தஞ்சாவூர் Quotes

Rate this book
Clear rating
தஞ்சாவூர் தஞ்சாவூர் by Kudavayil Balasubramanian
35 ratings, 4.43 average rating, 4 reviews
தஞ்சாவூர் Quotes Showing 1-20 of 20
“பங்காரு காமாட்சியம்மன் கோயில்:

மேலராஜவீதியின் மேல்சிறகில் உள்ள இக்கோயில் காமாட்சி அம்மனுக்காகக் பிரதாபசிம்மர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப் பெற்றதாகும். பங்காரு என்னும் தெலுங்குச் சொல் பொன் அல்லது தங்கம் எனப் பொருள்படும். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த உற்சவத் திருமேனியான காமாட்சி விக்ரகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கச் சில அந்தணர்கள் மறைத்துக் கொண்டுவந்ததாகவும், வரும் வழியில் பல இன்னல்களை அனுபவித்தும், உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் அடைக்கலம் பெற்றும், கடைசியாகத் தஞ்சைக்குக் கொண்டு வந்து மராட்டிய மன்னர்களின் அரவணைப்போடு காப்பாற்றியதாகவும் கூறுவர். பல்லாண்டுகள் தஞ்சையிலேயே இத்திருமேனி இருந்துவிட்டதால் காஞ்சி காமகோடி மடத்துச் சங்கராச்சாரியாரின் அருளாணைப்படி மராட்டிய அரச குடும்பத்தால் இங்கேயே கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யப்பெற்றதாகவும் மரபுச் செய்தியாகக் கூறிவருகின்றனர்.

முதலில் பிரதாபசிம்மராலும், பின்னர் துளஜா மன்னராலும், 1874இல் காமாட்சிபாயி சாகிப்பும் திருப்பணிகள் செய்து அறக்கொடைகள் நல்கியுள்ளனர். இவற்றை இக்கோயிலுள்ள மராட்டி மொழிக் கல்வெட்டுகள் விளக்குகின்றன. 1842இல் பச்சையப்ப முதலியார் மாலைக்காலப் பூஜைக்காக அளித்த அறக்கொடை பற்றிய ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. 1895இல் புகைப்படக்காரர் ஒருவரின் மனைவியான மீனாட்சி அம்மாள் என்பவரால் மகாமண்டப வடக்கு வாயில் கட்டப்பெற்றது. அதன் நிலைக்காலில் அவ்வம்மையாரின் உருவச்சிலையும், கல்வெட்டும் இருப்பதோடு, புகைப்படக்கருவியின் கல்வெட்டு (காமரா) வரைபடம் ஒன்றும் உள்ளது.

இக்கோயில் காஞ்சி காமகோடி பீடத்தால் நிருவகிக்கப் பெறுகின்றது.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“18ஆம் நூற்றாண்டில் தஞ்சைக் கோட்டையும், அகழியும் பலமுறை அழிவு நிலைக்கு உட்படலாயின. பிரெஞ்சுக்காரர்கள், முகமதியர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரது படைஎடுப்புகளால் கோட்டையும் அகழியும் பலமுறை அழிவுக்கு உள்ளாயின. கி.பி. 1758இல் பிரெஞ்சுப் படையினர் கர்னல் லாலி தலைமையில் பீரங்கித் தாக்குதல் செய்தபோது சிறிய கோட்டையின் தென்கிழக்குப் பகுதியும், பெரிய கோட்டையின் தென்கிழக்குப் பகுதியும், பெரிய கோட்டையின் தெற்குப் பகுதியும் சிதைந்தன. இவ்வாறே 1771இல் ஒருமுறையும் 1773இல் ஒருமுறையும் ஆங்கிலப் படைகளின் தாக்குதலால் சிறிய கோட்டையின் தென்மேற்குப் பகுதியும், பெரிய கோட்டையின் வடமேற்குப் பகுதியும் சிதைந்தன. இவ்வாறு 18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்களினால் கோட்டையின் பல பகுதிகளும், அகழியும் பேரழிவுகளுக்கு உள்ளாயின. பின்பு மெல்ல மெல்ல ஆங்கிலேயேர்கள் தஞ்சை அரசைக் கைப்பற்றினர். சரபோஜி மன்னராக்கப் பெற்றவுடன் சோழநாடு ஆங்கியலேயரின் ஆதிக்கத்திற்கு உட்படலாயிற்று. அப்போது அவர்கள் தஞ்சைக் கோட்டை, அகழி ஆகியவை பாதுகாப்பாக இருப்பதை விரும்பவில்லை. தஞ்சை நகரக் கோட்டை, அகழி போன்றவை பாதுகாப்பின்றி இருப்பதே ஆங்கிலேயர்களின் நலன்களுக்கு உகந்ததாகும் எனக் கருதி அவற்றின் பராமரிப்பை முழுவதுமாகக் கைவிட்டனர். இதனால் கோட்டையும், அகழியும் மெல்ல மெல்ல அழியத் தொடங்கின. நீரின்மையால் அகழியின் பல பகுதிகள் தூர்ந்து காய்கறிகள் பயிரிடும் நிலமாக மாறியது.

