ஓஷோ: மரபும் மீறலும்-14

ஐந்து கருத்துப்புள்ளிகள்

ஓஷோவின் மொத்தச்சிந்தனைகளையும் தொகுத்து ஒரு தொகைநூல், அதாவது ‘ரீடர்’ வெளியிடப்படும் என்றால் ஓஷோவை எப்படி தொகுக்கலாம் என்பதற்கு எனது கருத்து ஒன்று உள்ளது. அதை ஐந்து புள்ளிகளில் தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்.

(1) ‘ இன்று வாதம்

ஓஷோவின் நூல்களை பார்த்தால் அடிக்கடி வரக்கூடிய வார்த்தை ‘இன்று’ (Today / present) என்பது. ஒரு கலைச்சொல் போன்று அதை பேசிப்பேசி அவர் உருவாக்குகிறார். அவர் ஏன் அதை சொல்கிறார் என்பதைத்தான் இதற்கு முன்னால் பேசினேன். அவருக்கு முன்னால் இருப்பவன் யார் என்று பார்த்தால் ‘நேற்று’ என்பதை ஒரு நானூறு கிலோ எடையாக தோளில் சுமந்துகொண்டிருந்த ஒருவன். அதன் சுமை தாளாது வளைந்து கூனியிருக்கக்கூடிய ஒருவன். அர்ஜென்டின எழுத்தாளர் போர்ஹஸின் (Jorge Luis Borges) ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உண்டு. ”நேற்று என்பது கங்கு. அது எரிந்தணைந்த சாம்பலில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”. இதற்கு நேர்மாறாக ஓஷோ சொல்கிறார், ”நேற்று என்பது அழுகிவிட்டது, இன்று பிறந்தாக வேண்டும்” என்று. ‘Like Today’ என்பது அவருடைய செய்திகளில் ஒன்றாக உள்ளது. ‘இன்று’ என்பதை எந்தெந்த விதங்களில் பொருள் வேறுபாடுகளுடன் கையாள்கிறார் என்பதை தொடர்ந்து பார்ப்பதென்பது மிக முக்கியமான ஓஷோ ஆய்வாக அமையும்.

நேற்று என்பது உங்களுக்கு எதையெல்லாம் தருகிறது என்பதை ஓஷோ சொல்கிறார்.

அடையாளம்

நேற்று என்பது அடையாளத்தை தருகிறது. ஒரு சாதாரண மனிதனாகிய நான் இங்கு நின்றுகொண்டிருந்தால் எத்தனை ‘நேற்று’கள் வந்து என்மீது அடையாளத்தை போடுகின்றன? நீ ஒரு இந்தியன், நீ ஒரு இந்து, நீ ஒரு தமிழன், நீ இன்ன சாதி என்று நீ… நீ… என்பதாக என்மீது பல்வேறு அடையாளங்களை அது போடுகிறது. கிட்டத்தட்ட வழிதவறி வந்துசேர்ந்த தபால் அட்டை போன்று அவ்வளவு முத்திரைகளுடன்தான் நாமனைவரும் இருக்கிறோம். பல சட்டைகளை போட்டுக்கொண்டு மனநோயாளிகள் தெருவில் திரிவதுபோல இருக்கிறோம். அவ்வளவு சட்டைகளை ‘நேற்று’ உங்கள்மீது போட்டு உங்களை முழுமையாக தனக்குள் மூழ்கடித்துவிடுகிறது .ஓஷோ சொல்வது ‘அந்த சட்டைகளை கழற்று’ என்பதுதான். அவ்வளவு புழுக்கம் உனக்கு தேவையில்லை, வெளிக்காற்று படட்டும் என்கிறார்.

ஒழுக்கம்

நேற்று என்பது உங்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்திச் சொல்கிறது. ஒழுக்கவியல் அனைத்துமே நேற்றில் இருந்து வரக்கூடியதே. இன்றைக்கான ஒழுக்கத்தை பேசக்கூடிய ஒழுக்கவியலாளர்களை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா ? ஒழுக்கத்தை பேசும் அத்தனைபேரும் சொல்லக்கூடிய அடுத்தவரி, ‘நம் முன்னோர்கள் அப்படியில்லை’ என்பதுதான். இன்றைக்குள்ள ஒழுக்கம் என்பது போக்குவரத்து விதிமுறைகள் மட்டும்தான். மீதி அனைத்துமே நேற்றைய ஒழுக்கம்தான். நேற்றிலிருந்து வரும் ஒழுக்கம் நமது சிந்தனைகளை, ஆளுமையை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சிந்தனை

சிந்தனை என்பதும் நேற்றிலிருந்துதான் வருகிறது. ஒரு பெரிய சிந்தனை உங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்றால், அதன் பிறகு அதை கீழேயும் வைக்க முடியாது, கையிலும் வைத்திருக்க முடியாது. அதற்கு சிறந்த வழி என்பது கைமாற்றி விடுவதுதான். குலேபகாவலியில் ஒருவன் கரடியை இரண்டு கைகளாலும் பிடித்திருப்பான். அவனுக்கும் கரடிக்கும் நடுவே ஒரு மரம் இருக்கும். அந்த கரடியை பிடித்துக்கொண்டு மரத்தையே சுற்றிவருவான். இன்னொருவன் வந்து என்ன நடக்கிறது என்று கேட்பான். ‘நான் ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். நல்ல விளையாட்டு’ என்பான். ‘நானும் விளையாடலாமா?’ என்று அவன் கேட்க ‘வா வந்துபிடிச்சுக்கோ’ என்று சொல்லி அவனிடம் கரடியைக் கொடுத்துவிட்டு இவன் கிளம்பிவிடுவான். சிந்தனைகள் இப்படித்தான் கைமாற்றப்படுகின்றன. நாம் கடந்தகாலச் சிந்தனைகளின் அடிமைகள். அவை நம்மை முன்னகரவிடாமல் கவ்வி நிறுத்திக்கொண்டிருக்கின்றன.

