தப்பிச் செல்லும் பயணம்
நார்த் வெஸ்ட் ஃபிரான்டியர் 1959 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படம். Flame over India என்ற தலைப்பிலும் இப்படம் வெளியாகியிருக்கிறது

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வழக்கமான ஆங்கிலப் படங்களைப் போலவே இந்தியாவைப் புரிந்து கொள்ளாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெருமை பேசும் மற்றொரு படம்.
சினிமாஸ்கோப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் ஒரு நீண்ட ரயில் பயணத்தினை விவரிக்கிறது. தப்பிச் செல்லும் இந்த ரயில் பயணத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தாக்குதல்களும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. ரயில் கடந்து செல்லும் நிலக்காட்சிகளே என்னை அதிகம் வசீகரித்தது.

1905 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லையில் கதை நடக்கிறது. தனது மகனை எதிரிகள் வசமிருந்து காப்பாற்றி டெல்லி கொண்டு செல்லும்படி மகாராஜா பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் ஸ்காட்டிடம் ஐந்து வயதான இளவரசன் கிஷனை ஒப்படைக்கிறார்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் இளவரசனை ரகசியமாகக் கோட்டையை விட்டு வெளியே கொண்டு செல்கிறார்கள். இதற்கிடையில் கோட்டை எதிரிகளால் தாக்கப்பட்டு மன்னர் கொல்லப்படுகிறார். நாட்டில் மதக் கலவரம் ஏற்படுகிறது. தப்பிச் செல்லும் இளவரசனைக் கொல்ல கிளர்ச்சியாளர்கள் துரத்துகிறார்கள்.
கேப்டன் ஸ்காட் ஹசராபாத் வந்தடைந்தபோது, கலாபூரை விட்டுப் புறப்படும் கடைசி ரயிலில் மக்கள் முண்டியத்துக் கொண்டு தப்பிச் செல்வதைக் காணுகிறார். கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளைத் தடுத்து ரயிலை நிறுத்த முயலுகிறார்கள். இதன் காரணமாகத் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது
இளவரசனை டெல்லிக்குக் கொண்டு செல்வதற்காக விக்டோரியா என்ற என்ஜின் கொண்ட சிறப்பு ரயிலைத் தயார் செய்கிறார்கள். அது பழைய ரயில் என்ஜின். குப்தா என்ற ஓட்டுநர் அதை இயக்குகிறான். ஒரேயொரு ரயில் பெட்டியை இணைத்து டெல்லி பயணம் துவங்குகிறார்கள்.
இளவரசனுடன் திருமதி வியாட், ஆயுத வியாபாரி பீட்டர், வயதான பிரிடி, லேடி விண்ட்ஹாம், டச்சு பத்திரிகையாளர் பீட்டர் வான் லேடன் ஆகியோர் பயணம் செய்கிறார்கள்.
ஆபத்தான பாதையில் செல்லும் இந்த ரயில் பயணம் படத்தின் இறுதியில் தான் நிறைவு பெறுகிறது. வழியில் எதிரிகள் கூட்டம் கூட்டமாக ரயிலைத் துரத்துகிறார்கள். சுடுகிறார்கள்.