அகழிக் குத்தகை:

கி.பி. 1807இல் அகழியில் பறங்கி பயிரிடப்பெற்று ஐந்தில் ஒரு பங்கை அரண்மனைக்குத் தர உத்தரவிட்ட மோடி ஆவணம் ஒன்றுள்ளது. இது போன்று 1846இல் அகழியில் பயிர் செய்ய ஆண்டொன்றுக்கு ரூ. 192 வீதம் கொடுப்பதாக 3 ஆண்டுகளுக்கு ஒருவர் குத்தகை எழுதிக் கொடுத்ததைப் பிறிதோர் ஆவணம் கூறுகின்றது.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“கரடிகூடம் என்பது ஜட்டிகள் எனும் மல்யுத்த வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாகும். தஞ்சை நாயக்கர் ஆட்சியில் இந்த மல்யுத்த மரபினர்க்கு மிகுந்த ஆக்கம் கிடைத்தது. இவர்கள் பயிற்சி செய்யும் கரடிகூடம் அரண்மனையின் ஓர் அங்கமாகத் திகழ்ந்துள்ளது.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தற்போது தஞ்சையின் நடுநாயகமாகத் திகழும் அரண்மனை நாயக்க மன்னர்கள் கட்டியதேயாகும். பின் வந்த மராட்டியர் இதனை மேலும் பொலிவுடையதாகச் செய்தனர்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“சந்தியாநிருத்த மூர்த்தியின் வண்ணங்கள் தீட்டப்பெற்ற ஆடற்சிற்பம் மேற்கு வாயிலுக்கு எதிரே உள்ளது. இதனை அடுத்துத் தில்லையம்பலத்தில் மாமன்னன் இராசராசன் தன் தேவியருடன் பொன்னம்பலநாதனை வணங்கும் ஓவியக்காட்சி உள்ளது. பொன் ஓடுகள் வேயப்பெற்ற பொன்னம்பலம், தில்லைக் கோயிலின் நான்கு கோபுரங்களும், சேரநாட்டுக் கலைப்பாணியில் காணப்பெறுகின்றன.

சிறிய தாடி, மீசையுடன் வணங்கும் திருக்கோலத்தில் இராசராசனது உருவமும், மிக அழகிய ஆடை அணிகலன்களுடன் தேவியர் மூவர் உருவமும் உள்ளன. நடராசப் பெருமானது திருவடிகளுக்குக் கீழே காரைக்கால் பேயாரது திருவுருவமும், காளியின் உருவமும் உள்ளன. பொன்னம்பலத்தின் விதானத்தில் அழகிய தோரணங்களும் கொடிகளும் அழகுக்கு அழகூட்டுகின்றன. பல்வகைப்பட்ட பணியாளர்களின் உருவங்களும் தீட்டப்பெற்றுள்ளன. காவலர் சிலரது ஓவியங்களில், இடுப்பில் லங்கோடு எனும் இடுப்பாடையும், மேலே ஒரு பக்கக் கழுத்துப்பட்டை, இருபக்கக் கழுத்துப்பட்டைகளையுடைய (ஒன்சைடு காலர், டூ சைடு காலர்) சட்டையும் அணிந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது. இக்காட்சியில் சோழர்கால உடைகள், அணிகலன்கள், பொன்னம்பல அமைப்பு, பெருமன்னனின் உருவ அமைதி, அவர்தம் தேவியரின் பேரழகு ஆகியவற்றைக் காணமுடிகிறது.

