நீலநிழல்(குறுநாவல்)- 3

( 3 )

நான் அன்று மாலை முப்பிடாதியம்மன் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்றேன். வெறிவிழிகளுடன், கைகளில் ஆயுதங்களுடன் அமர்ந்திருந்த அம்மனின் உருவத்தின் முன் கைகூப்பி நின்றிருந்தேன். என் குலதெய்வம். என் அப்பாவும் தாத்தாவும் முப்பாட்டன்களும் வழிபட்ட தெய்வம். எனக்கு மிக நெருக்கமான ஒரு பெரியபாட்டி முன் கைகூப்பி நிற்கும் உணர்வை எப்போதுமே அளிப்பவள். பூசாரி நல்லப்பசாமி எனக்குத் தெரிந்தவர்தான். “எல்லாம் செரியாப்போவும். அம்மை இருக்கா” என்று சொல்லி விபூதி அளித்தார்.

அங்கிருந்து நேராக ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். வீட்டுக்கு வந்ததும் ஒரு சினிமா பார்க்கலாம் என்றேன். என் மனைவிக்கு ஆச்சரியம். “என்ன படம்?” என்றாள். நான் சினிமாவே பார்ப்பதில்லை. எனக்கு சினிமா பிடிக்காது

“ஏதோ ஒரு படம்… சும்மா ரிலாக்ஸுக்கு” என்றேன்.

“காமெடி போடவா?”

“போடு”

அவள் ஏதோ ஒரு படம் போட்டாள். நகைச்சுவை என்று பெயரில் கூத்தடித்தார்கள். நான் ஆர்வமிழந்துவிட்டேன். நாயக்கரை நினைத்துக்கொண்டேன்.

எழுந்துசென்று செல்பேசியில் சகாதேவனை அழைத்தேன். “எப்டி போய்ட்டிருக்கு?”

“ஸ்மூத்தா போகுது சார். ஐஜி இப்பதான் பேசினார்”

“என்ன பண்ணுறார்?”

“யாரு நாய்க்கரா? நல்லா சாப்பிட்டார். நல்லாவே தூங்கினார். அவரு பாட்டுக்கு ஜாலியாத்தான் இருக்காரு.”

“இப்ப பாத்தீங்களா?”

“அரமணிநேரம் முன்னாடிகூட பாத்தேன்… நெழல்கூட ஆடுபுலி ஆட்டம் வெளையாடுறார். “

நான் அந்தக்காட்சியை நினைத்துக் கொண்டேன். ஒருமாதிரி படபடப்பாக இருந்தது.

நான் இரவுணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நாயக்கரின் வக்கீல் அனந்தகிருஷ்ண ஐயங்காரின் கார் என் வீட்டுமுன் வந்து நின்றது. ஏடிஸி வந்து என்னிடம் அவர் என்னை காண வந்திருப்பதாகச் சொன்னான்.

நான் குழம்பினேன். எனக்கு ஏதோ ஒரு சிக்கலை அவர் கொண்டுவந்துவிடக்கூடும் என்று பயந்தேன். ஆனால் அவரை சந்திக்க மறுக்கவும் மனம் வரவில்லை. நான் அறியாத ஏதோ ஒன்றுடன் அவர் வந்திருக்கலாம். அதை அறியாததனால் நான் மிகப்பெரிய எதையோ இழக்க நேரிழலாம்.

“அஞ்சு நிமிசம் போதும்னு சொல்லச்சொன்னார்.”

“சரி, வரச்சொல்லு”

நான் வரவேற்பறைக்குச் சென்று அமர்ந்தேன். அவர் வந்து வணங்கி அமர்ந்தார். “சொல்லுங்க” என்றேன்.

“இன்னும் எட்டுமணிநேரம்… நாய்க்கர் தொங்கிடுவார். எல்லாமே முடிவாயாச்சு”

“சரி”

“ஒரு உசிரு…”

“அவரு எவ்ளவு உசிர எடுத்திருக்காரு தெரியுமா?”

