Suneel Krishnan's Blog, page 8

April 8, 2021

இமாம் பசந்த்- சிறுகதை

கனலி சூழலியல் சிறப்பிதழில் வெளியான கதை. 

1

மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானுக்குப் படைத்து கணவன் மாங்கனி கேட்கும் போது சிவனே அளிப்பார். புனிதவதியின் கணவன் என்ன வகையைக் கொடுத்திருப்பான்? தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் அளித்தது இமாம் பசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கார்மேகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. சப்பரம் வரும் சர்ச் வீதியிலும் பாரதியார் வீதியிலும் மாம்பழ நெடி சொக்கியது. கார்மேகம் இளமையை மீட்டியபடி அந்தத் தருணத்தில் முழுமையாகத் திளைத்திருந்தான். மாடிகளில் இருந்து கூடைகூடையாக பழங்கள் கவிழ்க்கப்பட்டன. சிலர் தனித்தனியாக தூக்கி வீசினார்கள். உயரத்திலிருந்து எவர் கையிலும் வசப்படாமல் வீம்பாக குதித்த பழங்கள் கும்பலில் மிதிபட்டு தலை நசுங்கி கொட்டை பிதுங்கி சாறு கக்கி பரிதாபமாக கிடந்தன. கார்மேகத்துக்கு படபடத்தது. இயன்ற வரை எதன் மீதும் கால் வைக்காமல் நடந்தான். கூட்டம் நெட்டித் தள்ளியபோது அவன் கால் தவறுதலாக ஒரு மாங்கனியின் கொழகொழப்பை அறிந்தது. கால் கூசி சட்டென பின்னுக்கு இழுத்துக் கொண்டது. தனக்கு முன் இன்னும் எவர் கால்பட்டும் நசுங்காமல் கீழே கிடந்த மாம்பழத்தை கண்டபோது அவன் முகம் ஒளிர்ந்தது. அதை எடுக்க நகர்ந்தபோது, மாடியிலிருந்து வீசப்பட்ட மாங்கனி ஒன்று அவனுடைய கண்ணாடியை நோக்கி வந்துகொண்டிருந்ததை கவனிக்கவில்லை. கனியைப் பிடிக்கும் முயற்சியில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த நீலச்சட்டைக்காரர் கையைத் தலைக்கு மேலே ஏந்தி தாவி குதித்தார். அவருடைய முழங்கை தாடையில் குத்தியதில் கண்ணாடி பறந்து சென்று விழுந்தது. அவருடைய செருப்புக் காலில் மாங்கனி மிதிபட்டு நசுங்கியபோது உடல் விதிர்த்தது. ‘சாரிங்க’ என இடித்துத் தள்ளிக்கொண்டு பூரிப்புடன் கூட்டத்தில் கரைந்தார். ரேவதி ஊடே புகுந்து கண்ணாடியை மீட்டுக் கொடுத்தாள். ஒரு பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. நசுங்கிய பழத்தைப் பார்த்து ‘இமாம் பசந்த்’ என முனங்கிகொண்டான். 

கையைப் பிடித்து இழுத்து சாலையோரம் இருந்த திட்டில் அமரச் செய்தாள் ரேவதி. ‘சாமி நெல திரும்ப போவுது… மூணு மணி நேரமா உனக்கு ஒரு பழத்தப் புடிக்க துப்பில்ல... என்ன மனுசனோ… இங்கயே கெட இந்தா வாரேன்' என கத்திவிட்டு கூட்டத்திற்குள் புதைந்துபோனாள்.

ஆறு வருடங்களுக்கு முன் விடாது மழை ஊற்றிக்கொண்டிருந்த ஒரு தைமாத முகூர்த்தத்தில்தான் அவனுக்கும் ரேவதிக்கும் சோலையாண்டவர் கோயிலில் திருமணம். பரம்பரையாகவே வெள்ளிப் பட்டறையில் வேலை. அவன் தந்தை ஆறுமுக ஆசாரிக்குப் பற்பம் புடம் என மருத்துவக் கிறுக்கு. செவப்பட்டி வைத்தியருக்கு வெள்ளி பற்பம் செய்து கொடுக்கத் தொடங்கி அப்படியே ஆர்வமடைந்து மொத்தமாக திசைமாறினார். மூலிகை பறிக்க, மருந்து செய்ய என கார்மேகத்தையும் கூட்டிக்கொண்டு அலைவார். திருமண முகூர்த்தம் முடிந்து எவர் வீட்டுக் கல்யாணத்திலோ திருட்டு சாப்பாடு சாப்பிடுவதுபோல கடைசி பந்திக்கு அழுக்கேறிய உடைகளுடன் சாப்பிட வந்தபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்தது. ரேவதி அவனைச் சீண்டவேண்டுமென்றால் 'இப்படியாப்பட்ட மாமனார் உலகத்துலயே வேற எவளுக்கும் இல்ல' என கொளுத்திவிட்டால் போதும். வேறு எல்லாவற்றையும் கடந்து செல்லும் அவன் அப்பன் மீதான வசையை மட்டும் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்கும் நன்கு தெரியும்.

குழந்தைக்காக அலைந்து ஓய்ந்து போதுமென களைத்துப் போன சூழலில்தான் திருமல்ராய பட்டினத்தில் வாக்குப்பட்ட ரேவதியின் அக்கா மாங்கனித் திருநாளுக்கு அவர்களை வரச்சொன்னாள். "இம்புட்டு பழத்தக் கூடையில அள்ளிக் கொட்டுங்க… புறவு வீசி எறியிற பழத்த புடிச்சு வேண்டிக்கிட்டு திண்ணுங்க… தன்னால புழுபூச்சி உண்டாவும்" என்றாள். மேற்கொண்டு இப்படி நேர்த்தி கடன் நிறைவான பலருடைய கதைகளை தன் கூற்றுக்குச் சான்றாக சொன்னாள்.

கார்மேகத்திற்கு திருமணமான அந்த ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டுதான் மாங்கனி திருநாள் பழையபடிக்கு நிகழ்கிறது என்பதால் பெரும் கூட்டம். மாங்கனித் திருநாளுக்கு வர கார்மேகம் ஒப்புக்கொள்ள குழந்தைபேறின் மீதான ஆர்வம் என்பதைக்காட்டிலும் மாம்பழக் கிறுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லலாம். வீட்டிலேயே பாதிரி, பங்கனப்பள்ளி என ஒட்டுகண்ணுகளை நட்டு வளர்த்திருந்தான். திருமணப் பரிசாக அவனுக்கு மிகவும் பிடித்த இமாம் பசந்த் கன்றை ரேவதி திருமணம் முடித்து வீட்டுக்குள் நுழைந்த அன்று அவள் கையால் நடச்சொன்னான். மழை நீரில் கொவர்த்த மண்ணில் புதுப்புடவையில் எரிச்சலுடன் வேறுவழியின்றி கன்றை நட்டுவந்தாள்.

நீலம், ருமானி, கல்லாம, காதர், மல்கோவா என எத்தனை வகைகள் இருந்தாலும் மாம்பழங்களின் சக்கரவர்த்தி இமாம் பசந்த் தான் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ரேவதிக்கு இமாம் பசந்தோ ருமானியோ எதுவானாலும் மாங்காய் அல்லது மாம்பழம் மட்டும் தான்.‌ மதியச் சோறு மாம்பழம் இல்லாமல் அவனுக்கு இறங்கவே இறங்காது. அதுவும் அவனுக்கு மாம்பழத்தை நாகரீகமாக இப்படி வெட்டி துண்டுகளாக்கி உண்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. முழு பழத்தையும் தோலோடு உறிஞ்சி உண்பான். இந்தப் பித்தை ஆறுமுகத்திடமிருந்து தான் அவன் பெற்றுக்கொண்டான். அத்தனை நாட்டு வகைகளையும் தேடித்தேடி உண்பான். 'தோல் தடிச்சிருந்தா சூடு குறைவு உடம்புக்கு நல்லது ஆனா ருசி கம்மியாருக்கும்' 'நார்சத்து கூட இருந்தா வயித்துக்கு நல்லது ஆனா வாய்க்கு உகக்காது' என்று ஒவ்வொரு பழத்தைப் பற்றியும் சொல்வார். தெளிவாக இருந்தவர்தான் ரச மணி செய்கிறேன் பேர்வழி என மூச்சு திணறி மயங்கி விழுந்ததிலிருந்து வீட்டுள் கால் தரிப்பதில்லை.

ரேவதிக்கு தனது மாம்பழ ஞானத்தைப் புகட்டலாம் என கனவுகொண்டிருந்தான். ஆனால் அந்த ஆண்டு மாம்பூ பூத்து மாம் பிஞ்சாகி மாவடுக்களாகவே மரத்திலிருந்து உதிர்ந்தன. மாங்காயாகக் கூட ஆகவில்லை. மருமக வந்த ராசி மாமரம் பட்டுபோச்சு என மாமியார்காரி புலம்பியதைக் கேட்டு அழுதுக்கொண்டிருந்தாள் ரேவதி. அவள் நட்டுவைத்த இமாம் பசந்த் ஆறிலைகளுக்கு மேல் வளரவும் இல்லை குன்றவும் இல்லை. அவனுக்கும் எதையும் விளக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தையில் கூட மாம்பழ வரத்து இல்லை என்பதை கவனித்தான். விசாரித்துப் பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதுவே கதை என்று அறிந்து கொண்டான்.‌ அப்போதிலிருந்து இப்போது வரை எல்லா மாம்பழப் பருவங்களும் இப்படியேதான் கடந்தன.

சித்திரை வைகாசியில்கூட புயல் அடித்தது. அந்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் வகைதொகையற்று பொழிந்தது.  மாதத்திற்கு இரண்டு புயல்கள் கரையைக் கடந்தன. பிறகு வந்த ஆண்டுகள் கடும் வறட்சி; அனல் கக்கியது. பெரும் பணம் கொடுத்து ஓரிரு கூடைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து திருவிழாவை பெயருக்கு நடத்தினார்கள். பிச்சாடனார் சப்பரத்தில் சவ ஊர்வலத்திற்கு வந்து செல்வதுபோல் சோபையிழந்து சுற்றிவிட்டு நிலை திரும்பினார். கடந்த ஆண்டு மேகங்களைத் திரட்டவும் பருவத்தே மழையைக் கொணரவும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விமானங்கள் செயற்கை மழையைக் கொணர்ந்தன. காலத்தே தருவிக்கப்பட்டது மழை.

இந்த ஆண்டு மாசி தொடங்கி மாங்காய்கள் வழக்கம்போல் பழுக்க தொடங்கின. ஆனி பவுர்ணமிக்கு வழக்கத்தைவிட அதிக மாங்கனிகள். மாங்கனி என்றில்லை பொதுவாகவே அந்தாண்டு நல்ல விளைச்சல். பயிர்கள் தழைத்தன. வழக்கமாக அரிக்கும் இலை பூச்சிகள் அந்தாண்டு வரவேயில்லை. ஒவ்வொரு மாதமும் மூன்று முறை பலூனை பறக்கவிட்டால் மாதம் மும்மாரி பொழிய வைக்கலாமே என யோசித்தான் கார்மேகம்.

ரேவதி கையில் மாம்பழத்துடன் வந்தாள். 'காசாலட்டா? இமாம் பசந்த் இல்லியா?' எனக் கேட்டதும் அவள் முகம் சுருங்கியது. 'இந்த வாயிருக்கே... சாமி பிரசாதத்துலயும் நொட்ட நொள்ள... நீயா போன... நாந்தானே போனேன்… உன்னால முடியலதானே… இதுக்கே பெரும்பாடு' என கூட்டத்தின் எதிர்திசையில் மாம்பழங்கள் கூழாகிக்கிடந்த பாதையைக் கடந்து நடந்தார்கள்.

