பேய்கள் எழும் காலம் – கடலூர் சீனு
திருவண்ணாமலை பகுதியில் ஒரு சிறிய சமணப் பயணம் முடித்துத் திரும்பி, அந்த உணர்வு நிலையின் தொடர்ச்சியாக அப்படியே மீண்டும் என காண்டீபம் நாவலை சிறு சிறு இடைவெளிகள் விட்டு இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். புனைவு அளிக்கும் உத்வேக கற்பனை, நிலம் அளிக்கும் அக விரிவு, இதனோடு தொடர்பு கொண்ட அடிப்படை பண்பாட்டுச் செய்திகள், அது சென்று தொடும் உள்ளாழம், இவையெல்லாம் ஒன்று கூடினால் அதில் எழுந்து பறந்த என்னால், அந்த வானிலிருந்து மீண்டும் தரைக்கு வருவதே ஆகாத காரியம்.
இளைப்பாற ஏதேனும் கேளிக்கைப் படம் பார்க்கலாம் என்றால், அது இளைப்பாறலுக்கு பதிலாக வேறு எதையாவது கிளர்த்தி விடுகிறது. உதாரணத்துக்கு நான் இந்த வருடம் இதுவரை அரங்கில் சென்று பார்த்த ஒரே ஒரு படமான மர்மர் படத்தை சொல்லலாம். கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட்டில், நல்ல ஒளிப்பதிவு, நல்ல சவுண்ட் டிசைனிங், நல்ல மேக்கிங் கில் எடுக்கப்பட்ட திகில் படம். தங்களது யூடியூப் சேனலுக்காக அமானுஷ்ய விஷயங்களை படம் பிடிக்க காட்டுக்குள் செல்கிறார்கள் ஐவர். என்ன செய்தால் அங்குள்ள அமானுஷ்ய ஆற்றலை கிளர்த்த முடியுமோ அதை செய்கிறார்கள். அந்த அமானுஷ்ய ஆற்றல் என்ன செய்தது அந்த ஐவரும் தப்பித்தார்களா இதுதான் கதை. கதையாகவும் படமாகவும் சுவாரசியமான ஒன்றுதான். ஆனால் இதன் கான்செப்ட் எனக்கு கடுமையான ஒவ்வாமையை அளித்தது.
சப்த கன்னியர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பௌர்ணமி இரவில், குறிப்பிட்ட காட்டுக்குள் குறிப்பிட்ட குளத்தில் வந்து குளிக்கிறார்களாம். அதை இவர்கள் படம் பிடிக்கிறார்களாம். அந்த சப்த கன்னிகள் இவர்களை தனித்தனியே தலையை வெட்டி குருதியை குடித்து கொன்று விடுகிறதாம். யோசித்துப் பாருங்கள் கன்னி மேரி எனும் தெய்வத்தைக் கொண்டு, இதே கான்செப்டில் இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால் அதை முதல் காட்சி தாண்டினால் அரங்கில் பார்க்க முடியுமா? மாறாக மர்மர் படம் வெகுமக்கள் ஊடகத்தில் வைத்து செய்த இந்த ஆபாசமான திரித்தல் வேலையை மறுதலித்து இங்கே ஒரே ஒரு முனகல் கூட எழவில்லை. அடிப்படையில் இந்த கான்செப்ட்டே மேலை மரபின் கோதிக் இலக்கியம் வகையை தழுவியது. அந்த கோதிக் இலக்கியத்தில் இத்தகு அமானுஷ்யங்கள் நிகழ ஒரு நோக்கம் இருக்கும். மாறாக இதில் திரித்தல் என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
ஆகவே இம்முறை இளைப்பாற திரைப்படத்தை உதறி, கிராபிக் நாவல்கள் வாசிக்கலாம் என்று முடிவு செய்து சில கிராபிக் நாவல்கள் வாசித்தேன். கிராபிக் நாவல் வாசிப்பதில் இரண்டு வசதி உண்டு.