பனிநிலங்களில் -3

ரவியின் விடுதிக்கு ஸ்வீடனின் தமிழ் வாசகர்கள் என்னைச் சந்திக்கும்பொருட்டு வந்திருந்தார்கள். ஒன்றாக உணவருந்தினோம். புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர்களுடன் பொதுவான உரையாடலே அங்குள்ள வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கியது.

அமெரிக்காவுடன் ஒப்பிட உடனடியாக இரண்டு வேறுபாடுகளைக் கண்டேன். ஒன்று, இங்குள்ளவர்கள் இந்த நாட்டின் சட்டம், மக்கள்நலப் போக்கு ஆகியவை பற்றிய நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள். இங்கு இனவாதம் இல்லை, அரசிடம் பாரபட்சம் இல்லை என எண்ணுகிறார்கள். அந்நம்பிக்கை அமெரிக்க தமிழர்களிடமில்லை. அங்குள்ள அரசு மக்கள்நலம் நாடும் அரசல்ல என்றும், அங்குள்ள சமூகம் இனப்பாகுபாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்கா தங்களை வாழவைத்த நிலம் என்னும் எண்ணமிருப்பதனால் அதைச் சொல்ல தயங்குவார்கள். அதேசமயம் அந்த எண்ணம் பேச்சில் வெளிப்பட்டுக்கொண்டும் இருக்கும்.(ஆனால் அமெரிக்கப் பணியிடச் சூழல் பற்றிய பெருமதிப்பும் அவர்களிடம் இருக்கும்)

இரண்டாவதாக  அமெரிக்கப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி இருக்கும் மிகையான பதற்றம் இங்கில்லை. முதன்மைக் காரணம், இங்கே இந்தியர்கள் குறைவு. அமெரிக்காவில் இந்தியச் சமூகம் தனியாக திரண்டுள்ளது. ஆகவே இந்தியர்களுக்கு அண்டைவீட்டு அழுத்தம் மிக அதிகம்.

அதோடு அமெரிக்காவில் கல்வி என்பது ஒரு கடும்போட்டிதான். ஆகவே அமெரிக்கப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் படிப்பு ஒன்றே ஒரே பேசுபொருள். பிள்ளைகள் படித்து முடித்தபின் இவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

ஸ்வீடன் குழந்தைகள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் பேசுகின்றன. அமெரிக்கக் குழந்தைகளில் தமிழ்பேசும் குழந்தைகளைக் காண்பது அரிது. இங்குள்ள கல்விச்சுழல் நெகிழ்வானது, போட்டி அற்றது. சமூகச்சூழலும் நெடுக்கடிகள் அற்றது. ஆகவே குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்துவதும் குறைவு

மிகக்குறைவான அவதானிப்பிலேயே எனக்கு ஒன்று தோன்றியது, இந்தியாவை விட்டு வேறேதும் நாட்டுக்கு குடிபெயர்வதென்றால் ஸ்வீடனையே தெரிவுசெய்வேன். இங்குள்ள குளிரும், நீண்ட பனிக்காலமும் ஒரு பெரும் சவால்தான். என்னால் இந்திய மண்ணுக்கு வெளியே இயல்பாக உணரவும் முடியாது. ஆனாலும் இந்தியாவை விட்டு வெளியேறும் கனவொன்று அடிக்கடி வந்துசெல்கிறது.

 இந்தியா என்னும் மாபெரும் வரலாற்றுப் பண்பாட்டுத் தொகை என் ஆழ்மனமாகவே மாறிவிட்ட ஒன்று. ஆனால் இந்தியா மேலும் மேலும் கட்டுப்பாடற்ற குப்பைமேடாக ஆகிக்கொண்டே இருக்கிறது என்று எனக்கு படுகிறது. என் அழகுணர்வு சீண்டப்படாமல் வெளியே இறங்கவே முடியாத நிலை. அழகுணர்வு என்னை ஐரோப்பிய அமெரிக்க நிலங்களை நோக்கி ஈர்க்கிறது. அண்மையில் மலேசியா சென்றபோதுகூட அந்நிலம் இந்தியாவை ஒப்பிட எத்தனை அழகியது, தூய்மையாக பேணப்படுவது என்னும் எண்ணமே எழுந்தது

