நிழல் கலைஞன்
புதிய சிறுகதை

“பிகாசோ வெளியே வாருங்கள்“ என்று சப்தமாக அழைத்தாள் ஜாக்குலின்
அவர் குளிப்பதற்காக வெற்றுடம்புடன் அரைக்கால் டிராயர் மட்டும் அணிந்தபடியே நின்றிருந்தார். அவரது காலை நேரம் மிகத் தாமதமாகவே துவங்குவது வழக்கம்.
பல நாட்கள் இரவில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மிதமிஞ்சிய போதையில் வீடு திரும்புவதற்குப் பின்னிரவாகிவிடும்.
சில இரவுகளில் அவர் கடற்கரைக்குச் சென்று தனியே நடப்பதும் உண்டு. விருந்தில் வெளிப்படும் பகட்டும் போலியான உரையாடல்களும் அவரைச் சலிப்படையச் செய்திருந்தன. மனிதர்களின் பொய்யான சிரிப்பு அருவருப்பூட்டுகிறது.

விடுமுறைக்காக அவர் கடற்கரை கிராமத்திலிருந்த வில்லாவில் தங்கியிருந்தார். இங்கே வந்த நாளிலிருந்து ஓவியம் வரையும் தூண்டுதல் ஏற்படவேயில்லை. குடி, இசை, நடனம், விளையாட்டு என நாட்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. அவரைத் தேடி வெளியாட்கள் எவரும் வருவதில்லை. அன்றாடம் தபால் கொண்டுவருகிறவரையும் பணியாட்களையும் விட்டுவிட்டுவிட்டால் வேறு எவரும் அவர் வீட்டுக்குள் வருவதேயில்லை. அவருக்கும் அந்நியர்களை அனுமதிக்க விருப்பமும் இல்லை.
விடுமுறைக்காக வந்து தங்கியிருந்த இந்தப் பிரெஞ்ச் வில்லாவும் அதையொட்டிய மணற்பரப்பும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. சில நாட்கள் காலை எழுந்தவுடனே கடலில் நீந்தச் சென்றுவிடுவார். சோம்பேறித்தனமாக உணரும் நாட்களில் காலை அவரே சமைக்க ஆரம்பித்துவிடுவார். ஓவியம் வரைவதில் கிடைக்கும் அதே சந்தோஷம் சமைப்பதிலும் கிடைத்தது. சமைக்கும் போது வண்ணங்கள் மாறிக் கொண்டேயிருப்பதைக் கவனிப்பார். நறுக்கப்பட்ட காய்கறிகள், இறைச்சி மீனின் நிறத்தை ஆராய்ந்தபடியே இருப்பார். சமையல் பாத்திரங்கள் யாவும் நவீன சிற்பங்களாகவே அவருக்குத் தோன்றின.
முந்தைய இரவும் ஒரு விருந்திற்குச் சென்றுவிட்டுப் பின்னிரவில் தான் வீடு திரும்பியிருந்தார். சரியான தூக்கமில்லை. ஆகவே புருவங்கள் வீங்கியிருந்தன. கெண்டைக்கால் சதை பிடித்துக் கொண்டது போலிருந்தது.

ஜாக்குலின் திரும்பும் அவரைச் சப்தமாக அழைத்தாள். தோளில் போட்டிருந்த துண்டினை தூக்கி எறிந்துவிட்டு அவர் வாசலை நோக்கி நடந்தார்.
இந்த நேரம் யார் வந்திருப்பார்கள். எதற்காக இத்தனை உற்சாகமாக அழைக்கிறாள் என்று புரியாமல் அவர் நடந்தார்
ஜாக்குலின் வாசற்கதவைப் பிடித்தபடியே நின்றிருந்தாள். அவர்களின் கார் மதிற்சுவரை ஒட்டி நின்றிருந்தது
“பாப்லோ.. இதை எப்போது வரைந்தீர்கள்“ என்று உற்சாகமாக் கேட்டாள்
“எதை“ என்றபடியே அவர் காரை திரும்பிப் பார்த்தார். அவரது காரின் நிறம் பாதி நீலமும் பாதி ரோஸ் நிறமாகவும் மாற்றப்பட்டிருந்தது. அதில் அவரது கோடுகள் போலவே கோடுகள் கொண்ட உருவங்கள் வரையப்பட்டிருந்தன. யார் வரைந்திருப்பார்கள்.
