வட்டத்திற்கு வெளியே நின்றவர்கள்
நவீனத்தமிழிலக்கியம் அதன் விரிவில் இருந்து மேலும் விரிவை நோக்கிச் சென்றபோது அதை வகுத்துக்கொள்வதில், மதிப்பிடுவதில் மிகப்பெரிய இடர்கள் உருவாயின.உதாரணமாக, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் வெளிவந்த போது அதை ஒரு நாவல் என்று சொல்ல முடியாது என்றும், அது ஓர் அனுபவத் தொகுப்பு அல்லது நினைவுத் தொகுப்பு மட்டுமே என்றும் வரையறுத்தார். அந்த நிராகரிப்பை ஒட்டி அக்காலத்தில் ஒரு விவாதம் நிகழ்த்தது. பொதுவாக சிற்றிதழ் சூழலுக்குள் அது ஒரு வகையான நினைவுத் தொகுப்பு மட்டுமே, நவீன நாவல் அல்ல என்ற எண்ணம் நிலைபெற சுந்தர ராமசாமியின் விமர்சனம் வழிவகுத்தது. ஏனெனில் அவர் அன்று ஒரு இலக்கிய மையமாக திகழ்ந்தார்.
ஆனால் கி.ராஜநாராயணன் அதைப்பற்றி கவலைப்படவில்லை .அவர் ‘எப்படியானாலும் அது இலக்கியத்தின் ஒரு வகைமை. அவ்வாறு இருந்தாலே போதும்’ என்று குறிப்பிட்டார். ஓர் இலக்கிய வாசகனாகவும் தொடக்கநிலை விமர்சகன் ஆகவும் நான் உள்ளே வந்த போது கி.ராஜநாராயணனின் அந்நாவல் அன்று உலக அளவில் எழுதப்பட்டு கொண்டு இருந்த ‘வடிவமற்ற வடிவம்’ கொண்ட நாவல்களில் ஒன்று என்று வரையறுத்தேன் .அதை குறித்து சுந்தர ராமசாமியுடன் விரிவாக விவாதித்ததும் நினைவில் உள்ளது. இந்நூலில் உள்ளது அன்றைய அவ்விவாதங்களின் விரிவாக்கமே.
இவ்வாறு வெவ்வேறு வகையான நாவல்கள் அன்று தொடர்ந்து வெளிவந்தன. ஒவ்வொன்றும் ஏற்பையும் மறுப்பையும் பெற்றன. நகுலனின் நினைவுப் பாதை, நாய்கள் போன்ற நாவல்களை நாவல்கள் என்று ஏற்றுக் கொண்ட உள்ளம்தான் கி. ராஜநாராயணனின் நாவலை நிராகரித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காசியபனின் அசடு போன்ற மிக எளிமையான மேலோட்டமான அனுபவச் சுருக்கம் மட்டுமேயான நாவலை ஏற்றுக்கொண்ட நவீனத்துவ உள்ளத்திற்கு கோபல்ல கிராமம் கடுமையான ஒவ்வாமையை உருவாக்கியது.
ஏனெனில் அதன் வடிவம் மட்டும் அல்ல காரணம். அது தனிமனித அனுபவ நோக்கிச் சுருங்கவில்லை. ஏதேனும் வகையில் உலகத்தை தத்துவப்படுத்தவும் இல்லை. அதன் நாட்டுப்புற தன்மையும் கூட ஒரு தடையாக இருந்திருக்கலாம். ஒரு நாவலில் தகவல்மட்டுமேயான தகவல்கள் வரக்கூடாது என்று சுந்தர ராமசாமி சொல்ல அது ஓர் விவாதமாக ஆகியதையும் நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு வெவ்வேறு வகையில் வெவ்வேறு வடிவ வரையறைகளும் இலக்கியப்புரிதல்களும் அன்றிருந்தன. அதன் பிறகு அடுத்த தலைமுறை விமர்சகனாகிய என்னைப் போன்ற ஒருவர் வந்து பல மறுப்புகளை ஏற்புகளாக மாற்ற முனன்றோம். அவ்வாறுதான் ஜெயகாந்தனை அணுகிதோம். ஜெயகாந்தனின் படைப்புகளில் உள்ள உரத்த குரல் ஒரு மாபெரும் கலைக் குறைபாடு என்றும் ஆகவே அவற்றை இலக்கியமாகக் கொள்ள முடியாது என்றும் சுந்தர ராமசாமி உறுதியாக கூறி வந்தார். இந்தக் கருத்தை வேதசகாய குமார் அவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிலேயே வலுவாக நிறுவி இருப்பதை காணலாம். (புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் ஓர் ஒப்பாய்வு)
ஆனால் இந்த வகையான கருத்துக்கள் இலக்கியம் என்ற ஒட்டுமொத்த முழுமையை கருத்தில் கொள்ளாதவை என்பது என் கருத்து. உரத்த குரலில் தெளிவான கருத்துக்களை முன்வைத்து எழுதிய மாபெரும் படைப்பாளிகள் உலகம் முழுக்க உண்டு. கருத்துச் சொல்லக்கூடாது என்பதை ஓர் அள்வீடாக கொண்டுள்ளோம் என்றால் தல்ஸ்தோயையே நிராகரிக்க வேண்டி இருக்கும். மாக்ஸிம் கார்க்கி உட்பட பல முக்கியமான படைப்பாளிகள் பல படைப்புகளில் உரத்த குரலுடனவெளிப்பட்டவர்கள்தான் .அந்த பேசுபொருள் என்ன, அதற்கான வடிவம் அமைந்துள்ளதா என்பது மட்டுமே இலக்கியத்தின் அளவுகோலாக் இருக்க முடியுமே ஒழிய எல்லா இலக்கிய படைப்புகளுக்கும் ஒட்டுமொத்தமான ஒரே அளவுகோல் இருக்க முடியாது.
