Jeyamohan's Blog, page 853

January 2, 2022

விஷ்ணுபுரம் விழா- மோகன் நடராஜ்

அன்புள்ள ஜெயமோகன்,

2019 ஏப்ரலில் கோவையில் நடந்த உங்கள் கட்டண உரைக்கு அது தொடங்கும் நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னாடி வந்தேன். அரங்கம் நிறைந்துவிட்டது, கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது, அன்றே முடிவு செய்துவிட்டேன் அடுத்த நிகழ்வுக்கு மிக சீக்கிரமே சென்றுவிடவேண்டும்.

இந்த வருட விஷ்ணுபுரம் விழா நான் கலந்துகொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விருது விழா. 8.30 மணிக்கே ராஜஸ்தான் சங் அரங்கத்துக்கு வந்துவிட்டேன். சிலர் வெளியே நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.இந்த அரங்கில் எனக்கு தெரிந்த ஒரே நபர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன். முதலில் அவர் கண்ணுக்கு தென்படவில்லை, சிறுதுநேரம் கழித்து பார்த்துவிட்டேன், நான் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. முகக்கவசத்தை கழட்டிய பின் அவருடைய பளிச் புன்னகையால் வரவேற்றார். விழா பொறுப்பில் ஓடிக்கொண்டிருந்தார்.

கீழே இருந்த தன்னறம் நூல் அரங்கில் வாங்க வேண்டிய நூல்களை முடிவு செய்தேன்.இரண்டாம் தளத்திலிருந்த நூல் அரங்கையும் பார்த்துவிட்டு 8.50க்கு விழா அரங்குக்குள்ளே வந்தேன். அரங்கின் முன் வரிசையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருந்தார். அரங்கின் ஆட்கள் நாற்காலிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே போகும் திசையில் வலதுபுறம் ஐந்தாவது வரிசையில் முதல் நாற்காலியில் அமர்ந்தேன். உரையாடல் மேடை தெளிவாய் தெரிந்தது. உங்கள் தளத்தை பார்த்தேன். விழா 9.30க்கு தொடங்குமென எழுதியிருந்தீர்கள். இன்னும் நேரமிருக்கிறது, அரங்கை வேடிக்கை பார்த்தேன்.

உரையாடல் மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையை கவனித்தேன்.விஷ்ணுபுரம் லோகோ என்ன சொல்ல வருகிறதென யோசித்தேன். அறிவு விருட்சமாக வளர்கிறது, அது பிரகாசமாகவும் வெளிப்படுகிறது. இந்த சூரிய வெளிச்சம் காலை வெயிலா இல்ல மாலை வெயிலா மட்டும் தெரியவில்லை. சாய்வாக  இருந்த விஷ்ணுபுரம் விருது விழா 2021 வாக்கியத்தில்  எழுத்து அழகாக இருந்தது. ழவை காற்றில் எழுதிப் பார்த்தேன். சாய்ந்த, வளைவுகள் கொண்ட ழ பெண்மை கொண்ட எழுத்தாக தெரிந்தது. பின் நாற்காலிகளை வரிசைப்படுத்தும் ஆட்களை கவனிக்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கொருவர் சச்சரவிட்டு வேலை செய்தனர்.

நாற்கலிகளுக்கிடையே எவ்வளவு இடைவெளி விடவேண்டுமென்பதில் இருவருக்கிடையே வாக்குவாதம் வந்தது, ஆனால் சண்டை போடவில்லை. இடது பக்கம் எத்தனை நாற்காலிகள் என்பதை ஒருவர் எண்ணினார். 14 வரிசைகள் ஒரு வரிசைக்கு 6 நாற்காலிகள். அவர்களோடு நின்ற விஜய் சூரியன் 84னு மனக்கணக்கில் சொல்லிவிட்டு போய்விட்டார். அவர்களை மேற்பார்வை பார்த்தவர் கவனம்  வேறு பக்கம் திரும்பி விட்டது. நாற்காலி போட்டவர் திரும்பவும் எண்ணினார். அவர் 14 வரிசைகள், ஒரு வரிசைக்கு 6 நாற்காலிகள் என்று சொன்னார். மனக்கணக்கில் பெருக்க நினைத்து முடியாதென உணர்ந்து, ஒரு நொடி கைபேசியை திறந்து கால்குலேட்டரை உபயோகிக்க நினைத்து அது இழுக்கென உணர்ந்து அவரே நாற்காலிகளை எண்ணினார்.

ஆனால் அவர் வலது பக்க நாற்காலிகளை எண்ணினார். நான் உணர்ந்தது அவர்களுக்குள் திட்டமிடல் இல்லை. ஒரு பத்துநிமிடம் யோசித்தால் எளிதாய் முடிக்கக்கூடிய பணி. ஏன் இப்படி சிக்கல் படுத்திக்கொள்கிறார்கள்? அந்த சிக்கல் அவர்களுக்கு அர்த்தத்தை வழங்குவதாய் உணர்கிறேன். அவர்கள் தினமும் செய்யும் பணி. செய்பவரை முக்கியமாக உணரவைக்காத பணி. சின்ன விவாதம், சச்சரவு, சிக்கல் எல்லாம் அந்த பணியை அவர்களுக்கு அர்த்தப்படுத்துவதாய் தெரிகிறது. கடைசியில் நாற்காலிகள் ஒழுங்கான வரிசையில் அமர்ந்திருந்தது.

அரங்கின் சுவற்றில் பல புகைப்படங்கள். எல்லாம் பாலைவன முகங்கள். வேறு மொழிபேசும் , வேறு கலாச்சாரம் கொண்ட நீண்ட தொலைவிலிருந்து இங்கு வந்து, வென்ற பாலைவன மக்கள் கட்டிய அரங்கில் தமிழுக்கு மரியாதை செய்யப்படுகிறது. வீரபத்ருடு தெலுங்குகில் பேசும்போது, ஹிந்தி மக்களின் இடத்தில், தமிழ் மக்கள் நடத்த, தெலுகு மக்கள் பேசுகிறார்கள். அடுத்த பத்து வருடத்தில் இலக்கியம் பேசும் அனைத்து இந்திய மொழிகளும் கலந்துகொள்ளும் விழாவாக இது வளர்ந்தால் அன்றைய காஞ்சிபுரம் போல் இன்றைய கோவை வளரும்.வரலாற்றை மீண்டும் உருவாக்கிய பெருமை விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேரும்.

 

10 மணிக்கு அமர்வுகள் தொடங்கின.

அமர்வு 1 – கோகுல் பிரசாத்

தொடக்கத்தில் அவர் கொஞ்சம் பதட்டமாக இருப்பதாய் உணர்ந்தேன். கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்ல அவருக்கு பிடி கிடைத்துவிட்டது. அவர் சொன்னது எழுத்தாளர்கள் எழுதுவது அவர்களுக்காக மட்டுமல்ல, வாசகர்களுக்காகவும் தான். தனக்காக மட்டும் எழுதுவதாய் ஒருவர் சொல்வது வெறும் அகந்தையென்று சொன்னார். கொஞ்சம் உண்மைதான். தனக்காகத்தான் எழுதுகிறார்கள், ஆனால் தன்னுள் மட்டும் வெளிப்பட முடியாது.வெளிப்பட வாசகர் வேண்டும்.வெளிப்படும் ஆழ்மனம் மற்ற ஆழ்மனத்துடன் சேர்ந்தால்தான் மகிழ்ச்சி. சினிமா விமர்சன முறைகளாக அவர் சொன்ன சினிமா சொல்லும் அழகியல், அதன் சிந்தனை, அது தரும் தரிசனம் எனக்கு உதவுமென்று நினைக்கிறேன். விமர்சனம் படைப்பை உயர்த்தவேண்டுமென்று சொன்னார்.அதுவும் எனக்கு சரியெனப்படுகிறது. ஆணவமில்லாத, தன்னை அறிவாளியென காட்டாத திட்டல் கூட படைப்பை உயர்த்தும்.

அமர்வு  2 – எம் . கோபாலகிருஷ்ணன்

தெளிவான, அமைதியான, கச்சிதமான பேச்சு. இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசியிருக்கலாம். அவர் சொன்ன திருப்பூரின் தற்போதைய கலாச்சார மாற்றம் எனக்கு முக்கியமானது. நான் கவனிக்க இங்கே நிறைய இருக்கிறதென உணர்த்தியது.புனைவில் தானெழுதிய சம்பவங்கள் நிகழ்ந்த அலுவலக பெண்மணியிடம் பட்ட கஷ்டத்தை சுவைபடச் சொன்னார். அலுவலக விஷங்களை புனைவாய் மாற்றுவதில் கொஞ்சம் தள்ளியே இருப்பதாக சொன்னார்.சூத்திரதாரி என்ற புனைப்பெயரை விலக்கி விட்டதாய் சொன்னார். அடுத்த கேள்வியில் ராஜகோபாலன் எழுந்து சூத்திரதாரி அல்லாத எம். கோபாலகிருஷ்ணனிடம் ஒரு கேள்வியென ஆரம்பித்தார்.இந்த மாதிரி கேள்விகளால் அவ்வப்போது சிரித்துக் கொண்டேயிருந்தோம்.

அமர்வு  3 – காளி பிரசாத்

உண்மை சம்பவ சிறுகதையின் உண்மை சம்பவத்தை விவரித்தார்.பயத்தோடு நண்பரின் ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். மனிதம் மேல் நம்பிக்கைக்கொள்ளும் தருணங்களில் ஒன்று. விமர்சனங்கள் மூலம் தான் பெற்றதை வெளிப்படையாய் சொன்னார். மனதிற்குள் முடிவு செய்த ஐந்து பக்களவு அளவுகோல் கதை முழுதைவெளிப்பட தடையாய் அமைந்ததாய் சொன்னார்.சில இடங்களில் அதிகப்படியான விவரணைகள் கொடுத்ததை குறைத்திருக்கலாமென்று சொன்னார்.இரண்டும் புதியதாய் எழுதுபவர்களுக்கு உதவும். இவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வி தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு மூலம் அடைந்தது என்ன? அதை அவரே சொல்லிவிட்டார்.புத்தரின் மேலிருந்த போலியான குற்றச்சாட்டுகள் விலகி புத்தர் பத்துவருடம் காத்திருந்து மனைவிடம் அனுமதிவாங்கிக் கொண்டு துறவறம் சொல்கிறார். அவரின் நிதானத்தை புரிந்துகொண்டதாய் சொன்னார்.

அமர்வு  4 – சுஷீல்குமார்

முழுதாக நினைவை மீட்டெடுக்க முடியவில்லை. அவர் பேசியதில் தொன்மம், அவர் வீட்டுக்கு வெளிய இருக்கும் தெய்வங்கள், சுசீந்திரம் கோவில், வட்டார வழக்கு, சென்னை வட்டார வழக்கு இப்படி சின்ன சின்ன புள்ளிகளாக மட்டும் நினைவில் உள்ளது. அப்படியே பதிவுசெய்கிறேன். வேறு யாராவது கடிதம் எழுதினால் ஞாபகம் வரலாம்.

அமர்வு  5 – செந்தில் ஜெகநாதன்

தயக்கத்தோடு அமர்வில் வந்தமர்ந்தார். போகப்போக கான்பிடென்ஸ் கிடைத்துவிட்டது. தன் எழுத்து உள்ளுணர்விலிருந்து வெளிப்படுவதாகவும் அதை மட்டுப்படுத்த மட்டும் அறிவை உபயோகிப்பதகாவும் சொன்னார்.

அமர்வு  6 – ஜா . தீபா

script, screenplay பற்றி இவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் எனக்கு புதிது. தாமிரபரணி ஆற்றைப்பற்றிய ஆவணப்படத்தைப்பற்றி பகிர்ந்துகொண்டார். படம் விரைவில் வெளிவருமென்று சொன்னார். தான் எழுதுவது பெண்ணெழுத்து என்றும், வேறு அனுபவங்கள் இல்லாததால் பெண்ணின் வலிகளை மட்டும் எழுதுவதாய் சொன்னார். சினிமாவில் பாத்திரம் துலக்கும் அக்காவின் கஷ்டங்களை எழுத்தில் வெளிக்கொணர வேண்டுமென்று சொன்னார். அவரின் பார்வையிலும் சினிமா உலகம் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். பெண் எழுத்தைமட்டும் எழுதும் பெண் எழுத்தாளர்கள் யாருக்கு எழுதுகிறார்கள்? சிலசமயம் தோன்றுவதுண்டு இந்த புறஉலகில் பெண்கள் தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட ஒரு விர்ச்சுவல் உலகமுண்டு.பெண் எழுத்தைமட்டும் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அந்த விர்ச்சுவல் உலகத்துக்கு மட்டும் எழுதுகிறார்களா?

அமர்வு  7 – திருச்செந்தாழை

தன்னுடைய உரைநடை கவித்துவமாய் இருப்பதற்கு உரைநடையின் உச்சத்தில் தன்னிச்சையாய் ஒரு ரிதம் வந்துவிடுவதாக சொன்னார். இனிமேல் சோதித்துப் பார்க்கவேண்டும். ஆண் பெண் உறவு ஒரு Businessயென சொன்னார். Business போரைவிட கொடிய போரென சொன்னார். அதனாலதான் போரும், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களும் இலக்கியத்தில் குன்றாத பேசு பொருளாக உள்ளதோ?  என் குறிப்பில் ஆசிரியர் என்பவர் ஆற்றல் என்று குறித்துவைத்துள்ளேன்.இவர் தேவதச்சனை பற்றி பேசும்பொழுது இவரிடம் புது ஆற்றல் வெளிப்பட்டதை உணர்ந்ததால் இருக்குமென நினைக்கிறேன்.

அமர்வு  8 – சோ . தர்மன்

அமர்வு தொடங்கும் போது இரவு எட்டு மணி. வழக்கமான அலுவல்முடிந்த சோம்பல் இல்லையென்றாலும் ஒரு சோம்பல் இருந்தது.இவருக்கு ஏன் எட்டு மணிக்கு கொடுத்தார்களென நினைத்தேன். சில நொடிகளில் காரணம் புரிந்துவிட்டது. அமர்வில் அவரே பேச்சாளர், மட்டுறுத்துனர். முதல் கேள்விக்கு பதில் சொல்லி முடித்து ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் முகத்தைப் பார்க்கிறார்.நவீனோடு சேர்ந்து அனைவரும் சிரித்துவிட்டனர். உற்சாகமான ஒருமணிநேரம்.அவர் பேச்சில் இனிமையும், உண்மையும் ஒருங்கே வெளிப்பட்டது. கண்மாய்களைப் பற்றி, பகுத்தறிவிப்பற்றி, பறவைகள் பற்றி, தன் தினசரி வாழ்க்கைமுறை பற்றி, கூத்துக்கலைஞர்கள் பற்றி, சிறை அனுபவம்பற்றி,தனிமையில் மனிதனுக்கு எலியும் நண்பனாவதைப்பற்றி, கண்மாயை குத்தகை எடுத்தவர்கள் பறவையை, மாட்டை துரத்துவதை பற்றி தன் கவலையையும் நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.எதிரியே வீட்டுக்கு வந்தால் உபசரிக்கக் கூறும் தமிழ் மரபில் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு விருந்தினராய் வந்த பறவையை துரத்தும் நம் அறவீழ்ச்சி என்று இவர் அமர்வு கேள்வி கேட்கிறது? தன் நூலை Ph.D செய்யும் மாணவி தன்னை தொடர்புகொள்ள முடியாததால் இறந்துவிட்டது சொல்லி Ph.Dஐ முடித்துவிட்டதாய் சொல்கிறார். வல்லமையுள்ள வாசகன் எப்படியும் தேடிவருவானென சொல்கிறார். அவன் மட்டும் தனக்கு போதுமென நினைக்கிறார்.

