More on this book
Community
Kindle Notes & Highlights
அலகின்மை என்றால் அதை அள்ளமுடியாது என்று. அதன்பின்னர் அறிந்தேன், அள்ளமுயல்வதும் அலகில்லாததே. மொழியும் கனவும், காலவெளிக்கும் ஞானவெளிக்கும் முன்னால் மொழிவெளியை கனவுவெளியை ஆடியைநோக்கி ஆடியை என வைத்து ஒரு அலகின்மையை உருவாக்கியிருக்கிறேன்.
செவ்வியல் படைப்பு என்பது தன்னைத்தானே முழுமைப் படுத்திக்கொள்ளும் நோக்கத்தையே முதன்மையாகக் கொண்டது
நவீன ஆக்கங்கள் காலத்துடன் பிணைந்தவை, காலத்தால் பொருளேற்றம் பெறுபவை. காலம் தாண்டும்போது வரலாற்றால் மட்டுமே நிலைநிறுத்தப்படுபவை. செவ்வியல் ஆக்கங்கள் கால மாற்றத்தின் தடங்களே இல்லாமல் நிலைநிற்கின்றன. காலந்தோறும் புதிய பொருள் கொள்கின்றன.
காட்டில் ஊறிய நீர் சுனையாகத் தேங்குவது போன்றது செவ்வியல் ஆக்கம். அதில் காட்டின் ஆன்மாதான் உள்ளது. காட்டின் ருசி அந்த நீரில் தெரியும். ஆனால், தடாகம் என்ற அளவில் அது முழுமையானது. செவ்வியல் ஆக்கங்கள் பிறிதொன்றின் உதவி இல்லாமலேயே நிற்கக்கூடியவை. அவற்றைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளையும் அவையே உருவாக்குகின்றன. அவை உருவாக்குவது ஒரு முழுமையான அர்த்தவெளியை. அந்த அர்த்த வெளி காலம் நகர நகரப் பெரிதாகியபடியே போகும். அதை வாசிப்பவர்கள் அதை கற்பனை செய்து, விவாதித்து, விளக்கி மேலும் மேலும் விரிவாக்குவார்கள். ஒரு கட்டத்தில் அது அப்பண்பாட்டால் உருவாக்கப்பட்ட பொது அர்த்தவெளியாக உருமாற்றமடையும். பல கோடி
...more
கண்டடையப்படாமல் கிடப்பதென்பது பேரிலக்கியங்களுக்குரிய இயல்பு
ஒரு தத்துவ நூலில் வரும் தத்துவ விவாதத்திற்கும் இலக்கியப் படைப்பில் வரும் தத்துவ விவாதத்திற்கும் அடிப்படைகள் வேறு வேறு. இலக்கியப் படைப்பு தத்துவ விவாதத்தை நடித்துக் காண்பிக்கிறது. அவ்வளவே. தத்துவத்தின் தனிமொழியில் அது இயங்குவதில்லை; இலக்கியத்தின் தனிமொழியிலேயே இயங்குகிறது. விஷ்ணுபுர ஞானசபை விவாதம் படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய புனைவு மொழியில் உள்ளது. அது தத்துவ மொழி அல்ல
யதார்த்தவாத, நிதர்சனப் பாங்குள்ள நாவல்களில் அரை நூற்றாண்டு காலத்தைச் செலவிட்ட தமிழ்ச்சூழலில் புனைவுண்மையை தகவல்சார் உண்மையாக மயங்கும் போக்கு உள்ளது. நாவல் தகவல்களிலிருந்து உருவாவது; அதே சமயம் அது தகவல்களுக்கு எதிரானதும் தகவல்களைத் தாண்டிச் செல்வதும் ஆகும்.
எது எங்குமுள்ளதோ, எது எங்குமில்லாததோ, எது எல்லாமுமாகியதோ, எது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதோ, அது வணங்கப்படுவதாக
ஓம் ஓம் என்று நிலம் முழங்கியது. ஓம் ஓம் என்று நீர் முழங்கியது. ஓம் ஓம் ஓம் என்று வளி முழங்கியது. ஓம் ஓம் என்று ஒளி முழங்கியது. ஓம் ஓம் ஓம் என்று வெளி முழங்கியது. ஐந்து முகம் கொண்டு காலத்தை நிறைத்திருந்த பருவெளி எங்கும் ஓங்காரமே நிறைந்திருத்தது.
காலத்தின் கீழ்ச் சரிவில் எத்தனையோ பிரபஞ்சங்கள் மறைந்தன. காலத்தின் மடியில் எத்தனையோ பிரபஞ்சங்கள் சிறுகால் நெளித்து முலையுண்கின்றன. காலத்தின் மேற்குச் சரிவிலோ ஓங்காரமே நிரம்பியுள்ளது. காலமோ
நிலவு வெளிவந்தபோது மழைபோல வெண்ணிற ஒளி மணல்மீது பரவ ஆரம்பித்தது.