அது நல்ல கிராபிக் நாவல் எனில், அது ஒரே நேரத்தில் காட்சி இன்பம் வாசிப்பு இன்பம் இரண்டையுமே தர வல்லதாக இருக்கும். மேற்கண்ட கிராபிக் நாவல் அட்டைப்படத்தில் இரண்டு சுவாரஸ்யங்கள் காணலாம். முதலாவது இது காமிக்ஸ் நிறுவன வெளியீடு எனும் செய்தி. இரண்டாவது இது கிராபிக் நாவல் எனும் செய்தி. காமிக்ஸ் எனும் நூற்றாண்டு கால பொது வகை மாதிரிக்குள் இருந்து கிராபிக் நாவல் எனும் தனி பிரிவு, தனக்கான தனி வரையறைகளை முன்வைத்து கிளைத்த ஆண்டு 1970. வில் ஐஸ்னர் எனும் சித்திரக் கதை ஆசிரியர்தான் தனது, கடவுளுடன் ஒப்பந்தம் மற்றும் பிற கதைகள் என்ற தலைப்பில் அமைந்த சித்திரக் கதையை அதன் முன்னுரையில் அது கிராபிக் நாவல் என்று சொல்லி அந்த பெயரை முதன் முதலாக காயின் செய்கிறார். மெல்ல மெல்ல திரண்ட அதன் வடிவக் கூறினை ஆர்ட் ஸ்பீகல்மேன் எனும் வரைகலை நாவல் ஆசிரியர் தனது மவுஸ் எனும் கிராபிக் நாவல் வரிசை வழியே முழுமை செய்கிறார். 2000 களில் கிராபிக் நாவல் என்பது காமிக்ஸ் என்பதில் இருந்து விலகி, முதிர்ந்த ரசனை கொண்டோர் ஈடுபடத்தக்க அல்லது அவர்களுக்கானது என்று மட்டுமே ஆன தனித்ததொரு கலைப் பிரதியாக நிலைபெற்றது.
சினிமா கலை அதன் உச்சம் தொட்ட பிறகு பரிணாம வளர்ச்சி கண்ட கலை இது எனில் சினிமா அளிக்கும் அனுபவத்தில் இருந்து கிராபிக் நாவல் அளிக்கும் அனுபவம் எங்கு வேறுபடுகிறது? சினிமாவில் காட்சி சட்டகங்களில் அதன் தொழில்நுட்பம் அதன் மேல் படிய வைக்கும் காலத்தின் களிம்பு உண்டு. மாறாக நல்ல கிராபிக் நாவலில் அதன் காட்சி சட்டகங்கள் காலத்தின் பிடிக்கு ஒரு எட்டு தள்ளி நிற்கும் தனித்ததொரு ஓவியக் கலை வெளியால் ஆனது.
சினிமா அசையும் பிம்பங்களை கொண்டு தாக்கத்தை உருவாக்குவதை தனது அடிப்படை அலகாக கொண்டது. கிராபிக் நாவல் நிலைத்த பிம்பங்களை கொண்டு தாக்கத்தை உருவாக்குவதை தனது அடிப்படை அலகாக கொண்டது. சினிமாவில் அதன் அடிப்படையான நிகழ் பிம்பத்துக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கதையை, இசையை, ஓவியத்தை அது எடுத்துக் கொள்ளும். மாறாக கிராபிக் நாவல் கதை, ஓவியம் இந்த இரண்டை மட்டுமே இரு சிறகுகள் என்று கொண்ட பறவை. சினிமாவில் அது தனது நிகழ் பிம்பம் கொண்டு ஒரே ஒரு ஷாட் ஐ எத்தனை நிமிடம் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளும். கிராபிக் நாவல் தனது நிலை பிம்பம் கொண்டு ஒரே ஒரு காட்சி சட்டகத்தை ஒரு ஷாட் என்று உணர வைக்கும். சினிமாவில் (ஷாட்கள் சேர்ந்தால் சீன். சீன்கள் சேர்ந்தால் சீக்வென்ஸ். அனைவரும் அறிந்த மெல் கிப்சன் இயக்கிய அப்போகலிப்டோ படம் வெறும் மூன்றே சீக்வென்ஸில் நிகழ்ந்து முடியும் ) ஒரே ஒரு சீக்வென்சில் படம் எடுப்பது என்பதெல்லாம் பரிசோதனை முயற்சியாகவே செய்ய முடியும். மாறாக ஒரே ஒரு சீக்வென்ஸ் கொண்டு நிகழும் கதைகளை கிராபிக் நாவலில் மிக இலகுவாக கொண்டு வந்து விட முடியும். தனித்துவமான வலிமையான சில காட்சிப் படிமங்கள் கொண்ட வெளிப்பாடு, ஒரு தீவிர இலக்கிய பிரதியின் குறு நாவலோ, நாவலோ போல கூர்மை, அடர்த்தி, உள்ளடுக்குகள், விரிவு, ஆழம், கற்பனை சாத்தியங்கள், சொல்லாமல் காட்டாமல் உணர்த்தி செல்லும் சப் டெக்ஸ்ட் இவை கொண்ட உள்ளடக்கம் இவற்றின் சரி விகித கலவையாகவே நல்ல கிராபிக் நாவல் அமையும்.
