காடு [Kaadu] Quotes
காடு [Kaadu]
by
Jeyamohan705 ratings, 4.23 average rating, 48 reviews
காடு [Kaadu] Quotes
Showing 1-13 of 13
“ஆனால் தொலைவில் ஓங்கி எழுந்து நிற்கின்றன மலைகள். அவற்றின் பச்சைப்பசும் குவியல் மீது குளிர்ந்த கரிய பாறை முகடுகள். அவற்றின் மௌனம் தனக்குள் சிரித்துக்கொள்வது போலிருக்கிறது. மலைமுகடுகளைப் பார்க்கும்போது மனதில் ஓடும் எண்ணங்கள் வேகம் குறைந்து கனத்து அசைய ஆரம்பித்துவிடும். சில கணங்களில் காட்டையும் மலைச்சரிவுகளையும் அம்மலை முகடு மீதிருந்து பார்ப்பதுபோல ஒட்டு மொத்தமாகப் பார்க்க முடியும். அந்த விரிவில் காடு ஒன்றுமே நிகழாத வெளியாக விரிந்து கிடக்கும். மரங்கள் குலுங்குகின்றன. தொலைவில் ஒரு புள்ளிமான் மட்டும் குனிந்து மேய்கிறது. கல்வெர்ட் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. சிறிய அசைவுகள். அசையாது படுத்திருக்கும் பசு மீது உண்ணிகள் நகர்வதுபோல. வேலை என்று ஒன்றுமில்லை. மலைகளின் அடியில் அப்படி சும்மா இருப்பது சாதாரண விஷயமல்ல. ஒரு தருணம் மலையளவு பெருத்து விரிந்தும், மறுதருணம் மலைகளுக்கு முன் தூசியாக உணர்ந்தும் மனம் அங்குமிங்கும் பெருகி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏராளமான சொற்கள். எல்லாச் சொற்களும் சற்று அசைந்தால் கூட கைபட்ட தடாகத்து மீன்கள்போல மறைந்துவிடுகின்றன.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“சிமிண்ட் குழைவதைப் பார்க்கையில் ஓர் இதம். மென்மையான குழைவுகள். மண்வெட்டியால் அரியப்படும்போது உருவாகும் சிறு சமப்பரப்புகள். நீர் ஊற்றப்படும்போது நுரைக்கும் கொழும்பால். கருங்கற்கள் அடுக்கப்படுவதைச் சலிப்பின்றிப் பார்த்து நிற்கலாம். தனித்தனியாகக் கிடக்கையில் எவ்வித வடிவமும் இல்லாத சாம்பல் நீலமொத்தைகள். ஒரு கல் மீது ஒரு கல்லைத் தூக்கி கொத்தன் சிவனாண்டி வைக்கும்போது ஒன்றின் புடைப்பு பிறிதின் குழிவில் கச்சிதமாகப் போய் அமர்கிறது. ஒன்று பிறிதை நிரப்பி இணைந்து ஒற்றைக் கற்சுவராக மாறுகின்றன. கொத்தனாரின் கண்களுக்கு மட்டும் அவை தனிக்கற்கள் அல்ல. கட்டப்படாத ஒரு சுவரிலிருந்து பிரிந்து கிடப்பவை. குண்டு தொங்கும் நூல், ரசமட்டம், மரச்சட்டம். மெல்ல மெல்ல அவற்றினால் வகுக்கப்பட்டு சீரான, நேரான வடிவங்கள் எழுந்து வருகின்றன. சுற்றிலும் சீரற்ற பூமி. மண்ணின் வடிவ ஒழுங்கற்ற அலைகள். நடுவே அந்தச் சீரான வடிவம் மனிதனின் இச்சைபோல. மனிதன், அவனால் முடிந்தால் பூமியை முழுக்க இப்படிச் சீரான வடிவங்களாக மாற்றி விடுவான். அதற்கான ஒரு தொடக்கம் இந்தச் சுவர். இந்தக் கல்வெர்ட். இந்த ஓடைக்கரை. அப்பால் பிரம்மாண்டமாக எழுந்த சிற்றாறு அணை.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம். மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன. ஏறி ஏறி உச்சியில் கால் வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்துவிடுகிறது. ஏறும்போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன். பிரம்மாண்டமான ஓர் அலங்காரக் கூரை. அற்பனும் அபத்தமானவனுமான மனிதன் என்ற பிராணிக்கு சற்றும் தேவையில்லாத ஆடம்பரம். மழையிலிருந்தும் வெயிலில் இருந்தும் தப்பும் பொருட்டு மனிதன் வீடுகளைக் கட்டிக் கொள்ளவில்லை; அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. மகத்தான இந்த விரிவின் முன்னால் பதைபதைப்பின்றி அவனால் நிற்க முடியாது என்பதனால்தான். வானமற்ற இடத்தில்தான் அவனால் நான் நான் என்று சதா நினைத்தபடி திளைத்து வாழமுடியும் என்பதனால்தான். எத்தனை விரிவு, எத்தனை மகத்துவம்!”