அமர்வு  9 – வடரேவு சின்ன வீரபத்ருடு

நான் கொஞ்சம் குறிப்பெடுத்தது இவர் அமர்வில். ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசியதால் நிறைய நேரம் கிடைத்தது. தத்துவம் என்பது தொடர்ந்து கேள்வி கேட்பது, அது பதில் தர தொடங்கும்போது முடிவடைகிறது. பதில் தருவது அறிவியலின் வேலை, கேள்வி கேட்பது தத்துவத்தின் வேலை என்று சொன்னார். யார் கவிஞர் என்ற கேள்விக்கு வெளிப்புற சம்பவங்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றத்தின்  தருணங்களை கடவுள் மட்டுமே அறிய முடியும். அதை தன்னுள் நோக்கி அறிபவனே கவிஞன். கவிதை என்பது லயத்தையும், கருத்தையும் ஒருங்கே கொண்டிருக்க வேண்டுமென்ற இடத்திற்கு இப்பொழுது வந்திருப்பதாய் சொன்னார். தெலுகு கவிதையில் இருந்த கண்ணுக்குத் தெரியாத சுவர் பற்றி சொன்னார். அதாவது அகக் கவிதைகளை மட்டும் எழுதும் ஒரு பிரிவு, புறக் கவிதைகளை மட்டும் எழுதும் இன்னொரு பிரிவு. இரு பிரிவுகளும் தனித்தனி. தன்னுள் இரண்டும் உணர்வுகளும் இருக்கும்போது அதை கவிதையில்  வெளிப்படுத்த தயக்கம் கொண்டார். சீனக் கவிதைகள் மூலமும் பின் தமிழின் சங்க கவிதைகள் முதல் ஆழ்வார், நாயன்மார் கவிதைகள் வழியே ஒரு கவிஞன் இரண்டையும் எழுதலாமென்ற உறுதியைப்  பெற்றார். அவர் தமிழ் கவிதைகளுக்கு 2000 வருடம் தொடர்ச்சி உள்ளதென சொல்லும்போது முறுக்கிய புஜத்தில் வெம்மை பாய்ந்தது. இவரின் அமர்வு ஒரு பாடம் போல் நடத்தப்பட்டது.தெலுகு கவிதையின் கூறுகளை அறிய அமர்வின் உள்ளடக்கத்தை எழுதிவைத்து திரும்பவும் படிக்க வேண்டும்.

அமர்வு  10 – வசந்த் சாய்

தனக்கு இலக்கியமும் சினிமாவும் எப்படி பொருள்படுகிறதென விளக்கினார்.இலக்கிய வாசிப்பு தான் விரும்பி செய்யும் ஒரு செயல். வாசித்ததில் பிடித்ததை தன் சினிமாவில் கொண்டுவர முயல்கிறேன்னு சொன்னார்.உற்சாகமான அமர்வு.

அமர்வு  11 –   விக்ரமாதித்தன்

அவரின் அமர்வில் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதிலில்லை. பதிலின் பின்புலத்திலிருந்து தொடங்கி மெதுவாய் கேள்விக்கான பதிலை நோக்கி வருகிறார். நாம் காத்திருந்தால் நீண்ட பதில் கிடைக்கிறது.

அமர்வு  12 – ஜெயராம் ரமேஷ்

இவரின் ஆங்கில உச்சரிப்பும், அமர்வில் தன்னை ப்ரெசென்ட் செய்த விதமும் பிடித்திருந்தது. ஆசியா ஜோதி நூலின் முக்கியத்துவத்தை அது வந்த காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும், காந்தி முதல் விவேகானந்தர் வரை அந்நூல் பாதித்த விதம் பற்றியும் விரிவாய் சொல்லி புரியவைத்தார். இவரின் சூழியல் பற்றிய பேச்சு நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.

ஆவணப்படம்

சிலநொடிகளுக்குள் நாம் படத்துக்குள் சென்றுவிடுகிறோம்.தமிழ் கவிஞனின் நெஞ்சுரம் – unimaginable,இவர் தமிழுக்கு நல்ல கவி இரண்டும் படத்தின் மைய வசனங்கள்.படத்தின் சில வசனங்கள் அரங்கில் புரியவில்லை. பின் யூடூபில் பார்த்து தெரிந்துகொண்டேன்.படம் பார்த்த அத்தனை பேரும் நெகிழ்ந்துவிட்டார்கள்.

பகவதி அம்மாள்

ஆவணப்படத்தில் இவரிடம்  விக்ரமாதித்தன்  அன்பானவராவென கேட்பார்கள்? இவரின் பதில் : முகத்தை திருப்பிக்கொண்டு தெரியலையே, குழந்தைகளுக்கு நல்ல அப்பா, தமிழுக்கு நல்ல கவிஞர். நாம் அடையும் பதில் : எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்,குழந்தைகளுக்கு நல்ல அப்பா, தமிழுக்கு நல்ல கவிஞர். அவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்யும்போது பலமாய் கைதட்டினேன். அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

விக்ரமாதித்தன்

இடைவேளையில் வெளியேயிருந்த பேனருக்கு அருகில் இவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவரை அருகில் பார்த்தேன். வண்ணதாசன் சொன்னபடி மூக்கு, முழியை தாண்டிய ஒளி அவரிடம் உள்ளது. தோலில் தெரியும் ஒரு தேஜஸ்.குருத்தாகும் மூத்தவர்.

நாஞ்சில் நாடன்

2018 ஊட்டி காவிய முகாம் முதல் இவர் பேசும்போது அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். தாத்தா தன் பேரனிடம் பேசும் கனிவு இவரிடம் வெளிப்படுகிறது. கனிவும், இனிமையும் கலந்த பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம். விருது விழா தொடங்குவதற்கு முன்னாடி அரங்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு பின்னாடி இடதுபக்கம் உட்கார்ந்து கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன். பாம்புகளைப் பற்றி சொன்னார்.4% பாம்புகள்தான் விஷமுள்ளது. நாம் பாம்பை கண்ணால் கண்டாலே அடித்துக் கொன்றுவிடுகிறோம்னு கவலைப்பட்டார். விஷமேயில்லாத பாம்பை ஏன்கொல்லவேண்டும்? அதுவும் பாம்பு நேராய் கொத்தினால் விஷமேறாது, கொஞ்சம் சாய்வாக கொத்தினால்தான் விஷமேறும் விஷயங்கள் ஆர்வமான தகவல்கள்.கேட்கக் கேட்க பாம்பை பற்றிய பயம் குறைந்துகொண்டே வந்தது.இன்னும் கொஞ்சம் நேரம் பாம்பைப் பற்றி இவரிடம் கேட்டால் பாம்பை கையில் பிடித்து விளையாடிவிடுவேன்.கல்வி பற்றியும், குழந்தைகளுக்கு போதிப்பதில் பெற்றோரின் பங்கு பற்றியும், இன்றைய தலைமுறைக்கு மீன் வாங்குவது போன்ற விசயத்தில் உள்ள அறியாமை பற்றியும் சொன்னார். அடுத்து மீனைப் பற்றி நிறைய படிக்க வேண்டும், பார்த்தவுடனே அதன் குணங்கள் பற்றி சொல்லும் அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். கிராமத்தில் பிறந்ததால் அடைந்த அனுகூலங்கள் பற்றியும் நகர வாழ்மக்கள் இழக்கும் அறிவுகள் பற்றியும் சொன்னார். தகவல் பொதிந்த, மேலும் தெரிந்துகொள்ள தூண்டும், ஆர்வமான உரையாடல்.

ஆணவம்

சோ.தர்மன் தமிழக கூத்துக்கலைகள் நலிவடைந்ததைப்பற்றி தன் அமர்வில் சொன்னார். அதிலிருந்து புரிந்துகொண்டது கலைஞர்களுக்கு ஆணவம்/நிமிர்வு எந்த அளவு முக்கியம். கலைஞன் தன் நிமிர்வைவிட்டு விலகும்போது கலையின் மதிப்பு வீழ்கிறது. அது கலைஞனையும் வீழ்த்துகிறது.தன் கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிமிர்வு குறையாமல் வாழும் படைப்பாளிகள் கலையை நிலைநிறுத்துகிறார்கள்.

பணிவு

விக்ரமாதித்தன் அமர்வில் அவரிடம் பணிந்துவிட்டு பொன்னாடை போர்த்தினீர்கள். அது ஏனென்று யோசித்துக்கொண்டிருந்தேன்? அவரின் ஆவண படத்தையும் உங்களின் மதிப்புரையையும் கேட்ட பின் விடை கிடைத்தது. ஆவணப் படத்தில் மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு தமிழ் கவிஞனின் நெஞ்சுரத்தை பற்றி பேசுகிறார். Unimaginable என்று சொல்லி வழக்கம்போல் சிரிக்கிறார். நீங்கள் அவரை சங்ககாலம் முதல் இன்றுவரை உள்ள தொடர்ச்சியில் வைக்கிறீர்கள்.இவர் அந்த நெச்சுரமில்லாமல் வேறு திசையில் போயிருந்தால் தமிழன்னையை சுமக்கும் பல்லக்கு கொஞ்சம் சரிந்திருக்கும். தன் கால் புண்ணானாலும் பல்லக்கை சுமக்கிறார். அந்த காலுக்கு மருந்து தடவ பணிந்தீர்கள்.

உணவு  

நான் வெளியில்தங்கியிருந்தேன். அதனால் காலையுணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவேன். காலையுணவைப்பற்றி தெரியவில்லை. இரண்டு நாட்களும்
மதிய உணவு சிறப்பு. சனிக்கிழமை  மதிய  உணவில் இருந்த அல்வா தரம். இதன் ருசி 2019 ஏப்ரலில் கோவையில் நடந்த உங்கள் கட்டண உரையில் சாப்பிட்ட அல்வாவின் ருசிக்கு ரொம்பப் பக்கம்.அது நான் சாப்பிட்ட சிறந்த அல்வாக்களில் ஒன்று. இரண்டு நாளும் இரவுணவும் சிறப்பு. தேனீர் மட்டும் இரண்டுதரம் குடிக்க விரும்புமளவுக்கு இன்னும் கொஞ்சம் சுவையாயிருந்திருக்கலாம்.

நான் பெற்றது

இது நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. ஜா.தீபாவின் சிறுகதைகள் மற்றும் காளி பிரசாத்தின் தம்மம் தந்தவன் மட்டும் வாசித்திருந்தேன். இரண்டு நாள் நிகழ்வில் நான் என்ன பெற்றேன், என் அகம் என்ன பெற்றது? அகம் பெற்றது முழுவதும் இப்பொழுது தெரியவில்லை. விழா முடிந்தபின் நான் உணர்ந்தது எனக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே இருக்கும் திரை விலகியது. உதாரணமாக 2018 ஊட்டி காவிய முகாமில் சுஷில்குமாரை பார்த்தேன்.இந்த விழாவில் அமர்வு முடிந்தபின் பார்த்த சுஷில்குமார் கொஞ்சம்தெளிவாய் தெரிந்தார். எனக்கும் அவருக்குமிடையே சிறு நூலால் கட்டப்பட்ட கனெக்சனை உணரமுடிகிறது.இனி அவர் புத்தகத்தை வாசிக்கும்போது வாசிப்பு கொஞ்சம் நெருக்கமானதாய் இருக்குமென நினைக்கிறேன்.

கவிஞர் விக்ரமாதித்தன் மற்றும் பகவதி அம்மாள் அவர்களுக்கும்,விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களுக்கும், உங்களுக்கும், விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கும், அரங்கில் கேள்வி கேட்டவர்களுக்கும், என்னைப்போல் கலந்து கொண்டு விழா சூழலை கொண்டுவந்த சக பங்கேற்பாளர்களுக்கும் நன்றிகள்.

 

அன்புடன்

மோகன் நடராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2022 10:31

January 1, 2022

தலபுராணங்கள் எதன்பொருட்டு?

அன்புள்ள ஜெ,

நம் பண்டைய ஆலயங்கள் கொண்டுள்ள “இரு வித வரலாறுகள்” பற்றிய பதிவை ஒட்டிய கேள்வி இது. யதார்த்த வரலாற்றை விட, புராணம் சார்ந்த வரலாறே மக்கள் மனதில் நீடித்து இருக்கிறது. ஆலயங்களின் அமைப்பு, தெய்வங்களின் உருவங்கள் மற்றும் பெயர்கள் பெரும்பாலும் இந்த புராண வரலாற்றை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. எதன் அடிப்படையில் இந்த தல வரலாறு உருவாகிறது?

எனது சொந்த ஊர் சிவகாசியை அடுத்த திருத்தங்கல். அங்குள்ள நின்ற நாராயண பெருமாள் ஆலயம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த ஆலயத்திற்கான தொன்மங்களில் ஒன்று, இளைய யாதவன் இத்தலத்தில் தான் அநிருத்தனுக்கும் பாணாசுரனின் மகள் உஷைக்கும் திருமணம் செய்வித்தான் என்பது. இங்குள்ள மூலவர் சன்னதியின் உட்புறம் அநிருத்தனுக்கும் உஷைக்கும் திருமண கோலத்தில், நின்ற நிலையில் சிலைகள் உண்டு. ஆனால் பாணாசுரனின் தொல்நிலமோ, மஹாபாரத கதைகளின் படி கூட எங்கோ வடக்கில் இருப்பது.

பின் ஏனிப்படி ஒரு தல வரலாறு தேவையாகிறது? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தைக் கட்டிய அரசனின் அல்லது சிற்பியின் வெறும் கற்பனையோ, விழைவோ மட்டுமே இவ்வாறு ஒரு புராணத்தைக் கட்டி எழுப்பி, இத்தனை நூற்றாண்டுகளாக மக்களை நம்ப வைக்க முடியுமா?

சாரதி

அன்புள்ள சாரதி,

சுசீந்திரம் ஆலயத்துக்கு முன்னால் புத்தகக்கடையில் அ.கா.பெருமாளின் சுசீந்திரம் ஆலயவரலாறு நூல் விற்கப்படும். சுசீந்திரம் தொன்மக்கதையும் விற்கப்படும் . தொன்மவரலாற்றுநூல் ஆயிரம் பிரதி விற்கப்பட்டால்கூட வரலாற்றாய்வு ஒருபிரதி விற்கப்படுவதில்லை

சுசீந்திரம் என்னும் தலத்துக்கு கல்வெட்டுகளின் படி சிவீந்திரம் என்றுதான் பெயர். சிவ இந்திரம். இந்திரனுக்குரிய சிவத்தலம். தொன்மையான ஆலயங்களில் அவற்றுக்கான காவல்தெய்வம் அல்லது துணைத்தெய்வம் எது என்பது முக்கியமானது. இந்திரன்.சூரியன், வருணன் முதலிய தெய்வங்கள் அவ்வாறு காவல்தெய்வங்களாக அமையும். அவற்றின் அடிப்படையில் ஆலயங்கள் இந்திர க்ஷேத்திரம் சூரியக்ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றன. அங்கே சிவனோ பெருமாளோ மையத்தெய்வங்களாக அமையலாம்.