பொறுப்பு

ஆற்றவேண்டிய பொறுப்புகளின் பெரிய சுமையை நேற்று நமக்கு அளிக்கிறது. ஓஷோ ‘பொறுப்பின்மை’ என்பதை ஒரு விடுதலையாக, ஒரு பெரிய விழுமியமாகச் சொல்கிறார். அதை மிக எளிமையாக, ‘பொறுப்பில்லாமல் இருக்க’ அவர் சொல்வதாக நாம் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால்  ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நேற்றிலிருந்து வந்து சேரும் பொறுப்புகளையே அவர் பேசுகிறார். நமக்கான எளிய உலகியல் பொறுப்புகளை நாம் ஏற்றுக்கொள்வதை பற்றி அவர் பேசவில்லை. மரபில் இருந்து அளிக்கப்பட பொறுப்புகள் நம்மீது அமர்ந்திருக்கின்றன. அவை ஒரு பெரிய சுமை என்கிறார்.

அர்த்தப்படுத்தல்

நாம் ஒவ்வொன்றையும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். இதை நாம் நேற்றிலிருந்துதான் அர்த்தப்படுத்துகிறோம். அர்த்தப்படுத்தாத ஒன்று நமக்கு பதற்றத்தை அளிக்கிறது. ஒரு புதிய கருத்தை, புதிய ஆளுமையை, புதிய நிகழ்வை நாம் எதிர்கொள்ளும்போதெல்லாம் நம் முன்னோர் காலத்தில் இருந்து வந்த அர்த்தங்களை அதன்மீது போட நினைக்கிறோம்.

நீண்ட நாட்களுக்கு முன்னால் எனது மைத்துனர் ஒருவரை ஒகேனக்கல் அருவி பார்ப்பதற்கு அழைத்துச்சென்றேன். அவர் அதற்கு முன் அருவி பார்த்தது கிடையாது. பார்த்தவுடன் மலைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து என்னிடம் கேட்டார், ‘இது ராத்திரி பகலா இப்படி கொட்டிட்டே இருக்கும் என்ன’. அப்படியொரு கோணம் இருக்குமென்றே எனக்கு தெரியவில்லை. நெடுங்காலம் எனக்கு அதை நினைக்கும்போதெல்லாம் சிரிப்பு வந்தது. நான் அப்போது அவரிடம் தமாஷாக சொன்னேன் ‘இல்லை, ராத்திரியில் மூடிவிடுவார்கள்’.

அருவி என்ற அந்த செயல்பாட்டுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. இவர் அதற்கு ஒரு அர்த்தத்தை போட முயல்கிறார். மலைகளை பார்க்கும்போது ஒரு கணம் மனம் பிரமையடைகிறது என்பார்கள். ஏனெனில் அது அர்த்தமின்மை. ஆனால் அந்த பிரமை ஐந்து நிமிடங்கள் மட்டும்தான். அடுத்த கணம் ஒருவர் சொல்வார், ‘இடதுபக்கம் பார்த்தா கரடி மாதிரி இருக்குல்ல’, ‘இத பார்த்தா யானை மாதிரி இருக்குல்ல’, ‘நம்ம சம்பந்தம் மாமா மூஞ்சி மாதிரி இருக்குல்ல’ என்று. அர்த்தம் அளிக்கப்பட்டாயிற்று. அதன்பிறகுதான் நம்மால் அதை கையாள முடிகிறது. இத்தகைய அர்த்தப்படுத்தலை நாம் ஒவ்வொரு கணமும் செய்துகொண்டே இருக்கிறோம். இதுவும் நேற்றிலிருந்து வருவதே.

இவற்றிலிருந்து விடுதலை அடைவதையே ஓஷோ சொல்கிறார். ‘There is no thought in the present’ என்பது அவரது முக்கியமான மேற்கோள்களில் ஒன்று. இன்றின் கணத்தில் சிந்தனை கிடையாது என்கிறார். நிகழ்கின்ற கணத்தில் நீங்கள் யோசிப்பதில்லை. கையிலிருந்து ஒரு பொருள் நழுவிவிழும் கணத்தில் யாரும் யோசிப்பதில்லை. நிகழ்கணம் (present) என்பதே தியான நிலை என்கிறார். உங்களுக்கு அளிக்கப்பட்டவை அனைத்தும் நிகழ்கணத்தில்தான் உள்ளது, கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை என்கிறார்.நிகழ்கணம் இறந்தகாலத்தின் கதவுகளால் மூடப்பட்டுள்ளது. நம் நிகழ்காலம் என்பது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கும் கதவு தட்டல்தான். இதை தனது உரைகள் முழுக்க தொடர்ந்து சொல்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டு மதத்தையும்,  உலகப்போர்களையும் தனக்குப் பின்னால் வைத்துக்கொண்டிருக்கும் ஹிப்பியிடம் இதைச் சொல்கிறார். பல்லாயிரமாண்டு நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் வரலாறுகளையும் வைத்துக்கொண்டிருக்கும் நம்மிடம் இதைச் சொல்கிறார். ஆமையிடம் ஓஷோ சொல்கிறார் ‘உன் ஓட்டை உதிர்த்துவிட்டு வா. நீ ஆமையல்ல பறவை’ என்று. எத்தனைபேர் பறந்தார்கள் என்று தெரியவில்லை. ஓட்டை வைத்துக்கொண்டு சிறகுபோல காலசைக்கும் ஆமைகள் உள்ளன. ஓடு என்பது பாதுகாப்பு என்று, அடையாளம் என்று எண்ணிக்கொண்டு சிறகுகளை வெறும் கனவாக வைத்துக்கொள்ளும் ஆமைகள் உள்ளன. ஆனால் பறவைகள் எல்லாமே ஒரு கட்டத்தில் முட்டைக்குள் இருந்தவைதான். சிறகுகளின் வேட்கையே அவற்றைப் பறக்கச் செய்தது.

