டால்ஸ்டாயின் ஒளிரும் அகம்
‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை.

ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது, அந்த நாட்டின் நிலக்காட்சி மனத்தில் பதிய மறுக்கும். அங்கு நிகழும் பனிப்பொழிவு நமக்கு அந்நியமானது.
அவர்களின் பெயர்களும் அவர்களின் உடை, உணவு முறைகளும்கூட நமக்கு முற்றிலும் புதிதானவையே. அதனாலேயே நான் ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் திணறி திணறித்தான் படித்து முடிப்பேன். ஆனாலும் அவற்றில் உள்ள படைப்பு நயம் என்னை மயக்கிவிடும். அந்த மயக்கத்திற்காகவே நான் மீண்டும் அவற்றைப் படிப்பேன்.
‘தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல்’ என்ற அறிமுகத்தோடு வெளிவந்த இந்த “மண்டியிடுங்கள் தந்தையே!” நாவலை அணுகும்போது, எனக்கு மேற்சுட்டிய தயக்கமும் மயக்கமும் ஒருசேரத் தாக்கின. அதனால், நான் இந்த நாவலையும் அச்சத்துடன்தான் படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எழுத்தாற்றலால் ரஷ்யப் பனிப்பொழிவையும் மன்னர்காலத்திய ரஷ்யப் பண்ணைகளையும் அவை சார்ந்த நிலக்காட்சிகளையும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானவையாக மாற்றிவிட்டார். இந்த நாவலின் முதல்வெற்றியே அதுதான் என்பேன்.
இந்த நாவல், ‘ரஷ்ய எழுத்தாளர் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது’ என்பதை அறிந்தவுடனேயே என்னுள் இரண்டு வினாக்கள் எழுந்தன.
ஒன்று – ஓர் எழுத்தாளரின் வாழ்வை நாவலாக எழுதும்போது அது அந்த எழுத்தாளரின் எழுத்தைப் போலவே என் மனத்தில் இடம்பிடித்துவிடுமா?
இரண்டு – அவரின் வாழ்வுக்கும் அவரின் எழுத்துக்குமான உறவு என் மனத்தில் ஏற்படுத்தும் சித்திரம் என்னவாக இருக்கும்?
ஆனால், இந்த இரண்டு வினாக்களையும் தகர்த்துவிட்டது இந்த நாவல். காரணங்கள் – இந்த நாவல் டால்ஸ்டாயின் அன்றாட வாழ்க்கையின் தொகுப்பாக இல்லை. அவரின் எழுத்துகளைப் பற்றிய விமர்சனமாகவும் இல்லை. அவரின் வாழ்வுக்கும் எழுத்துக்குமான உறவாகவும் இல்லை.
இந்த நாவல், டால்ஸ்டாயின் அகத்தை அச்சுஅசலாக அவரின் பல்வேறு அகவய, புறவயச் செயல்பாடுகளைக் கொண்டே நமக்குத் தெரியப்படுத்துகிறது. சுருக்கமாக, ‘டால்ஸ்டாய் மனத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான் இந்த நாவல்’ என்று கூறிவிடலாம்.
தந்தை – மகன் உறவுப் போராட்டம்தான் இந்த நாவலின் மையக்கரு என்றாலும் கணவன் – மனைவி உறவை தக்கவைத்துக்கொள்ளுதல், அங்கீகரிக்கப்படாத மனைவி – அங்கீகரிக்கப்படாத கணவன் உறவுநிலையைப் பேணுதல், தனிநபர்களுக்கிடையிலான ஆழமான நட்புறவுகளும் பிரிவுகளும் என இந்த நாவல் கிளைபிரிந்து வளர்ந்துள்ளது. ‘உறவுகளாலும் உறவின்மைகளாலும் மனித மனம் படும்பாடு’தான் இந்த நாவலின் ஒட்டுமொத்த கரு என்று கருதமுடிகிறது.
