Suneel Krishnan's Blog, page 5
December 29, 2023
வேடிக்கை பார்ப்பவன்- யுவன் சந்திரசேகருடன் ஒரு உரையாடல்- முன்னுரை
(விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூலிற்காக எழுதிய முன்னுரை)
எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு ஒரு ரீடர் செய்ய வேண்டும் என்பது அவரது வாசகராக எனது நெடுநாள் கனவுகளில் ஒன்று. இன்னதென்று வகுத்துக்கொள்ள முடியாத மர்மமும் வசீகரமும் நிரம்பிய எழுத்து அவருடையது. கதை எதற்காக சொல்லப்பட வேண்டும் எனும் கேள்வியை வெவ்வேறு காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் எதிர்கொள்வோம். வேறு எதற்காகவும் இல்லை, அதன் களிப்பிற்காக, அதில் திளைப்பதற்காக என்பதே யுவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விடை. நூல்வனம் வெளியீடாக வரவுள்ள அந்த ரீடருக்காக அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என உத்தேசித்தேன். மார்ச் மாதம் ஒருமுறையும் ஜூலை மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று உரையாடினோம். முதல் அமர்வில் விக்னேஷ் ஹரிஹரன், காஞ்சி சிவா, அ. க. அரவிந்தன் ஆகியோர் அவருடன் உரையாடினோம். ஜூலை மாத அமர்வில் எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப்பும் காளிபிரஸாத்தும் விக்னேஷ் ஹரிஹரனும் உரையாடலில் பங்கெடுத்தார்கள்.
இந்த நேர்காணலுக்காகவும் ரீடருக்காகவும் அவரை தொடர்ந்து வாசித்தேன். சுரேஷ் பிரதீப்பும் மொத்தமாக மீண்டும் வாசித்தார். நானும் சுரேஷும் அதிகாலை அவர் வீட்டுக்கு சென்று இறங்கிய போதுதான் ஜெயமோகன் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு யுவனுக்கு அளிப்பதாக முடிவெடுத்துள்ளதாக செய்தி அனுப்பினார். இந்த நேர்காணல் விஷ்ணுபுரம் விருதிற்கு முந்தியே திட்டமிடப்பட்டது. விருது இந்த நேர்காணல் தனி நூலாக பதிப்பாக்கம் பெறுவதற்கு ஒரு முகாந்திரம் அளித்தது. எங்களுக்கே அளிக்கப்பட்ட விருது என உணர்ந்தோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதியை அகழ் மின்னிதழில் வெளியிட்டோம். நூற்றி எழுபது பக்கங்கள் நீண்ட நேர்காணல் இது. ஒரு பகுதியை அகழ் மின்னிதழில், இன்னொரு பகுதியை ரீடருக்கும் மற்றொரு பகுதியை ஜெயமோகன் இணையதளத்திலும், விழாவில் வெளியாகும் கட்டுரை தொகை நூலின் பகுதியாகவும் வெளியிடலாம் என்பதே எங்கள் யோசனை. ஜெயமோகன் நேர்காணலை முழு தனி நூலாக விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக விழா சமயத்தில் வெளியிடுவோம் என கூறினார். ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் மீனாம்பிகை மற்றும் குவிஸ் செந்தில் ஆகியோருக்கும் எங்கள் நன்றி.
விக்னேஷ் ஹரிஹரன், சுனில், யுவன், காஞ்சி சிவா, அ. க. அரவிந்தன், ஒரு நல்ல நேர்காணல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவரே அவரது 'நினைவுதிர் காலத்தில்' ஒரு முன்மாதிரியை வைத்துள்ளார். சிகரங்களும் சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் மாறி மாறிவரும் நிலப்பரப்பிற்குள் பயணிப்பதான ஒரு அனுபவத்தை அளிக்கும். அதேபாணியில் நேர்காணலை பேசு பொருள் சார்ந்து அத்தியாயங்களாக வகுத்துள்ளோம். இந்த நேர்காணலில் அப்படிக் குறைந்தது மூன்று சிகரங்களையாவது அடையாளம் காண முடியும். இரண்டாவதாக, இந் நேர்காணலை முடிந்தவரை அவரது பேச்சுமொழிக்கு அருகே கொண்டுவர வேண்டும் என்பதில் மெனக்கெட்டோம். யுவன் அபாரமான உரையாடல்காரர். காரைக்குடிக்கு வந்தபோது கூட "எங்கயாவது போலாமா சார்" என்றால் "வாங்க பேசிக்கிட்டு இருப்போம். அதுதானே நம்ம லாகிரி" என்பார். ஏறத்தாழ ஏழுமணிநேர உரையாடல் பதிவு உள்ளது. இத்தனை பேசிய பின்னரும் நாங்கள் இன்னும் அவரோடு உரையாடுவதற்குப் பல விஷயங்கள் எஞ்சியிருப்பதைக் கண்டுகொண்டோம். காலை பத்து மணிக்கு அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றோம். உள்ளே செல்வதற்கு நிறையப் பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. விசாலமான வீடு. ஒவ்வொரு அறையிலும் இசைக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அவரது அறையிலிருந்து கீழே நீச்சல் குளம் தெரியும். விசாலமான ஃபிரெஞ்சு ஜன்னல்கள் வழி போதுமான வெளிச்சமும் காற்றும் உள்ளே வந்தது. "உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே" என்றபடி சித்தார் இசையை சன்னமாக ஒலிக்க விட்டார். அநேகமாக இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை "காப்பி சொல்லட்டா?" என்பார். நாங்கள் சென்ற அன்று மகள் வழி பேரன் பிறந்து ஒருமாதம் ஆகியிருந்தது. மதியம் அவருடனேயே வயிறார உண்டோம். இருட்டும்வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். நமக்குப் பிடித்த ஆளுமைகளை எழுத்தாளர்களை நெருங்குவது அவசியமில்லை என்பார்கள். அவர்கள் மீதான நம் மதிப்பு குறைந்துவிடும், ஏதோ ஒருவகையில் நமக்கு அவர்கள் ஒவ்வாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்பார்கள். எனக்கே கூட அத்தகைய சில அனுபவங்கள் உண்டு. ஆனால் யுவன் இன்னும் இன்னும் என அணுக்கமாகவே தெரிந்தார். உரையாடலில் நேர்மையாக வெளிப்பட்டார் என்பதே காரணம் எனத் தோன்றுகிறது. இந்த உரையாடலை வாசித்தால் ஒன்று புரியும், கேள்விகள் அவரை ஏதேனும் ஒருவகையில் வரையறை செய்ய முயன்றபடி இருக்கும், அவர் அவற்றை மீறிச் சென்றபடியே இருப்பார். ஒருவிதமான கபடி ஆட்டம்போல. இந்த இரு அமர்வுகள் முடிந்தபின்னர் இந்த உரையாடலை நினைவுகூரும்போதும் வாசிக்கும்போதும் திகைப்பே எஞ்சியிருக்கிறது. இங்கே யுவன் ஒரு சிறு வட்டத்திற்கு அப்பால் சென்று சேரவே இல்லை. ஏன் என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இருமைகளுக்கு வெளியே இருப்பவர். தீர்ப்பு சொல்பவராக இல்லாமல் வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறார். நமக்கோ, தீர்மானங்களும் தீர்ப்புகளும் ஆறுதல்களும் அல்லவா வேண்டியதாய் இருக்கிறது. நேர்காணலை தட்டச்சு செய்வதற்காகக் கேட்கும்போது பலமுறை எல்லோரும் சேர்ந்து சிரித்த சத்தத்தைக் கேட்டபடி இருந்தேன். அந்தச் சிரிப்பை நேர்காணலில் கொண்டு வரமுடியுமா எனத் தெரியவில்லை. கிண்டலும் கேலியும் விளையாட்டுமாய் அலுப்பே தட்டாமல் சென்றன அவ்விரு நாட்களும். மற்றொரு விஷயம், நேர்காணல் முடிந்து பலமாதங்கள் ஆகியும் பல்வேறு உரையாடல்களின்போது வெளிப்பட்ட அவரது உடல்மொழியை மனம் அப்படியே படம்பிடித்து வைத்திருக்கிறது. அவரைப் பார்த்தவர்கள், அவருடன் ஒருமுறை உரையாடியவர்கள்கூட இந்த நேர்காணலில் அவரது குரலை அதன் ஏற்ற இறக்கத்தோடு கேட்க முடியும் என்றே நம்புகிறேன். முதன்மையாக தன் முன்னோடிகள் மீதும் சக எழுத்தாளர்கள் மீதும் அவருக்கிருக்கும் மதிப்பும் வாஞ்சையும் இந் நேர்காணலில் வெளிப்படுகிறது.
காளி ப்ரஸாத், சுனில் கிருஷ்ணன், யுவன், சுரேஷ் பிரதீப் கவிதைகள் குறித்து ஜெயமோகனுக்கும் யுவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், சுகுமாரனுக்கும் அவருக்கும் இடையே நகுலன் கவிதைகள் சார்ந்து நிகழ்ந்த உரையாடல், மின் தமிழ் இதழில் சி. சரவணகார்த்திகேயன் எடுத்த நேர்காணல், புரவி இதழில் கமலதேவி எடுத்த நேர்காணல், அண்மைய வல்லினம் மின்னிதழ் நேர்காணல் என பல்வேறு நேர்காணல்கள் இதுவரை வந்துள்ளன. அவற்றில் பேசப்பட்டவை பலவும் இங்கும் வரக்கூடும். அவற்றில் பேசப்படாத பலவும் இந்த நேர்காணலில் பேசப்பட்டுள்ளன. யுவனையும் அவரது படைப்புகளையும் அவற்றுக்கு ஆதார விசையாக இருக்கும் அவரது கலையிலக்கிய நோக்கையும் வாசகருக்கு இந் நேர்காணல் அறிமுகப்படுத்தும் என எண்ணுகிறேன். நேர்காணலில் நல்ல கேள்விகள் முக்கியம்தான். அதைவிடவும் பதில்கள் மிக முக்கியம். தொடக்கநிலை அடிப்படைக் கேள்விகள் முதல் நுண்ணிய அவதானிப்புகள் வரை பல்வேறு வகையான கேள்விகள் இந்த நேர்காணலில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தங்குதடையின்றி வெளிப்படுத்திய நண்பர்கள் அரவிந்தன், விக்னேஷ், காஞ்சி சிவா, காளி மற்றும் சுரேஷ் பிரதீப்பிற்கு நன்றி. யுவனுடைய அத்தனை கேலி கிண்டல்களிலும் பங்கேற்றபடி எங்களுக்கு இரு நாட்களும் உணவளித்த உஷாம்மாவிற்கு நன்றி. எங்களுக்கு நேரத்தை அளித்து தனது ஆத்மார்த்தமான பதில்களால் இந்த நேர்காணலை உயிர்ப்புடையதாக ஆக்கிய யுவனுக்கு நன்றி.
சுனில் கிருஷ்ணன்
சுரேஷ் பிரதீப்
காளி பிரஸாத்
விக்னேஷ் ஹரிஹரன்
காஞ்சி சிவா
அ. க. அரவிந்தன்
23/11/23
August 11, 2023
போபால் பயணம் - 2- சாஞ்சி
கன்னட எழுத்தாளர் பத்மநாப பட். இந்த பதிவில் இடம்பெரும் புகைப்படங்கள் யாவும் அவர் எடுத்தவையே. 3 ஆம் தேதி காலை ஜனாதிபதி நிகழ்வை துவக்கி வைக்க வருகிறார் என எங்களுக்கு சொல்லப்பட்டது. பாதுகாப்பின் பொருட்டு எக்கச்சக்க கெடுபிடிகள். கைபேசியை எடுத்துவரக்கூடாது, பை ஏதும் கொண்டுவரக்கூடாது, 11.30 மணிக்கு எல்லாம் விழா அரங்கில் அமர்ந்திட வேண்டும். எங்களுக்கு வேறொரு திட்டம் இருந்தது. என்னோடு 2018 ஆம் ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெற்ற கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் இங்கு வந்திருந்தார். ஒரு நாவலும் சிறுகதை தொகுப்பும் எழுதியுள்ளார். பிரஜாவாணி எனும் கன்னட துவக்க விழா கேட்டு என்ன புண்ணியம், நாம் கிளம்பி சாஞ்சி செல்வோம் என்றான். சிக்கல் என்னவென்றால், நிகழ்விற்கு சுமார் ஐநூறு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் , ஒவ்வொருவரும் போபாலில் ஒவ்வொரு இடத்தில் தங்கியிருந்தோம். கவிஞர் சல்மா "வடநாட்டுல தனியா போறதுன்னா பயம், என்கைனாலும் கூட்டிட்டு போயிடு தம்பி" என சொல்லியிருந்தார். ஆனால் நாங்கள் ஆளுக்கொரு மூலையில் இருந்தோம். இதற்கிடையே எனது விடுதியில் தங்கியிருந்த மது ராகவேந்திரா எனும் கவி எங்களோடு இணைவதாக இருந்தது. மது தஞ்சாவூர் மராட்டிய பின்புலம் கொண்டவர். வளர்ந்தது கொல்கத்தாவில், மணமுடித்திருப்பது அருணாச்சல பிரதேச பெண்ணை, வசிப்பது அஸ்ஸாமில்.
பத்மநாப பட் ஓலாவில் வண்டியை அமர்த்திக்கொண்டு எனது விடுதிக்கு வந்து சேர்ந்தார். இண்டிகா காரில் பின்னிருக்கையில் முடங்கிக்கொண்டு மூவர் அமர்வது சிரமம் என்பதால் மது வரவில்லை. நகரின் மறுமூலையிலிருந்த சல்மாவை அழைத்துக்கொண்டோம். எனக்கும் பத்மநாப பட்டுக்கும் சுமாரான இந்தி அறிவு உண்டு. ஓட்டுநர் கொஞ்சம் ராங்கித்தனம் செய்தார். எப்படியோ சமாதானம் செய்து சென்று வந்தோம். மையசாலையை விட்டுவிட்டு டோல்கேட் இல்லாத சாலையின் வழி அழைத்து சென்றார். மழை தூறி நிலக்காட்சி வெகு அழகாக இருந்தது. நாங்கள் சென்ற சாலையில் ஓரிடத்தில் இங்கு 'டிராபிக் ஆப் கேன்சர்' கடந்து செல்கிறது என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். விந்திய மலை தொடர் எங்களுடன் வந்தபடி இருந்தது. பீடா வாயர்கள் பானிப்பூரியான்கள் என நாம் பொதுமைப்படுத்தி நக்கலடிக்கிறோம். நாம் நாகரிகத்தின் உச்சத்தில் உள்ள குடிமை சமூகம் எனும் கற்பிதம் நமக்கு உண்டு. தமிழகத்தில் முக்கியமான தொல்லியல் தலங்களுக்கு சென்றிருக்கிறேன். பீர் புட்டிகளும் பிளாஸ்டிக் கப்புகளும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் இல்லாத தொல்லியல் இடமே இல்லை என சொல்லலாம். என் ஊருக்கு அருகே இருக்கும் திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல் அனுபவங்களை கொண்டே என்னால் இதை சொல்லிவிட முடியும். சாஞ்சியிலும் சரி பின்னர் சென்ற பிம்பேட்காவிலும் சரி நான் ஒரேயொரு பிளாஸ்டிக் குப்பையை கூட காணவில்லை. பொது கழிப்பறை வெகு சுத்தமாக பராமரிக்கப்பட்டது. இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு சிறிய பெட்டிக்கடை கூட இல்லை என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கலாம். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பதால் அதற்கென சில நெறிமுறைகள் இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டேன். சாஞ்சி சிறிய குன்றின் மீது உள்ளது. தூறலில் நனைந்தபடி, ஈரமான சாஞ்சியை கண்டது அபாரமான அனுபவம். ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விளக்கமான தகவல்கள் ஆங்காங்கு அளிக்கப்பட்டுள்ளன. கும்மட்டங்களில் ஏறி செல்ல வழி இருக்கிறது. கும்மட்ட வடிவத்தின் பெயர் 'அண்டம்' அதனுள் புத்தரின் சாம்பல் உள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்தூபிகள் புத்தர் தொடர்பான ஏதோ ஒரு சின்னத்தை தன்னகத்தே கொண்டவை. சாஞ்சி அசோகர் எழுப்பியது. பனிரெண்டாம் நூற்றாண்டிற்கு பின் புழக்கத்தில் இல்லாமல் ஆனது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1818 ஆம் ஆண்டு மீண்டும் கண்டடையப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்பட்டது. பெரும் கட்டிடங்கள் நிறைந்த கோட்டமாக இருந்திருக்க வேண்டும். அடித்தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மூர்த்தங்கள் ஏதுமற்ற கருவறைகள். அமர்ந்து தியானிக்கும் புத்தர் திருவுரு, தலையுடைக்கப்பட்ட புத்தர் உருவம் என பலவற்றையும் கண்டோம்.
கவிஞர் சல்மாவுடன் இத்தகைய வரலாற்று தலங்களை காணும்போது அவற்றுக்கு பின்னிருக்கும் காலத்தை விஞ்சி நிற்கவேண்டும் எனும் விழைவு படைப்பூக்கமாக எப்படி உருமாற்றமடைகிறது என சிந்தனை தோன்றியது. ஏதோ ஒரு வகையில் அத்தனை படைப்புச் செயல்பாடும் காலத்தை விஞ்சி நிற்க வேண்டும் எனும் பெருங்கனவால் இயக்கப்படுவதாக இருக்க முடியும். ஆனால் எத்தனை உண்மையில் எஞ்சியிருக்கும்? எஞ்சியிருப்பது தான் மேலான படைப்பு என்பதற்கான சான்றா? பயன்படுத்துபவற்றையும், புழக்கத்தில் உள்ளவற்றையும் மதிப்பிடவும் மேம்படுத்தவும் நமக்கு கருவிகள் உண்டு. கலை போன்ற பூடகமான பயன்பாடு உள்ளவற்றை காலம் எப்படி கடத்துகிறது என்பதற்கு திண்ணமான வழிமுறை ஏதுமில்லை. காளத்தி விஞ்சி நிற்கும் ஒரு படைப்பு என்பது காலத்தால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளின் பிரதிநிதியும் கூட. சிங்கள சுற்றுலா குழு ஒன்று நாங்கள் சென்றிருந்த சமயத்தில் வந்திருந்தது. நான் மட்டுமே கையில் குடை வைத்திருந்தேன். சல்மாவும் பத்மநாப பட்டும் ஓரளவு நனைந்துவிட்டார்கள். அமர்ந்து தியானிக்க முடியவில்லை என்றாலும் மழையில் சாஞ்சியி கண்டது பெரும் பரவசம் என்றே சொல்ல வேண்டும். இரு பெரும் தூண்களை தனியாக வைத்திருந்தார்கள். படுக்கைவசத்தில் நோக்கும்போது தான் ஒற்றை கல்லால் ஆன அதன் பிரம்மாண்டம் விளங்குகிறது. புதிதாக மணமான இளம் தம்பதியர் சாஞ்சியை பார்க்க வந்திருந்தனர். பையனுக்கு இருபது இருக்கலாம், பெண்ணுக்கு அதைவிட குறைவு. பையன் ஷூ அணிந்திருக்க பெண் வெறுங்காலில் நடந்தது பார்க்க வினோதமாக இருந்தது. சல்மா அவனிடம் நேரடியாக கேட்டே விட்டார். செருப்பு அறுந்துவிட்டது என்று ஏதோ சொன்னான்.
கன்னட - தமிழ் இலக்கிய சூழல் பற்றி போபால் திரும்புகையில் பேசியபடி வந்தோம். பைரப்பா நூல்கள் முப்பதாயிரம் பிரதிகள் விற்கின்றன. பிறருக்கு அத்தகைய வாய்ப்புகள் ஏதுமில்லை. பத்மநாப பட் பிரஜாவாணி இதழில் பணியாற்றியபோது நடிகர் அர்ஜுன் மீதான மீடூ குற்றசாட்டை முதன்முதலில் வெளி கொணர்ந்தவன். நடிகை சுருதி ஹரிஹரன் நேர்காணல் வழியாக இந்த செய்தி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரஜாவாணி இலக்கிய பகுதியில் நிறைய மதிப்புரைகள் எழுதியுள்ளான். விவேக் ஷான்பகை மொத்தமாக படித்து அவரை நீண்ட நேர்காணல் செய்ததாக கூறினான். இப்படி மொத்தமாக வாசிப்பதும், அதையொட்டிய உரையாடலும் எழுத்தாளரை எப்படி தொகுத்துக்கொள்ள உதவுகிறது என இருவரும் பேசிக்கொண்டு வந்தோம். என் நோக்கில் விமர்சனம் என்பது அப்படியான ஒன்றாகவே இருக்க முடியும். ஒரு படைப்பை பற்றிய மதிப்பீடு என்பது ரசனை அபிப்பிராயம் என சொல்லிக்கொள்ளலாம். அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது விரிந்த பின்புலத்தில் எழுத்தாளரையும் அவரது ஆக்கத்தையும் வைத்து நோக்குவது.