ஓர் ஆலயத்தின் தாந்த்ரீக இயல்புகள் அது இந்திரன் ஆலயமா சூரியன் ஆலயமா என்பதைப் பொறுத்து அமைகின்றன என்பார்கள். பண்டைக்காலத்தில் இந்திரனுக்கும் சூரியனுக்கும் உரிய ஆலயமாக இருந்து சைவ வைணவ தலங்களாக ஆனவை அவ்வாறு இந்திரத்தலம் சூரியத்தலம் என்றும் அழைக்கப்படுகின்றன என ஒரு தரப்பு உண்டு. வேதங்களில் இந்திரனை மையமாக்கிய பிரிவு ஐந்திரம். சூரியனை மையமாக்கியது சௌரம். அவ்வாறு வேதமரபே தனி மதங்களாக இருந்துள்ளன. அந்த ஆலயத்தின் மையமான வேதம் எது என்னும் கேள்வியின் அடிப்படையில் அது இந்திரன் ஆலயமா சூரியன் ஆலயமா என்று முடிவெடுக்கப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.

எவ்வாறாயினும் சுசீந்திரம் இந்திரனுக்குரியது. ஆகவே அது சிவீந்திரம்.ஆனால் அது பேச்சுவழக்கில் சுசீந்திரம் என்றாகியது. சுஜி என்றால் சம்ஸ்கிருதத்தில் தூய்மை. இந்திரன் தொழுநோய் வந்து நீராடி தூய்மை அடைந்தமையால் அந்த இடத்துக்கு சுசீந்திரம் என்ற பெயர் வந்தது என்று ஒரு பிற்காலத் தொன்மம் உருவாகியது. அது பேச்சுவழக்கில் இருந்து அச்சுக்கு வந்தது.

அங்கே விற்கப்படும் நூல்களில் அ.கா.பெருமாலின் நூல் முதலில் சொல்லப்பட்ட வரலாற்றுச்சித்திரத்தை அளிக்கிறது. பிறநூல்கள் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட புராணக்கதையை சொல்கின்றன.

இதுவே எல்லா ஆலயத்திலும் நிகழ்கின்றது. எவருக்கும் வரலாறு மேல் ஆர்வமில்லை. அனைவருக்கும் தலவரலாறுகளே போதும். தொன்மங்களிலேயே ஈடுபாடு. இது அன்றெல்லாம் எனக்கும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. இன்று ஒரு தெளிவு உள்ளது.

ஓர் ஆலயத்தின் நோக்கம் என்ன? இறையனுபத்துக்கான வழிபாடு முதன்மையாக. மரபார்ந்த பண்பாட்டுச்செயல்பாடுகளுக்கான மையமாக அமைதல் அடுத்தபடியாக. பொதுவான அறநிலையாகச் செயல்படுதல் மூன்றாவதாக. இம்மூன்றையும் ஒட்டியே மக்கள் ஆலயங்களுக்குச் செல்கிறார்கள், ஆலயங்களைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.

ஆலயம் ஒரு வரலாற்றுச்சின்னம். ஒரு காலக்குறி. ஆனால் அதெல்லாம் ஆலயத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு வெளியே உள்ளவை. அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியவை. ஆலயம் வரலாற்று அடையாளமாகவோ, காலச்சின்னமாகவோ அமைக்கப்பட்டது அல்ல.

தமிழகத்தில் நமக்கு முறையாக வரலாற்றைப் பதிவுசெய்யும் மரபு இல்லை. ஆகவே எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள் நமக்கு இல்லை. வரலாறு என நமக்குக் கிடைப்பவை முதன்மையாகத் தொல்பொருட் சான்றுகள். இரண்டாவதாக இலக்கியச் சான்றுகள். தமிழகத்தின் தொல்பொருட்களில் பெரும்பாலும்  சிதைவின்றிக் கிடைப்பவை ஆலயங்கள் மட்டுமே.

ஆகவே நாம் இலக்கியங்களை வரலாற்று நோக்கிலும் ஆராய்கிறோம். ஆலயங்களை வரலாற்றுச்சின்னங்களாக கருத்தில்கொள்கிறோம். தமிழக வரலாற்றின் முதன்மைச் சான்றுகளாக நமக்குக் கிடைப்பவை வெவ்வேறு ஆலயங்களில் உள்ள கல்வெட்டுக்கள். அவை ஆலயம் கட்டப்பட்ட வரலாறு, ஆலயத்தின் சொத்துரிமை, ஆலயநடைமுறை ஆகியவற்றின் பதிவுகள். அவற்றைக்கொண்டு நம் பொது வரலாற்றை நாம் ஊகிக்கிறோம்.

நம் கலைவரலாற்றிலும் ஆலயங்கள் முக்கியமானவை. ஏனென்றால் மரபார்ந்த கலைத்தொகுப்புகளாக நமக்கு எஞ்சுபவை ஆலயங்களே. கட்டுமானக்கலை. சிற்பக்கலை ஆகியவற்றுக்கான பதிவுகளாக அவையே உள்ளன. ஆலயங்களிலேயே இசை, நடனம் ஆகியவற்றைப் பற்றிய சான்றுகளும் உள்ளன. நம் ஆலயங்களை கலைக்கண்காட்சியகங்கள் என்றும் சொல்லலாம்.

இவ்வாறுதான் நம் வரலாற்றாய்வில் ஆலயங்கள் முதன்மையாக இடம்பெறுகின்றன. ஆனால் அது ஒரு அறிவுத்தள அணுகுமுறை மட்டுமே. ஆலயங்களின் முதன்மைநோக்கம் வழிபாடும், பண்பாட்டுநிலைநிறுத்தலும், அறச்செயல்களும்தான்.

இந்தக் கோணத்தில் பார்த்தால் ஆலயத்திற்கு வரும் வரலாற்று ஆய்வாளர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் தவிர பிறருக்கு அதன் வரலாற்றுச்செய்திகளோ பிறசெய்திகளோ தேவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. பொதுமக்கள் அவற்றில் ஆர்வம் காட்டவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. ஆகவேதான் அச்செய்திகளுக்கு வழிபாட்டாளர்கள் நடுவே பெரிய ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறது.

ஆனால் தொன்மங்கள் நேரடியாகவே அந்த ஆலயத்தின் அடிப்படை நோக்கமான ஆன்மிகத்துடன், வழிபாட்டுடன் தொடர்புடையவை. அவை எவ்வளவு எளிமையானவையாக, செயற்கையானவையாக இருந்தாலும்கூட அவை ஆன்மிகத்தையும் வழிபாட்டையுமே சுட்டுகின்றன. ஆகவே பக்தர்களுக்கு அவற்றின்மேல் ஈடுபாடு உருவாகிறது.

வழிபட வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்களுக்கு எளிய உலகியல் கவலைகளும் உலகியல் கோரிக்கைகளும்தான் இருக்கும். தொன்மங்கள் அவற்றுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவை. இங்கே நீராடினால் இந்த நோய் குணமாகும், இங்கே நீராடினால் இன்ன பலன் கிடைக்கும் என அவை சொல்கின்றன. ஆகவே அவற்றை அவர்கள் உடனடியாக அறிந்து ஏற்கிறார்கள். அது இயல்பானதே.

அதற்கப்பால் ஆன்மிகநாட்டம் உடையவர்கள் அந்த புராணங்களின் குறியீட்டுப்பொருளை நோக்கிச் செல்கிறார்கள். அக்குறியீடுகளை முதலில் அறிந்து பின்னர் ஊழ்கம் செய்து மெய்மை நோக்கிச் செல்கிறார்கள். பெரும்பாலான புராணங்கள் ஆலயங்களின் அடிப்படையான குறியீட்டுத்தன்மையைச் சுட்டிக்காட்டுவனவாக இருக்கும்.அதன் வழியாக அந்த ஆலயமாக எழுந்த ஆதாரமான மெய்த்தரிசனத்தைச் சென்றடைவனவாகவும் இருக்கும்.

ஆகவே ஆன்மிகம்நாடி ஆலயத்துக்கு வருபவர் ஆலயத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள ஆர்வமற்றிருப்பது இயல்பே. அவருக்குத்தேவை தொன்மம்தான். ஒருவேளை வரலாற்றாய்வுநோக்கு அவருக்கு தடையாகவும் ஆகக்கூடும்.

அக்னி தத்துவத்தை உணராமல் திருவண்ணாமலை ஆலயத்த்தின் மெய்யை சென்றடைய முடியாது. ஆகாய தத்துவத்தை அறியாமல் சிதம்பரத்தை உள்வாங்கவும் இயலாது. திருவண்ணாமலை ஆலயத்தை எந்தெந்த நாயக்க மன்னர்கள் புதுப்பித்தனர், சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாளை எந்த மன்னன் நிறுவினான் என்பதெல்லாம் ஆன்மிகநாட்டம் கொண்டவருக்குத் தேவையான செய்திகள் அல்ல.

பல அண்மைக்கால தொன்மங்கள்  வேறு இடங்களில் உள்ள பழைய  தொன்மங்களை ஒட்டி உருவாக்கப்பட்டவையாக இருக்கும். அரிதாகச் சில உள்ளூர்புராணங்கள் அபத்தமானவையாகவும் இருக்கும். ஆயினும் தொன்மங்களை கவனிக்கவேண்டியது மிக அவசியம். அந்த ஆலயத்தின் தீர்த்தம், தலவிருட்சம், அது எந்த முனிவருக்குரிய ஆலயம், எந்த காவல்தேவனுக்குரிய ஆலயம் ஆகியவை குறிப்பாக கருத்திகொள்ளப்பட்டகவேண்டும்.

சில சமயம் தொன்மங்களே திரிபடைந்திருக்கும். அந்த முதல்வடிவை ஆர்வம் எடுத்து அறிந்தாகவேண்டும். திருநெல்வேலிக்கும் நெல்லுக்கும் தொடர்பில்லை. ஆனால் அங்கே நெல்லில் வேலிகட்டும் சடங்கு பிற்காலத்தில் நடைபெறுகிறது. பழந்தமிழில் நெல் என்றால் மூங்கில். அந்த ஆலயத்தின் தலவிருட்சம் மூங்கில். அதற்கு வேணுவனம் என்று பெயர் உண்டு. மூங்கில்காட்டு இறைவன் அவன்.

சில தொன்மங்கள் முதலில் மிக எளிமையானவையாக இருக்கும். ஆனால் மரபை முழுமையாக அறிந்தால் அவற்றில் நெடுந்தொலைவு செல்லமுடியும். உதாரணமாக சுசீந்திரத்துக்கே வருகிறேன். இந்திரன் தொழுநோய் நீங்க நீராடிய ஆலயம். ஆனால் தொழுநோய் எப்படி வந்தது? காமம் என்பது இந்திரனுன் சிறப்பு. அது அவன் உடலெங்கும் யோனிகளாயிற்று. அவற்றை கண்களாக மாற்றிக்கொண்டான். ஆனால் காமம் அத்துமீறியமையால் அந்தக் கண்களெல்லாம் புண்ணாயின. தொழுநோயாளியானான். சுசீந்திரத்தில் நீராடி புண்களை கண்களாக மீண்டும் மாற்றிக்கொண்டான்.பழைய திருவிதாங்கூர் ஓவியங்களிலெல்லாம் தாணுமாலையன் முனிவருக்குரிய தோற்றத்துடன் வரையப்பட்டிருப்பதை இதனுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.

இக்குறியீடுகளின் கவித்துவம் வழியாகச் செல்பவர் அடையும் ஒரு மெய்மை உண்டு. அதுவே சுசீந்திரத்தின் சாராம்சம். அதைச் சுட்டவே அப்பேராலயம் கல்லில் எழுந்து அங்கே கண்நிறைய நின்றுள்ளது

ஜெ

சுசீந்திரம்

படிமங்களின் உரையாடல்

தமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்

நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

ஆலயம் எவருடையது?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2022 10:35

விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-5

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

வணக்கம் சார்,

‘வேதத்தில் கவி எனும் சொல் முழுமுதற் பரம்பொருளைச் சுட்டும் ஒரு சொல்லாகவே பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. கவிதை என்பது ஒரு ரசவாதம், அது ஒரு கவிஞனுக்குள் நிகழ்கிறது, அவ்வாறு நிகழும் அந்த நொடியை, இடத்தை ஒரு விரல் கொண்டு சுட்டுவது, இதுதான் எனக் கண்டடைவது, இது இவ்வாறு தான் இருக்கிறது என அறிந்த கொள்வது, அந்த கனமாகி நிற்பது, அதுவே கவிதை முகிழ்த்த கணம்’. என்று குறிப்பிட்டார் கவிஞர் வடரேவு வீர பத்ருடு அவர்கள். இவ்வனுபவத்தை epiphany என்ற சொல்லால் சுட்டினார். (நான் புரிந்த கொண்டவிதத்தில்)

ஒவ்வொரு முறையும் அந்தக் கணத்தில் உண்மை என்று ஆன ஒன்றை ஒரு விரலால் தொட்டு தொட்டு மீள்கிறான், அல்லது உண்மை என்றாகி மீள்கிறான் கவி. அந்நிலையிலிருந்து ஒரே ஒரு படி மட்டும் கீழிறங்கி, அதை எல்லோருக்குமாக பங்குவைக்கிறான். சன்னதம் கொள்ளும் தருணத்தில் மருளாடி, தனக்குள் நிகழ்வதை கண்டு கொண்டு அதை சொல்லாக்கி சொல்வது போல. அதனால் கவிதை, ஞானம் என்றும் ஆகிறதோ?  கவி என்ற சொல்லை, இனி இத்தனை அடர்த்தியும், கணமும், விரிவும் கூடிய சொல்லாக அன்றி வேறு எவ்வாறாக கைக்கொள்ள இயலும்? ஒரு பீஜம் போல! ஒரு மந்திரம் போல!

மற்றும் கவி வீரபத்ருடு ‘ஆதி கவி வால்மீகி சோகத்தை கண்ட போது ஸ்லோகம் பிறந்தது’ என்றார். காட்சியோ, நிகழ்வோ அல்ல கவிதை ஆவது, அதன் வழியாக, ஒரு கவி தான் தேடி தொட்டுக்கொண்ட மெய்யே கவிதையாகிறது.

கவி பேணப்பட வேண்டியவன், கவி எந்த இலக்கணத்திருக்கும் அகப்படாதவன். சிற்றில் விளையாடும் சிறு குழந்தை போல, தான் தனக்குள் விரல் சுட்டிக் கண்டதை இன்னாருக்காக என்று எல்லாம் இல்லாமல், ஆக்கி அங்கேயே விட்டுவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ப்பவன்.  அவன் விட்டதை பேணுவதும் அவன் விளையாடும் இடத்தை பேணுவதும், அவனையே பேணுவதும் கூட நம் கடனாகிறது. ஏனெனில் அவன் ஆக்கி விட்டு  கடப்பவைகளில் பல, மனிதன் அடையக்கூடிய ஆகச் சாத்தியமானவைகளில் ஒன்றாக அமைவன.

