ஒளிரும் கூர்முனை

தமிழ் நவீன இலக்கியம் உயர் நவீனத்துவ இலக்கியமாகவே தோன்றியது என்பது ஒரு விந்தையான நிகழ்வு. பிற மொழிகளில் நவீன இலக்கியம் அதன் தொடக்க வடிவில் யதார்த்தவாத மற்றும் இலட்சியவாத எழுத்துகளாகத் தோன்றி நிலைபெற்று, பின்னர் அதற்கு எதிரான வலுவான மறுப்பாக நவீனத்துவம் உருவாகி வந்து, அதன் உச்சியில் உயர்நவீனத்துவம் உருவாகியது. தமிழில் புதுமைப்ப்பித்தனே உயர்நவீனத்துவத்தின் மிகச்சிறந்த முகமாக உருவானவன். பாரதியை நிராகரித்து புதுமைப்பித்தன் எழுதிய புதிய ஆத்திச்சூடி என்ற நூல் ஒரு வகையில் இலட்சியவாதத்தின் மீதான தமிழ் நவீனத்துவத்தின் எதிர்ப்பின் பிரகடனம் என்று சொல்லலாம்.

புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கிய அந்த அலை க.நா.சு (பொய்த்தேவு, ஒருநாள்), சி.சு.செல்லப்பா (வாடிவாசல், ஜீவனாம்சம்) வழியாக வந்து சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் ஆகியோரில் உச்சம் கொண்டது. அவர்கள் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் தமிழின் இலக்கிய இயக்கத்தை தீர்மானிப்பவர்களாக திகழ்ந்தார்கள். அவர்களால் தமிழ்ச்சிறுகதை, தமிழ் நவீனக்கவிதை, தமிழ் குறுநாவல் ஆகிய வடிவங்களில் இந்தியாவின் மிகச்சிறந்த படைப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பல உலக இலக்கியக் களத்திலேயே முக்கியமானவை என்று ஐயமறச் சொல்லமுடியும்.

தமிழில் நவீனத்துவம் உருவானதற்கான வரலாற்றுக்காரணங்கள் விரிவானவை. தமிழகத்தில் உருவான இடதுசாரி இயக்கமும், திராவிட இயக்கமும் மதநம்பிக்கையை அழித்தமை ஒரு காரணமாக இருக்கலாம். மதத்திற்கு எதிரான எள்ளல்நோக்கு புதுமைப்பித்தனிலேயே வலுவான தொடக்கம் கொண்டுவிட்டது. மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும் போக்கு வள்ளலாரின் இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்களில் இருந்து பிறந்திருக்கலாம்.

எனக்கு அதைவிட முக்கியமான காரணமாத் தோன்றுவது ஒன்றுண்டு. மலையாளம் போன்ற மொழிகளில் தேசிய இயக்கம் சார்ந்த இலட்சியவாதத்தின் அடுத்தகட்டமாக உருவானது இடதுசாரி இலக்கிய இயக்கம். அல்லது முற்போக்கு இலக்கிய இயக்கம். அது நவீனத்துவத்தை முப்பதாண்டுகள் தள்ளிப்போட்டது. தமிழில் இடதுசாரி இலக்கிய இயக்கம் மிகப்பலவீனமானதாகவே இருந்தது. அதில் ஜெயகாந்தன் தவிர எவரும் பெரும்படைப்பாளிகள் அல்ல.

தமிழ் நவீனத்துவத்தை புரிந்துகொள்வது என்பது உண்மையில் சென்ற ஐம்பதாண்டுகளின் தமிழ் உள்ளத்தின் மையத்தைப் புரிந்துகொள்வதாகும். அழகியல்ரீதியகாவோ, பார்வைரீதியாகவோ இன்னும் நவீனத்துவம் தமிழகத்தில் முழுமையாகக் கடக்கப்படவுமில்லை. இன்று எழுதப்படும் படைப்புகளிலும் பெரும்பாலானவை நவீனத்துவ அழகியலும் பார்வையும் கொண்டவையே. தமிழ் உள்ளத்தின் மீறல், கசப்பு, ஐயம் ஆகிய அனைத்துமே நவீனத்துவ இலக்கியங்களிலேயே கூர்கொண்டு வெளிப்படுகின்றன. அதன் முன்னோடிகள் என்று அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரைக் குறிப்பிட முடியும்.

அசோகமித்திரன் அழகியல் ரீதியாக மிகமிகக் கச்சிதமான நவீனத்துவர். அடங்கியகுரல், கச்சிதமான வடிவம், தனிமனிதனை அலகாக்கி உலகையும் பிரபஞ்சத்தையும் நோக்கும் பார்வை ஆகியவை அவருடைய புனைவுலகின் இயல்புகள். மேலைநாட்டு உயர்நவீனத்துவப் படைப்புகளில் இருந்து தன் தொடக்கத்தை அடைந்தவர் அவர். ஜி.நாகராஜன் நவீனத்துவத்தின் இருண்மைநோக்கிய அகநகர்வை எழுதிக்காட்டியவர். சுந்தர ராமசாமி நவீனத்துவ அறவியலை ஆராய்ந்தவர். மூவரிலுமே நவீனத்துவத்தின் அடிப்படை இயல்பான அங்கதம் கூர்கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்நூல் நவீனத்துவத்தின் அந்த மூன்று முகங்களையும் தொகுத்துப் பார்க்கிறது. இவை மூன்று தனிக்கட்டுரைகளாயினும் ஒன்றாகச் சேர்த்தும் படிக்கத்தக்கவை. தமிழிலக்கியத்தின் தீவிரம் மிக்க பகுதியை புரிந்துகொள்ள வாசகர்களுக்கு இவை உதவுமென நம்புகிறேன் .நவீனத்துவத்தை புரிந்துகொள்வதொன்றே அதைக் கடப்பதற்கான வழியுமாகும்.

ஜெ

நவீனத்துவத்தின் முகங்கள் – இலக்கிய முன்னோடிகள் வரிசை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2026 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.