குற்றமுகங்கள் 10 பூச்சா ஜக்காரி
1871ம் ஆண்டு மதராஸின் கார்டன் சாலையில் வசித்த பூச்சா ஜக்காரி கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் 1650 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. அத்தனையும் திருட்டுச் செருப்புகள். இத்தனை செருப்புகளைத் திருடிய போதும் ஜக்காரி தன் வாழ்நாளில் செருப்பு அணிந்ததில்லை.

ராபர்ட் லோகன் துரையின் குதிரை மீது வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டதற்காகவே அவரைக் கைது செய்தார்கள். அதன் பிறகே அவர் பதினெட்டு வருஷங்களாகச் செருப்பு திருடி வந்தவர் என்பது தெரிய வந்தது
கைக்குழந்தையை வைத்திருக்கும் பெண்ணைப் போல எப்போது தனது கையில் பூனையொன்றை வைத்திருப்பார் ஜக்காரி. அதனாலே அவரைப் பூச்சா ஜக்காரி என்று அழைத்தார்கள். எழுபது வயதிருக்கும் அடர்ந்த வெள்ளைதாடி வயிறு வரை விழுந்திருக்கும். வட்ட தலைக்குல்லா. இடது கையில் சிறிய மரப்பெட்டி, வலது கையில் பூனை. தூக்கத்தில் நடப்பவர் போன்ற மெதுவான நடை.

மதராஸின் எம்பயர் லாட்ஜ் வாசலில் அமர்ந்தபடி காதில் குரும்பு எடுக்கும் வேலையைச் செய்து வந்தார். இதற்காக ஒரு மரப்பலகையை வைத்திருப்பார். காது சுத்தம் செய்ய வருபவரை அந்தப் பலகையில் உட்காரச் சொல்லி தனது மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த மூன்று விதமான காது குடைப்பானை வெளியே எடுப்பார். எதிரிலிருப்பவர் காதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிணற்றில் எட்டிப் பார்ப்பது போலப் பார்ப்பார். காது சுத்தம் செய்வதற்கு முன்பாக அவரது கையில் இரண்டு அணா காசினைக் கொடுத்துவிட வேண்டும்.
அதன்பிறகே தனது குடைப்பானைக் கொண்டு காதிலுள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்துவார். காதின் தோற்றம் தாயின் கர்ப்பத்திலுள்ள சிசுவைப் போன்றது. ஆகவே அதைப் பிறந்த குழந்தையைப் போலக் கையாள வேண்டும் என்பார்.
சில நேரம் குழந்தைகள் காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிடும். வலியில் துடித்துப் போய்விடுவார்கள். அப்போது சிறிய புட்டியில் வைத்திருந்த மஞ்சள் தைலத்தில் ஒரு சொட்டு விட்டு அந்த எறும்பை வெளியே எடுத்துவிடுவார். இதற்காக அவர் கட்டணம் வாங்குவதில்லை.
திருமணம் செய்து கொள்ளாத ஜக்காரி வைத்திருந்த பூனையின் பெயர் லோலி. அதன் கழுத்தில் சிவப்பு நிற துணிப்பட்டை ஒன்றை கட்டியிருப்பார். பூனைகளுக்கு ரகசிய வழிகள் யாவும் தெரியும். அவை ஒரு நாள் தன்னை சொர்க்க லோகத்திற்கு அழைத்துப் போய்விடும் என நம்பினார்.
பூச்சா ஜக்காரிக்கென நண்பர்களோ, உறவினர்களோ எவருமில்லை. அவரைத் திருடினாக்கியது பூனையே. தனக்குத் தேவையில்லாத ஜரிகைத்துணி, சோப் டப்பா, கிழிந்த தொப்பி, முட்டை ஒடு, மரக்கரண்டியை லோலி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டது. தனக்குத் தேவையில்லாத ஒன்றை கொண்டு வருவதில் பூனை காட்டிய ஆர்வமே அவரைச் செருப்புத் திருடனாக்கியது.