'சாமிகிட்ட வச்சுட்டு துன்னுறு பூசிக்கிட்டு நல்லா மனசார வேண்டிக்கிட்டு நறுக்கி ஆளுக்குப் பாதியா சாப்புடுங்க' என்றாள் ரேவதியின் அக்கா. கண்ணை மூடி வேண்டிக்கொண்டு நறுக்கி அவனுக்கு அளித்தாள். பழம் உள்ளே சென்ற சில நொடிகளில் தலை கிறுகிறுத்தது.‌ நாக்கு சுர்ரென எரிந்தது.‌ உலகம் சுழன்றது. தரை நெகிழ்ந்தது. கால்கள் புதைந்தன. கார்மேகத்திற்கு அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. எங்கோ வெகு தொலைவில் என தேய்சலாக ரேவதியின் எக்காளச் சிரிப்பு ஒலித்தது. வெகு அருகில் அவனுக்குள்ளே, தலைக்குள்ளே, ஈசான மூலையிலிருந்து ஆறுமுகத்தின் குரல் ஒலித்தது. 'தம்பி நல்லா சாப்புடு'. சுழன்று எங்கோ என பறந்து கொண்டிருந்தான்.

2

கண்கூசும் வெள்ளை வெளிச்சம் சூழ்ந்த விசாரணை அறையில் கார்மேகம் அமர்த்திவைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் ஒரேயோரு கையடக்க கணினி இருந்தது.

எங்கிருந்து ஒலிக்கிறது என அறிய முடியாதபடி அறைக்குள் பெண் குரல் ஒன்று ஒலித்தது.

'காலை வணக்கம் திருவாளர். கார்மேகம் இந்த விசாரணை சட்ட காரணங்களுக்காக காணொளிப் பதிவு செய்யப்படுகிறது,' எனக் கூறிய அக்குரலில் கனிவு ததும்பியது. ஆறுமுகம் 'நீயும் ஒரு காலை வணக்கம் சொல்லுப்பா… நல்லாயிருக்காது தம்பி' என்றார். வாயை இறுக மூடிக்கொண்டான்.

'இன்று என்ன கிழமை'

'வெள்ளிக்கிழமை' என கம்மிய குரலில் சொன்னான். 'நல்லா பெலமா சொல்லுப்பா' என்றார் ஈசானியத்து ஆறுமுகம்.

'காலையில் என்ன உண்டீர்கள்'

'சோறும் மீன் குழம்பும்.' 'எளவு உப்புசப்பில்லாம இருந்துச்சு' என்று பின்பாட்டு பாடினார் ஆறுமுகம்.

'உங்களுக்கு இப்போது எத்தனை வயது'

‘53’

மாம்பழங்கள் தடைசெய்யப்பட்டது தெரியுமா?

‘தெரியும்.’ 'தெரியாது' என்றார் ஆறுமுகம்.

'எத்தனை ஆண்டுகளாகத் தடையுள்ளது என அறிவீர்களா?'

'இருபது ஆண்டுகளாக.' அவன் ஒவ்வொரு பதிலையும் பெரும் போராட்டத்தினூடேதான் சொல்ல முடிந்தது. ஆறுமுகத்தை கவனிக்காமலிருக்க முயன்றான்.

'உங்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ததில் தடைக்குக் காரணமான மாங்கனித் திருநாள் சம்பவத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதானே.'

'ஆமாம்'

'நன்றி. அப்படி இருந்தும் ஏன் தடைசெய்யப்பட்ட கனிகளை வைத்திருந்தீர்கள்?'

தலைகவிழ்ந்து மவுனமாக அமர்ந்திருந்தார். 'மாம்பழம்னா இஷ்டம்னு சொல்லுப்பா வாயதொறந்து... அட சும்மா சொல்லு... தப்பா எடுத்துகிட மாட்டாக' என்றார் ஆறுமுகம்.

எரிச்சலில் கையைத் தூக்கி நிறுத்து என சமிக்ஞை செய்தான். 'உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். எப்பவுமே உனக்கு கோவம்தான் சத்ரு. எனக்கென்ன வந்துச்சு' என்று மவுனமானார் ஆறுமுகம். 

'என்ன?'

'கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என சமாளித்தான்.

'விசாரணை முடிந்ததும் அளிக்கப்படும்'

'நன்றி'. 'என்னத்த நன்றி தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதவிங்க அடுத்த செம்மத்துல கெவுலியா பொறப்பானுவ' ஆறுமுகம் சீறினார்.

'இவை ஏன் தடைசெய்யப்பட்டன என தெரியுமா?'

'கொஞ்சம் தெரியும்.‌ அது கஞ்சாவைப்போல் லாகிரி வஸ்துவாக மாறிவிட்டது என்றார்கள்'

'ஓரளவு சரி. முழுவதும் உங்களுக்கு விளக்க வேண்டியது சட்டப்படி எங்கள் கடமை. ஆகவே சொல்கிறேன். மாங்கனிகளில் புதிதாக mangicide எனும் ரசாயனம் உருவானது. எப்படி இந்த மாற்றம் உருவானதென தெரியவில்லை. அது மெஸ்கால் போன்ற காளான் வகையில் கிடைக்கும் போதையை அளிப்பது. ஆகவே மாமரங்கள் அழிக்கப்பட்டன. மாங்கனிகள் தடைசெய்யப்பட்டன.‌ உங்களுக்கு இதில் ஏதேனும் ஐயங்கள் உண்டா?'

'இல்லை'. 'அதென்ன நொப்புடி மாத்தம் கண்டுச்சுன்னு தெரியல... தங்கம் தகரமா மாறும்... தகரம் தங்கமா மாறும் இதெல்லாம் ரசவாத வித்தை… எது எதுவாவேணாலும் மாறும்' ஆறுமுகம் ஆத்திரமாகச் சொன்னார்.

சட்டென எழுந்து நடந்தான் கார்மேகம். அவனுக்கு அந்தக் குளிர்ந்த அறையில் வியர்க்க தொடங்கியது.

'இந்த கனிகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தன?'

'அது எங்கப்பன் கணேசன் தகப்பன் சிவன்கிட்ட வாங்கின ஞானப்பழம்' என சொல்லி சிரித்தார் ஆறுமுகம். 'சும்மா தமாசு கோச்சுக்கிடாத' என சமாதானம் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

'இதை யாருக்காவது விற்க முயன்றீர்களா?'

'இல்லை. யாருக்காகவும் இல்லை.'

'உங்களுக்கு இதை அளித்தவரை அடையாளம் காட்ட முடியுமா?

‘உங்களுக்கு தண்டனையைக் குறைக்க பரிந்துரைப்போம்.'

'ஆளு கட்ட குட்டையா ஒத்த தந்தத்தோட நீளமான மூக்குக்கையோட இருப்பார். ஆனா இது தமாசு இல்ல. எல்லாமே அந்த கற்பக விநாயகம் கொடுத்தது தானே' என்றார் ஆறுமுகம் நிதானமாக.

'எனக்கு யாரும் எதையும் அளிக்கவில்லை.' என்றான் கார்மேகம்.

'அப்படியானால் நீங்களே இதை உற்பத்தி செய்தீர்களா? மரம் எங்கிருக்கிறது என சொல்லிவிடுங்கள். மாமரம் வளர்ப்பது போதைப் பொருள் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியது என எச்சரிக்க விரும்புகிறேன்.'

மவுனமாக தரையையே வெறித்துக்கொண்டிருந்தான். 'மாங்கா தின்னதுக்கு தூக்கு தண்டனையா?' ஆறுமுகம் புலம்பினார்.

'உங்கள் ஒரு மாத கால நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து எங்களால் மரத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நிச்சயம் அதை அழிக்கவும் செய்வோம். உங்களுக்கு வேறு குற்றப் பின்புலம் ஏதுமில்லை என்பதாலேயே இத்தனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'

'எல்லாம் இந்த அப்பனால்' என மனதிற்குள் சொல்லிக்கொண்டான். 'உன் நன்மைக்கு தானே சொன்னேன். நல்ல மாமரத்த உருவாக்கிட்ட காலத்த திருப்பிடலாம்னு:

'சரி குற்றத்தை ஒப்புகொள்கிறீர்கள் தானே.'

தலையசைத்தான். 'எது குத்தம்? எல்லாம் கலிகாலம். தருமம் ஒத்த கால்ல நடக்குது' என வருந்தினார் ஆறுமுகம்.

குற்றத்தை ஒப்புகொள்வதாக உங்கள் எதிரே உள்ள திரையில் கைசாந்திடவும்.

மறுக்காமல் கைசாந்திட்டார். 'நீ ஒன்னும் கவலப்படாதப்பா. அப்பா நா உங்கூடயே இருப்பேன்'

'இந்நாள் நன்நாள் ஆகட்டும். ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி'

'ஒரு நிமிடம் எனக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டா?'

'சட்டப்படி இல்லை.'

'நன்றி'

'அவங்கட்ட ஒரேயொரு கேள்வி கேளுப்பா… குரலக் கேட்டா சின்ன வயசாட்டாம் இருக்கு… இதுவர உன் வாழ்க்கைல ஒரு துண்டு மாம்பழமாவது சாப்டிருப்பியா நீ? அதோட ருசி என்னன்னு தெரியுமா உனக்கு?'

வேண்டாம் என்பதாக தவையை வேகவேகமாக ஆட்டினான். 'நீ கேக்க போறதே இல்ல... நானே கேக்குறேன்' என்றதும் அதை நிறுத்தும் முயற்சியாக புரிபடாத ஒரு பெரும் ஓலம் கார்மேகத்தின் உள்ளிருந்து எழுந்தது.

3

'காலை வணக்கம். இன்று தண்டனை நாள் 7102/ 7300. ‌உங்கள் பகலவன் நேரம் தொடங்குகிறது,' என வழக்கம் போல் அசரீரிக் குரல் அறிவித்தது.

உயர்ந்த கூரை விலகி ஒளிபுகு திரைக்கு மேலே ஆதவன் ஒளிர்ந்தான். ஒடுங்கிக்கொள்ள ஒரு இருண்ட மூலைகூட இல்லாத வெளிச்சப் பெருவெள்ளம் அவனைக் கூசச் செய்தது.  கால்களுக்கிடையே தலையைப் புதைத்துக்கொண்டான். நொடிநொடியாக எண்ணினான். சரியாக முந்நூறு வந்ததும் கூரை மீண்டும் மூடிக்கொண்டது. ஆசுவாசமடைந்து நிமிர்ந்தான். தோல் எரிந்தது. இனி பத்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த வேதனை. கழிப்பிடத்தில் அமர்ந்தான். துளித் துளியாக மலம் வேதனையுடன் இறங்கிக் கொண்டிருந்தது. 'கருணக்கிழங்கு லேவியம் சாப்பிட்டா மூலக்கடுப்பு குறையும் தம்பி' என்றார் ஆறுமுகம். அவர் குரலைக் கேட்டதும் ஆசுவாசமடைந்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஒவ்வொருநாளும் அந்த அந்தகாரத் தனிமையை அவர் துணையுடன்தான் கடந்தான். 'தங்கம் செய்யிறத ரசவாதம்னு புரிஞ்சு வெச்சுருக்காய்ங்க. அது தப்பு. அது ஒரு அனுபவம். அம்புட்டுக்குள்ளார ஓடுறதும் ஒரே ரசம்தாங்குற அனுபவம். அந்த ரசத்த என்னவா வேணாலும் மாத்தலாம். எது எதுவா வேணாலும் மாறலாம்.' என ரசவாதத்தின் அடிப்படையைச் சொல்வார் ஒருநாள். 'காய்ஞ்ச இலதானப்பா வைரம். அது வீணாக்காம பாத்திக்கு பக்கத்துல லேசா மண்ண பிரட்டி மூடிவிட்டா போதும். நெகுநெகுன்னு காய்க்கும்,' என விவசாயக் குறிப்பளிப்பார். சிறைக்குள் வரும்வரை அவருடன் பேசுவதைத் தவிர்த்தான். இங்கே வந்து சிலநாட்களில் இயல்பாக அவருடன் பேசத் தொடங்கினான். காலையில் எழும்போதுதான் ஆறுமுகத்திற்குள் இருக்கும் கார்மேகமா அல்லது கார்மேகத்திற்குள் இருக்கும் ஆறுமுகமா எனும் குழப்பங்கள் தோன்றி அவனை பீதிக்குள்ளாக்கியது. தினமும் காலையில் எழும்போதும் இரவு உறங்குச்செல்லும் முன்னும் 'நான்‌ கார்மேகம்' 'நான் கார்மேகம்' என செபித்துக் கொள்வான். அவ்வப்போது ரேவதி இப்போது எங்கிருப்பாள் என எண்ணிப்பார்ப்பான். மாங்கனித்திருநாளின் பலமணி நேர போதை தெளிந்த பின் வீடு வந்து சேர்ந்ததும் தன் தந்தை தன்னோடு இருப்பதாக தயங்கித் தயங்கி சொன்னதும் பீதியில் வெளியேறிச் சென்றவள் திரும்பவேயில்லை. அம்மா அவனை மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள். மாத்திரையை போட்டால் ஆறுமுகம் மறைந்துவிடுவார். பிறகு அவருமில்லாத வாழ்க்கை சுவாரசியமற்றதாக இருந்ததால் மாத்திரையை நிறுத்தினான். ஆறுமுகம் சற்று எல்லை மீறும் போதெல்லாம் அவரை வழிக்கு கொண்டுவரும் மிரட்டல் உத்தியாக மாத்திரையைக் கைக்கொண்டான். அப்பன் அதே வயதில் அவனுடனிருக்க அவன் அப்பனைக்கடந்த மூப்படைந்தான். அப்போது 'உன்ன விட எனக்கு இப்ப வயசும் அனுபவமும்கூட' என எதிர்வாதம் புரிந்தான். அவ்வப்போது வாக்குவாதம் வந்து பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் கழித்த காலமும் உண்டு. குறிப்பாக ஒரேயொரு நல்ல மாமரத்தை வளர்த்தால் காலச்சக்கரத்தை திருப்பிவிட முடியும் என அவர் பேச்சு கேட்டதன் விளைவாகத்தான் சிறைக்கு வந்தது என்பதில் அவனுக்குத் தீராத கோபமுண்டு. அத்தனைக்கு பின்னும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை எனும் நன்றிகூட இல்லையே எனக் கத்துவான். காட்டிக்கொடுக்கவில்லை என்றால் என்ன நான் தான் உன்னுடன் சேர்ந்தே சிறையிலிருக்கேனே என்பார் அவர்.

