சிறகுகளை அளித்தவர் – கடிதம்
அன்புள்ள ஜெ,
மகள், மருமகள், மனைவி, மகன் எல்லோரும் சுகம் தானே?
ஒரு சிறிய அழகான அன்பான குடும்பம். ஆடம்பரமான வாழ்க்கையில்லை. ஆனால் கொஞ்சம் இழுத்து பிடித்து அதியாவசிய செலவுகள் நடக்கும். உண்மையில், அதியாவசிய செலவு ஒன்றுதான். தனியார் பள்ளியில் படிக்கவைப்பது. அதற்க்காக வேறெந்த செலவும் செய்வதில்லை. அன்பான தாய், சிரிக்க சிரிக்க பேசும் தந்தை. ஒரு குறை. வெளியே செல்வது பிடிக்காது. “ஸ்கூல்ல பி.டி ல விளையாடியாச்சில்ல? அதுபோதும்.” “இல்லப்பா friend வீட்டுக்கு….” “அங்க என்ன தேனும் பாலும் சொட்டுதா?” அதற்க்குமேல் பேச்சு கிடையாது. நவராத்திரி அபூர்வமாக மாமிகள், குழந்தைகளோடு எங்கள் வீட்டில், கண்ணில் படும் நாட்கள். சாதி, மதமெல்லாம் ஒருபொருட்டே இல்லை. Joyceம், லக்ஷ்மியும், தேவகியும், அஞ்சலையும், பேபியும், எல்லாரும் மாமிதான். அதைப்பற்றி பேசியதாகவும் நினைவில்லை. திருமணத்திற்க்குப்பின் புரிந்து கொண்டதுதான். பின்ன ஏன் இந்தப்பா வெளியிலேயே போகவிடவேயில்லை? தெரியவில்லை. வீடு விட்டால் பள்ளி, வீட்டுப்பாடம். 20 ஆண்டுகளில் 2 கல்யாணங்கள், 2 கோடை விடுமுறை பயணம். அதுவும் கோவை பெரியம்மா வீடு, சென்னை பெரியப்பா வீடு. பின், படிப்பைக்காரணம்காட்டி அப்பாமட்டும் சென்று வருவார். ஆனால் அது செலவைக்குறைக்கத்தான் என்று நினைத்தேன்.
8ம் வகுப்பு முடித்தபோது வீட்டில் முதல்முதலாக தொலைக்காட்சிப்பெட்டி வந்தது. Antenna வைத்து ட்யுன் செய்து தில்லி தூர்தர்ஷன் மட்டுமே தெரியும்.
மொழிகள்மீது பெருங்காதலோடு இருந்த நாட்கள். கலைநிகழ்ச்சிகள், மஹாபாரத், பன்மொழித்திரைப்படங்கள், புரிந்தும் புரியாமலும், பின் எப்படி புரிகிறது என்ற ஆச்சர்யம் மிக்க 3 ஆண்டுகள். 12 ம் வகுப்பில் பாடம் தவிர வேறேதும் கிடையாது. காலாண்டுக்குப்பின் காலை 6:30 முதல் இரவு 8:30 வரை பள்ளி நேரம். என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் காற்றில் குப்பை போல் சொன்னதெல்லாம் செய்து முடிக்கவேண்டியது தான்.
அதன் பின் கல்லூரி. விடுதி. இல்லை சிறை. பெற்றோர் மட்டுமே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைபார்க்க வரலாம், அடையாள அட்டையொடு. எப்போதும்போல் படிப்பு, தேர்வு, மதிப்பெண்.
பட்டமளிப்புக்குக்கூட செல்லவில்லை. திருமணம். சென்னை. குழந்தை. ஆச்சு 50 கடந்தாச்சு. கைநிறைய ஊதியம் தரும் ITES வேலைகள். பெரும்பாலும் ஆங்கிலம் பேசத்தெரிந்ததால். கடன்களை அடைச்சாச்சு. பின், ஒரு நல்ல பள்ளியில் ஆசிரியை. கோவிட்டுக்குப்பின்வ்வேலையை விட்டாச்சு.
