நாகரீகத்தின் கதை
பிபிசி தயாரிப்பில் 1969ல் வெளியான கலைவரலாற்று தொடரான Civilisation 13 பகுதிகளைக் கொண்டது. இதற்கு இணையாக இன்று வரை ஒரு கலைவரலாற்றுத் தொடர் வெளியாகவில்லை. இந்தத் தொடர் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மிகச்சிறந்த ஒலி ஒளியில் காணக்கிடைக்கிறது.

கலைவிமர்சகர் கென்னத் கிளார்க் இத் தொடரைத் தயாரித்து வழங்கினார். அவர் ஒரு நிகரற்ற கலையாளுமை. ஓவியம், சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை குறித்த அவரது பார்வையும் ஆழ்ந்த அவதானிப்புகளும் பிரமிப்பூட்டக்கூடியவை. இந்தத் தொடருக்காகக் கென்னத் கிளார்க் எழுதிய உரை சிறு நூலாக வெளிவந்துள்ளது. தொடரின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அதைத்தேடிப் படித்திருக்கிறேன்.
கென்னத் கிளார்க் கவிதைகளின் ரசிகர். தொடர் முழுவதும் கவித்துவமான வர்ணனையை வெளிப்படுத்தியிருக்கிறார். உன்னதமான கலைப் படைப்புகளைக் காணும் போதெல்லாம் அவரது மனதிலிருந்து அதற்கு இணையான கவிதை வெளிப்படுகிறது. மேற்கத்திய கலையுலகின் தனித்துவங்களைச் சாதனைகளைச் சாமானிய மக்களும் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. இதற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக இது போன்று நிறையக் கலைவரலாற்றுத் தொடர்கள் வெளியாகின.

Nikolaus Pevsner, Ernst Gombrich, Kenneth Clark ஆகிய மூவரையும் பிரிட்டனின் நிகரற்ற கலைவிமர்சகர்களாகக் கருதுகிறார்கள். இதில் Ernst Gombrich எழுதிய The Story of Art மிக முக்கியமான கலைவரலாற்றுப் புத்தகம்.
கலைவிமர்சகர் பெர்னார்ட் பெரன்சனால் உருவாக்கப்பட்டவர் கென்னத் கிளார்க். அவர்கள் இருவரும் 1925ம் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது கிளார்க்கின் வயது 22.
அவர் டிரினிட்டி கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலை பயின்றிருந்தார். கோடை விடுமுறை ஒன்றில் அவர் நண்பர்களுடன் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டார். மேற்கத்திய கலைமரபை காணுவதே இந்தப் பயணத்தின் நோக்கம். அவர்கள் அருங்காட்சியகங்களில் சுற்றி அலைந்து சிறந்த கலைப்படைப்புகளைக் கண்டார்கள். அப்போது தான் பெரன்சனின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் கிளார்க்கின் கலையார்வத்தைப் புரிந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தியதுடன் அரிய ஓவியங்களை ஆராய்வதற்கும் உதவி செய்தார். இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
அந்த நாட்களில் பிரிட்டனில் கலைவரலாறு பாடமாக எந்தக் கல்லூரியிலும் கற்பிக்கப்படவில்லை. ஆகவே அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ தான் கலைவரலாறு படிக்க முடியும். அப்படிக் கல்வி பயிலும் படி கிளார்க்கை உத்வேகப்படுத்தினார் பெரன்சன். ஆனால் அதில் கிளார்க் ஆர்வம் காட்டவில்லை. அவர் நேரடியாகக் கலைப்பொருட்களைப் பார்வையிடவும் ஆராயவுமே அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பெரன்சனின் உதவியாளர் போல அவர் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனது அருங்காட்சியகத்தில் அவரைக் கூடவே வைத்துக் கொண்டார் பெரன்சன். அரிய ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை அறிமுகம் செய்து அதை ஆராய்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தந்தார்.

