Jeyamohan's Blog, page 2311
August 16, 2011
அண்ணா ஹசாரே மீண்டும்
அண்ணாஹசாரே அவர்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தில் டெல்லி அரசு அடக்குமுறையைக் கையாள்வதும், சில நாட்களுக்கு முன் பிரதமர் இவ்விசயத்தில் பொறுப்பில்லாமல் பதில் அளித்ததும் பார்க்கும் போது ஹசாரே குழுவினரின் வேண்டுகோளை முற்றிலும் நிராகரிக்கும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது,
இருந்தாலும் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இருக்கும் ஹசாரே அவர்களைக் கைது செய்து 7 நாட்கள் காவலில் வைப்பதாக அறிவித்த போலீஸ் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் அவர் இன்று விடுதலை செய்யபடுவதாகத் தெரிகிறது, கூடிய விரைவில் ஹசாரே குழுவினரை அரசு அழைத்துப் பேசலாம், அகிம்சைப் போராட்டத்தின் பலம் என்ன என்பதை இப்போது புரிகிறது, காந்தியின் அகிம்சைப்போராட்டத்தின் மீது இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது,
"சத்யாக்கிரகப்போராட்டம் என்பது ஒரு எதிர்ப்புக்கருத்தை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லவும் மக்களிடையே அந்தக்கருத்து செல்வாக்குப் பெறும்போது அதை ஒரு முனையில் குவிக்கவும் உதவக்கூடிய ஒரு போராட்ட வழிமுறை. அவ்வாறு குவிக்கப்படும் வெகுஜனக்கருத்து என்பது ஒரு பொருண்மையான அதிகார சக்தி. அது எந்த அரசதிகாரத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது"
ஜெவின் இந்த வரிகள் கண்முன் நடப்பது தெரிகிறது,
கார்த்திகேயன் [குழுமத்தில்]
அன்புள்ள கார்த்திகேயன்,
காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.
அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான். அண்ணா அவரது போராட்டத்தை ஆரம்பித்தபோது, நம் அறிவுஜீவிகள் உருவாக்கிய அவநம்பிக்கைப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். நம் சிற்றிதழ்களில் நம் சில்லறைஅறிவுஜீவிகள் எழுதிய தலையங்கங்களை வாசியுங்கள். எவ்வளவு அவநம்பிக்கை. அதிலிருந்து எவ்வளவு இளக்காரம், எவ்வளவு நக்கல்!
அந்த அவநம்பிக்கையின் ஊற்றுமுகம் எது? நம் சிற்றிதழ்களின் தரம் என்ன? கடந்த ஆட்சியில் நூலக ஆணைக்குழுவைக் கையில் வைத்திருந்தார் என்பதற்காகவே தமிழச்சி என்ற பெண்மணியைக் கவிஞர் எனக் கற்பிதம் செய்து அட்டையில்போட்டு மகிழ்ந்த சிற்றிதழ் ஒன்று அண்ணா ஹசாரேயை நையாண்டிசெய்து கட்டுரை வெளியிட்டது. கனிமொழி வழிபாட்டில் மூழ்கியிருந்த சிற்றிதழ்கள் அண்ணாவை நடுத்தர வர்க்கத்தின் போலிநாயகன் என ஏளனம்செய்தன.
எந்த சமரசத்துக்கும் துணிந்த சுயநலவாதிகளான க.திருநாவுக்கரசு, எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அரசியலெழுத்தர்கள் சிற்றிதழ்களில் கட்டுரை எழுதி தங்களை அனல் கக்கும் புரட்சியாளர்களாகக் காட்டிக்கொண்டார்கள். இவர்களுடைய அன்றாட அயோக்கியத்தனங்கள் , சரிவுகள் இவர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்களால் ஒரு நல்ல விஷயத்தை உண்மையிலேயே நம்ப முடியவில்லை என்பதே உண்மை.
அப்படித்தான் இருக்கிறார்கள் இந்திய இதழாளர்கள். அரசியல் தரகர்களாக, அரசியல் கையாட்களாக, வெளிநாட்டு நிதிக்கு ஏற்பக் கருத்துக்களை உருவாக்கி முன்வைப்பவர்களாக இருப்பவர்களே நாம் இதழாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள். இவர்களே நம் சிந்தனையை இன்று தீர்மானிப்பவர்களாக நடந்துகொள்கிறார்கள்.
நேற்று தினமணி சிறப்பிதழில் ஒரு இதழாளர் எழுதியிருந்ததை வாசித்து மொத்த இதழையே கிழித்து குப்பைக்கூடையில் போட்டேன். அண்ணா யோக்கியமானவரல்ல என்கிறார். காரணம் அந்த நிருபரும் அண்ணா ஹசாரேயும் ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சென்றார்களாம். அண்ணாவை அவர்கள் உடனே உள்ளே அழைத்துச்சென்றார்களாம், இந்த மாமேதை பாதுகாப்புமுறைகளைக் கடைப்பிடித்துக் காத்திருக்க நேரிட்டதாம். இவர் கேட்ட 'ஆழமான' தத்துவக் கேள்விகளை அண்ணா அறிவுபூர்வமாக எதிர்கொள்ளவில்லையாம். இருந்தாலும் அண்ணா பரவாயில்லை என்கிறார் கடைசியில்.
இந்த அசட்டு அற்பர்களால் நிறைந்திருக்கிறது நம் ஊடகம். அண்ணாவின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவர் வேறுவழியில்லாமல் இதைச் சார்ந்திருக்கிறார் என்பது. காந்தியைப்போலத் தனக்கென ஒரு மக்கள் தொடர்பை அண்ணாவால் உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியம் இன்று உள்ளதா என்றும் தெரியவில்லை.
இந்த மூடுவலையை மீறியே அண்ணா போன்ற சிலர் எழுந்து வருகிறார்கள். அண்ணா அவரது தகுதியை நிரூபித்தவர். பல ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை வெற்றிகரமாக ந்டத்தியவர். தகவலறியும்சட்டம் போன்றவற்றின் வழியாக வெற்றிகளைக் காட்டியவர். ஆயினும் அவர் சந்தித்த ஏளனங்கள் எவ்வளவு!.
நம் அயோக்கிய அறிவுஜீவிகள் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து, நம் சொந்த அவநம்பிக்கையில் இருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிரது. நம்மாலும் சில செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஜனநாயகம் ஆற்றலுள்ளதே என்ற நம்பிக்கை நம்மில் நிகழ்வேண்டியிருக்கிறது. அண்ணா மலையளவு பிரயத்தனப்பட்டு அந்நம்பிக்கையை மயிரிழையளவு உருவாக்கியிருக்கிறார். அது எவ்வளவுதூரம் நீடிக்கும் என்பதைப்பொறுத்தே வெற்றி இருக்கிறது
அந்நம்பிக்கையைக் குலைக்கவே காங்கிரஸ் முயல்கிறது. அண்ணாவும் பிற அரசியல்வாதிகளைப் போன்றவரே என்று காட்ட மோசடிகளில் ஈடுபடுகிறது. அவர் மேல் ஊழல், மதவாத முத்திரைகளைப் போடுகிறது. இடதுசாரிகள் அவரைச் சிறுமைப்படுத்த முயல்கிறார்கள், அவர்கள் காந்தியையே சிறுமைப்படுத்திய பாரம்பரியம் கொண்டவர்கள். பத்துரூபாய் சில்லறையை நீட்டினால் ஓடிப்போய்க் கவ்வும் நம் இதழாளர்களும் எதிர்காலத்தில் அந்தப்பிரச்சாரத்துக்கு விலைபோவார்கள் என்றே நான் நினைக்கிறேன். அதைமீறி இந்நாட்டு மக்களின் மனசாட்சி சிந்திக்கத் துணியவேண்டும். இளைஞர்கள் அவர்களின் அலட்சியம், அவநம்பிக்கையை மீறி இதயத்தால் இதைப் பார்க்கமுடியவேண்டும்.
காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது. உடனடிப்புரட்சி அல்ல. மிக மெல்லப் படிப்படியாக நிகழும் ஒரு மாற்றம் அது. இந்த லோக்பால் மசோதாவுக்கான போராட்டம்மூலம் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்றால் மெல்லமெல்ல இந்திய சமூகம் ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. அந்நகர்வு இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். லோக்பால் மசோதா அண்ணா கோரியபடியே அப்படியே நிறைவேறினால்கூட காந்திய வழிமுறைகளின்படி உடனே அடுத்த போராட்டம் அடுத்த நடைமுறைக்கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக இலக்கை நோக்கிப் பிடிவாதமாகச் சென்றபடியே இருக்கவேண்டும்.
