காவியம் – 36
கானபூதி சொன்னது. ஊர்வசி பாட்னாவுக்கு வந்து சில நாட்களுக்குள் அவளுக்குக் குரல்கள் கேட்கத் தொடங்கின. அவளுடைய வலதுசெவியில் ஒரு பெண்குரல் ”உன்னை விடமாட்டேன். நீ என்னைப் போல் சீரழிந்து தெருவில் இறப்பாய். அது வரை நான் அடங்கமாட்டேன்” என்றது. அவள் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பொலியுடன் இன்னொரு இளங்குரல் இன்னொரு செவியில் ”நீ எங்களைப் போலவே சாகப்போகிறாய் நாங்கள் உன்னை விடப்போவதில்லை” என்றது.
“யார்? யார்?” என்று அவள் அஞ்சி திரும்பித் திரும்பி கேட்பாள். அந்தக் குரல்கள் தன் தலைக்குள்ளிருந்து கேட்கின்றனவா என்று எண்ணினால் தலைக்குள் இருந்து கேட்பது போலிருக்கும். அருகிருக்கும் அறைக்குள் இருந்து எவரோ ஒளிந்து நின்று தன்னிடம் பேசுகிறார்கள் என்று எண்ணினால் அது உண்மை என்றே தோன்றும்.
அவள் திரும்பத் திரும்ப தன் அருகிலிருக்கும் அறைகளை சட்டென்று கதவைத்திறந்து உள்ளே பார்த்தாள். சிறு சிறு பெட்டிகளைத் திறந்து பார்த்தாள். ஒவ்வொரு முறையும் கதவுக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் அல்லது திரைக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணி தேடினாள்.
தொடக்கத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவளுடைய அந்த நடத்தை கொஞ்சம் கொஞ்சமாக விபரீதமாக ஆவதாக ருக்மிணி தேஷ்பாண்டே நினைத்தாள். “என்ன பார்க்கிறாய்?” என்றாள்.
“இல்லை, ஏதோ சத்தம் கேட்டது” என்று அவள் சொன்னாள். “யாரோ பேசுகிறார்கள்”
“இந்த வீட்டில் எதிரொலிகள் நிறைய இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கே நிறைய பொருட்கள் இருந்தன. பொருட்கள் இல்லாமல் ஆகும்போது எதிரொலி கேட்கிறது” என்று ருக்மிணி தேஷ்பாண்டே சொன்னாள்.
ஊர்வசி அந்தக் குரல்களை மேலும் மேலும் துல்லியமாகக் கேட்கத்தொடங்கினாள். ”ஏற்கனவே நீ கருவுற்ற உன்னுடைய குழந்தைகளைக் கொன்றது நாங்கள்தான். உன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொல்வோம். அதகாகத்தான் இங்கு வந்திருக்கிறோம்” என்று அந்தக் குரல் சொன்னது.
இன்னொரு பெண் குரல் “நீ மீண்டும் மீண்டும் கருவுறுவாய். உன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் நாங்கள் கொல்வோம்” என்றது.
முதற்குரல் “விடவே மாட்டோம்… எங்களை பல ஜாதிக்காரர்கள் புணர்ந்தார்கள். எங்கள் ரத்தத்தைச் சாக்கடையாக்கினார்கள்… நாங்கள் விட மாட்டோம்” என்றது. “நாங்கள் உன் குலத்தையே அழிப்போம்”
“நீயும் பலசாதிச் சாக்கடைகள் கலந்து தெருவில் அழியவேண்டும்… அதுவரை உன்னை விடமாட்டோம்”
அந்தக் குரல்கள் மாறிமாறி இடைவெளியே இல்லாமல் பேசின. அவள் ஒரு கணம் சொந்தமாக யோசிக்க அவை இடம் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவை அவளை தொட்டுத்தொட்டு அழைத்துப் பேசத்தொடங்கின. படுக்கவோ உட்காரவோ முடியவில்லை. நடந்துகொண்டும் எதையேனும் செய்துகொண்டும் இருந்தால் அவற்றை சமாளிக்க முடிந்தது.