ஓஷோ பேசியது அன்றைய ஆமைகளிடம். அவர் இன்று என்பது அந்தக் காலகட்டத்தை. ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் அவர் பேசியவற்றை வாசிக்கும்போது அதில் ‘இன்று’ என்பதில் இருக்கும் ‘என்றுமிருக்கும் அம்சத்தை’ நாம் உணரமுடியும். ஓஷோவின் அந்த மாற்று மதத்தை பொறுத்தவரை அந்த ‘இன்று’ என்பது ஒரு ஆப்தமந்திரம் போல.

(2) தன்னிலை

இரண்டாவதாக ஓஷோ சொல்லும் முக்கியமான புள்ளி தன்னிலை (Self / Subjectivity). நாம் என்று உணர்வது தன்னிலை. இது நமது வேதாந்த மரபில் விரிவாக விவாதிக்கப்பட்ட ஒன்று. அனைத்து புலன்களையும் நிறுத்திவிட்டு இருளில் தனிமையில் அமர்ந்தாலும் கூட தன்னைத்தானே உணர்வது ஒன்றுண்டு. அதுதான் தன்னிலை. அதை ஸ்வயம்பிரகாசம் என்று சொல்வதுண்டு. தன்னை வெளிப்படுத்தும் வேட்கையும் அதற்கான இயல்பும் கொண்டது தன்னிலை. இந்த தன்னிலை பற்றி எல்லா மதங்களும் வெவ்வேறு விதமாக பேசியிருக்கின்றன. அவற்றில் இரண்டு விரிவான வரையறைகளை சுட்டிக்காட்டலாம்.

செமிட்டிக் வரையறை

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பொறுத்தவரை தன்னிலை என்பது மந்தையின் ஒரு பகுதி. ‘எனது சமூகம் உனக்கு முன்னால் செல்லும்’ என்பது கிறிஸ்துவை இடையனாகவும் தன்னை மந்தையில் ஒருவனாகவும் உருவகிக்கிறது. ஒரு பெரிய திரளின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மந்தையின் ஒரு பகுதியாக தன்னை உருவகிக்கக்கூடிய ஒரு தன்னிலை அந்த மதங்களுக்கு உண்டு. அந்த தொகுப்புத்தன்மை அவர்களுக்கு பாதுகாப்பை, வலிமையை அளிக்கிறது. ஒரு படைவீரன் தன்னை படையாக உணர்கிறான். படையின் மொத்த வலிமையையும் தன்னுடையதாகவும் உணர்கிறான்.

அந்த இரட்டைநிலை இன்று உலகமெங்கும் அத்தனை அரசியல் கொள்கைகளும், அத்தனை அதிகார அமைப்புகளும் முன்வைக்கும் ஓர் இலட்சியம். ‘நாம்’ என்றுதான் அத்தனை அரசியல் கொள்கைகளும், அமைப்புகளும் பேசுகின்றன. தொகுப்பதனூடாகவே அவை மனிதர்களை ஒற்றைப்பேரமைப்புகளாக ஆக்கி அதிகாரத்தை நிலைநாட்டுகின்றன.

இந்திய வரையறை

இந்திய மரபுகளை பொறுத்தவரை தன்னிலை என்பது திரளடையாளம் அல்ல, முழுக்கமுழுக்க தனியடையாளம். ஆத்மா என்று அதை சொல்கிறோம். ஒவ்வொருவரும் தன்னுள் தானை உணரும் ஒன்று. அதிலிருந்து அகங்காரம், மமகாரம் போன்ற பல்வேறு நிலைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அது எப்போதும் தனித்தது. அதற்கு இன்னொன்றுடன் இயல்பான இணைவு என ஒன்று இல்லை. இன்னொன்றை அது எந்நிலையிலும் ‘தான்’ என உணர்வதில்லை. ‘அது’ என்றே உணர்கிறது. ஆகவே அதன் உறவுகள் எல்லாமே அந்தந்த சூழலுக்கும் தருணத்திற்கும் உரியவை மட்டுமே.

இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பால் உள்ள மூன்றாவது நிலையைத்தான் ஓஷோ சொல்கிறார். தன்னிலை என்பதை ‘There is no Self’ என்கிறார். பல உரைகளில் No Self என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இது பற்றிய அவருடைய சுவாரசியமான வரிகளின் வழியாக அவரது எண்ணங்களை கோர்த்துக்கொள்ள முடியும். ‘Consciousness of self is a disease. Self consciousness is medicine’. ‘தான்’ என்ற ஒன்றை தொகுத்துக்கொண்டு, வரையறுத்துக்கொண்டு முன்வைப்பது ஒரு நோய்க்கூறு. எதை வரையறுத்துக்கொள்கிறோம் என்று தன்னைத்தானே அறிந்துகொள்வது அதற்கான மருந்து.