“அதுக்குண்டான தண்டனைய ஆண்டவன் குடுக்கட்டும்…”

“இதான் ஆண்டவன் குடுக்கிற தண்டனை… நாம அதை தடுக்கக்கூடாது”

“சார், நான் நேரடியாவே சொல்லிடறேன். இப்ப நாய்க்கர் மாட்டியிருக்கிற இந்த வழக்குலே அவர் நேரடிக்குற்றவாளி இல்லை. அவர் செஞ்ச கொலைகளிலே அவரை சிக்கவைக்கவே முடியாது. அவர் ஜாக்ரதையா இருப்பார். அதனாலே அவரு செய்யாத குற்றத்திலே திட்டம்போட்டு அவரை போலீஸ் மாட்டிவைச்சிருக்கு… மொத்த கேஸுமே வெறும் கட்டுக்கதை.”

“இருக்கலாம். ஆனா என் முன்னாடி வந்த கேஸ் பக்காவா இருந்தது…”

“நீங்களும் லாயரா இருந்தவர். உங்களுக்குத் தெரியும். நிஜமான கேஸ் இப்டி பக்காவா இருக்காது. அதிலே ஆயிரம் சிக்கல்கள் இருக்கும். இது ஒரு நாடகம். போலீஸ் சரியா பிளான்பண்ணி உண்டுபண்ணின நாடகம். கோர்ட்ல கேஸை நிரூபிக்க என்னென்ன தேவையோ எல்லாத்தையும் சரியான லாயரை வைச்சு கனகச்சிதமா எழுதி சேத்துட்டானுக. கொலைபண்ணின ஆயுதம், அதிலே அவரோட கைரேகை, ரத்தம்படிஞ்ச வேட்டி சட்டை, எட்டு ஐவிட்னஸ் எல்லாமே கச்சிதமா இருந்திச்சு…”

“போலீஸ் அப்டித்தான் பண்ணும்… ஏன்னா கோர்ட்ல கேஸ் நிக்கணும்னா அப்டி பண்ணியாகணும்… மாட்டிக்கிட்டவரு ஒண்ணும் நிரபராதி இல்லியே..”

“இல்லதான்… ஆனா எட்டு சாட்சிகளும் பொய்சாட்சிங்க… எப்டி துணிஞ்சு அந்த சாட்சிய சொல்றாங்க? எத நம்பிச் சொல்றாங்க? வழக்கமா கொலக்கேஸுங்க கோர்ட்ல ஆண்டுக்கணக்கா கெடக்கும்… நாய்க்கர் மேலேயே 12 கேஸு பதிமூணு வருசமா இளுத்திட்டிருக்கு… இந்த கேஸ் அப்பீலோட சேத்து மொத்தமே இருபத்தி ஆறு மாசத்திலே முடிஞ்சு தூக்கு வந்திட்டுது… எப்டி? போலீஸு பப்ளிக் பிராசிக்யூட்டர் எல்லாமே ஏன் அப்டி ஒரு வெறியோட இருந்தாங்க? சொல்லுங்க”

“ஏன்?”

“எல்லாருக்கும் பின்னாடி அவன் இருந்தான். வெள்ளையன்… நாய்க்கரோட எதிர்கோஷ்டி… அவர் செத்தபிறகுதான் முடிய செரைப்பேன்னு சொல்லி சபதம் போட்டுட்டு இருக்கிறவன்… அவன் அள்ளி இறைக்கிறான் சார் கோடிகளை… அப்பீல் கருணைமனு எல்லாத்தையும் அவன்தான் செல்லாக்காசாக்கினான்… அவன நாய்க்கரு விடமாட்டார். அவனுக்கு அவரு வாள் ஓங்கியாச்சு.”

“செத்துப்போனப்றம் பேயா வந்து சங்கப்பிடிப்பாரா?”

