வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை by Jeyamohan
22 ratings, 4.68 average rating, 1 review
வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை Quotes Showing 1-30 of 38
“கோட்டைவாயிலைத் திறக்கும் யானைகள் இரண்டு தலையை ஆட்டியபடி மணியோசையுடன் வந்தன. அவை அப்பணியை புதிதாகக் கற்றுக்கொண்டவை என்பதனால் அதில் மிகுந்த ஆர்வத்துடன் அப்பொழுதை எதிர்பார்த்து அரைநாழிகைக்கு முன்னரே ஒருங்கி காத்திருந்தன. சங்கிலி அவிழ்க்கப்பட்டதும் அவை தாங்களாகவே கிளம்பி சுழலாழி நோக்கி சென்றன. அவற்றை நடத்திவந்த யானைப்பாகர் குலத்துப் பெண்ணுக்கு பன்னிரு அகவைகூட இருக்காதென்று தோன்றியது. அவள் துரட்டியையும் குத்துக்கம்பையும் வெறுமனேதான் கையில் வைத்திருந்தாள்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“ஆண்கள் கைபதறும் பொழுதுகளில் பெண்கள் பதினாறு கைகளுடன் எழுகிறார்கள்”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை மாறிமாறி வெறியுடன் மிதித்தான். அவன் உடலின் அனைத்து உறுப்புகளையும் மிதித்தே சிதைத்தான். திருஷ்டத்யும்னனின் உடலில் இருந்து பிரிந்த உயிர் குரல்கொண்டதுபோல அவன் கதறல் வேறெங்கிருந்தோ என எழுந்தது “ஆசிரியரே! ஆசிரியரே! ஆசிரியரே!” என்னும் ஓலத்துடன் திருஷ்டத்யும்னன் நிலத்தில் கிடந்து நெளிந்தான். “ஆசிரியரே! ஷத்ரியன், ஆசிரியரே. நான் ஷத்ரியன், ஆசிரியரே!” என்று அவன் குரல் குழைந்தது. அக்குரல் மேலேயே மிதிகள் விழுவதுபோலிருந்தது. அக்குரல் நெளிந்து சிதைந்து உருவழிந்தது. “ஷத்ரியன், ஆசிரியரே!” சொற்கள் துணுக்குகளாகி இருளில் பரவின. ஓய்ந்து அவை அமைதியாக மாறிய பின்னரும் அஸ்வத்தாமன் உதைத்துக்கொண்டே இருந்தான்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“திருஷ்டத்யும்னன் அஸ்வத்தாமனின் கால்களை கைகளால் பற்றிக்கொண்டு உரத்த குரலில் மன்றாடினான். “ஆசிரியரே, எனக்கு உகந்த இறப்பை அளியுங்கள்… என்மேல் அளி கொள்ளுங்கள். ஷத்ரியனுக்குரிய சாவை எனக்கு அளியுங்கள்!” அவன் தலைமயிரை பற்றிச் சுழற்றித் தூக்கி அவன் முகத்தில் உமிழ்ந்தான் அஸ்வத்தாமன். “கீழ்மகனே, படைக்கலம் இன்றி தேரிலமர்ந்திருந்த ஆசிரியரின் தலையை அறுத்து வீசியவன் நீ. அவர் உடலை எட்டி உதைத்தவன் நீ. நெறி குறித்தோ அளி குறித்தோ உன் நாவால் பேசுகிறாயா?” என்று கூவினான். “அளி என நீ பேசியதனால் உனக்கு புழுவின் சாவை அளிக்கிறேன். நீ மறுபிறப்பில் புழுவென்றாகி நெளிக! ஒளியே அறியாத இருட்புழுவாக ஆகுக!”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“சுருதகீர்த்தி நிர்மித்ரனிடம் “இளையோனே, வெளியே ஏதோ ஒளியசைவு தெரிகிறது. தொலைவில்தான்… ஆனால் ஒரு பந்தம் அணுகி வருகிறது” என்றான். நிர்மித்ரன் “எப்படி தெரியும்?” என்றான். “இச்சுவரின் துளையினூடாக நிழலாட்டம் மாறுபட்டது” என்றான் சுருதகீர்த்தி. “நோக்குக, நான் விழைவதே அணுகிவருகிறது என கருதுகிறேன்!” நிர்மித்ரன் வெளியே சென்று நோக்கி “காட்டுக்குள் இருந்து ஒரு பந்தம் அணுகிவருகிறது. நிழலசைவைக் கண்டால் மூவர் இருக்கக்கூடும்” என்றான்.