இன்னொரு உரையில், நீ வலியை உணர்ந்தால் Self என்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பாய், no self ஆக இருக்கத்தான் முயற்சிப்பாய் என்கிறார். நமக்கு கடும் வலி ஏற்படும்போது மயக்கமருந்து கொடுக்கும்படி கேட்போம். அதாவது self ஐ அழிக்க விரும்புவோம், அந்த கணத்தை தாண்ட விரும்புவோம். எதற்கு வலிக்கிறதோ அது அல்ல தான் என்று உணரவே விரும்புவோம். ஆகவே self என்பது ஒரு நோய் என்று தனது உரையில் மீண்டும் மீண்டும் ஓஷோ சொல்கிறார்.

இதற்கு பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். பௌத்தர்களுக்கு அனாத்மவாதம் என்ற கருதுகோள் உண்டு. பாலியில் அதை அனாத்தம் என்பார்கள். ‘ஆத்மா இன்மை’ என்று அதை மொழிபெயர்க்கலாம். ஆனால் சாரமின்மை என்பதே சரியான பொருள். ஏனெனில் மனிதர்களுக்கு ஆத்மா இல்லை என்பது மட்டுமின்றி, பருப்பொருள்களுக்கும் அதன் சாராம்சமான தன்மை கிடையாது என்கின்றனர். ஒரு மேஜையின் ஆத்மா என்பது அதன் மேஜைத்தன்மை. அப்படிப்பட்ட சாராம்சமான மேஜைத்தன்மை கிடையாது என்பது பௌத்தக் கொள்கை. சமணமோ பொருள்களுக்கு ஆத்மா உண்டு என்கிறது. ஆனால் பௌத்தத்தில் எந்தவொரு பொருளுக்கும் அதன் மாற்றமுடியாத தனித்தன்மை என்பது கிடையாது.

உதாரணமாக, தண்ணீர் இருக்கிறது. தண்ணீரின் தனித்தன்மை நீர்மமாக, வழிந்து செல்லக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்த தன்மை என்பது மனிதனால் உணரப்படும் ஒரு நிலை மட்டுமே. மனித உடல் நெருப்பால் ஆனது என்றால் அவன் அறியக்கூடிய தண்ணீர் வேறுவகையானதே. Flash Gordon கார்டூனில், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள். அவர்கள் அனைவருமே இரும்பைவிட ஆயிரம் மடங்கு கடினமான உலோகத்தாலான உடல் கொண்டவர்கள். எனவே அவர்கள் இங்கு மண்ணில் நீந்துகிறார்கள். நாம் தண்ணீரில் நீந்துவதைப்போல அவர்கள் மண்ணில் நீந்துகிறார்கள்.  எனவே ஒன்றின் ‘இயல்பு’ என்பது மற்றொன்றால் உணரப்படக்கூடியதுதான். மாறாத ஒரு இயல்பு என்பது பொருள்களுக்கும் கிடையாது, மனிதர்களுக்கும் கிடையாது. அதுதான் அனாத்மவாதம் (அனாத்தம்). இதை ஓஷோ பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

இதைவிட சுவாரசியமான ஒரு உவமையை சொல்கிறார். நேற்று என்பது இறந்துவிட்டது. ஆனால் நீங்கள் யாரென்பதற்கு நீங்கள் வைத்திருக்கக்கூடிய அடையாளங்களில் எல்லாமே நேற்றையது. ஒரு மனிதன் தன்னைப்பற்றி பேசத்தொடங்கும்போதே அவன் நேற்றிலிருந்துதான் தொடங்குகிறான். ‘நாங்களெல்லாம் யார் தெரியுமா ? 2500 ஆண்டுகளாக நாங்கள் இங்கே…’ என்று ஆரம்பித்துவிடுவார்கள். எல்லா அடையாளங்களுமே இறந்தகாலம். ‘நீ சொல்லக்கூடிய self என்பது இறந்த செல்களால் ஆனது. இறந்த செல்களால் ஆனதுதான் உனது தோல். அந்த இறந்த செல்கள் மீதுதான் நீ காமம் கொள்கிறாய், முத்தமிடுகிறாய். நீ மற்றவர்களில் பார்ப்பதே இந்த செல்களைத்தான்’ என்கிறார். உயிருள்ள செல்களை நம்மால் காணமுடியாது. தோலை உரித்து ஒருவரிடம் காமம் கொள்ளமுடியாது.

ஆகவே Self என்பது இறந்த காலத்தில் இருந்து நாம் கட்டமைத்து உருவாக்கிக்கொண்டு வந்து நிறுத்தக்கூடிய ஒரு தோற்றம் மட்டும்தான். அது அந்த தருணத்தில் நாம் ஆக்க விரும்பும் ஒன்று மட்டும்தான். அது ஒரு நோய்க்கூறு. வாழ்நாள் முழுக்க மனிதர்கள் செய்துகொண்டிருப்பது ஒத்திசைவான ஒரு தன்னிலையை உருவாக்குவதற்கான வீண் முயற்சியைத்தான். நீங்கள் நாள்தோறும் ஒருவரை சந்தித்து பேசினால், அவர் பேசுவது அத்தனையும் முரண்பாடுகள் என்று தெரியும். ஒரே அனுபவத்தையே ஒரு மாதத்திற்குள் மாற்றிச்சொல்வார்கள். மனிதர்கள் பேசுவதே ‘தான்’ என்ற ஒன்றை உருவாக்கும்பொருட்டு ஒரு திரைக்கதையை முரண்பாடின்றி எழுதிக்கொண்டே இருப்பது மட்டும்தான். நடுவே நிறுத்தி, ‘இல்லங்க, இந்த திரைக்கதையில் ஓட்டை இருக்கு’ என்று சொன்னால், ‘ஓட்டை இருக்கா, அடைச்சிருவோம்’ என்பர். மனிதர்களின் பேச்சு என்பது பெரும்பாலும் இதுதான்.