ஐயங்கார் “அவரு சாகமாட்டார்” என்றார். “சார், இப்ப ஜெயிலிலேகூட அவன் காசு வெளையாடுது. இல்லேன்னா ஜெயில் ஐஜி வந்து அங்க உக்காந்திருக்க மாட்டார்…”

“அதனாலே உங்காளு அகிம்சாவாதி ஆயிடுவாரா? அவரு கொலகாரர். சாட்சிகள் சரியா இருந்தது, நான் தூக்கு குடுத்தேன். அது என் கடமை.”

“அவர காப்பாத்தவேண்டியது என் கடமை”

“அப்ப அதைச் செய்யுங்க. அவ்ளவுதானே?” என்றேன். “ஆனா அவரை காப்பாத்திக்கணும்னு அவரே நினைக்கலை… அப்றம் என்ன?”

“ஆமா, நேத்து அவருக்கு ஒரு மாத்திரைய ரகசியமா ஆளுவைச்சு கொண்டுபோயி குடுத்தேன். சாப்பிட்டிருந்தார்னா கடும் காய்ச்சல் வந்திருக்கும்.. வலிப்புகூட வந்திருக்கும். தூக்கு தள்ளிப்போயிருக்கும்… மாட்டேன்னு சொல்லிட்டார். பொய் சொல்றது அவருக்கு பழக்கமே இல்லை… அப்பேற்பட்ட ஆளு. ஒண்ணு சொன்னா நம்ப மாட்டீங்க. நாய்க்கர் இதுவரை அவருக்கு நியாயம்னு தோணாத ஒண்ணைச் செய்ததில்லை. யார் சொத்தையும் திருடினதில்லை. பொம்புளைங்களையோ குழந்தைங்களையோ ஒண்ணுமே செய்ததில்லை. அவர் கையாலே செத்தவனுக முழுக்க அயோக்கியப்பயக்க. கிரிமினலுங்க.”

“இவரும் கிரிமினல்தான்.”

“இல்ல சார், இவரு ஒரு ராஜா… ஆமா மெய்யாகவே ஒரு ராஜா… நான் அப்டித்தான் நம்பறேன். அவரோட ராஜாங்கத்த அவரு நடத்தினார்” என்றார் ஐயங்கார். “நான் உங்க கிட்ட ஒரு ரிக்வெஸ்ட் வைக்கத்தான் வந்தேன்” என்றார் ஐயங்கார். “வெள்ளையன் காசை வாங்காத ஒரே ஆள் நீங்கதான்… இப்பகூட அவர நீங்க நினைச்சா காப்பாத்தலாம்… வழி இருக்கு.“

“என்ன வழி?”

“நான் நேரடியாவே சொல்றேனே. நீங்க இப்ப ஜெயிலுக்குப்போயி அங்க பிரசீஜர்ஸ்லே தப்பு இருக்குன்னு ஒரு அறிக்கை குடுத்தாப்போறும். ஹைகோர்ட்டுக்கு ஒரு தந்தி குடுக்கணும்… நான் அதை அப்டியே புடிச்சு ஹைகோர்ட்லே ஸ்டே வாங்கிட்டு விடியறதுக்குள்ள வந்திருவேன்… ஐக்கோர்ட் ஜட்ஜ வீட்டுக்குப்போயி எழுப்பி ஸ்டே வாங்க நமக்கு ஆளிருக்கு… தூக்கு தள்ளிப்போயிரும்… விசாரிச்சு மறுபடி தூக்குக்கு ஆர்டர் போட ஒருவாரம் ஆகும். அதுக்குள்ள எவ்ளவோ பண்ணலாம்… இன்னிக்கு அவரப்பாத்து பேசிட்டு வந்திருக்கீங்க. இந்த ஹெல்ப்பைப் பண்ணுங்க…”

“அவரு பொய் சொல்லமாட்டாரு, ஆனா நான் பொய் சொல்லணும் இல்ல?’

