நூறுநாற்காலிகளும் நானும்

[தலித் ஆய்வுநூல் வெளியீட்டகமான எழுத்து பிரசுரம் நூறுநாற்காலிகள் கதையை மட்டும் சிறிய மலிவுப்பதிப்பாக அதிகமான பிரதிகள் வெளியிட்டு மக்களிடையே கொண்டுசெல்லவிருக்கிறது. அதற்கு எழுதிய முன்னுரை]


இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை 'அறம்'. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம் என்றால் என்ன என்று நான் கேரளப் பெரும்படைப்பாளியான வைக்கம் முகமது பஷீரிடம் கேட்டேன்.  'நீதியுணர்ச்சி' என்று அவர் சற்றும் தயங்காமல் பதில் சொன்னார். இருபத்தைந்தாண்டுகள் பல்லாயிரம் பக்கங்கள் எழுதி நானும் அவர் அருகே வந்து சேர்ந்துவிட்டேன் என்று தோன்றியது.



ஆனால் அக்கதைகளை எழுதுவதற்கு முன்னால் வரைக்கும் ஆழமான ஐயத்தின் சோர்விலேயே இருந்தேன். வரலாறெங்கும் எப்போதாவது, எங்காவது மானுடஅறம் திகழ்ந்த காலம் இருந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே வரலாறு அறிந்த என்னால் சொல்ல முடியும். ஆனால் ஒரு இலட்சியவாதியாக அந்தப் பொன்னுலகை எதிர்காலத்தில் நோக்குவதற்கு நான் என்னைத் தயார்படுத்திக்கொள்வேன். மானுடம் செல்லும் திசை அது என்று நம்ப என் எல்லாக் கற்பனையையும் செலவிடுவேன்.


அறம் என்பது மிகப்பொதுவான வார்த்தை. குலஅறமாக, அரசியலறமாக எவ்வளவோ அறங்கள் பேசப்பட்டுள்ளன. நான் சொல்வது அவற்றுக்கு அப்பால் உள்ள உலகளாவிய மானுட அறம் பற்றி. சமத்துவம் என்றும் நீதி என்றும் எத்தனையோ சொற்களில் நாம் சொல்லும் எல்லா விழுமியங்களுக்கும் ஆதாரமாக உள்ள மனஎழுச்சி அது. ஆம், நாம் காணும் இந்த வாழ்க்கையில் அது கண்கூடாக இல்லைதான். நேற்றைத் திரும்பிப்பார்க்கையில் கூசச்செய்யும் சுரண்டல்களாலும் ஒடுக்குமுறைகளாலும் நிறைந்திருக்கிறது வாழ்க்கை என்பதும் உண்மைதான். ஆனாலும் அறம் என்னும் ஆதி மனஎழுச்சி மனிதமனத்தில் எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது.


அறம், அதுவே நம்மை எல்லாவகை இழிவுகளில் இருந்தும் வீழ்ச்சிகளில் இருந்தும் மீட்டு இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மானுடநாகரீகமாக நாமறிந்தவை எல்லாமே அந்த மானுட அறத்தின் சிருஷ்டிகளே. மனித உடலின் பரிணாமத்தில் கைகளும் கண்களும் எப்படி உருவாகி வந்தனவோ அதைப்போல மானுடஅகத்தில் அறம் உருவாகி வந்துள்ளது என நான் நினைக்கிறேன். அது மனிதனை வழிநடத்திச்செல்கிறதென நம்புகிறேன். இத்தனை வாழ்க்கைப்போட்டியின் குரூரத்தின் நடுவிலும் அறம் நன்னீர் ஊற்றாகப் பொங்கும் மனத்துடன் ஊருணியாக அமைந்த மனிதர்களை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அறம் வரிசையின் எல்லாக் கதைகளும் அத்தகைய உண்மை மனிதர்களைப்பற்றியவை.