ஜனாதிபதியின் வருகையை பொருட்டு போபாலில் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. எங்கள் விழா நடக்கும் ரவீந்திர பவானிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஓட்டுநர் இறக்கிவிட்டார். ஓலா காட்டியதைவிட 250 ரூபாய் கூட கொடுத்தோம். சல்மா முழுக்க நனைந்திருந்ததால் விழா அரங்கிற்கு வர தயங்கினார். ஆனால் வேறு வழியில்லை என்பதால் மூவரும் சென்றோம். நாங்கள் சென்றபோது தான் திரவுபதி முர்மு உரையாற்ற தொடங்கினார். எங்களது அடையாள அட்டையை சரிபார்த்துவிட்டு உள்ளே விட்டார்கள். பையிற்கோ கைபேசிக்கோ தடை சொல்லவில்லை. மாடியில் உட்கார்ந்து கொண்டோம். விழா மேடையை புகைபபடம் எடுக்க முயன்றபோது மட்டும் வந்து எச்சரிக்கை செய்தனர். நாட்டுப்புற / பிராந்திய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பகுதியினர் தங்களுக்கே உரிய தாளவாத்தியங்களுடன், அலங்காரம் செய்துகொண்டு இருபது நிமிடங்கள் ஆடினர். ரவீந்திரபவனின் மைய அரங்கத்தில் ஐயாயிரம் பேர் அமரலாம். நல்ல ஒலியமைப்பு கொண்டது. மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண ராமன், எழுத்தாளர் இரா. முருகன் ஆகியோர் அங்கே வந்திருந்தனர். நிகழ்வு முடிந்ததும் உணவிற்கு எங்கு செல்வத்த்தேனா எவருக்கும் தெரியவில்லை. ரவீந்திர பவனின் கீழ்த்தளத்தில் உணவு கூடமும் எங்களுக்கான சிறிய நிகழ்வு அரங்குகளும் இருந்தன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட், சங்கீத் நாடக அகாடமி ஆகியோரின் புத்தக நிலையங்கள் இருந்தன. ரவீந்திர பவன் போபாலில் நகர் மையத்தில் உள்ளது. அத்தனைப்பேரிய இடம் நகர் ஐயத்தில் நன்கு பராமரிக்கப்படுவது வியப்பை அளிக்கிறது. உணவிற்கு பெரிய வரிசை. 2.30 மணியிலிருந்து அமர்வுகள் தொடங்குவதாக அறிவித்திருந்தார். ஒரே நேரத்தில் ஐந்து அரங்குகள் நிகழ்ந்தன. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவந்த 'பாகேஸ்ரீ' தொகுப்பை எழுதிய எஸ். சுரேஷ் அவர்கள் வந்திருந்தார். சுரேஷ் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதக்கூடியவர். இந்திய இலக்கியம் குறித்து ஆழமான வாசிப்பு உடைஅய்வர். அவருடைய பரிந்துரையின் பேரில் குர்தயாள் சிங்கின் ஒரு நூலை சாகித்திய அகாதமி ஸ்டாப்களில் வாங்கிக்கொண்டேன். இசை குறித்தும் கவிதைகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வருபவர். எனது விடுதியிலேயே அவருக்கும் அறை என்பதாலும், தங்குதடையின்றி இந்தி பேசுவார் என்பதாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான நண்பர் என்பதாலும் இருவரும் சேர்ந்தே சுற்றினோம்.
எழுத்தாளர்களாக உருமாறிய மருத்துவர்கள் பங்குகொள்ளும் அமர்வு நிகழ்ந்தது. மருத்துவம் என்பது வேறு எழுத்து என்பது வேறு என அரங்கை தாங்கிய துருபா ஜோதி போரா தொடங்கினார். ஆரத்தி பெல்லாரி எப்படி மருத்துவத்தின் அழுத்தங்களை இலக்கியத்தின் வழி எதிர்கொள்கிறேன் என்றார். அபிஜித் தரப்தார் மருத்துவராக இருப்பது எத்தகைய வாய்ப்பு கதைகளை உருவாக்குவதற்கு என தனது அனுபவத்திலிருந்து சில நிகழ்வுகளையும் அவை கதையாகி போன தருணங்களையும் சுவாரசியமாக சொன்னார். ஆனால் நான் பெரிதும் ஏற்கப்பட்டது காவேரி நம்பீசனின் உரையினால் தான். காவேரி கர்நாடகத்தில் வசிக்கிறார். தனது மருத்துவ வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அறுவை சிகிச்சை நிபுணராக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றி வருகிறார். பல சிறார் கதைகளை எழுதியுள்ள அவர் 'A Luxury called Health' எனும் நூலுக்காக பரவலாக கவனிக்கப்பட்டார். மருத்துவராக இருப்பது எழுத்தை எப்படி பாதிக்கிறது என்பதை தாண்டி எழுத்தாளராக இருப்பது மருத்துவ தொழிலில் எத்தகைய பாதிப்பை செலுத்துகிறது என்பதை பாவனைகள் ஏதுமின்றி தெளிவாக சொன்னார். அமர்வு முடிந்ததும் அவரை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சநேரம் பேசினேன். எனக்கு பிடித்த ஆயுர்வேத சுலோகம் ஒன்று உண்டு, அதன்படி ஆதிசேடன் சரகராகவும், பதஞ்சலியாகவும் பாணினியாகவும் அவதரித்து முறையே உடல் மனம் மாற்று வாக் தோஷங்களை சரக சம்ஹிதை, யோக சூத்ரம் மற்றும் மஹா பாஷ்யம் ஆகியவற்றை இயற்றி சீர் செய்கிறார் என கூறும். மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருப்பது ஒன்றின் இரு பக்கங்கள், அல்லது ஒன்றே என எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு.
'இலக்கியமும் இயற்கையும்' எனும் தலைப்பில் இன்னொரு அரங்கு நடந்தது. ரிக்வேதம் உபநிஷத் தொடங்கி இயற்கை இப்படியொரு பேசு பொருளாக இலக்கியத்தில் வருகிறது, இன்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் சிக்கல்களில் போதுமான அளவு இலக்கியம் எதிர்கொள்கிறதா? அவற்றை பேச வேண்டிய தேவை என்பதை எல்லாம் பற்றி நல்லதொரு உரையாடல். குறிப்பாக அரங்கை ஒருங்கிணைத்த சேகர் பாதக் மற்றும் விவேக் மேனன் உரை சிறப்பாக இருந்தது. விவேக் மேனன் அமைதி பள்ளத்தாக்கு காக்கப்பட்டதில் சுகதகுமாரி 'டீச்சரின்' கவிதைகள் ஆற்றிய பங்களிப்பை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய கவிதைகள் ஒரு இயக்கமாகவே மாறியதை பற்றி குறிப்பிட்டார். அமிதவ் கோஷின் எழுத்துக்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இயற்கையை அவதானிப்பது, பதிவு செய்வது, கொண்டாடுவது, நன்றி தெரிவிப்பது, சீரழிவை ஆவணப்படுத்துவது, மாற்று வாழ்வை கற்பனை செய்வது என பல்வேறு தளங்களில் செயல்பட முடியும். அருண் பிரசாத் கொண்டு வந்த காலநிலை மாற்ற தொகுப்பு நூலின் முக்கியத்துவத்தை பற்றி எண்ணிக்கொண்டேன். தமிழில் அது ஒரு முக்கியமான தொடக்கம். அமர்வின் இறுதியில் பேசிய சேகர் பாதக் அரசின் சூழலியல் கொள்கைகளை சற்று தீர்க்கமாக விமர்சித்து பேசினார். காஷ்மீர் சிக்கலும் மணிப்பூர் சிக்கலும் நிலம் மற்றும் சூழலியலுடன் தொடர்புடையவை. அக்கோணங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றார். இந்த அமர்வின் முடிவில் என்னை தொந்திரவு செய்யும் நிகழ்வு ஒன்று நடந்தது. சேகர் பேசி முடித்ததும் எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் இப்போது பேசியவர் பெயர் என்ன என கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பின்னாடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த குழுவினரிடம் கேட்டார். அவர்கள் சொன்னதும் யாருக்கோ அவசர அவசரமாக கைபேசியில் அனுப்பினார். விடுவிடுவென வெளியேறி சென்றார். உச்சியில் சிகை வைத்திருந்தார், கையில் ஆரஞ்சு கயிறு, டீஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அவர் யார்? எதற்காக அமர்ந்தார்? யாருக்கு செய்தி அனுப்பினார்? என்ன அனுப்பினார்? ஏதும் தெரியவில்லை. விழா முடியும்வரை அவர் மீண்டும் கண்ணில் படுகிறாரா என தேடியபடி இருந்தேன். ஆனால் கண்ணில் படவே இல்லை. திறந்த சாத்தியம் கொண்ட இந்நிகழ்வில் மனம் உச்சபட்ச மோசமான சாத்தியத்தையே கற்பனை செய்கிறது.
அடுத்து 'ஐடியா ஆப் இந்தியா' எனும் அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். முதல் முரண்பாடு அங்கு பேச அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்திய மையநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த தலைப்பிற்கு தென்னிந்தியாவிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் ஒருவரையாவது அழைத்திருக்க வேண்டாமா? இந்தியா எனும் கருத்தாக்கத்திற்கும் பாரதம் எனும் கருத்தாக்கத்திற்கும் இடையேயான இடைவெளி என்ன என்பதிலிருந்து தொடங்கியது. பாரதம் என்பது பரதனின் பேரிலிருந்து,அதாவது நம்மை நாமே ஆண்டுகொண்டபோது நமக்கு நாம் இட்டுக்கொண்ட பெயர். இந்தியா என்பது இந்து, சிந்து, அந்நியர்கள் இட்ட பெயர். என்னை வெகுவாக அமைதி இழக்க செய்த அமர்வு இதுதான். பார்ஹ பண்பாட்டில் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்திற்கு இடமில்லையா? இவர்கள் பாரத பண்பாட்டு என சொல்வது சம்ஸ்கிருத பண்பாட்டை மட்டும்தானா? அதிலேயே எத்தனை வகைகள், எத்தனை பிராந்தியங்கள் உள்ளன. சிந்து- கங்கை சமவெளி பண்பாடு பாரதத்தின் பண்பாடாக இருக்கலாம் அது இந்தியாவின் பண்பாடு அல்ல. நானொரு அத்வைத வேதாந்தி, ஆயுர்வேத மருத்துவன் சம்ஸ்கிருத வெறுப்போ, தமிழ் மேட்டிமையோ எனக்கு இல்லை. ஆனால் இந்திய எனும் கருத்தாக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஐவர் பேசிய அமர்வில் இந்தியாவின் தரப்பாக பேசிய இருவரும் ஆங்கிலத்திலும் பிறர் இந்தியில் பேசியதும் சுவாரசியம். ஹரிஷ் திரிவேதியின் உரை மிக சிறந்தது. அடையாளம் என்பது என்ன எனும் கேள்வியை அவர் எழுப்பினார். நம்மைப் பற்றி நாம் சொல்லும் கதைகளே நம் அடையாளம் என சுதிர் காக்கர் மேற்கோளை சொல்லிவிட்டு, நம்மை பற்றி பிறர் நம்மிடம் சொல்வதும் நம் அடையாளம் தான், நம்மைப் பற்றி நமக்கு பின்னால் பேசுவதும் நம் அடையாளம் தான் என்றார். ஹரீஷின் இந்த கூற்று எனக்குள் பல சிந்தனைகளை கிளறியது. இந்தியா எனும் கருத்தாக்கம் குறித்து அங்கு பேசிய பலரும் நாம் நம்மை பற்றி சொல்லும் கதைகளையே சொல்வதாக தோன்றியது. நம்மால் கட்டுப்படுத்த முடிகின்ற கதை என்பது நம்மை பற்றி நாம் சொல்லிக்கொள்ளும்
கதையை மட்டும் தான். ஆகவேதான் திரும்பத்திரும்ப அழுத்தி சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஓரளவு செல்வாக்கு அடைந்தால் நாம் விரும்பும் கதையை வற்புறுத்தி பிறரிடம் கேட்டு பெறலாம். ஆனால் இவை இரண்டிற்கும் அப்பாலான நமக்கு பின்னாடி பேசப்படும் கதையே வரலாறாக நின்றுவிடும், பெரும் ஆற்றல் கொண்டு எழும். இந்த அச்சம் எல்லா சர்வாதிகாரிகளையும் ஆட்டிப்படைக்கிறது. ஆகவேதான் அவர்கள் ரகசியங்களையும் காதல்களையும் அஞ்சுகிறார்கள். கதையாடலை கட்டுப்படுத்துவதே அதிகாரத்தை கட்டுப்படுத்துவதும். ஹரிஷ் திரிவேதி தனது உரையில் ஒற்றை மொழியா ஒரு நாடா எனும் விவாதம் முக்கியமானது என்றார்.தனது தாய்மொழி இந்தி என்றாலும் தேசிய மொழியை விட ஒரு தேசமாக இருப்பது முக்கியம் என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.
அங்கிருந்து விடுதியறைக்கு திரும்பினோம். ராஜ்மோகன், மலையாள கவிஞர் இந்து மேனன், மது ராகவேந்திரா என அனைவரும் நெடுநேரம் பேசியபடி இரவுணவு உண்டோம். மற்றொரு நெடிய நாள் முடிவுக்கு வந்தது.
August 10, 2023
போபால் பயணக்குறிப்பு - உஜ்ஜயினி
இம்முறை ஆகஸ்ட் 3 முதல் 6 ஆம் தேதி வரை என நான்கு நாட்களுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஒன்றாம் தேதியே மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் வழியாக இரவு போபால் விமான நிலையம் சென்று சேர்ந்தேன். மதுரையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. விமானம் ஏறுவதற்கு முன் ஒருமுறை பைகளை சோதனையிடுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் என்பதாலா அல்லது புதிய வழக்கமா என தெரியவில்லை. சென்னையிலிருந்து கூட போபாலுக்கு நேரடி விமான சேவை இல்லை. ஏன் எனத் தெரியவில்லை. அவல் உப்புமாவின் ஒரு வகையை போஹா என சொல்கிறார்கள். ஏதோ ஒரு விமான பயணத்தின்போது தான் முதல்முறையாக உண்டேன். அதன்பின்னர் ஒவ்வொரு விமான பயணத்திலும் அதையே உண்கிறேன். வயிறை படுத்தாத, ருசியான, லகுவான உணவு. இப்போது உள்ளூர் விமானங்களில் கூட இருக்கைகளுக்கு தனியாக வசூல் செய்கிறார்கள். இலவச இருக்கையாக எனக்கு கிடைத்தது கடைசி வரிசையின் மத்திய இருக்கை. வேறுவழியில்லை.
டெல்லியிலிருந்து போபால் செல்லும் விமானத்தில் எதிர் வரிசையில் வடகிழக்கிலிருந்து இரு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் சோர்ந்து சுருண்டு படுத்திருந்தார். பின்னர் விமானத்தின் கழிப்பறைக்கு அருகே கீழே அமர்ந்து கொண்டார். மருந்து ஏதேனும் வேண்டுமா என கேட்டேன். தேவையில்லை இது அவரது முதல் பயணம் என்பதால் சற்று பீதியுற்று இருக்கிறாள் என்றார் அவர் தோழி.
போபால் விமான நிலையம் சற்றே சிறியது. மதுரை அல்லது திருச்சி விமான நிலையத்தை போல என சொல்லலாம். நான் சென்று இறங்கியபோது மழை தூறிக்கொண்டிருந்தது. நிலையத்தின் உள்ளேயே இருந்த வாடகை வண்டி முனையத்தில் வண்டிக்கு பதிவு செய்துகொன்டேன். வெளியே உபர் ஓலா கிடைக்கிறது. ஒப்புநோக்க அவை மலிவு எனும் ஞானத்தை பின்னர் தான் அடைந்தேன். விமான நிலையம் இருக்கும் பகுதி புறநகர் பகுதி. விரிந்த தூய்மையான சாலைகள் மெல்ல மெல்ல போபாலில் பழைய நகருக்குள் குறுகி சென்றது. சிறு சிறு கடைகள், நெரிசல் என பழைய போபால் நம் சென்னையின் சில பகுதிகளை நினைவுபடுத்தியது. தொன்மையான பெருநகரங்கள் எப்போதும் இப்படித்தான். அதன் மையம் நெரிசலும் தொன்மையும் வாய்ந்தவை. அவை ஆழி வட்டங்கள் போல விரிந்து விரிந்து நூதனமாகி பெருகுபவை. போபால் ரயில் நிலையம் விஸ்தாரமானது. இரவு நான் அங்கு சென்று சேர்ந்தபோது பெருங்கூட்டம் நடைமேடைகளில் அமர்ந்தும் உறங்கியும் கிடந்தது. அத்தனைபெரிய திரளை கணக்கில் கொண்டால் ரயில்நிலையம் சுத்தமாகவே இருந்தது என சொல்ல வேண்டும். எங்கிருந்து எங்கு செல்வது என குழப்பம் எனக்கு. படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தேன். போபாலில் இருந்து இந்தூர் செல்லும் வண்டி.
இரவு 11.10 க்கு புறப்பட்டு விடிகாலை (அல்லது நள்ளிரவின் கடைசி ) 2.50 மணிக்கு உஜ்ஜைன் செல்ல வேண்டும். 2.45 க்கு அலாரமை நிர்ணயித்திருந்திருந்தேன். மழை ஓய்ந்த இரவு. நிலவு தென்பட்டது. ரயில் நிலையத்தில் பிள்ளைகுட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளை வைத்துக்கொண்டு இத்தனை ஜனம் அமர்ந்திருப்பதை பார்த்தபோது மனதில் இனம் புரியாத கிளர்ச்சி எழுந்தது. எவ்வித அசூயையும் இல்லை. உண்டு மீதியிருந்த குப்பையை என்னுடன் பயணித்தவர் கொடுங்கள் என வாங்கிகிச்சென்று குப்பை தொட்டியில் சேர்த்தார். புரத குறைபாடை காட்டும் செம்பட்டை தலைமயிர்கள். வர்ணங்கள் வாரியிறைக்கப்பட்ட ஆடைகள்.
புதிய இடங்களுக்கு பொது போக்குவரத்தில் செல்லும்போது மனம் அசாதாரண கூர்மையும் விழிப்பும் கூர்மையும் கொள்ளும். ஓய்வுக்கு வழியில்லை. கண் மூடிப்படுத்தாலும் கூட இரவில் சுழலும் அச்சு இயந்திரம் போல் மனம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருமணிக்கு பிறகு கண் அயர்ந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் நிற்பது போல உணர்வு தட்ட உறக்கத்திலிருந்து விழித்து மணியை நோக்கினேன். 2.25. எந்த நிறுத்தம் என நோக்கினால் உஜ்ஜயினி! 25 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் வந்து சேர்ந்துள்ளது. வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன்.
நீலோத்பல் எனும் இந்தி கவிஞர் உஜ்ஜையினில் உள்ளார். சென்றமுறை சிம்லா சென்றபோது .அறிமுகம் ஆனவர். அரைகுறை இந்தியைக் கொண்டு எப்படியோ சமாளித்து அவரோடு உரையாடியிருக்கிறேன். அவருக்கு நெரூதா மிகவும் பிடித்த கவி. தாமஸ் ட்ரான்ஸ்டோமர், மிரஸ்லோவ் ஹோலுப் என பலரையும் இந்தியில் வாசித்திருக்கிறார். அவசியம் உஜ்ஜையினிக்கு வரவும் என சொல்லியிருந்தார் (ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் பாவம். அடுத்த ஆண்டே போபாலில் உன்மேஷா நடக்கும், அதற்கு மீண்டும் என்னை அழைப்பார்கள் என்றெல்லாம் அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை). ரயில் நிலையத்திலிருந்து எந்த பக்கமாக வெளியே வர வேண்டும்,எங்கிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டும், எந்த இடத்தை அடையாளமாக சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் விலாவரியாக தெரியப்படுத்தியிருந்தார். அதேபோல் அதிகாலை 3 மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தேன். மாடியில் தனி பகுதி கட்டியிருக்கிறேன், நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். நீலோத்பல் (ஆண் கவிதான்) என்னைவிட குறைந்தது பத்து வயது மூத்தவர். பார்த்தால் தெரியாது. மூன்று கவிதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். அலோபதி மருந்துகளின் மொத்த வியாபாரம் செய்கிறார். வீடுதான் அலுவலகமும். அட்டை பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. கவிகளுக்கே உரிய விட்டேந்தி தன்மை உள்ளவர். "மஹாகாலேஸ்வரரை பார்க்க பல ஆண்டுகளாக செல்வதில்லை." என்றார். குளியல் அறையில் சமையல் எரிவாயுவை வாட்டர் ஹீட்டருடன் இணைத்திருந்தார். வெந்நீர் குழாயை திறந்தால் ஹீட்டருக்குள் நெருப்பு பற்றிக்கொள்கிறது. குழாயை மூடினால் அணைந்து விடுகிறது. மின்சார ஹீட்டரை விட சிக்கனமானது என்றார். சற்று நேரம் உறங்கி எழுந்தேன். நீலோத்பலின் வீடு இருக்கும் இடம் சந்தடியற்ற பகுதி. மழை சன்னமாக தூறிக்கொண்டே இருந்தது.
இப்போது ஆலயத்திற்கு எந்த வழியில் செல்ல வேண்டும், எப்படி சீக்கிரமாக செல்வது என்று நீலோத்பல் தனக்கு தெரிந்த ஒவ்வொரு நண்பருக்கும் பேசி பார்த்தார். 9 மணிக்கு வீட்டிலிருந்து அவரது வண்டியில் புறப்பட்டோம். சாலையோர கடையொன்றில் போஹா சாப்பிட நிறுத்தினோம். "விமானங்களில் சாப்பிட்டதே உங்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறந்து என்றால் இங்கே இந்தோரி போஹா சாப்பிட்டு பாருங்கள். போஹா பல்வேறு சுவைகளில் கிடைக்கும், ஆனால் இந்த கடையில் உள்ள ருசி வேறெங்கும் கிடையாது” என்றார். செய்தி தாள் நறுக்கில் இரண்டு கரண்டி போஹாவை சுடசுட அடுப்பிலிருந்து இட்டு, மேலே கொஞ்சம் ஓமப்பொடியை தூவி கொடுத்தார். தொட்டுக்கொள்ள தோக்லாவும் சூடான ஜிலேபியும். தோக்லா குஜராத்தி உணவுதான் என்றாலும் மத்திய பிரதேசத்து உணவு வழக்கத்திற்குள் சேர்ந்துவிட்டது. . இப்போது இதை எழுதும்போது இவற்றின் சுவையை நாநுனி நினைவுகூர்கிறது.
கட்காளிகா ஆலய வளாகத்தில் உள்ளவை அங்கிருந்து நாங்கள் முதலில் சென்றது கட்காளிகா ஆலயத்திற்கு. சிறிய ஆலயம் தான். சக்தி பீடங்களில் ஒன்று என கருதப்படுகிறது. அதைவிட இவளை சென்று காண எனக்கு முக்கியமான நோக்கம் உண்டு. இவளே கவி காளிதாசனின் நாவில் எழுதி சொல் அருளியவள். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் ஏதோ ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திண்ணையில் படுத்துறங்கியபோது நாவில் காளி எழுதியதாக கனவு கண்ட அனுபவத்தை பற்றி எழுதி இருக்கிறார். ஏதோ லேசாக நமக்கும் எழுதி இருக்கிறாள்தான், இன்னும் கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக எழுதிவிடு என அம்மையிடம் கேட்கும் உரிமை நமக்கும் உண்டுதானே. சிவகங்கையில் கூட உச்சிமாகாளி/ உச்சினிமாகாளி ஆலயம் உண்டு. மதுரை, நெல்லை என தென் தமிழகத்தில் பல இடங்களில் கோவில் கொண்டவள். விக்கிரமாதித்தன் வணங்கிய காளி. தமிழகத்து உச்சினிமாகாளிக்கு என தனி கதை உண்டு. தாந்த்ரீக- சாக்த மரபின் வழியாக இந்த வழிபாடு இங்கு பரவியிருக்க வேண்டும் என்பது என் ஊகம். உஜ்ஜயினியில் உள்ள மற்றொரு காளியான ஹர்சித்தி மாதா தான் விக்கிரமாதித்தன் வணங்கிய காளி, அதுவே தமிழகத்தின் உச்சினிமாகாளி என சொல்பவர்களும் உண்டு.
ஒற்றை விமானமும் சிறிய சுற்று சுவரும் கொண்ட சிறிய கோவில் தான். எடுத்து கட்டப்பட்ட ஆலயம். பிரகாரத்தில் இரண்டு விளக்கு தூண் வடிவிலான கொடிமரங்களை கண்டேன். அவை சற்று புராதனமானவை. வெளி பிரகாரத்தில் மூன்று சிவலிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. ஏறத்தாழ நம்மூர் சாத்தாவை நினைவுபடுத்தும் சில பின்னமடைந்த சிலைகளை வெளியே கண்டேன். செந்தூர நிறத்தில் இருந்தவள் சிவந்த நா நீட்டி சிறிய வெள்ளி கிரீடம் தரித்திருந்தாள். உள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தார்கள். பெரிய நெருக்கடி இல்லை. சொல்லையும், கவிதையையும், மனத்திண்மையையும் வேண்டி மனமார பிரார்த்தித்தேன். மனதிற்கு அணுக்கமான சில தமிழ் கவிகளுக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் படைப்பூக்கம் வற்றாமல் இருக்க வேண்டினேன். மொழியறியாத ஊரில் இயல்பாகவே மவுனம் நம்முள் குவிகிறது. நாக்கில் அழுத்தி எழுதினாளா எனத்தேறியவில்லை. ஆனாலும் இதுவரை அளித்தவைக்கு நன்றியுடையவனாகிறேன். எப்போதும்.
கால பைரவர் ஆலயம் முகப்பு குற்றால சாரலை போல தூறிக்கொண்டே இருந்தது. உஜ்ஜயினி மொத்தமும் கார்மேகம் சூழ இருந்தது. க்ஷிப்ரா நதியை கடந்து கால பைரவரை காண சென்றோம். அப்பகுதி முழுவதும் சோயா பீன்ஸ் பயிரிடப்பட்டிருந்தது என நீலோத்பல் காண்பித்தார். விந்திய மலை தொடர் குன்று போல ஆங்காங்கு தென்படுகிறது. நீலோத்பல் எந்த ஆலயத்திற்குள்ளும் வரவில்லை. வண்டியை வைத்துக்கொண்டு மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி வெளியேவே இருந்தார். காலபைரவர் ஆலயத்தில் சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றேன். காவல்துறையினரின் தடுப்பு வேலிகள் வரிசைக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.விதவிதமான வர்ணங்களுடைய கயிறுகள் அந்த தடுப்பு வேலிகள் முழுக்க கட்டப்பட்டிருந்தன. பலவண்ண சடாதாரியை போல காட்சியளித்தது. நம்மூர் சிறு தெய்வங்கள் சிலவற்றுக்கு படைப்பது போல காலபைரவருக்கு சீமை சாராயம் படைக்கும் வழக்கமும் உண்டு. கோவில் அருகேயே மதுபான கடை உள்ளது. கூட்டம் அலைமோதுகிறது. கருங்கல் முகப்பு காண்பதற்கு பழைய பிரிட்டிஷ் பாணியிலான கட்டிடம் போல தோற்றம் அளிக்கிறது. இங்குள்ள பூசகர்கள் மேற்சட்டை அணிந்து கொள்கிறார்கள். காளியை போன்ற உருவம் தான். அலங்காரத்தில் தான் வேறுபாடு. வெளியே வந்து க்ஷிப்ரா நதியை சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றோம். பேச்சு துணைக்கு எவரும் இல்லை எனும்போது நம்முள் அபூர்வமான ஒரு அமைதி குடிகொண்டு விடுகிறது. மனம் கூர்மை அடைந்து எல்லாவற்றையும் கவனிக்க தொடங்குகிறது. இந்த மத்திய பிரதேச பயணத்தில் அவ்வகையில் உஜ்ஜயினி பயணமே மனதிற்கு நெருக்கமானதாக உணர்கிறேன்.
அங்கிருந்து சந்து சந்தாக வாகன நெரிசலில் ஊடாக மஹாகாலை காண அழைத்து சென்றார். நெற்றியில் சந்தனம் மெழுகி சிந்தூரத்தை மையாக கொண்டு நெற்றியில் ஓம் மஹாகால் என எழுதுவது ஒரு வழக்கமாக உள்ளது. பலரும் உஜ்ஜயினி முழுவதும் இந்த கோலத்தில் திரிகிறார்கள். தலையெழுத்தை மஹாகாலின் எழுத்து மாற்றும் என நம்புகிறார்களா என தெரியவில்லை. 250 ரூபாய் விரைவு தரிசன சீட்டு பெற்றுக்கொண்டு 20 நிமிடங்களில் மஹாகாலேஸ்வரரை காண சென்றேன். ஜெய் மஹாகால எனும் கோஷம் பக்தர்களின் மத்தியே ஒலித்துக்கொண்டே இருந்தது. மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் ஓம் மஹாகால என எழுதப்பட்ட ஜிப்பாக்களை பலரும் அணிந்திருந்தார்கள். மஹாகால சுயம்பு லிங்கம். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று. சாவன் மாதம் அதாவது ஆடி மாதத்தில் அவரை வழிபடுவது சிறப்பு என நம்புகிறார்கள். ஒப்புநோக்க மஹாகால ஆலயம் பெரியது, மையத்தில் குளம் உள்ளது. சுற்றி நிறைய சிறு சிறு கோட்டங்கள் உள்ளன. மாலை மூன்று மணிக்கு போபாலுக்கு ரயில் இருந்தபடியால் சற்று அவசரமாக நீலோத்பல் வீட்டிற்கு திரும்பினேன். இங்கு ஈ ரிஃஷாக்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன.நீலோத்பலின் மனைவியும் மகள் கணு ப்ரியாவும் சேர்ந்து எங்களுக்காக பராத்தா தால் காலி பிளவர் சப்ஜி செய்து வைத்திருந்தார்கள். கணு பிரியா பொறியியல் பட்டதாரி, இப்போது தகவல் தொழில்நுட்ப துறையில் பணியில் சேர முயன்று வருகிறார். அவர்களது மகன் அனாகத் பத்தாவது படிக்கிறான். இருவருமே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள். ரஜினி, பிரபாஸ், அல்லு அர்ஜுன், யாஷ் ஆகியோர் வெவ்வேறு மாநிலத்தவர்கள் என்பதை அவர்களுக்கு விளக்கி சொல்ல முயன்றேன்.
மஹாகால் ஆலயம் நீலோத்பல் கவிதை என்பதே எதிர்ப்பின் வடிவம் என்றார். வால்மீகியின் கதையிலிருந்து இந்த மரபை அடையாளம் காண முடியும் என்றார். மத்திய பிரதேச தேர்தல் வரவுள்ளது, இந்நிலையில் உன்மேஷாவில் பங்குகொள்ளத்தான் வேண்டுமா என தயங்குவதாக சொன்னார். நமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பதிவு செய்வதற்கும் கூட இது ஒரு வாய்ப்பு ஆகவே தவறவிட வேண்டாம் என கூறினேன். கவிதையின் உயர் லட்சிய தளத்தில் நீடிக்கவே விரும்புவதாகவும் அரசியல் நிகழ்வுகள் நுண்ணுணர்வை வெகுவாக பாதிப்பதாகவும், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்க இயலுவதில்லை என்றும் நீலோத்பல் சொல்லிக்கொண்டிருந்தார். இது படைப்பு மனம் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று. சூழும் நோய்மை அத்தனையும் நுண்ணறிவு கொண்ட மனத்தையே தாக்கும். படைப்பாளியாக இதை எதிர்கொண்டு கடக்க வேண்டும். பலரும் செயலின்றி சிக்கி கொள்கிறார்கள் அல்லது பாவனைகளுக்குள் வீழ்ந்து விடுவார்கள். நம்மிடம் ஒரு மகத்தான இயந்திரம் உள்ளது, அதைக்கொண்டு நம்மை நாம் அழித்துக்கொள்ளாமல் இருக்க பழக வேண்டும். அதை கையாள பழக வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டேன். செட்டிநாட்டு பலகாரங்கள் சிலவற்றை அவர்களுக்காக வாங்கிக்கொண்டு போயிருந்தேன். உண்டார்களா எனத் தெரியவில்லை.
மூன்று மணிக்கு உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். அவருக்கு மூன்றாம் தேதி கவிதை அமர்வு இருந்தது. காலையில் வந்தே பாரத் ரயிலில் வருவதாக சொன்னார். போபாலில் புறநகர் ரயில் நிலையமான சந்த் ஹிருதயராம் நகர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இரவு வண்டியில் படுக்க வாய்த்தது போல இம்முறை முன்பதிவு செய்த பெட்டியில் வாய்க்கவில்லை. பலரும் ஏறிக்கொண்டார்கள். எனது இருக்கையை இன்னொருவர் பகிர்ந்துகொண்டார். முதலில் அமர்ந்தார், பின்னர் மெல்ல கால் நீட்டினார், படுத்தே விட்டார். அவருக்காக அவர் குடும்பத்தினர் நாணினர். அவரை எழுப்ப முயன்றனர். "உறங்கட்டும்" என விட்டுவிட்டு எழுந்து சென்றேன். வரும்போதும் சரி போகும்போதும் சரி பயணசீட்டு பரிசோதகரை நான் காணவே இல்லை. உஜ்ஜயினியில் இருந்து போபால் வருபவர்களுக்கு ரயிலில் ஒருவர் பயணசீட்டு வழங்கிக்கொண்டிருந்தார். சற்று அனுசரித்து அமர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். எங்கள் ரயில் இந்தூரிலிருந்து பட்னா செல்வது. நான் எழுந்து கதவினோரம் நின்று வேடிக்கை பார்த்தபடி வந்தேன். இரண்டரைமணிநேர பிரயாணம் தான் என்பதால் அலுப்பு தெரியவில்லை.
க்ஷிப்ரா நதி பாலத்தில் நீலோத்பலுடன் நான் இறங்கிய ரயில் நிலையம் போபால் நகரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. இரண்டு நடைமேடைகள் கொண்ட சிறிய நிலையம்தான். அதன் முந்தைய பெயர் பைராகர். ரயில் புறப்படுவதற்கு முன் அவசர அவசரமாக இறங்கிய ஒருவர் "இது பைராகர் என்பதே என் நினைவில் இல்லை, இப்போது சந்த் ஹிருதரராம் என என்னவோ பெயர் மாற்றியுள்ளார்கள். ரயில்வே பலகையில் பெயரை மாற்றினால் போதுமா?" என புலம்பிக்கொண்டே சென்றார். அங்கிருந்து எம்.பி நகர் பகுதியிலிருந்த ஹோட்டல் அதிஷய்க்கு சென்று சேர்ந்தபோது இரவு ஏழுமணி. ஒரிய எழுத்தாளர் சந்திரசேகர ஹோத்தா நான் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி இருந்தார். சென்ற முறை நாங்கள் சிம்லாவில் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். ஹோத்தா ஒரிய மொழியில் செயல்படும் விமர்சகர்.காவல்துறை துணை கண்காணிப்பாளரும் கூட. "உங்கள் விமர்சனத்தை எதிர்த்து ஒரு சிறிய முனகல்கூட இருக்காதே" என கேலி செய்துகொண்டிருந்தேன். இரவுணவின்போது தாரோ சிந்திக் எனும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்தி கவியை சந்தித்தேன். என் வயது இருக்கலாம். அருணாச்சலில் இந்தி பேராசிரியராக இருக்கிறார். தாவர உணவு பிரியர்களுக்கு ஹோட்டல் அதிசயை தாராளமாக பரிந்துரைப்பேன். காலையும் இரவும் என வகைவகையாக உண்டோம். பனீர் திகட்டும் அளவிற்கு உண்டாகிவிட்டது. எங்கள் விடுதியில் அகாதமி பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இருந்தார். சிறிய செவ்வந்தி மாலையை அணிவித்து வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அன்றைய நாளின் மொத்த அயர்வும் உடலில் எற படுத்ததும் உறங்கிவிட்டேன்.
January 16, 2023
காந்தி சாதியவாதியா?
காலச்சுவடு ஜனவரி காந்தி சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
மகாத்மா விஷயத்தில் அவருக்கு எதிராக அவரது மேற்கோள்களையே பயன்படுத்துவதென்பது கடினமானதல்ல- ஜோசெப் லெபீல்ட்
2017ஆம் ஆண்டில் அம்பேத்கரின் நூலுக்கு அருந்ததி ராய் எழுதிய முன்னுரை காந்தியை இனவாதியாகவும் சாதியவாதியாகவும் சித்தரித்திருந்தது. அருந்ததி ராய் தனது கூற்றுக்கு ஆதாரமாக காந்தியின் மேற்கோள்களையே பயன்படுத்தியிருந்தார். ராய் எப்படி மேற்கோள்களைத் திரித்துத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது அப்போது பெரிய விவாதமாக ஆனது. அதே ஆண்டு காந்தி சாதியவாதியா என்பதை ஆய்வு நோக்கில் விவாதிக்கும் இன்னோரு நூல் வெளியானது. நிஷிகாந்த் கோல்கே எழுதிய Gandhi Against Caste காந்தியின் மீது அருந்ததி ராய் போன்றோர் முன்வைக்கும் சாதியவாதி எனும் விமர்சனத்துக்குத் தரவுகளுடன் பதில் அளிக்கிறது. நிஷிகாந்த் கோல்கே சென்னை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தவர். வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 2014ஆம் ஆண்டு சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வின் செறிவாக்கப்பட்ட வடிவம்தான் இந்நூல்.
ராஜ்மோகன் காந்தியின் முன்னுரையும் ஐந்து அத்தியாயங்களும் அருந்ததி ராய்க்கு மறுப்பாக கோல்கே எழுதிய கட்டுரையும் கொண்டது இந்நூல். முக்கியமாக 'பாபா சாகே’புக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோல்கே இந்நூலில் இரண்டு கேள்விகளை எதிர்கொள்கிறார். காந்தி சாதியவாதியா என்பது முதல் கேள்வி. புத்தகத்தின் பெரும்பகுதி இக்கேள்வியை விவாதிக்கிறது. சாதியத்துக்கு எதிரான காந்தியின் வழிமுறையின் பங்களிப்பும் இன்றைய பொருத்தப்பாடும் என்ன? இது இரண்டாவது கேள்வி. காந்தியின் சமகாலத்து இயக்கங்களான அம்பேத்கரின் இயக்கத்தையும் ஆர்ய சமாஜத்தின் சுத்தி இயக்கத்தையும் ஒப்பிட்டு காந்திய வழிமுறையின் நிறைகுறைகளை விவாதிக்கிறார்.
Nishikath Kolge
சாதி: காந்தியின் நிலைப்பாடு என்னும் புதிர்
ஐந்து அத்தியாயங்களில் முதல் நான்கு அத்தியாயங்கள் முதல் கேள்வியையே எதிர்கொள்கின்றன. கோல்கேவிற்கு எதையும் எவரையும் நியாயப்படுத்தியே ஆக வேண்டும் எனும் நிர்பந்தமில்லை. எடை எதையும் சுமக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவரால் பிறர் கவனிக்கத் தவறிய கோணங்களைக் காண முடிகிறது. கோல்கே காந்தியின் மேற்கோள்களை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வரவில்லை. காந்தியின் வாழ்க்கையோடும் அதன் நிகழ்வுகளோடும் பொருத்திப்பார்க்கிறார். மேலும் வெவ்வேறு காலகட்டத்தில் காந்தியின் நிலைப்பாடுகளுக்கு இடையேயான உறவை, தொடர்ச்சியைத் தொட்டுக்காட்டுகிறார். காந்தியின் சொற்களில் இருந்த முரண்பாடுகள் என்பது பலரும் கருதுவதுபோல கபடமான ஏமாற்று வேலையோ, படிப்படியான பரிணாம மாற்றமோ இல்லை மாறாக அவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கிய நீண்டகாலச் செயல்திட்டத்தின் படிநிலைகள் என்பதே கோல்கே இந்த நூலில் முன்வைக்கும் கோட்பாடு.
கோல்கே காந்தியின் 'உத்தி' என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். சாதி வேரோடு ஓழிய வேண்டும் என்பதே காந்தியின் இலக்கு. ஹிந்த் ஸ்வராஜ் (இந்து சுயாட்சி) எழுதிய 1909ஆம் ஆண்டே அவர் அந்த இலக்கைத் தீர்மானித்துவிட்டார். இந்தியாவிற்கு வந்த பின் அவர் தொடர்ந்து அந்த இலக்கை நோக்கி மெல்ல மெல்லப் பயணித்தார். மேம்போக்காக வாசிக்கும்போது காந்தியின் சொற்களுக்கு இடையே முரண்பாடுள்ளதாகத் தோன்றும் ஆனால் காந்தி தனது சொற்கள் குறித்து அப்படி எண்ணியவர் இல்லை. அவரது 'இந்து சுயாட்சி’யைக் கோட்பாட்டு நூலாக, கனவுப் புத்தகமாக விளக்கிக்கொள்ள இயலும். அதன் சில பகுதிகள் சார்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது காந்தி அதிலிருந்து தான் எந்த வகையிலும் பிறழவில்லை என்றார்.
காந்திய அறிஞர்கள் பலருக்கு அவர் ஒரு ஆன்மிகத் தலைவர். அவரது மகத்தான போராட்டங்களைவிடப் புனித வாழ்வின் மீதுதான் அவர்களுக்கு ஈடுபாடு என்கிறார் கோல்கே. உத்தி என்றோ அரசியல் மதியூகி என்றோ சொல்வது அவரது இடத்தைக் குறைத்துக்காட்டுவதாகப் பொருள் கொள்ளப்படக்கூடும். உமாஷங்கர் ஜோஷி எனும் கவிஞருக்கும் காந்தியின் வாரிசுகளில் ஒருவரான மெய்யியலாளர் ராமச்சந்திர காந்திக்கும் இடையேயான உரையாடலை ஆஷிஷ் நந்தி பதிவுசெய்கிறார். மோகன்தாஸ் காந்தி எத்தகைய ஆன்மீகவாதி என ராமச்சந்திர காந்தி அடுக்கிக்கொண்டே போகும்போது குறுக்கிடும் உமாஷங்கர் ஜோஷி "காந்தி ஆன்மீகவாதிதான். ஆனால் இந்தியா எல்லாக் காலகட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளைக் கண்டுள்ளது. காந்தி அரசியல்வாதியும்கூட. அதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் நாடப்படுகிறார்" என்றார்.
காந்தி தன்னை அடிக்கடி தளபதி, போர் வீரர் என அடையாளப்படுத்திக்கொள்கிறார். 'இந்து சுயாட்சி’ கோட்பாட்டு நூலென்றால் சவுரி சவுராவிற்குப் பின்னர் ஒத்துழையாமைப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சூழலில், சிறையிலிருந்தபோது எழுதிய 'தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்' நூலை நடைமுறைக் கையேடு எனச் சொல்லலாம். படைத் தளபதி தனது உத்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டது இது. அரசியல் தளத்தில் 'வன்முறையற்ற போர்' எனும் தொழில்நுட்ப உத்தியை வளர்த்தெடுத்த முன்னோடி ஆளுமையாக காந்தியை காண இயலும் என வாதிடுகிறார் ஜீன் ஷார்ப். சமூகத் தளத்தில் இதேபோன்ற உத்திகளை காந்தி கடைப்பிடித்தார் என கோல்கே காட்டுகிறார். உத்தி என்பதை எதிர்மறையாகக் காண வேண்டியதில்லை. நேர்மையற்றதாகவோ பொய்யானதாகவோ கருத வேண்டியதில்லை. கோல்கே பவுத்தத்தில் நடைமுறையிலிருக்கும் 'திறமைவாய்ந்த வழிமுறை' எனும் பதத்தின் பின்புலத்தில் 'உத்தி' எனும் பயன்பாட்டை விளக்குகிறார். அனுபவத்தைக் கொண்டு சத்தியத்தைக் காணக்கூடிய தயாரிப்பு இல்லாதவருக்கு சத்தியத்தை அறிவிக்கக் கூடாது என்பதை புத்தர் உணர்ந்தார். அந்த திசை நோக்கி 'திறமைவாய்ந்த வழிமுறை'யின் துணையுடன் நகர்த்திச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இது முழுக்க முழுக்க உண்மையான வழிமுறையா என்றால் இல்லைதான். ஆனால் கருணையால் வழிநடத்தப்படும் செயல் துயரத்திலிருந்து விடுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் என்கிறார். இதையே காந்தியின் 'உத்தி’க்கான அடிப்படையாகக் கொள்கிறார். 1915-1920, 1920-27, 1927-1932, 1932-1945, 1945-மரணம்வரை என காந்தி இந்தியாவிற்கு வந்த பின்பான காலத்தை ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கிறார். காந்தி எல்லோரும் மறுப்பின்றி ஒப்புக்கொள்ளும் புள்ளியிலிருந்து தொடங்கிப் படிப்படியாகத் தனது பிடியை இறுக்கிக்கொண்டே செல்வதைக் காட்டுகிறார்.
இந்தக் கோட்பாட்டுக்கான தரவுகளை அளிக்கும் முன்னர் காந்தியின் நிலைப்பாடுகள் குறித்த வெவ்வேறு தரப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தர்க்கப்பூர்வமாக நிராகரிக்கிறார். காந்தி கனவுகண்ட லட்சிய சமூகம் எத்தகையது? அதன் அடித்தளம் எத்தகையது? பலரும் விமர்சித்ததுபோல சாதிய / வர்ண சமூகம்தானா?
சாதி, வர்ணம், காந்தி: முன்று விதமான பார்வைகள்
சாதி, வர்ணம் சார்ந்த காந்தியின் எழுத்துக்களைப் பொறுத்தவரை மூன்று விதமான பார்வைகளை அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். ராஜ்மோகன் காந்தி காந்தியின் வர்ணாசிரமக் கருத்துக்களை 'கசப்பு மாத்திரை எனும் சீர்திருத்தத்தை மக்கள் விழுங்குவதற்காக மேலோட்டமாகச் சர்க்கரை தடவியது போலத்தான் காண வேண்டும்' என்கிறார். ஏதோ ஒரு அளவில் காந்தியின் இக்கருத்துக்கள் அவருடைய உத்தியின் பகுதி எனும் பார்வையை இத்தரப்பினர் முன்வைக்கின்றனர். இரண்டாவது தரப்பு காந்தியின் கருத்துக்கள் காலப்போக்கில் மாற்றமடைந்தன என கருதுகிறது. காஞ்சா இல்லய்யா போன்றோர் காந்தியை வர்ணாசிரமவாதியாகவும் சாதியவாதியாகவும் கண்டனர். இம்மூன்று தரப்புகளுமே தத்தமது தரப்பிற்கு ஆதாரமாக காந்தியின் சொற்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவருடைய நடத்தையைக் கணக்கில் கொள்ளவில்லை என்பதே கோல்கேவின் வாதம். தீண்டாமை, சேர்ந்து உண்ணுதல், சாதி கடந்த திருமணம், புனித நூல்கள் தொடர்பான அணுகுமுறை உட்படப் பல்வேறு அளவுகோல்களை காந்தியின் தனிவாழ்வின் மீது பொருத்திக் காட்டுகிறார்.
காந்தி தனிவாழ்வில் சாதியை எப்படி அணுகினார்? அக்காலகட்டத்தில் சாதி இந்துக்களின் பொதுவான இயல்புகள் என நான்கு கூறுகளை கோரா, மார்க் லின்லே ஆகியோரை மேற்கோள்காட்டிப் பட்டியலிடுகிறார் கோல்கே. 1. தீண்டாமை 2. தாழ்ந்த சாதியினருடன் சேர்ந்து உணவு உண்ணாமை. 3. சுய சாதித் திருமணம். 4. பரம்பரைத் தொழிலைப் பின்பற்றுதல். இவற்றில் காந்தி பால்ய காலத்தில் தன் சொந்த சாதியில் திருமணம் செய்துகொண்டார் என்பது மட்டுமே பொருந்தும். பிற எதுவுமே அவருக்குப் பொருந்தாது. தனது மகன்களுக்கு வேறு சாதிகளிலும் வர்ணங்களிலும் திருமணம் செய்வித்தார். தோட்டிக்குடியில் பிறந்த வளர்ப்பு மகளான லக்ஷ்மிக்கு மாருதி எனும் தென்னிந்திய பிராமணருடன் மணமுடித்துவைத்தார். பொதுவாகத் தாய் தந்தை பேச்சைத் தட்டாதவர் காந்தி. அவரது வீட்டிற்கு வந்த ஊக்கா எனும் தோட்டியைத் தற்செயலாகத் தீண்டினால்கூட சுத்தச் சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என வீட்டில் நிர்பந்தப்படுத்தும்போதெல்லாம் முரண்டுபிடித்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தீண்டாமைக்கு எதிரான முதல் விதை அப்போது விதைக்கப்பட்டது என பியாரிலால் இந்நிகழ்வை அடையாளப்படுத்துகிறார்.
காந்திக்கு இளமையிலேயே ஷேக் மேதாப் எனும் இஸ்லாமிய நண்பரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் வழியாகவே காந்திக்குப் புலால் பழக்கமாகிறது. இங்கிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் ஐரோப்பியர்களுடன் சேர்ந்து இயல்பாக வாழ்ந்தார். உணவு உண்டார். தாவர உணவைத் தனது சுய தேர்வாக லண்டனில் தேர்ந்தார். கடல் கடந்து செல்லக் கூடாது எனும் சாதியாச்சாரத்தை மீறினார். சாதியின் பாரம்பரியத் தொழிலைத் தொடரவில்லை. தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போதே சாதியை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிராகரித்தவர் காந்தி. அவரமைத்த ஆசிரமங்கள் அனைத்திலும் பொதுச் சமையலறையை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினார். சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் தோட்டி வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டத்தில் மதராஸ் மாகாணத்து பிராமணர்களுக்கு தனி சமையலறை இருந்ததைப் பற்றி ஆற்றாமையுடன் பதிவு செய்துள்ளார். உலக சமூகம் நோக்கிய கனவைக் கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் சமையலறையில் எவரையும் அனுமதிக்காத பிராமணர்கள் சமைத்தபோது தன்னார்வலர்களைக் கொண்டு சமைக்கும் மாற்றுத் திட்டத்தை முன்வைத்தார். காந்தி அங்கிருந்து அகன்ற பிறகு குறுகிய காலம் மட்டுமே அது நீடித்தது என்பது வேறு விஷயம்.
சாதி, மத இனப் பாகுபாடின்றிக் கூடி வாழும் முன்மாதிரி சமூகத்தைத் தனது ஆசிரமங்களில் உருவாக்கினார் காந்தி. வின்சென்ட் லாரன்ஸ் எனும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த தனது குமாஸ்தாவின் மல ஜாடியைச் சுத்தம் செய்ய கஸ்தூர்பா மறுத்தபோது அவருடன் சண்டையிட்டதைத் தன்னுடைய சுயசரிதையான ‘சத்திய சோதனை’யில் பதிவுசெய்திருக்கிறார். காந்தியின் ஆசிரமங்களில் பொதுவாக இந்துக்கள் கடைப்பிடிக்கும் மாதவிடாய் காலத் தீண்டாமையைக்கூடக் கடைபிடித்ததில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் கோல்கே. இவற்றையும் இன்னபிற நிகழ்வுகளையும் கொண்டு காந்தி தனி வாழ்வில் எவ்விதத்திலும் பாகுபாடைப் பேணவில்லை என்பதைக் காட்டுகிறார்.
சாதியம் குறித்த கதையாடலின் உருமாற்றம்
இந்தியாவிற்கு வந்த பிறகு சாதியும் வர்ணமும் நன்மை பயக்கும் அமைப்புகள் எனப் பேசத் தொடங்குகிறார். இந்தியா வந்த பிறகும்கூடத் தனிவாழ்வில் காந்தி எந்தத் தருணத்திலும் சாதியைப் பின்பற்றியதில்லை எனும்போது வர்ணாசிரமத்தையும் சாதிப் பிரிவுகளையும் ஆதரித்துப் பேச வேண்டியது ஏன்? காந்தி இப்படிக் கூறியதற்கு என்ன பின்புலம் இருக்க முடியும் என ஆராய்கிறார் கோல்கே. 'நான் எழுதியவையோ பேசியவையோ அல்ல, என்ன செய்திருக்கிறேனோ அதுவே காலம் கடந்து நிற்கும்' என்கிறார் காந்தி. மற்றொரு தருணத்தில் 'எனது நடத்தைகளிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்குமோ அது எனது சொற்களிலிருந்து உங்களுக்குக் கிடைக்காது' என்கிறார். எழுத்தாளரும் ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு உரையாடலின்போது, காந்தி - அம்பேத்கர் உறவை மட்டும் வைத்துக்கொண்டு காந்தியை புரிந்துகொள்வது அத்தனை சரியானதல்ல என்றும் களப்பணியில் காந்தியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டதாகவும் கூறினார். சொற்களைத் தாண்டி காந்தியின் மீது அடிப்படையான நன்னம்பிக்கையைக் கொள்ள முடிந்தால் காந்தியின் உத்தி நமக்குப் பிடிபடலாம்.
காந்தியின் வர்ண / சாதி பற்றிய பார்வைக்கு இரண்டு தரப்பினர் எதிர்வினையாற்றினார்கள். தலித் அறிவுத் தரப்பு காந்திய அறிவுத் தரப்பு எனப் பொதுவாக இரண்டு பிரிவுக்குள் இவர்களை அடக்கிவிடலாம். தலித் தரப்பு காந்தியை பிராமணியத்தின் முகமாகச் சித்தரித்து மொத்தமாக நிராகரித்தது. தலித் தரப்பின் முதன்மை எல்லை என்பது அவர்கள் அம்பேத்கரிய அறிஞர்கள் என்பதால், அவரது பார்வையின் முக்கியத்துவத்தை நிறுவும் பொருட்டு காந்தியின் தரப்பை எளிமைப்படுத்தினர் என்கிறார் கோல்கே. தனிவாழ்வில் காந்தி பிராமணிய உலகப் பார்வையை ஏற்றுக்கொண்டவர் என்பதால் சாதி / வர்ணச் சார்புடையவர் என எளிமையாகச் சுருக்கிவிடலாம் என்பதே அவர்களின் தரப்பு.
இதற்கு மாறாக, காந்தி எப்படி பிராமணியப் பார்வையை முற்றிலும் மறுதலிக்கிறார் என்பதை நூலின் பிற்பகுதியில் ஆர்ய சமாஜத்தின் 'சுத்தி' இயக்கத்துடன் ஒப்பிட்டு கோல்கே நிறுவுகிறார். காந்திக்கு ஆலயங்கள்மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை, சிறு வயதில் சாவிக்கொத்துக்களைப் பூணூலில் அணிந்து செல்லும் பிராமணச் சிறுவர்களைப் போல் தானும் அணிந்துகொள்ள வேண்டும் என யோசித்ததற்கு அப்பால் அதில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆரிய சமாஜம் வேறு மதங்களிலிருந்து இந்து மதத்திற்குத் திரும்புவர்களைச் 'சுத்திகரிக்கும்' சடங்கு வழி ஏற்றுக்கொண்டது. அவர்களுக்குப் பூணுல் அணிவித்தது. சமஸ்கிருதமயமாக்கத்தை முன்வைத்தது. இந்து எனும் அடையாளத்தைப் பெருமையுடன் தாங்கிச் செல்ல அறிவுறுத்தியது. காந்தி அனைவரையும் பிராமணர்களாக ஆக்க விரும்பவில்லை. அப்படி செய்வதென்பது மறைமுகமாக பிராமணியத்தின் கதையாடலான உயர்வு தாழ்வு என்பதை அங்கீகரிப்பதாகும். நேரெதிராக காந்தி அனைவரையும் அதிசூத்திரர்களாக ஆக வேண்டும் என வலியுறுத்தினார். 'ஆரிய சமாஜத்தின்' நிலைப்பாடு இன்றைய இந்துத்துவத்தின் மூல வடிவம். காந்தி சாதி இந்துக்களிடம் பெருமிதம் கொள்ளக் கோரவில்லை மாறாக குற்றவுணர்வு கொள்ளவே கோரினார்.
சாதி, வர்ண ஆதரவு நிலைப்பாடை காந்திய அறிவுப் புலம் எப்படி நோக்கியது? வெவ்வேறு அறிஞர்களின் கூற்றைத் தெரிவித்து ஒவ்வொன்றாக மறுக்கிறார் கோல்கே. தொழில்மயமாதலை எதிர்த்த காந்தி சாதியையும் எதிர்த்தால் பரம்பரைத் தொழிலை இழந்து லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என காந்தி கருதினார் எனும் மார்கரெட் சாட்டர்ஜி கருத்தை மறுக்கிறார். காந்தி அனைவருக்கும் உடலுழைப்பை வலியுறுத்தினாரே ஒழிய பரம்பரைத் தொழிலை ஒருபோதும் பரிந்துரைத்ததே இல்லை. காந்தி தொழில்மயமாதலை எதிர்க்கக் காரணம் அது மனிதத்தன்மையை அகற்றிவிடும் என்பதுதான். அந்நியமாதல் நிகழும் என்பதால்தான். காந்தியின் சமூகம் தனிமனிதனின் முழு சுதந்திரத்தை லட்சியமாக முன்வைப்பது. சாதி, நுகர்வு, அரசு, மரபான அமைப்புகள் என எவையெல்லாம் தனி மனிதனின் முழு சுதந்திரத்திற்கு தடையாக இருக்குமோ அவற்றையெல்லாம் எதிர்த்தார். நிராகரித்தார். காந்தியின் லட்சிய சமூகம் என்பது அவரது விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவதுபோல மேல் கீழ் அடுக்குகளைக் கொண்ட வர்ணாசிரம அமைப்பு அல்ல. பொறுப்புணர்வுடனும் சக உயிர்களின் மீதான கருணையுடனும் தங்களது தேர்வுகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனிமனிதர்களை அலகாகக் கொண்டது என்பதை கோல்கே எடுத்துக்காட்டுகிறார்.
காந்திக்குக் கர்ம கோட்பாட்டின் மீது நம்பிக்கை உண்டு அதன் இயல்பான நீட்சியாக சாதிகளையும் வர்ணங்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்கிறார் பிகு பரேக். காந்திக்கு கர்ம கோட்பாட்டின் மீது நம்பிக்கை உண்டுதான். ஆனால் இந்து மதத்தில் உள்ளபடி அல்ல. கீதை, கர்மம் உட்பட இந்து மதத்தின் பல்வேறு கூறுகளை அதன் மரபான பொருளில் காந்தி கையாள்வதில்லை. மாறாகத் தனக்கேயுரிய வகையில் புதிய வகையில் பொருள்கொள்கிறார் என்பதை நிறுவுகிறார் கோல்கே.
காந்தி தனிமனிதராக சாதி வர்ணப் பாகுபாடைக் கடைப்பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதை சமூகத்திற்கு பரிந்துரைத்து, வலியுறுத்தினாரா? இந்தியாவில் தனக்குக் கிடைத்த அனுபவத்தின் காரணமாகவே தனது இலக்கை படிப்படியாக அடைவது எனும் உத்தியை காந்தி வந்தடைந்திருப்பார் என்கிறார் கோல்கே. கோச்ரபில் 1915ஆம் ஆண்டு சத்தியாகிரக ஆசிரமம் தொடங்கப்பட்டபோது தக்கர் பாபாவின் அறிவுறுத்தலின் பேரில் துதா பாய், அவரது மனைவி தானி பென், அவர்களது கைக்குழந்தை லக்ஷ்மி ஆகிய மூவரையும் அங்கமாகக் கொண்ட தோட்டி இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஆசிரமத்திற்குக் குடிவருகிறது. ஆசிரமத்திற்குள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பை காந்தி எதிர்கொள்கிறார். ஆசிரமத்திற்கு அளிக்கப்பட்டுவந்த நிதிக்கொடைகள் நிறுத்தப்பட்டன. கையிருப்பு கரைந்தது. தோட்டிகளின் வசிப்பிடத்திற்கே நாம் செல்வோம், அங்கு கிடைப்பதைக் கொண்டு வாழ்வோம் என காந்தி முடிவெடுத்திருந்தபோது அம்பாலால் சாராபாய் நிதியளித்தார் என திரிதீப் சுஹ்ருத் குறிப்பிடுகிறார்.
காந்தியால் வெளி எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் உள் எதிர்ப்பைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் காந்தியோடு உடன் நின்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் மகன்லால் காந்தி. மகன்லாலின் மனைவி சந்தோக் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறை சென்றவர். அவர்கள் இருவரும் துதாபாய் குடும்பம் குடியேறுவதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களை அனுமதிக்கும் காந்தியின் முடிவுக்கு எதிராக சந்தோக் உண்ணாவிரதமிருந்தார். சந்தோக் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும என காந்தி பதிலுக்கு உண்ணாவிரதமிருந்தார். கஸ்தூர்பாவும் மகன்லால் - சந்தோக் தரப்பைத் தேர்ந்தது காந்திக்கு அதிர்ச்சியளித்தது. தென்னாப்பிரிக்காவில் பாகுபாடின்றி ஒருங்கிணைந்து செயலாற்ற முடிந்த இவர்களால் இப்போது ஏன் இயலவில்லை? காந்தி ஸ்ரீனிவாச சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில் கஸ்தூர்பாவிடம் நாம் நண்பர்களாகப் பிரிவோம் என துதாபாய் விவகாரத்தில் தெரிவித்ததாக எழுதுகிறார். அறிமுகமற்ற தீண்டத்தகாத குடும்பத்திற்காக தனது மனைவியையே விட்டுவர அவர் துணிந்தார். இந்தியாவில் சாதிக்கு எதிரான போராட்டம் அத்தனை எளிதல்ல என்பதை முதல் வருட இந்திய வாசத்திலேயே புரிந்துகொண்டார். ஆகவேதான் நீண்டகாலச் செயல்திட்டம் எனும் உத்தியை கையிலெடுத்தார் என்பதே கோல்கேவின் வாதம்.
அவரது உத்தி எப்படிச் செயலாற்றியது? தனது சீர்திருத்தம் இந்து மரபின் தொடர்ச்சியே அன்றி அதை அழிக்க வந்த எதிர்த்தரப்பு அல்ல எனும் நம்பிக்கையைச் சாதி இந்துக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலேயே சாதி, வர்ண ஆதரவை எடுக்கிறார் என்கிறார் கோல்கே. தீண்டாமை இந்து மதத்திற்கு களங்கம், அதை களைய வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறார். தொடக்கத்தில் சாதி கடந்த திருமணங்களையும், சேர்ந்து உண்ணுதலையும் அவசியமில்லாதவை எனப் பேசினார். முதல் கட்டத்தில் தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு என்பது மட்டுமாகத்தான் இருந்தது. அடுத்த காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பது சமமாக நடத்துவது என விரிகிறது. பள்ளிகளில் தீண்டத்தகாதோர் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து கற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோருகிறார். காந்தி ஒன்றைக் கோருவதற்கு முன் அதற்குரிய அமைப்பை உருவாக்கிவிடுவார். கல்விக்கூடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தும் முன்னரே குஜராத்தி வித்யா பீடத்தை உருவாக்குகிறார். அதன் துணை கல்விச் சாலைகளில் எங்குமே தீண்டாமை கடைப்பிடிக்கப்பட மாட்டாது என நிர்வாக சபையைக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
விடுதலைப் போராட்டம் எனும் இலக்கில் ஒரு பகுதி சாதிக்கு எதிரான போராட்டம் என நாம் பொதுவாகப் புரிந்துகொண்டுள்ளோம். மாறாக அவர் உருவாக்க நினைத்த சுதந்திர தனிமனிதர்களால் ஆன லட்சிய சமூகம் எனும் இலக்கின் தொடக்கப்புள்ளிதான் அரசியல் விடுதலை. சி.எப். ஆண்ட்ரூசுக்கு எழுதிய கடிதத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் விடுதலையைவிடக் கடினமான இலக்கு என்பதை நன்கு உணர்ந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். 1927-35 காலத்தில் தீண்டாமை ஒழிப்பின் வரையறை இன்னும் விரிகிறது. ஆலய நுழைவையும் சேர்த்துக்கொள்கிறார். 1915- 20, 20-27 காலகட்டத்தில் சாதி, வர்ணத்தை நடைமுறைத் தேவை கருதி ஆதரித்ததாகச் சொல்வதும் சனாதனி எனத் தன்னைப் பறைசாற்றிக்கொண்டதும் நிறைய முறை நிகழ்ந்தது என்றால், 1927க்குப் பின் அவை படிப்படியாகக் குறைந்து காணாமல்போகிறது. முதலில் சாதிகளும் வர்ணங்களும் வேண்டும் என சொன்னவர், பின்னர் சாதிகள் இந்து மதத்தின் தேவையற்ற பகுதி, அனைத்துச் சாதிகளும் நான்கு வர்ணங்களாகத் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள வேண்டும் என்றார். அடுத்த நிலையில் இப்போது பிறப்பால் வர்ணம் நம்மை வந்து அடைந்தாலும் நமது செயலால்தான் நாம் அதை ஏற்கிறோம் என்றார். அதற்கடுத்த நிலையில் வர்ண பேதமே இல்லை. ஒரேயொரு வர்ணம் மட்டுமே உள்ளது. நாம் அனைவருமே சூத்திரர்கள், அதிசூத்திரர்கள் என்றார். இந்திய விடுதலை ஏறத்தாழ உறுதியான காலத்தில் அதுவரை வர்ணம் தொடர்பாகத் தான் கொண்டிருந்த கருத்துக்களைத் தொகுத்து ‘வர்ண வியவஸ்தா’ என்ற நூலை வெளியிடுகிறார். அதன் முன்னுரையில் இதுவரை சொன்னவற்றை எல்லாம் விட்டுவிட்டு இந்த முன்னுரையில் சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். மணமக்களில் எவரேனும் ஒருவராவது தீண்டத்தகாத பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திருமணத்திற்கு எனது ஆசி கிடைக்கும் என்றார். காந்தியோடு தனிப்பட்டமுறையில் நெருக்கமாக இருந்த பல இளைஞர்களின் திருமணங்களுக்குக்கூட காந்தி செல்லவில்லை என்பதை நாராயண் தேசாய் சுட்டிக்காட்டுகிறார்.