“இல்ல, அதில்ல…”

“போய்ட்டு வாங்க…” என எழுந்துகொண்டேன்.

ஐயங்கார் எழுந்து “எப்டியும் அவரு தப்பிச்சுக்குவார்… அவருக்கு அவ்ளவு ஈஸியா சாவு வந்திராது… அவரு கர்ப்பத்திலே சாவப்பாத்தவர். சாவோட வெளையாடுறவர். பாத்திருவோம்” என்றார்.

“அதெல்லாம் அவரோட மனப்பிராந்தி… சைக்காலஜியிலே அதுக்கு ஸ்கிஸோஃப்ரினியான்னு பேரு… அவருக்கு அந்த மனநோயோட ஒரு சின்ன அம்சம் இருக்கு… அதான் அவரோட பவர். மனநோயாளிங்க பொய் சொல்ல மாட்டாங்க. நடிக்க மாட்டாங்க. அவங்க சொல்றதெல்லாம் உண்மையிலேயே அவங்க நம்புறதுதான். அவங்களுக்கு அதெல்லாம் கண்கூடான உண்மை” என்றேன். “அதை அவங்க நம்பிச் சொல்றதனாலே கேக்கிறவங்களும் நம்பிடறாங்க. அந்த உறுதியான நம்பிக்கையோட சக்தி அவருக்கும் உண்டு. உலகம் முழுக்க மனநோயாளிகளை லட்சக்கணக்கானவங்க கடவுளா, சூப்பர்மேனா நம்புறாங்க.”

“மனநோயாளியா? அவரா?” என்று ஐயங்கார் சீற்றத்துடன் கேட்டார்.

“ஸ்கிஸோஃப்ரினியான்னா முழுக்கிறுக்கா இருக்கவேண்டியதில்லை. மனசிலே இருக்கிற ஒரே ஒரு எழுத்துப்பிழை மாதிரி அது… இந்த உலகத்திலே இதுவரை இருந்த எல்லா பெரிய கிரிமினல்களும் ஸ்கிஸோப்ரினியா, மேனியா, பெரெனியா மாதிரி மனநோயோட அம்சம் கொண்டவங்கதான்… ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் எல்லாருமே… பல பெரிய தலைவர்களுக்கே அந்தச் சிக்கல் இருந்திருக்கு. சர்ச்சிலுக்கும் ரூஸ்வெல்டுக்கும் சார்ல்ஸ் டிகாலுக்கும் எல்லாம்…”

ஐயங்கார் “நீங்க அவர புரிஞ்சுக்கிடலை” என்றபின் எழுந்து கைகூப்பினார்.

நான் அவருடன் வாசலுக்குச் சென்றபடி “அவரோட கேஸ் முழுக்க விரிவா படிச்சவன் நான் மட்டும்தான்… அவரு என்னென்ன செஞ்சாருன்னு எனக்குத்தான் முழுசாத்தெரியும். அவரு கெட்டவர் இல்ல. கொள்ளைக்காரனோ, மோசடிக்காரனோ இல்ல. ஆனா அவரோட பிரச்சினை அகங்காரம். மிதமிஞ்சின ஈகோ. உலகமே தான்தான்னு நினைச்சுக்கிடுற திமிரு. அவரே சொன்னார், அவரோட உலகத்திலே அவர் மட்டும்தான்னு… அதான் அவர கொலகாரன் ஆக்கிச்சு… அவரு யாருக்குமே எரக்கம் காட்டலை. அதனாலே யார்கிட்டயும் எரக்கம் கேக்கிறதுக்கு அவருக்கு உரிமை இல்லை.” என்றேன்.

“உங்க கிட்ட அவரு எரக்கம் கேக்கலை… நான்தான் கேட்டேன். அவருக்காக நான் கேட்டேன். ஏன்னா அவரு எனக்கு கிளையண்டு மட்டுமில்லை. ஒத்தப் பைசா குடுக்கலேன்னாக்கூட நான் அவருக்காக கேஸ் நடத்துவேன். என் சொந்தக்காசை செலவழிச்சு கேஸ் நடத்துவேன். எனக்கு அவரு அவ்ளவு செஞ்சிருக்காரு.”

