ஈழத்தின் அகமும் புறமும்
தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசையில் நான் கருத்தில்கொண்ட இரண்டு படைப்பாளிகள் மு.தளையசிங்கம், அ.முத்துலிங்கம் இருவரும் மட்டுமே. அதைப்பற்றிய விவாதம் இந்நூல்தொகை 2003ல் வெளிவந்தது முதல் நிகழ்ந்தது. நவீனத்தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் என நான் கருத்தில்கொண்டவர்கள் வெறுமே படைப்பாளிகள் மட்டும் அல்ல. ஓர் இலக்கிய இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகள். அல்லது ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகைமையின் தொடக்கநிலைகள். அவ்வகையில் இவ்விருவருமே ஈழ இலக்கியத்தின் முன்னோடிகள் என நீண்ட அகவிவாதத்திற்குப் பின்னரே முடிவுசெய்தேன்.
ஈழப்படைப்பாளிகளில் தொடக்கத்து ஆளுமைகளான இலங்கையர்கோன் முதல் பெரும்பாலும் அனைவரையுமே நான் வாசித்திருக்கிறேன். இலங்கையர்கோனே முக்கியமான படைப்பாளி என்றுதான் எண்ணுகிறேன். ஆனால் அவர் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னொரு படைப்பாளியான மகாகவி மற்றும் நீலாவணன் உள்ளிட்ட வேறு பலரையும் நான் கருத்தில் கொண்டேன். அவர்களும் மிகக்குறைவாக எழுதினர். ஓய்வுநேரத்தில் ஓர் உபரி ஆர்வமாக இலக்கியத்தைக் கொண்டிருந்தனர் என்னும் எண்ணம் உருவாகியது. அவர்கள் புதியதாக எதையும் படைக்கவுமில்லை.
இலக்கியப்படைப்பாளி என்பவர் தொடர்ச்சியாகவும் நீடித்த தரத்துடன் எழுதும்போதுதான் அவர் தன் இலக்கியமரபின் முன்னுதாரணமான ஆளுமையாக ஆகிறார். சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையை இலக்கியத்தின் பொருட்டு செலவிட்டவராக அவர் இருக்கவேண்டும். தன்னுள் இலக்கியத்தின் பொருட்டு அவர் பயணம் செய்துகொண்டும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் அசலாக எதையேனும் கண்டடைய முடியும். அத்தகைய இருவராகவே நான் மு.தளையசிங்கம், அ.முத்துலிங்கம் இருவரையும் கருதுகிறேன்.
இந்நூலின் தொடர்ச்சியாக இரண்டு படைப்பாளிகள் பற்றி இன்னொரு நூலாக எஸ்.பொன்னுத்துரை மற்றும் தேவகாந்தன் பற்றி எழுதவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்தேன். பொன்னுத்துரை பற்றி தனியாக எழுதிவிட்டேன். தேவகாந்தன் பற்றி எழுதவேண்டும். ஈழப்படைப்பாளிகள் பற்றி ஈழ இலக்கியம் என்னும் தனி நூலாக விமர்சனப் பார்வையை எழுதியுள்ளேன்.
இந்த தொகுதியில் புனைவிலக்கிய முன்னோடிகளையே கருத்தில் கொண்டிருக்கிறேன். கவிதைமுன்னோடிகள் மற்றும் கவிதை சாதனையாளர்கள் பற்றி தனியாக எழுதியிருக்கிறேன். சு.வில்வரத்தினம், சேரன் ஆகியோர் ஈழம் உருவாக்கிய முதன்மையான தமிழ்க்கவிஞர்கள் என்பது என் எண்ணம். கவிஞர்கள் பற்றிய என் விமர்சனக் கட்டுரைகள் உள்ளுணர்வின் தடத்தில் என்ற பேரில் தனிநூலாக தொகுக்கப்பட்டுள்ளன.
ஈழ இலக்கியத்தின் அகம் வெளிப்பட்ட படைப்புலகம் என்று மு.தளையசிங்கத்தின் புனைவுகளைச் சொல்லலாம். ஈழத்தின் ஆன்மிகத்தேடல், அறச்சிக்கல்கள், அடையாளத்தேடல், பாலியல் மீறல்கள் என அவருடைய அகவுலகம் மிகச்சிக்கலானது. அதில் அவருடைய ஆன்மிகத் தேடலின் விளைவான மெய்யுள் என்னும் இலக்கிய வடிவம் குறித்த வெளிப்பாடுகள் தமிழில் அவரை ஓர் அசல் சிந்தனையாளராக நிறுவுபவை. அவரைப் பற்றி மேலும் பல இடங்களில் விரிவாக எழுதியுள்ளேன்.
ஈழத்தின் புறம் வெளிப்பட்ட படைப்புலகம் அ.முத்துலிங்கம் உருவாக்குபவை. ஈழத்தவர் புலம்பெயர்ந்து உலகம் முழுக்கப் பரவி புதிய கலாச்சாரங்களை, புதிய வாழ்க்கைகளைச் சந்தித்தபோது உருவான அழகியல் கண்டடைதல்கள், அறமுன்நகர்வுகள் நிகழ்ந்த புனைவுலகம் அவருடையது. அவர் அவ்வகையில் தொடர்ந்து உருவான ஏராளமான புனைவிலக்கியவாதிகளின் முன்னோடியும்கூட. ஈழத்து அகம் விரிந்து உலகப்பேரகம் ஆக மாறுவதன் சித்திரத்தை அவர் படைப்புகள் அளிக்கின்றன.
இந்நூல் அவ்விருவரின் புனைவுலகை முழுமையாக தொகுத்துக்கொள்ள முயலும் இரண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழ் வாசகர்களுக்கு ஈழத்தின் பண்பாட்டையும், இலக்கியத்தையும் அறியவும் மதிப்பிடவும் இக்கட்டுரைகள் உதவும் என நினைக்கிறேன்.
ஜெ
அமர்தல் அலைதல் – இலக்கிய முன்னோடிகள் வரிசை 6 வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