மிகப்பெரிய குறையென்று ஒன்றுமில்லை. மனதுவைத்தால் நடக்காத ஒரு விக்ஷயமும் இல்லை. ஆனால் உறவுகள் புறியவில்லை. பழகத்தெரியவில்லை. மனிதர்கள் ஏன் இப்படி என்றும் நான் ஏன் இப்படி என்றும் பல கேள்விகள். குற்றம்பார்க்கின் சுற்றம் இல்லை என்று படித்திருந்தாலும் மன்னிக்கத்தெறியவில்லை. இதற்க்கெல்லாம் வளற்புமுறை தான் காரணம் என்று தோன்றுகிறது. ஆனால் ஏன் அப்படி வளர்க்கப்பட்டேன்? 2 அல்லது 3 திரைப்படங்கள் அழைத்துச்சென்றிருப்பார் அப்பா. பாடபுத்தகம் தவிர எதுவும் வாசித்ததில்லை. பயணம்? ஹ ஹா..!
படிக்க ஆரம்பித்தது ஒரு தற்செயல். 2022ல் வெண்முரசு தொடங்கினேன். முதல் முறையாக படிக்கிறேன். படிக்க படிக்க மனிதர்களை கொஞ்சம் புரிகிறது. நிறைய தெளிவான கேள்விகள். தளத்தில் வரும் கட்டுரைகளை, கடிதங்களை படிக்கிறேன். புரிதல் சற்று ஆழமாகிறது. சிறுகதைகள் இன்றும் ஈடுபடமுடியாதவை. ஆனாலும் சிலவற்றை படிக்கிறேன். ஆலயக்கலை, யோகா வகுப்புகளில் பங்கேற்றேன். ஆசிரியரோடு அஜந்தா எல்லோரா. பெரும்பாலும் வெண்முரசு தான். இருட்கனி 7ல் இருக்கிறேன். 20 நூல்களில் என் பெற்றோரை உடன் பிறந்தோரை நிறையவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்தக்கேள்விக்கு மட்டும் மனம் ஏற்க்கும் ஒரு விடை கிடைக்கவே இல்லை.
நேற்று உங்கள் சிறுகதை, ” சிறகு” வாசித்தேன். அளவிலா மெய்பாடுகள். தலையில் ஓங்கி செம்மட்டியால் அடித்தது போல அந்த கேள்விக்கு விடை கிடைத்தது. “அப்பா, எனக்கு இப்படி எதுவும் நடக்கக்கூடாதுன்னு தான் இல்லையா? எப்படி நன்றி சொல்வேன்? இப்படி பாலியல் தொல்லைகளால் ஆற்றமுடியாத
மனக்காயங்களோடும் குழப்பங்களோடும், குற்ற உணர்வுகளோடும் எத்தனை சிறுமிகள், பெண்கள், அறிவையர், தெரிவையர், வயது ஒரு தடையா என்ன? இரண்டு முலையும் ஒரு ஓட்டையும் தவிர வேறேதும் தெரியாதோர் இருக்கும் இங்கே, என்னை ஏன் இப்படி வளர்த்தாய் என்று எப்படிக்கேட்பேன்? அப்படி ஒன்று நடந்திருந்தால் ஆண்களை வெறுத்திருப்பேன். அண்கள் மேல் நம்பிக்கை இழந்திருந்திருப்பேன். இதையெல்லாம் “இந்த பெண்ணும் ஆணும் என்ன செய்தால் எனக்கென்ன? இந்த உலகில் அத்தனைபேரும் இல்லாமலானாலும்கூட எனக்கென்ன? எனக்கு ஒன்றுமில்லை. நூறாண்டு கண்ட இந்த மரங்களுக்கு ஒன்றுமில்லை. நீலப்புகைக்குவியல்போல எழுந்து நின்றிருக்கும் அந்த கரடிமலைச் சிகரத்திற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமே இல்லை” என்று இந்த சமுதாயம் பார்த்துக்கொண்டுதானே இன்றும் இருக்கிறது? அப்படிப்பட்ட இந்த சமுதாயத்தை நம்பியிருக்கமாட்டேன். மனநோயோடு போராடிக்கொண்டிருப்பேன், இந்த நாட்டின் பலப்பல பணபலமோ, படிப்போ, ஆள்பலமோ இல்லாத பெண்களை போல! நானும் அங்கிருந்து வந்தவள்தானே!
எத்தனையோ உயரங்களை தொடும் ஆற்றலும் திறனும் எனக்குண்டு. அதனாலென்ன? நீ எனக்களித்தது மிகச்சிறிய, ஆனால் ஊனப்படாத சிறகல்லவா?
ஜி
சிறகு- கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