மற்றபடி இந்த கிராபிக் நாவல் தனித்ததொரு கலைப் பிரதியாக கிளைக்க, அது எதிர் கொண்ட சவால்களை கடக்க அதற்கு மிக வசதியாக இருந்த பல களங்களில் முதன்மையான மூன்றில், முதலாவது உருவெளி தோற்றங்கள் வழியே அலைக்கழியும் பாத்திரங்கள் நிகழும் களம்,இரண்டாவது ஹாலோகாஸ்ட் சூழல் பின்னணி கொண்ட களம், மூன்றாவது கோதிக் பாணி இலக்கியங்கள் நிகழும் களம். மேற்கண்ட டோடோ ஃபராகி கதை எழுதிய, பாஸ்குவாலே ஃரைசென்ட்டா ஓவியங்கள் வரைந்த, s. விஜயன் மொழியாக்கம் செய்த லயன் காமிக்ஸ் வெளியீடான பனியில் ஒரு குருதிப்புனல் கிராபிக் நாவலும் கோதிக் லிட்ரேச்சர் வகைமாதிரியை சேர்ந்ததே.
கோதிக் இலக்கியம் எனும் வகைமை குறித்து நான் அறிய விரும்பியது விஷ்ணுபுரம் நாவலுக்கு பிறகே. எழுத்தாளர் சுஜாதா விஷ்ணுபுரம் குறித்து எழுத நேரும்போதெல்லாம் அந்த நாவல் இந்த வகைமையை சேர்ந்தது என்று குறிப்பிடுவார். அதன் பிறகே அது குறித்து தேடி சென்று வாசித்தேன். (கோதிக் இலக்கிய வகைமை கொண்ட வெளிப்பாட்டுக் கூறுகள் சில விஷ்ணுபுரம் நாவலில் உண்டு, ஆனால் விஷ்ணுபுரம் கோதிக் வைகைமைக்குள் வராது) 12 ஆம் நூற்றாண்டு துவங்கி 16 ஆம் நூற்றாண்டு வரை மேலை மரபில் நிகழ்ந்த கோதிக் கலை என்பது தனி. பண்படாத அல்லது காட்டுவாசித்தனமான என பொருள்படும் அதன் பெயர்க்காரணம் உள்ளிட்டு அது சார்ந்த அனைத்தும் தனி. கோதிக் இலக்கியம் என்பது 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் துவங்கிய ஒரு இலக்கிய அலை. பிரைம் ஸ்டோகர் டிராகுலா அதன் செவ்வியல் பிரதி. எட்கர் ஆலன் போ அந்த அலையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர்.
நெல்லையில் நெல்லையப்பர் கோயில் பூதத்தார் முக்கு எதிரே காவல் பிறை தெருவில் எங்கள் வீடு. தெரு முனையில் இடதுபக்கம் மிகச் சிறிய உச்சினி மாகாளி அம்மன் கோயில். துடியான தெய்வம். 35 வருடம் முன்பு வரை, வருடம் ஒரு முறை அந்த அம்மன் கோயில் கொடைக்கு 108 ஆடுகள் பலி தர படும். தெருவெங்கும் கொழுங்குருதி வழிந்தோடும். அதில் மிதித்து நடந்து சிவந்த பாதங்களோடுதான் எங்கள் வீட்டுக்குள் போக முடியும். 35 வருடம் முன்னர் இது நிலை என்றால், பல்லவர் காலம் எல்லாம் எப்படி இருந்திருக்கும்? உலகெங்கும் இது எப்படி இருந்திருக்கும்?