டால்ஸ்டாயை மையமாகக் கொண்டு சுழலும் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள எல்லா மாந்தர்களுடனும் டால்ஸ்டாய் நிழலுருவாய்ச் சுழல்கிறார். டால்ஸ்டாயை எல்லோரும் புனிதராக உருவகித்துவரும் சூழலில், அவர் தன்னுடைய புனிதத்தன்மையைத் தானே தோலுரித்துக்கொள்கிறார். அவர்கள் தன் மீது பூசும் புனிதச் சாயத்தைக் கழுவிவிட்டு, உண்மைப் புனிதத்தை நோக்கி, மானுட விழுமியத்தை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.
டால்ஸ்டாய் தன் எழுத்துகளின் வழியாகக் கண்டடைந்தது மானுட புனிதத்துவத்தைத்தான். அதனை அடைய ‘அன்பு’ ஒன்றே வழி என்பதை முன்மொழிகிறார். அதை நோக்கியே அவரின் இறுதிக்கால மனப்பயணம் அமைந்துவிடுகிறது. ஆனால், ‘தன் வாழ்நாள் முழுவதும் அவர் அன்பினைத் தன் சுயதேவைக்காக மறைத்தே வந்தார்’ அல்லது ‘தன்னுடைய சுயதேவைக்கு ஏற்ப சிக்கனமாகச் செலவு செய்துவந்தார் என்பதுதான் நகைமுரண்கள்.
ஒருவகையில் இந்த நாவல், டால்ஸ்டாயை மதிப்பீடு செய்கிறது. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு, அவர் காலத்திய மானுட வாழ்வை விமர்சனம் செய்கிறது. இந்த நாவல், அவரின் வாழ்க்கையின் வழியாகவே அவரைப் பற்றியும் அவரின் காலத்திய ரஷ்ய அரசியலையும் சமுதாய நிலவரங்களையும் புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் மதிப்பீடு செய்கிறது.
இந்த நாவலில் என்னைப் பெரிதும் ஈர்த்தவை ஒன்று தந்தை – மகன் உறவில் நிகழும் பிறழ்வும் இணைவும்தான். தந்தையும் மகனும் தனித்தனியே ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அதேநேரத்தில் காலச்சூழலால் வெறுக்கவும் செய்கின்றனர்.
“எஜமானரும் நெருப்பைப் போன்றவர்தான். நெருப்பு எப்போது உக்கிரமடையும் என்ற யாருக்குத் தெரியும்? திமோஃபியின் மனத்திற்குள் தந்தையின் மீதான ஏக்கம் ஆழமான வெறுப்பாக உருக்கொண்டது.”
டால்ஸ்டாய் திமோஃபியை வெறுக்கவில்லை என்றாலும் அவனைத் தன் மகனாக அவர் அங்கீகரிக்கவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். திமோஃபி விதவையான ஓல்காவின் மகன் கிரிபோவைத் தன் மகனாக ஏற்கிறான். தான் இழந்த தந்தையின் அன்பை அவனுக்குத் தன்னால் வழங்க இயலும் என்று நம்புகிறான். அவனால், கிரிபோவை அங்கீகரிக்க முடிகிறது.
“நீ அதையே நினைத்துக் கொண்டிருக்காதே! நீதான் இப்போது கிரிபோவின் தந்தை. உன் தந்தை உனக்குக் காட்டாத அன்பை நீ அவனுக்குக் காட்டு. ”
டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்துலகைத் தனக்கான தனி உலகாகவே கருதுகிறார். அதை அவர் யாருக்காகவும் விட்டுத்தர விரும்பவில்லை. இது பற்றி அவர் சோபியாவிடம் மிகத் தெளிவாகக் கூறிவிடுகிறார்.
எழுத்துலகில் உள்ள டால்ஸ்டாய் வேறாகவும் அவருடைய பண்ணையில் உலாவும் டால்ஸ்டாய் வேறாகவும்தான் எனக்குத் தெரிகிறார். எழுத்தை அவரின் அகம் என்றும் பண்ணையை அவரின் புறம் என்றும் நாம் உருவகித்துக் கொள்ளலாம். இரண்டுக்குள்ளும் அவரின் மனம் இடையறாது ஊசலாடுகிறது.