“அவர்கள்தான்” என்றான் சுருதகீர்த்தி. புன்னகையுடன் “விடுதலைபோல் இனியது பிறிதில்லை” என்றான். சர்வதன் ஆவலுடன் “அவர்களா?” என்றான். சுருதகீர்த்தி “இளையோனே, நான் அவர்களை கனவில் பலமுறை கண்டேன். என் விழைவை தெய்வங்கள் அறிந்துவிட்டன போலும்” என்றான். சுருதகீர்த்தி நகைக்க சர்வதனும் சுதசோமனும் அச்சிரிப்பில் இணைந்துகொண்டனர். அவர்களை மாறிமாறி நோக்கியபின் பிரதிவிந்தியனும் யௌதேயனும் வாசலுக்கு விரைந்தனர். சதானீகன் தானும் சென்று வாசலினூடாக நோக்கினான். காட்டில் அலைகொண்டு வரும் பந்த ஒளியை அவன் கண்டான். பின்பு ஒரு கணத்தில் மெல்லிய நிழலுருவையும் அதன் தலையில் நுண்ணொளி கொண்டிருந்த நுதல்மணியையும் கண்டான்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“வெறும் உணவு தந்து எங்களை வளர்த்திருக்கலாம் அஸ்தினபுரியின் பெருந்தந்தை. அவர் அளித்தது குருதியை. கதைப்பயிற்சியில் தலையில் அடிபட்டு எட்டு நாட்கள் நான் மஞ்சத்தில் தன்நினைவில்லாது கிடந்தேன். எட்டு இரவும் எட்டு பகலும் என் மஞ்சத்தின் அருகில் அமர்ந்திருந்தது அஸ்தினபுரியின் மணிமுடி. அச்சிற்றறையே அரசவையாகியது. அவருடன் அங்கே இருந்தனர் என் குடியின் மண்மறைந்த மூதாதையர் அனைவரும். வெல்க, கொல்க, அது போர். ஆனால் நெறிமீறி தொடையறைந்து கொன்ற என் தந்தைக்கு நான் அளிக்க விழையும் தண்டனை ஒன்றே. எஞ்சிய வாழ்நாள் முழுக்க தந்தையென்றிருப்பது என்றால் என்னவென்று அவர் உணரவேண்டும்… ஓர் இரவுகூட அவர் விழி நனைந்து வழியாமல் துயிலக்கூடாது. அதற்குரிய வழி நாங்கள் இம்மஞ்சத்திலேயே இறப்பதுதான்… இங்கிருந்து எழுந்து நாங்கள் இயற்றுவதற்கு ஒன்றும் இல்லை. பழிசுமந்து வாழ்வதன்றி எங்களுக்காகக் காத்திருப்பதும் பிறிதில்லை… இம்மஞ்சமே சிதையென்றாகட்டும்… தெய்வங்களிடம் கோருவது அதைமட்டுமே.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“அஸ்வத்தாமன் கர்ணனின் சிதை இருந்த இடத்தை நோக்கி புரவியை செலுத்தினான். கிருபர் அப்போதுதான் அந்த இடத்தை அடையாளம் கண்டார். “இது அங்கன் எரிந்த சிதை” என்றார். “ஆம், அச்சிதையிலேயே அரசரையும் ஏற்றுவோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருபர் பெருமூச்சுடன் “அது உகந்ததே” என்றார். பின்னர் சிரித்து “விந்தையான உறவு அவர்களுக்குள். அனைத்தும் அளிக்கப்பட்டவர் அனைத்தும் மறுக்கப்பட்டவரிடம் கொண்ட நட்பு” என்றார்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“குருக்ஷேத்ரத்தில் அவர்களின் வெற்றிகள் அனைத்துமே நெறிமீறி அடைந்தவையே” என்று உரத்த குரலில் கிருதவர்மன் சொன்னான். “பீஷ்மரை, துரோணரை, கர்ணனை… அனைவரையும் அவர்கள் அவ்வண்ணமே வீழ்த்தினர். ஆகவே அரசரை அவர்கள் அவ்வாறு வீழ்த்தியதில் வியப்பில்லை.” அஸ்வத்தாமன் “அவர்கள் தங்களை மேன்மக்கள் என எண்ணிக்கொள்கிறார்கள். கீழ்மக்கள் என தங்களை கருதுவோர் சற்றேனும் மேம்படுத்திக்கொள்ள முயல்கையில் மேன்மக்கள் என ஆணவம் கொண்டவர்கள் இவ்வண்ணம் கீழிறங்குகிறார்கள்” என்றான்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“நான் ஊழ்கத்தில் அமர்ந்ததில்லை. ஆனால் வேட்டைவிலங்குக்காகக் காத்திருத்தல் என்பது ஓர் ஊழ்கமே.