“நடத்துங்க… எல்லாம் நாளை விடியக்காலை நாலுமணி வரை.”

ஐயங்கார் சட்டென்று எகிறினார்.

“யார்யா நீ? தெரியாம கேக்கேன், நீ யாரு? கடவுளா? நீ நினைச்சா மனுசன கொல்ல முடியுமா? நீ போட்ட உத்தரவு வெறும் காகிதம்… ஆமா, வெத்துக்காகிதம்… அவரக் கொல்ல உன்னால முடியாது. அவருகூடவே நெழலா இருக்கே அந்த சாமி நினைக்கணும் அவரு சாகிறதுக்கு… நீ நினைச்சா ஒரு மயிரும் நடக்காது…”

“பாத்திருவோம்” என்றேன். “இன்னும் எவ்ளவு நேரம்…”

“ஆமா பாத்திருவோம்… உக்காந்திட்டிரு… ராத்திரி பூரா உக்காந்திட்டிரு… காலையிலே நியூஸ் வரும், நாய்க்கரு தப்பிச்சிட்டாருன்னு… ஆமாய்யா… நியூஸ் வரும் உனக்கு… நானே கூப்பிட்டுச் சொல்றேன்… போறுமா…?”

“என்ன பந்தயம்?”

“பந்தயமா? நாய்க்கர் மேலே பைசா கட்டி பந்தயமா? சரி, பந்தயம்தான். நாளைக்கு அவர தூக்கிலே போட்டாங்கன்னா நான் கெளம்பி சாமியாராப் போய்டுறேன்… பண்டாரமா தெருவிலே உக்காந்திடறேன்… அதுக்குமேலே நான் பெருமாளை கையெடுத்துக் கும்பிடமாட்டேன். போறுமா? ஏன்னா அவரு செத்தா பெருமாளே பொய்யின்னு ஆயிடுது… சரி, நீ என்ன பண்ணுவே? நீ வேலையை ராஜினாமா பண்ணுவியா? அதுக்குமேலே நீ நீதிபதி இல்லே… சரியா?”

“சரி” என்றேன்.

“சரி, பாத்திருவோம்” என்றபின் ஐயங்கார் சென்று காரில் ஏறிக்கொண்டார். அவர் கார்க்கதவை மூடும் ஒலி என்னை அறைந்து அதிரச்செய்தது.

என் அறைக்குச் செல்லும்போது நான் பதறிக்கொண்டிருந்தேன். கால்கள் நடுங்கியதில் என்னால் நடக்க முடியவில்லை.

பழைய காகிதங்களை துழாவி நாயக்கரின் வழக்கு சம்பந்தமான கோப்புகளை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். குற்றப்பத்திரிகை, எதிர்வாதங்கள், சாட்சியங்கள்… அவருடைய வாழ்க்கையை என் கண்முன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

உண்மை, நாயக்கரை கொண்டுவந்து சிக்கவைத்தவன் வெள்ளையன். எல்லாமே மிகக்கச்சிதமாக எழுதப்பட்ட வழக்கு அது. போலீஸ்காரர்கள் எழுதியது அல்ல, மிகச்சிறந்த வக்கீல்களை வைத்து எழுதப்பட்டது. வழக்கை போட்டு; அதை நடத்துவதற்காகவே ஒரு டிஐஜியும், ஓர் இன்ஸ்பெக்டரும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் அந்த ஊருக்கு மாற்றலாகி வரவழைக்கப் பட்டிருந்தார்கள். சாட்சிகள் அனைவருமே சின்னக் கிரிமினல்கள். வழக்கு நடக்கும்போது மட்டும் தோன்றி வழக்கு முடிந்ததுமே மாயமாக மறைந்துவிட்டிருந்தனர்.