கோவில்வாசலில் கழட்டிவிடப்பட்ட செருப்புகளில் விருப்பமானதைத் திருடிக் கொண்டு போய்விடுவார். அந்தப் பழக்கம் மெல்ல வளர்ந்து மக்கள் கூடும் இடங்களில் தனக்கு விருப்பமான செருப்பினைத் தேர்வு செய்து அதைத் திருடுவதைச் சவாலாகக் கருதினார். அப்படி ராலே துரையின் மனைவி செருப்பைத் திருடியிருக்கிறார். பார்சி வணிகரான ருஸ்தம் அணியும் வெள்ளைச் செருப்பைத் திருடியிருக்கிறார். கப்பல் மாலுமிகள் அணியும் விசேச தோல்செருப்புகளைக் கூட திருடியிருக்கிறார்.
தனது வீட்டில் திருடிய செருப்புகளைத் துணி காயப்போடுவது போல ஒரு கொடிக்கயிற்றில் தொங்க விடுவார். செருப்புகளின் எண்ணிக்கை அதிகமானவுடன் மரப்பெட்டி ஒன்றை செய்து அதில் போட்டு வைக்கத் துவங்கினார். சில நாட்கள் அந்தக் காலணிகளை வைத்து விசித்திரமான விளையாட்டுகளை விளையாடினார்.
பெண்கள் அணியும் ரோஜா நிறக் காலணியில் ஒன்றையும் கறுப்பு நிறமுள்ள ஆண்கள் அணியும் காலணி ஒன்றையும் சேர்த்து நடனமாடச் செய்வார். இரண்டு காலணிகளுக்குள் திருமணம் செய்து வைப்பார். ஒன்றின்மீது ஒன்றாகக் காலணியை அடுக்கிக் கோபுரம் செய்வார். தனக்கு மிகவும் பிடித்த காலணிகளுக்குச் செல்லப் பெயர் கூட வைத்துக் கொண்டிருந்தார். இந்த வேடிக்கைகள் அவரை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தன.
செருப்புத் திருடுவதைப் பெரிய குற்றமாக அவர் நினைக்கவில்லை. பெரும்பாலும் செருப்பைத் திருட்டு கொடுத்தவர்கள் தன்னைவிட்டுப் பாவம் நீங்கிவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் வெள்ளைக்கார நீதிபதிகளும் ராணுவ அதிகாரிகளும் அப்படி நினைக்கவில்லை. அதிலும் வெள்ளைக்காரச் சீமாட்டிகள் தங்கள் செருப்பு திருடு போனதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதினார்கள்.
ஒரு நாள் எம்பயர் லாட்ஜ் வாசலில் வேலையில்லாமல் பூச்சா ஜக்காரி வெற்றிலை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எச்சிலைத் துப்புவதற்காக எழுந்து கொள்ள முயன்ற போது கால்தடுமாறவே. பக்கத்தில் நின்றிருந்த லோகன் துரையின் குதிரை மீது எச்சிலைத் துப்பிவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனாலும் அவருக்குக் கைகால்கள் நடுங்கியது. அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. அவசரமாகத் தனது வீட்டிற்கு நடக்கத் துவங்கினார். அன்று மாலையே இரண்டு காவலர்கள் அவரைக் கைது செய்ய வந்திருந்தார்கள். அப்போது தான் அவர் ஒரு செருப்புத் திருடர் என்பது கண்டுபிடிக்கபட்டது
நீதிமன்றத்தில் பூச்சா ஜக்காரி தனது திருட்டை ஒத்துக் கொண்டதோடு சிறையில் தன்னோடு பூனையை வைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி கேட்டார். நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. பூச்சா ஜக்காரி சிறையில் அடைக்கபட்டார்.
ஆனால் அதன்பிறகு விசித்திரமான நிகழ்வு உருவானது. தங்கள் துரதிருஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக மக்கள் பழைய செருப்புகளைப் பூச்சா ஜக்காரி வீட்டு ஜன்னல் வழியாகவும், கூரையின் மீதும் எறிய துவங்கினார்கள். அந்த வீடு பழைய செருப்புகளால் நிறைந்து போனது. பாவம் அந்தப்பூனை, வீசி எறியப்படும் செருப்புகளுக்குப் பயந்து அந்த வீட்டிற்குத் திரும்ப வரவேயில்லை.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