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“காடு இல்லாத இடமே இல்லை… ஒரு கைப்பிடி மண்ணில் ஒரு சிமிழ்நீரை ஊற்றி மூன்று நாள் வைத்திருங்கள், அங்கே காட்டின் துளி எழுந்துவிட்டிருக்கும். நகர்களை தவிர்க்கலாம், எந்த முனிவரும் காட்டைத் தவிர்க்க இயலாது” என்று ஜல்பன் சொன்னான். “உச்சிமலைப் பாறைகளின் மேல் பசும்பூச்சென பாசி படிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கூட காடுதான்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“அரசே, அரசன் நல்லாட்சியை தன் குடிக்கு அளிப்பான் என்றால் அவன் செய்த களப்பழிகள் கரைந்து மறையும்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் நல்லாட்சியை அளிப்பேன். அறம்நின்று கோலேந்துவேன்” என்றார் யுதிஷ்டிரன். “இது மூதாதையர் மேல் ஆணை. ஒருகணமும் என் தன்னலத்தை கருதமாட்டேன். என் பெருமை என் புகழுக்கென எதையும் இயற்றமாட்டேன். குடிநலமே கொள்வேன்.” பீமன் “அவ்வண்ணம்தான் துரியோதனன் ஆட்சி செய்தான்” என்றான். யுதிஷ்டிரன் திடுக்கிட்டு அவனை நோக்கியபின் தலைகுனிந்தார்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“மானுடர் இயல்பு போலும் அது, தாங்கள் எய்துவதெல்லாம் தங்களால்தான் என்பவர்கள் தாங்கள் இழந்தவற்றுக்கு தெய்வங்களை பொறுப்பாக்குவார்கள்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“யாதவரே, ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் கொண்டிருந்த இறுதித் துளியையும் பறித்துவிட்டீர்கள். இனி மூத்தவர் கதை தொட்டெடுப்பாரென்றோ அடுத்தவர் வில்தொட்டு போரிடுவாரென்றோ தோன்றவில்லை. இனி எந்தப் புரவியும் இவனை பிறிதொரு புரவியென்று எண்ணாது. இனி எந்த அரசரும் தங்கள் நாவால் மூத்தவரை அறத்தோன் என்றுரைக்கமாட்டார்கள். இதோ இத்தருணத்தில் என்னிடம் எஞ்சியிருந்ததை நானும் இழந்திருக்கிறேன். இனி எந்த அவையிலும் நடுவன் என்று நான் அமரப்போவதில்லை. இனி ஒருபோதும் எவருக்கும் பொழுது குறித்துக் கொடுக்கப்போவதில்லை. இனி நிமித்த நூல் தொட்டு ஒரு சொல்லும் உரைக்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“ஸ்தூனகர்ணன் “அத்தனை கொடியதா உன் வஞ்சம்?” என்றான். துரியோதனன் “இங்கு அமர்ந்து ஊழ்கம் செய்கையில் உணர்ந்தேன், என்னிடம் ஒரு துளியும் வஞ்சம் இல்லை என. எவர்மேலும் சினமும் கசப்பும் எனக்கில்லை. அவை நான் அக்களத்தில் நின்று பொருதும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட உணர்ச்சிகள் மட்டுமே. அவை நான் ஏந்திய படைக்கலங்களும் கவசங்களும் அன்றி வேறல்ல” என்றான் துரியோதனன். “என்னிடம் வஞ்சம் இருந்திருந்தால் நான் பீமன் படைக்கலமின்றி