ஒரு நாள் தனக்கு பைத்தியம் பிடிக்கவிருக்கிறது என்னும் எண்ணம் அவளுக்கு தோன்றியது. இது பைத்தியமேதான். பைத்தியங்களுக்குத்தான் குரல்கள் கேட்கும் என அவள் அறிந்திருந்தாள்.
அவள் மனம் உடைந்து இருண்ட மூலையில் அமர்ந்து குமுறி அழுதாள். அவள் அழுவதை வேலைக்காரர்கள் பார்த்துவிட்டு ருக்மிணியிடம் சொன்னார்கள்.
ருக்மிணி அவளிடம் திரும்பத் திரும்பக் கேட்டாள் ”என்ன நிகழ்கிறது? ஏன் அழுகிறாய்?”
பலமுறை கேட்டபின், அதட்டி வற்புறுத்தப்பட்டபோது ஊர்வசி தன் காதில் கேட்கும் குரல்களைப்பற்றி சொன்னாள்.
“அது குரல்கள் அல்ல, நீயே கற்பனை செய்துகொள்வதுதான். பெண்களுக்கு நான்கு ஐந்து மாதம் கர்ப்பம் இருக்கும்போது அந்த மாதிரியான சில பிரமைகள் உருவாகும். இந்த சமையலறையில் யாராவது பேசினால் காற்றில் அந்தக்குரல் மிதந்து போய் அறைகளின் சுவர்களில் எதிரொலித்து, சம்பந்தமில்லாத இடங்களில் இருந்து கேட்கும். எனக்கே சில நேரங்களில் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் கேட்பதுண்டு. ஆனால் அவையெல்லாம் எதிரொலிகள் என்று எனக்குத் தெரிந்தபிறகு அது எனக்கு பொருட்டாக இருப்பதில்லை” என்று ருக்மிணி சொன்னாள்.
“இல்லை. இது வேறு… தெளிவாக என் பக்கத்தில் வந்து சொல்கிறார்கள், சிரிக்கிறார்கள். இந்தக்குரல்களை இதுவரை நான் கேட்டதே இல்லை” என்று அவள் சொன்னாள்.
“நீ கடவுளைக் கும்பிடு. கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் கங்கைக்கரையில் உள்ளன நான் கூட்டிச்செல்கிறேன்” என்று ருக்மிணி சொன்னாள்.
கங்கைக்கரையில் அமைந்த வெவ்வேறு பெண் தெய்வங்களின் ஆலயங்களுக்கு அவள் ஊர்வசியைக் கூட்டிச்சென்றாள். இரு கால்களையும் விரித்து பிறப்புறுப்பை அகலத்திறந்து படுத்திருக்கும் லஜ்ஜாகௌரியின் சிறு கோயிலில் குங்குமத்தை அள்ளி அப்பிறப்புறுப்பில் போட்டு வணங்கி தன் நெற்றியில் போட்டுக்கொண்டு திரும்பி வந்தாள். மண்டையோட்டு மாலையணிந்து கையில் ஆயுதங்களுடன் நிற்கும் அகோர காலபைரவனின் முன்னால் நின்று வணங்கி வந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் கோவில்களுக்குச் சென்று வரும்போதும் அனைத்தும் சரியாகிவிட்டதென்றும், முற்றிலும் விடுபட்டு விட்டாள் என்றும் ஊர்வசி நினைத்தாள். கோவில்களில் நிற்கும்போது அந்தக்குரல்கள் கேட்கவில்லை. முற்றிலும் அவளுடைய உள்ளம் அவளுடையதாகவே இருந்தது. அப்போது அவள் அதுவரை கேட்டதெல்லாம் வெறும் பிரமைகள் என்றும், அவற்றை மிக எளிதாகக் கடந்துவிட முடியும் என்றும் அவள் நினைத்தாள். இவ்வளவு எளிமையான விஷயங்களுக்காகவா இத்தனை சோர்வுற்றோம் என்றும் எண்ணிக்கொண்டாள்.