இதற்கு எதிரிலுள்ள ஓவியப் பகுதியில் முதலாம் இராசராசன் சிவலிங்கத் திருமேனிக்கு முன்பு அமர்ந்தவண்ணம் வணங்கும் காட்சி சித்தரிக்கப் பெற்றுள்ளது. எடுப்பான மீசை, முடியிட்ட கொண்டை, பரந்த மார்பு உடையவனாகப் பாங்குடன் அமர்ந்து இராஜராஜேச்சரமுடையானை வணங்குகிறான். எதிரில் ஆடல் மகளிர் ஆட, அனைத்துப் பணியாளர்களும் சூழ்ந்து நிற்க, தேவியர் அமர்ந்திருக்க இக்காட்சி உள்ளது. இவ்வோவியம் சற்றுச் சிதிலமடைந்து காணப்பெறுவது மிகுந்த வருத்தமளிக்கின்றது. இராசராசனின் உருவ அமைப்பை அறிய இவ்வோவியம் உதவுகின்றது.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“முதலாம் இராசராசன் மிக்ச்சிறந்த கலாரசிகன் என்பதை அவன் படைத்த இப்பெருங்கோயிலால் அறிகிறோம். அவனது கலைப்பித்து ஓவியக் கலையிலும் இருந்தது என்பதனை ஒரு கல்வெட்டு்ச் சான்றால் தெளிவாக அறிய முடிகிறது. உக்கல் எனும் ஊரில் காணப்பெறும் அவனது கல்வெட்டில் "ஸ்ரீராஜராஜதேவர் தஞ்சாவூர்ப் பெரியசெண்டு வாயில் சித்திரக்கூடத்து தெற்கில் கல்லூரியில் எழுந்தருளியிருந்து...." என்று கூறப்பெற்றுள்ளது. இதனால் இம் மன்னனின் அரண்மனை வாயிலை ஒட்டிச் சித்திரக்கூடம் ஒன்று இருந்ததை அறிகிறோம். அரண்மனை ஓவியக் கூடத்தில் சித்திரங்களைக் கண்டுகளித்த இம் மன்னவன் பெருங் கோயிலையும் சித்திரக் கோயிலாகவே படைக்கச் செய்தான். அவன் காலத்தில் அடியிலிருந்து முடிவரை இங்கே ஓவியங்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றோ இப்பெருங்கோயிலில் ஒரு கூடத்தில் மட்டுமே அக்காலத்து ஓவியங்களில் சில காணப்பெறுகின்றன.

இப்பெருங்கோயிலில் கருவறை இரு சுற்றுச்சுவர்களால் ஆனதையும் அதன் இடையே சாந்தாரம் எனும் சுற்றுக்கூடம் உள்ளதையும் முன்னரே கண்டோம். இரண்டு தளங்களிலும் இக்கூடங்கள் உண்டு. கீழ்த்தளத்தில் உள்ள சுற்றுக்கூடத்தில் கருங்கற்சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பெற்று அதன் மேல் ஓவியங்களை இராசராசனது ஓவியர்கள் தீட்டியுள்ளனர். பின்னர் இவற்றின் மீதே விசயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்பு பூசப்பெற்று ஓவியங்களைத் தீட்டி உள்ளனர். இதனால் சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர்கால ஓவியங்களால் மறைக்கப்பெற்றன. சென்ற நூற்றாண்டில் நாயக்கர் ஓவியங்களில் காரை பெயர்ந்த இடங்களில் சோழர் ஓவியங்கள் வெளிப்படுவதை பேராசிரியர் கோவிந்தசாமி என்பவர் கண்டு உலகுக்கு அறிவித்தார். பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் ஓவியங்கள் பலவற்றை அகற்றிப் பழைய ஓவியங்களை வெளிக்கொணர்ந்தனர். இப்பணி தொடர்ந்து நிகழ்கிறது. இச்சுற்றுக்கூடத்தில் மூன்றில் ஒருபங்கு ஓவியங்களே இதுவரை வெளிவந்துள்ளன.

