தேவிபாரதிக்கு தன்னறம் விருது

“வன்முறை என்பது எனது வாழ்வின் ஒரு பகுதியாக என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது. நானும் எனது குடும்பமும் பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நான் எனது படைப்பில் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால், இந்த வாழ்வின் மீது படர்ந்திருக்கும் வன்முறையைப் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியாது. எனது வேலை என்பது இந்த வன்முறையைப் புரிந்துகொள்வது, வன்முறையைப் பரிசீலிப்பது. இதிலிருந்து விடுபட இயலுமா என்ற முனைப்புக்கொள்வது. இவைதான் எனது படைப்புகளிலும் வெளிப்படுகின்றன.

இந்த வாழ்வை மேலும் மேலும் தீவிரமாகவும், மேலும் மேலும் நுட்பமாகவும் அணுகுவது, மேலும் மேலும் உண்மையாக்குவது என்பதுதான் எனது படைப்புப்பார்வை. அதற்கான படைப்பு மொழியை நான் புதிதாகத் தேட வேண்டியதிருந்தது. அந்தத் தேடல்தான் எனது மொழியை வடிவமைக்கிறது. புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்ள முயலும்போது ஒரு பதற்றம் உருவாகிறது. அந்தப் பதற்றமும் குழப்பமும் எனது கதைகளில் இடம்பெறும்போது எனது மொழியும் அவற்றுக்கானதாக இருக்கிறது.”

எழுத்தாளர் தேவிபாரதி தன்னுடைய படைப்பின் பாதைகள் குறித்துச் சொல்கிற மேற்கண்ட வார்த்தைகளை இக்கணம் மனதில் நிரப்பிக்கொள்கிறோம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், செயற்களம் என தேவிபாரதி அவர்களின் இயங்குத்தளம் பன்மையுற்று விரிந்துநிற்கிறது. ஆங்கிலம், மலையாளம், இந்தி உட்பட இன்னும் சில இந்திய மொழிகளில் இவருடைய ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அவருடைய படைப்புகளின் தனித்தன்மை தமிழின் சிறந்த புனைவுப் படைப்பாளுமை வரிசையில் ஒருவராக அவரை நிலைநிறுத்துகிறது.

அறத்தின் மீதான மானுடச்சார்பு பற்றிய கண்ணோட்டத்தைக் கவனப்படுத்துவதே இவருடைய பெரும்பான்மையான படைப்புகளின் அடிப்படை சாராம்சமாக உள்ளது. தர்க்கத்தின் பலபக்க கோணங்களைத் தனது படைப்புகளின் வழியாக அப்பட்டமாகக் காட்டும் இவருடைய எழுத்துக்கள் ஓர் அதிர்ச்சிக்குப் பிறகே அதன் ஆழத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது. நல்லது –கெட்டது என்ற இருமைகளுக்கு நடுவில் ஓர் மானுடமனம் அடைகிற பதற்றமும் பற்றுதலும் ஓர் இணைகோடாக இவரது படைப்புகளில் துலக்கமடைகிறது. ஒரு கருத்தை வகுத்துக்கொள்வது, அதனை தத்துவமாக நிறுவிக்கொள்வது உள்ளிட்ட திடப்பாடுகளுக்கு முந்தைய பாமரத்தனத்தை, அதன் துடிதுடிக்கும் யதார்த்த உண்மையோடு கதையாக்குவதில் இவருடைய படைப்புத்திறம் அடைகிற கூர்மை நிகரற்ற ஒன்று.

இவருடைய ‘பிறகொரு இரவு’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையில் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் குறிப்பிடும், “இலக்கியத்தில் வேறு என்ன செய்ய முடியும், பாழாய்ப் போகிற மனித வாழ்க்கையை விசாரிக்காமல்?” என்ற வார்த்தைகள்… தேவிபாரதி அவர்களின் படைப்புலகை அடையும் ஒவ்வொரு மனதுக்குமான ஏற்புச்சொல். சமூகத்தின் கடைநிலை மனிதர்களின் வாழ்வுக்களத்தை புனைவின் வழித்தடத்தில் படைப்பாக்கும் இவருடைய மொழிநடை ஒவ்வொரு படைப்பிலும் நுண்மைகொள்கிறது.