“மனிதன் குழப்பமானவன். புறம் அவனை உருவாக்குகிறது. அகம் அவனை வழிநடத்துகிறது. ஒரு மனிதன் ஒரு பக்கம் குதிரையினையும் மறுபக்கம் ஒரு பறவையினையும் பூட்டி எப்படிப் பயணம் செய்ய முடியும்? அப்படித்தான் இன்றைய வாழ்க்கையிருக்கிறது.”
“எழுத்துதான் அவரது நிரந்தரக் கொண்டாட்டம். நிகரற்ற சந்தோஷம். ஒரு கதையை எழுதி முடித்த பிறகு கிடைக்கும் மகிழ்ச்சியை எந்தப் பண்டிகையும் தருவதில்லை.”
அவர் தன்னுடைய வாழ்வைப் புரிந்துகொள்ளத் தன்னுடைய எழுத்தைத்தான் நாடுகிறார். ஆனால், அவர் தன்னுடைய புறவுலகிலிருந்துதான், இந்தச் சமுதாயத்தில் உள்ள எளிய மனிதர்களில் இருந்துதான், குறிப்பாகத் தன்னுடைய பண்ணையில் பணியாற்றுவோரிடமிருந்துதான் தன்னுடைய கதைமாந்தர்களை உருவாக்கிக்கொள்கிறார். அவரும் அவருடைய எழுத்தும் ‘ஒரு பொருளும் அதன் நிழலும்’ என இணைந்துள்ளனர்.
“எழுத்து ஒன்றுதான் எப்போதும் புதிதாக இருக்கிறது. நாளை என்ன எழுதப் போகிறோம் என்று தெரியாது. ஒரு கதாபாத்திரம் எப்படி நடந்து கொள்ளப்போகிறது என்பது பெரும்புதிரே! அந்த வசீகரம்தான் அவரைத் தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டிருந்தது.”
தன் வாழ்நாள் முழுவதும் எழுத்தைக்கொண்டாடும் மனிதராகத்தான் டால்ஸ்டாய் வாழ்ந்து, மடிந்தார். இப்போது உலகம் அவரின் எழுத்தைக் கொண்டாடுகிறது.
“எழுத்துதானே எல்லா மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறது. ‘ஒருவன் தன் நினைவுகளைத் தன்னிடமிருந்து பிரித்து எழுத்தாக்கிவிடுவது’ என்பது, எவ்வளவு பெரிய மாயம்!. அது ஏன் இந்த உலகிற்குச் சாதாரணமாகப்படுகிறது?. நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க முடிவது எத்தனை அருமையான விஷயம்! நினைவில் வாழுகிறவர்களுக்கு அழிவே கிடையாது. அவர்கள் நினைவில் என்றும் குறிப்பிட்ட வயதுள்ள தோற்றத்தில் வாழுகிறார்கள். ‘ஒரு மனிதன் யார் நினைவில் என்னவாகப் பதிந்து போயிருக்கிறான்’ என்பது, கண்டறியமுடியாத புதிர். உலகின் வயதோடு ஒப்பிட்டால், தனது இந்த எழுபது வயது என்பது சிறுகூழாங்கல். ஆனால், இதைச் சுமக்கவே இவ்வளவு கனமாக, வேதனையாக இருக்கிறது.”
திமோஃபி இளமையில் தன் தந்தையைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிக்கும் காட்சி மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு உண்மையைக் கூறாமல் மறைக்கும் அவனின் அன்னையின் மனப்பக்குவம் வாசகரை வியக்க வைக்கிறது.
“அப்படியானால் என் தந்தை எங்கே இருக்கிறார் என்பதை மறைக்காமல் சொல்லுங்கள்?” என்றான் திமோஃபி.
