நாம் அறியாத உலகம்

சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்களை யார் மொத்தமாகக் கொள்முதல் செய்வது. யார் விநியோகம் செய்வது, விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதன் பின்னாள் ஒரு சிண்டிகேட் செயல்படுகிறது.

அவர்களை மீறி எவரும் தக்காளியோ, வெங்காயமோ வாழைப்பழங்களோ நேரடியாக வாங்கி விற்பனை செய்துவிட முடியாது. அந்தச் சிண்டிகேட் உறுப்பினர்கள் விவசாயிகள் எப்போது அறுவடை செய்யவேண்டும். யாரிடம் விற்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காய்கறிகள் பழங்கள் எதுவும் கிடைக்காமல் நகரை ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும். விவசாயிகள் நேரடியாகத் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாமல் செய்வது அவர்களே.

இந்தச் சிண்டிகேட்டை உடைத்துக் காய்கறிகள் மற்றும் பழங்களை எவரேனும் விற்பனை செய்ய முயன்றால் அந்த மனிதனால் உயிர் வாழ முடியாது. அவனைக் கொன்றுவிடுவார்கள்.

La sfida என்ற1958ல் வெளியான இத்தாலியத் திரைப்படத்தின் கதையிது. புகழ்பெற்ற இயக்குநர் ஃபிரான்சிஸ்கோ ரோசி இயக்கியது

உலகெங்கும் இன்றும் இதே நிலை தானிருக்கிறது. அதுவும் இந்த லாக்டவுன் நாட்களில் பொருட்களின் திடீர் விலையேற்றமும் அதனால் சிலர் அடித்த கொள்ளை லாபமும் இப் படத்தைக் காணும் போது மனதில் ஓடியபடியே இருந்தது.

குற்றவுலகம் என்பது போதைமருந்து கடத்தும் உலகம் மட்டுமில்லை. இது போன்ற காய்கறிச்சந்தையினுள்ளும் ரகசியமாகக் குற்றவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களே வணிகர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். விலையை முடிவு செய்கிறார்கள்.

நேபிள்ஸின் பின்தங்கிய பகுதியில் வசிக்கும் விட்டோ போலரா குறுக்குவழியில் பணம் சேர்க்க நினைப்பவன். இதன் காரணமாக வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறான். நகரில் ஏற்பட்ட வேலைநிறுத்தத்தின் போது தற்செயலாக அவன் பூசணிக்காய்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வழக்கத்தை விட நான்கு மடங்கு விலைக்கு விற்கத் தொடங்குகிறான்.

அதில் கிடைக்கும் லாபத்தை மனதில் கொண்டு நேரடியாகக் கிராமப்புறத்திற்குச் சென்று பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி நகரில் விற்பனை செய்தால் நிறையப் பணம் கிடைக்குமே என்று நினைக்கிறான். இதற்காகக் கிராமப்புறத்தினைத் தேடிச் செல்கிறான்

அங்கே யாரும் அவனுக்குப் பழங்களோ, காய்கறிகளோ விற்க முன்வரவில்லை. விவசாயிகள் சிண்டிகேட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்கிறான். அவர்களுக்குக் கூடுதல் பணம் தந்து கொள்முதல் செய்ய முற்படுகிறான். இதை அறிந்த சிண்டிகேட் தலைவர் சால்வடோர் அஜெல்லோ அவனை எச்சரிக்கை செய்கிறார்.

அவரிடம் சவால்விட்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கிராம விவசாயிகளில் சிலரை வைத்துக்கொண்டு புதிய வணிகம் துவங்குகிறான். அது மெல்ல வளர்ச்சி அடைகிறது. விட்டோ கையில் பணம் புழங்கத் துவங்குகிறது. அவனே ஒரு கேங் லீடர் போல உருமாறுகிறான்.

இந்நிலையில் அவனையும் சிண்டிகேட் இணைத்துக் கொள்கிறது. ஆனாலும் அதன் தலைவர் சால்வடோர் அஜெல்லோவுக்கும் அவனுக்குமான மோதல் மறையவில்லை. அவனைப் பழிவாங்க அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட விட்டோ புதிய வீடு வாங்குகிறான். அதற்காக வீடு பார்க்கச் செல்லும் காட்சி அழகானது. விற்பனையாளன் அவனை யாரோ பெரிய தொழிலதிபர் என நினைத்துக் கொள்கிறான். புதிய ஆடம்பரமான கடலோர அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறான் விட்டோ.

காதலியோடு அவனது திருமணம் நடைபெறுகிறது. திருமண நாளில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு அதைச் சந்திக்கப் புறப்படுகிறான். அந்த ஒரு நாளில் என்ன நடக்கிறது என்பதை மிகப் பரபரப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

Pasquale Simonetti என்ற மாபியா லீடரின் வாழ்வினை தான் படம் விவரிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலிய அரசாங்கம் புகையிலை மீதான அரச ஏகபோகத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. சிமோனெட்டி 1950 களின் முற்பகுதியில் கள்ளச் சந்தையில் பிரபலமான அமெரிக்கச் சிகரெட்டுகள் விற்கத் துவங்கி பின்பு பழங்கள் மற்றும் காய்கறி வணிகத்தினுள் நுழைந்தார்.