ஆனால் திரும்ப வரும்போது ஒவ்வொன்றும் வேறொன்றாயின. வீட்டை நெருங்க நெருங்க ஏதோ நிகழப் போகிறது என்று பதற்றம் பிடித்துக்கொள்ளும். காரிலேயே நெளிந்து நெளிந்து அலைய ஆரம்பிப்பாள். சன்னல் வழியாக வெளியே பார்த்து ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பாள். திடீரென்று எதிர்பாராத ஒரு தலை திரும்பி அவளை ஒருகணம் கண்ணுக்குக் கண் பார்த்துவிட்டு செல்லும். அம்முகத்திலிருந்த வெறிப்பும் சிரிப்பும் அவளை திடுக்கிடச்செய்து மூச்சொலியுடன் அலறச்செய்யும்.
“என்ன? என்ன?” என்று ருக்மிணி கேட்பாள்.
”யாரோ பார்க்கிறார்கள் என்னைப் பார்க்கிறார்கள்”
”எல்லாம் உன் பிரமை. பேசாமலிரு .காலபைரவனை நினைத்துக்கொள். லஜ்ஜா கௌரியை நினைத்துக்கொள்” என்று ருக்மிணி சொல்வாள்.
மீண்டும் சன்னல் வழியாக அவள் வெளியே பார்ப்பதைப் பார்த்து ”நீ வெளியே பார்க்காதே” என்பாள்.
அவள் வெளியே பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டே வருவாள். அதுவரை பார்த்த காட்சிகள் கண்களுக்குள் ஓட அதிலிருந்து ஒரு முகம் திரும்பி அவளை கண்ணோடு கண் பார்த்து , அந்த வெறித்த சிரிப்புடன் அணுகி வரும். திடுக்கிட்டு அலறி அவள் எழுந்து அமர்வாள்.
“எப்படியாவது இதைக் கடந்து விடு. இன்னும் சில மாதங்கள் தான். நீ குழந்தை பெற்றுவிடுவாய். அதோடு எல்லாம் சரியாகிவிடும். இது ஒரு பேற்றுக்கால மனச்சிக்கல்தான்” என்றே ருக்மிணி அவளுக்கு ஆறுதல் சொல்வாள். ”எனக்கும் இந்த மாதிரியான ஏராளமான மனப்பிரமைகள் இருந்தன. இது ஒன்றும் பிரச்னையே இல்லை. அமைதியாக இரு அமைதியாக இரு”
வீட்டை நெருங்கி படிகளில் ஏறும்போது அவள் உள்ளம் படபடத்துக் கொண்டிருக்கும். எங்கோ ஓர் இடத்திலிருந்து ஒரு கேள்வி வரப்போகிறது. சிரிப்பொலி கேட்கப்போகிறது. எப்போது? எங்கு? அறைகளுக்குள் நடப்பாள். ஆடைகளைக் களைந்து மாற்றாடைகளை அணிவாள். முகத்தையும் கைகால்களையும் கழுவிக்கொண்டு அமர்ந்து டீ குடிப்பாள். கண்ணாடியில் பார்த்து தலை வகிட்டை சரி செய்து கொள்வாள். படுக்கை விரிப்பை சரி செய்து, தலையணையை சாய்த்து வைத்து, சரிந்து அமர முயல்வாள். ஒவ்வொன்றிலும் அவள் கவனம் எப்போது அந்தக் குரல் கேட்கத்தொடங்கும் என்பதிலேயே இருக்கும். முற்றிலும் அது கேட்காதோ என்ற எண்ணம் கூட வரும். அகன்றுவிட்டதா, மெய்யாகவே அகன்றுவிட்டதா காலபைரவனின் ஆற்றல் அவளைக் காத்துவிட்டதா?
“எப்படிக்காக்க முடியும்?” என்று அவள் காதருகே ஒரு குரல் எக்களித்தது. ”நாங்கள் உன்னுடனேயே தான் இருக்கிறோம். உன் குழந்தைகளுடன்தான் செல்லப்போகிறோம்.”
