குக்கூ பட்டறை- சரண்யா ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ,
குக்கூ காட்டுப்பள்ளியின் அழகை என்னவென்று வர்ணிப்பது..
காலையில் ஐந்து மணிக்கு அந்த உறையவைக்கும் பனியிலும் எழுந்து எல்லாம் வல்ல தெய்வமது எனும் பிரார்த்தனைப் பாடலை பாடி நாளைத் தொடங்கி அப்படியே வாசிக்க ஆரம்பிக்கும் நண்பர்கள் நாங்கள் சென்றவுடன் வாசிப்பை முடித்து பறவைகள் பார்க்க வந்தனர். ஆசிரியர் விஜயபாரதி அங்கும் வகுப்பெடுக்க தொடங்கி விட்டார். ஆனால் வெளியே எங்கும் செல்லும் தேவையே இன்றி பள்ளியைச் சுற்றி வந்தே பல பல பறவைகள் பார்த்தோம். அரிதாக இருக்கும் பறவைகள் என நாங்கள் நாட்கணக்காக, மணிக்கணக்காக தேடி அதற்காக காத்திருக்கும் பறவைகள் அங்கே இயல்பு போல சுற்றி வந்து கொண்டிருந்தன.
பொட்டல் காடாக முன்பு இருந்த இடம் அது என சொன்னால் நம்ப கடினமாக இருந்தது. அவ்வளவு மரங்கள். வித விதமாக இருந்தன. இருவாட்சி, துடுப்புவால் கரிச்சான், செம்மார்பு குக்குறுவான், காட்டு ஆந்தை, கொம்பன் ஆந்தை என பல பறவைகளின் வாழ்விடமாக மாறியுள்ள அந்த இடம் எத்தனை எத்தனை பேரின் உழைப்பு.
அன்று மதியம் முதலே ஸ்டாலின் அண்ணாவிடம் சரண். உள்ளே சென்றவுடனே உருண்டைகளை சாப்பிடக் கொடுத்தார். நல்ல ருசி. தூய்மையின், நேர்மையின் ருசி. கடலை மிட்டாய் செய்யும் பக்குவத்தை, தொடங்கும் போது இருந்த கடின காலத்தை சொல்லிக் கொண்டே உருண்டைக்கான கலவையை செய்து கொண்டிருந்தார். குடும்பமே உழைத்தால்தான் இதனை செய்து முடிக்க முடியும் என்று சொல்லிவிட்டு எங்களையும் உருண்டை உருட்ட சொன்னபோது குடும்பமாகவே உணர்ந்தோம். நல்ல சூட்டோடு கையில் எடுத்து உருட்டி பக்குவமாக தட்டில் பரப்பி வைத்த போது ஒரு நிறைவு வந்தது. அந்த அடுப்பே அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கடலை உருண்டை பரப்பும் பலகை செய்யும் கிராமங்கள் தனியாக இருப்பதாக சொன்னார். அந்தப் பலகை அத்தனை கனம்.
மறுநாள் காலை பட்டறை தொடங்கியது. சிவராஜ் அண்ணா, நண்பர் யாகவா வாழ்ந்த மரத்தின் அருகே நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். செம்பாலை பண்ணை புல்லாங்குழலில் வாசித்த அண்ணன் முனுராஜ் அவர்களின் வாழ்வினை அண்ணன் சொன்னபோது கண்கள் நிறைந்தது. வாழ்வில் நிறை இக்கட்டில் நாம் இருக்கும் போது நமக்கான திறப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற அண்ணன் வாக்கு வேதவாக்கு.
ஆனந்த பெருமாள் அண்ணா ஆகச் சிறந்த உதாரணம். வங்கி வேலையை விட்டு 15 வருடமாக இந்த கலையை கையில் எடுத்திருக்கும் அவர், இந்த கலை என் அரசியல் இதன் வழியாகவே பீடி சுற்றும் மக்களின் வாழ்வை மாற்றும் செய்தியை உங்களுக்கு சொல்ல முடியும் என்றார். மதுரையில் பிறந்த அவர் திருநெல்வேலியில் சேரன்மகாதேவி அருகே ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கேயே குடும்பத்தோடு வாழ்கிறார். அவர்களுக்கு பயிற்சி அளித்து பனையோலை முறம் தயாரிக்கும் முறையை சற்று மாற்றி அவர் தயாரிக்கும் சுவர்கடிகாரங்கள் அத்தனை நேர்த்தியும், அழகும் மிக்கவை. பனக்கொட்டையில் குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை செய்து அதனை பனை எழுக விழாவில் கிருஷ்ணம்மாள் பாட்டி கையில் தந்திருந்தார்.
ஆளுமைப் பயிற்சியாகவே நான் இதனைக் கண்டேன். வாள்பிடி எனும் கருவியின் கத்தி நம் மயிர் அளவே இருப்பது. அதன் முன் சரணடையாமல் கலையை உருவாக்க முடியாது என்ற வரிகளே அதற்கு சாட்சி.
முதல் நாளில் கொட்டங்குச்சியில் இருந்து நான் செய்த அகல் விளக்கை மறுநாள் காலை ஏற்றி பட்டறையை தொடங்கியபோது எனக்குள் எழுந்த மாறுதலக்கு வார்த்தைகள் இல்லை ஆசானே.
ஆசிரியர் விஜயபாரதியின் குடும்பம், பெங்களூர் ஷிபுமி பள்ளியின் விஜி-குமரன், முத்துலட்சுமி அக்கா, ஸ்டாலின் அண்ணா, கௌதமி அக்கா, புகைப்படக்காரர் மோகன் மற்றும் பலரும் சேர்ந்து கற்றுக் கொண்ட நிகழ்விது. நைதாலியம் பயிலும் மொழிபெயர்ப்பாளர் அருண் ஆண்டவர், அர்வின், சினேகா, சந்தோஷ் என அனைவரிடமும் வாழ்வின் தருணம் இருந்தது. ஒவ்வொருவரும் அங்கே ஒன்றை தனக்கென எடுத்து செய்துகொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் பற்றி சொல்கிறேன் ஆசானே. இன்று அவர் விவசாயி ஆனந்த் வெளிநாட்டில் தொழில்முறை சமையல்காரராக பணியில் இருந்தவர். வேலையை விட்டு இங்கே வந்து திண்ணைப்பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் மாலை கராத்தே, கதை, பாடல் என சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிறார். நாங்கள் அனைவரும் அங்கே சென்று அவர்களுடன் அந்த நாளை பகிர்ந்து கொண்டோம். நான் ஆனையில்லா கதை சொன்னேன். விஜயபாரதி மகள் அகல்யா பரத நாட்டியம் ஆடிக் காட்டினாள். வேகமும், ஆர்வமும் மிக்க குழந்தைகள் அவர்கள். ரிஷி, பாலா, ஜோதிகா, ரமணி, ஹரி என அத்தனை குழந்தைகள். வெளியே கிடந்த ஒரு நூலில் 2 நிமிடத்தில் ரிஷி எனக்கொரு பின்னல் செய்து பரிசளித்தான்.
உண்மையில் அங்கிருந்து கிளம்பும் மனம் வரவேயில்லை ஆசானே. மூன்று நாளில் நான் உறங்கும் போது மட்டுமே ஆதித்யாவையும், மஞ்சுவையும் பார்த்தேன். அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் விளையாடிக் கொண்டேதான் நாள் முழுவதும் இருந்தனர். அவர்களை கண்டிக்கும் குரல் எழவேயில்லை ஆசானே.
பிரியமுடன்,
சரண்யா
திண்டுக்கல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers
