லிடியா டேவிஸ் குறுங்கதைகள்

லிடியா டேவிஸ் (Lydia Davis) அமெரிக்க எழுத்தாளர்.‌ ஃபிரெஞ்சிலிருந்து மொழியாக்கங்களும் செய்திருக்கிறார். குறுங்கதைகள் சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது ‘Cant and Wont’ தொகுப்பிலிருந்து எனக்கு பிடித்த சில குறுங்கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். என் நோக்கில் சமகாலத்தில் குறுங்கதைகளை எழுத எண்ணும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளராக லிடியா டேவிஸை கருதுகிறேன். சிறிய சிறுகதைகள், சடுதி கதைகள் (sudden fiction) நுண்கதைகள் (microfiction) மின்னல்வெட்டு கதைகள் (flash fiction) இப்படி பல்வேறு பிரிவுகளாக வடிவம் மற்றும் சொற்களின் எண்ணிக்கை சார்ந்து வகைப்படுத்தப்படுகிறது. தமிழில் ‘குறுங்கதைகள்’ என மொத்தமாக அடையாளப்படுத்துகிறோம். நுண்ணிய அவதானிப்பு, சொற்சிக்கனம், மொழிவளம், அறிவார்ந்த தெறிப்பு, உணர்வுச்சம் என பல இயல்புகள் லிடியாவின் கதைகள் வழி நமக்கு கிடைக்கின்றன. சிங்கப்பூரில் குறுங்கதைகள் அமர்வுக்காக மொழியாக்கம் செய்தவை. அகழ் மின்னிதழில்  வெளியானவை.  




நாய் முடி


நாய் போய்விட்டது. நாங்கள் அவன் இன்மையை உணர்கிறோம். வாயில்மணி ஒலிக்கும்போது யாருமே குரைப்பதில்லை. நாங்கள் வீட்டிற்கு தாமதமாக வரும்போது எங்களுக்காக எவரும் காத்திருக்கவில்லை. நாங்கள் அவனது வெள்ளை முடிகளை எங்கள் வீட்டிலும் எங்கள் ஆடைகளிலும் அங்குமிங்குமாக காண்கிறோம். நாங்கள் அவற்றை எடுக்கிறோம். நாங்கள் அவற்றை தூர வீசியெறிய வேண்டும். ஆனால் எங்களுக்கு அவை மட்டுமே அவனுடைய மிச்சமாக இருக்கிறது.  நாங்கள் தூர வீசியெறிவதில்லை. எங்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கை- எங்களால் மட்டும் போதுமான அளவு அவற்றை சேகரிக்க முடிந்தால், எங்களால் மீண்டும் நாயை உருவாக்கிவிட முடியும். 


ooo


ரயிலின் மாயாஜாலம்


நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள்  நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள்  தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக  அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்.  


ooo


மோசமான நாவல்


எனது பயணத்தில் நான் கொண்டு வந்த இந்த சுவாரசியமற்ற, கடினமான நாவலை வாசிக்க முயன்றபடி இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் பயந்தபடி, நான் பலமுறை அதனிடம் திரும்ப சென்றிருக்கிறேன், ஒவ்வொருமுறையும் கடந்தமுறையை விட எவ்வகையிலும் மேம்படவில்லை என்பதை கண்டடைந்திருக்கிறேன், அது இதற்குள்ளாக எனக்கு ஒரு பழைய நண்பனை போல ஆகிவிட்டது. மோசமான நாவல் எனும் எனது பழைய நண்பன்.  


ooo



குழந்தை


அவள் குழந்தையின் மீது குனிந்து படிந்திருந்தாள். அவளால் அவளை விட்டுச்செல்ல முடியாது. ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி கிடத்திவைக்கப்பட்டிருந்தது. அவள்  குழந்தையை இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள், கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும். உயிருடனிருக்கும்போது,  புகைப்படத்திற்கு  அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும்  இயலாது. அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் “நான் கேமராவை எடுத்து வருகிறேன்” குழந்தையிடம் “அசையாதே” என சொல்வது போல.   


ooo


உறைந்த பட்டாணி உற்பத்தியாளருக்கு ஒரு கடிதம்


அன்புள்ள உறைந்த பட்டாணி உற்பத்தியாளருக்கு, 


உங்களது உறைந்த பட்டாணி பொதியில் சித்தரிக்கப்பட்ட பட்டாணிகள் மிகவும் ஈர்ப்பற்ற  நிறமுடையவை என நாங்கள் எண்ணுவதால் உங்களுக்கு நாங்கள் எழுதுகிறோம். மூன்று அல்லது நான்கு பட்டாணி தோலிகளில், ஒன்று மட்டும் வெடித்து அதிலிருந்து பட்டாணிகள் அருகே உருளும் சித்தரிப்பு கொண்ட 16 அவுன்ஸ் பிளாஸ்டிக் பொதியை பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறோம். பட்டாணிகள் மங்கலான மஞ்சள்- பச்சை நிறமுடையவையாக உள்ளன, புதிய பட்டாணிகளின் நிறம் என்பதைவிட பட்டாணி சூப்பின் நிறம், அதுவும் அவை உங்கள் பட்டாணிகளின் பளீரிடும்  அடர் பச்சை நிறத்திற்கு எவ்வகையிலும் தொடர்பற்றவை, மேலும், சித்தரிக்கப்பட்ட பட்டாணிகள் பொதிக்குள் இருக்கும் பட்டாணிகளைவிட அளவில் மும்மடங்கு பெரியவை, அதனுடைய மங்கல்  நிறத்துடன் இணையும் போது இன்னும் ஈர்ப்பற்றதாக ஆக்குகிறது- அவை முதிர்ந்த நிலையை கடந்ததாக தென்படுகின்றன. மேலும், சித்தரிக்கப்பட்ட பட்டாணிகளின் நிறம் உங்கள் பொதியின் கண்ணைப் பறிக்கும் நியான் பச்சை நிற எழுத்துக்களின் நிறம் மற்றும் பிற அலங்காரங்களின் நிறத்துடன் ஒத்துவராமல் துருத்தி தெரிகிறது. நாங்கள் உங்களது பட்டாணிகளின் சித்தரிப்பை பிற உறைந்த பட்டாணி பொதிகளின் சித்தரிப்புடன் ஒப்பிட்டு பார்த்தோம், இதுவரையில் உங்களுடையவையே மிகவும் ஈர்ப்பற்றதாக உள்ளது. பெரும்பாலான உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள் பொதிக்குள் இருக்கும் உணவை விட அதிக ஈர்ப்புடையதாக பொதியில் உணவை சித்தரிப்பார்கள், ஆகவே அது ஒரு ஏமாற்று தான். நீங்கள் நேர்மாறாக செய்கிறீர்கள்: நீங்கள் பிழையாக உங்கள் பட்டாணிகளை உள்ளே இருப்பதுடன் ஒப்பிட ஈர்ப்பற்றதாக சித்தரிக்கிறீர்கள். எங்களுக்கு உங்கள் பட்டாணிகள் பிடித்திருக்கின்றன, உங்கள் தொழில் முடங்க நாங்கள் விரும்பவில்லை. ஆகவே தயவு செய்து உங்கள் சித்தரிப்பை மறுபரிசீலனை செய்யவும். 


தங்களுக்கு உண்மையுடன். 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2024 06:07
No comments have been added yet.


Suneel Krishnan's Blog

Suneel Krishnan
Suneel Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Suneel Krishnan's blog with rss.