இக்கதை அதில் ஒன்று. இதன் கதைநாயகன் சுந்தர ராமசாமி வழியாக எனக்கு அறிமுகமானவர். நாராயணகுருகுல இயக்கத்துடன் தொடர்புள்ளவர். வாழ்க்கையின் மிக இக்கட்டான நிலையில் எனக்கு சில பேருதவிகள் செய்தவர். அதற்காக நான் நன்றியுடன் நினைவுகூரக்கூடியவர். என் அண்ணனின் இடத்தில் இருந்தவர். பிற கதைகளில் அந்த ஆளுமைகளை வெளிப்படையாகவே எழுதினேன். இக்கதையில் அந்த ஆளுமை சம்பந்தமான எல்லாத் தகவல்களையும் முடிந்தவரை மாற்றி, அவரை மறைத்தே எழுதினேன். அதற்கான காரணம் கதையை வாசிப்பவர்களுக்குப் புரியக்கூடியதே.


இக்கதையின் மையநிகழ்ச்சியை நான் 1988லேயே, கிட்டத்தட்ட கதை நிகழ்ந்த காலத்திலேயே, ஆனந்தவிகடனுக்கு அனுப்பியிருக்கிறேன். கதை தேர்வாகவில்லை. 1991ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை வீட்டில் தங்கியிருந்தபோது ஓர் உரையாடலில் இதைச் சொன்னேன். நண்பர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். ஆனால் இதை எழுதும் ஆன்மீகமான தகுதி எனக்கு உண்டா என்ற ஐயம் என்னை எழுதாமலாக்கியது. எழுதும் வாழ்க்கையுடன் தானும் இணைந்து வாழாமல் இலக்கியம் நிகழ்வதில்லை. என்னால் அந்தக் கதைக்குள் செல்ல முடியுமா என்ற ஐயம் எனக்கு எப்போதுமிருந்தது.


அறம் வரிசைக் கதைகள் வெளிவந்தபோது திருவண்ணாமலை நண்பர் குழுவில் ஒருவரான ஆர்.குப்புசாமி [ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' போன்ற நாவல்களை மொழியாக்கம் செய்தவர்] கூப்பிட்டு இந்தக்கதையை எழுதவேண்டும் என்று கோரினார். இரு வடிவங்களில் எழுத ஆரம்பித்துக் கதை மேலெழவில்லை. பின்னர் கண்டுகொண்டேன், கதையைத் தன்னிலையில் நின்று, என்னுடைய கதையாக உணர்ந்து மட்டுமே எழுதமுடியும் என. எழுதியபோது முழுமை கைகூடியது. நான் என் அம்மாவை அந்த அம்மாவில் காணும் புள்ளியில்.


கதையை எழுதும் நான் வேறு என எப்போதுமே சொல்லிக்கொள்வேன். என்னுடைய கருத்துலகில் கட்டுப்பட்டு என் எழுத்து நிகழ்வதில்லை. அது பிறிதொரு வாழ்க்கைக்குள் நான் சென்று மீள்வதுதான். அதன்பின் அந்தக்கதைக்கு நானும் வாசகன்தான். இந்தக்கதையின் கருத்துக்களுக்கு அல்லது உணர்ச்சிகளுக்கு நான் பொறுப்பல்ல. கதையை ஒருபோதும் என்குரலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒரு துண்டு வாழ்க்கை. என் வழியாக அது மொழியாகியது.


இந்தக்கதையின் வெற்றி என்பது உலக இலக்கிய வாசிப்பும்,அபாரமான நிதானமும் கொண்ட இதன் கதைநாயகன் இதை மனைவியை வாசிக்கச்சொல்லிக் கேட்டு எனக்கு ஆசி தெரிவித்து எழுதியதுதான். சிலசமயங்களிலாவது நாம் நம் ஆசிரியர்களின் தோளில் ஏறி அமர்ந்துவிட்டோம் என்ற குதூகலத்தை அடைவோம். எனக்கு அது அத்தகைய கணம்.


இந்தக்கதைபற்றி ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை. நம் காலடியில் எங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

அறம்-எஸ்.கெ.பி.கருணா
இலட்சியவாதத்தின் நிழலில்…
கடிதங்கள்
கடிதங்கள்
பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்
அறம் விழா
அறம் — சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்
எதற்காக அடுத்த தலைமுறை?
அறம் வாழும்-கடிதம்
மண்ணாப்பேடி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2012 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.