பின்னிரவில் காரை நிறுத்திவிட்டுப் போனபிறகு யாராவது வந்திருப்பார்களா. அவர் தன் ஓவியங்களின் அதே ரோஸ் மற்றும் அடர் நீல வண்ணங்களை அப்படியே யாரோ காரிக்குப் பூசியிருக்கிறார்களே என வியந்தபடியே காரில் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்தார்
அவரது ஓவியத்தில் வரையப்பட்ட அதே உருவங்கள். ஆனால் வேறு அசைவுகளில் வேறு நிலைகளில் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை ரசித்தபடியே சொன்னார்
“நான் இதை வரையவில்லை. இது நம் காரில்லை“
“போதையில் மறந்திருப்பீர்கள். தன் காரை இப்படிக் கலைப்பொருளாக மாற்ற உங்கள் ஒருவரால் தான் முடியும். “
“இல்லை ஜாக்குலின் இது யாரோ ஒரு ரசிகனின் வேலை“
“நம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட காரை யார் வந்து வரைந்திருக்கக் கூடும்“
“சுற்றுலாப் பயணிகளில் எவனோ ஒரு தீவிர ரசிகன். அதுவும் தேர்ந்த ஓவியன் வரைந்திருக்கக் கூடும். நேற்றிரவு விருந்தில் அப்படி நிறைய இளம் ஒவியர்களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவனாக இருக்கக் கூடும்“
“அச்சு அசலாக உங்களை நகலெடுத்திருக்கிறான். இந்தக் கோடுகளைப் பாருங்கள். “
“அது தான் வியப்பாக இருக்கிறது. கோடுகளின் வளைவு கூட எனது பாணியிலே இருக்கிறது“
“இனி இந்தக் காரை சாலையில் எங்கே கண்டாலும் பிகாசோ போகிறார் என்று மக்கள் கூச்சலிடுவார்கள்“
“எனது அந்தரங்கம் முற்றிலும் பறிக்கபட்டுவிடும். இனி நான் வானில் பறந்து போக வேண்டியது தான்“
“உங்களால் இறக்கைகளைச் செய்ய முடியும் தானே“
“எனக்குத் தனியே பறக்கப் பிடிக்காது“
“நம் பூனையைக் கூடப் பறக்கக் கூட்டிக் கொள்ளுங்கள்“ என்று சொல்லிச் சிரித்தாள்
பிகாசோ ஓவியம் வரையப்பட்டிருந்த காரை சுற்றி வந்து பார்த்தார். கச்சிதமாக வரையப்பட்டிருந்தது
காரின் முன்னால் நீங்கள் நிற்கும்படி ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். அப்படியே இருங்கள் என்று ஜாக்குலின் வேகமாக வீட்டிற்குள் ஒடி கேமிராவை எடுத்து வந்தாள்
அவளது ஆசைகள் விநோதமானவை. அவளது அழகைப் போலவே புரிந்து கொள்ள முடியாத வசீகரமது.

ஜாக்குலின் பிகாசோவை வண்ணக்காருடன் புகைப்படம் எடுத்தாள். பிறகு அவள் கார் முன்பாக நின்று கொண்டாள். பிக்காசோ பல கோணங்களில் அவளைப் புகைப்படம் எடுத்தார்
அன்று மாலை செய்திதாளில் பிகாசோவின் காரைப் பற்றிச் செய்தி அவள் எடுத்த புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. நிறையத் தொலைபேசி அழைப்புகள். உள்ளூர் கேலரி அதைக் காட்சிக்கு வைக்க விரும்பியது.
ஆனால் பிகாசோவிற்குக் காரில் ஒவியங்களை வரைந்தவன் யார் என்ற யோசனை மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது.. அன்று மாலை பிகாசோவைத் தேடி வந்திருந்த ஆர்ட் டீலர் ஹாப்கின்ஸ் கூட அந்தக் காரை ஏலத்தில் விட்டால் மிகப்பெரிய பணம் கிடைக்கும் என்று சொன்னார்.
