஆளுமைகளை கட்டமைக்கிறார். நிறங்கள் உயிர்ப்பான கடந்த காலத்தின் குறியீடாக கொள்ளலாம். ஹன்னா கருப்பு வெள்ளை புகைப்படங்களை கூட நிறமுடையதாக  மாற்றுபவள். கடந்தகாலத்தை உயிர்ப்பிப்பவள். வரலாற்றை பெருமிதத்தோடு காண்பவள். அதை மீட்பவள் என்று கூட வாசிக்க இடமுண்டு.  நிறங்களற்ற நிகழ்காலத்தில் வாழ்பவன் அரீஃப். நிறங்கள் நிறைந்த கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாதவன். அவனுக்கு அந்த வாய்ப்பு அகதி என்பதாலேயே மறுக்கப்படுகிறது. வண்ணங்களை நேசிப்பவளால் கருப்பு வெள்ளையை நேசிப்பவனை ஏற்க முடியாது என்கிறான். 



முடிவற்ற ஏணியில் ஏறி வானவில்லில் மோதி அதன் வண்ணங்களை பூசிக்கொண்டு கீழே விழும் சிறுவனை பற்றிய கதையை அரீஃப் ஹன்னாவிற்கு சொல்கிறான். நிறங்களற்ற வானவில் வானில் எஞ்சி இருக்கிறது. அரீஃப் தனது பணியிடத்திற்கு அழைத்து செல்லும் போது தான் இந்த கதையின் அர்த்தம் துலங்குகிறது.  நூலகத்து தளங்களை சென்றடையும் ஏணிகள்  முடிவற்ற ஏணியாக உருமாறுகிறது. புத்தகங்களின் வண்ணவண்ண அட்டைகள் வானவில்லாகிறது. புற உலகத்தின் வண்ணத்தை போர் பறித்துக்கொண்டது ஆகவே அவனுக்கு வெளியே வண்ணங்கள் இல்லை. ஆனால் புத்தகங்கள் வழி அவன் எல்லா நிறங்களையும் உணர்கிறான். 


விஜய ராவணன் கதைக்குள் சொல்லும் குட்டி நாட்டுப்புற கதைகள் மைய கதையை ஏதோ ஒருவகையில் வலுப்படுத்த உதவுகிறது. இந்த கதைகள் அளிக்கும் அடர்த்தியின் காரணமாக செவ்வியல் சிறுகதை வடிவிலலிருந்து மீறியதாக ஆகிறது. ‘ஆரஞர்’ கதையிலே கில்காமேஷ்  குறிப்பும் இடம்பெறுகிறது.   கில்காமேஷ்- என்கிடு போல அமெரிக்காவும் சதாமும் மோதி கொள்கிறார்கள் என்றொரு வரியை கொண்டு இந்த கதை சுட்டும் அரசியலை புரிந்து கொள்ளலாம். இதே கில்காமெஷ் கதை மரணத்தின் முன்பான கையறு நிலையை சுட்டுவதாக மாறுகிறது. 



ஹன்னா தன்னிடமிருந்து சட்டென வெளிப்பட்ட மேலமை உணர்வுக்காக வருந்துகிறாள். அகதிகளை வெறுக்கும் உள்ளூர் காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரீப்பின் சொற்கள் தீர்க்கமானது. ‘வரலாற்று அகராதியில் ‘அகதி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பொருள் எப்போதும் மாறிக்கொன்டே இருக்கும்.’ நிறம் நோக்கும் திறனிழந்த அகதிக்கு ஜெர்மனியும் ஈராக்கும் ஒன்றுதான் என சொல்லும்போது அவன் நாடு திரும்பினாலும் கூட அகதி தான் என பொருள்படுகிறது. அரீஃபின் சிறுவயது நினைவுகள் நிறங்களாலானவை. குண்டு வெடிப்பில் அவன் பார்வை திறனை இழக்கிறான்.அகதிகள் பண்பாட்டை அழிக்க வந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த அகதிகள் உருவாக்கத்தில் வளர்ந்த நாடுகளின் பங்கையும் பொறுப்பையும் சேர்த்தே பேச வேண்டியிருக்கிறது. 



‘அகாலம்’ ஒரு டிஸ்டோபிய கதை. புகைப்படங்களை அரசு தடை செய்கிறது. கடந்தகாலத்தை அழிப்பது பெரும் அழித்தொழிப்பு என்று கருதுபவர்களுக்கும் கடந்த காலம் பெரும் சுமை அதை விட்டொழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான முரண் தான் கதை. முந்தைய கதையின் பேசு பொருளின் தொடர்ச்சி. சுவாரசியமான விவாதங்களை உருவாக்குகிறார். 


‘நமக்கும் கடந்த காலத்திற்குமான சரடை மெல்ல அறுப்பது.’  என்றால் ‘எல்லோருக்கும் கடந்த காலம் பொக்கிஷம் இல்லை.’ என்கிறான். 

‘வரலாறு தெரியாதபோது மனிதன் கீழ்ப்படியும் இயந்திரம்’ என எச்சரிக்கும் போது ‘வரலாறு என்பதே எழுதப்படும் பேனாவை பொறுத்தது தானே’ என வரலாறை நிராகரிக்கிறான். வரலாற்று நூல்கள் தடைசெய்யப்பட்டதை எதிர்க்கும் போது  ‘திறக்கப்படாத எல்லை கதவுகளில் போக்கிடமற்றவர்கள் முட்டி நின்றபோதெல்லாம் உங்கள் வரலாற்று நூல்கள் எந்த உண்மையை பேசிக்கொண்டிருந்தன?’ என கேள்வி கேட்கிறான்.   ‘இனிமையான கடந்த காலத்திற்காக’  ஏங்கும் போது ‘கோல்டன் டேஸ் என்பவை நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தானே’ என மறுக்கிறான்.  ‘தனிமனித சுதந்திரம் அடியோடு ஒழியும்’ என பயம்கொள்ளும்போது ‘நீ சிலாகிக்கும் வரலாறு என்பதே அகதிகளையும் அடிமைகளையும் உற்பத்திசெய்ய உதவும் புனைவுதான்’ என பதில் சொல்கிறான்.  


இடையிடையே கதைசொல்லியின் வலிமிகுந்த கடந்தகாலம் நினைவு கூறப்படுகிறது. அம்மா அவனை கைவிட்டு சென்ற நினைவுகள் வருகிறது. புகைப்படங்கள் நாம் மறக்க முயலும் பொழுதுகளின் தடயங்கள் தான் என நம்புவதால் அம்மா குழந்தையாக அவனை தூக்கி வைத்திருக்கும் படத்தில் அவளுடைய பரிதவிப்பு தொந்தரவு செய்கிறது. கடந்தகால படிக்கட்டில் நின்று கொண்டு அவனையும் இறங்கிவர அழைக்கிறாள் என அதை கிழித்து போடுகிறான். 


 வன்முறையும் அழித்தொழிப்பும் தான் வரலாறு. போரும் பழிவாங்கலும் தான் மானிட சரித்திரம் என சொல்கிறது. வரலாற்றின் கொடுங்கோன்மை அல்லது பயனின்மையை ஏற்கும் அவன் நினைவுகள் விஷயத்தில் தடுமாறுகிறான். நினைவுகள் தான் நாம். வரலாற்று நூல்கள் ஆய்வு கட்டுரைகள் ஆவணங்கள் சரித்திர புனைவுகள் தடை செய்யப்படுகிறது. அவனுக்கு பிடித்த, நெருக்கமான புத்தகத்தை எரிக்கிறான். ஆனாலும் அதில் புதைத்து வைத்திருந்த புறா இறகை தீயிலிருந்து மீட்கிறான். வரலாற்றிலிருந்து அந்தரங்கமான நினைவை மீட்பது. கூட்டு நினைவுதானே வரலாறு. அப்படியான பிரித்தல் சாத்தியமா என்றொரு கேள்வியும் எழுகிறது. அடுக்ககத்தில் அடிபட்ட புறாவை காண்கிறான். புறா அவனது நினைவுகளுக்கான குறியீடாகிறது‌. அதை பெட்டிக்குள் வைத்து பராமரிக்கிறான். பறக்க யத்தனிக்கும் சிறகுகள் அட்டைப்பெட்டியின் மூலைகளில் முட்டிமோதுகிறது.  வெளியே சென்று விட்டு திரும்பும் போது, துர்நாற்றம் வீசுகிறது, அறை முழுவததும் புறா இறகுகள் பிய்ந்து கிடக்கிறது‌. பூனை புறாவின் தலையை கொய்து கொன்று விடுகிறது. பூனையை அரசாக பார்க்க முடியும். அதற்கு வரலாறு நினைவு என எந்த பாரபட்சமும் இல்லை. அதனளவில் எல்லாமே அழிக்கப்பட வேண்டியது தான். புகைப்படங்கள் நீக்கப்பட்ட சுவரில் மர பறவைகளை மாட்டுகிறான். ஜன்னல் கம்பிகளின் நிழலில் அவை வானளாவிய கூண்டுக்குள் பறப்பதாக தோன்றுகிறது. பறக்கும் பறவைகள் கடந்த காலத்தின் எடையில்லாத நிகழ்த்தருணத்தின் குறியீடு. சென்ற கதையை போலவே கடந்த காலத்திற்கு செல்ல இவனும் விரும்பவில்லை. அரவணைக்கும் மடி இருந்திருந்தால் அவனுக்கும் கடந்த காலம் இனித்திருக்கும். இந்த கதையின் பேசு பொருளையொட்டி  இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. பெருந்தேவியின் ‘ஒருகாலத்தில் குறுங்கதை’ நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க கடந்த காலத்திற்குள் புதைத்துக்கொண்டு அழியும் சித்திரத்தை அளிப்பது. இன்னொரு கதை சித்துராஜ் பொன்ராஜின் ‘கயிற்றரவு.’ நினைவுகளின் தொகுப்பு தான் வரலாறா? ஆம் எனில் நினைவுகளை மாற்றினால் வரலாறு மாறுமா? என்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. 