அது நடக்கும் என நம்புவோம். காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை
ஜெ
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2
அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…
கோவையில் இன்று…
இன்று [17-08-2011] மாலை ஆறு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன். காந்திபுரத்தில் வ.உ.சி பூங்கா வாசல் அருகே கைத்தறிக் கண்காட்சி அரங்கு.
புத்தகக் கண்காட்சி 12 ஆம் தேதி முதல் நிகழ்கிறது. தினமும் மாலையில் கூட்டங்கள். காலை ஒரு நண்பர் கூப்பிட்டு நேற்றைய கூட்டத்தில் ஏழுபேர் கூட்டத்தைக் கேட்டதாக சொன்னார். எனக்கு பொதுவாக அந்தமாதிரி ஒழுகும் கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. அதோடு காலி நாற்காலிகள் என்றால் இன்னும் கைகால் உதறும், அவற்றில் காலஞ்சென்ற மூதாதையர் அமர்ந்திருப்பதுபோல ஒரு பிரமை.
ஆகவே நான் பேசுவதை வழக்கமாகக் கேட்கும் நண்பர்களை கோவைக்கு வரச்சொல்லியிருக்கிறேன். கட்டுச்சோற்றுடன் விருந்துக்குப்போன கதைதான்
சிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.
ஜெயமோகன்,
எவனோ ஒருவன் என்றைக்கோ பிராமனனை வெறுத்தான் என்றால் அவன் ஒரு பிராமண அறிஞனை வெறுத்ததுக்கெல்லாம் அதற்கும் பிராமணனே காரணம் என்பதைப்போல எழுதுகிற எழுதுக்குமுறை எவ்வளவு கழிசடைத்தனமானது. மேலும் நீங்கள் எழுதியிருப்பதெல்லாமே தவறு . அடிப்படைத்தகவல்கள்கூட தவறு. இதையெல்லாம் தெரிந்துதான் நீங்கள் எழுதியிருக்க வேண்டும். கோசாம்பி அயோத்திதாசரை சந்தித்தெல்லாம் 1900த்திலே. அதேபோல சிங்காரவேலு என்பவர் முதலியாரரே கிடையாது. அவர் மீனவர். அரசாங்கமே அப்படி சொல்லி அவருக்கு மாளிகை கட்டியிருக்கிறது. முதலில் நீங்கள் சொன்ன விக்கிபீடியா கட்டுரையையே வாசிக்கவும். உலகப்போர் முடிந்த பிறகு சிங்காரவேலு அயோத்திதாசரை சந்தித்தார் , உலகப்போரிலே பிராமணர்கள் பிராமணரல்லாதவர்களை சுரண்டியதனால்தான் சிஙாரவேலருக்கு பிராமண வெறுப்பு என்றெல்லாம் உளறி வைத்திருக்கிறீர்கள். பிராமணர்கள்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்வதற்கு எவ்வளவு உளறல்கள் தேவையா உங்களுக்கு?
ரமணன் சென்னை
அன்புள்ள ரமணன்,
கடிதத்தை சுருக்கியிருக்கிறேன். மையக்கருத்துக்கள் எல்லாம் இருக்கும்படியாக.
என்னிடம் ஐந்து வெவ்வேறு நூல்கள் உள்ளன. நான்கில் மூன்றில் சிங்காரவேலரின் இயற்பெயர் மயிலாப்பூர்.சிங்காரவேலு செட்டியார் என்றும் ஒன்றில் மயிலை. சிங்காரவேலு முதலி என்றும் உள்ளது. அதில் ஒன்று இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ வரலாறு
நான் அறிந்தவரை அவரது இயர்பெயர் ம.சிங்காரவேலு செட்டியார் என்றே ஆவணங்கள் சொல்கின்றன. பெரும்செல்வந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்.சட்டம் பயின்றவர். அக்காலகட்டத்தில் பிள்ளை,செட்டி, முதலி பட்டங்கள் மாறி மாறி சொல்லப்படுவது வழக்கமே என்பதை ஓரளவு வாசிக்கும் பழக்கம் உடையவர் அறியலாம். ஆகவே என் கட்டுரையில் ஜடாயு சொன்னதை ஒட்டி நானும் முதலியார் என்று சொன்னேன், அது ஒரு நினைவுப்பிழை அல்லது புரிதல்பிழை.
அவர் மீனவசமூகத்தைச்ச் சேர்தவர் என சமீப காலமாகச் சொல்லப்படுவதை நான் இணையச்செய்திகளில் வாசித்தேன். அது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது. செட்டி, முதலி, பிள்ளை போன்ற அடைமொழிகள் குடும்ப பட்டங்களாக தென்மாவட்டங்களின் மீனவ சமூகத்திலும் உண்டு. ஒருவேளை இது அந்த வகையான பெயரா என தெரியவில்லை. தென்மாவட்டங்களில் இவ்வாறு பட்டம் கொண்ட மீனவக்குடும்பங்கள் பட்டக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மீனவத்தொழில் செய்பவர்கள் அல்ல. வரிவசூல் உரிமை கொண்டவர்கள், பெருவணிகர்கள், நிலக்கிழார்கள். மீனவச்சாதிக்குள் ஆதிக்க சாதி என்றே இவர்களைச் சொல்லலாம். பிற மீனவர்களுடன் மண உறவு வைத்துக்கொள்பவர்கள் அல்ல. தென்னகத்தில் மதம் மாறியபின்னரும் இந்த குலமேன்மையை தக்கவைத்துக்கொண்டார்கள். இவர்களின் சமூக இடமும் பிராமணரல்லாத இரண்டாம்நிலை ஆதிக்கசாதிக்குரியதே.
சிங்காரவேலரின் பிராமணவெறுப்பு என்பது ஒரு தனிப்பட்ட உளச்சிக்கல் அல்ல, அக்காலகட்டத்து சமூகச்சூழலால் உருவாக்கப்பட்டது என்று பார்ப்பதே வரலாற்று நோக்கு என்பதே என் தரப்பு. என் கட்டுரையில் மிகத்தெளிவாகவே அதைச் சொல்லியிருக்கிறேன். பிரிட்டிஷ் அரசு உருவான காலகட்டத்தில் ஒரேசமயம் பிராமணர்களின் எழுச்சியும் நிலவுடைமைச்சாதிகளின் சரிவும் நிகழ்ந்தது. பிராமணர்கள் ஒரு வடக்கத்தியஅடையாளம் தேடினர். பிறர்மேல் ஆதிக்க உணர்ச்சியையும் காட்டினர். விளைவாக பிராமண எதிர்ப்புணர்வு உருவானது. அது உருவான தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலர்
அதையே 'இந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலுமுதலியார். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன' என்று திட்டவட்டமாக சொல்கிறேன்.
அவருக்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன உறவு என்ற ஜடாயுவின் வினாவுக்கு விடையாக அந்த பிராமண எதிர்ப்புணர்ச்சி மெல்ல சைவஎழுச்சியாகவும் பின் தமிழ் அடையாள மீட்பியக்கமாகவும் கடைசியாக திராவிட இயக்கமாகவும் உருவானது என்று சொல்கிறேன். இரு உலகப்போர்களின் வரிவசூல் நெருக்கடிகள் வழியாக பிராமண -பிராமணரல்லாதார் பிளவு துல்லியப்பட்டு திராவிட இயக்கமாக பரிணாமம் கொண்டது.
இதெல்லாம் ஒன்றும் நான் ஆராய்ந்து சொல்லும் ரகசிய தகவல்களும் அல்ல. சாதாரணமான வரலாற்றுச்சித்திரம்தான். சிங்காரவேலரை இந்த விரிந்த பின்னணியில் வைத்துப்பார்க்கலாமென்பதே என் சித்திரம்.
இதைவிடவும் தெளிவாக எப்படி எழுதுவதென்று எனக்கு தெரியவில்லை.
ஜெ
உங்கள் கதைகள்-கடிதம்
ஜெ,
தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம்.
பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், சுந்தர ராம சாமி, ஜெயகாந்தன்,இந்திரா பார்த்த சாரதி, ஆதவன் எழுத்துக்களைப் படித்து ரசிக்க முடிந்த எனக்கு, உங்களது எழுத்துக்கள் சவாலாகவே இருந்தது.