இன்னொரு இடத்தில் அவர்களுக்கு முன் சென்ற அகதி ரயில் தாக்கப்பட்டு அதிலிருந்தவர்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டிருப்பதை ஸ்காட் காணுகிறான். மருத்துவரின் மனைவியான வியாட் ரயில் பெட்டியை விட்டு இறங்கி இறந்து கிடந்த உடல்களுக்குள் ஒரு கைக்குழந்தை உயிரோடு இருப்பதைக் காணுகிறார். அக் குழந்தையை மீட்டு தன்னோடு கொண்டு செல்கிறார்.
பயணத்தின் இடையில் ஒரு இடத்தில் ரயில்வே தண்டவாளத்தின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்ய அனைவரும் ஒன்றுகூடி முனைகிறார்கள். இந்த நேரம் தூரத்து மலையினுள் ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் அவர்களைக் கொல்ல திரண்டு வருகிறார்கள். இரண்டு பக்கமும் பலத்த சண்டை நடைபெறுகிறது. ஸ்காட்டும் இளவரசனும் அவர்களிடமிருந்து தப்பிச் செல்கிறார்கள்.
ரயில் பயணம் தொடருகிறது. என்ஜினுக்குத் தண்ணீர் நிரப்ப ஆளற்ற ஸ்டேஷனில் ரயில் நிற்கிறது. அப்போது டச்சு பத்திரிக்கையாளரான வான் லீடன் இளவரசனைக் கொல்ல முனைகிறார். அதை அறிந்த ஸ்காட் அவரைக் கைது செய்து அடைக்கிறான். காவலாளியைக் கொலை செய்துவிட்டு வான்லீடன் இளவரசனைச் சுட்டுக்கொல்ல முயலுகிறான். இதைத் தடுக்க முயலும் ஸ்காட் அவனுடன் சண்டையிடுகிறார். அதில் வான்லீடன் தப்பிவிடுகிறான்.
இளவரசனைக் காப்பாற்றும் சாகசத்தின் நடுவே ஸ்காட்டும் வியாட் என்ற இளம்பெண்ணும் நெருக்கமாகிறார்கள்.
ஓரிடத்தில் ஆற்றுப்பாலம் ஒன்றில் ரயில் செல்ல முடியாதபடி குண்டுவைத்து உடைத்திருக்கிறார்கள். அந்த இடத்தை எப்படிக் கடப்பது என்று ஸ்காட் திட்டமிடுகிறான்.

அதிலிருந்து மீண்டு வரும் போது கிளர்ச்சியாளர்கள் ரயிலைக் குதிரையில் துரத்துகிறார்கள், ஆனால் ரயில் இரண்டு மைல் நீளமுள்ள மலைப்பாங்கான சுரங்கப்பாதையில் நுழைந்துவிடுகிறது. இப்படித் துரத்தலும் தப்பித்தலுமாக ரயில் பயணம் நீளுகிறது.
ஆபத்தான ஒரு ரயில் பயணத்தின் ஊடே சந்திக்கும் சவால்களையும் சாகசங்களையும் சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் படம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புத் தீவிரமாக வெளிப்படுகிறது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்திருந்த எண்ணத்தை அப்படியே படம் பிரதிபலிக்கிறது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் இளவரசன் கிஷன் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வது இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது போலக் கைக்குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் லேடி விண்ட்ஹாமின் அக்கறையும் நேர்த்தியாக வெளிப்படுகிறது
இந்தியாவைக் காக்க தங்களால் மட்டுமே முடியும் என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் எண்ணத்தை உலகமறியச் செய்வதற்காகவே இது போன்ற படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். பிரதான காட்சிகள் தெற்கு ஸ்பெயினில் கிரனாடா மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளன. அல்மேரியா-லினாரெஸ் ரயில் பாதையிலுள்ள அஞ்சுரோன் பாலத்தில் தான் ரயில் பாலம் வெடித்துள்ள காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

பரபரப்பாகத் துவங்கும் படத்தின் முதல் பத்து நிமிடங்களில் உரையாடல் எதுவுமில்லை, தாக்குதல் காட்சிகளும் மக்கள் தப்பிப் போவதும் வியத்தகு முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் படங்களுக்கு அன்று இந்தியாவில் பெரிய சந்தையிருந்தது. அது போலவே அமெரிக்காவிலும். இந்தச் சந்தைக்காகவே உருவாக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆகவே தான் படத்தில் ஒரு அமெரிக்க இளம்பெண் முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்.
இந்தர் சென் ஜோஹர் குப்தாவாக நடித்திருக்கிறார், பாஃப்டா விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே. நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் பீட்டர் ஓ’டூலுடன் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் மறக்கமுடியாதது. அதுவும் ரயில் என்ஜினுக்குள் இளவரசனுடன் பேசும் காட்சி சிறப்பானது

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்த போது திப்புசுல்தானின் பிள்ளைகளை வெள்ளையர்கள் பிணையாக வைத்துக் கொண்ட நிகழ்வு நினைவில் வந்து போனது. அந்தக் காட்சியை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அது தான் உண்மையான வரலாறு. இப்படத்தில் காட்டப்படும் பிரிட்டிஷ் சாகசம் வெறும் கற்பனை.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