  மூன்றாவது கதை ‘இரட்டை இயேசு.’ கொரோனா காலத்து கதை. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. விஜய ராவணனின் பெரும்பாலான கதை நிகழ்வதில்லை. சொல்லப்படுகிறது. இது அதன் எல்லையாகவும் தனித்துவமாகவும் கொள்ளலாம். காலன் அருகமர்ந்து இருப்பது போல கனவு காண்கிறான். 


கதைசொல்லி பத்தாவது படிக்கும்போது தற்கொலை முயற்சி செய்தவன் ஆனால் இப்போது மரணத்தை அஞ்சுகிறான். ‘சில நேரங்களில் மரண பயம்தான் வாழ வைக்கிறது’ என்றுணர்கிறான். ‘மரணத்தின் முகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று தொடக்கத்தில் துணிவுடன் சொல்லும் ஐரோப்பியர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவர், வியட்நாமுக்கு விசா உள்ளது. ஆனால் இத்தனை நாடுகள்  இருந்தும் அனாதையாக உணர்கிறார். தன் நாட்டுக்கே திரும்பும் முடிவுக்கு வருகிறார்.    


ஐரோப்பியர் சொல்லும் கதையில்  சவப்பெட்டி செய்பவன் தனது வாழ்வாதாரம் பெருக வேண்டும் என  கர்த்தரிடம் வேண்டுகிறான். காலரா கொத்துக் கொத்தாக உயிர்பலி கொள்ளும் போது அவனது பிரார்த்தனையின் பலனாகத்தான் அது நிகழ்வதாக எண்ணி கொள்கிறான். அவனது குடும்பமே இறந்து போனாலும்  நல்லடக்கத்திற்காக சவ பெட்டிகளை செய்து கொண்டே இருந்தான். இனியும் சவப்பெட்டிகளை செய்யக்கூடாது என தீர்மானிக்கிறான். தான் செய்வதாலேயே சாகிறார்கள் என எண்ணுகிறான். தனக்கான சவப்பெட்டியை மட்டும் ரகசியமாக செய்து கொண்டான். சவப்பெட்டி இல்லாமல் நல்லடக்கம் நிகழவில்லை. அரசின் ஆணையை  மீறியதற்காக  மரண தண்டனை வழங்கப்படுகிறது. தனக்காக தானே செய்த சவப்பெட்டியை முதுகில் சுமந்தபடி நடந்து வருகிறான். ஊரின் ஒட்டுமொத்த பாவத்தையும் அவனே சுமந்தான். இயேசுவை போல. சிலுவையில் தொங்கும்  இயேசுவின் உருவத்திற்கு  பின்பக்கம் அறையப்படுகிறான். சிலுவை எடை தாளாமல் விழவிருந்த நிலையில், மக்கள் சாபத்தை அஞ்சும்போது, சிலுவையிலிருந்து தேவகுமாரன் உயிர்த்து எழுகிறார். ஊரை காக்கிறார். சிலுவையில் ஒருவர் இருந்தால் போதும் என்று எண்ணினாரா? ஊரை காத்த தேவகுமாரன் அவனை காக்கவில்லை. மனிதன் ஒரு பக்கமும் மீட்பர் மறுபக்கமும் எனும் சிந்தனையே வினோதமாக இருந்தது. இந்த படிமத்தை என்னால் துல்லியமாக கதை தருணத்தில் பொருத்தி பார்க்க இயலவில்லை. இந்த பூடகமே வசீகரமாக உள்ளது. மனிதன் தன்னை பற்றி மிகையாக மதிப்பிட்டு கொள்கிறான். இயற்கையின் திட்டங்களுக்கு அவன் பொறுப்பேற்க முடியுமா? மனித ரத்தம் தேவனை எழுப்புமா?  கிறிஸ்தவ இறையியலில் போலி கிறிஸ்துவை இகழ்ச்சியுடன் காண்கிறது. அவனுக்கு சிலுவை தான் தண்டனை. ஒருவகையில் அவன் சிலுவையில் ஏறியதால் தான் கிறிஸ்து உயிர்த்து எழுந்து ஊரை காக்கிறார்.  தொற்றுநோய் காலத்து களச்செயல்பாட்டினர், முன்கள பணியாளர்கள்- குறிப்பாக மருத்துவர்களை இன்னொரு இயேசுவாக கற்பனை செய்து கொண்டேன். இயேசுவே காப்பவரும் அழிப்பவரும். அழிவுக்கு பின்னே தானே காக்க முடியும். 


 

‘என்றூழ்’ ஒரு அறிவியல் புனைவு. சூரியனில் செயற்கை நுண்ணுணர்வு ரோபோவை கொண்டு செய்ய முற்படும் ஆய்வு தோல்வி அடைகிறது. சாரா எனும் எட்டாம் தலைமுறை ரோபோவை ஆபிரகாம் வாங்குகிறார். வருங்காலத்தில் நிகழும் கதை என்பதால் விரிவாக தொழில்நுட்பங்களை விவரிக்கிறார். உலகத்தை கட்டமைப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. பறக்கும் கார்கள் போன்ற வழக்கமான இயந்திரங்கள் தான். அலுவலகத்தில் மூவர் மட்டுமே மனிதர்கள். பிற அனைவரும் ரோபோக்கள். செயற்கை நுண்ணுணர்வு நம்முள் எழுப்பும் ஆதாரமான கேள்வி என்பது மனிதனாக இருப்பது என்றால் என்பதுதான். அண்மையில் மாலனின் ‘வித்துவான்’  நம்பி கிருஷ்ணனின்  ‘இறைவர்க்கோர் பச்சிலை’ ஆகிய கதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கதையில் விஜய ராவணன் எழுப்பும் வரையறைகளை நோக்கலாம். ரோபோக்களிடம் பொய் சொல்ல முடியாது. ரசனை உணர்வு மனிதர்களுக்கானது மட்டுமா? சாரா ரசனை உணர்வை வெளிப்படுத்தும் போது அதிர்கிறார். மனிதர்களை போல இயந்திரத்திற்கு வாழும் இச்சை உள்ளதா? சாரா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறாள். குடும்பமும், குழந்தைகளும் கூட  அதன் பொருட்டு தான் தேவைப்படுகிறது. இன்னொரு கோணத்தில் இருந்து நோக்குவதாக இருந்தால், சூரியனை அடையும் திட்டம் தோல்வி அடைந்ததற்காக வெறுக்க படுகிறாள். உலகை மாற்றும் இயந்திர- மனித கூட்டு குழந்தையை உருவாக்க விரும்புகிறாள் என்று பொருள் கொள்ளலாம். இயந்திரங்கள் ஒன்று போலவே, தனித்துவம் என்று ஏதேனும் உண்டா? சாரா தனித்துவத்தை வெளிப்படுத்துகிறாள். உயிர் நேசம், பாசம், பந்தம் போன்றவை மனிதர்களின் தனித்தன்மையா? சாராவும் ஏங்குகிறாள்.    



கதையில் அண்டார்டிகா பனிக்கட்டிகளை பாலைவன தேசங்களுக்கு திருப்புவது பற்றிய ஒரு சிறிய பகுதி வருகிறது. இயற்கையின் போக்கில் விடுவதே சரி என ஆபிரகாம் சொல்கிறான். ஆனால் மனித இனத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்கை விரோதமாக இருந்தாலும் இவை காலத்தின் தேவை என்று பதில் உரைக்கிறது. சாராவின்  பிள்ளை பேறு சார்ந்த விழைவையும் ஆபிரகாமின் தயக்கத்தையும் இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக காண வேண்டும். ‘உன்னையும் என்னையும் போல அவளும் இயற்கையின் அங்கம்- உயிராக அங்கீகரித்தல் எது மனிதன்? எது இயந்திரம்? இயற்கைக்கு இருவருமே பிள்ளைகளா? இயற்கைத்தாய் ஒரு முலையில் மனிதனுக்கும் இன்னொரு முலையில் இயந்திரத்துக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாளா? அப்படியானால் இங்கு எல்லா நியதிகளும்  இருவருக்கும் பொதுதானே.’ என்று யோசிக்கிறான். செயற்கை நுண்ணுணர்வு சார்ந்து நான் வாசித்த இறைவர்க்கோர் பச்சிலை தொடங்கி டெட் சியாங்கின் கதைகள் வரை ஏறத்தாழ இதே முடிவை நோக்கி வருவதை காண்கிறேன். விலக்கி நோக்காமல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக நோக்குவது.  


அறிவியல் புனைவில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமை மிக முக்கியமான பேசுபொருள். இந்த இருமையே கூட கொஞ்சம் அபத்தம் தான். மனிதனை இயற்கைக்கு எதிராக நிறுத்த முடியுமா என்ன? அவனும் அதன் ஒரு பகுதிதான். சமயங்களில் அவனது விழைவுகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறது சமயங்களில் நல்குவதில்லை. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைவாக கருதப்படும்  மேரி ஷெல்லியின் ‘பிரான்காய்ன்ஸ்ட்டின்’ தொடங்கி இயற்கை- மனிதன் முரண் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அறிவியல் புனைவுகள் அறிவியலின் ஆபத்துகளையே தொடர்ந்து பேசிக்கொண்டு உள்ளது. மனிதனின் சுயேச்சையின் மீதான ஐயம்  பைபிளின் தடுக்கப்பட்ட கனியை உண்பதிலிருந்தே தொடங்குகிறது. எதிர் அறிவியல் புனைவு அத்தனையிலும் இந்த உணர்வு செயல்படுகிறது. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது.  பூலோக சக்கரவர்த்தியின் மகளை சூரியன்களை அழிக்கும்படி கடவுள் பணிக்கிறார். ஒரேயொரு சூரியனை மட்டும் அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி வீழ்த்தாமல் விடுகிறாள். கடவுள் அவளுக்கு கன்னி தன்மையை இழக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளும் வரத்தை அளிக்கிறார். அவள் சிருஷ்டித்தவை தான் இந்த கணக்கற்ற நட்சத்திரங்கள். சாராவின் கதையோடு இந்த தொன்ம கதை ஊடாடுகிறது. சாராவின் பிள்ளைப்பேறு கோரிக்கையை ஏற்க மறுக்கிறான். இந்த கதையின் முடிவு அபாரமானது. அவனுடைய துணையின்றியே பிள்ளைப்பேறுக்கான வழியை கண்டடைந்த்துவிட்டாள் என்பதால் அவள் மானுட பெண் தோற்றத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்ந்து உலோக நிர்வாணத்தில் வயிற்றை தடவியபடி சூரிய ஒளியில் கிடக்கிறாள். அல்லது குந்தியை போல் நேராக இயற்கையின் வடிவமான சூரியனிடம் தனக்கு பிள்ளை வரம் வேண்டுகிறாள் என்றும் வாசிக்க முடியும். 