புனா ஒப்பந்தத்தில் காந்தியின் நிலைப்பாடு
நாடு முழுவதும் உணர்ச்சி அலையில் இருக்கும்போது காந்தி தம் மக்களிடம் இன்னும் அதிக செயல்வேகத்தை எதிர்பார்க்கிறார். நாடகீயத் தருணங்களை தனது இலக்கிற்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார். புனா ஒப்பந்தம் சார்ந்து கோல்கே எழுதிய பகுதி விரிவாகப் பேசப்பட வேண்டியது. தனிப் பிரதிநிதித்துவத்திற்கும் ஈரடுக்குக் கொண்ட பொதுத்தொகுதியில் இட ஒதுக்கீட்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன, அம்பேத்கர் எதை விரும்பினார் போன்ற கேள்விகளை விரிவாக விவாதிக்கிறார். வட்ட மேசை மாநாட்டிலேயே காந்தி ஈரடுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்திருந்தால் இத்தனை சிக்கலாகியிருக்க வேண்டியதில்லை என அம்பேத்கர் எழுப்பிய கேள்வி சரியானதே. ஏனெனில் இரண்டு விதமான பிரதிநிதித்துவத்திற்கிடையேயும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்கிறார் கோல்கே. ஏதோ ஒரு தரப்பிற்குச் சிறிய அளவில் கூடுதல் சலுகை கிடைத்திருக்கக்கூடும்; அதற்கு ஏன் உயிரைப் பணையம்வைத்தார் எனும் கேள்வியை எழுப்புகிறார்.
தலித் அறிஞர்களின் மிக முக்கியமான விமர்சனம் என்பது அரசியல் ஆற்றலாக தலித்துகள் திரளுவதை காந்தி தடுத்துவிட்டார் என்பதே. இன்றுவரை கடுமையுடன் நோக்கப்படும் இந்நடவடிக்கைக்கு ஓரளவு நியாயமான காரணம் என ஏதேனும் ஒன்றை காந்தி தரப்பிலிருந்து கூற முடியுமா என ஆராய்கிறார் கோல்கே. வெவ்வேறு பதில்களைப் பரிசீலித்த பிறகு பிகு பரேக், ஜோசெப் லெபீல்டு ஆகியோரின் கூற்றுகளை உகந்ததாக முன்வைக்கிறார். லெபீல்டு 'தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதிலிருந்து அவர் ஒட்டுமொத்த இந்து மதிப்பீடுகளின் மீது எந்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தாரோ அதன் பொருட்டு மட்டுமே தனிப் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை நியாயப்படுத்த முடியும்' என்கிறார். பிகு பரேக் 'இந்துக்களை உலுக்கி எழுப்பி, தீண்டாமையின் மீது திண்ணமான, நாடகீயமான தாக்குதலை நடத்த காந்தி ஒரு வாய்ப்பைக் கண்டுகொண்டிருக்கலாம்' என எழுதுகிறார். அக்காலகட்டத்தில் சாதி இந்துக்கள் ஆலயங்களைத் திறந்துவிட்டனர், பொதுக் கிணறைப் பயன்படுத்த அனுமதித்தனர், பல இடங்களில் சேர்ந்து உண்டனர். சாதி இந்துக்களிடையே தீண்டாமை ஒழிப்பும் சாதி எதிர்ப்பும் அதுவரை இல்லாத அளவு தீவிரத்துடன் சென்று சேர்ந்தன.
கோல்கே எழுப்பிய இரண்டாவது கேள்விக்குச் செல்லலாம். காந்திய வழிமுறையின் எல்லைகள் என்ன? இன்றைய முக்கியத்துவம் என்ன?
கோல்கே மூன்று முக்கியமான எல்லைகளைச் சுட்டுகிறார். பொருளியல், அரசியல் தளங்களில் சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான உறவை காந்தி வகுத்துக்கொள்ளவில்லை. தூய்மை, தீட்டு எனும் இருமையைக் கொண்டு சமூகம் மேல்கீழ் அடுக்குகளை உருவாக்குகிறது. உடலுழைப்பின் மீதான சமூக விலக்கத்தை நீக்கி அதை மதிப்பு மிக்கதாக ஆக்குவதால் சமத்துவத்தைக் கொண்டுவர இயலும் என காந்தி எண்ணினார். மக்களின் மனதில் உருவாகியிருக்கும் போலியான உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டும். இதுவே காந்தியின் முதன்மைப் புரிதலாக இருந்தது. இந்தப் புரிதல் நிச்சயம் முழுமையானதல்ல. ஆனால் பொருளியல் சிக்கலை காந்தி புரிந்துகொண்டார் என்றே எண்ணுகிறேன். காதி, கிராமத் தொழிற்சாலைகள் என 1934க்குப் பிறகு பொருளியல் திடத்தன்மையை உருவாக்க முயன்றார். மேலும் நிலப் பகர்வில் பூமி தான இயக்கம் மிக முக்கியமான முன்னெடுப்பு. வினோபா ஒரு காந்தியர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது விமர்சனம் காந்தி நவீனமயமாதலையும் அரசின் தலையீடையும் சீர்திருத்தத்திற்கு ஏதுவான காரணிகளாகக் கருதவில்லை என்பது. அவற்றை ஐயத்துடன் நோக்கினார். சீர்திருத்தம் என்பது மக்களிடமிருந்து வருவது என திடமாக நம்பினார். அரசு என்பது ஆன்மாவற்ற இயந்திரம் என்பதே அவரது புரிதல். புத்தொளிக் கால தொழில்மயமாதல் சமத்துவத்தைக் கொண்டுவரும் என்னும் கனவை நேரு, அம்பேத்கர் ஆகியோருடன் காந்தி பகிர்ந்துகொள்ளவில்லை. அது வேறொரு வகையான சமத்துவமின்மையையே கொண்டுவரும் என அவர் கணித்தார். அந்தவகையில் காந்தி தீர்க்கதரிசிதான். முழுக்க அரசை நம்பவில்லை எனவும் சொல்ல முடியாது. ஆலய நுழைவுச் சட்டம், தீண்டாமையைத் தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டியது ஆகிய இடங்களில் அரசின் குறுக்கீடை அவர் வரவேற்றார்.
மூன்றாவது போதாமை என்பது காந்தியின் வழிமுறை தலித்துகளின் சுயமரியாதைக்கு இழுக்கு விளைவித்தது என்பது. டி.ஆர். நாகராஜ் அவரது சுய தூய்மையும் சுய மரியாதையும் கட்டுரையில் இந்தக் கோணத்தை விரிவாக எழுதியுள்ளார். சாதி இந்துக்கள் தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்வதற்கான ஒரு கருவியாகத் தலித்துகளின் இடம் சுருங்கியது. பாவத்தைப் போக்கிக்கொள்பவர்கள் பெரும் தியாகிகளாகவும் நாயகர்களாகவும் பீடத்தில் அமர்ந்தார்கள். காந்தியால் தலித்துகளிடமிருந்து நேருவைப் போன்றோ அம்பேத்கர் போன்றோ அடுத்த தலைமுறை தலைவரை உருவாக்க இயலவில்லை. இந்த விமர்சனம் ஏற்புடையதே. காந்தி சாதி இந்துக்களை நோக்கியே பேசினார். தன் உண்ணாநோன்பை முடித்துவைக்க காந்தி ஒரு தீண்டத்தகாத இளைஞனுக்கு அழைப்பு விடுத்திருந்ததை டி.ஆர். நாகராஜ் சுட்டிக்காட்டுகிறார். தயங்கித் தயங்கி காந்தியிடம் உரையாட வந்தவன் அவரது உண்ணாவிரத நாளில் வரவில்லை. காந்தியின் போராட்டத்திலிருந்து தலித் அரசியல் உருக்கொண்ட புள்ளியாக நாகராஜ் இந்த தருணத்தை அடையாளம் காண்கிறார்.
காந்திய வழிமுறையின் இந்தத் தன்மையே இன்றைய காலகட்டத்தில் அவருடைய தேவையையும் பங்களிப்பையும் காட்டுவதாக ஆகிறது என்கிறார் கோல்கே. முதன்மையாக காந்திய வழிமுறையில் சாதி இந்துச் சமூகமும் தலித்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது தவிர்க்கப்படுகிறது. ஆகவே கலவரங்கள் நிகழ்வதில்லை. இரண்டாவதாக அம்பேத்கரின் இயக்கம் தலித்துகளுக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தது என்றாலும் சாதி இந்துக்களிடம் இருந்த முன்முடிவையும் வெறுப்பையும் தணிக்க அதனால் இயலவில்லை. பிளவு அதிகரித்துள்ளதையே நாம் காண்கிறோம். காந்தியின் வழிமுறை இச்சிக்கலுக்குத் தீர்வு அளிக்கிறது.
இத்தகைய ஒரு ஆய்வை மேற்கொள்ள கோல்கேவை எது தூண்டியிருக்கும்? காந்தி அளவிற்கு வேறெவருடைய வாழ்க்கையாவது நுண்நோக்கிக்குள் அங்குலம் அங்குலமாக அலசப்பட்டிருக்கிறதா? தரவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அடுக்கலாம். ஆனால் அடிப்படை நன்னம்பிக்கையை அதனால் உருவாக்க இயலுமா? காந்தி சாதியவாதியா இல்லையா என்பது இன்று அத்தனை முக்கியமான கேள்வியா? அவரது வழிமுறை நமக்கு இன்று பயன்படுமா என்பது மட்டும்தானே இன்றைய கேள்வி? இதுபோன்ற எண்ணங்கள் எழுந்து அயர்வை உருவாக்கும். வரலாற்று ஆளுமையுடன் சென்று முட்டிமோதி எதையேனும் நிறுவ வேண்டியதன் தேவை என்ன? ஒ
January 5, 2023
எனது நூல்கள்
சிறுகதைகள்
அம்புப்படுக்கை - யாவரும் பதிப்பகம்
விஷக்கிணறு - யாவரும் பதிப்பகம்
நாவல்
நீலகண்டம் - யாவரும் பதிப்பகம்
கட்டுரைகள்
அன்புள்ள புல்புல்- யாவரும் பதிப்பகம்
வளரொளி (நேர்காணல்கள்/ விமர்சனங்கள்)- யாவரும்/பதாகை பதிப்பகம்
நாளைய காந்தி- யாவரும் பதிப்பகம்
ஆயிரம் காந்திகள்- நன்னூல் பதிப்பகம்
சமகால சிறுகதைகளின் பரிணாமம்- யாவரும் பதிப்பகம்
மரணமின்மை எனும் மானுடக்கனவு- யாவரும் பதிப்பகம்
மொழியாக்கங்கள்
இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம்- க்ஷிதி மோகன் சென் (மொழியாக்கம்)- சொல்புதிது- அச்சில் இல்லை, கிண்டியில் கிடைக்கும்.
சுதந்திரமும் சமூக நீதியும்- ராஜ் மோகன் காந்தி (மொழியாக்கம்)- சரோதயா இலக்கியப்பண்ணை
மகாத்மாவிற்கு அஞ்சலி- பப்பிளிகேஷன் டிவிஷன் இந்தியா
தொகை நூல்கள்
பின்நவீனத்துவவாதியின் மனைவி (தொகுப்பாசிரியர். சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகள்)- காலச்சுவடு
காந்தி எல்லைகளுக்கு அப்பால் ( மொழியாக்க தொகை நூல்)
காந்தியை சுமப்பவர்கள் - பரிசல் புத்தக நிலையம்
Mahathma Gandhi in Tamil- Bharatiya Vidya Bhavan.
மரணமின்மை எனும் மானுடக் கனவு- நூல் முகம்
குறைந்தது ஐந்தாறு தலைமுறைகளாக சித்த மருத்துவம் பார்த்துவரும் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் குடும்பத்திற்குள் சித்த மருத்துவம் எப்போது, எப்படி வந்தது என்பதே எனக்கு இன்று சுவாரசியமான ஆராய்ச்சியாக இருக்கும். இளவயதில் அரசு சித்தமருத்துவராக எங்கள் பகுதியில் புகழோடு இருந்த தந்தையை இழந்து விட்டிருந்தாலும், வெற்றுடலுடன் நோயாளிகளை பார்க்கும் என் தாத்தாவின் அலுமினிய மருந்து பெட்டியை தூக்கிக்கொண்டு அவருடன் சென்ற வகையில் சில மருத்துவ அனுபவங்களை பால்யத்திலேயே பெற்றிருக்கிறேன். அவர் நாடி நோக்குவதில் விற்பன்னர். மரண குறிகளை கச்சிதமாக அறிந்தவர் எனும் பெயரும் உண்டு. கண்கூடாக சில அசாதாரண தருணங்களுக்கு சாட்சியாக இருந்தபோதிலும் கூட அவருடைய முறைமைகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை. 'அம்புப் படுக்கை' கதையில் அவரது சித்திரம் உள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் போல் தமிழகத்தில் பாவப்பட்ட ஜீவன்கள் வேறு எவரும் இல்லை. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் நான் நவீன மருத்துவராக ஆக வேண்டும் எனும் வேட்கை கொண்டிருந்தவன். அரைமணிநேரம் கூட சேர்ந்தார்போல் அவருடைய இறுதி நாட்களில் அவரோடு செலவழித்ததில்லை. நாடியின் நுணுக்கங்களை கற்பிக்க முயன்றார், சித்தர் பாடல்களை கூறி விளக்கமளிக்க முயல்வார். ஆனால் இவையேதும் என் சிந்தையை எட்டியதே இல்லை. அன்றைய காலங்களில் என்னை சித்த மருத்துவனாக நான் கற்பனை செய்து கொண்டதில்லை. நான் இச்சூரணங்களையும் லேகியங்களையும் தைலங்களையும் சீந்த போவதில்லை. சட்டையணியாத எளிய கிராமத்து வைத்தியனாக என்னால் வாழ்ந்திட முடியாது என உறுதியாக நம்பினேன். தாத்தா அவ்வாண்டே உடல் நீங்கினார் காலம் என்னை ஆயுர்வேத மருத்துவனாக ஆக்கியது.
ஒருவகையில் தாத்தாவை, அவரின் அறிவை உதாசீனபடுத்திவிட்டேன் எனும் குற்ற உணர்வு எப்போதும் எனக்குண்டு. இப்போது பார்க்கும்போது இது ஏதோ ஒரு ஊரில் ஒரு பேரன் தனது தாத்தாவை உதாசீனப்படுத்தினான் என்பதல்ல. காலனியம் அறிவுத்தொடர்ச்சியை எப்படி மழுங்கடித்தது என்பதற்கான விடையாக இருக்கலாம். மீறலும் தொடர்ச்சியும் கொண்டதே தலைமுறைகளுக்கு இடையேயான உறவு. காலனியம் இந்த சமன்பாடை குலைத்தது. மரபு மீறலுக்கான சாத்தியத்தை குறைவாகவும் தொடர்ச்சிக்கான சாத்தியததை அதிகமாகவும் முன்வைத்தது என்றால் நவீனம் இதை தலைக்கீழாக்கியது. அவரின் நினைவுகளுக்கும் அவரளித்த ஆசிகளுக்கும் நான் செலுத்தும் சிறிய மரியாதை எனும் உணர்வு இந்நூலை எனக்கு மேலும் நெருக்கமாக்குகிறது.மூன்று பகுதிகளை கொண்டது இந்நூல். முதல் பகுதி ஆயுர்வேதத்தை வரலாறு, மானுடவியல் மற்றும் சமூக நோக்கில் அணுகுகிறது. 'காந்தியும் ஆயுர்வேதமும்' ஏற்கனவே நாளைய காந்தியின் இடம்பெற்றுள்ளது. இந்த நூலின் மிக முக்கியமான பகுதி இதுவே. மூன்றாம் பகுதி 'ஆரோக்கிய நிகேதனம்' மற்றும் 'சுளுந்தீ ' ஆகிய மரபு மருத்துவம் தொடர்பான நாவல்கள் குறித்த விரிவான விமர்சனங்களை உள்ளடக்கியது. இரண்டாம் பகுதியில் இடம்பெற்றிருக்கும் 'பிஷக் உத்தமன்' கட்டுரை மருத்துவர் மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' நூலில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையைத்தவிர்த்து பிற அனைத்தும் புத்தக மதிப்புரைகள். எழுத வந்த தொடக்க எழுதியவை. இன்று வாசிக்கும்போது இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துக்களை அதே உறுதியுடன் இன்று நான் சொல்ல மாட்டேன். நவீன மருத்துவம், நவீன அறிவியல் அன்று எனக்கிருந்த அதீத அவநம்பிக்கை இன்று இல்லை. அறிவியல் ஆயுர்வேதத்தை அங்கீகரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு ஈடேறாததன் கசப்பு என சொல்லலாம். அறிவியலின் அங்கீகாரம் அல்லது அறிவியல் எனும் அடையாளத்தை ஆயுர்வேதம் சுமக்க வேண்டியதில்லை. தேவையில்லாத சிலுவை எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆயுர்வேதம் அதன் எல்லைகளுக்குள் நின்றபடி, அது எடுத்துக்கொண்ட உலக பார்வைக்கு உண்மையாக இருந்தால் போதும். 'மருத்துவத்திற்கு மருத்துவம்' கட்டுரையை வாசிக்கும்போது நவீன மருத்துவத்தின் அற சிக்கல்களை எளிமைப்படுத்தியிருக்கிறேன் எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மருத்துவத்தை தொண்டு என நோக்கும் மக்கள் திரளுக்கும் அதை தொழில் என நோக்கும் நிபுணர் தரப்பிற்கும் இடையேயான விழுமிய உரசலில் இருந்து என் பார்வை எழுந்துள்ளது. மருத்துவம் தொண்டிலிருந்து தொழிலுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. நிலப்பிரபுத்துவ கால புனிதம் எனும் விழுமியத்தை அத்துடன் இணைத்து காணவேண்டியதில்லை. மேலும் அற மீறல்கள் நவீன மருத்துவத்தில் மட்டுமே உள்ள ஒன்றும் இல்லை. மூலிகை மருந்துகளில் நவீன மருந்துகளை கலப்பது, கலப்படம் செய்வது, விளம்பரம், மருந்துகளை புட்டியிலிருந்து நீக்கி அதீத விலை வைத்து விற்பது, மருந்து சீட்டில் மருந்தின் பெயர் எழுதுவதில்லை, பஞ்சகர்மா சிகிசிச்சைகளின் அதீத விலை, போலி வாக்குறுதிகள், போலி மருத்துவர்கள் என இந்திய மருத்துவ முறைகளும் எவ்வகையிலும் குறைவில்லை. பெரும்பாலான சமயங்களில் பரிசோதனைகள் வெறுமே காசு பறிக்க செய்யப்படுவதில்லை என்பதை அனுபவத்தின் ஊடாக புரிந்துகொண்டேன். நோயை உறுதிப்படுத்த, அதன் தீவிரத்தை அறிய, அறுவை சிகிசிச்சை தேவையா என முடிவெடுக்க, மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய என பல நியாயமான காரணங்கள் உள்ளன. கட்டுரைகளில் என் கருத்துக்களை திருத்த நான் விரும்பவில்லை. அது அந்த காலகட்டத்தில் எனது மனநிலையை உண்மையாக பிரதிபலித்தது என்பதால் முன்னுரையில் இந்த விளக்கங்களை அளிக்கிறேன். ஆயுர்வேதம் தொடர்பாக இன்னும் சில கட்டுரைகளை எழுதுவேன் என்றே எண்ணுகிறேன். தொகுக்கப்படாத குறிப்புகள் மட்டுமே சில நூறு பக்கங்கள் நீளும்.