கழிப்பிட சிந்தனைச் சரடை அறுத்துக்கொண்டு ஒரு குரல் கேட்டது. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம். உங்கள் நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்தில் 198 நாட்கள் குறைக்கப்பட்டு நீங்கள் இன்று விடுவிக்கப்படுகிறீர்கள்' என்றது அசரீரி பெண் குரல். சுதாரித்து எழுவதற்குள் சிறைகதவு திறந்துகொண்டது. மினுங்கும் திசைகாட்டி அம்புகுறிகள் வெளியேறும் வழியைக் காண்பித்தது. மிகச் சோர்வாக உணர்ந்தான். ஆனால் ஆறுமுகம் உற்சாகமாகத்தான் இருந்தார். 'விடுதலை விடுதலை' என சீட்டியடித்தார். மெல்ல நடந்து அவ்வழியே சென்றான். ஒரு உடைமாற்றும் அறையில் அவருக்கேன வைக்கப்பட்டிருந்த புதிய உடைகளை அணிந்து கொண்டு நகர்ந்தான். 'நமச்சிவாயம் துன்னூறு இல்லயா' கேட்டார் ஆறுமுகம். சிறை வளாகத்தின் வரவேற்பு பகுதிக்கு சென்றான். அங்கே இருந்த அதிகாரி. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம்' என பூச்செண்டு அளித்தார். ‘இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமா? எனக்கு வெளியே யாரும் இல்லை... எதுவும் தெரியாது... எங்கு செல்வதென்றும் தெளிவில்லை' என்றான் உடைந்த குரலில். 'அப்பன ஜெயில்லியே சாவடிச்சிரலாம்னு நினக்கிறியா நீ' என தழுதழுத்தார் ஆறுமுகம். 

'கவலைகொள்ள வேண்டாம். உங்கள் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இவர்கள் தான் உங்களை வெளிக் கொண்டுவர கோரியவர்கள். அவர்களுடைய நிறுவனத்தில் உங்களுக்கு பணியளிக்க முன்வந்துள்ளனர்.' என வரவேற்பறை நாற்காலிகளில் சீருடையணிந்த நால்வரைச் சுட்டிக்காட்டினான். அவர்கள் எழுந்து கைகுலுக்கி அவரை அழைத்துச் சென்றனர். 'உங்கள மாதிரியான நல்ல உள்ளங்களால் தான் சார் மழ பெய்யிது' என கண்ணை கசக்கினார் ஆறுமுகம்.

4

வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பயணம் தொடங்கியதுமே உறங்கிப்போனான். எழுப்பியபோது மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதியில் இருந்தார். சூரியத்திரை மிதமான தட்பவெப்பத்தை அனுமதித்தது. சற்று சுதாரித்து நோக்கியதும் தான் தானொரு மாந்தோப்பில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எல்லா மாமரங்களும் நான்கடி உயரம் இருந்தன. அவை ஒன்று போலத்தோன்றின. அதில் காய்த்து தொங்கிய மாங்காய்களும் பழங்களும் கச்சிதமாக ஒரே அளவும் ஒரே எடையும் கொண்டதாகத் தென்பட்டன. கனிகள் யாவும் ஒரே மஞ்சள் அடர்வில் இருந்தன.

'நீங்கள் இப்போது இருப்பது பிராகிருதிஸ்தான் முழுமைக்கும் மாம்பழம் உற்பத்தி செய்து அளிக்கும் மாம்பழத் தொழிற்சாலை. வெற்றிகரமாக எங்கள் ஆய்வின் மூலம் போதைத்தன்மை அற்ற மாங்கனிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்கியுள்ளோம்.' என்றான். 'மரத்த ஜெராக்ஸ் எடுத்துருக்கானுவ தம்பி... கார்டூன் மரம் மாதிரி எப்படி வெச்சுருக்கானுவ பாரு… சூதானம் தம்பி' என்று கிசுகிசுத்தார். 

கார்மேகத்திற்குச் சுற்றிக் காண்பித்தான். 'சரியாக 21 நாட்களில் மாம்பழத்தை உருவாக்குவோம்' ஒரு மரத்திற்கு முன் சென்று நின்றவன் அதன் நடுத்தண்டில் பொறிக்கப்பட்ட பார்கோடுகளுக்கு நேராக தனது கைக்கடிகாரத்தை காண்பித்தான். கடிகாரத்திரையில் '144' எனும் எண் மிளிர்ந்தது. 'ஒவ்வொரு மரத்திலும் 144 பழங்கள் ஒரு சமயத்தில் காய்க்கும்'. கடிகாரத்தில் 40லிருந்து எண்ணிக்கை நொடிக்கு நொடி குறைந்தது. மரத்தின் நடுத்தண்டிலிருந்து குடைமாதிரி எல்லா பக்கமும் வலை விரிந்தது. எண்ணிக்கை சரியாக சுழியத்திற்கு வந்தபோது ஒரே சமயத்தில் அனைத்து பழங்களும் காம்பிலிருந்து விடுபட்டு வலைக்குள் விழுந்தன. 'பெரிய வித்தக்காரனுவ தம்பி' என்று வியந்தார் ஆறுமுகம்.

'ஏம்பா இம்புட்டு மரம் வச்சுருக்கானுவ ஆனா தக்குனூண்டு வாசம்கூட இல்லியே… என்னனு கேளுப்பா' என்றார். அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. ஆகவே 'இத்தனை மாங்கனிகள் இருந்தும் ஏன் வாசம் வரவில்லை?' எனக் கேட்டான் கார்மேகம். 'அதற்குதான் உங்கள் உதவி தேவை' என்றபடி அவரை ஒரு அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நிமிடம் என தலையைச் சாய்த்து ஒரு குப்பியிலிருந்து இரண்டு மூக்கிலும் இரண்டு சொட்டுக்களை விட்டான். விர்ரென இருந்தது. உடலும் மனமும் விழித்துக்கொண்டது. 'அஞ்ச வேண்டாம். மூக்கு என்பது மூளையின் வாசல் அல்லவா' என்றான். பிறகு ஒரு துண்டு மாம்பழத்தை நறுக்கி கொடுத்தான். தயக்கத்துடன் அதைக் கையில் எடுத்தான். அவன் கையிலிருந்த திரையில் எதையோ அழுத்தினான். குப்பென மாம்பழ வாசம் கிளர்ந்தது. ருசித்தான். 'காசாலட்டு' அவன் கண்கள் மின்னின. அடுத்த துண்டை அளித்தான் 'நீலம்' அவன் கண்கள் கசிந்தன. 'நீலம் என்றா சொன்னீர்கள்?'. 'ஆம்'. 'அப்போது இதைச் சாப்பிடுங்கள்' என ஒரு துண்டை நீட்டினான். விண்டதும் 'கல்லாம' என்றார் ஆறுமுகம். அதையே கார்மேகமும் சொன்னான். 'உறுதியாகத் தெரியுமா?'. 'பொய்யாச் சொல்றேன்' என ஆறுமுகம் மருகினார். 'ஆம் சந்தேகமே இல்லை' என்றான் கார்மேகம். 'இப்போது எங்கள் தகவல் சேகரிப்பின்படி முதலில் உண்டது கல்லாமை. அடுத்து உண்டதே நீலம்‌.' 'இல்லை எனக்கு உறுதியாக தெரியும்'. 'நன்றி எங்கள் தொழில்நுட்ப குழுவிற்கு உங்கள் மாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன். இங்குதான் எங்களுக்கு உங்களைப் போன்ற துறை நிபுணர்களின் துணை தேவை'. ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு வாசமும் ருசியும் கொண்டதாக இருந்தது.

'இப்போது இங்கே பசி ஒரு சிக்கலில்லை. ஆனால் ருசிக்கான அலைச்சல் ஓயவில்லை. ருசியைக் கைகொள்ளவே அவனுடைய ஆக்கப்பூர்வ நேரமும் உழைப்பும் பெரும்பகுதி செலவாகிறது. ஆகவே இந்தத் திட்டம். உங்கள் மூக்கில் விடப்பட்ட இரண்டு சொட்டுக்கள் மூளையில் உள்ள நரம்பு முடிச்சு தொகைகளுடன் பிணைந்துள்ளது. செயலி வழியே நீங்கள் விரும்பும் ருசியைப் பணம் கட்டி தரவிறக்கிக் கொள்ளலாம். வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ருசிகள் கொண்ட மாம்பழம்கூட உண்டு. முயற்சிக்கிறீர்களா?'

'இல்லை வேண்டாம்'

'எல்லா உணவுவகைகளையும் நாங்கள் இதில் இணைத்துள்ளோம். சாத்தியமான அத்தனை ருசி வேறுபாடுகளையும் கொணர்ந்துள்ளோம். உயர்தர, அரிதான ருசியைத் தேர்ந்தெடுக்கும் தோறும் அதற்கான கட்டணம் அதிகரிக்கும். எல்லா உணவுபொருட்களின் உற்பத்தியும் இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விதமான மதுதான் தயாரிக்கப்படுகிறது. உங்கள் பண வசதிக்கு ஏற்ப அது வோட்காகவும் நூறாண்டு கால ஒயினாகவும் ருசிக்கப்படும்.'

'எங்களால் இருப்பதிலேயே சிறந்த வகையான இமாம்‌ பசந்த் வகை மாம்பழ ருசியை ஆவணப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆவணங்களின்படி நீங்கள் அந்த வகை பழங்களை வைத்திருந்ததால் தான் சிறையில் அடைபட்டதாக அறிந்தோம்.'