தற்செயலாக திரு பி.ஏ.கிருஷ்ணன் அவர்களைத் தில்லியில் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவருடைய 'புலி நகக் கொன்றை' எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும், அவருடைய கதாநாயகன் கண்ணன்,ஏறத்தாழ எனது சம காலத்தவன் என்பதும், அவருடைய எழுத்து நடையும் என்னைக் கவர்ந்தது.
அவர் கேட்ட கேள்வி – உமக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் யார்?
என்னுடைய பதில் – திஜா, சுரா, இபா, ஆதவன், இராமுருகன், அ முத்துலிங்கம்.
ஜெயமோகன் எழுத்துக்களைப் படிக்க வில்லையா?
படிக்க முடியவில்லை – இது எனது பதில்.
முயற்சி செய்யுங்கள் – இது அவரது அறிவுரை.
தங்களுடைய காடு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஆனால் எழுத்தில் என்னால் முங்க முடியவில்லை. வெகு நாட்களுக்குப் பின் தங்களுடைய 'சோற்றுக் கணக்கு' கதையை இணைய தளத்தில் படிக்க நேரிட்டது. அன்று முழுவதும் யாருடனும் பேச முடிய வில்லை. அழுகை அழுகையாக வந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு திசம்பர் மாதக் குளிரில், மகாநதி இரண்டாம் காட்சியைக் கோவையில் ஒரு அரங்கில் பார்த்து விட்டு, மனது கனமாக விடுதியில் தூங்க முடியாமல் தவித்த நாள் நினைவுக்கு வந்தது.
அறம் தலைப்பில் நீங்கள் எழுதிய கதைகள் அனைத்தும் படித்து முடித்து விட்டேன். என்னுடைய ரசனை உயர்ந்து விட்டதா அல்லது என் போன்றவர்களுக்காகத் தங்களது திறமையைக் குறைவாக வெளிப்படுத்துகிறீர்களா என்பது தெரியவில்லை.
ஒரு பெரிய தொழிற்சாலை நிறுவ வேண்டி, பூர்வாங்க பணிகளுக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் எனக்கு, சோற்றுக் கணக்கு போன்ற எழுத்துக்களே, பாலைவனச் சோலைகள்.
வாழ்த்துக்களுடன்
சு செல்லப்பா
அன்புள்ள செல்லப்பா அவர்களுக்கு
அறம் வரிசைக் கதைகள் அறம் என்ற நேரடியான விஷயத்தைப் பேசுகின்றன. ஒவ்வொருவரும் அந்தரங்கத்தில் நன்கறிந்தது அறம். ஆகவே அவற்றுக்கு உள்ளாழங்களேதும் தேவையில்லை
நுண்ணிய அகச்சிக்கல்களையோ வாழ்க்கைசார்ந்த அறச்சிக்கல்களையோ ஞான உசாவல்களையோ பேசும் ஒரு ஆக்கத்துக்கு இந்த எளிமை சாத்தியமில்லை. எல்லாப் பக்கங்களையும் கணக்கில் கொண்டு எழுந்தாகவேண்டியிருப்பதனால் விரிவாகவும் ஆழ்மனம் சார்ந்து செல்லவேண்டியிருப்பதனால் கனவுத்தன்மையுடனும் அவை அமைகின்றன.
கடினம் என ஏதுமில்லை. என்னுடைய நடை மற்றும் குறியீடுகள் பிடிபடக் கொஞ்சம் தொடர்ந்து வாசிக்கவேண்டும். நான் செறிவாக எழுதுபவன் என்பதனால் கொஞ்சம் கவனமாக வரிக்குவரியாக வாசிக்கவேண்டும். அப்படி வாசித்தால் நீங்கள் வாசித்த பல இலக்கிய நூல்களில் ஆங்காங்கே தென்படும் நுட்பங்களும் ஆழங்களும் அனேகமாக எல்லா வரிகளிலும் இருக்கக் காண்பீர்கள். இது அவர்கள் தோள் மேல் ஏறி அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அவர்களின் தொடர்ச்சியின் எழுத்து.
ஜெ
கருணா
திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.கெ.பி கருணா,பவா செல்லத்துரையின் நண்பராக எனக்கும் அறிமுகமானவர். சென்றமுறை நாஞ்சில்நாடன் பாராட்டுவிழாவுக்காகத் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவரது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தேன். நல்ல இலக்கியவாசகர். மிகப்பெரிய அக்கல்லூரியின் ஒரு திறந்தவெளி அரங்கு மிக அழகானது.
கருணா எழுதும் அனுபவக்குறிப்புகளை இணையத்தில் வாசித்தேன். பேருந்தில் முதியவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் எழுந்து இடம் கொடுப்பது பற்றிய இரு அனுபவங்களை எழுதியிருக்கிறார். இரண்டு எல்லைகளில் உள்ள இரு அனுபவங்களைக் கோர்த்திருப்பதில் நுட்பம் தெரிகிறது. இரண்டுவகையான பண்பாட்டுச்சூழல். ஆனால் உண்மையான எதிர்வினைகள் ஒன்றுதான்.
மேலைநாடுகளில் முதியோருக்கு எழுந்து இடமளிப்பது அவர்களால் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது உண்மை. அதைப் பரிதாபம் அல்லது ஒதுக்குதல் என அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு இந்தியன் அதற்காகத் தன் வளர்ப்பால் அடைந்த பண்பாட்டை விட்டுவிடவேண்டுமா என்ன?யோசிக்க வைக்கும் சின்னவிஷயம்.
கோவையில் பேசுகிறேன்
கோவை புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 12 முதல் 21 வரை கோவை காந்திபுரம் வ.உ.சி பூங்கா வாசலருகே கைத்தறிக் கண்காட்சியகத்தில் நடைபெறுகிறது. தினமும் 11 மணிமுதல் கண்காட்சி நிகழும்
அதில் 17-8-2011 அன்று மாலை ஆறு மணிக்கு நான் பேசவிருக்கிறேன்.
18 -8-2011 மாலை ஊர்திரும்புவேன்.
August 15, 2011
மெல்லுணர்ச்சிகளும் கலையும்
ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் மெல்லுணர்ச்சிகளுக்கான இடம் என்ன என்று கேட்கப்பட்டது. நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது
உணர்ச்சிகள் அல்லது மெல்லுணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இந்தக்காலத்தில் நுண்மையான உணர்ச்சிகள் குறைகின்றன என்று சொல்வது ஒரு வழக்கம் என்றாலும் அது உண்மை அல்ல. யோசித்துப்பாருங்கள், பெரும்போர்கள் பஞ்சங்களின் காலமாக இருந்த நம் இறந்தகாலங்கள் மெல்லுணர்ச்சிகளுக்கு இன்றைவிட சாதகமான காலங்களா என்ன? மெல்லிய உணர்ச்சிகள் எப்போதும் இருக்கும். அவை இலக்கியத்தையும் கலைகளையும் எப்போதும் ஊடகமாகவும் கொள்ளும்.
ஆனால் இந்த மெல்லுணர்ச்சி என்ற சொல்லை நாம் கொஞ்சம் கவனமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. பலசமயம் சல்லிசான ஒரு உணர்ச்சியையே மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அன்றாட லௌகீக வாழ்க்கையின் சில சாதாரணமான தருணங்களை வேறுகோணங்களில் கண்டடைவதையே அப்படி எண்ணுகிறார்கள். அவற்றை முன்வைக்கும் எழுத்துக்களுடன் எளிதாக அடையாளம் காணமுடிகிறதென்பதே அவற்றை ரசிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.
பலசமயம் ஹோமியோ மருந்துபோல ஊசிமுனையில் தொட்டு ஒரு செம்பு நீரில் கலக்கி ஒன்றை அளித்தால் அது நுண்மை என்றும் அதை ஊகித்தெடுப்பதே கலையுணர்வு என்றும் சொல்லப்பட்டது. அவை உத்திநுட்பங்களே அல்லாமல் இலக்கியநுட்பங்கள் அல்ல. நல்ல வாசகன் ஒருபோதும் படைப்பின் உத்திநுட்பங்களை அக்கறைகொண்டு வாசிக்கமாட்டான்
அறுபது எழுபதுகளில் சாதாரணமான மனிதர்களிடம் மனிதாபிமானம் வெளிப்படும் தருணங்களைக் கண்டுபிடித்து எழுதுவது மெல்லுணர்ச்சி சார்ந்ததாகக் கருதப்பட்டது. இத்தகைய கணிசமான கதைகளைத் 'தப்பாகப்புரிந்துகொண்டுவிட்டுப் பின்னால் வருந்துவது' என்ற வகைமைக்குள் அடக்கிவிடலாம். ஒரு முறைமீறிய பாலுறவை மெல்ல தொனிக்கவிட்டுச் சொன்னால் அது மெல்லுணர்வு என்று எழுபதுகளில் கருதப்பட்டது. இன்று அக்கதைகளை செம்மலர் கணையாழி தொகுதிகளில் வாசித்தால் ஆச்சரியமாகவே உள்ளது.