1929 ஆம் ஆண்டில், பெரன்சனுடனான இணைந்து பணியாற்றியதன் காரணமாக வின்ட்சர் கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்த லியோனார்டோ டாவின்சி ஓவியங்களின் விரிவான தொகுப்பைப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டினார் கிளார்க். இத்தோடு ராயல் அகாதமிக்காக ஓவியக்கண்காட்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்னோடியாக விளங்கினார். இங்கிலாந்து மன்னரின் சேமிப்பில் உள்ள கலைப்பொருட்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் தனி இயக்குநர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்தப் பதவி கிளார்க்கிற்கு அளிக்கப்பட்டது. பத்தாண்டுகள் அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். National Gallery இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பிபிசியின் இரண்டாவது தொலைக்காட்சி சேனலான பிபிசி 2 துவங்கப்பட்ட போது அதன் கட்டுப்பாட்டாளர் டேவிட் அட்டன்பரோ, வண்ண ஒளிபரப்பை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். வண்ண ஒளிபரப்பிற்கு ஏற்ற நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும் என்ற அவரது யோசனையின் விளைவே இந்த Civilisation தொடர். இன்றிருப்பது போல அசாத்தியமான தொழிற்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலே மிக நுணுக்கமாக, வித்தியாசமான காட்சிக்கோணங்களுடன். விவரணையுடன்,சரியான வரலாற்றுப்பார்வையுடன் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கென்னத் கிளார்க் கலைப்பொருட்களை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. அது உருவான காலகட்டம். அன்றிருந்த பண்பாட்டு நிகழ்வுகள். அரசியல் நெருக்கடிகள். கிறிஸ்துவச் சமயத்தின் தாக்கம். இதற்காகச் செலவிடப்பட்ட பொருளாதாரம், காலமாற்றத்தில் ஏற்பட்ட சிதைவுகள் என அனைத்தையும் ஒன்று சேர்த்து அறிமுகப்படுத்துகிறார்.
இருண்ட காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூறும் இந்தத் தொடருக்காக நிறையப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். பதின்மூன்று நாடுகளில் நூற்று பதினேழு இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

அபூர்வமான தகவல்கள். வரலாற்றுச் செய்திகள். அரசியல் சமய இயக்கங்களின் மோதல், கவிதைகள் மற்றும் இசை சார்ந்த விஷயங்கள் என விரிவாகப் பேசிய போதும் கென்னத் கிளார்க் தன்னை ஒரு அறிஞராக முன்னிறுத்திக் கொள்ளவில்லை. சாதாரண மனிதர்களில் ஒருவராகவே தன்னை முன்வைக்கிறார். அவர்களின் பார்வையில் எழும் கேள்விகள். சந்தேகங்களை எழுப்பி அதற்குப் பதில் சொல்லுகிறார். அவரது சிரிப்பும் வேகமான நடையும் மிகவும் வசீகரமாகயுள்ளன.
Ruskin said: “Great nations write their autobiographis in three manuscripts, the book of their deeds the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last” என்ற வாசகத்திலிருந்தே இந்த ஆவணத்தொடர் துவங்குகிறது.
ஒரு தேசம் தன் வரலாற்றைக் கலைகளின் வழியாகவே உண்மையாக அடையாளப்படுத்துகிறது. சட்டமோ, செயல்களோ காலமாற்றத்தில் மாறிவிடக்கூடும். அல்லது கைவிடப்படக்கூடும். ஆனால் கலைப்பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் காலத்தைத் தாண்டியும் அதன் பெருமையைச் சொல்வதாக இருக்கின்றன. அவை நாகரீக வளர்ச்சியின் அடையாளம். இருண்ட காலத்திலும் கூட அபூர்வமான கலைப்பொருட்கள் உருவாகியிருக்கின்றன. பண்டைய காலத்தில் சடங்குகளுக்காகச் செய்யப்பட்ட முகமூடிகள் இன்று அரிய கலைப்பொருளாகக் கருதப்படுகிறது.
அனைத்து பெரிய நாகரிகங்களும், அவற்றின் ஆரம்பக் கட்டங்களில், போரை அடிப்படையாகக் கொண்டவை. க்ளோவிஸும் அவரது வாரிசுகளும் தங்கள் எதிரிகளை வென்றது மட்டுமல்லாமல், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஆகவே போரும் பண்பாட்டு வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டன.
மிதமிஞ்சிய செல்வமே கலையாக மாறுகிறது. கலை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு தேவாலயத்தை உருவாக்க தேவையான ஆயிரக்கணக்கான பணியாளர்கள். அவர்களின் உணவு. இருப்பிடம், ஊதியம் பல ஆண்டுகளுக்குத் தரப்பட வேண்டும் என்றால் அங்கே உபரியாகச் செல்வம் இருக்க வேண்டும் என்கிறார்.
தனது வெற்றியை அடையாளப்படுத்திக் கொள்ள மன்னர்கள் பெரிய கட்டிடங்களை உருவாக்கினார்கள். கோட்டைகள். கோபுரங்களை அமைத்தார்கள். புதிய நகரங்களை உருவாக்கினார்கள். இன்னொரு புறம் கலைஞர்களுக்குள் ஏற்பட்ட போட்டி. புதுமை புதிய கலைவெளிப்பாட்டினை உருவாக்கியது. பண்பாட்டு வளர்ச்சியை யார் முடிவு செய்வது. எவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் சமயமும் அதிகாரமும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டன. இந்த வரலாற்றைப் புரிந்து கொண்டால் தான் மேற்கத்திய கலைகளைப் புரிந்து கொள்ள முடியும்