இமாம் பசந்த் எனும் பெயரைக் கேட்டதும் கார்மேகத்தின் நாவில் எச்சில் ஊறியது. அதன் ருசியும் மனமும் நினைவில் எழுந்தது. மாம்பழங்களைக் கூடைகூடையாக அடுக்கியிருக்கும் பண்டகசாலை அறை. அதன் நெடி. தயிர்சோற்றில் ஊறிய மாம்பழத்தின் ருசி.‌ உறிஞ்சி உண்ணும்போது எழும் ஓசை. ஊறிய மாவடின் கார்ப்பும் புளிப்பும். பால் மாங்காயின் புளிப்பு.

ருசியற்ற மாம்பழத் துண்டை மென்று படிப்படியாக அதன் இனிப்பை கூட்டச்சொன்னான். 'இது ரொம்ப இனிக்குது', 'இது ரொம்ப கம்மி', 'இனிப்பாவே இருக்கக்கூடாது’, கொஞ்சம் சாக்கட்டி மாதிரி இறங்கனும்', 'ரொம்ப சவசவன்னு இருக்கு', 'காரக்குறிச்சி கச்சேரி மாதிரி மேல் ஸ்தாயிக்கு போயிட்டு அப்புறம் அமைதியா தவழ்ந்து முடியனும்', 'ரவை எலுமிச்ச சேத்த மாதிரி கொஞ்சம் புளிப்பு கூடனும்', 'அக்பரும் அவுரங்கஜீபும் சாப்புட்ட பழம்னா சும்மாவா', 'பல்லுல நார் சிக்கக்கூடாது', 'ஒரேடியா மைய மாவாட்டம் அரச்சிப்புட்டானுக' அவனும் ஆறுமுகத்தின் கூற்றுக்களை ஒத்து மாற்றங்களைச் சொல்லிக்கொண்டே வந்தான். அவனால் துல்லியமாக இமாம் பசந்தின் ருசியைக் கொணர முடியவில்லை. ராப்பகலாக அவர்கள் உழைத்தார்கள். ஆனால் அவனுக்கும் ஆறுமுகத்திற்கும் திருப்தியில்லை. 'மண்ணு மூட்டைகளா இருக்காய்ங்க' எனப் புலம்பினார் ஆறுமுகம். இமாம் பசந்தின் முப்பத்தாறு ருசி பேதங்களை உருவாக்கியிருந்தார்கள். ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு இந்த முப்பத்தாறில் இமாம் பசந்துக்கு ஆக நெருக்கமான ருசியை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு சமயமும் வாயில் இட்டதும் இதுதான் என தோன்றும். ஆனால் ஆறுமுகம் மறுப்பார். உண்மையில் தான் உண்டதும் தன் தந்தை உண்டதும் ஒரே பழம்தானா என அவனுக்குச் சந்தேகம் வந்தது. பற்பசையால் பல் விளக்குபவருக்கும், சாம்பல் உப்பில் விளக்குபவருக்கும், பல்லே விளக்காதபவருக்கும் வேறு வேறு ருசி தென்பட்டிருக்குமா என யோசித்தான்.  ஒரே நேரம் இதுதான் இமாம் பசந்த் என்றும் இது இல்லவே இல்லை என்றும் தோன்றி அவனைக் குழப்பியது. ஆறுமுகத்தின் தீர்மானமின்மை அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் சலித்துவிட்டார்கள். நடைமுறை வழக்கத்திற்காக இதுதான் இமாம் பசந்த் என ஒன்றுக்குச் சான்றளிக்க சொன்னார்கள். 'தம்பி உள்ளதுலயே இது ரொம்ப நல்ல ருசியாக்கும். ஆனா இது இமாம் பசந்த் இல்லய்யா' என்றார் ஆறுமுகம்.‌ அவனுக்கும் அது தீர்மானமாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்ய? ஒப்புதல் கைசாந்து இட்டான். 'நெஞ்சறிய பொய் சொல்லலாமா. உங்கப்பன் ஆறுமுகம் வளத்த வளப்பு இப்படி சிரிச்சுபோச்சே' என விசும்பினார்.

அத்துடன் ஒரு தொகையை அவனிடம் அளித்து 'எங்களுக்காக பணியாற்றியதற்கு நன்றி. இனி நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எங்கும் செல்லலாம்' எனக் கூறி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். 'காரியக்காரனுவ கோவணத்த உருவிடுவானுவன்னு சொன்னனா இல்லியா' என வருத்தப்பட்டார் ஆறுமுகம்.

கார்மேகத்திற்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. முற்றிலுமாக மாறியிருந்த நகரத்தில் அவனுக்கு நடந்து கடப்பது விநோதமாக தென்பட்டது. முதியவர்களுக்கான சலுகைக் கட்டணப் பேருந்து எங்கோ தெற்கே வெகுதொலைவுக்குச் செல்வதாக சொன்னார்கள். ஏறி அமர்ந்தான்.

நிழலற்ற பொடிமணல் பாலையில் தொண்டை வரள நடந்து கொண்டிருந்தான். கால்கள் புதைந்தன. கீழே நோக்கியபோது கால் புதையும் அளவுக்கு மாம்பழங்கள் கிடந்தன. ஆவல் மின்ன கையில் அள்ளியதும் அவை பலூன் வெடிப்பதுபோல் வெறும் மணலாக உடைந்து ஊற்றியது. பித்தேறி எல்லாவற்றையும் வெறும் பொடிமணலாக ஆக்கினான். வியர்த்து கண்விழித்தபோது எங்கோ ஒரு சிற்றூரில் பேருந்து இளைப்பார நின்றிருந்தது. மெல்ல இறங்கி ஒன்றுக்கிருக்க போனவன் குத்துச்செடிகளும் புதரும் மண்டிய வெட்டவெளியைப் பார்த்தான். அடர்நீலத்து கரு ஊமத்தைகள் இதழ்விரித்து மண்டியிருந்தன. முள்படர்ந்த காய்கள். பச்சைநிறத் தோல் வெடித்து உதிரச்சிவப்பும் அந்தியின் பொன்நிறமும் கொண்ட சதைப்பகுதியும் விதைகளும் தென்பட்டன. வெப்பத்தில் தோல் எரிந்தது. கொப்பளங்கள் கிளம்பின. ஆறுமுகம் சலனமின்றி இருப்பதை உணர்ந்ததும் போதும் என முடிவெடுத்தான். சட்டென ஊமத்தை பழத்தை எடுத்து விழுங்கினான். திடுக்கிட்டு விழித்தவர் 'அப்பனக் கொல்லுறியா சண்டாளா' என கதறினார். இறுகிய முகத்துடன் கண்ணை மூடிக்கொண்டான். நாக்கிலிருந்து தொண்டைக்கு இறங்கும் முன் சட்டென விழிவிரிய கண்ணைத் திறந்தான். ஆச்சரியம் தொனிக்க ஊமத்தையைப் பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் 'இமாம் பசந்த்!' என்றார்கள்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 22:49

நீலகண்டம்- கவிதா ஒரு கடிதம்


நீலகண்டம் வாங்க

நீலகண்டம் என்ற இந்த நாவல் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அன்னா கரீனினாவின்   புகழ்பெற்ற "மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன "  தொடக்க வாசகம் நினைவுக்கு வந்தது. நாவல் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ப்பு பற்றி பேசினாலும் அதோடு தொன்மங்கள், புராணக்கதைகள், நாட்டாரியல் குழந்தை கதைகள் போன்ற பல வகைமைகளில் ஒன்றுடன் ஒன்று தொடற்புறுத்தி சொல்லப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட வர்ஷினி என்ற வரு வின் இளமைக்காலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

நாவல், செந்தில் ரம்யாவின்  மன நுட்பங்களை விரித்து சொல்வதன் வழியாகவே அவர்களின் காதல், திருமணம், குழந்தை இல்லாதது பற்றிய ஏக்கங்கள், வருவை தத்தெடுத்தது போன்ற கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிடுகிறது.வரமாக வந்த பிள்ளை, நோயோடு அவர்களின் சுமையாக மாறி மன அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் போது, இதென்ன வாழ்க்கை என் இப்படி நடக்கணும் என்ற கேள்வி எழாமலில்லை. மேதைகள் எல்லாம் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்கள் என கண்டறிந்து வருவிடம் மேதமை தனத்தின் சாயலை ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து கடைசியில் நம்பிக்கைகள் பொய்யாகி கரைந்து போவதை காண ரம்யாவுடனும் செந்திலுடனும் நானும் சேர்ந்து திகைத்து நின்றேன். என் குடும்பத்திலும் நெருங்கிய உறவில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ந்து கொண்டிருப்பதை, அதனால் அந்தகுடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை கண் கூடாக பார்த்துக்கொண்டிருப்பதால் ரம்யா செந்திலின் பிரச்சனைகளை என்னால் உள் வாங்கி புரிந்து கொள்ள முடிந்தது.

முக்கியமாக பேச வேண்டிய கதாபாத்திரம் செந்திலின் நண்பன் ஹரி. நீ இப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது பெரிய வன்முறை என்றாலும், ஆழத்தில் மிகவும் விரும்பியதும் ஆம் என்று ஒத்துக்கொள்ளவும் செய்தது. ஹரியும் இயல்பில் எதிலும் தன்னை முற்றிலும் ஒப்படைத்துக்கொள்ளாத  மனிதர்களின், முக்கியமாக குடும்பம் ,காதல் , அன்பு போன்றவற்றின்  சமரசங்களை அதன்  வழியாக மனிதர்கள், அடையும் சௌகர்யங்களையும் அறிந்து அனைத்திலும் விலகியிருப்பவன். அவன் வழியாகவே செந்தில் ஓரளவு தன்னை அறிகிறான் போலும். நந்தகோபாலின் இளமைகாலம் பற்றிய கதை தெரிந்ததும், அவர் வருவிடமோ சாகரிடமோ நெருங்கும்போது சற்று பயமாக இருந்தது.

இடையிடையே வருவின் உலகத்தில் குழந்தை கதைகள் அதில் நம் தோழி வானவன்மாதேவி ஒரு பாத்திரமாக வந்து சக்தி வாய்ந்த மேகங்களை உறிஞ்சிய வாக்குவம் கிளீனரை தன் சக்கரக்கால்களால் கவ்விக்கொண்டு பறந்தது, போன்றவற்றை வாசிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அறம் பற்றிய கேள்விகள், அவை நிகழ்காலத்தில் தங்களின் பெற்றோர் செய்த செயல்களின் விளைவுகளுக்கு எவ்வாறு பொறுப்பாக முடியும் என்ற கேள்விகள், அறத்தினாலும், பக்தியினாலும், பாசத்தினாலும் உண்மையிலேயே பெரும் நன்மைதான் விளையுமா என்ற  கேள்வியை எழுப்பியது.

செந்திலின் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நச்சு பருவம், அமுத பர்வம் என்ற இரு கதையாடல்களாக சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான நாகலட்சுமியின் கதை தொன்மம் இன்றும் நம் குடும்பங்களில் மரபிலிருந்தும் வேர்களிலிருந்தும் உயிர்ப்புடன் நிகழும் கதையாடல்கள்.

வரு காணாமல் போனது தெரிந்த போது செந்திலின் மன நினைப்பு மனிதர்களின் மனதின் கீழ்மைகளை தொட்டுக்காட்டியது. அது ஒன்று எப்போது அமுதென்பது நஞ்சாகிறது எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் என்பதை சொன்னது. நாம் அனைவரும் மரபெனும் நீண்ட சங்கிலியால் பிணைக்கப்பட்ட கண்ணிகளே என செந்தில், ரம்யாஇவர்களின் குடும்பப்பிண்ணனி கதைகள் தொட்டுக்காட்டியது .

குழந்தையின்மை அதன் மூலமாக வரும் சமூக மதிப்பில் ஆண்களின் ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவது அதன் தொடர்ச்சியாக குழந்தை உற்பத்தி முனையம் என ஒரு வணிக கட்டமைப்பு எழுவதை நாவலில் சற்று மிகைப்படுத்தி கூறியிருந்தாலும் இனி இது யதார்த்த உலகில் வேரூன்றி வருவது மறுக்கமுடியாதது .