இவ்வாறு ஒரு புனைவை நாம் self என்று முன்வைப்பதைத்தான் ஓஷோ விமர்சிக்கிறார். There is no Self என்கிறார். நீ உருவாக்கும் அந்த புனைவில் நீயே சிக்கிக்கொண்டால் அது நோய். சிலந்தியானது தனது வலையில் சிக்காது. ஆனால் மனிதர்கள் தங்கள் வலையில் தாங்களே சிக்குவார்கள். ரயில் பயணத்தில் ஒருவர் பேசத்தொடங்கினால் அவர் தன்னைப் பற்றிய புனைவையே உருவாக்குவதை காணலாம். அந்த குறைந்த கால ரயில் பயணத்தில் அவர் தன்னை பற்றிய ஒரு நாவலையே உருவாக்கி விடுவார். நாகர்கோவிலில் இருந்து மதுரை வருவதற்குள் அவர் உருவாக்கிய புனைவை அவரே நம்பிவிடுவார். சில விஷயங்களை சொல்லும்போது சிலர் அழுதுவிடுவார்கள். அது பொய் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நான் ஒரு எழுத்தாளன். நீங்கள் என்னிடம் மட்டும்தான் பொய் சொல்லமுடியாது. அது பொய்தான், ஆனால் அந்த உணர்வு உண்மையானது. ஏனெனில் அவர் அதை நம்பிவிட்டார். நாம் நம்பக்கூடிய மிக வலுவான புனைவு என்பது நாம் உருவாக்கக்கூடிய புனைவுதான்.

‘நான் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடியவன் சார், நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கிறதில்லை ‘ என்று நம்மிடம் சொல்பவர்கள் அதை பொய்யாகச் சொல்லவில்லை. அந்த கணத்தில் அந்தப் புனைவை முழுமையாக நம்பித்தான் சொல்கிறார்கள். ஆகவேதான் தழுதழுக்கிறார்கள். ஆகவேதான் இத்தகைய புனைவை உருவாக்கும் வீண் வேலையில் இருந்து வெளிவந்து self என்பது அக்கணத்தில் நிகழக்கூடிய ஒன்று, இங்கிருந்து நீ  விட்டுச்செல்லக்கூடிய ஒன்று என்று நினைத்துக்கொண்டால் போதும் என்கிறார் ஓஷோ.

இன்னொன்றையும் சொல்கிறார். ஆதிகாலத்தில் கற்கருவிகளை பயன்படுத்திய மனிதர்கள் ஒரு கல்லை எடுத்து கொட்டையை உடைத்தால் அந்தக் கல்லை எடுத்துச்செல்ல மாட்டார்கள். அதுபோல இந்த குறிப்பிட்ட self என்பது இந்த கொட்டையை உடைப்பதற்கு உருவானது. அதை விட்டுவிட்டு போ என்கிறார்.

சுவாரசியமான அம்சம் என்னவென்றால் அவர் இதை எழுபதுகளில் சொல்கிறார். அப்போது நவீன இலக்கியத்தில் இருத்தலியல் (Existentialism) ஓங்கியிருந்த காலகட்டம். Self என்பதை பற்றி அவ்வளவு சிக்கலான பேச்சுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. மனிதனுடைய தன்னிலைக்கு இந்த பிரபஞ்சத்தின் முன்னால், காலத்தின் முன்னால் என்ன இடம் இருக்கிறது என்ற கேள்விதான் இருத்தலியலின் அடிப்படை கேள்வி. எப்படியெல்லாம் தன்னிலையை வரையறை செய்யலாம் என்பதுதான் அன்றைய முக்கியமான தத்துவப்பிரச்சினையாக இருந்தது. அப்போது ஓஷோ இங்கு உட்கார்ந்துகொண்டு அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

தொண்ணூறுகளில் பின்நவீனத்துவமும் அதைத்தான் சொல்கிறது. There is no subjectivity என்று. நமக்கு ஓஷோ சொல்லும்போது அது ஒருவகை ஆன்மிக சிந்தனையாக தெரிகிறது.நம் முற்போக்கினருக்கு விலக்கம் ஏற்படுகிறது. ஆனால் ழாக் லக்கான் சொல்லி உளவியல் தொழில்நுட்பச் சொற்களோடு வரும்போது அதே கொள்கை பாடபுத்தகத்துக்குள் வந்துவிடுகிறது. நவீன இலக்கியவாதிகள் லக்கானை மேற்கோள் காட்டுவதுண்டு. லக்கானுடைய எந்தவொரு மேற்கோளுக்கும் இணையான மேற்கோளை அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பு ஓஷோவிடமும் காணமுடியும். அதை நவீன அறிவுஜீவிகள் சொல்வதில்லை.

தன்னிலை என்பது சூழலால் கட்டமைக்கப்பட்டது, நம்மால் உருவகப்படுத்தப்படுவது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். பின்நவீனத்துவம் சொல்வதற்கும் ஓஷோ சொல்வதற்கும் சிறு வேறுபாடுண்டு. பின்நவீனத்துவம் சொல்வது, இந்த தன்னிலை என்பது நீயே புனைவது அல்ல, சூழலால் புனையப்படுவது என்று. ஆப்பிள் நிறுவனம் உன்னை ஒரு நுகர்வோராக புனைகிறது, ஒரு தொலைக்காட்சி சேனல் உன்னை ஒரு பார்வையாளராக புனைகிறது, ஒரு அரசியல்வாதி உன்னை ஒரு வாக்காளராக புனைகிறார். இவையெல்லாம் சேர்ந்துதான் நீங்கள் என்கிறது பின்நவீனத்துவம். ஆனால் ஓஷோ, மாறாத தன்னிலை என்பது நமக்கு கிடையாது என்கிறார். அதன் தொடர்ச்சியை அவர் பௌத்தத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்.