அறம், கருணை, தனிமை, பதற்றம், சீற்றம், வஞ்சினம், வேட்கை, பின்வாங்கல், மன்னிப்பு, தோல்வி, அவமானம், அரவணைப்பு என இருளுக்கும் ஒளிக்கும் இடையே நிழல் போல இவர் படைப்புகள் அனைத்தையும் தனக்குள்கொண்டு உயர்ந்தும் தாழ்ந்தும் அலைவுறுகிறது. புறத்தில் நிலவும் உண்மைக்கும், அகத்தில் உலவும் உளவியலுக்கும் இடைப்பட்டு நிகழ்வதாகத் தோன்றினாலும், இவருடைய புனைவுகள் நம்முடைய விமர்சன எல்லைகளைக் கடப்பவையாகவே தன்னைக் கட்டமைத்துக்கொள்கின்றன. அவ்வகையில் தர்க்கம், குறியீடுகள், படிமங்கள், கட்டுடைப்புகள் என நாம் அர்த்தங்களை இப்படைப்புகளிலிருந்து விரித்துக்கொள்ள முடியும்.

ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும் சமூகச்செயல்பாடு. இலக்கியம் ஒருவரைப் பண்படுத்தும் என்றுதான் நினைக்கிறேன். அதன் எல்லாக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளவும், சில தருணங்களில் வெறுக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொடுப்பவை இலக்கியம்தான்” என்னும் தேவிபாரதியின் வார்த்தைகள் அவர் படைப்புநோக்கத்தை நமக்குத் தெளிவாக்குகின்றன.

குக்கூவுக்கும் தேவிபாரதிக்கும் இடையேயான உறவென்பது இருபதுவருட காலத்திற்கு முன்பிருந்தே துவங்கி இன்றளவும் நீடிப்பது. வெறும் எழுத்தாளராக மட்டும் தேவிபாரதியை நாம் மதிப்பிட்டுச் சுருக்க முடியாது. கூத்துக்கலைகளுக்காக இவர் நிறுவிய ‘பாதம்’ அமைப்பு இந்திய அளவிலான மிக முதன்மையான முன்னெடுப்பு. காலச்சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் முன்பாக நிகழ்த்தப்பட்ட அந்த முயற்சி மிகவும் அசாத்தியமான ஒன்று. எவ்வித நிறுவனப்பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க எளிய மக்களின் கூட்டுப்பங்களிப்பால் அவ்வமைப்பு தன்னை வேர்நிறுத்திக்கொண்டது அக்காலத்தில். 1980களில் அவர் கலைசார்ந்த இயக்கங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி முன்பாதைகளை வகுத்திருக்கிறார். அசோகமித்திரன், பிரபஞ்சன் போன்ற முன்னோடி எழுத்தாளுமைகள் அதில் பங்கேற்றுள்ளனர்.

நாங்களறிந்தவரை கூத்துக்கலைஞர் திருமலைராஜன், உடுக்கைப்பாடல்கள் கலைஞர் மாணிக்கம் போன்ற எண்ணற்றப் பெருங்கலைஞர்களை முதன்முதலில் ஆவணப்படுத்தி வெளிக்கொணர்ந்தது தேவிபாரதி அவர்கள்தான். 1994ம் ஆண்டிலேயே இவர் ‘இளம் நாடக ஆசிரியருக்கான’ மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றவர். இதுமட்டுமின்றி மாற்றுத்திரை, இலக்கியக் கலந்துரையாடல்கள் என இவருடைய பங்களிப்பு என்பது தொடர்நீட்சியுடைய ஒன்று. காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக ஆறுவருட காலங்கள் தேவிபாரதி பணியாற்றியிருக்கிறார். தஸ்தாயேவ்ஸ்கியை தன்னுடைய இலக்கிய ஆதர்சங்களில் ஒருவராக நினைத்துப்போற்றும் தேவிபாரதிக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களும் படைப்புரீதியான அகத்தூண்டலை உருவாக்கியிருக்கிறார்.

