தாகங்கொண்ட மீனொன்று Quotes

Rate this book
Clear rating
தாகங்கொண்ட மீனொன்று தாகங்கொண்ட மீனொன்று by Jalal ad-Din Muhammad ar-Rumi
49 ratings, 4.31 average rating, 5 reviews
தாகங்கொண்ட மீனொன்று Quotes Showing 1-18 of 18
“பகல் முழுக்க
யோசித்திருப்பேன்
அதைப்பற்றி.

இரவில் சொல்லிவிடுகிறேன் அதை.

எங்கிருந்து வந்தேன் நான்?
எதைச் செய்யவேண்டும் நான்?
பிடிபடவில்லை எனக்கு.

ஆனால் நானறிவேன்
எனது ஆன்மா வந்தது வேறெங்கோ இருந்து
அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்.

வேறேதோ மதுபான விடுதியிலிருந்து
பிறந்திருக்கிறது இந்தப் போதை,
நான் அங்கு மீளும்போது
முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்.

இப்போது
இந்த கூட்டில் அமர்ந்திருக்கும் நான்
வேறோர் நிலவுலகின் பறவை.

நான் பறந்து வெளியேறும் நாள்
வெகுதொலைவில் இல்லை.

ஆனால்
எனது குரலுக்கு
எனது காதினுள்
செவிமடுப்பவர் யார்?
எனது உதடுகள் வழி வருவது
எவரது வார்த்தைகள்?
எனது கண்கள் வழியே
பார்ப்பவர் யார்?
அந்த ஆன்மா எது?

கேட்காமலிருக்க முடியவில்லை
என்னால்.

பதிலின் ஏதோ சிறுதுளி
ருசிக்கக் கிடைத்தால் போதும் எனக்கு.
போதையுற்றவர்களின் இந்தச் சிறையை உடைத்துக்
கிளம்பிவிடுவேன்.
நானாக வரவில்லை இங்கு
திரும்பிச் செல்வதற்குமில்லை அப்படியே.
அழைத்து வந்தவரே
என்னைத் திரும்ப இட்டுச் செல்லட்டும்.

இந்த கவிதை.
என்ன சொல்லப்போகிறேன் என்று
ஒருபோதும் எனக்குத் தெரியாது.
திட்டமிட்டதுமில்லை.

அதைச் சொல்வதைத் தவிர்த்ததோர் வெளியில்
சஞ்சரித்திருப்பேன் நான்
மௌனமாக.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“சரி தவறு என்பதற்கு
அப்பாற்பட்டதொரு
வெளி உண்டு.
அங்கு சந்திப்பேன்
உன்னை.

புல்வெளியின் மீது ஆன்மா
கவிந்திருக்கும்போது
எதையும் பேசவியலாதபடி
ததும்புகிறது இப்பிரபஞ்சம்.

மொழி
எண்ணம்
ஏன் 'ஒருவருக்கொருவர்'
எனும் பதம் கூட
பொருளற்றுப் போகிறது
அங்கே.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“உனக்கு எது வேண்டுமென
அறியத் தவறினேன் நான்.
எனது வழித்தடத்தை அடைத்துவிடுகிறாய் நீ.
ஓய்வும் கொடுப்பதில்லை
ஒருபோதும் நீயெனக்கு.
என்னைச் செலுத்தும் கண்ணியை
ஒருவசத்தில் இழுக்கிறாய் நீ.
பிறகோ
மறுவசத்தில்.

எதுவும் நடவாதது போல
நடிக்கவும் தெரிகிறது உனக்கு,
எனது காதலே!
நான் சொல்வது
உனக்குக் கேட்கிறதா?

நான் பிதற்றித்திரியும் இந்த இரவு
முடியவும் கூடுமோ?
உன்னைப்பற்றி
ஏன் எனக்கின்னும்
தயக்கமும் கூச்சமும்?
பல்லாயிரங்களும் நீ.
ஒன்றேயாகி நிற்பதுவும் நீ.

அமைதி பூண்டபோதும்,
மிகத்தீர்க்கமாக வெளிப்படுத்துவதும் நீயே.

வசந்தம் உனது பெயர்
திராட்சைமது உனது பெயர்
மதுவின்
கிறக்கமும் மயக்கமும்
உனது பெயரே!

எனது மறைதிரையும் நீ.
கண்ணின் ஒளிச்சுடரும் நீ.

எங்கெங்கு காணினும்
உனது பிம்பமே!
இருப்பினும்
உன்னிடம் வந்தடையவே
ஏங்கித் தவிக்கிறேன் நான்.