சுடலை மாடனுக்கும், கிரேக்க துன்பியல் நாடக மைய கதாபாத்திரம் மெடியாவிற்கும் நடந்த உரையாடல் இறுதியில் கவிஞர் கலீல் ஜிப்ரானொடு நடக்கும் உரையாடல் அனைத்தும் நையாண்டியின் உச்சம் ,

நாவல் முழுதுமே வெளிப்படும் உரையாடல்களின் கூர்மை, சூழல் சித்தரிப்பின் துல்லியம் அதன் ஒப்பீடு, வாழ்க்கையின் குரூர பக்கங்கள் நினைவோட்டங்களாக வரும் நிகழ்வுகள் அனைத்தும் படைப்பாளியின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. அந்த வகையில் என் மனதிற்கு நெருக்கமாக நீண்டநாள் பயணிக்கும் நாவலாக சுனிலின் நீலகண்டம் இருக்குமென்பது சந்தேகமில்லை .

வாழ்த்துக்கள் சுநீல் .

ப்ரியமுடன்

கவிதா 


அன்புள்ள கவிதா

நாவல் வெளியாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. இப்போதும் உயிர்ப்புடன் வாசிக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு ஆக்கத்தில் அந்தரங்கமான உண்மையை சுட்டிவிட முடியும்போது, காலகட்டத்தை கடந்து எக்காலகட்டத்திற்கும் உரிய கேள்வியை ஒரு ஆக்கம் தொடும்போது அது தொடர்ந்து வாசிக்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதன் வடிவ சிதைவுகளை மீறி அப்படி சில நரம்புகளை நீலகண்டம் தொடுகிறது என்பதில் நிறைவு கொள்கிறேன். வருங்காலங்களில் மேலும் வாசிக்கப்படக்கூடும். 

நன்றி 

சுனில் 




 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 04:27

March 27, 2021

நான் ஏன் மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்கிறேன்

கணையாழியில் ஒரு பத்தியில் படைப்பாளிகளின் ஆதரவு யாருக்கு என எழுதச்சொல்லி கேட்டிருந்தார்கள். அதையொட்டி அவர்களுக்கு எழுதியனுப்பிய எனது கருத்தை சற்றே கூடுதல் விரிவுடன் எழுத விரும்பினேன். எனக்கு மக்கள் நீதி மய்யத்தின் மீது நன்மதிப்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. நாளை இவை இல்லாமல் போகலாம். ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை உள்ளது.‌ ஆகவே எழுதுகிறேன். 

இந்த தேர்தலில் ஆட்சியமைக்க சாத்தியமில்லை என்றாலும் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அடையாள அரசியல் முதன்மை பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் அது உருவாக்கும் துருவப்படுத்துதலை சமன் செய்ய உள்ளடக்கும் (inclusive) அரசியலை முன்வைக்கும் இயக்கங்கள் வளரவேண்டும். கொள்கை அரசியல் ஒரு வழி என்றால் செயலூக்கமிக்க களச்செயல்பாடு வழியாக அரசியல் அமைப்பாக திரள்வது மற்றுமொரு வழி. கொள்கை அரசியல் என்பது  வழிகாட்டுதல் நெறி என்ற அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதி கட்சி, திராவிட கட்சி, தலித் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள், பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்கள், இஸ்லாமிய கட்சிகள், நாம் தமிழர் என இவையாவும் கொள்கை அரசியலின் உதாரணங்கள். கொள்கை அரசியல் என்பது அடையாள அரசியலுக்கான தேவையிலிருந்து உருவாவவது. ஆகவே அவை உயிர்த்திருக்க அந்நியர்களை அல்லது பொது எதிரிகளை கட்டமைத்தபடி இருக்க வேண்டியுள்ளது. 

 தேசிய அளவில் செயல்வழி இயக்கமாக திரண்ட முதல் இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ், பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பங்களிப்பில் உருவான ஜனதா கட்சி போன்றவற்றை சுட்டலாம். சமீபத்திய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி. தமிழகத்தில் எம்.‌எஸ் உதயமூர்த்தி போன்றோர் இப்பாதையில் பயணித்திருந்தாலும் பெரும் தாக்கத்தை செலுத்த முடியவில்லை. மக்கள் நீதி மய்யத்தை நான் இந்த வரிசையிலேயே வைப்பேன். அறப்போர் இயக்கம், சகாயம் ஐ ஏ எஸின் இயக்கத்தை கூட இதனுடன் சேர்த்தே காண முடியும். இந்த வரிசையில் உள்ள கட்சிகளுக்கும் மேற்சொன்ன பட்டியலில் உள்ள கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடை எளிதில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கமலிடம் கொள்கை என்ன என திரும்ப திரும்ப கேட்பவர்கள் சூசகமாக கேட்பது உங்கள் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டு அரசியல் செய்யுங்கள் என்பதையே. அனைவரையும் உள்ளடக்கிய எதிரியற்ற அரசியல் ஒரு சாத்தியமாகக்கூட நமக்கு தோன்றவில்லை. 
செயல்வழி அரசியலுக்கு சில எல்லைகள் உண்டு. நடைமுறையில் உள்ள வழிமுறைகளின் மீது இருக்கும் அதிருப்தியே அதை இயக்கும் ஆற்றல். பெரும்பாலும் அதிருப்திக்கான காரணத்தை விசையுடன் முட்டி மோதிய பிறகு விசையழிந்து மற்றுமொரு அரசியல் இயக்கமாக நீடிக்கும். ரஜினி இந்த அதிருப்தி விசையை உசுப்ப முயன்றார். அவருடைய தாரக மந்திரம் 'மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்' என்பதாக இருந்தது. தமிழருவி மணியன் போன்ற செயலூக்க அரசியல் தலைவர்களை உடன் இருத்திக்கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அதிருப்தி ஆற்றல் விசைகொள்ளவில்லை. ஆகவே அவருக்கும் வேறு வழியில்லை. அவரையும் கொள்கை கோடாலியை வைத்து பெயர்த்து பார்த்தார்கள்.‌ உண்மையில் கொள்கைகள் அதிகாரத்தில் இருக்கும் போது சமரசத்திற்குட்பட்டதாகவும் அதிகாரமற்ற போது வீரியமானதாகவும் இருநிலைகொண்டதாகவே உள்ளது. கொள்கைகள் என்பதல்ல நிலைப்பாடுகளே இருக்க முடியும் எனும் புரிதலையே நான் கொண்டுள்ளேன். நிலைப்பாடுகள் காலத்தாலும் சூழலாலும் கட்டுப்படுத்தப்படுபவை. மாற்றத்துக்குட்பட்டவை.‌ நிலைப்பாடுகள் எவ்வகையிலும் இழிவானவை அல்ல. நல்ல ஆளுகை அளிப்பதாக சொல்லும் கட்சியை நான் நிச்சயம் பரிசீலிப்பேன். நடைமுறையில் ஊழலற்ற ஆட்சி சாத்தியமில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அதை மீற நம் கூட்டு முயற்சி தேவை. அரசு மாற்றத்தால் அது மாறுமா என சொல்வதற்கில்லை. எனினும் அத்திசையை நோக்கி பயணிக்கவாவது வேண்டும். நாம் அரசியலை துருவங்களாக உருவகித்து கொள்கிறோம். யார் வரக்கூடாது எனும் தேர்வு மட்டுமே நம்மை இயக்குவதாக உள்ளது. அதுவே ஒரு கட்சியை பி டீம் என சொல்ல வைக்கிறது. இதன் பின் உள்ள மனநிலை நீங்கள் எங்களுடன் உள்ளீர்கள் அல்லது எங்களுக்கு எதிராக உள்ளீர்கள் என்பதே. இந்த மனநிலையே பாசிசத்தின் ஊற்று. 
அதிருப்தியினால் ஏற்படும் செயலூக்கம் விசையழியும். இதை கடக்க நேர்மறை கனவு வேண்டும். காந்தி சவுரி சவுராவிற்கு பிறகு ஆக்கப்பூர்வ செயல்திட்டத்திற்கு தான் திரும்புகிறார். அதற்கே அதிக ஆற்றலை செலவு செய்கிறார். காந்தி இந்த அதிருப்தியின் ஆற்றல் சிதறுவதை அவர் காலத்தில் முன் உணர்ந்த ஒரே தலைவர். ஆகவே செயலூக்கத்தை இயக்கும் அதிருப்தியை வெளியேற்றி நேர்மறை இயல்புகள் கொண்ட ஒரு இயக்கத்தை நடத்த முயல்கிறார். கீதையை இந்த தளத்திலேயே அவர் பயன்படுத்துகிறார். கொள்கை அரசியல் இந்த தளத்தில் வலுவானது. அதன் கருத்தியல் எதிரி நன்கு வரையறை செய்யப்பட்டதால் அதுவே அவர்களை இயக்கும் விசையாகி சிதறாமல் காக்கிறது. கமல் 'சீரமைப்போம் தமிழகத்தை' என சொல்லும்போது அதில் ஒரு நேர்மறை கனவு உள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் களத்தில் இந்த நேர்மறை செயலூக்கத்துடன் செயல்படுவாரா என்பதே அவருக்கு முன் இருக்கும் சவால். செயலூக்க அரசியல் தனக்கான தவைவர்களை திரளில் இருந்து உருவாக்கிகொள்ளும். காந்தி, ஜெ.பி, கெஜ்ரிவால் போன்றோர் தவைவர்களாக உருவானபோது அவர்களுக்கு பின் பெரும் வரலாறு ஏதுமில்லை. கமலுக்கு உள்ள மற்றொரு சவால் அவர் ஏற்கனவே தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பிம்பம். பிம்பங்கள் குறித்து கூட்டு நனவிலியில் சில பொது கற்பிதங்கள் படிந்திருக்கும். அதை குலைக்கும் செயலை அத்தனை எளிதில் அனுமதிக்காது. கமல் மக்கள் நீதி மய்யத்தின் ஒரு முகமாக இருந்தாலும் அதன் ஆற்றல் என்பது, தங்கள் தங்கள் பகுதிகளில் செயல் முனைப்போடு களத்தில்  ஈடுபடுபவர்கள்  தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கான தங்கள் முகமையாக மக்கள் நீதி மய்யத்தை காண்பதுதான்‌. அத்தகையவர்களுடன் கமல் தானும் ஒரு முகமாக இருக்கும்போது இதில் ஓரு சமநிலையை அடைய முடியும். எங்கள் தொகுதியில் மநீம சார்பாக நிற்கும் ராசக்குமார் பல ஆண்டுகளாக களப்பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்தவர். ஆலந்தூஅ சரத் பாபு மற்றொரு உதாரணம். மக்கள் நீதி மய்யம் செயல்வழி அரசியலின் பாதையை தேர்வதற்கான தொடக்க அறிகுறிகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. அத்திசையில் தனது பயணத்தை தொடரும் பட்சத்தில் பல புதியவர்களை அரசியலுக்கு கொணரும், புதிய முன்மாதிரியை தமிழகத்தில் ஏற்படுத்தும். எப்போதும் புதிய திரளை அரசியல்படுத்தும் பணியை செயல்வழி அரசியல் இயக்கங்களே வரலாற்றில் நிகழ்த்தியுள்ளன. மக்கள்  நீதி மய்யம் வளர்வது நீண்ட கால அளவில் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் வளர வழிவகுக்கும். 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2021 10:43

February 9, 2021

எப்போதும் முடிவிலே இன்பம்- சிறுகதை


 சுு

நஞ்சு குறுங்கதையின் தொடர்ச்சி

சாம்பல் வானம் ஒளிரத் தொடங்கிய காலைப்பொழுதில் தொலைவிலிருந்து அந்த நீல தகட்டு கூரையை வைரவன் கண்டபோது அங்கு தெய்வீகமான அமைதி நிலவுவதாக அவனுக்கு தோன்றியது. திட்டிலிருந்து மெதுவாக இறங்கி நீலக்கூரையை நெருங்கத் தொடங்கினான். காற்றில் மிகச் சன்னமாக கொட்டு முழக்குகளின் தாளம் சீராகக் கேட்டன. ரோமக்கால்கள் சிலிர்த்து அடங்கின. நெருங்க நெருங்க எறும்புகள் போல மனிதர்கள் கண்ணுக்கு தென்பட்டார்கள். ஒலித்துக்கொண்டிருந்த இசையின் பிற சரடுகள் துலக்கமடையத் தொடங்கின. இதயம் அதிர்ந்து அடங்கியது. 