“நாங்கள் உன்னை விடவே போவதில்லை. எங்களை நீ விலக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் உன் சாபத்தை வரமாக வாங்கி வந்திருப்பவர்கள்”
அவள் இருகாதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு வீறிட்டு அலறி அறையைவிட்டு வெளியே ஓடி அதே விசையில் கூடத்தில் விழுந்தாள். வேலைக்காரர்களும் ருக்மணியும் தேடி ஓடிவந்து அவளைத்தூக்கி உட்கார வைத்து அவள் முகத்தில் நீர் தெளித்தார்கள்.
அவள் வெறியுடன் ”என்னை விடமாட்டார்கள்! என்னைவிட மாட்டார்கள்! இந்தப் பேய்கள் என் குழந்தையை கொன்றுவிட்டுத்தான் அடங்குவார்கள்” என்று கதறினாள்.
அதன்பிறகு ருக்மிணி அவளை மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லத்தொடங்கினாள். மருத்துவர்கள் அவளுக்கு மெல்லிய உளச்சிதைவின் தொடக்கம் இருப்பதை சொன்னார்கள். ருக்மிணியிடம் “தொடக்கம்தான். மாத்திரைகள் தருகிறோம்” என்றனர்.
ஊர்வசியிடம் “ஒரு சிறு மரப்பிரமை. சரியாகிவிடும். மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்” என்றார்கள்.
அவள் ”மிகத்தெளிவான குரல்கள். மிக வலுவான குரல்கள்… அவை விடாப்பிடியாக காதில் கேட்கின்றன. நான் சற்றும் எண்ணியிராத விஷயங்களை சொல்கின்றன. வெறும் பிரமையல்ல. மெய்யாகவே குரல்கள் கேட்கின்றன” என்றாள்.
டாக்டர்கள் “அதெல்லாம் நம் மனம் கற்பனை செய்வதுதான்… சரியாகிவிடும்” என்றனர்.
ஆனால் டாக்டர்கள் ருக்மிணியிடம் வேறுமாதிரி சொன்னார்கள். ”குரல்கள் கேட்பது ஸ்கிசோஃபிர்னியாவின் தொடக்கம்” என்று மருத்துவர் ரவீந்தர் குப்தா சொன்னார். ”ஆனால் மாத்திரைகள் மிக எளிதாக அதை கட்டுப்படுத்திவிடும்… நம்பிக்கையுடன் இருங்கள்.”
அவள் அவர் அளித்த மாத்திரைகளை அச்சத்துடன் தயங்கித்தான் விழுங்கினாள். ஆனால் அவை தன்னை அமைதிப்படுத்துவதை உணர்ந்து கொண்டாள். அவள் மெல்ல தரையில் அமர்வாள். அந்தத் தரை ஒரு மாபெரும் பனிப்பரப்பாகும். குளிர்ந்து வழுக்கும் பனிப்பரப்பு. அதில் அவள் வழுக்கி வழுக்கிச் செல்லத் தொடங்குவாள். அந்தச் சரிந்த பரப்பை அவள் அள்ளி அள்ளி பற்றப் பற்ற அது கைகளிலிருந்து நழுவிச் சென்று கொண்டே இருக்கும். வழுக்கிச் செல்வதின் விரைவு கூடிக்கூடி ஒரு கட்டத்தில் மிக விரைவாக அவள் சென்று அடியிலாத ஆழம் கொண்ட ஏதோ ஒன்றில் விழுந்து அந்த ஆழத்திற்குள் பறந்து கீழிறங்கிச் சென்று கொண்டே இருப்பாள்.
அதன்பிறகு நினைவு வரும்போது அவள் கட்டிலில் படுத்திருப்பாள். அவள் முகம் பல மடங்கு வீங்கிப்போயிருக்கும் உடல் முழுக்க நீர் நிரம்பிய ஒரு பெரிய தோல் குடுவை போலிருக்கும். உதடுகள் உலர்ந்து அவற்றை அசைக்கும்போது அவை உடைந்துவிடும் என்று தோன்றும். கண்ணிமைகள் எடைகொண்டு அந்த எடை தாளாமல் சரிந்து சரிந்து கண்களை மூடிக்கொண்டே இருக்கும். அவள் மெல்லிய குரலில் “தண்ணீர்! தண்ணீர்!” என்று கேட்க பணிப்பெண்கள் தண்ணீர் கொண்டு கொடுப்பார்கள்.