இந்நூல் உருவாவதற்கு சிலருக்கும் நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். நான் ஆயுர்வேத மருத்துவனாக தொடர்வதற்கு முக்கியமான காரணிகளில் ஒருவர் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் மகாதேவன். ஆயுர்வேதம் குறித்த எனது குறை புரிதல்களை நீக்கி அதுகுறித்தான நேர்மறை சிந்தனையை என்னுள் விதைத்தவர். மற்றொரு வகையில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியுடையவனாகிறேன். பல சமயங்களில் அறிவியல் சார்ந்த அவருடைய உறுதியான நிலைப்பாடுகள் என்னை சீண்டி இருக்கின்றன. நல்லவேளை நான் அவருக்கு சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றாமல் அவ்வினாக்களுக்கு விடை தேடி நிறைய வாசிக்க தொடங்கினேன். ஆயுர்வேதத்தின் சிக்கல்களை உள்ளிருந்து நோக்கவும் அதன் சாதக பாதகங்களை இயன்றவரை வெளியிலிருந்து எடைபோடவும் முயன்றுள்ளேன்.. காலஞ்சென்ற சித்த மருத்துவர் டாக்டர். திருநாராயணன் மற்றும் மருத்துவர் கு. சிவராமன் ஆகியோருடன் இந்திய மருத்துவ முறைகளின் சிக்கல்கள் குறித்து விவாதித்து பல புரிதல்களை எட்டியுள்ளேன். மருத்துவ மானுடவியல் பேராசிரியர் டாக்டர். ப்ரிஜிட் செபாஸ்டியா, இந்திய மருத்துவ முறைகள் குறித்து ஆய்வுகளை செய்து வருபவர். அவருடைய நட்பும், அவர் வழி பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு மையத்திலிருந்து கிடைத்த புத்தகங்களும் எனது புரிதல்களை விஸ்தரித்தன. இந்த நூலை எனது தாத்தாவிற்கு கல்லூரிக்கும் சமர்ப்பணம் செய்துள்ளேன். ஆயுர்வேதத்தின் இருவகையான கற்றல் முறைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும். கண்ணன், தினேஷ், ஷியாம் ஆகிய என் கல்லூரி நண்பர்களையும், சீனியர்களான மகேந்திரன், சுந்தர், பிரின்ஸ் ஆகியோரையும், எனது கல்லூரி ஆசிரியர்களான சந்திரசேகர், ஸ்ரீ ராமகிருஷ்ணன், சக்கரவர்த்தி ஆகியோரையும் இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன் நான் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவனாக வருவேன் என என் ஆசிரியர்கள் நம்பினர். ஆனா;ல் எனக்கு வேறொரு கிறுக்கு பிடித்துக்கொண்டது. வாசிக்கவும் எழுதவும் அனுமதிக்கும் சுதந்திரத்துடன் கூடிய இலகுவான தொழில் வாழ்க்கையையே நான் தேர்ந்தெடுத்தேன். 'ப்ரித்வி' அமைப்பின் பிரதீப் மற்றும் பரிதோஷ ஆகிய நண்பர்களுடனான வாதங்கள் எனக்கு பலவகையில் உதவியுள்ளன. எழுத்தாளர் போகன், அனீஸ் கிருஷ்ணன் நாயர், யோக ஆசிரியர் சவுந்தர் குருஜி, நவீன மருத்துவர் மாரிராஜ், எழுத்தாளர் நாகப்பிரகாஷ் ஆகியோருடன் ஆயுர்வேதம் குறித்து உரையாடியவை, விவாதித்தவை என்னை தொகுத்துக்கொள்ள உதவியிருக்கிறது.
நூல் உருவாக்கத்தில் பெரும் உறுதுணையாக இருந்தவர் என் மனைவி டாக்டர்.மானசா. நூலை வாசித்து ஆலோசனைகளை வழங்கிய நண்பர் நட்பாஸ் பலவகையிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். எழுத்து முயற்சியில் எப்போதும் உடனிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் நன்றிகள். பல சமயங்களில் நன்றியுடனும் சில சமயங்களில் நறநறப்புடனும் நான் ஆயுர்வேதம் படிக்க காரணம் நீதான் என அம்மாவிடம் சொல்வேன். அவருக்கு என் வணக்கம். அத்தனை எளிதில் என்னுடைய நேரத்தை எனக்கு விட்டுக்கொடுக்காத சுதீருக்கும் சபர்மதிக்கும் முத்தங்கள். நண்பர் ஜீவ கரிகாலன் நச்சரிக்கவில்லை என்றால் இது நூலாகியிருக்காது. 'யாவரும்' நண்பர்களுக்கு நன்றி.
வழமையான மருத்துவ ஆலோசனைகள், எளிய மூலிகை மருந்து பிரயோகங்கள் போன்றவை அற்ற நூலாக ஆயுர்வேதத்தை பற்றி தமிழில் எழுத அனேக விஷயங்கள் உண்டு. இந்நூல் அப்படியான ஒரு முயற்சியே. மாதகணக்கில் மூல பிரதிகளை வாசித்து குறிப்புகள் எடுத்தேன். நீண்ட மேற்கோள்களை தமிழாக்கம் செய்தேன். பல ஆய்வு கட்டுரைகளை வாசித்து சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. இந்திய மருத்துவமுறைகள் குறித்து புரிந்துகொள்ள உண்மையில் ஐரோப்பிய அறிஞர்களையே சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. டொமினிக் உஜாஸ்டிக், டாக்மர் உஜாஸ்டிக், முள்ளன்பால்ட், டேவிட் கோர்டன் வைட், கென்னெத் ஜிஸ்க், ரிச்சர்ட் வெய்ஸ், ராச்சல் பெர்கர், ஃபிரான்சிஸ் ஜிம்மர்மேன், அரியான் ரோசு போன்ற ஆய்வாளர்களுக்கு உண்மையில் நான் கடன் பட்டிருக்கிறேன். காந்தியை, இந்தியாவை, இந்திய வரலாறை நாம் ஐரோப்பாவின் கண்களிலேயே அறிந்து கொள்கிறோம். கோயம்பத்தூர் ஆர்ய வைத்திய பார்மசி நவீன ஆயுர்வேத ஆய்வுகளுக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அவர்களுடைய ‘Ancient science of Life’ இந்திய மருத்துவ வரலாறு சார்ந்து மிக முக்கியமான சர்வதேச தரம் மிக்க ஆய்வுகளை தொடர்ந்து பதிப்பித்து வந்தது. அது நின்று போய் விட்டது வருத்ததுற்குரிய செய்தி. லண்டனின் வெல்கம் இன்ஸ்டிட்யுட் உலகளவில் மருத்துவ வரலாறைப் பற்றி பல முக்கியமான ஆய்வுகளை நூலாக்கி தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. இந்த நூல் மூன்று நான்கு வருட தொடர் வாசிப்பின் விளைவு. இவை நானே செய்த ஆய்வுகள் அல்ல. ஒருவகை சிந்தனை தொகுப்பு, உரையாடல். நான் வாசித்தவற்றைக் கொண்டு சில இடைவெளிகளை நிரப்பி இருக்கிறேன், ஊகங்களை முன்வைத்திருக்கிறேன், அவதானங்களையும் சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கிறேன்.
‘ஆயுர்வேதம் மாறாதது’ என்றே ஆயுர்வேத அடிப்படைவாதிகளும், ஆயுர்வேதத்தை புறந்தள்ளும் நவீன அறிவியல் அடிப்படைவாதிகளும் ஒரே குரலில் இதே கருத்தையே வலியுறுத்துகிறார்கள். இக்கூற்று உண்மையா? என ஆராய துவங்கியதே இந்நூலின் துவக்கம். ஒரு உயிருள்ள மருத்துவ மரபின் இயல்பான வளர்ச்சியையும், நிகழ்கால சிடுக்குகளையும் பேசுகிறது. ஒரு ஆயுர்வேத மாணவனாக, மருத்துவனாக இந்நூல் எனக்கு பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது நான் ஒரு பண்பாட்டு தொடர்ச்சியின் முனையில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீளும் மரபு இது. எனது முன்னோர்கள் விட்டு சென்ற வாழ்க்கை பற்றிய அவதானிப்புகள், புரிதல்கள், அவர்கள் எதிர்கொண்ட இடர்கள், அதற்கு அவர்கள் கண்டடைந்த தீர்வுகள் என எல்லாமும் என்னை வந்தடைந்திருக்கிறது. இந்த அறிவு களனில் என் பங்கிற்கு எதையாவது சேர்க்க வேண்டும். சேர்த்த பின்னர் அதை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். அதுவே என் கடமை. இந்நூல் அத்தகைய என் கடனை நிறைவு செய்வதற்கான ஒரு சிற்றடி அவ்வளவே.
-சுனில் கிருஷ்ணன்
காரைக்குடி
4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், காரைக்குடி – 2
drsuneelkrishnan@gmail.com
சமகால சிறுகதைகளின் பரிணாமம் & பிற கட்டுரைகள் - முன்னுரை
2012- 2013 ஆண்டுகளில் ஆம்னிபஸ் என்றொரு இணைய தளத்தை நண்பர்கள் கிரி ராமசுப்பிரமணியமும் நட்பாஸும் தொடங்கினார்கள். அப்போது சமூக ஊடகங்களில் 365 நாட்கள் சவால் என்றொரு விஷயம் பிரபலமாக இருந்தது. கிரி 365 நாட்கள் 365 புத்தக அறிமுகங்கள் செய்யலாம் எனும் யோசனையை முன்வைத்தார். ஏழு நண்பர்கள, ஒவ்வொருவாரமும் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்து எழுத வேண்டும். புத்தகத்தை வாசித்து தொகுத்துக்கொள்ளும் வழக்கத்தை அங்குதான் கற்றுக்கொண்டேன். வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளை இப்போது வாசிக்கும்போது சில இடங்களில் முதிர்ச்சியின்மை புலப்படுகிறது. மொத்தம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது இந்நூல். முதல் பகுதி பொதுவான விமர்சன கட்டுரைகள். பரந்த பரப்பை தொடுபவை. இரண்டாம் பகுதி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் முழு தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்டவை. இக்கட்டுரைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு நிறைவை அளித்தவை. புனைவு எழுதிய நிறைவையும், துப்பறிந்து எதையோ கண்டடையும் போது ஏற்படும் உவகையும் அளித்தவை. இவ்வகையான கட்டுரைகளை வருடத்திற்கு இரண்டுமுறையாவது எழுத வேண்டும் என எண்ணிக்கொண்டேன். மூன்றாம் பகுதியில் மூத்த எழுத்தாளர்களின் சில கதைகளை வாசித்து எழுதியவை. இவை முழுமையானவை அல்ல. நான்காம் பகுதி இளம் எழுத்தாளர்களின் முதல் தொகுப்புக்கள் பற்றிய கட்டுரைகள். சமகால சிறுகதைகள் தொகுப்பில் மயிலன், திருச்செந்தாழை ஆகியோர் முக்கியமான விடுபடல்கள். வேறு பலரும் அடுத்தடுத்த தொகுப்புக்களை கொணர்ந்துள்ளார்கள். இந்த எல்லைகளை எப்போதுமே நினைவில் கொண்டிருக்கிறேன்.
இந்த தொகுப்பை நண்பன் வினோத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். இன்று 'கனாத்திறமுரைத்த கதைகள் ' எழுதிய சித்ரனாக அறியப்படும் வினோத் என் கல்லூரி நண்பன். கல்லூரி மருத்துவமனைகளில் ஒன்றாக இரவுப்பணி பார்த்த்தோம். அவன் வழியாகத்தான் ஜெயமோகனும், ஷோபாவும், லக்ஷ்மி சரவணகுமாரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். இன்றுவரை நட்பு தொடர்கிறது. எப்போதும் போல் விஷ்ணுபுரம், சிற்றில், பதாகை மற்றும் மரப்பாச்சி நண்பர்களுக்கு நன்றிகள். விமர்சன நோக்கை கூர்மைப்படுத்தியதில் பங்காற்றியவர்கள். எனது விமர்சன முறைமையை நான் ஜெயமோகன் வழியாகவே கூர்மைப்படுத்திக்கொண்டேன். ஆசிரியரான அவருக்கு எனது நன்றி.. அவரிடமிருந்து வேறுபடும் புள்ளிகளை இத்தொகுப்பின் கட்டுரைகளில் வாசகர் காணக்கூடும். எனது முதன்மை கேள்வி படைப்பாளி பின்தொடரும் கேள்வி எது? அவரை எழுதத்தூண்டும் காரணிகள் எவை? எவை அவரை தொந்திரவிற்கு உள்ளாக்குகின்றன? ஆகியவை தான். எழுதும் சூழலை உறுதி செய்யும் அம்மா, மானசா, சுதிர், சபர்மதி ஆகியோருக்கு அன்பு. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வெளியிட்ட கனலி , தமிழினி, சொல்வனம், பதாகை, ஜெயமோகன் இணையதளம், ஓலைச்சுவடி மற்றும் வாசகசாலை ஆகிய இதழ்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி. விமர்சன கட்டுரைகளை தொகுப்பாக்கி புத்தகம் ஆக்குவது என்பது பதினெட்டாம் பெருக்கில் ஓலைச்சுவடிகளை வீசுவதற்கு சமானமானது என்று உணர்ந்தும் நண்பர் ஜீவ கரிகாலன் இதைப் பதிப்பிக்க முன்வந்திருக்கும் தியாகச்செயலையும் தீரத்தையும் மெச்சியாக வேண்டும். 'யாவரும்' பதிப்பகத்துக்கு இன்னும் பல தியாகங்கள் வாய்க்கட்டும்.
சுனில் கிருஷ்ணன்
காரைக்குடி
2-12-2022
December 31, 2022
2022 நினைவுப்பாதை
வழக்கம் போல் வருடக் கடைசியில் கொஞ்சம் நினைவுகளை ஓட்டிப்பார்க்கும் நேரம். பெரிதாக ஏதும் கதைகள் எழுதவில்லை, புதிய புத்தகங்கள் எதையும் வாசிக்கவில்லை. இது பயணங்களின் ஆண்டு. ஜெயமோகனின் அறுபதாம் ஆண்டு நிறைவு, அதையொட்டி சியமந்தகம் வெளியீடு. தமிழ் விக்கி என தொடர் செயல்பாடுகளின் காலம். 2022 எனது இதுவரையிலான வாழ்வில் முக்கியமான ஆண்டு என கருதுகிறேன்.மூன்று பெரிய பயணங்கள் செய்து வந்தேன். மூன்று பெரும் ஆளுமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த ஆண்டு. ஜூனில் சிம்லா இலக்கிய விழாவில் இந்திய இலக்கிய முன்னோடிகளின் ஒருவரான எஸ். எல். பைரப்பாவை சந்தித்தேன், நவம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் எனது ஆதர்சங்களில் ஒருவரான டெட் சியாங்கின் உரையை நேரில் கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பரில் தரம்சாலாவிற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்ததை இப்பிறவி பேறாக கருதுகிறேன். அவருடன் இருந்த இருபது நிமிடங்களை என் வாழ்வின் ஆக சிறந்த தருணமாக கருதுகிறேன். இலக்கியத்தில் இனி எனக்கு எந்த விருது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், இதில் இயங்கியதற்காக பயன்மதிப்பை அடைந்துவிட்டேன்.
Shyam Pakhre, Ramesh Oza, Jegadeesh Lkkani, Dalai Lama, Shodang Rinpocheகாந்திக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்னை தலாய் லாமாவரை கொண்டுவந்து விட்டார். இதை இப்போது எழுதும்போது கூட அவரது தொடுகையின் சிலிர்ப்பை, அவரது உரத்த சிரிப்பை நினைவுகூர்கிறேன். அவருடைய ஆசிகளுக்கு நான் தகுதியுடையவனா என தெரியவில்லை. ஆனால் அதை ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுவே எஞ்சிய வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும். சிம்லா பயணத்தைப் பற்றி அங்கு சந்தித்த பிற மொழி எழுத்தாளர்களை பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. தலாய் லாமாவிடம் ஆசிபெற்றதைப்பற்றி என்னால் எழுத முடியுமா எனத்தெரியவில்லை. சொற்களாகாத பகுதியிலேயே அது சேகரமாகட்டும்.
இந்த ஆண்டு ஒண்ணெயோன்னு கண்ணே கண்ணு என ஒரேயொரு சிறுகதைதான் எழுதினேன். அதுவும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தீபாவளி மலருக்காக கேட்டதனால். நெடுநாட்களுக்கு பின் எழுதினாலும் கதையெழுதும் ஆற்றல் நம்மை கைவிடவில்லை எனும் நிறைவை தக்கவைத்துக்கொண்டேன்.
முதலில், நாமெல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த நற்செய்தியை (நற்செய்தியா- தெரியவில்லை, ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா என்ன- சும்மா சொல்லிப்பார்ப்பதுதான்) இயம்பி- ஆம் நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நிதானமாக நகர்கிறது, எத்தனை அத்தியாயங்கள், எத்தனை பக்கங்கள் என ஏதும் தெரியவில்லை. விஷ்ணுபுரம் விழாவில் ஜெயமோகனிடம் 'புனைவு எழுத வருமா என்றே எனக்கு ஐயம் வந்துவிட்டது. அதைத் தவிர்க்க அடுத்தடுத்து ஏதோ செய்துகொண்டே இருக்கிறேன். இப்போது நான் என்ன செய்ய?' என கேட்டேன். அவர் என்ன சொல்வார் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவரிடமிருந்து அந்த சொல்லை பெறுவது நல்லது. பிடிவாதமாக எழுதவும் என்பதே ஜெ எனக்கு சொன்ன ஆலோசனை. விடாமல் பத்துநாட்கள் எழுதவும், தானாக சரியாக வரும் என்றார். விழா முடித்து மறுநாள் எழுத தொடங்கினேன்.
Kanishka Gupta, Mamang Dai, Jey, Ramkumar, Senthilஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய நீள்கதையை நாவலாக மாற்ற முடியும் என தோன்றியது. அந்தக் கதையை ஜெ பலிக்கல் எழுதுவதற்கு முன்னரே எழுதியிருந்தேன். நிறைய ஒற்றுமைகள். கதையை கைவிட மனமில்லை. வேறொரு புள்ளியிலிருந்து வேறொரு கேள்வியுடன் அணுக முடியுமா என பார்க்கிறேன். ஆகவே எழுத தொடங்கியுள்ளேன். முதல் சில நாட்கள் ஏனோதானோவென சில வரிகள் எழுதினேன். பழகிய தடங்களில் , வசதி வட்டத்திற்குள் மனம் உழன்றபடி இருந்தது.
Siyamanthakam release. first momentநாவல் எழுதுவது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். ஒரேமனநிலையில் நீண்டகாலம் திளைத்திருப்பது. புதிதாக ஏதோ ஒன்றை கண்டறிவது. நாம் நன்கறிந்த பொருளையே புதிய ஒளியில் காண்பது. மொழியும் போதமும் கூராகும். சிலவகையான இசை, சில வகையான புத்தகங்கள் மட்டுமே வாசிப்பது என அந்த மனநிலையிலேயே நீடிப்பது ஒரு போதை. பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்கள் எல்லாம் நாவலின் ஒரு பகுதியா இல்லையா எனும் அளவையைக் கொண்டே அளக்கப்படும். கடந்த திங்கள்கிழமை இதுதான் நாவலின் முதல் அத்தியாயம் என கருதத்தக்க ஒரு புள்ளி அகப்பட்டது. அதுவரை இருளில் துழாவிக்கொண்டுதான் இருந்தேன். இந்த தூரத்து வெளிச்சம் போதும். நாவலை எழுதிவிட இயலும் எனும் நம்பிக்கையை எனக்களிக்கிறது. தொன்மத்தில் இருந்து வரலாற்றுக்கு என்னை இட்டுச் சென்றுள்ளது. தொடர்பான வாசிப்புகளையும் தேடல்களையும் நிகழ்த்தி வருகிறேன். எப்படி வருகிறது என பார்ப்போம்.
S. Suresh, S.L.Bhyrappa at Simlaகடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் ஐந்து நூல்கள் வெளியாகின (நண்பர் பழுவேட்டையரையும் சேர்த்து). பழுவேட்டையர் அவருக்கென ரகசிய வாசிப்பு வட்டத்தை அடைந்துள்ளார். அவரிடம் கூறியபோது "சந்தோஷப்பட முடியல தம்பி" என கண்ணாடியை கழட்டிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டார். "நம்ம கதைங்களுக்கு ஏற்பு இருக்குதுன்னா இந்த இலக்கிய சூழல் எம்புட்டு ஆபத்தான நிலைமையில இருக்குன்னு கவனிக்கணும்." என்றார். "எல்லாம் சேர்ந்தது தான் இலக்கிய சூழல்" என ஆறுதல் படுத்திவிட்டு வந்தேன்.