அந்த விடிகாலையில் பெரும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததை அவனால் காண முடிந்தது. நீலத் தகர கொட்டகையின் வாயிலில் வீடற்ற புனித ஜானின் ஆலயம் என்று எழுதப்பட்டிருந்தது. இரவெல்லாம் நடந்த சோர்வை மீறி வைரவன் வேகவேகமாக நெருங்கினான். கொட்டிலைச் சுற்றி கம்பி வேலியும் கதவும் போடப்பட்டிருந்தன. வைரவன் இரும்புக்கதவை நெருங்கியதும் அக்கூட்டத்தில் ஆடிக்கொண்டிருந்த வாட்டசாட்டமான வெள்ளையர் அவனை நோக்கி வந்தார். ‘வருக சகோதரரே’ என வாயிலை திறந்துவிட்டு அவனை ஆரத்தழுவிக்கொண்டார். பல மாதங்களாக அன்னியரின் தொடுகையை அறிந்திராத உடல் கூசியது. ஆண்களும் பெண்களுமாக ஆடிக்கொண்டிருந்த அனைவரும் அவனை தழுவிக்கொண்டார்கள். சிலர் கன்னத்தில் முத்தமிட்டார்கள். பெரும் வட்டமாக தோளோடு தோள் சேர்ந்து ஆடியபோது அவனையும் வட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள். ஆட்டத்தில் பங்கேற்காத சிலர் ஆங்காங்கு மரத்தடியில் அமர்ந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். உறைந்த புன்முறுவலுடன் கண்மூடி சிலர் நீலத் தகரத்தின் கீழ் அதன் மையத்தில் நிறுவப்பட்டிருந்த  வீடற்ற புனித ஜானின் திருவுருவுக்கு முன் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்கள். 

இசையின் தாளகதி மாறியது. அனைவரும் மீண்டும் தழுவிக்கொண்டு பிரிந்தனர். கழுத்தில் பலவர்ண மணிமாலை அணிந்த பொன்னிற குழல் கொண்ட மத்திய வயது பெண் ஒருவர் இன்முகத்துடன் கூட்டத்தின் மத்தியில் நடந்து வந்தார். வைரவன் அவருடைய வான் நீலக் கண்களை நோக்கிக்கொண்டிருந்தான். பைகளுடன் புறப்பட்டு வந்தவர்கள் அவரை தழுவிவிட்டு பக்கவாட்டில் நின்றார்கள். வைரவன் அருகிருந்த நெடிய கறுப்பனிடம் ‘இவர் யார்?’ எனக் கேட்டான். ‘இவரைத் தெரியாமலா  சகோதரா நீ இங்கு வந்தாய்? வியப்புதான், இவர் தான் அன்னை ரஃபெல்லா. நம் சமூகத்தின் தலைவர், வீடற்ற புனித ஜானிடமிருந்து வைரஸ் நேரடியாக இவருக்கே உவந்தளிக்கப்பட்டது.’ 

ரஃபெல்லா கையை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார். ‘இன்று இங்கிருந்து செல்லும் நம் சகோதர சகோதரிகள் அவர்கள் அடைந்த களிப்பை பகிர்ந்தளிக்கட்டும். சென்று வாருங்கள். புதிதாக வந்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இங்குள்ள நடைமுறையைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது என நம்புகிறேன், இங்குள்ள எவரை வேண்டுமானாலும் எந்த சந்தேகத்துடனும் தொடர்பு கொள்ளலாம். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கொடை நிகழவிருக்கிறது. தயாராக வரவும்’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார். 

வைரவன் தெற்றுப்பல்லுடன் அவனையொத்த நிறத்திலிருந்த ஒரு பெண்ணிடம் சென்று ‘நீங்கள் இந்திய வம்சாவளியா?’ என்றான். புன்னகைத்தபடி ‘இல்லை நான் தென் அமெரிக்கர்’ என்றார் அவர். ‘நன்றி. இந்த கொடை நிகழ்விற்கு எப்படி தயாராக வேண்டும்?’ சற்று தொலைவில் தெரியும் சேற்றுக்குட்டையை சுட்டிக்காட்டி ‘நீங்கள் எல்லோரும் அதில் புரண்டு எழ வேண்டும். இப்போது தொற்று உச்சத்தில் இருக்கும் அனைவரும் அவ்வப்போது அதில் எச்சில் துப்புவார்கள். பின்னர் தொற்று உள்ள பதிமூன்று சகோதரசகோதரிகளின் எச்சில்களைப் பெற்று முகம் கைகால்களில் பூசிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டும் தான் முக்கிய சடங்கு. இறுதியாக அன்னை ரஃபெல்லா முகத்தில் காறியுமிழ்வார். இது ஒருவகையில் குறியீட்டு ரீதியான ஒன்று தான்’ என்றாள். அவன் உடலில் எச்சிலின் அருவருப்பை உணர்ந்தான். ‘அதன் பிறகு என்னவாகும்.’ ‘ஓரிரு நாட்களில் காய்ச்சல் வரும், அது உச்சத்தை எட்டிப் பின்னர் குறைந்து இயல்பு நிலைக்கு வரும்வரை இங்கேயே தங்கியிருக்க வேண்டும்.’ என தகரக் கொட்டகைகளை காண்பித்தாள். 

சுவர்களில் அன்னை ரஃபெல்லாவின் படம் ஒளிவட்டத்துடன் வரையப்பட்டிருந்தது. அடுத்த சுவரில், வீடற்ற புனித ஜான் பூர்வாசிரமத்தில் செவிலியாக இருந்த அன்னையின் மீது காறியுமிழ்ந்தது சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு கடும் காய்ச்சலில் சுயமிழந்த ரஃபெல்லாவின் சித்திரம். மருத்துவமனையில் சோர்வுடன் கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தார். சுற்றி நிற்கும் மருத்துவர்கள் விரக்தியில் அவரை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சுவாச இயந்திரத்தை அகற்றிவிட்டால் எந்நேரத்திலும் இறந்துவிடுவார் என்பதே நிலை என்று ஓவியத்தின் விளக்கக் குறிப்பு கூறியது. பதிமூன்றாம் நாள் ரஃபெல்லா இனிய கனவிலிருந்து விழித்து எழுவது போல் இன்முகத்துடன் துயில் எழுகிறார். அதற்கு முன் வாழ்க்கையில் அறிந்திடாத  நிறைவையும் முழுமையான ஆனந்தத்தையும் உணர்கிறார். தொடக்கத்தில் அரசாங்கம் இதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நகரத்தில் ரஃபெல்லாவைக் காண கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானதும் அரசு அவருக்கு தடைவிதித்தது. அங்கிருந்து தப்பி இந்த ரகசிய இடத்திற்கு வந்து இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வைரசை அருளி வருகிறார் என அன்னை ரஃபெல்லாவின் அகல விரித்த கரங்களுக்குள் ஆயிரக்கணக்கான மனித முகங்கள் தெரியும் கடைசி ஓவியத்திற்கு கீழ் எழுதப்பட்டிருந்தது. 

வைரவன் இவற்றையெல்லாம் அரையும்குறையுமாக கேள்விப்பட்டு தான் இங்கு வந்திருந்தான். ஒரு வைரஸ் முழுமையான மகிழ்ச்சியை அளித்திட முடியுமா? எனும் குழப்பம் அவனுக்கு இருந்தது. மற்றொரு சுவரில் ரஃபெல்லாவின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் அதன் முடிவுகளை குறிப்பிட்டிருந்தார்கள். அறிவியலாளர்கள் கூற்றின்படி புனித ஜானின் உடலில் இருந்த வைரசுக்கு வினோதமான மரபணு பிறழ்ச்சி ஏற்பட்டது. விளைவாக அது மூளையை, அதிலும் குறிப்பாக அதன் லிம்பிக் அமைப்பில் சென்று ஹைப்போதலாமஸ், ஹிப்போகேம்பஸ், அமிக்தலா ஆகிய பகுதிகளில் நிரந்தர மாற்றங்களைச் செய்கிறது. விளைவாக தொற்றில் இருந்து விடுபடுபவர் பிரபஞ்சமளாவிய பேரன்பையும் ஒருமை உணர்வையும் அடைகிறார் என ஆராய்ச்சிகள் வழியாக நிறுவியது. முழுவதுமாக நலம் மீண்ட அன்னை பணியைத் துறந்து வீடற்ற ஜானின் செய்தியை உலகம் முழுக்க அறிவிக்கப் புறப்பட்டார். ஜானின் அழுகாத உடல் ஆராய்ச்சிக்காக இன்னும் தலைநகரத்தில் பாதுகாக்கப்படுகிறது. 

காலையில் அவனை வரவேற்ற வெள்ளையன் அவனருகே வந்து நின்றான் ‘என் பெயர் கேப்ரியல். எல்லாவற்றையும் பார்த்தாயா..எனக்கு தொற்று பூரணமடைந்து மூளையில் மாற்றம் அடைந்துவிட்டது.. நாளை இங்கிருந்து புறப்படுகிறேன்.’ என்றான். ‘மெய்யாகவே ஆனந்தத்தை உணர்கிறாயா?’ ‘ஆம். முழு ஆனந்தத்தை. ஒருபோதும் இப்படியான ஒரு மகிழ்ச்சியை நான் உணர்ந்ததில்லை. திளைத்தல் என சொல்வார்களே. அது இதுதான்.’

தயங்கித் தயங்கி கேட்டான் ‘ஒரு வைரசால் மெய்ஞானத்தை அளித்துவிட முடியும் என நம்புகிறாயா?’ கேப்ரியல் புன்னகைத்தபடி சொன்னான் ‘உனக்கு இப்போது நான் என்ன சொன்னாலும் புரியாது. ஒன்றை மட்டும் சொல்கிறேன் கேள், ஒரு வைரசால் உன்னை சுயமிழக்க செய்ய முடியும், உனக்கு மரணத்தை அளிக்க முடியும் என்றால் அதனால் மெய்ஞானத்தை பேரானந்தத்தை ஏன் அளிக்க முடியாது? யோசித்துப் பார். சரி உன் சடங்கிற்கு தயாராகு.’ என்றான் கேப்ரியல். 

அன்று அவனுடன் சேர்த்து மொத்தம் அறுபத்தி மூன்று பேர். குட்டையை சூழ்ந்து நின்று நூற்றுக்கணக்கானவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். கொதிக்கும் காய்ச்சலில் வெளிறி வதங்கிய சருகாக இருந்த பதிமூன்று பேர் அழைத்து வரப்பட்டனர். அறைகளில் இருந்து நாற்காலியில் அவர்களை சுமந்து வந்தார்கள். சிலரால் கண்களை வாயை திறக்கக்கூட முடியவில்லை. தன்னார்வலர் அவர்களுடைய வாயைத்திறந்து எச்சிலை பூசிவிட்டார். இறுதியாக ரஃபெல்லாவிற்கு முன் சென்று நின்றான். ‘அளப்பறியா ஆனந்தத்தை தாங்க நீ தயாரா?’ என அவனிடம் கனிவுடன் கேட்டார். தலை குனிந்து ‘ஆம்’ என்றான். அவன் முகத்தில் எச்சில் வழிந்தது. 