தண்ணீர் குடித்து எழுந்தமர்ந்து, கழிப்பறைக்கு சென்றுவிட்டு, மெல்ல நடந்து கூடத்திற்கு வந்து அமர்வாள். சுற்றியிருக்கும் வீடு எழுந்தமைந்து எழுந்தமைந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும். நேர் எதிரிலிருக்கும் சுவரைப் பார்த்தால் அந்தச்சுவர் திரைச்சீலை போல நெளியத்தொடங்கும். தொலைதூரத்துக் குரல்கள் சட்டென்று மிக அருகே கேட்கும். மிக அருகே நின்று பேசும் குரல்கள் மயங்கி மயங்கி உருக்கொண்டு அலைக்கழிக்கும். அந்த அவஸ்தை பல நிமிடங்கள் தொடரும்.
மிக மெதுவாக அவள் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி தன்னைத் தொகுத்து, தான் எங்கிருக்கிறோம் என்றும் என்னவாக இருக்கிறோம் என்றும் வகுத்துக்கொண்டு, மீண்டு வருவாள். உடல் அசைக்க முடியாத எடைகொண்டிருப்பது போலிருக்கும். கைகளைத் தூக்கி மடியில் வைப்பதற்கே மிகப்பெரிய அளவில் மூளையைச் செலுத்தி முயலவேண்டியிருக்கும். தன் தோளிலிருந்து சரிந்த முந்தானையை சரிசெய்வதற்கே பத்து நிமிடங்களுக்கு மேல் அவளுக்குத் தேவைப்படும். கைகளுக்கு அவளுடைய எண்ணம் சென்று சேரவே நீண்ட நேரமாகும். கைகளை நோக்கி தன் எண்ணம் ஓடிச்செல்வதைக்கூட அவளால் உணர முடியும். எண்ணிய ஒன்றை சொல்வதற்கு பல நிமிடங்களாகும். அவள் உள்ளம் சொற்களை உணர்ந்தபின் அச்சொற்களை நாக்கை நோக்கி செலுத்தமுடியாது. நாக்கு அசைவில்லாமலிருக்கும். பேசத்தொடங்கும்போதே ஓரிரு சொற்களிலேயே குரல் உடைந்து அழத்தொடங்குவாள்.
ஆனால் அந்தக்குரல்கள் நின்றுவிட்டிருந்தன. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுந்தோறும் அந்தக் குரல்களைக் கேட்பது இல்லாமலாயிற்று. தூக்கம் அவளுக்கு பிடித்திருந்தது. மிகப்பாதுகாப்பாக ஒரு அபாயகரமான இடத்தைக் கடந்துவிட்டது போல ஒவ்வொரு தூக்கத்துக்குப் பிறகும் உணர்ந்தாள். ஆகவே அவள் அந்த மாத்திரைகளை விரும்பத்தொடங்கினாள். மாத்திரைகளை தரும்படி அவளே கேட்டு வாங்குவாள். அவற்றை சாப்பிட்டுவிட்டு, வெண்மையான விரிப்பு பரவிய மெத்தையில் படுத்து, இதமாக கைகால்களைப் பரப்பிக்கொள்ளும்போது கையும் காலும் தனித்தனியாக துண்டிக்கப்பட்டு தனித்தனி உறுப்புகளாக அவள் அந்த மெத்தை முழுக்க பரவிக்கிடப்பதாகத் தோன்றும். அவள் கைகள் அவளிடமிருந்து அகன்று செல்லும். கால்கள் அவளைவிட்டு விலகிச்செல்லும். அவை அறையைவிட்டு வெளியே விலகி விலகி செல்ல அவள் அந்தப்பகுதி முழுக்க பரவி மிகப்பெரிய இடத்தை நிரப்பிக் கிடப்பாள். ஒவ்வொரு உறுப்பும் மெத்தையில் அழுந்தி அழுந்தி புதைந்து போகும். அவள் உடல் மெல்லிய சேற்றில் புதைவது போல அந்த மெத்தைக்குள் புதைந்து போகும்.