 

‘இன்னொருவன்’  முட்டை மனிதனை பற்றி சொல்ல தொடங்குகிறது. வீடு தேடி அலைபவனுக்கு மிக குறைந்த வாடகையில் நகரின் மையத்தில் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டை சுற்றி மர்மம் கட்டமைக்கப்படுகிறது. நட்சத்திரம் கருந்துளைக்குள் காணாமல் போவது போல, முட்டைக்குள் விழித்து எழுகிறான். வேத தொன்மம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என சொல்கிறது. பிரபஞ்சம் ஒரு முட்டையிலிருந்து புறப்பட்டதாக. பூட்டப்படாத கூண்டிற்குள் அடைப்பட்டு கிடக்கிறான். முயன்றால் திறந்து வெளியேறிவிட முடியும். தன்விருப்பின் பேரில் மனிதன் கூண்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான்.  உருவகங்கள் கொண்ட கதைகள். கண்ணாடிக்குள் நுழைந்து கண்ணாடிகளால் ஆனா உலகிற்குள் நுழைகிறான். கண்ணாடி பேழைக்குள் வெவ்வேறு ‘நான்’களோடு உரையாடுகிறான். சிதறிய ‘நான்’கள் சேர்ந்து வெடிக்கிறது. விழித்து எழும்போது முழுமையாக உணர்கிறான். பேழைக்குள் மட்டும் சுதந்திரமான குரலை கேட்கிறான். கடிகார முட்களுக்கு அஞ்சி ஓடவேண்டாம் என்பதே போதுமானதாக உள்ளது. அங்கே எவருடைய பெயரும் தெரிந்துகொள்ளவில்லை. அடையாளமற்ற இருப்பு. அங்கே தூவும் அழிவதும் இல்லை. எனினும் அந்த வாழ்க்கையும் அலுக்கிறது. அதையும் சிறையாக உணர்கிறான். என்றூழ் கதையில் சாரா உதிர்க்கும் ஒரு வசனம் தான் இந்த கதையின் சாரம் என்று புரிந்து கொள்கிறேன். ‘மனிதன் ஒரு விசித்திரமான சமூக பிராணி, குழுவாய் இருக்கும்போது தனிமையை விரும்புவான். தனித்து விடப்பட்டதும் துணைக்காக ஏங்குவான்.’  அன்றாடம் அலுப்பாக இருக்கிறது. தப்பிக்க மனம் ஏங்குகிறது. ஓய்வும் தனிமையும் அலுக்கிறது. அன்றாடத்திற்கு மனம் ஏங்குகிறது. இந்த சிக்கலை பேசுவதாக புரிந்து கொண்டேன்.   


தொகுப்பின் இறுதி கதை ‘தங்க மீன்’ போர் களத்தில் எதிரெதிர் தரப்பில் இருக்கும் ராணுவ வீரனும் போராளியும் உரையாடுவது தான் கதை. கூறிய விதம், பேசு பொருள் சார்ந்து சற்று பழகிய தன்மை இக்கதைக்கு. தங்க மீன்களை பிரசவிக்கும் தனியொருத்தி. அவளது மர்மமான வசீகரம், இவையெல்லாம் மெலீனா திரைப்படத்தை எனக்கு நினைவூட்டியது. பதின்ம வயதில்  அக்கா மீது ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு என்பதும் தமிழில் நிறைய எழுதப்பட்ட களம் தான். எனினும் இந்த எல்லைகளை தாண்டி தங்க மீன் என்பதை வலுவான படிமமாக வளர்த்தெடுத்துள்ளார். போர் களத்தில் அழகுக்கும் ரசனைக்கும் என்ன வேலை? கலை தான் போருக்கு எதிராக இருக்க முடியும் என்று எண்ணி கொண்டேன். ‘என்றூழ்’ கதையும் ஏறத்தாழ இதே தரிசனத்தை கொண்டுள்ளது. கலை ரசனை அளிக்கும் கூருணர்வு மீதான நன்னம்பிக்கை. சண்டை மூளாத சிறு நிலம், அவளின் படத்துக்கு பத்து மீன் கடையாக தான் இருக்கும். வண்ண மீன்கள் சாந்தமான சூழலை உருவாக்க. அவளது மீன் எதுவும் போரில் இறப்பதில்லை. இரண்டு நியாயங்கள் மோதும் போது புனைவு எழுத்தாளருக்கான வேலை தொடங்குகிறது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே பாலியத்தின் சுனையில் நீரருந்த தான் முயல்கிறார்கள். தங்களது கடந்தகாலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள். ஒருவகையில் கடந்த காலத்தை மீட்டெடுப்பதன் வன்முறையை விஜய ராவணன் கதைகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. போராளியின் தங்க மீன்கள் சிறுவனாக இருந்த ராணுவ வீரனிடம் சென்று சேரும்போது கூழாங்கற்களை நிரப்ப முடியாமல்  தோட்டா ரவைகளை கொண்டு மீன்தொட்டியை அலங்கரிக்க தொடங்குகிறான் என்பதாலா என்னை வெகுவாக தொந்தரவு செய்தது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே நிறுவனத்தின் துப்பாக்கியை கொண்டு எதிரெதிர் நின்று போர் புரிகிறார்கள். 


தமிழுக்கு அந்நியமான புதிய உலகை உயிர்ப்புடன் சித்தரித்த வகையில் விஜய ராவணன் முக்கியமான எழுத்தாளராக ஆகிறார். உலகளாவிய அரசியல் விஷயங்களை கருப்பொருளாக கொள்ளும்போது பிரசாரம் ஏதும் இல்லாமல் சரியான செல்திசையில் கதைகளை அவரால் கொண்டு செல்ல முடிகிறது. 

 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2025 06:26

January 20, 2025

பரலோக வசிப்பிடங்கள்- குறிப்பு

 நான் அனைத்து வாசகர்களின் அன்பிற்குரிய எழுத்தாளனாக வேண்டும். அப்புறம் கடற்கரையிலுள்ள ஒரு சுக வாசஸ்தலத்தில் வசிக்க வேண்டும். சகல உலகங்களிலிருந்தும் இலக்கிய ரசிகர்கள் என்னை தேடி வரவேண்டும். என் அறையின் உப்பரிகையிலிருந்து கடலைப் பார்த்தவாறு விலை உயர்ந்த மது அருந்தி, சிகரெட்டின் பொற்புகையை ஊதி விட்டவாறு நான் ஓய்வெடுக்க வேண்டும். இடையில் நீ என்னைப் பார்க்க வரவேண்டும். இதுதான் எனக்குப் பிடித்த கனவு.




தாமஸ் ஜோசப் எழுதிய ‘பரலோக வசிப்பிடங்கள்’ நாவலில் இறந்து போன பிறகு எழுத்தாளன் ஆல்பர்ட் காணும் கனவிது. ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களின் கனவும் இதுதான் என்று எண்ணி கொண்டேன். தோல்வியடைந்த எழுத்தாளனை பற்றிய கதை. ஆல்பர்ட் புவியில் தனது நாவலை பதிப்பிக்க முடியாமல் பரலோகம் சென்றடைகிறான். “அறியப்படாத எழுத்தாளனுக்கு பூமியில் இருந்த விதி பரலோகத்திலும் தன்னைப் பின்தொடரும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. எழுத்தின் வழியினுடாக பயணம் தன்னை எங்கே கொண்டு சேர்க்கும் என்று அவனுக்கு தெரியவில்லை. அது ஒரு நிழலை பிடிப்பதற்கான பயணமாக இருந்தது என்று தோன்றியது.” ஏழுலகங்களில் ரயில்களில் பயணித்தபடி எழுதுகிறான். எழுதிய நாவலை பரலோகத்தில் பதிப்பிக்க முயல்கிறான். அவனுடைய நாவல் கடவுளை கதைமாந்தராக கொண்டது. நாவலில் கடவுள் கைவிடப்பட்டவராக ஆற்றல் அற்றவராக அலைந்து திரிகிறார். காதலின் பித்தேறி தனது கடமைகளில் இருந்து தவறுகிறார்.  கடவுள் நேசிப்பது ஆல்பர்ட்டின் மனைவி லில்லினாவை. சரியாக சொல்வதானால் அவளது இசையை. வழுக்கை தலை கடவுளின் குழிவிழுந்த கன்னத்தில் புனித முத்தத்தை சமர்ப்பிக்கிறாள் லில்லினா. பரலோகத்தின் அடுக்குகளுக்கு சென்றுவரும் ரயில் எனும் கற்பனையே அபாரமாக உள்ளது. இறந்தவர்கள் புழங்கும் உலகிற்கு உயிருடன் இருப்பவர்கள் தங்கள் கனவுகளில்  புழங்கி செல்கிறார்கள். 