3. அன்பு , காதல்

தமிழில் இதுபற்றி அதிகமாக பேசப்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழனின் அடிப்படைச் சிக்கலே இதுதான். பாலியல், காதல், அன்பு ஆகியவற்றிந் நடுவே உள்ள குழப்பம். தமிழ் வாசகர்கள் ஓஷோவை இந்த ஒரே புள்ளி வழியாகவே அறிந்திருக்கிறார்கள். ஆகவே ஓஷோ இதைப்பற்றி என்ன சொல்வார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் இதுபற்றி மூன்று புள்ளிகளை சொல்கிறார்.

(i) நிபந்தனைகளுடன் கூடிய அன்பு என்பது அன்பு கிடையாது. நீ இப்படியெல்லாம் இருந்தால் நான் உன்மீது அன்பாக இருப்பேன் என்பது அன்பு அல்ல, அது உடன்படிக்கையே. ஆனால் அப்படி நிபந்தனையற்ற அன்பு எங்குள்ளது என்று வாழ்க்கையில் தேடிப்பார்த்தால் நாம் ஏமாற்றத்தையே அடைவோம். ஓஷோ அத்தகைய அன்பைத்தான் முன்வைக்கிறார். அது சாத்தியம் என்கிறார், அதற்கான அகப்பயிற்சியையே அவர் யோகம் என்கிறார்.

(ii) என்றுமுள்ள தன்மையை உறவுடன் கலந்துகொண்டால் அது உறவாக அமையமுடியாது. இந்த உறவு அப்படியே காலாகாலத்துக்கும் இருக்கும் என்று கருதக்கூடாது. வாழ்க்கை மிகப்பெரியது. காலத்தில் உருமாறிக்கொண்டே செல்வது.

(iii) உறவை வாழ்க்கை முழுமைக்குமானதாக கருதிக்கொள்ளக்கூடாது. அன்பு, காதல் என்பது வாழ்க்கை மொத்தமும் அல்ல. வாழ்க்கையில் அன்பைவிட, உறவுகளைவிட பெரியவை பல உள்ளன. ஒட்டுமொத்த வாழ்க்கையும் சேர்ந்து அவற்றுக்கு அர்த்தமளிக்க முடியாது.

இதை நான் இங்கு சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஆனால் ஓஷோ இதுபற்றி விரிவாக பேசியிருக்கிறார். இதை நாம் வரையறுத்துக் கொண்டால்தான் அன்பு என்பதை நாம் உண்மையில் உணரமுடியும். அன்பு என்ற பெயரில் துன்பத்தை அனுபவிப்பதற்கு மனிதனுக்கு ஒரு ருசி உள்ளது. ஒரு மனிதனிடம் அவனுடைய அன்பை பற்றி பேசச்சொன்னால் உடனடியாக அவன் அவனுடைய துக்கத்தை பற்றி பேசத்தொடங்குவான் என்கிறார் ஓஷோ. ‘நானெல்லாம் அவளை நினைத்து ராத்திரியெல்லாம் அழுதிருக்கிறேன்’, ‘நானெல்லாம் அவனுக்காக சாவதற்குக்கூட தயாராக இருந்தேன்’ என்பார்கள். இது அன்பல்ல, துயரம். அன்பைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நாம் ஏன் உடனடியாகச் சாவைப்பற்றிப் பேசுகிறோம்? ஓர் அன்பின் பொருட்டு நாம் அடைந்த துன்பங்களைக்கொண்டு ஏன் அன்பை மதிப்பிட்டுக்கொள்கிறோம்?

ஒரு வண்டியை ஓட்ட நீங்கள் வண்டியின் தொழில்நுட்பத்தைப் பயிலவேண்டியுள்ளது. ஆனால் அன்பாக இருப்பதற்கு நீங்கள் எவ்வித பயிற்சியும் எடுத்துக்கொள்வதில்லை என்கிறார் ஒஷோ. நமது பெண்களுக்கு அவர்கள் அன்பில்லாமல் இருப்பதற்கான பயிற்சியை கன்னிப்பருவத்திலேயே அளித்துவிடுகிறோம் என்கிறார். அவள் பருவமடையும்போது யாரிடமும் காதல் வந்துவிடக்கூடாது என்பதால் அன்பு இல்லாமல் இருப்பதற்கான பயிற்சியை பதினெட்டு இருபது வயதுவரை அளித்து அதன்பின் திருமணம் செய்துகொடுத்துவிடுகிறோம். அதன்பின் அவளை கட்டிக்கொண்டவன் பாடு. அன்பு என்பதை பற்றி அவர் மீண்டும் மீண்டும் இதை சொல்கிறார், அன்பாக இருக்க ஒருவர் முறையான பயிற்சியை எடுத்தாகவேண்டும்.

4.  மகிழ்ச்சி

ஓஷோவிடம் வரக்கூடிய அத்தனைபேரும் திரும்பத்திரும்ப மகிழ்ச்சியாய் இருப்பதை பற்றித்தான் கேட்கிறார்கள். பி.கே.பாலகிருஷ்ணனிடம் நான் கேட்டேன், ‘ஏன் ஓஷோவிடம் கேள்வி கேட்பவர்கள் எல்லோருமே மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று கேட்கிறார்கள்’ என்று. அவர் ‘அவன் ஒருவனிடம்தான் சென்று மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி கேட்கமுடியும். மற்ற சாமியார்களிடம் கேட்கமுடியுமா ? அவர்களே துக்கமாகத்தானே இருக்கிறார்கள்’ என்றார். துக்கமாக இருப்பது எப்படி என்று சொல்லக்கூடிய சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களின் படங்களிலேயே அவர்கள் அழுதுகொண்டு இருப்பதைப்போலத்தான் இருக்கும். அத்தனை புனிதர்களும் துயரம் கப்பிய தோற்றம் கொண்டவர்கள். எழுபதுகளில் ஒரேயொரு துறவியிடம் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கேட்கமுடியும்.