வெளியே நாயக்கரின் சாம்ராஜ்யம் அப்படியேதான் இருந்தது. அவர்கள் வெள்ளையனை விடமாட்டார்கள். உண்மையில் அவனுக்கு சவால்கள் பெரியதாகிவிட்டன. நாயக்கர் உள்ளே இருந்துகொண்டே அவனுக்கான வலையை விரித்திருப்பார். அவர் தூக்கில் தொங்கினாலும்கூட அவருடைய உத்தரவு உயிருடன் இருக்கும்.

நான் நாயக்கரின் வாழ்க்கையையே அந்த காகிதங்கள் வழியாக வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் வளர வளர அவருடைய எதிரிகளும் பெரிதாயினர். காட்டில் யானைக்கு இன்னொரு யானைதான் எதிரி. ஏனென்றால் அது இன்னொரு யானையின் இடத்தைத்தான் எடுத்துக்கொள்கிறது. வெள்ளையனும் ஓர் அரசன். பழங்காலத்து கொடூரமான சிற்றரசன். அவனுடைய அரசாங்கம் பாதாள வழிகளின் வழியாக நகரையே வளைத்துப் பரவியிருந்தது.

அரசியலும் வணிகமும் குற்றம் இல்லாமல் நடைபெறமுடியாத நிலை உலகமெங்கும் உருவாகிவிட்டது. ஆகவே நிழல் உலகம் ஒரு சமான அரசாகவே நிகழ்கிறது. நமது இந்த உலகில்தான் சட்டம், அரசு, நீதி. நியாயம் எல்லாம். அங்கே ஆயுதங்கள் மட்டும்தான். இங்குதான் பணம் என்பது உழைப்புடனும் உற்பத்தியுடனும் சம்பந்தப்பட்டது. அங்கே பணம் என்பது கொள்ளைப்பொருள் மட்டுமே. அள்ளி எடுக்கப்படவேண்டிய ஒன்று.

அந்த நம்பிக்கையில்தான் ஐயங்கார் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் சட்டமும் அரசாங்கமும் எல்லா தடவையும் தோற்பதில்லை. அவை மிக மிக மெதுவானவை. அரசு என்பது சிறிய கண்ணாடிவிரியன். அதனால் ஓட முடியாது. புழுப்போல நெளிந்து நகரவே முடியும். அது பொறுமையானது. நாட்கணக்கில் காத்துக்கிடக்கும். சருகோடு சருகாக, கண்ணுக்கே தெரியாமல் கிடக்கும். இரை அதுவே அருகில் வரும்வரை பாம்பு காத்திருக்கும். ஒரு கொத்து. மிகமெல்லிய ஒரு முத்திரை, அவ்வளவுதான். இரை ஓடிவிடும். ஆனால் நஞ்சு குருதியில் ஏறத்தொடங்கும். மெல்லமெல்ல அதன் வேகம் குறையும். மயங்கி விழுந்து சுழலும். அசைவடங்கும். மிகமெல்ல அந்த இரையின் வாசனையை பிடித்துக்கொண்டு விரியன் தேடி வரும்… வந்துசேர்ந்துவிடும்.

நான் தூங்கவே இல்லை. விடியற்காலை இரண்டு மணிக்கு போன் வந்தபோது எனக்கு கைகால்கள் என்னவென்றே தெரியாமல் துள்ளி அதிர்ந்தன.

சகாதேவன்தான். “சார், ஒரு பிரச்சினை”

“சொல்லுங்க”

“அந்த முன்சீப் கோர்ட் நீதிபதி வரமுடியாத நிலைமையிலே இருக்கார் சார்…”

“என்னாச்சு?”

“வீட்ல ஒரு மைனர் ஆக்ஸிடெண்ட்… கரெண்ட் ஷாக் அடிச்சிட்டுது… ஆஸ்பத்திரியிலே இருக்கார்.”

