வெளியில் ஒருவன்
எனது முதற்புத்தகம் வெளியில் ஒருவன்.

சென்னை புக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டுவர ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் தமிழ்செல்வன். அவரே கதைகளைத் தேர்வு செய்து தொகுப்பை உருவாக்கிவிட்டார். நான் பதிப்பாளரைச் சந்திக்கவேயில்லை. இப்படி ஒரு அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அந்த வகையில் அண்ணன் தமிழ்செல்வனை என்றும் நன்றியோடு நினைவு கொள்வேன்.
திருநெல்வேலியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டு அரங்கில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதற்காக என்னை அழைத்தபோது தான் புத்தகம் வெளிவரப்போகும் தகவலே எனக்குத் தெரியும்.
வெளியிட்டு விழா முடிந்து எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள். அதைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இது தான் இலக்கிய உலகிற்கான எனது பாஸ்போர்ட். கையடக்கமான கிரௌன் சைஸ். கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட அட்டை என்று தமிழ்செல்வன் சொன்னார். அப்போது அது புதுமையானது. சிறுகதைகளை அச்சில் கண்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடவும் புத்தகமாகக் கையில் கிடைக்கும் போது ஏற்படும் சந்தோஷம் தான் பெரியது.
வெளியிட்டு விழா அன்று புத்தகம் பற்றி ஒருவரும் அறிமுகவுரை ஆற்றவில்லை. இந்தப் புத்தகம் எங்கே விற்பனைக்குக் கிடைக்கும் என்று கூடத் தெரியாது. ஆனால் ஓராண்டிற்குள் புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்ததோடு பத்துக்கும் மேற்பட்ட விமர்சனக்கூட்டங்கள் நடந்தன. எழுத்தாளர் சுந்தர ராமசாமி துவங்கி அசோகமித்திரன் வரை பலரும் பாராட்டினார்கள். இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும் போது பலரும் இந்தத் தொகுப்பு பற்றிப் பாராட்டுவது மகிழ்ச்சி அளித்தது.
அந்த நாட்களில் இத்தனை விருதுகள் கிடையாது. ஒரு புத்தகம் கொண்டுவர இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். தேடிச்சென்று எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடிய காலமது. சிறுபத்திரிக்கைகளுக்குக் கதை அனுப்பினால் எப்போது வெளியாகும் என்று தெரியாது. பத்திரிக்கைகளில் எழுத்தாளரின் பேட்டி வருவது அபூர்வம்.
கதைகளை வாசித்துக் கடுமையாக விமர்சனம் செய்யும் இலக்கிய விமர்சகர்கள் இருந்தார்கள். அவர்கள் கடிதம் மூலம் மட்டுமின்றி நேரடியாக வரவழைத்தும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைப்பார்கள். அந்த நாட்களில் கோவில்பட்டி இலக்கிய சபையில் ஒரு புத்தகம் நன்மதிப்பைப் பெறுவது எளிதானதில்லை.
இந்தத் தொகுப்பைச் சந்திக்கும் போதெல்லாம் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தியவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. என் அண்ணன் மருத்துவர் வெங்கடாசலம் அவரது மாணவர். சாத்தூரிலிருந்த தனுஷ்கோடி ராமசாமி. வீடு தேடி சென்று நானும் கோணங்கியும் அடிக்கடி உரையாடுவோம். அவரைப் போல உபசரிப்பு செய்கிறவர் எவருமில்லை. மிகப் பெரிய மனதும் அன்பும் கொண்டவர்.
பேராசிரியர் மாடசாமி இந்தத் தொகுப்பினை வெகுவாகப் பாராட்டியதோடு அவரது முனைவர் பட்ட ஆய்வில் இதனைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். பரிவானது வீடு என்ற கதை அவருக்கு மிகவும் பிடித்தமானது.
திகசி, வல்லிக்கண்ணன், வண்ணதாசன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், தா.மணி எனப் பலரும் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்கள். வாரம் இரண்டு மூன்று கடிதங்கள் என வருஷம் முழுவதும் இதற்கான விமர்சனக் கடிதங்கள் வந்தபடியே இருந்தன.
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள போதும் முதற்புத்தகம் தந்த சந்தோஷத்தை வேறு எதுவும் தரவில்லை.
இந்தச் சிறுகதைத் தொகுப்பினை வாசித்த கவிஞர் மீரா எனது அடுத்த சிறுகதைத் தொகுப்பினை தானே அன்னம் சார்பில் கொண்டுவருவதாகச் சொன்னார். காட்டின் உருவம் அப்படித்தான் வெளியானது.

நீண்ட காலமாக வெளியில் ஒருவன் அச்சில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணை பதிப்பகம் சார்பில் நண்பர் யுகன் அதை மறுபதிப்புச் செய்ய விரும்பினார். அனுமதி அளித்தேன். புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதுவும் நன்றாக விற்பனையானது.
ஆண்டு தோறும் புதிய நூல்கள் வெளியாகும் போதெல்லாம் எனது முதற்தொகுப்பை கையில் எடுத்துப் பார்த்துக் கொள்வேன். சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் எனது முதற்தொகுப்பிற்கு ஒரு விமர்சனம் வெளியாகியிருந்தது. முப்பது ஆண்டுகளைக் கடந்தும் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறியிருக்கின்றன எனது இன்றைய கதைகள். பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல இந்தத் தொகுப்பு எனது கனவின் அடையாளமாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெளியில் ஒருவன் புதிய பதிப்பு வெளியாகிறது. இதனைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் அண்ணன் தமிழ்செல்வனை, சென்னைபுக்ஸ் பாலாஜியை, கோணங்கியை, முதற்கதையைக் கணையாழியில் வெளியிடத் தேர்வு செய்த எழுத்தாளர் அசோகமித்திரனை, தனுஷ்கோடி ராமசாமியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். என் இலக்கியப் பிரவேசம் அவர்களின் வழியாகவே நடந்தது.
கணையாழியில் வெளியான ஒரு விமர்சனம்

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