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“பொழுது இடை தெரியின் பொய்யே காமம்.” அன்னூர் நன்முல்லை. யார் அவள்? யாருக்காகக் காத்திருந்தாள்? இடைதெரியா காலத்தில் ஒரே நினைவு மட்டுமாக. அவன் என்னவானான்? அவளை விட்டு விட்டானா? ஒரு நரம்பு அறுந்து சுருண்டு துடிப்பதுபோல என் உள்ளம் வலித்தது. அவள் கைவிடப்பட்டிருப்பாள். சந்தேகமே இல்லை. உக்கிரமான காதல் புறக்கணிக்கப்படவேண்டும். ஏனெனில் அதற்கு பூமியில் இடமில்லை. சாந்தியடையாத பேய் போல அது பாறைகளில் மரங்களில் முட்டி மோதிக் காட்டில் அலைய வேண்டும். அன்னூர் நன்முல்லை தன் மண்டையை ஒரு பெரும் பாறையில் மோதி உடைத்தாள். அதை நான் பார்த்தேன். உடைந்த முட்டை போல அவள் மூளை வழிந்து கிடந்தது. அதிலிருந்து கிளம்பிய அவளுடைய காதல் சாந்தியே இன்றி நூற்றாண்டுகளாகக் குறிஞ்சியின் அடர்ந்து இருண்ட காட்டில் அலைந்தது. காட்டை பீதியுடன் பார்த்தேன். இந்த ஒவ்வொரு மரமும் ஒரு துயரம் கப்பிய பாடல். ஒரு கைவிடப்பட்ட ஆத்மா. ஒரு நிறைவேறாத பிரியம். ஒவ்வொரு மலரும் உதிர்வதற்கென்றே பூத்த ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு கனியும் உண்ணப்படாத இனிமை.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“யூ நோ. எனக்கு லைஃப்ல இதுவரை எந்த பிராப்ளமும் கிடயாது. எங்கப்பா அட்வகேட். நல்லா சம்பாதிச்சார். ரெண்டு சம்சாரம். ஏழெட்டு வீடு, கார். நான் பெங்களூர்ல படிச்சேன். நல்ல மார்க் வாங்கினேன். உடனே வேலை கிடைச்சுடுத்து. மறுவருஷம் கல்யாணம். பொதுவா பிராம்மணக் கண்ணுக்கு அழகான பொண்ணு. வடாம் போடுவா. வரலட்சுமி விரதம் இருப்பா. பத்தரை மாத்து பதிவிரதை. பிள்ளைங்க ரெண்டு இருக்கு. நன்னா படிக்கிறா. ஒரு பிராப்ளமும் இல்ல. எதையாவது ஆசைப்பட்டா கிடைக்காதுன்னே இல்லை. பட் ஐ யம் லாங்கிங். லாங்கிங் ஃபர் வாட்? தெரியலை. இருபது வருஷமா இதைக் கேட்டுக்கறேன். ஏக்கம். துக்கம். அதான். சாதாரண துக்கமில்லை. நேரா போய் ஆனைக்குன்று மேல ஏறி வானத்தில குதிச்சிடற மாதிரி துக்கம். எனக்கு இனிமே என்ன வேணும்? ம்யூசிக், சாப்பாடு, கவிதை, இதோ காடு. ஆனா நான் ஏங்கறேன். இதுக்கு மேல ஏங்கினா அது இந்தளவுக்கு கருணையோட இருக்கிற கடவுளுக்கே எரிச்சல் மூட்டற மாதிரி ஆயிடுமா? தெரியலை. பட் ஐ கான்ட் ஹெல்ப் இட்.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“ஒரு சொல்லுக்குள் வாழ்வதென்பது என்ன என்று எப்படி நான் பிறருக்குச் சொல்ல முடியும்! அனுபவித்தறியாத ஒருவருக்கு அது வெறும் அலங்காரம். ஆனால் ஒரு நாளேனும் அவ்வனுபவத்தைப் பெறாத துரதிர்ஷ்டசாலி எவரும் இவ்வுலகில் உண்டா என்ன? நினைப்பதும் செய்வதும் நிகழ்வதும் எல்லாம் அப்பெயரேயன்றி வேறில்லை என்று ஆன நாட்கள். உண்மையில் இதெல்லாம் வெறும் உவமைகள். அன்று அந்நிலையில் நான் இப்படி அவ்வனுபவத்தைப் பிரித்தறிந்திருக்கவில்லை. அவ்வனுபவத்தை அறியவேயில்லை. அவ்வனுபவமன்றி வேறின்றி வாழ்ந்தேன். பின்பு அவ்வனுபவத்தின் பல்வேறு