கால நதிக்கு அப்பால் ஓர் இடம். அங்கே...”
சக்கரம் அதுவே வளர்வதுபோல விரிந்து சென்றபடியே இருந்தது. பதினெட்டு இதழ்களுடன் ஸ்வாதிஷ்டானத் தாமரை விரிந்தது. பின்பு இருபத்து நான்கு இதழ்களுடன் மணிபூரத் தாமரை. முப்பது இதழ்களுடன் அனாகதத் தாமரை. தரையில் ஊர்ந்தும் தவழ்ந்தும் வரைந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் நான் நகர்ந்தேன். சக்கரத்தின் கணிதம் வளர்ந்து வளர்ந்து மெதுவாக அறிவால் பின்தொடர முடியாதபடி போவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் அடுத்து பிந்து எது, ரேகை எது என்றுகூடத் தெரியாமலாயிற்று. பலநூறு கிரந்திகளினாலான அதிபிரம்மாண்டமான தாமரை ஒன்று மலர்ந்தபடியே இருந்தது. அதன் வண்ணங்களையும் ஒளியையும் அசைவையும்கூட என்னால் பார்க்க முடிந்தது!
முப்பத்தாறு இதழ்கள் கொண்ட விசுத்தித் தாமரை ஆயிரத்து எண்ணூறு முக்கோணங்கள் கொண்டதாக உருவானபோது சக்கரத்தின் பின்னல்களுக்குள் அவனும் நானும் கலந்து விட்டிருந்தோம். பிறகு நாற்பத்து இரண்டு இதழ்கள் கொண்ட ஆக்ஞா பத்மம்.
வெண்ணிறம் மட்டும் எஞ்சியது. கண்கள் கூசாத வெண்ணிறம்; எதுவுமற்றதும் நிறமேயன்றி மாறிவிட்டதுமான அதிவெண்மை. பின்பு அதில் ஒரு நிழல்வடிவம் தென்படலாயிற்று. வடிவமா, அலையா என்று அறியமுடியாத ஒன்று.
முகமண்டபத்திற்கும் கருவறைக்கும் நடுவே எண்கோண வடிவில் மகாநாதமண்டபம். அதன் எண்பது தூண்களிலும் பல்வேறு வாத்தியங்கள் ஏந்திய கின்னரர்கள். அதன் பஞ்சகலா பீடத்தில் வியாபினி, வியோமரூபை, அனந்தை, அநாதை, அநாசிருதை என்ற ஐந்து நாததேவியர் இருந்தனர்.
‘என்னுடைய அனைத்துமே எளியவை. நான் ஒன்றுமில்லை. நான் வெறுமை. வெறுமையின்றி வேறு எதுவுமில்லை. நான் இன்மை...’
மூண்டு அகன்றெழுந்த இருளுக்குள் சென்று மறையும் ஒற்றை மின்மினிபோல அவன் சுயபிரக்ஞை மவுனத்தில் புதைந்து மறைந்தது.
‘நீ...’ என வீரிட்டது. ‘நீ பெரியவன். நீ உன்னதமானவன். உன் வல்லமை எல்லையற்றது. நீயன்றி எதுவுமில்லை’
பிரபஞ்சம் என்பது ஓர் அதிர்வு என்பார். அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மணமாக ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது.”
பிரபஞ்சத்திட மிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்றுதான். புலன்களே அவற்றை வேறு வேறாகக் காட்டுகின்றன. ஆகவே ஓர் அனுபவத்தை ஆழ்ந்து அறியும்போது அதை இன்னோர் அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும்.
இசையை ஓவியமாகவும் ருசியாகவும் அறிய முடியும்
மனித மனம் பிரபஞ்ச அனுபவத்தை முழுமையாக அடையத் தவித்தபடியே உள்ளது. புலன்களை மீட்டி மீட்டி அனுபவங்களை ஒன்றோடொன்று கலந்து...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
“மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்.”
ஒருவன் மிகப் பெரிய நோக்கத்திற்காக தன்னையே பலி தருகிறான். அது எவருக்குமே தெரியவில்லை என்றால் அந்தச் செயலுக்கு என்ன அர்த்தம்? அச்செயல் இந்த பூமியைத் பொருத்தவரை நிகழாததற்குச் சமம்தானே?
பிறர் பார்வையில் நான் என்பது நான் கொள்ளும் பிரமையன்றி வேறல்ல. என்னுடன் சம்பந்தப்படாத எவரும் என்னைப் பொருத்தவரை இல்லாதவர்கள் மட்டுமே. என்னைப் பொருத்தவரை நான் அன்றி வேறு எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அப்படித்தானோ?