நாவலில் சில அபாரமான கதை மாந்தர்களை எளிய சொற்களில் துலங்க செய்கிறார் தாமஸ். ஆக்நஸ், நடாஷா ஆகிய இரு பெண்கள் மரணத்திற்கு பின்பு ரயில்களின் பயணிகள் பட்டியலை சலிப்பின்றி தட்டச்சு செய்து கொண்டே இருப்பவர்கள். பூவுலகில் போலீசாக முடியாத ஆண்டனி பரலோகத்தின் வாயில் காப்பாளனாக ஆகிறான். சிறுவனாக பரலோகம் வந்தடைந்த ரூபன் அங்கே ஆட்டோ ஓட்டுகிறான். நாவலில் என்னை வெகுவாக தொந்தரவு செய்த சித்திரம் ஒன்றுண்டு. பதிப்பக தொழில் நடத்தி பெரும் கடனாளியான ரபீக் சக்காரியா பரலோகத்தில் இறந்தோருக்கான பதிப்பகத்தை நடத்தி வருகிறார். பூமியில் அவர் பதிப்பித்து விற்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் பக்கங்களை கிழித்து அவரது பிள்ளைகள் விடும் காகித ராக்கெட்டுகள் அவர் காலடியில் நைவேத்தியமாக சேர்கின்றன. சூசன்னா ஆல்பர்ட்டை நேசிக்கிறாள். நேசத்திற்காகவும் எழுதிற்காகவும் ஆல்பர்ட் பரலோகத்தில் நாய்களால் கொல்லப்பட்டு இறந்து மீள்கிறான். நாவலில் இன்னொரு ஆல்பர்ட் குறிப்பிடப்படுகிறார். கடவுளை புகழப்படும் செல்வாக்கு கொண்ட ஆல்பர்ட். ஏறத்தாழ இவனுக்கு எதிர்நிலை. அல்லது இவனுடைய மாற்று ஆளுமை, கனவு. சமரசங்கள் ஊடாக திறக்கும் கடாஹவுகளில் அவன் சென்று சேர்ந்திருக்கக்கூடிய இடமாக கூட இருக்கலாம். சூசன்னா ஆல்பர்ட்டுக்கு பரலோகத்தில் எல்லாவற்றையும் அளிக்க சித்தமாயிருக்கிறாள். பதிலுக்கு அவள் கோருவதெல்லாம் ஆல்பர்ட்டின் காதலி தான். அவள் ஏமாற்றியதாக உணரும்போது ‘உன்னால் அந்திகளையும் கலைகளையும்  பார்க்க முடியாது’ என்று ஆல்பர்ட்டை சபிக்கிறாள். உண்மையில் மிக கொடூரமான சாபம். வாழ்வின் அத்தனை நெருக்கடிகளையும் கடந்து போகும் வலிமையை இயற்கையிடமிருந்தே பெறுகிறோம். இன்னொரு விடியலுக்கான நம்பிக்கையே நம்மை நகர்த்துகிறது. அது மறுக்கப்படுவதை விட கொடூரமான தண்டனை வேறிருக்க முடியாது. நாவலை வாசித்து முடித்ததும், யார் தோல்வி அடைந்த எழுத்தாளர் என்றொரு கேள்வி எழுந்தது. எழுத்தாளர் எழுத்தை கைவிடும் போது மட்டும் தான் தோல்வியடைகிறார். எழுதிக் கொண்டிருக்கும்வரை அவை அங்கீகரிக்கப்பட்டாலும், போடாவிட்டாலும், வாசிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அவர் தோல்வியடைந்தவர் அல்ல. போலண்யோவின் சாவேஜ் டிடிடெக்டிவ்ஸ் நாவலில் ஆர்டுரோவும் அவனது நண்பனும் தேடி செல்லும் காணாமல் போன மூத்த பெண் எழுத்தாளர் ஊருக்கு வெளியே பதிப்பிக்க கூட விரும்பாமல் எழுதி குவித்திருப்பாள். இயல்பிலேயே கவித்துவமான மொழி கொண்ட நாவல் என்பதால் யூமாவின் மொழியாக்கம் பொருந்தி வருகிறது. 


பரலோக வசிப்பிடங்கள் 

தாமஸ் ஜோசப் 

தமிழில் யூமா வாசுகி 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2025 21:02

January 15, 2025

காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்

 

Sketch by Adhimoolam

ஜனவரி 2025 காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை 

முன்னூறு இதழ்கள் கடந்திருக்கும் காலச்சுவடிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்த தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டு சில நாட்களாக பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்துக்கள் முதல் முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். ஏப்ரல் 2014 இதழில் அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ நூலுக்கு எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ எனும் விரிவான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது. அந்த முன்னுரை அம்பேத்கரின் பங்களிப்பையும் அவரது சிந்தனையின் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுவதைவிட காந்தியை அவருக்கு எதிரியாக கட்டமைப்பதிலும் மேற்கோள்களை திரித்து காந்தியின் மீது

அவதூறு செய்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. அருந்ததிராய்க்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய விரிவான மறுப்பு ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் சிறு பிரசுரமாக சர்வோதயத்தில் வெளியானது. பி. ஏ கிருஷ்ணன் கோரிக்கொண்டதின் பேரில் ராஜ்மோகன் காந்தியின் பதிலில் இருந்து ஒரு பகுதியை காலச்சுவடு பிரசுரித்தது. அதன் பின் 2020 ஆம் ஆண்டு ‘காந்தி 150’ எனும் சிறப்பு பகுதியும் 2023 ஆம் ஆண்டு ‘இன்றும் காந்தி’ எனும் சிறப்பு பகுதியும்  வெளியானதில் எனது பங்களிப்பும் உண்டு. திரிதீப் சுஹ்ருத்தின் ‘சத்திய சோதனை’ நூலுக்கான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியானது. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ கட்டுரை பரவலாக கவனம் பெற்றது. ஆயுர்வேதம் எனும் பேசு பொருளைக் கொண்டு காந்தி மரபை எவ்விதம் அனுகினார் என காண முயற்சித்தது. ‘காந்தி சாதியவாதியா?’ என்னும்  கேள்விக்கு காந்தியின் எழுத்துக்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவரது வாழ்க்கை தருணங்களையும் கருத்தில் கொண்டு புதிய கோணத்தில் தனது வாதங்களை நிஷிகாந்த் கோல்கேயின் நூல் முன்வைக்கிறது. அண்மை காலத்தில் வெளிவந்த இவ்விறு சிறப்பிதழ்களில் த. கண்ணன், விஷ்ணு வரதராஜன், சித்ரா பாலசுப்பிரமணியம், சுரேஷ் பிரதீப், அரவிந்தன் கண்ணையன், பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் போன்றவர்கள் எழுதியுள்ளார்கள்.  இவை அண்மைய காலத்தில் வெளிவந்தவை என்பதால் இந்த கட்டுரையில் இவற்றை குறித்து பேசுவதை தவிர்க்க விரும்புகிறேன். இதற்கு முன் 2005, 2008 ஆண்டுகளில் காலச்சுவடு காந்தி சிறப்பு பகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை அவதானிப்பது சுவாரசியமாக இருக்கக்கூடும். 


பெரும்பாலான இந்தியர்களுக்கு இருப்பது போலவே எனக்கும் காந்தியின் மீது மதிப்போ வெறுப்போ ஆர்வமோ இல்லாத உறவு தான் இருந்தது. இதன் பொருள் என் அன்றாட வாழ்வில் அவருக்கு எந்த இடமும்  இல்லை என்பதுதான். இது மாறியதற்கு இரு முக்கிய காரணிகளை என்னால் சுட்ட முடியும். ஒன்று, ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ இரண்டு ‘இறுதி கட்ட ஈழப்போர்.’ காந்தியை போன்றே ஈழ அரசியல் குறித்தும் எனக்கு பெரிய அறிதலோ ஆர்வமோ கிடையாது. ஆனால் அதன் இறுதி தருணங்கள் மனதில் ஒருவித பதைப்பை உண்டாக்கியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் இன்றைய காந்தியும் வெளியானதாக நினைவு. ஒரு வரலாற்று ஆளுமைக்கு சரிநிகராக அமர்ந்து உரையாடும் வாய்ப்பு நமக்கு வெகு சிலரிடம் மட்டுமே கிடைக்கும். காந்தியை அத்தகையவராக அவரது அத்தனை முரண்பாடுகளோடும் கண்டுகொண்டேன்.  ‘காந்தி- இன்று’ என்று இணையதளத்திற்கு பெயரிட இரண்டு காரணங்கள். ஜெயமோகனின் நூலும், சுந்தர ராமசாமியின் கட்டுரையும். 1986 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியான ‘காந்தி இன்று’ கட்டுரையில் காந்தியை எப்படி அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார். “நேர்மையான மறுபரிசீலனைக்கான காலம் இப்போது தோன்றுகிறதோ என மகிழ்வு கொள்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த மறுபரிசீலனை செம்மைப்பட நாம் காந்தியுடன் எந்தவிதமான உறவுகொள்ள வேண்டும்? இதுதான் மிக முக்கியமான விஷயம். நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். மேற்கத்திய சித்தாந்தங்கள் எவற்றிலும் சிறைப்பட்டு நிற்காமல், மதக் கோட்பாடுகள் எவற்றிலும் சிக்குண்டு கிடக்காமல் நாம் அவரைப் பார்க்க வேண்டும். எவ்விதமான முடிவுக்கும் வர நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் சுதந்திரத்தை, எந்த அமைப்புக்காகவும் விட்டுக்கொடுக்கப் பிடிவாதமாக மறுத்து, திறந்த மனத்துடன் நாம் அவரைப் பார்க்க வேண்டும்.”  சு ராவின் காந்தி குறித்த பார்வையின் நீட்சி காலச்சுவடில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன். 


2000 க்கு மத்தியில் காந்தி மீதான கவனம் மீண்டும் துளிர்க்க தொடங்கியதற்கு என்ன காரணம் என ஆராய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான சிக்கல்களை கொண்டிருப்பது போல அவற்றுக்கான முறை மருந்துகளையும் கொண்டிருக்கும் என நம்புகிறேன். உலகமயமாக்கல் வாசல்களை திறந்துவிட்டது. ஒருவகையில் உலகமயமாக்கல் முதலில் கோரும் பலியாக காந்தி தான் இருப்பார் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் மால்களில் சிகார் பிடிக்கும் சேகுவேரா டி ஷர்டுகளை விற்பனை செய்வது போல உலகமயமாக்கல் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. நுகர்வின் உச்சத்தில் திளைத்து பொருளின்மையை உணரும் ஒரு நகர்ப்புற / படித்த மேல் நடுத்தர வர்க்கம் 2000 களின் மத்தியில் உருவானது. 