சுந்தர ராமசாமி சொல்வார் 'காலையில் எழுந்ததுமே இன்று எதைப்பார்த்து நெகிழலாம் என யோசிக்கும் மனநிலை இது' என. இதை மிகையுணர்ச்சி [செண்டிமென்ட்] என்றே சொல்வேன். எப்படி மிகைநாடகம் [மெலோடிராமா] இலக்கியத்துக்கு ஒவ்வாததோ அப்படித்தான் இதுவும். ஆசிரியரே நெகிழ்ந்துகொண்டே கதைசொல்வது எப்போதுமே தமிழில் ரசிக்கப்படுகிறது. வாசகர் முன்கூட்டியே அந்த மனநிலைக்குத் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார். தன் முதிர்ச்சி, தர்க்கபுத்தி, நகைச்சுவைஉணர்ச்சி ஆகியவற்றை இக்கதைகளுக்காக கொஞ்சம் ரத்து செய்துகொள்கிறார்.
நல்ல வாசகன் அதைச்செய்வதில்லை. அவனுக்குத் தேவை சௌகரியமான சில மனநிலைகள் அல்ல. உண்மைகள். ஆகவே தன் முழுத் தர்க்கத்தாலும், முழு நகைச்சுவையாலும், முழு முதிர்ச்சியாலும் இலக்கியத்தை அணுகுவதே அவன் வழக்கமாகும். அந்த நிலையிலும் அவனை ஈர்த்து மேலே கொண்டுசெல்லும் ஆக்கங்களையே நாம் முக்கியமானவை என்கிறோம். தர்க்கத்தை நிறைவுசெய்தபின் உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் நோக்கிப் பேசுபவையாக அவை இருக்கும்.
அப்படியானால் மெல்லுணர்ச்சி என்றால் என்ன? 'மெல்லுணர்ச்சி என்பது இயற்கையிலும் மனிதர்களிலும் மறைந்துகிடக்கும் நுண்ணிய விஷயம் 'ஒன்றை உணர்வால் தொட்டு எடுப்பது' என வரையறை செய்யலாம். அந்த அம்சம் என்றும் இலக்கியத்தில் உண்டு. அத்தகைய உண்மையான மெல்லுணர்ச்சி என்பது அதைத் தொட்டதுமே சல்லிசாகப் போய்விடாது. நினைவிலும் உணர்விலும் வளரும். நாம் இங்கே சாதாரணமாக மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்ளும் பலவிஷயங்கள் ஒருநாள் தாண்டினால் அற்பமானவையாக ஆகிவிடுகின்றன.
கலையின் இலக்கு இதெல்லாமா என்ன? கலையின் ஊடகம் கற்பனை. அது நம்மைக் கற்பனைவழியாக இணையான ஒரு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். அன்றாடவாழ்க்கையில் எப்போதோ ஒரு உச்ச அனுபவத்தருணத்தில் மட்டுமே நாம் நம் ஆழத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தத் தருணத்தைக் கலை கற்பனைமூலம் அளிக்கவேண்டும். அதன் வழியாக நம் ஆழ்மனத்தை நோக்கி , அதன் வழியாக வாழ்க்கையின் மையம் நோக்கி அது செல்லவேண்டும்.
அறிவுடன் மட்டும் பேசும் மேலான ஆக்கங்கள் உள்ளன. அங்கத இலக்கியங்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் சிறந்த இலக்கியங்கள் நம் கனவுடன் பேசுகின்றன. நம்மில் ஊடுருவி நம் கனவை அவை கட்டமைக்கின்றன. அதற்காக மொழியைப் படிமங்களாக ஆக்குகின்றன.
அப்படியானால் படைப்பில் தர்க்கம் எதற்காக? ஒரு நல்ல வாசகனின் கனவுத்தளம் வலிமையான தர்க்கத்தால் மூடப்பட்டதாகவே இருக்கும். அவன் அதுவரை வாசித்தவையும் யோசித்தவையும் அடங்கிய ஒரு ஓடு அது. அதை உடைத்துத் திறக்கக்கூடிய அளவுக்கு வல்லமையான தர்க்கம் எழுத்தில் தேவை. வாசகனைவிட மேலான அறிவார்ந்த தர்க்கதளம் இல்லாத படைப்பு அவனைக் கவர்வதில்லை. ஆனால் அந்தக்கதவைத் திறந்தபின் இலக்கியம் செல்லும் இலக்கு அவனுடைய ஆழ்மனக் கனவுகளை நோக்கியே.
நல்ல வாசகனின் கனவுலகைச்சுற்றி அவன் அறிவுத்தர்க்கம் வீட்டைக் காக்கும் நாய்களைப்போல நின்றுகொண்டிருக்கிறது, எப்போதும் விழிப்புடன். அவனுக்கு அந்தக் கனவு அவ்வளவு முக்கியமென்பதனால் அவன் அதை அப்படிப் பத்திரமாக அந்தரங்கமாகத்தான் வைத்திருப்பான். அதைத் தீண்டாமல் ஆயிரம் கதைகளை சும்மா வாசித்துத் தள்ளிக்கொண்டுமிருப்பான். புனைகதையின் அறிவார்த்தம் என்பது அந்த வேட்டைநாய்களுக்கான இறைச்சித்துண்டுகள்தான். அவற்றை மீறி உள்ளே நுழைவதற்காக.
ஒரு நல்ல படைப்பின் உடல் மெல்லுணர்வைத் தீண்டும் நூற்றுக்கணக்கான அவதானிப்புகளுடன் மொழிவெளிப்பாடுகளுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில வரிகளை எடுத்து நீர்க்கச்செய்து அளித்தால் எளிய வாசகர்கள் எழுச்சியும் உவகையும் கொள்வார்கள். ஆனால் நல்ல வாசகனுக்கு அவை அவன் செல்லும் வழியாகவே இருக்கும் , இலக்காக அல்ல. இலக்கு என்பது மெய்மையைத் தீண்டும் கனவாகவே இருக்கமுடியும்
நவகண்டம்
அன்புள்ள ஜெ,
காவல் கோட்டம் அட்டைப்படத்தில் உள்ள நவகண்டம் கொடுக்கும் பெண் சிலையின் அபூர்வத்தன்மையைப் பற்றிக் கூறியிருந்தீர்கள் (டொரண்டோ அருங்காட்சியகம் பதிவில்). எங்கள் ஊர் (தென்கரை, சோழவந்தான் அருகில், மதுரை மாவட்டம்) சிவன் கோயிலின் முன்புள்ள களத்தில் அப்படி ஒரு சிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. தொல்லியல் துறை சார்பாகப் பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு, கோயிலைச் சேர்ந்த தேவரடியார் பெண் அது என்றும், மற்றும் பல வரலாற்றுத் தகவலும் தொகுக்கப்பட்டுப் 'பராக்கிரமபாண்டியபுரம்' என்னும் தலைப்பில் தனிநூலாக வெளியிட்டுள்ளது (மதுரை நாயக்கர் மகாலில் நூல் கிடைக்கும்). சிலை வெட்டவெளியில், முக்கியத்துவம் அறியப்படாமல் இருந்தாலும், உள்ளூர் மக்கள் அதையும் தெய்வமாகவே பாவிப்பதால், அவ்வப்போது படையலும், புதுத்துணியும் பெற்று 1000 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது. களம் சிமிண்ட் போடப்பட்டு நவகண்ட பெண் கால் புதைந்து நிற்கும் காட்சியும் இத்துடன் இணைத்துள்ளேன்.
மேலும் விவரங்கள் http://thenkarai.blogspot.com/
நன்றி,
பிரகாஷ்.
அம்மன் வழிபாடும் தற்கொலைப்போராளிகளும்
August 14, 2011
எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்
அன்புள்ள ஜெ ,,
எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன?