மைக்கேல் ஆஞ்சலோ, ரபேல். டாவின்சி போன்ற கலைமேதைகளின் பங்களிப்பு. பீதோவன். மொசார்ட் போன்ற இசைக்கலைஞர்களின் பங்களிப்பு. சிந்தனையாளர்கள். தத்துவவாதிகள். கவிஞர்களின் பங்களிப்பு எனக் கலையின் வேறுவேறு தளங்களை ஆராயும் கென்னத் கிளார்க். இவை ஒன்றையொன்று பாதித்து வளர்ந்தன என்பதைத் தகுந்த அடையாளங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்.
கென்னத் கிளார்க்கின் தொடர் மேற்கத்திய கலைவரலாற்றைத் தான் முதன்மையாக ஆராய்கிறது. ஆகவே இந்தியா சீனா போன்றவற்றின் கலைவரலாறு குறித்து அவர் விளக்கவேயில்லை. வரலாற்றாசிரியர்கள் பொதுவாகப் பத்தாம் நூற்றாண்டை ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டு போலவே இருண்ட காலமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அதை அரசியல் வரலாற்றின் கண்ணோட்டத்திலிருந்தும் ஆராய்கிறார்கள். ஆனால் கலையின் நோக்கிலிருந்து பார்க்கும் போது அந்தக் கண்ணோட்டம் மாறிவிடுகிறது என்கிறார்
இத்தொடரில் பிரம்மாண்டமான தேவாலயங்கள் எப்படி உருவாக்கப்பட்டன. கிறிஸ்துவை சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை, புனித பயணங்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றிய அத்தியாயம் மிகச்சிறப்பானது.
மறுமலர்ச்சிக் காலக் கட்டிடக்கலையை ஆராயும் கென்னத் கிளார்க் அவை கணிதத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக வடிவவியலினை சார்ந்தே இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாட்சியமாக உள்ள பெரிய மாளிகைகள். தேவாலயங்கள் உள்ளன என்கிறார்
போரின் காரணமாகக் கலைப்பொருட்கள் சூறையாடப்பட்டதும், அழித்தொழிக்கப்பட்டதும் துயரமானது. அரிய கலைச்செல்வங்களை அதன் மதிப்பை உணராமல் அழித்திருக்கிறார்கள். .
கிளார்க்கின் மிகவும் தீவிரமான மற்றும் தனித்துவமான அணுகுமுறை என்பது நுணுக்கமான விவரங்களை ஆராய்வதும் எடுத்துச் சொல்வதுமாகும். இந்தத் தொடரில் அவர் விளக்கிச் சொல்லும் ஓவியங்கள். சிற்பங்களில் அவ்வளவு கலைநுணுக்கங்கள் இருப்பதை அவர் சொல்லிய பிறகே நாம் அறிந்து கொள்கிறோம்.
டாவின்சியின் படைப்புகளை வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வந்த கிளார்க் அவரைப் பற்றி விரிவான புத்தகம் எழுதியிருக்கிறார். அது போலவே நிர்வாண ஓவியங்கள் சிற்பங்கள் பற்றியும் ஆய்வு நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்
ஆவணத்தொடரின் ஒரு இடத்தில் காலம் தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை, ஆனால் காட்சிக்கலைகளின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று கென்னத் கிளார்க் சொல்கிறார். மறுக்கமுடியாத உண்மை
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