நமது ஆத்மா நம்மை அறியாமலேயே சம்பவங்களுக்கு முன்னால் ஓடுகிறது
எதற்காக இந்த மகாதேவாலயம்? மனித மனம் இத்தனை இருளும் மலினமும் நிறைந்து கனக்கும்போது, கல்லில் இந்தக் கனவைச் செதுக்கி வைத்திருப்பதன் ரகசியம் என்ன? தன் மனதை தன்னிடமிருந்தே ஒளித்துக் கொள்ளத்தானே? மனிதனின் கயமையின் அடையாளம்தானே இது? நான் எதற்காகவாவது முழுமையாக உடன்பட மறுக்கிறேன் என்றால் அது என்னையே ஏமாற்றிக் கொள்வதைத்தான்.”
“சஞ்சலம் மிக்க மனங்களுக்கு அக்னியும் நீரும்போல ஆறுதலும் நல்வழியும் தருவது வேறு இல்லை.”
“சஞ்சலம் இல்லாத படிப்பு படிப்பாவதில்லை என்பார்கள்”
நமது காலப்பிரக்ஞை எட்டும் தொலைவிற்கு அப்பால் இருக்கிறது அவன் காலம். மகாவாக்ய உபநிடதம் சோமனையும் வருணனையும் இந்திரனையும் வாதத்திலே வென்று நீருக்கு அதிபனாக ஆன ஓர் அக்னிதத்தனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அக்னி நிறமானவன் என்று அது அவனை வர்ணிக்கிறது. பிராணாக்னி உபநிடதத்தில் பிருகு முனிவருக்கும் அவனுக்கும் இடையே நடந்த சம்வாதம் கூறப்படுகிறது. சர்வசார உபநிடதத்தின்படி அவன் அக்னியின் மனைவியான நதி ஒன்றில் இருந்து பிரணவத்தை மீட்டெடுத்தவன்.
ரிக்வேதாதிபதியான பைலனுக்கும் யஜுர்வேதாதிபதியான வைசம்பாயனுக்கும் சாமவேதாதிபதியான ஜைமினிக்கும் அதர்வணவேதாதிபதியான சுமந்துவிற்கும் இணையானவன் அவன். சொல்லுக்குள் எரியும் அக்னி அவன். எனவே அவனை மீறி ஒரு ஞானம் இல்லை.
எல்லையற்ற நாதப்பெருவெளியில் இந்த விஷ்ணுபுரம் ஒரு சொல்தான். எல்லாச் சொல்லுக்கும் முன்னும் பின்னும் மௌனம் உள்ளது. நாதத்தின் உச்சம் மௌனம். அதில் ஒரு துளியை, அர்த்தம் ஓர் அபூர்வ தருணத்தில் வந்து தொடுகிறது. காலப் பிரவாகத்தில் முடிவின்றி நகரும் அந்த ஒலி அந்தக் கணத்தில் மட்டும் அந்த அர்த்தத்திற்கு உரியதாக ஆகிறது. அந்தச் சுமையுடன் அது காற்றுவெளியில் இருந்து பிரிந்து வருகிறது. அதன் மகத்தான முழுமையும் உள்ஒழுங்கும் சிதறி விடுகின்றன. பிறகு அது தன் முழுமையை, ஆதியைத் தேட ஆரம்பிக்கிறது. ஈரம் பட்ட விதைபோல அதற்குள் இயக்கத்தின் முதல் பிடிப்பு உருவாகி விடுகிறது. தன் கூட்டைப் பிளந்து அது வெளிவருகிறது. முளையாகி,
...more
ஒரு சொல் என்பது தன்னளவில் ஒரு முழு பிரபஞ்சம்தான்.
சொல்லச் சொல்ல, அச்சொல் நாவின் சலனவடிவை இழக்கும். பின்பு அர்த்த வடிவத்தை இழக்கும். ஒரு கணத்தில் அது வெடித்துத் திறக்கும். ஒரு சொல் மகாவெளி அளவு விரியும் தருணம் அது. மிகவும் ஆபத்தான அனுபவம். ஆனால் ஞானமே எல்லாத் திசைகளிலும் ஆபத்தான பயணம்தான்.”
பூமியில் பூதஉடலோடு இருக்கும்வரை இருநிலை உண்டு. பிரபஞ்சமே இருத்தல், இல்லாமல் இருத்தல் என்ற இருநிலைகளில் ஒன்றாகத்தானே இருக்க முடியும். அனுபவ உலகமே அங்கிருந்துதான் துவங்குகிறது.” அவர்
பிரமாணங்கள் மூன்று; பிரத்யட்சம், அனுமானம், சுருதி. இவற்றில் ஒன்று இல்லையேல் இன்னொன்று இல்லை.”
“நான் என்று கூறும்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கிக் குறுக்காதே.”