அதாவது ஒரு நாவலை வாசித்து 'இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்' என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா? நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் ஏன் ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துப்பேசவேண்டும்? நீங்கள் உங்கள் விமர்சனங்களில் ஓரளவுக்குத் தனிப்பட்ட விஷயங்களை தொட்டுக்கொள்கிறீர்கள். அதைப்பற்றித்தான் கேட்கிறேன்.எழுத்தாளனை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? அதனால்தான் இந்தக்கேள்வி. இன்னும் நான் சரியாகக் கேட்கவில்லை.
தமிழ்
அன்புள்ள தமிழ்
நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான். சமூகப் பொதுமனதில் இருந்து எழுத்தாளன் என்ற ஒரு பொதுப்பிம்பம் உருவாக்கப்பட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லா எழுத்தாளர்களுக்கும் போட்டுப் பார்க்கிறீர்கள். அந்தக் கற்பனைச்சித்திரத்தின் குரலாக எழுத்துக்களை வாசிக்கிறீர்கள். ஆனால் நேரில் சந்தித்தால் எழுத்தாளர்கள் அப்படி இருப்பதில்லை. இது ஏன்? எழுத்தாளர்களின் பொதுபிம்பம் என எதையும் வகுத்துவிடமுடியாது என்பதே என் பதில். நான் இங்கே பேசுவதெல்லாம் உண்மையான எழுத்தாளர்களைப்பற்றி. ஒரு நல்ல ஆக்கத்தையாவது உருவாக்கிய கலைஞர்களைப்பற்றி. பிற எதிலும்போலவே எழுத்தாளர்களிலும் போலிகளே அதிகம். பலசமயம் அதிக புகழுடன் இருப்பவர்களும் அவர்களே. காரணம் வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் போலிகள். உண்மையான வாசகனுக்கு நீடித்தகவனமும் சுயமான கற்பனையும் தேவை. போலிகளுக்கு அவை எதுவும் தேவையில்லை.
எழுத்தாளர்களின் மனம் என்பது அந்தச் சமூகத்தின் மனத்தின் உச்சமாக வெளிப்படுவது. அதற்காகவே தீவிரப்படுத்தப்பட்ட சமூகமனத்தின் ஒரு சிறு பகுதி அது என்று சொல்லலாம். ஒரு சமூகத்தின் கூட்டுஆழ்மனத்தின் லாவா வெளிப்படும் சில புள்ளிகள் என்று எழுத்தாளர்களை வகுத்துக்கொள்ளலாம். ஆகவே அச்சமூகத்தின் உன்னதங்களும் கீழ்மைகளும் எல்லாம் அங்கே பீறிட்டு வெளிக்கிளம்புகின்றன. எழுதும் கணத்தில் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு நாவாக அவன் மாறுகிறான். தனிப்பட்ட முறையில் எழுத்தாளனின் பணி என்பது தன்னைத் துல்லியமான ஓர் ஊடகமாக ஆக்கிக்கொள்வது மட்டுமே. எழுத்தில் எழுத்தாளனுக்குத் தேவையாக உள்ள பயிற்சி என்பது அதுவே. ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி. ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான். அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்தகாலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும். விளைவாகத் தனக்குரிய படிமமொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இதுதான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான். ஆனால் இது படைப்பூக்க நிலையில் மட்டும்தான். அப்போது மட்டுமே அவன் எழுத்தாளன். மிச்சநேரத்தில் அவன் வெறும் மனிதனே.
இன்னும் சொல்லப்போனால் சராசரி மனிதர்களை விட உள்வாங்கியவனாகவும் சஞ்சலங்கள் கொண்டவனாகவும் உணர்ச்சிகரமானவனாகவும் அவன் இருக்கக்கூடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் எழுத்தாளன் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அந்தபிம்பம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதிகம் வாசிக்காதவர்களுக்குக்கூட அந்தச் சித்திரம் மனதுக்குள் உள்ளது. நம் வணிகக்கதைகள் திரைப்படங்கள் எல்லாமே அந்த எளிமையான சித்திரத்தை அளிப்பவை. அந்தச் சித்திரத்துடன் எழுத்தாளனைச் சந்திக்கும் வாசகனுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. பலசமயம் நடை உடைபாவனைகளேகூட ஏமாற்றத்தை அளிக்கின்றன.
நான் எப்போதுமே எழுத்தாளன் என்று சமூகம் கட்டமைத்துள்ள அந்த பிம்பத்தைச் சுமக்கக்கூடாதென நினைத்துக்கொண்டிருப்பவன். லௌகீகவாழ்க்கையில் நான் எதுவோ அதையே புறத்தோற்றமாகக் கொண்டவன். சமூக மரியாதைகளைப் பேணக்கூடியவன். ஆகவே என்னைச் சந்திக்கும் பலர் 'நீங்க எழுத்தாளர் மாதிரியே இல்லை' என்று சொல்வதுண்டு. மேலும் ஓர் அளவுக்குமேல் நெருக்கமாக ஆகிவிட்டவர்களிடமே நான் விரிவாகவும் தீவிரமாகவும் பேசுகிறேன். ஆகவே சிலருக்கேனும் என் பிம்பம் நேரில் சிதையக்கூடும். ஆனால் என்பிம்பம் கணிசமான வாசகர்களிடம் மெல்ல மெல்ல வேறுவகையில் வலுவாக உருவாவதையே காண்கிறேன். அதுவே எனக்கிருக்கும் மிக விரிவான தனிப்பட்ட நண்பர்-வாசகர் வட்டத்துக்கான காரணம். இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது. அவர்களனைவருமே வழக்கமான எழுத்தாள சித்திரம் ஒன்றை உடைத்துவிட்டு என்னைப்பற்றிய வேறு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்பிம்பம் உடைவதில்லை.
[காஃப்கா]
கலைஞர்களைப்பற்றிய இந்த சமூகச்சித்திரம் எப்படி உருவானது? ஒரு தொடக்கப்புள்ளியாக ஜான் ரஸ்கின் எழுதிய 'நவீன ஓவியர்கள்' என்ற பெரும் நூலைச் சொல்லலாம். அது ஓவியத்தை விட அதிகமாக நவீன இலக்கிய விமர்சனத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியதாகும். எழுத்தாளனின் மனதை அடிப்படையாகக் கொண்டு எழுத்தை ஆராய்வதற்கான சிறந்த தொடக்கமாக அமைந்தது அந்த நூல். அதன் பின்னர் இன்றைய விமரிசனம் வரை தொடர்ச்சியாக எழுத்தாளனின் மனதுக்கும் எழுத்துக்கலைக்குமான உறவைப்பற்றி ஏராளமான கோட்பாடுகள் பேசப்பட்டிருக்கின்றன. கலை என்பது கலைஞனின் ஆளுமையின் ஓர் உச்ச வெளிப்பாடு என்ற கருத்தை மேலைச்சிந்தனையில் ஆழமாகப் பதிவுசெய்தது ரஸ்கினின் நூல்தான். இன்றுவரை அந்த அடிப்படை நம்பிக்கையில் இருந்து மேலைச்சிந்தனை வெளிவந்து விட்டது என்று சொல்ல முடியாது. இன்றைய இலக்கிய விமர்சன மரபு என்பது கிட்டத்தட்ட ரஸ்கினின் சமகாலகட்டத்தில் தத்துவ விவாதம், அறிவியல் விளக்க கட்டுரைகள், மதவிளக்கக் கட்டுரைகள் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆகவே ஆரம்பகால இலக்கியவிமர்சனம் எழுத்தாளனின் ஆளுமைக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு நேர்கோட்டைப் போட முயல்கிறது.