“இனி நான் அந்தக் காரை பயன்படுத்த முடியாது. அது ஒரு கலைப்பொருளாகிவிட்டது“
“பிகாசோவின் கார் என்றால் தன்விசேசம் தானே“ என்று கண்சிமிட்டினார் ஹாப்கின்ஸ்
அத்துடன் அவர் ஜாக்குலினை சந்தோஷப்படுத்துவதற்காகப் பிகாசோ தான் தன் காரை இப்படி ஓவியங்களுடன் உருமாற்றியிருக்கிறார் என்றும் உள்ளூற நம்பினார். இளம்பெண்களுக்காகப் பிகாசோ எதையும் செய்யக்கூடியவர். ஜாக்குலின் மீதான காதலில் அவளுக்காகப் பீங்கான் கோப்பைகளில் ஓவியம் வரைந்து தந்திருக்கிறார். ஒரு முறை அவளது முதுகில் கூட ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அதைப் போட்டோ எடுக்கும்படி ஜாக்குலின் சொன்னாள். அந்தப் புகைப்படத்தைப் பெரியதாக அச்சிட்டு தன் அறையில் பிரேம் போட்டு மாட்டிக் கொண்டாள்.
ஒரு இரவு அவள் பிகாசோவை முத்தமிட்டபடியே சொன்னாள்
“நீங்கள் ஒரு ஓவியத்தை முத்தமிடுகிறீர்கள்“
“அப்படியானால் உன் உதட்டில் ஒரு படம வரைகிறேன். தூரிகையால் அல்ல. எனது நாவினால்“ என்றார் பிகாசோ
அவள் அதை அனுமதித்தாள். கலைஞனின் விசித்திரம் காதலில் தான் முழுமையாக வெளிப்படுகிறது
ஓவியம் வரையப்பட்ட காரை காண்பதற்காகப் பிகாசோ வீட்டிற்கு நிறைய நண்பர்கள் வரத்துவங்கினார்கள். அது பிகாசோவை எரிச்சல் படுத்தியது. மறுநாளே அந்தக் காரை வீட்டின் பின்புறமுள்ள ஷெட்டில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்த மறுநாள் காலை கடற்கரைக்குக் குளிப்பதற்குக் கிளம்பும் போது மறுபடியும் ஜாக்குலின் கூச்சலிட்டாள்
“எத்தனை அழகான செருப்பு. இதைக் கூடவா சித்திரங்களால் அலங்கரித்திருப்பீர்கள்“
“எங்கே“ எனக் கேட்டார் பிகாசோ
வாசலில் கழட்டி விடப்பட்டிருந்த அவரது ஒரு ஜோடி செருப்புகளும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. ஒரு செருப்பில் ஆண் உருவமும் மறு செருப்பில் பெண் உருவமும் வரையப்பட்டிருந்தது. அசலான ஒவியங்கள். அவரே வரைந்தது போன்ற வெளிப்பாடு
“இதையும் நீங்கள் வரையவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்“ என்றாள் ஜாக்குலின்
“இதுவும் அதே ரசிகனின் வேலை தான். நான் இந்தக் காலணிகளைச் சில நாட்களாக அணியவேயில்லை. சில நாட்களுக்கு முன்பு தானே புதிய செருப்புகளை வாங்கினேன்“
“பழைய செருப்புகளைக் கலைப்பொக்கிஷமாக்கிவிட்டான்“
“அவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசித்திரமாக இருக்கிறது அவனது செயல்கள்“.