“இருநூல்கள் விஷ்ணுபுரத்தின் சிற்ப அமைப்பை விளக்குபவை. மகாதந்திர சமுச்சயம் ஒன்று. மகாஜோதிர்மய ஸ்தாபத்தியம் இன்னொன்று. இரண்டிலும் எல்லா ரகசியங்களும் உள்ளன. ஒன்று தாந்த்ரிக விதிகள். இன்னொன்று சிற்ப விதிகள்.
“விஷ்ணு சிலை அறுநூறு கோல் நீளம் உடையது. மூன்று கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்து கிடக்கிறது. முதல் கருவறையில் பாதம். அடுத்ததில் உந்தி. இறுதியில் முகம். முகவாசல் திறந்திருக்கும்போது இங்கு ஞானசபை கூடும். உந்திவாசல் திறந்திருக்கும்போது தர்க்கசபை கூடும். பாதவாசல் திறக்கப்படும்போதுதான் ஸ்ரீபாதத் திருவிழா. ஒவ்வொரு வாசலும் நான்கு வருடம் திறந்திருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிச்சென்று, ஞானமுழுமை பெற்ற ஒருவர்தான் விஷ்ணுவை பூரண தரிசனம் செய்ய முடியும் என்று இங்கு வகுக்கப்பட்டுள்ளது.”
எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டுவந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவைகூட அனுபவத்தின் தருக்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞானவழி. மீதியெல்லாம் சுயஏமாற்று. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே...”
இங்கு உலவும் தேவரும் அசுரரும் மானுடரும் அவர்கள் ஒருபோதும் அறியமுடியாத மாபெரும் விளையாட்டொன்றினால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்... அதை விதியென்று கூறலாம். லீலையென்று பெயரிடலாம். நிகழ்கையில் அழலாம்; சிரிக்கலாம்; எண்ணி எண்ணி வியப்புறலாம்; கணக்கிட்டு சித்தாந்தங்கள் சமைக்கலாம்; அவற்றை ஏட்டில் பொறித்து தலைமுறைகளுக்குத் தந்து போகலாம்; ஆயிரமாயிரம் சாத்தியங்கள். மானுடனின் நம்பிக்கைக்கும் அறியாமைக்கும் அளவேயில்லை. ஆனால் இந்த விளையாட்டு எப்போதும் அவன் அறிதலுக்கு அப்பால்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.”
“ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் புஜங்களும் இரண்டாயிரம் கண்களும் கொண்டது சுதர்சனம். அக்னியிலிருந்து தேவசிற்பி கடைந்தெடுத்தது.
“புராணக் கதைகளுக்கு அளவேயில்லை. மாயை மாயையில் பிரதிபலிப்பதே புராணம் என்பது. அலௌகீகம் எனும் முதல்மாயை; லௌகீகம் எனும் எதிர்மாயை... பளிங்கறைக்குள் சிக்கிய பறவைகள் நாம்”
“இந்த வேதாந்திகள் மாயையை உண்டு மாயையைக் கழித்து மாயையில் திளைக்கும் மீன்கள்”
“கல்லாத நூல் குறித்து ஏளனம் செய்பவன் ஞானம் எனும் சொல்லை உச்சரிக்கவே தகுதியற்ற மூடன்”
நிறுவப்படும்தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாதபோது உண்மையை யாரும் அறிவதும் இல்லை”
என் எல்லைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டுவிட்டன போலும். அவற்றுக்குள் என் ஆட்டமும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதுதானா? சதுரங்கக்காய்-- அபத்தம்.
ஒவ்வொன்றையும் சர்க்கம், பிரதிசர்க்கம் என்று பிரித்துத் தொகுக்கும் சிந்தனைமுறை. எழுத்தாணிப் புழுபோல இந்தக் காவிய ஏட்டு அடுக்கை ஊடுருவிச் சென்று அடியிலுள்ள மண்ணை, வேர்களும் ஈரமும் உயிர்த்துளிகளும் நிரம்பிய முடிவில்லாத மகாபிரித்வியை, ஜடப் பிரம்மாண்டத்தை, புலன்களுக்கு மாற்றமின்றி சிக்கும் மகத்துவத்தை, மாயைமீது பிரம்மன் ஏற்றிவைத்த மெய்மையைத் தொட்டால்போதும். அதுதான் என் வாழ்வின் இலக்கு. என் இருப்பின் அர்த்தமே அதுதான்.
தருக்கம் அகவெளியை அளைந்து சலித்தது. எங்கும் நிரம்பியிருப்பினும், எழுந்து வழிமறைப்பினும், தொடமுடியாத இருளென அகம். எனக்கு வேண்டுவதென்ன? எத்தனை எளிய வினா. ஆனால் எத்தனை சிரமமானது. நன்கு தெரிந்த விடை என ஒரு கணமும் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாத விடை என மறுகணமும் தோன்றிப் பிரமிக்க வைக்கும் பெரும் புதிர்.