ஈன்று புறந்தருதல் என்  தலை கடனே என்னும் சங்கப்பாடலின் ஈற்றடியாக, கவியைப் பேணுதல் நம் தலைக் கடனே எனறு எழுதிக்கொள்ள வேண்டுமோ? ஆங்கில தொலைக்காட்சிகளில் Roasted என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. விருந்தினரை வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் பகடிக்குள்ளாக்கி வறுத்து எடுப்பது. எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களின் விழா உரை அதை நினைவு படுத்தியது என்றாலும், அது அதுவல்ல. அது அன்பின், அறத்தின் வெளிப்பாடு மட்டுமே. ‘ஓரி டத்தில் உட்காருகிறதா பாரு’ என்று ஓடி அழிச்சாட்டியம் செய்யும் குழந்தையை அன்னை சலித்து கொள்வது போல ஒரு செல்ல சலிப்பு. அவள் அந்த இனிய சலிப்பை பாவிப்பதற்காகவே தவம் இருந்தவள், உரலில் கண்ணனைக் கட்டிய யசோதை போல.

எழுத்தாளர் சோ. தர்மன்  அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால், ‘வீட்டில் பேரக்குழந்தைகள் ஆடி ஓடி கூச்சலிடும் போது எரிச்சலாக இருக்கும் ஆனால் கொஞ்ச நேரம் அந்த சத்தம் ஓய்ந்து இருந்தால், தேடும்’. விக்கிரமாதித்தன் என்னும் பெரும் கவி எப்போதும் தன் அரியணை விட்டு இறங்காதவன், தனக்கு வேண்டும் என்று கேட்கும் போதும் அவ்வாறே. அதனாலேயே குழந்தையும் கூட. அனைத்துலகும் அவர்கள் மாட்டே குழந்தைக்கும் கவிக்கும். அந்த உரை நிகழ்ந்த முழு நேரமும், அண்ணாச்சி அடக்க மாட்டாமல் சிரித்த சிரிப்பு நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். சிரிக்கும் சிங்க குருளை!

கவிமனம் பேணப்படவேண்டியது.  அது காலாதீதமானது. அதுவே அணைத்து அறிதல்களினும் தொடக்கம். கவி எனும் பரம்பொருள் என்று வேதம் சொல்லும் என்றால், அவ்வை தொட்டு தமிழ் மரபின் நீட்சியாக,  விக்கிராமாதித்யன் என்னும் பெருங்கவிஞன் எழுத்து வரும் இடத்தைச் சுட்டி துவங்கிய உங்கள் உரை, மிகச் சரியாக சோ. தர்மன் காட்டிய நாணயத்தின் மறு புரத்தைக் வரைந்து காட்டியது. உரையின் துவக்கத்தில், எழுத்தாளர் சுந்தர ராமாசாமி அவர்களுக்கும், அண்ணாச்சிக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் ஒன்றை நீங்கள் சொன்னபோது, சிரித்த சிரிப்பில் ப்ளாக்கவுட் ஆகியிருந்திருப்பேன், தள்ளாடி நின்று விட்டேன்.

விஷ்ணுபுரம் மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டியிருக்கிறது.  இளம் வாசகர்களாக படியேறி வந்தவர்கள் அறியப்பட்ட எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக அவை ஏறுகிறார்கள். அவ்வகையில் நண்பன்  காளிபிரசாத் இவ்வருடம் அவை ஏறியது மிகப்பெரிய மகிழ்ச்சி. விஷ்ணுபுரம் மேடையின் அங்கீகாரம் ஒரு அரங்கேற்றம் போல, இனி அவன் எட்டு திக்கும் சென்று வெற்றி கோடி நாட் டட்டும்.  பிறமொழி எழுத்தாளர்கள் அவையின் கட்டுக்கோப்பையும், அதில் நிறைந்து இருக்கும் இளம் முகங்களையும் கண்டு பாராட்டாமல் இருந்ததே இல்லை ஒவ்வொரு முறையும். இம்முறையும் அவ்வாறே. அனைவருக்கும் முன்னுதாரமாக விஷ்ணுபுரம் அமைகிறது என்பது ஒரு பெருமிதம் என்றால்,  இன்று தயங்கியபடி சொல் கூட்டி மெல்ல பேசிய இளம் முகங்கள் எல்லாம் நாளை இலக்கிய கர்த்தாக்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல் துறை நிபுணர்களாக, தவிர்க்க முடியாத ஆளுமைகளாக உருக்கொள்ளப்போகிறார்கள் என்பதை நினைத்தால் முட்டைகளின் ஓடு உடைத்து வெளியேறும் குஞ்சு பறவைகளை காண்பதை போல ஒரு பரவசம்.

தொன்மங்கள் சொல்லும் சிவனென்று ஆனவரின் சக்தி எல்லாம் அவர் இடப்பாகம் கொண்ட உமையாள் என்று. “பிள்ளைகளுக்கு நல்ல அப்பா, தமிழுக்கு நல்ல கவிஞர், பொய் சொல்லக்கூடாதுல..” என்ற பகவதி அம்மாவின் குரல் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது. வாழ்வை அதன் போக்கில் விட்டு அதன் வழியாக முதிர்ந்த விவேகம். எதன் மீதும் குறை இல்லை அவருக்கு. புன்னகையும் சிரிப்புமாக மிக நல்ல உரையாடல்காரர். அன்னையாக அவர், காடும் மேடும் சுற்றும் பித்தனின் இடப்பாகம் கொண்டதால் விக்கி அண்ணாச்சி இன்று கவியாகி சிவனாகி நிற்கிறார் என்றே தோன்றியது.  ஒரே  ஒரு முறை உரையாடியவர்களின் பெயரைக் கூட மறக்கவில்லை அம்மா. அவருக்கு அனைவரும் குழந்தைகளே. விஷ்ணுபுர வட்டத்தின் நுண்மையின், உயர்வின் மிகப் பெரிய சான்று விருது பெரும் எழுத்தாளர்களை மட்டும் அல்லாமல் அவர்கள் குடும்பத்தினரையும், அழைத்து கவுரவித்து நன்றி அறிதலோடு மரியாதை செய்வது.

மீண்டும் ஒரு அழகிய விழா, அழகிய புன்னகைகள், அதிர்ந்த சிரிப்புகள், மெல்லிய தயக்கங்கள், கண்ணோரத் துளிர்ப்புகள், மிகச்  சிறந்த உணவு என இனிதே நிறைவடைந்தது. இனி அடுத்த வருடத்திற்கான  காத்திருப்பு. நன்றி,

சுந்தரவடிவேலன்.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இலக்கிய நிகழ்வு ஒன்று இத்தனை முறையாகவும், அதே சமயம் இத்தனை தீவிரமாகவும் நடைபெற முடியும் என்பதே வியப்பூட்டுவதுதான். அந்தக் கட்டுப்பாடு வெளியே இருந்து உருவாக்கப்பட்டது அல்ல.

உதாரணமாக எல்லா நிகழ்வுகளும் மிகச்சரியான நேரத்தில் தொடங்கின. சாப்பாட்டு இடைவேளை வெறும் ஒரு மணிநேரம்தான். நான்கு பந்திகள். ஒரு பந்தியில் நூற்றியிருபதுபேர்தான் அமரமுடியும். ஆகவே வேகமாகச் சாப்பிடவேண்டும். எவரும் எவரையும் அழைக்கவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அத்தனை அரங்கிலும் பார்வையாளர் நிறைந்திருந்தனர்.

கடைசிநாள் விழாவில்கூட நன்றியுரை சொல்லப்படும்போது ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. அந்தக் கட்டுப்பாடு விழாவுக்கு வந்தவர்களின் தீவிரத்தால் உருவானது. இங்கே எதுவும் மேலோட்டமானது அல்ல என்ற எண்ணத்தை விழா உருவாக்கிவிட்டது.

நான் விழாவுக்கு வரும்போது என்னுடன் வருவதாகச் சொன்ன நான்கு நண்பர்கள் கடைசிநேரத்தில் வராமலிருந்துவிட்டார்கள். கேட்டபோது அவர்களிடம் பலர் விழாவுக்குச் செல்லவேண்டாம் என்று சொன்னதாகச் சொன்னார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். ”விழா நீங்கள் புறக்கணிப்பதனாலோ கலந்துகொள்வதனாலோ எந்தவகையிலும் மாறப்போவதில்லை. அது வேறெங்கோ போய்விட்டது. அதன் இடமும் தீவிரமும் வேறு. புறக்கணிப்பதனால் உங்களுக்குத்தான் நஷ்டம். ஒரு ஐந்து வருடம் கழித்து என்ன நஷ்டம் என்று உங்களுக்கே தெரியும்”

ஆனந்த்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2022 10:34

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-4

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,

‘விஷ்ணுபுரம் விருது விழா-2021’ எனக்கோர் முதல் அனுபவம் – இவ்வாண்டின் முதன்மை அனுபவமாகவும் ஆகிவிட்டது. இலக்கியக் கொண்டாட்டம் எத்துணை இனியது – மொழியாலும் உணர்வுகளாலும் ஒன்றிணைந்த உள்ளங்களின் ஒருமைச் செயல்பாட்டில், செயல் நேர்த்தியில் ஒவ்வொரு தருணமும் உச்சம் தொட்டது.

வியந்து நோக்கும் இலக்கிய ஆளுமைகள், தங்களின்  வலைத்தளம் மூலம் அறியப்பட்ட எழுத்தாளுமைகள், இலக்கிய வட்ட நண்பர்கள் என ஒரு சங்கமம். புதிய இடத்திற்கு வந்ததாகவோ புதிய மனிதர்களை சந்தித்ததாகவோ துளியும் தோன்றவில்லை.

இரண்டு நாட்களின் இலக்கிய அமர்வுகளும் பள்ளிக்குச் சென்று வந்த உணர்வையே தந்தன-  நுண்ணுணர்வு மிக்க வாசகர்களின் நுட்பமான கேள்விகளும், அவற்றுக்கான உண்மையான பதில்களும் என, உரையாடல்கள் நிறைய கற்றுத் தந்தன.  அமர்வுகளில் பகிரப்பட்ட எழுத்தாளுமைகளின் அகப்பயணங்கள், அன்றாட உலகியல் செயல்பாட்டிற்கும் படைப்புலக வெளிப்பாட்டிற்குமான ஊடாட்டத்தை கோடிட்டுக் காட்டின.

முருகானந்தம்

ஓரோர் சமயம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால்,  பதிலிறுப்பவர்கள் படைப்பாளிகள் மட்டுமல்ல – சித்தர் அல்லது யோகியர் என்றே எண்ணத் தோன்றியது. “இட் ஐஸ் எ ப்ராஸஸ்” என்று சொன்ன சுஷீல் குமார்; “விமர்சனங்களை உள்வாங்கி,  படைப்புகளை மேம்படுத்த முயல்கிறேன்” என்று சொன்ன காளி பிரசாத்; கால்குலேட்டர் மட்டுமேயாக இருந்துவிடாமல் இருப்பதற்குப் பிரயத்தனப்படும் திருச்செந்தாழை; கவிஞனாக வெளிப்படும்போது “அந்தர்யாமி”யாக ஒருவன் உள்ளிருந்து செயலாற்றுவதைக் குறிப்பிட்ட கவிஞர் வடரேவு சின்ன வீரபத்ருடு, “உண்மையாக இருக்கிறேன்” என்று ஒலித்த சோ. தர்மன்; “நான் என்பது தானாடும் பொய்யாட்டத்தைத் தானே காண்பது” என்ற வசந்த் சாய்; தன்னைத் தானே கண்டு நகைக்கும் சிறு  குழந்தையென இயல்பாய் இருந்த விக்கி அண்ணாச்சி; அதிகாரச் செயல்பாட்டில் இருந்து விலகிய  பின் எதிர்கொண்ட  சவாலைக் கையாண்ட ஜெயராம் ரமேஷ் – என சொல்லிக் கொண்டே போகலாம்.

வரவேற்பு, தங்குமிடத்தைப்  பகிர்ந்தளிப்பது, உணவு மற்றும் தேநீர்  உபசரிப்பு, நேர  மேலாண்மை  மற்றும் ஒருங்கிணைப்பு, அரங்க அமைப்பு, அரங்கினுள்ளேயும் வெளியேயும் நிழ்ந்த அன்பான உள்ளமார்ந்த உரையாடல்கள் என அனைத்துமே வெகு நேர்த்தி. தன்னார்வலர்களாய் ஒத்திசைவும்  பொருந்தமைதலும்  கொண்டு செயல்பட்ட நண்பர்களின் தன்னலமற்ற பங்களிப்பால், ‘குதூகல முகங்கள் தவழும் வெளியில் இரு நாட்கள்’ என இனியதோர் அனுபவம்.

இதனை இங்கே இவ்வண்ணம் நிகழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பலப்பல.

அன்புடன்
அமுதா

குமார் ஷண்முகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆயிரம் வணக்கங்கள். விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ரீஸ்டார்ட்:

எங்கோ ஒரு காட்டு மரத்தின் இலை, கடல் காணும் ஆசையில், பெய்த மழையில், சேர்ந்த பெருநதியில், நீரின் போக்கில், மிதந்தே கடலில் சேர்ந்ததாம்.

விஷ்ணுபுரம் விருது ராஜ் கௌதமன் அவர்களுக்கு அளித்த ஆண்டுதான், நான் உங்களின் புறப்பாடு வழியாக வாசிப்பிற்குள் நுழைந்தேன். அதற்கு முன்னர் சென்னையில் புழுங்கிக் கொண்டிருந்த மூன்று வருட காலம், எதிலுமே நிச்சயமின்மை, வாழ்க்கையில் நம்பிக்கை எனும் சொல்லிற்கே இடமில்லை. தினமும் இரவு பாண்டி பஜார் சௌந்திரபாண்டியன் நகர் மதுக்கடையில் இரவுகளில் கூடடைந்த காலம்.

ஒரு நாள் அண்ணன் நந்தகுமார் சென்னைக்கு வந்த நேரம், நான் என்ன செய்கிறேன்? என அம்மாவின்  வற்புறுத்தலால் அறிய வந்திருப்பான் என்றே இன்றும் நம்புகிறேன். புலம்பித் தள்ளினேன். எதிலுமே பிடித்தம் இல்லை. நாகர்கோயில் வந்துவிடவே மனம் வெப்ராளப்படுகிறது எனக் கூறினேன். அன்றைக்குத்தான் அவன் என்னை எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் மிதவை படிக்க சொன்னான். ஆனாலும் வாசிப்பு ஆரம்பிக்கவில்லை.

