மார்க்வெஸின் கடைசி நாட்கள்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்குப் பிறகு அவரது கடைசி நாட்களைப் பற்றியும், குடும்பத்தினர் அதை எதிர்கொண்டவிதம் பற்றியும் நினைவு கூர்ந்து அவரது மகன் ரோட்ரிகோ கார்சியா A FAREWELL TO GABO AND MERCEDES என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
ரோட்ரிகோ கார்சியா ஹாலிவுட்டில் திரைப்பட இயக்குநராக உள்ளார் இந்நூல் மார்க்வெஸ் மற்றும் அவரது மனைவியின் மறைவைப் பற்றிய மகனின் துயர நினைவுகளைப் பேசுகிறது

முதுமையில் மார்க்வெஸ் மெல்லத் தனது நினைவாற்றலை இழந்து வந்தார். திடீரென ஒரு நாள் இது தனது வீடில்லை. தனது வீட்டிற்குப் போக வேண்டும் என்று உரத்துச் சப்தமிட்டார். எதற்காக அழுகிறோம் என்று காரணம் தெரியாமலே அழத்துவங்கினார். இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்கள்.
அங்கும் அவருக்கு முழுமையாக நினைவாற்றல் திரும்பவில்லை. அவரது சொந்த மகன்களை யார் என அடையாளம் தெரியவில்லை. எங்கேயிருக்கிறோம் என்ற நினைவும் இல்லை.
மகாந்தோ என்ற புனைவுலகையும் அதன் விசித்திர மனிதர்களையும் உருவாக்கிய அந்த மாபெரும் கலைஞனுக்குத் தனது சொந்த வாழ்க்கை நினைவிலிருந்து அழிந்து போய்விட்டது.
மருத்துவமனையில் அவருக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நினைவுகளை யாரால் மீட்டுத் தர இயலும்.
நீண்டகால பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்குப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தச் செய்தி குடும்பத்தை மிகுந்த துயரமடையச் செய்தது. மார்க்வெஸின் மனைவி மெர்சிடஸ் புற்றுநோய் பாதித்துச் சிகிச்சை பெற்று நலமடைந்தவர் என்பதால் அவர் தன் கணவரைக் கவனமாக, அக்கறையோடு பார்த்துக் கொண்டார்.
மார்க்வெஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேள்விப்பட்டு டிவி பத்திரிக்கைகள் என ஊடகங்கள் மருத்துவமனை வளாகத்தில் நிரம்பின. அவர்களைக் கையாளுவது குடும்பத்தினருக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. மார்க்வெஸின் கடைசி நாட்களில் அவருடன் துணையிருப்பதாக அமெரிக்காவிலிருந்து மகன் மெக்சிகோ திரும்பியிருக்கிறார். இரண்டு பிள்ளைகளும் மாறி மாறி தந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்க்வெஸின் வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக, ஒரு கிளியை வளர்த்து வந்தார்கள். அந்தக் கிளி கதவு மூடப்படும் போது அல்லது போன் அடிக்கும் போதும் விசில் போலச் சப்தம் எழுப்பும். பெரும்பான்மை நேரங்களில் கிளி அமைதியாகவே இருக்கும். யாரும் அதன் மீது கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் அந்தக் கிளி இறந்த போது வீட்டில் அனைவரும் தாளமுடியாத துயரம் கொண்டார்கள். அந்தக் கிளியின் இருப்பைப் போலவே மார்க்வெஸின் கடைசி நாட்களும் அமைந்திருந்தன என்கிறார் ரோட்ரிகோ
மார்க்வெஸின் மரணத்தையொட்டி நடந்த நிகழ்வுகள். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் ஊடகங்கள் எதிர்கொண்ட விதம் எனத் துல்லியமான ஒரு ஆவணப்படம் போல ரோட்ரிகோ நடந்தவற்றைப் பதிவுசெய்திருக்கிறார்.
மார்க்வெஸ் கடைசியாகப் படுத்திருந்த மருத்துவமனை படுக்கையை வாங்குவதற்குப் போட்டி நடந்திருக்கிறது. அந்தப் படுக்கையைக் குடும்பத்தினரே விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்
மார்க்வெஸின் சாம்பலை அவருக்குப் பிடித்தமான மஞ்சள் பட்டுத்துணியில் சுற்றியே கொண்டு வந்தார்கள். மெக்சிகோவின் ஜனாதிபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பெருந்திரளான மக்கள் கூட்டம் வீட்டுவாசலில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். . உலகெங்கும் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள். தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
மார்க்வெஸின் மரணத்தின் பின்பு அவரது குடும்பத்தில் ஏற்பட்ட வெறுமை. அம்மா தன்னுடன் வசிப்பதற்காக அமெரிக்கா வந்த நிகழ்வு. பெருந்தொற்று கால நெருக்கடிகள். இதனிடையில் ஆகஸ்ட் 2020ல் மெர்சிடஸ் இறந்து போன துயரம் எனத் தாயுடன் தனது நெருக்கமான அனுபவத்தை உணர்ச்சிப்பூர்வமாக ரோட்ரிகோ எழுதியிருக்கிறார்.

தந்தையின் அஸ்தியை விமானத்தில் கொண்டு செல்லும் போது அருகில் ஒரு பெண் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலைப் படித்துக் கொண்டு வந்ததை ரோட்ரிகோ குறிப்பிடுகிறார். விசித்திரமான காட்சியது.
எழுத்தாளனின் அஸ்தியும் அவன் எழுதிய நாவலும் சந்தித்துக் கொள்ளும் அந்தத் தருணம் மனதை என்னவோ செய்கிறது. உண்மையில் அதை எப்படிப் புரிந்து கொள்வது.
படைப்பாளியின் காலம் தான் முடிந்து போகிறது. அவனது படைப்புகள் காலமற்ற வெளியில் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொண்டு யாரோ ஒரு வாசகனின் நெருக்கத்திற்கு உரியதாக என்றுமிருக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