சாமுவேல் ஜான்சன், கூல்ரிட்ஜ் போன்றவர்களின் இலக்கிய விமரிசனத்தின் செயல்பாட்டை எளிமையாக இவ்வாறு சொல்லலாம். இலக்கியப் படைப்புகள் காட்டும் உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்கள் வழியாகவும் வாழ்க்கை வரலாற்றுத்தகவல்கள் வழியாகவும் அந்த படைப்பாளியின் ஆளுமையை உருவகித்துக்கொள்கிறது அது. அதன்பின் அந்த ஆளுமையின் வெளிப்பாடாக அந்த இலக்கியப்படைப்புகளை வாசிக்கிறது. படைப்பு> படைப்பாளி > மீண்டும்படைப்பு என்ற இந்தச் சுழற்சியை நாம் மரபான விமர்சனங்கள் அனைத்திலும் காணலாம். இது இயல்பானதும் பயனுள்ளதுமாகும் என்றே நானும் நினைக்கிறேன். இதன் போதாமைகளை நிரப்பி நாம் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. படைப்பைப் படைப்பாளியின் ஆளுமையாகக் காண ஆரம்பித்ததுமே படைப்பாளியின் ஆளுமைச்சித்திரம் பிரம்மாண்டமானதாக ஆகியது. எழுத்தாளன் அவன் வாழும் காலகட்டத்தின் மாதிரிச்சான்று என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே அவனை ஆராய்வது அச்சமூகத்தையே ஆராய்வதாகும் என நம்பினர். கலைஞனைக் கதாநாயகனாக ஆக்குவதென்பது ரஸ்கினின் காலம் முதலே இலக்கியத்தில் பெருமரபாக ஆகிவிட்டிருந்தது. கலைஞன் மிகமிகச் சிக்கலான ஆளுமை என்றும் அவனுடைய அகம் நுட்பங்களால் ஆனது என்றும் உருவகிக்கப்பட்டது. கலைஞனின் அகத்தைச் சித்தரிப்பதென்பது எழுத்தாளர்களுக்கு எளியது, அவர்களால் அதைத் தன்னுடன் சேர்த்து அடையாளம் காணமுடியும் என்பதும் காரணம்.
ஆனால் இவ்வாறு பத்தொன்பதாம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கதாநாயகக் கலைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என மேலை இலக்கியத்தில் விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. ரோமெய்ன் ரோலந்தின் ழீன் கிரிஸ்தோஃப் என்ற புகழ்பெற்ற பேரிலக்கிய நாவலை முன்வைத்து விரிவான சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன. அந்த உருவகங்கள் பெரிதும் விருப்பக் கற்பனைகளே என்று கூறப்பட்டது. கலைஞனைத் தன்னைப்போன்றவன் என நினைக்கும் எழுத்தாளன் கலைஞனின் சித்திரத்தை மிகையாகப் புனைய ஆரம்பிக்கிறான். தன் இலட்சிய பிம்பமாக அவனைப் புனைந்து வைக்கிறான். ஐரோப்பாவின் சமகாலப் பண்பாட்டு வரலாற்றில் ஷீன் கிறிஸ்தோஃப் முதலிய பேரிலக்கியங்கள் ஆற்றிய பங்களிப்பு மிக நுட்பமானது. முந்தைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கலைஞர்கள் ஒருவகை அன்னியர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்கள் கட்டற்றவர்களாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் எண்ணப்பட்டார்கள். வீரர்களுக்கும் பிரபுக்களுக்கும் அளிக்கப்பட்ட மரியாதையில் சிறுபகுதிகூட கலைஞர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் ஜனநாயக யுகம் ஆரம்பித்தபோது குலப்பெருமை வழிபாடு பின்னகர்ந்தது. வீரவழிபாடு வேறு வடிவங்களுக்கு உருமாற்றம் கொண்டது. மக்களை கவரக்கூடியவர்களான கலைஞர்கள் பெரும் வழிபாட்டு பிம்பங்களாக எழுந்து வந்தார்கள். அப்போது கலைஞர்களின் பொதுப்பிம்பங்களைக் கட்டி எழுப்பவேண்டிய தேவை உருவானது. அதற்கான முன்னுதாரணங்களைப் புனைவில் உருவாக்கி அளித்தன ஷீன் கிறிஸ்தோஃப் போன்ற நாவல்கள்.
ஐரோப்பிய வரலாற்றை எடுத்தால் பல கலைஞர்களின் ஆளுமைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுப் பெருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். முக்கியமான உதாரணம் மொசார்த் தான். நவீன ஐரோப்பிய பண்பாட்டின் தொடக்கப்புள்ளி என்றுகூட அவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அங்கே ஆரம்பித்த இந்தக் கலைஞனைச் சித்தரிக்கும் போக்குத்தான் இன்று எழுத்தாளர்களின் வரலாற்றை எழுதுவதில் வந்து நிற்கிறது. 
[மொஸார்த்]
நமக்கு நவீன இலக்கியம் ஐரோப்பிய கற்பனாவாத இலக்கியங்கள் மூலம் அறிமுகமாகியது. அதனுடன் சேர்த்தே கலைஞன் என்ற நவீன உருவகமும் இங்கே வந்திருக்கவேண்டும். அந்த உருவகம் இங்கிருந்த எழுத்தாளர்களை எப்படிக் கிளர்ச்சி கொள்ளவைத்திருக்குமென ஊகிக்க முடிகிறது. ஆரம்பகால வங்க எழுத்துக்களிலெல்லாம் கலைஞனான இலட்சியக் கதாநாயகனை நாம் காண்கிறோம். இந்த இலட்சியவாத நோக்கு பின்னர் கலைஞர்களை அந்த வெளிச்சத்தில் சித்தரித்துக்கொள்ள நமக்குத் தூண்டுதலாகியது. கலைஞர்களை நாம் சித்தரித்துக்கொண்டதை சமூகமே சேர்ந்து நிகழ்த்திக்கொண்ட புனைவு என்று சொல்லலாம். உதாரணமாக நாம் பாரதியை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். பாரதியின் பாடல்களின் உணர்ச்சிநிலைகள் வழியாக நாம் அவரை உணர்ச்சிகரமானவராக, கற்பனாவாதப்பண்பு கொண்டவராக, கொந்தளிப்பானவராக உருவகித்துக்கொள்கிறோம். அவரது கருத்துக்கள் வழியாக அவர் ஒரு தேசியவாதி, தமிழ்ப்பற்றுக் கொண்டவர், சக்தி வழிபாட்டாளர்,பின்னர் அத்வைதி என்று புரிந்துகொள்கிறோம். அதன் பின் பாரதியின் வாழ்க்கைவரலாற்றை இந்தக் கோணத்தின் வழியாகத் தேடிக் கிடைக்கும் பலவகையான தகவல்கள் வழியாகப் புனைந்து உருவாக்கிக் கொள்கிறோம். இலக்கியம் அளிக்கும் சித்திரத்தை வைத்தே வாழ்க்கை வரலாற்றுச் சித்திரத்தைத் தொகுத்துக்கொள்கிறோம். பலசமயம் இலக்கியம் அளிக்கும் சித்திரத்தைக் கொண்டு வாழ்க்கைவரலாற்றின் இடைவெளிகளைக் கற்பனை மூலம் நிரப்பிக்கொள்கிறோம். நிறைய சந்தர்ப்பங்களில் இலக்கியம் அளிக்கும் சித்திரத்துடன் பொருந்தும்படியாகப் பாரதியின் வாழ்க்கையைக் கற்பனைமூலம் மிகைப்படுத்தவும் செய்கிறோம். பாரதி காந்தியைச் சந்தித்தது போன்ற பல நிகழ்ச்சிகள் பின்னர் இவ்வாறு உருவாக்கப்பட்டவை. பாரதியின் வாழ்க்கையைச் சித்தரித்து அவரது ஆளுமைச்சித்திரத்தை உருவாக்க அப்படி எத்தனை நூல்கள் தொடர்ச்சியாக ஐம்பதாண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டுள்ளன என்று பார்த்தால் ஆச்சரியம் ஏற்படும். கற்பனை அம்சம் குறைவான நூல்கள் என்று யதுகிரி அம்மாளின் 'நான் கண்ட பாரதி' ,கனகலிங்கத்தின் 'எனது குருநாதர்' போன்ற நூல்களைச் சொல்லலாம். கற்பனை அம்சம் கூடிய சித்தரிப்புகள் என வராவின் 'மகாகவி பாரதி' என்ற வரலாற்றையும் பரலி சு நெல்லையப்பரின் 'மகாகவி பாரதி வரலா'ற்றையும் சொல்லலாம். இந்தப்போக்கு கடைசியில் படைப்புக்களில் இருந்து உருவாக்கப்பட்ட பாரதியே பாரதியின் ஆளுமை என்ற இறுதிநிலையை அடைவதை ராஜம் கிருஷ்ணனின் 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்ற நூலில் காணலாம்.
