காலத்தின் நிழல்.
மகிழ் ஆதன் நான்கு வயதிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறான். இப்போது அவனது வயது 9. அவனது முதற்தொகுப்பு நான் தான் உலகத்தை வரைந்தேன். அந்தத் தொகுப்பில் வியப்பூட்டும் கவிதைகள் நிறைய உள்ளன. பாடப்புத்தகங்களே உலகம் என்றிருக்கும் சிறார்களுக்கு நடுவே இந்த உலகையும் அதன் திகைப்பூட்டும் நிகழ்வுகளையும் மகிழ்ஆதன் எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறான்.

இப்போது அவனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் என்ற இந்தக் கவிதை நூலை எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். வெ.சந்திரமோகன் வரைந்துள்ள அழகான ஒவியங்கள். சுந்தர் சருக்கையின் சிறந்த அறிமுகத்துடன் வெளியாகியுள்ளது.

காலம் என்றால் என்ன என்ற விடைகாண முடியாத கேள்வியை மகிழ் ஆதன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே தொகுப்பின் மையம்.
காலத்தைப் புரிந்து கொண்டும் புரியாமலும் அதனுள் பயணிக்கிறான். காலம் அவனுக்கு ஒரு கருத்துருவாக்கமில்லை. அது ஒரு மாயப்பொருள். அவன் காலத்தை பற்றிச் சிந்திப்பதில்லை. மாறாக காலத்துடன் முடிவில்லாத விளையாட்டினை நிகழ்த்துகிறான். அதுவே இத் தொகுப்பின் சிறப்பு.
காலம் நமக்குப் புற உலகின் செயல்கள் வழியாக ஒருவிதமாகவும் உடல் வழியாக இன்னொரு விதமாகவும் நினைவின் வழி வேறு விதமாகவும், சமயம், அறிவியல், தத்துவம், வரலாறு வழியே மற்றோர் விதமாகவும், இயற்கையின் வழியே புதிராகவும் அறிமுகமாகிறது. தேவையான தருணங்களில் இதில் தேவையானதை தேர்வு செய்து நாம் காலத்தைப் புரிந்து கொள்கிறோம். செயல்படுகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு காலம் குறித்து விரிவான ஆய்வினை கவிஞர் ஆனந்த், தேவதச்சன் மற்றும் நண்பர்கள் இணைந்து மேற்கொண்டார்கள். அது முடிவில்லாத தேடல். தனது கவிதைகளின் வழியே இதற்கான விடைகளை, புரிதல்களை அவர்கள் கண்டறிந்தார்கள். வெளிப்படுத்தினார்கள். இன்றும் அவர்கள் கவிதைகளில் காலம் வெளி பற்றிய அசலான பார்வைகள் புரிதல்கள் இருப்பதை காணமுடியும்.
மகிழ்ஆதன் உண்மையில் காலத்துடன் விளையாடுகிறான். தண்ணீருடன் விளையாடுவது போல. நீர்குமிழிகளை பறக்கவிடுவதைப் போல. காலம் அவனை அச்சப்படுத்தவில்லை. புதிர்பாதை போல உணரப்படவில்லை. காலம் அவனுக்கு எடையற்ற விநோத பொருளாக இருக்கிறது.
காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது
என்றொரு மகிழ் ஆதனின் கவிதையிருக்கிறது. எளிய கவிதை ஆனால் காலத்தின் சரியான அடையாளமாகப் பூவை முன்வைக்கிறது. மலர்தல் தானே காலத்தின் நிரந்தர செயல்பாடு. ஜப்பானிய கவிதைகளில் மலர்கள் இடம்பெறுவது இதன் காரணமாகவே.
காலத்திற்கு நிழல் இருப்பதாக மகிழ் ஆதன் சொல்கிறான். காலத்தை நிறுத்திக்காட்டுகிறான். காலத்திடம் உரையாடுகிறான். தானே காலத்தை முழுங்கி காலமாய் மாறுகிறான். அறிவின் வழியே நாம் பகுத்தும் தொகுத்தும் வைத்திருந்த காலம் பற்றிய புரிதல்களை அவன் கண்டுகொள்வதில்லை.