உடல் முற்றிலும் புதைந்த போனபிறகு அவள் மட்டும் தனித்து அந்தக் கட்டிலருகே மிகச்சிறிய உருவத்தில் அமர்ந்திருப்பது போல இருக்கும். ஒரு விரலளவுக்கான ஒன்றாக. மூன்று அங்குலம் மட்டுமே கொண்ட உருவம். ஆத்மா மூன்று அங்குலம் கொண்டது என்று யாரோ எங்கோ சொன்னார்கள். யார்? இவ்வளவு சிறிய தன்னை யாரோ பிடித்து ஒரு சிறு டப்பாவுக்குள் அடைத்துக்கொள்ள முடியும். ஒரு சிமிழில் அடைத்து கடலில் வீசிவிடமுடியும். அவ்வாறு அமர்ந்திருக்கும்போது அவள் அருகே இருவர் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். இரு கரிய நிழல்கள்.
அந்நிழல்கள் தன்னுடைய நிழல்கள் தான் என்று அவள் முதலில் எண்ணினாள். ஆனால் இரண்டு நிழல்கள் எப்படி வந்தன? மெல்லக் கைநீட்டி ஒரு நிழலைத் தொட்டபோது அது நீர்ப்பிம்பம் போல அதிர்ந்து விலகிக்கொண்டது. திரும்பி இன்னொரு நிழலைப் பார்த்தபோது அது மிக அருகே வந்திருப்பதைக் கண்டாள். அந்த நிழலுருவத்துக்கு கண்களும் பற்களும் இருந்தன. மிக அருகே அது மின்னும் கண்களுடன் சிரிப்பது போல் இருந்தது.
”நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள்.
”நாங்கள் தொலை தூரத்திலிருந்து வருகிறோம். மிகத்தொலைவிலிருந்து…”
”எங்கிருந்து? எங்கிருந்து?” என்று அவள் கேட்டாள்
”நீ பிரதிஷ்டானபுரி என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
”இல்லை” என்று அவள் சொன்னாள்.
”அதன் இன்றைய பெயர் பைத்தான். நெடுந்தொலைவில் இருக்கிறது அந்த ஊர். அங்கே ஒரு மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையின் எல்லா வாசல்களும் பூட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு உள்ளே போகவும் வெளியே வரவும் எந்த வாசலும் கிடையாது. முற்றிலும் இருண்ட மாளிகை. அந்த மாளிகை ஒருகாலத்தில் ஒரு மாபெரும் கல்விச்சாலையாக இருந்தது. ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகம் அங்கு இருந்தது. பலநூறு பேர் அங்கு வந்து மொழிகளையும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார்கள். அங்கே அறிஞர்கள் கூடி விவாதம் செய்தார்கள். அழகிய திண்டுகளும் அமர்விடங்களும் கொண்டதாக அது இருந்தது…”
“அந்த மாளிகையின் எல்லா வாயில்களும் இன்று பூட்டப்பட்டிருக்கிறது” என்று கிரீச்சிட்டு கூவியது இன்னொரு நிழல். “வெளியே அது புழுதியும் அழுக்கும் படிந்து மட்கி பாழடைந்துவிட்டது. உள்ளே அதன் புத்தகங்கள் அனைத்தும் நைந்து மட்கி செடிகளால் மூடப்பட்டு காடாகிவிட்டன. அந்தக்காட்டுக்குள் பறவைகளும் விலங்குகளும் செறிந்திருக்கின்றன. இரவு எந்நேரமும் அங்கே குடியிருக்கிறது. அந்த மாளிகையை எல்லாப் பக்கமும் மூடியது யார்?”
”யார்?” என்று அவள் கேட்டாள்.
”நீ! நீதான் அதை மூடினவள். அதற்காக உன்னை பழிவாங்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். உன்னையும் உன் குடும்பத்தையும் முற்றாக பழி வாங்குவோம். கடைசியில் துளிக்குருதி வரை குடித்தபிறகுதான் அடங்குவோம்.”
”நான் எதுவும் செய்யவில்லை, எனக்கு எதுவும் தெரியாது. என்னை எதற்கு பழிவாங்குகிறீர்கள்?” என்றாள்.
