அரசியல், கருத்தியல், ஜனநாயகம்
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
பின் தொடரும் நிழலின்குரல் வாங்க
அன்புள்ள ஜெமோ
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பற்றி மார்க்ஸிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வழக்கம்போல ‘வன்மம்’ ‘திரிபு’ ‘அவதூறு’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பார்த்தவரை மார்க்ஸியர்களின் அணுகுமுறை என்பது குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் அக்குற்றச்சாட்டை மிகமிக மூரக்கமாக மறுப்பதுபோலத்தான். அதில் நிதானம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டுவிட்டதே என்ற பதற்றம் மட்டுமே உள்ளது. பதற்றமும் சீற்றமும் நிறைந்த எதிர்வினைகள் வந்தனவே ஒழிய நிதானமான ஒரு எதிர்வினை வந்ததில்லை.
நான் என் மார்க்ஸிய நண்பரிடம் சொன்னேன். ‘வேறு எதை நீங்கள் மறுத்தாலும் கண்முன் மார்க்சியம் சிறுத்து வருவதையாவது ஏற்றுக்கொண்டாகவேண்டும். அந்நாவல் எழுதப்பட்ட 1999 வாக்கில் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது, அல்லது ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்தது. இன்று கேரளத்தில் மட்டுமே அது குறிப்பிடத்தக்க கட்சி. ஆனால் அதானியுடன் சேர்ந்து தனியார்மயத் திட்டங்களை அறிவிக்கும் நிலையில் உள்ளது. தமிழகத்திலேயே இளைஞர்கள் கட்சிக்குள் வருவது மிகமிக குறைவாகிவிட்டது. 2000 வரை டி.வை.எஃப்.ஐ எவ்வளவு வலுவாக இருந்தது என்பதும் இப்போது எப்படி இருக்கிறது என்பதும் கண்கூடு. தொழிற்சங்க இயக்கம் கூட தேய்வடைந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க விரும்பினீர்கள் என்றால், ஒரு விமர்சனம் என்ற அளவிலாவது பின்தொடரும் நிழலின் குரல் நாவலை பொருட்படுத்தலாமே? இத்தனை மூர்க்கமான மறுப்பை விட்டு அது என்ன சொல்கிறது என்று கொஞ்சம் யோசிக்கலாமே’
நீங்கள் நினைப்பது சரி. நண்பர் மேலும் கடுமையான வசைகளை பொழிந்தார். ‘இந்துத்துவச் சதிவலை’ என்றார். அவரிடம் பேசமுடியாது என்று தெரிந்து அமைதியானேன். உண்மையில் பின்தொடரும் நிழலின் குரல் பேசுவதே அந்த ‘பேசமுடியாத தன்மை’யைத்தானே?
சபாபதி சண்முகம்.
அன்புள்ள சபாபதி அவர்களுக்கு,
பின்தொடரும் நிழலின் குரலின் பேசுபொருளே அதுதான். கருத்தியல் மூர்க்கம். உயிர்நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலைபுரிய முற்படும் அளவுக்கு அது செல்வது ஏன் என்னும் கேள்வி. நேற்றுவரை தலைவராக திகழ்ந்தவர் ஒரே இரவில் எப்படி துரோகி ஆகிறார் என்னும் கேள்வி.
அந்நாவல் வெளிவந்தபோது கடுமையான விமர்சனம் எழுதிய ஒருவர், அவர் தலைவராக எண்ணியிருந்த மருதையன் அவதூறு செய்யப்பட்டு, வசைபாடப்பட்டு, அந்த கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது மனம் குமுறி, பின்தொடரும் நிழலின் குரல் பேசும் உண்மையின் ஒளியை குறிப்பிட்டு எனக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒருவர் கடிதம் எழுதுவதுண்டு. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் உ.ரா.வரதராசன் சாவின்போது இரண்டு தோழர்கள் அதேபோல கடிதங்கள் எழுதியிருக்கின்றனர்.மறைந்த கேரள மார்க்ஸிய ஆசான் பி.கோவிந்தப்பிள்ளை (அவருக்கு நன்றாகத் தமிழ் பேசத்தெரியும்) நாவல் வெளிவந்தபோது என்னிடம் ஒரு பிரதி கேட்டு வாங்கி படித்துவிட்டு எதிர்நிலையாக விமர்சித்தார். அவரே கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, அவதூறு செய்யப்பட்டபோது என்னிடம் பேசினார். சுருக்கமாக ‘உண்மை அப்படித்தான், அது மண்டையோட்டை உடைத்துத்தான் உள்ளே நுழையும்’ என்றார்.
இந்தக் கருத்தியல்மூர்க்கத்தை நேற்று மதவெறி மூர்க்கமாகப் பார்த்தோம். இன்று மதவாதஅரசியல், இன அரசியல், மொழியரசியல் அனைத்திலும் பார்க்கிறோம். இந்நாவல் வெளிவந்தபோது இதை இதற்குள் செயல்படுபவர்கள் மட்டுமே நேரடியாக உணரமுடியும் என்னும் சூழல் இருந்தது. இன்று, இருபத்தைந்தாண்டுகளுக்குப்பின், நம் சமூகவலைத்தளச் சூழல் அதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதை நேரடியாக உணராத வாசிக்கும் நபர் என்று எவரும் இருக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.
நம்மூர் மார்க்ஸியர்களால் காழ்ப்பும் நிராகரிப்புமாகவே பேச முடியும், இன்று அவர்கள் கிட்டத்தட்ட மார்க்ஸியத்தை மட்டுமல்ல தொழிலாளர் நலனைக்கூட கைவிட்டுவிட்டு, இன்றைய திராவிட அரசியல் கட்சிகளின் கோஷங்களையும் கொள்கைகளையும் எதிரொலிக்கும் சிறிய ஒட்டுண்ணிக் கட்சியாக ஆகிவிட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் இடதுசாரிகள்மேல் பெரும் பற்றுடன் இருந்தவர்கள், அதன்பொருட்டு என்னை வசைபாடியவர்கள்கூட இன்று உளம்புழுங்கிக்கொண்டிருக்கின்றனர். சிலர் பொதுவெளியில் ஓர் அடையாளமாக கட்சிச்சார்பை வைத்துக்கொண்டு களமாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் என் நாவல் மார்க்ஸியத்துக்கு எதிரானது அல்ல. அன்றுமின்றும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அது மார்க்ஸியத்தின் மகத்தான மானுடநேய இலட்சியவாதத்தை உணர்ச்சிகரமாக முன்வைக்கும் நாவல் – எந்த மார்க்ஸியச் சார்புநூலையும் விட. மார்க்ஸிய வரலாற்றுவாதம் இன்றைய மிகச்சிறந்த ஆய்வுமுறை என வாதிடும் நாவல். மார்க்ஸிய அரசியலையே அது நிராகரிக்கிறது. அதிலுள்ள சர்வாதிகாரச் சாய்வுநிலை, கண்மூடித்தனமான விசுவாசத்தை எதிர்பார்க்கும் ராணுவமனநிலை, கருத்தியல் மூர்க்கம் இன்றைய ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்று வாதிடுகிறது.
என் பார்வையில் மார்க்சியம் இந்தியாவில் தேய்ந்துகொண்டிருப்பதற்கு மூலக்காரணம் இந்த மூர்க்கமே. ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ள அந்த மூர்க்கமே தடையாகிறது. மார்க்ஸியம் தேய்ந்தழிவதென்பது இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளைப் பொறுத்தவரை பொருளியலில் பேரழிவு. தொழிற்சங்கச்சூழலில் அந்த அழிவை கண்கூடாகக் காணமுடிகிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