தமிழ்ச்சூழலின் அறிவியக்கப்பரவலுக்குத் தங்கள் படைப்புகளால் துணைநின்ற படைப்பாளிகளுக்கு சமகால வாசகமனம் ஆற்றுகிற நன்றி என்றே விருதுகளையும் கெளரவிப்புகளையும் நாங்கள்  கருதுகிறோம். விருதுபெறும் படைப்பாளியைப் பற்றிய முழுச்சித்திரத்தை அளிக்காவிடினும்கூட, அவரையும், அவர் படைப்பையும் இன்னுமாழ்ந்து அணுகுவதற்குரிய ஒரு எளியவாசல் இதன்வழி வெளிச்சப்படும். இலக்கியம் என்பது இவ்வாழ்வின் மீது நம்பிக்கைகொள்வதற்கான ஒரு மொழிவெளி என்பதை நாம் மீளமீள நமக்கே சுயஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

‘தன்னறம் நூல்வெளி’  ஒரு பதிப்பகமாகத் தமிழின் படைப்புச்சூழலுக்குள் அறிமுகமாகி, மூன்று ஆண்டுகளை நிறைவுகொள்ளும் இவ்வேளையில், எங்களை நோக்கிவருகிற சமகால இளையமனங்களுக்கு, நாம் தவறவிட்டுவிடக்கூடாத படைப்பாளிகளை அறியப்படுத்தும் சிறுமுயற்சியாகவே ‘தன்னறம் இலக்கிய விருது’ என்கிற முன்னெடுப்பை கடந்த ஆண்டு  துவக்கினோம். இதன்படி, இலக்கியச்சூழலில் தொடர்ச்சியாகத் தனது பங்களிப்பைச் செலுத்தி இம்மொழியின் கருத்துச்செழுமைக்குத் துணைநிற்கும் படைப்பாளியைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இவ்விருது  வருடந்தோறும் அளிக்கப்படுகிறது. தங்கள் படைப்புமொழியால் நம் காலத்தை கருத்தியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் செழுமையாக்கித் தந்த படைப்பாளிகளின் ஓயாத அகவிழைவை தலைவணங்கித் தரப்படுகிறது தன்னறம் இலக்கிய விருது.

தன்னறம் இலக்கிய விருது முன்னெடுப்பின் 2021ம் ஆண்டிற்கான விருதினை எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்குவதில் நிறைகூர்ந்த மகிழ்வுகொள்கிறோம். கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை உலராத உயிரீரத்தோடு பதிவுசெய்துவரும் படைப்புத்தொடர்ச்சிக்காக இவ்விருதை நாங்கள் அவருக்கு பணிந்து அளிக்கிறோம். தேவிபாரதியின் படைப்புகளைத் தாங்கிய ஒரு புத்தகமும், அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படமும் விருதளிப்பு நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. விருதுத்தொகையாக ஒரு லட்ச ரூபாயைத் திட்டமிட்டிருக்கிறோம். மூத்த எழுத்தாளர்களின் உடனிருப்பில், வருகிற ஜனவரி மாத முதல்வாரத்தில் இதற்கான விருதளிப்பு நிகழ்வு சென்னையில் நிகழவுள்ளது.

நொய்யல் ஆற்றின் நீர்ப்பெருக்கு போல, எளிய மனிதர்களின் வாழ்வுக்கதையை இரத்தமும் சதையுமாகத் தன்னுடைய படைப்பின்வழியாக பாவனையின்றி வெளிப்படுத்தும் தேவிபாரதி அவர்களின் அகம் கொண்டிருக்கும் தாகம் எக்காலத்தும் வற்றாதது. காலங்கள் கடந்தும் இவருடைய படைப்புகள் நிச்சயம் அதிர்வுகளை உருவாக்கும். தனக்கேயுரிய யதார்த்தவெளியால் தனிநிகர் படைப்பாளுமையாக தகுதியுற்று நிற்கும் எழுத்தாளுமை தேவிபாரதி அவர்களுக்கு தன்னறம் இலக்கிய விருதைப் பணிந்தளித்து வணங்குகிறோம்.

நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

www.thannaram.in, 9843870059

தேவிபாரதி தொடர்புக்கு – devibharathi.n@gmail.com . 9677538861

 

சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன் தேவிபாரதி கடிதம் விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி நீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம் மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி நீர்வழிப்படுவன நிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2021 07:12
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.