ஐயங்காரின் நம்பிக்கை அதுதானா? என் உடம்பெங்கும் எரிச்சல் ஏறியது.

“ஐயங்கார் நேத்து உங்ககிட்ட சவால் விட்டுட்டு போனார் சார், அப்பவே பிளான் பண்ணிட்டாங்க.”

“அது உங்களுக்கு எப்டி தெரியும்?”

“தெரியும்”

“அப்ப நீங்களும் வெள்ளையனோட பே லிஸ்ட்லே இருக்கீங்க?”

“சார், நான் கூப்பிட்டது ஒரே விஷயத்துக்காக. நீங்க வரமுடியுமா?”

“நானா?”

“சட்டப்படி நீங்களே உங்களுக்கு ஆர்டர் போட்டுக்கிட முடியும். நீங்களே கெளம்பி வந்தா சட்னு முடிச்சிடலாம்.”

நான் நெஞ்சு படபடக்க அமர்ந்திருந்தேன்.

“அவனுகளோட திமிர அப்டி விட்டிர முடியாது சார்.”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“வாங்க சார்.”

“சரி”

ஏன் அப்படிச் சொன்னேன்?

“நீங்க கெளம்பி வாங்க சார்… இங்க வந்து சேருறதுக்குள்ள நான் பிராப்பரா ஐஜிக்கு மனு குடுத்து அவர் அதை ஃபார்வேட் பண்ணி உங்களுக்கு அனுப்புற லெட்டர் உங்க ஆபீஸுக்கு போயிடும். உங்க லெட்டர்பேடை மட்டும் கொண்டு வாங்க. உங்களுக்கு நீங்க போடுற ஆர்டர இங்கியே டைப் பண்ணி சைன் பண்ணிக்கலாம். தூக்கு முடியறதுக்குள்ள நீங்க மேலே அதை அனுப்பிச்சிரலாம்.”

“சரி, நான் வர்ரேன்” என்றேன்.

என்னால் சற்றுநேரம் எழவே முடியவில்லை. உடல் இரும்புச்சிலை போல எடைகொண்டிருந்தது.

பின்னர் எழுந்து வெளியே சென்று ஓட்டுநரை அழைத்தேன். அவர் விழித்திருந்தார்.துப்பாக்கியுடன் காவலரும் வந்தார். அவர்கள் எனக்காகக் காத்திருந்தார்களா? அவர்களும் வெள்ளையனின் பணத்தை வாங்குகிறார்க்ளா?

நான் காரில் சென்றுகொண்டிருந்தபோது என் காவலர் தன் செல்போனை எடுத்து நீட்டினார். “பேசணுமாம்” என்றார்

“யார்?” என்றேன்.

அவர் ஒன்றும் சொல்லவில்லை. நான் போனை செவியருகே வைத்தேன்.

“சார், நான் வெள்ளையன் பேசுறேன்…”

நான் போனை விலக்கப் போக, “சார், சார் ஒரு நிமிசம், ஒரே வார்த்தை” என்று அவன் கெஞ்சினான்.

“சொல்லு”

“சார், இன்னியோட அவர் கதை முடியணும்… அது உங்க கையிலே இருக்கு.”

“நான் உன்னோட வேலையாள்னு நினைச்சியா?”

“இல்ல சார். நீங்க யார்னு எனக்குத் தெரியும். சார், உங்களுக்குப் பதிலா நான் எனக்கு வேண்டிய ஒரு நீதிபதியையும் நியமிச்சிருக்க முடியும். அதை நான் செய்யலை. நல்ல நீதிமான் ஒருத்தர் வந்து தீர்ப்பு சொல்லட்டும்னு நினைச்சேன். ஏன்னா அந்த தீர்ப்புதான் அப்பீலிலே நிக்கும்… அதவிட அந்தத் தீர்ப்பைத்தான் நாய்க்கர் அவரே மனசுக்குள்ள மதிப்பார். அதுக்கு மட்டும்தான் அவரு கட்டுப்படுவார்.”