ஸ்வீடனின் தமிழ்மக்கள் வழக்கம்போல கணிப்பொறி வல்லுநர்கள், மற்றும் ஆய்வுக்காக வந்து ஸ்வீடனில் நிலைகொண்டவர்கள்.  தமிழில் அவர்கள் வாசிப்பது இணையத்தால்தான். ஸ்வீடனின் நிதானமான சூழல் வாசிப்பதற்கான பொழுதையும் அளிக்கிறது. ஆனால் அவர்கள் மிகக் குறைவாகவே வாசிக்கிறார்கள். அதை குற்றவுணர்ச்சியுடன் என்னிடம் சொன்னார்கள்.

இந்தியர்களே பொதுவாக வாசிப்புப் பழக்கம் குறைவானவர்கள். வாசிப்பு தேவையில்லை என அவர்களிடம் சொல்லும் பல்லாயிரம் குரல்களால் சூழப்பட்டவர்கள். வாசிப்பில்லாமல் இருப்பதன் குற்றவுணர்ச்சியை அடையவே அமெரிக்காவுக்கோ ஸ்வீடனுக்கோ செல்லவேண்டியிருக்கிறது. இந்தியாவில் இருந்தால் ’நானெல்லாம் வாசிக்கிறதே இல்லை’ என்பதையே பெருமையாக முகநூலில் எழுதி மகிழலாம்.

வாசிப்பின்மைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, குடும்பச் சூழல். நாம் குடும்பத்தின் எளிய அன்றாடச் செயல்பாடுகளில் மூழ்கி அதையே வாழ்வெனச் செய்துகொண்டிருப்பவர்கள். அதைச்செய்யவே நம் குடும்பம் நமக்கு ஆணையிட்டுக்கொண்டு இருக்கிறது. இரண்டு, நமக்கு வாசிப்புப் பயிற்சி கல்விநிலையங்கள் அல்லது குடும்பச்சூழலில் இருந்து அளிக்கப்படுவதில்லை. பயிற்சி பெறாமல் வாசிக்க முடியாது.

ஸ்வீடன் கலாச்சாரச் செயல்பாடுகளின் நிலம். அங்கே தமிழர்கள் தங்களுக்கான கலாச்சார பரப்பை, அடையாளத்தை தேடிக்கொள்வார்கள் என்றால் அது அவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் ஈட்டிவைத்துச் செல்லும் செல்வமாக அமையும்.

ஆனால் அதில் இரு சிக்கல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த கலாச்சாரச் செயல்பாடுகள் இரண்டே. ஒன்று, இங்குள்ள பொதுவான வணிகக்கேளிக்கைச் செயல்பாடுகள். இரண்டு, இங்குள்ள அரசியல் சார்த செயல்பாடு. இங்குள்ள அரசியல் செயல்பாடு என்பது எல்லா நிலையிலும் ஏதோ ஒருவகை அடிப்படைவாதம் சார்ந்தது. மதம், சாதி, இனம், மொழி. அவற்றை ஒட்டிய காழ்ப்புகள், கசப்புகள். இங்கிருந்து ஸ்வீடனுக்குச் சென்று அவற்றை வளர்ப்பது அறிவீனம்.

ஸ்வீடன் போன்ற நாடுகள் அந்த அடிப்படைவாத மனநிலைகளை கடந்தவை. அவற்றின் சாதனையும், உலகுக்கு அவற்றின் கொடையும் அவை உருவாக்கியிருக்கும் தாராளவாதம்தான். பொருளியல், சமூகவியல் தாராளவாதத்தை மட்டுமல்ல அதைவிட முக்கியமான பண்பாட்டுத் தாராளவாதத்தைச் சொல்லவேண்டும். அதை இப்படி வரையறுக்கலாம். தன்னை ஓர் உலகமனிதனாக, உலகப்பண்பாட்டுக்கு எல்லாம் வாரிசாக உருவகித்துக்கொள்ளுதல். பிறன் என ஒன்றை கற்பிதம் செய்யாமல் அனைத்துடனும் உறவுகொள்ளுதல்.