அக்டோபர் 2005 காலச்சுவடு இதழில் எஸ். பிரசன்னா எழுதிய ‘‘காந்தியும் நானும்’ இந்த புதிய தலைமுறையின் பிரதிநிதி என சொல்லலாம். புதிய குரல்கள் கேட்க தொடங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் காலச்சுவடு இதழ்களில் பங்காற்றிய சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம்  போன்றோரின் குரல்கள் இதே மரபின் தொடர்ச்சி என தோன்றுகிறது. கண்ணன் தண்டபாணி தொடங்கி இன்று முனைப்புடன் செயலாற்றி வரும் குக்கூ சிவராஜ் குழுவினர்  வரை இந்த சரடு இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. ‘அரசியல் காந்தி’ மீது இவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. களச் செயல்பாட்டிற்கு காந்தியிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்கள். பிரசன்னாவின் ‘காந்தியும் நானும்’ கட்டுரை அரசியல் நீக்கம் செய்யப்பட அந்தரங்கமான காந்தியை முன்வைக்கிறது. “காந்தியுடன் என்னால் தனிப்பட்ட முறையில் உறவுகொள்ள முடிகிறது. தனிப்பட்ட பிரச்சினைகளைப் பேச முடிகிறது. இந்த உலகுடன் உறவுகொள்ள, இந்த உலகைப் புரிந்துகொள்ள அவரால் எனக்கு உதவி செய்ய முடிந்தால் அதுவே போதுமானது. உலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க என்னால் வழி கூற முடியாது. உலகமயமாக்கல் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியாது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி பற்றிய கேள்விகள் முடிவில்லாத விவாதத்திற்குரியவை. காந்தியாலும் இதற்கெல்லாம் விடைகூற முடியுமா என்பதும் சந்தேகம்தான். உலகம் தற்போது எதிர்கொள்ளும் தீவிர வாதத்தைக் காந்திய வழிப்படி எதிர்கொள்ள முடியுமா என்பதற்குப் பதில் கூறுவதும் எளிதல்ல. ஆனால் என்னால் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமை என்ற கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த வீட்டில் இருப்பவருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான நெறிகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதுதான் இப்போதைக்குச் சாத்தியம். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் மாற்றம் நம்முடைய ஆத்ம சத்தியால் நாளை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியலாம். காந்தி போன்றவர்கள் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் நீடித்ததவத்தின் விளைவாய்த் தோன்றுபவர்கள். ஒரு சமுதாயத்தின் சராசரித் தரத்தைத் தாண்டிய மாபெரும் பாய்ச்சலை அச்சமுதாயத்தினுள் இருக்கும் ஒருவரால் நிகழ்த்த முடியாது. காந்தி, அவர் வாழ்ந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் லட்சிய வடிவம்.”  



எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் ‘அரசியல் காந்தியே’ அதிகமும் விவாதிக்கப்பட்டார். இடதுசாரி எழுச்சி, தலித் அமைப்புகளின் வளர்ச்சி காந்தியை முழுக்க எதிர்மறையாக அணுகின. ஆகவே ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்திற்குள் அவரை நுணுகி ஆராயும்  மயிர்பிளக்கும் விவாதங்கள் அதிகமும் நிகழ்ந்தன. அறிவு சூழலுக்கு வெளியே காந்தி பரவலடைவார் என்பதை எவரும் கணித்திருக்க முடியாது. மரபான காந்திய அமைப்புகளும் ஆசிரமங்களை அதை தோற்றுவித்தவர் மறைந்ததும் வலுவிழந்து போவதை தான் நாம் காண்கிறோம். உதாரணமாக ஏப்ரல் 2006 இதழில்  தியோடர் பாஸ்கரன் எழுதிய ‘காந்தியும் கிறிஸ்துவும்’ எனும் கட்டுரை வேலூர்- திருப்பத்தூரில் ஆசிரமம் அமைத்து தொண்டாற்றிய மருத்துவர் சவுரிராயன் யேசுதாசனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தேசிய கண்ணோட்டம் கொண்ட கிறிஸ்தவர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு காலனிய காலகட்டத்து கிறிஸ்தவ மைய நீரோட்டத்திலிருந்து விலகி இத்தகைய ஆசிரமங்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை தோற்றுவித்தவர் மரணமடையும் போது அந்த அமைப்பும் செயலற்று போகின்றன. உலகமயமாக்கலுக்கு பிறகு ஒருவகையில் காந்தியும் ‘பிராண்ட்’ ஆக ஆனார்.  காந்தி இப்படி புதிய தலைமுறையினரிடம்  பரவலாவதை அவரை எதிர்க்கும் அரசியல் தரப்புகள் எரிச்சலுடன் எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆகவே காந்தியை அரசியல் ரீதியாக நிராகரிக்க வேண்டிய காரணங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அவை ஏற்கனவே அறுதி உண்மைகளாக அவர்களால் கருதப்பட்டவை. 2005 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் நெய்தல் கிருஷ்ணனும் பிரசன்னாவும் எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் இதை காட்டுகின்றன. இரா. முருகானந்தம் பிரசன்னாவின் கட்டுரையை சிலாகித்து எழுதியிருக்கிறார். ஜனவரி 2006 இதழில் காந்தியை மதிப்பிடுவது சார்ந்த விவாதத்தில் பிரசன்னா எழுதுகிறார் ‘அவர் பெரிதும் பாராட்டப்படுவது அவர் குறையற்றவர் என்பதால் அல்ல, ஒரு சாதாரண மனிதன், ஏசுவைப் போன்றோ புத்தரைப் போன்றோ ஐன்ஸ்டைனைப் போலவோ கடவுளின் குழந்தையாகவோ பிறவி மேதாவியாகவோ பிறக்காமல், தன் முயற்சி மற்றும் ஆத்மசக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையடைந்தார் என்பதால்.’ காந்தி மீதான அரசியல் விமர்சனங்கள் இந்த தலைமுறைக்கு பெரிய விஷயமாக இல்லை. அவரை காபந்து செய்ய வேண்டும் எனும்  ஏதுமற்றவர்கள்.  அரசியல் வரம்பிற்குள் அவரை விமர்சித்து நிராகரிக்கும் தலைமுறைக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட காந்தியிடமிருந்து ஊக்கம் பெறும் தலைமுறையினருக்கும் இடையேயான உரையாடலாக இதை காண முடியும். தி. அ. ஸ்ரீனிவாசன் திருச்சி கருப்பையாவிற்கு எழுதிய மறுப்பில் ‘போயர்’ என்பது ஆப்பிரிக்க பூர்வகுடி எனும் நம்பிக்கை வெளிப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அது அப்படி அல்ல என்பதை விளங்கியதை வாசிக்கும்போது வேடிக்கையாக இருந்தது. காந்தியை விமர்சிப்பதில் நமக்கு இருக்கும் முன்முடிவுகளும் அவசரங்களும் எத்தகையது என்பதற்கு சிறந்த உதாரணம் . அருந்ததி ராய் காந்தி வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் அதே எண்பதுகளின் திரைக்கதையை மீள கொண்டுவருகிறார். அன்னா ஹசாரே இயக்கம் உட்பட மத்திய வர்க்கத்தினரின் எழுச்சிகளை எளிதில் புறந்தள்ளுகிறார். காந்திய ஈடுபாடும் அவருக்கு அப்படியான மோஸ்தராக தான் தென்படுகிறது. 



 

இந்த உரையாடலும் நன்மையையே விளைவித்தது. இந்த புதிய தலைமுறை இளைஞர்களில் ஒரு சாரார் என் ஜி ஓ  செல்கிறார்கள். சிறிய எண்ணிக்கையிலானவர்கள் காந்தியை ஆழ்ந்து அறிய தொடங்கினார்கள். இதே பிரசன்னா தான் ஆகஸ்ட் 2014 இதழில் ‘அருந்ததி ராயின் காந்தி’ என அவருக்கு வலுவான மறுப்பை எழுதுகிறார். “திரைக்கதை எழுதும் அவருடைய திறமையைப் பயன்படுத்தித் தலித்துகளின் எழுச்சி என்ற வரலாற்றில் காந்தியின் ‘வில்லத்தனமான’ பங்கைப் படிப்படியாக அடுக்குகிறார். இந்தச் செயலில் அவரும் இந்துக்களின் மரபார்ந்த பழக்கமான தொன்ம உருவாக்கலில் தான் ஈடுபடுகிறார். அவருடைய கட்டுரையிலிருந்து அம்பேத்கரைவிட காந்தியைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்கிறோம். அதுவும் ராய் நமக்குக் காட்ட விரும்பும் காந்தியை. ராயின் நாடகத்தில் காந்தி ஒரு துராத்மா. அவர் ஒரு பொய்யர். மனுவாதி. நிற வெறியர். அம்பேத்கருக்கு எதிரான சதிகாரர்.”    



பிரசன்னாவை போலவே சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம், த. கண்ணன் போன்றோர் காந்தியை அரசியல் ரீதியாகவும் முன்வைக்கும் வலுவான குரல்களாக ஆயினர். காந்தியின் குறைகளை, தளைகளை ஏற்றுக்கொண்டு அவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அதிகம் முன்னிறுத்துபவர்களாக ஆயினர். அசிஷ் நந்தி, ராமச்சந்திர குஹா, மகரந்த் பரஞ்சபே போன்றோர் வழி காந்தியை நெருங்கினர். ‘காலச்சுவடு’ இந்த தலைமுறையை உருவாக்கியது என்று சொல்வதை விட இப்படியான தலைமுறையின் இருப்பை கண்டுகொண்டு அவர்களுக்கான வெளியை அமைத்து கொடுத்தது என்பதை சொல்ல வேண்டும். அரசியல் காந்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதில் காலச்சுவடின் பங்கு முக்கியமானது என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்துத்துவ எழுச்சியின் பின்புலத்தில் அரசியல் காந்தி மறுவாசிப்பு செய்யப்படுகிறார், மீள கண்டடையப்படுகிறார். 2010 முதல் ஏழெட்டு ஆண்டுகள் இணையத்தில் தீவிரமாக செயல்பட்ட இன்னொரு பெயரையும் குறிப்பிட வேண்டும். ராட்டை ரகு சமூக ஊடகங்களில் போகிற போக்கில் காந்தி மீது குவிக்கப்படும் அவதூறுகளுக்கு அயராமல் தரவுகளுடன் பதில்  அளித்தார். இன்று அவை கணிசமாக குறைந்ததற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்று எண்ணுகிறேன். 