Joe D Cruz, Kalyana Ramanஇந்த வருடம் உருப்படியாக செய்தவற்றில் ஒன்று கம்பராமாயண கற்றல். நேற்றோடு ஆரண்யகாண்டம் முடித்தோம். இம்பர்வாரி குழுமத்தில் வாரம் மூன்று நாட்கள் சேர்ந்து கம்பனை வாசிக்கிறோம். பிரபு, பார்கவி, சுந்தரவடிவேலனோடு சேர்ந்து கம்பனுக்கு உரிய மாசிமாத அஸ்த திருநாள் அன்று நாட்டரசன்கோட்டை கம்பர் சமாதிக்கு சென்றோம். உள்ளேயே அமர்ந்து சில பாடல்களை பாடினோம். பரவசமான அனுபவம். மீண்டும் போகனை அங்கே அழைத்துச் சென்றேன். சத்திய சோதனை வேலையில் பலநாள் இடையில் கம்பன் அமர்வுகளில் பங்குபெறாமல் இருந்தேன். இப்போது ஓரளவு தொடர்ச்சியாக பங்குபெறுகிறேன். ஸ்ரீனிவாசனும் பார்கவியும் அலுப்பில்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஐநூறு, ஆயிரம், காண்டம் நிறைவு என முற்றோதல்கள் செய்கிறோம். முற்றோதல்கள் பெரும் கொண்டாட்டமானவை. விதவிதமான மெட்டுக்கள், என ஒருவாரம் முன்பிருந்தே தயாராவோம். ரம்யா தாடகைக்காக பிரத்யேக மேக்கப் எல்லாம் செய்து வந்தார். கூனிக்கு என தனிக்குரல் கொடுத்தார் பார்க்கவி. ஜமீலாவும் பார்க்கவியும் அபாரமான பாடகர்கள். கம்பனை கற்பதில் நான் இன்னும் கொஞ்சம் உழைப்பு போட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
காந்தியர்களைப் பற்றிய 'ஆயிரம் காந்திகள்' நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பதிப்பு முடிந்ததாக அறிகிறேன். நீலகண்டம், அன்புள்ள புல்புல், அம்புப்படுக்கை ஆகியவை புதிய பதிப்பை கண்டதாக ஜீவ கரிகாலன் சொன்னார். 'நீலகண்டம்' 'அம்புப்படுக்கை' ஆகியவற்றுக்கு புதிய வாசிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. 'அம்புப்படுக்கை' விருது பெற்ற நூல் என்பதால் கவனிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. நீலகண்டம் வெளியான காலத்தில் கலவையான ஏற்பையே பெற்றிருந்தது. நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்றாலும், இப்போது கூடுதல் ஏற்பை பெறுவது மகிழ்வளிப்பதாக உள்ளது. பரிசல் வெளியிட்ட 'காந்தியை சுமப்பவர்கள்' தொகை நூலும் ஓரளவு கவனம் பெற்றது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' பற்றி பெரிய எதிர்வினை ஏதும் வரவில்லை.
இந்த ஆண்டு எனது நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட பணி 'சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை' (சத்திய சோதனைக்கு உள்ள அசல் தலைப்பு) மொழியாக்கம் தான். அடிக்குறிப்புகளுடன் ஆயிரம் பக்கங்கள் வரும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்த வேலை. இந்த ஆண்டு முடித்தே ஆகவேண்டும் எனும் முனைப்புடன் ஈடுபட்டேன். அக்டொபர் மாதம்தான் மொழியாக்கம் நிறைவானது. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அறிகிறேன். வரும் ஆண்டில் 'காலச்சுவடு' வெளியீடாக வெளிவரும் என நம்புகிறேன்.
Prabhu, Sundara Vadivelan Bharkaviஇந்த நூலின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நூலை முடித்த கையோடு 'இனி மொழியாக்கம் செய்வதில்லை' எனும் முடிவுக்கு வந்துள்ளேன். எப்போதாவது எனது தேர்வின் பேரில் நானே ஏதேனும் செய்தால் உண்டு. புனைவற்ற எழுத்துக்களை மொழியாக்கம் செய்வதில்லை என்பதே தீர்மானம். மொழியாக்கம் தேவையில்லை என்றோ அல்லது இழிவானது என்றோ கருதவில்லை. எனது ஆற்றலை அதிகமும் அதற்கு அளிக்க விரும்பவில்லை. அதேப்போல் மற்றொரு தீர்மானமும் உண்டு. கடந்த ஆண்டு உள்ளூர் வெளியூர் என எக்கச்சக்க மேடையுரைகள். என்னால் அத்தனை எளிதில் 'மறுப்பு' சொல்ல முடியாது எனும் பலவீனத்தினால் விளைந்தது. இனி கொஞ்ச நாட்களுக்கு மேடையுரைகள் நிகழ்த்தக்கூடாது என முடிவெடுத்த நேரத்திலேயே. அஜியின் மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டுள்ளேன். கொல்கத்தாவில் சாஹித்ய அகாதமி ஏற்பாடு செய்யும் இளம் எழுத்தாளர் கூடுகையில் பங்குபெற ஒப்புக்கொண்டுள்ளேன். சமூக ஊடகங்களிலும் நான் இல்லை என்பதால் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்த்தால் முற்றிலும் இப்படியான ஒரு ஆள் இருப்பதையே தமிழில் மறந்துவிடுவார்களோ எனும் குழப்பமும் உண்டு. மறந்தால் என்னவாம்? எனும் பதில் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. மேடையுரைகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை. வண்ணநிலவன் படைப்புலகம் குறித்தோ அழகிரிசாமி கதைகள் குறித்தோ உரையாற்ற வேண்டும் என்றால் எனக்கு ஒரு மாதம் ஆகும். மொத்தமாக வாசித்து, குறிப்பெடுத்து, கட்டுரையாக்கி, மேடைக்கு தகுந்த வடிவில் சுருக்கி. ஆனால் இந்த வகை முயற்சிகள் பலனளிப்பவையும் கூட. ஏனெனில் இப்படியான ஒரு நிர்பந்தம் இல்லையென்றால் அழகிரிசாமியையோ வண்ணநிலவனையோ முழுமையாக வாசிக்க மாட்டேன். பொது தலைப்புகளில், காந்தி உரைகள் ஆற்றும்போது முடிந்தவரை திரும்ப சொல்வதை தவிர்க்க விரும்புகிறேன். மூன்று நாட்களாவது ஆகும். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டால் அங்கே வரும் அத்தனை எழுத்தாளர்களையும் வாசித்திருக்க வேண்டும் என்பது எனக்கு நானே விதித்துக்கொண்டது. பல சமயங்களில் இதையெல்லாம் ஏன் செய்கிறோம் என தோன்றும். அன்பு,பொருளியல் வரவு, மரியாதை என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும். இந்த ஆண்டு சத்திய சோதனைக்கு இட்ட மற்றொரு பலி மரப்பாச்சி கூடுகைகள். மொத்தமே மூன்று நாங்கோதான் நடத்தினோம். மயிலான் பங்குபெற்ற மார்ச் மாத கூடுகை மிக சிறப்பாக நடந்தது. அதற்கு பின்னர் எழுத்தாளரை அழைத்து நடத்தவே இல்லை. வரும் ஆண்டில் மீண்டும் ஒழுங்காக நடத்த வேண்டும்.
மரப்பாச்சி இலக்கிய வட்ட கூடுகை, மயிலனுடன் புத்தக கண்காட்சிக்காக இரண்டு நூல்கள் வெளியாகவுள்ளன. இரண்டுமே யாவரும் பதிப்பக வெளியீடு. 'சமகால சிறுகதைகளின் செல்நெறி & பிற கட்டுரைகள்' சிறுகதைகள் பற்றி எழுதிய விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. விமர்சன கட்டுரைகளில் சில அசலான கண்டுபிடிப்புகளை தொட்டறியும்போது புனைவின் அதே திளைப்பை என்னால் அடைய முடிகிறது. 'மரணமின்மை எனும் மானுடக் கனவு' ஆயுர்வேத கட்டுரைகளின் தொகுப்பு. இதற்கு இன்னொரு பகுதி வரும் என எண்ணுகிறேன்.
Thuyan, Mayilanஜெ அறுபது நிகழ்வு முடிந்த கையேடு அங்கிருந்தே விமானம் ஏறி அமிர்தசரஸ் சென்று சேர்ந்தேன். விழா அன்று காலையில் பேரூர் சிவன் கோவிலில் ஜெயும் அருணா அக்காவும் மாலை மாற்றிக்கொண்டது மனதை பொங்க செய்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டு வந்த சியமந்தகம் நூலை பார்த்தபோது நிறைவாக உணர்ந்தேன். அழிசி ஸ்ரீனிவாசன் இந்நூல் உருவாக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். நூல்வனம் மணிகண்டன் அற்புதமாக அச்சாக்கி கொடுத்தார். முன்மாதிரியற்ற மணிவிழா மலர்.
With Bogan at Kambar Samadhiஇந்தவருடம் மற்றொரு மிக முக்கியமான தொடக்கம் 'தமிழ் விக்கி'. காளிபிரசாத் ஒருமுறை ஜெயை விஸ்வாமித்ரனோடு ஒப்பிட்டு பேசினான். நீ என்னடா எனக்கு சொர்க்கத்தை கொடுக்கிறது, நானே எனக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என திரிசங்கை உருவாக்கிய முனி. 'வாயில் காப்பாளர்களை' எரிச்சல் படுத்தும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வரம்பற்ற அதிகாரம் உள்ளதாக கற்பிதம் செய்கிறார்கள். ஜெ அவற்றை தகர்க்க மாற்று அமைப்புகளை உருவாக்கியபடி இருக்கிறார். உரியநேரத்தில் நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும் சாகித்திய அகாதமி கொடுக்கப்பட்டிருந்தால் விஷ்ணுபுரம் விருதே தேவைப்பட்டிருக்காது என எண்ணிக்கொள்வேன். பல்வேறு சர்ச்சைகள், எதிர் கருத்துக்கள் என தமிழ் விக்கி நெருப்பாறை நீந்தி நிலைக்கொண்டுவிட்டது. இதில் எனது பங்களிப்பு என்பது 'மக்கள் தொடர்பு அதிகாரி' என்ற அளவில் தான். அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியர் பொறுப்பிற்கு உகந்தபடி வரும் ஆண்டில் மேலும் முனைப்புடன் எழுத வேண்டும். 'நித்ய வனத்தில்' செம்பக மரத்தை நட்டபோது வெகுவாக உணர்ச்சி வயப்பட்டிருந்தேன்.
2019 ஆம் ஆண்டு ' Mahathma Gandhi in Tamil' நூலை தொகுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக குறுகிய காலத்தில் வேண்டும் என கேட்டதால், மூன்று மாதத்தில் தொகுத்துக்கொடுத்தேன். நண்பர் த. கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். 2020 ஆம் ஆண்டில் எங்கள் கைப்பிரதியை ஒப்படைத்துவிட்டோம். கொரோனா காரணங்களால் அது பதிப்பிக்கப்பட்ட தாமதம் ஆனது. இந்த ஆண்டு பாரதிய வித்யா பவன் அந்நூலை நல்லவிதமாக வெளியிட்டது. இந்திய மொழிகளில் இப்படியான ஒரு வரிசையை கொண்டு வரும் முயற்சியில் பாரதிய வித்யா பவன் உள்ளது.
வங்காளம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழி தொகுதிகளை தரம்சாலாவில் தலாய்லாமா வெளியிட்டார். அங்கு ஷோடங் ரின்போச்சே அவர்களையும் சந்தித்த்தோம். ரமேஷ் ஓசா, ஜெகதீஷ் லக்கானி , ஷியாம் பக்ரே, மற்றும் அவரது கல்லூரி முதல்வர், ஆகியோருடன் நானும் சென்றேன். அம்ரிஸ்தர் தங்கக்கோவிலை பார்த்துவிட்டு அங்கிருந்து சாலைவழி மாலையில் சென்று சேர்ந்தோம். என் வாழ்நாளில் அத்தனை அழகான சூரிய அஸ்தமனத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளர் கணேஷ் தேவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஷ்யாம் தான் எடிட் செய்த இம்மூன்று தொகுதிகளில் தமிழே முதன்மையானது என சொன்னது மிகுந்த நிறைவை அளித்தது. புத்தகத்தை தலாய்லாமா வெளியிடவுள்ளார் என்பதை தகவலாகத்தான் சொன்னார்கள். நான்தான் இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது என வண்டியில் ஏறிக்கொண்டேன். பலமுறை திட்டமிடப்பட்டு தள்ளி போனது. மொழியாக்கம் செய்த கண்ணன் தண்டபாணியையும் இழுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் நானே வேண்டா விருந்தாளி என்பதால் கண்ணனுக்காக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஷியாம் இந்த பயணத்தின் ஊடே நல்ல நண்பராக ஆனார்.
இந்த ஆண்டு நிறைய வெளிமாநில/ வெளிநாட்டு எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. சிம்லாவில் சம வயது எழுத்தாளர்களின் நட்பு கிட்டியது. குஜராத்தியில் சம்விதி எனும் அமைப்பை நடத்திவரும் தர்ஷினி தாதாவாலா, வங்காள எழுத்தாளர்களான நபணீதா தாஸ் சென்குப்தா, அமித் ஷங்கர் சஹா, நீலோத்பல், அருணி சவுரப் ஆகிய இந்தி எழுத்தாளர்கள். மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன். சிங்கப்பூரில் சந்தித்த அமெரிக்க இந்திய எழுத்தாளரான அகில் சர்மா. சிங்கப்பூர் எழுத்தாளர்களான கிளாரா சோ, போயே கிம் செங், பதிப்பாளர் எட்மண்ட் வீ என பெரும் பட்டியலை போடலாம். இறுதியாக மமங் தாய் எனும் அருணாச்சல பிரதேச எழுத்தாளரையும் ரைட்டர் சைடு கனிஸ்கா குப்தாவையும் விஷ்ணுபுர விழாவில் சந்தித்தேன். .
வருமாண்டில் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை நிறைவு செய்ய வேண்டும். கொஞ்சம் குறுங்கதைகள் எழுத வேண்டும். இரண்டோ மூன்றோ மொத்த படைப்புலக கட்டுரைகளை எழுத வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். உருப்படியான பயணங்களில் ஈடுபட வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். ஆயிரம் மணிநேர வாசிப்பு போட்டியை நடத்துகிறோம். அதை நிறைவு செய்ய முயல வேண்டும். படைப்பூக்கம் மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்பது மட்டுமே கனவு. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
December 25, 2022
காயா கோப்பியுடன் சில கதைகள் - சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 – சில நினைவுகள்
(நண்பர் சிவானந்தம் நீலகண்டன் கேட்டுக்கொண்டதன் பேரில் சிராங்கூன் டயம்ஸ் இதழில் எழுதிய குறிப்பு. இந்த பயணத்தை இனிமையாக்கிய நண்பர்கள் சரவணன், சித்துராஜ், சத்யா, ராம், சுஜா, ஷானவாஸ், லதா, இன்பா, சித்ரா, அயிலிஷா, லோஷினி, சிவானந்தம், மகேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கிருத்திகா, பொன். சுந்தரராசு, மணிமாலா மதியழகன் ஆகிய படைப்பாளிகளை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. )
With Haneefa, Celine Chow, William Phuan of Singapore book council
இது எனது மூன்றாவது சிங்கப்பூர்ப் பயணம். முதலிரண்டு முறை இருந்த ஊர்சுற்றும் பரபரப்பும், ஊருக்கு ஏதேனும் வாங்கிச்செல்ல வேண்டிய ஆர்வமும் இம்முறை வடிந்துவிட்டன. அனைத்துலக இலக்கிய விழாவான ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’ நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கேற்று அனுபவத்தைச் செறிவாக்கிக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் நான் அழைக்கப்பட்டிருந்தாலும் அது என் ஒருவனுக்கான தனிப்பட்ட அழைப்பு அல்ல. ஒரு மொழியின், நவீனத் தமிழ் இலக்கிய மரபின் பிரதிநிதிக்கான அழைப்பு.
நவம்பர் 4 தொடங்கி 21 வரை நீடித்த 25-ஆவது சிங்கப்பூர் விழாவிற்கு ஆசிய படைப்பூக்க எழுத்து செயல்திட்டத்தின் மூலமாக அழைக்கப்பட்டேன். எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி, ஓவியர் மருது ஆகியோர் நான் செல்வதற்கு முந்தைய வாரம் அழைக்கப்பட்டிருந்தனர். விழா நடக்கும் ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்திற்கு அருகிலேயே எனக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர் சரவணன் எனக்காக விடுதியில் காத்திருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் எண் 420. "நம்பரே சரியில்லையே" என சிரித்துக்கொண்டோம்.
நானும் சரவணனும் விடுதியிலிருந்து ‘மிண்ட்’ (Moment of Imagination and Nostalgia with Toys) அருங்காட்சியகத்திற்கு சென்றோம். விடுதி அருகிலேயே என்பதால் நடந்தே சென்றோம். ஐந்து தளங்கள் கொண்ட அருங்காட்சியகம். தொல்காலத்திலிருந்து பொம்மைகள் அடைந்துள்ள பரிணாமத்தைக் குறித்து ஒரு சித்திரம் கிட்டியது. பொம்மைகளின் உருவாக்கத்தில் பொதிந்துள்ள வணிகம், அரசியல் என மிக சுவாரசியமான தகவல்கள். இரண்டாம் உலகப்போர்ப் பின்புலத்தில் உருவான ராணுவ வீரர்கள், சீனக் கலாச்சாரப் புரட்சியைக் குறிக்கும் பொம்மைகள், விண்கலங்கள், வேற்றுகிரக வாசிகள், ‘பார்பி’க்கள், ‘பாப்பாய் தி செய்லர்’ என ஒவ்வொன்றுக்கும் பின்னுள்ள வரலாறு காட்டப்பட்டிருந்தது.
மைக்கேல் லீ எனும் பொம்மை வடிவமைப்பாளரை அறிந்துகொண்டேன். ஹாங்காங் அகதிகளை மையமாகக் கொண்டு கையாலேயே பொம்மைகள் செய்தவர். புனைவுக்குரிய வாழ்க்கை. பொம்மைகளின் வடிவமைப்பும் இடுபொருட்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலபரப்பில் எப்படி மாறிவந்திருக்கின்றன எனப் பறவைக் கோணத்தில் பார்க்கமுடிந்தது. இன்று அத்தகைய பண்பாட்டுத் தனித்துவங்கள் பொம்மைகளில் இல்லை என்றே தோன்றுகிறது. மி யிங் யீ எனும் தைவான் எழுத்தாளரின் 'ஸ்டோலன் பைசைக்கிள்' நாவலில் சைக்கிள் வடிவங்களின் பரிணாமம் வழியாகவே ஒரு வரலாறு சொல்லப்படும். இப்படி நாம் புழங்கும் எந்த ஒன்றையும் வரலாற்று நோக்கில் பார்த்தால் அதிலிருந்து கதையாக ஆக்க முடியும் எனத் தோன்றியது.
With Pattukottai Prabakaran, Chitra மாலையில், விழா நடக்கும் ஆர்ட்ஸ் ஹவுஸ் வளாகத்திலிருந்த, தற்காலிகப் புத்தகக்கடையில் என் புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பினேன். இரவு விளக்கில் சிங்கப்பூர் நதியையொட்டிய நகர்ப்பகுதியைக் காண்பது ஒரு தனி அனுபவம்.
அடுத்தநாள், முற்பகலில் எனக்கான அரங்கு ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் இருந்தது. எழுத்தாளர்கள் அகில் சர்மா, போயெ கிம் செங், கிளாரா சோ, சோபியா மரியா மா ஆகியோருடன் நானும் பங்கேற்ற ஆங்கில அமர்வு அது. எங்கள் அமர்வின் தலைப்பு ‘Glocalized Identity’. தோராயமாகத் தமிழில் ‘உலகவுள்ளூர் அடையாளம்’ எனலாம். ஆங்கிலம் அன்றாடம் புழங்கும் சூழலில் நான் இல்லை என்பதால் நாக்கு புரண்டு சிந்திப்பது சரியாக வெளியே வரவேண்டுமே என்ற பதட்டம் எனக்கிருந்தது. மற்ற அனைவருமே நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள். கிளாரா சோ சீனத்திலும் எழுதுகிறார்.
கிளாரா சோவின் 'Bare bones' கதை எனக்குப் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் டைனோசர் எலும்பு கண்டடையப்பட்ட பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. நுகர்வுப் பண்பாட்டை நுண்மையாக விமர்சிக்கிறது. சோபியா மரியா மா இளம் எழுத்தாளர். இரண்டோ மூன்றோதான் கதைகள் எழுதியுள்ளார். பருவநிலை மாற்றம் பற்றிய சுவாரசியமான புனைவு. போயெ ஒரு கவிஞர். ஏழெட்டுக் கவிதைகளை வாசித்த அளவிலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனார். அமையமுடியாமை, அமைதிக்கான ஏக்கம் ஆகியவற்றை அவரது கவிதைகளில் உணர்ந்தேன். நகரத்திற்குள் இருந்தபடி அங்கிருந்து சதா தப்பித்துப் போக நினைப்பவர், தப்பிக்கும் கனவுகளைக் கொண்டவர். அகில் சர்மா இந்திய வம்சாவளி அமெரிக்க எழுத்தாளர். அவரது An Obedient Father நாவல், தந்தை மகள் பிறழ் உறவை மையமாகக் கொண்டது. அதை அவர் எழுதியிருந்தவிதம் உண்மையில் பெரும் வியப்பை அளித்தது. கதை நாயகனின் மீது நமக்கு ஏற்படும் அசூயையே அவரது நாவலின் வெற்றி.