அன்றிரவு நான்கு படுக்கைகள் கொண்ட அவனுடைய அறையில் உறங்கிப்போனான். மறுநாள் காலை வைரசின் அறிகுறிகள் லேசாக தெரியத்தொடங்கின. பிறர் உற்சாகமாக தினசரி சடங்குகளில் கலந்துகொண்டது போல் அவனால் இயலவில்லை. நான்கு பக்கமும் சூழ இருக்கும் மலையைக் கண்டான். அடிவாரத்தில் செறிந்திருந்த பசும் காடுகள். விந்தையான ஒரு மலைச்சிகரத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது அவனுடைய தோளைத் தொட்டு ‘அது ஒரு எரிமலை, நீ காண்பது அதன் வாயை, இப்போது காடு அதை மூடிவிட்டது. எவர் கண்டார் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.’ என்றார் அன்னை ரஃபெல்லா புன்னகை அரும்பிய முகத்துடன். ‘நீ ஏன் எதிலும் முனைப்புடன் பங்குகொள்ளவில்லை? எச்சில் குட்டிக்கு வரவும் இல்லை? கவனித்துக்கொண்டு தானிருக்கிறேன். அஞ்சுகிறாயா?.’ என அவனிடம் கேட்டார். ஒன்றும் சொல்லாமல் தொலைவில் தெரிந்த மலையை நோக்கிக் கொண்டிருந்தான். இந்த எரிமலை ஒருவேளை இப்போது வெடித்தால் என்ன செய்வீர்கள்?’ 

‘கையை அகல விரித்து அதில் நீந்துவேன்.’

தலைதூக்கி மிரட்சியுடன் அவரை நோக்கினான். 

‘முட்டாள், நிச்சயம் தப்பி ஓடவே முயல்வேன்’ என்றார் சிரித்துக்கொண்டே. ’ஆனால் மரணமடையும் போது எவ்வித வருத்தமும் இன்றி நிறைவுடன் மடிவேன். வாழ்க்கையை வாழ்பவருக்கு வருந்த ஏதுமில்லை. நீ மரணத்தை கண்டு அஞ்சுகிறாயா?.’

‘இல்லை, உங்கள் ஆனந்தத்தை கண்டு அஞ்சுகிறேன்.’

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் இனம் இதை அடையத்தான் போராடி வருகிறது அது இங்கே உனக்கு வெகு எளிதில் வாய்த்திருக்கிறது. எல்லாம் மாறிவிடும்.’ என அவனை இயல்பாக தொடுவதற்கு கை நீண்டது. சட்டென தன்னிச்சையாக அவன் உடல் தொடுகையைத் தவிர்த்து விலகியது அவனுக்கே வியப்பாக இருந்தது. ஒருகணம் அவனை புன்னகையுடன் நோக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். 

மூன்றாம் நாளிலிருந்து காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. அவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். அன்னை மட்டும் தினமும் ஒருமுறை அவனை காணவந்தார். அவனருகே அமர்ந்து மெல்ல தலையை வருடிக்கொடுப்பார். அவருடைய தொடுகை அவனை சிணுங்கச் செய்யும்.  

ஆர்ப்பரிப்பு அற்ற நீலக்கடலில் அவன் சிறிய படகு ஒன்றை வலித்துக்கொண்டிருந்தான். மேகமற்ற தெள்ளிய நீலவானம் அவனுக்கு கூரை. நீர் கொதித்து குமிழிடுகிறது. நிறம் மாறுகிறது. மொத்தமும் எரிமலை குழம்பாகிறது. அன்னை ரஃபெல்லா சிறகுகளுடன் ஒரு தேவதையைப் போல் அவனைக் கொத்திப் பறந்து செல்கிறார். வெண் மேகங்களில் புன்னகை தவழும் அவர்  முகத்தைக் காண்கிறான். அவர் கண்களில் அனல் தெறிக்கிறது. நேராக நெருப்பு உமிழும் எரிமலை வாயில் அவனை இடுகிறாள். பள்ளம் நீண்டுகொண்டே இருக்கிறது. விழுந்துகொண்டே இருக்கிறான். நா வறண்டு உடல் வியர்த்து கண்விழித்தபோது அன்னை அவனருகே அமர்ந்திருந்தார். கனவிலிருந்து சறுக்கி நினைவுக்கும் நினைவிலிருந்து வழுக்கி  கனவிற்கும் என மாறி மாறி நழுவிச் சென்றான்.  

‘இவனுடைய முகம் ஏன் இத்தனை துயர் மிகுந்ததாக இருக்கிறது? இவனுடைய கனவுகள் கோராமாக இருக்கின்றன என எண்ணுகிறேன். ஆச்சரியம். இதுவரையில் இங்கிருந்தவர்கள் இன்ப கனாக்களையே கண்டுள்ளார்கள்.’ பெருமூச்சு விட்டார். ‘நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். பழச்சாறு மணிக்கொருமுறை அளியுங்கள்.’ என அவனருகே நின்று பேசியது கனவுக்கும் நினைவுக்கும் இடையிலான பள்ளத்தாக்கில் அவனுக்கு கேட்டது. காய்ச்சல் உச்சத்திற்கு சென்றபோது கண் திறவாமல் பிதற்றினான். அவனுடைய கனவுகள் அழகாகத்தான் தொடங்கின. பலவர்ண பூக்களின் வெளியில் அவனொரு திறந்த வண்டியில் அவற்றைப் பார்த்தபடி செல்கிறான். குலுங்கிக்குலுங்கி செல்லும் அவ்வண்டியை நா நீர் சொட்டச் சொட்ட நான்கு நாய்கள் இழுத்துச் செல்வதைப் பார்த்ததும் சட்டென அவனுக்கு விழிப்பு வந்தது. 

விழித்திருந்த ஒரு சமயத்தில் அன்னை ரஃபெல்லா அவனிடம் கனவுகளைப்பற்றி கேட்டார். தன்னுடைய கொடுங்கனாக்களை ஒப்பித்தான். ‘கனவுகள் இத்தனை தூரம் நினைவில் இருக்கிறது என்றால் நீயும் அதை சேர்ந்து புனைகிறாய் என்று அர்த்தம். உனக்கு இந்த கோர கனவுகள் ஏன் வேண்டியதாய் இருக்கிறது என யோசி. மீண்டுவிடலாம்.’ என நிதானமாக சொல்லிவிட்டுச் சென்றார். 

மெல்ல காய்ச்சலில் இருந்து மீண்டான். கனவுகளும் நின்றன. எனினும் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் அறைக்குள்ளேயே கிடந்தான்  அவர்களின் பாடலும் உற்சாகமும் அவனை மேலும் மேலுமென எரிச்சல் கொள்ளச் செய்தது. மெதுவாக எழுந்து நடக்கச் சென்றான். மறுநாள் அவன் புறப்படலாம் என சொல்லப்பட்ட இரவு சாளரத்தின் வழியே தெரிந்த புகை வெளியை பார்த்தான். தூங்கும் எரிமலையிலிருந்து அந்தப் புகை எழுவது போல் அவனுக்கு தோன்றியதும் அவன் வயிற்றுள் ஒரு பிசைவை உணர்ந்தான். வெளியே சட்டென வலுத்த மழை பொழிந்ததும் புகை மறைந்ததைப் பார்த்தான். 

விடைபெறுவதற்காக காலையில் அன்னை ரஃபெல்லாவை தேடிச் சென்றான். அவர் முந்தைய இரவு பொழிந்து ஓய்ந்திருந்த மழையின் சுவடுகளை தொடர்ந்து கொண்டிருந்தார். முதல் முறை அவரை கண்டதிலிருந்து இப்போது வெகுவாக சோர்ந்து இளைத்து ஒடுங்கியிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஒரு சிறிய சுனை போல நீர் ஓடிக்கொண்டிருந்தது. அவரருகே சென்றபோது நடுங்கிக்கொண்டிருந்தான். ‘இந்த சுனை எங்கிருந்து வருகிறதென கண்டுபிடிக்க முனைகிறேன்.’ என அவனைப்பார்த்து புன்னகைத்தபடி சொன்னார். ‘இன்று கிளம்புகிறாய் அல்லவா? சென்று வா’ என தொடர்ந்தார். 

‘இதெல்லாம் பொய் தானே? என்னுடைய வேதனை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு இரவும் கோர கனவுகள். நான் உடைந்துவிடுவேன் போலிருக்கிறது.’ 

சற்றுநேரம் மெளனமாக இருந்த பின் அன்னை அவன் தோளை தொட முயன்றார். சிணுங்கிக்கொண்டு சட்டென விலகினான். 

‘உண்மையை சொல்வதானால, இதுவரை இப்படியொன்று இங்கு நடந்ததில்லை. என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடியவில்லை.’

‘இப்போதும் கேட்கிறேன், ஒரு வைரசால் உங்களுக்கு மெய் ஞானத்தை  அளித்து விட முடியுமா?’

‘’நீ வைரசை இழிவாக கருதுகிறாய். அது ஒரு கண்ணுக்குத்தெரியாத, அறிவற்ற அற்ப உயிர் என எண்ணுகிறாய். இவ்வுலகம் உனக்கானது மட்டுமே என எண்ணுகிறாய். ஆகவே தான் நீ இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாய்.’

‘ஒரு வைரஸ் உங்களுக்கு மெய்ஞானத்தை அளித்துவிட்டது என உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா?’ 

‘என்னை நான் பிரம்மாண்டமாக, எல்லையற்றவனாக உணர்கிறேன், ஒரு ஒத்திசைவை உணர முடிகிறது. இது உணர்வு என்று கூட சொல்ல முடியாது. அதையும் கடந்த வேறொன்று. ஒரு நிச்சயம், ஒரு அறிதல் எப்படியும் சொல்லலாம்.’

‘திரும்பவும்.. கேட்கிறேன், வைரஸ் நம்முடன் வாழ்ந்து தன்னை பெருக்கிக்கொள்ள இப்படியான ஒரு உத்தியை ஏன் உருவாக்கியிருக்க கூடாது? இப்போது நாம் எந்த தடையும் இன்றி அதை அனுமதிக்கிறோம்.’ 

பூத்திருந்த வெள்ளை ரோஜாவை கொய்தபடி சொன்னார் ‘இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு விலையுண்டு.’

‘வைரசுக்கு நம்மை அளிப்பது தான் அந்த விலையா’

கூடையில் சிவப்புநிற அரளிப்பூக்களை சேகரித்தபடி அமைதியாக நகர்ந்தார். ஒரு நீள் மூச்சிற்கு பிறகு சன்னமான குரலில் ‘யோசித்துப் பார், நாம் என்னவிதமான வாழ்க்கையில் இருந்தோம்? சாக்கடைகளில் புரண்டு கொண்டிருந்தோம். பொந்து எலிகள், கரப்பான்கள். அது தான் நம் வாழ்க்கை  இப்போது இதற்கு என்ன விலை கொடுக்கலாம் நீயே சொல்.’

அவன் இதயத் துடிப்பை செவிகளில் கேட்டான். 

‘நீங்கள் வெகுவாக இளைத்திருக்கிறீர்கள்.’

மாறாப்புன்னகையுடன் ‘என் நேரம் முடியப்போகிறது. நான் மரணித்துக்கொண்டிருக்கிறேன். நீயும் தான், இங்கே உள்ள ஒவ்வொருவரும் தான். இது உனக்கு மட்டுமே தெரிந்த, அரிய ரகசியம் என எண்ணிக்கொண்டிருக்கிறாய். நீ ஒரு முட்டாள்.’ என சொல்லி சிரித்தார். இங்கே மகிழ்ச்சியாக வெளியேறிச் செல்லும் அனைவரும் அறிவர்..’ 

‘இது மெய்ஞானம் அல்ல. தற்கொலை.’ உரக்க கத்தினான். 

‘இது மெய்ஞானமா இல்லையா என எனக்குத் தெரியாது. மெய்ஞானம் என நான் சொல்லவும் இல்லை. நீயாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாய். இது ஆனந்தம், இதுவரை மனிதர் அறிந்திடாத பேரானந்தம். அதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்’

‘இது வைரஸ் நம்மை வசமாக்கிக்கொண்டு கொன்றழிக்க மேற்கொள்ளும் புத்திசாலித்தனமான உத்தி.’

‘இருக்கலாம். அதற்குத் தேவையான உடலை அளிப்போம், நமக்கு அரிதான ஆனந்தத்தை அது அளிக்கிறது. இது ஒரு லாபகரமான வணிகம் தான்.’

