இலக்கியவிழாக்களின் பணி

தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு தமிழுடன் இசை!

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் போன்று இன்று இந்தியாவில் எந்த இலக்கிய அமைப்பும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு அல்லது அதன் கிளை அமைப்புகள் சார்பாக ஆண்டு முழுக்க, அனேகமாக எல்லா நாளும் எங்கோ ஏதோ நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆண்டில் மூன்று இலக்கிய விழாக்கள். இரண்டு இலக்கியக் கருத்தரங்குகள்.

இத்தனை நிகழ்ச்சிகளால் என்ன பயன் என்று அவ்வப்போது எவரேனும் எழுதுவதுண்டு. எந்தப் பயனுமில்லை என வசைபாடுபவர்களும் உண்டு. ஆனால் அவர்களே தங்கள் நூல்களுக்கு விழாவெல்லாம் வைத்துக்கொள்வார்கள், என்ன பயன் என கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகவே இலக்கியத்தால் என்ன பயன் என்று கேட்பவர்கள்தான் பெரும்பகுதியினர்.

இலக்கிய நிகழ்வுகளால் இலக்கியம் வளருமா? இலக்கிய புதியதாகத் தோன்றுமா? இலக்கியவாதிகளை ‘கண்டுபிடிக்க’ அல்லது ‘உருவாக்கி எடுக்க’ முடியுமா? அதற்கெல்லாம் சற்று இலக்கியமறிந்த எவரும் ‘தெரியவில்லை’ என்ற பதிலை மட்டுமே சொல்லமுடியும். இலக்கியம், இலக்கியவாதி உருவாவதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு. சமூகக் காரணங்களும் உண்டு. சமூகத்தில் ஒட்டுமொத்தமாக ஓர் இலக்கியச்  சூழல் இருக்கவேண்டும், இலக்கியவாதிக்கு அது உதவ வேண்டும். இலக்கியச்சூழல் மழை, இலக்கியவாதியின் படைப்புசக்தி விதை. விதைகளுக்கு மழை தேவை.

இலக்கிய நிகழ்வுகளால் என்ன நிகழ்கிறது? இலக்கியம் ‘நிகழ்கிறது’, அவ்வளவுதான். இலக்கியம் தனிமையில் எழுதப்படுகிறது, தனிமையில் வாசிக்கப்படுகிறது. ஆனால் இலக்கியம் கண்கூடாக நிகழவும் வேண்டும். ‘நாம் இலக்கியவாதிகள்’ என உணர்வதற்கான இடங்கள் நமக்குத் தேவையாகின்றன. இலக்கியத்தை விவாதிப்பதற்கு மேடைகள் தேவை. இலக்கிய அரட்டைகள் தேவை. இலக்கியவாதிகளுடன் தனிப்பட்ட அறிமுகத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டிய இடங்கள் தேவை. இலக்கியத்திரளாக நம்மை நாமே உணர்வதற்கான அரங்குகள் தேவை. இலக்கியநிகழ்வுகள் அதற்காகவே.

அந்த வகையான நிகழ்வுகள் வழியாகவே நான் இலக்கியவாதியாக உருவானேன். நான் எந்த இலக்கிய நிகழ்வையும் என் இளமையில் தவறவிட்டதில்லை. தேடித்தேடிச்சென்று பங்கேற்பேன். இலக்கிய ஆசிரியர்களுடன் அறிமுகம் செய்துகொண்டேன். இலக்கிய நண்பர்களைக் கண்டடைந்து அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தேன். எண்பதுகளில் இருந்த ஒரே உரையாடல் ஊடகமென்பது கடிதம். நான் ஒரு நாளில் பத்து கடிதங்கள் வரை எழுதினேன், பத்துப்பதினைந்து கடிதங்களை பெற்றுக்கொண்டும் இருந்தேன்.

அச்சூழல் எனக்கு எந்த அளவுக்குத் தேவைப்பட்டது என்று நான் இன்றும் உணர்கிறேன். ஆகவேதான் இத்தனை நிகழ்வுகள். இந்நிகழ்வுகளில் சில ஆண்டுகளுக்கு முன் அச்சமும் தயக்கமுமாக வந்தவர்கள்தான் இன்று நிகழ்வுகளின் மேடையில் எழுத்தாளர்களாகவும், இதழாளர்களாகவும்,பேச்சாளர்களாகவும் தோன்றுகிறார்கள். இன்று தமிழகத்தில் எங்கள் அரங்குகளினூடாக உருவாகி வராத ஒருவரேனும் இல்லாமல் ஒரு  நவீனஇலக்கிய நிகழ்வை எவரும் நிகழ்த்துவதில்லை.

இன்று இவை தேவையா, இன்று இணையவழி உரையாடல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே என்று கேட்கலாம். இணையவழியில் நிகழ்வது தனிப்பட்ட உரையாடல் அல்ல. தனிப்பட்ட உறவு உள்ளவர்கள் மேற்கொண்டு இணையத்தில் உரையாடலாம், ஆனால் இணையம் இலக்கிய உரையாடலுக்கான களம் அல்ல. அதை நேர்ச்சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களிடமே சொல்லமுடியும், சொல்லவே வேண்டாம், அவர்களுக்கே தெரியும். தேவதேவன் போன்ற ஒருவரின் நட்பு, அவருடனான சந்திப்பு எத்தனை ஆழ்ந்த அக எழுச்சியை, ஊக்கத்தை அளிப்பது என்பதை அதை உணராத ஒருவரிடம் எப்படி புரியவைக்க முடியும்?

அதேசமயம் இது அமைப்பு அல்ல. இதற்கென இலக்கியக் கொள்கைகளோ, அரசியல்கொள்கைகளோ கிடையாது. இதற்கென நிர்வாகநெறிகளோ, முறைமைகளோ இல்லை. தலைமையோ நிர்வாகிகளோ இல்லை. இது ஒரு விரிவான நட்புக்கூட்டமைப்பு மட்டுமே. ஒருவரை ஒருவர் அறிந்த நண்பர்கள் ஒரு பொதுநோக்குக்காக இணைந்து செயல்படுகிறார்கள், அவ்வளவுதான். இந்த நெகிழ்வுத்தன்மையால்தான் இது இத்தனை விரிவாக இயங்கமுடிகிறது. இந்தவகையிலும் இந்தியாவிலேயே முன்னுதாரணமான அமைப்பு இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.