அக்ஸின்யா தொலைவில் இருந்த ஓக்மரத்தைக் காட்டியபடியே கேட்டாள், “அந்த மரத்திற்குத் தந்தை யார் எனத் தெரியுமா? இல்லை. அதோ மேய்ந்து கொண்டிருக்கிறதே குதிரை. அது தன் தந்தையைப் பற்றி எப்போதாவது யோசித்துக் கொண்டிருக்குமா? திமோஃபி, உன் தந்தை ஓர் அறிவாளி. மிகப் பெரிய மனிதர். தூரத்துப் பனிமலையைப் போல ஒளிரக்கூடியவர். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியம். அவரையே நினைத்துக் கொண்டிருக்காதே! உன்னுடைய உடல் அவர் கொடுத்தது. உனது கண்களுக்குள் அவர் இருக்கிறார். உன் முகத்தில் நான் அவரையே பார்க்கிறேன். நீ அவரது நிழல். இது போதாதா?”
“என்னைப் போலத்தான் என் தந்தை இருப்பாரா?” என மறுபடி கேட்டான். “மரத்தைப் போலப் பச்சை நிறமாகவா இருக்கிறது அதன் நிழல்?” என்று சிரித்தபடியே கேட்டாள் அக்ஸின்யா.
“நிழலைப் பற்றி மரம் கவலைப்படுவதில்லை” என்று அழுத்தமான குரலில் சொன்னான் திமோஃபி.
“உன் தந்தை பெருமைக்குரியவர். கனவான். அதற்கு மேல் சொல்ல என்னிடம் எதுவுமில்லை”.
“அவர் ஏன் நம்முடன் வாழவில்லை?”
“அவருக்கு விருப்பமானவர்களுடன் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்”
“எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்?”
“விருப்பமான இடத்தில். திமோஃபி! உனக்கு நான் சொல்வது புரியவேண்டுமென்றால் உனக்கு இன்னும் வயதாக வேண்டும்”
எவ்வளவு வயது?” எனக்கேட்டான் திமோஃபி.
“ ‘இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது’ என்று உணரும் வயது” என்றாள்.
திமோஃபி அவன் அன்னையிடம் தன் தந்தையைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அன்னை டால்ஸ்ட்டாயைப் பற்றி மிகவும் உயர்வாகவே பேசுகிறார். அவர் எந்தத் தருணத்திலும் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. தன் மகனிடம் தன்னை ஓர் அன்னையாக நிறுவிக்கொள்வதைவிட டால்ஸ்டாயை விரும்பும் எளிய பெண்ணாகவே தன்னை நிலைநாட்டிக் கொள்கிறார். அதேபோலவே டால்ஸ்டாயும் தன்னைத் திமோஃபியின் தந்தை என்பதை எந்தத் தருணத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இருவரும் சேர்ந்து யாருக்குத் துரோகம் செய்தார்கள்? யாருக்காக இந்தத் தியாகத்தைச் செய்தார்கள்? இந்த வினாக்களுக்கு விடையாக இருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுதான். இங்கு உறவு முறைகள் பொருளாதாரத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. டால்ஸ்டாய் சோபியாவைத் திருமணம் செய்துகொண்டதற்குக்கூட அதுவே மையமாக இருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகளில் எரிநட்சத்திரம்போலச் சில வரிகள் அவ்வப்போது மின்னிவிழும். அவை அந்தந்த அத்யாயத்திற்கு அழகையும் வலுவையும் சேர்க்கும்.
“உலகின் மிகச்சிறந்த மலர்கள் அம்மாவின் கைகள்தான் என்று தோன்றும்.”
“மரத்தின் உச்சியைத் தொடுவதற்கு மரமேற வேண்டும் என்று அவசியமில்லை. அதன் நிழலைத் தொட்டால் போதாதா என்று கூட நினைத்தான்.”
“ப்யானோவின் கட்டைகளை விரலால் அழுத்தி இசையை எழுப்புவது போல நடக்க நடக்கத் தானே நினைவுகள் மேலே எழும்பத் துவங்குகின்றன.”
“சவத்திற்குத்தான் ஆறடி நிலம் தேவை. உயிர்வாழ்வதற்கு இந்த உலகமே போதாது.”
“ ‘அறிவு’ என்பது, யாருக்கும் உரிமையானதில்லை. அதைப் பெறுவதன் நோக்கமே பகிர்ந்து தரவேண்டும் என்பதுதான். கல்வியை ஒருபோதும் நாம் வணிகமாக்கக் கூடாது.”