“ஓவியத்தில் உங்களுக்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டான் “
“வாரிசில்லை . நகலெடுப்பவன் உருவாகிவிட்டான்.. இந்த ஓவியத்தில் என்னைக் கேலி செய்வது தான் வெளிப்படுகிறது“
“யாரோ உங்களுடன் விளையாடுகிறார்கள்“
“ஓவியர் வெர்மீரை நகல் எடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படி யாரோ தோற்றுப் போன ஓவியன் என்னையும் நகலெடுக்கத் துவங்கியிருக்கிறான்“
“இதை ஏன் உங்கள் மீது அவன் காட்டும் அன்பு என நினைக்கக் கூடாது“
“அன்பு காட்டுகிறவன் பின்னிரவில் திருடன் போல வருவதில்லை. இப்படி ரகசியமாக ஓவியம் வரைந்து போவதில்லையே“
பிகாசோ பழைய செருப்புகளை வீட்டினுள் எடுத்துச் சென்று சிற்பங்களுடன் சேர்த்து வைத்தார். பின்பு புதிய காலணியை அணிந்து கொண்டபடியே கடற்கரைக்குச் சென்றார். அன்று கடற்கரை மணலில் ஒரு ஜோடி செருப்புகளைச் சிற்பமாகச் செய்தார். பிறகுத் தன் உடைகளைக் களைந்து மணலில் வைத்து விட்டுக் கடலில் நீண்ட நேரம் நீந்திக் களித்தார். தொலைவில் நீந்துகிறவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்
ஈர உடலுடன் கரையேறி தன் மேல் அங்கியை அணிந்து கொள்ள முற்பட்ட போது அங்கியின் பாக்கெட்டில் ஒரு சிகரெட் பாக்கெட் இருப்பதைக் கண்டார். இது போன்ற சிகரெட்டினை தான் புகைப்பதில்லையே. பின் எப்படி இது தனது பாக்கெட்டில் வந்தது என்று குழப்பத்துடன் அதைத் திறந்து பார்த்தார். நான்கு சிகரெட்டுகள் உள்ளே இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம். எல்லாச் சிகரெட்டிலும் சிறிய பறவையின் உருவம் வரையப்பட்டிருந்தது
அதே ஆளின் வேலை தான். அவன் தன்னைக் கடற்கரையிலும் பின்தொடர்ந்திருக்கிறான். ஒருவேளை தொலைவில் நீந்திக் கொண்டிருந்தவர்களில் அவனும் ஒருவன் தானே என்னவோ. அந்தச் சிகரெட்டினை கையில் எடுத்துப் பார்த்தார். சிவப்பு மஞ்சள் ஊதா வண்ணங்களில் சிகரெட்டினை காண வியப்பாக இருந்தது. பறவையை மிக நேர்த்தியாக வரைந்திருந்தான்.
அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிகாசோவிடம் உருவானது. அவர் கடற்கரையில் மணலில் அவனைத் தேடி நடக்க ஆரம்பித்தார். யார் அந்த மனிதன். இளைஞனா, முதியவரா, அல்லது இளம்பெண்ணா, யாராக இருக்கக் கூடும். கடற்கரை மணலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் பிகாசோவை கண்ட மகிழ்ச்சியில் கையசைத்தார்கள். அவரும் உற்சாகமாகக் கையசைத்தபடியே நடந்தார்.
மணல்மேடு ஒன்றில் பத்து பதினைந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். வானில் பட்டங்கள் பறந்து அலைந்தபடியே இருந்தன. திடீரென மேற்குவானில் ஒரு பட்டம் பறப்பது அவரது கண்ணில் பட்டது. அந்தப் படத்தில் அவரது Le Rêve ஓவியம் அப்படியே பட்டமாக உருமாற்றப்பட்டிருந்தது. அந்தப் பட்டம் பறக்கும் திசையை நோக்கி பிகாசோ வேகமாக நடக்க ஆரம்பித்தார். மணல்மேட்டில் நடப்பது சிரமமாக இருந்தது. அந்தப் பக்கம் வானில் சுழன்றபடியே இருந்தது.
அதை அவர் நெருங்கிப் போகும் போது பட்டம் அறுந்து வானில் தனியே பறக்கத் துவங்கியது. பட்டம் பறக்கவிடப்பட்ட கயிறு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்போது தான் யாரோ அந்தக் கயிரை அறுத்துவிட்டிருக்கிறார்கள்
இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம். எதற்காக அந்த மனிதன் தன்னோடு இப்படி விளையாடுகிறான். தன் மீதான அன்பிலா. அல்லது நான் உன்னை விடவும் பெரியவன் என்று காட்டிக் கொள்ளவா. அவர் அந்த மரத்தடியில் நின்றபடி இருந்தார். மணலில் அந்த மனிதனின் கால்தடங்கள் பதிந்து போயிருந்தன. குனிந்து அந்தக் கால்தடங்களைப் பார்த்தார். அது உயரமான ஆளின் கால்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. ஒரு சிறிய குச்சியால் அந்தக் கால்தடத்தினைச் சுற்றிலும் கோடு வரைந்தார் பிகாசோ பிறகு அந்தக் கால்கள் இடுப்பு வயிறு தலை என அந்த மனிதன் மணலில் தோன்ற ஆரம்பித்தான்.