எங்கு சிங்கத்தின் மீது
மான் பாய்கிறதோ,
எங்கு நான் தேடிக்கொண்டிருக்கும் ஒன்று
என்னைத் தேடுகிறதோ,
அங்கு வரக்கூடுமோ என்னால்?

முழங்கியபடியே இருக்கின்றன,
இந்த முரசும்
இந்த வார்த்தைகளும்!

தங்களது கவசங்களை
உடைத்துக்கொண்டு அவை
சிதறட்டும்
மௌனத்தினுள்.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“என்னை
மிகவும் வசமிழக்கச்
செய்துவிட்டாய்
நீ.

உனது அருகின்மை
எனது காதலை
பொங்கிப் பெருகச் செய்கிறது.
எப்படியென்று கேட்காதே.

பிறகு நீ
எனதருகே வருகிறாய்.
'வேண்டாமே...'
என்கிறேன் நான்.
அதற்கு நீயோ
'வேண்டாமா...'
என வினவுகிறாய்.

ஏனோ இது
என்னைக் களிப்படையச் செய்கிறது.
ஏனென்று கேட்காதே.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“இன்றும்
ஏனைய நாட்களைப்போலவே
வெறுமையோடும் பயத்தோடும்
கண்விழிக்கின்றோம்.

படிப்பறைக் கதவை திறந்து
வாசிக்கத் துவங்கவேண்டாம்.
இசைக்கருவி ஒன்றை
மீட்டத் துவங்கு.

நாம் விரும்பும் அழகு
நாம் செய்யப் போவதிலிருக்கட்டும்.
மண்டியிட்டுத் தரையை முத்தமிட
பலநூறு வழிகள் உண்டு.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“உன்னோடு நான்
இருக்கும்போது
கண்விழித்த வண்ணம்
கழிகிறது இரவு.

நீ
இங்கில்லை எனும்போதோ
துயிலுற இயலவில்லை
ஒருபோதும் என்னால்.

இவ்விரு துயிலொழிவுகளுக்காகவும்
அவற்றின் வேற்றுமைக்காகவும்
நாம் போற்றுவோம்
கடவுளை!”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“உனக்கென ரகசியங்களை
பொதித்து வைத்திருக்கிறது
காலைத் தென்றல்.
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்.

எதை உண்மையாக நீ விரும்புகிறாயோ
அதை கேட்டுப் பெற்றுவிடு
எப்படியும்.
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்.

அவ்வுலகும்
இவ்வுலகும்
தொட்டு உறவாடும்
வாயிலின் வழியாக
மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்.
வட்டவடிவான அவ்வாயிலோ
திறந்து கிடக்கிறது இப்போது.
துயிலச் சென்றுவிடாதே
மீண்டும்.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“சலிக்கவில்லை நீ எனக்கு.
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப்போகாதே.

நீர்க்குடுவை
நீர்க்கலயம்
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால்.

தாகங்கொண்ட மீனொன்று
என்னுள் இருக்கிறது.
ஒருபோதும் கூடவில்லை அதற்கு
முழுத்தாகமும் தணிக்க.

கடலுக்கு வழி எது?
காட்டுங்கள் அதை எனக்கு!
உடைத்தெறியுங்கள்,
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை.

மனமுயகத்தையும்
பெருந்துக்கத்தையும்கூட.

நெஞ்சின் மையத்தில்
யாருமறியா முற்றத்திலிருந்து
நேற்றிரவு எழும்பிய அலையில்
மூழ்கடிக்கப்படட்டும்
எனது வீடு.

ஒரு நிலவினைப்போல
எனது கிணற்றினுள் விழுந்தார் ஜோசப்.
அடித்துச் செல்லப்பட்டது
நான் காத்திருந்த விளைச்சல்.
ஆயினும்
அதுவொரு பொருட்டல்ல.

எனது கல்லறையின் மீது
மூண்டுள்ளது நெருப்பு.
படிப்பு
கௌரவம்
அல்லது மரியாதை
இவையேதும் வேண்டாம் எனக்கு.

இந்த இசை
இந்தப் புலரி
உன் கன்னக்கதுப்பு
எனக்களிக்கும் வெதுவெதுப்பு
இவைபோதும் எனக்கு.

துக்கித்திருப்போர்
பெரும் சேனைகளாகக் குழுமுவார்கள்.
நான் செல்லப்போவதில்லை
அவர்களோடு.