[பாரதி]
இவ்வாறுதான் சென்றகாலத்தைய இலக்கிய ஆளுமைகளின் சித்திரங்கள் முழுக்க நமக்கு உருவாக்கியளிக்கப்பட்டிருக்கின்றன. மேலைநாட்டில் இலக்கிய ஆளுமைகளின் குணசித்திரத்தைப் படிப்படியாகப் பல்வேறு நூல்கள் மூலம் உருவாக்கிக் கொள்வதென்பது முக்கியமான இலக்கியச் செயல்பாடாகவே உள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, பால்ஸாக்,மாப்பசான், மார்சல் புரூஸ்ட் போன்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள்,பல தலைமுறை எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டவை. அதன்பின் வந்த நவீனத்துவ இலக்கிய காலகட்டம்,எழுத்து என்பதை எழுத்தாளனின் ஆளுமையின் ஒரு முகம் மட்டுமே என்று எண்ணியது. ஆகவே இக்காலகட்டத்தில் கலைஞனின் தனிவாழ்க்கை என்பது மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. உதாரணமாக எந்தக் காஃப்கா கதையும் காஃப்காவின் தனிவாழ்க்கை அளவுக்குப் பேசப்பட்டதில்லை. அவரது தனிவாழ்க்கையை மனதில் கொள்ளாமல் அவரது எந்தக் கதையும் வாசிக்கப்பட்டதில்லை இக்கணம் வரை இவ்வாறு கலைஞனின் ஆளுமையைப் புனைவதும் மறுபுனைவுசெய்வதும் ஆராய்வதும் மேலைநாட்டு இலக்கியத்தில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. வின்செண்ட் வான்கா, போன்ற ஓவியர்கள், விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவ அறிஞர்கள் எக்காலமும் வாழ்க்கைவரலாற்று ஆய்வாளர் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில்கூட இன்றும் அப்போக்கு தொடர்கிறது. தமிழிலக்கியத்தில் கற்பனாவாதச் சாயலுடன் கலைஞனைக் கதாநாயகனாக ஆக்கிய படைப்புகளுக்கு மூன்று சிறந்த முன்னுதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று, 'மோகமுள்'. பாபுவை இசைக்கலைஞனாகச் சித்தரிப்பதனூடாக அவனை மிகமிக நுட்பமானவனாக உணர்ச்சிகரமானவனாகக் காட்டுகிறார் தி.ஜானகிராமன். பாபுவின் நெகிழ்ச்சிகள் எல்லாமே இசைமூலமே சொல்லப்படுகின்றன என்பது அந்நாவலை மிக விரும்பத்தக்கதாக ஆக்கியது. இன்னொரு உதாரணம் கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்'.சிக்கல் ஷண்முகசுந்தரம் என்ற இசைக்கலைஞனின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். அன்றைய இசைமேதையான ராஜரத்தினம்பிள்ளையின் சாயலில் உருவாக்கப்பட்டது இக்கதாபாத்திரம். ராஜரத்தினம்பிள்ளை அவரது கலைச்செருக்கு,சுதந்திர மனப்பான்மை,கட்டற்ற உணர்ச்சிநிலைகள் ஆகியவற்றுக்காகப் பெரும்புகழ்பெற்றவர். அந்த ஆளுமைக்கூறுகளை இந்நாவல் வெற்றிகரமாக அதன் நாயகனுக்கும் அளிக்கிறது. இவ்விரு நாவல்களும் கிட்டத்தட்ட ஷீன் கிறிஸ்தோஃப் ஆற்றியபணியையே இங்கே செய்தன என்பதை காணலாம். அவை நவீன ஜனநாயக சூழலுக்காக கலைஞன் என்ற முன்னுதாரணச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன.பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிரபுக்களின் சேவகர்களாக இருந்த கலைஞர்கள் அக்காலகட்டத்தில் மக்கள்நாயகர்களாக மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு இந்தச் சித்தரிப்புக்கள் பேருதவி செய்கின்றன. அதற்கு அன்று பேருருவம் கொண்ட அச்சு, காட்சி ஊடகங்களும் உதவின.இக்காலகட்டத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா, ராஜரத்தினம் பிள்ளை போன்ற வசீகரமான கலைஞர்களின் ஆளுமைகள் வாய்மொழிப்பேச்சுக்களில் பரவிய துணுக்குச்செய்திகள் மூலம் சமூகமனத்தில் கட்டி எழுப்பப்பட்டன. இக்கலைஞர்களின் ஆளுமையில் மிக வசீகரமாக இருந்தது இவர்களின் மீறல்தான். மரபை இவர்கள் மீறிய விதம். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை உதறி முன்னால்சென்ற விதம். ஏன் ஒழுக்கத்தை மீறி எழுந்த விதமும்தான். மக்கள் அவர்கள் விழைந்த மீறல்களைச் செய்பவர்களாக இவர்களைப்புனைந்தார்கள். உண்மையில் தில்லானா மோகனாம்பாளுக்குப் பின்னரே ராஜரத்தினம்பிள்ளை பெரும் ஆளுமையாகச் சமூக மனதில் வளர்ந்தெழுந்தார் என்கிறார்கள். இருக்கலாம். அது ஒரு கொண்டு-பெற்று வளரும் உறவு. வாய்மொழிக்கதைகள் இலக்கியமாகின்றன. இலக்கியம் வாய்மொழிக்கதைகளை வளர்க்கிறது இவ்விரு நாவல்களையும் இன்று வாசித்தால் இருமைகள் கட்டமைக்கப்பட்டு அந்த வேற்றுமைகள் மூலம் இலட்சியக்கலை, இலட்சியக்கலைஞன் என்ற படிமம் செதுக்கி உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தியாகையரின் சாயலில் உருவாக்கப்பட்ட ரங்கண்ணா என்ற இசையாசிரியனின் நேரடி வாரிசாக பாபு உருவாக்கப்படுகிறான். இசையை வணிகக்கலையாக ஆக்கும் ராமு,பாபுவுக்கு நேர் எதிரான ஆளுமையாகக் கட்டமைக்கப்படுகிறான். அதேபோலப் பல இருமைகளைத் தில்லானா மோகனாம்பாள் உருவாக்குகிறது. பழமையில் தேங்கிப்போய் ஒரேமாதிரியாக வாசிக்கும் மரபுக்கு நேர் எதிராகத் திருவாரூர் பாரிநாயனத்தை எடுத்து வாசிக்கும் சண்முகசுந்தரம் உருவாக்கப்படுகிறான். இன்னொருபக்கம் அன்று வந்துகொண்டிருந்த ஆங்கில இசைக்கு எதிரான தேசிய இசையின் கலைஞனாகக் காட்டப்படுகிறான். இன்னொரு பக்கம் 'டப்பாங்குத்து' இசையான ஜில்ஜில் ரமாமணியின் இசைக்கு எதிரானவனாக அவன் நிறுத்தப்படுகிறான். 