ஓஷோ மகிழ்ச்சிக்கு ஒரு வரையறை அளிக்கிறார். ‘Happiness is so unusual, so useless’ என்கிறார். ஏனெனில் மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியின்மையுடன் ஒப்பிட்டுதான் நமக்கு வரமுடியும். விடுதலை என்பது மகிழ்ச்சி. ஆனால் கட்டுண்டு இருந்தால்தான் விடுதலையை அனுபவிக்க முடியும். உடல் நலம் என்பது மகிழ்ச்சியானது. ஆனால் நோயை வைத்துதான் உடல் நலனை மதிப்பிட முடியும். மகிழ்ச்சி என்பதே சார்புடையது. துயரத்துடன் ஒப்பிட்டு மட்டும்தான் உங்களால் மகிழ்ச்சியை உணரமுடியும். ஆகவே மகிழ்ச்சி என்பது பயனற்றது. எனவே அந்த சொல்லை விட்டுவிடு என்கிறார்.

அவர் சொல்வது நிறைவை பற்றி (Fulfillment). சிறந்த மகிழ்ச்சி என்பது இன்னொன்றுடன் ஒப்பிடுவதாக அல்லாமல், வேறொன்றின் நிபந்தனையாக அல்லாமல் ஏற்படுவதுதான். நான் பல இடங்களில் மற்றவர்கள் பேசும்போது ஓஷோவை நினைவுகூர்வேன். ஊட்டியில் அற்புதமான இயற்கை காட்சியை பார்த்துக்கொண்டிருப்பார்கள். சில நேரத்திலேயே ‘இந்நேரம் சிந்தாதிரிப்பேட்டையில் கனகனன்னு இருக்கும்’ என்பார்கள். சிந்தாதிரிப்பேட்டையை வைத்துதான் இந்த மகிழ்ச்சியை அவர்களால் உணரமுடிகிறது. அது உண்மையான மகிழ்ச்சி அல்ல, ஒப்பீடு மட்டும்தான். ஓஷோ சொல்வது அத்தகைய மகிழ்ச்சியை அல்ல. அந்த தருணத்தின் நிறைவையே. மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்ற கேள்விக்கு Be fulfilled என்கிறார் ஓஷோ. அதற்கு அப்பால் ஒரு பதில் இல்லை.

ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. நாயர் ஒருவர் நம்பூதிரியிடம் செல்கிறார். அந்த நம்பூதிரி ஒரு பெரிய வைத்தியர். நாயர் தனது தொண்டையை காண்பித்து, தன்னால் எதையும் விழுங்க முடியாது என்றும் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். நம்பூதிரி தொண்டையை பரிசோதித்துவிட்டு, ‘தொண்டை நிரந்தரமாக கெட்டுப்போய்விட்டது. இனி எதையும் விழுங்கவே முடியாது’ என்றார். பின்பு ‘நான் மனிதன் ஆசனவாய் வழியாக சாப்பிடமுடியுமா என்பது பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்’ என்றார். நாயர் ‘அது முடியுமா’ என்று கேட்டார். நம்பூதிரி ‘பார்க்கலாம். முதலில் ஓரிரு பருக்கைகள் சாப்பிடு. பின்பு அதிகமாக சாப்பிடலாம். நீ ஆறுமாதம் இங்கேயே இரு. நான் உன்னை பழக்குகிறேன்’ என்றார்.

நாயர் அங்கேயே இருந்துகொண்டு ஆசனவாய் வழியாக சாப்பிட பழகினார். பின்பு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் சிறிது நாட்கள் கழித்து அங்கு வருகிறார். அப்போது ஒரு மாதிரி நடனமாடிக்கொண்டே இருக்கிறார். நம்பூதிரியிடம் ‘நான் இப்போது நல்லா ஆயிட்டேன். மீன், இறைச்சி எல்லாம் சாப்பிடுகிறேன். உங்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன்’ என்றார். நம்பூதிரி ‘ஏன் நடனமாடிக்கொண்டே இருக்கிறீர்கள், ஏதேனும் பிரச்சனையா?’ என்று கேட்கிறார். அதற்கு நாயர் ‘அது ஒன்றுமில்லை, டைம்பாஸுக்காக சூயிங்கம் போட்டிருக்கிறேன்’ என்றார்.

நீங்கள் மகிழ்ச்சியை எந்தவொரு வடிவிலும் அடைய முடியும். எந்தவொரு வடிவில் இருந்தும் மகிழ்ச்சிக்கு செல்ல முடியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் உணராத நிலைதான் மகிழ்ச்சி என்கிறார். ‘எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு…’ என்று சொல்லிவிட்டாலே அது மகிழ்ச்சி அல்ல. ஏனெனில் அதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள். நிறைவடைய, நிகழ்காலத்தில் முழுமையாக இருக்க, அதாவது மகிழ்ச்சியாக இருக்க  பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சிக்கு தடையாகவும் நிபந்தனையாகவும் இருக்கக்கூடிய விஷயங்களை ரத்து செய்யுங்கள் என்கிறார் ஓஷோ.