‘நான் இதை நிச்சயம் வெளியே சென்று வெளிப்படுத்துவேன். பிழைத்திருக்கும் நாட்களில் முழுமூச்சுடன் எல்லோருக்கும் சொல்வேன். எவரையும் இங்கு வரவிட மாட்டேன். உங்களை அரசாங்கத்திற்கு காட்டித்தருவேன்.’ அவன் குரல் உரக்க ஒலித்தது.  

அரளிப்பூக்களின் செம்மை ஒரு கணம் அன்னையின் கண்களில் மின்னி மறைந்தது. அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மீண்டும் பூக்களை பறித்தபடி நிதானமான குரலில் அவனிடம் சொன்னார். ‘யாரும் உன்னை தடுக்கவில்லை. ஆனால்..’

ஆனால்..

’இந்த வைரஸ் உன்னில் தனது புதிய ஆட்டத்தை துவங்கியிருக்கிறது என எண்ணுகிறேன்.’

அவனுடல் அதிர்ந்தது.

‘ஆம், ஆனந்தத்தின் விழைவை விட அதன் மீதான அவநம்பிக்கை அதற்கு உகந்த வாகனமாக இருக்கும் என உன்னில் அது கண்டுகொண்டு விட்டது. நீ பேரழிவை உருவாக்கப்போகிறாய்.’ நேராக அவனுடைய கண்களை நோக்கி சொன்னார். 

அவன் கண்ணில் நீர் பெருகியது. ‘இல்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உங்கள் தோல்வியை மறைக்க பழி சுமத்துகிறீர்கள். ஒரு வைரசால் இப்படி எல்லாம் நிகழ்த்த முடியாது.’ 

‘இது நடக்கும். இது நிச்சயம் நடக்கும். இதுதான் உண்மை. ஒரு பேரழிவு சுழற்சியை நீ தொடங்கிவைக்கப் போகிறாய்.’ என உறுதியாக சலனமின்றி சொன்னார் அன்னை.   

‘நிச்சயம் நடக்காது.’ என பிதற்றியபடி அங்கிருந்து வெளியேறிச் சென்றான். ஈரத்தரையில் பதிந்து கடந்து செல்லும் அவனுடைய கால்சுவடுகளை வெறித்தபடி இருந்தார்.  

மூன்று நாட்களுக்குப் பின் மூச்சுவிட சிரமப்பட்டு படுக்கையில் கிடந்த  அன்னை கண்ணை மூடுவதற்கு முன் அவள் அறையிலிருந்த சாளரத்தின் வழியாகத் தெரிந்த எரிமலை வாய்க்கு மேலாகப் பருந்துகள் பறப்பதை பார்த்தார். அவருடைய முகம் அமைதியில் உறைந்திருந்தது.    

யாவரும் பதிப்பகம் நடத்திய க.நா. சு சிறுகதை போட்டியில் பரிசு வென்ற கதை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2021 02:44

February 2, 2021

விஷக் கிணறு முன்னுரை

விஷக் கிணறு தொகுப்பு வாங்க


‘அம்புப் படுக்கை’ வெளியாகி மூன்றாண்டுக்கு பிறகு வெளியாகும் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. கடந்த ஆண்டு 'நீலகண்டம்' வெளியானது. பெரிய எண்ணிக்கை என சொல்லிவிட முடியாது. இவ்வாண்டுகளில் நிறைய பயணங்கள், நிறைய வாசிப்பு, தொடர்ச்சியாக விமர்சன கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். 

முதல் தொகுப்பிலிருந்து சில முன்னகர்வுகள் நிகழ்ந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. முதன்மையாக, இருத்தலியல் கேள்விகளுடன் தற்காலிக சமரச உடன்படிக்கை எட்டப்பட்டு அவை பின்னுக்கு சென்று வேறுவிதமான கேள்விகளுக்கு வழிவிட்டிருக்கின்றன. அனுபவ வட்டம் விரிந்திருக்கிறது. இக்கதைகள் உருவான விதம் சுவாரசியமானவை. அகத்திற்குள் எழும் சிறிய நலுங்கல் எதிர்பாரா தருணத்தில் வெளிப்பட்டு கதையாக விரியும் வசீகர மர்மமே தொடர்ந்து எழுதுவதற்கான தூண்டுதல். மனைவிக்கு தெரியாமல் மனநோய்க்கு மாத்திரை உட்கொள்ளும் ஒரு மனிதரை சந்தித்தேன். ஒரே மருந்து இருவருக்கு இருவேறாக பயன்படுகிறது. இரு உருவங்களை காட்டுகிறது என்பதே ‘லித்தியம்’. ‘இயல்வாகை’ நெருங்கிய மருத்துவ நண்பர் உரையாடலின்போது ஒருவரி செய்தியாக சொல்லி சென்ற நிகழ்வை உள்ளடக்கமாக கொண்டது. ‘இந்திர மதம்’ புகழ்பெற்ற மரபு மருத்துவரின் கல்லூரிக்கால நினைவை அடிப்படையாகக் கொண்டது. ‘களி’ கணேசன் என்னுடன் விளையாடியவரின் வார்ப்புரு. ‘விஷக் கிணறு’ எனது மலேசிய பயண அனுபவத்தின் தலைகீழாக்கம். 


உண்மை மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளை கதையாக்குவது சவாலானது. எழுத்தாளரிடம் தன்னை திறந்து வைக்கும் மனிதரை அவமதிக்கும், இழிவு செய்யும், அல்லது பழி தீர்க்கும் வகையில், கதை மாந்தரை பிழையாக பிரதிநிதப்படுத்தும் கதைகள் எழுதுவது சரியல்ல என எண்ணுகிறேன். எல்லா நிகழ்வுகளும் கதையாவதில்லை. எங்கோ ஒரு சிறு உராய்வும் பொறியும் இருக்கும் நிகழ்வுகள், நம்முள் கேள்விகளை எழுப்ப சாத்தியமுள்ள நிகழ்வுகள் மட்டுமே கதையாகின்றன. எந்த நிகழ்வையும் திறமையான எழுத்தாளரால் கதையாக்க முடியும். அந்நிகழ்வில் கதை எது என கண்டுகொள்ள முடிந்தால் போதும். எங்கு எதிரெதிர் விசைகளின் உராய்வுகள் சாத்தியமாகின்றன? எது படிமமாக விரியத்தக்கது? அடிப்படையான கேள்விகள் எவை? உண்மை நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி எழுதுவது புனைவு எழுத்தாளரின் வேலையல்ல. கற்பனையின் துணைகொண்டு உண்மையின் மீதான விசாரணையை நிகழ்த்துவதே புனைவின் பணி. புனைவென்பது பொய்களால் அணி செய்யப்பட்ட உண்மை என்கிறார் லோசா. ‘விஷக் கிணறு’ கதையில் வரும் ஒப்பன்ஹைமர் பகுதி திட்டமிடப்படாதது. கதையை நிறுத்திவிட்டு சார்லஸ் தோர்ப் எழுதிய ஒப்பன்ஹைமர் வாழ்க்கை வரலாறை வாசித்து முடித்துவிட்டு அந்தப் பகுதியை எழுதி நிறைவு செய்தேன். ஒப்பன்ஹைமருக்குப் பிடித்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட் எனும் ஒருவரி விக்கிபீடியா தகவல் மட்டுமே அவருடைய கவிதைகளை கதைக்குள் பொருத்த எனக்குப் போதுமானதாக இருந்தது.  டெல்லரின் ஒரு மேற்கோள் அவருடைய ஆளுமையை வரையறை செய்யப் போதும். பிறருடைய அனுபவங்களையோ வரலாற்று நிகழ்வுகளையோ எழுத்தாளர் தனது அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து கற்பனையால் வளர்த்து எடுக்க முடியும்போது புதிய பல சாத்தியங்களை நோக்கிப் பயணிக்க முடியும். ‘விஷக் கிணறு’ வடிவம் மற்றும் உள்ளடக்கம் ரீதியாக எனது எழுத்திலிருந்த சில தளைகளை கடந்ததற்கான சாட்சி என்றே நம்புகிறேன். நீலகண்டம் வாசித்தவர்களுக்கு ‘சிதல்’ அதன் ஒருபகுதியின் விரிவாக்கம் என்பது தெரியும். எங்கள் பகுதியில் நான் காணும் பிரம்மாண்ட வீடுகள் மண்ணுக்குள் செல்வதைக் காண்கிறேன். வரலாறின் புதைமணல் சுழியை நேரடியாக கண்ணுறுவதுதான் ‘சிதல்’. ‘வைரஸ் கதைகள்’ ஊரடங்குக்கு முன்னர் எழுதியது. நான் எழுதிய காலத்தில் பயண அனுமதி அல்லது கிராமங்களுக்குப் பரவுதல் போன்றவை எல்லாம் நிகழவில்லை.  கண் முன் ஒரு டிஸ்டோபிய உலகம் மெல்ல மெல்ல சுருள் அவிழ்வதை கண்டுகொண்டிருந்தேன். அடுத்து என்ன எனும் அச்சமும் கிளர்ச்சியும் ஒருசேர உணர முடிந்த காலகட்டம். நிகழ்வு புனைவை விட அசாதாரணமாக உருக்கொண்டு வெருட்டிய காலம். கற்பனை என்றும் டிஸ்டோபியா என்றும் எண்ணி எழுதப்பட்ட கதைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா எல்லா இடங்களிலும் விரவி பரவுகிறது. ஐந்து கதைகளில் மூன்று கதைகள் ஒருவகையான டிஸ்டோபிய புனைவுகள் என்று சொல்லலாம். நான்கு கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. 

ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘விஷக் கிணறு’. கதைகளை வெளியிட்ட ‘கல்குதிரை’ ;தினகரன் தீபாவளி மலர்’ ‘இந்து தமிழ் திசை தீபாவளி மலர்’ ‘இடைவெளி’ ‘வல்லினம்’ யாவரும்’ ஆகிய இதழ்களுக்கு நன்றி. கதைகளுக்கு வாசிப்பையும் விமர்சனங்களையும் அளித்த ஜெயமோகனுக்கும், ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம்’, ‘பதாகை’, ‘சிற்றில்’ நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.  ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதையை க.நா.சு சிறுகதைப் பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த ஜீ. முருகனுக்கும், புத்தகத்தைப் பதிப்பிக்கும் நண்பர் ஜீவ கரிகாலன் மற்றும் கண்ணதாசன், மெய்ப்பு நோக்கிய ஸ்ரீதேவி அவர்களுக்கும், வடிவமைப்பாளர் கோபு  ஆகியோருக்கும் நன்றிகள். என்னை எழுத அனுமதிக்கும் சுதீர் மற்றும் சபர்மதிக்கு முத்தங்கள். மருத்துவன் எழுத்தாளன் என இரு வேடங்களில் மாறிமாறி உட்புகுந்துகொள்ளும் என்னை என் குழப்பங்களுடன்  முழுமையாக ஏற்றுக்கொண்ட மானசாவிற்கு அன்பு. எழுத்துப்பயணத்தில் எப்போதும் உடன்வரும் அம்மாவிற்கு வணக்கங்கள். 

இத்தொகுதியை அம்மா, மனைவி மற்றும் மகள் என என் வாழ்வை நிறைத்திருக்கும் மூன்று தலைமுறை பெண்களுக்கு சமர்ப்பித்திருக்கிறேன். இங்கே அவர்களைப் பற்றி எதை எழுதினாலும் தேய்வழக்காகவும் சம்பிரதாயமாகவும் இருக்கும். நெருக்கமானவர்களிடம் இருக்கும் அணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றுவது கூச்சமாகவும் இருக்கிறது. அவர்கள் அளித்த / அளிக்கும் அளப்பறியா கொடைக்கு சிறு செய்நன்றி. விஷக் கிணற்றிலிருந்து என்னை மீட்கும் கரங்கள் அவர்களுடையவை. 

சுனில் கிருஷ்ணன் 

4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், 

காரைக்குடி- 2 

4.11.2020 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2021 23:14

Suneel Krishnan's Blog

Suneel Krishnan
Suneel Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Suneel Krishnan's blog with rss.