பாவங்களை ஆழ்வார் பாடல்களில் கண்டு மனம் விம்மிக் கண்ணீர் வடித்தேன். ஆனால் ஒன்று உண்டு; அதை எண்ணிக் கண்ணீர் வடிக்கும் நிலையில் அதிலிருந்து விலகிவிட்டிருக்கிறோம். அதைக் கண்டு வியந்துவிட்டிருக்கிறோம். காண ஆரம்பித்த முதல் கணம் விரல்பட்டு நீர் நிழல் போல அந்த நிலை கலைந்துவிடுகிறது. பிறிதொருபோதும் நீரில் அலையின்றிக் கூடுவதில்லை. வாழ்க்கையைப் பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள் மூடர்கள், ஞானிகள். ஒவ்வொன்றும் ஒரு கணத்தில் மகத்தான தரிசனம் என்றும் மறுகணத்தில் சிரிப்பூட்டும் மடத்தனம் என்றும் தோன்றும். ஆனால் வயதாகும்போது வாழ்வின் அடிப்படையென ஒரு வரிமட்டும் அனைவருக்குள்ளும் ஒலித்தபடியே இருக்கும். எத்தனை வாய்களிலிருந்து பெருமூச்சுடன், பரவசத்துடன் அவ்வரியைக் கேட்டிருக்கிறேன். சென்றவை ஒருபோதும் மீள்வதில்லை. தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“நான் குறெ கரஞ்சிட்டுண்டு. அது பத்து இருவது வரியம் முன்ன. இன்னி நாம கரயுத ஏற்பாடு இல்ல பாத்துக்கிடுங்க. அது அந்த தேவேந்திரனுக்க அப்பன் முத்துப்பட்டன் வந்தாலும் செரி, இனி நமக்க கண்ணில ஒரு துளி கண்ணீரு வராது. வராது எண்ணு சொல்லியாச்சு ஏமான், இனி வராது. அது கொண்டு நமக்க சாமியும் கரயாது.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“வடுக்களின்றி இளமையைத் தாண்டியவர் எவரேனும் உண்டா? இளமையை எண்ணிக்கொள்ளும்போது நெஞ்சு பிளந்தெழும் பெருமூச்சுடன் ‘எத்தனை வேகமாக எத்தனை சுலபமாக!’ என்று வியந்து கொள்ளாதவர்கள்; ‘அவ்வளவுதானா? அவ்வளவேதானா?’ என்று கண்ணீருடன் ஏங்காதவர்கள் எவரேனும் உண்டா? இந்த இரவின் அந்தரங்கத்தில் எத்தனை உயிர்கள் விழித்துக் கிடந்து இழந்த இளமையை எண்ணி மயங்குகின்றனவோ. இளமையே, காதலே, மனித வாழ்வின் மகத்துவங்களே, ஒளியே, வானகமே, தெய்வங்களே! எத்தனை மூர்க்கமான தீர்மானத்துடன் மனிதனைக் கைவிடுகிறீர்கள் நீங்கள்!”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“யார் யாரைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? என்னைப் புரிந்துகொள் என்னைப் புரிந்துகொள் என்று மன்றாடுகிறார்கள். யார் மனதிலாவது அவர்கள் அன்றி பிறர் இருக்கிறார்களா? தெரியவில்லை. ஒன்றுமே கூறமுடியவில்லை. மனிதர்களைப் பற்றி திட்டவட்டமாக ஏதேனும் சொல்லக்கூடிய அளவுக்கு முதிர்ந்த மனிதர் யாரேனும் உண்டா இந்த பிரபஞ்சத்தில்? மனிதர்களிடையே வாழ்ந்து மனிதர்களைப் பார்க்குமளவு விலகியிருந்தவர்?”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“மனியனப் பத்திச் சென்னா பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் மாறி மாறி தோளில அடிச்சுக்கிட்டு சிரிப்பாவ. அதாக்கும் ஏமான் நம்ம ஜென்மம்...”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“என்ன பேசுவது? பேசாமல் இருக்க முடியாது. மௌனம் மிகவும் எடை கொண்டது. பேசினால் எல்லாப் பேச்சுமே அபத்தமாக, அந்த மனநிலைக்கு சம்பந்தமேயில்லாதவையாக இருந்தன.”
― காடு [Kaadu]
― காடு [Kaadu]
“taste of sin is terrible in that it is the sweetest tasting fruit. Did not even Eve succumb to it? The more you taste it, the more greedy you become for it.”
― The Forest
― The Forest