இந்த நாவலில் மிக முக்கியப் பகுதியாக நான் கருதுவது டால்ஸ்டாய் – டன்ஸ்கோவ் சந்திப்புதான். இந்த உரையாடலின் வழியாக நாம், ‘டால்ஸ்டாய் என்ற எழுத்தாளரை ஏன் உலகம் கொண்டாடுகிறது?’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
சமுதாயத்தில் ஓர் எழுத்தாளரின் இடம் என்ன? அவரின் சமூகப் பங்களிப்பு என்ன? புனைவிலக்கியங்களால் உலகைப் புரட்டிப்போட முடியுமா? ஒரு மனிதனின் மனமாற்றத்துக்கு இலக்கியங்கள் எந்த வகையில் உதவுகின்றன? போன்ற அடிப்படை வினாக்களுக்கு இந்த உரையாடலின் வழியாகத்தான் நாமக்கு விடைகள் கிடைக்கின்றன.
“இலக்கியத்தின் வேலைகள் மனித வாழ்க்கையின் புதிர்களை விசாரணை செய்வது, ஆராய்வது, புதிய கனவுகளை உருவாக்குவதுமாகும். நடந்து முடிந்துபோன அனுபவங்களை வெறுமனே பதிவு செய்வதற்கு டயரி போதும்தானே? அதை ஏன் ஒருவன் கதையாக்க வேண்டும்? ‘சுதந்திரம்’ என்பதன் உண்மையான பொருளை இலக்கியம் ஆராய்கிறது. மனிதன் தோன்றிய நாள் முதல் ஆண், பெண் உறவு குறித்த சிக்கல்களும் வரையறைகளும் உருவாகிவிட்டன. சிடுக்கேறிய நூல்பந்து போலாகிவிட்ட அந்தப் பிரச்சனையை எல்லாக் காலத்திலும் இலக்கியம் பேசிக் கொண்டிருக்கிறது. ‘உண்மையைத் தேடுவதே இலக்கியத்தின் ஆதாரப் பணி’யாக நான் கருதுகிறேன்.”
“கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை; நெறிப்படுத்துவதும் வழிகாட்டுவதும் மேம்படுத்துவதும் அதன் வேலைகள்.”
“அழகும் ஞானமும் ஒன்றுக்கொன்று எதிரானதாக உலகம் நம்புகிறது. ஆனால், கலையில் இந்த இரண்டும் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. அழகின் லட்சியம் என்பதும் அழகான உடல் மட்டுமில்லை; அழகான ஆன்மாவுதான். கலை மனித வாழ்க்கையின் ஆன்மிக வடிவம். எதை எவராலும் அழிக்க முடியாது. ‘கலையின் நோக்கம்’ என்பது, மனித மீட்சியே!”
இந்த நாவலில் அன்பும் மூர்க்கமும் ஒன்றிணையும் புள்ளி ஒன்று உள்ளது. காலத்தால் அந்தப் புள்ளியில் திமோஃபி நிறுத்தப்படுகிறான். இங்கு ‘வைக்கோற்பொம்மை’ யதார்த்த வாழ்வுக்குக் குறியீடாக அமைந்துள்ளது. அந்த யதார்த்தத்தை மறைக்கலாம், அழிக்கலாம்; ஆனால், அதனாலேயே அது இல்லையென்றாகிவிடாது. அது காலம். அது விதி. அதை மாற்றியமைக்க முயலும்போது நாம்தான் மேலும் மேலும் அதனின் இறுகிய பிடியில் அகப்பட்டுக் கொள்கிறோம்.
திமோஃபி ‘வைக்கோற்பொம்மை’யை எரித்த இந்த நிகழ்வு, அவன் தன் விதியை மாற்றியமைக்க முயன்றமைக்கு ஒரு குறியீடாக இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் அது அவனுடைய இயலாமையின் மறுவெளிப்பாடு அல்லது அது அவனால் இயன்றதன் உண்மைநிலை.