காலம் வேகமாக நகர, ஒரு நிரந்தர வேலையும் கிடைக்க, அதன் வாயிலாய் எனக்கு திருமணமும் நடந்தது. அவள் பிரசவத்திற்காக தாய்வீடு நாகர்கோயில் வந்திருந்தாள். சென்னையில் இருந்து வாரம் ஒருமுறை நாகர்கோயில் வர ஆரம்பித்தேன். எல்லா வாரமும் வெள்ளி மாலை சென்னையில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து, பிறகு ஞாயிறு மாலை சென்னை கிளம்ப வேண்டும். ஆக வாரத்திற்கு இருபத்து நான்கு மணி நேர பயணம். அப்போதுதான் உங்கள் புறப்பாடில் ஒரு பகுதியில் ஒழுகினசேரி எனும் என் ஊரின் நினைவுகள் வருகின்றன எனத் தெரியவே அதைப் படிக்க ஆரம்பித்தேன். சினிமா ஒன்றில் நாம் அறிந்த ஏதோவொன்று காட்சியிலோ, வசனத்திலோ வருகிறது என்றால் அதைப் பார்க்க இயல்பாகத் தோன்றும், அது போலவே இரயிலில் புறப்பாடை கையில் எடுத்தேன். அப்போது அதன் இலக்கிய முக்கியத்தன்மை என்ன என்றெல்லாம் தெரியாது. இன்றைக்கும் இலக்கியம் எனக்கு குழப்பமான ஒன்றுதான். என்னவளோ அன்றைக்கு ஏற்கனவே உங்களை அறம் வாயிலாக அறிந்திருந்தாள். இப்போதும் ரப்பர் காடுகள், அந்த மாணவர் விடுதி, தண்டவாளம், அலைந்து திரிந்தவனின் சொற்கள் என்றைக்கும் என்னுள் நிறைந்து இருக்கிறது. ஓடும் இரயிலில் ஒவ்வொரு அத்தியாமும் இரயிலின் ஓட்டத்தோடு கொஞ்சம் கொஞ்சமாய் அதிர செய்தது. இன்றைக்கும் அதிர்வின் கீறல் உள்ளுண்டு.

உங்களில் இருந்தே தொடங்கியது எனது பயணம். புறப்பாடில் ஆரம்பித்து மிதவையில் தொடர்ந்தது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் மொழி, என் கைப்பிடித்து ‘அ’ போடச்சொல்லிக் கொடுத்த, நான் பெயர் மறந்த சத்திரம் பள்ளிக்கூடத்தின் (இப்போது கலைவாணர் என்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளி) ஒன்றாம் வகுப்பு ஆசிரியையை நினைவுப் படுத்தும். வாசிப்பு அப்படித்தான் ஆரம்பித்தது. ஒவ்வொரு புத்தகம் வாசித்ததும் அண்ணனோடு ஒரு சிறிய உரையாடலை ஆரம்பிப்பேன், என் பார்வையை சொல்லுவேன். அவன் அவனுடைய பார்வையை தெரிவிப்பான். முற்றிலும் வேறான ஒரு நிலைப்பாடு அவனுடையது. இன்றைக்கும் இது தொடர்கிறது. இப்படியே வாசிப்பும் தொடர்ந்தது. உண்மையில் தினமும் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நானல்ல. ஆனாலும் வாரம் இருமுறையாவது உள்நுழையலாவேன்.

விஷ்ணுபுரம் விழா என்றைக்கும் ஆச்சர்யம் அளிக்கும் ஒரு பெரும் நிகழ்வு. அதைப் பற்றிய குறிப்புகளை உங்கள் தளத்தில் படிக்கும் போது என்றாவது ஒரு நாள் நானும் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன். உண்மையாக சொன்னால் அதன் அறிவுத்தளத்தின் உயரம், என்னைப் பற்றிய மதிப்பீட்டில் என் தாழ்வுணர்ச்சி, அங்கே வரவிடாமல் தடுத்தன. அதையும் மீறி என்னை நான் மாற்றிக் கொள்ள நேர்ந்தது, எழுத்தாளர் சுஷில் குமார் அண்ணனோடு ஏற்பட்ட அழகான நட்பின் வாயிலாய்.  அதன் காரணமாய், இந்த ஆண்டு அதுவும் மதிப்பிற்குரிய பெருந்தகப்பன் கவிஞர் விக்கிரமாதித்யன் அய்யாவிற்கு விருது அளித்த ஆண்டில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

எழுத்தாளர் சுஷில் குமார் அண்ணன் கோவையில் இருக்கவே வியாழன் இரவு கிளம்பி, வெள்ளி காலை கோவை வரத் திட்டமிட்டு இருந்தேன். அதே இரயிலில் நீங்களும் இருந்தீர்கள், கப்பல்காரன் சாகுல் அண்ணனை வியாழன் இரவே இரயிலில் சந்தித்தேன். முதல் சந்திப்பிலே என்னை எவ்வித பதட்டமுமின்றி இயல்பாக பேசவைத்தார். அவர் பேசியதில் எங்களைப் பற்றிய சுயவிவரங்களையும், அவரின் கப்பல் அனுபவங்களையும் தவிர்த்தால், அதில் முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே நிறைந்து இருந்தீர்கள். காலை அவர் மூலமே உங்களைச் சந்தித்தேன். இரயிலில் உங்களைப் பார்த்த நொடியில் எண்ணங்கள் எதுவுமே என் கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் இரயில் நிலையத்தில் இறங்கும் போதே உங்களை அழைத்து செல்ல விஷ்ணுபுரம் நண்பர்கள் வந்திருந்தார்கள். நீங்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் அன்புடன் அணுகி, உரையாடியத் தருணம் ஏன் விஷ்ணுபுரம் எனும் இயக்கம் தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது என்பதனை உணர வைத்தது.

விழாவிற்கு முந்தைய நாளே வந்திருந்ததால் உங்களை இன்னும் நெருங்கிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. காலை நான் ராஜஸ்தான் அரங்கில் உங்கள் அறைக்கு வந்த போது, மியான்மரைப் பற்றி தம்பி சூர்யாவுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். இடையிடையே அவனைப் பற்றிய அக்கறைகளும் உங்களிடம் இருந்து எழுந்தன. இந்த விழாவின் சூத்திரதாரிகள் விஷ்ணுபுரம் நண்பர்களை நேரில் சந்தித்ததில், ஒருவருக்கொருவரிடையே ஒரே அலைவரிசையில் ஓடும் விழா பற்றிய சிந்தனையோட்டம் ஆச்சர்யப் படுத்தியது. அதுவே அவர்களை வெகுவாகப் பிணைக்கிறதோ! எனத் தோன்றுகிறது. ஒருவர் நினைப்பதை அவர் கூறாமலே, இன்னொருவர் புரிந்துக் கொண்டு அதன்படி செயலாற்றுகிறார்கள். சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் முக்கியமானது.

இதனாலே, விழா முழுக்க ஒரு ஒழுங்கோடும் ஒத்திசைவோடும் நிகழ்ந்தது. மாபெரும் அறிவியக்கம் சூழ்ந்திருக்கும் ஒரு அரங்கில் எப்படிப்பட்ட இலக்கிய, நேர்மறையான சிந்தனைகள் நிரம்பியிருக்கும். அது விழாவின் எல்லா நிகழ்விலும் பிரதிபலித்தது. இப்படிப்பட்ட கூட்டங்களில் ஒருங்கிணைப்பது என்பதும் மிகப் பெரிய வேலை, ஆனால் திட்டமிடல் வலுவாக இருந்தமையால் அதுவும் எளிதானது. நேரம் தவறாமை, பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், சுயஒழுங்கு, எல்லோரிடமும் காணப்பட்டது. எத்தனை ஆளுமைகள், எத்தனை கேள்விகள் நிரம்பியிருந்த அரங்கில் இலக்கிய அமர்வில் எவ்வளவு ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்தன. நேர்மையான, தன்னளவில் உண்மையான பதில்களே கிடைத்தன. எனக்குள் இருந்த கேள்விகளுக்கு, வேறு கேள்விகளின் வழியாக விடைகள் கிடைத்தன, எத்தனை தெளிவுகள், விளக்கங்கள், கோணங்கள். இரண்டு நாளும் சோர்வு என்பதே இல்லை. ஏன் இரண்டு நாளும் இவ்வளவு வேகமாக ஓடியது என இயற்கையிடம் கோபப்படத்தான் தோன்றுகிறது.

ஒரு அரங்கம் முழுக்க பெரும் இலக்கிய ஆளுமைகளும், வாசகர்களும். சிந்தனைகள் அறிவியலின் படி மின்காந்த அலைகள் என வைத்துக் கொண்டால், அங்கே நிரம்பியிருந்தவை நேர்மறையான பலத்தரப்பட்ட இலக்கிய எண்ணங்கள், கோயிலிலுக்கு செல்வது நேர்மறையான சிந்தனைகளுக்காக என வைத்துக் கொண்டால், இது போன்ற நிகழ்வுகளில் ஒரு வாசகனுக்கு கிடைப்பதும் இலக்கியத்தில் ஒருவித  தெய்வீக உணர்வு தானே.

இரண்டு நாளும், முழுஅரங்கும் எல்லா அமர்விலும் நிரம்பியிருந்தது. தங்கும் இடம், உணவு எல்லாமுமே நேர்த்தியான முறையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அரங்கில் எந்தப் பக்கம் நகர்ந்தாலும் ஒரு இலக்கிய மேடை கிடைத்தது, அதில் வயது வித்தியாசமுமில்லை, முழுக்க  இலக்கிய விவாதங்கள் தான். பெரும் இலக்கிய ஆளுமைகள் பொறுமையாக, தன்மையாக இளம்வாசகர்களின், எழுத்தாளர்களின் மனதில் எழும் ஐயப்பாடுகளை விலக்கினர். எத்தனை புதிய நண்பர்கள், அவர்களின் வாசிப்பு, சிந்திக்கும் தரம் ஒருவித பிரமிப்பை அளித்தது.

விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே புதிதாய் விழாவிற்கு வந்தவர்களை எப்படி இவ்வளவு குறைவான நேரத்தில் பதட்டத்தில் இருந்து விடுவிக்கிறார்கள் என்பதனை உங்களோடு விழா தவிர்த்து முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில், நண்பர்களோடு நீங்கள் உரையாடிய சமயங்களில், அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.

ஐ.டி துறையில் சர்வர் ஒழுங்காக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்றால் எல்லோரும் கொடுக்கும் முதல் சொல்யூசன், அப்ளிகேஷன் இன்ஸ்டன்ஸை ரீஸ்டார்ட் செய்வது, அது தேவையில்லாமல் நினைவகங்களில் (heap) நிரம்பி நிற்கும் மெமரியை அழித்து விடும். அறுபது சதவிகிதம் இதன் மூலமே பிரச்சனையை சரி செய்து விடலாம்.

அதே போல இந்த விழா என்னை ரீஸ்டார்ட் செய்துவிட்டது. 2022 ஆண்டை ஒரு புதிய ஆண்டாக தொடங்க இதுவே போதுமானது. இது போன்ற விழாக்கள் நம் எண்ணங்களை சீர்ப்படுத்தி ஒருங்கிணைக்கும். என்ன இங்கு வர நமக்கு காந்தியைப் போல பெரிய காதுகள் வேண்டும்.

விஷ்ணுபுரத்தின் அத்தனை நண்பர்களுக்கும், உங்களுக்கும், வந்திருந்த மாபெரும் இலக்கிய ஆளுமைகள் அனைவருக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்கள் எல்லோருக்கும் சிரம் தாழ்ந்த நன்றியும், அன்பும்.

வைரவன் லெ ரா.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2022 10:32

‘கையிலிருக்கும் பூமி’ – கிருஷ்ணன் சங்கரன்

கையிலிருக்கும் பூமி வாங்க தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்

கல்லூரியில் படிக்கும்போது சேத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பன் கூறிய நிகழ்ச்சி இது. சேத்தூர் ராஜபாளையத்திற்கு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். காட்டை ஒட்டிய வயல் இவர்களுடையது. ஒருநாள் உழுது முடித்து நுகத்தடியை வயலிலே போட்டுவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். மறுநாள் சென்று பார்த்தால் நுகத்தடியைக் காணவில்லை. ஆனால் உழுதுபோட்ட மண்ணில் நுகத்தடியை இழுத்துச் சென்ற தடம் தெரிகிறது. தடத்தைத் தொடர்ந்து சென்றால் காட்டுக்குள் சென்று மறைகிறது. தொடர்ந்து சென்று பார்த்ததில் சிறிது தூரத்திலேயே நுகத்தடி கிடந்திருக்கிறது. பக்கத்திலேயே ஒரு பெரிய மலைப்பாம்பு வயிறு கிழிந்து இறந்து கிடந்திருக்கிறது. விஷயம் இதுதான். மாடுகளின் கழுத்தில் நுகத்தடி அழுத்தி அழுத்தி புண்ணாகிஇருக்கிறது ரத்தம் வரும் அளவு. ரத்தம் படிந்த நுகத்தடியை இரையென்று நினைத்து விழுங்கியிருக்கிறது மலைப்பாம்பு. இரைசெரிக்க உடம்பை முருக்கையில் தடி வெளிவர இறந்து போயிருக்கிறது. இது நடக்கமுடியாத விஷயமல்ல என்ற அளவில் மட்டுமே  நம்பினேன்.

ஆனால் ஜெயமோகனின் ‘ஆடகம்’ கதை படித்தபோது அது நல்ல கதை என்றும் ‘நல்ல கதை’ என்றும் ஒரே சமயத்தில் தோன்றியது. அதுவரை ராஜநாகத்தைப் பற்றி விலாவரியாகச் சொல்லிவிட்டு அந்தப் பாம்பு வந்து அவனைக் கடிக்கும் காட்சியில் ஒரு இடத்தில் கூட பாம்பு என்று எழுதியிருக்க மாட்டார் ஆசிரியர். அதை மிகவும் ரசித்தேன். ஆனால் விஷப்பாம்பு கடித்துத் தப்பிப்பதெல்லாம், அதுவும் ராஜநாகம், இப்படிக் கதையில் நடந்தால்தான் உண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தேன் தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி’ என்ற உயிர்மையின் இயற்கை சார்ந்த கட்டுரைத் தொகுப்பினைப் படிக்கும் வரை. அதில் ஒரு கட்டுரையில் கடியின் வீரியத்தைப் பொறுத்தே மரணம் சம்பவிக்கிறது என்றும், விஷப்பாம்புகளின் கடியிலேயே பாதிக்கு மேல் பொய்க்கடிகளே என்றும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். பல நாட்டு வைத்தியர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதும் இந்தப் பொய்க்கடிகள்தான் போலும்.