மிக பின்னர் எங்கள் பகுதியில் யாதவர் செல்வாக்கு ஓங்கியது. அந்த கோயில் சார்ந்த அனைத்தும் யாதவர் கைகளுக்கு போக, அங்கே ஓடிய குருதி நின்று, குருதி பிரசாதம் குங்கும பிரசாதமாக மாறியது. ஆம் உயிர் பலியைதான் ஒழித்தார்களே தவிர உயிர் பலி கேட்ட தெய்வத்தை அல்ல. இந்திய நில பண்பாட்டின் உள்ளுறை என்று அமைந்த இந்த அம்சம் உலகின் பிற பகுதிகளில் கிடையாது. கிறிஸ்துவம் நுழைந்த நிலங்களில் எல்லாம் அந்த நிலத்தின் முந்தைய தெய்வங்களை எல்லாம் அடித்துப் புதைத்து பாதாள இருளுக்குள் அதற்கும் கீழ் நரக நெருப்புக்குள் தள்ளியது. 18 ஆம் நூற்றாண்டில் உலகு தழுவி நிகழ்ந்து கொண்டிருந்த போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் இவற்றின் பின்புலத்தில் அப்பண்பாடு தனது கலை வழியே தனது ஆழத்தை துறுவிப் பார்க்கையில், அந்த ஆழத்தில் இருந்து எழுந்து வந்தவை கிறிஸ்துவ கூட்டு நனவிலி சாத்தான் என புனைந்து வைத்திருந்த பாகணீய மதங்களின் தெய்வம். அவை இரத்தம் குடிப்பவை. மனிதனின் ஆன்மாவை திருடிக் கொண்டு அவனை நிரந்தரமாக நடை பிணம் என்றாகி தனது நரக குழிக்குள் தனக்கு அடிமையாக்கி வைத்துக் கொள்பவை. அந்த பின்புலத்தை மையம் கொள்வதே கோதிக் இலக்கியம். கோதிக் என்பதற்கு தோராயமாக அமானுஷ்யம் என்று பொருள் கொள்ளலாம்.
கோதிக் இலக்கிய வகைமைக்குள் வரும் மேற்கண்ட இந்த கிராபிக் நாவல், எக்ரியன் என்ற எழுத்தாளரின் பார்வைக் கோணம் வழியே சொல்லப்படுகிறது. 1812 ஆம் ஆண்டு கட்டாய இராணுவ சேவையாக நெப்போலியன் படையில் சேர்ந்து, ரஷ்ய எல்லைப்புற பனி வெளியில் ரஷ்யாவை ஊடுருவும் நெப்போலியன் படை ஒன்றில் பணி செய்கிறார் எக்ரியன். கடும் பனி. பட்டினி. படை வீரர்கள் ஒவ்வொருவராக செத்து விழுகிறார்கள். அந்த பனிப் பாலை நிலத்தில் ஒரு பெண் உதவி கேட்டு அவர்கள் வழியில் குறுக்கிட, அந்த பெண்ணை பின் தொடர்ந்தால் நிச்சயம் ஒரு கிராமம் வரும். அதை இருக்கும் ஆயுதங்களை கொண்டு அடிமை செய்தால் இப்போதைய சூழலில் இருந்து தப்பிக்க முடியும் என்று கேப்டன் கணக்கு போட, படை மொத்தமும் அந்த பெண்ணை தொடர்ந்து அவளது கிராமத்துக்கு போகிறது. அதுவோ ஒரு சபிக்கப்பட்ட பூமி. மனித ஆற்றலை மீறிய ஏதோ ஒன்று அவர்களை துரத்துகிறது. அவர்கள் ஓடி சென்று கண்ணில் பட்ட பாழடைந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைகிறார்கள். அந்த ஆலயத்தின் பாதிரியார் இறந்து போய் தூக்கில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். வாசலை மூடி படையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் பொழுது நள்ளிரவை தொட, செத்துப்போன பாதிரியார் எழுந்து வந்து படையினரை தாக்குகிறார். படையினர் தப்பிக்க மீண்டும் வாசலை திறந்து வெளியே ஓட, அந்த சபிக்கப்பட்ட நிலத்தின், எல்லா நடைபிணங்களும் இவர்களைத் தாக்க வருகின்றன. இவர்கள் தப்பித்து ஓடி திசை தவறி, நரகத்தின் வாசலை திறந்து விடுகிறார்கள், நெருப்புக் குழிக்குள் இருந்து பாதாள பேய்கள் எழுந்து வருகின்றன. படையினரின் ஆன்மாவை சூறையாட அவர்களை துரத்துகின்றன. பாதாள சாத்தான்கள் வசம் சிக்கி தங்கள் ஆன்மாவை இழந்து, நரக குழியில் நடை பிணமாக நிரந்தரமாக உழல்வதை விட தற்கொலை செய்து கொள்வது மேல் என்று கேப்டன் முடிவு செய்கிறார். அதற்கு முன்பாக தனது படையினரை தனது கைகளால் தானே கொன்று விட முடிவு செய்கிறார். முதல் வீரனாக எக்ரியனை தேர்வு செய்து அவனது மூச்சுக் குழாயை ஒரே வெட்டில் துண்டிக்கிறார்.