இப்படித்தான் அவன் இருக்கக் கூடும் என்று தோன்றியது. தான் வரைந்த கோடுகளைத் தானே அழித்துவிட்டு அவர் தன் வீட்டிற்குத் திரும்ப ஆரம்பித்தார்.
ஜாக்குலினால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் இப்படியான வெறிபிடித்த ரசிகர்களை அவள் அறிவாள். ஒரு பெண் தன்னை நிர்வாணமாக வரையும் படி அவரது வீட்டின் முன்பு வாரக்கணக்கில் காத்து கிடந்திருக்கிறாள். ஒரு கல்லூரி மாணவன் தச்சன் போல நடித்து அவரது வீட்டிற்குள் வந்து பிகாசோவிடம் ஆட்டோகிராப் வாங்கிப் போயிருக்கிறான். ஒரு கிழவர் தனது தங்கப்பல் ஒன்றை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். ஒரு குடிகாரன் பிகாசோவின் வளர்ப்பு பூனையைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான். இப்படி எத்தனையோ விசித்திரங்கள். ஆனால் இப்படிச் செருப்பை, சிகரெட்டினை, காரை ஓவியமாக மாற்றும் ஒருவனை அவள் இதன் முன்பு அறிந்திருக்கவில்லை
பிகாசோ அந்த மனிதன் தன்னைப் பின்தொடர்கிறான் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவே வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலே இருந்தார். சில நாட்கள் இரவில் கண்விழித்து யாராவது வாசலில் நடமாடுகிறார்களா என்று ஒளிந்து பார்த்ததும் நடந்தேறியது. அந்த ஆள் யார் எனக் கண்டறிய முடியவில்லை
இது நடந்த ஒரு வாரத்திற்கு அந்த மனிதனிடமிருந்து எந்தப் பரிசும் வரவில்லை. அதன்பிறகு யாரோ ஒரு கூடை ஆரஞ்சு பழங்களை வாசலில் வைத்துப் போயிருக்கிறார்கள் என்று பணிப்பெண் சொன்னபோது “அதை என்னிடம் கொண்டுவா“ எனச் சப்தமாகச் சொன்னார் பிக்காசோ
அவள் அந்தப் பழக்கூடையை அவர் முன்னால் கொண்டுவந்து வைத்தார். அவர் நினைத்தது போலவே அத்தனை ஆரஞ்சு பழங்களிலும் படம் வரையப்பட்டிருந்தது. அதுவும் மெல்லிய காகிதம் ஒன்றில் படம் வரைந்து பழத்தின் மீது ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஆரஞ்சு பழங்களை மேஜையின் மீது வைத்து அவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிப்பது போலத் தன்னைக் காதலிக்கிறான். தன் அன்பை வெளிப்படுத்துகிறான் என்பது புரிந்தது.
ஆனால் அவன் தனக்குப் புதிய சவாலை எழுப்பியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவரைப் போல முற்றிலும் புதிய பாணியில் புதிய வண்ணங்களுடன் ஓவியம் வரைய ஆரம்பித்தார். அந்த மனிதனையே ஒரு கருப்பொருளாகக் கொண்டும் ஓவியம் வரைந்தார். பித்தேறியது போல அவர் ஓவியத்தினுள் மூழ்கியிருந்தார். ஜாக்குலின் மட்டும் தனியே இரவு விருந்திற்குச் சென்று வந்தாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தூக்கம் கலைந்து ஓவியம் வரைவதற்கான உந்துதல் ஏற்படவே படம் வரையும் அறைக்குள் சென்றார். திடீரென அவரது உள்ளுணர்வு வெளியே யாரோ தனக்காகக் காத்திருப்பது போல உணர்த்தியது. சப்தம் எழுப்பாமல் அவர் வீட்டின் பின்கதவைத் திறந்து இருட்டிற்குள்ளாகவே நடந்து வெளியே வந்தார். அவரது கையில் சிறிய டார்ச் இருந்தது.