என் காலடியில் கிடக்கையிலேயே தலையுடைத்துக் கொன்றிருப்பேன்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“அரசே, நீங்கள் ஆற்றவேண்டிய பணி இங்கு எஞ்சியிருக்கிறது. ஒருவேளை இனி வென்று நிலம்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் வஞ்சம் அவ்வாறு விட்டுவிட வேண்டியது அல்ல. வஞ்சமும் காமமும் உள்ளிருந்து வெளிப்பட்டு ஒழிந்தாகவேண்டும். இல்லையேல் அவை ஏழுபிறப்பிலும் தொடரும்.” கைகளை ஊன்றி துரியோதனன் அருகே ஏறிச்சென்று “எழுக அரசே, இங்கே இவ்வண்ணம் அமர்ந்திருப்பது அச்சம் என்றும் உயிர்விழைவு என்றும் மட்டுமே சொல்லப்படும். வென்றவர் தோற்றவரை இழிவுசெய்து கதைகள் புனைவது என்றுமிருப்பது. வஞ்சம் கொள்ள நீங்கள் எழுந்தால் அதை வீரம் என புகழ்வர். அதில் வீழ்ந்தாலும் வீரமே”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“அஸ்வத்தாமன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நான் அவனிடம் எழுக மந்தா, சென்று உன் உடைந்த கதைத்தண்டையாவது எடுத்துக்கொள் என்று சொன்னேன். அவன் திகைத்தவன்போல கிடந்தான். எழு, மல்லன் என உயிர்கொடு. சென்று அந்த உடைந்த கதைத்தண்டை எடு என்று நான் ஆணையிட்டேன். அன்றி அந்தப் பாறையையாவது கையில் எடு என்று கூவினேன். அவனுடைய உள்ளம் உறைந்துவிட்டது என்று தோன்றியது. அத்தருணத்தில்தான் மாதுலர் வீழ்ந்தார் என்ற செய்தி காற்றில் ஒலித்தது. என் கதை தளர்ந்தது. கதையை வீசிவிட்டு காட்டுக்குள் திரும்பி நடந்தேன். அவனை திரும்பி நோக்கவில்லை. எதையும் எண்ணவில்லை. காட்டினூடாக ஊடுருவி வந்துகொண்டே இருந்தேன். எங்கே செல்கிறேன் என்றுகூட அப்போது நான் உளம்கொள்ளவில்லை. இங்குதான் வருகிறேன் என்பதையே சாயாகிருகத்தை அணுகியபோதுதான் உணர்ந்தேன்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “எப்போதும் தெய்வங்கள் அவனுடன் நிலைகொள்கின்றன. ஆசிரியரே, அவன் வெறுங்கைகளுடன் என்முன் மல்லாந்து கிடந்தான்…” என்றான். கிருதவர்மன் சீற்றத்துடன் “அவனை நீங்கள் கொன்றிருக்கவேண்டும்… அவன் தலையை உடைத்திருக்கவேண்டும். இந்தப் போரே பிறிதொரு திசைக்கு சென்றிருக்கும்” என்று கூவினான். “அதைச் செய்ய என்னால் இயலாது” என்றான் துரியோதனன். “அரசே, அவன் நம் இளைய அரசர்கள் அனைவரையும் கொன்றவன். நம் அரசமைந்தரை கொன்று குவித்தவன். நம் பிதாமகரின் தலையறைந்து உடைத்தவன்” என்று கிருதவர்மன் கூவினான். “ஆம், ஆனால் அவன் அரசன் அல்ல, நான் எந்நிலையிலும் அரசனே” என்றான் துரியோதனன். “அரசன் என மறுபக்கம் எனக்கு இணையானவன் யுதிஷ்டிரன் மட்டுமே. அவன் அதை செய்திருப்பானா என்று மட்டுமே நான் எண்ணுவேன்.” கிருதவர்மன் தளர்ந்தான். தலையை அசைத்தபடி “ஊழ்” என்றான்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“நீங்கள் களம்பட்டீர்கள் என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் கிருதவர்மன்.