கலைடாஸ்கோப்பினுள் இருக்கும் உடைந்த வண்ணச்சில்லுகளை மாற்றி மாற்றிப் புதிய தோற்றங்களை உருவாக்கிக் கொள்வது போலவே காலத்தை கையாளுகிறான்.
காலம் எனக்கு வானத்தில்
வீடு கட்டியது
நான் காலத்தைப் பார்த்து வரைந்து
காற்றில் மாட்டினேன்
என்ற கவிதையின் ஒரு வரியில் அவன் சிறுவனாகவும் மறுவரியில் கவிஞனாகவும் உருமாறுகிறான்.
காலம் ஒரு கற்பனை என்றொரு வரி மகிழ் ஆதனிடம் வெளிப்படுகிறது.
பலாச்சுளையின் இனிப்பு என்னை நேற்றைக்குக் கொண்டு போனது என்ற அவனது கவிதை வரியில் நினைவில் ஒளிரும் காலம் வெளிப்படுகிறது.
அவன் சொல்லும் நேற்றும் நாம் சொல்லும் நேற்றும் ஒன்று தானா என யோசித்துக் கொண்டிருந்தேன்.
காலம் நீரனின்
சிரிப்புப் பை
••
நான் கட்டிய
போர்வை வீடு
அந்த வீட்டுக்குள்
நீர் தூங்கிக் கொண்டிருக்கிறது
••
காலம்
நிழலின் குளிர்ந்த பூ
••
காலம்
என் கனவில் வந்த பொம்மை
••
காலத்தின் ஒளி
நிலாவைத் தூங்க வைக்கும்.
••
இப்படி காலம் குறித்து அவன் தீட்டிய சித்திரங்கள் அபூர்வமானவை.
மகிழ் ஆதன் காலத்தை நமது தினசரி நிகழ்வுகளிலிருந்து துண்டிக்கிறான். மனிதர்களின் செயல்பாடுகளின் மீது அவனுக்கு விருப்பமில்லை. இயற்கையின் இயக்கமாக காலத்தைக் காணுகிறான். மரம், செடி, மலர் தண்ணீர், ஆகாசம், நட்சத்திரம், ஒளி, சூரியன், நிலவு இவை தான் அவனது உலகம்
ஏன் அவனது உலகில் பள்ளிக்கூடமில்லை. மணிச்சப்தமில்லை. கடிகாரம் ஒலிக்கவில்லை. பசியை காலமாக அறியவில்லை. அலுவலகமோ, பேருந்துகளோ வரவில்லை. பண்டிகை, பிறந்தநாள் வரவில்லை. இவை எல்லாம் உருவாக்கபட்ட காலங்கள். அவன் அந்த காலத்தை ஏற்கவில்லை. அவனுக்குள் ஒரு கவிஞன் தீவிரமாகச் செயல்படுகிறான் என்பதன் அடையாளமாகவே இந்த தேர்வைக் காணுகிறேன்.
மகிழ் ஆதன் வயதில் ஒரு சிறுவன் அல்லது சிறுமி சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறுகிறான். கொண்டாடப்படுகிறான். அதை உலகம் இயல்பாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஒன்பது வயதுச் சிறுவன் கவிதை எழுதும் போது சந்தேகத்துடன் கேள்விகள் எழுப்புகிறது. அறிவுரைகள் சொல்கிறது. அது பொதுப்புத்தியின் விளைவு
மகிழ் ஆதன் கவிதைகள் எழுதுவதால் மகிழ்ச்சியடைகிறான். அது அவனது கவிதைகளில் முழுமையாக வெளிப்படுகிறது.
காலத்தைப் பெருஞ்சுமையாக மாற்றிச் சுமக்கும் நமக்கு இந்த விளையாட்டினைக் காண ஏக்கமாகவே இருக்கிறது.
அது தான் மகிழ்ஆதனின் கவிதைகளின் வெற்றி
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