ஒரு சிந்தனை எப்படி சமூகத்தில் ஊடுருவுகிறது என்பதை கவனிப்பது சுவாரசியம். கோட்ஸே என்பவர் தனி மனிதர் அல்ல, அதே விளைவை விரும்பிய திரளின் பிரதிநிதி எனும் பார்வை எனக்கு உண்டு. இந்த பார்வையை நான் வந்தடைய முக்கியமான காரணம் தேவி பாரதியின் ‘பிறகொரு இரவு’ குறுநாவல். காவல்துறையினரும், அரசியலில் அவர் பெயரை சொல்லி ஆதாயம் பெறுபவர்களும்  காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் வெளிப்படும்.  ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ எனும் சிறப்பு பகுதி வெளியாகிறது. தி. அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் அசிஷ் நந்தியின் நீள் கட்டுரை ‘இறுதி சந்திப்பு’ அந்த இதழில் தான் வெளியானது. இக்கட்டுரை வெளியாவதற்கு பதிமூன்று ஆண்டுகள் முன்னர் தி.அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த நந்தியின் இன்னொரு கட்டுரை ஏப்ரல்- ஜூன் 1995 காலச்சுவடு இதழில் வெளியானது. இன்று அக்கட்டுரையை வாசிக்கும்போது மனம் உவகை கொள்கிறது. நந்தியை தமிழ் சிந்தனை பரப்பில் அறிமுகப்படுத்தியது காலச்சுவடின் மிக முக்கியமான பங்களிப்பு என்று கருதுகிறேன். 

‘காந்தியும் கோட்ஸேயும் இந்தியாவின் எதிர்காலம்’ கட்டுரையில் கோட்ஸேயை தனித்த வெறியனாக சித்தரிக்க முயல்வதற்கு மாறாக அவனை ஒரு தரப்பின் பிரதிநிதியாக நிறுத்தி காட்டுகிறார் நந்தி. கோட்ஸேயுடைய அரசியல் வாழ்க்கை 30 களில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமையில் தொடங்கி அவரை சுடுவதற்கு முன்பான வணக்கத்துடன் முடிவடைந்தது என்கிறார். காந்தியை கொன்றதற்காக கோட்ஸேவை விமர்சிக்கும் ஆர்தர் கோஸ்லர், ஆர்வல் போன்றோரிடம் கூட கோட்ஸேவுடைய அதே சிந்தனையே வெளிப்படுகிறது என்கிறார். கோட்ஸே பகுத்தறிவுவாதி, அறிவியலை நம்புபவன், சீர்திருத்தவாதி, தயவு தாட்சண்யமற்ற அரசியலை முன்னிறுத்துபவன். அவன் உண்மையான காரண காரிய அறிவு சித்தாந்தத்தின் நவீன பிரதிநிதி.  அதிநவீன இந்துவாக பிரகடனப்படுத்திக்கொண்ட அவன் இந்தியா சமய சார்பற்ற இனவேறுபாடாற்ற நாடாக திகழ வேண்டும் என்று விரும்பினான். இன்றுவரை ஆர். எஸ்.எஸ் நிலைப்பாடு அதுவே.  காந்தி இவற்றுக்கு நேர் எதிரானவர். அந்த கட்டுரை இப்படி முடிகிறது ‘நவீன உலகின் சார்பாகவும் அதன் ஆர்வல்கள்  கோஸ்லர்கள்  மற்றும் கிஸ்ஸிங்கர்கள்  சார்பாகவும்  காந்தியை கொலை செய்வதைத்தவிர கோட்ஸேவிற்கு வேறு வழியில்லை. காந்திக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோட்ஸேவை விரட்டி ஓட்டுவதற்கு மரணத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு உகந்த வழி இல்லை.’ ஜி. நாகராஜனின் ‘கிழவனின் வருகை’ சிறுகதை கோட்ஸே குறித்த இத்தகைய பகுப்பாய்வை நந்தி எழுதுவதற்கு பலகாலம் முன்னரே முன்வைக்கிறது. நவீனத்துவம் காந்தியை புரிந்துகொள்வதில்  எதிர்கொண்ட சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கர், பெரியார், சாவர்க்கர் உட்பட காந்தியை விமர்சித்த தரப்புகள் நவீனத்துவ தன்மை கொண்டவை என தோன்றுகிறது. இந்த கட்டுரை 1995 ல் என்னவகையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்? காலச்சுவடு வெளியிட்ட கோட்ஸே ஆதரவு கட்டுரையாகவே இது பொருள்பட்டிருக்கும்.   விமர்சனங்களுக்கு பதில் எழுதும் முகமாக தி. அ ஸ்ரீனிவாசன் டிசம்பர் 1995 இதழில் ஒரு குறிப்பு எழுதுகிறார்.  கோட்ஸே நகர்ப்புற, நவீனமயமான, உயர்சாதி மேற்கத்திய வயப்பட்ட தனியான சலுகைகள் வேண்டும் என கோரும் தரப்பின் பிரதிநிதி எனும் நந்தியின் கூற்றை சுட்டிக் காட்டுகிறார்.  காந்தியோ கிராமப்புற சாமானியர்களின் தரப்பை சார்ந்தவர். அவர்களது அறியாமையை வளர்ச்சிக்கான தடையாக காணும் மேட்டுக்குடியினரின் தரப்பு தான் கோட்ஸே எனும் நந்தியின் பார்வையை  விளக்குகிறார். 2008 ஆம் ஆண்டு இதே கோணத்தை விரிவாக பேசும் நந்தியின் கட்டுரை வெளியானபோது இத்தகைய எதிர்வினைகள் வரவில்லை. நந்தியின் கோணம் அறிவு சமூகத்தில் பொது ஏற்பு பெற்றுவிட்டது என்பதையே இது குறிக்கிறது.



 ‘இறுதி சந்திப்பு’ கட்டுரையின் பேசுபொருளை மட்டும் முன்வைத்து தனியாக இன்னொரு கட்டுரை எழுத முடியும். “கிருஷ்ணனுக்குக் கம்சன் எப்படியோ அப்படித்தான் காந்திக்குக் கோட்சேயும். ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் என்றாலும் இருவரும் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், கம்சன் கிருஷ்ணனை அறிந்திருந்த அளவுக்கு அர்ஜுனன் கிருஷ்ணனை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வெறுப்பு அன்பைக் காட்டிலும் பிணைப்பு மிகுந்தது. அன்பு பார்வையை மழுங்கச் செய்யும்; வெறுப்போ அதைக் கூர்மையாக்கும்.” எனும் டி.கே. மகாதேவன் மேற்கோளோடு தொடங்குகிறது கட்டுரை. “அரசியல் படுகொலைகள் ஒவ்வொன்றும் கொலையாளியும் அவனுக்குப் பலியாகுபவரும் இணைந்து கூட்டாகத் தயாரித்தளிக்கும் ஓர் அறிக்கை.” எனும் வரியொரு தீர்க்க தரிசனம் போல ஒலிக்கிறது. காந்தி எதை மாற்ற முயன்றார் என விவாதிக்கும் பகுதி மிகவும் முக்கியமானது.  இந்தியாவின் பாரம்பரிய அதிகார அமைப்புக்குக் காந்திய அரசியல் தரப்பு  இரண்டு தளங்களில் ஆபத்து விளைவிப்பவையாக பார்க்கப்பட்டன. இந்தியச் சமூகத்தின் மையமும் விளிம்பும் எவை? அவற்றின் வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் காந்தியின் முயற்சிகள் முதல் ஆபத்து. இரண்டாவது, சமூகத்தின் உள்ளோட்டமாக இருந்த ஆண்மை, பெண்மை பற்றிய கருதுகோள்களின் மீதான அவரது மறுதலிப்பு. அறிவு புனிதமானதாகவும் பிராமணியத்தன்மைகொண்டதாகவும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சாரப் பின்புலத்தில், கருத்துக்குச் செயலினும் மேலான புனிதத் தன்மை அளிக்கப்பட்ட ஒரு சூழலில் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஏற்காமல் அதற்கு மாறாக  இந்திய அரசியலை அறிவுஜீவித்தனத்திலிருந்து விடுவிப்பதே அவரது முதல் குறிக்கோளாக  இருந்தது என நந்தி எழுதுகிறார். 


காந்தியச் சிந்தனையின் இன்னொரு முக்கிய அம்சமாக நந்தி கவனப்படுத்துவது, மனித சமூகத்தைப் பண்படுத்தும் சக்தியாகப் பெண்மையை அவர் கண்டறிந்ததை தான். ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருதரப்பின் ஆண் அடையாளத்திற்குள் பெண்மையின் அம்சங்களான ஆக்கிரமிக்காத தன்மை, அரவணைக்கும் குணம், அஹிம்சை, இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் 'கலந்து' செயல்படும் தன்மை போன்றவற்றை விரிவுபடுத்தக் காந்தி முயன்றார் என்கிறார். காந்தி பாலியலைக் கடந்த, இந்து சமய மகாத்மாவாக மட்டுமின்றி, கிறித்தவத்தில் புனித பிரான்ஸிஸ்ஸைப் போலக் கிறித்துவின் மணப்பெண்ணாகவும் இருக்க விரும்பினார் என்று கூறுகிறார்.  நாதுராம் கோட்ஸே தனக்குள்ளிருந்த பெண் தன்மையை அழித்து ஆண் தன்மையை முன்னிறுத்தியவன். நாதுராம் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு மூக்குக் குத்தப்பட்டு வளையம் (நாத்) இடப்பட்டது. இதனால் ராமச்சந்திரா என்னும் இயற்பெயர் கொண்ட அவன் நாதுராம் என்று அழைக்கப்படலானான். அவனுக்கு சிறுவயதில் குறிசொல்லும் திறன் இருந்து வளர்ந்து அவனது சமூக பார்வை விரிவடையும் போது அது மறைந்துவிடுகிறது. ஒருவகையில் இதை பெண் தன்மையின் அழிவு என கொள்ளலாம். அந்தராத்மாவின் சன்னமான ஆனால் திடமான குரல் காந்திக்கு ஒலித்தபடி இருந்ததை ஒப்பிட்டு நோக்க வேண்டும். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் தனக்குள்ளிருக்கும் பெண்மையை அழிக்கும் சித்திரம் நந்தியின் மேற்சொன்ன பார்வையின் நீட்சி என கொள்ள முடியும். காந்தி கொலையைப் பற்றி இப்படி எழுதுகிறார்.  “ஒரு சமூகத்தின் மையமாக இருப்பதை உடைத்தெறிந்து, புதியதொரு சுதந்திரமான சமூகத்தையும் பழமையின் சிதைவுகளிலிருந்து புதியதொரு அதிகார அமைப்பையும் ஏற்படுத்த முயன்றதன் மூலம், அச்சமூகத்தின் அதிகார மரபுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்த சக்தி ஒன்றைக் கட்டுக்குள் வைப்பதற்காக, அந்த மரபுகள் முயன்ற கதை இது என்று கொள்ளலாமல்லவா?” தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ கதைக்கு உந்துதலாக நந்தியின் கட்டுரைகள்  இருந்திருக்கக்கூடும் என தோன்றுகிறது. ஜனவரி 2008 காந்தி சிறப்பிதழில் தான் தேவிபாரதியின் கதையும் வெளிவந்தது. நந்தியை வாசிக்காமல் தேவிபாரதியின் வழியே நான் நந்தியின் கூற்றை சென்றடைந்திருக்கிறேன். 


ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பு பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் முக்கியமானது. காந்தி மீது அறிவுஜீவிகளுக்கு இருந்த விலக்கம் பற்றி யு.ஆர். அனந்தமூர்த்தியின்  ‘இன்றைக்கு இருக்கும் காந்தி’ கட்டுரை விவாதிக்கிறது. இன்றைய அறிவுஜீவிகளின் சிக்கலையும் காந்தி அவர்களிடமிருந்து வேறுபடும் இடத்தையும் பேசுகிறது. “அறிவு ஜீவிகளான நாம் நாலைந்து அடி முன்னால் எடுத்து வைத்ததுபோலத் தெரிந்தாலும், நாலைந்து அடி பின்னுக்குப் போயிருப்போம். ஆளுகிறவர்கள் யார் என நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்படி சற்றாவது பேசியிருப்போம். காந்தி சமூகம் மற்றும் தேசம் பற்றிய கேள்வியை ஒரு சம்சாரியின் நிலையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.” அனந்தமூர்த்தியின் அவதானிப்புகள் கூர்மையானவை. காந்திக்குத் தொழில்நுட்பவாதியின் குணம் இருந்ததாக குறிப்பிடும் அவர் காந்தியை ராமனுடன் ஒப்பு வைக்கிறார். புனைவு எழுத்தாளராக அனந்தமூர்த்தியின் சொற்கள் கூர்மையானவை. அவதானிப்புகள் துல்லியமானவை. “ஒரு தேசத்தை ஏககாலத்தில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பார்க்கும் வல்லமை காந்திக்கு இருந்தது” என்பது மிக முக்கியமான அவதானிப்பு. நம்மால் தேசமாக பார்க்கும்போது சமூகமாக பார்க்க முடிவதில்லை, சமூகமாக பார்க்கும்போது தேசமாக காண முடிவதில்லை.  காந்தி நம் துக்கங்களிலும் சங்கடங்களிலும் நிலைத்திருப்பார் எனும் அனந்தமூர்த்தியின் கூற்று அதன் உண்மையால் நிலைபெறுகிறது. நாதியற்றவர்களுக்குரிய போராட்ட வடிவத்தை கண்டடைந்தவராக  காந்தி என்றும் நினைவுகூரப்படுவார். 



சுற்றுச்சூழல், கடவுள் நம்பிக்கை, சத்தியாகிரகம், பொது வாழ்க்கை ஆகிய நான்கு தளங்களில் காந்தியின் தேவை இன்றுமுள்ளதாக அடையாளப்படுத்துகிறார் ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி இன்னும் தேவைப்படுகிறார்’ எனும் கட்டுரையில். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் எழுதிய ‘அறியப்படகுட காந்தி’ இந்த சிறப்பிதழில் எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த கட்டுரை. சில அசலான அவதானிப்புகளை கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.  ‘சுதேசியம் என்பது ஒரு சித்தாந்தம். கதர் என்பது சுதேசியத்தின் மையமான, பருண்மையான உண்மை. கதரில்லாத சுதேசியம் என்பது உயிரற்ற உடம்பு போன்றது. புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மட்டுமே அது தகுதியானது.' எனும் காந்தியின் மேற்கோளை கொண்டு காந்தி கொள்கையை உயிர் என்றும் நடைமுறையை உடல் என்றும் காணும் பொதுப்போக்கை எப்படி தலைகீழாக ஆக்குகிறார் என்பதை காட்டுகிறார். ஸ்டாலின் ராஜாங்கம் வழி நான் அறிந்துகொண்ட அயோத்திதாசர் வரலாறு என்பது இறுகிய பாறையல்ல, நெகிழ்வானது, காலந்தோறும் மாறுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். காந்திக்கும் வரலாறு குறித்து இத்தகைய பார்வையிருந்ததை அறியும்போது வியப்பாக இருந்தது. கிப்பனின் ரோம சாம்ராஜ்யம் எனும் வரலாற்று நூலை காட்டிலும் மகாபாரதம் மேலானது என காந்தி கருதியதாக கிருஷ்ணன் எழுதுகிறார்.  “உண்மைக்கும் புனைகதைக்குமான இடைவெளி மிகவும் குறுகியது. வரலாறே இல்லாத நாடுதான் மகிழ்ச்சியானதென்று தான் கருதுவதாகவும்” காந்தியின் சிந்தனைகளை பற்றி கிருஷ்ணன் எழுதுகிறார். வரலாறு ஆயுதமாக பயன்படக்கூடும் எனும் புரிதல் காந்திக்கு இருந்ததாக தெரிகிறது. கலை குறித்து காந்திக்கும் ராமச்சந்திரனுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் இன்றும் விவாதத்திற்கு உரியது. ‘எப்போது மனிதன் சத்தியத்தில் அழகைக் காண முடிகிறதோ அப்போதுதான் உண்மையான கலை உருவாகும்' என்பதே அவர் நோக்கில் கலைக்கான வரையறை. 'சத்தியத்தையும் அழகையும் பிரிக்க முடியாதா?' என்னும் ராமச்சந்திரனின் கேள்விக்குக் காந்தியின் பதில் 'உண்மையைத் தவிர அழகானது ஒன்றுமில்லை. ஆனால், உண்மை பல விதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.’ வி. ராமமூர்த்தி காந்தியின் கடைசி  இருநூறு நாட்கள் நூலுக்கு எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது. சுகுமாரன் மொழியாக்கத்தில் அம்பேத்கர் பார்வையில் காந்தியம் எனும் அப்துல் மஜீதின் கட்டுரை இதே இதழில் வெளியாகியுள்ளது. காந்தியத்தை விமர்சன நோக்கில் அலசுகிறது. 


தமிழ் காந்திய எழுத்துக்களில் 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பிதழுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று நம்புகிறேன். ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ நூலில்  நந்தி, குஹா போன்றோரின் தாக்கம் வெளிப்படுகிறது.  2008 சிறப்பிதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன. 2020, 2023 சிறப்பிதழ்களில் அணில் நூரியா, திரிதீப் சுஹ்ருத் போன்றோரின் ஒருசில கட்டுரைகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பிற கட்டுரைகள் அனைத்துமே அசலானவை. காந்தியை பற்றி பேசவும் எழுதவும் சில அசலான குரல்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகியுள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்த குரல்கள் இங்கு நிலைபெற வேறு பல ஆளுமைகள் காரணிகளுடன் சேர்ந்து  காலச்சுவடு இதழும்  நிச்சயம் முக்கிய  பங்காற்றியுள்ளது என சொல்ல முடியும். 


காந்தி சிறப்பிதழ்களை தவிர கணிசமாக காந்தியை குறித்து எழுதப்பட்டுள்ளன. அவ்வப்போது விமர்சனபூர்வமான எழுத்துக்களும் பதிவாகியுள்ளன. ப்ரேமின் காந்தியை கடந்த காந்தியம் புத்தக பகுதி இரண்டு கட்டுரைகளாக பிரசுரமாகியுள்ளன. நவம்பர் 2018 இதழில்  ‘காந்தியால் தொடங்கிய தலித்துகளுக்கான பள்ளிகள்’ எனும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை காந்தியின் அரசியல் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயல்தளத்தில் அவரை மதிப்பிட முனைகிறது. “மதுரையின் கீழடி போன்ற பண்பாட்டுப் பெருமையோடு இணையும் நம்முடைய உளவியல், சேவாலயம் போன்ற சமூகப் போராட்டப் பெருமையோடு இணைவதில் தயக்கம் கொள்கிறது. ஏனெனில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குப் பிம்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நமக்கு அது தொந்தரவாய் இருப்பதில்லை. வரலாற்றில் நிகழ்ந்துவிட்டதால் மட்டுமல்ல அதை ஆதரிக்கிறோமோ இல்லையோ அவ்வாறு நடந்தது என்ற அளவிலாவது பலவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குச் சொல்லப்படும் ‘முற்போக்கு’ வரலாறு முற்றிலும் அரசியல் மயப்பட்டது. இதையெல்லாம் தாண்டி காந்தியர்களும் இக்களத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை வரலாற்று நிலை கருதியாவது தலித்துகள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்பலாம்” என எழுதுகிறார். நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ எனும் கட்டுரையில் ‘ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை அனுமதிக்க’த்  தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன’ என்று எழுதுகிறார். தலித்துக்கள் மதுவிலக்குக்காக நடத்திய பத்திரிக்கைகள், சங்கம் குறித்தும் காந்தி- இராஜாஜி ஆகியோர் மதுவிலக்கு சார்ந்து ஆற்றிய பணிகள் குறித்தும் பேசுகிறது. ஜனவரி 2010 இதழில் அரவிந்தன் ‘காந்தி ஏன் உப்பை எடுத்தார்?’ எனும் கட்டுரையில் உப்பின் குறியீட்டு முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஆகஸ்ட் 2017 இதழில் ‘ காந்தி கண்ட பாரதி’ கட்டுரையில் ய மணிகண்டன், பாரதி நடத்திய பாலபாரதம் இதழ் பற்றிய அறிவிப்பு காந்தியின் தென்னாபிரிக்க பத்திரிக்கையான இந்தியன் ஒபினியனில் வெளிவந்துள்ளது என்பதை எடுத்து காட்டுகிறார். தற்போது சித்ரா பாலசுப்பிரமணியம் மதிப்புரைகள், காந்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 



காந்தியை பற்றிய கட்டுரைகளைத் தவிர்த்து ராமச்சந்திர குஹா, அசிஷ் நந்தி, கணேஷ் தேவி, ஜி.எஸ். லட்சுமண அய்யர், நிர்மல் வெர்மா  போன்ற முக்கியமான காந்திய ஆளுமைகளுடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்லால் பகுகுணா, ஈரோடு ஜீவானந்தம், லட்சுமண அய்யர், லாரி பேக்கர், தரம்பால், க.மு நடராஜன், சசி பெருமாள் போன்ற காந்திய ஆளுமைகளுக்கு விரிவான அஞ்சலி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒட்டும

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2025 03:09

January 11, 2025

டாங்கோ - குணா கந்தசாமி- வாசிப்பு

 


குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும்.  இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது. 