“இல்லை, அவன் அறிவான்” என்று துரியோதனன் சொன்னான். “நான் அவனை களத்தில் சந்தித்தேன். அவனை கொன்றாகவேண்டும் என்றே போரிட்டேன். உயிரின் விசையாலும் அதையும் விஞ்சும் வஞ்சத்தின் விசையாலும் அவன் எனக்கு நிகராகவும் அவ்வப்போது என்னைக் கடந்து எழுந்தும் போரிட்டான். என் தாக்குதலில் இருந்து தப்ப அவன் கள எல்லையைக் கடந்து காட்டுக்குள் புகுந்தான். அவன் குரங்கின் முலையுண்டவன், காட்டுமரக் கிளைகளின்மேல் தாவும் கலை அறிந்தவன். அது தெரிந்திருந்தும் அவனை கொன்றேயாகவேண்டும் என்பதனால் நான் அவனை துரத்திச் சென்றேன். என்னால் அவன் ஏறிய மரங்கள்மேல் ஏற இயலவில்லை. ஆகவே அந்த மரங்களை என் கதையால் அறைந்து உடைத்தேன். கதையை வீசி எறிந்து அவனை நிலத்தில் வீழ்த்தி தாக்கினேன். வென்றிருப்பேன், ஆனால் அவன் கதை உடைந்து தெறித்தது. படைக்கலமில்லாமல் அவன் என் முன் கிடந்தான். என்னால் அவனை கொல்ல இயலவில்லை.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“கிருதயுகத்தில் மானுடர் நெறிகளை அறியவில்லை. அவர்களிடம் இயல்பாகவே நெறிகள் திகழ்ந்தன. திரேதாயுகத்தில் நெறிகளை வாழ்ந்துநிறைந்தோர் அறிந்து இளையோருக்கு சொன்னார்கள். துவாபர யுகத்தில் நெறிகளும் நெறிமீறல்களும் மோதின. கலியுகத்தில் நெறியும் நெறியின்மையும் மயங்கி ஒன்று பிறிதென்றாகும். நெறியை நெறிமீறலாக மருவவும் நெறிமீறலே நெறியென்று நிறுவவும்படும்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“அறிக, கலியுகத்தில் உருமாற்றமே பொதுநெறி! ஒவ்வொருவரும் அந்தந்த தருணத்திற்கு ஏற்ப உருமாறிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் கலியுகத்தில் நெறிகள் எழுதப்பட்டுவிடும். ஆகவே மாற்றமில்லாதவையாகும். எனவே மானுடர் மாறிக்கொண்டே இருப்பார்கள். பாறைகளினூடாகவும் மலைச்சரிவினூடாகவும் நிகர்நிலத்திலும் ஓடும் ஆறு உருமாறிக்கொண்டிருப்பதுபோல. காற்றில் சுடர் நடனமிடுவதுபோல. கலியுகத்தில் மானுடருக்கு ஆளுமை என ஒன்றில்லை. வாயில்களுக்கும் வழிகளுக்கும் ஏற்ப உருமாறி கடந்துசென்றுகொண்டே இருப்பார்கள் அவர்கள்”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“நாம் இன்றிருக்கும் நிலையில் உண்மை பொய் எதற்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்று அஸ்வத்தாமன் மேலும் சொன்னான்.