கவிதையை முடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
இப்படித்தான் ஆகிறது,
மாபெரும் மௌனம்
என்மீது கவிகிறது.
வார்த்தைகளைப் பயன்படுத்த
ஏன் எண்ணினேன் என்ற
தவிப்பே எஞ்சுகிறது.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“உனது ஒளியில்
கற்றுக்கொள்கிறேன்
எப்படிக் காதலிப்பதென.

உனது அழகில்
எப்படிக் கவிதை செய்வது
என்பதையும்.

எனது நெஞ்சினுள்
நடனமிடுகிறாய் நீ.
அங்கே காண்பதற்கில்லை
எவரும் உன்னை.
ஆயினும்
காண்கிறேன் நான் அவ்வப்போது.
அந்தத் தரிசனமே
இந்தக் கலையாகிறது.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“நேற்றிரவு அக்கூட்டத்தில்
உன்னைக் கண்டேன்.
ஆரத்தழுவ இயலவில்லை
வெளிப்படையாக என்னால்.

ஆனாலும்,
உனது கன்னத்தின் அருகே
உதடுகளைப் பொருத்தினேன்.
எதையோ ரகசியமாய்ச்
சொல்பவனைப் போல.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“காதலின் வழி
நுட்பமான விவாதமல்ல.
பிரளயமே
அங்கு செல்வதற்கான
வாயில்.

தங்களது சுதந்திரத்தைப்
பெருவானில் வட்டமிட்டு
களிப்பெய்துகின்றன
பறவைகள்.
அவை எப்படிப்
பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன.
அவ்வீழ்தலில்
வழங்கப்படுகின்றன
சிறகுகள்.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“திரும்பத்திரும்ப
கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால்
தெளிவுறப் போவதில்லை
அப்புதிரின் சூட்சுமம்,
வியப்பூட்டும் பிரதேசங்களுக்கு
பயணிப்பதாலும்கூட.

உனது குழப்பம்
விலகப் போவதில்லை
எப்போதும்,
ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கேனும்
உனது கண்களையும்
தேடலையும்
சலனமற்றுக் காத்திருக்கச்
செய்தாலன்றி.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“இந்த மனித இருப்பு
ஒரு விருந்தினர் இல்லம்.
ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு.

ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு -
எதிர்பாராத விருந்தாளியாக
அவ்வப்போது வந்துசெல்லும்.

எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு!
துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து
உனது வீட்டைத் துப்புரவாக
வெறுமைப்படுத்தும் போதும்,
ஒவ்வொரு விருந்தினரையும்
கௌரவமாக நடத்து.
புதியதோர் உவகைக்காக
அவை உன்னை
தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும்.

வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவற்றை வாயிலுக்கே சென்று
இன்முகத்துடன்
வரவேற்பாயாக.

வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து.
ஏனெனில் ஒவ்வொருவரும்
ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள்
தொலைதூரத்திற்கு
அப்பாலிருந்து.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“தோல்
குருதி
எலும்பு
மூளை
ஆன்மா
என எனக்குள்
வியாபித்துள்ளாய் நீ.

நம்புவதற்கோ மறுப்பதற்கோ
இடமேதும் இல்லை.

அந்த இருத்தல் அன்றி,
இந்த இருப்பு
வெறுமையே.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“நீயொரு
உண்மையான மனிதனெனில்
எல்லாவற்றையும் பணயம் வை
காதலுக்காக.

இயலவில்லை எனில்
சென்றுவிடு இங்கிருந்து.

அரைகுறை மனதிற்கு
அகண்டவெளி அகப்படாது.
பேரருளை நோக்கி
பயணிக்கத் தீர்மானித்த நீ,
சிறுமைபடர்ந்த விடுதிகளில்
நெடுங்காலம்
இளைப்பாறிவிடுவது ஏன்?”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“உனது ஆன்மாவிலிருந்து
எனது ஆன்மா
எதையோ செவிமடுத்த
அந்தப் புலரி
என் நினைவில் படர்கிறது.

உனது ஊற்றிலிருந்து
பருகினேன்,
ஒரு பேரலை
ஆட்கொண்டது என்னை.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“முதல் காதல் கதையை
நான் கேட்டவுடன்
உன்னைத் தேடத்
துவங்கினேன்,
எவ்வளவு கண்மூடித்தனமானது அது
என்பது தெரியாமலேயே.

காதலர்கள்
இறுதியில் எங்கேனும்
சந்தித்துக்கொள்வதில்லை.
அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக
இருந்து வருகிறார்கள்
காலங்காலமாக.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
“கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்து கொண்டே இரு

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒரு போதும்.”
Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று