நல்லூழாக ஒரு வளர்ந்த நாட்டின் சூழலில் வாழும் வாய்ப்பு அங்குள்ளவர்களுக்கு அமைந்துள்ளது. உலகின் மகத்தான கல்விமுறை ஒன்றில் அவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் பிந்திய சமூகநிலையில், பண்பாட்டுநிலையில் இருக்கும் நம் தேசத்தின் சழக்குகளை கொண்டுசென்று அறிமுகப்படுத்துவதைப் போல அறிவீனம் வேறில்லை.

ஆனால் பலசமயம் அதுவே நிகழ்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் பொதுச்செயல்பாட்டுக்கு வருபவர்களில் பலர் அரசியல்நோக்கம் கொண்டவர்கள். அந்த அரசியல் தமிழகத்தின் சழக்கரசியல். இணையம் அதற்கான ஊடகமாக உள்ளது இன்று. பொழுதுபோகாத தனிமையின் சோர்வில் இணையம் வழியாக இந்தியச் சழக்குகளுடன் உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்குள்ள எல்லா காழ்ப்புகளையும் அங்கே பெருக்கிக் கொள்கிறார்கள்.

இணையத்தின் மிகப்பெரிய தீங்குகளில் இது ஒன்று. இது இல்லாதபோது இன்னும் ஆரோக்கியமான உளநிலையுடன், சென்ற இடத்தின் பண்பாட்டுடன் இணைந்து வளர்ச்சியடைந்தார்களோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது.இப்போதுகூட முற்றிலும் தங்களை துண்டித்துக் கொண்டு தனித்தீவென ஆனால் அங்குள்ள வளர்ச்சியடைந்த பண்பாட்டின் உறவால் ஆரோக்கியமான உளநிலைகளை தமிழர்கள் அடையக்கூடும் என்று தோன்றுகிறது.

நோபல் அருங்காட்சியகம்

ஐரோப்பா (அல்லது ஐரோப்பாவின் ஒரு பகுதி) சென்றடைந்துள்ள தாராளவாதம் என்பது ஓர் எளிய விஷயம் அல்ல. நம்மவரின் மனநிலை என்பது எளிதாக அதை புறந்தள்ளி தமிழ்ப்பெருமையோ இந்தியப்பெருமையோ பேசுவது. மாபெரும் தத்துவஞானிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் வழியாக அவர்கள் சென்றடைந்த இடம் அது. நாம் 14 ஆம் நூற்றாண்டுமுதல் தத்துவார்த்தமாக தேங்கிப்போனவர்கள். மக்களில் பெரும்பகுதியினர் பழங்குடி மனநிலையில் உழலும் சமூகம். நமக்கு ஐரோப்பா மாபெரும் முன்னுதாரணம். நம் மகத்தான சிந்தனையாளர்கள் அனைவருக்கும் அவ்வண்ணமே ஐரோப்பா முன்னோடி ஒளியாக இருந்துள்ளது.

கலாச்சாரச் செயல்பாடு என்னும் போது நான் உத்தேசிப்பது ஐரோப்பிய நிலத்தில் தமிழ் அல்லது இந்திய அடையாளத்துடன் சுருண்டுகொள்வதை அல்ல. தனித்தன்மை தேடுவதை அல்ல. நமது நேற்றின் ஒரு நீட்சியை அல்ல. நம் ஊரின் ஒரு நினைவை அங்கே நிலைநிறுத்திக்கொள்வதை அல்ல. அந்த பண்பாட்டின் முன்விசையுடன் நம்மை இணைத்துக்கொள்வதைப் பற்றி மட்டுமே.

ஸ்வீடன் போன்ற நாடுகளின் பொதுமனநிலை என்பது பண்பாட்டுத் தாராளவாதமே. அந்த மனநிலையுடன் உரையாடும் தமிழ், இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்டடைந்து அவற்றை வளர்த்துக்கொள்வதே இன்று அவசியமானது. அவ்வண்ணம் ஓர் உண்மையான பண்பாட்டு செயல்பாடு ஐரோப்பியத் தமிழர்களிடையே நிகழ்ந்து, அதன் விளைவான ஓர் அடையாளம் அங்கே அவர்களுக்கு உருவாகுமென்றால் அதுவே நாம் இன்று காணத்தக்க பெருங்கனவு.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.