“எதையாவது சொல்லி அந்தப் போர் நிகழவில்லை என்றே ஆக்குங்கள், பாஞ்சாலரே” என்றான் கிருதவர்மன். அவன் இளிவரலையே இலக்காக்கினான். ஆனால் சொன்னபோது தொண்டை இடறிவிட்டது.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இது எந்த வகையான உளச்சிக்கல் என தெய்வங்களே அறியும். ஆனால் இந்த உலகனைத்தும் என்னை எண்ணி அருவருத்து மெய்ப்பு கொள்ளும்படி எதையாவது செய்ய விழைகிறேன்…”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“நன்கறிந்த ஒன்றின்மேல் அள்ளி அள்ளி போட்டுக்கொள்ளும் பொய்களல்லவா வேதம் முதலான நூல்கள் அனைத்தும்?”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“காமம் இன்றி வாழ்தல் எளிது. காமம் திகழும் இடங்களை முழுக்க பிற செயல்களால் நிறைத்துக்கொள்ளவேண்டும். காமம் தனிமையில்தான் தோன்றிப் பெருகும். நான் எனக்கு கணநேரமும் தனிமையை அளிப்பதில்லை.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“சொற்களை வெல்க! சொற்களையே உள்ளம் என்று சொல்கிறோம்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“இக்களத்திலிருந்து ஒரு படைவீரன்கூட எஞ்சப்போவதில்லை. இதோ இன்னும் அரைநாழிகைப் பொழுதில் இப்போர் இங்கே முடியும்… அனைத்தும் இங்கேயே நிறைவுறும்” என்றார்.

கீழே கிடந்த உடல்களில் ஒன்று விழிதிறந்து “இன்னும் இல்லை” என்றது. “என்ன?” என்று யுதிஷ்டிரன் அதட்டினார். “இங்கல்ல” என்றது அது. “யார்? யார்?” என்றார் யுதிஷ்டிரன். அந்த உடல் வலியின் நெளிவை காட்டியது. முகம்சுளித்து பற்கள் உதடுகளை கடித்து இறுக்க மெல்ல அதிர்ந்து பின் விடுபட்டது. “யார்? யார் அது?” என யுதிஷ்டிரன் கூவினார். நிமிர்ந்து அர்ஜுனனை நோக்கியபோது அவன் அவரை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருப்பதை கண்டார். மீண்டும் அந்த முகத்தை நோக்கினார். அது இறந்து நெடுநேரம் ஆயிற்று என்றே தோன்றியது.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“மூத்தவரே, தெய்வங்கள் ஏன் இத்தனை இரக்கமற்றவையாக இருக்கின்றன?”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“இது உன் போர் அல்ல. உன்னால் அவரை எதிர்கொள்ள இயலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அவரை வெல்வேன்… புவி வெல்லும் காண்டீபம் உண்டு என் கையில்” என்றான். இளைய யாதவர் “கூர்கொள்ளும்போது பொருட்கள் பிறிதொரு வண்ணமும் வடிவமும் கொள்கின்றன. கூர்கொள்ளும் மானுடரில் உள்ளே உறையும் பிறிதொருவர் எழுகிறார். அவரில் எழுபவன் அங்கன்… அதை நீ அறிவாய். ஆகவேதான் அவரைக் கண்டதும் உன் கைகள் தளர்கின்றன” என்றார். அர்ஜுனன் உளம் தளர்ந்து “தெய்வங்களே!” என்றான். “அவரை எதிர்கொண்டால் நீ கொல்லப்படுவாய். அங்கனில் கனிந்ததே அவரில் கசந்துள்ளது” என்றார் இளைய யாதவர்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“தளும்பாது என ஐயுற்றால் கலம் தளும்பியே தீரும். மறக்கப்பட்ட கலமோ நுனிவட்டம் வரை நிறைந்தும் துளிதளும்பாது நீர்நடனமிடும்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
“இத்தருணத்தில் நாம் உளம்தளர்ந்து போரை இழந்தோமெனில் இக்களத்தில் நாம் இறப்புக்கு அனுப்பிய அத்தனை வீரரின் உயிருக்கும் மதிப்பிலாதாகும்” என்றார் இளைய யாதவர். சாத்யகி “வென்றாலும் அவ்வுயிருக்கு எம்மதிப்பும் இல்லை, யாதவரே” என்றான்.”
Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை

« previous 1