More on this book
Community
Kindle Notes & Highlights
“தருக்கம் வசப்பட்டதும், சுயமான தருக்கமுடிவுகளை உண்டுபண்ணுவோம். அவை நாம் கற்றறிந்தவற்றின் வேறு வடிவங்கள்தாம். ஆனால் நம்மை நாம் சிருஷ்டிகர்த்தா என்றும் ஞானி என்றும் நம்புவோம். நம்மைவிட பலவீனமான மனங்கள் நம்மை வியக்க ஆரம்பிக்கின்றன. சுயதருக்கங்களினால் மனம் நிரம்பி இருப்பதனால் புதிதாகக் கற்பது சிரமமாக உள்ளது. கற்பவைகூட நாம் ஏற்கெனவே உருவாக்கியுள்ள தருக்க அமைப்புக்குள் வந்து பொருந்திவிடுகின்றன. மிகப் பெரும்பாலான தேடல்கள் இங்கேயே நின்றுவிடுகின்றன. ஞானமே அஞ்ஞானமாக ஆகும் நிலை இது.”
பேச்சு நான்கு வகை என்று சாஸ்திரம். பிரம்ம வடிவமான ‘பரா‘வை ரிஷிகள் நாதப்பிரம்மம் என்கிறார்கள். பின்பு தொடக்கம், நடு, முடிவு இல்லாத பிரவாகமான ‘பஸ்யந்தி’. அதிலிருந்து எண்ணங்களாக மனதில் ஓடும் ‘மத்யமம்’. அந்த நதியிலிருந்து நாவும் தொண்டையும் மொண்டு எடுக்கும் ‘வைகரி’.
மரணம் என்பது இரண்டு பிரிவு. பிறிதின் மரணம், தன் மரணம். பிறிதின் மரணம் எவருக்கும் ஒரு பொருட்டல்ல, அது மரணமேயல்ல. அது ஓர் இழப்பு. இழப்பின் தன்மையைப் பொருத்து துக்கம். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று எதுவுமில்லை. மரணம் என்பது தன் மரணம் மட்டுமே. அது பயங்கரமானது. விவரிக்க முடியாதது. அதற்கு ஒரே அர்த்தம்தான். இல்லாமலாதல்.
“இந்த வானம் அழகாக இருக்கிறது. இதன் மணம் இனிமை. இதன் குளுமை உவப்பு தருவது. இதன் ஒலிகள் சங்கீதமயமானவை. மனம் பொங்கிப் பொங்கி விரிகிறது. வனமேயாகி, அதனுடன் கலந்து, தன்னை அழித்துக்கொள்ள விழைகிறது. அழகனுபவம் என்பது சுயமறுப்பு. அழகின் உச்சம் என்பது எங்கு அவ்வழகை அனுபவிப்பவன் முற்றிலும் இல்லாமல் ஆகிறானோ அந்தத் தருணம் மட்டுமேயாகும்.”
“எதிர்ப்படும் ஒவ்வோர் உடல் வழியாகவும் ஆத்மா இன்னோர் உடலைத் தேடிச்செல்கிறது. எதிர்ப்படும் ஒவ்வோர் உறவு வழியாகவும் ஆத்மா இன்னோர் உறவைத் தேடிச்செல்கிறது. எதிர்ப்படும் ஒவ்வோர் அழகு வழியாகவும் ஆத்மா இன்னோர் அழகைத் தேடிச்செல்கிறது— என்கிறது பிங்கல சூத்திரம்.
அகம் என்பது வெளியே எல்லையற்ற பேரழகுடன் விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பு மட்டுமே
“குற்றவுணர்வும் பேதஉணர்வும் இல்லாத போகமே பேரானந்த நிலை.”
“அந்நிலையில் இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் நாம் ஒன்றாகிவிடுகிறோம். அப்போது காலத் துயர் இல்லை. அப்போது நாம் புலன்களால் அலைக்கழிக்கப்படுவதில்லை. ஆத்மா புலன்கள் வழியாக பூரணமாக பிரபஞ்சத்தில் கலந்துவிடுகிறது. விஷ்ணு தர்மோத்திரம் கூறும் அன்யசித்ததா இதுவே.”
‘போகத்திற்குப் பிறகு உயிர்கள் துயரமடைகின்றன’— பிங்கல மகாவாக்யம்.
“பூமியிலுள்ள ஒவ்வொரு பிந்துவிலும் மகாயோனியின் ஈர்ப்பு உள்ளது. ஒவ்வொரு பருவும் தன் உருவத்தைச் சிதைக்க எண்ணுகிறது. ஒவ்வொரு துளியும் கடலை அடைய எண்ணுவது போல.”
“அனைத்து விசைகளும் மூலாதார விசையின் பகுதிகளே ஆகும். அனைத்து ஓசைகளும் மௌனத்தின் பகுதிகளே ஆகும். சக்கரத்தின் அத்தனை சுழற்சியும் மையத்தின் அசைவின்மையின் விளைவேயாகும்.”
“ஓயாது ஆடும் அந்த ஊசலின் பெயர்தான் ஜாக்ரத்.
“பிம்பங்கள் குமுறிக் கொப்பளிக்கும் இருண்ட ஆழம் ஒன்று. அதன் ஒவ்வோர் அலைக்குப் பின்பும், இடைவெளியின் நொடியில் அது தோன்றி மறைகிறது.”
“அந்த ஆழமே ஸ்வப்பனம். அதில் உன்னை ஆழத்திக்கொண்டால் அடித்தரை வெளியாகத் திறக்கும். அதன் பெயர் சுஷûப்தி.”
“இம்மூன்றையும் தன் ஒருகணமாகக் கொண்ட காலப்பிரவாகமே துரியம். அலையும் ஆழமும் நீரும் அடங்கிய பெருங்கடல்.”
எதற்காக இந்தத் தியானம்? அறிவதற்கா? எதை? அறிவது எது என்று அறியவா? எப்படி அறிவது என்று அறியவா? அறிந்து என்ன செய்யப்போகிறேன்? வீண். எல்லாம் வீண். அறியமுயலும் என் மனம் வெறும் வான்வெளியில் சிறு புள்போல சுழன்று பறந்தபின் களைத்து மண்ணிறங்கும். வானம் அறியப்படாத விரிவு. வானில் எழும் எல்லாமே அதைத் தொடாது கீழிறங்குகின்றன. அதன் உடல் தொடப்படாத நீலம். அதன் ஆத்மாவோ பகிரப்படாத ரகசியம். அதன் மகத்தான தனிமை.
பிரபஞ்சம் ஒரு சம்பவம், அதை நமது குறுகிய ஆயுள்தான் சம்பவங்களின் தொகுப்பாகப் பார்க்கிறது.
நிதர்சன வாழ்வில் அலுப்புற்றவர்கள் இடிபாடுகளை நோக்கி வருகிறார்கள். அவற்றிலிருந்து தங்களுக்குப் பிரியமான இறந்தகாலத்தைக் கற்பனை செய்துகொள்கிறார்கள். அதில் வாழ்கிறார்கள். ஆனால் இறந்தகாலம் ஒருபோதும் உண்மையாகாது. கனவு போல. அதிலிருந்து விழித்தெழுந்தே ஆகவேண்டும்.
நீ ஒருபோதும் உன்னையன்றி வேறு எது பற்றியும் எண்ணுவதில்லை. ஒவ்வொரு கணமும் உன் அடுத்தகண வாழ்வை நிகழ்த்துவது பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறாய்.
ஒவ்வொரு சொல்லுக்கும் கண்டடையும் பிரம்மகணத்தின் பரவசத்துடன் சித்தம் கூத்தாடியது. இல்லை, எதுவுமில்லை. எந்த மனிதனும் எதையும் தேடவில்லை. பதில்கள் எவருக்கும் முக்கியமில்லை. வித்தியாசமாக வாழ விரும்புகிறார்கள். வித்தியாசமாக வாழ்வதாக எண்ணிக்கொள்கிறார்கள். தனது இருப்பு பிரபஞ்சப் பெருவெள்ளத்தில் தனித்துத் தெரியவேண்டும் என்ற ஆசை அது. வெறும் அகங்காரம். மரணத்தை வெல்லும் முயற்சி. மூடர்கள் மூடர்கள்.
வாழ்பவர்கள் வாழ்வை அறிவதில்லை. வாழ்வை அறிய முயல்பவர்கள் வாழ்வதில்லை. அவர்களுக்கு சிதையாத அனுபவம் எதுவுமில்லை. எனவே மெய்யான ஆனந்தமும் ஏதுமில்லை. மிஞ்சுவது அகங்காரம் சமனப்படும் கணத்தில் ஏற்படும் போலிமகிழ்ச்சி மட்டும்தான். அது ஒருகணம்தான். பின்பு ஆத்மா ஏமாற்றத்துடன் பெருமூச்சு விடுகிறது.