இந்த நாவலில் எல்லாப் பக்கங்களிலும் காதலைக் காணமுடிகிறது. அதன் நிழலாக இருக்கும் இழப்பினையும் நம்மால் உணரமுடிகிறது. இந்த நாவலில் எண்ணற்ற சோக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கடல் அலைபோல ஓயாமல் அவை வந்து வந்து மனித உறவுகளைத் தாக்கிச் சிதைக்கின்றன. ‘ஒட்டுமொத்த மானுட மனத்தில் ஒருகால் இன்பத்திலும் மறுகால் துன்பத்திலும்தான் நிலைநாட்டப்பட்டுள்ளதோ?’ என்றும் கூட எண்ணத்தோன்றுகிறது.
“ஏன் காலம் இப்படி விருப்பத்திற்குரியவர்களைப் பறித்துக் கொண்டுவிடுகிறது என்று வேதனைப்பட்டார்.”
“விருப்பமானவர்களின் மரணம் மனத்தில் ஏற்படுத்திய பள்ளம் ஒருபோதும் நிரம்பப் போவதில்லை.”
“இழந்தவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்று அறிவிற்குப் புரிந்தாலும் மனது அதை ஏற்றுக்கொள்வதில்லை. திரும்பத் திரும்ப இழப்பையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறது.”
டால்ஸ்டாய் தன்னிலை விளக்கமாகக் கூறும் பின்வரும் பத்திகள் அறுதி உண்மையை நெருங்கியதாக அமைந்துள்ளன.
“எந்தப் புகழும் நிரந்தரமானதில்லை. அதை நான் அறிவேன். இயற்கை புகழ்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. புகழ்பெற்றவர்கள் எழுதியதால் மட்டும் அவர்களின் புத்தகங்கள் புகழ்பெற்றுவிடாது. தானியம் எவரது நிலத்தில் விளைந்தது என்று மதிப்பிடப்படுவதில்லை; அதன் தரத்தால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது.”
‘சொர்க்கம்’ என்பது ஓர் உலகமில்லை. நிகரற்ற கற்பனை. இன்பங்களும் சந்தோஷங்களும் மட்டுமே நிரம்பிய உலகமாக அதைச் சிருஷ்டி செய்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க வேண்டும். சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்க முடியாது. அது மனிதனின் மனத்திற்குள் இருக்கிறது. மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஒரே நுழைவாயில் தானிருக்கிறது. அதன் பெயர் செயல். நமது செயல்களே சொர்க்கம் நரகத்தை முடிவு செய்கின்றன. மனிதர்கள் தங்களது இழிவான செயல்களால் நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடுகிறார்கள். அன்பும் கருணையும் கொண்ட செயல்களாலே மனிதர்கள் சொர்க்கத்திற்குள் பிரவேசிக்க முடியும். நற்செயல்களே மனிதனுக்குச் சிறகுகளை அளிக்கின்றன. ‘இந்தச் சிறகுகள் விரியத் துவங்கினால், மனிதன் மகத்தானவன் ஆகிவிடுவான்’ என்று டால்ஸ்டாய்க்குத் தோன்றியது.
ஒரு வீட்டைச் சுற்றிப் பார்க்க பலர் தலைவாசல் வழியாகச் செல்வார்கள். சிலர் கொல்லைப்புறம் வழியாகவும் வெகுசிலர், சன்னல் வழியாக எட்டிப் பார்த்தும் அந்த வீட்டைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த நாவலின் வழியாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் என்ற ஓர் ஆளுமையை நமக்கு உணர்த்துவதற்காக, நம்மை டால்ஸ்டாயின் கதைமாந்தர்களின் வழியாகவும் டால்ஸ்டாயின் வாழ்க்கை நிகழ்வுகளோடும் தன்னுடைய இனிய புனைவுவெளியின் ஊடாகவும் அழைத்துச் செல்கிறார்.
இறுதியில் நாம் கண்டடைவது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் என்ற மாபெரும் எழுத்தாளரையும் அவரைப் பற்றித் தன் வாழ்நாள் முழுவதும் உருகி உருகிப் பயின்றுவரும் எஸ். ராமகிருஷ்ணன் என்ற மாபெரும் வாசகரையும்தான்.
– – –
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