சென்ற புத்தகக்கண்காட்சியில் வாங்கிய தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி’ என்ற உயிர்மையின் சூழலியல் குறித்த கட்டுரைத் தொகுப்பினை தலைமாட்டில் வைத்துக்கொண்டு தினம் இரண்டு கட்டுரையாக இப்போதுதான் படித்து முடித்தேன். மலைப்பாக இருந்தது. பெரிய புத்தகத்தைப் படித்ததனால் அல்ல. இவ்வளவு பெரிய அனுபவத் தொகுப்பு தருகிற மலைப்பு. உலகம் முழுதும் உள்ள முக்கியமான இயற்கை சூழலியல் மற்றும் வனவியல் பூங்காக்கள் அனைத்திற்கும் சென்றிருக்கிறார். சூழலியல்  முன்னோடிகளிலிருந்து சமகாலத்திய வல்லுநர்கள் வரை தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்.   சூழலியல் சார்ந்த களப்பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இத்தனையையும் உயர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே(ஒருவேளை அதனால்தான் செய்யமுடிந்ததோ?) செய்திருக்கிறார். அத்தனை அனுபவங்களையும் நூறு கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். இதுவரை  சூழலியல் குறித்து தியடோர் பாஸ்கரன் எழுதியதின் மொத்தத் தொகுப்பு.  பல்லிக்கு விஷம் கிடையாது, முயலையும் மயிலையும் அடித்துத்தின்னும் மலைஆந்தை, ஏற்காட்டில் மட்டுமே காணப்பட்டு அற்றுப்போன ஓர் அரிய கீரிவகை விலங்கு, சத்தியமங்கலம் காடுகளில் மட்டுமே காணப்பட்டு அற்றுப்போன சிவிங்கிப் புலி, இரலைக்கும் மானுக்கும் உள்ள வேறுபாடு, காட்டெருமைக்கும் காட்டெருதுக்கும் உள்ள வேறுபாடு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹ்ரான்பூரில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் கோவேறு கழுதை உற்பத்தி நிலையம், பவானிசாகரில் மூழ்கிக் காணாமல்போன டணாய்க்கன் கோட்டை, அந்தமானில் மட்டுமே வாழும் நண்டு தின்னும் குரங்கு, காப்பிட இனப்பெருக்கம், ‘ஆலா பறக்கிறான்’ என்பதிலுள்ள ஆலா ஒரு கடல்பறவை என்று பல செய்திகள், புதியபுதிய தகவல்கள், சூழலியல் மற்றும் பண்பாட்டுத்தரவுகள் கட்டுரைதோறும் கொட்டிக்கிடக்கின்றன.

நம் நாட்டின் தேசியப்பறவை மயில் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தேசியப்பறவையைத் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழு முதலில் தேர்ந்தெடுத்த பறவை எது தெரியுமா? கானமயில். பின் ஏன் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தப்பறவையின் ஆங்கிலப்பெயர் Great Indian Bustard. ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் தவறான அர்த்தம் வந்துவிடும் என்கிற ஒரே காரணத்திற்காக அந்தப்பறவை தெரிவு செய்யப்படவில்லை (உன் பேரு மட்டும் என்ன வாழுதாம் என்று  கானமயில் மயிலைப் பார்த்துப் புலம்புவது நமக்குக் கேட்காமல் போகலாம்) புதர்க்காடுகளில் மட்டுமே காணப்படும் இப்பறவை கடைசியாகக் கண்ணில் பட்டது ஹொகனேக்கல் பக்கத்தில் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி இருபதுகளில். கால்நடைகள் அதிகரித்ததும் இதுபோல புதர்ப்பறவைகள் அழிந்ததற்கு முக்கியக் காரணம் என்கிறார் பாஸ்கரன். இப்போது ராஜஸ்தான் அருகே ஒரு கிராமத்தில் நூற்றிஇருபது பறவைகள் மட்டுமே மிச்சம்.

இந்தநூலில் ‘அற்றுப்போன’ என்ற வார்த்தை அதிக அளவில் காணப்படுவது வருத்தப்படத்தக்க செய்தி. நம்மூரிலேயே சத்தியமங்கலம் காடுகளில் காணப்பட்ட (Chettah) சிவிங்கிப்புலி (அக்பரிடம் வேட்டைக்குப் பழக்கப்பட்ட ஆயிரம் சிவிங்கிப்புலிகள் இருந்தன என்கிறது அக்பர் நாமா), ஏற்காட்டில் மட்டுமே காணப்பட்ட மூங்கணத்தன் (Madras Tree Shrew), மொரீஷியசில் மட்டுமே காணப்பட்ட டோடோ பறவை, ஊட்டியில் காணப்பட்ட பிணந்தின்னிக்கழுகு (பாறு)  முதலியன அழிந்துபோன உயிரினங்கள். உயிரினங்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் கூட அவற்றின் ‘அற்றுப்போத’லை முடிவு செய்கின்றன. எதையும் தின்று வாழும் குரங்கு, காக்கை, நாய் போன்றவை எங்கும் பல்கிப் பெருகுவதும் மூங்கில் இலைகளை மட்டுமே உண்டு வாழும் பாண்டா கரடிகள் அழிவதையும் காணலாம் என்கிறார் ஆசிரியர்.

தேவாங்கு, ஆந்தை போன்றவை மாந்த்ரீகக் காரணங்களுக்காகவும், உடும்பு,புலி போன்றவை மருத்துவக் காரணங்களுக்காகவும் கொன்றொழிக்கப்பட்டன. மூடநம்பிக்கையால் உயிரினங்கள் அழிந்ததுபோலவே, காப்பாற்றப்படவும் செய்திருக்கின்றன. குறிப்பாக சாரஸ் எனப்படும் பெருங்கொக்கு (‘சாரசம் வசீகரம்…என்பது பி.யு.சின்னப்பாவின் புகழ்பெற்ற பாடல்) தன்னுடைய இணையை கடைசிவரை பிரியாமல் வாழும் இந்தக்கொக்குகளைக் கொன்றால் தன்னுடைய இணைக்கும் ஆபத்து வரும் என்பது நம்பிக்கை.

மேற்கு மலைக்காடுகள் நம்முடைய மேல்நிலைத் தண்ணீர்தொட்டிகள் என்கிறார் ஆசிரியர். அவற்றை அழிப்பதென்பது நம் வீட்டுத் தண்ணீர்தொட்டிகளை இடித்தொழிப்பதுதான்.  மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பசுமைமாறாக் காடுகளின் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் தாவரப்பெருக்கம் வேறுஎங்குமே காணமுடியாதது. நாற்பது மீட்டர் உயரம் வரை வளரும் இலை உதிர்க்காப் பெருமரங்கள். அதன் விதானத்திலேயே வாழும் சோலைமந்தி மற்றும் கருமந்தி, நடுத்தளங்களில் வாழும் மலை அணில், தரையை ஒட்டிய புதர்களில் வாழும் கூரம்பன்னி போன்ற உயிரினங்கள். அந்தந்தத் தளங்களுக்கான பறவைகள். இங்கிருக்கும் பெருமரம் ஒன்றை மறுபடியும் காண ஒரு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர். ஜீவநதிகளின் ஊற்றுமுகங்களான பசுமைமாறாக்காடுகளை நாசம் செய்து அதன் பெரும்செல்வங்களான வேங்கை,ஈட்டி,தேக்கு மரங்களை ஆறுகளின் வாயிலாக கொச்சித் துறைமுகத்திற்கு அனுப்பி தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தது அன்றைய வெள்ளை அரசு. ‘வாட்டர்லூவின் வெற்றி இந்திய மரங்களாலேயே சாத்தியப்பட்டது’ என்கிறார் ராமச்சந்திரகுகா.

அதுபோக நாடுமுழுதும் போடப்பட்ட ரயில்பாதைக்கான ‘ரீப்பர்’ கட்டைகளுக்கும் இந்த மரங்கள்தான். அதிகமான மரங்களை வெட்டித்தரும் ஜமீன்தார்களுக்கு பல்லக்கு பரிசாகக் கிடைத்திருக்கிறது. இதுபோல மொட்டையடிக்கப்பட்ட மலைகளில் தேயிலைத்தோட்டங்களை நிறுவி ‘பசுமைப் பாலைவன’ங்களை உருவாக்கியது, அங்குள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தை வேட்டையாடி அழித்தது(தொப்பியில் வைத்துக்கொள்ளும் இறகுக்காக மட்டும் பல்லாயிரம் கொக்குகள், தூண்டிலில் மீன்பிடிக்கப் பயன்படும் தக்கைக்காக மட்டும் பல்லாயிரம் காட்டுக்கோழிகள்) போன்ற சர்வநாசமும் வெள்ளையர்களாலேயே நிகழ்த்தப்பட்டது.  அதேசமயத்தில் இன்றைக்கு நமக்கிருக்கும் குறைந்தஅளவு கானகச் செல்வங்களைப் பாதுகாப்பதில் அரணாக இருந்து செயல்பட்ட ஹியூகோ வுட், எ.ஓ.ஹுயூம் (இந்திய தேசிய காங்கிரசின் ஸ்தாபகர்) போன்ற வெள்ளை அதிகாரிகளைப் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகளில் எழுதியுள்ளார் ஆசிரியர்.  மந்து என்பது ஐந்து அல்லது ஆறு வீடுகள் கொண்ட தொதுவர் குடியிருப்புக்குப் பெயர். ஒற்றைக்கல் அருகில் உள்ளதால் ஒற்றைக்கல்மந்து. கோயமுத்தூருக்கு அருகில் உள்ள சிறுமுகையிலிருந்து கோத்தகிரி வழியாக ஒற்றைக்கல்மந்து வரை ஒரு கழுதைப்பாதையைப் போட்டு ‘ஒட்டக்கமண்’டை (அது ஊட்டியும் ஆனது பிற்பாடு) சென்னை ராஜதானியின் கோடைகாலத் தலைநகராக ஆக்கியவர் சல்லிவன் துரை.

இந்திய அரசியல் சட்டம் காடுகளை மாநிலஅரசின் அதிகாரத்தின் கீழ் வைத்தது மிகப்பெரிய தவறு என்று கூறிய சூழலியல் முன்னோடி மா.கிருஷ்ணன் (இவரது தந்தை அ.மாதவையா முன்னோடித் தமிழ் எழுத்தாளர்) ஒரு தீர்க்கதரிசி என்கிறார் ஆசிரியர்.நம் சட்டமன்றத்தில் சூழலியல் குறித்து ஏதாவது விவாதம் நடந்திருக்கிறதா? என்று நினைத்துப் பார்த்தாலே இதை உணர்ந்துகொள்ளலாம். மத்தியஅரசு ஒருமுறை சிங்கத்திற்காக  மத்தியப்பிரதேசத்தில் ஒரு இடத்தைக் கண்டறிந்து அங்கு கிர் காட்டின் சிங்கங்களைக் குடியமர்த்த முயற்சித்தபோது அன்றைய குஜராத் முதல்வர் மோடி ‘கிர் சிங்கங்கள் குஜராத்தின் பெருமை. அதை விட்டுத்தர முடியாது’ என்று மறுத்துவிட்டதைக் குறிப்பிடுகிறார்.  கிருஷ்ணன் முன்னோடிக் கானுயிர் புகைப்படக் கலைஞரும் ஆவார். பறவைகளின் பாரம்பரியத் தமிழ்ப் பெயர்களை உபயோகித்தும், அறிவியல் நோக்கில் கானுயிர்கள் பற்றியும் முதன்முதலில் கட்டுரைகள் எழுதியது கிருஷ்ணனே. தன் நண்பர் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை ‘Sins of Appu’s Mother’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் கிருஷ்ணன் என்பது கூடுதல் தகவல்.

மற்றொரு வனவியல் முன்னோடியான உல்லாஸ்கரந்தோ வேங்கைகளுக்காகத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். தொலையுணர்வு முறையில், ரேடியோ பொருத்தப்பட்ட கழுத்துப்பட்டைகளை அணிவித்து வேங்கைகளைக் கண்காணித்து அவர் சேகரித்த விவரங்கள் களஆய்வில் ஒரு புரட்சியையே உருவாக்கியது. அதேபோல் தானியங்கி கேமராக்களைப் பயன்படுத்தி புலிகளின் எண்ணிக்கையைத்  துல்லியமாக அறியும் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவரே. குதிரேமுக் சரணாலயத்தில் கனிமவளம் வெட்டியெடுப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடியவர் உல்லாஸ்கரந்த். இவருடைய தந்தை கன்னட முதுபெரும் எழுத்தாளர் சிவராமகரந்த். உல்லாஸ் கரந்த்தின் ‘The way of tiger’ நூலை ஆசிரியர் ‘கானுறை வேங்கை’ (காலச்சுவடு பதிப்பகம்) என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இன்னொரு முன்னோடியான ராமுலஸ் விட்டக்கேர் காப்பிட இனப்பெருக்கத்தின் மூலம் விலங்குகளைப் பெருக்கி அழிவிலிருந்து காக்க முடியும் என்று நடைமுறையில் செய்து காட்டியவர் . சென்னை கிண்டியில் பாம்புப்பண்ணை, கிழக்குக் கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை போன்றவை இவரது சாதனைகள்.

ஒரு வீட்டுவளர்ப்புப் பிராணி பராமரிக்க ஆளில்லாமல் அனாதையாக விடப்பட்டால், அதன் இருதலைமுறைகள் கடந்தபிறகு அதன் இயல்பான காட்டுயிர் நிலைக்குச் சென்று விடும். அவைகளை feral என்று கூறுகிறார்கள்.    ஊட்டி முக்குருத்தி மலையில் திரியும் எருமைகள், கோடிக்கரையில் திரியும் குதிரைகள் என்று பல உதாரணங்கள். இத்தகைய feral dogs எனப்படும் தெருநாய்கள் கிண்டி கவர்னர் மாளிகையில் அரிதாக இருக்கும் வெளிமான்களை கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடிய செய்தியைக் குறிப்பிடும் ஆசிரியர், தேவையில்லாமல் தெருநாய்கள் புனிதப்பசுவாக ஆக்கப்படுவதாகவும், அவை ஒழிக்கப்படவேண்டியவையே என்றும் கூறுகிறார். இந்தக் கருத்தை காந்தியடிகளும் ஆதரித்த தகவல் சற்றே ஆச்சரியமூட்டுகிறது. அதேபோல சமீபமாக  திருட்டு வேட்டையாடிகளை அவர்கள் பட்டறிவையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் வகையில் வனக்காவலர்களாகவும், சுற்றுலாப்பயணிகளுக்கு காட்டினுள் வழிகாட்டியாகச் செல்லும் பணியிலும் அமர்த்தப்பட்டது வனப்பாதுகாப்பில் ஒரு முக்கியமான திருப்பம் என்கிறார் ஆசிரியர். இது அன்றைய வெள்ளை அரசு கள்ளர்களை ஒழிக்க அவர்களிடமிருந்தே ஆளெடுத்து ‘போலீஸ் பட்டாளம்’ ஏற்படுத்தியதை நினைவுபடுத்தியது (இது சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்ட’த்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நினைவு) இது போன்ற எண்ணற்ற செய்திகள் கட்டுரைதோறும்.

பறவைகளின் உணவுப்பழக்கங்களையும், வலசை போவதையும் பற்றிப்பாடியிருக்கும் சங்ககாலப்புலவர் பிசிராந்தையார், சக்திமுத்தப் புலவர், மாங்குடி மருதனார் என்று சங்கப்பாடல்களில் இருந்து திருக்குறள், பாரதியார் கவிதை வரை கட்டுரை தோறும் வரும் மேற்கோள்கள் மற்றும் கட்டுரைத் தலைப்புகள் ஆசிரியரின் மரபு சார்ந்த ரசனையை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஓங்கில்(Dolphin), ஆவுளியா (Sea cow), ஓதம் (tide), அலையாத்திக்காடுகள்(Mangrove forest), கருநாகம்(King cobra)போன்ற தேர்ந்தெடுத்த தமிழ்ப்பெயர்களையே பயன்படுத்துவதும் கூடுதல் சுவையளிக்கிறது. சங்ககாலப் பாடல்களில் சூழலியல் மற்றும் இயற்கை குறித்துத் தொழிற்படும் மொழிவளம் சமீபகாலக் கட்டுரைகளில் பிரதிபலிக்காதது குறித்து வருந்துகிறார் ஆசிரியர். சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு பற்றிய கரிசனம் ஒரு மக்கள் இயக்கமாக மாறவேண்டுமென்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும் மிகச்சிறிய வயதிலேயே இயற்கை குறித்த புரிதலையும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும்,தாவரங்களுக்கும் நமக்குமான பிணைப்பையும் அறிமுகப்படுத்தவேண்டும். அதே சமயத்தில் கொடிய விலங்கு, கொடூரமான காடு என்று அவைகள்மேல் வெறுப்பு வருவதுபோல் அறிமுகப்படுத்தக் கூடாது என்கிறார். நாம் சிறிதுகாலமே இருக்கப்போகிற இந்த உலகத்தில் நாம் ஒரு சிறுபகுதியே என்பதும், மற்ற உயிரினங்கள் நம் பங்குதாரர்களே என்பதும் நினைவில் இருப்பது மிக முக்கியம் என்கிறார் ஆசிரியர். சூழலியல் ஆரம்ப வகுப்புகளிலேயே பாடமாக வைக்கப்படவேண்டும் என்கிறார் ஆசிரியர் தியடோர் பாஸ்கரன். கல்லூரியில் பாடமாக வைக்கப்பட வேண்டிய இந்நூல் சூழலியல் ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத ஒன்று.