“ஆனா எல்லா சாட்சியும் பொய்.”

“ஆமா சார், ஆனா குற்றவாளி உண்மையான குற்றம் செஞ்சவர்… கோர்ட்ல எல்லா கேஸும் அப்டித்தான் சார்.”

“நான் ஒரு கிரிமினல்கிட்ட பேச விரும்பலை…”

“நான் கிரிமினல்தான், இல்லேங்கலை. அதுக்குண்டான காரணங்கள் எனக்கு இருக்கு. பணம், அதிகாரம் எல்லாம்தான். ஆனா மேலே ஒண்ணு இருக்கு. ஈகோ… அகங்காரம்… சரி, திமிருன்னே வைங்க… அந்த ஈகோவாலேதானே நீங்க பெட்டு கட்டினீங்க. அந்த ஈகோவ காப்பாத்தத்தானே இப்ப போய்ட்டிருக்கீங்க?”

“அப்ப நீயும் நானும் ஒண்ணு?”

“இல்லசார், மனுசங்க எல்லாம் ஒண்ணு” என்று வெள்ளையன் சொன்னான். அவன் சிரித்தபோது அவன் மிகக்கூர்மையானவன் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழி… Life is short, and I’ve shortened mine in a thousand delicious, ill-advised ways..”

“யாரோட வரி?

“Maggie Smith னு ஒரு அமெரிக்கன் போயட்…”

“நீ படிச்சவனா?”

“எம்.ஏ.இங்கிலீஷ் லிட்டரேச்சர்…”

நான் பேசாமல் அமர்ந்திருந்தேன்.

“நாய்க்கர் மாதிரி ஒரு எதிரியை சம்பாதிக்கணும்னா நானும் சமானமா இருக்கணும்ல? சமானமா ஆய்ட்டா அடுத்த எய்ம் அவர தாண்டி மேலே போறதுதான்… இந்த உலகத்திலே அவரு இல்லேன்னா நான், ரெண்டுலே ஒருத்தர்தான் இருக்க முடியும்… அவரை கொல்ல பலவாட்டி டிரை பண்ணினேன். முடியலை. அப்பதான் இப்டி தோணிச்சு… அவரு நாய் மாதிரி கூடவே சாவை வைச்சு கொஞ்சிட்டிருக்கிற ஆள். அவரே விரும்பாம சாவு வராது அவருக்கு. அவரு கொஞ்சமாச்சும் சாவை அக்ஸப்ட் பண்ணணும். கோர்ட்ல உங்கள மாதிரி ஒருத்தரோட தீர்ப்பு வந்தப்ப அவரோட மனசுக்குள்ள, ஆழத்தோட ஆழத்திலே, அவரே ஒத்துக்கிட்டார். அவரு சாகிறது சரிதான்னு அவருக்கே தோணியாச்சு… அதான் அவர் இப்ப ரெடியா இருக்கார்… அதை முடிச்சு வைப்போம்.”

நான் “இந்த ஆட்டத்திலே நான் எதுக்கு?” என்றேன்.

“நீங்க சவால்விட்டப்பவே உள்ள வந்திட்டீங்க… பரவால்ல. என் கேஸு எப்பவாச்சும் உங்க கோர்ட்டுக்கு வந்தா அப்ப எனக்கும் தூக்கு குடுங்க… சரிக்குச் சரியாயிடும்ல? ரைட் சார்.”

அவன் பேசி முடித்தபின்னரும் அந்தக்குரலை கேட்டுக்கொண்டிருந்தேன். எத்தனை இயல்பான, எத்தனை கூர்மையான கொடூரம். அவனைப் போன்ற குற்றவாளிகள் முன் சிறிய கொலைகாரர்கள் கடவுளைக் கண்டதுபோல பணிந்துவிடுவார்கள்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.