மணமகளின் காதல்
Brides என்ற கிரேக்கத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகாலக் கிரேக்க திரைப்படங்கள் ஒளிப்பதிவிலும் இசையிலும் புதிய கதை சொல்லும் முறையிலும் உச்சத்தை அடைந்திருக்கின்றன. பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கிய ஐந்து படங்களை முன்னதாகப் பார்த்திருக்கிறேன்.

இதில் 2013ல் வெளியான Little England நிகரற்ற படம். கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் இதுவே. எண்பது வயதான வோல்காரிஸ் மிகச்சிறந்த படங்களை இயக்கியுள்ளார், சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கடலோடிகளின் வாழ்க்கையை மையமாக் கொண்டு கிரேக்கத்தில் நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்தகாலப் பெருமை ஒருபக்கம் நிகழ்காலக் கால நெருக்கடிகள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் ஊசலாடும் வாழ்க்கையைக் கிரேக்க சினிமா சித்தரிக்கிறது..
Brides 1922 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. Mail-order brides என்பது சர்வதேச திருமண நிறுவனம் ஒன்று தனது ஆட்களின் மூலம் திருமணமாகாத ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம்பெண்களை அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறது. இதன்படி மணமகனின் புகைப்படத்தை மட்டும் காட்டி அவனுக்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிடுகிறார்கள்.

வறுமையின் காரணமாகப் பெண்ணும் சம்மதிக்கிறாள். இந்தப் பெண்களை ஒரு கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு சென்று அங்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதில் நிறைய மோசடிகள் நடப்பதும் உண்டு. உண்மையில் இது வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் என்ற போர்வையில் விற்பனை செய்வதாகும்.
படத்தின் துவக்கத்தில் கிரேக்க மற்றும் ரஷ்ய இளம் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து மணமக்களாக ஒப்பந்தம் செய்கிறார்கள்.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட இளம் கிரேக்க மற்றும் ரஷ்யப் பெண்கள் ஒடேசா மற்றும் ஸ்மிர்னாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பற்பயணம் புறப்படுகிறார்கள்
எஸ்.எஸ். கிங் அலெக்சாண்டர் கப்பலில் 700 மணப்பெண்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களில் ஒருத்தியாக இருக்கிறாள் நிகி. அவள் ஒரு தையற்காரி. கிரேக்கத் தீவு சமோத்ரேஸினைச் சேர்ந்தவள் அவள் தனது குடும்பத்தின் வறுமை காரணமாக இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். அவளைச் சிகாகோவிலுள்ள ஒரு டெய்லருக்கு மணம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

எழுநூறு பெண்களில் ஒருத்தியாக அவளும் கப்பலேறுகிறாள். இந்தப் பெண்கள் கப்பலுக்காகக் காத்திருப்பதும். கப்பலில் அவர்களுக்குள் ஏற்படும் நட்பும், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கப்பலின் மூன்றாம் வகுப்பு பயணிகளாக இந்த மணப்பெண்கள் தங்குகிறார்கள். அங்கே போதுமான வசதிகள் இல்லை. அவர்கள் மணப்பெண்கள் போல நடத்தப்படுவதில்லை
படத்தின் எண்பது சதவீதம் கப்பலில் நடக்கிறது. இந்தக் கப்பலில் புகைப்படக்கலைஞரான நார்மனும் பயணம் செய்கிறான். யுத்தமுனையில் போட்டோகிராபராக பணியாற்றிய அவன் தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் மனச்சோர்வுடன் அமெரிக்கா திரும்புகிறான். அந்தக் கப்பலில் வரும் மணப்பெண்களைப் பற்றி அறிந்தவுடன் அவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த முயல்கிறான். இதற்கு நிகி உதவி செய்கிறாள்.