ஆறுகளைக் கொன்றோம், வனங்களை அழித்தோம், பெறுநுகர்வில் திளைத்தோம். இது பரிகாரத்திற்கான நேரம். நாம் செய்யும் குறைந்தபட்ச பரிகாரம், நமக்களிக்கப்பட்ட பூமியை அடுத்த தலைமுறைக்கு முடிந்தால் சிறந்த ஒன்றாக அல்லது குறைந்தபட்சம் அதேபோலவாவது கையளிப்போம். எதையோ இரையென்று தின்று கிழிபட்ட பாம்புக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டுதானே

கிருஷ்ணன் சங்கரன்

கையிலிருக்கும் பூமி வெண்ணி இந்திய நாயினங்கள் – தியடோர் பாஸ்கரன் கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2022 10:31

கணக்கு- கடிதங்கள்

கணக்கு உள்ளிட்ட கதைகள், ஐந்து நெருப்பு

அன்புள்ள ஜெயமோகன்,

புனைவு களியாட்டின் கணக்கு சிறுகதையை வாசித்தேன். வாசித்தபின் தோன்றிய எண்ணங்கள்:

நல்லவருக்கு மட்டும் அருள்பவர் கடவுளல்ல.கெட்டவருக்கும் அருள்பவரே கடவுள்.யாருக்கு தெய்வத்தோடு பிணைப்பு வலுவாகவுள்ளதோ அவரே பெரும் அருளைப்பெறுகிறார். காளி தெய்வத்தை நம்பி இறங்கிய பந்தயத்தில் வென்றார்.தெய்வத்தை மறந்து தன்னை நம்பிய பந்தயத்தில் தோற்றார். அச்சுதன் தன் தெய்வத்தை இறுகப்பற்றிக் கொண்டதால் கடைசியில் வென்றார். அச்சுதன் கொண்டது விழிப்புமன தெய்வம், காளியன் கொண்டது ஆழ்மன தெய்வம்.

சக்திவேல் எழுதிய கடிதத்தை படித்தபின் விரிந்த எண்ணங்கள்:

அவர் கடிதம் மூலம் கிடைத்த சொல் உள்ளுணர்வு. அதன்பின் கதையை தர்க்கத்துக்கும், உள்ளுணர்வுக்குமிடையே  நடக்கும் பந்தயமாய் சிந்திக்க தொடங்கினேன்.எந்த தெய்வம் எப்படி வெல்லும்? எப்போது வெல்லும்? காளியின் நிமிர்வும், பணிவும் ஒருங்கே வெளிப்பட்ட தருணத்தில் வென்றார். கடைசி பந்தயத்தில் நிமிர்வு மட்டுமே இருந்தது. பந்தயத்தை எளிதென கணக்கு போட்டதால் பணிவை மறந்துவிட்டார்.ஆழ்மன தெய்வத்தை அழைக்கவில்லை. இருந்தும் தெய்வம் அவரை கைவிடவில்லை.அவர் சொன்ன கணக்கு சரி ஆனால் கணக்கை சரிபார்க்கும் கணக்கு தவறு. அந்த சூச்சமம் அவர் தெய்வத்துக்கும், அவருக்கும் தெரியவில்லை.தெய்வம் கைவிட்டதாய் நிம்மதியிழக்கிறார்.அந்த போட்டியிலும் பணிவை கொண்டிருந்தால் இது தெய்வத்தின் விளையாட்டென ஆறுதல் கொண்டிருப்பார்.இதன்மூலம் நாம் உள்ளுணர்வின் எல்லையை உணரலாம். உள்ளுணர்வை தர்க்கத்தை கொண்டு மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.தெய்வம் கைவிட்டதாய் காளியன் உணர்ந்தது அவரின் தர்க்கமனத்தின் தோல்வியை.

அச்சுதன் தர்க்க மனதின் வடிவம்.புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு உள்ளுணர்வை மீறிச்செல்லும் செயல்.இதுவும் ஒரு தெய்வம்.இந்த தெய்வத்துக்கு தன்முனைப்புதான் படையல்.அவர் தன் தன்முனைப்பை படையலாக வைத்து கடைசி பந்தயத்தில் வென்றார். இந்த தெய்வத்துக்கு நல்லது, கேட்டது கிடையாது. வெற்றி, தோல்வி மட்டுமே உண்டு.தன் திறன் வெளிப்பட்டு வென்றதா இல்லை தோற்றதா என்று மட்டுமே பார்க்கும்.உள்ளணர்வு தெய்வம், தர்க்க தெய்வத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அது மெதுவாய்த்தான் கற்றுக்கொள்கிறது. வெளிப்பாட்டை மட்டும் விரைவாய் காட்டும்.

காளியானையும், அச்சுதனையும் கொண்ட நமக்கு அவ்விரண்டு தெய்வங்களும் சரியாய் வெளிப்படும் நல்லூழை அத்தெய்வங்கள் அருளட்டும்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டு ஒரு மழைபோல வந்து சென்றுவிட்டிருக்கிறது. சென்னையில் பெருமழை வரும்போது இப்படித்தான். நமக்கு மழை போதும் போதுமென்று ஆகும். மழை நின்றபின் வெயில் வரும். பிறகு நினைத்துப்பார்க்கும்போது அய்யோ எவ்ளவு மழை என்று இருக்கும். இப்போது ஒவ்வொரு நாளும் கண்விழிக்கிறேன். ஏதாவது படிக்கிறேன். ஆனால் அந்தக்கதைகள் வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம். ஒவ்வொரு நாளும் மனசு காலையிலேயே குதிக்க ஆரம்பித்துவிடும். அந்த கொண்டாட்டத்துக்காக ஏங்குகிறேன்.

இப்போது மீண்டும் அக்கதைகளை வாசிக்கிறேன். இன்றைக்கு வாசிக்கையில் அப்போது பல கதைகளை சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. உதாரணமாக கணக்கு. அது என்ன கணக்கு? ஏய்ப்பவனின் கணக்கு எளிமையானது. ஏய்க்கப்படுபவனின் கணக்குதான் மேதைத்தனமானது. அதுதானே அந்தக்கதை. அதை புரிந்துகொள்ள இவ்வளவு நாள் ஆகிவிட்டது.

எஸ்.பிரபாவதி

ஜெயமோகன் மின்னூல்கள் வாங்க

***

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2022 10:30

December 31, 2021

அருண்மொழிநங்கை நூல் வெளியீட்டு விழா-ஒத்திவைப்பு

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அருண்மொழி நங்கையின் நூல் ‘பனி உருகுவதில்லை’ வெளியீட்டுவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்

அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை

அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்

அருண்மொழியின் சொற்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:39

திட்டங்கள் என்ன?

அன்புள்ள ஜெ.,

என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? ஐந்தாண்டுத் திட்டம் போல எதுவும் உள்ளதா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்   

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

ஐந்தாண்டு? முன்பெல்லாம் எனக்கு ஐம்பதாண்டு திட்டங்கள்தான் இருந்தன. பின்னர் இருபதாண்டுத் திட்டங்கள். பின்னர் பத்தாண்டுத்திட்டங்கள். இனிமேல் ஐந்தாண்டுக்கு திட்டமிடவேண்டுமோ?

என் ஐம்பதாண்டுக்காலத் திட்டம் என்பது வெண்முரசு. அதை முடித்துவிட்டேன். அது பி.கே.பாலகிருஷ்ணனிடம் சொன்னது. இலக்கியத்துக்கு என ஓர் இயக்கம், ஓர் அமைப்பு என்பது இன்னொரு ஐம்பதாண்டுகாலத் திட்டம். அது எம்.கோவிந்தனிடம் சொன்ன ஒருவகை வஞ்சினம். அதையும் செய்துவிட்டேன். அதை மேலும் செம்மை செய்யவேண்டும் என்பதே எஞ்சியிருக்கிறது. வரும் ஆண்டில் அது இன்னும் விரிவடையும். ஆனால் அதில் நான் ஆற்றவேண்டிய பணி கொஞ்சமே. என்னைவிட ஆற்றல் மிக்கவர்களிடம் அது சென்றுவிட்டது.

அரைகுறையாக நின்றிருக்கும் இரு வேலைகள், ஒன்று அசோகவனம். இன்னொன்று கீதை உரை. அவற்றை முழுமைசெய்யவேண்டும். அதைத்தான் வரும் ஆண்டுக்கான திட்டமாக வைத்திருக்கிறேன்.

இவ்வாண்டு தமிழுக்கு என ஓர் இணையக் கலைக்களஞ்சியம் உருவாகும். விக்கிப்பீடியாவை விட அதிகாரபூர்வமானதாக. பிழையற்றதாக. அதற்கும் உரிய நண்பர்களை ஒருங்கிணைத்துவிட்டேன்.

தமிழ் நாட்டார்தெய்வங்களாலான ஒரு நாவல், ஒரு புராணம் என்றும் சொல்லலாம், எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறது. அதன் வரைவை இலங்கை நாடகப்பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அதன்பொருட்டு இருபதாண்டுகளாக சேர்த்த ஆய்வுகள் உள்ளன. அறிஞர் தொடர்புகள் உள்ளன. அவை வேறுநூல்களும் ஆகியிருக்கின்றன. ஆனால் தொடக்கமென ஒன்றும் நிகழவில்லை. நிகழ்ந்தால் நல்லது. இல்லையேல் ஒன்றும் குறையில்லை. இப்போதைக்கு தென்திசை வலம் என்னும் பெயர் மட்டுமே கையில் இருக்கிறது.

எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதியவை சமீபத்திய நூற்றுநாற்பது கதைகள். மூன்று சிறுநாவல்கள். அதைப்போல தன்னிச்சையாக ஏதாவது புனைவெழுத்து தோன்றினால் எழுதலாமென எண்ணியிருக்கிறேன். புனைவெழுத்து என ஏதும் எழுதவில்லை என்றாலும் இனி ஒன்றும் குறைவில்லை. என் அகம் சென்றிருக்கும் இடம் புனைவுக்கு மிகமிக அப்பால். புனைவை எளிய மானுடவிளையாட்டெனப் பார்க்கும் சில உச்சங்கள் வாய்த்துள்ளன.

மற்றபடி பெருந்திட்டங்கள் ஏதுமில்லை. எல்லாவற்றையும் விட்டு விலகவேண்டும் என்ற விசைதான் உண்மையில் வலுவாக உள்ளது. அதை இப்பக்கம் இழுத்து இன்னும் இரு என வைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது மெய்யாகவே ஆர்வமிருப்பது அடுத்த தலைமுறையினரில் இருந்து வருபவர்களைப் பற்றித்தான். இலக்கியம், சமூகப்பணி ஆகியவற்றில் அடுத்த ஐம்பதாண்டுகளில் சாதிக்கக்கூடியவர்களை அறியவேண்டும் என்று, அவர்களிடம் பேசவேண்டும் என்று விரும்புகிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:35

விஷ்ணுபுரம் விழா- பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். நலம்தானே?

ஊருக்குத் திரும்பி இரு நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இன்னும் மனம் விருதுவிழா நிகழ்ச்சியின் நினைவுகளிலிருந்து விடுபடவில்லை. எண்ணற்ற முகங்கள் மனத்திரையில் நகர்ந்தபடி உள்ளன. குரல்கள் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளன. எதிர்காலத்தில் நண்பர்களிடையில் மீண்டும் மீண்டும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளத் தக்க இனிய நினைவுகளாக இவையனைத்தும் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

இளம் எழுத்தாளர்களின் அரங்குகள் மிகவும் ஆர்வமூட்டுபவையாக இருந்தன. திரண்டிருந்த வாசகர்களின் வினாக்களை அவர்கள் பாசாங்கில்லாமல் எதிர்கொண்டு தன் மனம் உணர்ந்த பதில்களை உடனுக்குடன் சொன்ன விதம் பிடித்திருந்தது.  அவர்கள் நம்புகிற ஒன்றை அதே தீவிரத்துடன் அவையின் முன் வைக்கும் அளவுக்கு அவர்களுடைய ஆழுள்ளம் அக்கருத்துகளில் தோய்ந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சுஷில்குமார், செந்தில் ஜெகன்னாதன், ஜா.தீபா, திருச்செந்தாழை, காளிபிரசாத் ஐவருமே இன்றைய சிறுகதையுலகத்தின் ஐந்து வகைமாதிரிகள். ஒருவரைப்போல ஒருவர் இல்லை. இந்த ஐவருடைய எழுத்துகளையும் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதே ஊக்கத்துடனும் அர்ப்பணிப்போடும் இவர்கள் தொடர்ந்து எழுதுவார்களெனில், எதிர்காலத்தில் இவர்கள் தனித்தன்மை மிக்க ஆளுமைகளாக எழக்கூடும்.

தெலுங்குக்கவிஞர் வீரபத்ருடு தாகூரை வகுத்துச் சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது. தாகூருக்கு முந்தைய கவிஞர்கள் அனைவரும் இறைவனின் பெயரையும் உருவத்தையும் முன்வைத்துப் பாடிய சமயத்தில் தாகூரே முதன்முதலாக இறைவனை பெயரற்றவனாகவும் உருவற்றவனாகவும் உணரும் வகையில் அவன், அது, நீ என மாற்றுச் சொற்கள் வழியாக பாடினார் என்னும் குறிப்பு அவருடைய ஆழ்ந்த வாசிப்பின் வலிமையை உணர்த்தியது. ஒரு படைப்பாளியின் படைப்பூக்கத்தால் எளிய உலகியல் காட்சியொன்று, உலகியலுக்கு அப்பாற்பட்ட காட்சியாக படைப்புக்குள் உருமாறும் தன்மையை மிக எளிமையான சொற்களால் அவர் அவையோருக்கு உணர்த்தினார். ஆற்றில் குளிக்க வந்த வால்மீகி மரக்கிளையில் அமர்ந்து கொஞ்சி விளையாடிய ஒரு ஜோடி பறவையைப் பார்த்தார். அவர் கண் முன்னாலேயே ஒரு வேடனின் அம்பு பட்டு ஒரு பறவை இறந்துவிடுகிறது. துணைப்பறவையை இழந்த மற்றொரு பறவை துக்கத்தில் தவிக்கிறது. பறவையின் துக்கத்திலும் சோகத்திலும் கவிஞர் ராமனின் துக்கத்தையும் சோகத்தையும் உணர்ந்துகொள்கிறார். அக்கணத்தில் உருவான மன எழுச்சி அவர் ராமாயணம் எழுதக் காரணமாகிறது. கண்ணால் பார்க்கும் வால்மீகி வேறு. காவியம் படைக்கும் வால்மீகி வேறு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு வழியாக படைப்பாக்கத்தின் நுட்பத்தை அவையிலிருந்த பார்வையாளர்களுக்குப் புரிய வைத்துவிட்டார் வீரபத்ருடு. தேர்தல் அதிகாரியாக பணிபுரிய வந்த தமிழகத்தில் ஆழ்வார்களின் பிறந்த ஊர்களையும் ஆலயங்களையும் உ.வே.சா.வின் பிறந்த ஊரையும் அவர் தமிழ் பயின்ற மடத்தையும் தேடிச் சென்று பார்த்த அனுபவத்தையும் அவர் விவரித்த விதம் மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒருவருக்கு இருக்கவேண்டிய தேடலும் விழைவும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரிடம் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் நிறைந்தேன்.