அன்றிருந்த சிண்டிகேட்டுடன் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டது. அவரது குடோன் தீவைத்து எரிக்கப்பட்டது. போட்டி குழுக்களுடன் பல ஆயுத மோதல்கள் நடந்தன. ஆனால் விடாது போராடி தனக்கெனக் குற்றவியல் குழுவினை உருவாக்கி மிகப்பெரிய கேங்லீடராக உருமாறினார்.

1955 ல் தனது 29 வயதில், சிமோனெட்டி நேபிள்ஸின் பரபரப்பான சந்தையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இந்தப் படம் சிமோனெட்டியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளே விவரிக்கிறது. படத்திற்காக ரோஸி சிமோனெட்டியின் பெயரை விட்டோ பொலாரா என்று மாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு அசுன்டா என்ற உண்மையான காதலியின் பெயரை வைத்துள்ளார்..

1958 வெனிஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்ட போது சிமோனெட்டியின் எதிரிகள் படத்தைத் திரையிடக்கூடாது என்று தடுக்க முயன்று தோல்வியடைந்தனர். அக்டோபர் 26 அன்று நேபிள்ஸில் வெளியிடப்பட்டபோது, திரையரங்கங்களைத் தீவைத்து எரிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கவே பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுப் படம் வெளியானது.

இதற்கிடையில், சிமோனெட்டி மற்றும் எஸ்போசிட்டோ குடும்பங்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் வழக்கு வெற்றிபெறவில்லை.

ஒளிப்பதிவாளர் ஜியானோ டி வெனான்சோவின் ஒளிப்பதிவு அபாரமானது. விட்டோவும் அவன் காதலியும் மொட்டைமாடியில் சந்தித்துக் கொள்வதும், திருமண நிகழ்வும், டிரக்கை துரத்திச் செல்லும் காட்சியும், இறுதி துப்பாக்கிச்சூடும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன

பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் அசுன்டா ரகசியமாக விட்டோவை ரசிப்பதும் அவனிடம் தனது காதலைத் தெரிவிக்கும் விதமும் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் மிக அழகான காதல்கதையாக வெளிப்படுகிறது

அது போலவே கிராமத்து விவசாயிகளை மிரட்டி ஒடுக்கி வைத்திருக்கும் சால்வதோரை சந்திக்க அவன் வீட்டிற்குச் செல்வதும் நேரடியாகச் சவால்விட்டு ஜெயித்துக் காட்டுவதும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

விட்டோ அறிமுகமாகும் காட்சி மிக இயல்பானது. அவன் தேய்த்த உடைகளை அணிந்து கொண்டு புறப்படுவது, அசுன்டா அவனை ரகசியமாகப் பின்தொடர்வது, அவனது கூட்டாளிகள் செய்த தவறு. அதில் ஏற்படும் எரிச்சல் எனப் படம் மெல்ல விட்டோவின் உலகை நமக்கு அறிமுகம் செய்கிறது. விட்டோ குற்றவுலகின் நாயகனாக வளரும் போது அவனது நண்பர்களும் உடன் வளருகிறார்கள். அவர்களும் அவனது வீழ்ச்சியால் பாதிக்கபடுகிறார்கள்.

சென்ற ஆண்டுப் பெய்ரூட்டில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி சந்தைகளில், எலுமிச்சை, வாழைப்பழங்கள் மற்றும் பிற பழங்கள் திடீரென 50 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டன. இது லெபனானின் விவசாயிகளுக்குப் பெரிய அடியாக விளங்கியது.. இந்தப் போட்டி சந்தை விற்பனையாளர்களால் ஏற்படவில்லை, மாறாகப் போதைப்பொருள் மாபியா மற்றும் நேர்மையற்ற சுங்க அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்

லெபனானில் இருந்து அனுப்பப்பட்ட மாதுளைக் கப்பலில் மில்லியன் கணக்கான போதை மாத்திரைகள் மாதுளைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த பிறகு சவுதி அரேபிய அரசு, லெபனான் விவசாயப் பொருட்களின் இறக்குமதியைக் காலவரையின்றி நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இது பழங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை உருவாக்கியது.

பெரும்பாலான ஏற்றுமதிகள் பெரிய அளவிலான வணிக நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. ஆகவே அவர்கள் சூழ்நிலையைச் சமாளிக்க இது போன்ற மலிவான முறைகளை மேற்கொண்டார்கள் என்கிறார்கள். இப்படி உலகெங்கும் இன்றும் உணவுப்பொருட்களின் பின்னால் நாம் அறியாத குற்றவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஃபிரான்செஸ்கோ ரோசியின் திரைப்படம் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டவை. குற்றவுலகின் நிகழ்வுகளை மையப்படுத்தியபோதும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இத்தாலி எப்படியிருந்தது. பொருட்களின் விலையேற்றம் மற்றும் புதிய குற்றக்குழுக்களின் உருவாக்கம். ஏழை எளிய மனிதர்களின் பிரச்சனைகள் என அன்றைய யதார்த்தத்தை ரோசி தனது படத்தின் ஊடு இழையாகப் பின்னியிருக்கிறார். அது தான் இன்றும் இப்படத்தைப் புதியதாக்குகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2022 23:56
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.