கு.அழகிரிசாமியின் இடம் கூட அவ்வாறு ஒரு விரிவான நோக்கில் தமிழில் போதுமான அளவு ஏற்கப்பட்ட ஒன்றாக இருக்கல்லை. ஏனென்றால் அவருடைய கதைகள் எளிமையானவை, பல கதைகள் வெளிப்படையானவையும் கூட. அவற்றின் உணர்ச்சிகரத்தை கலைக்கு எதிரானது என்று எண்ணும், அந்த உணர்ச்சிகளின் நேர்மையை ஐயப்படும் ஒரு மனநிலையை நவீனத்துவம் உருவாக்கி இருந்தது. மௌனியை உச்சகட்ட கலை என ஏற்றுக்கொண்ட ஒருவர் அழகிரிசாமியை வெறும் கதைசொல்லி என நிராகரிக்கக்கூடும். ஜி.நாகராஜனை அளவுகோலாகக் கொண்ட ஒருவர் அழகிரிசாமியை ஒருவகையான பழமைவாதி அல்லது எளிய நம்பிக்கைவாதி என்று நிராகரிக்க முடியும்.
நவீனத்தின் அளவீடுகள் பலசமயம் வடிவக்கச்சிதம், உணர்ச்சிகரமின்மை, எதிர்ர்மறைத் தன்மை போன்றவை. அவை இலக்கியத்தின் முழுமையை புரிந்துகொள்ள தடையாக ஆகக்கூடும். இலக்கியத்தின் வளர்ச்சிக்கு தடையாக ஆனதை என் தலைமுறை எழுதவந்தபோது கண்டடைந்தோம். ஆகவே ஒருபக்கம் இலக்கிய அழகியலில் க.நா.சு மரபின் நுண்ணுணர்வை பேணிக்கொண்டே நவீனத்துவத்தின் இறுக்கத்தை கடந்துவந்தோம்.
நவீனத்துவ அழகியலின் இறுக்கத்தால் நிராகரிக்கப்பட்ட பல படைப்பாளிகள் தமிழில் நவீன இலக்கியத்தின் வட்டத்திற்கு வெளியே இருந்தார்கள். எம்.எஸ்.கல்யாணசுந்தரம், ப. சிங்காரம், ஜெயகாந்தன் போல பலர். அவர்களை உள்ளிழுத்துக்கொண்டு ஒரு விமர்சன முழுமையை உருவாக்கவே இந்த நூலில் நான் முயன்றுள்ளேன். இந்நூலிலேயே ஜெயகாந்தன் பற்றிய விரிவான மறுவாசிப்பு உள்ளது. ஜெயகாந்தனின் இடத்தை தமிழ் இலக்கியத்தில் மறுபடியும் உறுதி செய்த ஒன்றாக அக்கட்டுரையை என்னால் கூற முடியும்.
கு அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் ப்ற்றிய இந்த கட்டுரைகள் அவர்களைப் பற்றிய விரிவான மேலதிக ஆய்வுகளுக்கு வழிவகுப்பவை என்று நான் நினைக்கிறேன். அவர்களின் தனித்தன்மை, தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்குக்கு விலகிய அவர்களின் பார்வை, அவர்களின் அழகியல், அவர்கள் முன்வைத்த ம்னிதாபிமான நோக்கு ஆகியவற்றையே இக்கட்டுரைகள் விரிவாக விளக்குகின்றன.
இன்று, இக்கட்டுரைகள் முன்வைத்து வாதாடும் பல தரப்புகள் நிறுவப்பட்டுவிட்ட கருத்தாக அடுத்த தலைமுறைக்கு தெரியலாம். உதாரணமாக, கு.அழகிரிசாமி அல்லது கி.ராஜநாராயணன் பற்றியெல்லாம் இத்தனை வாதாடவேண்டுமா என்றுகூட தோன்றலாம். ஆனால் அந்த நிறுவப்பட்டுவிட்ட கருத்தை உருவாக்கியவை இக்கட்டுரைகள் என்பதை அவர்கள் உணரவேண்டும். அந்த பணிக்கு அப்பால் அவர்களை நுணுக்கமாகவும் முழுமையாகவும் அணுகுவதற்குரிய ஒரு வழிமுறையை இக்கட்டுரைகள் காட்டுகின்றன. இன்றைய வாசகர்கள் மேலதிகமாக விரித்தெடுக்கக்கூடிய பல கருத்துப்புள்ளிகளையும் இவை கொண்டுள்ளன.
ஜெ
மண்ணும் மரபும் – இலக்கிய முன்னோடிகள் வரிசை வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers
