நாடகவிவாதம்
நாளைய நாடகம்
நடிப்பதன் விடுதலை
தமிழ் நாடகம் பற்றிய என் கருத்துக்கான கடுமையான எதிர்வினைகளை சமூகவலைத்தளங்களில் இருந்து நண்பர்கள் அனுப்பினார்கள், முழுக்க வாசிக்க நேரமில்லை. அவர்கள் என்ன எழுதுவார்கள் என தெரியும். அவற்றில் கூட நான் நாடகம் பற்றி என்ன சொன்னேன் என எவரும் வாசித்து தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலும் உதிரி வரிகளாக, செவிவழியாகக் கேட்டு எதையோ எழுதியுள்ளனர். நான் என் இணையதளத்தில் தொடர்ச்சியாக நாடகத்தைப் பற்றிச் சொல்லிவந்த எதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு வாசிப்பையும் கவனத்தையும் அவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களில் ஒருவர் இலக்கியம் தேவையில்லை என்றே சொல்கிறார். இலக்கியமும் வாசிப்பும் தேவையில்லை என்று சொல்பவனைப்பற்றி நமக்கு என்ன அக்கறை? அவனும் நமக்குத் தேவையில்லைதான்.
உண்மையில் இங்கே நாடகம்போடும் பலர் நல்ல நாடகங்களை பார்த்ததுகூட கிடையாது. வாசிப்புப் பழக்கம் இல்லாத காரணத்தால் நல்ல நாடகங்களை படித்தும் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஏதேனும் கல்லூரிகளில் நாடகத்தொழில் கற்றவர்கள். சிறு குழுக்களை உருவாக்கிக்கொண்டு, சில தொடர்புகள் வழியாக நிதி பெற்று, அதற்குரிய சில நாடகங்களை உருவாக்குபவர்கள். அந்த நாடகங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை, ஆனால் அவற்றுடன் அவர்கள் உலகமெங்கும் செல்வார்கள். அவை தமிழ்நாடகங்கள் என அங்கே புரிந்துகொள்ளப்படும்- பலசமயம் சிறு அனுதாபம் அல்லது கேலியுடன். நான் உலகத்தின் பல மகத்தான நாடக அரங்குகளுக்குச் சென்று அங்குள்ள நாடகங்களைக் கண்டவன். நாடகவிழாக்களுக்குச் சென்ற அனுபவம் உள்ளவன். நாடகநூல்களை வாசித்தவன். என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்- இவர்கள் போடுவது நாடகப்பயிற்சிகளே ஒழிய, நாடகங்கள் அல்ல. நாடகங்கள் பார்வையாளர்களுக்கானவை.
இங்கே கருத்துச் சொன்னவர்களில் பலரை இருபத்தைந்து ஆண்டுகளாக நான் அறிவேன், அவர்களின் நாடகங்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களின் கருத்துக்கள் மேல் எனக்கு எந்த மதிப்பும் இல்லை, ஆகவே அவர்களுடன் விவாதிக்க விருப்பமும் இல்லை. அதற்கான தகுதி கொண்ட எவரும் தமிழ் நாடகச்சூழலில் இன்று இல்லை. ஏனென்றால் அவர்களின் நாடகங்களில் ஒன்றுகூட குறைந்தபட்சக் கலையம்சத்துடன், பத்து நிமிடம் அமர்ந்து பார்க்கும் தகுதியுடன் இருந்ததில்லை. அவை அவர்களே எழுதிக்கொண்ட உள்ளீடற்ற, செயற்கையான நாடகப்பிரதிகளை அவர்களே இயந்திரத்தனமான உடலசைவுகளுடனும் மொழிக்குளறுபடிகளான அர்த்தமற்ற வசனங்களுடனும் நடித்துக்காட்டுபவை.
இவர்களின் ‘ஒயிலாக்க’ நாடகங்கள் குமட்டல் அளிப்பவை. கால் இடுக்கில் அக்கி வந்ததுபோல கவைத்து நின்றுகொண்டு அசட்டுத்தனமாக கூச்சலிடுவார்கள். காமாசோமா அசைவுகளுடன் எம்பிக்குதிப்பார்கள், கால்கள் தடுக்கச் சுற்றிவருவார்கள். அசையாமல் நின்று ‘டாப்லோ’ காட்டுவார்கள். ஒயிலாக்க நாடகங்கள் எப்படி கலையாக ஆகின்றன என நல்ல நாடகக்குழுக்கள் அமெரிக்காவில் இவற்றை நிகழ்த்தும்போது பார்த்திருக்கிறேன். பயிற்சியும் தேர்ச்சியும் கொண்ட நடன அசைவுகள் வழியாக இவை நிகழ்த்தப்பட்டால் மட்டுமே அவை கலையாக ஆகின்றன. இங்கே கலாக்ஷேத்ராவின் நடனநாடகங்களில் அந்தக் கலையமைதியைக் காணலாம். தமிழ் நவீன நாடகங்களில் இருப்பது உடல்களின் அர்த்தமற்ற முட்டிமோதல். நுண்ணுணர்வு கொண்ட எந்த ரசிகனும் அவற்றை தன் ரசனைக்கு எதிரான அவமதிப்பாகவே எண்ணுவான்.
என் இந்த கருத்துக்களை சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக வெவ்வேறு கட்டுரைகளில் தீர்மானமான குரலில் முன்வைத்து வருகிறேன். 2008ல் திரிச்சூர் நாடகவிழாவில் நான் காணநேர்ந்த நாடகங்களில் சகிக்கமுடியாதபடி இருந்தது தமிழ்நாடகம் மட்டுமே, அதையும் எழுதியிருக்கிறேன். என் கருத்து தனித்த ஒன்று அல்ல. தமிழ்நாடக உலகுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பிரபஞ்சன் என்னைவிடக் கடுமையாக எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். தங்கள் பிரதிகளை இவர்கள் மேடையேற்றக்கூடாதென்றே அம்முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தக்குரல்களை நம் நவீன நாடகக்காரகள் பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் ஒருவகை ‘எழுத்தறியா’ வட்டம் அது. இலக்கியவாசிப்பே அற்றவர்கள். ஆகவே அவர்களை நாமும் பொருட்படுத்தவேண்டியதில்லை. அவர்களுக்கும் பார்வையாளர்கள் உடபட எவரும் பொருட்டு அல்ல. எங்கிருந்தோ காசு வருகிறது, அதை என்னவோ செய்கிறார்கள். அவ்வளவுதான். நன்றாக இருக்கட்டும்.
நான் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உலக நாடக அரங்குகளில் மகத்தான நாடகங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். கேரள நாடக இயக்கத்துடனும் அணுக்கமாக இருக்கிறேன். கன்னட நாடகங்களையும் அறிந்திருக்கிறேன். அவற்றிலுள்ள படைப்பூக்கம் என்பது அவை இலக்கியத்துக்கு அணுக்கமானவை என்பதனால் உருவாவது என்று கண்டிருக்கிறேன். இலக்கியரசிகனுக்கு நாடகம் என்பது ஓர் அவசியமான பேரனுபவம். இலக்கியப் படைப்புகள் நாடகமாக ஆகும்போது அவை இந்னொரு வகையான விரிவாக்கத்தையும் கலைத்தன்மையையும் அடைகின்றன. அந்த மெய்யான நாடக அனுபவம் இங்கே தமிழ்ச்சூழலில் பார்வையாளர்களாகிய நமக்குக் கிடைக்கவில்லை. நாடகம் என்னும் கலைவடிவம் பற்றியே இன்றைய தமிழ் இலக்கியவாசகன் மிக எதிர்மறையான பார்வையை கொண்டிருக்கிறான். பெரும்பாலான இலக்கியவாசகர்கள் நாடகம் என்றாலே செயற்கையானது என எண்ணுவதை, சொல்வதைக் காணலாம். நாடகம் பார்க்க அழைக்கும்போதெல்லாம் ‘நமக்கெல்லாம் நாடகத்தை உக்காந்து பாக்க பொறுமையில்லை’ என்று பலச் சொல்வதை கேட்டிருக்கிறேன். அவர்கள் கண்ட ஓரிரு தமிழ் நாடகங்கள் அளித்த கசப்பின் விளைவு அது.
நமக்கு நல்ல நாடகம் கிடைக்கவில்லை என்பதனாலேயே நாம் நாடகம் என்னும் கலைவடிவத்தை இழந்துவிடவேண்டியதில்லை என்றுதான் நான் சொல்லவருகிறேன். நாம் இந்த நவீன நாடகக்காரர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை. இலக்கியச் சூழலில் இலக்கியவாசகர்களே தங்களுக்கான நாடகங்களை மிகக்குறைவான செலவில் உருவாக்கிக் கொள்ளமுடியும், உருவாக்கிக்கொள்ள வேண்டும். இலக்கிய அரங்குகள் நாடக அரங்குகளாகவும் நிகழவேண்டும். அத்துடன் நடிப்பு என்பது இலக்கியவாதிக்கு ஓர் விடுதலையனுபவம். தன்னில் இருந்து, தன் உடலில் இருந்து அகன்று மீள்வது அது. அதை அவன் இழக்கலாகாது. அந்த விடுதலையை அவன் அவனுடைய அகத்தை மெய்யாகவே சீண்டி எழுப்பும் வலுவான நாடகப்பிரதிகள் வழியாகவே அடையமுடியும். அசட்டுத்தனமான நாடகப்பயிற்சிகள், உள்ளீடற்ற செயற்கையான நாடகப்பிரதிகள் அவனுக்கு எரிச்சலையே அளிக்கும். நாடகம் அளிக்கும் அந்த விடுதலையை அவன் தவிர்த்துவிடவேண்டியதில்லை. அதற்காகவும் அவன் தனக்கான நாடக இயக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
இலக்கியவாதிகள் தாங்களே உருவாக்கி, தாங்களே நடித்து, தாங்களே ரசிக்கும் ஒரு நாடகச்சூழல் நமக்குத்தேவை. அதையே நான் சொல்கிறேன். இலக்கியவாதிகள் உருவாக்கும் அந்த நாடகங்கள் இன்றைய சூழலில் பயிற்சியின்மையும் தேர்ச்சியின்மையும் கொண்டிருக்கும்.மிகமிக எளிமையான அரங்கப்பொருட்களுடன் பெரும்பாலும் கற்பனையில் நிகழ்வனவாகவே அவை இருக்கும். ஏனென்றால் அவை தொடக்கநிலையில் உள்ளவை. ஆனால் அவை இலக்கியப்பிரதியின் வல்லமையாலேயே ஆழ்ந்த அகஅனுபவத்தை அளிக்கும். ஏனென்றால் நாடகமாக மேலும் ஆற்றல் கொள்ளும் மிக வலுவான இலக்கியப்பிரதிகள் நமக்கு உள்ளன. அது ஒரு தொடக்கம், நமக்கான நாடகங்கள் எதிர்காலத்தில் உருவாகக்கூடும். அத்தகைய நாடகங்களை கர்நாடகத்தில் புகழ்பெற்ற நீநாசம் நாடகப்பேரியக்கம் அளித்துவருகிறது. அவர்கள் நவீன இலக்கியத்துடன் அணுக்கமான உறவு கொண்டவர்கள். நாம் அங்கு சென்றுகூட பயிற்சி பெறலாம். இலக்கியநாடக இயக்கம் ஒன்று இன்று மிக அவசியமானது. அதாவது நமக்கான நாடகம். அதைப்பற்றி சிந்திப்போம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