கப்பலில் ஒன்றுகூடும் பெண்கள் தையல்வேலை செய்கிறார்கள். சிலர் தங்கள் புதிய கணவர்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள், சிலர் தங்களுக்குப் பிடித்த உணவைச் சமைக்கத் தயாராகிறார்கள். பொன்னிற முடி கொண்ட ஒல்கா என்ற பதின்வயது பெண்ணைக் காதலிக்கிறான் நார்மனின் உதவியாளன். அவர்களின் காதல் குறைவான காட்சிகளின் மூலம் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையைத் தாங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.
நிகிக்கும் நார்மனுக்குமான காதல் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிகியின் தயக்கம். நார்மன் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசமாக்குவது. அவள் கப்பலிலும் தையல் தைப்பதிலே நேரத்தைக் கழிப்பதும். பிற பெண்களுக்கு அவள் செய்யும் உதவிகள், தான் விரும்பினாலும் குடும்பச் சூழல் தன் காதலை ஏற்காது என்ற புரிதல். நார்மனுக்கு தனது நினைவாகக் காதணியைக் கழட்டித் தரும் நேசம் என நிகி மறக்கமுடியாத கதாபாத்திரமாக மாறுகிறாள். மனவுறுதி மிக்கக் கிரேக்கப் பெண்ணின் அடையாளமாக இருக்கிறாள் நிகி
நார்மன் சிறந்த புகைப்படக்கலைஞராக இருந்த போதும் பத்திரிக்கைகள் அவனை அங்கீகரிக்க மறுக்கின்றன. அவன் விரக்தியோடு இந்தத் தொழிலை விட்டுவிட நினைத்தே பயணம் மேற்கொள்கிறான். ஆனால் கப்பலில் கண்ட மணப்பெண்களின் நிலை அவன் மனதை மாற்றுகிறது. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் எப்படிப் பட்டவர். எங்கே வாழப்போகிறோம் என எதுவும் தெரியாமல் இத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருப்பது அவனை வேதனைப்படுத்துகிறது. அவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறான்.
படத்தில் சாரோ என்ற இளம்பெண் தனது தந்தையின் கண்டிப்பினால் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்படுகிறாள். அவள் ஒரு ராணுவவீரனைக் காதலிக்கிறாள். அவனை மறந்து எப்படி யாரோ முகம் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்வது என்று வருத்தமடைகிறாள். கப்பல் தளத்தில் நின்றபடியே மணிக்கணக்காக அலைகளைப் பார்த்தபடியே இருக்கிறாள். இதன் முடிவு அதிர்ச்சி தரும் செயலாக மாறுகிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் மிகச்சிறப்பானது. ஓவியங்களின் நேர்த்தியைக் கொண்ட காட்சிகள். தனித்தன்மைமிக்க கதாபாத்திரங்கள்.மிகை நாடகமின்றி கொண்டுசெல்லப்படும் கதைப்போக்கு. அழகான முடிவு என சிறந்த அனுபவத்தை தருகிறது படம்.