அவர் நினைத்தது சரி. அவர் எதிர்பார்த்திருந்த மனிதன் அவர் வீடு இருந்த வீதியை முற்றிலும் ஒவியங்களால் வரைந்து அழகுபடுத்திக் கொண்டிருந்தான். விடிந்து பார்த்தால் அந்தச் சாலையே ஓவியத்தால் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர் வீடு இருந்த வீதி மிகச்சிறியது. அதன் முனைவரை அவன் ஓவியம் வரைந்துவிட்டுத் திரும்பும் போது பிகாசோ நிற்பதைக் கண்டவன் போலத் தனது தொப்பியை எடுத்து வணங்கினான்
பிக்காசோ தனது டார்ச் ஒளியை அவன் மீது அடித்தார்
அவன் காகித முகமூடி அணிந்திருந்தான். அந்த முகமூடி பிகாசோவின் தோற்றத்தில் இருந்தது. அவன் உற்சாகமான குரலில் சொன்னான்
“மாஸ்டர் நாம் சந்தித்துக் கொள்ள வேண்டாம். இந்த விளையாட்டினை இன்றோடு நிறுத்திக் கொண்டுவிடுகிறேன்“
“நீ யார்“ என்று சப்தமாகக் கேட்டார் பிக்காசோ
“சிறுவயது முதலே உங்களால் வழிநடத்தப்படுகிறவன். உங்களைப் பார்த்து ஓவியம் வரைய ஆசை கொண்டவன். . நான் ஒரு தோற்றுப் போன ஓவியன். என் ஓவியங்களில் உங்களில் சாயல் தெரிகிறது என்று நிராகரித்துவிட்டார்கள். அது எனக்குப் பெருமை தான். உண்மையில் நான் உங்கள் நிழல். உங்கள் நிழல் ஓவியம் வரைவதை நீங்கள் காண வேண்டாமா அதற்காகத் தான் இப்படி உங்களுடன் விளையாடினேன். மாஸ்டர். உங்களைத் தொந்தரவு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள். “
“நான் உன்னைக் காண வேண்டும்“ என்று டார்ச் லைட்டை உயர்த்தியபடியே அவனை நோக்கி நடந்தார் பிகாசோ
“வேண்டாம் மாஸ்டர். அங்கேயே நில்லுங்கள். அசல் ஒரு போதும் நகலுடன் கைகுலுக்கக் கூடாது“.
பிகாசோ அப்படியே நின்றுவிட்டார். அந்த மனிதன் உரத்த குரலில் சொன்னான்
“சில பூச்சிகளுக்கு இரவு தான் பிடித்தமானது. அவை இருளுக்குள் பிறந்து இருளுக்குள் வாழக்கூடியவை. அதன் சப்தத்தை மட்டுமே உலகம் கேட்கிறது. அந்தப் பூச்சியை நேரில் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. நான் அப்படி ஒரு இரவுப்பூச்சி. என் குரல் உங்களுக்கு எட்டியது எனக்கு மகிழ்ச்சி. குட் நைட் மாஸ்ட்ரோ “என்றபடியே அவர் இருட்டில் தாவி மறைந்தான்.
பிகாசோ அவன் வரைந்த ஓவியங்களின் முன்பாக விடியும் வரை அமர்ந்திருந்தார். மறுநாள் காலை தனது வீதியை ஒவியத்தால் நிரப்பியிருக்கிறார் பிகாசோ என மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள்.
அந்த மனிதன் அணிந்திருந்த முகமூடியை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டபடியே பிகாசோ வீடு திரும்பினார்.
பிகாசோ அதன் பிறகு அந்த இளைஞனை தன் வாழ்நாளில் சந்திக்கவே இல்லை. அவன் பெயரோ, ஊரோ எதையும் அறிந்து கொள்ள முடியவுமில்லை.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