குணாவிடம் சம்பத் கோபிகிருஷ்ணன் போன்ற இருத்தலியல் எழுத்தாளர்களின் சாயல் உண்டு. வெறுமையும் தனிமையும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. ஆனால் அக்காலகட்டத்து எழுத்துக்களில் இருந்து குணா வேறுபடும் புள்ளியை தொட்டு காட்ட வேண்டும். முந்தைய காலகட்டத்து வெறுமை பொருளியல் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடர்புடையது. சுராவின் உருவகத்தை கடன்வாங்குவதென்றால் எதனாலும் நிறையாத ஒரு பள்ளம். “டாங்கோவின்” ஆனந்துக்கு என்ன தான் பிரச்சினை? அவனுக்கு என்ன தான் வேண்டும்? இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனால் எதையும் துய்க்க முடியும். பற்றாகுறை மட்டுமே நிலவிய கடந்தகாலத்தை கடந்துவிட்டான். ஆனாலும்  ஓரு பெரும் வெறுமை அவனை சூழ்கிறது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவனுக்கு முடியவில்லை. சுயேச்சையை கொண்டு அவன் செல்வது தன்னழிவின் பாதையை. அவனது வெறுமையும் தனிமையும் நுகர்வால் நிறையாதது. அவனுக்கு பெண் உடல் தான் வேண்டுமா? அதை அடைகிறான். ஆனால் அவனுக்கு அது நிறைவை தரவில்லை. அவன் வளரும் போது உடனிருக்காத தந்தையையும் தாயையும் தேடுகிறான். ஒரு குடும்பத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறான். பள்ளி கால தமிழ் ஆசிரியர் ராகவன், கல்லூரி ஆசிரியர், ஸ்பானிய பத்தி எழுத்தாளர் மத்தியாஸ், அடுக்கக உரிமையாளர் கிரிஸ்டோப் என வயதில் மூத்த அத்தனை பேரிடமும் தந்தையை கண்டடைய முற்படுகிறான். இந்திய முகமே தென்படாத சிறிய கடற்கரை நகரமான உருகுவே நாட்டின் மாண்டி வீடியோவில் அவன் காணும் காந்தி சிலை கூட அவனுக்கு தந்தையின் வடிவமாக தான் இருக்கிறார். அவர் முன்னால் லாகிரி பயன்படுத்தியதற்காக கூசுவான். அவரது இருப்பு அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. காந்தி அவனுக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள தூண்டுகிறார். தன்னழிவின் பாதையிலிருந்து மீண்டு வர அவரது இருப்பும் உதவுகிறது.  


நாவல் ஒரு தளத்தில் உறவின் கூடலையும் பிரிவையும் பேசும் காதல் கதை. இன்னொரு தளத்தில் குடும்ப அமைப்பை பற்றிய உரையாடல் நிகழ்கிறது. அதுவே இந்த நாவலின் சமூக தளம். இதற்கடுத்து மூன்றாவதாக ஒரு ஆன்மிக அடுக்கும் உள்ளது. இருத்தல் குறித்த விசாரணை ஒரு சரடாக நாவல் முழுக்க வருகிறது. இருத்தலியல் பிரதிகள் போல சூனியத்திற்குள் சென்று முட்டிக்கொள்ளாமல் மேலெழுகிறது.  ஆன்மிகம் என்பது தன்னை கண்டடைதல் தான். தன்னை கண்டடைய தனக்குள்ளிருக்கும் இருளை எதிர்கொண்டு கடக்க வேண்டும். 



ஆனந்த் வாழ்வில் சந்தியா வருகிறாள். திருமண முறிவிலிருந்து மீண்டவள் இன்னொரு உறவுக்குள் வர தயாராக இல்லை. எந்த உறுதியும் கோராத, எந்த பிணைப்பையும் ஏற்காத உறவே அவளுடைய தேர்வு. குடும்பம் எனும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவள். சந்தியாவால் தன் வாழ்வு பொருளுடையதாக ஆவதை உணர்கிறான். அவளது அண்மையில் தன்னை ஒழுங்குக்குள் கொணர்ந்து பேணி கொள்கிறான். அவனை விட்டு சென்ற பிறகு திரும்பவும் இருளில் மூழ்குகிறான். இயல்பான நட்புடன் பழகி வந்த  வேசையின் மீது திடிரென்று நாட்டம் கொள்கிறான். அவனது பள்ளத்தை உடலால் நிறைக்க முயல்கிறான். உடல் நலம் குன்றிய ஓரிரவில் அவன் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்து செல்லும் இடம் நாவலின் மிக முக்கியமான தருணம். அவள் இரு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறிந்து கொள்கிறான். அதற்கு பின் அவளை நாடவில்லை. பல வகைகளில் பொருள் படதக்கது. அதுவரை பெண்ணாக தெரிந்தவள் தாயாக தன்னை வெளிப்படுத்துகிறாள். பிரபஞ்சத்தை தனது தோழமையாக வழிகாட்டியாக உணரும் புள்ளியில் நாவல் நிறைவடைகிறது. 


“டாங்கோ” இருவர் ஒன்றாகும் ஒருவித நடனம். மரபான குடும்ப அமைப்புக்கு மாற்றான புதிய அமைப்பிற்கான உருவகமாக வாசிக்க முடியும். ஆன்மிக தளத்தில் இருமையொழிந்த நடனம் என்பதையும் குறிக்கிறது. நாவலின் முற்பகுதிகளில் வரும் கிறிஸ்டோப் மத்தியாஸ் ராகவன் எம்கே போன்ற பாத்திரங்கள் வழியாக குடும்ப அமைப்பின் மாறிவரும் இயங்குதளம் குறித்த ஒரு உரையாடல் நடக்கிறது. என்னளவில் அந்த பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த உரையாடலை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். கிறிஸ்டோப் குடும்பம் என்பது பாலியல் அமைப்பு அல்ல சமூக அமைப்பு என சொல்கிறார். பாலியல் சுதந்திரத்தை அனுமதிக்கும் சமூக அமைப்பாக குடும்பம் உருமாற முடியுமா என்றொரு கேள்வி எழுகிறது. ஏறத்தாழ ஆனந்தை போலவே தனியனாக இருப்பவர் மத்தியாஸ். இறந்து போன சகோதரியின் மகளை பேணும் பொறுப்பு அவரிடம் வந்ததும் பொறுப்புடன் நடந்து கொள்ள தொடங்குகிறார். கிறிஸ்டோபின் கூற்றை வலுப்படுத்தும் சித்திரமாக இதை காண முடியும். 


நாவலில் நிலம் முக்கிய பங்காற்றுகிறது. இரவு விளக்கில் மின்னும் நீர்பரப்பின் சித்திரம் அபாரமாக உள்ளது. றாம்பாலா காந்தியை கண்ணில் காண முடிகிறது. நாவலுக்குள் காந்தியின் இருப்பு ஆனந்துக்கு வாழ்வை பொருளுடையதாக ஆக்கிக்கொள்ள உந்துகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற சுயகூராய்வு நாவல் என்பதே ‌ இந்த நாவலின் வடிவம். அதுவே இதன் எல்லையும் கூட. அஜிதனின் ‘மைத்ரியுடன்’ பலவகையிலும் ஒப்பிடலாம். இரண்டு நாவல்களும் அபாரமான நிலைக்காட்சி விவரணை கொண்டவை. ஒரு பெண் வழியாக தன்னை கண்டடைவது என்பதை முன்வைப்பவை. மைத்ரி கொந்தளிப்பான மொழியில் உறவையும் பிரிவையும் சொல்கிறது என்றால் ‘டாங்கோ’ ஆர்பாட்டமற்ற அடங்கிய மொழியில் விலகிய தொனியில் அணுகுகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற தன்னை நோக்கும் நாவல்கள் தான் இரண்டுமே. வேறுபடும் புள்ளிகளும் உண்டு. சமகாலத்தின் வெறுமையை இருவிதமாக அணுகியுள்ளார்கள் என்று சொல்ல முடியும். விமர்சனம் என்பது பிரதியில் எது இல்லையோ அதை சுட்டுவது அல்ல. அதே போல் நான் எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பேன் என்று சொல்வதும் அல்ல. அப்படி சொல்லும்போது அது என்னுடைய பிரதியாகும். அவனது மீட்சி வலுவாக சித்தரிக்கப்படவில்லை என்பதை வேண்டுமானால் ஒரு விமர்சனமாக வைக்க முடியும்.  நல்ல நாவல் அளித்த குணாவிற்கு வாழ்த்துகள்.  

எதிர் வெளியீடு - புத்தகம் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2025 23:06

Suneel Krishnan's Blog

Suneel Krishnan
Suneel Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Suneel Krishnan's blog with rss.