With Inba“உங்கள் எல்லோரையும் படித்து என் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டுதான் வந்தேன். ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாது. ஏனெனில் எனது எந்தக் கதையும் ஆங்கிலத்தில் இல்லை” எனத் தொடங்கினேன். உண்மையில் நான் என் நிலத்தின் உலகளாவிய குரலா? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டபோது சற்றுப் பொருத்தமற்றவனாக உணர்ந்தேன். ஆனால் அவர்களுடையதைவிட சற்றும் என் எழுத்தைக் குறைவாக உணரவில்லை.
அறிவியல் புனைவு எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டேன். எத்தனை அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியிருக்கிறேன் எனக் கேட்கப்பட்டபோது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பிலும் இரண்டு கதைகள் எனச் சொன்னதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள். மேற்கைப்போலத் தனித்த வகைமைகளாக (genres) அல்லாமல் தமிழில் ஒரேதொகுப்பில் பல்வேறுவகைக் கதைகள் அமைவதை விளக்கினேன். என்னுடைய 'இமாம் பசந்த்' கதையிலிருந்து ஒரு பகுதியை நண்பர் நம்பி மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். அதை வாசித்தேன். ஒரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
சில கேள்விகளுக்கு உருப்படியாக பதில் சொன்னேன் என்றே நினைவு. “நான் உலகத்தை நோக்கிப் பேசவேண்டும் என்பதில்லை, எனது கதையில் லேய்ஸ் சிப்ஸோ, சாம்ஸங் கைபேசியோ வருகிறது எனில் உலகம் என்னை நோக்கி என் கதைக்குள் வந்துவிட்டது எனப் பொருள். படைப்பூக்கம் உலகளாவியப் பொதுத்தன்மையுடையது. சிவன் தலை கங்கையைப் போல், மண்ணுக்கு இறங்கி நிலப் பரப்புக்கு ஏற்ப மாறி வருகிறது. பண்பாடும் சூழலும் உலகளாவியப் பொதுத்தன்மைகளுக்குச் சில திசைவழிகளை உருவாக்குகிறது” என்றேன்.
அமெரிக்கவாசிகளுக்காக இந்தியர்களின் வாழ்வை எழுதுகிறேன் என்றார் அகில். ஆகவே அந்த பிரக்ஞை கதையின் பேசுபொருள், விவரிப்பு என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றார். நல்ல வேளையாக நமக்கு அத்தகைய இக்கட்டு ஏதுமில்லை. தமிழில் நாம் வருங்கால வாசகர்களுக்காக அல்லவா எழுதுகிறோம்! ஏனோ அந்த அமர்வு எடுத்துக்கொண்ட பேசுபொருளை சரியாக விவாதிக்கவில்லை எனும் எண்ணம் ஏற்பட்டது. சம்பந்தமில்லாத கேள்விகளால் அகில் சற்றுக் கடுப்பானார்.
அவ்வமர்வு முடிந்ததும் நானும் நண்பர் சத்யாவும் கணினி விளையாட்டுக்கு எழுதுவது பற்றிய அமர்வுக்குச் சென்று அமர்ந்தோம். பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடியிருந்தார்கள். விளையாட்டு எழுதுதல், விளையாட்டுக் கதையாடல் வடிவாக்கம் (Game writing, Narrative design) என இரண்டு தளங்கள் உள்ளன. கதையாடல் வடிவாக்கம் செய்பவர் ஏறத்தாழ ஒரு திரைக்கதை ஆசிரியர்தான். ஒரு திரைக்கதையாசிரியர் தான் உத்தேசிக்கும் அதே உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்திவிட்டால் போதும். ஆனால் விளையாட்டுக் கதையாடல் வடிவமைப்பாளரின் நிலை சிக்கலானது. இதில் பார்வையாளரைப் போலன்றி விளையாடுபவர் கதைக்குள்ளேயே உள்ளவர். அவருக்குக் கதைக்குள் சில தேர்வுகள் சாத்தியம். மிக நல்ல அமர்வு. வழக்கமான இலக்கிய விழாக்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாத்தியமில்லை.
அன்று பிற்பகல் 4 மணிக்கு எழுத்தாளர் ஷாநவாஸ், முகமது அலி, வசுந்தரா ஆகியோர் பங்குபெற்ற உணவுக்கும் இலக்கியத்திற்குமான உறவைப்பற்றிய உரையாடல் அரங்கு ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து இருபது பார்வையாளர்கள் இருந்திருக்கலாம். ஷாநவாஸ் அருமையான உரையாடல்காரர். சிங்கையில் லோட்டா நிரம்பக் காபி குடித்துப் பழகியவர்கள் சென்னையில் தக்குனூண்டு டம்ப்ளரில் குடிக்க நேரும்போது ஒரு ஆளுக்கு நாலு காபி ஆர்டர் செய்யும் வழக்கத்தைப் பற்றி ஷாநவாஸ் வேடிக்கையாகச் சொன்னார். அவர் பேசுவதைக் கேட்டே நாம் சில கதைகளை எழுதிவிடலாம். முதல்முறை சிங்கப்பூர் வந்தபோது நாளைக்கு மூன்றுமுறை மைலோ குடித்து தலைசுற்றிய அனுபவத்தை நினைத்துக்கொண்டேன். வசுந்தரா தகவல்களுடன் செறிவாகப் பேசினார். சிங்கப்பூர் உணவென்பது எப்படி வெவ்வேறு பண்பாடுகளின் கலவையில் உருவானது என்பதைக் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. உரையாடல் செறிவாக இல்லாமல் அலைபாய்ந்ததாக ஓர் உணர்வு எனக்கு.
அந்த அமர்வு முடிந்தவுடனேயே எனது அமர்வு தொடங்கியது. கவிஞர் இன்பா நெறியாள்கை செய்தார். ஒன்றரை மணிநேரம் காந்தி குறித்துப் பேசினோம். அதிகம் பேர் கலந்துகொள்ளவில்லை எனினும் நான் எழுத்தாளர், பேச்சாளர் அல்ல. பேச்சாளர்கள் கூட்டத்திலிருந்து தங்கள் ஆற்றலைப் பெற்றுக்கொள்பவர்கள். எழுத்தாளருக்கு அப்படி ஏதுமில்லை. ஒருவர் இருந்தாலும் ஆயிரம்பேர் இருந்தாலும் என் உரைக்கு பாதிப்பு ஏற்படாது. எனது சிறந்த உரைகளுள் ஒன்றாக நான் கருதுவது தென்காசி புத்தகத்திருவிழாவில் ஆயிரம் காலி இருக்கைகளும் பத்துப் பதினைந்து மனிதர்களும் இருந்த சபையில் ஆற்றியதுதான்.
அடுத்தநாள், எழுத்தாளர் விழாவின் இயக்குனர் பூஜா நான்சியுடன் காலையுணவுக்கு அழைப்பு வந்திருந்தது. ‘காயா டோஸ்ட்’ உண்டோம். அவர் எல்லோருடனும் ஓரிரு நிமிடங்கள் பேசியாக வேண்டும். என்னருகே அமர்ந்த இருவருடன் பேசினேன். ஒருவர் இஸ் யுனியாத்தோ (Is Yuniarto). இந்தோனேசிய வரைகதை (காமிக்ஸ்) கலைஞர். The Grand Legend of Ramayana என்ற ஒரு வரைகதைத் தொடரை ஜப்பானிய ‘மாங்கா’ பாணியில் உருவாக்கியுள்ளார். இராமனும் இலட்சுமணனும் கோட்டு சூட்டுடன் இருந்தார்கள். சீதையின் கற்பெல்லாம் அங்கு சிக்கல் இல்லை. அவளிடம் இருக்கும் அபூர்வ ஆற்றலைக் கவர முயல்கிறான் இராவணன். தான் வரைந்திருந்த சில ‘பேனல்’களைக் காட்டினார். படைப்பூக்கம் மிகுந்திருந்தது.
இஸ் யுனியாத்தோ, 'கருடாயன' என்று இன்னொரு வரைகதைத் தொடரும் செய்துள்ளார். கடோத்கஜன்தான் அதில் நாயகன். இந்தோனேசியாவில் கடோத்கஜன் பெரும் ஆளுமை என்றார். குட்டி கருடனை பாண்டவர்களும் கடோத்கஜனும் அசுர சக்திகளிடமிருந்து காப்பதே கதை. அது ஒரு விளையாட்டாகவும் பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஆய்வாளார் அ.கா. பெருமாளின் இராமாயண, மகாபாரதக் கதைகள் சிலவற்றை அவருக்குச் சொன்னேன்.
ஜெஸ்ஸிகா வில்கின்சன் எனும் ஆஸ்திரேலியக் கவிஞரை சந்தித்தேன். அவர் வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளை எழுதுபவர். ஆஸ்திரேலியாவின் ஒரு நடிகை, ஓர் இசைக்கலைஞர், ஓர் ஓவியர் என மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் கவிதையில் எழுதியுள்ளார். நம்மூரில் மரபிலக்கியத்தில் இந்தவகை உண்டு. காந்திக்கு அசலாம்பிகை, அரங்க சீனிவாசன் போன்றோர் அப்படியான காவியங்கள் எழுதியுள்ளனர். சிங்கப்பூரிலும் லீ குவான் இயூவிற்கு அ.கி. வரதராசன் ஒரு பிள்ளைத்தமிழ் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நவீன கவிதையில் கணிதமேதை இராமானுஜம் பற்றி சபரி எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஆனால் முழுநூலாக ஆக்குவதற்கு நாம் யோசித்ததில்லை. கவிஞர் பெருந்தேவியிடம் இதைச் சொன்னபோது புதுமைப்பித்தனும் ஆத்மாநாமும் அப்படி எழுதப்பட வேண்டியவர்கள் என்றார்.
சிங்கையில் கலாச்சார விருதாளர் படைப்புகள் வாசிக்கப்பட்ட அரங்கிற்குச் சென்றோம். சீன எழுத்தாளர் ஒருவரின் கவிதை வாசிக்கப்பட்டது. மலாய் எழுத்தாளர் ஒருவரும் வந்திருந்தார். தமிழ்க் கவிஞர் இக்பால் தன்னுடைய கால்களுக்கு நன்றி சொல்லுதல் பற்றிய கவிதையை வாசித்தபோது சட்டென உணர்ச்சிவசப்பட்டார். இத்தனை நாளாக என்னைச் சுமந்து சென்ற கால்களே, நன்றிக்கடனாக உன்னை என்றேனும் என் நண்பர்கள் தங்கள் தோள்களில் சுமந்துசெல்வார்கள் என்பதாகச் செல்லும் மரணத்தைப்பற்றிய நேரடியான கவிதை. அவர் வயதும், அவர் வாசித்த விதமும் சேர்ந்து அவரது உணர்ச்சி எனக்கும் தொற்றிக்கொண்டது. மலாய், சீனம், தமிழ் என மூன்று தரப்பினருமே ஆங்கிலம் தங்கள் இடத்தை எடுத்துக்கொள்கிறது எனக் கவலை தெரிவித்தார்கள். இது ஓர் உலகளாவிய சிக்கல்தான்.
இந்த விழாவிற்கு டெட் சியாங் (Ted Chiang) வருகிறார் என்பதை அறிந்தேன். அவருடைய Story of Life and Others, Exhalation தொகுப்புகளைப் பெரும் பரவசத்துடன் வாசித்திருக்கிறேன். அறிவியல் புனைவின் முகத்தையே மாற்றியவர் என அவரைச்சொல்வேன். ஆசிய ஆன்மீக மரபு, குறிப்பாக பவுத்தத்தின் ஊடுருவல் அறிவியல் புனைவுகளில் அவர் வழியாகவே நிகழ்ந்தது. சிக்சின் லியு, கென் லியு, சார்லஸ் யூ எனப் பலரும் தொடர்கிறார்கள். எனது அமர்வு மூன்று மணிக்கு. பாதியில் எழுந்து வருவதாக இருந்தால் அதில் பங்கேற்கலாம் என்றார்கள்.
மிகச்சரியாக 2 மணிக்கு உரையைத் தொடங்கினார் டெட் சியாங். ‘காலயந்திரமும் மனிதனின் தன்விருப்பும்’ என்பது தலைப்பு. காலப் பயணத்தில் கடந்தகாலத்தை அறிவியல் ரீதியாக மாற்ற இயலாது என்றாலும் மனிதன் தன் தன்விருப்பைப் பயன்படுத்தி மாற்ற முடியும் என்பது எத்தனை வலுவான கற்பனை! எதற்காகக் கால இயந்திரம் வரும்வரை காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். பல்வேறு உதாரணங்களுடன் 40 நிமிடம் நீண்டது அவ்வுரை. கலந்துரையாடலுக்கு என்னால் இருக்கவியலாத சூழல். டெட் சியாங் அரங்கில் பாதியில் எழுந்து வந்தவன் நான் ஒருவன் மட்டும்தான். டெட் சியாங் அரங்கில்கூட காணொளிப் பதிவு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. பெரும் எழுத்தாளுமைகளின் அமர்வைப் பதிவுசெய்து இணையத்தில் ஏற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.
பட்டுக்கோட்டை பிரபாகருடன் 3 மணிக்கு தீவிர இலக்கியம், பரப்பிலக்கியம் பற்றி விவாதிக்கும் ஒரு அரங்கு. சித்ரா ரமேஷ் நெறியாள்கை செய்தார். எனக்கு இந்த அமர்வில் பங்குகொள்ள முதலில் தயக்கமிருந்தது. பரப்பிலக்கியம் முக்கியமில்லாதது என நான் கருதவில்லை. ஆனால் ஒரு விவாதமாக கசப்பின்றி இது முடியுமா என்ற சந்தேக உணர்வு இருந்தது. ஆகவே இயன்றவரை கவனமாக விவாதிக்க எண்ணினேன். நல்லவேளையாக விவாதம் நன்றாகத்தான் போனது. பரப்பிலக்கியம், தீவிர இலக்கியம் என்று எப்படி வகைப்படுத்துவது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டுமா எனப் பல்வேறு அடிப்படைக் கேள்விகளில் தொடங்கி, தீவிர இலக்கியம் யாருக்காக எழுதப்படுகிறது, எழுத்தாளரின் தேர்வு, வாசகரின் ரசனையும் தேர்வும் என விரிந்து சென்றது.
சிங்கையின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான அருண் மகிழ்நனை அன்றுமாலையில் சந்தித்து சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழலைப்பற்றிப் பேசினோம். தமிழகச் சூழலில் இருந்து சிங்கை வேறுபடும் புள்ளிகள் குறித்து ஒரு சித்திரம் கிடைத்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான நடுவராகச் செயல்பட்டிருந்ததால் சிங்கப்பூர் புத்தக மன்றத்துக்கு ஒரு சம்பிரதாயமற்ற சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வில்லியம், செலின், ஹனீஸ் ஆகியோரை ஒரு கஃபேயில் சந்தித்து உரையாடினேன். புத்தக மன்றத்தின் பணிகள் குறித்து தெரிந்து கொண்டேன். சிங்கையின் பிறமொழி இலக்கியச் சூழல் குறித்த பரிச்சயம் எற்பட்டது. சிங்கையில் இலக்கியம் சார்ந்த ஒவ்வொன்றுக்குமே பணம் கொடுத்து மக்கள் பங்குபெற வேண்டும். தமிழகத்தில் அத்தகைய பண்பாடே இல்லை. ஜெயமோகனின் கட்டண உரைகள் அந்தத் திசையில் ஒரு முன்னோடி முயற்சி.
சிங்கப்பூர்ப் பயணத்தில் மிக முக்கியமான சந்திப்பு என ‘எபிக்ராம்’ பதிப்பக உரிமையாளர் எட்மண்ட் வீயுடனான சந்திப்பை சொல்லலாம். எபிக்ராம் சிங்கப்பூரின் மிக முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம். மொழியாக்கம், வரைகலை நாவல்கள், வரைகதைகள், குழந்தைக் கதைகள் எனப் பல தளங்களில் புத்தகங்களை வெளியிடுகிறது. குறிப்பாக சிங்கப்பூர் இலக்கியத்தை முன்வைத்துச் செயல்படுகிறது. பத்தாயிரம் சிங்கப்பூர் வெள்ளிப் பரிசுக்கு வருடாவருடம் நாவல் போட்டி நடத்துகிறது. இந்தாண்டு எழுபது நாவல்கள் வந்துள்ளதாகச் சொன்னார்! படைப்பாளர் சுதந்திரம், இலக்கியத்தின் சிக்கல் என சுமார் இரண்டுமணி நேரம் அவருடன் உரையாடினேன். அவர் பதிப்பித்த / பரிந்துரைத்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். சிங்கப்பூரின் லட்சுமண ரேகைகள் குறித்துச் சில தெளிவுகளைப் பெற்றேன்.
வெள்ளிக்கிழமை காலையில் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியது முதல் திங்கட்கிழமை மீண்டும் திரும்பியதுவரை உறங்கும் நேரம் தவிர்த்துப் பிற சமயங்களில் எல்லாம் எவருடனோ உரையாடியபடியேதான் இருந்தேன். நம் மரபின் அத்தனை படைப்பாளிகளின் தோள்களின்மீதும் ஏறிநின்றுதான் நான் சிங்கப்பூர் சென்றேன் எனும் தன்னுணர்வு எனக்கு உண்டு. ஆகவே அப்பெரும் தொடர்ச்சியின் ஆகச்சிறந்த அம்சங்களை முன்வைக்க வேண்டிய கடமை எனக்கிருந்தது. மேலும், இங்கிருந்து அளிக்கவேண்டியதை அளித்து அங்கிருந்து பெறவேண்டியதைப் பெற்றுவர வேண்டியதும் என் நோக்கமாக இருந்தது. நிறைய சந்திப்புகள், உரையாடல்கள் வழியாக அந்நோக்கம் ஓரளவு ஈடேறியது என்றே சொல்லவேண்டும்.
December 22, 2022
ஆயிரம் மணிநேர வாசிப்பு - 2023
சில ஆண்டுகளுக்கு முன் முதல்முறை ஓராண்டில் ஆயிரம் மணிநேரம் வாசிக்க வேண்டும் எனும் சவாலை அறிவித்தோம். சிலரே அதை நிறைவு செய்தார்கள் எனினும், தொடக்கத்தில் நிறைய பேர் சேர்ந்தார்கள். வாசிக்கும் முறையில் உள்ள சிக்கல்களையும் எல்லைகளையும் உணர்ந்துகொள்ள உதவியது. சாந்தமூர்த்தி அவர்கள் இன்னமும் அந்த பக்கத்தில் நிமிடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார். 7000, 8000 என சென்று கொண்டிருக்கிறது. புத்தாண்டு பிறக்க உள்ளது. ஆகவே ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலை மீண்டும் தொடங்கலாம் என எண்ணம். நண்பர் மயிலாடுதுறை பிரபுவின் தூண்டுதல் முக்கிய காரணம். அவரது ஆலோசனைகள் சிலவற்றை பரிசீலித்து இந்த ஆண்டில் அவற்றையும் கணக்கில் கொள்ளலாம் என எண்ணினேன். இந்த ஆண்டு சில புதிய / எளிய விதிமுறைகளையும் வசதிகளையும் சேர்த்துள்ளோம்.
விதிமுறைகள்
இந்த ஆண்டு நட்சத்திர குறி அளிக்கலாம் என திட்டம். நாளைக்கு ஒருமணிநேரம் என 365 மணிநேரம் வாசிப்பை நிறைவு செய்பவருக்கு ஒற்றை நட்சத்திரம். 555 மணிநேரத்தை கடப்பவருக்கு 2, 777 மணிநேரத்தை கடப்பவருக்கு 3, 1000 மணிநேரத்தை கடப்பவருக்கு 4, 1111 மணிநேரத்தை கடப்பவருக்கு 5.
இந்த ஆண்டு ஐந்து நட்சத்திரத்தை முதலில் பெறுபவருக்கோ, அல்லது ஐந்து நட்சத்திரங்களை பெறும் அனைவருக்குமோ போட்டி காலம் முடிந்த பிறகு புத்தக பரிசளிக்கலாம் என முடிவு. என் யோசனை 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள். புரவலர்கள் கிட்டுவார்கள் என நம்புகிறேன்.
சவால் ஜனவரி 1, 2023 அன்று தொடங்கி டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. ஜனவரி 10 வரை மட்டுமே புதிய பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நாள்தோறும் குறைந்தது ஒருமணிநேரமாவது வாசிக்க வேண்டும்.
இதற்கென பகிரப்படும் கூகிள் ஷீட்டில், அவரவர் பேருக்கு நேராக நாள்தோறும் நிமிடங்களை பதிவு செய்ய வேண்டும்.
இன்னொரு ஷீட்டில் புத்தக தலைப்புகளை பகிர வேண்டும்.
இம்முறை 365, 555, 777 என நண்பர்கள் அவர்களுக்கு உகந்த இலக்கை நிர்ணயித்துக்கொள்ளலாம். பரவலான பங்கேற்பை உறுதி செய்யத்தான். முன்னரே தெரிவித்துவிட வேண்டும்.
புத்தகம், கிண்டில், கைப்பேசி, மடிக்கணினி என எதிலும் வாசிக்கலாம். புனைவு, அபுனைவு, துறை சார்ந்த நூல்கள், இணைய இதழ்கள், தமிழ் விக்கி என எதையும் வாசிக்கலாம். கவனம் சிதறாமல் வாசிக்க வேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது.
இம்முறை புத்தக பரிந்துரைக்கு என ஒரு ஷீட் போடலாம் என யோசனை. அதில் பிறருக்கு வாசித்த நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க
forgandhitoday@gmail.comother links
1000 மணிநேர வாசிப்பு- அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 4 followers