தென்புறவாயில் வழியாக உள்ளே செல்வோமாயின் உருத்திரனின் மிகப்பெரிய சிற்பத்தைக் காணலாம். இதற்கு வலப்புறத்தில் உள்ள சுவர்ப்பகுதி முழுவதும் தரையிலிருந்து கூரைவரை சோழர்கால ஓவியங்கள் உள்ளன. இங்கிருந்து மேற்கிலும் வடக்கிலும் தொடர்ந்து ஓவியங்கள் பல வண்ணங்களில் தீட்டப்பெற்றுள்ளன.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“பிருகன் நாயகி எனத் தற்காலத்தில் வழங்கப்பெறும் உலகம் முழுவதும் உடைய நாச்சியார் கோயிலின் மேற்குப்புற அதிஷ்டானத்தில் பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றுள்ளது.

அக்கல்வெட்டால் ராஜராஜேஸ்வரம் 'பெரியஉடைய நாயனார் கோயில்' என்று நாயக்கர்கள் காலத்தில் அழைக்கப்பெற்றதை அறிகிறோம். இங்கு மல்லப்ப நாயக்கர், மூர்த்தி அம்மன் பெயர்களில் இரண்டு மண்டபங்களைப் புலியூர் எனும் ஊரைச் சார்ந்தவர்கள் தங்கள் கொடையாக, கருங்கற்கொண்டு கட்டுவித்ததோடு, அவர்களே திருக்கோயில் ஊழியமும் புரியலாயினர். இதற்கெனப் பிரசாதக் கட்டளை ஒன்றும் வைக்கப்பெற்றது.

இந்த இரு மண்டபங்களோடு நந்தி மண்டபத்தையும் சேர்த்துத் தஞ்சை பெரிய உடைய நாயனார் கோயிலில் காணப்படும் மண்டபங்கள் மூன்றாகும்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்குச் செய்த நிலைத்த பணிகளுள் பல இன்றும் அவர் புகழ் பாடி நிற்கின்றன. தஞ்சை மக்களின் பேச்சு வழக்கில் மாறாத ஒரு பெயர் சேப்பனவாரி என்பதாகும். இது செவ்வப்பன் ஏரி என்பதன் திரிபாகும். புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற தஞ்சையின் சிறிய கோட்டை, பெரிய கோட்டை இரண்டிற்கும் குடிநீர் வசதி செய்வதற்காகச் செவ்வப்பன் ஏரி என்ற பெரிய நீர்நிலையை இவர் அமைத்தார்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தஞ்சை இரயில் நிலையத்திற்கு அருகாகவுள்ள ஷம்ஸ் மன்சூர் ஷாபீர் அவுலியா என்பாரது தர்க்காவில், முக்கிய நினைவுச் சின்னமாக அவுலியாவின் சமாதி அருகில் செவ்வப்ப நாயக்கரின் கல்வெட்டுத் தூண் ஒன்று உள்ளது.

சாதாரண வருடம் மார்கழித் திங்கள் பதினான்காம் நாளாகச் சாசன நாள் குறிக்கப்பெற்றுள்ளது. இது 1550ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமையைக் குறிப்பதாகும். தஞ்சை நகரில் திகழும் ஷம்ஸ்பீர் பள்ளி எனும் முகமதியர்களின் இந்த வழிபாட்டுத் தலத்தை நிருவகிக்கும் பக்கரிகளிடம் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழுவேலி நிலத்தினைக் கொடையாகக் கொடுக்குமாறு செவ்வப்ப நாயக்கர் உத்தரவிட்டார். அதன் படி

1. சிலம்பா மண்ணையார்
2. வேல் மண்ணையார்
3. கோபால் மண்ணையார்
4. தம்பா மண்ணையார்
5. ............ மண்ணையார்

என்ற ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப் பெற்றுள்ளன.

இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கரின் சமயப் பொறையை அறிந்துகொள்ள உதவுகிறது.

தஞ்சை நகரில் 'அழகிய குளம்' என்ற பெயரில் உள்ள குளத்தைப் பற்றிய குறிப்பு இக்கல்வெட்டில்தான் முதன்முதலில் வருகிறது. இக்குளத்திற்கு ஒரு வாரி மூலம் மழைநீர் வந்து சேர்ந்தது என்பதை இக்கல்வெட்டிலேயே குறிக்கப்படும் அழகிய குளத்து வாரி என்ற அறியமுடிகிறது.

இந்த அழகிய குளம் என்ற பெயர் பின்னாளில் அழகி குளம் என மருவி வழங்கலாயிற்று.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தற்போது இராசகோபாலசாமி கோயில் இருக்கும் வடக்குவீதிப் பகுதி 1538இல் திருமலையம்மன் பேட்டை என்று அழைக்கப் பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தைப் 'பேட்டை' என்ற பெயரில் அழைக்கும் வழக்கம் அப்போது இருந்தது. வணிக மையங்களாகத் திகழ்ந்த இடங்களை எல்லாம் பேட்டை என அழைத்தனர். வண்டிப்பேட்டை, சந்தைப்பேட்டை என்பன போன்று பல பேட்டைகள் உண்டு.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“ஒரு குறிப்பிட்ட இடத்தைப் 'பேட்டை' என்ற பெயரில் அழைக்கும் வழக்கம் அப்போது இருந்தது. வணிக மையங்களாகத் திகழ்ந்த இடங்களை எல்லாம் பேட்டை என அழைத்தனர்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“இன்றைய தஞ்சையின் சீனிவாசபுரம், இராசராசன் நகர் ஆகிய பகுதிகளே சோழர்களின் அரண்மனை இருந்த இடம் எனக் கொள்ளலாம்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“பண்டு நெடுந்தூர நகரங்களையும் ஊர்களையும் இணைக்கும் பெருஞ்சாலைகளும், ஆங்காங்கே ஊர்களின் தூரங்களைக் காதங்கள் கணக்கில் குறிப்பிடும் நெடுவழிக் கற்களும் இருந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. இத்தகைய நெடுஞ்சாலைகளைப் (High way) 'பெருவழி' என அழைத்தனர். தஞ்சாவூர் நகரைத் தொலைவிலுள்ள நகரங்களோடு இணைக்கும் பல வழிகள் இருந்துள்ளன. அவற்றுள் மூன்று பெருவழிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்கள் வாயிலாகக் கிடைக்கின்றன.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தஞ்சாவூர் உள்ளாலையிலோ அல்லது புறம்படியிலோ தஞ்சைப் பெரிய கோயிலுக்குரிய பசுக்கள் உறைந்த கோசாலை இருந்துள்ளது. ராஜ ராஜீஸ்வரமுடையார் சுரபி என்றே இது அழைக்ககப்பெற்றது. இங்கிருந்த பசுக்களை இடையர்களுக்கு அளித்ததைத் தஞ்சைக் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தஞ்சாவூர் புறம்படியில் "சிவதாஸன் சோலையான ராஜராஜப் பிரும்ம மஹாராஜன் படைவீடு" என்ற படைவீரர்களின் முகாம் ஒன்று இருந்துள்ளது. இது தற்காலத்திய இராணுவத்தினர் தங்கும் கன்டோன்மென்ட் பகுதியை ஒப்பதாகும். சிவதாசன் சோலை எனும் இடம் தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தென்மேற்குப் பகுதியில் திகழ்ந்திருக்க வேண்டும். இது பழையாறையில் தற்போது உள்ள ஆரியப்படையூர் (அரியப்படைவீடு) பம்பப்படையூர் போன்றவற்றிற்கு ஒப்பானதாகும்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தொழில் அடிப்படையிலும், படைகளின் பெயர்களாலும், மன்னர் குடும்பத்தவர் பெயர்களாலும் பெரும்பான்மையான தெருக்கள் திகழ்ந்தன. ஆனைக்கடுவார் தெரு என்பது யானைப் படைக்குரிய உணவு கொடுக்கும் பணியாளர்கள் வாழ்ந்த தெரு என்பதும், ஆனை ஆட்கள் தெரு என்பது யானைக்குரிய மாவுத்தர்கள் வாழ்ந்த பகுதி என்பதும் பெறப்படுகின்றன. இது போன்றே வில்லிகள் தெரு என்பது விற்படை வீரர்கள் வாழ்ந்த பகுதியாகவும், காந்தர்வர்தெரு இசைவாணர்களின் இருப்பிடமாகவும், தளிச்சேரி ஆடற்கலைஞர்கள் வாழ்ந்த பகுதியாகவும் திகழ்ந்துள்ளது.

பெருந்தெருக்களில் உயர்குலங்கள் அல்லது பெருந்தரத்து அதிகாரிகள் மட்டுமே வாழ்ந்தனர் எனக் கொள்ள முடியவில்லை. சூரசிகாமணிப் பெருந்தெருவில் மட்பாண்டம் செய்யும் குயவர்கள், வண்ணத்தார்கள், ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பவர்கள்), காவிதிமை செய்பவர்கள், நாவிதர்கள் (முடி திருத்தும் கலைஞர்கள்), கணித நூலோர் (சோதிடர்கள்) என அனைத்துத் தர மக்களும் வாழ்ந்துள்ளனர்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“திருச்சிராப்பள்ளிக் குன்றின் மீது மூன்று கோயில்கள் உள்ளன. உச்சியில் பிற்காலத்திய உச்சிப் பிள்ளையார் கோயிலும், இடையே மகேந்திர பல்லவன் சமணம் விடுத்துச் சைவம் மாறியவுடன் எடுத்த 'லலிதாங்குர பல்லவ ஈஸ்வர கிரஹம்' எனும் குடைவரையும், அதற்குக் கீழாகத் தாயுமானசுவாமி திருக்கோயிலும் உள்ளன. உச்சிப்பிள்ளையார் கோயில், பிதுக்கம் பெற்ற பெரிய பாறையின்மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இப்பாறையின் வடபுறமாக, மிக ஒடுக்கமான பாதையொன்று மேற்குப் பக்கம் செல்கிறது. அங்கு இயற்கையாக அமைந்த குகைத்தளமொன்றும் உள்ளது. இக்குகையில் சமண முனிவர்களுக்கான கற்படுக்கைகள் உள்ளன. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எழுத்தமையில், அக்கற்படுக்கைகளுக்குரிய சமணத் துறவிகளின் பெயர்கள் கல்லில் பொறிக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றன. அவற்றுள் ஒரு பொறிப்பு 'சிரா' என்ற சமணத் துறவியின் பெயரைக் குறிப்பிடுகிறது. இவரது பெயரால்தான் 'சிராப்பள்ளி' என இவ்வூருக்குப் பெயர் வந்தது எனக் கருதுகின்றனர்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“எப்படி நோக்கினும் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சை எனும் ஊரும், தளிக்குளத்துச் சிவாலயமும் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“அப்பர் சுவாமிகள் மகேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் என்பதனை வரலாற்றறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இக்கருத்தின் அடிப்படையில் நோக்கும்போது கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தஞ்சை என்ற ஊரில் 'தளிக்குளம்' என்ற குளம் இருந்திருக்கிறது.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
“தஞ்சை' என்ற பெயர்க் குறிப்பை முதன்முதலாக அழகு தமிழில் நமக்குக் காட்டுபவர் திருநாவுக்கரசர் எனும் அப்பர் அடிகளே. இவர் சிவாலயங்கள் இருந்த ஊர்களுள் ஒன்றாகத் தஞ்சையைக் குறிப்பிடுகிறார். அப்பர் சுவாமிகள் கண்ட அந்தச் சிவாலயத்து இறைவனின் திருநாமம் 'தளிக்குளத்தூர்' என்பதாகும்.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்