[ராஜரத்தினம் பிள்ளை ]
அக்காலகட்டத்து வெற்றிகரமான வணிகநாவலாக இருந்த, ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் 'சித்திரப்பாவை',கலைஞனை ஒட்டுமொத்த சமூகத்தையே வழிநடத்தும் இலட்சியவாதியாக மேலும் முன்னெடுத்துச் செல்வதைக் காணலாம். அதன் கதாநாயகன் அண்ணாமலை ஒர் ஓவியன். அன்றைய வெகுஜன வாசகர்களுக்குப் புரியும்படியாக ஒரு எளிமையான உருவப்படம் தீட்டும் ஓவியனாகவே அகிலன் அவனைக் காட்டியிருக்கிறார். 'இன்றைய வாழ்க்கையின் அகப்புற நிலைகளை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கான மனப்போக்கை உருவாக்கும் கடமை எனக்கிருப்பதாக நான் நம்புகிறவன்' என சித்திரப்பாவையின் முன்னுரையில் அந்நாவலின் நோக்கத்தைச் சொல்லும் அகிலன்,அந்த உயர் இலட்சியவாதத்தின் மனிதவடிவமாகவே அண்ணாமலை என்ற கலைஞனைப் படைத்திருக்கிறார். தமிழில் நவீனத்துவ எழுத்து அதன் தொடக்கத்தை நிகழ்த்தியபோதே அறிவுஜீவியும் கலைஞர்களுமான கதாநாயகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இதற்கும் இரு முக்கியமான உதாரணங்கள். ஒன்று, ஜெயகாந்தனின் 'பாரீஸுக்குப் போ' அதில் இசைக்கலைஞன் இசைக்கலைஞனாக அல்ல, நவீனத்துவத்துக்கே பிரதிநிதியாக வெளிப்படுகிறான். பழமையுடன் போரிடுபவனாக, புதிய உலகின் விழுமியங்களை உள்வாங்கித் தெளிவாக முன்வைப்பவனாக அவன் காட்டப்படுகிறான். சுந்தர ராமசாமியின் 'ஜே ஜே சிலகுறிப்புகள்' இன்னொரு உதாரணம். சுந்தர ராமசாமி கலைஞனை ஒரு இலட்சியவாதியாகக் காட்டவில்லை. அவனுடைய சஞ்சலங்களையும் தத்தளிப்புகளையும் தேடலையும் முதன்மைப்படுத்துகிறார். நவீனத்துவத்துக்கு இரு முகங்கள். ஒன்று, பழைய மதிப்பீடுகளை மறுத்து வாதாடும் சீர்திருத்த வேகம். அதற்கு ஜெயகாந்தனின் நாவல் உதாரணம். இன்னொன்று, நவீன யுகத்தில் தன் இருப்புக்காகத் தேடி விழுமியங்களுக்காக அலைமோதும் இருத்தலியல். அதற்கு ஜேஜே சிலகுறிப்புகள் உதாரணம் இவ்வாறு கிட்டத்த இரு நூற்றாண்டுகளாகப் பண்பாட்டுவெளியில் எழுத்தாளன் என்ற படிமம் தொடர்ந்து செதுக்கப்பட்டுவருகிறது. அது ஒரு நவீனத்தொன்மம் என்று கொள்வதே சிறந்தது. அதற்குப் பலவகையான சமூகப்பயன்பாடுகள் இருந்தன. ஆகவேதான் அது தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. இன்றும் நீடிக்கிறது. முதலில் அது கருத்தியல்செயல்பாடு, கலைகள், இலக்கியம் ஆகியவற்றுக்குச் சமூக அறத்தை உருவாக்கி நிலைநாட்டுவதில் உள்ள பங்கைச் சமூக மனதில் நிலைநாட்டுகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கலைஞனுக்கு இந்த இடம் இல்லை என்பதை நினைவுகூரவேண்டும். அவன் அரசசபைகளிலோ அல்லது தேர்ந்த சில ரசிகர்களிடமோ மட்டுமே தொடர்புகொண்டுவந்தான். அவன் ஜனநாயக யுகத்தில் இவ்வாறு பொதுக்கருத்தை உருவாக்கும் ஆளுமையாகக் கட்டமைக்கப்படுகிறான். பாரதி,கல்கி, ஜெயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த செல்வாக்கு இவ்வாறு உருவானதே. ஒருபடைப்பை வாசிப்பதற்கு எப்படியோ அந்த படைப்பாளியின் ஆளுமை என்ற ஒரு மானசீகச் சித்திரம் தேவையாகிறது. வாசகன் அந்த ஆளுமையுடன் கொள்ளும் அந்தரங்கமான உரையாடலே வாசிப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. அந்த எழுத்துக்களின் உச்சநிலைகளை மட்டுமே தொடுத்து உருவாக்கப்பட்ட ஆளுமையாகவே அந்தச் சித்திரம் இருக்க முடியும். அது ஓர் இலட்சிய பிம்பமே. எழுத்தாளனின் உண்மையான அன்றாட ஆளுமை அந்தப் பணியை ஆற்றமுடியாது. அந்த வாசகன் எழுத்தாளனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு அன்றாடவாழ்க்கையிலும் அவ்வெழுத்தாளன் அல்லது கலைஞன் கொள்ளும் உச்சகட்ட வெளிப்பாட்டு நிலைகளையும் மனநிலைகளையும் நேரில் கண்டாலொழிய. அது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆகவே பொதுவெளியில் எழுத்தாளன் கலைஞன் என்ற ஒரு நவீன தொன்மம் எப்போதுமே நீடிக்கும். அதன் ஒளியில் எல்லா எழுத்தாளர்களும் வாசகனால் கட்டமைக்கப்படுவார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் உண்டு. ஆனால் எழுத்தாளனிடம் அந்த ஆளுமையை அப்படியே எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். அப்படி எதிர்பார்க்காமல் இருக்கலாம். அல்லது எழுத்தாளனைச் சந்திக்காமல் இருக்கலாம். இதில் இன்னொன்று உண்டு. போலிஎழுத்தாளர்கள் மிக எளிதாக அந்தப் பொதுபிம்பத்தைத் தங்கள் ஆளுமையாக ஆக்கி நடிப்பார்கள். அப்படி எத்தனையோ போலிகளை நாம் மேடைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இதை ஒரு விதி என்றேகூட சொல்லுவேன். ஓர் எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள சித்திரம் மாறவில்லை என்றால் அவன் எழுத்தாளன் அல்ல, நடிகன்.
ஜெ
சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
எனக்கு வயது நாற்பத்துமூன்று. என்னுடைய பிளஸ்டூ வயதிலே நான் சுஜாதா வாசித்தேன். அப்போது என்னுடைய ஆதர்சம் அவர்தான். பின்னாடி ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷம் கழித்து வாசித்தபோது 'என்ன இது'ங்கிற மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் வாசிக்கவும் முடிந்தது. தொடர்ந்து ஒரு மூன்றுநாவல் வாசித்தபின் சலிப்பாகிவிட்டது.
உங்கள் இணைய தளத்தில் சுஜாதாவைப்பற்றி நடக்கும் சர்ச்சைகளை வாசிக்கிறேன். பலருக்குக் கோபம் இருக்கிறது என்று இணையத்தில் வாசித்தேன். அப்படி கோபம் கொள்பவர்களிலே கொஞ்சம் சாதியபிமானமும் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவர் என் அலுவலகத்திலேயே மிகவும் கோபமாகப் பேசினார். ஆனால் எல்லாருமே அந்த இளமைப்பருவ வாசிப்பிலேயே நின்றுபோனார்கள் என்றும் நினைத்தேன். மேலே எதையும் வாசிக்கும் மனநிலை இல்லாமல் சுஜாதாவை வைத்துக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள்.
இப்போது ஒரு இருபது வயசாகக்கூடிய பையன்களுக்கு சுஜாதா பிடித்திருக்குமா என்று தோன்றியது. சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். அப்படி இல்லை. அவர்களுக்கு சுஜாதா பெரிதாக சுவாரசியமாக இல்லை. சுஜாதாவின் கதைகளிலே உள்ள டெக்னிக் எல்லாம் அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறது. நடையும் பெரிதாக ஈடுபாடு இல்லை. நான் சொல்வது பெரிய இலக்கிய வாசகர்களை இல்லை. சும்மா ஆங்கிலநாவல் வாசிக்கும் வாசகர்களைத்தான். சுஜாதாவைக் கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு போகிறவர்கள் சின்னவயசிலே அவரைப் படித்தபிறகு வேறு எதுவுமே பெரிதாகப் படிக்காமல் இப்போது மீண்டும் படிப்பவர்கள்தான்.
சமீபத்திலே சுஜாதா என்று தேடியபோது இந்த இணைப்பு கிடைத்தது. http://crackedpots.co.in/?p=1136 , http://crackedpots.co.in/?p=1146. இந்தப்பையன் சின்னவயசு. யாரோ சொல்லிக் கேள்விப்பட்டு சாதாரணமாக சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து ஏமாற்றம் அடைந்திருக்கிறான்.அவனை அதற்காக நிறையப்பேர் திட்டியிருக்கிறார்கள்.சுஜாதா இளையதலைமுறைக்கான எழுத்தாளர் என்ற பில்ட் அப் கலைகிறதே என்றுதான் திட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். சுஜாதாவின் எழுத்துக்களை ஏன் எல்லாரும் வாசிக்கிறார்கள் என்றால் அதைப்பற்றித்தான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதை வாசிக்கப் பெரிதாக சிரமப்படவும் தேவையில்லை என்பதுதான் காரணம்
சீனிவாசன் கண்ணன்
அன்புள்ள சீனிவாசன்,
சுஜாதா ஒரு வாசிப்புக்கட்டத்தை நிரப்பக்கூடியவர். அந்த இடத்தில் அவர் கொஞ்சநாள் இருப்பார் என்றே நினைக்கிறேன். அதை வாசித்து வளர்ந்தவர்களின் மலரும் நினைவுகளில் இன்னும் அரைநூற்றாண்டு கூட நீடிக்கலாம். நீங்கள் சொல்வதுபோல அவரது எழுத்து இளைஞர்களைக் கவர்கிறதா என்பது எனக்கே சந்தேகம்தான்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