ஒரு காட்சியில் புகைப்படம் எடுப்பதற்காகத் திருமண உடை அணிந்து அந்தப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து நிற்கிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. கவலை படிந்த முகம், அதில், சொல்ல முடியாத பயம் தான் வெளிப்படுகிறது. நிகி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவளை நார்மன் கட்டாயப்படுத்தவில்லை. பின்னொரு நாள் அவளாகவே புகைப்படம் எடுக்க வந்து நிற்கிறாள். அந்தக் காட்சியில் கேமிரா வழியாக அவளை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறான் நார்மன். நிகியின் புகைப்படம் கடைசியில் உலகின் சாட்சியமாக மாறி பத்திரிக்கை ஒன்றில் அட்டையில் இடம்பெறுகிறது.
எது இந்தப்படத்தை நமக்கு மிகவும் நெருக்கமாக்குகிறது. மணப்பெண்களுக்குள் நாமும் ஒருவர் போலக் கலந்துவிடுகிறோம். மிக நெருக்கமாக, உண்மையாக அவர்களின் தவிப்பை, ஏக்கத்தை. பயத்தை அறிந்து கொள்கிறோம். திருமண ஏற்பாட்டாளர்கள் இதைச் சிறந்த வணிகமாகச் செய்கிறார்கள் என்பதைக் காணும் போது நாம் எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழவே செய்கிறது
இந்தப்படம் டைட்டானிக்கை நினைவூட்டினாலும் அதை விட நேர்த்தியாக, பல்வேறு ஊடுஇழைகள் கொண்ட அழுத்தமான கதைசொல்லுதலை முன்னெடுக்கிறது. டைட்டானிக் போலப் பிரம்மாண்டத்தை மட்டும் முதன்மைப்படுத்தவில்லை. திருமணத்தின் பெயரால் பெண்கள் விற்பனை பொருளாகக் கொண்டு செல்லப்பட்ட உண்மை வரலாற்றை துல்லியமாகப் பதிவு செய்கிறது.
இந்தக் கப்பலில் பயணம் செய்யும் கராபுலட் ரஷ்ய மணப்பெண்களை மிரட்டி தனது படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார். இதற்குக் கேப்டனில் இருந்து கப்பல் அதிகாரிகள் பலரும் துணைசெய்கிறார்கள். அவரை நிகி எதிர்க்கும் போது நிர்வாகியான பெண் இது போல ஐந்தாறு பெண்களைப் பறிகொடுத்துத் தான் மற்ற பெண்களைப் பாதுகாக்க முடியும் என்கிறாள்.
இதை நிகியால் ஏற்க முடியவில்லை. அவளுக்காக உதவி செய்யப்போகும் நார்மனை அவர் ஏளனமாகப் பார்ப்பதுடன் உங்களால் என்னை எதுவும் செய்ய இயலாது என்று சவால்விடுகிறார். அவரிடம் நார்மன் தன் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி மிகச்சிறப்பானது.
கப்பல் நியூயார்க் வந்து சேர்ந்தவுடன் மணப்பெண்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட மணமகனைத் தேடுகிறார்கள். தடுப்பின் மறுபுறம் மண்மகன்கள் கையில் மலர்களுடன் நின்று தவிக்கிறார்கள். அந்தக்காட்சி அபாரமானது. அவர்களில் தனது மணமகனாக உள்ள டெய்லரை நிகி தேடுகிறாள். அவன் நிகி இப்படியிருப்பாள என எதிர்பார்க்கவில்லை. முடிவில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் நிகிக்கு ஒரே கனவு தான் இருக்கிறது. அது நிறையச் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். தங்கைகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே. இதற்காகத் தன் ஆசைகளைக் கைவிடும் நிகி கடைசியில் நார்மனின் கடிதத்தை வாசிக்கிறாள். அவளாலும் காதலின் பிரிவைத் தாங்க முடியவில்லை. இனி நிகி நினைவுகளில் வாழத்துவங்குவாள். அது மட்டும் தான் சாத்தியம்

“என் குடும்பம் ப்ரோட்ரோமோஸுக்கு வாக்குறுதியளித்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை எவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். , மேலும் எனது குடும்பத்தின் நற்பெயர் பாழாகிவிடும் என்று ஒரு காட்சியில் நிகி சொல்கிறாள். கிரேக்கக் குடும்பங்கள் நற்பெயரையும் கௌவரத்தையுமே முதன்மையாகக் கொண்டவை. அதன் குரலையே நிகி ஒலிக்கிறாள்
தீவிரமான உணர்ச்சிகள் மற்றும் சாகசத்தை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களையே பான்டெலிஸ் இயக்கிவருகிறார்.“ The love. The passion. The loneliness. The mourning. The untold truths revealed too late. The timeless topic of family relationships“. இதுவே தனது படங்களின் அடிப்படை விஷயங்கள் என்கிறார். அது உண்மை என்பதை Brides பார்க்கும் போது நாமும் உணருகிறோம்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