இதுதான் அங்கே நடந்தது என்றும், இதை ஜெனரல் வசம் இப்படி சொல்லிகொண்டிருப்பதால் கேப்டன் எங்கோ தோற்று விட்டார் என்று நினைக்கிறேன் என்றும் ஜெனரல் வசம் எக்ரியன் சொல்லி முடிக்க, கேட்டு முடித்த ஜெனரல் எழுந்து அறை கதவை திறக்க உள்ளே கேப்டன் நுழைகிறார். எழுத்தாளருக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க செயல்படுத்த மூவரும் ஒன்றுபட்டு கிளம்புகிறார்கள்.
ஓவியர் பாஸ்குவாலே இத்தகு களங்களுக்கே உரித்தான வகையில், துர் கனவு போலும் சாயலில், ஜப்பானிய நீர் வண்ண ஓவியங்களின் முறையில் நாவலுக்கான ஓவியங்களை தீட்டி இருக்கிறார். கருப்பு வெள்ளையில், பகலா இரவா என்று சூழல் மயங்கிய பனி வெளியின் தசையை எரிக்கும் உறைகுளிர் நிலையை ஒவ்வொரு ஓவியம் வழியாகவும் மனம் அந்த சில்லிப்பை உணரும் வண்ணம் அவற்றை தீட்டி இருக்கிறார். மெல்லிய வெண்மை விரவிய கரிய பின்புலம். காட்சி பின்னே பின்னே போக, அது உறைந்து போன பிணம் ஒன்றின் விழி. அழுகிய குதிரை சடலத்துக்குள் அதையே உணவாகவும், குளிருக்கு காப்பாகவும் கொண்டு அதற்கும் புதைந்து கிடந்த ஒருவனை (கொசாக்) வெளியே இழுத்து போட்டு சுட்டேன் என்று சொன்னபடி அறிமுகம் ஆகும் கேப்டன். முற்றிலும் அமானுஷ்ய சித்தரிப்பின் உச்சமாக தீட்டப்பட்ட நரக குழி என்று கனவிலும் வந்து துரத்தும் ஹாண்டிங் ஆன சில படிமங்கள் கொண்ட நாவல். கேப்டன், படை வீரனான எழுத்தாளர் எல்லோரும் சாத்தான்கள் வசம் எங்கே தோற்று போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறது நாவல். தனது ஆன்மாவை சாத்தான்கள் திருடிவிடாது இருக்கத்தானே அந்த பாதிரியார் தற்கொலை செய்துகொண்டிருப்பார்?
துர்கனவு போன்ற காட்சி சித்தரிப்புகளும், முடிவில் இருந்து வாசகன் மனதுக்குள் கதை வேறு வகையில் துவங்கும் சப் டெக்ஸ்ட் டும் கொண்ட இந்த கிராபிக் குறுநாவல் உணர்த்தும் செய்தி மிக வலிமையானது.
வரலாறு நெடுக எந்த காலம் ஆயினும் சரிதான், உலகம் முழுக்க எந்த நிலம் என்றாலும் சரிதான். பின்புலம் என்ன காரணம் என்றாலும் சரிதான். போர் என்பது நடைபிணங்களின் கர்மம். மனிதம் இழிந்து மண்ணை நனைக்கும் குருதியை எற்று அமைதி நிலைபெறும் என்ற எந்த நிச்சயமும் இல்லை. ஆனால் அந்தக் குருதியைக் குடிக்க இருள் உலகிலிருந்து பாதாள தெய்வங்கள் எழுந்து வரும். அது மட்டும் நிச்சயம்.
கடலூர் சீனு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
