அதிமானுட வாசகர்கள்!
ஒரு நண்பர் நேர்ப்பேச்சில் கேட்டது இது. எனக்கு கிருஷ்ணன் சங்கரன் எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிட்டிருந்ததைச் அவர் சுட்டிக்காட்டினார். “அதிமானுட எழுத்தாளரால் அதிமானுட வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் அது. வாசகனாக என்னுடைய சாதனை வெண்முரசு முழுவதும் படித்து முடித்ததுதான்“.
“உங்கள் நட்புச்சூழலில் இருப்பதற்கு வெண்முரசு வாசிப்பு ஒரு நிபந்தனையா? உங்கள் வாசகர்களை ’அதிமானுடர்களாக’ நினைக்கிறீர்களா?” என்றார் நண்பர்.
நான் என்னுடன் பழக என் இணையதளத்தை, அல்லது என்னை வாசிப்பதை நிபந்தனையாக வைக்கவில்லை. இன்றைய சூழலில் அப்படி நிபந்தனை போடவும் முடியாது. நான் உருவாக்க நினைப்பது ஒரு கூட்டான இயக்கம். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்களிப்பு உண்டு. கூடுதலோ குறைவோ ஆர்வம் கொண்டிருப்பது மட்டுமே அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.
வாசகர்கள் என்பவர்கள் நம் சமூகத்தில் இருந்து திரண்டு வருபவர்கள். அவர்கள் நம் சமூகத்தின் சிறந்த பகுதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தச் சிறந்த பகுதியில்கூட நம் சமூகத்தின் எல்லா இயல்புகளும் இருக்கும். நம் சமூகத்தில் அவ்வியல்புகள் எப்படி எந்த விகிதத்தில் இருக்கின்றனவோ அதே விகிதத்தில் இருக்கும்.
நம் சமூகத்திலுள்ள முதன்மை இயல்பு தீவிரமின்மை. எதிலும் தொடர்ச்சியான ஆர்வம் பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை. கொஞ்சம் ஆர்வம் உருவாகும், வெவ்வேறு காரணங்களால் அது திசைதிரும்பி மழுங்கி மறையும். ஓர் ஆர்வத்தால் வாசிப்புக்கும் அறிவியக்கத்துக்கும் வந்து எனக்கு அறிமுகமாகும் நண்பர்களில் பலர் ’காணாமல்’ போய் கொஞ்சநாள் கழித்து திரும்பி வருவார்கள்.சிலர் மறைந்தே விடுவார்கள்.
எந்தச் செயலையும் அர்ப்பணிப்புடன் நீண்டநாட்களாகச் செய்வது, அதில் திறனை வளர்த்துக்கொள்வது என்பது நம் சமூகத்தில் மிக அரிதான குணாதிசயம்.அதற்கு பல காரணங்கள். நம் கல்விமுறை திறன்வளர்ப்புக்கு சாதகமானது அல்ல, ’சமாளிப்பதை’யே அது கற்றுக்கொடுக்கிறது. நம் வேலைகளும் ‘ஒப்பேற்றுதல்’ மட்டுமே. நம்மைச்சுற்றி நிகழும் மரப்பணி, கட்டிடப்பணி முதல் கணிப்பொறிப் பணி வரை மிகச்சிலரே மெய்யான திறமை கொண்டவர்கள், கற்றுக்கொண்டே இருப்பவர்கள். எஞ்சியோர் ஒட்டிக்கொண்டு முன்செல்பவர்கள் மட்டுமே. எங்கும் எவராலும் கவனிக்கப்படாமல் பதுங்கி நாட்களை ஓட்டிவிட முயல்வர்களே மிகுதி.
இன்னொன்று, நம் குடும்பச் சூழல் மற்றும் சமூகச் சூழல். அவை இரண்டும் நம் உள்ளத்தின் பெரும்பகுதியை ஆக்ரமிக்கின்றன. நம்மை உலகியலில் முழுமையாகவே கட்டிப்போடுகின்றன. ஒருவன் விழித்திருக்கும் பொழுதெல்லாம் குடும்பத்துக்காக உழைக்கவேண்டும் என்றும், குடும்பம் பற்றி மட்டுமே யோசிக்கவேண்டும் என்றும் இங்கே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அழுத்தம் அளிக்கவும் படுகிறது. சிறு தனிப்பட்ட ஆர்வம் இருந்தால்கூட அது குடும்பத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.இங்கே சொந்தமான ஆசைகளேகூட பெரும் ஆடம்பரமாகக் கருதப்படுகின்றன.