ஜெயராம் ரமேஷ் தன் உரையில் மேற்கோளாகக் குறிப்பிட்ட ‘பிரக்ருதி ரட்சிதி ரட்சித’ (இயற்கை தன்னைப் பாதுகாப்பவரைப் பாதுகாக்கிறது) என்ற வாக்கியம் அக்கணமே என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. மாபெரும் உண்மையைப் புலப்படுத்தும் எளிய சொற்கள்.

எம்.கோபாலகிருஷ்ணன் அமர்வில் தன்னை நோக்கி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள் கதைப்பாத்திரங்களின் மனப்போக்குக்கும் மாறி வரும் சமூக எதார்த்தத்துக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விலக்கத்தை உணர்த்துபவையாக இருந்தன. சோ.தருமனின் அமர்வு திடீரென பொழிந்த அடைமழைபோன்ற உற்சாகத்தை அளித்தது. இரவு எட்டு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடிவடைந்த அவருடைய உரை அனைவருக்கும் புத்துணர்ச்சியை ஊட்டியதை அவையில் அமர்ந்திருந்த ஒவ்வொருவருடைய முகத்திலும் பார்த்தேன்.

விக்ரமாதித்யன் அண்ணாச்சி தனக்கான அமர்விலும் ஏற்புரையிலும் பல பழைய நண்பர்களை நினைவுகூர்ந்தபடியே இருந்த விதம் நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் உரையில் காடு வளம்பெற ஒவ்வொரு முறையும் தன்னை அழித்துக்கொண்டு முளைத்து வரும் தருவைப்புல்லை அண்ணாச்சிக்கு உவமையாகச் சொன்ன விதம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தன் பண்பாட்டின் குரலாக தன் படைப்புகள் நிற்பதை ஒரு கவிஞன் நேருக்கு நேர் பார்ப்பதும், அதை ஓர் அவையே கூடி நின்று ஓங்கி ஒலிப்பதை காதாரக் கேட்பதும் மிகப்பெரிய பேறு.  ஒரு மகத்தான கவிஞனை அவைநடுவில் அமரவைத்து மனமாரப் பாராட்டுவது மாபெரும் பேறு. விருதுநாள் அன்று நாம் அனைவருமே பேறு பெற்றவர்களானோம்.

ஒரு சிறு பிழை கூட நேர்ந்துவிடாத வண்ணம் துல்லியமாகத் திட்டமிட்டு இரண்டு நாட்கள் நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:34

விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-3

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

அன்பிற்கினிய ஜெ,

இரண்டு நாள் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு விழா இவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்குடன், யாரின் கட்டுப்பாடின்றி வாசகர்களால் நடக்கிறது என்பது மிக அபூர்வமான ஒன்று. நீங்கள் கூட முதல் நாள் முழுதும் பின் வரிசையில் அமர்ந்து வாசகர்களாகிய எங்களை முன்னிருத்தியது அற்புதம்.

ஒரு சிறந்த கல்வி நிலையத்தில் பார்ப்பது போல் அனைவரது கைகளிலும் ஒரு நூலை கண்டது மிக அழகு. தேநீர் இடைவேளைகளில் சிறு சிறு கூட்டங்கள் எல்லா எழுத்தாளர்களையும் மொய்த்துக்கொண்டு அங்கும் ஒரு விவாதம் நடந்தது. செவிக்கு ஈயாத பொழுது வயி றுக்கும் தாராளமாகவே சுவைமிக்க உணவு வழங்கப்பட்டது.

அஜிதன்

நான் எழுத்துகள் வழியாக பார்த்த முகங்களாகிய காளிப்ரசாத், இரம்யா, விக்னேஷ் மற்றும் ஜாஜா, ஷாகுல் ஹமீது,ஆஸ்டின் சௌந்தர் போன்றோரை கண்டது இனிது .நான் இந்த விழாவிற்கு வந்த  காரணங்களில் ஒன்று தொலைபேசி வழியாக மட்டுமே தொடர்பில் இருந்த ஸ்டாலின் மற்றும் குக்கூ சிவராஜ் அவர்களை சந்திப்பது . வந்த முதல் நாளே முதல் ஆளாக என்னை ஆரத்தழுவி ஸ்டாலின் என்னை வரவேற்றார்.  பின்பு என்னை குக்கு முத்துவிடம் அறிமுகம் செய்தார். அவரும் என்னை கண்டதும் தழுவிக்கொண்டார். பின்பு அவர்களுடன் தன்னரம் புத்தக அங்காடியில் உதவிக்கு இருக்கும் பொழுது நூர்பு சிவகுருநாதன் அவர்களை சந்தித்தேன். எனக்கான பல கேள்விகள் அவரிடம் இருந்தது. காந்தியம் மற்றும் காந்திய பொருளாதாரம் குறித்து 2ம் நாள் அதிகாலை ஒரு தேநீர் விடுதியில் பேசிக்கொண்டோம்.

அமிர்தம் சூரியா

பிரியும் பொழுது மிக உயர்த்த இந்த மனிதர்கள் எனக்கு நண்பர்களாக மாறி இருந்தனர். ஒரு வாசகனாக எனக்கான இந்த விழா மிக முக்கியமானது. என்னை எங்கு நிருத்திக்கொள்வது என்னும் தெளிவு அடைந்தேன். இன்னும் வாசிப்பை வலிமை படுத்த உறுதி கொண்டேன். நான் திருச்செந்தாழையின் சில புனைவுகள், விக்ரமதியன் ஐயா அவர்களின் இரு தொகுப்பு மற்றும் கவிமணியின் ஆசிய ஜோதி (முக்கால் பாகம்) மட்டுமே படித்து விட்டு வந்திருந்தேன். திரு சோ.தருமன் மற்றும் திரு கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை படிக்க வில்லை. மேலும் விழாவில் திரு போகன் சங்கர் மற்றும் லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை கண்டதும் என் வாசிப்பு இவ்வளவு சிறு வட்டத்திற்குள் உள்ளது என கண்டு கொண்டேன். இந்த விழா எவ்வளவு கோருகிறது என்பதை இனிமையுடன் உணர்துகொண்டேன். நிச்சயம் அடுத்த ஆண்டு நான் இவற்றை மறக்க மாட்டேன்.

இந்த இரு நாட்களும் என் வாழ்வின் மிக பெரிய நாட்கள். ஒன்றை நான் எப்பொழுதும் எண்ணுவதுண்டு.

இலக்கியமே என் மீட்சி…

அன்புடன்

அரவிந்தன்

இரஜை

 

பி.கு

கவிதை எனக்கு வாய்க்கப்படாத ஒன்று என நினைத்திருந்தேன். கூட்டத்தில் தேநீர் இடைவேளையில் நான் எழுதிய கவிதை. விக்கிரமாதித்தன் ஐயா அவர்களுக்கு நன்றி.

 

சுட்டெரிக்கும் வெயில்

கசியும் காற்றிற்க்கு ஏங்கி

நோடிப்போழுது திறக்கும்

பெருமங்காடி வாசர்கதவுகளில்

நுகர்வோர் தேடும் பூக்கார சிறுமி

சுனில் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.விஷ்ணுபுரம் விழா அறிவிப்பு வந்தது முதல் கலந்து கொள்வதற்கு ஆவலாக காத்திருந்தேன்,வெள்ளிக்கிழமை இரவு கோவைக்கு வந்து சேர்ந்தேன் அண்ணனின் நண்பர்கள் அறையில் தங்கி கொண்டேன்.

நான் 2018 -இல் விழாவில் கலந்து கொண்டாலும் அமர்வுகளில் பங்கு கொள்ளவில்லை அதனால் இதை என் முதல் விஷ்ணுபுரம் விழாவாகவே கருதுகிறேன்

நான் உங்களை பல தருணங்களில் சந்தித்திருந்தாலும் உரையாடியதில்லை,இம்முறையும் உரையாடவில்லை ஆனால் அறிமுகம் செய்து கொண்டேன்,என்னளவில் நான் அந்த தயக்கத்தை கடந்தது மகிழ்ச்சி

என் பெயரைக் கேட்டவுடன் எந்த ஊர் என்று கேட்டீர்கள் ,கல்லிடைக்குறிச்சி என்று சொன்னதும் இது இங்கே உள்ள பெயர் கிடையாது குமரி நெல்லை பகுதிகளில் உள்ள பெயர் என்று கூறினீர்கள்

விழா அறிவிப்பை தொடர்ந்து விருந்தினர் அறிவிப்பு, உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருவதனால் நான் ஒவ்வொரு நாளும் விருந்தினர்களை கணிக்க தொடங்கினேன் 8 விருந்தினர்களில் 4 விருந்தினர்களை கணித்தேன்

இலக்கிய அமர்வுகள் அனைத்துமே ஆசிரியர்களின் படைப்புலகத்துக்குள் நம்மை அழைத்து செல்பவையாக இருந்துது

ரம்யா

நான் மிகவும் ரசித்த அரங்குகள்;

1. கோகுல் பிரசாத்

அவர் சினிமாவை “Reverse process to literature” என்று கூறியது,இலக்கியம் சினிமாவாக மாறும் போது மூன்று இடங்களை தவிர்த்து (Intimate scenes, Landscape, Sports) மற்ற அனைத்து இடங்களிலும் இலக்கிய பிரதி தான் மேலோங்கி நிற்கும் என்று கூறியது, இலக்கியம் சினிமாவாக மாறும்போது அதன் மீது நாம் எந்த அளவு எதிர்பார்ப்பை வைக்க வேண்டும் என்ற தெளிவை தந்தது.

2 . ஜா. தீபா

இந்த அரங்கு தொடங்கும் முன்பே அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது, எப்படி உரையாடலை தொடங்குவது என்று யோசித்து மிகவும் பழைய பாணியில் நீங்களும் திருநெல்வேலியா என்று ஆரம்பித்து அவருடைய ஆவணப்படங்கள் குறித்தும் கதை to திரைக்கதை கட்டுரை தொகுப்பு குறித்தும் பேசினேன்.விஷ்ணுபுரம் விவாத அரங்குகள் நடக்கும் ஒழுங்கினை குறித்தும் இது ஏன் கோவையில் நடப்பது சிறந்தது என்றும் எடுத்துரைத்தார்.

3 . பா. திருச்செந்தாழை

இந்த அரங்கை ஈரோடு கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்,இந்த அரங்கை துவங்கும் போது கேள்வி கேட்க தயங்குபவர்கள் தங்கள் தயக்கத்தை விடுத்துகேள்விகளை கேட்கலாம் பாதி கேள்வி கேட்டால் கூட போதும் நான் அதை முழுமை படுத்தி அவரிடம் கேட்டுவிடுவேன் என்று ஊக்கப்படுத்தினார் அனால் முடிவில் ஒரு திருப்பம் வைத்து இந்த அரங்கில் மட்டும் கேள்வி கேட்பவர்களிடம் திருப்பி கேள்வி கேட்கப்படும் என்றார், சரிதான் என்று கைதட்ட ஆயுத்தமானேன்

இவருடைய கதைகளில் வரும் கவிதை தன்மையை பற்றியும் உரையாடல்கள் சிறப்பாக அமைவதை பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தன.

4 . சோ தர்மன்

இவருடைய எழுத்துக்களை படித்தது இல்லையே என்ற எண்ணமே எனக்கு எழவில்லை அவருடைய படைப்புகள் சார்ந்த கேள்விகளுக்கு அவர் எளிமையாக அளித்த பதில்கள் எனக்கு புரியும் வகையிலேயே அமைந்தன , அவருடைய படைப்புகளை விரைவில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் வகையில் அவருடைய அரங்கு அமைந்தது.

என்னுடைய நாவல் வெளி வருவதற்கு காலதாமதம் ஆவது என்னுடைய சோம்பேறித்தனத்தால் அல்ல நான் எழுதுவதற்கு  தேவையான அனைத்து தகவல்களையும் சேர்த்து வைத்து ஒரு நெசவாளனை போல நெசவு செய்வேன் என்றார், நேரடியாக எனக்கு காஞ்சிவரம் படம் தான் நினைவுக்கு வந்தது, தினமும் சிறிதளவு பட்டு நூலை திருடி வந்து முழுமையான அலங்கார நேர்த்தியுடன் ஒரு பட்டு தயாராக காலம் பிடிக்கவே செய்யும்.

விழாவில் திரையிடப்பட்ட ஆவணப்படம் என்னை மிகவும் கவர்ந்தது, குறிப்பாக பகவதியம்மாள் பேசுமிடம் அவ்வளவு அருமையாக இருந்தது.

விருது விழாவில் நீங்கள் குறிப்பிட்டது போல் நீங்களும் ஒரு பார்வையாளராகவே அரங்குகளில் கலந்து கொண்டீர்கள்.நண்பர்கள் அனைவரும் விழாவை சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்தினார்கள், குறிப்பாக இரண்டு நாட்களும் உணவு சிறப்பாக இருந்தது.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக அமைந்தது எழுத்தாளர்களும் வாசகர்கள் போலவே ஆர்வமாக இந்த விழாவில் கலந்து கொண்டது தான். நாஞ்சில் நாடன், சு வேணுகோபால் ,லட்சுமி மணிவண்ணன் ,சுஷில் குமார் ,செல்வேந்திரன் ,ஜாதீபா ஆகியவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு பேசியது அந்த சூழல் எனக்கு கொடுத்த தைரியமாகவே கருதுகிறேன். என் வயது ஒத்தவர்கள் எவ்வளவு அருமையாக கேள்வி கேட்கிறார்கள் என்பதை பார்க்கும்போது  நான் இன்னும் வாசகன் என்று சொல்லி கொள்வதற்கே வெகுதூரம் செல்லவேண்டி  இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

என் வாழ்வில் நிறைவடைந்த இரு நாட்களாக இது நீடிக்கும் அடுத்த விஷ்ணுபுர விழாவில் நான் கலந்துகொள்ளும் வரை.

அன்புடன்
பிச்சையா பாலசுப்ரமணியன்

https://www.facebook.com/vishnupuram.vattam/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.