”நீ துக்காராமை அறிந்திருக்கிறாயா?”
”இல்லை, அப்படி எவரையுமே நான் கேள்விப்பட்டதில்லை” என்று அவள் சொன்னாள்.
”உனது கணவனின் தங்கை ராதிகா தேஷ்பாண்டே அவனைத்தான் காதலித்தாள். மணந்து கொண்டாள்”
”அது எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது…” என்று அவள் சொன்னாள்.
”ராதிகா தேஷ்பாண்டேயை உன் கணவன் அனுப்பிய கொலைகாரன் ஒரே வெட்டில் கழுத்தையும், இன்னொரு வெட்டில் வயிற்றையும் கிழித்து வீழ்த்தினான்.”
”இல்லை எனக்குத் தெரியாது தெரியாது” என்று அவள் சொன்னாள்.
”அவளை இழுத்து சென்று ஒரு பெரிய சாக்கில் கட்டி உடன் இரண்டு பெரிய இரும்பு வளையங்களைக் கட்டி ஓர் ஏரியில் வீசினார்கள். அவள் உடல் மட்கி சதைக்கூழாகக் கண்டெடுக்கப்பட்டது. அப்படியே எரித்துவிட்டார்கள்.”
”தெரியாது. எனக்குத் தெரியாது எனக்கு எதுவுமே தெரியாது” என்று அவள் அலறினாள். ”நீ ஏதோ உளறுகிறாய். என்னை தவறுதலாகப் பிடித்திருக்கிறாய்.”
மறுபக்க நிழல் அவளைத் தொட்டு உலுக்கி ”இங்கே இங்கு பார் அது பொய். உன்னை குழப்புவதற்காக பொய் சொல்கிறது. உன்னிடம் உண்மையை சொல்வதற்காக நான் வந்திருக்கிறேன்.”
”சொல், என்ன உண்மை?” என்று அவள் கேட்டாள்.
”நீ குழந்தை பெறுவது உன்னுடைய மாமியாருக்கு பிடிக்கவில்லை. அவள் உனக்கு விஷமூட்டுகிறாள். உன் சாப்பாட்டில் உப்பு போல கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை ஏற்றுகிறாள். அந்த குரல்கள் கூட உன் மாமியார் உனக்கு வைத்த சூனியம்தான். நன்றாக எண்ணிப்பார், ஒவ்வொரு முறையும் நீ கருவுற்றபோது உன் வீட்டுக்கு உன் மாமியார் வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சென்று சிலநாட்களில் உன் கரு கலைந்திருக்கிறது. நீ நஞ்சூட்டப்பட்டாய் உன் குழந்தைகள் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்படுகின்றன.”
”ஏன்?” என்று அவள் கேட்டாள்.
”ஏனெனில் உனக்குக் குழந்தை பிறக்கக்கூடாதென்று உன் மாமியார் எண்ணுகிறாள். உனக்கு குழந்தை பிறந்தால் உன் கணவன் உன்னிடம் அன்பாக இருப்பான் என்று அவள் நினைக்கிறாள். உன்னை அவனிடமிருந்து பிரிக்க திட்டமிடுகிறாள்.”
”ஏன்?” என்று அவள் மீண்டும் கேட்டாள்
”உன் கணவனுக்கு முதற்குழந்தை பிடிக்கவில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அவன் உன்னுடன் ஒட்டுதலாக இருக்கக்கூடும். அப்படி ஆகக்கூடாது என்று அவள் நினைக்கிறாள்.”
”அப்படியா?”
மறுபக்க நிழல் அவளை தொட்டு உசுப்பி அழைத்தது. “இதோ பார், இவர்கள் பசப்புகிறார்கள். உன் மாமனாரின் குடும்பத்தில் இருக்கும் பெண்பழி யாருக்குத் தெரியாது?”
அவள் திகைத்து விழித்துக்கொண்டாள். அவள் அறைக்குள் வெயில் நிறைந்திருந்தது. ஜன்னல் வழியாக வந்த இலைகளின் நிழல்கள் அறைக்குள் கூத்தாடிக்கொண்டிருந்தன.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