ஆகவே நம்மவர் பெரும்பாலும் உலகியலில் மூழ்கி வாழ்பவர்கள். சின்னச் சின்ன உலகியல் செயல்களே முழுநாளையும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் கட்டணம் கம்மி என்று அதைத்தேடி முழுநாளும் பைக்கில் அலையும் ஆண்கள் உண்டு. ஒரு ’மேட்சிங்’ ஜாக்கெட்டுக்காக ஒருவாரம் கவலைப்ப்டும் பெண்களும் உண்டு. கொஞ்சம் வெளியே வருபவர்கள்கூட திரும்ப உள்ளே இழுக்கப்பட்டு விடுகிறார்கள். ஆகவே கொஞ்சம் வெளிவருவதே பெரியது என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் திருமப மூழ்கினால் ஒருவகையான பரிதாபம்தான் உருவாகிறது.
அத்துடன் நம் நடுத்தரவர்க்க வாழ்க்கையிலுள்ள இயல்பான தளர்ந்த நிலை. நாண் தொய்ந்த வில்போன்றது நம் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கை. அந்த தளர்ந்த நிலையை ‘தன்னடக்கம்’ ‘எளிமை’ என்றெல்லாம் பாவனை செய்துகொள்ளவும் பழகியிருக்கிறார்கள். எதையும் ஊக்கத்துடன் தொடங்கிச் செய்யமாட்டார்கள். எதிலும் தயக்கம். ‘நமக்கேன்ன’ என்றும் ‘என்னத்துக்கு வம்பு’ என்றும்தான் இவர்களின் உள்ளம் நிரந்தரமாக வேலைசெய்யும்.
அப்படிப்பட்டவர்களே எனக்கு அறிமுகமாகின்றனர். ஏனென்றால் நம் சூழலில் நிறைந்திருப்பவர்கள் அவர்களே. மெல்ல மெல்ல இச்சூழலால் அவர்கள் இழுக்கப்படுகின்றனர். இங்கே தொடர்ச்சியாக வாசிக்காமலிருக்கமுடியாது. ஒரு கட்டத்திற்குப் பின் எதையேனும் செய்யாமலும் இருக்கமுடியாது. ஆகவே தீவிரம் கொள்கிறார்கள். அந்தப் பயணத்தின் பல படிநிலைகளில் வாசகர்கள் இருக்கிறார்கள். என் இணையப்பக்கத்தை அவ்வப்போது படிப்பவர்கள், ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் படிப்பவர்கள், என் நூல்களில் சிலவற்றை மட்டுமே படிப்பவர்கள் என தொடங்கி எழுதப்பட்ட என் படைப்புகள் எல்லாவற்றையுமே படித்திருப்பவர்கள் என அந்த படிநிலை வளர்கிறது.
என் வாசகர்கள் பற்றிய ஒரு திகைப்பு பொதுவாக நம் சூழலில் உள்ளதை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன். என் தளத்தில் ஒரு கடிதம் வெளிவந்ததும் அவர் எவர் என தேடுவது முகநூலர்களின் வழக்கம், அவர் பெயர் முகநூலில் இல்லை என்றால் அது பொய்யான பெயர் என முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதை ஏளனமாகச் சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். உண்மையில் முகநூலில் உள்ள பெயர்களில்தான் பெரும்பாலானவை பொய்யான அடையாளங்கள்.
என் வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் முகநூலில் இருப்பதில்லை. முகநூலில் திளைப்பவர்களால் நூல்களை வாசிக்க முடியாது. தொடக்கத்தில் கொஞ்சம் வாசிப்பார்கள், அதன்பின் அச்சுப்பக்கங்களைப் படிக்கும் பொறுமை இல்லாமலாகிவிடும். நூல்களில் உள்ள எழுத்துக்கள் கண்ணுக்கு அன்னியமாகவே ஆகிவிடும். சில பத்திகளில் ஏதேனும் ஒரு செய்தியை, அரட்டையை வாசிப்பது எதிர்வினையாற்றுவது என மனம் அமைந்துவிட்டால் நூல்களைப் படிக்கமுடியாது. என் வாசகர்கள் பெரும்பாலும் முகநூலில் இல்லை, ஏனென்றால் அவர்கள் வாசகர்கள்.
அத்தகைய வாசகர்கள் பல ஆயிரம்பேர் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. இல்லையேல் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இப்படி உலகமெங்கும் நிகழமுடியாது. விஷ்ணுபுரம் பதிப்பகநூல்கள் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்குமேல் விற்கமுடியாது. முழுமையறிவு நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நிகழமுடியாது. ‘எங்களுக்குத் தெரியாத அந்தவாசகர்கள் எவர்?’ என்றுகேட்கும் அற்பமுகநூலர்கள் முகநூலுக்கு வெளியே உலகம் இருப்பதையே அறியாதவர்கள்.
சரி, என் வாசகர்களில் ‘அதிமானுடர்கள்’ உண்டா? ஆம், கண்டிப்பாக உண்டு. என் அகவிசைக்கு இணைநிற்பவர்கள், ஒருவகையில் என்னையும் கடந்துசெல்லும் விசைகொண்டவர்கள். அவர்களால்தான் இத்தனை பெரிய அமைப்பு இத்தனை செயல்பாடுகளுடன் முன்செல்கிறது. தமிழ்ச்சூழலில் அவர்களைப் போன்றவர்கள் அரிதினும் அரிதானவர்கள். என் சுற்றத்துக்கு வெளியே அப்படி தீவிரமாகச் செயல்படுபவர்கள் வேறெங்காவது இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. உண்மையில் இந்த மைய அணியை ஒட்டியே என் வாசகர்கள் பற்றிய பொது உளப்பிம்பங்கள் உருவாகின்றன.
தமிழ்விக்கி போன்ற இணைய இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். வெண்முரசை பலமுறை படித்தவர்கள் இருக்கிறார்கள். மிகுந்த தீவிரத்துடன் என்னை மொழியாக்கம் செய்து வெளியே கொண்டுசெல்லும் இளம்பெண்களின் ஓர் அணி உள்ளது. வெவ்வேறு இணையதளங்களை நடத்துபவர்கள் உண்டு. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்போர் உண்டு. அந்த தீவிரம் கொண்டவர்களை நம்பியே முன்செல்கிறோம். மற்றவர்களை பொறுமையுடன் உடனிழுக்கவேண்டியதுதான்.
என் அறிதலுக்கு வரவே வராத அதிதீவிர வாசகர்ள் பலர் உண்டு. எங்கேனும் சந்திக்கையில் அவர்கள் வெண்முரசை இருமுறை முழுமையாக வாசித்துவிட்டோம் என்று சொல்லும்போது திகைப்பாகவே இருக்கும். அவர்களின் வாசிப்பு வேறுவகையானது. அவர்கள் வாழ்க்கையை அறிந்துகொள்ள, பண்பாட்டை உள்வாங்க, தத்துவத்தைப் புரிந்துகொள்ள வாசிப்பவர்கள். ஒருவகையில் இலக்கிய ஆக்கங்கள் அவர்களுக்காகவே எழுதப்படுகின்றன.
நண்பர் மணிவண்ணன் அவர்களில் ஒருவர். அவரை நான் சிலமுறை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் சந்தித்துப் பேசியதுடன் சரி. வெண்முரசின் வாசகர். பேராசிரியர். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருடைய மாணவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் நூல்களை வாங்கிச்சென்றபடியே இருப்பார்கள். இறுதியாக அவர் வருவார். அருகே சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டுச் செல்வார். இதுவரை கடிதமேதும் எழுதியதில்லை. அவரை நான் நண்பர் என்று சொல்வது மானசீகமான உறவால்தான். அவர் தன்னளவில் ஓர் அறிவியக்கம். அத்தகையோர்தான் வெண்முரசின் சிறந்த வாசகர்கள்.
அத்தகைய பல்லாயிரம் வாசகர்கள் வெளியே அறியப்படாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ரகசிய சக்தி. அதுதான் அனைத்துக்கும் அடித்தளம். அடித்தளம் பெரும்பாலும் வெளியே தெரியாது.
வெண்முரசு சுருக்க வடிவம் வெளிவருமா?
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887)
இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்விJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