(5) ஞானம்

பெரும்பாலான ஞானங்கள் அனுபவங்களில் இருந்து திரட்டி எடுக்கப்படுபவை, ஆனால் அந்த அனுபவத்திற்கு எந்த வகையிலும் பயன்படாதவையாகவும் இருப்பவை என்கிறார் ஓஷோ.  இதற்கொரு நம்பூதிரி நகைச்சுவை சொல்லலாம். நம்பூதிரி வீட்டைவிட்டு வெளியே வருகிறார். வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையில் செல்கிறார். வழியில் மஞ்சளாக ஏதோவொன்று கிடக்கிறது. குனிந்து அதை தொட்டுப்பார்க்கிறார். பிசுபிசுவென்று இருக்கிறது. முகர்ந்து பார்த்தபோது நாற்றமடித்தது. கையை வேட்டியில் துடைத்துவிட்டு ‘மலம் என்று நினைக்கிறேன். நல்லவேளை அதை மிதிக்கல’ என்றார்.

அனுபவத்திற்கு முன்னால் இருக்கக்கூடிய அறிவு மட்டும்தான் உனது அறிவு என்கிறார் ஓஷோ. ஞானம் என்பது அனுபவத்தை அறிவதற்காக பயன்படவேண்டும். அனுபவத்தால் பின்னர் ஏற்படும் அறிவினால் எந்தப்பயனும் இல்லை. ஏனென்றால் அந்த அனுபவம் மீண்டும் வரப்போவதில்லை. வருபவை முற்றிலும் புதியவை. அவற்றுக்கு பழைய அனுபவஞானம் உதவாது. மெய்மை, தியானம் போன்ற விஷயங்களை Enlightenment என்ற சொல்லால் சுட்டுகிறார். அதுபற்றி சொல்லும்போது ‘Enlightenment is something you know about yourself in the eternity’ என்கிறார்.  முடிவின்மையில் நீ உன்னைப்பற்றி அறியும் அறிவுதான் enlightenment. அதுதான் ஞானத்தின் விடுதலை என்கிறார்.

ஓஷோ சொல்லும் இந்த ஐந்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்க்கலாம். ஒன்றிலிருந்து ஏன் அடுத்தது வருகிறது என்று பார்க்கலாம். காதலை பற்றி சொல்லும்போது ஒத்திசைவு என்ற விஷயத்தை பற்றி சொல்கிறார். இன்னொரு மனிதனுடன் ஒத்திசைந்து போகும்போதுதான் அது அன்பு. ஆனால் அவ்வாறு ஒத்திசைந்து இருப்பதை நிபந்தனையாக போட்டால் அது துன்பமாகிவிடும். அதற்கு அவர் ஓர் உதாரணம் சொல்கிறார். நான் இலக்கியவாதி என்பதால் பெரும்பாலும் உதாரணங்களையே நினைவில் வைத்திருப்பதை பார்க்கலாம். எனக்கு அதில் இருக்கக்கூடிய கவித்துவம்தான் நினைவில் இருக்கும்.

இரண்டுபேர் நடனமாடுவதை அவர் உதாரணமாக சொல்கிறார். ஒருவர் மற்றொருவருடைய நடனத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தவில்லை, ஆணையிடவில்லை. ஆனால் இருவரும் மிகச்சரியாக ஆடினால் ஒருவருடைய நடனம் இன்னொருவரின் நடனத்தை வடிவமைக்கும். ஒன்றின் அசைவு மற்றொன்றில் தெரியும். அப்படிப்பட்ட இயல்பான நடனம் போல உறவு இருக்குமென்றால் அது சரியான உறவு. ஒருவர் இன்னொருவரின் நடனத்தைக் கண்காணித்தால், உருவாக்க முயன்றால் அது சிக்கிக்கொள்ளும் உறவு, அன்பான உறவல்ல என்கிறார்.

கேரளத்தில் தோலன் நம்பூதிரி பற்றிய நகைச்சுவை பிரசித்தமானது. ஒரு மதயானை சினந்து சாலையோரத்தில் நிற்கிறது. யாரும் அருகில் செல்லவில்லை. அப்போது தோலன் நம்பூதிரி ‘மூனு சக்கரம் கிடைத்தால் நான் யானையை அடக்குறேன்’ என்றார். [*சக்கரம் – நாணயம்]. அவருக்கு மூன்று சக்கரம் கொடுக்கிறார்கள். அவர் யானை முன் நின்று தனது மூக்கின் மீது விரல்களை வைத்து ஆட்டிக்காட்டுகிறார். அதைக்கண்ட யானை அவரை துரத்துகிறது. நம்பூதிரி உடனே ஓடிச்சென்று உழுதுபோட்ட வயலில் இறங்கி மறுபக்கம் சென்றுவிட்டார். யானை அந்த சேற்றில் இறங்கி மாட்டிக்கொண்டது. மனிதர்களை கொண்டுவந்து இவ்வாறு சிக்கவைப்பதுதான் இங்கு அன்பாக உள்ளது. அது அன்பல்ல .அவ்வாறு சிக்கிக்கொள்வது பற்று. அந்த பற்றில் இருந்து பொறுப்பு, அதிலிருந்து துயரம் என்று வரிசையாக செல்லும்.

இந்த புள்ளிகள் வழியாக ஓஷோவை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அவருடைய மொத்த உரையிலும் Enlightenment என்று அவர் எதை சொல்கிறார் எனில், அது இன்றிலிருப்பதைத்தான். இன்றில் முழுமையாக இருப்பதை தவிர மெய்ஞானம் என்று ஒன்று இல்லை. இன்றிலிருப்பதற்கு என்ன செய்யவேண

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.